செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப் பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். குறிப்புரை: துகள்தீர் பெரு செல்வம் - குற்றமற்ற சிறந்த செல்வம், தோன்றியக்கால் - உண்டானால், தொட்டு - அது தொடங்கி, பகடு நடந்த கூழ் - ஏர் நடந்ததனால் உண்டான உணவை, பல்லாரோடு உண்க - விருந்தினர் முதலிய பலரோடுங் கூடி உண்ணுக, ஏனென்றால் ; செல்வம் - பொருள், அகடு உற யார்மாட்டும் நில்லாது - உறுதி பொருந்த யாரிடத்திலும் நிலைத்திராமல் , சகடக்கால் போலவரும் - வண்டியுருளைபோல மாறிப் புரளும். கருத்து: செல்வம் யாரிடத்திலும் நிலைத்திராமையால், அது தோன்றினால் உடனே பலர்க்கும் அளித்துப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விளக்கம்: பொருள் நல்ல வழியில் வரவேண்டும் என்பது தோன்றத் ‘துகள் தீர்' என்றும், செல்வம் தோன்றுவது உறுதியன்று என்பது தோன்றத் ‘தோன்றியக்கால்' என்றுங் கூறினார். பெருஞ்செல்வம் என்பது இங்கே மேன்மையான செல்வம் ; வேளாண்மையால் வருகின்ற செல்வமே பெருஞ்செல்வம் என்பது குறிப்பு. தோன்றியக்கால் ஒற்று மிகுந்தமையால் வினையெச்சமாகப் பொருள் கொள்ளப்படும். பகடு - கடா ; இங்கே அது பூட்டிய ஏர். நடந்த என்னும் பெயரெச்சம் காரணப்பொருளில் வந்தது ; ஆகவே, ‘நடந்ததனால் உண்டான' என்று உரைத்துக் கொள்ள வேண்டும். பல்லார், பல பிரிவினர் என்பது காட்டும் ; அவர் விருந்தினர், சுற்றத்தார், நண்பர் முதலியோர், அகடு - உறுதி. யார்மாட்டும் என்றது. எவ்வளவு விழிப்புடையவரிடத்தும் என்பது. நில்லாது - நில்லாமல், வரும் - கை மாறி மாறி வரும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை வினைஉலப்ப வேறாகி வீழ்வர்தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள. குறிப்புரை: யானை எருத்தம் பொலிய - யானையின் கழுத்து விளங்கும்படி, குடை நிழல் கீழ் - குடை நிழலில சேனைத் தலைவராய் - பல சேனைகட்குத் தலைவராக, சென்றோரும் - ஆரவாரமாய் உலாச்சென்ற அரசர்களும், ஏனைவினை உலப்ப - மற்றத் தீவினை கெடுக்க அதனால், தாம் கொண்ட மனையாளை மாற்றார் கொள - தாம் திருமணஞ் செய்துகொண்ட மனைவியையும் பகைவர்கள் கவர்ந்து கொள்ளும்படி, வேறு ஆகி வீழ்வர் - முன் நிலைக்கு வேறான வறுமையாளராகி நிலைகுலைவர். கருத்து: அரசரும் வறியராவர். விளக்கம்: இவர் ஏறியதனால் யானையின் கழுத்துக்கு அழகு உண்டாயிற்று என்று குறிப்பதனால் இவரது பெருமை சிறப்பிக்கப்பட்டது. ‘நிழற் கீழ்' என்பதிற் ‘கீழ்' ஏழாவதன் உருபு. ஏனை வினை - மற்றை வினை ; அது தீவினை என்னுங் குறிப்பில் வந்தது. ‘உலப்ப' என்னும் வினையெச்சம் காரணப் பொருளுள்ளது. மனையாளையும் என்று உம்மை விரித்துக் கொள்வது சிறப்பு. யானை யெருத்தத்திற் சென்றோரும் இங்ஙனம் நிலைகுலைவர் என்றமையால் ஏனையோர் நிலைகுலைதல் சொல்லாமலே பெறப்படும். தம் மனையாளைப் பிறர் கவர்ந்து கொள்ளுதலைவிட இழிவானதொன்று வேறின்மையின், அடியோடு ஆற்றலைக் கெடுத்துவிட்ட வறுமையின் பெருங் கொடுமைக்கு அதனை எடுத்துக்காட்டினர்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: நின்றன நின்றன நில்லா எனவுணர்ந் தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க; சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன் வந்தது வந்தது கூற்று. குறிப்புரை: வாழ்நாள் - உடம்போடு கூடிவாழுமாறு ஏற்பட்ட நாட்கள், சென்றன சென்றன - செல்கின்றன செல்கின்றன; கூற்று - நமன், செறுத்து உடன் வந்தது வந்தது - சினந்து விரைந்து வருகின்றான் வருகின்றான் ; ஆதலால் ; நின்றன நின்றன - நிலைபெற்றன நிலைபெற்றனவென்று நினைத்துக்கொள்ளப்பட்ட செல்வப் பொருள்கள், நில்லா என - நிலைபெறா என்று, உணர்ந்து - தெரிந்து, ஒன்றின ஒன்றின - இசைந்தன இசைந்தனவாகிய அறங்கைள, செயின் - செய்யக் கருதுவீர்களானால், வல்லே செய்க - விரைந்து செய்வீர்களாக. கருத்து: வாழ்நாள் கழிந்துகொண்டே யிருத்தலால் நிலையில்லாத செல்வப் பொருள்கள் கொண்டு உடனே அறம் செய்யவேண்டும். விளக்கம்: ஒல்லும் அளவு அறஞ் செய்க என்றற்கு, ‘ஒன்றின ஒன்றின செய்க' எனவும், செய்தலின் அருமை தோன்றச் ‘செயின்' எனவுங் கூறினார். ‘செல்கின்றன' என்னுங் கருத்து விரைவு பற்றிச் 'சென்றன' என்றும், ‘வரும்', என்னுங் கருத்துத் துணிவு பற்றி ‘வந்தது' என்றுஞ் சொல்லப்பட்டன. முதல் இரண்டு அடுக்குகள் பன்மையும், பின் இரண்டு அடுக்குகள் அவலமும் உணர்த்தும், "கூற்று - வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள் வகையாற் கூறுபடுத்தும் கடவுள் " என்னும் நச்சினார்க்கினியருரை இங்கே நினைவு கூரற்பாலது. தொல், புறத்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: என்னாலும் ஒன்றுதம் கையுறப் பெற்றக்கால் பின்னாவ தென்று பிடித்திரா - முன்னே கொடுத்தார் உயப்போவர் கோடில்தீக் கூற்றம் தொடுத்தாறு செல்லும் சுரம். குறிப்புரை: என் ஆனும் ஒன்று - யாதாயினும் ஒரு பொருளை, தம் கை உற பெற்றக்கால் - தமது கையில் கிடைக்கும்படி பெறுவராயின், பின் ஆவது என்று - மூப்புக் காலத்தில் பயன்படுவதென்று, பிடித்து இரா - இறுகப் பிடித்துக்கொண்டு சும்மா இராமல், முன்னே கொடுத்தார் - இளமையிலேயே அறஞ்செய்தவர், கோடு இல் தீக் கூற்றம் - நடுவுநிலைமையுள்ள அருளில்லாத கூற்றுவன், தொடுத்து செல்லும் சுரம் ஆறு - கயிற்றாற் கட்டிக் கொண்டுபோகின்ற காட்டு வழியை, உய்ய போவர் - தப்பிப் புண்ணிய உலகம் புகுவார். கருத்து: இளமையிலேயே அறஞ் செய்தவர் புண்ணிய உலகம் புகுவர். விளக்கம்: சிறிது கிடைத்தாலும் அறஞ் செய்க என்பதற்கு ‘என்னாலும்' என்றார். பொருள் கிடைப்பதன் அருமை நோக்கிப் ‘பெற்றக்கால்' என்றார். கிடைப்பது அங்ஙனம் அருமையாயிருத்தலின், கிடைத்த உடனே அறத்திற் செலவிடுக என்பது கருத்து. பிடித்திருத்தல், தாமும் உண்ணாது இறுக்கஞ் செய்து கொண்டிருத்தல். ‘முன்னே ' என்பது முதற்காலத்திலேயே என்னுங் கருத்தில் வந்தது ; அஃதாவது, பெற்ற உடனே என்பது ; கோடு இல் - கோணுதல் இல்லாத, நடுவு நிலைமையுள்ள அறஞ்செய்வார் கூற்றுவனுலகுக்குச் செல்லும் வழி தப்பிப் புண்ணியவுலகுக்குப் போவர் என்பது பின் இரண்டடிகளின் பொருள்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக் கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத் தழீஇம் தழீஇம் தண்ணம் படும். குறிப்புரை: இழைத்த நாள் எல்லை இகவா - உடலோடு கூடிவாழ அளவு செய்துள்ள நாள்கள் தம் அளவைக் கடவா ; பிழைத்து ஒரீஇ - அந்த அளவில் தவறி நீங்கி ; கூற்றம் குதித்து உய்ந்தார் - கூற்றுவனிடத்தினின்றும் அப்புறப்பட்டு உயிர்பிழைத்திருப்பவர் ; ஈங்கு இல்லை - இவ்வுலகத்தில் இல்லை ; நாளை - நாளையொருகால், தண்ணம் தழீஇம் தழீஇம் படும் - சாவுப்றை தழீஇம் தழீஇம் என்று ஒலிக்கும் ; ஆதலால், பெரும் பொருள் ஆற்ற வைத்தீர் - பெருமையைத் தருவதாகிய பொருளை மிகுதியாக வைத்துள்ள செல்வர்களே ! வழங்குமின் - உடனே அப்பொருளைப் பிறர்க்கு உதவுங்கள். கருத்து: குறித்த ஆயுளுக்குமேல் யாரும் உயிர் வாழ்தல் கூடாமையின் , உடனே அறஞ்செய்து நலம்பெறுதல் வேண்டும். விளக்கம்: இழைத்த - உண்டாக்கிய ; வைத்தீர், இங்கே பெயர். தழீஇம் தழீஇம் என்பது ஒலிக்குறிப்பு. படும் - ஒலிக்கும் ; இறப்பு நேரும் என்றற்குத் ‘தண்ணம் படும்' என்றார். தமக்கு வேண்டிய அளவுக்குமேற் பொருள் படைத்திருப்பவர், அங்ஙனம் மேற்பட்ட பொருளைப் பிறர்க்கு வழங்குங் கட்டாயமுடைய ராதலின், இச்செய்யுள் அவரை நோக்கிற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும் கூற்றம் அளந்துநும் நாளுண்ணும் ; ஆற்ற அறஞ்செய் தருளுடையீர் ஆகுமின் ; யாரும் பிறந்தும் பிறவாதா ரில். குறிப்புரை: கூற்றம் - யமன், தோற்றம் சால்ஞாயிறு, காலையில் தோன்றுதல் பொருந்திய பகலவனை, நாழி ஆக - நாழி என்னும் அளவுகருவியாகக்கொண்டு, நும் நாள் வைகலும் அளந்து உண்ணும் - உம் வாழ்நாளாகிய தானியத்தை நாள்தோறும் அளவு செய்து உண்ணுவான் ; ஆதலால் ; ஆற்ற அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் - மிகுதியாகப் பிறர்க்கு உதவி செய்து உயிர்களிடத்தில் அருளுடையீராகுக, யாரும் - அங்ஙனம் ஆகாதவர் யாரும், பிறந்தும் பிறவாதாரில் - பிறவியெடுத்தும் பிறவாதவரிற் சேர்ந்தவரே யாவர். கருத்து: அருளுடையராதலே பிறவியின் பயனாதலால், அறஞ்செய்து அருளுடையராகுக. விளக்கம்: ஞாயிறு தோன்றுதலும் மறைதலுமே ஒரு நாளுக்கு அடையாளமாதலால், அது ‘தோற்றம் சால்' என்னும் அடைமொழி கொடுத்து, அளவு கருவியாக உருவகஞ் செய்யப்பட்டது. பகலவனை நாழியாகக் கொண்டமையால் , கூற்றுவன் உண்ணுவதற்கு, நாள் தானியமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒறுக்குங்' குறிப்புத் தோன்ற, ‘உண்ணும்' என்றார், ‘பிறவாதாரில் ' என்பதன் பின் ஒரு சொல் வருவித்துக் கொள்க. உயிர் அருள்வடிவாகுமளவும் அறஞ்செய்து கொண்டேயிருக்க என்றற்கு ‘ஆற்ற அறஞ்செய்து' எனப்பட்டது. "அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாஞ் செயல்" என்பதனாலும் இக்கருத்து அறிந்துகொள்ளப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: செல்வர்யாம் என்றுதாம் செல்வுழி எண்ணாத புல்லறி வாளர் பெருஞ்செல்வம் - எல்லில் கருங்கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி மருங்கறக் கெட்டு விடும். குறிப்புரை: செல்வர் யாம் என்று - நாம் செல்வமுடையோம் என்று களித்து, தாம் செல் உழி எண்ணாத - தாம் இனிச் செல்லவிருக்கும் மறுமையுலகத்தை நினையாத, புல் அறிவாளர் பெரு செல்வம் - சிறிய அறிவுடையவரது மிக்க செல்வம், எல்லில் - இரவில், கரு கொண்மூ வாய்திறந்த மின்னுப்போல் தோன்றி - கரியமேகம் வாய் திறந்ததனாலுண்டான மின்னலைப்போலச் சிறிதுகாலந் தோன்றி நின்று, மருங்கு அற கெட்டுவிடும் - இருந்த இடமும் தோன்றாமல் அழிந்துபோம். கருத்து: மறுமையுலகத்தை எண்ணி வாழாதவர்களுடைய செல்வம், மின்னலைப்போல தோன்றி அழியும். விளக்கம்: செல்உழி - செல்லும் இடம் ; இங்கே மறுமை குறித்து நின்றது. செல்லுழி என்பது ‘செல்வுழி ' என மருவி முடிந்தது ; "எல்லா மொழிக்கும்" என்னுந் தொல்காப்பிய நூற்பாவின் நச்சினார்க்கினியருரை கருதுக. அறியாமையில் மிளிருஞ் செல்வமாதலின், இருளில் ஒளிரும் மின் உவமையாயிற்று. கொண்மூ நீரைக்கொள்வது என்னுங காரணப் பெயர். மின்னு ; மின்னுதல் என்னுந் தொழிற் பெயரில் வந்தமையின் அப்பொருள் தோன்ற உகரச்சாரியை பெற்று, அதுவே பின் தொழிலாகு பெயராயிற்று. மருங்கும் என எச்சவும்மை கொள்க. செல்வம் இயல்பாகவே நிலையாமை யுடையதாயினும் அது மின்னலைப்போல் அத்தனை விரைவில் அழிந்து போதற்குக் காரணம், ‘செல்வர் யாம் ' என்னுஞ் செருக்கும் , அச்செருக்கினால் மறுமையைப் பொருள் செய்து வாழாத தாறுமாறான வாழ்க்கைநிலையும் முதலாயின வென்பது இச் செய்யுட் குறிப்பு .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: உண்ணான் ஒளிநிறான் ஓங்கு புகழ்செய்யான் துன்னருங் கேளிர் துயர்களையான் - கொன்னே வழங்கான் பொருள்காத் திரும்பானேல், அ ஆ இழந்தானஎன் றெண்ணப் படும். குறிப்புரை: உண்ணான் - இன்றியமையாத உணவுகளை உண்ணாமலும், ஒளி நிறான் - மதிப்பை நிலைக்கச் செய்யாமலும், ஓங்கு புகழ் செய்யான் - பெருகுகின்ற உரையும் பாட்டுமாகிய புகழைச் செய்துகொள்ளாமலும், துன் அருகேளிர் துயர் களையான் - நெருங்கிய பெறுதலரிய உறவினரின் துன்பங்களை நீக்காமலும், வழங்கான் - இரப்பவர்க்கு உதவாமலும், கொன்னே பொருள் காத்திருப்பானேல் - ஒருவன் வீணாகச் செல்வப் பொருளைக் காத்துக்கொண்டிருப்பானாயின், அ ஆ இழந்தான் என்று - ஐயோ அவன் அப்பொருளை இழந்தவனேயென்று, எண்ணப்படும் - கருதப்படுவான். கருத்து: ஒரு செல்வன், தனது செல்வத்தை அறவழிகளிற் செலவு செய்யாதிருந்தால் அவன் அதனை இழந்தவனாகவே கருதப்படுவான். விளக்கம்: ஒளி - மதிப்பு ; "ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை" என்னுமிடத்து, ‘ஒளி - மிக்குத் தோன்றுதலுடைமை' என்பர் பரிமேலழகர் . உண்ணான் முதலியன முற்றெச்சம். ‘கொன்னே காத்திருப்பானேல்' என்று சேர்த்துக்கொள்க. அ ஆ: இரக்கக் குறிப்பு . செல்வம்தான் இறக்குமளவும் அழியாமலிந்தாலும் அதனாற்கொண்ட பயன் யாதொன்று மில்லாமையின், அவன் உடையவனா யினும் இழந்தவனே என்றார். செல்வத்தைச் செலவு செய்தற்குரிய துறைகள் பலவும் இச்செய்யுள் எடுத்துக் காட்டினமை நினைவிருத்துதற்குரியது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும் கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட ! உய்த்தீட்டும் தேனீக் கரி. குறிப்புரை: வான் தோய் - வானத்தைப் பொருந்துகின்ற, மலைநாட - மலைநாட்டுத் தலைவனே ! உடாதும் - நல்ல ஆடைகள் உடுக்காமலும், உண்ணாதும் - உணவுகள் உண்ணாமலும், தம் உடம்பு செற்றும் - தம் உடம்பை வருத்தியும் ; கெடாத நல் அறமும் செய்யார் - அழியாத சிறந்த புண்ணியமுஞ் செய்யாமலும், கொடாது - வறிய வர்க்குக் கொடாமலும், ஈட்டி வைத்தார் - பொருளைத் தொகுத்து வைத்தவர்கள், இழப்பர் - அதனை இழந்து விடுவர், உய்த்து ஈட்டும் தேன் ஈ- பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்கள், கரி - அதற்குச் சான்று. கருத்து: அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப்போல அப்பொருளை இழந்துவிடுவர். விளக்கம்: கள்ளர் பகைவர் முதலியோராற் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து; அதன் பொருட்டே, கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந் தேனீ உவமையாயிற்று. உடாமையும் உண்ணாமையுங் காரணமாக நோய் முதலியவற்றை உண்டாக்கித் தம் உடம்பை வருத்திக்கோடலின், ‘தம் உடம்பு செற்றும்' என்றார். துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோவெனின் அதுவுமின்றென்றற்குக். ‘கெடாதநல் அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற் கூறினார். மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள் அமைந்தது. இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: நரைவரும் என்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் ; - புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி இன்னாங் கெழுந்திருப் பார். குறிப்புரை: நல் அறிவாளர் - பழுதற்ற அறிவினையுடையோர், நரை வரும் என்று எண்ணி - மூப்பு வருமென்று கருதி, குழவியிடத்தே துறந்தார் - இளமையிலேயே பற்றுள்ளத்தை விட்டார், புரைதீரா மன்னா இளமை மகிழ்ந்தாரே - குற்றம் நீங்குதலில்லாத நிலையில்லாத இளமைக் காலத்தை அறவழியிற் பயன்படுத்தாமல் நுகர்ந்து களித்தவர்களே, கோல் ஊன்றி இன்னாங்கு எழுந்திருப்பார் - மூப்பு வந்து கையிற் கோல் ஒன்று ஊன்றித் துன்பத்தோடு எழுந்து தள்ளாடுவார்கள். கருத்து: இளமைப் பருவத்தை அறவழியிற் பயன் படுத்தாமல் நுகர்ந்து மயங்கியவர்கள், பின்பு மூப்பினால் வருந்துவார்கள். விளக்கம்: ‘நரை' மூப்புப் பருவமும், ‘குழவி' இளமைப் பருவமும் உணர்த்துங் குறிப்பில் வந்தன. துறத்தல் - பற்றுள்ளம் விடுதல். ‘புரை தீரா' ‘மன்னா' இரண்டும் இளமைக்கு அடைமொழிகள். மகிழ்தல் - இங்கு நுகர்தல ; இளமையை அறஞ்செய்தற்குக் கருவியாகக் கொள்ளாமல் , அதனையே துய்க்கும் பொருளாகக்கொண்டு இன்புறுதல் பிழை என்றபடி. நல்லறிவாளர் துறந்தார் எனவே, இளமை மகிழ்ந்தார் புல்லறிவாளர் என்பது பெறப்படும் . ‘பட்டாங்கு' என்பதுபோல, ‘இன்னாங்கு' என்பதும் ஒரு சொல். பற்றுள்ளம் விட்டு எம்முயற்சியையும் இளமையிலேயே செய்க என்பது பொருள். அங்ஙனம் செய்தார்க்கு, மூப்பும் வராது ; வரினும் இன்னல் செய்யாது என்பது உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: நட்புநார் அற்றன நல்லாரும் அஃகினார் அற்புத் தளையும் அவிழ்ந்தன ;- உட்காணாய் ; வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி. குறிப்புரை: நட்பு நார் அற்றன - நேயமும் கயிறு அறுந்தன ; நல்லாரும் அஃகினார் - சான்றோரும் அணுக்கங் குறைந்தனர், அன்பு தளையும் அவிழ்ந்தன - பொது மக்களிடம் உண்டான அன்பு என்னுங் கட்டும் நெகிழ்ந்தன, உள் காணாய் - அகமாக எண்ணிப் பார், வாழ்தலின் ஊதியம் என் உண்டு - இளமையை மகிழ்ந்து வாழ்தலினால் பயன் என்ன உண்டு, ஆழ்கலத்து அன்ன கலி வந்தது - கடலில் மூழ்கிவிடுகின்ற மரக்கலத்தை ஒத்த துன்பம் இதோ வருகின்றது. கருத்து: இளமையையே பொருள் செய்து வாழ்வதனால், நண்பர் சான்றோர் பொதுமக்கள் முதலியோரது தொடர்பு குறைந்து வாழ்நாளுங் கெடும். விளக்கம்: அற்றன அவிழ்ந்தன என்று பன்மையாக வந்தமையால், நட்புகள் அன்புகள் என்று அவ்வினைகளின் வினைமுதல்களையும் பன்மையாகக் கொள்க ; பலராற் பலவகையாகக் கொள்ளப்படுதலால் அவை பன்மையாயின. அன்பு என்றது, அற்பு என்றாயிற்று ! இடையிலுள்ள எழுத்து வலித்தது. இளமையைப் பொருளாக நினைத்துப் பற்றுள்ளத்தோடு உயிர் வாழ்ந்தமையால், நண்பர் முதலியோர் அற்றனர். இங்ஙனம் நட்பு முதலியன அகல ஒருவன் உயிர் வாழ்தலால் உண்டான பயன்றானும் ஏதுமில்லை. கடலுள் மரக்கலம் ஆழ்ந்தாற்போல இவ்வுடம்பு திடுமெனக் கூற்றுவன்வாய் அழிவதுதான் அதனாற் கண்ட பயன் என்றற்கு ‘வாழ்தலின் ஊதியம் என்னுண்டாம் ? வந்ததே ஆழ்கலத் தன்ன கலி ' என்றார். வந்தது என இறந்த காலத்தால் நின்றது, விரைவில் துணிவுப் பொருட்டு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: சொல்தளர்ந்து கோல்ஊன்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று பண்டம் பழிகாறும் - இல்செறிந்து காம நெறிபடருங் கண்ணினார்க் கில்லையே ஏம நெறிபடரு மாறு. குறிப்புரை: சொல் தளர்ந்து - பேச்சின் வலி குறைந்து, கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய் - கையிற் கோல் ஊன்றித் தள்ளாடிய நடையை உடையவராய், பல் கழன்று - பற்கள் உதிர்ந்து, பண்டம் பழிகாறும் - இவ்வுடம்பாகிய பண்டம் பழிக்கப்படுமளவும், இல் செறிந்து காமநெறி படரும் கண்ணினார்க்கு - மனைவியோடு பற்றுக் கொண்டிருந்து காமவழியிற் செல்லும் சிற்றறிவுடையாருக்கு, ஏமம் நெறி படரும் ஆறு - மெய்யின்ப நெறியில் செல்லும் வகை, இல்லையே - உண்டாவதில்லை. கருத்து: வாழ்நாளளவுங் காம நோக்கமுடையவர் பேரின்ப நெறி செல்லுதல் இல்லை. விளக்கம்: பண்டம் - பொருள் ; இங்கே உடம்புக்கு வந்தது. உயிரிருந்தும் உயிர்க்குரிய அறவினைகட்குப் பயன்படாமையால் உயிரில்லாததுபோல இழிவாக்கிப் பண்டம் என்றார். அது பழிக்கப்படுதலாவது இறக்குமுன் நெடுங்காலம் நோய் முதலியன கொண்டு பிறரால் இழித்துக் கூறப்படுதல். ‘பண்டம் பழிகாறும்' என்றது , சாகு மளவும் என்னும் குறிப்பின்மேல் நின்றது. மனைவியின்பால் அறிவான் அன்புறாமற் காமத்தான் பற்றுக்கொள்ள லென்பது, ‘செறிந்து' என்பதன் குறிப்பினாற் பெறப்படும். இல்லையே என்னும் ஏகாரம் இரக்கப் பொருட்டு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா இறக்கும் இவள்மாட்டும் - காழ்இலா மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகும் தன்கைக்கோல் அம்மனைக்கோல் ஆகிய ஞான்று. குறிப்புரை: தாழா - முதுகு தாழ்ந்து , தளரா - உடம்பின் கட்டுத் தளர்ந்து, தலை நடுங்கா - தலை நடுங்கி, தண்டு ஊன்றா - கையில் தடி ஊன்றி, வீழா - விழுந்து, இறக்கும் - இறக்கப்போகும் மூப்பு நிலையிலுள்ள, இவள் மாட்டும் - இத்தகைய ஒருத்தியிடத்தும், காழ் இலா - உறுதியான அறிவில்லாத, மம்மர்கொள் மாந்தர்க்கு - காம மயக்கத்தைக் கொள்ளுகின்ற மக்களுக்கு, தன் கைக்கோல் - அவள் இப்போது பிடித்திருக்கும் கையின் ஊன்றுகோல், அம்மனைக்கோல் ஆகிய ஞான்று - அவள் தாயின் கைக் கோலாயிருந்த காலத்தில், அணங்கு ஆகும் - வருத்துகின்ற காமத் தன்மையையுடைய அழகுருவம் இருந்திருக்கும். கருத்து: முன்பு, கண்டோரைப் பிணிக்கும் அழகுருவோடு திகழ்ந்த மகளிர் பின்பு உடம்பு கூனித் தலைநடுங்குகின்ற இரங்கத்தக்க மூப்பு நிலையை அடையக் காண்டலின் இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து அதனால் அறச்செயல்களைக் கைநழுவ விடுதலாகாது. விளக்கம்: முதுகு வளைந்து கூன் அடைந்து என்றதற்குத் தாழா எனப்பட்டது. ‘இவள் மாட்டும்' என்னும் உம்மை இழிவு சிறப்பொடு எச்சமும் உணர்த்திற்று. காழ் - உரம் ; இங்கே அறிவு உரம். அணங்கு - வருத்தும் அழகுருவம் ; பரிமேலழகர், "அணங்கு காமநெறியான் உயிர் கொள்ளுந் தெய்வமகள்"என்றதும் இப்பொருட்டு. அணங்கா யிருந்திருக்கும் என்னும் பொருளில் "அணங்காகும் " என வந்தது. இப்போது மூத்திருக்கும் இவள் கையின் கோல் இவள் தாயின் கையில் ஊன்றுகோலாயிருந்த போது இவள் இளமையுடையவளாய் இருந்திருப்பாள் என்பது குறிக்கத் ‘தன்கைக்கோல் அம்மனைக் கோலாகிய ஞான்று' எனப்பட்டது. இவள் இளமைக் காலத்தில் என்று குறித்தற்கு இங்ஙனம் வந்தது ; ஈதுகாண் உலகியல்பு என்று அறிவுறுத்துதற்கு. இது மேற் செய்யுளாலும் உணரப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: எனக்குத்தாய் ஆகியாள் என்னைஈங் கிட்டுத் தனக்குத்தாய் நாடியே சென்றாள் ;- தனக்குத்தாய் ஆகி யவளும் அதுவானால் தாய்த்தாய்க்கொண் டேகும் அளித்திவ் வுலகு. குறிப்புரை: எனக்குத் தாய் ஆகியாள் - எனக்குத் தாயாயிருந்தவள், என்னை ஈங்கு இட்டு - என்னை இவ்வுலகத்தில் விட்டுவிட்டு, தனக்குத் தாய் நாடி - தனக்குத் தாய் விரும்பி, சென்றாள் - இறந்துபோனாள் ; தனக்குத் தாய் ஆகியவளும் - அப்படிப் போன அவளுக்குத் தாயாக நேர்ந்தவளும், அது ஆனால் - அவ்வாறே போனால், தாய் தாய்க்கொண்டு - ஒரு தாய் தனக்குத் தாயைத் தாவிக்கொண்டு , ஏகும் அளித்து இவ்வுலகு - போகின்ற எளிமையையுடையது இந்த உலகம் என்க. கருத்து: இன்று இளையராயிருப்பவர் நாளை மூத்து இறந்துபோதலே இயல்பாதலால், இளமை நிலையாதென்பது திண்ணம். விளக்கம்: ‘இட்டு' என்னுஞ் சொல், ‘என்னை இங்கே பெற்றெடுத்து விட்டுத் தன்னை ஒருத்தி பெற்றெடுக்கு மாறு பிரிந்தாள்' என்னுங் குறிப்பின் உறுப்பாய் நின்றது. ஏஇசைநிறை. தாய்க்கொண்டு - தாவிக்கொண்டு. இயல்பாயிருத்தலின், உலகுக்கு எளிமை கூறினார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: வெறியயர் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்கண் இல். குறிப்புரை: வெறி அயர் வெம் களத்து - வெறியாடு தலைச் செய்கின்ற கொடிய பலிக்களத்தில், வேல்மகன் பாணி - வெறியாடுவோனுடைய கைகளிற் கட்டியுள்ள, முறி ஆர் நறு கண்ணி - தளிர்கள் இடையிடையே பொருந்திய மணமமைந்த மலர்மாலை, முன்னர் தயங்க - தன்னெதிரில் விளங்கா நிற்க, மறி - அதைக் கண்ட பலி ஆடு, குளகு உண்டு அன்ன - அதிலுள்ள தளிரைத் தனக்கு உணவாக உண்டு மகிழ்ந்தாற் போன்ற. மன்னா மகிழ்ச்சி - இளமையால் வரும் நிலையா மகிழ்ச்சி, அறிவுடையாளர்கண் இல் -அறிவுடையாரிடத்தில் இல்லை. கருத்து: அறிவுடையவர்கள், இளமை யெழுச்சிகளை அறவினைகட்கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரே யல்லால் அவற்றை நுகர்ந்து களியார். விளக்கம்: வெறி - தெய்வமேறி யாடுந் தன்மை ; அயர்தல் - அதனைச் செய்தல் ; பலியிடுதலின், கொடிய களமாயிற்று. வேலைத் தன்கையில் அடையாளமாகப் பிடித்துக் கொண்டு ஆடும் மகனாதலில். வெறியாட்டாளன் ‘வேல மகன்' எனப்பட்டான் ; வேலன் என்று கூறுதலும் உண்டு; இது குறிஞ்சி நிலத்து வழக்கம் ; அங்கே முருகன் தெய்வமாகலின் இங்ஙனமாயிற்று. பூக்களுடன் இடையிடையே இலைகளும் இட்டு மாலை தொடுப்பராகலின், ‘முறி ஆர் நறுங்கண்ணி ' எனப்பட்டது. குளகு - தழையுணவு. பலிக்கடா, தான் கொலையுறுதற்கு அடையாளமாயுள்ள வேலன் கை மாலைக்கு அஞ்சாமல். அறியாமையால் அதிலுள்ள தழையைத் தனக்கு உணவாகக் கருதி உண்டு' சின்னேர இன்பம் நுகர்ந்தது ; அறிந்தோர்க்கு அச்செயல் ஏழைமையுடையதாய்த் தோன்றும். இளமையெழுச்சிகளின் மயங்கி, ‘மற்றறிவாம் நல்வினை யாம் இளையம்' என்று மக்கள் ஒழுகுதலும் அத்தகையதேயாம் பின்வரும் பேரிடையூறு கருதாமற் சிறிதின்ப நுகர்வுக்காக அறவினைகள் கைவிட்டு நிற்றல் தவறென்பது உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம் கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும் வேல்கண்ணள் என்றிவளை வெஃகன்மின் மற்றிவளும் கோல்கண்ண ளாகும் குனிந்து. குறிப்புரை: இளமை - இளமைப் பருவம், பனி படு சோலை பயன் மரம் எல்லாம் - குளிர்ச்சி பொருந்திய சோலையிலுள்ள பயன் தரும் மரங்களெல்லாவற்றினின்றும், கனி உதிர்ந்து வீழ்ந்து அற்று - பழங்க ளுதிர்ந்து வீழ்ந்தாற்போலுந் தன்மையது ; இவளும் குனிந்து - இவ்விளமையுடையவளும் ஒரு காலத்திற் கூனாகி, கோல் கண்ணள் ஆகும் - வழிதெரிந்து நடப்பதற்கு ஊன்று கோலையே கண்ணாக உடையவளாவள். ஆதலால் ; வேல் கண்ணள் என்று - இப்பொழுது வேல்போலுங் கண்ணுடையாளென்று, இவளை - இந்த இளந்தன்மையாளை. நனி பெரிதும் வெஃகன்மின் - மிகப்பெரிரும் விரும்ப வேண்டாம். கருத்து: இப்போது கனிந்தும் குளிர்ந்தும் தோன்றும் இளமை ஒரு காலத்தில் நிலைமாறிக் கெடும். விளக்கம்: உவமையிற் சுட்டிய தன்மைகள் பொருளுக்கும் ஒக்கும். இளமை யாவர்க்கும் ஒரு படித்தாய்க் கெடுதலின், ‘மரமெல்லாம்' என்றார். வீழ்தலின் லிரைவு தோன்ற ‘உதிர்ந்து வீழ்ந்தற்று' என்றார். "நனிபெரிதும்" ஒரு பொருளில் வந்த இருசொல் ; அது வெஃகுதலின் முடிவின்மையையும் இளமைத் தன்மையை அளவாகப் பயன்படுத்திக் கொள்ளுங் கடமையையுங் குறித்துநின்றது. இவள் என்னுஞ் சுட்டுக்கள் இரண்டுள் முன்னது ஒரு மாதையும் பின்னது அவள் இளமைப் பண்பையுஞ் சுட்டி நின்றன. கோல்கொண்டு வழி தெரிந்து செல்லுதலின் ‘கோல் கண்ணள்' எனப்பட்டது. மற்று: வினைமாற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: பருவம் எனைத்துள பல்லின்பால் ஏனை இருசிகையும் உண்டீரோ என்று - வரிசையால் உண்ணாட்டம் கொள்ளப் படுதலால் யாக்கைக்கோள் எண்ணார் அறிவுடை யார். குறிப்புரை: பருவம் எனைத்து உள - வயது எவ்வளவு ஆகியிருக்கின்றன. பல்லின்பால் ஏனை - பல்லின் தன்மை எப்படியிருக்கின்றன, இரு சிகையும் உண்டீரோ - இரண்டு பிடியேனும் உண்கின்றீர்களா, என்று வரிசையால் - என்று ஒன்றன்பின் ஒன்றாக, உள் நாட்டம் கொள்ளப்படுதலால் - இங்ஙனம் பிறரைப்பற்றித் தமக்குள் ஆராயும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுவதனால், யாக்கைக் கோள் - உடம்பின் இளமையை, எண்ணார் அறிவுடையார் - அறிவுடையோர் ஒரு பொருளாகக் கருதமாட்டார்கள். கருத்து: இளமை கழிதலை யாரும் தமக்குள் உணர்தலின், அறிவுடையோர் அந் நிலையா இளமையை ஒரு பொருளாக மதித்து மகிழார். விளக்கம்: வயது என்பது இத்தனை ஆண்டுகள் என்னுங் கருத்தில் வந்தமையின், ‘உள' என்று பன்மை வினைகொண்டது . ‘பல்லின் பால்' என்பதிற் ‘பால்' தன்மை யென்னும் பொருட்டு ; ‘பான்மை' என்பதிற் போல. சிகையும் - சிகையேனும், ஆண்டு முதிர்ந்து பல்பழுதாகிக் குடலுங் கெடுதலின் இங்ஙனம் ஒருவரைப்பற்றி ஒருவர் நலம் உசாவும்உள் எண்ணம் கொள்ளப்படுகின்றது. யாக்கைக் கோள் - யாக்கையின் தன்மை ; இளமை, இவ்வாற்றால் , இளமை நிலையாமை உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: மற்றறிவாம் நல்வினை யாம்இளையம் என்னாது கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்; முற்றி யிருந்த கனியொழியத் தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு. குறிப்புரை: மற்று அறிவாம் நல்வினை - நற்செயல்களைப் பின்னால் தெரிந்து செய்து கொள்ளலாம், யாம் இளையம் - இப்போது யாம் இளமைப் பருவமுடையேம், என்னாது - என்று கருதாமல், கைத்து உண்டாம் போழ்தே - கையில் பொருள் உண்டானபொழுதே. கரவாது அறம் செய்ம்மின் - ஒளியாமல் அறஞ் செய்யுங்கள் ; ஏனென்றால், முற்றியிருந்த கனி ஒழிய - பழுத்திருந்த பழங்களேயல்லாமல், தீ வளியால் - கோடைக் காற்றினால், நல் காய் உதிர்தலும் உண்டு - வலிய காய்களும் மரங்களிலிருந்து விடுதலுண்டு. கருத்து: மூத்தோரே யல்லாமல் இளையோரும் திடுமென இறந்துபோதல் உண்டாகலின், கையிற் பொருள் உண்டான இளமைக் காலத்திலேயே அதனை அறஞ்செய்து பயன் கொள்ளவேண்டும். விளக்கம்: ‘யாம் இளையம்' என்ற குறிப்பு ‘இப்போது யாம் இளமையுடையேம் ; அவ்விளமை யின் பங்கள் நுகர்தற்குப் பொருள் தேவை ; ஆதலின் , அறவினைகளை மூப்பு வந்தபின் செய்வேம்,' என்று நினைத்தலாகாது என்னுங் கருத்தை உட்கொண்டு நின்றது. கைத்து - கையிலுள்ளது ; அது கைப்பொருள் ; செல்வம். இளமைப் பருவத்தைக் ‘கைத்துண்டாம் போழ்து, என்று விதந்தார். அப்பருவமே முயன்று பொருள் தேடுதற்குரிய காலமாகலின், ‘கனியொழிய' என்பதை இரட்டுற மொழிதலாகக் கொண்டு, பழங்கள் உதிராமல் மரத்தில் நிற்கக் , காய்கள் உதிர்ந்துவிடுதலும் உண்டு எனவும் ஒரு கருத்துக்கொள்க. மூப்புடையோர் இறவாமுன் இளமையுடையோர் இறந்து போதலும் உண்டு என்பது இதன் கருத்து. காயுதிர்தல் சிறுபான்மையாகலின், காயுதிர்தலும் என எதிர்மறையும்மை கொடுக்கப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் இளமை நிலையாமை பாடல்: ஆட்பார்த் துழலும் அருளில்கூற் றுண்மையால் தோட்கோப்புக் காலத்தால் கொண்டுய்ம்மின் - பீட்பிதுக்கிப் பிள்ளையைத் தாய் அலறக் கோடலான் மற்றதன் கள்ளம் கடைப்பிடித்தல் நன்று. குறிப்புரை: ஆள் பார்த்து - தான் உயிர் பிரித்துக் கொண்டு போகும் ஆளைக் கருதி, உழலும் - அதே வேலையாகத் திரிகின்ற, அருள் இல் கூற்று - இரக்கம் இல்லாத கூற்றுவன், உண்மையால் - ஒருவன் இருக்கின்றானாதலால், தோள் கோப்பு - மறுமையாகிய வழிக்குக் கட்டுச் சோறு போல் உதவும் புண்ணியத்தை, காலத்தால் - இளமையாகிய தக்க காலத்திலேயே , கொண்டு உய்ம்மின் - உண்டாக்கிக் கொண்டு பிழையுங்கள், பீள் பிதுக்கி - முற்றாத இளங்கருவையும் வெளிப்படுத்தி, பிள்ளையை - குழந்தையை, தாய் அலறக் கோடலான் - தாய் அலறியழும் படி உயிர் கொள்ளுதலால், அதன் கள்ளம் - அக்கூற்றுவனது கடுமையை, கடைப்பிடித்தல் நன்று - நினைவில் இருத்திக் காரியங்கள் செய்தல் நல்லது. கருத்து: இளங் கருவையும் அழிக்கும் கூற்றுவன் உண்மையால் இளமை நிலையாமை விளக்கமாதலின், இம்மை மறுமைக்குரிய புண்ணிய காரியங்களை இளமை யுடையோர் உடனே செய்துகொள்ள வேண்டும். விளக்கம்: கூற்றுவன் கருத்தாயிருக்கி றானென்பதற்கு ‘ஆட் பார்த்து' எனவும், அதுவே வேலையாயிருக்கிறானென்பதற்கு ‘உழலும்' எனவும், கடமையைச் செலுத்தும் போது கண்ணோட்டங் குறுக்கிட இடந்தரான் என்பதற்கு ‘அருள்இல்' எனவும், உயிரை மட்டும் உடம்பினின்று பிரித்துக்கொண்டு போவான் என்பதற்குக் ‘கூற்று' எனவும், அவன் என்றும் உள்ளான் என்பதற்கு ‘உண்மையால்' எனவும் , உயிருடன் நெடுகச் செல்லத்தகுந்த புண்ணியத்தைத் தேடுமின் என்பதற்குத் ‘தோட்கோப்புக் கொண்டுய்ம்மின்' எனவுங் கூறினார். பீள் - முதிராக் கருப்பம். கள்ளம் என்றது இங்கே ‘உள் எண்ணம்' என்னும் பொருளில் வந்தது. கூற்றுவன் தன் உட்கருத்தை உறுதியாகச் செய்தே முடித்தலின், அக்கடுமை தோன்றக் ‘கள்ளம்' என்றார். தோள் கோப்பு - தோளில் கோத்துச் செல்லுங்கட்டுணா. மறுமையாகிய வழிக்கு அதுபோல் உதவும் புண்ணியத்தை அச்சொல்லாற் கூறினார். "கூற்றங் கொண்டோடத் தமியே கொடுநெறிக்கட் செல்லும் போழ்தின், ஆற்றுணாக் கொள்ளீர்," என்றார் சிந்தாமணியினும், காலத்தாலேயே என்னுந் தேற்றேகாரமும், பீளையும் என்னும் இழிவு சிறப்பும்மையும் விகாரத்தால் தொக்கன. சிந்
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட்ட டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். குறிப்புரை: மலைமிசை தோன்றும் மதியம்போல் - மலையின் உச்சியில் தோன்றுகின்ற முழு நிலாவைப்போல, யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - யானையினது தலையின் மேல் கொள்ளப்பட்ட குடைநிழலிற் சென்ற அரசரும் , நிலமிசை - இந் நிலத்தில் , துஞ்சினார் என்று -இறந்து மண்ணானார் என்று, எடுத்துத் தூற்றப்பட்டார் அல்லால் - குறித்து இழித்துரைக்கப்பட்டாரேயல்லாமல், எஞ்சினார் இவ்வுலகத்து இல் - இறவாமல் நின்றவர் இவ்வுலகத்தில் இல்லை. கருத்து: மக்களாய்ப் பிறந்தவர் எத்தகையோ ராயினும் அவர் இறந்து போதல் உறுதியாதலின், இருக்கும் போதே யாவரும் அறஞ் செய்து கொள்க. விளக்கம்: ‘யானைத் தலை' என்றதற்கேற்ப உவமையிலும் ‘மலையின் உச்சி' யென்று உரைத்துக் கொள்க. குடையர் - குடையையுடையராய் அதன் நிழலில் இருக்கும் அரசர். குடையரும் என உயர்வுசிறப்புக் கொள்க. இறுதியில் ‘இவ்வுலகத்து' என வருதலின் ‘நிலமிசை' யென்றது. மண்ணில் என்னும் பொருட்டு, மண்ணில் வீழ்ந்து மண்ணோடு மண்ணானார் என்பது குறிப்பு. எத்துணை உயரத்தில் ஏறிச் சென்றோர்க்கும் முடிவில் இருப்பிடம் மண்ணே எனவும் ஒரு நயம் காண்க. எனவே ஏனையோர் இறத்தல் பற்றிக் கூற வேண்டாதாயிற்று. இறந்தாரென்னுஞ் சொல் இழிவு தருதலின், தூற்றப்பட்டார் எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: வாழ்நாட் கலகா வயங்கொளி மண்டிலம் வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் ; யாரும் நிலவார் நிலமிசை மேல். குறிப்புரை: வாழ்நாட்கு - ஆயுள்நாட்களுக்கு, அலகா - அளவு காணும்படி, வயங்கு ஒளி மண்டிலம் - விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம், வீழ்நாள் படாது எழுதலால் - வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால், வாழ்நாள் உலவாமுன் - அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப்போகுமுன், ஒப்புரவு ஆற்றுமின் - உதவி செய்யுங்கள்; மேல் - அந்த ஆயுள் நாளுக்குமேல், யாரும் நிலவார் நிலமிசை - யாரும் இவ்வுலகத்தில் நிலைக்கமாட்டார்கள். கருத்து: கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ் செய்துகொள்க. விளக்கம்: அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில் , அலகு - அளவு ; ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது. வீழ்நாள்; தவறும் நாள் ; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள். நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: மன்றம் கறங்க மணப்பாறை யாயின அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம். குறிப்புரை: மன்றம் கறங்க - பேரவை முழுதும் ஒலிக்கும்படி, மணப்பறையாயின - திருமண மேளமாய் முழங்கியவை, அன்று அவர்க்கு ஆங்கே - திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே, பிணப்பறையாய் பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று - சாவுமேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி, உய்ந்து போம் ஆறே - நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே, வலிக்குமாம் மாண்டார் மனம் - அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும் என்ப. கருத்து: மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க. விளக்கம்: மன்றம் - அவை ; இங்கே, திருமணப் பேரவை, மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விருபாலார்க்கும் பொருந்த ‘அவர்க்கு' எனப் பலர் பாலாற் கூறினார். பெரும்பான்மை யன்றாகலின் ‘ஒலித்தலும் உண்டாம்' என்னும் உம்மை எதிர்மறை. ‘உய்ந்து போம் ஆறு' ,என்றது, பொதுவாக அறவழி. ஏகாரம்: பிரிநிலை. இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு ஐயுறும்போது, மாட்சிமைப்பட்டாரது மனம் அறவழியின் பக்கமே ஈர்ப்புறும் என்னும் இயல்பை ‘வலிக்கும்' என்னும் ஒரு சொல்லால் விளங்க வைத்தார். வலிக்குமாம் என்பதில் ‘ஆம்' என்ப என்னுங் குறிப்பினது ; அன்றி, அசையெனலும் ஒக்கும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: சென்றே எறிப ஒருகால் ; சிறுவரை நின்றே எறிப பறையினை - நன்றேகாண் முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டெழுவர் செத்தாரைச் சாவார் சுமந்து. குறிப்புரை: சென்று - இறந்தவர் வீட்டுக்குப் போய், எறிப ஒரு கால் - பறையடிப்போர் ஒருமுறை பறைகொட்டுவர், சிறுவரை நின்று - சிறிது பொழுது நிறுத்தி, எறிப பறையினை - மீண்டும் அச் சாவுமேளத்தைக் கொட்டுவர், முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் முறையாகக் கொட்டுமுன், செத்தாரைச் சாவார் சுமந்து - இறந்தவரை இனி இறப்பவர் சுமந்துகொண்டு, மூடி தீ கொண்டு எழுவர் - துணியால் மூடித் தீயைக் கைக்கொண்டு இடுகாட்டுக்குப் புறப்படுவர், நன்றே - இந்நிலை இன்பந் தருவதோ, காண் - எண்ணுக. கருத்து: இறந்த பின்னும் உடல் சிறிது நேரமேனும் வீட்டிலிருக்க இடமில்லாமையின், யாக்கையின் நிலையாமையைக் கருதி, உடனே அறவழிக்கண் நிற்க. விளக்கம்: நன்றே என்னும் ஏகாரம் எதிர்மறை ஏனைய அசை . வரை- பொழுதின் அளவு ; சிறுவரை - சிறு பொழுதளவு. நின்று - நிறுத்தி என்னும் பொருட்டு, முக்காலைக் கொட்டினுள் - மூன்றாம் பொழுதின் கொட்டுதலுக்குள். சுமந்து எழுவர் என்று கொள்க. சாவார் - சாவோர் ; இவர் நிலையும் இன்னதே என்றதற்குச் ‘சாவார் சுமந்து என அச் சொல்லாலேயே கூறினார். இந்நிலையில்லா வாழ்வை நிலையாக எண்ணி இன்புறுவாரை நோக்கி,இது நன்றாகுமோ நினைமின் என்பார்' நன்றேகாண், என்றார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப் பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் - மணங் கொண்டீன் டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே டொண்டொண்டொ டென்னும் பறை. குறிப்புரை: கணம் கொண்டு - கூட்டம் கொண்டு, சுற்றத்தார் - உறவினர், கல் என்று அலற - கல்லென்று அலறி அழ, பிணம் கொண்டு - பிணத்தை எடுத்துக்கொண்டுபோய், காடு உய்ப்பார் கண்டும் - இடுகாட்டிற் கிடத்துவாரை நேரிற் பார்த்தும், மணம் கொண்டு - திருமணம் செய்து கொண்டு, ஈண்டு உண்டு உண்டு உண்டு என்னும் உணர்வினான் - இவ்வுலகத்தில் இன்பம் உண்டு உண்டு உண்டு என்று கருதிம மயங்குகின்ற மயக்க உணர்வினையுடையானுக்கு, டொண் டொண் டொடு என்னும் பறை - டொண் டொண் டொடு என்று ஒலிக்கின்ற சாவு மேளம், சாற்றும் - அங்ஙனம் ஓரின்பம் இல்லை இல்லை இல்லை என்று சொல்லும். கருத்து: இவ்வுலக வாழ்க்கையை அறவழியிற் பயன் படுத்திக்கொள்ள வேண்டுமே யல்லாமல், இதில் இன்பம் உண்டென்று மயங்கலாகாது. விளக்கம்: கணங்கொண்டு, கூடி யென்னும் பொருட்டு. கல்ஒலிக்குறிப்பு . உய்த்தல் - சேர்த்தல். உணர்வினாற்கு என நான்கனுருபு கொள்க. சாற்றுமே, அறிவுறுத்துமே என்பது அடுக்கு துணிவுக்கு , உண்டு உண்டு உண்டு என்றதன் கருத்தை, அவ்வொலி போன்றதொன்றால் ஏளனத்தோடு மறுக்கும் முறையில் டொண் டொண் டொடு என்பது வந்தது ; சாப்பறையின் ஒலி முறையும் இவ்வொலிக் குறிப்போ டிருப்பது அதற்கு இயைந்தது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: நார்த்தொடுத் தீர்க்கிலென் நன்றாய்ந் தடக்கிலென் பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்; தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும் கூத்தன் புறப்பட்டக் கால். குறிப்புரை: தோல் பையுள் நின்று - தோலாலான பையாகிய உடம்பினுள் இருந்து, தொழில் அறச்செய்து ஊட்டும் - தொழில்களை முடியச் செய்து அவ்வுடம்பை உண்பித்து வருகின்ற, கூத்தன் - கூத்தனை ஒத்த உயிர், புறப்பட்டக்கால் - வெளிப்பட்டு விட்டபின், நார் தொடுத்து ஈர்க்கில் என் - அவ்வுடம்பை நாரினாற் கட்டி இழுத்தா லென்ன, நன்று ஆய்ந்து அடக்கில் என் - நன்றாகத் தூய்மைசெய்து அடக்கஞ்செய்தால் என்ன, பார்த்துழிப் பெய்யில் என் - கண்ட இடத்திற் போட்டா லென்ன, பல்லோர் பழிக்கில் என் - அதனாற் பலரும் பழித்தாற்றான் என்ன ; வருகின்ற பெருமை சிறுமைகள் ஒன்றுமில்லை. கருத்து: உயிர் நீங்கிய பின் உடம்பு இகழப்படுவ தொன்றாதலால், இவ்வுடலை ஓம்பி மகிழ்வதற்காக நற்செயல்களைக் கைவிடற்க. விளக்கம்: பார்த்தஉழி எனப் பிரிக்க; இழிவு தோன்றத் ‘தோற்பை', என்றார். அறச் செய்து என்றது, வேண்டுமளவும் என்னும் பொருட்டு ; இது முயற்சி மிகுதியைக் காட்டிற்று. கூத்தன் என்றார். அசைவோன் அவனே ; இவ்வுடம்பில் ஒன்றுமில்லை ; ஆதலால் இவ்வுடலை ஓம்புதற்காக அவ்வுயிரை ஓம்பும் அறச்செயல்களைக் கைவிடற்க என்றற்கு. உயிரைக் கூத்தன் என்றது உருவகம்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: படுமழை மொக்குகளின் பல்காலும் தோன்றிக் கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். குறிப்புரை: படு மழை மொக்குளின் - மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல, பல்காலும் தோன்றிக் கெடும் இது ஓர் யாக்கை - பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது. என்று எண்ணி - என்று இதன் இழிவு கருதி, தடுமாற்றம் தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை, நேர்ப்பார் யார் நீள் நிலத்தின் மேல்- ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில் ; ஒருவருமில்லை. கருத்து: யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர். விளக்கம்: மழை படு மொக்குள் என்று மாற்றிக்கொள்க ‘பல்காலும்' என்னுங் குறிப்பால் விரைந்து கெடுதலும் பெறப்படும். உவமையின் இயல்பு பொருளில் விளக்கப்பட்டது. தோன்றிக் கெடுதல் - பிறந்து இறத்தல். இது, ஓர் என்பன, இகழ்ச்சிப்பொருள். தடுமாற்றம், பிறவித் தடுமாற்றம், அது தீர்த்தலாவது, யாக்கை இன்பத்தை ஒரு பொருளாகக் கருதியொழுகாமல், அறவழியில் நின்று மெய்யுணர்ந்து வீடுபெற முயலுதல், மயங்கி வலைப்படாமையின், ‘திண்ணறிவாளர்' என்றார். நோப்பார் யாருமில்லையெனவே, மேம்படுவாரின்மைதானே பெறப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையா லாய பயன்கொள்க ;- யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே நிலையாது நீத்து விடும். குறிப்புரை: யாக்கையை - உடம்பை, யாப்பு உடைத்தாப் பெற்றவர் - உறுதியுடையதாகப் பெற்றவர், தாம் பெற்ற யாக்கையால் - தாம் அங்ஙனம் முன் நல்வினையினால் அரிதின் அடைந்த அந் நல்யாக்கையினால் , ஆய பயன் கொள்க- ஆகக்கூடிய புண்ணியப் பயனைக் காலந்தாழாமற் செய்து கொள்க. ஏனென்றால் ; மலை ஆடு மஞ்சுபோல் தோன்றி - மலையுச்சியில் உலவுகின்ற மேகம் போலக் காணப்பட்டு, மற்று ஆங்கே நிலையாது நீத்துவிடும் -பின்பு அங்ஙனம் காணப்பட்டபடியே நிலையாமல் இவ்வுடம்பு அழிந்துவிடும். கருத்து: நல்ல யாக்கையை அடையப் பெற்றவர்கள், அதனாலான அறப்பயன்களை உடனே செய்து முடித்துக் கொள்ளவேண்டும். விளக்கம்: யாப்பு - உறுதிநோயில்லாத நல்ல யாக்கையாகப் பெற்றவர்கள் என்பது கருத்து. பெறுதலின் அருமை நோக்கிப் ‘பெற்றவர்' என்றும், தாந்தாம் செய்த முன்னை நல்வினையினாலேயே அதனை அடைதல் கூடுமென்று அங்ஙனம் அடைதலில் இருந்த அருமையை மேலும் வலியுறுத்தக் கருதித் ‘தாம் பெற்ற,' என்றுங் கூறினார். ஆயபயன் - அறம். மேகம் திடுமெனத் தோன்றினாற் போலவே திடுமென அழிந்தும்போம் என்றற்குத் 'தோன்றி ஆங்கே' எனப்பட்டது. மற்றுவினைமாற்று. நீத்துவிடும் என்னுஞ்சொல் அழிந்துவிடும் என்னும் பொருளது. மேகம் நீரிலிருந்து தோன்றி அழகிதாய் வடிவமாய் நிறமாய் ஒளி ஒலிகளோடு பிறர் விரும்பி எதிர்நோக்கும்படி மேன்மையான இடத்தில் அசைந்தாடிக் கொண்டிருந்து பின் நீராகவே உருவழிந்து மறைந்துவிடுதல் போல, இவ்வுடம்பும் மண்ணிலிருந்து தோன்றி அழகியதாய் வடிவமாய்ப் பார்வையொளி பேச்சொலிகளோடு பிறர் விரும்பி எதிர் நோக்கும்படி செல்வாக்கான இடத்தில் உலவிக் கொண்டிருந்து பின் மண்ணாகவே உருவழிந்து போகும் என்று உவமையை விரித்துக் கொள்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை ; - இன்னினியே நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச் சென்றான் எனப்படுத லால். குறிப்புரை: புல் நுனிமேல் நீர்போல் - புல் நுனியில் நிற்கும் நீர்த்துளி போன்றது, நிலையாமை - யாக்கை நிலையாமை யென்பது ; என்று எண்ணி - என்று கருதி, இன்இனியே - இப்பொழுதே - இப்பொழுதே, செய்க அறவினை - அறச்செயல்கள் செய்க, ஏனென்றால் ; இன் இனியே நின்றான் இருந்தான் கிடந்தான் - இப்போதுதான் ஒருவன் இங்கே நின்றான் இருந்தான் படுத்தான், தன் கேள் அலறச் சென்றான். உடனே தன் உறவினர் அலறி அழும் படி இறந்துவிட்டான், எனப்படுதலால் - என்று உலகத்திற் சொல்லாப்படுவதனால் என்க. கருத்து: புல் நுனி நீர்போல உடம்பு நொடிப்பொழுதிலும் மாய்தல் நேர்தலின் உடனே நற்செயல்கள் செய்து கொள்க. ‘எனப்படுதலால்' நிலையாமை புல் நுனி மேல் நீர்போல் ஆகும் என்று கூட்டுக. நுனிமேல் - நுனியில் . நீர்- பனிநீர் ; அது துளிநீராதலின் விரைந்து ஆவியாய்ப் போகும் ; யாக்கையின் நிலையாமை அத்தகையது. இனி இனி என்னும் அடுக்கு ‘இன்னனி ' யெனத்திரிந்து நின்றது ; "இன்னினி வாரா" என்றார் பிறரும்; இந்நொடியே என்னும் விரைவுப் பொருளது. நின்றான் இருந்தான் கிடந்தான் சென்றான் என்றதும் மிக்க விரைவு புலப்படுத்துதற்கு. ஐங்,
செல்வம் நிலையாமை அறத்துப்பால் யாக்கை நிலையாமை பாடல்: கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல யாக்கை தமர்க்கொழிய நீத்து. குறிப்புரை: வாளாது சேக்கை மரன் ஒழிய - சும்மா கூடு மரத்தில் கிடக்க, சேண் நீங்கு புள்போல - அதிலிருந்து தொலைவிலே பறந்து போய்விடும் பறவைகள் போல - மாந்தர்கள் - மக்கள், கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி - ஒருவரையும் கேளாமலே வந்து சுற்றங்களாய் ஒரு குடும்பத்தில் பிறந்து, யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து - பின்பு தம் உடம்பை உறவினரிடம் கிடக்கும்படி நீக்கி விட்டு, வாளாதே போவர் - பேசாமலே இறந்து போய் விடுவார்கள். கருத்து: சொல்லாமலே போய்விடுவதனால் இன்ன போது இறக்கும் நேரமென்பது தெரியாமையின், உடனே அறஞ்செய்து கொள்க. விளக்கம்: ‘வாளாதே' என்னுஞ் சொற்கள் இரண்டனுள் ஒன்று உவமத்துக்கும் ஒன்று பொருளுக்குங் கொள்க. மரம் மரன் என வந்தது போலி. சேண் நீங்கு என்னுங் குறிப்பால், திரும்பாமை புலப்பட்டது. புட்களில் அங்ஙனம் சேண் நீங்கிவிடும் புட்களே ஈண்டைக்கு உவமை. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்தற்காகக் கூடுகட்டியிருந்து வினை முடிந்தபின் அக்கூட்டைவிட்டுச் சேண் நீங்கிவிடும் புட்கள் இவ்வுவமத்துக்குப் பொருந்தும் ; உயிரும் பிறர்க்குப் பயன்படும் பொருட்டே இவ்வுடம்பெடுத்துத் தங்குதலின் ஈது ஒக்கும். அதனாற்றான், கேளாதே வந்து வாளாதே போவர்; தமரின் பொருட்டு எடுத்த உடலாதலின் அத்தமர்க்கே அது கிடக்கும்படி நீத்து என்றார். ‘மாந்தர்கள் தோன்றிப், புட்போல நீத்துப் போவர்' எனக்கொள்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: அகத்தாரே வாழ்வார்என் றண்ணாந்து நோக்கிப் புகத்தாம் பெறாஅர் புறங்கடை பற்றி மிகத்தாம் வருந்தி இருப்பாரே மேலைத் தவத்தால் தவஞ்செய்யா தார். குறிப்புரை: மேலைத் தவத்தால் - முன் பிறப்பில் செய்த தவத்தின் பயனான செல்வ நிலைமையால், தவம் செய்யாதார் - மறுபிறப்பிற்கு வேண்டுந் தவத்தைச் செய்யாமல் இறந்து பிறந்தவர், அம் மறுபிறப்பில் ; அகத்து ஆரே வாழ்வார் - இம்மாளிகையில் வாழ்வார் எத்தகையவரோ, என்று எண்ணி அண்ணாந்து நோக்கி - என்று மதிப்பாகக் கருதித் தலை நிமிர்ந்து மாளிகையின் மேனிகையைப் பார்த்து, தாம் புகப்பெறார் - தாமாக உள்நுழையப் பெறாராய், புறங்கடை பற்றி - தலைவாயிலைப் பிடித்துக் கொண்டு, தாம் மிக வருந்தி இருப்பார் - தாம் மிகவும் வாடி ஒரு பயனுமின்றி நின்றுகொண்டிருப்பர். கருத்து: இப் பிறப்பில் அறஞ்செய்யாதவர் வருபிறப்பில் இரந்து நிற்பர். விளக்கம்: அறஞ் செய்தல் உயிரோடு கூடவே அது நிலையாயிருந்து வருபிறப்பிலும் உதவும் என்று அதன் வலியுரைத்து வற்புறுத்தியவாறு. ‘அகத்து ஆரே' என்று பிரிப்பது பொருட் சிறப்புடையது. ஏவினா. தவமும் தவமுடையார்க்கு ஆகு மாதலின், ‘தவத்தால் தவஞ் செய்யாதார், ' என்றார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறமறந்து போவாம்நாம் என்னாப் புலைநெஞ்சே - ஓவாது தின்றுஞற்றி வாழ்தி எனினும்நின் வாழ்நாள்கள் சென்றன செய் துரை. குறிப்புரை: ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து - அறத்தை மறந்து பொருளை விரும்பி முயன்று நாம் மேலும்மேலும் பெருஞ் செல்வராவோம் ; போவாம் நாம் - நாம் இவ்வளவு விரைவில் இறந்துபோக மாட்டோம் ; என்னா - என்று எண்ணி, புலைநெஞ்சே - தாழ்ந்த தன்மையையுடைய நெஞ்சமே, ஓவாது நின்று உஞற்றி வாழ்தி எனினும் - இடைவிடாமல் தொழிலில் நிலையாயிருந்து முயன்று நீ நினைத்தபடியே வாழ்கின்றா யென்றாலும், நின் வாழ்நாட்கள் சென்றன - நின் ஆயுள் நாட்கள் இதோ கழிந்துவிட்டன, செய்வது உரை - மறுமைக்காக இனி என்ன செய்குவை சொல். கருத்து: பொருள்வாழ்வு முதன்மையன்று ; அறவாழ்வே முதன்மையானது. விளக்கம்: ஆவாம் போவாம் என்பன முறையே உடன் பாட்டிலும் எதிர்மறையிலும் வந்தன. போவாம் என்பது செய்யாம் என்புழிப் போலக் கொள்ளப்படும். நாம் இரு
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா மனத்தின் அழியுமாம் பேதை - நினைத்தனைத் தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத் தெல்லை இகந்தொருவு வார். குறிப்புரை: பேதை - அறிவில்லாதவன், வினைப்பயன் வந்தக்கால் - முன் தீவினையின் பயனாக இடர்கள் இப்போது வந்து தாக்கினால், வெய்ய உயிரா - உடனே கடுமையாகப் பெருமூச்சு விட்டு, மனத்தின் அழியும் - மனத்தின் வருந்தி ஊக்கங் கெடும் ; நினைத்து அதனைத் தொல்லையது என்று உணர்வாரே - ஆராய்ந்து அவ்விடரைப் பழைய வினையினால் வந்ததென்று தெரிந்து அதற்கேற்ப ஒழுகுவோரே, தடுமாற்றத்து எல்லை இகந்து ஒருவுவார் - கலக்கத்தின் எல்லையைக் கடந்து அப்பால் நீங்குவர். கருத்து: துன்பம் வந்தால் அதற்கு மனமழியாமல் அது நீங்க முயலவேண்டும். விளக்கம்: பயன் என்றது இடர் ; வந்தக்கால்வினையெச்சம், ‘அழியும்' என்பதற்கு அழிந்து ஊக்கங் கெடும் எனவும், ‘உணர்வார்' என்பதற்கு உணர்ந்து அதற்கேற்ப ஒழுகுவார் எனவும் உரைத்துக்கொள்க. ஏகாரம்பிரிநிலை. நற்செயல்களினிடையே இடர் வந்தால், அந்நற்செயல்களால் அது வந்ததெனக் கருதி அவை செய்தலில் ஊக்கங் கெடாமல், தொல்லை வினையால் வந்ததெனத் தெளிந்து, அந்நல்வற்றைத் திருந்தச் செய்து நலம் பெற வேண்டும் என்பது பொருள்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால் பெரும்பயனும் ஆற்றவே கொள்க ; - கரும்பூர்ந்த சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன் கோதுபோல் போகும் உடம்பு. குறிப்புரை: அரும்பெறல் யாக்கையை -அடைதற்கரிய உடம்பை, பெற்ற பயத்தால் - அடைந்த ஆக்கங்கொண்டு, பெரும்பயனும் - பெரும்பயன் என்னப்படும் புண்ணியச் செயல்களும், ஆற்றவே கொள்க - இயன்றவளவும் செய்துகொள்க ; கரும்பு ஊர்ந்த சாறுபோல் சாலவும் பின் உதவி - கரும்பு ஆட்டியெடுத்த சாறுபோல மிகவும் மறுமைக்கு அறப்பயன் உதவி, மற்று - பின்பு, அதன் கோதுபோல் போகும் உடம்பு - அக் கரும்பின் சக்கை போல இவ்வுடம்பு கழிந்துபோகும் இயல்பையுடையது. கருத்து: உடம்பைத் தக்கவழியிற் புண்ணியச் செயல் கட்குப் பயன்படுத்திக் கொள்க. விளக்கம்: ‘அரும்பெறல் யாக்கை' யென்றமையால் மக்கள் யாக்கை என்பது பெறப்படும். "மக்களுடம்பு பெறற்கரிது," என்றார் பிறரும். யாக்கை கிடைத்தது ஓர் ஆக்கம் ; உலகத்தில் வாழவும் காரியங்கள் செய்யவும் முடிந்தது ; அந்த ஆக்கத்தைக் குறித்தற்கு ‘யாக்கைபெற்ற பயம்' என்றார். அப்பயன் கொண்டு அறமும் செய்து கொள்க என்றற்குப் ‘பெரும் பயனும்' எனவும் இயன்ற அளவும் என்றற்கு ‘ஆற்றவே' எனவுங் கூறினார். ஏகாரம் இசை நிறை. ஊர்ந்த சாறு ஊர்ந்ததனால் உண்டான சாறு. ஆலைக்காரனுக்குக் கரும்பு அவன் பின் உதவிக்காக மிகவும் சாறு உதவித் தான் சக்கையாய்க் கழிந்தது ; அப்படியே அறவொழுக்முடையானுக்கு உடம்பு அவன் மறுமையுதவிக்காக மிகவும் புண்ணியம் உதவித் தான் கோது போலக் கழியும் தன்மையது என்று உவமையை விரித்துக் கொள்க ; நற்செயல்களில் உடம்பைச் சாறுபோலப் பிழிய வேண்டும் என்பது இது ; "வருந்தி உடம்பின் பயன் கொண்டார்," என்பர் மேலும். அறவழிகளில் நல்ல உழைப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார் துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார் ; வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம் வருங்கால் பரிவ திலர். குறிப்புரை: சிறு காலை - மிக்க காலைநேரத்தில், கரும்பு ஆட்டி - கரும்பை ஆலையில் ஆட்டி, கட்டி கொண்டார் - சருக்கரைக் கட்டியைச் செய்துகொண்டவர், துரும்பு எழுந்து - அக் கரும்பு பின் துரும்பாகித் தோன்றி, வேம் கால் - தீயில் வேகும்போது, துயர் ஆண்டு உழவார் - அது கண்டவிடத்தில் துன்பத்தினால் வருந்தார், அதுபோல் வருந்தி உடம்பின் பயன் கொண்டார் - நற்செயல்களில் உழைத்து உடம்பாலான அறப்பயனைப் பெற்றவர், கூற்றம் வருங்கால் - நமன் வருகின்ற காலத்தில், பரிவது இலர் - தம் உடம்பின் கேடு குறித்து இரங்குதல் இலராவர். கருத்து: மிக்க இளமையிலிருந்தே அறச்செயல்களில் உழைத்து வந்தால், இறந்துபோகும்போது துன்பமுண்டாகாது. விளக்கம்: கரும்பை மிக்க கலைநேரத்தில் ஆலையில் இட்டுச் சாறு பிழிந்தால் அது பதங்கெடாததுபோல அறப்பயன் கோடலும் வாழ்நாளின் காலை நேரமான இளமைப் பருவத்திலேயே நிகழ்தல் வேண்டுமென்பதும் அறிவுறுத்தப்பட்டது. சிறுகாலை - இளங்காலைநேரம். வேம் - வேகும் ; ‘வேங் கால்' என்பதிற் காலம் பெறப்பட்டமையால், ‘ஆண்டு' என்பதற்கு இடப்பொருள் உரைக்கப்பட்டது. சாறு அற்ற கோது எரிதலில் தவக்கமில்லாததுபோல உழைத்து அறம் பயந்த உடம்பும் இறத்தலில் வேதனையின்றிக் கழலும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது பின்றையே நின்றது கூற்றமென் றெண்ணி ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம். குறிப்புரை: இன்றுகொல் அன்றுகொல் என்று கொல் என்னாது பின்றையே நின்றது கூற்றம் என்று எண்ணி - இன்றோ அன்றோ என்றோ என்று இகழ்ந்திராமல் பின்னாலேயே இருக்கின்றான் நமன் என்று மதித்து, ஒருவுமின் தீயவை - தீய செயல்களை நீக்குங்கள் ; ஒல்லும் வகையால் மருவுமின் மாண்டார் அறம் - மாட்சிமைப்பட்ட நல்லோர் கூறும் அறச் செயல்களை இயன்ற வகையினால் தழுவிச் செய்யுங்கள் . கருத்து: கூற்றுவன் எந்த நேரத்திலும் வருவான் என்று கருதி உடனே நல்லன செய்யவேண்டும். விளக்கம்: நமன் வருவது இன்றோ அன்றோ என்றோ என்றற்கு, இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்றார். கொல்ஐயப்பொருட்டு. இன்று அன்றும் இளமை முதுமைகளைச் சுட்டின. என்று என்றது வருங்காலம் உணராமையைச் சுட்டியது. அறஞ்செய்து மாட்சிமைப்பட்டவ ராதலின், ‘மாண்டார் அறம்' என்றார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: மக்களா லாய பெரும்பயனும் ஆயுங்கால் எத்துணையும் ஆற்றப் பலவானால் - தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகா தும்பர்க் கிடந்துண்ணப் பண்ணப் படும். குறிப்புரை: மக்களால் ஆய பெரும்பயனும் - மக்கட் பிறவியினால் செய்யதக்க பெரும்பயனான நற்செயல்களும், ஆயுங்கால் - எண்ணிப் பார்க்கும்போது, எத்துணையும் ஆற்றப் பல ஆனால் - எவ்வளவும் மிகப் பலவாகு£தலால், தொக்க உடம்பிற்கே ஒப்புரவு செய்தொழுகாது - பல கருவிகளோடு கூடிய இவ்வுடம்புக்கே உதவிகள் செய்து கொண்டிராமல், உம்பர்க் கிடந்து உண்ணப் பண்ணப்படும் - மேலுலகத்தில் எளிதாக இருந்துகொண்டு இன்பம் நுகரும் பொருட்டு உயிருக்கான அறவினைகளே மிகவும் செய்து கொள்ளப்படுதல் வேண்டும். கருத்து: கருவியாக வந்த உடம்புக்கே காரியங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிகவும் செய்து கொள்ளல் வேண்டும். விளக்கம்: உயிர்க்குரிய அறச்செயல்கள் ‘பெரும்பயன்' எனப்பட்டன. எச்சவும்மை, உடம்பிற்குரிய சிறுபயனைத் தழீஇயிற்று. உடம்பிற்குரிய சிறு செயல்களைச் செய்தற்கிடையே உயிர்க்குரிய எவ்வளவோ மிகப் பலவான பெருஞ்செயல்களையுஞ்செய்து கொள்ளலாமென்றற்கு, ‘எத்துணையும் ஆற்றப் பல' என்றார். ஆற்ற - மிக ; ஆனால் - ஆதலாலென்னும் பொருட்டு. உடம்பு, தன் காரியங்களைச் செய்துகொள்ளுதற்கு, இதயப் பை, மூச்சுப்பை, இரைப்பை, முதலிய அகக் கருவிகளும்; நா, பல் , கை, கால், கண், காது முதலிய புறக்கருவிகளும் பெற்றிருக்கின்றது ; இங்ஙனங் கருவிகள் தொக்க உடம்பாயிருத்தலால் அவ்வுடம்பு தானே தன் காரியங்களைச் செய்துகொள்ளும் என்றற்குத் ‘தொக்க உடம்பு ' என்று நினைவு கூட்டினார்; சிறப்பாகத் தாமே இயலுகின்ற அகக் கருவிகளை நினைந்தே அங்ஙனங் கூறப்பட்டது. ஆதலால், உடம்புக்கே உதவிசெய்து கொண்டிருக்க வேண்டிய கட்டாயமில்லை; செய்யவேண்டுவது உயிருக்கே என்று அறிவுறுத்தப்பட்டது. உடம்பு அதனியற்கையில் இயங்குமாறு விழிப்பாக நடந்துகொண்டால், அதன்பொருட்டுச் செயற்கையாக முயற்சிகள் எடுக்க வேண்டுங் கட்டாயமில்லாமற் போம் என்னுங் கருத்தும் இதுகொண்டு உணர்ந்துகொள்ளப்படும். ‘இடையறாமல் இங்ஙனம் செய்கை முயற்சிகளைச் செய்துகொண்டு வருந்தற்க,' என்றற்கு ‘ஒழுகாது,' என்றார். கிடந்து என்றது, எளிமை தெரியும் பொருட்டு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி இறப்ப நிழற்பயந் தாஅங் - கறப்பயனும் தான்சிறி தாயினும் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும். குறிப்புரை: உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து - சிறிய அளவினதான ஓர் ஆலம் விதை, ஈண்டி - தழைத்து, இறப்ப நிழல் பயந்தாங்கு - மிகவும் நிழல் கொடுத்தாற் போல, அறப்பயனும் - அறச்செயல்களின் பயனான புண்ணியத்தைத் தரும் பொருளும், தான் சிறிதாயினும் - தான் அளவில் சிறியதேயானாலும், தக்கார் கைப்பட்டால் - தகுதியுடைய பெரியோர் கையிற் சேர்ந்தால், வான் சிறிதாப் போர்த்துவிடும் - வானமும் சிறிதென்னும்படி அவ்வளவு பெரிய புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும். கருத்து: சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச்சிறியதாயினும், அது பெரும்பயன் தரும். விளக்கம்: உறக்குதல் - சுருங்குதல் ; சிறிதாதல் . ஈண்டி - அடர்ந்து ; இங்குத் தழைத்து எனப்பட்டது. 'பயந்து ஆங்கு' எனப் பிரிக்க. அறத்தின் பயனைத் தரும் பொருள், ‘அறப்பயன் ' எனப்பட்டது. தக்கார் - ஞானவொழுக்கங்களால் உண்டாகும் தகுதியை உடையவர். தக்கார் கைப்பட்டக்கால் என்பதன் கருத்தைத் , தக்க இடத்தில் விதை முளைக்குமானால் என்று உவமத்துக்குங் கொள்க. புண்ணியத்தைச் சூழ வைத்துவிடும் என்றற்குப், ‘போர்த்து விடும்' என்றார். "உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து." என்னும் குறள் ஈண்டு நினைவு கூரற் பாற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: வைகலும் வைகல் வரக்கண்டும் அஃதுணரார் வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர் வைகலும் வைகல்தம் வாழ்நாள்மேல் வைகுதல் வைகலை வைத்துணரா தார். குறிப்புரை: வைகலும் - நாடேறும், வைகல் வரக்கண்டும் - நாட்காலம் தோன்றிவரக் கண்டும், அஃது உணரார் - அறத்தைக் கருதாதவராய், வைகலும் - என்றும், வைகலை வைகும் என்று இன்புறுவர் - நாட்பொழுதை அது நிலைத்திருக்கும் என்று கருதித் துய்த்து மகிழ்வர் ; அவர் யாரெனின், வைகலும் வைகல் தம் வாழ்நாள்மேல் வைகுதல் - ஒவ்வொரு நாளும் அந் நாட்பொழுது தம் ஆயுள் கழிதலின்மேல் நிற்றலாக, வைகலை வைத்து உணராதார் - அந் நாட்காலத்தைக் கருத்திருத்தி அறியாதவர். கருத்து: நாடோறும் வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போதலின், அந் நாட்களைத் துய்த்து இன்புற்றுக்கொண்டிராமல் உடனே அறஞ்செய்து கொள்ளவேண்டும் என்பது. விளக்கம்: வைகலை வைத்து உணராதார் அஃது உணராராய் இன்புறுவர் என்று கொள்க, வாழ்நாட்கள் ஒவ்வொரு நாளாகக் கழிந்து போவதற்கு நாட்கள் அடையாளமாய் நிற்றலின் ‘வைகல் வரக்கண்டும்' எனப்பட்டது. வைகலை உணராதார் என்று ஈற்றடியில் வருதலால் அஃதுணரார் என்றது அறத்தைக் கருதாதவராய் என்பது உணர்த்தும். அதிகாரம் அறன்வலியுறுத்தலாதலாலும், வைகலை இன்புறுதலுக்கு வேறானது அறஞ்செய்தலாதலாலும், அறத்தை அஃதெனச் சுட்டினார். "அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று," என்றார்போல.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் அறன் வலியுறுத்தல் பாடல்: மான அருங்கலம் நீக்கி இரவென்னும் ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின். குறிப்புரை: ஈனத்தால் ஊட்டியக் கண்ணும் - இழி தொழில்களால் உண்பித்த இடத்தேனும், உறுதி சேர்ந்து இவ்வுடம்பு நீட்டித்து நிற்கும் எனின் - உறுதி பொருந்தி இந்த உடம்பு காலம் நீண்டு நிலைபெறுமென்றால், மான அருங்கலம் நீக்கி - மானமாகிய பெறற்கரிய அணிகலனை விடுத்து, இரவு என்னும் ஈன இளிவினால் வாழ்வேன் மன் - இரத்தல் என்னும் ஏளமான இழிதொழிலினால் உயிர் வாழ்வேன் ; ஆனால் அவ்வுடம்புதான் நிலைக்கப்போவதில்லையே. கருத்து: என்றும் நிலையாயிருக்கும் உயிர்க்குணங்களுக்குரிய அறச்செயல்களே செய்யத்தக்கவை. விளக்கம்: இழந்தால் மீண்டும் பெறற்கரியதாகலின், ‘அருங்கலம்' என்றார் ; உடம்பு நிலையாது என்னும் ஒழிந்த பொருளைக் காட்டுதலின், மன ஒழியிசை. உறுதி - கட்டுத் தளராத நிலை. நீட்டித்துதன்வினைப் பொருளாது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: மாக்கேழ் மடநல்லாய் என்றரற்று சான்றவர் நோக்கார்கொல் நொய்யதோர் புக்கிலை - யாக்கைக்கோர் ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே காக்கை கடிவதோர் கோல். குறிப்புரை: மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் - மாந்தளிர் போன்ற இளநங்கையே என்று மாதரை நோக்கிப் பலகாலுங் கூறி உருகும் பெரியோர்கள், நோக்கார்கொல் நொய்யது ஓர் புக்கிலை - அம் மாதராரது தாழ்ந்த சிற்றுடம்பின் இயல்பை எண்ணிப் பாரார்களோ , யாக்கைக்கு ஓர் ஈச்சிறகு அன்னது ஓர் தோல் அறினும் - அவ்வுடம்புக்கு ஓர் ஈயின் சிறகைப் போன்றதொரு தோல் அறுபட்டாலும், வேண்டுமே காக்கை கடிவதோர் கோல் - காக்கையைத் துரத்துவதொரு கோல் வேண்டியிருக்கும். கருத்து: உடம்பு அழுக்குடையதென்று உணர்ந்ததொழுக வேண்டும். விளக்கம்: மா - மாந்தளிர் ; கேழ்உவமப்பொருளது. இச்செய்யுள் உடம்பை நோக்கியதாகலின், நல்லாய் எனப்தற்குப் பொதுவில் ‘பெண்' என்று உரைத்துக் கொள்ளவேண்டும். தாங் காமுற்றும் மாதரார்பால் இங்ஙனம் பல முறையுங் கூறி உள்ளங்கரைந்து குறையிரப்பது தோன்ற ‘அரற்றும்' என்றார். சான்றவர் என்றது, இகழ்ச்சி . உயிர் புகுந்திருக்கும் இல்லமாதலின், உடம்பு ‘புக்கில் ' எனப்பட்டது. "புக்கில் அமைந்தின்று கொல்லோ " என்றார் வள்ளுவரும். ஓர் - சிறிய என்னும் பொருட்டு. பின் இரண்டடிகளில் யாக்கையின் தூய்தல்லாமை காட்டப்படுதலாலும் உடம்பின் தாழ்ந்த தன்மை தோன்ற இங்கும் ‘நொய்யது' என்றொரு சொல் வந்தமையாலும் மீண்டும் இழிவு தோன்றும்படி ‘துச்சில்' எனப்பாடங் கொள்ளுதல் சிறப்பன்று ; புக்கில் என்னும் பாடம் பொருட் போக்குக்கும் பொருந்தும். மிகச்சிறிய அளவுக்கும் மீந்தோல்நிலைமைக்கு ‘ஈச்சிறகு' கூறினார். காகத்தைக் கூறினமையின், புண் மிகுதி தோன்றிற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: தோல்போர்வை மேலும் தொளைபலவாய்ப் பொய்ம்மறைக்கும் மீப்போர்வை மாட்சித் துடம்பானால் - மீப்போர்வை பொய்ம்மறையாக் காமம் புகலாது மற்றதனைப் பைம்மறியாப் பார்க்கப் படும். குறிப்புரை: தோல் போர்வை மேலும் தொளை பல வாய் - தோலாலான போர்வையின் மேலும் தொளைகள் பலவாகி, பொய் மறைக்கும் மீ போர்வை மாட்சித்து உடம்பானால் - அவற்றின் உள் அழுக்குகளை மறைக்கும் மேற்போர்வையாகிய ஆடையின் பெருமையையுடையது இவ்வுடம்பென்றால், காமம் புகலாது -அவ்வுடம்பைக் காமத்தால் மகிழாமல், மீப்போர்வை பொய் மறையா - அம்மேற் போர்வையாகிய ஆடையை அழுக்கு மறைக்குந் திரையாகவும், மற்றதனை - மற்றொரு போர்வையாகிய தோற் போர்வையை, பை மறியா - ஒரு பையின் திருப்பமாகவும், பார்க்கப்படும் - நினைத்துப் பார்த்து விருப்பத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். கருத்து: உடம்பின் அழுக்குடைமையை எண்ணிப் பார்த்து அதன்மேல் உண்டாகும் அவாவை நீக்கிக்கொள்ள வேண்டும். விளக்கம்: பலவாய் என்னும் வினையெச்சம் காரணப்பொருட்டு ; தொளை பலவானமையால் மேலே ஆடை போர்க்க வேண்டியதாயிற்று என வருதலின். மாட்சித்து என்றது, இகழ்ச்சி. மறையா மறியாஇரண்டிடத்தும் ஈறு கெட்டது ; எண்ணும்மை விரித்துக் கொள்க. மற்றுபிறிதென்னும் பொருட்டு. பையின் உட்புறத்தை மேற்புறமாகத் திருப்பிப் பார்ப்பதுபோல என்றற்குப் ‘பைம்மறியா' எனப்பட்டது. இங்கே தோலின் உட்புறத்தை நினைத்துப் பார்க்க வேண்டுமென்பது கருத்து. பார்க்கப்படுமென்பது ஒரு வியங்கோள் ஈறு ; பார்த்து நீக்கப்படும் என்னுங் கருத்தும் அடங்கி நின்றது. "மக்கள் யாக்கை இதுவென உணர்ந்து மிக்கோய் இதனைப் புறமறிப் பாராய்" என்றார் பிறரும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: தக்கோலம் தின்று தலைநிறையப் பூச்சூடி பொய்க்கோலம் செய்ய ஒழியுமே - எக்காலும் உண்டு வினையுள் உறைக்கும் எனப்பெரியோர் கண்டுகை விட்ட மயல். குறிப்புரை: தக்கோலம் தின்று - தக்கோலம் முதலிய மணப்பொருள்களை வாயில் மென்று, தலை நிறையப் பூ சூடி - தலை நிரம்ப மணமலர் சூடி, பொய் கோலம் செய்ய - செயற்கை அழகுகளைச் செய்து கொள்வதனால், ஒழியுமே - நீங்கிவிடுமோ?, எக்காலும் உண்டி வினை உள் உறைக்கும் எனப் பெரியோர் கண்டு கைவிட்ட மயல் - எப்பொழுதும் உணவுத் தொழில் உள்ளே அழுக்கை மிதக்கும் என்று பெரியோர் தெரிந்து விருப்பத்தை ஒழித்த இவ்வுடம்பின் அழுக்கு. கருத்து: செயற்கையாக எவ்வளவு மணப்பண்டங்கள் ஊட்டினாலும் உண்ணுந்தொழில் அழுக்கை மிகுத்துக் கொண்டேயிருக்குமாதலால், இவ்வுடம்பின் மேல் விருப்பங் கொள்ளுதலிற் பயனில்லை. விளக்கம்: இயல்பல்லாத கோலம் பொய்க்கோலம் எனப்பட்டது. ஏகாரம், வினா. உறைத்தல் - தனது நிலையை மிகுவித்தல். மயல், அழுக்கென்னும் பொருட்டு. ‘மயல் ஒழியுமே' என்று கூட்டிக்கொள்க. ஒழியாது என்றபடி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: தெண்ணீர்க் குவளை பொருகயல் வேலென்று கண்ணில்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ உண்ணீர் களைந்தக்கால் நுங்குசூன் றிட்டன்ன கண்ணீர்மை கண்டொழுகு வேன். குறிப்புரை: தெள் நீர் குவளை - தெளிவான நீரில் உள்ள குவளைமலர், பொரு கயல் - புரள்கின்ற கயல்மீன், வேல் - வேற்படை, என்று - என்று சொல்லி, கண்இல் புன் மாக்கள் - மெய்யறிவில்லாத தாழ்ந்த மக்கள், கவற்ற விடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த இடம் விடுவேனோ, உள்நீர் களைந்தக்கால் - உள்ளுள்ள நீர் நீக்கப்பட்டால், நுங்கு சூன்றிட்டு அன்ன - நுங்கு தோண்டி விட்டாற்போன்ற, கண் நீர்மை கண்டு ஒழுகுவேன் - கண்ணின் இயல்பை அறிந்து பற்றற் றொழுகுவேனான நான். கருத்து: உடம்பின் அழுக்கியல்பு தெரிந்து அதன் கண் பற்றற் றொழுகுதல் வேண்டும். விளக்கம்: கண்களைக் குவளைமலர் என்றும் கயல்மீன் என்றும் ஒப்புமையாற் கூறும் மரபுபற்றி அவற்றைக் குறிப்பிட்டார். மாதரை அவர்க்குரிய பெண்மைப் பண்பு அறிந்து போற்றாமல் காமங் காரணமாக அவருடம்பை நச்சித் திரிவாரை உட்கொண்டு, ‘கண்ணில் புன்' என்றதன் மேலும் மக்கட்பண்பில்லாதவர் என்னுங் கருத்தால் மாக்கள் எனவுங் கூறினார். மாக்கள் என்பது மக்கட் பிறவியின் முன்நிலை. உள்நீர் - கண்ணின் உள்ளுள்ள நீர். கண்டொழுகுவேன் கவற்றவிடுவெனோ என்று கொள்க. ஓகாரம், எதிர்மறை. மேல்வருஞ் செய்யுட்கும் இவ்விளக்கத்திற் சில கொள்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: முல்லை முகைமுறுவல் முத்தென் றிவைபிதற்றும் கல்லாப்புன் மாக்கள் கவற்ற விடுவெனோ எல்லாரும் காணப் புறங்காட் டுதிர்ந்துக்க பல்லென்பு கண்டொழுகு வேன். குறிப்புரை: முறுவல் முல்லை முகை முத்து என்று - மாதர் பற்கள் முல்லையரும்புகள் முத்துக்கள் என்று, இவை பிதற்றும் - இப் புனைவுகளை அறிவின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்ற, கல்லாப் புன்மாக்கள் - மெய்ப்பொருள் கல்லாத தாழ்ந்த மக்கள், கவற்றவிடுவெனோ - எனதுள்ளத்தைக் கவலைப்படுத்த விடுவேனோ!, எல்லாரும் காணப்புறங்காட்டு உதிர்ந்து உக்க பல் என்பு - எல்லாரும் பார்க்கும் படி சுடலையில் பலவாய் வீழ்ந்து சிந்திய அவர்போன்றாருடைய பல்லெலும்புகளை, கண்டு ஒழுகுவேன் - பார்த்து அதனாற் பற்றற் றொழுகுவேனான நான். கருத்து: முன் செய்யுட்குக் கூறியதே கொள்க. விளக்கம்: பிதற்றுதல் - அறிவு மயங்கிச் சொல்லுதல். ஊருக்கும் புறம்பேயுள்ள காடாதலின், புறங்காடெனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: குடருங் கொழுவுங் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம் மற்றிவற்றுள் எத்திறத்தாள் ஈர்ங்கோதை யாள். குறிப்புரை: குடரும் கொழுவும் குருதியும் என்பும் தொடரும் நரம்பொடு தோலும் இடையிடையே வைத்த தடியும் வழும்பும் ஆம் இவற்றுள் - குடலும் கொழுமையும் குருதியும் எலும்பும் தசைநாரும் நரம்பும் தோலும் இவற்றின் இடையிடையே வைத்த தசையும் கொழுப்பும் ஆகின்ற இவ்வுடற் பொருள்களுள், எத்திறத்தாள் ஈர் கோதையாள் - எப்பகுதியைச் சேர்ந்தவள் இனிய மாலையையணிந்த மாது. கருத்து: பெண்மை யென்பது பெண்ணின் உடம்பில் இல்லை. விளக்கம்: பெண்ணுடம்பில், வெறுங் குடர் கொழு நரம்பு தோல் முதலியனவே உள ; ஆதலின் அவ்வுடம்பிற் பற்றுவைத்து அறத்தைக் கைவிடுதல் ஒவ்வாது என்றபடி . மேல் வழும்பு என வருதலின் கொழுவென்றது, இங்கே இளமைச் செழுமை, தொடர் வேறாகவும் நரம்பு வேறாகவும் கொள்க. மகளிரின் அழகிய பண்பை அவரது உயிரறிவில் வைத்துக் காணின் அவருடம்பிற் பற்று நீங்குமாகலின், இவ் வுடற்பொருள்களுள் மாது எப்பகுதியினள் என்றார். ஈர்-இனிமை: "ஈர்ங்கொடிக்கே" என்னுந் திருக்கோவை யார்க்குப் பேராசிரியரும் இவ்வாறு பொருளுரைத்தமை காண்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: ஊறி உவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனும் கோதிக் குழம்பலைக்கும் கும்பத்தைப் - பேதை பெருந்தோளி பெய்வளாய் என்னுமீப் போர்த்த கருந்தோலால் கண்விளக்கப் பட்டு. குறிப்புரை: ஊறி உவர்த்தக்க - அழுக்குகள் ஊறி அருவருக்குத் தக்க, ஒன்பது வாய்ப்புலனும் - ஒன்பது சந்திடங்களும், கோதிக் குழம்பு அலைக்கும் கும்பத்தை - சீய்த்து அவ் வழுக்குக் குழம்பை அசைத் தொதுக்கும் உடலாகிய ஒரு குடத்தை, பேதை - அறிவிலான ஒருவன், மீ போர்த்த கருந்தோலால் கண் விளக்கப்பட்டு - அவ்வுடம்பின் மேலே போர்த்த பசுந்தோலினால் அவன் கண்கள் ஒளி செய்யப்பட்டு அதனால், பெருந்தோளி பெய்வளாய் என்னும் - பெரிய தோளையுடையாளே இட்ட வளையலுடையாளே என்று சொல்லி அழைப்பான். கருத்து: உடம்பின் அழுக்கு நிலையை உணர்ந்து அதன்மேல் பற்று நீங்கி அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். விளக்கம்: ‘ஒன்பது இடங்களும் அழுக்கை ஒதுக்கும் படியான மலக்குடத்தைப், பேதையான், பெருந்தோளி பெய்வளாய் என்று அழைப்பான் , ‘என்பது தொடர் . மேல் போர்த்த தோல் உள் அழுக்கை மறைத்துத் தனது மேல் நிறத்தால் அவன் கண்களுக்கு அழகொளி தந்தன ; அதனால் அவன் கண்கள், உள் அழுக்கு உணர்ந்து இருளாமல் மேல் அழகு தெரிந்து விளக்கப்படுதலால், இங்ஙனம் அழைக்க விரும்பினன் என்பது. உண்மை இதுவாகலின், உடம்பின்மேற் பற்றறுகவென்பது கருத்தாயிற்று. தோளி :இயல்பு விளி. வளாய்ஈறு திரிந்த விளி. கண் விளக்கப்பட்டுகாரணப் பொருளது. கருமை, பசுமைப் பொருளில் வருதல், "கார்க் கரும்பின்," என்னுமிடத்துப் "பசிய கரும்பின்" என நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் அறிக.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: பண்டம் அறியார் படுசாந்தும் கோதையும் கண்டுபா ராட்டுவார் கண்டிலர்கொல் - மண்டிப் பெடைச்சேவல் வன்கழுகு பேர்த்திட்டுக் குத்தும் முடைச்சாகா டச்சிற் றுழி. குறிப்புரை: பண்டம் அறியார் - உடம்பாகிய பண்டத்தின் இயல்பை அறியாதவராய், படுசாந்தும் கோதையும் கொண்டு - அவ்வுடம்பின்மேல் அணியப்படும் சந்தனமும் மாலையுங் கருதி, பாராட்டுவார் - அவ்வுடம்பினமேற் பற்றுவைத் தொழுகுகின்றவர், கண்டிலர்கொல் - அறிந்திலர் போலும் ! மண்டி - நெருங்கி, பெடைச் சேவல் வன்கழுகு - பெண்ணும் ஆணுமான வலிய கழுகுகள், பேர்த்திட்டுக்குத்தும் முடைச் சாகாடு - உறுப்புக்களைப் புரட்டிக் குத்துகின்ற முடைநாற்றமுடைய இவ்வுடம்பாகிய வண்டியை, அச்சு இற்ற உழி - அவ் வண்டிக்கு அச்சுப்போன்றதான உயிர் முறிந்துவிட்டபோது. கருத்து: செயற்கை யழகுகளால் இவ்வுடம்பைத் தூயதாகக் கருதிக்கொள்ளாலாகாது. விளக்கம்: பண்டம் என்றார், இழிவு கருதி, படுசாந்து - அணிந்த சாந்து. ‘முடைச் சாகாட்டை அதன் அச்சு இற்றபோது கண்டிலர் கொல் ' என்று கொள்க. அப்போது அதனைக் கண்டால் கழுகுகள் அதனைப் புரட்டிக் குத்தும் இயல்பு தெரியும் என்பது கருத்து. சாகாடு - வண்டி. உடம்பை வண்டி யென்றமையின் அதன் இயக்கத்துக்குக் காரணமான அச்சு உயிராயிற்று. ‘மண்டிப் பேர்த்திட்டுக் குத்தும் முடைச் சாகாடு,' என்று கூட்டுக. ‘குத்தல், என்னும் பாடம் கட்டுரைச் சுவைஉடையதன்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: கழிந்தார் இடுதலை கண்டார்நெஞ் சுட்கக் குழிந்தாழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - ஒழிந்தாரைப் போற்றி நெறிநின்மின் இற்றிதன் பண்பென்று சாற்றுங்கொல் சாலச் சிரித்து. குறிப்புரை: கழிந்தார் இடுதலை - இறந்துபோன வரது எரிக்கப்பட்ட தலை ஓடு, கண்டார் நெஞ்சு உட்கக் குழிந்து ஆழ்ந்த கண்ணவாய்த் தோன்றி - பார்த்தவர் மனம் அஞ்சும்படி உட்குழிந்து ஆழ்ந்த கண்ணிடங்களையுடையனவாய் இடுகாட்டில் தோன்றி, ஒழிந்தாரை - இறவாதிருக்கும் மற்றவரை, சிரித்து - ஏளனமாக நகைத்து, இற்று இதன் பண்பு - இவ்வுடலின் இயல்பு இப்படிப்பட்டது, போற்றி நெறி நில்மின் - அறத்தைக் கடைப்பிடித்து அவ்வழியில் நில்லுங்கள், என்று சாற்றுங்கொல் - என்று சொல்லும் போலும் ! கருத்து: அறம் கடைப்பிடித்து அந்நெறியில் நிற்க வேண்டும். விளக்கம்: இடுதலை என்பதில், இடுதல் நெருப்பிலிடுதல் என்னுங் கருத்துடையது ; இடுகாடு எனப்பட்டதும் இப்பொருட்டு. ‘ஒழிந்தாரைச் சிரித்துச் சாற்றுங்கொல்' என்று கொள்க. கழிந்தார் என முன் வந்தமையின் ஒழிந்தார் இனி இறக்கவிருப்பார் மேல் நின்றது. இயல்பு கூறுதலின் ‘இற்று' எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் தூய்தன்மை பாடல்: உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச் செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார் கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர் பண்டத்துள் வைப்ப திலர். குறிப்புரை: உயிர் போயார் வெண்தலை - உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை, உட்கச் சிரித்து - கண்டார் அஞ்சும்படி நகைத்து, செம்மாப்பவரைச் செயிர் தீர்க்கும் - இவ்வுடம்பின் காரணமாக இன்புறுகின்றவரை அக் குற்றத்தினின்றும் விடுவிக்கக் கூடும், செயிர் தீர்ந்தார் - இதற்குமுன் இயல்பாகவே அப்பிழை நீங்கினவர், கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் - தாமே அறிந்து இத்தகையது இவ்வுடம்பின் தன்மை என்னுங் கருத்தினால், தம்மை ஓர் பண்டத்துள் வைப்பது இலர் - தமதுடம்பை ஒரு பொருளில் வைத்து மதிப்பதிலர். கருத்து: உடம்பின் தூயதல்லாத தன்மையை நினைத்தால், அதனை இன்புறும் பற்றுள்ளம் நீங்கும். விளக்கம்: வெண்டலை - இடுகாட்டில் உருளுந் தசை நீங்கிய தலை. செம்மாத்தல் - இன்பத்தால் இறுமாந்திருத்தல். "மிகப்பட்டுச் செம்மாக்குங் கீழ்," என்றார் நாயனார் . தம்மையென்பது, இங்கே அவரதுடம்பை.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பாடல்: துறவுவிளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன் தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய் தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை தீர்விடத்து நிற்குமாம் தீது. குறிப்புரை: விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு - ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவன் தவத்தின் முன் நில்லாது பாவம் - ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் அதற்குமுன் செய்ததீவினை நில்லாது, விளக்கு நெய் தேய்விடத்து - விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருள் பாய்ந்தாங்கு - இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை தீர்விடத்து நிற்கும் தீது - நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும். கருத்து: இடைவிடாமல் தவஞ் செய்யவேண்டும். விளக்கம்: விளக்கென்பது தவம்விளக்கெரிவதற்குக் காரணமான நெய்யென்பது, தவம் நிகழ்தற்குக் காரணமான நல்வினை என்று கொள்க. முன் நல்வினையினாலேயே தவம் நிகழுமென்பது, "தவத்தால் தவம் செய்யாதார்" என்று முன் வந்தமையின் பெறப்படும். ஆம்இரண்டிடத்தும் அசை. புக மாய்ந்தாங்கு எனவும் தேய்விடத்துப் பாய்ந்தாங்கு எனவும் வருதலால், தவம் இடை விடாமாற் செய்யப்படும் என்பது பெறப்பட்டது. இஃது உவமையணி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித் தலையாயார் தங்கருமம் செய்வார் - தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும் என்றாங் கிவைபிதற்றும் பித்தரின் பேதையார் இல். குறிப்புரை: நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி - நிலையாமையியல்பும் பல பிணிகளும் மூப்புத் தன்மையும் இறப்புத் துன்பமும் இவ்வுடம்புக்கு உள்ளன என்று நினைத்து, தலையாயார் - சிறந்தவர்கள், தம் கருமம் செய்வார் - தமது கடமையாகிய தவமுயற்சியைச் செய்வார்கள், தொலைவு இல்லா சத்தமும் சோதிடமும் என்றாங்கு இவை பிதற்றும் பித்தரின் - கற்று முடிதலில்லாத இலக்கண நூலும் கோள் நூலும் என்று இவை போல்வன கூவிக்கொண்டிருக்கும் பித்தரைவிட, பேதையார் இல் - அறிவிலாதவர் பிறர் இல்லை. கருத்து: இலக்கணம் முதலிய கருவி நூல்களையே என்றுங் கற்றுக்கொண்டிராமல் நிலையாமை முதலியன உணர்ந்து உடனே தவஞ்செய்ய வேண்டும். விளக்கம்: எண்ணும்மையும் ‘உள்ளன' வென்னும் ஒரு சொல்லெச்சமும் வருவித்துக் கொள்க. முதலில் நிலையாமை கூறினமையின், நோய் மூப்புச் சாக்காடு என்பன அவற்றால் வருந் துன்பங்களை உணர்த்தி நின்றன. தவம் உயிர்க்குரிய முயற்சியாதலின், தம் கருமம் எனப்பட்டது. "தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்" என்னும் பெருநாவலர் திருமொழியும் இங்கு நினைவு கூரற்குரியது. நல்வினை செய்யாமல் தீவினை செய்வார் கடையானவரும், மறுபிறவியின் நற்பயன் கருதி நல்வினை செய்வார் இடையானவரு மாகலின், பிறவியையே அஞ்சிப் பயன் கருதாது, தம் கடமையென்று கடைப்பிடித்துத் தவஞ்செய்வார் தலையானவரானார். கற்கக் கற்கத் துணிவு பெறாமல் பல்வேறு ஐயங்களுடன் முடிவின்றிச் செல்லுதலின், ‘தொலைவில்லாச் சத்தமும் சோதிடமும்' என்றார். ‘கலகல கூஉந் துணைல்லால்' என்றலின், இலக்கணம் இங்கே ‘சத்தம்' என்னுஞ் சொல்லாற் குறிக்கப்பட்டது; இலக்கண நூல் உணர்ச்சியே நல்ல கல்வித் திறமாதலாலும் அக்கருவிக் கல்வியைத் தக்கவாறு கற்றுக் கொண்டு உடனே மெய்யுணர்விற் செல்லுதல் வேண்டுமாதலானும் ‘சத்தம்' என்பதையும், நடப்பன நடக்குமென்று துணிந்து தவமுயலாமல் வாழ்நாள் நலங்களையே மேலும் மேலும் விரும்பிக் கோள் நூலையே அலசிக் கொண்டிருத்தல் நன்றாகாதாதலால் ‘சோதிடம்' என்பதையுங் குறித்தார். என்றாங்கு இவை யென்பதற்கு ‘என்று இவை போல்வன' என்றுரைத்துக் கொள்க. பிதற்றல் - அறிவின்றி இடைவிடாமற் கூறிக் கொண்டிருத்தல். கற்றும் மெய்யுணர்விற் செல்லாமையின் கல்லாதாரினும் இவர் பேதையார் என்றற்கு, ‘இவை பிதற்றும் பித்தரின் பேதையார் இல்' எனப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல நிலையாமை கண்டு நெடியார் துறப்பர் தலையாயார் தாம் உய்யக் கொண்டு. குறிப்புரை: இல்லம் இளமை எழில் வனப்பு மீக்கூற்றம் செல்வம் வலி என்று இவையெல்லாம் - இல்வாழ்வு, இளமை, எழுச்சி, அழகு, உயர்சொல், பொருள், வலிமை என்று இப்பேறுகளெல்லாம், மெல்ல நிலையாமை கண்டு - மெல்ல மெல்ல நிலையாமற் போதலை அறிந்து, தலையாயார் - பெரியோர்கள், தாம் உய்யக்கொண்டு - தாம் உய்யுங் கருத்துக்கொண்டு, நெடியார் துறப்பர் - காலம் நீட்டியாதவராய் உடனே இருவகைப் பற்றுந் துறப்பர். கருத்து: நிலையாமை உணர்ந்து துறவுள்ளங் கொள்வோரே துன்பங்களினின்றும் பிழைப்பவர். விளக்கம்: எழில் இளமையின் கொழுந்து ; அஃதாவது அதன் வளர்ச்சி நிலையாகிய தோற்றப்பொலிவு ; வனப்பு - உறுப்புக்களின் திருந்திய அமைப்பு ; "சீயமன்னான் இளமையும் வனப்பும் ஏரும்" என்றார் பிறரும். மீக்கூற்றம் - மேம்பாடான சொல் ; என்றது, தன் சொல் உலகத்திற் செல்லுதலை. இல்லம் என்பதிற்போலக் கூற்றம் என்பதிலும் அம் சாரியை. வலி - துணைவலி முதலியன. ஒவ்வொன்றாக நிலையாமற் போதலின் ‘மெல்ல நிலையாமை' யென்றார். தலையாயார் நிலையாமைக் கண்டு தாம் உய்யக் கொண்டு நெடியாராய்த் துறப்பர் என்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: துன்பம் பலநாள் உழந்தும் ஒருநாளை இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையா றடைவொழிந்தார் ஆன்றமைந் தார். குறிப்புரை: ஏழையார் - அறிவிலார், துன்பம் பல நாள் உழந்தும் - பல நாட்கள் துன்பத்தால் வருந்தியும், ஒரு நாளை இன்பமே - சிறிதுபோழ்து நுகரும் ஒரு நாளைய இன்பத்தையே, காமுறுவர் - விரும்புவார் ; ஆன்று - கல்வி கேள்விகளால் நிறைந்து, அமைந்தார் - அதற்குத் தக்கபடி அடங்கி யொழுகும் பெரியோர், இன்பம் இடை தெரிந்து -இன்பம் அங்ஙனம் இடையே சிறிது உளதாதல் தெரிந்து - இன்னாமை நோக்கி - துன்பத்தின் மிகுதியை அறிந்து மனை ஆறு - இல் வாழ்க்கையின் வழியில், அடைவு - சார்ந்து நிற்பதை, ஒழிந்தார் - நீங்கினார். கருத்து: உலகத்திற் பல துன்பங்களினிடையிற் சிறிது இன்பமுண்டாதலின், அந் நிலை தெரிந்து தவம் முயலுதல் வேண்டும். விளக்கம்: ‘நுண்ணுணர்வின்மை வறுமை அஃதுடைமை செல்வம்,' ஆதலின் இங்கே ஏழையார் என்றது அறிவில் வறுமையுடையாரை. மனையாறு அடைவொழிந்தார் என்றது, மேன்மேலும் இளமை துய்த்தலிற் பற்றுள்ளம் நீங்கினாரென்றற்கு.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: கொன்னே கழிந்தன் றிளமையும் இன்னே பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி பிணியொடு மூப்பும் வருமால் - துணிவொன்றி என்னொடு சூழா தெழுநெஞ்சே போதியோ நன்னெறி சேர நமக்கு. குறிப்புரை: கொன்னே கழிந்தன்று இளமையும் - இளமைப் பருவமும் வீணே கழிந்தது, இன்னே பிணியொடு மூப்பும் வரும் - உடனே நோயோடு கிழத்தனமும் வரும், ஆல் - ஆதலால், துணிவு ஒன்றி என்னொடு சூழாது எழு நெஞ்சே - துணிதல் பொருந்தி என்னோடு ஆராயாமல் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே, போதியோ நல் நெறி சேர நமக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் வருகின்றனையா ? கருத்து: புலன்வழிச் செல்லுதலைத் தவிர்த்து மனத்தைஅறவழியிற் செலுத்துதல் வேண்டும். விளக்கம்: கழிந்தன்று - கழிந்தது ; அன்சாரியை இன்னே - உடனே என்னும் பொருட்டு ; இது நெஞ்சத்தின் இயல்பு கூறித் திருத்திபடியாம்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: மாண்ட குணத்தொடு மக்கட்பே றில்லெனினும் பூண்டான் கழித்தற் கருமையால் - பூண்ட மிடியென்னும் காரணத்தின் மேன்முறைக் கண்ணே கடியென்றார் கற்றறிந் தார். குறிப்புரை: மாண்ட குணத்தொடு மக்கட்பேறு இல் எனினும் - திருமணம் ஆனபின் மனைவிக்கு மாட்சிமைப்பட்ட குணத்தோடு குழந்தைப்பேறும் இல்லை யென்றாலும், பூண்டான் கழித்தற்கு அருமையால் - கொண்ட கணவன் அவளை விட்டுவிடுவதற்கு அருமையாகுமாதலால், பூண்ட மிடி என்னும் காரணத்தின் - மேலும் தனக்கு உண்டாகும் வறுமை யென்னும் காரணமுங்கொண்டு, மேன்முறைக் கண்ணே - மேலான ஒழுக்க நெறியிலே, கடி என்றார் கற்றறிந்தார் - பற்றினை நீக்கு என்றனர் கற்றறிந்தோர். கருத்து: இளமையிலேயே தவம் முயலுதல் நல்லது. விளக்கம்: காரணத்தின் என்பதற்கு காரணத்தினாலும் என இறந்தது தழீஇய எச்சவும்மை கொள்க. மேலான ஒழுக்கநெறி யென்றது, இங்கே தவநெறி, அந்நெறிக்கண் நிற்கும் ஆற்றலாலேயே பற்றினைக் கடியும் உள்ளம் தோன்றுதலின், ‘மேன்முறைக் கண்ணே கடி' யென்றார் எனப்பட்டது. "அப்பற்றைப் பற்றுக, பற்று விடற்கு," என்பதனானும் இம்முறைமை பெறப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத் தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால் நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம் காக்கும் திருவத் தவர். குறிப்புரை: ஊக்கித் தாம் கொண்ட விரதங்கள் உள் உடைய - முயன்று தாம் மேற்கொண்ட நோன்புகள் உள்ளத்தில் தளர்வடையும்படி, தாக்க அருந் துன்பங்கள் தாம் தலைவந்தக்கால் - போக்குதற்குரிய துன்பங்கள் தம்மிடம் வந்தடைந்தால், நீக்கி நிறூஉம் உரவோரே - எப்படியானும் அத் துன்பங்களைப் போக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளும் வலியுடையோரே, நல்லொழுக்கம் காக்கும் திருவத்தவர். துறவொழுக்கத்தினைக் காத்துக் கொள்ளும் பேறுடையவராவர். கருத்து: இன்னல்களை எதிர்த்துத் தவம் முயலுதல் வேண்டும். விளக்கம்: ‘தாங்கரு' என்பது ‘தாக்கரு' என வலித்ததெனினும் ஒக்கும். ‘துன்பங்கள் தாம்' என்பதில் தாம் சாரியை, நிறூஉம் - நிறுத்தும் ; உள்ள உரம் உடையோரே இடைவரும் இன்னல்களை நீக்கித் தம் நோன்புகளை நிலை நிறுத்திக் கொள்ளுதல் கூடுமாகலின், ‘உரவோரே ' என்றார். ஏகாரம் பிரிநிலை. நல்லொழுக்க மென்றது இங்கே துறவொழுக்கத்தை. திருவத்தவர் என்பதில் ‘அத்து' ‘அ' சாரியைகள். முற்றுகர ஈறு, வேற்றுமையில் அத்துச் சாரியையுடன் வகர உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்தமை, ‘கிளந்தவல்ல' என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: தம்மை யிகழ்ந்தமை தாம்பொறுப்ப தன்றிமற் றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் - உம்மை எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று பரிவதூஉம் சான்றோர் கடன். குறிப்புரை: தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி - காரணமின்றித் தம்மைப் பிறர் இகழ்ந்தமையைத் தாம் பொறுத்துக் கொள்வதல்லாமல், எம்மை இகழ்ந்த வினைப் பயத்தால் - எம் போல்வாரை இங்ஙனம் இகழ்ந்த தீவினையின் பயனால் , உம்மை - மறுமையில், எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று - ஒரு கால் அழலிடமான நரகத்தில் அவர் வீழ்வரோ என்று, பரிவதும் சான்றோர் கடன் - இரங்குவதும் தவம் நிறைந்தவரது கடமையாகும். கருத்து: தவமுயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர் பால் பொறுமையும் இரக்கமுங் கொள்ளவேண்டும். விளக்கம்: மற்று ; வினைமாற்றுப் பொருளது. எம்மை தன்மைப் பன்மை; தனித்துத் தம்மை நினையாராகலின் பிறரையும் உட்கொண்டே ‘எம்மை' யெனக் கூறுவரெனக் கொள்க. நல்லோர்பாற் பிழை செய்தமையின் அவரிரக்கத்தால் ஒருகால் உய்தலும் கூடுமாதலின், ‘வீழ்வர்கொல் ' என்பதிற் ‘கொல்' என்பதை ஐயப்பொருட்டாகவே கொள்ளுதலில் இழுக்கில்லை. சான்றோர் பரிவையும் அது மிகுதிப்படுத்தும், சான்றோர் அவர்பாற் பரிவு கொள்ளா விட்டால், அவருள்ளம் ஒருகால் அப்பிழை செய்தோர்க்குக் கேடு நினைந்து தன்னையே மாசுபடுத்திக் கொள்ளவும் கூடுமாதலாலும், தவத்தோர் நல்லது நினைத்தால், அவர் ஆற்றலுடையோராதலின், பிழை செய்தவர் திருத்தவுங் கூடுமாதலாலும் அங்ஙனம் பரிவதனைக் ‘கடன்' என்றார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய் கலங்காமற் காத்துய்க்கும் ஆற்ற லுடையான் விலங்காது வீடு பெறும குறிப்புரை: மெய் வாய் கண் மூக்கு செவி எனப் பேர் பெற்ற - , ஐ வாய வேட்கை அவாவினை - ஐந்து வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை , கலங்காமல் காத்து - தீயவழிகளில் நிலைமாறிச் செல்லாமல் பாதுகாத்து, கைவாய் உய்க்கும் ஆற்றலுடையான் - ஒழுக்கநெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே, விலங்காது வீடு பெறும் - தவறாமல் வீடுபே றடைவான். கருத்து: ஐம்புல விருப்பங்களை ஒழுக்கநெறியிற் செலுத்தி உய்தல் வேண்டும். விளக்கம்: பேர், பெயர் என்பதன் மரூஉ. வேட்கை - பற்றுள்ளம் அவா - அதனாலுண்டாகும் விருப்பம். நச்சினார்க்கினியர் கருத்தும் இது. கை - ஒழுக்கம் ; கைவாய் உய்க்கும் எனக் கூட்டிக் கொள்க. ‘கலங்காமற் காத்து' என்பது இடைப் பிறவரலாதலின் ‘கைவாய் கலங்காம' லென ஒற்று மிகாது இயல்பாயிற்று. விடுதலை, பற்றுக்களினின்றும் விடுதலை. புலனடக்கம் என்பது, அதனை நல்வழியிற் செலுத்தலே என்று இதன்கண் அறிவுறுக்கப்பட்டமை கருத்திருத்துதற்குரியது; "ஐந்தும் அடக்கா அறிவறிந்தேனே," என்றார் பிறரும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் துறவு பாடல்: துன்பமே மீதூரக் கண்டும் துறவுள்ளார் இன்பமே காமுறுவர் ஏழையார் - இன்பம் இசைதொறும் மற்றதன் இன்னாமை நோக்கிப் பசைதல் பரியாதாம் மேல். குறிப்புரை: துன்பமே மீதூரக் கண்டும் - வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து வருதல் உணர்ந்தும் ; துறவு உள்ளார் - பற்றில்லாமலிருத்தலை நினையாராய், இன்பமே காமுறுவர் ஏழையார் - இடையே தினையளவாக உண்டாகும் இன்பமே விரும்பி நிற்பார் மனவலிமையில்லாதார், இன்பம் இசைதொறும் - ஆனால் அச் சிற்றின்பம் கிடைக்கும்போதெல்லாம், அதன் இன்னாமை நோக்கி - அதனால் உண்டாகும் பெருந்துன்பங் கருதி, பசைதல் பரியாதாம் மேல் - அதனை விரும்புதலை மேற்கொள்ளார் மேலோர். கருத்து: வாழ்க்கையிற் சிறிய இன்பத்துக்காகப் பெருந்துன்பம் உண்டாதலின், அச் சிற்றின்பத்திற் பற்று வைக்கலாகாது, விளக்கம்: ஏகாரங்கள் பிரிநிலை. உள்ளவலியில்லாதவராதலின், இரக்கந் தோன்ற ‘ஏழையார்' என்றார். இசைதல் வந்து பொருந்துதல் ; கிடைத்தல் . மற்று ; அசை பரிதல், "காய்பரீஇ" என்புழிப்போலக் கொள்ளுதற் பொருளில் வந்தது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: மதித்திறப் பாரும் இறக்க மதியா மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார் காயும் கதமின்மை நன்று. குறிப்புரை: மதித்து இறப்பாரும் இறக்க - தம்மைப் பொருள் செய்து நடப்பாரும் நடக்கட்டும் ; மதியா மிதித்து இறப்பாரும் இறக்க - அங்ஙனம் மதியாமல் கீழ்ப்படுத்தி நடப்பாரும் நடக்கட்டும், மிதித்து ஏறி ஈயும் தலைமேல் இருத்தலால் - ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் இருத்தலினால், அஃது அறிவார் -அந் நிலைமையைத் தெரிந்து சிந்திக்குஞ் சான்றோர், காயும் கதம் இன்மை நன்று - எரிந்து விழுஞ் சினமிலராயிருப்பது நல்லது. கருத்து: பிறர் மதித்தாலும் மதிக்காவிட்டாலும் சான்றோர் சினம் கொள்ளலாகாது. விளக்கம்: இறத்தல் இங்கே ஒழுகுதல் என்னும் பொருட்டு. மதியாஈறு கெட்டு நின்றது. உம்மைகள், எச்சம். தாழ்ந்ததென்று கூறும்பொருட்டு ஈயைக் கூறினார். "ஈச்சிறகு அன்னதோர் தோல் அறினும்" என முன்னும் வந்தது. கதம் இன்மை கதம் உடையராகாமை .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: தண்டாச் சிறப்பின்தம் இன்னுயிரைத் தங்காது கண்டுழி யெல்லாம் துறப்பவோ - மண்டி அடிபெயரா தாற்ற இளிவந்த போழ்தின் முடிகிற்கும் உள்ளத் தவர். குறிப்புரை: மண்டி அடிபெயராது ஆற்ற இளிவந்த போழ்தின் - அடர்ந்து அடிதவறாமல் அடுக்கி மிக்க இழிவு நேர்ந்த காலங்களில், முடிகிற்கும் உள்ளத்தவர் - தாம் மேற்கொண்ட காரியங்களை முடிக்கும் ஊக்கமுடைய நல்லோர், தண்டாச் சிறப்பின் தம் இன் உயிரை - அழியாச் சிறப்பினையுடைய தமது இனிய உயிரை, தங்காது கண்டுழியெல்லாம் துறப்பவோ - சிறிதே இடர் கண்ட நேரங்களிலெல்லாம் பொறுத்துத் தாங்கிக்கொண்டிராமல், சினந்து விட்டு விடுவார்களோ? கருத்து: இடர்கள் கண்டு சினத்தால் உயிரை விடுதல் ஆகாது. விளக்கம்: கண்டதற்கெல்லாம் உயிரை இழக்குமளவுக்குச் சினம் மிகுவாரை நோக்கிற்று இச்செய்யுள். வீடுபேறடையும் அழியாத பேரின்பச் சிறப்புக்குரிய இனிய உயிராதலின் ‘தண்டாச் சிறப்பின் இன் உயிர்' எனப்பட்டது. ஓவினா. அடிபெயராதென்றதனால், அடுக்கி வருதல் உணர்த்தினார். முடிகிற்கும் என்பதிற் ‘கில்' ஆற்றலுணர்த்துவதோர் இடைநிலையாகலின், இடத்திற்கேற்ப அது பயன்படுத்தப்பட்டது. தெளிவு பெறுதற்குத் தோன்றிய, பிறவியை அந்நோக்கத்துக்கு மாறாக வீணே இழந்து விடுலாகாமையின், இச்செய்யுள் அந்நோக்கத்தையும் எடுத்துக்காட்டி அவ்வுள்ளத்தவர் துறப்பரோ என அறிவுறுத்திற்று.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: காவா தொருவன்தன் வாய்திறந்து சொல்லுஞ்சொல் ஓவாத தன்னைச் சுடுதலால் - ஓவாதே ஆய்ந்தமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் காய்ந்தமைந்த சொல்லார் கறுத்து. குறிப்புரை: காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - அடக்காமல் சினத்தினால் ஒருவன் தன் வாய்விட்டுச் சொல்லியே சினச்சொல், ஓவாது தனனைச் சுடுதலால் - என்றைக்குமே தன்னை வருத்துதலால், ஓவாதே ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் - இடைவிடாமல் ஆராய்ந்து பண்பட்ட கேள்வி ஞானத்தையுடையவர்கள், எஞ்ஞான்றும் - எப்பொழுதும், காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து - மனம் வெதும்புதலால் அமைந்த சுடுமொழிகளைச் சினந்து சொல்லமாட்டார்கள். கருத்து: சினப்பது தன்னையே சுடுமாதலால், பண்பட்ட உள்ளமுடையோர் சினங்கொள்ளார். விளக்கம்: உள்ளடங்காது வெளிவருதல் தோன்ற ‘வாய் திறந்து ' எனப்பட்டது. ஏகாரங்கள் இரண்டனுள் முன்னது தேற்றம் ; மற்றது அசை . வருத்துதலின் மிகுதி தோன்றச் ‘சுடும்' என்றார் ‘ஆய்ந்தமைந்த ' என்பது கேள்விக்கு அடைமொழி. ஓவாதே உடையார் எனக் கொள்க. ஆய்தல் - நூலான் வந்த அறிவைத் தம் பழக்கத்தால் உணர்ந்து முடிவு செய்தல். அமைதல் - அம் முடிவின் வழிப் பண்படுதல். ‘காய்ந்தமைந்த' என்னுமிடத்துக் ‘காய்ந்து ' காரணப்பொருட்டும், ‘அமைந்த' அமைந்த சொற்கள் என்னும் பொருட்டுமாம். ‘கறுத்தல்'உரிச் சொல் அடியாகப் பிறந்த சொல். சினமில்லாமலித்ததற்குப் பண்பட்ட கேள்வி ஞானம் இன்றியமையாததென்னும் உண்மையும் இச்செய்யுட்கண் அறிவுறுத்தப்பட்டமை கண்டு கொள்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: நேர்த்து நிகரல்லார் நீரல்ல சொல்லியக்கால் வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத் துள்ளித்தூண் முட்டுமாம் கீழ். குறிப்புரை: நேர்த்து நிகரல்லார் - சமானமில்லாதவர்கள் தம்மைச் சமானாமாகக் கருதிக்கொண்டு, நீரல்ல சொல்லியக்கால் - தகைமையல்லாத சொற்களைச் சொன்னால், வேர்த்து வெகுளார் விழுமியோர் - சிறந்தவர்கள் மனம் புழுங்கிச் சினந்து கொள்ளமாட்டார்கள் ; ஆனால் ; கீழ் - கீழ்மக்கள், ஓர்த்து அதனை உள்ளத்தான் உள்ளி - ஆராய்ந்து அத் தகைமையற்ற சொல்லை மனத்தாற் பலகாலும் நினைத்து, உரைத்து உராய் ஊர் கேட்ப - ஊரிலுள்ளவர்கள் கேட்கும்படி அங்கங்கும் சொல்லித் திரிந்து, துளளித் தூண்முட்டும் - அதனால் மேன்மேலும் பெருகுங் கோபத்தினால் உடம்பு துடித்து அருகிலிருக்குந் தூணில் மோதிக் கொள்வார்கள். கருத்து: தகுதியல்லாதவர்கள் சொல்லும் சொற்களுக்குச் சான்றோர் சினந்து கொள்ளமாட்டார்கள். விளக்கம்: ‘நிகரல்லார் சொல்லியக்கால் வெகுளாரெனவே, நிகருள்ளோரும் மிக்கோரும் தக்கவை சொல்லின் அவற்றின் வழி விரும்பித் திருந்துவர் என்பது அருத்தாபத்தியாற் பெறப்படும். வேர்த்து வெகுளா ரென்றதனோடு அச்சொல்லை அறிவான் ஓரார் ; உள்ளத்தான் உள்ளார் ; பிறர்பாற் சென்று கூறார் ; இழிதகைமையாகத் துள்ளி முட்டிக் கொள்ளார் என்பனவும் ஏனையோர் செயலாகக் கூறியவற்றினின்று எதிர்முகமாகக் கூட்டிக்கொள்க. ஓர்த்தல், அறிவினால் அதன் தகைமையின்மையை ஆராய்ந்து பகைமை கொள்ளுதல் ; பின்பு உள்ளல் என்றது, அப்பகைமையை மேலுமேலும், நினைந்து நெடுங்காலம் உள்ளத்து நிகழச்செய்தல். "இகலொடு செற்றம்" என்பதன் உரை இங்கு நினைவுகூரற்பாலது. உராய் - உலாவி, திரிந்தென்னும் பொருட்டு. சினத்தை அடக்கமாட்டாத எளிமை மிகவுந் தோன்றத் ‘துள்ளித் தூண் முட்டுமாங் கீழ்,' என்றார். ஆம்அசை.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: இளையான் அடக்கம் அடக்கம் கிளைபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன் - எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. குறிப்புரை: இளையான் அடக்கம் அடக்கம் - இளமைப் பருவமுடையவனது புலனடக்கமே அடக்கமெனப்படும், கிளைபொருளில்லான் கொடையே கொடைப்பயன் - கிளைக்கும் பொருளில்லாதவனது ஈகையே பயனெனப்படும் ஈகையாம்எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் பொறுக்கும் பொறையே பொறை - எதனையும் அழிக்க வல்ல வலிமையறிவினை யுடையோன் பொறுத்துச் சினம் ஆறும் பொறுமையே பொறுமை யெனப்படும். கருத்து: தமது சினம் செல்லக்கூடிய இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும். விளக்கம்: அடக்கம் என்னுமிடத்தில் பிரிநிலை ஏகாரங் கூட்டுக. கிளைக்கும் பொருளென்றது பலமுகமாக மேன்மேற பெருகுஞ் செல்வத்தை. பொருளாலாம் பயன் கொடையாதலின், கொடைப் பயன் எனப்பட்டது. எல்லாம் என்றது, எத்தகையதனையும் என்னும் பொருட்டு. ஒறுத்தல் - இங்கு அழித்தல். ‘எல்லாம் ஒறுக்கும்' என்ற குறிப்பால், உரனுடையாளன் என்றது, தவமுடையானை. வலிமை மிக்க அறிவு தவ அறிவேயாதலின், மதுகையுர மெனச் சிறப்பிக்கப்பட்டது. அதிகாரம் நோக்கி, முன்னிரண்டு கருத்துக்களை ஏனையதற்கு உவமமாகக்கொள்க. இங்கே காட்டிய அடக்கம் முதலியனவே உள்ளமாட்சிமைக் காவன வென உரைத்தபடி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: கல்லெறிந் தன்ன கயர்வாய் இன்னாச்சொல் எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம் குடிமையான் வாதிக்கப் பட்டு. குறிப்புரை: ஒல்லை இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் - மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படம் சுருங்கிச் சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப்போல, தத்தம் குடிமையான் வாதிக்கப்பட்டு - தங்கள் உயர்குல ஒழுக்கத்தால் தடை செய்யப்பட்டு, கல் எறிந்தன்ன கயவர் வாய் இன்னாச் சொல் - கற்களை வீசினாற் போன்ற கீழ்மக்கள் வாயிற்றோன்றிய துனபச் சொற்களை, எல்லாரும் காணப் பொறுத்து உய்ப்பர் - அனைவரும் அறியப் பெரியோர் பொறுத்துக் கொண்டு தமது மேற்கோளை நடத்திச் செல்வர். கருத்து: தமது உயர்நிலை கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். விளக்கம்: ‘எறிந்தன்ன இன்னாச்சொல்,' என்க. ‘கயவர்' என்பதற்குக் "குணங்கள் யாவும் இலராய கீழோர்" என்று உரை கூறுவார் பரிமேலழகர். பொறுப்பதினும், பலரெதிரிற் பொறுத்துக் கொள்வது அரியதொன்றாதலின், ‘எல்லாருங் காணப்பொறுப்பர்' என்றார். ஒல்லை, உடனே பை - படம் ; அவிந்த - அவிந்து ஒடுங்கிய. தத்தம் என்னும் அடுக்குப் பன்மை. உயர்குலம் என்றது, நல்லோர் கூட்டம் ; அவரிணக்கத்தால் உண்டாகும் பெருந்தன்மையான ஒழுக்கமே உயர்குலவொழுக்கம் எனப்பட்டது. குடிமை யென்றது அது ; அஃதாவது, பெருந்தன்மை. கயவர் என வந்தமையின், பொறுத்துய்ப்பவர் பெரியோர் எனப்பட்டது. மேற்கோளை என்றது, தம் நற்கொள்கைகளை, ‘கல்லெறிந்தன்ன' என்றமையால் இன்னாச் சொல்லால் உண்டாகுஞ் சுறுக்கென்ற துன்பமும், ‘பையவிந்த நாகம்' என்றமையாற் சீற்றந் தணிதலும் பெறப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: மாற்றாராய் நின்றுதம் மாறேற்பார்க் கேலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையார் - ஆற்றாமை நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாம் அவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று. குறிப்புரை: மாற்றாராய் நின்று தம் மாறு ஏற்பார்க்கு - தமக்குப் பகைவராயிருநது அப் பகைமையைப் பாராட்டுகின்றவர் பொருட்டு, ஏலாமை ஆற்றாமை என்னார் அறிவுடையோர் - தாமும் அப்பகைமையைப் பெரியோர்கள் மேற்கொள்ளாமையை அறிவுடையோர் மாட்டாத தன்மை என்று சொல்லி இகழமாட்டார்கள் ; ஆற்றாமை நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் - தம்முடைய தீய தன்மைகளை அடக்கிக் கொள்ளமாட்டாமல் எதிர்த்து அப்பகைவர் துன்பங்கள் செய்தால், தாம் அவரைப் பேர்த்து இன்னா செய்யாமை நன்று - தாம் அவர்களுக்குத் திருப்பித் துன்பங்கள் செய்யாமை நல்லது. கருத்து: தமக்குத் துன்பஞ் செய்தவர்களுக்குத் தாமுந் துன்பஞ் செய்வது ஆற்றலன்று ; துன்பஞ் செய்யாமையே ஆற்றலாவது. விளக்கம்: அவரை என்றது உருபு மயக்கம். நான்கனுருபுபொருட்டு. ஏலாமை ஆற்றாமையன்று ; மாறு ஏற்றலே ஆற்றாமை என்பது போன்ற, ஈரிடத்தும் ‘ஆற்றாமை ' யென்னுஞ் சொல் வந்தது. இன்னா - இனிமையல்லாமை. மற்று ; அசை . முன்னிரண்டடிகள் மனத்தளவாய் மாறுகொள்ளலும் பின்னிரண்டடிகள் அப்பகைமையைச் செயலிற் காட்டுதலுமாக விளக்கப்பட்டன.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: நெடுங்காலம் ஓடினும் நீசர் வெகுளி கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - அடுங்காலை நீர்கொண்ட வெப்பம்போல் தானே தணியுமே சீர்கொண்ட சான்றோர் சினம். குறிப்புரை: நெடுங் காலம் ஓடினும் - நீண்ட காலம் சென்றாலும், நீசர் வெகுளி - கீழ்மக்கள் கோபம், கெடுங்காலம் இன்றிப் பரக்கும் - தணியுங்காலம் இல்லாமலே பெருகிக்கொண்டு போகும் ; ஆனால், அடுங் காலை நீர் கொண்ட வெப்பம்போல் - காய்ச்சுங் காலத்தில் தண்ணீர் அடைந்த வெப்பத்தைப்போல, தானே தணியும் சீர் கொண்ட சான்றோர் சினம் - பெருமை மிக்க சான்றோரது கோபம் தானே தணிந்துவிடும்.. கருத்து: கோபம் விரைவில் தணிந்துவிட வேண்டும். விளக்கம்: கெடுங்காலம் - கோபம் தணிகின்ற காலம். இயல்பாகத் தண்மையாயிருக்கும் நீர், காய்ச்சும்போது சூடேறிப் பின்பு தானே தணிந்து முன்போல் தண்ணீராய் விடுகின்றது; அதுபோலச் சான்றோரும் இயல்பாகவே குளிர்ந்த மனமுடையவராயிருப்பர்; பிறர் துன்புறுத்தும் போது மனவருத்தத்தால் சினம் எழுந்தாலும், விரைவில் அது தானே தணிந்துவிடும். அவரும் முன்போற் குளிர்ச்சியுடையவராகவே யிருப்பர்; ஆற்றலுள்ளவர்க்குச் சினம் எழுவது இயல்பு; அவ்வாற்றலோடு சான்றாண்மையும் உள்ளவரானால் அவர் அதனைப் பரக்கவிடாமல் தணித்துக் கொள்வர். காய்ச்சும் வரையில் நீர் வெப்பமாயிருந்து பின் தணிந்து விடுவது போலப் பிறர் துன்புறுத்தும் வரையில், சான்றோருள்ளம் கொதிப்பாயிருந்தாலும் பின் அறவே தணிந்துவிடும்; இது, ‘நீர் கொண்ட வெப்பம்' என்னும் உவமையாற் பெறப்படும். ‘தானே தணியும் ' என்றமையால், துன்பஞ் செய்தவர்களைத் திரும்ப ஒறுப்பதில்லாமல் தானே தணிந்துவிடும் என்பது கொள்ளப்படும். "நீரிற் கிழித்த வடுப்போல மாறுமே சீரொழுகு சான்றோர் சினம் ', என்னும் வாக்கை ஈண்டு நினைவு கூர்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: உபகாரம் செய்ததனை ஓராதே தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் - உபகாரம் தாம்செய்வ தல்லால் தவற்றினால் தீங்கூக்கல் வான்தோய் குடிப்பிறந்தார்க் கில். குறிப்புரை: உபகாரம் செய்ததனை ஓராது - தாம் முன்பு உதவி செய்ததை நினையாமல், தங்கண் அபகாரம் ஆற்றச் செயினும் பிறர் தம்மிடம் தீமைகளை மிகுதியாகச் செய்தாலும், உபகாரம் தாம் செய்வதல்லால் - அவருக்குத் தாம் திரும்பவும் உதவி செய்வதல்லாமல், தவற்றினால் தீங்கு ஊக்கல் - அவர் குற்றங் காரணமாக அவருக்குத் தீங்கு செய்யமுயலுதல், வான் தோய் குடிப்பிறந்தார்க்கு இல் - உயர்குலத்தில் தோன்றிய மேலோர்களுக்கு இல்லை. கருத்து: தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோர்க்கு மேலுமேலும் நன்மை செய்வதல்லாமல், தீங்கு செய்ய முயலார் சான்றோர். விளக்கம்: பிறர்பால் உண்டாகும் தீய நினைவை அவருக்கு நன்மை செய்து செய்தே மாற்றுதல் இயலும் என்பதனாலும், தமக்கும் அம் மனப்பான்மை மேன்மேலும் ஞான விளக்கத்துக்கு இடஞ் செய்யுமென்பதனாலும் இங்ஙனங் கூறப்பட்டது. உயர்வை நன்கு புலப்படுத்தும் பொருட்டு, ‘வான் தோய் குடி' என்றார் ; "வானுயர் தோற்றம்" என்புழிப்போல. இதனை ‘இலக்கணை' என்ப.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் சினமின்மை பாடல்: கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற் பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயால் மீட்டு. குறிப்புரை: கூர்த்து நாய்கௌவிக் கொளக் கண்டும் - சினம் மிகுந்து நாய் தமதுடம்பை வாயினால் கடித்துத் தசையைப் பிடுங்குதலைப் பார்த்து, தம் வாயால் பேர்த்து நாய் கௌவினார் ஈங்கு இல்லை - அதற்கு எதிராகத் தமது வாயினால் திருப்பி நாயைக் கடித்தவர் இவ்வுலகத்தில் இல்லை ; அதுபோல ; நீர்த்து அன்றிக் கீழ் மக்கள் கீழாய சொல்லியக்கால் - தகுதியான சொல் அல்லாமல் கீழ்மக்கள் தாழ்வான சொற்களைச் சொன்னால், சொல்பவோ மேன்மக்கள் தம் வாயால் மீட்டு - மேன்மக்கள் தம் வாயினால் திருப்பி அத் தாழ்வான சொற்களையே சொல்வார்களோ ? கருத்து: கீழ்மக்களுக்கு எதிராக மேன்மக்கள் ஒருகாலும் தாழ்வான சொற்களைத் திருப்பிச் சொல்ல மாட்டார்கள். விளக்கம்: இப்பா எடுத்துக் காட்டுவமையணியாம். திரும்ப வாயாற் கடிப்பது இல்லாமை போலத் திரும்பித் தாழ்வான சொற்களால் பேசமாட்டாரென்பது ஒப்புமை. கூர்த்து - மிகுத்து ; சினத்தை மிகுத்து . நீர்த்து - நீர்மையுடையது ; தகுதியான சொல் சுருக்கமாகவும் தாழ்வான சொல் பலவாகவும் வருதலின் ‘நீர்த்து' என ஒருமையாகவும் ‘கீழாய' எனப் பன்மையாகவும் சுட்டப்பட்டன. "எதிர்மறை யெச்சம் எதிர்மறை முடிபின" வாதலின், சொல்பவோ என நிறுத்தினார் ; சொல்லார் என எதிர் மறை முடிபு உரைத்துக் கொள்க. பழமொழி . தொல். எச்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: கோதை யருவிக் குளிர்வரை நன்னாட பேதையோ டியாதும் உரையற்க - பேதை உரைப்பிற் சிதைந்துரைக்கும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று. குறிப்புரை: கோதை அருவிக் குளிர்வரை நல் நாட - மாலைபோல ஒழுகுகின்ற அருவிகளையுடைய குளிர்ச்சி பொருந்திய நல்ல மலைகளையுடைய நாடனே, பேதையோடு யாதும் உரையற்க - அறிவில்லாதவனோடு ஏதொன்றும் பேசவேண்டாம் ; உரைப்பின் பேதை சிதைந்து உரைக்கும் - பேசினால் அப்பேதை முறைமை தவறி எதிர் பேசுவான் ; ஒல்லும் வகையான் வழுக்கிக் கழிதலே நன்று - கூடுமான வழிகளால் அவன் தொடர்பிலிருந்து தப்பி நீங்குதலே நல்லது. கருத்து: தகுதியறியாதவரோடு பேசுதல் நல்லதன்று . விளக்கம்: யாதும் என்றார். நன்மையாவதொன்றும் என்றற்கு. பேதை சிதைந்துரைக்கும் என்று தொடர்க. சிதைதல் - இங்கு முறையினின்றுந் தவறுதல். பதமாகத் தப்பித்துக் கொள்ளுதல் என்றற்கு, ‘வழுக்கி' எனப்பட்டது ; "கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை" என்றார் பிறரும். பழமொழி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: நேரல்லார் நீரல்ல சொல்லியக்கால் மற்றது தாரித் திருத்தல் தகுதிமற் -றோரும் புகழ்மையாக் கொள்ளாது பொங்குநீர் ஞாலம் சமழ்மையாக் கொண்டு விடும். குறிப்புரை: நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக் கால் - தமக்குச் சமானமல்லாதவர் குணமல்லாதனவான சொற்களைச் சொன்னால், அது தாரித்து இருத்தல் தகுதி - சான்றோர் அதனைப் பொறுத்திருத்தல் தகுதியாகும்; மற்று - அங்ஙனம் பொறுத்திராமையை, ஓரும் புகழ்மை யாக் கொள்ளாது - கருதத் தகுந்த புகழ்க்குரிய குணமாகக் கொள்ளாமல் , பொங்குநீர் ஞாலம் - கடல் சூழ்ந்த இவ்வுலகம், சமழ்மையாக் கொண்டு விடும் - பழிப்புக்குரிய இழிகுணமாகக் கருதிவிடும். கருத்து: தமக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதனைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். விளக்கம்: நேரல்லாரென்றது கீழோரை. மற்று இரண்டனுள் முன்னது அசை; பின்னது பிறிதென்னும் பொருட்டு ஒரும்அசை; "அஞ்சுவதோரும் அறனே" என்புழிப்போல. தரித்து என்பது முதல் நீண்டது. இருத்தல் - மேன்மேலுந் தனதொழுக்கத்திலேயே நிலைத்திருத்தல் . ‘ஞாலம்' என்றது உயர்ந்தோரை. கொண்டுவிடும் என்னும் முடிபு ஞாலம் என்னும் சொன்னிலை கருதியது. சமழ்மை என்றது இழிவு ; "கள்வன் சமழ்ப்புமுகங் காண்மின்" என்னும் பரி பாட்டினும் இப்பொருளுண்மை பெறப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: காதலாற் சொல்லுங் கடுஞ்சொல் உவந்துரைக்கும் ஏதிலார் இன்சொலின் தீதாமோ - போதெலாம் மாதர்வண்டு ஆர்க்கும் மலிகடல் தண்சேர்ப்ப ! ஆவ தறிவார்ப் பெறின். குறிப்புரை: போது எலாம் மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண்சோப்ப - பேரரும்புகளிலெல்லாம் விருப்பத்தையுடைய வண்டுகள் ஆரவாரிக்கும் வளம் நிறைந்த கடலையுடைய குளிர்ச்சிபொருந்திய கடற்கரைத் தலைவ! ஆவது அறிவார்ப் பெறின் - தமக்கு முன்னேற்றமாவதை அறிந்து செய்வாரைப் பெற்றால், காதலால் சொல்லும் கடுசொல் - அவர்கள் உள்ளன்பினால் நன்மை கருதிச் சொல்லும் கொடிய சொல், உவந்து உரைக்கும் ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ - மனமகிழ்ந்து கூறும் அயலவர் இன்சொல்லினுந் தீதாகுமோ ? ஆகாது. கருத்து: அன்புடையார் கூறுங் கடுஞ்சொல் அயலவர் கூறும் இன்சொல்லினும் நல்லதாகலின், அதன்மேற் பொறுமை கொள்ளவேண்டும். விளக்கம்: ‘கடுஞ் சொல்' லென்றது இங்கே செவிக் கினிமையல்லாத சொல். உவத்தல் அகமகிழ்ச்சியாதலின், ‘மனமகிழ்ந்' தென உரைக்கப்பட்டது, ஏதிலார் - அன்பும் பகைமையுமில்லாத அயலவர். எதுவுமில்லாதவரென்பது பொருள். மாதர் என்னும் அடைமொழி வண்டுகளின் விருப்ப உள்ளத்தினை உணர்த்தும். அறிவார்ப் பெறின் என்பதற்கு, அறிந்து செய்வாரைப் பெறின் என்று உரைத்துக்கொள்க. பெறுதல் அரிய தொன்றாகலின், ‘பெறின்' என்றார். அயலவர் இன்சொல்லில் தமக்கு முன்னேற்றமாவதொன்றும் இல்லாமையால், அதனையுடைய அன்புடையாரது கடுஞ்சொல் நல்லதாயிற்று. ஆதலின் பொறுத்துக் கொள்க என்பது கருத்து. அயலவர் மகிழ்ந்து பேசுதலை நல்லதென்று நினைத்தலின், அதனினுந்தீதாமோ எனப்பட்டது ; இன் சொல்லினும் என உயர்வு சிறப்பும்மை கொள்க. அயலவர் இன்சொல்லில் தீங்கில்லாமையாலும், அன்புடையார் வன்சொல் இன்சொல்லாக இருப்பது இன்னும் நல்லதாதலாலும் ‘ஏதிலார் இன்சொல்லின் நன்றாகு' மென்னாது. ‘ஏதிலார் இன் சொலின் தீதாமோ' என மறைமுகமாகக் கூறினார். இனி, ‘ஏதிலா' ரென்பவரைப் ‘பகைவர்' எனக் கருதி உள்ளே பகைமை கொண்டு மேலே முகம் மகிழ்ந்து பேசும் பகைவரது இன்சொல்லைப் போலத் தீதாகுமோ என்றுரைப்பாரும் உளர் ; இது வெளிப்பாடையாகலின், இதனினும், மேலே கூறிய உரை ஒன்றோடொன்று ஒப்பிட்டுரைப்பதற் கேற்ற பெருமைவாய்ந்து நுண்ணியதாய்ச் சிறக்கின்றமை துணியப்படும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: அறிவ தறிந்தடங்கி அஞ்சுவ தஞ்சி உறுவ துலகுவப்பச் செய்து - பெறுவதனால் இன்புற்று வாழும் இயல்பினார் எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது. குறிப்புரை: அறிவது அறிந்து - நூல் வழக்கிலும் உலக வழக்கிலுந் தெரிந்து கொள்ளவேண்டுவன தெரிந்து கொண்டு, அடங்கி - அடக்கமுடையவராய், அஞ்சுவது அஞ்சி - அஞ்சத்தக்க நிலைகளுக்கு அஞ்சி, உறுவது - தமக்குத் தகுதியாகத் தாமே பொருந்துஞ் செயல்களை, உலகு உவப்பச் செய்து - உலகம் பயன்கொண்டு மகிழும்படி செய்து, பெறுவதனால் அதுகொண்டு அடைந்த ஊதியத்தினளவில், இன்புற்று வாழும் இயல்பினார் - மகிழ்ந்து வாழ்க்கை நடத்தும் தன்மையுடையவர். எஞ்ஞான்றும் துன்புற்று வாழ்தல் அரிது - எந்தக் காலத்திலும் துன்பமடைந்து உயிர்வாழ்வது இல்லை. கருத்து: அறிந்து அடங்கி அஞ்சி நேர்ந்ததைச் செய்து, கிடைத்தது கொண்டு வாழ்வோர்க்கு எப்போதுந் துன்பமில்லை. விளக்கம்: அறிவது அஞ்சுவது உறுவது பெறுவது என்பன சாதியொருமை. தமக்குத் தகுதியாகப் பொருந்திய தொரு செயலைப் பிறர்க்கு நலம் பயக்க வேண்டுமென்னும் எண்ணத்துடன் திருத்தமாகவும் பற்றில்லாமலுஞ் செய்து, கிடைத்த ஊதியத்தினளவில் மகிழ்ந்து, வாழ்க்கை நடத்த வேண்டுமென்று இச் செய்யுளிற் புலப்படுத்தியிருப்பது மிக்க மாட்சிமையானது. இனிய வாழ்க்கை நடத்துவதற்கு இது சிறந்த வழி . "பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி" என்னுஞ் சான்றோர் செய்யுட்கள் போல்வன இங்கு நினைவு கூரற்குரியன.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: வேற்றுமை யின்றிக் கலந்திருவர் நட்டக்கால் தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் ஆற்றுந் துணையும் பொறுக்க பொறானாயின் தூற்றாதே தூர விடல். குறிப்புரை: வேற்றுமையின்றிக் கலந்து இருவர் நட்டக்கால் - வேறுபாடில்லாமல் மனங் கலந்து இரண்டு பேர் நேசித்தால், தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் - தக்கதென்று பெரியோரால் தெளியப்படாது ஒதுக்கிய தகாத நடத்தை ஒருவனிடத்தில் உண்டானால், ஆற்றுந் துணையும் பொறுக்க - பொறுக்கக் கூடுமளவும் மற்றவன் பொறுத்துக்கொள்க ; பொறானாயின் - அதன்மேற் பொறுக்கக் கூடாதவனாயின், தூற்றாதே தூரவிடல் - அக் குற்றத்தைப் பலரும் அறியப் பழிக்காமல் அவன் தொடர்பை , மீண்டும் அணுகவொட்டாதபடி நெடுந் தொலைவில் விட்டு விடுக. கருத்து: நண்பனிடத்திற் பொறுக்குமளவும் பொறுமை கொள்க. பொறுக்கக் கூடாதவிடத்து அவனுக்குத் தீங்கேதுஞ் செய்யாமல் தூர விலகிக்கொள்க. விளக்கம்: தகுதியென்று தெளியப்படாத ஒழுக்கம் இங்குத் ‘தேற்றா வொழுக்கம்' எனப்பட்டது. ‘தேற்றா' என்பது இங்கே ‘தன்வினைக்கண்' வந்தது ; "தேற்றாய் பெரும் பொய்யே" என்புழிப் போல. தூற்றி விடுதலினின்றும் பிரித்தலின், ஏகாரம்பிரிநிலை . ‘தூர விடல்' என்பதற்குத் தூர்ந்துபோகும்படி மெல்ல விட்டுவிடுக என உரைத்தலும் ஒன்று. இச் செய்யுள் நண்பரிடத்துப் பொறுக்கும் முறைமை கூறிற்று. .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: இன்னா செயினும் இனிய ஒழிகென்று தன்னையே தான்நோவின் அல்லது - துன்னிக் கலந்தாரைக் கைவிடுதல் கானக நாட விலங்கிற்கும் விள்ளல் அரிது. குறிப்புரை: இன்னா செயினும் - நண்பர் தனக்கு இன்னல் தருவன செய்தாலும், இனிய ஒழிக என்று - அவை இனியவாய் வந்து கழிக என்று பொறுமையாய் நடந்து கொண்டு, தன்னையே தான் நோவின் அல்லது - அதற்குக் காரணமான தனது முன் வினையை நினைந்து தன்னையே தான் நொந்துகொள்ளின் அல்லாமல் துன்னிக்கலந்தாரைக் கைவிடுதல் - நெருங்கி மனங்கலந்து பழகினவரை ஒருவன் கைவிடுதலென்பதோ, கானக நாட - காடுகள் சிறந்த நாடனே, விலங்கிற்கும் விள்ளல் அரிது - தாழ்ந்த விலங்குகளுக்கும் அங்ஙனம் விட்டுவிடுதல் அருமையாகும் ; ஆதலின் அது மக்கட்கு முகவும் அரியதொன்றாகும். கருத்து: நண்பர் தீங்கு செய்த காலத்தும் அதனைப் பொறுத்துக் கொள்வதன்றி அவரைக் கைவிட்டுவிடுதல் மக்கட்கு அழகன்று. விளக்கம்: செயினும் என்னும் உம்மை பெரும்பாலும் அவர் அங்ஙனம் செய்யாமையை உணர்த்தி நின்றமையின் எதிர்மறை. பிறர் செய்யுந் தீங்குகளும், தாம் நடந்து கொள்ளும் நன் முறைமைகளால் யார்க்கும் இனிமையாக வந்து கழியுமாதலின், ‘இனியவாய் ஒழிக என்று பொறுத்திருத்தல்' இங்குக் குறிப்பிடப்பட்டது. ‘தன்னையே தான் நோவின் அந்நேரத்து நிலை எளிதாவதல்லது, கைவிடுதல் என்பதோ அரிது' என்பது கருத்து . கைவிடுதல் என்பது, விலங்கிற்கும் விள்ளல் அரிது என்பதனால், இசையெச்சமாகத் தனக்கும் அம் முடிபு பெற நின்றது. விலங்கிற்கும், என்பதன் உம்மை இழிவு சிறப்பு . கைவிடுதல் அரிது எனக் கொள்ளுமிடத்து ‘அரிது' என்னுஞ் சொல் , ‘அது மக்கட் பண்பாகாது' என்னுங் கருத்துணர நின்றது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: பெரியார் பெருநட்புக் கோடல்தாம் செய்த அரிய பொறுப்பஎன் றன்றோ - அரியரோ ஒல்லென் அருவி உயர்வரை நன்னாட நல்லசெய் வார்க்குத் தமர். குறிப்புரை: பெரியார் பெருநட்புக் கோடல் - சான்றோர்களது மேன்மையாகிய நேயத்தை யாரும் விரும்பித் தேடிக் கொள்ளுதல், தாம் செய்த அரிய பொறுப்ப என்றன்றோர் தாம் செய்துவிட்ட அரிய குற்றங்களையும் அவர்கள் பொறுப்பார்கள் என்று கருதித்தானே?, ஒல் என் அருவி உயர்வரை நல் நாட - ஒல் என்று ஒலிக்கும் அருவி களையுடைய உயர்ந்த மலைகள் சிறந்த நல்ல நாட்டையுடையவனே ! , அரியரோ நல்ல செய்வார்க்குத் தமர் - பிழையில்லாத நல்ல செயல்களையே செய்யும் மேம்பாடுடையவர்க்கு நண்பராவோர் அரியரோ ? அல்லரென்றபடி. கருத்து: தம்மோடு பழகுவார் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்வதே சிறந்த நட்பாகும். விளக்கம்: பிழை பொறுப்பவர் பெரியாராகலின் அவரைப் பெரியாரென்றும், அவரது நட்டைப் ‘பெருநட்பு' என்றும் ஆசிரியர் கூறினார். அரிய - பெருங்குற்றங்கள் ; என்றது, பொறுத்தற்கரிய குற்றங்கள் ; அருமை இங்குப் பெருமை மேல் நின்றது ; அரியவும் என்னும் உம்மை உயர்வு சிறப்பு. பிழைபொறுக்கும் பெரியார் நட்புக் கிடைப்பதுதான் அருமை ; பிழையில்லாமல் நல்லனவே செய்வார்க்கு நண்பராவோர் அங்ஙனம் அரியரல்லர் ; பலராவர் ; ஆதலின் நட்பிற் சிறந்தது, பிழைபொறுக்கும் நட்பேயாகும் என்று உணர்த்தியபடி. பொறுப்பபலர்பால் முற்று , இதற்கு விகுதி பகரமெனக் கொள்கஅகரமெனக் கொள்ளின் பலவின்பால் முற்றாகும். ‘அரியரோ' வென்பதன் ஓகாரம் எதிர்மறை. ‘உயர் வரை' யென்பதற்குப் பண்பு விரித்தலாகாது ; ‘உயர்' என்பது வினைச்சொல்லின பகுதியாய் வினைத்தன்மையில் நிற்றலின் வினைத்தொகை. எனவே. ‘உயர்ந்த வரை' என்று உரை கொள்க. நச்சினார்க்கினியர் ‘உயர்த்திணை' என்பதற்கு உயர்ந்த ஒழுக்கமென உரைத்து, இது காலந்தோன்ற நிற்றலில்' எனக் காரணமுங் காட்டினமை இங்கு நினைவு கூரப்படும். தொல், கிளவி .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: வற்றிமற் றாற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு அற்றம் அறிய உரையற்க - அற்றம் மறைக்குந் துணையார்க் குரைப்பவே தம்மைத் துறக்குந் துணிவிலா தார். குறிப்புரை: வற்றி ஆற்றப் பசிப்பினும் - உடம்பிற் செந்நீர் சுண்டும்படி மிகப் பசித்தாலும், பண்பு இலார்க்கு - பிறர் நிலையறிந்து ஒழுகும் தன்மையில்லாதவர்களுக்கு. அற்றம் அறிய உரையற்க - தமது இல்லாமையை அவர் அறியும்படி சொல்லவேண்டாம் ; தம்மைத் துறக்குந் துணிவிலாதார் - தம்மைத் துறவு நெறியிற் செலுத்துந் தெளிவில்லாதவர், அப்படிச் சொல்ல விரும்பினால், அற்றம் மறைக்குந் துணையார்க்கு உரைப்ப - தமது இல்லாமையை நீக்கும் உதவியாளர்க்குச் சொல்லுவர். கருத்து: இல்லையென்று கூறிப் பெறாமல் மதிப்போடிருந்து பொருள் தேடவேண்டும். விளக்கம்: வற்றியென்னுஞ் செய்தென் எச்சம் செயவென் எச்சமாகக் கொள்ளப்பட்டது. மற்றுஅசை. பண்பென்றது, பிறர்பாடு அறிந்து ஒழுகுதலை. அற்றம் - யாவும் அற்ற நிலைமை ; அது, வறுமை. மறைக்குமென்பது "தம் வயிற் குற்றம் மறையாவழி " என்புழிப் போல நீக்குதலென்னும் பொருளில் வந்தது. ‘மறைக்குந் துணையார்க்கு' என்பதை ‘நீக்குமளவான தகுதியுடையார்க்கு' என்று உரைத்தலும் ஒன்று. துறக்குந் துணிவிலாதார் உரைப்ப என்றமையின் அத்துணுவுடையார் ஆண்டும் உரையார் என்றபடி. துறவு நெறியிற் செல்லுந் துணிவுடையார் காய் கனி சருகு முதலியன உண்டு பசி தீர்வர் ; மக்கள் அவர்களாகவே ஏதும் உதவின் உண்பர் ; தாம் அவர் பால் தமக்கு இல்லையென்று தெரிவியார். ஏனெனில் அவர் இறைவனை நம்பி அவன் அருளாகிய இயற்கையின் பாற் சென்றவர். கலி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: இன்பம் பயந்தாங் கிழிவு தலவைரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்க - இன்பம் ஒழியாமை கண்டாலும் ஓங்கருவி நாட ! பழியாகா ஆறே தலை. குறிப்புரை: இன்பம் பயந்த ஆங்கு - இன்பம் உண்டான இடத்தில், இழிவு தலைவரினும் இன்பத்தின் பக்கம் இருந்தைக்கு - தாழ்வுகள் நேர்ந்தாலும் இன்பத்தையே எண்ணி அதன்கண் நிலைத்திருந்த நினக்கு, இன்பம் ஒழியாமை கண்டாலும் - அச் செயலில் பின்னும் பின்னும். இன்பம் இடையறாமை கண்டாலும், ஓங்கு அருவி நாட - பெருகுகின்ற அருவிகளையுடைய மலைநாடனே ! பழி ஆகா ஆறே தலை - பழித்தல் உண்டாகாத வழியே நினக்குச் சிறந்தது. கருத்து: இன்பம் இடையறாமல் உண்டாவதாயினும் பழிப்பில்லாத நற்செயல்களே செய்யத்தக்கது. விளக்கம்: இன்பம் பயந்தாங்கு - இன்பம் பயந்த செயலிடத்து என்று கொள்க. உம்மைஆக்கம் ‘இருந்தைக்க' என்பதன் ஈற்றில் அகரம் சாரியை ; "கடிநிலையின்றே ஆசிரியர்க்க" என்பதிற் போல. தொல். புள்ளி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பொறையுடைமை பாடல்: தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன்உடம்பின் ஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த வையக மெல்லாம் பெறினும் உரையற்க பொய்யோ டிடைமிடைந்த சொல். குறிப்புரை: தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க - ஒருவன் தான் கெடுவதாயிருந்தாலும் அக் கேட்டினை நீக்கிக் கொள்ளும் பொருட்டுச் சான்றோர் கெடுதலை எண்ணாதிருக்கக்கடவன், தன் உடம்பின் ஊன் கெடினும் உண்ணார் கைத்து உண்ணற்க - தனதுடம்பின் தசை பசியால் உலர்வதாயினும் நுகரத்தகாதவரது பொருளை நுகராமலிருக்க வேண்டும் ; வான் கவிந்த வையகமெல்லாம் பெறினும் உரையற்கபொய்யோடு இடைமிடைந்த சொல் - வானத்தால் கவியப்பெற் றிருக்கும் உலகம் முழுமையும் பெறுவதாயிருந்தாலும் தனது பேச்சினிடையில் பொய்யொடு கலந்த சொற்களைச் சொல்லாம லிருப்பானாக. கருத்து: மேலோர் கெடுதலை நினைதலும், தகாதவர் பொருளை நுகர்தலும், பொய்யுரை மொழிதலும் ஒருவனுக்கு ஆகா. விளக்கம்: கைத்து - பொருள் ; "கைத்துண்டாம் போழ்தே கரவா தறஞ்செய்ம்மின்" என முன்னும் வந்தது. தான் கெடுதலும் பெறுதலும் பொருளல்ல ; தக்க உணர்வுகளை ஓம்புதலே பொருளாவது என்பது இச் செய்யுளால் உணர்த்தப்பட்டது.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: அச்சம் பெரிதால் அதற்கின்பம் சிற்றளவால் நிச்சம் நினையுங்காற் கோக்கொலையால் -நிச்சலும் கும்பிக்கே கூர்ந்த வினையால் பிறன்தாரம் நம்பற்க நாணுடை யார். குறிப்புரை: அச்சம் பெரிதால் - உண்டாகும் அச்சம் பெரிதாதலாலும், அதற்கு இன்பம் சிற்றளவால் - அப்பேரளவான அச்சத்துக்கு ஈடாக அடையும் இன்பம் சிறிதளவேயாதலாலும், நிச்சம் நினையுங்கால் கோ கொலையால் - நாடோறும் நினைக்கு மிடத்து அதற்கு ஏற்ற தண்டனை உண்மையாக அரசனது கொலைக் கட்டளை யாதலாலும், நிச்சலும் கும்பிக்கே கூர்த்த வினையால் - நாடோறும் அழல்வாய் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும். பிறன் தாரம் நம்பற்க நாணுடையார் - பழிபாவங்கட்கு அஞ்சுதலுடையார் பிறன் மனைவியை விரும்பாமலிருப்பாராக ! கருத்து: பிறன் மனைவியை விரும்பி யொழுகு வார்க்கு எந்நாளும் இருமையிலும் துன்பமே யாகும். விளக்கம்: ஆல் - ஆதலால்உம்மை விரித்துக் கொள்க. நிச்சம் - உண்மையாக. கும்பியென்பது ‘தீச்சூளை' யாதலின் இங்கு ‘அழல்வாய் நரகம்' எனப்பட்டது. கூர்தல் - உள்ள தன்மை சிறந்து வருதல். ஆதலின், இங்கே அது ; நரகுக்கே உருவாகிவரும் செயல் என்னும் கருத்தில் வந்தது. "நம்பும் மேவும் நசையாகும்மே" என்பது தொல் காப்பியமாதலின், ‘நம்பற்க' என்பதற்கு ‘விரும்பற்க' என்பது பொருளாயிற்று. தொல். உரி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: அறம்புகழ் கேண்மை பெருமைஇந் நான்கும் பிறன்தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன்தாரம் நச்சுவார்ச் சேரும் பகைபழி பாவம்என்று அச்சத்தோ டிந்நாற் பொருள். குறிப்புரை: அறம் புகழ் கேண்மை பெருமை இந்நான்கும் - புண்ணியம் புகழ் தக்கார் நேயம் ஆண்மை என இந் நான்கும் ; பிறன் தாரம் நச்சுவார்ச் சேரா - பிறன் மனைவியை விரும்புவாரிடத்திற் சேரமாட்டா ; பகை பழி பாவம் என்று அச்சத்தோடு இந் நாற்பொருள் - பிறர் பகையும் பழியும் பாவமும் அச்சமும் என்று இந் நான்கு பொருள்களும், பிறன் தாரம் நச்சுவார்ச் சேரும் - பிறன் மனைவியை விரும்புவாரிடத்துச் சேரும். கருத்து: பிறன் மனைவியை விரும்புவார்க்குப் புண்ணியமும் புகழும் தக்கார் கூட்டுறவும் வீரமும் உண்டாகா. விளக்கம்: பெருமையென்றது பெருமிதம்ஆவது ஆண்மை. பிறிது கூறுவாருமுளர். அறம் முதலியவற்றிற்கு நேராக ஆசிரியர். பாவம் பழி பகை அச்சம் என நான்கும் முறையே கூறுதலின், அம்முறைமைப்படி அச்சத்துக்கு எதிராக உரைக்குமிடத்துப் பிறருரை சிறவாமை கண்டு கொள்க. பாவம் பழி பகையென நிற்றற்குரியவை, செய்யுளாதலின் பகை பழி பாவமெனப் பிறழ நின்றன. அச்சத்தோடு என்பதில் ஓடு என்னும் இடைச்சொல் உம்மைப் பொருட்டு ; ‘பாவம் என்று' என்பதிலுள்ள ‘என்று' என்பதை ‘அச்சமும் என்று இந்நாற்பொருள்' பெருமை என்று இந்நான்கும்' எனக் கூட்டிக்கொள்க. 'அகப்பொருள்' ‘புறப்பொருள்' என்றாற்போல, இங்கும் பண்புகள் ‘பொருள்' எனப்பட்டன. "பகை பாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண்" என்பது தமிழ்மறை. தொல் . இடை .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: புக்க விடத்தச்சம் போதரும் போதச்சம் துய்க்கு மிடத்தச்சம் தோன்றாமற் காப்பச்சம் எக்காலும் அச்சம் தருமால் எவன்கொலோ உட்கான் பிறன்இல் புகல். குறிப்புரை: புக்கவிடத்து அச்சம் - புகும்போது அச்சம் ; போதரும்போது அச்சம் - திரும்பிவரும்போது அச்சம் ; துய்க்குமிடத்து அச்சம் - நுகரும்போது அச்சம் தோன்றாமல் காப்பு அச்சம் - பிறர்க்குத் தெரியாமல் காத்துக் கொள்ளுதல் அச்சம் ; எக்காலும் அச்சம் தரும் - இங்ஙனம் எந்நேரமும் அச்சம் தரும் ; எவன் கொலோ உட்கான் பிறன் இல் புகல் - ஏனோ இவற்றைக் கருதானாய் ஒருவன் பிறன் மனைவியை விரும்பியொழுகுதல்? கருத்து: பிறன் மனைவியை விரும்பி யொழுகுதலில் முழுதும் அச்சமேயல்லாமல் இன்பமில்லையே. விளக்கம்: எவன் கொலோ என்பதற்கு என்ன பயன் கருதியோ என்பது பொருள். கொல்அசை; ஓஇரக்கப் பொருளது. உட்குதல் இங்குக் கருதுதல்; "நின்னை, உட்கிச் சிறந்தோர் அஞ்சிய" என்புழிப்போல. புகல் விரும்புதல்; என்றது விரும்பி யொழுகுதல் என்க.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: காணின் குடிப்பழியாம் ; கையுறின் கால்குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்; - நீள்நிரயத் துன்பம் பயக்குமால்; துச்சாரி; நீகண்ட இன்பம் எனக்கெனைத்தால் கூறு. குறிப்புரை: காணின் குடிப்பழியாம் - பிறர் கண்டு விட்டால் குடிப்பழிப்பாம்; கையுறின் கால் குறையும் - கையில் அகப்பட்டுக் கொண்டால் கால் ஒடியும், ஆண் இன்மை செய்யுங்கால் அச்சமாம் - ஆண்மை யில்லாமையாகிய இப் பிறர்மனை புகுதலைச் செய்யுங்கால் அச்சம் நிகழும்; நீள் நிரயத் துன்பம் பயக்கும் - நெடுங்கால் நிரயத் துன்பத்தைப் பின்பு உண்டுபண்ணும். துச்சாரி - தீயொழுக்க முடையோய் ; நீ கண்ட இன்பம் எனைத்து எனக்குக் கூறு - நீ நுகர்ந்த இன்பம் இதில் எவ்வளவு ? எனக்குச் சொல். கருத்து: பிறன்மனை நயத்தலில் இடுக்கணும் இன்னலுமின்றி இன்பம் சிறிதுமில்லை. விளக்கம்: பிறன்மனை புகுகின்ற தொழில் பற்றிக் "கால் குறையு" மென்று முதன்மையாக எடுத்துக் கூறினாரேனும் இயையு பற்றிப் பிற உறுப்புகள் குறைதலுங் கொள்ளப்படும். "பிறன்மனை நோக்காத பேராண்மை" என்றாராகலின், பிறன்மனை நோக்குதல் இங்கு ‘ஆணின்மை' யெனப்பட்டது. ஆல்அசை. குறள்
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: சம்மையொன் றின்றிச் சிறியா ரினத்தராய்க் கொம்மை வரிமுலையாள் தோள்மரீஇ - உம்மை வலியாற் பிறர்மனைமேற் சென்றாரே, இம்மை அலியாகி ஆடிஉண் பார். குறிப்புரை: செம்மை ஒன்று இன்றி - நடுவுநிலைமை என்னும் குணம் சிறிதுமில்லாமல், சிறியார் இனத்தராய் - கீழ்மக்கள் கூட்டத்தோடு கூடியவராய், கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ - திரட்சி பொருந்திய கோல மெழுதிய மார்புகளையுடைய பெண்மகளின் தோள்களைச் சேர விரும்பி, உம்மை - முற்பிறப்பில், வலியால் பிறர் மனைமேல் சென்றாரே - தமக்குள்ள இடம் பொருள் ஏவல் என்னும் வலிமைகளால் அயலார் மனைவியர்பாற் சென்றவரே, இம்மை - இப்பிறப்பில், அலியாகி ஆடி உண்பார் - அலித்தன்மையுடையவராய்க் கூத்தாடி வயிறு பிழைப்பவராவர். கருத்து: முற்பிறப்பிற் பிறர்மனைவியரைக் கூடியவரே இப் பிறப்பில் கூத்தாடி இரந்து உண்பவர். விளக்கம்: செம்மையென்பது நடுவுநிலைமைக்கே சிறப்பாக வழங்கும் பெயர். திருவள்ளுவரும் இதனைச் ‘செப்பம்' என்பர். ஒன்று - சிறிதென்னும் பொருட்டு. சிறியாரினம் என்றது, ‘வறுமொழியாளர் வம்பப்பரத்தர்' முதலாயினோர். பொதுவாகப் பெண்ணென்னும் பொருட்டுக் ‘கொம்மை வரிமுலையாள்' என்றார். ‘பெண்ணின் சேர்க்கையை விரும்பி' என்பது கருத்து. மரீஇ - விரும்பியென்னும் பொருட்டு. அலி, ஆண் தன்மையிழந்த பிறவி ; பெண்ணின் நலத்தைத் துய்க்க இயலாத பிறவி. ஆடியுண்பாரென்றது, தெருக்களிற் பிறர் நகைக்கக் கூத்தாடிப் பிச்சையேற்று வயிறு பிழைத்தலை யுணர்த்திற்று. முற்பிறப்பில் ஆண் தன்மையும் வளம் முதலிய வலிமையும் உடையவராய்ப் பிறர் மதிக்க வாழ்ந்திருந்தவர், அவ் வாண்டன்மையையும் வலிமையையும் அப்போது தவறாகச் செலுத்தினமையின், இப் பிறப்பில் அவ்விரண்டையும் முற்றுமிழந்து பிறர் அருவருக்க வருந்துவரென்றற்கு, ‘அலியாகி' எனவும், ‘ஆடியுண்பர்' எனவுங் கிளந்து கூறினார். ‘சென்றாரே' யென்னும் ஏகாரம் பிரிநிலை. சிலப். -
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க - மெல்லியற் காதன் மனையாளும் இல்லாளா என்ஒருவன் ஏதின் மனையாளை நோக்கு. குறிப்புரை: நாள் கேட்டு - நல்ல நாள் கேட்டறிந்து பல்லார் அறியப் பறை அறைந்து - அந்நன்னாளிற் பலரும் அறியும்படி மணமுரசு கொட்டி, கல்யாணம் செய்து கடிபுக்க மெல் இயல் காதல் மனையாளும் இல்லாளா - திருமணம் செய்து தன் காவலிற் புகுந்த மென்றன்மை வாய்ந்த அன்புடைய மனையாட்டியும் தன் இல்லத்தில் இருப்பவளாக, என் ஒருவன் ஏதில் மனையாளை நோக்கு - ஏன் ஒருவன் அயலான் மனைவியைக் கருதுதல் ? கருத்து: தன் மனைவி இல்லத்திலிருக்க ஒருவன் அயலான் மனைவியைக் கருதுவது எதற்கு? விளக்கம்: தனக்கு அழகும் அன்பும் உடைய, மனைவியிருந்தும் பிறன் மனைவியைக் கருதும் ஒருவனது பெருங்காம மயக்கத்தை இது கண்டித்தபடி. மகளிர்க்கு அழகு என்பது மென்றன்மை யென்றற்கு ' மெல்லியல்' என்றார். நல்ல ஒழுக்கமுடையவன் போலப் பலரும் அறியத் திருமணஞ் செய்ததன் பயன் என்னாயிற்று என்றற்கு முதலிரண்டு வரிகள் கூறப்பட்டன. இதனால் அவன் ஒரு நெறிமுறைமையில் நில்லாமை கண்டிக்கப்பட்டது. பறை, இங்கே மணப்பறை ; அறைதல் - பிறர்க்கு அறிவிக்கும் பொருட்டுக் கொட்டுதல் . காவல் என்பது தனக்கே உரிமையை உணர்த்தி நின்றது. மனையாள் இல்லாத போதே பிறன்மனை புகுதல் பிழையாயிருக்க, மனையாளும் இருக்கும்போது அது கருதுதல் எத்தனை பெரும்பிழை என முன் எஞ்சியதை உணர்த்துதலின் உம்மை எச்சமாகும். இல்லாளாக என நிற்கவேண்டுவது ‘இல்லாளா' என ஈறுகெட்டு நின்றது. ‘நோக்கு' இங்கு மனத்தாற் கருதுதல். தொல் . வேற்றுமை மயங்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: அம்பல் அயல்எடுப்ப அஞ்சித் தமர்பரீஇ வம்பலன் பெண்மரீஇ மைந்துற்று - நம்பும் நிலைமைஇல் நெஞ்சத்தான் துப்புரவு ; பாம்பின் தலைநக்கி யன்ன துடைத்து. குறிப்புரை: அம்பல் அயல் எடுப்ப - அயலார் பழித்தல் செய்ய, அஞ்சித் தமர் பரீஇ - அதனால் தன்னைத் தடுப்பரென்று அஞ்சித் தம் உறவினரினின்றும் நீங்கி வம்பலன் பெண் மரீஇ மைந்து உற்று - அயலான் மனைவியைச் சேர்ந்து களிப்படைந்து, நம்பும் நிலைமை இல்நெஞ்சத்தான் துப்புரவு - எவராலும் நம்புதற்குரிய நிலைமையில்லாத நெஞ்சத்தையுடையானது அக் காமநுகர்ச்சி, பாம்பின் தலை நக்கியன்னது உடைத்து - பாம்பின் மழமழப்பான தலையை நாவினால் தடவி இன்புற்றத்தைப் போன்ற தன்மையையுடையது. கருத்து: பிறர் மனைவியர்பால் நிகழ்த்துங் காம வொழுக்கம் எப்போதும் இடரானது. விளக்கம்: அம்பல் - வாயோடு முணுமுணுப்பது. பரிதல் , இங்கு நீங்குதலென்னும் பொருட்டு, வம்பலன் என்பதில் அல் எதிர்மறையன்று ; சாரியை; ‘வம்பன்' என்பதே சொல் ; புதியவன் ; அஃதாவது அயலான் என்பது அதற்குப் பொருள். "மனக்கினியாற்கு நீ மகளாயதூஉம்" என்புழிப் போலப் ‘பெண்' என்பது இங்கு ‘மனைவி' யென்னும் பொருளில் வந்தது. உவமை உயிர்க்கு இறுதி தரும் இடரை உணர்த்தி நின்றது. தொல் . கள. ; இறைய . மணிமே .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா ; உரவோர்கண் காமநோய் ஓ ! ஓ ! கொடிதே ; விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும் உரையாதுஉள் ஆறி விடும். குறிப்புரை: பரவா - அறிஞர்களிடத்திற் காமநினைவுகள் பரவமாட்டா ; வெளிப்படா - ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்படமாட்டா ; பல்லோர்கண் தங்கா - அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் பலரிடத்துஞ் சென்று நில்லா ; உரவோர்கண் காமநோய் ஓ. கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடிது - அறிவுடையவர்களிடம் காமநோய் ஓ, கொடுமையுடையது!, விரலாருள் நாணுப்படல் அஞ்சி - அங்ஙனம் அவர்கள் மனைவியரிடத்தே சென்று தங்கினாலும் அம் மனைவியர் அந்நினைவு கலவாதவராயிருப்பின், அப்போது அவ்வறிஞர்கள் நாணப்படுவதற்குப் பின்னிடைந்து, யாதும் உரையாது உள் ஆறிவிடும் - சிறிதும் வெளிப்படாமல் உள்ளேயே தணிந்துவிடும். கருத்து: அறிவுடையோர் காம நினைவுக்கு இடங்கொடார். விளக்கம்: ‘உரவோர்கண் காமநோய்ஓ கொடிதே' யென்றது. இடையே பொதுவாக ஆசிரியர்க்கு அச்சத்தினால் தோன்றியதொடர் ; அவர் ‘உரன் என்னுந்தோட்டியான் ஓரைந்துங் காப்பவ' ராதலின். மற்றவை, எடுத்த பொருள்மேற் செல்லுந் தொடர்கள். பொறுத்தற்குரிய பொறுப்புக் கருதி ‘ஓ கொடிதே' என்றார். ‘யாதும் உரையாது' என்பது சிறிதும் வெளிப்படாமை சுட்டுங் குறிப்புமொழி. அறிஞர்கள் காம நுகர்வை மென்மையாக ஆளுந்திறமும் இப்பாட்டிற் புலப்படும். குறள், :
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: அம்பும் அழலும் அவிர்கதிர் ஞாயிறும் வெம்பிச் சுடினும் புறஞ்சுடும்; - வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால், காமம் அவற்றினும் அஞ்சப் படும். குறிப்புரை: அம்பும் அழலும் அவிர் கதிர் ஞாயிறும் - வில்லம்பும், தீயும், ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும், வெம்பிச் சுடினும் புறம் சுடும் - வெதும்பிச் சுட்டாலும், வெளிப்பொருளையே சுடும், வெம்பிக் கவற்றி மனத்தைச் சுடுதலால் காமம் அவற்றினும் அஞ்சப்படும் - அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தைச் சுடுவதனால் காமம் என்பது அவற்றைப் பார்க்கிலும் அஞ்சப்படும். கருத்து: காமம் என்பது உள்ளத்தை வெதுப்புங் கொடுமையுடையது. விளக்கம்: அம்பு பெரும்பான்மைக்கு உரிய ‘சுடும்' என்னும் வினையை ஏற்றது. நன்றாய்ச் சுடுகின்றபோது வெம்பிச் சுடவேண்டுதலின், அவ்வியல்புபற்றி அச்சொல் இரண்டிடங்களிலுங் கூறப்பட்டது. புறம் என்றது, "பைம்புறப் படுகிளி" என்புழிப்போல உடம்பை ; உடம்பைச் சுடுதலினும் உள்ளத்தைச் சுடுதல் கொடுமையாதலின், அவற்றினும் அஞ்சப்படும் என்றார். உள்ளம் சுடப்பட்டால், அதனால் உடம்பும் உயிரும் வாடுதல் ஒருதலையாகலின், அது கொடுமையுடையதாயிற்று. மேலும் ஆறாத முறையிற் சுடுதல் தோன்றக் கவற்றிச் சுடும் எனவுங் கூறப்பட்டது. ஐங். ;
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பிறர்மனை நயவாமை பாடல்: ஊருள் எழுந்த உருகெழு செந்தீக்கு நீருள் குளித்தும் உயலாகும்; - நீருள் குளிப்பினும் காமம் சுடுமேகுன் றேறி ஒளிப்பினும் காமம் சுடும். குறிப்புரை: ஊருள் எழுந்த உரு கெழு செந்தீக்கு ஊர்நடுவில் பற்றிக்கொண்ட ஓங்கிய அச்சம் மிக்க செந்தழலுக்கு, நீருள் குளித்தும் உயலாகும் - அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும்; ஆனால், நீருள் குளிப்பினும் காமம் சுடும் குன்று ஏறி ஒளிப்பினும் காமம் சுடும் - நீருள் மூழ்கினாலும் காமம் எரிக்கும்; மலை ஏறி ஒளித்தாலும் காமம் எரிக்கும். கருத்து: காமம், தீயினுங் கொடியது. விளக்கம்: ஊருள் என்பதில் ‘உள்' நடுவென்னும் பொருட்டு. எழுந்த, மேலே ஓங்கிய ; உரு - அச்சம் ; "உரு உட்காகும்" என்பது தொல்காப்பியம். கொடுமை போன்றப் பெருந் தீ என்றற்குச் ‘செந்தீ' எனப்பட்டது. நீருள் என்றது, நீர்நிலையுள் குளித்தும் என்னும் உம்மை எளிமையைச் சிறப்பித்தமையின் சிறப்பும்மை. இச் செய்யுட் பொருள் "காமத்தீ நீருட்புகினுஞ் சுடும்" என்னுங் கலித்தொகை பகுதியிலும் வந்துள்ளது. ஏகாரம். தேற்றம்; மற்றொன்றுக்கும் ஒட்டுக. காமம் இரண்டிடத்தும் வந்தது, சொற்பின் வருநிலை.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: இல்லா விடத்தும் இயைந்த அளவினால் உள்ள விடம்போற் பெரிதுவந்து - மெல்லக் கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்கஅடையாவாம் ஆண்டைக் கதவு. குறிப்புரை: இல்லாவிடத்தும் - பொருளில்லாத காலத்திலும், இயைந்த அளவினால் - கூடிய அளவினால், உள்ள இடம்போல் பெரிது உவந்து - பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து, மெல்லக் கொடையொடு பட்ட குணன் உடைய மாந்தர்க்கு - ஒருவர்க்கு ஒன்று இனிமையாகக் கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட்குணத்தையுடைய மக்களுக்கு, ஆண்டைக் கதவு அடையா - அவ்வுலகக் கதவுகள் வழியடைக்கமாட்டா. கருத்து: ஈகைக் குணமுடையவர்கள் மறுமையின்பம் பெறுவர். விளக்கம்: இடம் என்றது இங்கே காலங் குறித்து நின்றது. மெல்ல - மென்மையாக ; உவந்து என்னும் வினையெச்சம் பட்ட என்னும் பெயரெச்சத்தோடு இயைந்தது. அவ்வுலகமென்றது துறக்கம். ஆம்அசை, அறிவு, அன்பு முதலிய உயிர்க்குணங்களிலும், உதவுகின்ற இயற்கையோடு கூடிய குணங்களே மாட்சிமையுற்று மறுமைப் பயனுக்கு ஏதுவாகலின், ‘கொடையொடு பட்டகுணன்' என்றார். ‘அடையாவாம் ஆண்டைக் கதவு' என்னுங் கருத்து, மேலும் வரும். குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம். நின்றது வாயில் திறந்து' என்றார் பிறரும். 'கதவு அடையா' என்றது, செய்ததுபோலக் கிளத்தல்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள பின்னரும் பீடழிக்கும் நோயுள: - கொன்னே பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங் கரவுன்மின் கைத்துண்டாம் போழ்து. குறிப்புரை: முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்பு உள - வெறுத்தற்குரிய கிழப்பருவமும் இறக்கும் நாளும் எதிரிலேயே உள்ளன. பின்னரும் - அவையல்லாமலும், பீடு அழிக்கும் நோய் உள - வலிமையைக் குலைக்கும் நோய்களும் வரவிருக்கின்றன, ஆதலால்; கைத்து உண்டாம் போழ்து - செல்வம் உண்டாகுங் காலத்திலேயே, கொன்னே - வீணாக, பரவன்மின் - மேலுந் தேட அலையாதிருங்கள், பற்றன்மின் - இறுக்கிப் பிடியாதிருங்கள்; பாத்து உண்மின் - பலருக்கும் பகுத்து உண்ணுங்கள்; யாதும் கரவுன்மின் - சிறிதும் ஒளியாதிருங்கள். கருத்து: பொருளுண்டானபோதே, மேலும்மேலும் அதனைத் தேட அலையாமல், நன்முறைகளிற் பயன் படுத்திக் கொண்டு அமைதியாக வாழ்க்கை நடத்துதல் வேண்டும். விளக்கம்: காட்சியளவையை நினைந்து, முன்னரே என்றார். முனிமுதனிலைத் தொழிற்பெயர்; அனைவரும் பொருள் தேடி மகிழ வேண்டுமாதலின் ஒருவரே மேலுமேலுந் தேடுதல் மன்பதைக்குக் கேடும் வீணுமாமெனக் கருதிப் ‘பரவன்மின்' எனவும், சிக்கனம் பிடியாமல் முறையாகத் துய்த்தல் உடல்நலம் அறிவு நலம் முதலியனகொள்ள ஏதுவாகலின், ‘பற்றன்மின்' எனவும், பலர்க்கும் பகுத்தீதலின் உலகமும் நன்றாம், தமக்கும் உயிர்ப் பண்பு வளர்ச்சி பெறுமாதலின்' ‘பாத்துண்மின்' எனவும், பொருளோடு பற்றின்றி யொழுகும் பண்பு கைவந்து தெளிவுண்டாமாதலின். ‘கரவன்மின்' எனவுங் கூறினார்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்; கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்; இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம் விடுக்கும் வினையுலந்தக் கால். குறிப்புரை: செல்வம் - பொருள், கொடுத்துத் தாம் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் - பிறர்க்குக் கொடுத்துத் தானும் நன்றாக நுகர்ந்தாலும் திரளுதற்குரிய காலத்தில் மேலுமேலுந் திரளும், வினை உலந்தக்கால் - நல்வினை முடிந்துவிட்டபோது, இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது விடுக்கும் - அச் செல்வத்தை எவ்வளவுதான் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாமல் தனது தொடர்பை நீக்கிக் கொள்ளும், நடுக்குற்றுத் தன் சேர்ந்தார் துன்பம் துடையார் - இவ்வுண்மைகளை அறியாதார், வறுமைத் துன்பத்துக்கு அஞ்சித் தம்மை அடைந்தவர்களின் இன்னலைப் பொருள் கொடுத்துத் தீர்க்கமாட்டார்கள். கருத்து: செல்வம் நிலைப்பதற்கும் நில்லாததற்கும் ஏது இறுக்கிப் பிடித்தலும் பிறர்க்குக் கொடுத்தலும் அன்றாதலின், அவை முன்வினை காரணமாக நிகழ்வன எனக் கருதிப் பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு நெகிழாமற் செய்துவரல் வேண்டும். விளக்கம்: தளர்ந்து நிலைகுலைதல் ‘நடுக்குற்று' எனப்பட்டது. தன்ஒருமைப்பன்மை மயக்கம். ‘தற்சேர்ந்தார் துன்பந் துடைத்தலே வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அதனாலேதான் வாழ்க்கைக்கு விளக்கமுண்டாகின்றது' என்னும் உண்மை இதன்கண் விளங்கிற்று. ‘மிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார், ஒற்கம் கடைப்பிடியாதார்' என்னுஞ் சான்றோர் செய்யுட்களிலும் இம்முடிபு தீர்த்துரைக்கப்படும். தக்கவாறு தெளிவில்லாமையினாலேயே உலகத்தில் நற்செயல்கள் நிகழாமற் போதலின் இப்பாட்டுத் தகுமுறையிற் காரணங்காட்டுவதாயிற்று. ஐநதிணையைம் .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: இம்மி யரிசித் துணையானும் வைகலும் நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக் கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து அடாஅ அடுப்பி னவர். குறிப்புரை: இம்மியரிசித் துணையானும் - ‘இம்மியரிசி எனப்படும் ஒருவகைச் சிறிய அரிசியின் அளவாவது, வைகலும் நும்மின் இயைவ கொடுத்துண்மின் - நாடோறும் உமக்குக் கூடியன பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்; ஏனென்றால் குண்டு நீர் வையத்து அடா அடுப்பினவர் உம்மைக் கொடாதவரென்பர் - கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் சமைத்தலில்லாத அடுப்பினையுடைய வறியவர்கள் முற்பிறப்பிற் பிறர்க்கு ஒன்று உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவர். கருத்து: இயைந்த அளவாவது பிறர்க்கு உதவுதலை மேற்கொள்ள வேண்டும். விளக்கம்: ‘இம்மியரிசி' யென்பதை "மத்தங்காய்ப் புல்லரிசி" என்பர் நச்சினார்க்கினியர் சிந்தாமணியுரையில்; மிகச் சிறியதாகலின், ‘இம்மி யரிசி' நுவலப்பட்டது. பிறர்க்குக் கொடுக்க இயலாத நாளை இன்னாத நாளாகக் கருதுவாராகலின், ‘வைகலும்' எனப்பட்டது. உம்மை - முற்பிறப்பு, குண்டுநீர், ஆழமான நீர்நிலை என்னும் பொருட்டாய்க் கடலை உணர்த்திற்று. மிகக் கொடிய வறுமை தோற்றுதற்கு ‘அடாஅ அடுப்பினவர்' எனப்பட்டது; இரக்கம் என்னும் உயிர்ப்பண்பு மிகும் பொருட்டு இங்ஙனம் இப்பிறப்பில் அவர் துன்புறுவோராயினர். சிந்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு உறுமா றியைவ கொடுத்தல் - வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை ஈதல் இரட்டி யுறும். குறிப்புரை: மறுமையும் இம்மையும் நோக்கி - மறுமை இம்மை நிலைகளைக் கருதி, ஒருவற்கு உறுமாறு இயைவ கொடுத்தல் - கூடிய பொருள்களைத் தக்கமுறையில் ஒருவனுக்குக் கொடுக்க வேண்டும்; வறுமையால் ஈதல் இசையாதெனினும் - அப்படிக் கொடுப்பது வறுமையினால் மாட்டாதாயினும் , இரவாமை - பிறரை இரவாமலிருப்பது, ஈதல் இரட்டி உறும் - அவ்வறுமைக் காலத்தில் கொடுத்தலினும் இரு மடங்கு தக்கதாகும். கருத்து: வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமை. விளக்கம்: உறுமாறு கொடுத்தல் - உள்ளமும் உரையும் செயலும் இனியனாய்த் தருதல்; பொருந்தும் வகையில் என்றபடி.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்; குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள் இடுகாட்டுள் ஏற்றைப் பனை. குறிப்புரை: பலர் நச்ச வாழ்வார் - பலரும் தம்மை விரும்பி அணுகும்படி வள்ளன்மையுடன் வாழ்பவர்கள், நடுவூருள் வேதிகை சுற்று கோட் புக்க படுபனை அன்னர் - ஊர் நடுவில் மேடையினால் சூழ்ந்துகொள்ளுதலைப் பொருந்திய காய்த்தலயுடைய பெண்பனையை ஒப்பர் ; குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்துண்ணா மாக்கள் - தமது குடி செல்வமிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மாக்கள், இடுகாட்டுள் ஏற்றைப் பனை - சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண்பனையே யாவர். கருத்து: பிறர்க்கு வழங்கிப் பலர் நச்ச வாழ்தல் வேண்டும். விளக்கம்: படுதல், இங்குக் காய்க்குந் தன்மையுடையதாதல், கொழுத்தக்கண்வினையெச்சம். ‘ஏற்றை' எனவே ஆசிரியர் தொல்காப்பியர் ஒரு பெயர் குறிப்பாராதலின், அதன் ஈற்று ஐகாரம் சாரியையெனக் கூற வேண்டுவதின்று. தொல். மரபி .
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம செயற்பால செய்யா விடினும் - கயற்புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப ! என்னை உலகுய்யு மாறு. குறிப்புரை: கயல் புலால் புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப - கயல் மீனின் புலால் நாற்றத்தைப் புன்னை தனது மலர் மணத்தால் நீக்குகின்ற அலைமோதுங் கடலின் குளிர்ந்த கரையினையுடைய தலைவனே, பெயல்பால் மழை பெய்யாக்கண்ணும் - பெய்தற்குரியதான மழை பெய்யாத போதும், உலகம் செயற்பால செய்யாவிடினும் - உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யா விட்டாலும், என்னை உலகு உய்யுமாறு - உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு? கருத்து: மழையைப்போலப் பெரியோர் பிறர்க்கு உதவியாயிருக்க வேண்டும். விளக்கம்: காலத்திற் பெய்தல், கைம்மாறு கருதாது பெய்தல், வேறுபாடின்றிப் பெய்தல், மீண்டும் மீண்டும் பெய்தல் முதலியன மழையின் இயல்புகளாகக் கொள்ளப்படும். "அறுகுளத் துகுத்தும் அகல்வயற் பொழிந்தும், உறுமிடத்து உதவாது உவர்நிலம் ஊட்டியும், வரையா மரபின் மாரிபோல" "கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்" என்பவை முதலிய சான்றோர் செய்யுட்களினெலாம் இவ்வியல்புகள் காண்க. புறம். . . புறம்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் - ஆற்றின் மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல் பொலிகடன் என்னும் பெயர்த்து. குறிப்புரை: மலி கடல் தண் சேர்ப்ப - வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை யுடையவனே, ஆற்றின் - ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையாது - இரந்த கையை மாறாமல் இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் - கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண் மகனின் கடமையாகும். மாறு ஈவார்க்கு ஈதல் பொலி கடன் என்னும் பெயர்த்து - எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் விளக்கமான கடன் என்னும் பெயருடையது. கருத்து: எதிருதவிஏதுஞ் செய்தலியலாத வறிஞர்க்கு இயன்றதை மாறாமல் உதவுவதே ஆண்மை யாகும். விளக்கம்: "ஆற்றா மாக்கள் அரும்பசிகளைவோர், மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை" யாதலின் இங்ஙனம் கூறினார். பொதுவான கடனிலும் விளக்கமான கடன் என்றற்குப் ‘பொலி கடன்' எனப்பட்டது ; எல்லார்க்குந் தெரிந்த கடன் என்பது கருத்து. "வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து" என்பது பொய்யாமொழி. மணிமே . -
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோல் பைய நிறைத்து விடும். குறிப்புரை: இறப்பச் சிறிது என்னாது - நம்மிடமிருப்பது மிகவுஞ் சிறியது என்று கருதாமலும், இல் என்னாது- இல்லை என்று மறுத்துவிடாமலும், என்றும் - எப்போதும், அறப்பயன் யார்மாட்டும் செய்க - பயனுடைய தான அறத்தை அனைவரிடத்தும் செய்துவருக,முறைப்புதவின் - வாயில்கடோறும், ஐயம் புகும் தவசிகடிஞை போல் - பிச்சையெடுக்கும் தவசியின் உண்கலத்திற்போல, பைய நிறைத்துவிடும் - மெல்ல மெல்ல அறப்பயனை நிறைவாக்கிவிடும். கருத்து: சிறிய உதவியாயினும் மறாமற் செய்து வந்தால் மெல்ல மெல்லப் புண்ணியம் நிறைந்துவிடும். விளக்கம்: வேறுபாடின்றி என்றற்கு ‘யார் மாட்டும்', என்றார். ‘செய்க' என்றது ஈண்டுக் கொடுத்து வருக என்னும் பொருட்டு. முறைப்புதவின் - முறையே வாயில்களில்; அஃதாவது வாயில்கடோறும் என்பது. ‘புதவு' வாயிலென்னும் பொருட்டாதல், "பூரித்துப் புதவந்தொறும்" என்னும் சிந்தாமணியிற் காண்க. தவசியின் பிச்சைக் கலம் எடுத்துக்காட்டினமையின் புண்ணியமும் ஆற்றலோடு நிரம்புமென்பது கொள்ளப்படும். சிந்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் ஈகை பாடல்: கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்; இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர் அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் கொடுத்தா ரெனப்படுஞ் சொல். குறிப்புரை: கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர் - குறுங்கோலால் ஒலிக்கப்படும். கண்போன்ற இடத்தையுடைய முரசினது ஒலியைக் காத எல்லைவரையிலுள்ளோர் கேட்பர்; இடித்துமுழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் - இடித்து முழங்கிய மேகத்தினொலியை ஒரு யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர்; சான்றோர் கொடுத்தார் எனப்படும் சொல் அடுக்கிய மூவுலகும் கேட்கும் - தக்கோரால், ‘இவர் உதவி செய்தவர்' என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர். கருத்து: பிறர்க்கு உதவி செய்யும் வள்ளன்மையே ஒருவர்க்கு யாண்டும் புகழ்பரப்பும். விளக்கம்: கடிப்பு - முரசறையுங் கோல், காதம் - ஏழரை நாழிகை வழி யென்ப. முழங்கியதென்பது முழங்கிய ஒலியென்னும் பொருட்டாதலின் ஈண்டுப் பெயர். சிந்தாமணியுரையில் ‘யோசனையென்பது நாற்காத எல்லை' என்பர் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சான்றோராற் கூறப்படுஞ் சொல் எனப்படுதலின், ஞான ஒழுக்கங்களிற் சிறந்த அத்தகையோர்க்கு ஒன்று உதவுதலே சிறந்த ஈகையாகும் என்பது பெறப்படும்; "நன்றாய்ந் தடங்கினார்க்கு ஈத்துண்டல்" என்றார் பிறரும்.
செல்வம் நிலையாமை அறத்துப்பால் பழவினை பாடல்: பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் - தொல்லைப் பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த கிழவனை நாடிக் கொளற்கு. குறிப்புரை: பல் ஆவுள் உய்த்துவிடினும் - பல ஆக்களின் இடையில் செலுத்திவிடப்பட்டாலும் ; குழக் கன்று - இளைய ஆன்கன்று, வல்லதாம் தாய் நாடிக் கோடலை - தன் தாய் ஆவினைத் தேடித் தெரிந்தடைதலை, வல்லதாகும்; தொல்லைப் பழவினையும் - பிறப்புக்கள் தோறும் தொன்று தொட்டுவரும் பழவினையும், தன் செய்த கிழவனை நாடிக் கொளற்கு - தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி அடையும் வகையில், அன்ன தகைத்தே - அத்தகைய தன்மையுடையதேயாகும். கருத்து: பழவினை தனக்குரியவனைத் தவறாது சென்று பற்றும். விளக்கம்: "மழவுங் குழவும் இளமைப் பொருள" வாதலின் குழக்கன்றென்றது, இளங்கன்றை. தாய், இரு திணைக்கும் பொதுப் பெயர்; ‘பெண்மை சுட்டிய எல்லாப் பெயரும்' என்ற விடத்து, "எல்லாப் பெயரும்" என்றதனால் இம்முறைப் பெயரும் பெறப்பட்டது. ‘தொல்லை' யென்றார், தொடர்ந்து வருதல் தோன்ற. கிழவன் - உரிமையுடையோன். விடாது பற்றும் என்றற்கு, இவ்வுரிமைப் பொருள் உணர்த்துஞ் சொல் வந்தது.