text
stringlengths
0
25.6k
வெளிநாட்டார் ஒருவர், இலண்டனுக்கு வந்து அங்குள்ள வசதிகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொண்டு, அவ் வெள்ளையரையே அவ்வளவு மிரட்ட விடலாமா ? ஏன் அப்படி விட்டு வைக்கிறார்கள் ?’ என்று எங்களுக்கு ஐயம். அதைப் பல ஆசிரியர்களிடமும் மற்றவர்களிடமும் வெளியிட்டோம் .
அவ்வளவு பேச்சுரிமை இருப்பதைப் பற்றிப் பெருமிதம் கொண்டனர் ; புன்முறுவல் பூத்தனர். அதற்குச் சிறிதளவும் தடை விதிக்கக்கூடாதென்று அழுத்தந்திருத்தமாகக் கூறினர். ‘அதைக் கட்டுப்படுத்துகிறோம் ; இதைக் கட்டுப்படுத்துகிறோம்’ என்று நல்லெண்ணத்தோடு, தொடங்கி, நம்மை அறியாமலேயே எல்லார்க்கும் பல விதத் தளைகளை மாட்டி விடுவோம். ஆகவே இருக்கிற உரிமையிலே சிறிதும் கை வைக்கக்கூடாது !’ என்ற போக்கிலே இருந்தது அவர்கள் பதில்.
நினைக்க நினைக்கச் சுவைக்கும் அக்காட்சியையும் கருத்தையும் சில அறிஞர்களிடம் கூறும் வாய்ப்பு அவ்வப்போது கிட்டிற்று. எதெதற்கோ படபடக்கும், துடிதுடிக்கும், குமுறும், அனிச்ச மலர்களாகிய நம்மவர்க்குச் சொல்லலாமா?
8. லெனின்கிராடில்
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தோராம் ஆண்டு, செப்டம்பர் திங்கள், நானும் என்னுடன் வந்த புகழ்பெற்ற இரு இந்தியக் கல்வியாளர்களும் லெனின் கிராட் நகரத்திற்குச் சென்றோம்.
அங்குள்ள பல்கலைக் கழகத்தில், தமிழ் மொழியைக் கற்றுக்கொடுக்கிறார்கள் என்று அறிந்து மகிழ்ந்தோம். தென்னாடுடைய தமிழ் மொழியை, எந்நாடும் கவனிக்கும் இரஷியாவில், வடபால் உள்ள இரஷியாவில், வடக்கே உள்ள லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொடுக்கிறார்கள் என்று கேட்டபோது, காதும் இனித்தது: கருத்தும் இனித்தது ஊனும் உயிரும் இனித்தன.
முதல் நாள் ; நடுப்பகல் உணவு வேளை. நாங்கள் மூவரும், தங்கியிருந்த ஒட்டலுக்குள் நுழைந்தோம். தனியே, யாருக்கோ காத்துக் கொண்டிருந்த அந்த வாலிபர் ஒருவர் எங்களை அணுகினார்.
“நீங்கள் தானா வேலு என்பது ?” என்று தூய தமிழ் உச்சரிப்பில், என்னை வினவினார். என்னோடு வந்த இந்தியர் இருவருக்கும் தமிழ் தெரியாது. இவர்கள் தவறாக நினைத்து விடக் கூடாதே என்பதற்காக, “ஆம்” என்று ஆங்கிலத்தில் பதில் அளித்தேன்.
“நான் தமிழில் பேசலாமா ?” என்றார், அவ்வாலிபர். உடன் வந்தவர்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு. “நன்றாகப் பேசலாம். தங்கள் பெயர் என்னவோ ?” என்றேன்.
‘ என் பெயர் ரூதின் என்பது ; இது இரஷ்யச் சொல்.தமிழில் ‘செம்பியன்’ என்று பெயர் என்றார்.
“தாங்கள் என்னை எப்படி அறிவீர்கள் ? தாங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?”
“தாங்களும் வேறு இந்தியக் கல்வியாளர்கள் இருவரும் இங்கு வருவதாகப் பத்திரிகையில் படித்தேன். தாங்கள் தமிழர் என்பதை, என்னுடன் லெனின் கிராட் பல்கலைக் கழகத்தில் தமிழ் கற்றுக்கொடுக்கும் திருமதி ஆதிலட்சுமி அம்மாள் சொன்னார்கள். அவர்களுக்கு இப்போது வகுப்ப வேலை இருப்பதால் நான் மட்டும் வந்தேன்” என்பது செம்பியன் பதில்.
செம்பியன், பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் ஆசிரியர் என்பதை அறிந்தேன். தமிழ் ஆசிரியர் மட்டு மல்ல ; தமிழில் ஆர்வம் உடையவர் என்று அறிந்து மகிழ்ந்தேன். அங்குத் தமிழ் துறையில் சில மாணவர்கள், நம் தாய் மொழியைப் பற்றுதலோடு கற்கிகிறார்கள் என்று கேட்டுப் பூரித்தேன். தெருவெல்லாம் தமிழ் முழக்கஞ் செழிக்கச் செய்வீர்” என்ற கட்டளையைப் பிற நாட்டவராவது பின்பற்ற முனைந்துள்ளதை எண்ணித் திருப்தி கொண்டேன். உலகமெல்லாம் தமிழ் கேட்கும் நாளும் வருமோ என்று எண்ண வானில் உயரப் பறந்தேன்.
தம் பல்கலைக் கழகத்திற்கு வந்து, தமிழ் துறையைக் கண்டு, அங்குள்ள மாணவர்களோடு பேசும்படி கேட்டார் செம்பியன். ஒப்புக்கொள்ள கொள்ளை ஆசை. பயண ஆணையரைக் கேட்டேன். நிகழ்ச்சிகள் நெருக்கமாகச் செறிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். நீக்குப் போக்கிற்கு இடமின்மையை விளக்கினார். உடன் இருந்து கவனித்த செம்பியன், நிலைமையை உணர்ந்து கொண்டார். பிறிதொரு முறை அத்தகைய நல்வாய்ப்பினை எதிர்பார்ப்பதாகக் கூறினார். வகுப்பிற்கு நேரமாகி விட்டதால் வணக்கம் கூறி விடை பெற்றுக் கொண்டார்.
இதே செம்பியன்தான் - ரூதின்தன் - பின்னர், சென்னைக்கு வந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றவர். கர்ம வீரர் காமராசரோடு, அவரது இரஷியப் பயணத்தில், மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் இவரே.
நாங்கள் உணவருந்தச் சென்றோம். மனிதர்களிலே சிலரைத் தீண்டாதவர்களாகக் கருதி வந்த நம் மக்கள், பழக்கக் கொடுமையால், இக்காலத்தில் மொழிகள் சிலவற்றின் மேல் அத்திண்டாமைப் போக்கைத் திருப்புகிறார்களே என்று ஏங்கினோம். தீண்டாமை மக்கள் இடையே கூடாது, என்று கருத்தைத் தெளிந்தோம். கற்ற மொழிகளெல்லாம் நம் சொந்த மொழிகளாகி விடும். அவை பிறந்த நிலத்தார், தனி உரிமையோ கொண்டாட முடியாது. புதிதாகக் கற்ற அந்நியரை, அம் மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது.
இப்படிச் சென்றுகொண்டிருந்தது எங்கள் சிந்தனை. பின்னர், அவ்வூரிலேயே தாங்கள் பெற்ற பட்டறிவு எங்கள் சிந்தனைக்குச் சிறகுகள் பல தந்தது. உயர்நிலைப்பள்ளி யொன்றில் ஆங்கிலத்தின் மூலம் பல பாடங்களையும் கற்றுக் கொண்டிருந்தார்கள். அதை நாங்கள் கண்டோம். பள்ளிகள், ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கற்றுக் கொடுப்பதை முன்னர் கண்டது. உண்டு. இங்குத்தான் அந்த அத்திய மொழியைப் பாட மொழியாகவும் பயன்படுத்துவதைக் கண் டோம். இம்முறை பல பள்ளிகளில் உண்டா ? இல்லை சோதனையாக இரண்டொரு பள்ளிகளில் கையாண்டு பார்க் கிறார்கள். விளைவை, சிக்கல்களை, விழிப்பாகக் குறித்துக் கொள்கிறார்கள். மொழிப் பகையை நீக்கி, துணிந்து, புது முறையைச் சோதிப்பது எங்களைக் கவர்ந்தது. அதிகாரம் இருக்கிறதென்று ‘இட்டது சட்டமென்று, எடுத்த எடுப்பிலே பல பள்ளிகளுக்கும் ஆணையிடாமல் சோதனைக்காகச் சில பள்ளிகளை மட்டும் அனுமதித்திருப்பது எங்களுக்குத் தெளிவைக் கொடுத்தது. கல்விமுறை மாற்றம் காலத்தோடு விளையாட்டு. அது வினையாக-தீவினையாக-மாறாதிருக்க வேண்டுமென்றால் கல்விச் சோதனையும் தேவை . அதே நேரத்தில் அது குறுகிய அளவிற்குட்பட்ட சோதனையாகவும் இருக்கவேண்டும்’ என்று உணர்ந்தோம். கட்டுக்குட்பட்ட முன்னோட்டமே கலவி மாற்றத்திற்கு வழி என்று உங்கள் நெஞ்சமும் கூறுகிறதா?
லெனின் கிராட் நகரில், ஜார் மன்னனது மாளிகை இருக்கிறது. இப்போது யாரும் குடியிருக்கும் மாளிகையாக இல்லை. கலைக்கூடமாக இருக்கிறது. ஜார் ஆட்சியைக் கவிழ்க்கச் செய்து புரட்சியில் மக்கள் சிந்திய இரத்தம், ஆறேயாகும். இழந்த உயிர்களும் எத்தனை - எத்தனையோ கொண்ட பலிகளும் கொடுத்த பலிகளும் ஏராளம். அழிந்த பொருள்களுக்கும் அளவில்லை. ஆயினும் இங்கும் பிறவூர்களிலும் மாளிகைகளையும் பிற கட்டிடங்களையும அவர்கள் அப்படியே காப்பாற்றியிருப்பதுபோல வேறெந்த நாட்டினரும் காப்பாற்றியிருப்பார்களா என்பது ஐயமே.
லெனின் கிராடிலுள்ள ஜார் மாளிகை பெரியது அழகியது. அதை அன்றிருந்தபடியே அருமையாகக் காத்து வருகிறார்கள். தொல்பொருள் காட்சிக்காக அல்ல பயனுக்காகக் காத்து வருகிறார்கள். சிறந்த பல ஒவியங்களும் சிற்பங்களும், வேறு கலைப் பொருள்களும் அங்குக் காட்சிக்காக வைக்கப்பட் டுள்ளன. அவை அலங்கரிக்கும் மண்டபங்களும் ஒன்றிரண்டு அல்ல ; பல அவற்றில் சிலவற்றைச் சுற்றிப் பார்க்கவே எங்க தக்குப் பிற்பகல் முழுவதும் சரியாகிவிட்டது.
ஏராளமானவர்கள், ஆணும் பெண்ணும், பெரியவர்களும் சிறியவர்களும்-வயதில்-வந்து, கண்டு மகிழ்ந்து, அறிந்து, தெளிந்து செல்கிறார்கள். கால் கடுக்கும்போது ஆங்காங்கே, இளைப்பாறவும் நல்ல பெஞ்சுகள் அமைத்து இருக்கிறார்கள். இப்படியே பல ஊர்களில் பிரபுக்கள் மாளிகைகள் கலைக் கூடங்களாகி விட்டன.
இம்முறை இல்லையென்றால் மறுமுறை வெல்வது உறுதி. அன்றைக்குப் பயன்படக்கூடிய இம்மாடமாளிகைகளைப் பிற கட்டிடங்களைப் பாழாக்க வேண்டா. அப்போதைக்கப்போதே குறித்து வைத்து, பாதுகாத்துக் கொள்ளலாம் என்ற போக்கை அங்குக் கண்டோம். இப்போதைக்குத் தனக்கு ஆகாத பாலைக் கொட்டிக் கவிழ்க்கும் போக்கு இல்லை.
சிலரிடத்திலே முடங்கிக்கிடந்த பொருட்செல்வத்தை எல்லாருக்கும் பயன்படும்படி செய்ததைப் போல், சில மாளிகைகளுக்குள் மறைந்து கிடந்த கலைப்பொருட்களையும் மக்கள் அனைவரும் கண்டு களிக்கச் செய்து விட்டது சோவியத் ஆட்சி என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள் ரஷியர்கள்.
வரலாற்றுச் சிறப்புடைய லெனின்கிராடை இரண்டாவது உலகப்போரின் போது, ஜெர்மானியர் முற்றுகை இட்டனர். முற்றுகை சில நாட்களா ? இல்லை. சில மாதங்களா ? இல்லை. மொத்தம் 900 நாள்கள் முற்றுகையாம். ஜெர்மானியர் சுற்றி வளைத்துக்கொண்டால் போர் விளையாட்டாகவா இருக்கும் ? மிகக் கடும்போர் நடத்ததாம். அன்றாடம் ஆயிரக்கணக்கில் சாவாம். உண்ண உண வில்லை. குடிக்க நீரில்லை, பட்டினியாலும் தாகத்தாலும் இறந்தவர் இலட்சக்கணக்கில். போராடி மடிந்தவரும். இலட்சக்கணக்கில். ஆயினும் சரணடையவில்லை லெனின் கிராட். வெந்நீரில் தோல் வாரைப் போட்டுக் காய்ச்சி: குடிக்கும் நிலைக்கு வந்தபோதும், கலங்காது. தாக்குப்பிடித்து கூடி நின்று, போராடி, கடைசியில் வெற்றியும் கண்டது லெனின் கிராடு. பதினைந்து இலட்சம் மக்களை இழந்து சரணடையாது நின்று வென்றது என்று லெனின் கிராட் வாசிகள் பலர் பெருமிதத்தோடு எங்களிடம் கூறினர்.
‘விதந்தரு கோடி யின்னல் விளைந்தெனை அழித்திட்டாலும் சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்ற சுதந்திர கீதத்திற்கு இலக்கணமாக விளங்கிய அந்நகரவாசிகள் தலைநிமிர்த்து நிற்க உரிமை பெறாவிட்டால் வேறு எவரே உரிமை உடையவர்கள் !
‘சொந்த அரசியலும் புவிச்சுகங்களும் மாண்புகளும் அந்தகர்க்குண்டாமோ கிளியே, அலிகளுக்கின்ப முண்டோ! ஆம் அதோ பாரதியாரின் குரல் கேட்கிறது, கேளுங்கள்: உற்றுக் கேளுங்கள் உணர்வு பெறுங்கள்.

9. மெய்யான செல்வம்
சோவியத் பயனத்தின்போது, நாங்கள் யால்டா என்ற நகருக்குச் சென்றோம். அந்நகரம் அண்மை வரலாற்றில் சிறந்த இடம் பெற்றது, அது கருங்கடல் கரையில் உள்ள அழகிய நகரம்.
அந்நகரில்தான், இரண்டாம் உலகப் போரின் பிற்பகுதியில் முப்பெருந் தலைவர்களின் மகாநாடு நடந்தது. அம் மும்மூர்த்திகள் யார் ?
சர்ச்சில், ரூஸ்வெல்ட் ஸ்டாலின் ஆகிய மூவர். அவர்கள் அங்குக் கூடினர். உலகப் போரை வெற்றிகரமாக முடிப்பதைப் பற்றித் திட்டமிட்டனர். வெற்றிக்குப் பிறகு, உலக அமைதிக்கு என்னென்ன செய்யவேண்டுமென்றும் கலந்து ஆலோசித்தனர். விரிவாகத் திட்டமிட்டனர்.
தலைவர்கள் கூடிய அந்நகருக்கு, தொண்டர்களாம், கல்வித் தொண்டர்களாம், நாங்கள் மூவரும் போய்ச் சேர்ந்தோம்.
அந்நகருக்குப் பல கிலோமீட்டர் துரத்திலிருந்தே, கருங்கடலை அடுத்து, பலப்பல பெரிய அழகிய மாளிகைகளையும் கட்டிடங்களையும் கண்டோம். அதோ அந்த மேட்டிலே தெரிகிறதே அம்மாளிகை....கோமகனுடையது. அது அந்தக் காலம் பிரபுத்துவம் போய்விட்ட காலம் இது. இப்போது, அம்மாளிகை.......நெம்பர் தொழிற்சாலைத் தொழிலாளர்களுடைய நலவிடுதி”
“இதோ கடலை யொட்டியுள்ள கடலகம், முன்பு ஒரு கோடீசுவரனுடைய மாளிகை.இன்று ஆசிரியர்கள் நலவிடுதி,” இப்படிப் பல பெரிய கட்டிடங்களை சுட்டிக் காட்டினார். எங்களைச் சிம்பராபல் விமான நிலையத்திலிருந்து அழைத்துக் கொண்டு போனவர் ஒவ்வொரு சாராருக்கும் ‘நலவிடுதி’ என்று குறிப்பிட்டு வந்தார்.
“ நலவிடுதி என்றால் என்ன?” எனும் ஐயத்தைக் கிளப்பினோம்
“உடல் நலத்திற்கேற்ற தட்ட வெப்பநிலையும், நற்காற்றும், இயற்கைச் சூழ்நிலையும் உடைய பல மலையூர்களையும் கடற்கரைப் பட்டினங்களையும் ஆரோக்கிய ஆஸ்ரமங்களாகக் காத்து வருகிறார்கள். பலதுறைகளிலும் பாடுபடும் பாட்டானிகளும், அலுவலர்களும் ஊழியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் அத்தகைய இடங்களுக்குச் சென்று தங்கி ஒய்வு பெறுவார்கள். உடல் நலத்தோடும் உள்ள ஊக்கத்தோடும் வேலைக்குத் திரும்புவார்கள். இதற்கு வசதியாக இருக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆரோக்கியபுரியிலும் வெவ்வேறு பிரிவுத் தொழிலாளருக்கென்றும் தனித்தனி விடுதி உண்டு.
“எடுத்துக்காட்டாக இரயில்வே தொழிலாளிகளுக்கென்று அவர்கள் தொழிற்சங்கத்தின் பராமரிப்பில் விடுதி அமைத்திருப்பார்கள். அதேபோல மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் விடுதி அமைத்திருப்பார்கள். ஆலை தொழிலாளர்களுக்கென்று ஒரு விடுதி இருக்கும் ஆசிரியர்களுக்கென்று, அவர்கள் சங்கம் ஒரு விடுதியை நடத்தும். 
“இப்படி நாடு முழுவதும், பல ஊர்களில், பல பிரிவினருக்கும் விடுதிகன் இருப்பதால், எளிதாக அதிகச் செலவில்லாமல், விடுமுறை விடுதிகளால் நலம் பெறுகின்றனர் எங்கள் மக்கள்” - இது தோழரின் பதில்.
கருங்கடலைச் சுற்றி இத்தஃகைய நலவிடுதிகள் ஏராளம். இங்கு, அச்சமின்றி கடல் நீராட ஏராளமான இடங்கள் இயற்கையாக அமைந்துள்ளனவாம். கருங்கடலும் அதிக கொந்தளிப்பு இல்லாதது. நாங்கள் சென்றபோது பெரிய ஏரிகளில் வீசுகிற அளவு அலைகூட இல்லை. பல இடங்களில் கரையிலிருந்து நெடுந்தூரத்திற்கு ஆழம் மிகக் குறைவு. எனவே ஆபத்தின்றி கடல் நீராடலாம்.
இதை அறிந்து, நாங்கள் அதற்கேற்ற உடையோடும். மனப்போக்கோடும் யால்டா பேய்ச் சேர்த்தோம். அங்குப்போ ய்ச் சேர பிற்பகல் ஆகிவிட்டது. ஆகவே, உண்டு, சிறிது இளைப்பாறி விட்டு, ஊர் கற்றிப் பார்த்தோம்.
பின்னர் துறையொன்றிற்குச் சென்றோம்; வழியிலே வயோதிகர் ஒருவர் எங்களைக் கண்டார்; வழிமறித்தார்.
அவர் பழுத்த பழமாக இருந்தார்; எங்களுடன் வந்த அம்மையாரை - இந்தியப் பெண்மணியை - உற்றுப் பார்த்தார். கண்ணிர் பொலபொலவென்று உதிர்ந்தது. “பல ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஒரே மகளைப் போலவே நீர் இருக்கிறாய் அம்மா ! நீ வாழ்க!” என்று தலைமேல் கையை வைத்து வாழ்த்தினார். தம்மோடு ஒட்டலுக்கு வந்து தேநீர் அருந்தும்படி வேண்டினார். இவற்றை எங்களுக்கு ஆங்கிலத்தில் சொன்ன மொழிபெயர்ப்பாளர் எங்கள் பணிவான மறுப்பை அப்பெரியவருக்குச் சொல்லி அமைதிப்படுத்தி அனுப்பினார்.
பெரியவரின் கண்ணி, என் துக்கத்தை எனக்கு நினைவு படுத்திவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு, மற்றவர் காணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது
மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.
காலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.
'அப்பா ! கவலைப்படாதீர்களப்பா ! இங்கு நல்லது செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.
தமிழ்நாட்டின் அரைத்த மாவுப் பேச்சாளர்கள் சிலர், பகலுணவுத் திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு, 'பஞ்சர்' செய்ய முயன்றபோது, அவன் எனக்குக் கொடுத்த ஊக்க ஒலி அது.