text
stringlengths
0
25.6k
இன்னும் தமிழ்நாட்டில் எங்கெங்கோ பாய்ந்தது. என் சிந்தனை, எத்தனையோ நிகழ்ச்சிகளையும், ஆள்களையும் பிடித்து, விட்டுத்தாவி, மீண்டும் 'யால்டா' வர நெடுநேரமாகிவிட்டது. இதற்குள் படகு திரும்பி வந்து துறையில் நின்றது. வழிகாட்டி ஆண்மகன்-படகிலிருந்து கரைக்குத் தாண்டிக் குதித்தார். நாங்கள் பத்திரமாக இறங்கி வந்தோம்.
அடுத்த நாள் காலை கடலில் குளிக்கத் திட்டமிட்டோம். எங்களோடு சேர்ந்து குளிக்கும்படி வேண்டினோம், வழி காட்டியை. தாம் வந்து எங்களைக் குளிக்க அழைத்துப் போவதாகவும், ஆனால் தாம் எங்களோடு குளிப்பதற்கு இல்லை என்றும் மறுத்தார். நாங்கள் இரண்டொரு முறை வற்புறுத்தினோம். உறுதியாக உணர்ச்சி ஏதும் காட்டாமல் மீண்டும் மீண்டும் மறுத்தார்.
அடுத்த நாள் கலை கடல் நீராட , எங்களை அழைத்துப் போக வந்தார் வழிகாட்டி. அவரை எங்களோடு சேர்ந்து நீராடும்படி மீண்டும் வேண்டினோம். அப்போது கூறின பதில் எங்களைத் திடுக்கிடச் செய்தது. நம்ப முடியவில்லை அச்செய்தியை ஏன் ? அப்போதும் சரி, அதற்கு முன்பும், துக்கத்தின் சாயலை அவரிடம் காணவில்லை. அச்சத்தின் நிழல் படரவில்லை அவர் அழகு முகத்தில்.
தமது கால்களில் ஒன்று பொய்க்கால், என்று அவர் கூறிய போது அதிர்ச்சி ஏற்பட்டது. அப்படியாவென்று வியந்தோம். சென்ற உலகப் போரில், ஈடுபட்டு, காலை இழந்துவிட்டதாக விளக்கம் கூறினார். பின்னர் பொய்க்கால் பெற்றார். அதனோடு வாழ்கிறார். அவரது நடையில் பொய்க்கால் நடையென்று சந்தேகப்படுவதற்கு இல்லாமல் சாமர்த்தியமாக நடந்துகொண்டு வந்தார், அவ்விளைஞர்-அல்ல. முப்பத்தைந்து நாற்பது வயதுடைய-அவர்.
“போரிலே ஈடுபட்டு ஊனப்பட்ட யாரும் சுமையாக உட்கார்ந்ததில்லை. பரிகாரம் தேடிக்கொண்டு, ஏதாவது ஒரு வேலைக்குப் பயிற்சி பெற்றுத் தாமே உழைப்பதைக்காணலாம். அத்தனை பேருடைய உழைப்பும் நாட்டின் வளத்திற்குத் தேவை. பலரும், சென்ற காலத் தியாகத்தைக் காட்டி, வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால், நாட்டில் வளர்ச்சியும் வளமும் எப்படி ஏற்படும் ?” இது, அவரது படப்பிடிப்பு
எங்களிலே ஒருவருக்குக் காய்ச்சல் வருவதுபோல் இருந்தது. அதைச் சாக்காகக் காட்டி, நாங்களும் குழாய் நீராடி, உண்டுவிட்டு, ‘ஆர்டெக்’ மாணவர் நலவிடுதிக்குச் சென்றோம்.
ஆர்டெக் மாணவர் இல்லத்தைக் காணும் பொருட்டே நாங்கள் இவ்வளவு நெடுந்தூரம் வந்தோம். நாங்கள் சென்ற போது உயர்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பலர், நீராடிவிட்டு தங்கள் அறைகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் எங்களைக் கண்டதும் வணக்கம் கூறிவிட்டுச் சென்றனர்.
இல்லப் பொறுப்பாளர், எங்களை அழைத்துக் கொண்டு போய் பல இடங்களையும் காட்டினார்; இந்த இல்லம் கருங்கடல் கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கிறது. அறுநூறு பேர் ஏககாலத்தில் தங்கக்கூடிய அளவில் விடுதி ஒவ்வொன்றும் இருந்தது. இப்படி மூன்று விடுதிகள்.தனித்தனியே அவை வளைவுக்குள் இருந்தன. நான்காவது விடுதியொன்றை கட்டிக் கொண்டிருந்தனர். அது முடிந்தால் 2400 பேர் ஒரே நேரத்தில் தங்கலாம்.
இவை, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்காக தனித் தனியே ஒதுக்கப்பட்டவை. இருபாலரும் அங்கு தங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.
மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.
“பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா?” இக்கேள்வியைக் கேட்டோம்.
அங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளும் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா ? உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.
கடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.
இல்ல வளைவில் ஒருபால், பலர் பாடல்கள் பயின்று கொண்டிருந்தனர்; மற்றொருபால், பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்; சிலர் ஓடி வந்து எங்களைப் படமெடுத்தனர்.
இதைப் போன்ற மாணவர் இல்லம் சில, இராச்சியம் தோறும் உண்டாம். வளரும் மாணவர், மகிழ்ச்சியோடும், உடல் நலத்தோடும், உள்ள ஊக்கத்தோடும் வளர வேண்டும் என்பதில் தான் எத்தனை அக்கறை! எத்தனை கவனம் !
அடுத்த நாள், 'யால்டா' விலிருந்து கீவ் நகரத்திற்குப் புறப்பட்டோம். 'சிம்பராபல்' நகர விமான நிலையம் வரை வந்தார் வழிகாட்டி. பேச்சு பலவற்றின் மேல் பறந்தது.
“மெய்யான செல்வம் மக்கட் செல்வமே. குழந்தைகள் குழந்தைகளாக மகிழ்ந்தாட வேண்டும், சிறுவர் சிறுமியர் சுமையேதுமின்றிச் சிரிப்போடும் துடிப்போடும் துள்ளி வளர வேண்டும். இளைஞர் இணையற்ற ஊக்கத்தோடும் அறிவோடும் ஆர்வத்தோடும் வளரவேண்டும். வாலிபர் வலிமை மிக்கவர்களாக, ஆற்றல் மிகுந்தவர்களாக, கூடித் தொழில் புரிபவர்களாக, பொறுப்புள்ளவர்களாக வாழ வேண்டும். இந்நிலையை உருவாக்குவதற்கு வேண்டியதை யெல்லாம் செய்து வருகிறார்கள். எங்கள் நாட்டில்...”-வழிகாட்டி பேச்சை முடிக்கவில்லை. நான் குறுக்கிட்டேன்.
இவ்வளவு நன்முயற்சிகளுக்கிடையில், போர் என்ற பெயரால், எத்தனை உயிர்களைப் பலியாக்கி விடுகிறோம். எத்தனை காளையர் கால் இழந்து, கையிழந்து, கண் இழந்து அவதிப்படுகிறார்கள். நல் வளர்ச்சி ஒரு பக்கம். பெரும் அழிவு ஒரு பக்கம். என்ன உலகம்” என்று அங்கலாய்த்தேன்.
“ஆம். போர், பெருங்கொடுமை. அது கொள்ளும் பலி, பல இலட்சம். அது விட்டுச் செல்லும் ஊனர்கள் அதைவிட அதிகம். இதைவிடக் கொடுமை-பெருங்கொடுமை-ஒன்று மில்லை. இதை நாங்கள் அண்மையில் அனுபவித்தவர்கள். ஆகவே, அமைதியை, ஆர்வத்தோடு விரும்புவர் ' என்று பரவசத்தோடு பகன்றார்.
சாந்தியால் உலகம் தழைப்பது நன்றா ? சண்டையால் உலகம் உடைவது நன்றா? சண்டையால் நொண்டியாவது நன்றா?
10 இலண்டனில்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐமபத்தோரோவது ஆண்டு, ஜூலைத் திங்களில் ஒரு நாள், நான் இலண்டனில், முதியோர் கல்விக்கூடமொன்றைக் கண்டேன்.
குறிப்பிட்ட தெருவை அடைந்ததும், வழிப்போக்கச் ஒருவரிடம் முதியோ கல்விக்கூட முகவரியைக் காட்டி, அடையாளம் காட்ட வேண்டினேன்.
அவர், நான்கு கட்டிடங்களுக்கு அப்பால் இருந்த பெரிய கட்டிடம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.
அங்குச் சென்றேன். கல்விக்கூட முதல்வரைக் கண்டேன். அவர் அன்போடு வரவேற்றார். கனிவோடு பதில் உரைத்தார். எங்கள் உரையாடலின் சாரம் இதோ :
இக்கல்விக் கூடத்தில் அறுபத்து நான்கு வகைப் பாடங்கள், பயிற்சிகள் நடக்கின்றன. இங்கு நடக்கும் முதியோர் கல்வி, முதற்படிப்பு அல்ல; தொடர் படிப்பு ஆகும். எந்த வகுப்பிலும் ஒரு குறிப்பிட்ட பொதுப் பரீட்சைக்கு ஆயத்தஞ் செய்வதில்லை.
ஏற்கெனவே, உயர்நிலை வரையிலோ தொடக்க நிலை வரையிலோ படித்தவர்களுக்கு இக்கல்வி நிலையம். அவர் கஞக்கும் சாதாரண கல்லூரிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் நடக்கும் பாடத்திட்டத்தை ஒட்டி, பாட முறைகளை அமைப்பதில்லை.
முதியவர்களான பிறகு, புதுப்புதுக் கல்வி ஆசை எழுவதுண்டு. தமது தொழில் முன்னேற்றத்திற்கோ ஏதாவது ஒரு துறையில், படிக்கவோ பயிற்சி பெறவோ ஒருவர் விரும்பலாம். இக்கல்விக் கூடத்தில் சேர்ந்து, விரும்பிய படிப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபடலாம்.
இங்குச் சேர்த்துக்கொள்ள, நுழைவுச் சோதனை ஏதும் இல்லை. பாடங்களில், ஒரே நிலை வகுப்பும் இல்லை. குறிப்பிட்ட பாடத்திலேயே இரண்டு மூன்று நிலை வகுப்புகள் நடக்கும்.
அப்படியானால், எந்த அடிப்படையில் எந்த வகுப்பில் மாணவர்கள் சேர்ந்து பயில்வது?
மாணவர், தான் எந்த நிலைக்குத் தகுதி என்று நினைக்கிறாரோ, அந்நிலை வகுப்பாசிரியரோடு கலந்து பேசி, அவ்வகுப்பிலேயே சேரலாம்.
இக்கல்விக்கூட சேர்க்கையிலோ, வகுப்பு மாற்றத்திலோ,பாட முறையிலோ கெடுபிடி கிடையாது குறிப்பிட்ட பொதுப் பரிட்சையில் தேற வைப்பதன் மூலமே நற்பெயர் எடுக்க வேண்டிய நெருக்கடியும் இல்லை ! ஆகவே பாடப் போக்கிலே, நெளிவு சுளுவைக் காணலாம். ஏற்ற இறக்கத்தைக் காணலாம். ஒரு பகுதியை வேகமாகக் கடப்பதையும் மற்றொரு பகுதியை மெல்லக் கடப்பதையும் காணலாம்.
கெடுபிடிகள் இன்றி, நம்பி விட்டிருப்பது இக்கல்விக் கூடத்தை. மட்டுமா ? இல்லை. எல்லா முதியோர் கல்விக் கூடங்களும் இத்தகைய சுதந்திரத்தோடு இயங்குகின்றன.
முதியோர் கல்விக்கூடங்கள் அத்தி பூத்தாற்போல் ஒன்றிரண்டல்ல ; புலப் பல நாடு முழுவதிலும் பரவிக் கிடக்கின்றன, இந்நிலை முதியோர் கல்வி நிலையங்கள்.
இவற்றைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா? ஆம் ஏராளமானவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதனால்தான், அம் மாடிக்கட்டிடத்தின் ஆறு மாடிகளும் நூற்றுக்கணக்கான அறைகளும் இக்கல்வி நிலையத்திற்கே சரியாகிவிட்டன. ஆண்களைப் போலவே பெண்களும் முதியோர் கல்விநிலையங்களைப் பயன்படுத்துகின்றார்கள்.
எங்கள் உரையாடல் முடியவில்லை. நடுவில் ஒரு அம்மையார், முதல்வர் அறைக்குள் நுழைந்தார். என் பக்கம் திரும்பினார். " இரண்டு நிமிடம் குறுக்கிடலாமா?" என்று கேட்டார். "சரி" என்றேன். முதல்வரிடம் பேசினார். நாற்காலியில் அமர்ந்து பேசினார்.
" நான் இடைநிலை தத்துவ வகுப்பு மாணவி. இரண்டு மூன்று வாரங்களாக அவ்வகுப்பில் இருக்கிறேன் ஏற்கெனவே, மூன்று, நான்கு, தத்துவ நூல்களைப் படித்திருந்த தைரியத்தில், நேரே இடைநிலை வகுப்பில் சேர்ந்து விட்டேன். இப்போது அது, அதிகப்படி என்று தெரிகிறது அவ்வகுப்புப் பாடங்களை என்னால் சமாளிக்க முடியாது. கீழ்நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்தால் சமாளிக்க முடியுமென்று நினைக்கிறேன். இப்போது மாற்றிக்கொள்ள முடியுமா? இல்லையென்றால் நின்று விடுகின்றேன் ; அடுத்த பருவத்தில் வந்து, கீழ் நிலை, தத்துவ வகுப்பில் சேர்ந்து கொள்கிறேன், சரிதானா ? " இது அம்மையாரின் விண்ணப்பம்.
" தயவு செய்து கவலைப்படாதீர்கள். அடுத்த பருவம் வரை காத்திருக்க வேண்டா, இப்போதே வகுப்பு மாற்றம் செய்து கொள்ளுங்கள். தொடர்ந்து படியுங்கள். இதோ, மாற்றச் சீட்டு ;எடுத்துக்கொண்டு போய், வகுப்பு மாறிப் படியுங்கள், மேலும் சிக்கல் வந்தால் என்னிடம் வந்து சொல்லத் தயங்காதீர்கள். இனிமையோடும், உறுதியோடும், ஆர்வத்தோடும் வந்த பதில் இது.
முதல்வர், வகுப்பு மாற்றச் சீட்டை எழுதிக் கொடுத்தார், அந்த அம்மையாரிடம். அவரும் மகிழ்ச்சியோடு அதைப் பெற்றுக் கொண்டு சென்றார். நன்றி கூறி விட்டுச் சென்றார். என் பக்கம் திரும்பி, உரையாடலில் குறுக்கிட்டதற்காக, மன்னிப்புக் கேட்டுவிட்டு வெளியேறினார்.
அவர் கண்களில் நம்பிக்கையொளி வீசிற்று. ஐம்பது வயதிற்குமேல் மதிப்பிடக்கூடிய அந்த அம்மாளின் கண்களிலே நம்பிக்கையொளி. புதுத் துறைக்கல்வி யொன்றைக் கற்றுத் தேறப் போகிறோம் என்கிற நம்பிக்கையொளி.
இங்கோ, இளைஞர்களுக்குக்கூட, நம்பிக்கை இழந்த, வெறுப்பு நிறைந்த கண்கள். எனவே, அழிவு வேலை ஈடுபாடுகள் ! யாரை நோக ?
அந்த அம்மானின், முந்திய, தவறான முடிவைப் பற்றிக் குட்டி உபதேசமொன்று செய்வார். முதல்வர் என்று எதிர்பார்த்தேன். அவரோ அறவுரை நிகழ்த்தவில்லை; அம்மாளின் தவறைக் காட்டுவதன்மூலம், தான் உயர முயலவில்லை. விரைந்து உதவி, உயர்ந்து விட்டார் மாணவியின் ஊக்கத் தளர்வையும் போக்கி விட்டார் ; நம்பிக்கையை வளர்த்துவிட்டார். இவரன்றோ, ஆசிரியர் என்று பாராட்டிற்று என் நெஞ்சம்.
"எவ்வளவு இனிமையாக மாணவிக்கு உதவினீர்கள். அச்சத்தோடும் குழப்பத்தோடும் வந்தவர் ஆண்மையோடும் தெளிவோடும் விடை பெற்றுக் கொண்டாரே" என்று முதியோர் கல்வி நிலைய முதல்வரைப் பாராட்டினேன்.
“முதியவர் பொறுப்புடையவர். தவறு செய்வது மானிட இயல்பு. தவறை மிகைப்படுத்தி, மாணவர்களைக் குட்டுவது, இளைஞர்கள் விஷயத்திலேயே ஆகாது. முதியவர்கள் விஷயத்தில், அம்முறையைக் கொண்டால், சொல்லாமல் நின்று விடுவார்கள் ஒவ்வொருவராக.
" தன்னிச்சையாக, நினைத்த வகுப்பிலே சேரவிட்டால் என்ன கேடு ? அவர்களே, தங்கள் திறமையை அறிந்து, கொள்ள உதவியது, அது. மேல்நிலை முடியாதென்று உணர்ந்தபோது, தானே, கசப்பு ஏதும் இல்லாமல், கீழ் நிலைக்குச் செல்ல விரும்பினார்.
'சோதனை' என்ற பெயரால், தொடக்கத்திலேயே தாங்கள் தரம் பிரித்தால். பலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். கல்வி நிலையத்தில் சேர்ந்திருக்க மாட்டார்கள். முதியவர்களை 'விட்டுப் பிடிப்பதே' சிறந்தது. யாரும் மனம் நோகாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். தவறு நேர்ந்தால், சிறுமைப் படுத்தக்கூடாது திருத்த மட்டுமே விரையலாம். இதுவே கல்வியை வளர்க்கும் முறை" இது கல்வி நிலைய முதல்வரின் கருத்துரை. பொருள் செறிந்த உரையல்லவா ?
கல்வி, காட்டு முள் அல்ல. தானே வளரும் தாவரமும் அல்ல. அது வளர்க்கப்படும் பயிர், நுட்பப் பயிர். முதியோர் கல்வியோ மிக நுட்பப் பயிர்.