செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
எட்டாம் தந்திரம். முத்தி உடைமை முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்றுத் தத்துவ சுத்தி தலைப்பட்டுத் தன்பணி மெய்த்தவஞ் செய்கை வினைவிட்ட மெய்யுண்மைப் பத்தியி லுற்றோர் பரானந்த போதரே. (ப. இ.ஒட்டாகிய வீடுபேறு முத்தி எனப்படும். அப் வொட்டின்கண் அத்தனாகிய சிவபெருமானின் முழுத்த திருவருள் பெறுதல் இயல்பகும். அங்ஙனம் பெற்ற திருவருளால் முப்பத்தாறு மெய்களும் நமக்கு வேறெனவும் கருவியெனவும் அவை ஆண்டவன் உரிமை எனவும் மீண்டும் அதன்பால் வருதல் வேண்டத்தக்கதன்றெனவும் அருளால் கண்டு உண்மை யுணர்தல் தத்துவ சுத்தியாகும். அந் நிலையினைத் தலைப்பட்டவர் செய்யும் பணிகளெல்லாம் சிவப்பணியாகும். தன்பணி - சிவப்பணி. அப் பணியே மெய்த்தவமாகும். அச் செய்கையால் இருவினை அகலும். அகலவே உண்மைப் பத்தியுண்டாகும். அத்தகைய பத்தியிலுற்றோர் பேரின்பப் பேரறிவினராவர். தன்-சிவன். குறிப்புரை: தத்துவசுத்தி தலைப்பட்டு-தத்துவங்கள் -ம் வேறு என்று அறிந்து நீங்கி. தன்பணி-சிவப்பணி.
வளங்கனி தேடிய வன்றாட் பறவை உளங்கனி தேடி யுழிதரும் போது களங்கனி யங்கியிற் கைவிளக் கேற்றி நலங்கொண்ட நால்வரும் நாடுகின் றாரே. பொருளுரை: ஆருயிர்களை வலிய இருபெருந்தாள்களையுடைய அரிய பறவையாக உருவகஞ் செய்தனர். இருகால்கள் என்பது உழைப்பும் ஒடுக்கமும் ஆகும். வளப்பமிக்க திருவடிப்பேறாகிய கனியைத் தேடிய ஆருயிர்கள் உள்ளங்கனிந்து ஓவாது திரியும். அங்ஙனம் திரியும்போது கள்ளம் கனிந்த காம வான்சுறவின் வாய்ப்பட்டு விட்டிலுக்கு முன் விழைவினை உண்டாக்கிப் பின் இழவினைத்தரும் விளக்கினைப்போல் வருத்தங் கொடுக்கும் உலகியற்பற்றாம் கைவிளக்கினை ஏற்றி எண்ணம் மனம் இறுப்பு என்னும் நால்வரும்அவ்வுயிரைத் தன் வழிக்கு இழுக்க நாடுகின்றனர். அங்கி - ஈண்டு விளக்கு. குறிப்புரை: வளங்கனி - முத்தி. பறவை - சீவன். உளங்கனி - உள்ளங்கனிந்து. களம் கணி - கள்ளம் கனிந்த. அங்கி - தீபோலும் வருத்தம் செய்யும் உலக வியாபாரங்களில். நால்வர் - அந்தக்கரணங்கள். கற்றவர் விழுங்கும். . சேந்தனார், .
எட்டாம் தந்திரம். சோதனை பெம்மான் பெருநந்தி பேச்சற்ற பேரின்பத்து அம்மா னடிதந் தருட்கடல் ஆடினோம் எம்மாய மும்விடுத் தெம்மைக் கரந்திட்டுச் சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே. பொருளுரை: யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைப்பெருமான் சிவன். அவனே ஒப்பற்ற பெருமைசேர் நந்தியும் ஆவன். மாற்றமும் மனமும் செல்லா ஏற்றமாம் பேரின்பத்து அம்மானும் அவனே. அவன் திருவருட் கடலில் ஆடினோம். அதனால் அவனருளால் எவ்வகை மாயமருளையும், அதற்கு ஆக்கந்தரும் இருளையும், உழல்விக்கும் அழலனைய இருவினையயும் ஒருங்கு விடுத்தனம். யான் எனது என்னும் பற்றே, யாம் எனப் பெயர்பெறும். அதனையும் அகற்றினம். அதனால் எம்மைக் கரந்திட்டனம் என்றனர். இந்நிலையில் 'அவனருளால் அல்லது ஒன்றையும் செய்யானாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியாகலான்' என்னும் மெய்கண்டார் திருவருண் மொழிக்கிணங்க அவ்வுயிர் நிற்கும். அதனால் அவ்வுயிர் சும்மா இருக்கிறது என்னும் பொருளில் சும்மா என ஓதினர். செயலொழிவுபெற்று இருக்கும் இடமே திருந்திய இடமாகும். இதனையே அறுவழி ஆய்வு என்பர். அறுவழி ஆய்வு எனினும் அத்துவ சோதனை எனினும் ஒன்றே. குறிப்புரை: எம் மாயமும் - எவ்வகைப்பட்ட மாயா சம்பந்தங்களையும். எம்மைக் கரந்திட்டு - தான் என்பது அற்று. திருந்திடம் - திருத்தமுற்று இருக்குமிடம். மூன்றுதிறத். சிவஞானசித்தியார், . - . " பொன்னிமையப். . திருக்குறிப்புத்தொண்டர், .
அறிவுடை யானரு மாமறை யுள்ளே செறிவுடை யான்மிகு தேவர்க்குந் தேவன் பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த குறியுடை யானொடுங் கூடுவன் நானே. பொருளுரை: இயல்பாகவே விளங்கும் உண்மைப் பேரறிபு உடையவன் சிவன். அவனே அருமாமறையாகிய திருவைந்தெழுத்தின் நிறைவாயுள்ளான். பெருந்தேவரென்று பேசப்படும் யாவர்க்கும் பெருந்தேவனாகவுள்ளான். புண்ணிய வடிவானவன். பொறிவாயில் ஐந்தவித்த புலவன். அப்பெருமான் திருவடிக்கண் அவன் திருவருளால் அடியேன் அன்பாற் கூடியின்புறுவன். குறியுடையான் - புலவன். குறிப்புரை: பொறியுடையான் புலனைந்தும் கடந்த குறியுடையான் பொறி வாயிலைந்து அவித்தான்.
குறியாக் குறியினிற் கூடாத கூட்டத்து அறியா அறிவில் அவிழ்ந்தேக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றுஞ் செறியாச் செறிவே சிவமென லாமே. பொருளுரை: மறவர்நினைவாய், மலர் மணம்போன்று ஓரிடப்புணர்ப்பாய், ஓய்விலா உணர்வாய், மெய்ப்புணர்ப்பாய், ஓருணர் நினைவாய் நன்னெறியாநிற்கும் பெரும்பொருளாம் நந்தியினை உணர்ந்தேன். உணரவே அவன்றன் அழிவிலாத் திருவருள் அடியேன்பால் பொருந்தும். பொருந்தவே வேறறப்புணரும் புணர்ப்பாய்ப் புணர்ந்தேன். அப் புணர்ப்பின் மணத்தால் சிவம் என்னும் திருப்பெயரைப் பெற்றுய்ந்தேன். செறியாச் செறிவு - இரண்டிணை ஒன்று. குறிப்புரை: குறியாக் குறி - மறந்து நினையாக் குறி கூடாத கூட்டம் - கடலும் அலையும்போலக் கூடுங் கூட்டம். அறியா அறிவு - மறப்பற்ற மெய்ஞ்ஞானம். அவிழ்ந்து - கலந்துநின்று. ஏக சித்தமாய் - ஒருமனதாய். செறியாச் செறிவு - கூடாத கூட்டம்.
காலினில் ஊறுங் கரும்பினிற் கட்டியும் பாலினுள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போலுளன் எம்மிறை காவலன் எங்குங் கலந்துநின் றானன்றே. பொருளுரை: மேலோதிய ஐம்பெருந் தன்மைக்கு ஒருபுடையொப்பு வருமாறு: காற்றினில் உண்டாம் ஊறும், கரும்பினில் உண்டாம் கட்டியும், பாலினுள் உண்டாம் நெய்யும், பழத்தினில் உண்டாம் சுவையும், பூவினில் உண்டாம் மணமும்போன்று பிரிவற நின்றருள்கின்றனன் எம்மிறையாகிய சிவபெருமான். அவனே அனைத்துயிர்க்கும் அனைத்து உலகங்கட்கும் நீங்காக் காவலன் ஆவன். அவன் அகல் நிறைவாகவும் ஆருயிர்கள் அமைநிறைவாகவும், அனைத்துப் பொருளும் அடங்கு நிறைவாகவும் அமையுமாறு கலந்துநிற்கின்றனன். அகல்நிறைவு - வியாபகம். அமைநிறைவு - வியாப்பியம். அடங்குநிறைவு - வியாத்தி. குறிப்புரை: ஊறும் - பரிசமும். கட்டியும் - வெல்லமும். நெய் - வெண்ணெய். பண்ணையும். சிவஞானபோதம், . - .
விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப் பொருப்பகஞ் சேர்தரு பொற்கொடி போல விருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்புரு வாகி நிகழ்ந்துநின் றாரே. பொருளுரை: ஆருயிர்கள் பெண் தன்மை எய்தி எட்டு வான் குணமலை மீது இவர்ந்து மட்டில் விழைவுடன்கூடி ஒருபடித்தல்லா அருட்டொழில்சேர் ஒப்பில் ஒருவனை நற்றவத்தால் நாடல்வேண்டும். நாடி நயனுறக்கூடி என்றும் பொன்றா இன்புற்றிருக்க வழிகாட்டல்வேண்டுமென்று பழியில் தடமலர் விழிசெர் அருளம்மை திருவுள்ளங்கொண்டருளினள். அவளே மேருமலைமீது யாரும் விரும்பத் தனிப்பெரும் பெண்ணாய்த் தோன்றி அருந்தவம் புரிந்தனள். அதனைத் திருவுள்ளங் கொண்டருளிய சேறைச் செந்நெறிச் செல்வனாராகிய சிவபெருமானார் அவளை மாமணம் புணர்ந்தருளினர் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு கலந்தருளினர். அதுபோல் நற்றவம்புரிந்து அவரையே விரும்பியிருக்கும் நல்லார் நல்லுளத்தினிடத்து எங்கள் பிரானாராகிய சிவபெருமானார் தங்கிநின்றருள்கின்றனர். அவர் பேரறிவுப் பெரும் பிழம்பாம் தீவண்ணத்தராகி ஒன்றாய் வேறாய் உடனாய் நிகழ்ந்து நின்று அருள்கின்றனர். ஆருயிர் பெண்தன்மை எய்துவது ஆண் என்பதினின்றும் ஒரு மாத்திரை குறைவது, அதுவே 'மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே' என்பதாம். இதனை 'அன்பின்பு நண்புண்பிங் காயின் அறிவினினான், கின்புநிலை மாத்திரை யொவ்வொன்று, என்பதனான் நினைவுகூர்க. குறிப்புரை: பொருப்பகம் - இமயமலை. பொற்கொடி - உமாதேவி நெருப்புருவாகி - செம்மை வடிவினராகி. துஞ்சிருள். அப்பர், . - . " பெருந்திரு. " " - . " சாத்தி. " . - . " குரும்பைமுலை ஆரூரர், . - .
நந்தி பெருமான் நடுவுள வியோமத்து வந்தென் அகம்படி கோயில்கொண் டான்கொள்ள எந்தைவந் தானென் றெழுந்தேன் எழுதலுஞ் சிந்தையி னுள்ளே சிவனிருந் தானன்றே. பொருளுரை: நந்திபெருமானாகிய சிவபெருமான் அப்பாலாம் நாப்பண்சேர் உறக்கத்து எழுந்தருளிவந்து அடியேன் அகம்படியினைக் கோவிலாகக் கொண்டருளினன். கொண்டதனால் அடியெனும் திருவிளக்கேற்றியதும் திருமனை புகுவார்போன்று எந்தை வந்தானென்று திருவருளால் எழுந்து நெல்லுமலரும்தூ உய்த் தொழுதேன். தொழுதலும் அடியேன் உள்ளத்தினுள்ளே அச் சிவபெருமான் திருந்த இருந்தருளினன். அப்பால்உளக்கம் - துரிய சுழுத்தி; அறிதுயில். குறிப்புரை: நடுவுள் வியோமம் - பரசுழுத்தி.
தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப் புன்மைபொய் யாதே பினிதனை நாடுமின் பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானன்றே. பொருளுரை: உண்மை அறிவு இன்பப் பண்பாம் தன்மை வல்லானை, நற்றவத்துள் நடுநின்றருளும் நலத்தினை, அனைத்துயிர்க்கும் அகலாது நின்று ஆரருளால் நன்மை புரிந்துவரும் நல்லோனை, நடுநிலைகுன்றாது நயம்புரிந்தருளும் நந்தியை, புன்மையும் பொய்யும் - இருளும், மருளும் ஒருசிறிதும் இல்லாத புனிதனை. அன்புடன் நாடுங்கள், அங்ஙனம் நாடினால் அளவில்லாத ஆருயிர்களுள் நும்மைச் சிறப்பாகத் தெரிந்தெடுத்து நுமக்குத் திருவடிப் பரிசினைச் சேர்த்தருள்வன். மடவரன் ...அயர. நெடுநெல்வாடை, - .
தொடர்ந்துநின் றானென்னைச் சோதிக்கும் போது தொடர்ந்துநின் றானல்ல நாதனும் அங்கே படர்ந்துநின் றாதிப் பராபரன் என்தை கடந்துநின் றவ்வழி காட்டுகின் றானன்றே. பொருளுரை: சிவகுருவாய் எழுந்தருளிவந்து எனக்கெய்திய அறுவழி ஆய்வு செய்தருளும்போது அச் சிவபெருமான் உடனாந் தன்மையால் நல்ல நாதனாகி அங்கே தொடர்ந்துநின்றருளினன். ஒன்றாந் தன்மையில் ஆதிப் பெரும்பொருளாம் அவன் நீக்கமற நிறைந்துநின்றருளினன். எந்தையாகிய அவன் பொருள்தன்மையால் கடந்துநின்று திருவடிசேரும் அருட்பெரும் வழியைக் காட்டியருளுகின்றனன்.
அவ்வழி காட்டும் அமரர்க் கரும்பொருள் இவ்வழி தந்தைதாய் கேளியான் ஒக்குஞ் செவ்வழி சேர்சிவ லோகத் திருந்திடும் இவ்வழி நந்தி இயல்பது தானன்றே. பொருளுரை: அமரர்களுக்கும் அறியவொண்ணாத அரும்பொருளாம் சிவபெருமான் திருவடிப் பேற்றினுக்காம் அவ்வழியினைக் காட்டியருள்கின்றனன். இவ்வழியாகிய இவ்வுலகத்து எனக்குத் தந்தைதாய் கேள் ஒத்துத்தோன்றாத் துணைபுரிந்தருளுகின்றனன். அவன் செம்பொருள், செம்மை நலம்புரியும் விழுப்பொருள். செவ்வழியாய்ச் சென்று சேர்தற்குரிய சிவலோகமாகிய அம்மைக்கண் திருந்த இருந்திடும் அரும்பொருள். இம்முறையே நந்திப்பெருமானின் நல்லியல்பாகும்.
எறிவது ஞானத் துறைவாள் உருவி அறிவது னோடேயவ் வாண்டகை யானைச் செறிவது தேவர்க்குந் தேவர் பிரானைப் பறிவது பல்கணப் பற்றுவி டாரே. பொருளுரை: மும்மலமாகிய மாயப்படைகளைத் திருவருளாகிய உறையினுள்ளிருக்கும் திருவைந்தெழுத்தாம் ஞானவாட்படையினை வெளிப்பட எடுத்து எறிவது திருவாணைவழி யொழுகும் அடிமையின் முடிவில் கடனாகும். எறியவே அப் படைகள் அஞ்சி அகலும். அங்ஙனம் அஞ்சியகலவே திருவடியுணர்வு திகழ்ந்தோங்கும். ஓங்கவே அதனால் அறிவது அவ்வாண்டகையாகிய சிவபெருமானை. தேவர்பிரானாகிய அச்சிவபெருமானுடன் இரண்டறக்கலந்து செறிந்திருப்பது அவ்வழிப்பேறாகும். அப்பேறு எய்தவே வேறு பலவகையான மாயாகாரியப் பற்றுவிடாச் சிறப்பிலார் சேர்வு பறிவதாகும். பறிவது - ஓட்டெடுப்பது. ஞானவாள். . திருப்படையெழுச்சி, .
ஆதிப் பிரான்தந்த வாளங்கைக் கொண்டபின் வேதித்து என்னை விலக்கவல் லாரில்லை சோதிப்பன் அங்கே சுவடு படாவண்ணம் ஆதிக்கட் டெய்வ மவனிவ னாமன்றே. பொருளுரை: சிவகுருவாய் எழுந்தருளிய ஆதிப்பிரான் திருவைந் தெழுத்தாகிய வாளைத் தந்தருளினன் அதனை உயிரினும் சிறந்த ஒழுக் கமாகக் கைக்கொண்டேன். அங்ஙனங் கைக்கொண்டபின் என்னை வேறுபடுத்தி நன்னெறியினின்றும் விலக்கிப் புன்னெறியிற் புகுத்தவல்லார் எவரும் இலர். மாயாகாரியச் சுவடாகிய குற்றப் பசையும் நேராவண்ணம் அவனருளால் குறிக்கொண்டு சோதிப்பன். ஆதிக்கண் தெய்வமாய் அந்த முழுமுதலாய் நிற்பவன் அவனே. அவனருளால் அவன் திருவடிசேர் இவனும் அவனாவன்.
அந்தக் கருவை யருவை வினைசெய்தற் பந்தம் பணியச்சம் பல்பிறப் பும்வாட்டிச் சிந்தை திருத்தலுஞ் சேர்ந்தாரச் சோதனை சந்திக்கத் தற்பர மாகுஞ் சதுரர்க்கே. பொருளுரை: தொன்மையேயுள்ள பிறப்பீனும் வித்தாகிய அந்த இருண் மலத்தை, அதுகாரணமாக வரும் அருவுருவாயுள்ள மாயாகாரியங்களை, அவற்றான் ஏற்படும் இருவினைத் தொடக்கினை, அப்பணியால் ஏற்படும் அச்சத்தை, அவ்வச்சத்தால் வரும் பல பிறப்புக்கள் முதலிய எல்லாவற்றையும் சிவகுருவானவர் அருளால் வாட்டினர். வாட்டிச் சிந்தையைத் திருத்தியருளினர். அருளலும் அறுவழி ஆய்வினைப் பொருந்தினர் தக்கோர். பொருந்தவே திருவடியிணையினைச் சேர்ந்தனர். சேரவே சிவமாம் பெருவாழ்வினைப் பெற்றனர். பெற்ற நற்பேற்றால் செயற்கரும் செய்கை செய்யும் தீரராம் சதுரர் ஆயினர், "செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர், செயற்கரிய செய்கலா தார்" எனவும், "பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம், கருமமே கட்டளைக் கல்" எனவும் நாயனாரருளிய நற்றமிழ்மறையினை ஈண்டு நாடி இன்புறுக. செயற்குரிய செய்வார் மக்கள். செயற்குரிய செய்கலாதார் மாக்களிலும் தாழ்ந்த கயவர். இவரையே "எற்றிற் குரியர் கயவர் ஒன்றுற்றக்கால், விற்றற் குரியர் விரைந்து" என நாயனார் அருளினர். ஒன்று - கிடைத்தற்கரிய இம் மக்கள் யாக்கை. விற்றல் - தம்மைப் புலனுக்கு அடிமையாக்கல். விரைந்துகண்ட அளவானே ஆய்ந்தோய்ந்து பாராது முந்திப் புகுந்து. கயவர்-புலனுக்கு அடிமைப்பட்டுப் புன்பிறப்பெய்தும் புல்லியர் கயவர் - மீளா ஆளாய்ப் பள்ளத்து ஆழ்ந்தோர். மக்கள் பிறப்பால் மலர் மிசை ஏகினான் மாணடிசேராது நிலமிசைப் புலனுக்கு அடிமையாய் மீண்டும் மீண்டும் புன்பிறப்பெய்துவோர் போக்கொணாக் கயவராவர். எட்டாம் தந்திரம் முற்றும்
ஒன்பதாம் தந்திரம். குருமட தரிசனம் பலியும் அவியும் பரந்து புகையும் ஒலியும்எம் ஈசன் தனக்கென்றே யுளகிக் குவியுங் குருமடங் கண்டவர் தாம்போய்த் தளிரு மலரடி சார்ந்துநின் றாரே. பொருளுரை: அன்பால் அமைக்கப்படும் செஞ்சாலியரிசிச் சோறாகிய திருவமுதுப்பலியும், முத்தழற்கண் நத்திச் சொரியும் நெய் அவியும், பரந்து சித்தாந்த சைவத் திருமடங்களினெல்லாம் நறும்புகை கமழா நிற்கும். எனவே மெய்யடியார்கட்கு விருந்தயரச் சமைக்கும் சோறடு பகையும். பொருந்திய சிவ வணக்கத்தின்பொருட்டுச் செய்யப்படும் வேள்வித் தீயில் நெய்பெய் புகையும் எங்கணும் பரந்து உள்ளம் பொங்க உலகும் பொங்கின என்க. திருவருளால் தோன்றிய செந்தமிழ்த் திருமறை திருமுறை முதலிய சிவநூற்களின்கண் பிறப்பறுக்கும் அருமறைகளே பேசப்பட்டுள்ளன. அவைகளே கீதத்தொலி எனப்படும் அவ்வொலிகளே எங்கணும் முழங்குவ. எல்லாம் சிவபெருமான் ஒருவனையே முழுமுதலாகக்கொண்டு நிகழ்வவாயின. அவற்றை நெஞ்ச நெக்குருகி நினைந்து அன்பருளமெலாம் குவியும். அதன் புறவடையாளமாகக் கைகளும் தலைமீதேறிக் குவியும். அத்தகைய சிவகுருமடங்களைக் கண்டவர் செம்மலர் நோன்றாளாம் சிவபெருமான் திருவடியிணையினைச் சார்ந்து இன்பார்ந்து என்றும் சிற்பர். குறிப்புரை: பலியும் - அன்னப் பலியும். அவியும் - பறப்பையின் மூலம் ஓமத்தீயில் சொரியும் நெய் அவியும். ஒலி - தமிழ்வேதம் ஓதும் ஒலி. குவியும் - மனம் அடங்கும். தளிரும் - குளிர்ந்து தளிர்ந்த. பறப்பை: நெய் வைக்கும் மரவை.
இவனில்ல மல்ல தவனுக்கங் கில்லை அவனுக்கும் வேறில்லம் உண்டா அறியின் அவனுக் கிவனில்ல மென்றென் றறிந்தும் அவனைப் புறம்பென் றரற்றுகின் றாரே. பொருளுரை: ஈண்டு இவன் என்பது ஆருயிரைக் குறிக்கும். அஃது அவன் இவன் ஆகின்றான் என்னும் மும்மொழிக்கண் பெறப்படும். அத்தகைய இவன் என்னும் சொல் சிறப்பாக சிவகுருவினைக் குறிப்பதாகும். அவன் என்னும் சொல் முழுமுதற் சிவனைக் குறிப்பதாகும். முழுமுதற் சிவனாகிய அவனுக்குச் சிவகுருவாகிய இவனுடைய நற்றவ உள்ளமே உற்று உறையும் வற்றா அருள்சேர் திருக்கோவில் என்க. அதுவல்லாமல் வேறு திருக்கோவில் சிவனுக்கு அங்கு இல்லை என்க. அங்ஙனமிருந்தும் அவனாகிய சிவனுக்குச் சிவகுருவின் உள்ளத்தையன்றி வேறோர் இல்லம் இருப்பதாக ஆராய்ந்து அறியப்புகின், வழியளவை நூலளவை நுண்ணுணர்வு முதலிய எல்லா வகையானும் பெறப்படுவது சிவகுருவின் திருவுள்ளம் என்பதேயாம். அவ்வுண்மையினை அவ்வாற்றான் அறிந்திருந்தும் அவனாகிய சிவபெருமானைச் சிவகுருவுக்கு வேறாகப் புறம்பு என்று சில்லோர் வீண்முழக்கம் செய்கின்றனர். உண்டா - உண்டாயிருப்பதாக. குறிப்புரை: இவன் - சீவன; அவன் - சிவன். புறம்பு - வேறானவன். <. திருக்கோயி. சிவஞானசித்தியார், . - . " எவரேனும். அப்பர், . - . " கண்ணுதலும். இருபாவிருபது, .
நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின் கூடுஞ் சிவனது கொய்மலர்ச் சேவடி தேட வரியன் சிறப்பிலி எம்மிறை ஓடும் உலகுயி ராகிநின் றானன்றே. பொருளுரை: நன்னேறி நான்மை நற்றவத்தோரால் நாடப்பெறும் 'மிகுசைவத்துறையே பெருந்துறையாகும். அத்துறையினைத் திருவருளால் நான் கண்டுகொண்டேன். அதன்பின் சிவபெருமானுடைய செம்மலர் நோன்றாள் சேர்ந்தின்புறும் பேறு கைகூடிற்று. சிறப்பிலி : சிறப்பு + இல் + இ = சிறப்பாகிய, இல் - சிவகுருவின் திருவுள்ளம், இ - உடைமையாகக்கொண்டு எழுந்தருளியிருப்பவன். இப் பொருள் பயப்பதே ஈண்டுச் சிறப்பிலியாகும். இ: ஒடைமைப் பொருள்ஈறு; வில்லையுடையவன் வில்லி என்பதுபோல். அத்தகைய சிறப்பிலியாகிய எம்மிறையைத் தேடவரியன் என்று செப்புவர். அச் சிவபெருமான் புடைபெயரும் உலகாகவும் உற்றுணரும் உயிராகவும் பிரிப்பின்றி நிறைந்து நின்றியக்குகின்றனன். குறிப்புரை: பெருந்துறை சிவனது திருவடிதான் என்பது இம் மந்திரக் கருத்து. சிறப்பு இல் இ - சிறப்பினையுடையன் இல்லமாயிருக்கின்ற குரு. வேதநெறி. . சம்பந்தர், .
இயம்புவன் ஆசனத் தோடு மலையும் இயம்புவன் சித்தக் குகையும் இடமும் இயம்புவன் ஆதாரத் தோடு வனமும் இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே. பொருளுரை: சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு ஆண்டாண்டு எழுந்தருளியிருக்கும் இருக்கையும் மலையும் இவை இவை என இயம்புவன் பேரண்புவாய்ந்த சிவனடியார் சித்தக் குகையும், திருமடம் திருக்கோவில் தொழுமிடம் முதலிய இடவகைகளும் இயம்புவன். அகநிலை ஆதாரமாகிய ஆறுநிலைகளும், புறநிலை ஆதாரமாகிய சிவகுரு சிவனடியார் முதலிய திருமேனிகளும், காடு முதலிய பீடுசேர் இடங்களும் இயம்புவன். யாவர்க்கு என்றால் பதினான்கு உலகங்களிலும் வாழும் பயன்சேர் பல்லோர்க்கும் என்க. ஈராறு : பன்னிரண்டு. இரு: இரண்டு. ஆகப்பதினான்கு. குறிப்புரை: ஈராறு இருநிலம் - பதினான்கு உலகங்கள்.
முகம்பீட மாமட முன்னிய தேயம் அகம்பர வர்க்கமே யாசில்செய் காட்சி அகம்பர மாதனம் எண்ணென் கிரியை சிதம்பரந் தற்குகை யாதாரந் தானே. பொருளுரை: சிவவெருமானுக்குச் சிவகுருவின் திருமுகமே தாமரை இருக்கையாகும். சிவகுருவின் திருமடமே கருதப்படும் சிறந்த இடமாகும் தேயம் - இடம். ஆருயிர்களின் தூயவுள்ளங்களே குற்றமற்ற அருட்காட்சிகளை யருளும் நிலைக்களம். அதனால் அவ்வுள்ளங்களில் இருத்துதலே காட்சியாகும். ஒவ்வொருவரும் தத்தம் உள்ளங்களைச் சிவபெருமானுக்கு உகந்த உவப்பமை இடமாக்குதல்வேண்டும். பதினாறு வகையான வழிபாட்டுச் செய்கைகளைச் சிறந்த காதலுடன் செய்தல்வேண்டும். அன்புசேர் இன்பவுள்ளம் அறிவுப் பெருவெளியின் நுண்ணிய நிலைக்களமாகும். எண் எண் - பதினாறு. இஃது உம்மைத் தொகை; எட்டும் எட்டும் கூட்டப் பதினாறாகும். குறிப்புரை: முகமபீடம்-பதும ஆசனம். மடம் முன்னிய தேயம் - தேயமே மடம். அகம்பர வர்க்கமே - அகத்தில் பரனை இருத்துதலே. அகம்பர மாதனம் - அகத்தைப் பரனுக்கு ஆதனமாக்கி. எண்ணெண் கிரியை - கருதப்படும் எட்டுவித கிரியைகளும். குகை - இருதயம்.
அகமுக மாம்பீடம் ஆதார மாகுஞ் சகமுக மாஞ்சத்தி யாதன மாகுஞ் செகமுக மாந்தெய்வ மேசிவ மாகும் அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே. பொருளுரை: அகமுகம் - நினைவகலாவுள்ளம் சிவபெருமானுக்குப் பீடமாகும். அதுவே நிலைக்களமுமாகும். உலகினைத் தொழிற்படுத்தும் திருவருளாற்றல் சிவபெருமானுக்குத் திருவுருவாகும். திருவுரு - ஆதனம். அத்திருவுருவின்கண் விளங்கித்தோன்றி உலகில் வெளிப்படுபவன் சிவபெருமானே. அவன் ஒருவனே தேவன். திருவருளால் உன்முகமாய்த் தேரும் நல்லறிவாளர்க்கு இவ்வுண்மைகள் நன்கு புலனாகும். குறிப்புரை: அகமுகம் - உள் நினைந்திருப்பது. சகமுகம் - உலக வியாபாரங்களில் கலப்பது. செகமுகமாம் - உயிர்களைக் காத்தற் பொருட்டு உலக இன்பங்களைச்செய்த. அகமுக மாய்ந்த - சிந்தையை உள்பக்கம் திருப்பி ஆராய்ந்து திருவடி நினைத்த.
மாயை யிரண்டு மறைக்க மறைவுறுங் காயமோ ரைந்துங் கழியத்தா னாகியே தூய பரஞ்சுடர் தோன்றச் சொரூபத்துள் ஆய்பவர் ஞானாதி மோனத்த ராகுமே. (ப. இ. ஆருயிர்கட்கு அமைந்த உடல்மெய் உணர்வுமெய் என்னும் மெய்கட்கு வேண்டிய மாயை இரண்டு. அவை முறையே பகுதிமாயை தூவாமாயை எனப்படும் இம் மாயா வுடம்புகளால் ஆருயிர்கள் தம் உண்மை இயல்பு அறிய முடியாதபடி மறைக்கப்பட்டுள்ளன. உண்மைத் தன்மை - சொரூபம். காயம் ஐந்து வருமாறு: பருவுடம்பு, நுண் உடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என்றலும் ஒன்று இவ் ஐ வகை உடம்புகளின் உண்மைகளைச் சிவகுருவருளால் தேர்ந்து தெளிதலே கழிதலாகும். கழியவே தன் உண்மை புலனாகும். புலனாகத் தூய பரஞ்சுடர்ச் சிவபெருமான் தோன்றி யருள்வன். அச் சிவபெருமான் அருளும் தோற்றத்தின்கண் தம்மையும் அறிதல் கூடும். நாம் திருக்குறளைப் பயிலும்கால் திருவள்ளுவ நாயனாரை உணர்கின்றோம். அந் நாயனாரை உணருங்கால் உணர்கின்ற நம்மையும் நாம் உணருகின்றோம் அல்லவா? அதுபோன்றதாகும் ஆருயிர்கள் சிவனை யுணருங்கால் தம்மை யுணர்வதும் 'கண்ணாடி யைக்காண்பான் காணானோ தன்முகமும், உண்ணாடில் ஈதொப்பாம் ஓர்' அங்ஙனம் ஆய்பவர் ஞானம் நிறைந்த மோனத்தராவர். குறிப்புரை: மாயை இரண்டு மூலப் பிரகிருதி மாயை, அசுத்தமாயை, காயம் ஓர் ஐந்தும் - அன்னமய கோசம் முதலிய ஐந்து கோசங்களும் அல்லது ஐந்து பூதங்களால் ஆகிய காயம்.
ஒன்பதாம் தந்திரம். ஞானகுரு தரிசனம் ஆறொடு முப்பதும் அங்கே யடங்கிடிற் கூறக் குருபரன் கும்பிடு தந்திடும் வேறே சிவபத மேலாய் அளித்திடும் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே. பொருளுரை: அருஞ் சைவர் மேற்கொள்ளும் முப்பத்தாறு மெய்களும் சிவகுருவின் அருள்வழி நிற்றலால் அங்கே அடங்கிடும். அவன் செவியறிவுறுத்திய திருவைந்தெழுத்தின் வழிநிற்கச் சிவபெருமானின் திருவடி தலைப்பெய்தலாகிய கும்பிடுதல் கைகூடும். அது கைகூடவே சிறப்பாகிய பேரின்பப் பெருவாழ்வாம் சிவபதத்தினை மேலாக அளித்தருள்வன். அவன் திருவடியினை மறவா நினைவுடன் பேணிவரவே பேரின்பம் அளவின்றி உளமெலாம் பெருகி ஊறியோடும். குறிப்புரை: கும்பிடு - ஐக்கியம்.
துரியங்கள் மூன்றுங் கடந்தொளிர் சோதி அரிய பரசிவம் யாவையு மாகி விரிவு குவிவற விட்ட நிலத்தே பெரிய குருபதம் பேசவொண் ணாதே. பொருளுரை: ஆருயிர்ச் செயலறல், அருள் செயலறல், அருளொன் செயலறல் ஆகிய துரியங்கள் மூன்றும் கடந்து அப்பால் திகழும் அறிவுப் பேரொளிப் பிழம்பு சிவபெருமான். அவனே மாற்றம் மனங்கழிய நிற்கும் அருமைசேர் பரசிவம் அவனே யாவையும் ஆகிப் பிரிவின்றி நிற்கும் பெரும் பொருள். நினைப்பும் மறப்புமாகிய விரிவும் குவிவும் என்று பேசப்படும் அவ் விரண்டும் அற அகன்றதாகிய தூய நிலம் விட்ட நிலம் எனப்படும். இதுவே 'வானோர்க்கு உயர்ந்த வுலகம்' அவ்விடமே திருவடிப்பெரும். பேறாகும். அந்நிலை பேச ஒண்ணாப் பெருநிலை என்க. சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் எனத் துரியங்கள் மூன்று. குறிப்புரை: விரிவு குவிவு அற - நினைப்பு மறப்பு ஒழிய. குருபதம் - திருவடிப்பேறு.
ஆயன நந்தி யடிக்கென் றலைபெற்றேன் வாயன நந்தியை வாழ்த்தவென் வாய்பெற்றேன் காயன நந்தியைக் காணவெண் கண்பெற்றேன் சேயன நந்திக்கென் சிந்தைபெற் றேனன்றே. பொருளுரை: ஆயாகிய தாயை யொத்த நந்தியின் திருவடியை வணங்கிச் சுமக்கத் திருவருளால் தலைபெற்றுள்ளேன். அத் தலை அடியேனுக்கு அத்தொண்டின் பொருட்டு அருளால் கொடுக்கப்படும் இரவற் கருவியாகும் கற்பார்க்குக் கொடுத்துதவும் இரவல் ஏடு இதற்கொப்பாகும். அவிச்சுவையினும் செவிச்சுவை ஆற்றச் சிறப்பினதாகும். அவிச்சுவையின்றேல் செவிச்சுவையினைக் கோடலும் ஏலா. எனவே சுவை யுணர்வு சேர் வாயை யொத்த நந்தியை வாழ்த்துதற் பொருட்டே வாய் பெற்றுள்ளேன். இயற்கைப் பேரறிவே யாண்டும் திருமேனியாகக் கொண்டு திகழும் நந்தியை அகத்தும் புறத்தும் காண நான் கண் பெற்றுள்ளேன். மாற்றம். மனம் கழிய நின்ற மறையோனை ஆற்ற உணர்வின்கண் காண்பதற்கு வாயிலாகிய எண்ணம் எனும் சிந்தை பெற்றுள்ளேன். மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனை மாற்றம் மனம் வழிய வுணர்தற்கு வாயில் சிந்தை என்றலும் ஒன்று. சேயன-எட்டாத் தன்மையை உடைய. அப்பர் பெருமானார் அருளிய 'திருவங்கமாலைத் திருப்பதிகம் முற்றும் ஈண்டு நோக்கி இன்புறுக. அதன்கண் ஒன்று முதல் ஒன்பதும் உறுப்பின் பணியாகும். பத்து : இறை, பதினொன்று : உயிர், பன்னிரண்டு : தளை, ஆகிய மூன்றும் முப்பொருளுண்மையாகும். வாழ்த்த. அப்பர், . - . " மானுடப். சிவஞானசித்தியார், . - . " உணர்வி. . சம்பந்தர், . " கோளில். திருக்குறள், . " சிந்தை. . திருச்சதகம், .
கருடன் உருவங் கருதும் அளவிற் பருவிடந் தீர்ந்து பயங்கெடு மாபோல் குருவின் உருவாங் குறித்தஅப் போதே திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே. பொருளுரை: அரவின் நஞ்சினை அகற்றும் அம் மறையோன் அரவினுக்குப் பகையாம் கருடனின் மறையினைப் பல நாள் உருவேற்றித் திருவாய் நிற்கும் உள்ளத்துடன் கருதிக் கண்ணாற் பார்ப்பன். பார்க்கவே அந்நஞ்சு அப்பொழுதே அகலும். நஞ்சின் பயனும் கெட்டொழியும். அதுபோல் சிவகுருவின் திருவடியிணையினைக் குறிப்பதாகிய சிந்தனை செய்த அப்பொழுதே மும்மலப் பிணிப்பு முற்றும் அகன்றடங்கும். அவ் வுயிரும் சிவனடிப் பேறு பெற்றுச் சிவனவனாக விளங்கும் என்றும் பிறவாயாக்கைப் பெரியோனே பிறவிக்குப் பகையாவன். அவன் திருப்பெயராகிய திருவைந் தெழுத்தே பிறவிப் பெரும் பகையறுக்கும் அருமருந்தாகும். அதனைக் கைக்கொள்வதே சாலச் சிறந்ததென்பது இதனால் விளங்கும். "அநந்நியம் - வேறன்மை. உருவம் உயிர்மறை ஊட்டும்அரு ளாற்றல் வருபொருள் தோறுண்டாம் வகுப்பின்-தெருளுலகில் ஆதி பௌதிகம் ஆதிதை வீகமுடன் ஆதியான் மீகம் அறி. தைவிகம் - தைவீகம். ஆன்மிகம் - ஆன்மீகம். ஆத்தியான்மிகம் என்பது ஆதியான் மீகம் என நின்றது.
தோன்ற அறிதலுந் தோன்றல்தோன் றாமையு மான்ற வறிவு மறிநன வாதிகள் மூன்றவை நீங்குந் துரியங்கள் மூன்றற ஊன்றிய நந்தி யுயர்மோனத் தானன்றே பொருளுரை: சிவகுருவினருளால் திருவடியுணர்வு தோன்ற அறிவர். அறிந்தபின் தோன்றல் தோன்றாமையாகிய நினைப்பும் மறப்பும் நீங்கும். மயக்க அறிவுகளும் அகலும் . அறிகின்ற நனவு கனவு உறககம் முதலிய பாடுகள் மூன்றும் நீங்கும். ஆருயிர்ச் செயலறல் அருட் செயலறல் அருளோன் செயலறல் மூன்றும் அறும். அறவே, சித்தத்தின்கண் திருவடியூன்றிய நந்தி உணர்வின் நேர்பெற எழுந்தருள்வன். அந்நிலையில் அப் பேறு பெற்றவன் உயர்ந்த மோன நிலையினனாவன். மோனம் : மேன்மையாற் பெறப்படும் உணர்வு. குறிப்புரை: மான்ற - மயக்கமுள்ள. மறி - மாறி வருகிற. நனவாதிகள் மூன்று - நனவு, கனவு, சுழுத்தி . துரியங்கள் மூன்று - சிவ, சீவ, பரதுரியங்கள். ஊன்றிய - நிலைபெற்ற.
சந்திர பூமிக் குடன்புரு வத்திடைக் கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னியும் பந்த மிலாத பளிங்கின் உருவினள் பந்தம் அறுத்த பரங்குரு பற்றன்றே. பொருளுரை: திங்கள் மண்டிலத்தினூடு கூடிப் புருவ நடுவாக இருக்கும் நறுமணம் கமழும் இரண்டிதழ்த் தாமரை மலரை நெருங்குதல் வேண்டும். நெருங்கி ஆங்கு வீற்றிருக்கும் திருவருளாற்றலாய் கன்னியைக் காணுதல் வேண்டும். அத் திருவருள் பளிங்கின் வண்ணத்தளாவள். அத்திருவருளின் பெறலருந்துணையால் சிறந்த சிவஞான மெய்க் குருவின் திருவடியிணையினைப் பற்றுதல் வேண்டும். அதுவே பெரும்பேறென்க புருவநடு-ஆணையிடமாகும். பரங்குருவே பந்தமறுத்த பரம்பொருளாகும். குறிப்புரை: சந்திர பூமிக்குடன் - சந்திரமண்டலத்தோடு கூடி. கந்த மலரில் இரண்டிதழ்க் கன்னி - இரண்டிதழ்களையுடைய ஆஞ்ஞையில் இருக்கும் சத்தி. பரம் - மேலான.
மனம்புகுந் தானுல கேழு மகிழ நிலம்புகுந் தானெடு வானிலந் தாங்கிச் சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க வனம்புகுந் தானூர் வடக்கென்ப தாமே. பொருளுரை: மெய்யடியார்களின் தூய திருவுள்ளத்தின்கண் சிவபெருமான் புகுந்தருளினன். அங்ஙனம் புகுந்தருளியது ஏழுலகும் மகிழ்ந்து இன்புறும் பொருட்டேயாம். நீண்ட வானிலத்தைத் தாங்கிக்கொண்டு 'இந்த மாநிலத்தே' புகுந்தருளினன். ஆருயிர்களின் கொடுமை கண்டு எட்டுத்திசையும் நடுங்கும் வண்ணம் சினம் கொண்டருளினன். அவனே பேரொடுக்கப் பெருவனத்தின்கண் புகும் பெரும்பொருளாவன். அவனுக்குரிய சிறந்தவூர் தென்றமிழ் வழங்கும் வடபாலுள்ள திருக்கயிலையாகும். திருக்கயிலையில் தென்றமிழ் வழங்குதல் திருமூல நாயனார் பரஞ்சோதி மாமுனிவர் முதலாயினார் பொதியிலினுக்கு அடுத்தடுத்துத் தமிழ் முனிவர்பால் தனித்தமிழ்க் கேண்மையால் வருவதூஉம், நம்பியாரூரர் நற்றமிழல் விண்ணப்பிப்பதும், சேரர் பெருமானார் திருக்கயிலையின்கண் "ஞானவுலா" மோனத் தமிழால் திருச்செவி கேட்பித்ததும் நடுநின்று நயனார் நல்லுணர்வால் நாடுவார்க்கு நன்கு புலனாகாதிராது. குறிப்புரை: சினம் புகுந்தான் - வெகுண்டவன். வனம் - தத்துவக் கூட்டம். வடக்கு - கயிலை.
தானான வண்ணமுங் கோசமுஞ் சார்தருந் தானாம் பறவை வனமெனத் தக்கன தானான சோடச மார்க்கந்தான் நின்றிடில் தானாந் தசாங்கமும் வேறுள்ள தானன்றே. பொருளுரை: உணவுடம்பு, வளியுடம்பு, மனவுடம்பு, அறிவுடம்பு, இன்பவுடம்பு என ஐவகையுடம்புகளைத் தானாகவே எண்ணி ஆருயிர் நடக்கும். இவ்வகை யுடம்புக ளைந்தையும் ஐங்கோசம் எனவுங் கூறுப. அவற்றைக் கொண்டு நடக்கும் ஆருயிரைப் பறவை என உருவகிப்பர். அம் மட்டுமன்று; தத்துவக் கூட்டங்களையும் ஆருயிர் தானாகவே கருதி நடக்கின்றது. இவை யனைததும் தனக்கு வேறானவை எனச் சிவகுருவின் அருளால் புலனாகும் புலனாகவே நற்றவ நான்மையின் விரிவு பதினாறும் விளங்கும். விளங்கவே அவற்றை மேற்கொண்டு அவ் வுயிர் தானாகவே நிற்கும். அதன்மேல் பதின் ஆக்கமாகிய தசகாரியமும் தெளியத் திகழும் நான்மையின் வரிவு பதினாறாவன: .சீலம் : . சீலத்திற் சீலம் . சீலத்தின்நோன்பு . சீலத்திற் செறிவு . சீலத்திலறிவு..நோன்பு : . நோன்பிற் சீலம் . நோன்பின்நோன்பு . நோன்பிற் செறிவு . நோன்பின் அறிவு.  .செறிவு : . செறிவிற் சீலம் . செறிவில் நோன்பு . செறிவில் செறிவு . செறிவிலறிவு.  .அறிவு : . அறிவிற் சீலம் . அறிவில் நோன்பு . அறிவில் செறிவு . அறிவில் அறிவு என்ப. இவற்றை, 'அன்பின்பு நண்புண்பிங் காயின் அறி வினினான், கின்புநிலை மாத்திரை யொவ் வொன்று' என்பதனால் நினைவுகூர்க. மேலும்,  "சீல மின்றி நோன்பின்றிச் செறிவே இன்றி அறிவின்றித் தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச் சுழன்று விழுந்து கிடப்பேனை மாலுங் காட்டி வழிகாட்டி வாரா உலக நெறியேறக் கோலங் காட்டி ஆண்டானைக் கொடியேன் என்றோ கூடுவதே" அ . ஆனந்தமாலை, . என்னும் செந்தமிழ் மறைமுடிவானும் உணர்க. பதின் ஆக்கம் :.மெய்: . திரியக்காண்டல் . இரட்டுறக் காண்டல். . தெளியக்காண்டல்..ஆருயிர் : . திரியக்காண்டல் . இரட்டுறக்காண்டல் . தெளியக்காண்டல். .சிவம் : திரியக்காண்டல் . இரட்டுறக்காண்டல், . சிவத்தோய்வு . சிவத்துய்ப்பு என்ப. திரியக்காண்டலை உருவம் எனவும், இரட்டுறக் காண்டலைத் தரிசனம் எனவும், தெளியக்காண்டலைச் சுத்தி எனவும் கூறுப. இதுபோல் சிவத்துக்குக் கூறுங்கால் தெளியக்காண்டலுக்கீடாகச் சிவயோகம் எனவும் அதன்மேல் சிவபோக மெனவும் பிறிதொன்று கூட்டியும் கூறுப. இதன் விரிவுகளெல்லாம் உண்மை நெறி விளக்கம் முதலிய மெய்கண்ட நூல்களில் பரக்கக்காண்க. குறிப்புரை: கோசம் - ஐந்து கோசங்களும். பறவை - சீவன். வனம் - தத்துவக்கூட்டம். சோடசமார்க்கம்- சரியையிற் சரியை முதல் . தசாங்கம் - தசகாரியம்; அவை தத்துவரூபம் - தத்துவ தரிசனம் முதல் சிவபோகம் ஈறாகப்பத்து.
மருவிப் பிரிவறி யாஎங்கள் மாநந்தி உருவ நினைக்கநின் றுள்ளே யுருக்குங் கருவிற் கரந்துள்ளங் காணவல் லார்க்கிங்கு அருவினை கணசோரும் அற்றார் அகத்தே. பொருளுரை: செவ்விவாய்ந்த ஆருயிரைத் திருவருளால் மருவிய எங்கள் மாநந்தி பின்னைப் பிறவியிற் பிரித்தறியான். அவனது திருவருட்டிருவுருவை உணர்வின்கண் நினைக்க ஆருயிரின் தன்முனைப்பாகிய இருளைக் கெடுக்கும். எல்லாவற்றிற்குங் காரணமாயிருக்கிற அச் சிவத்தின்கண் ஒடுங்கிக் காணவல்லார்க்கு இங்குச் சார நிற்கும் அருவினைகள் கண் சோர்ந்து அற்றழியும். இவ் வினைகட்கு அகமாக இருக்கும் மாயையும் அழியும் கருவில் - காரணத்தில். குறிப்புரை: மருவிப் பிரிவு - கூடிப்பிரிதல் . உருக்கும் - தற்போதத்தைக் கெடுக்கும்.
தலைப்பட லாமெங்கள் தத்துவன் தன்னைப் பலப்படு பாசம் அறுத்தறுத் திட்டு நிலைப்பெற நாடி நினைப்பற வுள்கில் தலைப்பட லாகுந் தருமமுந் தானே. பொருளுரை: சிவஞானத் திருவருளால் மெய்ப்பொருளாம் சிவபெருமானைத் தலைப்படுதல் உண்டாகும். தத்துவன் - மெய்ப்பொருள் அத்தலைப்பாட்டினால் பலவகையாகக் கிளைக்கும் ஆசாபாசங்களை அறுத்து அறுத்திட்டு ஒழிக்கலாம். என்றும் பொன்றா நிலைமையுடன் திருவடிக் கீழ் நிலைபெற நாடுமின். நீங்கா நினைவுடன் இருப்பின் அவன் திருவடியைத் தலைப்படுதலாகும். அவன் போகமீன்றருள் புண்ணிய வடிவினன் ஆவன் அறவாழி அந்தணன் ஆவன். குறிப்புரை: பலப்படு - பலவகைப்பட்ட . தருமமும் - அறத்தின் வடிவாயுள்ள சிவமும்.
நினைக்கின் நினைக்கு நினைப்பவர் தம்மைச் சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத் தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனுங் கனத்த மனத்தடைந் தாலுயர்ந் தாரே. பொருளுரை: பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுனையின்கண் திருவாணையாக விளங்கும் அறிவுப் பேரொளியானை நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக வுறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும். உரன்-திண்மை. அத்திண்மை சேர் மனத்துச் சிவபெருமானைப் பொருந்தச் செய்தவா, உயர்வற உயர்ந்த ஒருவராவர். தினை : பண்டு வழங்கியதோர் சிற்றளவை. குறிப்புரை: சுனை புருவமத்தி. விளைமலர்ச் சோதி - உள்ளக் கமலத்தில் விளங்கும் சிவ ஒளி. தினைப்பிளந்தன்ன - உடைந்த தினையரிசி அளவு கனத்த மனம் - நற்குணங்கள் நிறைந்தமனம். தினைத்துணை. திருக்குறள், .
தலைப்படுங் காலத்துத் தத்துவன் தன்னை விலக்குறின் மேலை விதியென்றுங் கொள்க அனைத்துல காய்நின்ற ஆதிப் பிரானை நினைப்புறு வார்பத்தி நேடிக்கொள் வாரே. பொருளுரை: மெய்யுணர்வுக் குரவனாம் சிவபெருமானை அவனருளால் தலைப்படுமிடத்துத் திருநாவுக்கரசு நாயனார் திருக்கயிலை சென்ற காலத்தும், ஆறைவடதளியில் வஞ்சமிக்க அமணரால் மறைக்கப்பட்டிருந்த திருக்கோவிலைத் திறப்பிக்க முயன்ற காலத்தும் ஏற்பட்ட இடையூறுகளை விதியென்றே கொண்டு முறையே 'மாளும் இவ் வுடல் கொண்டு மீளேனெனவும்'. 'உண்ணாதிருந்தார் எண்ண முடிப்பாரெனவும்' சேக்கிழார் அடிகள் கூறுவபோன்று உறுதியுடன் கூறி வரும் இடையூறுகளை மேலை விதியெனக் கொண்டு நீக்குவர் மெய்யுணர்ந்தார். எல்லாமாய் அல்லதுமாய் நின்ற காரணகருத்தாவாம ஆதியுடன் கூடிய அழியா அறிவுச் சோதிச் சிவபெருமானை இடையறா நினைப்பபுக் கொள்வதுஞ் செய்வர் அவர். அவரே சிவபத்தியினைச் சிரத்தினுள்ளும் சிந்தையினுள்ளும் சேர்த்துத் தேடிக் கைக்கொள்ளும் சிவபத்தராவர்.
நகழ்வொழிந் தாரவர் நாதனை யுள்கி நிகழ்வொழிந் தாரெம் பிரானொடுங் கூடித் திகழ்வொழிந் தார்தங்கள் சிந்தையி னுள்ளே புகழ்வழி காட்டிப் புகுந்துநின் றானே. பொருளுரை: மெய்யுணர்ந்தார் நாதனாகிய சிவபெருமானை இடையறாது படர்ந்து விலக்குறும் எத்தகைய இடையூறுகளையும் நீக்கிக் கொள்வர். சிவபெருமானையே அவனருளால் உணர்விற் கூடிக்கொண்டிருப்பர் மெய்யுணர்வினர். அதனால் நிகழ்வாகிய ஏறுவினை ஏற்றம் ஏலாதொழிந்தனர். உலகியல் ஆடம்பரங்கள் தங்கள் உள்ளத்தில் தலைதூக்குவனவாகிய திகழ்வினை யொழிந்தனர். திருவடிப் பேற்றினுக்குரிய செந்நெறி- சித்தாந்த நன்னெறி - செந்தமிழ்ப் பெருநெறியினை நடு நிலையாளர் அனைவரும் மெய்ம்மையோடு புகழ்வர், அதனால் அப் புகழ் வழியினை உலகிடை நாட்டித் திருவடிப் பேறாஞ் 'செல்வன் கழலேத்தும் செல்வ'த்தினைப் புகுந்து நின்றார் என்க. குறிப்புரை: நகழ்வு - விலகுதல். நிகழ்வு - உலக வியாபாரம். தகழ்வு - வீண் ஆடம்பரம். புகழ்வழி - புகழ்தற்குரிய முத்திநெறி.
வந்த மரகத மாணிக்க ரேகைபோற் சந்திடு மாமொழிச் சற்குரு சன்மார்க்கம் இந்த இரேகை யிலாடத்தின் மூலத்தே சுந்தரச் சோதியுட் சோதியு மாகுமே. பொருளுரை: மரகதமாகிய பச்சைமணி, மருள் நிலைக்கு ஒப்பாகும். அப் பச்சைமணியின்கண் செம்மணிக்கதிர் பாய்வது மருளின்கண் அருள்கதிர் பாய்ந்து ஆருயிரின் அறியாமையை அகற்றுவதை யொக்கும். அத்தகைய அருமறை மொழியினை மெய்க்குரவன் அருளும் மெய்ந் நெறிக்கண் அவனருளித் தந்திடுவான். சந்திடும் - தந்திடும். மெய்க்குரவன் திருவருளால் தந்தருளப்பெறும் திருவைந்தெழுத்தாகிய அருமறைக் கதிர் நெற்றியின்கண் மூக்கின் மூலமாகிய புருவ நடுவில் ஊடுருவி ஒளிரும். அதுவே அழகிய ஒளிகட், கெல்லாம் ஒளிகொடுத்துக் கொண்டொளிரும் அருளொளியாகும். குறிப்புரை: வந்த...போல் - மரகதத்தில் வந்த மாணிக்க ரேகை, அஞ்ஞானத்திடையில் உண்டான ஞான ஒளி. சந்திடு - தெரிவிக்கும். இலாடம் - நெற்றி. மூலம் - நாசியின் மூலமாகிய புருவநடு.
உண்ணும்நன் வாயும் உடலும் உயிருமாய்க் கண்ணுமா யோகக் கடவுள் இருப்பது மண்ணுநன் நீரனல் காலொடு வானுமாய் விண்ணு மிலதாம் வெளியானோர் மேனியே. பொருளுரை: நற்றவ நான்மையுள்ளும் மூன்றாம் நிலை செறிவு நிலையாகும். அந்நிலையையே சிவயோகம் எனவும் மாயோகம் எனவுங் கூறுப அத்தகைய செறிவுநிலைக்காட்சியர், அறிவுக் கண்ணிற் புலனாகும் கடவுளர் மாயோகக் கடவுளராவர் அவர் கலப்புத் தன்மையால் உண்ணும் வாயின்கண்ணும், அவ்வாயுறுப்பினையுடைய உறுப்பியாகிய உடம்பின் கண்ணும். அவ்வாய்ப்பயன் கொள்ளும் உயிரின்கண்ணும், பயன் விளை புலனாம் மண் நீர் அனல் கால் வானம் ஆகிய ஐம்பூதங்களின் கண்ணும் பிரிப்பின்றிக் கலந்து நின்றருள்கின்றனர். பூதவெளியாகிய விண்ணையும் கடந்து அறிவுப் பெருவெளியில் நிற்கும் செறிவினோர் திருமேனியைத் தனக்குத் திருமேனியாகக்கொண்டு எழுந்தருள்வன் சிவன்.குறிப்புரை: யோகக் கடவுள் - யோகத்தால் அறியப்படும் கடவுள். வெளியானோர் - பசுகரணம் நீங்கிச் சிவகரணமுடையோர்.
பரசு பதியென்று பார்முழு தெல்லாம் பரசிவ னாணை நடக்கும் பாதியாற் பெரிய பதிசெய்து பின்னாம் அடியார்க்கு உரிய பதியும்பா ராக்கிநின் றானே. பொருளுரை: பரசு என்று சொல்லப்படும் கோடாலிப் படையைத் தாங்கியுள்ள சிவபெருமான். அனைத்துயிர்கட்கும் அனைத்துலகங்கட்கும் பதியாவன். அவனையே பதியென்று பார் முழுதும் வணங்கும் பார் முழுதும் அவன் திருவாணையே முட்டின்றிச் செல்லும் முழுவாணையாகும் மெயகளைப் பகுத்துணர்வதாகிய தத்துவ ஞானம் கைவந்த செம்பொருட்டுணிவினர்க்குப் பெரிய பதியாகிய திருவடியுலகினை அமைத்தருளினன் சிவன். பின்னாகச் செவ்வி வாய்த்துவரும் அடியவர்கட்கு உரிய பதியும் பாராகிய உலகமென அமைத்தருளினன். அவனே எங்கணும் நீக்கமற நிறைந்துநின்றருளினன். செம்பொருட்டுணிவினர்: சைவசித்தாந்தர். குறிப்புரை: பரசும் - புகழப்படும். பாதியால் - தத்துவ ஞானத்தால். பெரிய பதி - முத்தி. பார் ஆக்கி - உலகைப் படைத்து.
அம்பர நாதன் அகலிட நீள்பொழில் தம்பர மல்லது தாமறி யோம்என்பர் உம்பருள் வானவர் தானவர் கண்டிலர் எம்பெரு மானருள் பெற்றிருந் தாரன்றே. பொருளுரை: பேரறிவுப் பெருவெளியின் பெருந்தலைவன் சிவபெருமான். அம்பரநாதன் என்பதற்கு அழகிய மேலான முதல்வன் என்றலும் ஒன்று. நீண்ட பெரியவுலகங்கள் அனைத்தும் அவன் திருவாணையாலேயே நடக்கின்றன. இவ்வுண்மையை யன்றி வேறொன்றும் நாமறியோம் என்று மெய்யடியார் கூறுவர். மேலிடத்துள்ள வானவரும் தானவரும் இவ்வுண்மை யினையுணர்ந்திலர் இவ்வுண்மையினை யுணர்ந்த மெய்யடியார்கள் எம்பெருமான் திருவருள்பெற்று இனி திருந்தார்கள். குறிப்புரை: நீள் பொழில் - பெரிய உலகம். தம் பரம் - தமது கடவுள். உம்பர் - வானுலகு.
கோவணங் கும்படி கோவண மாகிப்பின் நாவணங் கும்படி நந்தி யருள்செய்தான் தேவணங் கோமினிச் சித்தந் தெளிந்தனம் போய்வணங் கும்பொரு ளாயிருந் தோமன்றே. பொருளுரை: தேவர்கோ, மூவர், செழும்பொழிற்கோ மற்றும் யாவரும் கோவென வணங்கும் கோவணன் சிவபெருமான் அங்ஙனம் கோவணம் ஆகிப்பின் மெய்யடியார்கள் தங்கள் நன்னாவால் திருமுறைபாடி வணங்கும்படி எழுந்தருளி இருப்பவனும் அவனே. அவனை வணங்கும்படி ஆரருள்புரிந்தவன் நந்தி. நந்தியின் முந்திய திருவருளால் உள்ளம் தெள்ளத்தெளிந்த வெள்ளரானோம். கள்ளமகன்றோம். கொள்ளோம் கனவிலும் செத்துப் பிறந்து சிறுமையுறும் சிறுதெய்வ வணக்கம். அத்தெய்வங்களெல்லாம் தொழும் தன்மையான் சிவபெருமான். அவன் திருவடிக்கீழ் அவனருளால்புக்கு அவனாகத் திகழ்ந்தனம். இதனைப் 'பிறவாப் பெருந்தெய்வம் பேணுசிவன் ஏனோர். பிறப்பாற் சிறுதெய்வம் பேசு' என்பதனால் நினைவு கூர்க. குறிப்புரை: கோ - பசு - ஆன்மா. கோவணமாகி - ஆன்மாக்களின் உருவந் தாங்கி. நாவணங்கும்படி - நாவால் துதிக்கும்படி. தேவணங்கோம் - வேறு தேவரை வணங்கோம். சத்தம் - பத்துவித நாதங்கள். வணங்கும் பொருளாய் - சிவமாய்.
ஒன்பதாம் தந்திரம். பிரணவ சமாதி தூலப் பிரணவஞ் சொரூபானந் தப்பேர் பாலித்த சூக்கும மேலைச் சொரூபப்பெண் ஆலித்த முத்திரை யாங்கதிற் காரணம் மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே. பொருளுரை: பாரிய ஓமொழி தூலப் பிரணவமாகும். அதனால் பெறுவது பருவுடலின்பம். நுண்மை ஓமொழி நுண்ணுடற்குரிய இன்ப வாயிலாகும் மேலைச் சொரூபம் என்னும் இன்ப ஓமொழி காரணப் பிரணவமாகும். அது திருவருள் வீழ்ச்சிக்கு வாயிலாகும். அப் பிரணவம் கைக்குறியாம் முத்திரை வடிவாக விருக்கும். மாமுதல் ஓமொழி மேலைப் பிரணவமாகும். இதுவே மாகாரணமெனவும் சொல்லப்படும். இது திருவடியுணர்வாம் வேதாந்த வீதியில் சேர்ப்பதாகும். குறிப்புரை: தூலப் பிரணவம் தூல சரீரத்துக்கு ஆனந்தமும், சூக்குமப் பிரணவம் சூக்கும தேகத்துக்குவேதாந்த வீதியில் சேர்த்தலுஞ் செய்யும்.
ஓமெனும் ஓங்காரத் துள்ளே யொருமொழி ஓமெனும் ஓங்காரத் துள்ளே யுருவரு ஓமெனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓமெனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே. பொருளுரை: ஓமென்று ஓதப்பெறும் ஓங்காரத்துள்ளே ஒப்பில் ஒரு மொழி தோன்றும். ஒரு மொழியெனினும் பெரும்பொருட்கிளவியெனினும் ஒன்று. இதனை மகாவாக்கியம் எனவுங் கூறுப. அவ்வோங்காரத்துள்ளே உருவும் அருவும் தோன்றும். உருவினைச் சகளம் என்ப. அருவினை நிட்களம் என்ப. இவ்வோங்காரத்துள்ளே ஆருயிர் வேறுபாடுகள் பலவும் உண்டாம். அவ் வேறுபாடுகள் மா, மாக்கள், மக்கள், ஆன்றோர், அறிவர், அமரர்முதற்பலவாம். அவ்வோங்காரத்தாலேயே பிறப்பும் சிறப்பும் உறப்பெறும். பிறப்பு - சித்தி. சிறப்பு - முத்தி. கரும்பினு. அப்பர், . - .
ஓங்காரத் துள்ளே யுதித்தஐம் பூதங்கள் ஓங்காரத் துள்ளே யுதித்த சராசரம் ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றன ஓங்கார சீவ பரசிவ ரூபமே. பொருளுரை: முப்பத்தாறாவது மெய்ஒலி, ஓங்காரம் ஒலியினின்று தோன்றுவது. வழிவழியாக ஏனையமெய்கள் தோன்றும் அம்முறையினால் ஓங்காரத்தினின்று ஐந்து பூதங்களும் தோன்றின என்று ஓதினர். மேலும் ஓங்காரத்தை இயைந்து இயக்கும் உரிமைத் தெய்வங்கள் அயன், அரி, அரன். ஆண்டான், அருளோன் என்பவராவர். அவர்களே ஐம்பூதங்களையும் முறையே இயக்குகின்றனர். அதனால் அப்பூதங்கள் ஓங்காரத்தினின்று தோன்றின என்றலும் ஒன்று. அவ்வோங்காரத்துள்ளே இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் அனைத்தும் தோன்றின. இயங்குதிணை - சரம். நிலைத்திணை - அசரம். அப்பாலாம் ஓங்காரத்துள் மூவகை உயிர்களும் சார்ந்தன. மூவகையுயிர்களாவன: ஒருமலம் உடையன, இருமலமுடையன, மும்மலமுடையன என்பன. அப்பால் ஓங்காரம் - ஓங்காராதீதம். இதனை மாகாரண ஓங்காரம் என்ப. அவ்வோங்காரத்துள்ளே ஆருயிர் உரு, அருளுரு, அருளோன் உருத்தோன்றும் என்ப. சரம்: நகர்வது. அசரம் - நகராதது. குறிப்புரை: ஓங்கார அதீதம் - மகாகாரணப் பிரணவம்.
வருக்கஞ் சுகமாம் பிரமமு மாகும் அருக்கஞ் சராசர மாகும் உலகில் தருக்கிய வாதார மெல்லாந்தன் மேனி சுருக்கமின் ஞானந் தொகுத்துணர்ந் தோரே. பொருளுரை: ஓமொழியின் இனமாகிய அகர உகர மகரங்கள் வருக்கம் எனப்படும். இவை இன்ப நிலையுமாகும். இறைவனுமாகும். அம்மூன்றன் தொகுப்பாகிய அருக்கம் சராசரமாகும். ஆண்மை மிக்க ஆதாரநிலைகளின் உருவமெல்லாம் ஓங்காரமாகும். ஓங்காரத்தின் உண்மையுணர்ந்தோர் திருவடியுணர்வாம் நிறைஞானத் தொகுப்புணர்ந்தோராவர். குறிப்புரை: வருக்கம் - ஓங்காரத்தின் அம்சங்களாகிய அ - உ-ம். சுருக்கமில் - பரந்த.
மலையு மனோபவ மருள்வன் வாவன நிலையிற் றரிசனம் தீப நெறியாந் தலமுங் குலமுந் தவஞ்சித்த மாகும் நலமுஞ்சன் மார்க்கத் துபதேசந் தானே. பொருளுரை: நிலைபேறின்றி ஓவாது அலைந்துகொண்டேயிருக்கும் மனமும் உயிர்ப்பு மயங்குவதற்கு இடமாகவுள்ளனவாகும். அந்நிலையில் மயக்கம் ஒழிப்பதற்குச் சிவகுருவின் விளக்கக் காட்சி எய்துதல்வேண்டும். அதுவே ஈண்டுத் தீபநெறி எனப்பட்டது. இவ் விளக்கத்திற்கு இடமும் சார்பும் உள்ளமும் தவமுமம் தூய்மையாதல் வேண்டும். அதுவே வாய்ப்புடையதாகும். சிவமறையாகிய நலம் நன்னெறிக்கண் செவியறிவுறுக்கும் அருமறையாகும். அருமறை-உபதேசம். குறிப்புரை: மலையும் - மயங்கும். மருள்வன - மயங்குவன.
சோடச மார்க்கமுஞ் சொல்லுஞ்சன் மார்க்கிகட்கு ஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற் கூடிய அந்தமுங் கோதண்ட முங்கடந்து ஏறியே ஞானஞே யாந்தத் திருக்கவே. பொருளுரை: நன்னெறி நான்மை நல்லார் சன்மார்க்கர்கள் எனப்படுவர். அவர்கட்கு நான்மை நெறியும் ஒவ்வொன்றும் நான்கு நான்காகப் பகுக்கப்படும். அம்முறையில் அவை பதினாறு வகைப்படும். அவற்றுள் பன்னிரண்டின் அந்தம் செறிவில் அறிவாகும். பதினான்கின் அந்தம் அறிவில் நோன்பாகும். கோதண்டமெனப்படுவது அறிவிற் செறிவாகும். திருவருளால் இவையனைத்தையும் பயின்று கைவந்தபின், ஒன்றாவுயர்ந்தஅறிவின் அறிவு வாயிலாகத் திருவடிப் பேறு எய்தும். அறிவின் அறிவு - ஞானத்தின் ஞானம். குறிப்புரை: சோடசமார்க்கம்-சரியையிற் சரியை முதல் நெறிகள். ஈராறின் அந்தம்-யோகத்தில் ஞானம். ஈரேழிற் கூடிய அந்தம்-ஞானத்தில் கிரியை. கோதண்டமும்-ஞானத்தில் யோகமும். ஞேயாந்தம்-ஞானத்தில் ஞானம்.
ஒன்பதாம் தந்திரம். ஒளி ஒளியை யறியில் உருவும் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந் தானே. பொருளுரை: ஆருயிரின் இயற்கை நிலை பளிங்கனைய அறிவொளியாகும். அருளால் அதனை நாடின் அவ்வுயிரின் நிலைக்களமாகிய உடம்பின் நாட்டம் மறையும். ஒடுக்கமாகிய மறைவே இயல்பாகவுள்ள உருவமாம். உடம்பினைநாடின் மீண்டும் உடல் உருவெடுக்கும் பிறப்புண்டாகும். ஆருயிரின் அறிவொளித் தன்மையை அறியின் சிவவுருவாம் ஒளியும் வெளியாகும். அருளொளியாம் ஆருயிர் சிவபெருமான் திருவடிக்கண் பேரன்பு பூண்டு உள்ளம் உருகித் தள்ளரிய மெய்ப்பத்தியினோடு நிற்றல் வேண்டும். அங்ஙனநிற்பின் உடனாகவிருக்கும். சிவபெருமான் வெளிப்பட்டு இன்புறுத்தியருள்வன். குறிப்புரை: ஒளியை-ஒளி மயமான ஆன்மாவை; உருவும் ஒளியும்-உடம்பு மறையும் மரத்தை மறைத்தது மாமத யானை] ஒளியும் உருவம் அறிவில்-மறைந்த போகும் உடம்பை அறிந்தால். உருவாம்-பிறப்பாம் ஒளியின் உருவம் அறியில்-ஆன்ம தரிசனம் செய்தால். ஒளியே-சிவ ஒளி உதயமாகும். ஒளியும் உருக - ஒளி மயமான ஆன்மாவின் பாசம் களைய.
புகலெளி தாகும் புவனங்கள் எட்டும் அகலொளி தாயிரு ளாசற வீசும் பகலொளி செய்தது மத்தா மரையிலே இகலொளி செய்தெம் பிரானிருந் தானே. பொருளுரை: திருவருளால் சிவஒளி கைவந்த அறிவொளிகண்ட ஆருயிர்க்குப் புவனங்கள் அனைத்தினுமுள்ள நிகழ்ச்சிகளை உள்ளவாறுணர்ந்து உரைத்தல் எளிதாகும் அறிவின் அறிவாம் செறிவொளி எங்கணும் பரந்துநிற்கும். அவ்வொளி எங்கும்நிறைந்த சிவவொளியாகும். அவ்வொளிக்கதிர் வீசவே மலமுதலிய குற்றங்கள் தேய்ந்து மாய்ந்தகலும். ஆருயிரின் நெஞ்சத் தாமரைக்கண் ஞாயிற்றொளியின் மிக்கதாயுள்ள பேரொளி காணப்படும். அத் திருவொளி எம்பெருமானாகிய சிவபெருமானின் செஞ்சுடர் ஒளியாகும். அதனால் அவ்வொளி ஞாயிற்றின் ஒளியின் மாறுபட்ட பேரொளியாம். அதனால் இகலொளி என ஓதினர். அத்தகைய செவ்வொளியருளிச் சிவபெருமான் இருந்தருளினன். குறிப்புரை: அகலொளி தாய் - அகண்ட ஒளி பரவி. பகல் ஒளி - சூரிய ஒளி. அத் தாமரை - அந்த உள்ளக் கமலத்தில். இகலொளி - சூரிய ஒளிக்கு மாறுபட்ட ஒளி.
விளங்கொளி யங்கி விரிகதிர் சோமன துளங்கொளி பெற்றன சோதி யருள வளங்கொளி பெற்றதே பேரொளி வேறு களங்கொளி செய்து கலந்துநின் றானே. பொருளுரை: எரிபொருளைப் பற்றிநின்று யாண்டும் ஒளிதரும் தீயும், விரிந்த கதிர்களையுடைய ஞாயிறும், அக்கதிரின் துணையால் ஒளிதரும் திங்களும், இயற்கை உண்மை அறிவு இன்பப்பிழம்பாய் ஒளிரும் சிவபெருமான் ஒளிகொடுத்தருளினமையால் உலகினுக்குக் காலவரையறைக்கு உட்பட்டு ஒளிதந்துகொண்டிருக்கின்றன. வழங்கத் தவா வளத்ததாய் உள்ள பேரொளி வண்ணனாம் சிவபெருமான் படைத்தருளியதே அம்மூன்று ஒளிமண்டிலங்களும், அவற்றிற்கு இயற்கை ஒளி இல்லாமை ஒரு குறைவாகும். அக்குகுறயினைச் சிவபெருமான் இயற்கையாயுள்ள தன் அளவில் பேரொளியினின்றும் ஒளிகொடுத்தருளிப்போக்கினன் போக்கி வேறறக்கலந்துநின்றனன். குறிப்புரை: விரிகதிர் - சூரியன். சோதி அருள - சிவன் கொடுத்தலால். விளங்கு ஒளி பெற்றதே பேரொளி - இல்லை என்னாது கொடுக்கும் புகழ்பெற்ற தெய்வமாகிய சிவம் தம் இயற்கைப் பேரொளியினின்றும். வேறு களங்கொளி - வேறாகிய களங்கமுள்ள சூரிய - சந்திர - அக்கினி ஒளிகளை உண்டாக்கி. கலந்து நின்றான் - அவர்களுக்கு ஒளியுண்டாமாறு சேர்ந்து நின்றான்.
இளங்கொளி யீசன் பிறப்பொன்று மில்லி துளங்கொளி ஞாயிறுந் திங்களுங் கண்கள் வளங்கொளி யங்கியு மற்றைக்கண் நெற்றி விளங்கொளி செய்கின்ற மெய்காய மாமே. பொருளுரை: இலங்கொளி எனற் பாலது இளங்கொளி என நின்றது. இஃது அலமரல் அளமரல் என நிற்பது போன்றாகும். திகழும் இயற்கை யொளியினையுடைய சிவபெருமான் என்றும் பிறப்பொன்றுமிலாப் பெரும்பெற்றியன். உலகினுக்கு ஒளிதரும் ஞாயிறும் திங்களும் சிவபெருமானின் முறையே வலக்கண்ணும் இடக்கண்ணுமாகிய இருகண்களாகச் சொல்லப்படும். ஈண்டுக் கண்ணென்பது கருத்து. அஃதாவது சிவபெருமானின் திருவுள்ளத்தால் இவை ஒளிர்கின்றன என்பதாம். மேலும் அச் சிவபெருமான் உலகமே உருவாகக்கொண்டுள்ளவன். அத் திருமேனிக்கண் கண்போன்று உருவகிக்கத்தக்கன ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றுமேயாம். தீ, சிவபெருமானின் நெற்றிக்கண்ணாகும். இம்மூன்று திருக்கண்களுடனும் அறிவுப் பெருவெளியே திருமேனியாகக்கொண்டு திகழ்ந்தருளுபவன் சிவபெருமான். மெய் - உடம்பு. காயம் - வெளி.
மேலொளி கீழதன் மேவிய மாருதம் பாலொளி யங்கி பரந்தொளி யாகாசம் நீரொளி செய்து நெடுவிசும் பொன்றிலும் மேலொளி யைந்தும் ஒருங்கொளி யாமே. பொருளுரை: ஐம்பூதங்களுள் மேலாகநிற்கும் ஒளி விசும்பாகும். அவ் விசும்பினைத் தடவிவரும் ஒளிப்பொருள் காற்று. அக் காற்றின்பாலாய் விளங்குமொளி தீ. நீருக்கு இடங்கொடுத்து எங்கணும் பரந்திருப்பது நிலம். அந்நிலத்தின்மேல் விளங்குவது நீர். மேலோதிய பூதங்கள் ஐந்தும் ஓராற்றான் விளங்குவனவற்றை ஒளியென்றருளினர். இவ் விளக்கம் முழுவதும் சிவபெருமான் திருவருளாலேயே யாகும். குறிப்புரை: மேலொளி - ஆகாயம். மாருதம் - காற்று. பார் ஒளி - மண். அங்கி - தீ. நீர் - நீர். மேலொளி ஐந்தும். மேன்மை பொருந்திய அல்லது மேலே கூறிய ஐந்து ஒளிகளும்.
மின்னிய தூவொளி மேதக்க செவ்வொளி பன்னிய ஞானம் பரந்த பரத்தொளி துன்னிய வாறொளி தூய்மொழி நாடொறும் உன்னிய வாறொளி யொத்தது தானன்றே. பொருளுரை: தொன்மைத் தூவெள்ளொளி சிவபெருமான். அவ்வெள்ளொளியினின்று உலகினை இயக்க ஐம்பேரொளியின் மேலதாகக் காணப்படும் செவ்வொளி விளக்கமுற்றது. வெள்ளொளி அறிவுப் பண்பாகும். செவ்வொளி ஆற்றற் பண்பாகும். புகழ்ந்து சொல்லப்படும் அறிவு பரந்த பே.ரொளி மெய்யுணர்வுப் பண்பாகும். பரத்தொளி அருள்நிறைந்த ஆருயிரொளியாகும். சிவபெருமானின் திருவடிக்கு நெருக்கமாகக் காணப்படும் நெறி நன்னெறி. அந்நெறியின் ஒளி ஆறொளியாகும். திருவைந்தெழுத்தெனப்படும் தூமொழி மறையொளியாகும். இவ்வாறும் ஒத்து நிறைந்து விளங்குவது சிவஒளி. குறிப்புரை: மின்னிய தூவொளி-படைப்புத் துவக்கத்தில் நின்மல சிவத்தினின்றும் தோன்றிய வெள் ஒளி. மேதக்க செவ்வொளி-அவ்வெள் ஒளியினின்றும் தோன்றிய ஐந்து வர்ண அளிகளில் மேலான பராசத்தியின் சிவந்த ஒளி. பரத்தொளியுடன் துன்னிய பரை-ஆதி இச்சை-ஞானம்-கிரியை ஆகிய ஐந்து வர்ண ஒளியுடன் ஆறு ஒளி.
விளங்கொளி மின்னொளி யாகிக் கரந்து துளங்கொளி யீசனைச் சொல்லும்எப் போதும் உளங்கொளி யூனிடை நின்றுய்ர்க் கின்ற வளங்கொளி எங்கும் மருவிநின் றானே. பொருளுரை: சிவபெருமான் மேகத்தின்கண் மறைந்து இடையிடை சிறுவரை தோன்றி விளக்கந்தரும் மின்னொளி போன்று ஆருயிர்களுடன் விரவி வேறற நின்று இடையிடையே அருள் விளக்கம் தந்தருள்கின்றனன். அருள்வழிநிற்கும் ஆருயிர்களின் அன்புநிறை உள்ளத் தாமரையினை இடமாகக்கொண்டருள்பவன் சிவபெருமான். எங்கணும் உயிருக்கு உயிராய், உணர்வுக்கு உணர்வாய் வேறறப் பொருந்நிநின்றருள்பவன் சிவபெருமான். குறிப்புரை: விளக்கொளி - பரையாதி ஒளிகள். மின்னொளியாகி - மேகத்தில் மின் ஒளி மறைந்து நிற்பதுபோல. கரந்து - ஆன்மாக்களிடத்து ஒளித்து.
விளங்கொளி யவ்வொளி யவ்விருள் மன்னுந் துளங்கொளி யான்தொழு வார்க்கும் ஒளியான் அளங்கொளி யாரமு தாகநஞ் சாருங் களங்கொளி யீசன் கருத்தது தானே. பொருளுரை: பேரொடுக்கப் பேரூழிக் காலத்து மிக்கு விளங்குவது இருள் வண்ணமேயாகும் ஆண்டும் நிலைபெற்று மாறாது மன்னும் பேரொளிப் பெரும்பொருள் சிவபெருமானாவன் அவனே நிலைபெற்று ஒளிரும் பேரொளியான். அளவிலா அன்பால் அகம்புறம் ஒத்துத்தொழும் மெய்யடியார்கட்கு மறையாதுநின்று வெளிப்பட்டருளும் இயற்கைத் தன்மையன் சிவன். விளக்கமிக்க ஒளிசேர் நிறையமுதம் ஆதற்பொருட்டு ஆண்டுத் தோன்றிய பெருநஞ்சினை உண்டு கண்டத்து அடக்கியவன் சிவன். இவையனைத்தும் அவனுடைய திருவுள்ளப் பாங்கின்படியாகும். குறிப்புரை: அவ்விருண் மன்னும் - உலக முடிவில் ஏற்படும் இருளில் அடங்கும். ஒளியான் - வெளிப்படுவான் அளங்கொளி - அலங்கு ஒளி - இலங்குகின்ற ஒளி. நஞ்சாரும் களம்கொள் ஈசன் - விடமுண்ட கண்டன். திறக்கப். அப்பர், . - . " ஆலமே. . சம்பந்தர், .
இலங்கிய தெவ்வொளி யவ்வொளி யீசன் துலங்கொளி போல்வது தூங்கருட் சத்தி விளங்கொளி மூன்றே விரிசுடர் தோன்றி உளங்கொளி யுள்ளே யொருங்குகின் றானே. பொருளுரை: இயற்கையாய் என்றும் பொன்றாததாய் விளங்கும் உண்மை அறிவு இன்பப் பேரொளி எது? அதுவே சிவபெருமானின் அழிவில் பேரொளியாகும். அவ்வொளியின் அருட்கதிராய் நின்று ஒளிர்வது அருள் அறிவுப் பேராற்றலாகும். உளங்கொளியாவது அருள் நிறை ஆருயிராகும். விளங்குகின்ற இம்மூன்று ஒளியுமாக விரிந்த சுடரையுடைய சிவபெருமான் தோன்றி ஒளிக்குள்ளொளியாய் ஒருங்கி உடனின்றருள்கின்றனன். குறிப்புரை: தூங்கு - நிலைபெற்று. விளங்கு ஒளி மூன்று - சிவ ஒளி - அருட்சத்தி ஒளி - ஆன்ம ஒளி.
உளங்கொளி யாவதென் உள்நின்ற சீவன் வளங்கொளி யாநின்ற மாமணிச் சோதி விளங்கொளி யாய்மின்னி விண்ணில் ஒடுங்கி வளங்கொளி யாயத்து ளாகிநின் றானே. பொருளுரை: உள்ளங்கொள்ளும் ஒளியாக நிற்பது ஆருயிர். அவ்வுயிர்க்கு உயிராய் ஒளிக்கு ஒளியாய் விளங்குவது வளப்பமிக்க சிவனொளி. அவ் வொளி மாமணிச் சோதியாகும். விளக்கமிக்க ஒளியாக மின்னி விளங்கும் தூய அறிவு விண்ணில் ஒடுங்கும். ஒடுங்கி வளம்பெற வழங்கும் ஒளிக்கதிர்க் கூட்டத்துள் நின்றருளினன் சிவன்.
விளங்கொளி யாய்நின்ற விகிர்தன் இருந்த துளங்கொளி பாசத்துள் தூங்கிருள் சேராக் களங்கிருள் நட்டமே கண்ணுத லாட விளங்கொளி யுன்மனத் தொன்றிநின் றானே. பொருளுரை: யாண்டும் ஒரு பெற்றித்தாய் விளங்கும் ஒளியாய் நிற்பவன் சிவன். அவன்றன் தண்ணளிசேர் திருச்செயல் ஒருபடித்தாயன்றிப் பலபடித்தாய் நிகழ்வன. அதனால் அவன் விகிர்தனென்று அழைக்கப்படுகின்றான். அவன் எழுந்தருளி விளக்கமிக்க ஒளியாக நிற்கும்போது தொன்றுதொட்டே தங்கியுள்ள இருண்மலம் மாயாகாரியப் பாசத்துள் மயக்காது. ஆணவ வல்லிருள் அகலுதற் பொருட்டுச் சிவபெருமான் ஐந்தொழிற்றிருக்கூத்து அம்மை காணச் செம்மையுடன் என்றும் நிகழ்த்துகின்றனன். அச் சிவபெருமான் விளங்கொளியாக உன்மனத்துள் ஒன்றி நின்றருள்கின்றனன். குறிப்புரை: இருள் சேரா - ஆணவம் முனைத்து நில்லாமல். கள . . . . . லாட - ஆணவ இருள் இரியக் கூத்தப்பிரான் ஆட. உன்மனத்து - உன்மனாகலையில்.
போது கருங்குழற் போனவர் தூதிடை ஆதி பரத்தை அமரர் பிரானொடுஞ் சோதியும் அண்டத்தப் பாலுற்ற தூவொளி நீதியி னல்லிருள் நீக்கிய வாறன்றே. பொருளுரை: பேரரும்பு சூடிய கரிய கூந்தலையுடைய திருவருளம்மையுடன் நிறைந்து நிற்பவர் சிவபெருமானார். அத் திருவருளம்மை ஆருயிர்களை வனப்பாற்றலாக நின்று ஆதி பரத்து ஐயுடன் கூட்டுவிப்பள். ஆதிபரத்து ஐ என்பது அனைத்துக்கும் காரணமாய் அனைத்தையும் கடந்த விழுப்பொருளாய் நீக்கமற நிறைந்து நிற்கும் முதல்வன். அவன் வானவர் கோன் தீ பல்வேறு அண்டங்கள் அனைத்துக்கும் அப்பால் நிற்கும் தூய அறிவொளியாக வுள்ளவன். அவனே முறைமாறாது ஆருயிர்களின் செவ்வி நோக்கி அவ்வவ் வுயிர்களின் ஆணவ வல்லிருளை அகற்றியருள்வன். ஐ - முதல்வன். குறிப்புரை: போது.......போனவர்-மாதொரு பாகனார். தூதிடையாதி - சந்து செய்விப்பதில். பரத்துஐ - மேலான கடவுள். அமரர்பிரான் - இந்திரன். நல்லிருள் - ஆணவ இருள். ஐயன்காண். அப்பர், . - . " பொய். " . - .
உண்டில்லை யென்னும் உலகத் தியல்வது பண்டில்லை யென்னும் பரங்கதி யுண்டுகொல் கண்டில்லை மானிடர் கண்ட கருத்துறில் விண்டில்லை யுள்ளே விளக்கொளி யாகுமே. பொருளுரை: சுட்டியுணரப்படும் இவ் வுலகம் உண்டு என ஒருசாரார் கூறுகின்றனர். அதனை மறுத்து மற்றொருசாரார் உலகம் கானல்நீர் போல் இல்லாதது எனக் கூறுகின்றனர். இத்தகைய வுலகத்துள் இருண் மலத்துடன் கூடிய புலம்பு நிலையில் ஆருயிர்கள் புலம்பு நிலையும் புணர்வு நிலையும் கடந்த புரிவு நிலையாகிய திருவடிப் பேறு இல்லை யென்னும்படி நின்றன.புணர்வு நிலைக்கு வந்தபின் அவ்வுயிர்கட்குப் புரிவு நிலையும் உண்டுகொல் என்று ஐயுறவு ஏற்படுவதாகும். ஏனைப் பொருள்களைப் போன்று சுட்டுணர்வு சிற்றுணர்வுகட்கு எட்டுவதன்று. அத் திருவடிப்பேறு. மானிடர்கள் திருவடிப் பேற்றினைக் கண்ட அறிவு உண்டு எனக் கூறுவராயின் அஃது உண்மைச் சிறப்பியல்பாக இருத்தல் ஒண்ணாது அத் திருவடிப் பேறு சொல்ல ஒண்ணாத ஆருயிர் அகத்தமர்ந்த அறிவுப் பேரொளியாகும். குறிப்புரை: உண்டில்லை - உலகம் உண்டு உலகம் இல்லை என்று வாதாடும் உலகத்தில். பண்டு - கேவல நிலை. பரம் கதி - மேலான முத்தி நெறி. கண்டில்லை மனிடர்-இதுவரை காணாத மானிடர். கண்ட கருத்து - அறிந்த அறிவு. விண்டில்லை - உரைக்க வேண்டியதில்லை.
சுடருற ஓங்கிய ஒள்ளொளி யாங்கே படருறு காட்சிப் பகலவன் ஈசன் அடருறு மாயையி னாரிருள் வீசில் உடலுறு ஞானத் துறவிய னாமே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஒளிக்கு ஒளியாய்த் திகழும் அறிவொளியாவன். அவன் அகவொளியாய்த் தொடர்புற்றுக் காட்சியளிக்கும் உணர்வொளிப் பகலவனும் ஆவன். திருவருளால் பல்வேறு பிறப்பினுக்கு வாயிலாக நின்று அடரும் மாயையின் நிறைந்த இருள் நீங்கப்பெறுதல் வேண்டும். அங்ஙனம் நீங்கினால் உடற்கண் பொருந்தியமாறில் மெய்யுணர்வுமேலோன் சிவபெருமானாவன். அவனே திருவடியுணர்வின் உறவுடையோன் ஆவன். ஞானத்துறவியன்-ஞானத்தால் துறவியன் என்றலும் ஒன்று. குறிப்புரை: பகலவன் ஈசன் - ஞான சூரியனாகிய ஈசன். வீசி - விலக்கி. உடலுறு - மாயா சம்பந்தமான அஞ்ஞானத்தோடு மாறுபடுகின்ற.
ஒளிபவ ளத்திரு மேனிவெண் ணீற்றன் அளிபவ ளச்செம்பொன் ஆதிப் பிரானுங் களிபவ ளத்தினன் காரிருள் நீங்கி ஒளிபவ ளத்தென்னோ டீசன்நின் றானே. பொருளுரை: மிக்க ஒளிசேர் பவளத் திருமேனியை உடையவன் சிவபெருமான். மணிகள் ஒன்பதினுள்ளும் முத்தும் பவளமும் நத்தும் கடலகத்துத் தோன்றுவன. நீரில் தோன்றும் தாமரை பூவுட் சிறந்தது போன்று நீரில் தோன்றும் முத்தும் பவளமும் மணியுள் சிறந்தனவாகும். முத்து சிவபெருமானின் ஆரறிவையும் பவளம் அளவி லாற்றலையும் குறிக்கும் குறிப்பினவாகும். ஆற்றலாகிய திருவருளே அவன் திருமேனியாகலின் பவளமேனியன் என்றோதினர். திருவெண்ணீற்றுப் பூச்சினன் முதிர்ந்த பவளத்தையும் செம்பொன்னையும் போன்ற ஆதிப் பிரானாகிய சிவபெருமான் ஆருயிர்கட்கு மிக்க களிப்பினை யுண்டாக்குவன். அங்ஙனம் உண்டாக்குவதில் அவன் மெய்யுணர்வுப் பகலவனாவன். பகலவன் - சூரியன். அவன் பிற வொளிகளால் நீங்காத ஆணவ வல்லிருளை அறவே நீக்கியருள்வன். நீக்கி அவன் அடியேனுடைய உள்ளத்தின்கண் ஒளிபவள வண்ணத்தனாய் நிறைந்து நின்றருள்கின்றனன். குறிப்புரை: அளி - முதிர்ந்த. பவளச் செம்பொன் - பவளத்தில் சிவந்த பொன்பதித்தாலொத்த நிறத்தையுடைய, களிபவளத்தினன் - ஆன்மாக்களுக்கு மகிழ்ச்சியை அருளுகின்ற சூரியனைப்போல.
ஈசன்நின் றானிமை யோர்கள்நின் றார்நின்ற தேசமொன் றின்றித் திகைத்திழைக் கின்றனர் பாசமொன் றாகப் பழவினைப் பற்றற வாசமொன் றாமலர் போன்றது தானன்றே. பொருளுரை: ஈசனாகிய சிவபெருமான் யாண்டும் நீக்கமற நிறைந்து நின்றருளினன். கண்ணிமையாக் காவலராகிய இமையோர்களும் நின்றனர். ஓரிடத்து நீங்காது இருவரும் நிற்பினும் இமையவர்கள் அகம் அகலாமையின் திருவடி காணாது திகைத்து நிற்கின்றனர். பாசமாகிய இருவினை யொப்பு வாய்ந்த பருவம் வந்து எய்தவும் எஞ்சுவினைப் பற்று அஞ்சியகலும். அகலவே ஏறுவினையும் இல்லின்மையால் துச்சில் நச்சிச் செல்லும். ஏன்றவினையும் அவ் வுயிரின் உள்ளத்துப் புகும் வழியின்மையால் குடை நிழல் புகாநடை வெயில்போன்று உடைபட்டழியும். அழியவே அவ் வுயிரும் ஆரருட் சிவபெருமானும் மலர் மணம் போன்று நிலவுவர். அவ் வுயிர் மீளா அடிமையாய் நாளும் பேரின்பப் பெருவாழ்வுற்று இன்புறும். அகம் அகலாமை - செருக்கு நீங்காமை; உள்ளம் அன்பால் விரியாமை. இல்: உரியகுடி. துச்சில்: ஒட்டுக்குடி. குறிப்புரை: பாசம் ஒன்றாக - இருவினை ஒப்பாக. பழவினை - முன்னீட்டிய வினைகள். வாசம் ஒன்றாம் மலர்-பூவின் மணம்போல் சிவசீவ ஐக்கியம். அருவுருவம். சிவஞானபோதம், . - .
தானே யிருக்கும் அவற்றில் தலைவனுந் தானே யிருக்கும் அவனென நண்ணிடும் வானா யிருக்குமிம் மாயிரு ஞாலத்துப் பானா யிருக்கப் பரவலு மாகுமே. பொருளுரை: செந்தமிழின்கண் இருக்கு என்று ஓதப்படுவது திரு இருக்கு ஆகும். ஆளுடைய பிள்ளையார் பல திரு இருக்குகளைக் காதலால் ஓதியருளியுள்ளார் தானே யிருக்கும் என்பதற்கு அத்தகைய செந்தமிழ்த் திருமறை இருக்காக இருப்பவனும் சிவனே. அவ் விருக்கின் முதல்வனும் தானே. அவ் விருக்காகிய மறைவழிச் செல்வார் அவனையே நண்ணுவர். அச் சிவபெருமான் தூய அறிவுப் பேரொளிப் பெருவெளியாகத் திகழ்பவனும் ஆவன். விரிந்த பெரிய நிலவுலகத்துப் பரனாக என்றும் நின்றருள்பவனும் சிவனே. அத்தகைய சிவபெருமான் திருவடியிணையினைப் பரவுவோமாக. பரனா என்பது பானா என நின்றது. பானுவாக என்பது பானாக என நின்றது என்றலும் ஒன்று. இதற்குச் சிவஞாயிறாக எனப்பொருள் கொள்க. குறிப்புரை: இருக்கு - தமிழ் மொழியில் உள்ள இருக்கு முதலிய வேதங்கள். அவற்றின் தலைவன் - சிவன். வானாய் - வியாபகமாய் பானாயிருக்க - பரவி இருக்க.
ஒன்பதாம் தந்திரம். தூல பஞ்சாக்கரம் ஒன்றுகண் டேனிவ் வுலகுக் கொருகனி நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி மென்றுகண் டாலது மெத்தென் றிருக்குந் தின்றுகண் டாலது தித்திக்குந் தானன்றே. பொருளுரை: உலகிடைவாழும் திருவடிப் பேற்றிற்குரிமையுடைய மக்களுயிர்க்குத் திருவருளால் ஒப்பில்லாத அவ்வையுண்ட அருநெல்லியினும் செவ்விதாகவுள்ள ஒப்பில் ஒரு கனியினைத் தப்பின்றிக் கண்டு கொண்டுள்ளேன். அக் கனி தீயதில்லாத நன்றுடையதாகும். அக்கனியின் திருப் பெயர் 'நமசிவய' வாகும்.அத் திருக்கனியினை உணர்வின்கண் கணித்தலாகிய மெல்லுதலைச் செய்வார்க்கு அஃது அனிச்ச மலரினும் மெல்லிதாக அமைந்திருக்கும் அதன்கண் அழுந்தியறிதலாகிய தின்றலைக் கண்டார்க்குத் தெவிட்டா இனிப்பாய்ச் சிறப்பாய் விளைந்து தித்திக்கும் தித்திக்கும் - இனிக்கும். அழுந்தியறிதல் - அனுபவித்தல். மனிதர்கள் அப்பர், . - . " குறித்தடியி. சிவஞானசித்தியார், . - . " ஒருமணியை. அப்பர், . - . " . - .
அகார முதலாக ஐம்பத்தொன் றாகி உகார முதலாக வோங்கி யுதித்து மகார இறுதியாய் மாய்ந்துமாய்ந் தேறி நகார முதலாகும் நந்திதா மம்மே. பொருளுரை: உலகிடை உயிர்ப்பாய் வழங்கும் தொன்மை மொழிகள் பலவற்றுள்ளும் நனிமிகத் தொன்மை வாய்ந்தது நம் தாய்மொழியாகிய இனிமை மிகு தனிச் செம்மொழி யென்னும் தமிழ்மொழியேயாம். அம்மொழிக்கண் வழங்கிய ஒலிக் குறிப்புக்களை ஒரு வரையறைப்படுத்தி ஐம்பத்தொன்று என அமைத்தனர். அதற்குக் தக்கவாறு வரிவடிவங்களையும் அமைத்தனர். அந் நிலையிற்றான் அகர முதலாக ஐம்பத்தொன்று என அறுதியிட்டனர். பின்னும் நுணுகி இயல்பாகப் புணர்நிலைக்கண் தோன்றும் ஒலித்திரிபுகளுக்கு வரிவடிவு தனித்தனியே அமைக்காமல் ஆய்தம் என்னும் முப்பாற் புள்ளியின் கூட்டரவால் உணர்தல் கூடுமெனக் கண்டனர். அக் காலத்து வரிவடிவை முப்பத்துமூன்றென வரைசெய்தனர். அதுவே அன்றுதொட்டு இன்றுகாறும் வழங்கிவருகின்றது. ஒலி முப்பத்தாறாம் மெய்யாகிய நாதத்தினின்றும் தோன்றுவதாகும். அங்ஙனம் தோன்றுங்கால் வாயிலுள்ள பல்லும் இதழும் நாவும் மூக்கும் அண்ணமும் முதலிய உறுப்புக்களின் தொழிலின்றி வாய்திறந்த அளவானே வரும் ஒலி அகரமாகும். அதனான் அவ் வொலி முதற்கண் அமைக்கப்பெற்றது. அவ் அகரம் முதலாக ஐம்பத்தொன்றென்க. விரிந்தபின் குவிதல்வேண்டுமாதலின் உகர முதலாக உற்றுத் தோன்றியதாகும். பின்பு அவ் வொலி ஒடுங்குதல் வேண்டும். அம் முறையில் மகர இறுதியாய் மாய்ந்து மாய்ந்தேறி என ஓதினர். இம் மூன்றும் ஒருபுடை யொப்பாக முப்பொருளும் குறிப்பனவாகும். அவை முறையே அறிவன், உறைவோர், மறைப்பது என்றாகும். நகர முதலாகிய 'நமசிவய' என்னும் தமிழ்மறை நந்தியின் திருப்பேராகும். அவ் வுண்மை வரும் திருமுறைத் திருப்பாட்டான் உணர்க: "நந்தி நாம நமச்சிவா யவெனும் சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் "குறிப்புரை: அகார....றாகி-தமிழ்மொழிக்கு வட்டெழுத்துக் காலத்திலும் அதற்கு முந்தியும் உயிர்கள் , மெய்கள் . ஆக. ஞானமெய்ந். . சம்பந்தர், .
அகராதி யீரெண் கலந்த பரையும் உகராதி தன்சத்தி யுள்ளொளி யீசன் சிகராதி தான்சிவ வேதமே கோண நகராதி தான்மூல மந்திர நண்ம்மே. பொருளுரை: திருவருட் கலப்பால் தோன்றும் அகர முதலிய உயிரெழுத்துக்கள் பதினாறு. உகராதி சிவபெருமானின் திருவருளாற்றலாகும். அவ் வாற்றல்களின் உள்ளொளியாய் விளங்குபவனும் சிவனே. சிகர முதலாக ஓதப்பெறும் 'சிவயநம' சிவவேதம் என்று சொல்லப்படும் திருவடியுணர்வாகும். இவ் வுணர்வினைப் பெறும் உரிமை வாய்ந்த ஆருயிர் கோணம் எனப்படும். நகர முதலாக ஓதப்படும் 'நமசிவய' மூலமந்திர மெனப்படும். இவற்றால் திருவடிப் பேறு எய்தும். இது பற்றியே "நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க" எனச் செந்தமிழ் மறைமுடிவும் ஓதுவதாயிற்று. நண்ணுமே என்பது நண்ம்மே என நின்றது. குறிப்புரை: அகராதி ஈரெண்-அகர முதலிய எழுத்துக்களில்.
வாயொடு கண்டம் இதய மருவுந்தி ஆய இலிங்க மவற்றின்மேலே யவ்வாய்த் தூயதோர் துண்ட மிருமத் தகஞ்செல்லல் ஆயதீ றாமைந்தோ டாமெழுத் தஞ்சுமே. பொருளுரை: வாய், மேலாகிய மூலம் ஆகிய ஆறு நிலைக்களமும் இடமாக அகரம் தோன்றும். மூக்கு நுனியாகிய தூயதோர் துண்டத்தினின்று பெருமைமிக்க உச்சித் தொளையாகிய கபாலம் வரை அவ் வொலி பரந்து செல்லும். பின் வெளிப்போதரும். வெளிப் போதருமென்பது எழுத்து வடிவாய்த் தன் செவிக்கும் பிறர் செவிக்கும் புலனாகும் செவியோசை யாகும் என்பதாம். இவ் ஈறாகிய வலிமையுள்ள செவியோசைக்கு உயிராக நிற்பது செந்தமிழ்த் திருவெழுத்தைந்தாகும். குறிப்புரை: மூலம் - இலிங்கம் - உந்தி - இதயம் - கண்டம் - துண்டம் என ஆதாரங்கள் ஆறு கூறப்பட்டது காண்க. மத்தகம் செல்லலாய தீறாம்-நாதவடிவமான அக்கரம் மூலத்திற் றோன்றிச் சென்று சகசிர அறையிற்றாக்கி வர்ணவடிவாய் வெளிப்படும் என்பது. ஐந்து - வாய், கண்டம், இதயம், உந்தி - இலிங்கம்.
கிரணங்கள் ஏழுங் கிளர்ந்தெரி பொங்கிக் கரணங்கள் விட்டுயிர் தானெழும் போதும் மரணங்கை வைத்துயிர் மாற்றிடும் போதும் அரணங்கை கூட்டுவ தஞ்செழுத் தாமே. பொருளுரை: ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம் என்னும் ஏழுநிறக் கதிர்கள் சேர்ந்த நிலையில் எரியொளி யுண்டாகும். அவ் வெரி மிகுதிப்பட்டு நின்றபோது கருவிக்கூட்டங்களினின்றும் ஆருயிர் எழுந்து புறம் செல்லும். அவ் வுயிர் இறப்பினை மேற்கொண்டு உடம்பினைவிட்டு அகலும். அப்பொழுது அவ் வுயிர்க்கு என்றும் பொன்றா அரணப் புகலிடமாக விருப்பது சிவபெருமானின் திருவடி. அத் திருவடியினை ஒருவாது மருவுவிப்பது திருவைந்தெழுத்தாகும். குறிப்புரை: கிரணங்கள் ஏழும் கிளர்ந்து எரி - ஒளி ஏழு கிரணங்களால் ஆக்கப்பட்டதால் ஏழும் கிளர்ந்து எரி என்றார். ஏழு கிரணங்களாவன: ஊதா, நீலம், பச்சை, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, இளநீலம். மரணம் - யமன். அரணம்-உயிர்க்கு அரண் ஆகிய முத்தி. சரண. அப்பர், . - .
ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில் ஆயுறு மந்திர மாரும் அறிகிலர் சேயுறு கண்ணி திருவெழுத் தஞ்சையும் வாயுறு வோதி வழுத்தலு மாகுமே. பொருளுரை: ஞாயிறாகிய வலப்பால் மூச்சும், திங்கள் ஆகிய இடப்பால் மூச்சும் எடுத்தும், தடுத்தும், விடுத்தும் பயிலுங்காலத்து ஆராய்ந்து மேற்கொள்ளும் மந்திரத்துண்மையினை உள்ளவாறுணர்ந்து ஆரும் அறிகிலர். செவ்வரி பரந்த திருக்கண்களையுடைய திருவருளாற்றலால் வெளிப்படும் ஒலி ஒளிமெய்களாகிய நாதவிந்து தத்துவங்களினின்றும் எழுத்துக்கள் வெளிப்படும். அவ் வெழுத்தானாகிய மந்திரங்களுள் திருவைந்தெழுத்தே முதன்மையாகும். அவ் வைந்தெழுத்தே உயிர்ப்புப் பயிற்சியினுக்கு ஒப்பில் திருமறையாகும். அத் திருமறையினை வாயார வாழ்த்தி வழுத்துவோமாக. குறிப்புரை: ஞாயிறு - பிங்கலை. திங்கள் - இடகலை.
குருவழி யாய குணங்களி னின்று கருவழி யாய கணக்கை யறுக்க வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு அருள்வழி காட்டுவ தஞ்செழுத் தாமே. பொருளுரை: சிவகுருவானவர் அருளிச் செய்த செவியறிவுறூவாகிய திருவைந்தெழுத்தின் மாறாப் பண்பினின்று கருவழிப் புகுவதற்கு வாயிலாகிய எஞ்சு வினையையும் ஏறுவினையையும் அறுத்தகற்றலாகும். அம் முறையான் வரும் வழியினை மாளச் செய்யவும் மறுக்கவும் வல்லார்க்குத் திருவருள் திருவைந்தெழுத்தின் வழியினைக் காட்டும். திருவைந்தெழுத்துப் பொருண்மறையாகும் அவற்றின் விரிவே அனைத்து தூலுமாகும். அவை பன்னிரு திருமுறையும் பதினான்கு மெய்ந்நூற்களும் என்ப. குறிப்புரை: குணங்கள் - சாதனங்கள். கணக்கை - வகையை. மறுக்க - தடுக்க. விண்ணுற. அப்பர், . - .
வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதுங் குறிப்பது வுன்னிற் குரைகழல் கூட்டுங் குறிப்பறி வான்றவங் கோனுரு வாமே. பொருளுரை: அஞ்சும்படியாகத் தீவினைத் துன்பம் தொடர்ந்து வந்திடும். அப்பொழுது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கின்றவன் நந்தி. அவன் திருப்பெயர் திருவைந்தெழுத்தாகும் அத் திருவைந்தெழுத்தை விதிப்படி யோதும் குறிப்பதை உள்ளத்து உறுதியாக நினைந்து ஓதி வந்தால் அவ்வோதும் தவம் சிவபெருமானின் ஒலிக்கும் வீரக்கழல் அணிந்த திருவடியிணையினைக் கூட்டுவிக்கும் வீரக்கழல் - மறைச் சிலம்படி. அத்தகைய இறப்பில் தவத்தின் குறிப்புணர்வான் - சிவனடிக் கீழ் சிவனுருவாய் நிலைத்திருப்பன். குறிப்புரை: வெறிக்க - மயங்க. தவம் - தவத்தால். இருந்து. அப்பர், . - .
நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரானென்று துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரணென்று மஞ்சு தவழும் வடவரை மீதுறை அஞ்சில் இறைவன் அருள்பெற லாகுமே. பொருளுரை: திருவைந்தெழுத்தின் சிறப்போர்ந்து அப் பெரும் பொருள் மறையினை நீங்கா நினைவுடைய தூயராய்க் கணித்தும் வாயால் முழுமுதற் பெருமான் சிவன் என்று வாழ்த்தியும் வருவோர் செந்நெறிச் செல்வராவர். அவர்கள் துஞ்சும் போழ்து உன் துணைத்தாள் ஒன்றே புகலென்று அடைக்கலம் புகுவர். அதனால் அவர்கள் திருவருள் உருவாகச் செப்பப் பெறும் மேகங்கள் தவழும் திருவெள்ளி மலைமீது உறைந்தருளும் திருவைந்தெழுத்தால் பெறப்படும் முழுமுதற் சிவபெருமானின் திருவருள் பெற்று உய்வர். அஞ்சில் இறை - அஞ்சுதலில்லாமல் செய்தருளும் சிவபெருமான் என்றலும் ஒன்று. குறிப்புரை: வடவரை - கயிலை. அஞ்சில் - அஞ்சுதல் இல்லாத.
பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது இராமாற்றஞ் செய்வார்கொல் ஏழை மனிதர் பராமுற்றுங் கீழொடு பல்வகை யாலும் அராமுற்றுஞ் சூழ்ந்த அகலிடந் தானே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமானின் திருவுள்ளத்தால் காரியப்படும் குண்டலினி என்று சொல்லப்படும் தூமாயை பாம்பென உருவகிக்கப்படும். அத்தகைய அரவினை ஆதிசேடன் என்ப. ஆதிசேடன் என்பது ஆதியாகிய திருவருளால் காரியப்படும் தூமாயை என்ப. அக் குண்டலினியால் சுமக்கப்படும் விரிந்த அகலிடத்துள்ளார் அனைவராலும் பராவப்படும் முழுமுதல் சிவபெருமான் ஆவன். பலவகையாலும் ஆராய்ந்து பார்க்கில் சிவபெருமானே முழுமுதலாவன். அச் சிவபெருமான் ஆருயிர் உய்தற்பொருட்டு அருளிச்செய்த பொருள்மறை திருவைந்தெழுத்தாகும். அத் திருவைந்தெழுத்தின் பெருமை உணராதவர்கள் ஆணவவல்லிருளாகிய இராவினை மாற்றும் வன்மையுடையவர் ஆவரோ? அந்தோ அறிவிலா ஏழை மனிதராக இருக்கின்றனரே! சேடன்: பெருமையுடையவன்; சேடு - பெருமை. ஏனைமந்திரங்களாகிய மறை அனைத்தும் புகழ்மறை என்று சொல்லப்படும். குறிப்புரை: ஐந்து - அஞ்செழுத்து. இராமாற்றம் - அஞ்ஞானத்தைக் கெடுத்தல். பரா - பரவு. அராமுற்றும் சூழ்ந்த - ஆதி சேடனால் தாங்கப்படுகின்ற.
ஒன்பதாம் தந்திரம். சூக்கும பஞ்சாக்கரம் எளிய வாதுசெய் வாரெங்கள் ஈசனை ஒளியை யுன்னி யுருகு மனத்தராய்த் தெளிய வோதிச் சிவாய நமவென்னுங் குளிகை யிட்டுப்பொன் னாக்குவன் கூட்டையே. பொருளுரை: எங்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை உண்மை உணர்விலாதவர் எளியானாகக் கருதிச் சொற்போர் செய்வர். அவர் 'சூதும் வாதும் வேதனை செய்யும்' என்னும் ஒழுகலாற்றுமுறையினை முற்றும் மறந்தோராவர். சொற்போர் - வாது. அவன் எல்லா ஒளிக்கும் ஒளி கொடுத்துக்கொண்டு தான் இயல்பாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் அறிவுப் பேரொளியாவன். அவனைப் பேரன்புடன்நினைத்து இடையறாது உருகு மனத்தராய் இருப்பவர் சிவனடியாராவர். அவர் சிவகுருவின் திருவருளால் தெளிந்து 'சிவயநம' என்னும் நுண்மைத் திருவைந்தெழுத்தை இடையறாது கணிப்பர். அங்ஙனம் கணித்தலால் சிவபெருமான் அப்பொருண் மறையினையே நற்குளிகையாகக்கொண்டு அவ்வுயிரையும் அவ்வுயிரின் உடம்பினையும் மாற்றுயர்ந்த செம்பொன்னாம் வண்ணம் செய்தருள்வன். அஃதாவது அவ்வுயிரையும் உடம்பினையும் சிவமாக்கியருளல். இவ்வுண்மை ஆளுடைய நம்பியார் திருவுடம்பினையும் சண்டீசநாயனார் திரு வுடம்பினையும் முறையே 'ஊனுடம்பு வேறு செய்தான்' எனவும், 'சூழ்ந்த ஒளியில் தோன்றினார்' எனவும் கூறுமாறு செய்தருளினமையால் விளங்கும். குளிகை: செம்பைப் பொன்னாக்கும் சீரிய கருவி. 'சிவயநம' என நோன்பு நெறியில் நிற்பார் மேற்கொள்ள வேண்டிய நுண்மறை. குறிப்புரை: பொன்னாக்குவன் கூட்டை - உடம்பு பொன்போல் ஒளி வீசும். குளிகை - மந்திரம். தானெனை. நம்பி, . - . " செங்கண். . சண்டேசுரர், . " செம்பிரத. சித்தியார், . -.
சிவன்சத்தி சீவன் செறுமல மாயை அவஞ்சேர்த்த பாச மலமைந் தகலச் சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர அவஞ்சேர்த்த பாசம் அணுககி லாவே. பொருளுரை: செந்தமிழ்த் திருவைந்தெழுத்துச் செம்பொருள் ஐந்தினையும் இம்மையே அறிவிக்கும் செம்மை மறையாகும். அவ்வைந்தெழுத்தும் தனித்தனியே ஒவ்வொரு பொருளையுணர்த்தும் ஒவ்வொரு சொல்லின் முதலெழுத்தாகும். அவை முறையே 'சிறப்பு, வனப்பு, யாப்பு, நடப்பு, மறைப்பு' எனப்படும். இவற்றை முறையே சிவன், சத்தி, சீவன், திரோதாயமலம்' என்ப. மலத்தைச் செறுமலம். மாயை எனவுங் கூறுப. இவற்றுள் திருவருளால் மலம் அடங்கும். மலம் அடங்கவே சத்தியாகிய திருவருளால் ஆருயிர் கூட்டத் தகுதியுடையதாகும். அப்பொழுது திருவருள் அவ் வுயிரைச் சிவத்துடன் கூட்டுவிக்கும். கூட்டுவிக்கவே வீணாகப் பிறந்திறக்கும் பிழைநெறியிற் புகுவிக்கும் பாசம் அற்றழியும் திருவைந்தெழுத்தின் விரிவினை வரும் வெண்பாவால் நினைவுகூர்க. சிறப்புவனப் பியாப்பு நடப்பு மறைப்போ டுறப்பால ஐந்தெழுத்தின் உண்மை-மறப்பில் சிவய நமஎன்னும் செந்தமிழ்ஐந் தாலாம் சிவமறையின் மெய்விரியாம் செப்பு. குறிப்புரை: சிவன்.....மாயை-அஞ்செழுத்துக்கள் ஐம்பொருள்களை உணர்த்துகின்றன. சி - சிவனையும், வ - சத்தியையும், ய - சீவனையும், ந - மலத்தையும், ம-மாயையையும் உணர்த்துகின்றன. அவம் சேர்ந்த பாசம் ஐந்து - பாவத்தை உண்டாக்கும் மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆக ஐந்து.
சிவனரு ளாய சிவன்திரு நாமஞ் சிவனரு ளான்மாத் திரோத மலமாயை சிவன்முத லாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவ னாமே. பொருளுரை: செந்தமிழ்த் திருவைந்தெழுத்துச் சிவபெருமானின் திருமேனியாகும். அதனால் அம்மறை திருவருளேயாகும். அது 'சிவயநம' எனப்படும். இத் திருவெழுத்தைந்தும் முறையே சிவன். அருள், ஆன்மா, திரோதம், மலமாயை என்னும் மெய்ப்பொருள் ஐந்தினையும் தனித் தனியாகக் குறிக்கும் ஐந்து சொற்களின் முதலெழுத்தாகும். சிவ என்னும் மறைமொழியை முதற்கண்வைத்து 'சிவயநம' எனக் காதலாகி நாளும் கணிக்கப்பெறும் நற்றவம் புரிதல்வேண்டும். அது புரிந்தால் அத்தவப் பயனால் மலமாயைகன்மங்கள் அகன்று அடங்கும் அவை அடங்கவே பிறப்பறும். பிறப்பறவே திருவடிப்பேறாம் சிறப்புறும் சிறப்புறவே அவ்வுயிர் சிவனாகி மீளா அடிமையாய் வாழ்ந்திருக்கும். நிரோதம் - ஒழித்தல்; அடக்கம். குறிப்புரை: சிவனருளாய - சிவ சத்தியாகிய. சிவன் திருநாமம் - அஞ்செழுத்து. சிவன் - அருள் - ஆன்மா - திரோதம் - மலமாயை - சி - வா - ய - ந- ம -. சிவன் முதலாக - சி முதலாக. நிரோதம் - ஒழித்தல்.
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டவ் வாதி தனைவிட் டிறையருட் சத்தியால் தீதில் சிவஞான யோகமே சித்திக்கும் ஓதுஞ் சிவாய மலமற்ற உண்மையே. பொருளுரை: மேலோதியவாறு 'சிவயநம' என ஓதிவருங்கால் சொல்லப்படும் நகரமகரமாகிய மலங்கள் இரண்டும் ஒழிந்திடும். ஒழியவே அவ்வாதியருளாகிய நகரமும் அதனால் செலுத்தப்படும் மகரமும் ஆகிய இரண்டினையும் நீக்கிய இடத்து அங்குத் திருவருளாற்றலுடன் கூடிய சிவ என்னும் சிறப்பு எழுத்துக்களை யமைத்தல்வேண்டும். அமைக்கவே 'சிவயசிவ' என அமையும் இம்முறையே கணிக்கில் குற்றமற்ற சிவவுருவ வாயிலாம் சிவச் செறிவு கைகூடும். சிறந்து சொல்லப்படும் 'சிவயசிவ' என்னும் மறை மலம் அகன்று நலமோங்கி நிற்கும் உண்மை நிலையாகும். இது செறிவினர் ஓதும் சீர்மையதாகும். குறிப்புரை: நம்மலம் எல்லாம் - நகர - மகரங்களால் குறிக்கப்பட்ட மலங்கள் எல்லாம். அவ்வாதிகளை - அந்த முதலில் உள்ள எழுத்துக்களாய ந-ம என்பவைகளை.
தெள்ளமு தூறச் சிவாய நமவென்று உள்ளமு தூற வொருகால் உரைத்திடும் வெள்ளமு தூறல் விரும்பியுண் ணாதவர் துள்ளிய நீர்போற் சுழல்கின்ற வாறே. பொருளுரை: தெளிந்த திருவடியமுது ஓவாது ஊறித் தாவா இன்பந் தலைத்தலைச் சிறக்கும் பொருட்டுச் 'சிவயநம' என்னும் திருமறையினை உள்ளத்துள்ளே திருவடியின்ப அமுதுபெருகி ஊறக் காதலால் ஒருகாலுரைத்தல்வேண்டும். உரைக்கவே புருவநடுவில் தோன்றும் வெள்ள மொத்துவரும் திங்கள் மண்டிலத் திருவமுது அளவின்றி ஊறும் அதனை அருளால் விழைந்து உண்ணுதல்வேண்டும். அங்ஙனம் உண்ணாதவர் பிறப்பு இறப்பிற்பட்டு நீர்த்துளி சுழலுமாறு சுழன்று துன்புறுவர்.
நமாதி நனாதி திரோதாயி யாகித் தமாதிய தாய்நிற்கத் தானந்தத் துற்றுச் சமாதித் துரியந் தமதாக மாகவே நமாதி சமாதி சிவவாதல் எண்ணே. பொருளுரை: நகராதி ஐந்தெழுத்து நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்குதல் ஆகிய ஐம்பாட்டினையும் நிகழ்த்துவிக்கும். திரோதாயி என்று சொல்லப்படும் நடப்பாற்றல் அந்நனவாதிகளைத் தூண்டித் தொழிற்படுத்தும் முதல்வியாகும். அதுவே அவ்வெழுத்துக்களுக்கும் ஆதியாய்நிற்கும். ஆவி அம்முடிபினை எய்தி அகநிலைச் செயலறலாகிய துரியமே தம்உடம்பாக நிற்கும். நிற்கவே நமாதிக்குச் சமமாகச் சிவமுதலாகத் தோன்றும். தோன்றவே 'சிவயசிவ' என எண்ணுவதே சிறப்பாகும் என்ப. குறிப்புரை: நமாதி - நகரமுதல். தமாதியதாய் - அவ்வக்கரங்களுக்கு ஆதியாய். தான் - ஆன்மா. சமாதித் துரியம் - துரிய அவத்தை தமது ஆகமாக - தமது உடம்பு ஆக. சிவவாதல் - சி - வ முதலெழுத்துக்கள் ஆதல்.
அருடரு மாயமும் அத்தனுந் தம்மில் ஒருவனை யீன்றவர் உள்ளுறு மாயை திரிமல நீங்கிச் சிவாயவென் றோதும் அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே. பொருளுரை: திருவருளைப் புரியும் அம்மையாகிய வனப்பாற்றலும் அவ்வாற்றலின் துணையும் அத்தனாகிய சிறப்பும் தம்மில் ஒன்றுகூடி ஆருயிர்க்குத் துணைபுரிந்து அவ்வுயிரைப் பேணி ஈன்றவராவர். அதனால் உள்ளுறு மாயை, நடப்பாற்றல், ஆணவம், கன்மம், மாயை ஆக்கம் ஆகிய ஐம்மலங்களும் நீங்கும். நீக்கவே 'சிவயசிவ' என்று ஓவாது கணிக்கும் நற்றவம் கைகூடும். அங்ஙனம் கைகூடவே அருவினையகலும். அவ் வருவினையை அகற்றுவதும் அச் 'சிவயசிவ' என்னும் திருவைந்தெழுத்துத் திருமறையேயாகும். குறிப்புரை: அருடரு மாயமும் அத்தனும் - அருள்தங்கிய மோகினியும் உருத்திரனும். தம்மில் - தம்முள் கூடி. ஒருவனை - சாத்தனை. அவ்வெழுத்து - அந்தச் சி - வா - ய என்னும் எழுத்துக்கள்.
சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர் சிவசிவ வாயுவுந் தேர்ந்துள் அடங்கச் சிவசிவ வாய தெளிவினுள் ளார்கள் சிவசிவ வாகும் திருவரு ளாமே. பொருளுரை: தெளிவறிவில்லாத எளிய ஊமர்கள் இம்மை உம்மை அம்மை என்னும் மூவிடத்துக்கும் துணையாக என்றும் பொன்றாது நிற்பது "சிவசிவ" என்னும் திருநான்மறைத் திருவைந்தெழுத்தாகும் என்னும் மெய்ம்மையினைத் தெளிகிலர். அத்துணைச் சிறந்த திருவெழுத்து மறையாம் 'சிவசிவ' என்று இடையறாது கணித்தல்வேண்டும். கணிக்கவே, அடங்கா மனமும் ஒடுங்கா உயிர்ப்பும் அடங்கி ஒடுங்கும். ஒடுங்கவே, 'சிவசிவ' என்னும் சிறப்பினை யுணர்ந்த தெளிவினராவர். தெளிவினராகவே 'சிவசிவ' வாக நிலைக்கும் திருவருளைப் பெறுவர். இம்மறை அறிவுநெறியினர் மேற்கொள்ள வேண்டிய அருமறையாகும். குறிப்புரை: சிவசிவ வாய - சிவா என்னும் குறில் நெடில் எழுத்துக்களுக்குரிய மாத்திரைப்போது வாயுவை இரேசக பூரக கும்பகம் செய்தல்.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவரு மாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே. பொருளுரை: முன்பும் திருவருளால் ஒருவாது 'சிவசிவ' என்றோதும் பெருஞ்சூழ்வால் தாமும் ஓதும் வாய்ப்புப் பெறாதார் பலருளராவர். அவர்போல் தீவினையாளர் எவருமிலர். அத் தீவினையாளர் அப் பிழையினையுன்னி இப் பிறப்பிலேனும் 'சிவசிவ' என்று செம்மனத்தால் ஓதுதல்வேண்டும். அத் தீவினையாளர், அங்ஙனம் முன்வந்து ஓதுதல் அருமை. அதனால் தீவினையாளர் 'சிவசிவ' என்று ஓதுகின்றிலர். அத் தீவினை வேறொன்றானும் மாளாது. 'சிவசிவ' என்று இடையறாது ஓதுவதனால் மட்டுமே அத் தீவினை மாளும். 'சிவசிவ' என்று அம்மெய்யன்பர் இடையறாது ஓதிவரச் சிவவுலகச் செல்வராந் தேவராவர். 'சிவசிவ' என்று மேலும் ஓதச் சிவநிலை எய்தித் திருவடியின்பந் துய்ப்பர். பண்டை நற்றவத்தால் 'சிவசிவ' என்று ஓதும் சிவனெறியிற்சேரார் தீவினையாளராவர். அதனை ஓதும் சீவநிலையினர்க்குத் தீவினை வெற்பிற்றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்பனிக் கெடுமாறுபோற் கெடும். மேலும் ஓதும் மெய்யன்பர்கள் நோன்பு நிலையினராவர். அவர் சிவவுருவினை வழிபடும் தேவராவர். பின்னும் ஓதுவோர் செறிவு நிலையினராவர். அவர்கள் சிவகதியாகிய திருவுரு எய்துவர். மேலும், 'இத்திருப்பாட்டை ஈராறுமுறை ஏத்திவரின், ஒத்தவுரு நூற்றெட்டாம் ஓர்.' என்பதனால் திருமுறை பன்னிரண்டின் நினைவாய் இதனைப் பன்னிரண்டுமுறை நாளும் அனைவரும் ஓதுக. ஓதவே நூற்றெட்டுச் சிவம் செய்ததாகும். நானேயோ. . திருவேசறவு, . " தொந்தத். . திருமுலர், . " கேடு. அப்பர், . - . " வெம்மை " . - .
நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச் சிவமென்னு நாமத்தைச் சிந்தையு ளேற்றப் பவமது தீரும் பரிசும தற்றால் அவமதி தீரும் அறும்பிறப் பன்றோ. பொருளுரை: 'சிவயநம' என்னும் செந்தமிழ்த் திருமறையினை ஓதுமுறை ஒருபுடையொப்பாகச் சிவ என்னும் இரண்டு எழுத்தினையும் சிந்தையினுள்ளே அழுத்தமாகப் பதித்தல்வேண்டும். ய என்னும் ஓரெழுத்தினை மிடற்றின்கண் நிறுத்துதல்வேண்டும். நம என்னும் இரண்டு எழுத்தினையும் நாவின்கண் அடங்கி ஒடுங்குமாறு ஒடுக்குதல் வேண்டும். அங்ஙனம் மூவிடப் பயில்வாய் முறைமுறை ஓதுதல் ஓதுமுறையாகும். அங்ஙனம் ஓதிவர இருவினைப் பாவம் மருவாதகலும். இருவினையாவது எஞ்சுவினை ஏறுவினை என்னும் இரண்டுமேயாம். அம் மறையின் மெய்ம்மைத் தன்மையும் அதுவேயாம். அதனால் அறியாமையிருளும் தீரும். அறியாமை நீங்கவே அப்பொழுதே பிறப்பறும். பிறப்பறவே சிறப்புறும். குறிப்புரை: அவமதி - அஞ்ஞானம்.
ஒன்பதாம் தந்திரம். அதி சூக்கும பஞ்சாக்கரம் சிவயா நமவெனச் சித்தம் ஒருக்கி அவாயம் அறவே யடிமைய தாக்கிச் சிவாய சிவசிவ வென்றென்றே சிந்தை அவாயங் கெடநிற்க ஆனந்த மாமே. பொருளுரை: மேலோதியவாறு 'சிவயநம' என ஓதித் தம் சித்தத்தினைச் சிவனார்க்குச் சிறந்த உறையுளாக்குதல்வேண்டும். அஃதாவது நீங்கா நினைவாய்ச் 'சிவசிவ' என்று எண்ணிக்கொண்டிருப்பது. அந்நிலையே சித்தம் ஒருக்கும் நிலையாகும். அங்ஙனம் இருப்பதால் பேரிடர் அறும். பேரிடர் அறவே அடிமைநிலை கைகூடும். கைகூடவே நுண்மைத் திருவைந்தெழுத்தின் மேனிலை மீநுண்மைத் திருவைந்தெழுத்தாகும். அதுவே 'சிவயசிவ' என்ப. இத் திருமறையினை எத்தகைய இடுக்கண்களும் அகலும்பொருட்டு எண்ணிக் கணித்து நண்ணி நவின்று நாளும் வருதல்வேண்டும். இதுவே திருவைந்தெழுத்தின்வழி நிற்குமுறை யாகும். அங்ஙனம் நிற்கவே திருவடிப்பேற்றின் இயற்கை உண்மையறிவு இன்ப எழில்நல நுகர்வு கைகூடும். அதுவே பேரின்பப் பெருவாழ்வு என்ப. குறிப்புரை: அவாயம் - அபாயம்.
செஞ்சுடர் மண்டலத் தூடுசென் றப்புறம் அஞ்சண வும்முறை யேறி வழிக்கொண்டு துஞ்சு மவன்சொன்ன காலத் திறைவனை நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே. பொருளுரை: செஞ்சுடர் மண்டிலம் ஞாயிற்று மண்டிலமாகும். அகத்தவப் பயிற்சியால் அம் மண்டிலத்தினூடு சென்று நிற்றல்வேண்டும். அதன்மேல் ஐயுணர்வும் 'தம்மை ஐந்து புலனும் பின்செல்லும் தகவாய்' ஒருங்கிக் கைகூடுதல்வேண்டும். கைகூடவே அவ்வழி ஏறிப்போய் அசைவின்றி இருத்தல் வாய்க்கும். சொல்லப்பட்ட அந்நேரத்து முழுமுதற் சிவபெருமான் நம்மைவிட்டு நீங்காச் செம்பொருளாய் நிலைபெற்றருள்வன். 'நெஞ்சென நீங்கா நிலைபே'றென்பதற்கு நம் நெஞ்சு நமக்கு வேறாக நில்லாது நம்முடன் வேறற விரவிநிற்பதுபோன்று புணர்ந்துநிற்பன் எனவும், நெஞ்சு நினைப்பூட்டுவதுபோன்று நினைப்பூட்டுவன் எனவும் கொள்க. இவ் வுண்மை வரும் அப்பர் அருண்மொழியான் உணரலாம்: "துஞ்சும் போதும் சுடர்விடு சோதியை நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை நஞ்சு கண்டத் தடக்கிய நம்பனை "குறிப்புரை: அஞ்சணவுமுறை - ஐயறிவும் ஒன்றுபடுமாறு. வழிக் கொண்டு - போய். துஞ்சுமவன் - உலகத்தை மறந்திருக்கும் அவன். சொன்ன காலத்து - குறித்த காலத்தில்.
அங்கமும் ஆகம வேதம தோதினும் எங்கள் பிரானெழுத் தொன்றில் இருப்பது சங்கைகெட் டவ்வெழுத் தொன்றையுஞ் சாதித்தால் அங்கரை சேர்ந்த அருங்கல மாகுமே. பொருளுரை: கருவி நூற்களும் இறைநூலும் மறைநூலும் முட்டாது ஓதினும் அம்மெய்களனைத்தும் எம்முழுமுதல் தலைவனாகிய சிவபெருமான் திருப்பெயராகிய 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தில் ஒப்பில் ஒன்றாகிய 'சி' கரத்தினுள் அமைந்து கிடக்கின்றன. அவ்வுண்மையினிடத்து ஒருசிறிதும் ஐயுறாது. அதனை மேற்கொண்டொழுகி உறுதியுடன் நிலைநிற்றல்வேண்டும். அங்ஙனம் நின்றால் இவ்வுடம்பாகிய அருங்கலம் அழகிய திருவடிப்பேறாகிய கரையினைச் சேரும். அதனால் 'அங்கரைசேர்ந்த அருங்கலம்' என்றோதினர். 'சி'கரம்பேசாஎழுத்தெனப்படும். எனினும் 'வ'கரத்துடன்கூடிச் 'சிவ' எனப் பேசும் எழுத்தாகவும் நிற்கும். சிகரத்தின்கண் சகரமாகிய மெய்யும், இகரமாகிய உயிரும், அகரமாகிய உயிர்க்கு உயிரும் உடங்கியைந்துள்ளன. சகரம் மாயையினையும், இகரம் ஆருயிரினையும், அகரம் பேருயிரினையும் ஒருபுடையொப்பாகக் குறிப்பனவாகும். அதனால் ஓரெழுத்தின் கண்ணேயே முப்பொருளுண்மை தேறப்படும். இவ் வருமை வேறு எம்மறைக் கண்ணும் காண்டல் அரிது. 'சகார ஞகாரம் இடைநா அண்ணம்'என்பதனால் இடைநிற்பதாகும். அம்முறையில் 'அடியார் நடுவுளிருக்கும்' ஆருயிர்கட்கு ஒருபுடை ஒப்பாகும். அகரம் தனிப்பெரும் முதன்மையதாய் எல்லாவற்றையும் இவர் தந்தூர்ந்து இயக்குவதாய்த் திரிபில்லதாய் இயற்கையாய் நிற்பதொன்றாகும். அதனால் அது விழுமிய முழுமுதற் சிவபெருமானுக்கு ஒருபுடையொப்பாகும். எல்லாவற்றையும் என்பது உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துக்கள் என்பன. அ, இ, உ மூன்றும் அன்பி, இன்பி, உண்பி என ஒருபுடையாகக் கூறலாம். அன்பை வேட்பது அன்பி. இன்பை வேட்பது இன்பி. உண்பிப்பதை வேட்பது உண்பி. இவை முறையே இறை, உயிர், இறையருளாகும். குறிப்புரை: அங்கமும் - வேதத்துக்கு அங்கங்களாயுள்ள ஆறு சாத்திர நூல்கள். எழுத்தொன்றில் அதிசூக்கும பஞ்சாக்கரமாகிய ஓர் எழுத்தில். சங்கை கெட்டு - சந்தேகம் கொள்ளாமல். அங்கரை - அழகிய முத்திக்கரை. அருங்கலம் - அழகிய மரக்கலம். கருமமு. நாலடியார், .
நாயோட்டு மந்திரம் நான்மறை வேதம் நாயோட்டு மந்திரம் நாத னிருப்பிடம் நாயோட்டு மந்திரம் நாதாந்த சோதி நாயோட்டு மந்திரம் நாமறி யோமன்றே. பொருளுரை: நயப்பது நாய். நயக்கப்படுவோன் நாயன். நாயானது உயர்ந்த பண்பை உடையது. அவை தலைவனை அறிதல், தலைவன் உடைமையை உயிரினும் சிறப்பாக ஓம்புதல், தலைவன் துன்புறுத்தினும் இன்புறுத்தல், தலைவன் ஏவிய வழிநிற்றல், நன்றி மறவாமை, தலைவன் பொருட்டுத் தன்னுயிரையும் கொடுத்தல், மோப்பம் உணர்தல் முதலிய பலவாம். அத்தகைய நாய் மறந்து பிறரில் புகுமேல் அதனை ஓட்டுதற் பொருட்டு இகழ்ச்சிக் குறிப்பாகச் சொல்லும் சொல். 'சீ' என்பதாகும். இதனையே நாயோட்டு மந்திரம் என நவின்றனர். பழங்காலத்துப் பொதுவாக மந்திரங்களை உய்த்துணருமாறு மாத்திரைகளைக் கூட்டியும் குறைத்தும் ஓதுவாராயினர். அம் முறையில் ஈண்டுச் சிகரத்தைச் சீ என மாத்திரை கூட்டி ஓதுவாராயினர். எனவே நாயோட்டு மந்திரமாகிய சிகரத்தின்கண் நான்மறைவேதங்கள் அடங்கும். அச் சிகரமே நாதன் இருப்பிடமாகும். அச் சிகரமே அருஞ்சைவர் மெய் ஆறாறுக்கு அப்பாலுள்ள இயற்கை உண்மை அறிவின்பப் பேரொளியாகும். இவ்வுண்மையை அல்லாமல் வெளிப்படையாகக் கூறும் 'சீ' என்பதே நாயோட்டு மந்திரம் எனக்கொண்டு பொருள் காணலுறின் அப்பொருளை நாமறியோம் என்க. குறிப்புரை: நாயோட்டு மந்திரம் - சி. நாயிற். . குழைத்தபத்து, . " நாயினுங். அப்பர், . - .
பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே விழித்தங் குறங்கும் வினையறி வாரில்லை எழுத்தறி வோமென் றுரைப்பர்கள் ஏதர் எழுத்தை யழுத்தும் எழுத்தறி யாரே. பொருளுரை: செந்தமிழ்ப் பழமறைகளுக்குள்ளே பழுத்து முதிர்ந்தன 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்தாகும். அதனை 'நம் செயலற்று நாமற்றுப் பின் நாதன், தன் செயலாகவே நின்று' நாடுதல் வேண்டும். அந் நாட்டத்தினை விழித்துறங்கும் நிலை என்பர். இதனை அறி துயில் எனவும் கூறுப. இத்தகைய ஒன்றாவுயர்ந்த உண்மை நிலையினை அறிவாரில்லை. அறியாமைக் குற்றம் பொருந்திய மூடர்களாகிய ஏதர்கள் 'சிவயநம' என்னும் எழுத்தைந்தும் வன்மை மென்மை இடைமை கலந்தனவேயாம்; இவையனைத்தும் நெடுங்கணக்கிலுள்ளனவே; இவற்றை யாங்கள் அறிவோம் என்று கூறுவர். அவர்கள் அத் திருவைந்தெழுத்தை ஏனைய எழுத்துக்கள் போன்ற எழுத்தாகமட்டும் கருதினர். அது பிறப்பினுக்குரிய எழுத்தை அழுத்தும் படைக்கலமாகிய எழுத்தென. அறியார். அறிவரேல் உண்மையறிந்தாராவர். நடைமுறையொழுக்கிற் கைக்கொண்டு பெரும்பயனும் எய்துவர். குறிப்புரை: ஐந்தும் - அஞ்சு எழுத்துக்களும். ஏதர் - மூடர். எழுத்தை அழுத்தும் - விதி எழுத்தை மாற்றும். எழுத்து - சி. படைக்கல. அப்பர், . - . " புத்தர்ச. சம்பந்தர், . - .
ஒன்பதாம் தந்திரம். திருக்கூத்துத் தரிசனம் எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே. பொருளுரை: சிவபெருமானுக்குத் திருமேனி சிவசத்தியே யாகும். அச் சிவனின் அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. அச் சிவபெருமான் தான் செய்யும் திருவருட்டொழில்களனைத்தும் சிவசத்தியின் வாயிலாகவே செய்தருள்கின்றனன். அச் சிவபெருமானும் திருவருளும் நுண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எங்கும் சிதம்பரம் என்றனர். அவன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைந்தே. எங்கும் சிவமாகவே இருத்தலால் எல்லாவுயிர்களும் எல்லா வுலகங்களும் எல்லா உலகியற் பொருள்களும் சிவனிறைவில் சார்ந்து நிற்கின்றன. அதனால் அனைத்தும் சிவவண்ணமேயாம். அவ்வாற்றால் எங்கும் தங்கும் சிவனருள் திருவிளையாட்டே எல்லாமாகும். குறிப்புரை: இம் மந்திரம் உலகமெல்லாம் சிவத்தின் திருக்கூத்தாம் என்பதை விளக்கிற்று. எங்குமுள. சிவஞானபோதம், . - .
சிற்பரஞ் சோதி சிவனாந்தக் கூத்தனைச் சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப் பொற்பதிக் கூத்தனைப் பொற்றில்லைக் கூத்தனை அற்புதக் கூத்தனை யாரறி வாரன்றே. பொருளுரை: விழுமிய முழுமுதற் சிவபெருமான் ஆற்றியருளும் திருத்தொழில்கள் ஐந்து. அதுபோல் திருவருட்டிருக் கூத்தும் ஐந்தாகும். அவை முறையே சிவானந்தக்கூத்து, சுந்தரக்கூத்து, பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து, அற்புதக்கூத்து என்பனவாகும். அச் சிவபெருமானும் அவ்வக் கூத்தின் அடையால் திருப் பெயர் பெறுவன். அது 'சிவானந்தக் கூத்தன்' என்பது போன்றாகும். இவ் வைந்தும் முறையே அறிவு, ஆற்றல், அன்பு, ஆற்றற் கூடுதல், அறிவுக் கூடுதல் என்பனவற்றால் நிகழும் நிகழ்ச்சிகளாகும். இவற்றை வரும் வெண்பாவால் நினைவு கூர்க: அறிவாற்றல் அன்போ டறிவாற்றல் தம்மில் நெறியாற்றல் தான்மிகல் நேரும் - அறிவுமிகல் இவ்வைந்தா லாம்கூத் தெழிற்பெயரும் எம்மாற்குச் செவ்வைசிவ இன்பக்கூத் தன். குறிப்புரை: சொற்பதம் - சொல்லும்படியான பதங்கள். இம் மந்திரம் சிவானந்தக் கூத்து, சுந்தரக் கூத்து, பொற்பதிக் கூத்து. பொற்றில்லைக் கூத்து, அற்புதக் கூத்து எனச் சிவநடனம் ஐவகைப்படும் என்பதை உணர்த்திற்று.
சிவானந்தக் கூத்து திருமந் திரமே சிதம்பரந் தானும் திருமந் திரமே சிறந்த உபாங்கந் திருமந் திரமே திருக்கூத்தின் செய்கை திருமந் திரமே திருமேனி தானே. பொருளுரை: திருவைந்தெழுத்தே அழகிய மந்திரமாகும். அத் திருமந்திரமே தில்லைத் திருச்சிற்றம்பலம். அத் திருமந்திரமே சிறந்த துணையுறுப்பாகும். அத் திருமந்திரமே திருக்கூத்தின் செய்கையாகும். அத் திருமந்திரமே சிவன் திருமேனியாகும். 'எடுத்த பொற்பாதம்' இடப் பாலுள்ளது. அது நகரம்; வயிறு மகரம்; திருத்தோள் சிகரம்; திருமுகம் வகரம்; திருமுடி யகரம். உடுக்கையுள்ள திருக்கை வலப்பாலாகும். அது சிகரம்; நல்லுயிர் நாடும் திருவடியினைச் சுட்டிக்காட்டும் திருவருட் பகுதியாம் இடப்பால் திருக்கை வகரம்; வலப்பால் திரு அஞ்சலிக்கை யகரம்; மழுவேந்திய இடப்பால் திருக்கை நகரம்; ஊன்றிய வலப்பால் திருவடி மகரம். இம் முறையாகத் திருமேனியினைக் கீழிருந்து மேலும் மேலிருந்து கீழுமாக அடைவுபடுத்தித் திருவைந்தெழுத்தின் வைத்துக் காண்க. இனக்கோளாக திருவாசி ஓங்காரம் எனக் காண்க. உற்ற இத் திருவைந்தெழுத்தும் அன்பறிவாற்றல் இன்ப உடைமைகளின் எழிலாகவும் கொள்க. 'ஆடும்' 'சேர்க்கும்' 'ஓங்காரம்' என்னும் மூன்று வெண்பாவையும் ஓதிப் புகையொளி காட்டி வழிபடுக. குறிப்புரை: திருமந்திரம் - அழகிய அஞ்செழுத்து மந்திரம்.
திருமேனி தானே திருவரு ளாகுந் திருமேனி தானே திருஞான மாகுந் திருமேனி தானே சிவநேய மாகுந் திருமேனி தானே தெளிந்தார்க்குச் சித்தியே. பொருளுரை: மேலோதியவாறு அஞ்செழுத்தால் அமைந்த திருமேனியே திருவருளாகும். அத் திருமேனியே திருவடி யுணர்வாகும். அத் திருமேனியே அறியப்படும் சிவ உண்மையறிவு இன்ப வடிவாகும். திருவருளால் இவ் வுண்மையினைத் தெளிந்தார்க்கு அத் திருமேனியே திருவடிப் பேறாம் சித்தியாகும்.
சிவானந்தக் கூத்து தானந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல் தேனுந்தும் ஆனந்த மாநடங் கண்டீர் ஞானங் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கங்கு ஆனந்தக் கூத்தாட ஆடரங் கானதே. பொருளுரை: பொன்றும் தன்மையினை என்றும் எய்தாதது திருவருள். அத் திருவருள் எப்பொழுதும் ஒப்பிலா இன்பவடிவமாகவே யிருக்கும் அத் திருவருளின்மேல் திருவடிச் செந்தேன் முந்திப் பொழியும். அங்குச் சிவபெருமான் இன்பத் திருக்கூத்தியற்றியருளுகின்றனன். சுட்டுணர்வு சிற்றுணர்வு அவற்றான் அறியப்படும் பொருள்நிலை எல்லாங் கடந்த நிலை திருவருள் நிலையாகும். அந் நிலையின்கண் சிவபெருமான் திருக்கூத்தியற்றியருளுகின்றனன். அங்ஙனம் இயற்றியருளும் சிவன் திருப்பேர் நம்பி. அத்தகைய நம்பிக்கு அத் திருவருள் நிலையே ஆனந்தக் கூத்தாடற்குரிய ஆடரங்காகும். குறிப்புரை: தேன் உந்தும் - இன்பம் பிறக்கும். நம்பிக்கு - சிவபிரானுக்கு. ஆனந்தம் - ஆனந்த சத்தி.
ஆனந்தம் ஆடரங் கானந்தம் பாடல்கள் ஆனந்தம் பல்லியம் ஆனந்த வாச்சியம் ஆனந்த மாக அகில சராசரம் ஆனந்தம் ஆனந்தக் கூத்துகந் தானுக்கே. பொருளுரை: சிவபெருமான் ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்துதற் பொருட்டே திரு ஐந்தொழில் புரிந்தருள்கின்றனன். அதனால் எல்லாம் இன்பமயமேயாம். நோய்ப்பட்டார் நோய் நீங்கி நலமுற்ற காலத்து முன்நோய் நீங்குதற் பொருட்டு நிகழ்ந்த மருந்து மருத்துணா முதலிய அனைத்தும் இன்பத்திற்கு வாயில் என்னும் உண்மையினை உணர்வர். உணர்ந்ததும் அதனையும் இன்பமாகவே கருதுவர். இது போன்றதாகும் இறைவன் திருவருட் செயலும். அச் சிவன் ஆடும் அரங்கமும் இன்ப நிலையமாகும். ஆண்டு நிகழும் திருமுறைப் பாடல்களும் இன்பமேயாம். குடமுழா முதலிய பலவகை வாழ்த்தியங்களும் இன்பமேயாம். குழல் யாழ் போன்ற வாழ்த்தியங்களும் இன்பமேயாம். அனைத்து உலகத்திலுமுள்ள இயங்கு திணை நிலைத்திணைப் பொருள்கள் எல்லாமும் இன்புறுதற் பொருட்டே சிவபெருமான் திருக்கூத்தியற்றியருள்கின்றனன். அதனால் அவைகளும் நீங்கா இன்பம் உறுகின்றன. இன்பக் கூத்தினை இடையறாது உஞற்றி அதனால் கூத்துக்காணும் சிவபெருமானுக்கும் உகப்பே - உயர்நிலையே உண்டாகின்றது ஆயின் திருக்கூத்து எல்லார்க்கும் எவைக்கும் பேரின்பமேயாம். குறிப்புரை: பல்லியம் - பல இசை; கொட்டுக் கருவிகள். வாச்சியம் அபிநயம். அகில....னுக்கே - கூத்தப்பிரானுக்கு ஐந்தொழில் கூத்து. ஆனந்தமே என்னெனின், கேவல நிலையிலுள்ள ஆன்மாக்கள் முத்தி யெய்துவார்கள் என்று எண்ணியே.
ஒளியாம் பரமும் உளதாம் பரமும் அளியார் சிவகாமி யாகுஞ் சமயக் களியார் பரமுங் கருத்துறை யந்தத் தெளிவாஞ் சிவானந்த நட்டத்தின் சித்தியே. பொருளுரை: அறிவுப் பேரொளியாய் விளங்கும் முழுமுதலும், என்றும் மாறா உண்மையாகத் திகழும். முழுமுதலும், பேரருள் நிறைந்த சிவகாமியே யாகும். 'சிவகாமி' என்பது சிவனார் விழையும் விருப்பமே தன் விருப்பமாகக் கொண்டொழுகும் 'காமி' என்பதாம். நன்னெறிக்கண் நிற்பார்க்கு அளவிடப்படாத பேரின்பப் பெருவாழ்வை அருளிச் செய்யும் முழுமுதலும், பேரன்பர் திருவுள்ளத்தின்கண் வெளிப்பட்டிருந்தருளித் தெளிவினை நல்கும் முழுமுதலும் அச் சிவபெருமானே யாவன். இவையனைத்தும் ஆருயிர்கட்குக் கைவருவது அப் பெருமானார் செய்தருளும் திருக்கூத்தினைக் கண்டு கும்பிட்ட திருப்பேற்றின் பயனாலாகும். குறிப்புரை: ஒளியாம் பரம் - ஞானமாகிய பரம். உளதாம் பரம் - சத்தாகிய பரம். அளி - கருணை. சிவகாமி - சிவானந்த சத்தி. களியார் பரம் - ஆனந்தமாகிய பரம். நட்டத்தின் சித்தி - சிவானந்தக் கூத்தின் பயனும்.
ஆன நடமைந் தகள சகளத்தர் ஆன நடமாடி ஐங்கரு மத்தாக ஆன தொழிலரு ளாலைந் தொழிற்செய்தே தேன்மொழி பாகன் திருநட மாடுமே. பொருளுரை: தனக்கெனத் திருவுருவம் இல்லாத சிவபெருமான் ஆருயிர்களின் பொருட்டுத் திருவுருக் கொண்டருள்வன். அத் திருவுருவும் மாயாகாரியமாகிய நம்மனோர் பருவுருவம் போன்றதன்று. அவன் மேற்கொள்ளும் திருவுருவம் திருவருளிற் கொள்ளும் திருவுருவம் ஆகும். கல் முதலிய பொருள்களால் அமைக்கப்பட்ட திருவுருவம் நீரில் கலக்குங்கால் கரையாது வேறுபட்டு அடியிற் சென்று விளங்கித் தோன்றும். நனிமிக இனிக்கும் இனியதோர் கற்கண்டால் செய்த திருவுருவம் நீரிற் கரையுங்கால் வேறுபடாது ஒன்றாகிக் கரைந்துவிடும். அதுபோல் மாயாகாரிய வுருக்கள் திருவருள் வெளியில் ஒன்றாய்க் கரையாது வேறுபட்டு நிற்கும். அருளுரு அத் திருவருள் வெளியில் கரைந்து ஒன்றாகிவிடும். அவன் அருட்பெருங் கூத்தினை ஒருவாது இயற்றுகின்றனன். அதுவும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். அவன் திருவருளால் புரியும் திருத்தொழில்கள் ஐந்து. அவை முறையே, படைத்தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ப. அவன் தேன்போலும் இனிமையும் நன்மையும் கனிமையும் அமைந்த மொழிகளையுடைய அம்மையைச் செம்பாகமாகவுடைய திருவுருவினன். அவ் வுருவினைக் கொண்டே அவன் திருக்கூத்தியற்றுகின்றனன். குறிப்புரை: அகள சகளத்தர் - உருவம் இல்லாதவர் உருவத்தோடு கூடி, ஐங்கருமத்தாக - படைப்பாதி ஐந்து தொழில்களுக்காக. அருளால் - அருட்சத்தியைக்கொண்டு.
பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட தாகாண்ட மைங்கரு மத்தாண்ட தற்பரத்து ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே. பொருளுரை: அண்டங்கள் ஒன்பது வகைப்படும். அவை ஐம்பெரும் பூதங்களானாகிய அண்டமும், அவற்றின் வேறுபட்டவையாய்க் காணப்படும் பேத அண்டமும், ஆங்காங்கே இருவினைக் கீடாக இன்ப துன்பம் நுகரும் நுகர்வண்டமும், செறிவினர் சேர்ந்து பயன் துய்க்கும் யோக அண்டமும், இவை யனைத்தையும் பரவி மேலாக நிற்கும் மூதாண்டமும், திருவடிப் பேற்றின் சிறப்பினையருளும் முத்தாண்டமும். இத் திருவடிப்பேற்றின்கண் நீங்காப் பெரு விழைவு கொள்ளும் மோகாண்டமும், நுகர்வுக்குக் கருவியாம் தேகாண்டமும், நுகர்வின்மேன் மிகு விழைவாகிய வேட்கை கொள்ளும் தாகாண்டமும் என்பன. இவ் வண்டங்கள் அனைத்தையும் ஐம்பெரும் தொழிலால் ஆண்டுகொண்டருள்பவன் சிவன். அவனே முழுமுதல்வன். அவன் திருவடிக்கண் வேறற ஒற்றித்து நிற்பதே பிரமாண்டம் என்ப. பிரமாண்டம் - பெரும்பேருலகம்; சிவனார் - திருவண்டம். குறிப்புரை: பூதாண்ட பேதாண்ட - ஐம்பூதங்களால் ஆக்கப்பட்ட மாறுபட்ட வெவ்வேறு பல ஆயிர அண்டங்களும்.
வேதங்க ளாட மிகுஆ கமமாடக் கீதங்க ளாடக் கிளரண்டம் ஏழாடப் பூதங்க ளாடப் புவன முழுதாட நாதங்கொண் டாடினான் ஞானானந் தக்கூத்தே. பொருளுரை: வேதங்களாகிய மறைநூல்கள் தொழிற்பட என்பதே ஆட என்பதன் பொருளாகும். தொழிற்படுதலாவது உலகோர் ஓதியும் ஓதுவித்தும் அதன்படி ஒழுகலாற்றில் மேற்கொண்டொழுகி உய்யத் துணை நிற்பது. ஆடுதல் - பயன் கொள்ளுதல். உலகவொழுக்கினும் உயர்ந்தது சிவ வொழுக்கம் அதனால் மிகு ஆகமம் ஆட என்றருளினர். ஆகமம் - இறைநூல் வேதத்தை நெறி நூல் எனவும், ஆகமத்தைத் துறைநூல் எனவுங் கூறுப. கீதங்களாகிய பண் நூற்கள் ஆட, விளக்கமிகச் சொல்லப் பெறும் ஏழு அண்டங்களும் ஆட, ஐம்பெரும் பூதங்களும் ஆட, இருநூற்று இருபத்து நான்கு என்னும் எண்ணுட்பட்ட உலகங்கள் முழுவதும் ஆட முப்பத்தாறாம் மெய்யாகிய நாததத்துவத்தை இடனாகக் கொண்டு சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றனன். அத் திருக்கூத்தே உண்மையறிவின்ப ஒருபெருங் கூத்தாகும். ஆடுதல் - தொழிற்படுதல்; புடைபெயர்தல். குறிப்புரை: வேதங்கள் ஐந்தில் - அறம், பொருள், இன்பம், வீடு என நான்கும் ஆகம நூல்களும் சேர்ந்து. ஐந்து ஓதுங் கலை....சித்தனே - பேசப்படுகின்ற கலை, காலம், ஊழி, அண்டம், போதம் ஆக ஐந்திலும் ஆடும் சித்தன். மண்முதல். சிவஞானபோதம், . - . " அவனன்றி. தாயுமானவர், . எங்குநிறை, . " ஆட்டுவித்தால். அப்பர், . - . " ஆடுவாய். " . - .
பூதங்கள் ஐந்திற் பொறியிற் புலனைந்தில் வேதங்கள் ஐந்தின் மிகுமா கமந்தன்னில் ஓதுங் கலைகாலம் ஊழி யுடன்அண்டப் போதங்கள் ஐந்திற் புணர்ந்தாடுஞ் சித்தனே. பொருளுரை: புலன்நுகர்வினுக்கு இடமாகக் காணப்படும் ஐம்பெரும் பூதங்களிலும், புலனைக் கொள்ளும் ஐம்பொறிகளிலும், அப் பொறிகட்குப் பொருளாம் ஐம்புலன்களினும், நெறி நூலாம் வேதங்களினும், திருவைந்தெழுத்தின் சிரிப்பான் மிகுந்து சிவ வழிபாட்டினையே கிளர்ந்தெடுத்து ஓதும் துறை நூலாம் ஆகமங்களிலும் ஓதியொழுகும் ஏனைக் கலைகளிலும், காலத்திலும், ஊழியிலும், அண்டத்துணர்வாகிய ஐந்தினும் விழுமிய முழுமுதற் சிவபெருமான் வேறறப் புணர்ந்து திருக்கூத்தாடுவன். அவனே சித்தன் என்னும் செந்தமிழ்ச் சிறப்புத் திருப்பெயரினையுடையன்.
தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர் மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள் தாபதா சத்தர் சமயஞ் சராசரம் யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே. பொருளுரை: சிவபெருமான் எங்கணும் நீக்கமற நின்றருளும் சிறப்பினன். அதனால் எவ்வுயிரும் எப்பொருளும் புடைபெயர்வதானால் அவன் திருவுள்ளப் புடைபெயர்வின் திருக்குறிப்பானாகும். அதனால் எல்லாப் புடைபெயர்ச்சியும் அவன் புடைபெயர்ச்சியே எனக் கூறுவர். அதனையே அவன் ஆடல் எனவும் கூறுப. பிறப்புத் தேவரும், சிறப்புத் தேவராகிய சுரரும், நரரும், சித்தரும், வித்தியாதரரும், மூவர்களும், நால்வேறியற்கைப் பதினொரு மூவராகிய முப்பத்து மூவர்களும், தாபதரும், எழுமுனிவரும், சமயத்தாரும், இயங்குதிணைப் பொருள், நிலைத்திணைப் பொருள் ஆகிய அனைத்தும் சிவபெருமான் ஆட ஆடும். பிறப்புத் தேவர் - வானுலகத்தே இயற்கைப் பிறப்பெய்தியவர். சிறப்புத் தேவர் நிலத்திற் பிறந்து புண்ணியப் பேற்றால் தேவராய்ச் சிறப்புற்றவர். நரர் - மக்கள். முப்பத்து மூவர் ஆதித்தர் பன்னிருவர். உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்துவர் இருவர். தாபதர் - முனிவர். சமயம் சமயத்தோர். நால் வேறியற்கை - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள், மருத்துவர் என்னும் நால்வகை இயற்பிரிவு. குறிப்புரை: தேவாசுரர் - தேவர்களும் அசுரர்களும். சித்தர் - வாமிகள்.
சுந்தரக் கூத்து அண்டங்கள் ஏழினுக் கப்புறத் தப்பாலும் உண்டென்ற சத்தி சதாசிவத் துச்சிமேற் கண்டங் கரியான் கருணை திருவுருக் கொண்டங் குமைகாணக் கூத்துகந் தானன்றே. பொருளுரை: ஏழண்டங்கட்கு அப்பாலும் அதற்கப்பாலும் உண்டு என்று ஓதப்படும் சத்தியாகிய திருவருள், அருளோன் என்று சொல்லப்படும் சதாசிவ தத்துவத்துச்சியின்மேற் கண்டங்கரியதாய் அருளே திருவுருவாய் நின்று உமையம்மையார் கண்டுகளிக்கத் திருக்கூத்தி யற்றும். சிவபெருமான் செய்யும் செயல் அனைத்தும் சிவசத்தியின் செயலே. அதனால் திருவருள் கூத்தியற்றும் என ஓதினர். குறிப்புரை: சதாசிவத்துக்கு - சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவத்தின் தலையில். மனத்தகத்தான். அப்பர், . - .