Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
poem
stringlengths
118
183
explanation
stringlengths
131
359
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே முந்துறப் பேணி முகநான் குடையானைச் சென்றமர்ந் தேத்தல் இனிது.
மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது.
பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.
பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.
உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின் நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல் தலையாகத் தான்இனிது நன்கு.
பொருள் உடையவனது ஈகை இனிது. மனைவியுள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது. உலக வாழ்க்கை நிலையில்லாதது என்று ஆராய்ந்துணர்ந்து முற்றும் துறத்தல் இவை அனைத்திலும் மிக இனிது.
ஏவது மாறா இளங்கிளைமை முன்இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிகஇனிதே ஏருடையான் வேளாண்மை தானினிது ஆங்கினிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு.
சொன்ன வேலைகளை மாற்றமில்லாமல் செய்யும் வேலைக்காரர்களைக் கொண்டிருப்பது இனிதாகும். குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். ஏரினையும் உழவுமாடுகளையும் சொந்தமாக வைத்திருப்பவன் விவசாயம் செய்வது இனிது. அதுபோல ஆராயின் செல்லுந்திசையில் நட்புக்கொள்ளுதல் இனிது.
யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே மான முடையார் மதிப்பு.
அரசன் யானைப் படைகளைக் கொண்டிருத்தல் இனிது. தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது. முல்லை நிலத்தில் ஆற்றினது நீராட கரைக்கண் உள்ள ஊர் இனிது. அதுபோல மதிப்புடையவரது மதிப்பு கொள்ளுதல் இனிது.
கொல்லாமை முன்இனிது கோல்கோடி மாராயஞ் செய்யாமை முன்இனிது செங்கோலன் ஆகுதல் எய்துங் திறத்தால் இனிதென்ப யார்மட்டும் பொல்லாங் குரையாமை நன்கு.
கொல்லாமை முன் இனிது. அரசன் நடுவு நிலைமை தவறி சிறப்பு செய்யாமை இனிது. செங்கோலனாக இருப்பது இனிது. யாவரிடத்தும் திறமையால் கூடியமட்டும் குற்றம் கூறாமை மிக இனிது.
ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்இனிதே பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக் காப்படையக் கோடல் இனிது.
கூடிய மட்டும் தருமம் செய்தல் இனிது. சான்றோர்களின் பயனுடைய சொல் இனிது. கல்விச் செல்வம் அதிகாரம் ஆண்மை முதலிய எல்லாம் இருந்தும் 'நான்' என்ற குணம் இல்லாதவனைத் துணையாகக் கொள்வது இனிது.
அந்தண ரோத்துடைமை ஆற்ற மிகஇனிதே பந்தம் உடையான் படையாண்மை முன்இனிதே தந்தையே ஆயினுந் தானடங்கான் ஆகுமேல் கொண்டடையா னாகல் இனிது.
பிராமணர்க்கு வேதம் ஓதுதல் இனிது. இல்லறத்தாருக்கு பற்றுபாசம் இனிது. படையுடையானுக்கு வீரம் இனிது. தந்தையே ஆனாலும் அவர் கூறும் தவறானவற்றைச் செய்யாமை இனிது.
ஊருங் கலிமா உரனுடைமை முன்இனிதே தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக் கார்வரை யானைக் கதங்காண்டல் முன்இனிதே ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை பேதுறார் கேட்டல் இனிது
வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.
தங்க ணமர்புடையார் தாம்வாழ்தல் முன்இனிதே அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே பங்கமில் செய்கைய ராகிப் பரிந்துயார்க்கும் அன்புடைய ராதல் இனிது.
தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.
கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே மனமாண்பி லாதவரை யஞ்சி யகறல் எனைமாண்புந் தான்இனிது நன்கு.
கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.
அதர்சென்று வாழாமை ஆற்ற இனிதே குதர்சென்று கொள்ளாத கூர்மை இனிதே உயிர்சென்று தான்படினும் உண்ணார்கைத் துண்ணாப் பெருமைபோற் பீடுடையது இல்.
தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.
குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே சுழறும் அவையஞ்சான் கல்வி இனிதே மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும் திருவுந்தீர் வின்றேல் இனிது.
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
மான மழிந்தபின் வாழாமை முன்இனிதே தான மழியாமைத் தானடங்கி வாழ்வினிதே ஊனமொண் றின்றி உயர்ந்த பொருளுடைமை மானிடவர்க் கெல்லாம் இனிது.
ஒருவர்க்குத் தன் நிலையினின்றும் தாழ்ந்து பெருமை அழிய நேரிட்டால், மேலும் உயிர் வாழாதிருப்பது மிக இனியது. தானம் செய்து வாழ்வதற்குத் தகுந்தபடி தனது செல்வம் அழிந்து விடாமல் தான் அடக்கமாக வாழ்வதும் இனிமையானது. இடர்ப்பாடு ஏதும் சிறிதும் இல்லாமல் குற்றமற்ற பொருளை மிகுதியாகப் பெற்றிருப்பது மக்கள் அனைவர்க்கும் இனிமையானது. ...
குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே வினையுடையான் வந்தடைந்து வெய்துறும் போழ்து மனனஞ்சான் ஆகல் இனிது.
சின்னஞ்சிறு குழந்தைகளின் தள்ளாடும் நடையைக் காண்பது பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் இனியது. அக்குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்பது தேவாமிர்தத்தினை விட இனியது. தீய செயல்களைச் செய்தவன் அதன் பயனாகத் துன்பம் வந்து அவன் மனம் நொந்து வருந்தும் போதும் மனம் அஞ்சாது இருப்பது இனியது.
பிறன்மனை பின்னோக்காப் பீடினி தாற்ற வறனுழக்கும் பைங்கூழ்க்கு வான்சோர் வினிதே மறமன்னர் தங்கடையுள் மாமலைபோல் யானை மதமுழக்கங் கேட்டல் இனிது.
பிறனுடைய மனைவியைத் திரும்பிப் பார்க்காத பெருமை இனிதாகும். போதுமான நீர் இல்லாததால் காய்ந்து வருந்தும் பசுமையான பயிர்களுக்கு வான்மேகத்திலிருந்து மழை பொழிவது மிக இனிதாகும். வீரமுடைய அரசரின் கடைவாயிலாகிய பின் முற்றத்தில் பெரிய மலை போன்ற யானைகளின் மதங்கொண்ட பிளிறலைக் கேட்பதும் இனிதாகும்.
சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே எள்துணை யானும் இரவாது தான்ஈதல் எத்துணையும் ஆற்ற இனிது.
கற்றறிந்தவர் முன் தான் கற்ற கல்வியைச் சொல்வது மிக இனியது. அறிவால் மேம்பட்ட கல்வியாளரைச் சேர்ந்து பொருந்தியிருப்பது மிகப் பெருமையுடன் முற்றிலும் இனியது. எள்ளளவாவது, தான் பிறரிடம் யாசிக்காமல், தான் பிறர்க்குத் தானம் கொடுத்துத் தர்மம் செய்வது எல்லா விதத்திலும் மிக இனியது.
நாட்டார்க்கு நல்ல செயலினி தெத்துணையும் ஒட்டாரை ஒட்டிக் கொளல் அதனின் முன்இனிதே பற்பல தானியத்தது ஆகிப் பலருடையும் மெய்த்துணையுஞ் சேரல் இனிது.
தன்னுடன் நட்புடையவர்க்கு இனிய உதவிகளைச் செய்வது இனிமையானது. எந்தவகையிலும் சேராத தன் பகைவரையும் நட்பாக்கிக் கொள்வது அதைவிட மிக இனிமை யானது. பற்பல வகை உணவுப் பழக்கமுடையவரானாலும் புறத்தார் பார்வைக்கு ஏதுவாக மெய்க் காப்பு வீரரோடு அரணாகப் பொருந்தியிருப்பது இனிமையானது.
மன்றின் முதுமக்கள் வாழும் பதிஇனிதே தந்திரத்தின் வாழும் தவசிகள் மாண்பினிதே எஞ்சா விழுச்சீர் இருமுது மக்களைக் கண்டெழுதல் காலை இனிது.
ஊர்ப்பொது மன்றத்தில் மூத்த அறிவுடையோர் வாழ்கின்ற ஊர் இனியது. அறநூல்களில் சொல்லிய விதிப்படி வாழ்கின்ற தவத்தோரது மாட்சிமை இனியது. குறைவில்லாத மிகுந்த சிறப்பினை உடைய இரு முதுமக்களாகிய தாய் தந்தையரை காலையில் அவர்கள் இருக்குமிடம் சென்று பார்த்து அவர்கள் பாதங்களில் வீழ்ந்து வணங்கி எழுவது இனியது.
நட்டார்ப் புறங்கூறான் வாழ்தால் நனிஇனிதே பட்டாங்கு பேணிப் பணிந்தொழுதல் முன்இனிதே முட்டில் பெரும்பொருள் ஆக்கியக்கால் மற்றது தக்குழி ஈதல் இனிது.
தன்னிடம் நட்புக்கொண்டவர்களைப் பற்றிப் புறங்கூறாதவனாய் வாழ்வது மிக இனியது. சத்தியத்தைப் பேணிப் பாதுகாத்து யாவர்க்கும் பணிவுடன் நடப்பது அதைவிட இனியது. குறையில்லாத பெரும் பொருளைத் தேடிச் சம்பாதித்தால் அப்பொருளைத் தகுதி வாய்ந்த தேவையுள்ளோர்க்கு கொடுத்து உதவுவது இனியது.
சலவாரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது.
வஞ்சகரைச் சாராமல் அவர்களது தொடர்பை விட்டு விடுவது இனியது. கற்றறிந்த அறிவுடையாருடைய வாய்ச் சொற் களைப் போற்றி அதன்படி நடப்பது இனியது. அகன்ற இடத்தையுடைய இப்பூமியில் வாழ்கின்ற எல்லா உயிர்களுடனும் இணக்கமாக வாழ்வது இனியது.
பிறன்கைப் பொருள்வெளவான் வாழ்தல் இனிதே அறம்புரிந் தல்லவை நீக்கல் இனிதே மறந்தேயும் மாணா மயரிகள் சேராத் திறந்தெரிந்து வாழ்தல் இனிது.
பிறருடைய கைப்பொருளை அபகரிக்காமல் வாழ்வது இனியது. தர்மம் செய்து பாவத்தை நீக்குதல் இனிது. மாட்சிமை இல்லாத அறிவிலிகளைச் சேராத வழிகளை ஆராய்ந்து வாழ்தல் இனிது.
வருவா யறிந்து வழங்கல் இனிதே ஒருவர்பங் காகாத ஊக்கம் இனிதே பெருவகைத் தாயினும் பெட்டவை செய்யார் திரிபின்றி வாழ்தல் இனிது.
தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது. ஒருவனுக்குச் சார்பாகாத ஒழுக்கம் இனிது. பெரிய யானையை உடையவராயினும் தாம் விரும்பியவற்றை ஆராயாது செய்யாதவராய், தம் இயல்பிலிருந்து மாறாதவராய் வாழ்தல் இனிது.
காவோ டறக்குளம் தொட்டல் மிகஇனிதே ஆவோடு பொன்னீதல் அந்தணர்க்கு முன்இனிதே பாவமும் அஞ்சாராய்ப் பற்றுந் தொழில்மொழிச் சூதரைச் சோர்தல் இனிது.
சோலையுடன் கூடிய பொதுக் குளத்தை வெட்டுதல் இனிது. அந்தணர்க்குப் பசுவோடு பொன்னைக் கொடுத்தல் இனிது. பாவத்திற்கு அஞ்சாமல் சூதாடுகிறவர்களை நீக்கி வாழ்தல் இனியது.
வெல்வது வேண்டி வெகுளாதா னோன்பினிதே ஒல்லுந் துணையும்ஒன்று உய்ப்பான் பொறை இனிதே இல்லாது காமுற் றிரங்கி இடர்ப்படார் செய்வது செய்தல் இனிது.
மேம்படுத்தலை விரும்பி கோபம் இல்லாமல் இருப்பவனின் தவம் இனியது. எடுத்துக் கொண்ட வேலையை முடிக்கும் ஆற்றல் உடையவனின் பொறுமை மிக இனிது. தம்மிடம் இல்லாத பொருளை நினைத்து துன்பப்படாமல் இருப்பது இனிது.
ஐவாய வேட்கை யவாவடக்கல் முன்இனிதே கைவாய்ப் பொருள்பெறினுங் கல்லார்கண் தீர்வினிதே நில்லாத காட்சி நிறையில் மனிதரைப் புல்லா விடுதல் இனிது.
ஐந்து வழியால் வருகின்ற ஆசைகளை அடக்குதல் இனிது. கையில் நிற்கக்கூடிய பொருளைப் பெறுவதாக இருந்தாலும் கல்லாதவரை விடுதல் இனிது. இந்த உலகம் நிலையானது என்போரின் நட்பினைக் கை விடுதல் இனியது.
நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே உட்கில் வழிவாழா ஊக்கம் மிகஇனிதே எத்திறத் தானும் இயைவ கரவாத பற்றினின் பாங்கினியது இல்.
ஒரு பொருளை விரும்பித் தன்னை அடைந்தவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் இனிது. மதிப்பு இல்லாதவிடத்து வாழாதவனின் மனவெழுச்சி இனிது. எப்படியானாலும் பிறருக்குக் கொடுக்கும் பொருளை மறைக்காதவனின் அன்பு மிகப்பெரியது.
தானங் கொடுப்பான் தகையாண்மைமுன் இனிதே மானம் படவரின் வாழாமை முன்இனிதே ஊனங்கொண் டாடார் உறுதி உடையவை கோள்முறையாற் கோடல் இனிது.
அபயம் கொடுப்பவனின் ஆண்மை மிக இனிது. மானம் இழந்து வாழாமை இனிது. குற்றம் கூறாதவரின் உறுதி இனிது. நன்மையானவற்றை முறைப்படிப் பெறுதல் இனிது.
ஆற்றாமை யாற்றென் றலையாமை முன்இனிதே கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வனிதே ஆக்க மழியினும் அல்லவை கூறாத தேர்ச்சியின் தேர்வினியது இல்.
ஒரு வேலையைச் செய்யத் தெரியாதவனிடத்து ஒரு வேலையைக் கொடுக்காமை இனிது. எமனின் வருகையை எதிர்பார்த்து வாழ்வது இனிது. செல்வம் இழந்தாலும் பாவச் சொற்களைக் கூறாதிருப்பது எல்லாவற்றையும் விட இனியது.
கயவரைக் கைகழிந்து வாழ்தல் இனிதே உயர்வுள்ளி ஊக்கம் பிறத்தல் இனிதே எளியர் இவரென் றிகழ்ந்துரையா ராகி ஒளிபட வாழ்தல் இனிது.
கீழ் மக்களை நீக்கி வாழ்தல் இனியது. தன் உயர்வினை நினைத்து ஊக்கத்துடன் வாழ்தல் இனிது. வறியவர் என்று இகழாது புகழ்பட வாழ்தல் இனிதாகும்.
நன்றிப் பயன்தூக்கி வாழ்தல் நனிஇனிதே மன்றக் கொடும்பா டுரையாத மாண்பினிதே அன்றறிவார் யாரென் றடைக்கலம் வெளவாத நன்றியின் நன்கினியது இல்.
ஒருவர் செய்த உதவியினை நினைத்து வாழ்தல் இனிது. நீதி சபையில் நடுநிலை தவறாமல் இருத்தலின் பெருமை இனிது. யாருக்கும் தெரியாது என்று அடைக்கலமாய் வந்த பொருளை அபகரிக்காமல் இருத்தல் இனிதின் இனிது.
அடைந்தார் துயர்கூரா ஆற்றல் இனிதே கடன்கொண்டுஞ் செய்வன செய்தல் இனிதே சிறந்தமைந்த கேள்விய ராயினும் ஆராய்ந்து அறிந்துரைத்தல் ஆற்ற இனிது.
தம்மை அடைக்கலமாக வந்தவன் துன்பத்தை நீக்குவது இனிது. கடன் வாங்கியாவது செய்ய வேண்டியவற்றைச் செய்வது இனிது. மிகச் சிறந்த நுட்பமான அறிவுடையவர்களாக இருந்தாலும் ஒரு பொருளை ஆராய்ந்து உரைப்பது இனிது ஆகும்.
சுற்றறிந்தார் கூறுங் கருமப் பொருள்இனிதே பற்றமையா வேந்தன்கீழ் வாழாமை முன்இனிதே தெற்றென இன்றித் தெளிந்தாரைத் தீங்கூக்காப் பத்திமையிற் பாங்கினியது இல்.
கற்று அறிந்தவர்கள் கூறும் கருமப் பயன் இனிதாகும். அன்பில்லாத அரசனின் கீழ் வாழாதிருத்தல் இனிதாகும். ஆராயாமல் கெடுதல் செய்தவர்களுக்கு தீங்கு செய்யாமல் அன்புடையவராக இருத்தலைப் போன்று இனியது வேறு இல்லை.
ஊர்முனியா செய்தொழுகும் ஊக்கம் மிகஇனிதே தானே மடிந்திராத் தாளாண்மை முன்இனிதே வாய்மயங்கு மண்டமருள் மாறாத மாமன்னர் தானை தடுத்தல் இனிது.
ஊர் வெறுக்காதவற்றைச் செய்து வருபவனின் ஊக்கம் இனிதாகும். சோம்பல் இல்லாது முயற்சி உடையவனின் ஆண்மை இனிதாகும். வாள் கலக்குகின்ற போரில் மாறாத பெருமை உடைய அரசர்களின் படைகளை எதிர்த்தல் ஓர் அரசனுக்கு இனிதாகும்.
எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே புல்லிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை கொள்ளர் விடுதல் இனிது.
இரவில் செல்லாமல் இருப்பது இனியது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வலிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல் வெற்வேறில்(@) வேந்தர்க்கு இனிது. (@) வெற்றல் வேல்
வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.
அவ்வித் தழுக்கா றுரையாமை முன்இனிதே செவ்வியனாய்ச் செற்றுச் சினங்கடிந்து வாழ்வினிதே கவ்வித்தாங் கொண்டுதாங் கண்டது காமுற்று வவ்வார் விடுதல் இனிது.
மனக்கேடான பொறாமைச் சொற்களைச் சொல்லாமை இனிதாகும். மனக்கேடு இல்லாமல் சினத்தை விடுத்து வாழ்வது இனிதாகும். தனக்கு வேண்டிய பொருளை அபகரிக்காமல் அதனை மறந்து விடுதல் இனிது.
இளமையை மூப்பென் றுணர்தல் இனிதே கிளைஞர்மாட் டச்சின்மை கேட்டல் இனிதே தடமென் பணைத்தோள் தளிரிய லாரை விடமென் றுணர்தல் இனிது.
தனக்குள்ள இளமைப் பருவத்தை மூப்பென்று உணர்தல் இனிது. சுற்றத்தாரிடம் இனிய சொற்களைக் கேட்பது இனிதாகும். மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.
சிற்றா ளுடையான் படைக்கல மாண்பினிதே நட்டா ருடையான் பகையாண்மை முன்இனிதே எத்துணையும் ஆற்ற இனிதென்ப பால்படுங் சுற்றா உடையான் விருந்து.
ஆயுதங்களைக் கொண்ட இளம் வீரர்கள் படை இனிது. சுற்றத்தை உடையவனின் பகையை அழிக்கும் தன்மை இனிது. கன்றோடு பொருந்திய பசுவுடையவனது விருந்து எல்லா வகையினும் இனியது.
பிச்சைபுக் குண்பான் பிளிறாமை முன்இனிதே துச்சி லிருந்து துயர்கூரா மாண்பினிதே உற்றபே ராசை கருதி அறனொரூஉம் ஒற்கம் இலாமை இனிது.
பிச்சையெடுத்து உண்பவன் கோபம் கொள்ளாதிருத்தல் இனிது. துன்பத்தில் இருந்தாலும் துன்பம் கூறாது இருப்பவனின் பெருமை இனிது. மிக்க பேராசையைக் கொண்டு அறவழியிலிருந்து நீங்காதிருக்கும் உறுதி இனிது.
பத்துக் கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே வித்துற்குற் றுண்ணா விழுப்பம் மிகஇனிதே பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய கற்றலிற் காழினியது இல்.
பத்துப் பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்த தானியத்தை உண்ணாதிருத்தல் இனிது. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை.

🌸 இனியவைநாற்பது (Iniyavai Narpadu) Dataset

இனியவைநாற்பது (Iniyavai Narpadu) is one of the Pathinen Keezhkanakku (Eighteen Minor Works) in classical Tamil literature, composed by the poet பூதஞ்சேந்தனார் (Poothanchenthanar).

It consists of 40 Venpa poems, each describing the essence of what is considered “Iniyavai” (Sweet/Desirable things in life).

In four poems, the poet describes four desirable things.

In the remaining poems, he lists three desirable things each.

The work focuses on virtue, wisdom, piety, generosity, and relationships, serving as a moral and philosophical guide for human life.

This dataset provides a structured JSON format of Iniyavai Narpadu, segmented into poems and explanations, which is valuable for Tamil NLP, moral text mining, and cultural heritage preservation.

📂 Dataset Structure

Each entry contains:

poem (string) → Original Tamil verse (இனியவைநாற்பது)

explanation (string) → பொருளுரை (commentary in Tamil)

Example
[
  {
    "poem": "கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே\nதொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே\nமுந்துறப் பேணி முகநான் குடையானைச்\nசென்றமர்ந் தேத்தல் இனிது.",
    "explanation": "மூன்று கண்களையுடைய சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான திருத்துழாய் மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது."
  },
  {
    "poem": "பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே\nநற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே\nமுத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே\nதெற்றவும் மேலாயார்ச் சேர்வு.",
    "explanation": "பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது."
  }
]

📊 Dataset Statistics

Total Poems: 40

Language: Tamil (ta)

Format: JSON / JSONL

Size: ~50 KB

💡 Use Cases

Tamil NLP & AI → classification of moral values, poem-to-explanation mapping

Digital Humanities → cultural entity extraction, ancient Tamil philosophy

Education → moral instruction and Sangam/post-Sangam literature studies

Comparative Literature → exploring universal values across cultures

Digital Heritage → preserving ethical wisdom in machine-readable formats

🔑 Licensing

Texts (Poems): Public Domain (classical Tamil literature)

Explanations: Released under CC BY 4.0 (free to use with attribution)

#இனியவைநாற்பது #PathinenKeezhkanakku #சங்கஇலக்கியம் #TamilLiterature #TamilPoetry #ClassicalTamil #TamilNLP #DigitalHeritage #TamilCulture #PoetryDataset #TamilAI #OpenSource

Downloads last month
12