செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
பாதங்கள் நல்லார் பரவி யேத்தப்பத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள் ஏதங்கள் தீர இருந்தார் போலும்எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம் வேதங்க ளோதிஓர் வீணை யேந்திவிடையொன்று தாமேறி வேத கீதர் பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. பொருளுரை: வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளியுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார். குறிப்புரை: 'பத்திமை' என்புழி, 'மை' பகுதிப்பொருள் விகுதி. 'வேத கீதராய்' என ஆக்கம் வருவித்துரைக்க. "ஏத்தி" என்பதும் பாடம். ஏதங்கள் - துன்பங்கள். வீக்கி - கட்டி.
பட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்பகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ் சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத்தில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள் விட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டேஓதுவதும் வேதமே வீணை யுண்டே கட்டங்கங் கையதே சென்று காணீர்கறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. பொருளுரை: இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலேயானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக்கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்திவிடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள். குறிப்புரை: 'பாம்பு' என்றது, உடையின்மேல் கச்சாக உள்ளதனை. 'நட்டம் செய்வார்' எனஇயையும். 'செல்வார்' என்பது பாடம் அன்று. 'கண்டோம் இந்நாள்' என்பதன் பின்னர்.'கறைசேர் மிடற்றெங் கபாலியார்க்கு' என்றுரைக்க. 'உண்டு' என்பது, 'சூலம்' என்பதனோடும் இயையும். இத்திருத்தாண்டகம், இறுதிக்கண்,தில்லைச் சிற்றம்பலத்தில் இறைவர் வெளிப்பட்டு நின்றருளுதலைக் கண்டு,அதனைப் பிறருங் காணுமாறு அருளிச் செய்ததாம். 'தில்லையைக் காணமுத்தி' என்னும் வழக்குண்மையையும் நினைக்க. காண வேண்டினார்க்கு அடையாளம் அருளுவார்போல் அருளிச் செய்தது. அவை இறைவனுக்கேயுரிய சிறப்படையாளமாதலையும், அவ்வடையாளங்களை ஓர்ந்துணர்வார்க்கு இறையுணர்வு பெருகுமாற்றினையும் நினைந்தருளியென்க. பின்னும் இவ்வாறு அருளிச் செய்வன உள; அவற்றை ஆண்டாண்டு உணர்க. ஆர்த்து - கட்டி. பகவன் - 'ஐசுவரியம், வீரம்,புகழ், திரு, ஞானம், வைராக்கியம்' என்னும் ஆறு குணங்களையுடையவன். பாரிடம் -பூதகணம். சிட்டர் - மேலானவர். விட்டு - ஒளி விட்டு.
திருஅதிகை வீரட்டானம் பதிக வரலாறு: திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சைவம் சார்ந்த பின்னர்ச் சமணர்கள் கல்லொடு பிணித்துக் கடலில் பாய்ச்சிய பொழுது, "சொற்றுணை வேதியன்" என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிக் கல்லையே தெப்பமாகக் கொண்டு கரைசேர்ந்து திருப்பாதிரிப்புலியூரீசனை வணங்கித் திருவதிகைப் பதி வாணர்கள் எதிர்கொள்ளத் திருவதிகைவீரட்டானஞ் சேர்ந்தார். ஆங்குப் பெருமானை வணங்கி, "எம்பெருமான் தனை ஏழையேன் நான் பண்டிகழ்ந்தது" என்று பரிவால் பாடியருளிய திருப்பதிகம் இது. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும். "ஏழையேன் நான் பண்டிகழ்ந்தது" என்று பாடியிருத்தலால், 'ஏழைத் திருத்தாண்டகம்' எனப் பெயர்பெற்றது. (தி.திருநாவு. புரா - குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவர் அருள்செய்த எல்லை இல் இன்ப வெள்ளத்தில் திளைத்து நின்ற காலத்து, முன்பெலாம் இளைய காலத்தே அதனைப் பெறாது, கோளில் பரசமயநெறிக் குழியில் விழுந்து, அறியாது மூளும் அருந்துயர் உழப்ப, நாள்கள் பலவும் கொன்னே கழிந்ததனை நினைந்திரங்கிய கழிவிரக்கத்தினால் அருளிச் செய்தது. "கற்றார்முன் தோன்றா கழிவிரக்கம்" (நான்மணிக்கடிகை - என்றது, "ஆக்கம் இழந்தேமென் றல்லாவார் ஊக்கம் ஒருவந்தங் கைத்துடையார்" (குறள் - . "கேட்டிலுறுதி கூட்டு முடைமை" (கொன்றைவேந்தன் - என்றவற்றின் பொருண்மையதாகப் பொருள் பற்றிக் கூறியதன்றி, வீடுபற்றிக் கூறியதன்றாகலின், அதுபற்றி ஈண்டு ஐயமின்மை யுணர்க. திருவதிகை, சுவாமிகள், திருவருள் பெற்ற தலம். 'அதிகை' என்பது தலத்தின் பெயர்; 'வீரட்டானம்' என்பது திருக்கோயிலின் பெயர். 'வீரத்தானம்' எனப்து, 'வீரட்டானம்' என மருவிற்று. 'மூலட்டானம்' என வருவதும் அது. இறைவர் வீரச்செயல் செய்த இடங்களாகக் குறிக்கப்படுவன எட்டு; அவை, 'அட்ட வீரட்டம்' எனப்படும். 'வீரட்டானம்' என்பது பின்னர், 'வீரட்டம்' என்றாயிற்று. அட்ட வீரட்டத்துள் திருவதிகை திரிபுரம் எரித்த இடமாகக் குறிக்கப் படும். ஏழைத் திருத்தாண்டகம் - ஏழைமையைக் குறித்த திருத் தாண்டகம். ஏழைமை -அறிவின்மை; இதனை, "அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் -என்னுடையரேனு மிலர்" (குறள் - என்றும், "நுண்ணுணர் வின்மை வறுமைஅஃதுடைமை - பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" (நாலடி - . என்றும் கூறுதலால் அறிக. ஏழைத் திருத்தாண்டகம் ப. தொ. எண்:பதிக எண்: 3 வெறிவிரவு கூவிளநல் தொங்க லானைவீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப் பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை அறிதற் கரியசீ ரம்மான் தன்னைஅதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை எறிகெடிலத் தானை இறைவன் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: அலைகள் வீசும் கெடில நதிக்கரையிலுள்ள எம்பெருமான் நறுமணம் கமழும் வில்வமாலை அணிந்தவன். அதிகை வீரட்டத்தில் உகந்தருளியிருப்பவன். இடபவாகனன்.ஆதிசேடனாகவும், கருடவாகனத் திருமாலாகவும் பொன் நிறமுடைய பிரமனாகவும் அவருள் உடனாய் இருந்து அவரைச் செயற்படுப்பவன். பொருள்சேர் புகழுக்குத்தக்கவன். உணர்ந்தார்க்கும் உணர்வரிய சிறப்பினை உடைய தலைவன். அதியரையமங்கை என்ற திருத்தலத்தை உகந்தருளியிருப்பவன். அத்தகைய பெருமானை அறிவிலியாகிய யான் என் வாழ்க்கையின் முற்பகுதியில் வழிபடாது பழித்துக்கூறிய செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: வெறி - வாசனை. கூவிளை - வில்வம். தொங்கல் - மாலை. பொறி அரவு -என்றருளிச்செய்தது, 'இருவர்க்கும் முன்னோனாய் நின்று அவரைத் தோற்றுவித்துப் பின்னர், அவரோடு ஒப்பவைத்து 'மூவர்' என்று எண்ணுமாறு நின்றனை' என்றருளியவாறாம். அதியரைய மங்கை, அதிகை. வேறுதலமாகவும் கூறுவர். கெடிலம், திருவதிகையை அடுத்து ஓடும் நதி. இறை - இறுத்தல்; எல்லாப் பொருளினும் தங்குதல். இது வகர இடைநிலை பெற்று இறைவன் என வந்தது, 'துறைவன், தலைவன்' முதலியன போல, இடைநிலை பெறாதவழி இறையன், இறையான் என வரும். பண்டு- முன்பு. 'இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது' என்க.
வெள்ளிக் குன்றன்ன விடையான் தன்னைவில்வலான் வில்வட்டங் காய்ந்தான் தன்னைப் புள்ளி வரிநாகம் பூண்டான் தன்னைப்பொன்பிதிர்ந் தன்ன சடையான் தன்னை வள்ளி வளைத்தோள் முதல்வன் தன்னைவாரா வுலகருள வல்லான் தன்னை எள்கவிடு பிச்சை யேற்பான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: மீண்டும் பிறப்பெடுக்க வேண்டிய நிலையில்லாத வீட்டுலகை அருளவல்லஎம்பெருமான் வெள்ளி மலை போன்ற காளையை வாகனமாக உடையவன். வில்லைப்பயன் கோடலில் வல்ல மன்மதனுடைய வில்லைக் கையாண்ட செயலைக் கோபித்தவன். படப்புள்ளிகளையும் கோடுகளையும் உடைய நாகத்தை அணிகலனாக அணிபவன். பொன் துகள் போல ஒளிவீசும் செஞ்சடையினன். சந்திரனைப் போல ஒளிவீசும் தோள்வளை அணிந்த முதல்வன். பிறர் தன்னை இகழுமாறு பல வீட்டிலுள்ளவர்களும் வழங்கும் பிச்சையை ஏற்பவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது. குறிப்புரை: வில்வலான் - காமவேள். வில் வட்டம் - வில்லை வட்டித்தஇகழுமாறு.
முந்தி யுலகம் படைத்தான் தன்னைமூவா முதலாய மூர்த்தி தன்னைச் சந்தவெண் திங்க ளணிந்தான் தன்னைத்தவநெறிகள் சாதிக்க வல்லான் தன்னைச் சிந்தையில் தீர்வினையைத் தேனைப் பாலைச்செழுங்கெடில வீரட்டம் மேவி னானை எந்தை பெருமானை யீசன் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: செழிப்புடைய கெடிலநதி பாயும் அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையாய்ப் பெருமானாய், எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள எம்பெருமான்தான். என்றைக்கும் கெடுதலில்லாத முதற்பொருள். அவனே முற்பட்ட காலத்தில் உலகங்களைப் படைத்தவன். அழகிய வெள்ளியபிறை சூடி அடியார்களின் தவமாகிய நெறியை முற்றுவிப்பவன். சித்தம் முதலிய கருவிகளால் செய்யப்படும் செயல்களின் பயனாய்த் தேனும் பாலும் போன்று இனியவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது. குறிப்புரை: மூவா - கெடாத. மூத்தல், கெடுதல் என்பது, 'மலைத்தலங்கள் மீதேறி மாதவங்கள் செய்து - முலைத்தடங்கள் நீத்தாலும் மூப்பர்' என்னும் தி.ஆளுடையபிள்ளையார் திருமும்மணிக் கோவையாலும் ( அறிக. முதல் - தலைவன். 'வடிவமுடையவன்' என்னும் பொருளையுடையதாகிய 'மூர்த்தி' என்னும் சொல்,'அருட்டிருமேனியை யுடையவன்' என்னும் பொருளில் வழங்கப் படும்.சந்தம் - அழகு. தவநெறிகள் - தவமாகிய நெறிகள். சாதித்தல்- முற்றுவித்தல்; இது, தன்னை உணர்ந்தார்க்கு என்க. இதனானே, உணராதார்க்கு முற்றுவியாமையும் பெறப்பட்டது. இவ்விரண்டனையும் மார்க்கண்டேயர் வாழ்நாள் பெற்றமையும், தக்கன் தலையிழந்தமையுமாகிய வரலாறுகள் பற்றியுணர்ந்து கொள்க. சிந்தையில் தீர்வினை - சித்தம் முதலிய கருவிகளின் நீங்கும் செயல்கள், அவை: கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்னும் பகுதியவாய்ப் பல்வேறு வகைப்பட நிகழ்வன. இஃது ஆகுபெயராய், அதன் பயனைக் குறித்தது. எந்தைபெருமான் - என் தந்தையாகிய பெருமான், ஈசன் - ஐசுவரியம் உடையவன்.
மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னைமதியமும் ஞாயிறுங் காற்றுந் தீயும் அந்தரமு மலைகடலு மானான் தன்னையதியரைய மங்கை யமர்ந்தான் தன்னைக் கந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பிக்கடிமலர்கள் பலதூவிக் காலை மாலை இந்திரனும் வானவரும் தொழச்செல் வானைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: ஆகா, ஊகூ என்ற கந்தருவர் இருவரும் பாடித் திருவடிகளில் நறுமலர்களைத் தூவிக்கைகளைக் குவித்து காலையும் மாலையும் இந்திரனும் மற்ற தேவர்களும் வழிபடுமாறு எளிமையில் காட்சி வழங்கும் சிவபெருமான் வேதமந்திரமும் அவற்றின் பொருளும் ஆயவன். மதியம், வெங்கதிர், காற்று, தீ, வான், அலைகளை உடைய கடல் ஆகியவற்றின் உடனாய் நின்று அவற்றைச் செயற்படுப்பவன். அதியரையமங்கை என்ற திருத்தலத்தில் உகந்தருளியிருப்பவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தது இரங்கத்தக்கது. குறிப்புரை: மறைப் பொருள் வேதத்தின் பொருள். அவை, அறம் முதலிய நான்கு. அந்தரம் -ஆகாயம். கந்தருவம் - இசை. இருவர்: 'ஆகா, ஊகூ' என்னும் கந்தருவர். 'செய்து' என்பதனைச் 'செய' எனத்திரித்து, 'இருவர் கந்தருவம் செய இந்திரனும் வானவரும் கூப்பித் தூவித்தொழ' என இயைக்க.'காலை மாலை' என்றது அடியவர் வழிபடுங் காலங்களை வகுத்தருளிச் செய்தவாறு. செல்லுதல், அடியவர் வழிபாட்டினை ஏற்றருளுதற் பொருட்டு. 'கந்தருவம் செய்து' என்பது முதல், 'தொழ' என்பதுகாறும் இறைவனது முதன்மையையும், 'செல்வான்' என்றது, அவனது எளிமைத் தன்மையையும் வியந்தருளியவாறு.
ஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்உயர்கதிக்கு வழிதேடிப் போக மாட்டார் வருபிறப்பொன் றுணராது மாசு பூசிவழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி அருபிறப்பை யறுப்பிக்கும் அதிகை யூரன்அம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா திருபிறப்பும் வெறுவியரா யிருந்தார் சொற்கேட்டேழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: பிறவாயாக்கைப் பெரியோன் திருவடிகளை நினைத்துப் பார்ப்பது கூடச் செய்யாராய் உயர்கதியை அடைவதற்குரிய வழியைத்தேடி அவ்வழியே வாழ்க்கையை நடத்தாதவராய், இடையறாது வருகின்ற பிறப்பின் காரணத்தை உணராராய், உடம்பில் அழுக்கினைத் தாமே பூசிக்கொண்டு அகக்கண் குருடராயசமண முனிவருடைய மனம்போல் நடப்பேனாகி, இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படாத செயல்களைச் செய்யும் அவர்களுடைய சொற்களை உபதேசமாகக் கொண்டு, கொடிய பிறவியை அடியோடு போக்குவிக்கும் அதிகை வீரட்டானத்து எம்பெருமான் திருவடிகளைச் சரண் புக்கு வாழாமல் ஏழையேன் பண்டு அப்பெருமானை இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: இத் திருத்தாண்டகம் திருவிலராய அமணர்களது இரங்கத்தக்க நிலையில் தாமும் பன்னாள் இருந்தமையை நினைந்து இரங்கியருளியது. 'ஒரு பிறப்பும்' ஒன்றும்' என்னும் சிறப்பும்மைகளும், 'அரும் பிறப்பு' என்னும் மகர ஒற்றும்தொகுத்தலாயின. உணர்ந்தும் காணார் - நினைந்தும் அறியார் என்றவாறாம். வருபிறப்பு - தொன்றுதொட்டு இடையறாது வருகின்ற பிறப்பு; இஃது ஆகுபெயராய் அதன் காரணத்தைக் குறித்தது. நீராடாமையேயன்றி, மாசு பூசிக்கொள்ளுதலும் சமண முனிவரது ஒழுக்கம் என்க. 'வழி காணாதவர்' என்றது, குருடர் என்றருளியவாறாம். மனத்தனாகி - மனம்போல் நடப்பவனாகி; என்றது, 'அவர்வயப்பட்டு' என்றவாறு. இருபிறப்பு - இம்மை மறுமை. வெறுவியர் - பயன் ஏதும்பெறாதவர்; ஐம்புல இன்பங்களைக் காய்ந்தமையின் இம்மைப் பயனை இழந்தமையும், அறத்தின் மெய்மையாகிய திருவருளை உணராமையின் மறுமைப் பயனை இழந்தமையும் அறிக; "பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றும்விட்டார்"என்றருளிச் செய்தார்,திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள். "ஆகி, வாழாது, கேட்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது "என முடிக்க. "அடியிணையே" என்னும் பிரிநிலை ஏகாரம், இடைக்கண் அதனை விடுத்து வேறொன்றைப் பற்றி அல்லலுற்ற நிலையை விளக்கி நின்றது.
ஆறேற்க வல்ல சடையான் தன்னைஅஞ்சனம் போலும் மிடற்றான் தன்னைக் கூறேற்கக் கூறமர வல்லான் தன்னைக்கோல்வளைக்கை மாதராள் பாகன் தன்னை நீறேற்கப் பூசும் அகலத் தானைநின்மலன் தன்னை நிமலன் தன்னை ஏறேற்க வேறுமா வல்லான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: கங்கையைத் தன்னுள் அடங்குமாறு ஏற்றுக் கொள்ள வல்ல சடையான், மைபோலக் கரிய முன் கழுத்தினன். எல்லாப் பொருள்களின் நுண்ணிலையையும் ஏற்று அவற்றுக்குப் பற்றுக் கோடாக நிற்கவும் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்கவும் வல்லவன். திரண்ட வளையல்களைக்கையில் அணிந்த பார்வதி பாகன். நீறு, தன்னையே சார்பாக ஏற்க அதனைப் பூசிய மார்பினன். தானும் களங்கம் இல்லாதவனாய்ப் பிறர் களங்கத்தையும் போக்குவிப்பவன். காளை வாகனத்தில் தக்கபடி ஏறி அதனைச் செலுத்துவதில் வல்லவன். அத்தகைய பெருமானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: 'கூறு' இரண்டனுள் முன்னையது, 'உடற்கூறு, நிலக்கூறு' முதலியனபோல, 'தன்மை' என்னும்பொருளது; பின்னது, 'பகுதி' என்னும் பொருளது. 'தன்மை' என்றது, நுண்ணிலையை. 'பகுதி' என்றது. சத்தியை. எனவே, 'கூறு ஏற்க' என்றது, 'எல்லாப் பொருள்களின் நுண்ணிலையும் ஏற்று, அவற்றிற்குப் பற்றுக்கோடாய் நிற்க' எனவும், 'கூறு அமர' என்றது, அவற்றின் பருநிலையில் அவற்றுக்கு உள்ளும் புறம்பும் அறிவாய் நிறைந்து நிற்க' எனவும் அருளிச்செய்தவாறாம். 'கோல்வளைக்கை மாதராள்பாகன்" எனப் பின்னர் அருளிச்செய்தலின், இவற்றை மாதொருபாகராதாலின்மேல் வைத்துரைத்தல் கூடாமை யறிக. 'கூறேற்கவும் கூறமரவும் வல்லான்' என்க. நீறு ஏற்க - நீறு, தன்னையே சார்பாகப் பொருந்த-எல்லாம் நீறாயினமையின் அந்நீற்றிற்குப் பிறிதொரு சார்பு இன்றாயிற்று, நின்மலன் - மலம் இல்லாதவன். நிமலன் - மலத்தை நீக்குபவன்; எனவே, 'உலகத்தில் தோய்ந்தும், தோயாது நிற்பவன்' என்றதாம். ஏற்க ஏறுதல் - தக்கவாற்றால் நடத்துதல். ஏறு, அறமும் உயிரும் ஆதலின், அவற்றைத் தக்கவாற்றால் நடத்துபவன் என்பது உள்ளுறைப் பொருள்.
குண்டாக்க னாயுழன்று கையி லுண்டுகுவிமுலையார் தம்முன்னே நாண மின்றி உண்டி யுகந்தமணே நின்றார் சொற்கேட்டுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி வண்டுலவு கொன்றையங் கண்ணி யானைவானவர்க ளேத்தப் படுவான் தன்னை எண்டிசைக்கும் மூர்த்தியாய் நின்றான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: மூர்க்கர்களாய் தடுமாறி இளைய பெண்கள் முன்னிலையில் நாணமின்றிஉடையில்லாமல் நின்று உணவைக் கையில் பெற்று நின்றவாறே உண்ணும் சமணத்துறவியரின் சொற்களை மனங்கொண்டு அவர்கள் இனத்தவனாகி நல்லுணர்வில்லாமல் திரிந்த நான், வண்டுகள் சூழ்ந்து திரியும் கொன்றைப்பூ மாலையை அணிந்து வானவர்களால் புகழப்பட்டு, எண்திசையிலுள்ளார்க்கும் தலைவனாய் நிலைபெற்ற எம்பெருமானை ஏழையேனாகிய யான் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது. குறிப்புரை: அரசரை 'அரசு' என்றல்போல, குண்டரை 'குண்டு' என்றருளினார். குண்டர் -மூர்க்கர்; என்றது, சமணரை; கொண்டது விடாமைபற்றி அங்ஙனம் கூறினார்; "திருந்தா அமணர்" என்றார் திருவிருத்தத்திலும்.உடனாகி - கூடி. 'உணர்வு ஒன்று இன்றி இகழ்ந்தவாறு' என இயையும். 'உழிதந்தேன்' என்பதனை, 'உழிதந்தேனாய்' என எச்சப்படுத்துக. மூர்த்தி - தலைவன்.
உறிமுடித்த குண்டிகைதங் கையிற் றூக்கியூத்தைவாய்ச் சமணர்க்கோர் குண்டாக் கனாய்க் கறிவிரவு நெய்சோறு கையி லுண்டுகண்டார்க்குப் பொல்லாத காட்சி யானேன் மறிதிரைநீர்ப் பவ்வநஞ் சுண்டான் தன்னைமறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன் எறிகெடில நாடர் பெருமான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: உறியில் சுருக்கிட்டு வைத்த கஞ்சிக்கரகத்தைக் கையில் தொங்கவிட்டுக்கொண்டு ஊத்தை வாயினை உடைய சமணர்களிடையே யானும் ஒரு மூர்க்கனாகி, கறியோடு நெய் ஊட்டப்பட்ட சோற்றினைக் கையில் வாங்கி உண்டு காண்பவருக்கு வெறுக்கத்தக்க காட்சிப் பொருளாக இருந்த யான்,அலைமோதும் கெடில நதி பாயும் நாட்டிற்குத் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட பெருமானைத் தீவினை உடையேனாய், பரம்பரையாக வழிபட்டுவரும் குடும்பப் பழக்கம் பற்றியும் நினைக்க இயலாதேனாய் ஏழையேனாய்ப் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: 'உறியில் முடித்த' என்க. முடித்த - முடியிட்ட; சுருக்கிட்ட. குண்டிகை - கரகம்; இது கஞ்சியை யுடையது. இவ்வாறு உணவை உறியில் வைத்துத் தூக்கித் திரிதல், ஈஎறும்பு முதலிய சிற்றுயிர்கள் வீழ்ந்து இறவாமல் காத்தற்பொருட்டு என்க. 'தூக்கிய' என்னும் பெயரெச்சத்தின் இறுதி அகரம் தொகுத்தலாயிற்று. ஊத்தைவாய், பல் விளக்காமையாலாயிற்று. 'சமணர்க்கோர் குண்டாக்கனாய்' என்றது, 'குண்டர்க்கேற்ற குண்டனாய் அகப்பட்டேன்' என்றிரங்கி யருளியவாறு. 'நெய்விரவு கறி சோறு' என்க. பொல்லாத காட்சி - அருவருக்கத்தக்க கோலம்; அஃது உடையின்றித்திரிதல். 'மறித்து நினைக்க மாட்டேன்' என்றது, 'முன்பு நினைந்த பொருளாய் இருந்தும் பழக்கம் பற்றியும் நினையா தொழிந்தேன்' என்றதாம். 'ஒருகாலும்' என உம்மை விரித்துரைக்க. 'வல்வினையேன்' என்றது,'அத்துணை வலிதாய் இருந்தது என்வினை' என்றிரங்கி யருளியவாறு. 'நினைக்கமாட்டேனாய் இகழ்ந்தவாறு' என்க. கெடில நாடர் பெருமான்-கெடில நாடர்க்காக எழுந்தருளியுள்ள பெருமான்.
நிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் தன்னைநெற்றிமேற் கண்ணொன் றுடையான் தன்னை மறையானை மாசொன்றி லாதான் தன்னைவானவர்மேல் மலரடியை வைத்தான் தன்னைக் கறையானைக் காதார் சூழையான் தன்னைக்கட்டங்கம் ஏந்திய கையி னானை இறையானை எந்தை பெருமான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: எல்லார் உள்ளத்திலும் தங்கியிருப்பவனாகிய எந்தை பெருமான் குறைவிலா நிறைவினனாய் நிலைபெற்றவன். நெற்றிக்கண்ணன். வேத வடிவினன். களங்கம் ஏதும் இல்லாதான். தேவர்கள் தலையில் தன் திருவடிகளை வைத்து அருளியவன். கழுத்தில் விடக்கறை உடையவன். குழைக்காதன். கையில்கட்டங்கம் என்ற படைக்கலன் ஏந்தியவன். அத்தகைய பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்த செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: நிறைவு ஆர்ந்த நீர்மை - நிறைவு பொருந்தியதாகிய குணம். "குறைவிலா நிறைவேகுணக்குன்றே" எனச் சுந்தரமூர்த்தி சுவாமிகளும், (தி.ப.பா. "குறைவிலா நிறைவே" என வாதவூர் அடிகளும் (தி.கோயிற்றிருப்பதிகம் - அருளிச்செய்தவாறறிக. அக்குணமே அவற்கு வடிவாதலை நினைவார், 'நீர்மையனாய் என்னாது' "நீர்மையாய்" என்றருளிச் செய்தார். 'நிறையார்ந்த' என்பதும் பாடம். மறையான் - வேதத்தின்கண் உள்ளவன். மாசு - மலம். ஒன்று -சிறிது. 'ஒன்றும்' என்னும் உம்மை தொகுக்கப்பட்டது. கறையான் - நஞ்சை உடையவன். 'எல்லாவற்றையும் இறத்தலை உடையவன்' என்பாரும் உளர்; அப்பொருள், 'கடவுள்' என்பதனான் அமைதலின், இச்சொற்கு வேறு பொருள்வேண்டும் என்க.
தொல்லைவான் சூழ்வினைகள் சூழப் போந்துதூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று வல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்டவானவர்க்குந் தானவர்க்கும் பெருமான் தன்னைக் கொல்லைவாய்க் குருந்தொசித்துக் குழலும் ஊதுங்கோவலனும் நான்முகனுங் கூடி எங்கும் எல்லைகாண் பரியானை எம்மான் தன்னைஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே. பொருளுரை: முல்லை நிலத்திலிருந்த குருந்த மரத்தை, அதன் கண் பிணைத்திருந்த இடைக்குலச் சிறுமியர் ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்துக் கொள்வதற்காக வளைத்துக் கொடுத்து, வேய்ங்குழல் ஊதி அவர்களை வசப்படுத்திய இடையனாய் அவதரித்த திருமாலும், பிரமனும் ஆகியஇருவரும் முயன்றும் அடிமுடிகளின் எல்லையைக் காண இயலாதவாறு அனற்பிழம்பாய் நின்றவனாய்த் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவனாய், எனக்கும் தலைவனாய், பண்டைத் தீவினைகள் என்னைச் சூழ்ந்தமையாலே அவற்றின் வழியே சென்று அவனைப் பலவாறு இழித்துப் பேசியும் பின் ஒருவாறு தெளிந்தும் நின்ற அடியேனுடைய அறிவுக்கு அறிவாய் நின்று விரைவில் என் சூலை நோயைத் தீர்த்து என்னை ஆட்கொண்ட பெருமானை ஏழையேன் பண்டு இகழ்ந்தவாறு இரங்கத்தக்கது. குறிப்புரை: தொல்லை வான் சூழ்வினைகள் - பழைய, பெரிய, நிறைந்த வினைகள்; என்றது சஞ்சிதத்தை. சூழ -வந்து. 'இயற்றியான்', 'எண்ணியார்', 'தேறியார், என்றாற்போல (குறள் - , 'தூற்றினேன்' 'ஆற்றினேன்' என்பன, 'தூற்றியேன்' 'ஆற்றியேன்' என வந்தன. தூற்றியது, அவ்வினை காரணமாக நிகழ்ந்தவற்றைப் பலரும்அறியப் பாடியருளியது. அதனை, "காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையால்" என்பது முதலிய திருப்பாடல்களில்காண்க. ஆற்றியது, நோயின் முதலினையும், அது நீங்கும் வாயிலினையும்தமக்கையார் அருளக் கேட்டு ஒருவாறு ஆற்றியது. சுடராய்-சோதியுட் சுடராய் அறிவுக்கறிவாய். 'தூற்றியேனும், ஆற்றியேனும் ஆகிய எனக்குச்சுடராய் நின்று' என்க. யமுனை ஆற்றில் ஆடையின்றி நீராடிய மகளிர் பலதேவன்வருகையால் நாணமடைய, அவர்கள் மானம் இழவாதபடி கண்ணன் குருந்த மரத்தின்தழைநிரம்பிய கிளையை வளைத்து உதவினான் என்பது பழைய வரலாறு. ஓசித்து -வளைத்து. தானவர் - அசுரர்.
முலைமறைக்கப் பட்டுநீ ராடாப் பெண்கள்முறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டித் தலைபறிக்குந் தன்மையர்க ளாகி நின்றுதவமேயென் றவஞ்செய்து தக்க தோரார் மலைமறிக்கச் சென்ற இலங்கைக் கோனைமதனழியச் செற்றசே வடியி னானை இலைமறித்த கொன்றையந் தாரான் தன்னைஏழையேன் நான்பண்டி கழ்ந்த வாறே. பொருளுரை: மாசுதீரப்புனல் ஆடும் வழக்கத்தை விடுத்து அற்றம் மறைத்தலுக்கு உடைமாத்திரம் அணிந்த சமணசமயப் பெண் துறவியர் தங்கள் தெய்வம் என்று பெரிதும் மதித்துத் தம் கைகளால் தலைமயிரைப் பறிக்கும் பண்புடையவர்களாகித் தங்கள் கொள்கைகளிலேயே நிலைநின்று தக்க செயல் இன்னது என்று ஆராய்ந்தறிய இயலாதவர்களாகித் தவம் என்ற பெயரால் பொருத்த மற்ற செயல்களைச் செய்பவர் சமணத் துறவியர். அவர் வழி நின்றேனாகிய யான். புட்பகவிமானம் சென்ற வழியைக் கயிலை மலை தடுத்ததனால் அதனைப் பெயர்க்கச் சென்ற இராவணனுடைய வலிமை கெடத்துன்புறுத்திய சிவந்த திருவடிகளை உடையவனாய் இலைகளுக்கு இடையே தோன்றிய கொன்றைப் பூவாலாகிய மாலையை அணிந்த எம்பெருமானைப் பண்டு அறியாமை உடையேனாய் இகழ்ந்த திறம் இரங்கத்தக்கது. குறிப்புரை: 'உடை உடாமை, நீராடாமை' என்னும் சமணநோன்புகளுள் பெண்டிர்க்கு உடை உடாமை உரித்தாகாது, நீராடாமை மட்டுமே உரித்தாகலின், "முலைமறைக்கப்பட்டு நீராடாப் பெண்கள்" என்றருளிச்செய்தார். எனவே, இப்பெண்கள் சமணத்துறவெய்தியவர் என்றதாயிற்று. இவர்க்குத்தவமாவது ஆடவராய சமணத்துறவியார்க்குப் பணிவிடைகள் செய்தலே யாகலானும், அவற்றுள் சிறந்ததொன்றாகிய தலைமயிரைப்பறித்தலை ஒவ்வொருவராய்ப் போந்து அவர்க்குச் செய்வராகலானும், "முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டித் தலைபறிக்கும் தன்மையர்கள்" என்று அருளிச்செய்தார். "தீண்டி" எனவிதந்தோதியது, தீண்டலாகாமையை உட்கொண்டென்க. கானலை நீரென்றே மயங்கி, அதனைத் தெருட்டுவார் சொற்கும் செவிகொடாது செல்லும் பேதைபோல, அவச்செயலைத் தவச்செயலென்றே மயங்கினார் என்பார். "தவமே யென்று அவம் செய்து தக்கது ஓரார்" என்றருளிச்செய்தார். அவர் செயல் அன்னதாதல், 'தவமும் அவமும், வகுத்தான் வகுத்த வகை' (குறள் - என்பதும், 'அதனால் அவனை யறிதலே தவம்;அவனையறியாமை அவம்' என்பதும் உணராது, அறம் முதலிய உறுதிப் பொருள்களை அடைதற்பொருட்டுக் கிடைத்த, அரிய உடம்பை, ஆற்றப் பகையாக வெறுத்து ஒறுத்தலான் என்க. "காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்; அரன்றம் பாதம் மறந்துசெய் அறங்களெல்லாம் வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்." என்னும் சிவஞான சித்தித் திருவிருத்தத்தினைஈண்டுக் கருதுக.மதன் - வலிமை. திருநாவுக்கரசர் புராணம் உம்பர்தங் கோனை யுடைய பிரானையுள்புக்கிறைஞ்சி நம்புறு மன்பின் நயப்புறு காதலினாற்றிளைத்தே எம்பெரு மான்றனை ஏழையேன் நான்பண்டிகழ்ந்ததென்று தம்பரி வாற்றிருத் தாண்டகச் செந்தமிழ்சாற்றிவாழ்ந்தார். -தி.சேக்கிழார்
திரு அதிகை வீரட்டானம் பதிக வரலாறு: திருவதிகையில் நாவுக்கரசு சுவாமிகள் பணிசெய்திருக்கும் நாள்களில் மனம் பரிவுறு செந்தமிழ்ப் பாட்டுப் பல பாடியவற்றுள் அமைந்தது இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. . எல்லாப் பாட்டுக்களும் இறைவன் அடையாளங்களை எடுத்துக் கூறிப் பாடப்பட்டிருத்தலால் இது, 'அடையாளத்திருத்தாண்டகம்' எனப் பெயர் பெற்றது. குறிப்பு: அடையாளம் அருளிச் செய்யுங் கருத்து, மேல் இரண்டாம் திருப்பதிகத்து இறுதித் திருத்தாண்டகக் குறிப்பிற் கூறப்பட்டது. "உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல்லடை யாளங்கள் பேசினார்." என்ற சேக்கிழாரது விளக்கத்தினைக் காண்க. (தி.திருஞான. இத்திருப்பதிகத்துள் எல்லாத் திருத்தாண்டகங்களிலும், இறுதி நின்றன வொழித்து ஒழிந்த ஏகாரங்களெல்லாம் வினாப்பொருள்: இறுதி நின்றன தேற்றம். வினாவியது சிவபிரானைக் கண்ட அடிய வரை என்க. அடையாளத் திருத்தாண்டகம் 4 சந்திரனை மாகங்கை திரையால் மோதச்சடாமகுடத் திருத்துமே சாம வேத கந்தருவம் விரும்புமே கபால மேந்துகையனே மெய்யனே கனக மேனிப் பந்தணவு மெல்விரலாள் பாக னாமேபசுவேறு மேபரம யோகி யாமே ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: சந்திரனைப் பெரிய கங்கை தன் அலைகளால் மோதுமாறு சடை முடியில் வைத்துள்ளான். சாமவேதமாகிய இசையை விரும்புபவன். மண்டையோட்டை ஏந்தியகையினன். பொன்னார் மேனியில், மெல்லிய விரலில் பந்தினை ஏந்தியபார்வதி பாகன். காளையை வாகனமாக உடையவன். மேம்பட்டயோகி. ஐந்தலைப்பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டியவன் ஆகிய இத்தகைய செயல்களையும் பண்புகளையும் உடைய பெருமான் திருவதிகைவீரட்டானத்தை உகந்தருளியிருப்பவனே. குறிப்புரை: 'கனகமேனிமெய்யனே' எனமாற்றியுரைக்க. அணவும் - பொருந்திய. சுடர்த்தொடி அணிதல் முதலியன போல, பந்தடித்தலும் செல்வமகளிர்க்குச் சிறப்பாவதாம்.மாசுணம்-பாம்பு. 'பசு' என்பது ஆனினத்து இருபாற்கும் பொது; அஃது ஈண்டு அதன்ஆணினைக் குறித்தது. "இருத்துமே" முதலிய எல்லாவற்றிற்கும், 'உம்மாற்காணப்பட்டவன்' என்னும் எழுவாய் வருவித்துரைக்க. 'இருத்தும்' என்பது முதலிய எதிர்கால முற்றுக்கள் இயல்புகுறித்து நின்றன. 'அவன்' என்பது, 'அத்தன்மையன்' என்னும் பொருட்டாய் நின்றது. கந்தருவம் - இசை.
ஏறேறி யேழுலகும் உழிதர் வானேஇமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே பாறேறு படுதலையிற் பலிகொள் வானேபடஅரவந் தடமார்பிற் பயில்வித் தானே நீறேறு செழும்பவளக் குன்றொப் பானேநெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: காளை மீது ஏறி ஏழுலகமும் சுற்றி வருபவன். தேவர்கள் தொழுது துதிக்குமாறு இருக்கின்றவன். பருந்துகள் படியும், மண்டையோட்டில் பிச்சை எடுப்பவன். தன்பெரிய மார்பில் படமெடுக்கும் பாம்பு ஊரப்பெற்றவன். நீறு படிந்த செழுமையானபவள மலையை ஒத்த வடிவினன். நெற்றியில் அமைந்த கண் ஒன்று உடையவன். கங்கைதங்கிய சடைமுடிமேல் பிறையைச் சூடியவன். இத்தகைய பெருமான் அதிகைவீரட்டனாவான். குறிப்புரை: 'உழிதருவான்' என்பதில் இடைநின்ற உகரம் தொகுத்தலாயிற்று. பாறு-பருந்து;அஃது ஏறுதல், ஊன் உண்மையால் என்க. 'நீறேறு செழும் பவளக் குன்றொப்பான்' என்றது இல் பொருளுவமை.
முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானேமுதலாகி நடுவாகி முடிவா னானே கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானேகதநாகங் கொண்டாடுங் காட்சி யானே பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானேபெருநிலநீர் தீவளிஆ காச மாகி அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: இறந்த பிரமர்களின் தலைமாலையால் பொலிவு பெற்று விளங்கும் திருமேனியினன். உலகில்தோற்றம் நிலை இறுதிகளைச் செய்பவன். கழுத்தில் மகா வராகத்தின் கொம்பினை அணிகலனாக அணிந்தவன். கோபத்தை உடைய பாம்பினைக் கையில் கொண்டு கூத்தாடிக் காட்சி வழங்குபவன். இவ்வுடம்பின் காரணங்களாய் உள்ள தத்துவங்களுக்குச் சார்பாய் உள்ளவன். ஐம்பெரும்பூதங்களாய் அண்டங்களின் புறமும் உள்ளும் இருப்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனாவான். குறிப்புரை: 'முண்டம்' என்றது, இறந்த பிரமர்களது தலைகளை; அவற்றால் இயன்ற மாலை சிவபிரான் மார்பில் உளதென்க. 'முண்டத்தின்' என்னும் இன்னுருபு, ஏதுப்பொருட்டு. 'முதல் நடு முடிவு' என்றது, உலகத்தின் தோற்றம் நிலை இறுதிகளை; அவற்றைச் செய்வோனை அவையாகவே உபசரித் தருளினார்; 'அந்தம் ஆதி' ஒடுங்கின சங்காரம், சங்காரமே முதல், ஈறே முதல்" எனப் பல விடத்தும்இவ்வாறே சிவஞான போதத்தும் கூறப்பட்டது. 'வெண் மருப்பு' என்றது, மாயோன் பிறப்பாகிய வராகத்தின் கொம்பினை, அவ்வராகத்தின் செருக்கினால் உண்டாகிய இடரை நீக்குதற் பொருட்டு, அதனை இறைவன் அழித்து, அவ்வெற்றிக்கு அடையாளமாக அதன் கொம்பினை அணிந்து கொண்டான் என்பது வரலாறு. காறை - கம்பியாக அமைத்து அணியும் அணிகலம். பன்றிக் கொம்புமார்பில் உளதாகவும் சொல்லப்படும். கதம் - கோபம். கொண்டு - அணிந்து. பிண்டம்-உடம்பு; 'அதன் இயற்கை' என்றது, அதற்கு முதல்களாய் உள்ளதத்துவங்களை; 'அவற்றிற்கு ஓர் பெற்றி என்றது, சார்பாய் நிற்றலை. அப்பாலாய் இப்பாலாதல்-உள்ளும் புறம்புமாய் நிறைந்து நிற்றல்.
செய்யனே கரியனே கண்டம் பைங்கண்வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்சடையனே விளங்குமழுச் சூல மேந்துங் கையனே காலங்கள் மூன்றா னானேகருப்புவில் தனிக்கொடும்பூண் காமற் காய்ந்த ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: நிறத்தால் செய்யவன். கண்டம் கறுத்தவன். பசிய கண்களையும் வெளிய பற்களையும் உடையவாய்ப் படமெடுத்தாடும் பாம்புகளை அணிந்தவன். அடியார்களுடைய வினைகள் நீங்குமாறு அவற்றிற்குப் பகைவனாக உள்ளவன். குளிர்ந்த கொன்றை சூடிய சடையினன். சூலத்தைத் தாங்கும் கையினன். முக்காலங்களாகவும் உள்ளவன். கரும்பு வில்லினை ஒப்பற்ற வளைந்த அணிகலன் போலக் கைக்கொண்ட மன்மதனைக் கோபித்த தலைவன். உயரமும் பருமையும் உடைய காளைவாகனன். இத்தகைய சிறப்பினை உடையவன் அதிகை வீரட்டானத்துப் பெருமானே.குறிப்புரை: 'செய்யன்' என்பதற்கு, 'மேனி' என்னும் எழுவாய் வருவித்து, 'கண்டம் கரியனே' என மாற்றியுரைக்க. 'போக' என்னும் வினையெச்சம், 'வெய்யன்' என்பதில்தொக்கு நின்ற 'ஆனான்' என்பதனோடு முடிந்தது; 'வினைகள் நீங்குமாறுஅவற்றுக்குப் பகைவனாய் நின்றான்' என்றவாறு, கொடும் பூண்-வளைந்த அணிகலம்;கழல்.
பாடுமே யொழியாமே நால்வே தம்மும்படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள் சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங் கூடுமே குடமுழவம் வீணை தாளங்குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத் தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: இடைவிடாமல் நால்வேதமும் பாடும் இயல்பினன். பரவிய உடையின் மீது ஒளிசிறக்குமாறு குளிர்ந்த வெள்ளிய பிறையைச் சூடியவன். தன் இடையில்விளங்குமாறு புலித்தோலையும் பாம்பினையும் சுற்றியிருப்பவன். கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குட முழா, வீணை, தாளம் இவற்றை ஒலிக்குமாறு, ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன். அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன். அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே. குறிப்புரை: தொண்டை - கொவ்வைக்கனி. குடமுழவம் - குடமுழா; கடம். ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாகிய (தி.பெரிய புராணம், திருநீலகண்ட நாயனார்- ஐந்தொழில் நடனமாகலின், "மாக் கூத்து" என்றருளிச் செய்தார்.
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ளஉறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால் விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழவெள்ளப் புனற்கங்கை செஞ்ச டைமேல் இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மேஇயங்குந் திரிபுரங்க ளோரம் பினால் அழித்திடுமே ஆதிமா தவத்து ளானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: தன்னையே தியானிப்பவருடைய உள்ளத்தில் மிக்க நோயையும் அவர்களைத்தாக்கும் உட்பகைகளாகிய காமம் முதலிய ஆறனையும் அடியோடு நீக்குபவன். தனித்திருக்கும் நெற்றிக் கண்ணால் மன்மதன் சாம்பலாகி விழுமாறு நோக்கியவன். நீர் வெண்மையாகிய கங்கையைத் தன் செந்நிறச் சடையில் இறங்கித் தங்குமாறு செய்தவன். ஏழுலக இயக்கத்திற்கும் தானே காரணமாகியவன். வானில் உலாவிய முப்புரங்களையும் ஓர் அம்பினால் அழித்தவன். பண்டு தொட்டு மேம்பட்ட தவத்தைச் செய்பவனாய்த் தன் அடியவர்களுக்குத் தவம் செய்ய வழிகாட்டி ஆகியவன் அத்தகைய பெருமான் அதிகைவீரட்டத்தானே. பாம்பினையும் சுற்றியிருப்பவன். கொவ்வைக் கனி போன்ற சிவந்த வாயினை உடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன். குறுக அடியிடும் நடையினை உடைய பூதங்கள் குட முழா, வீணை, தாளம் இவற்றை ஒலிக்குமாறு, ஐந்தொழில்களையும் செய்யும் மேம்பட்ட கூத்தினை ஆடுபவன். அழகிய நீண்ட கையொன்றில் தீயை ஏந்துபவன். அத்தகைய பெருமான் திருவதிகை வீரட்டனே. குறிப்புரை: தொண்டை - கொவ்வைக்கனி. குடமுழவம் - குடமுழா; கடம். ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாகிய (தி.பெரிய புராணம், திருநீலகண்ட நாயனார்- ஐந்தொழில் நடனமாகலின், "மாக் கூத்து" என்றருளிச் செய்தார்.
குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தைகுறட்பூதம் முன்பாடத் தான்ஆ டும்மே கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்துகனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே எழிலாருந் தோள்வீசி நடமா டும்மேஈமப்பு றங்காட்டில் ஏமந் தோறும் அழலாடு மேஅட்ட மூர்த்தி யாமேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: குழல், கொக்கரை, மொந்தை முதலிய இயங்களை இயக்கிக் கைத்தாளமிட்டுக் குட்டையான பூதங்கள் பாட அப் பாடலுக்கு ஏற்பத் தான் ஆடுபவன். திருவடிகளிலே அசைகின்ற திரு விரல்களால் உயிர்களின் நுண்ணுடம்புகளை அசைத்துச் செயற்படுத்தி, அடியார்களுடைய கனவிலே தன் திருவுருவை அவர்களுக்குக் காட்டுபவன். அழகு நிரம்பிய தோள்களை விரைவாக அசைத்துக் கூத்தாடுபவன். ஊருக்குப் புறத்தே உள்ள சுடுகாட்டில் இரவு தோறும் நெருப்பின்கண் நின்று ஆடுபவன். எட்டு உரு உடையவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே. குறிப்புரை: கொக்கரை-சங்கு. மொந்தை-ஒருதலைப்பறை. கழல் ஆடு திருவிரல்-திருவடியின்கண் அசையும் சிறந்த விரல்கள், ஞான சத்தியும் கிரியாசத்தியுமே திருவடிகளாதலின், விரல்கள் அவற்றின் கூறுகள் என்க. கரணம் செய்தல்-அசைத்தல்; இது உயிர்களின் நுண்ணுடம்பை அசைத்தலாகக் கொள்க. இறைவன் கனவில் தோன்றியருளுதல் இவ்வாறென்பது இதனாற்பெறுதும். ஈமம்-பிணம் சுடும் விறகு. புறங்காடு-சுடுகாடு. 'யாமம்' என்பது, 'ஏமம்' என மருவிற்று. அழல் ஆடுதல்-நெருப்பின் கண் நின்று ஆடுதல். அட்ட மூர்த்தி - எட்டுரு உடையவன். அவை: நிலம், நீர், தீ, காற்று, வானம், ஞாயிறு, திங்கள், உயிர்.
மாலாகி மதமிக்க களிறு தன்னைவதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட ஆலால முண்டிருண்ட கண்டத் தானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: மதம் மிகுதலானே மயக்கம் கொண்ட ஆண் யானையைக் கொன்ற அதன் தோலினைத் தனியே உரித்துக் தன் திருமேனியை முழுதுமாக அது மறைக்குமாறு உதிரப் பசுமை கெடாது உடம்பில் போர்த்தவன். ஆரவாரம் ஏற்பட மந்தரமலையை மத்தாக நட்டு வாசுகியைக் கடைகயிறாகச் சுற்றி ஒலிக்கின்ற கடலை அதன் அலைகள் ஒலிக்குமாறு கடைந்ததனால் ஏற்பட்ட பெரிய விடத்தை உட்கொண்டு இருண்ட கழுத்தினன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே.குறிப்புரை: 'மதம் மிக்கு மாலாகிய களிறு' என மாற்றியுரைக்க. 'மேலால், கீழால்' என்புழி நின்ற ஆல் இரண்டும் அசைநிலை. 'கை' என்பது இடைச்சொல். 'மெய் போர்த்தான்' என்புழி ஏழாவதன் பொருட்கண் வல்லெழுத்து மிகாமை, இரண்டாவதற்குத் திரிபோதிய இடத்துத்தேடிக்கொண்ட.
செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும் வம்பினாண் மலர்க்கூந்தல் உமையாள் காதல்மணவாள னேவலங்கை மழுவா ளனே நம்பனே நான்மறைகள் தொழநின் றானேநடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற அம்பனே அண்டகோ சரத்து ளானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: செம்பொன்னாற் செய்து அதன் கண் அழகினை ஊட்டினாற்போல இயற்கையாக அமைத்த செஞ்சடைப்பெருமான், இயற்கையான தெய்வ மணம் கமழும் தன்மையோடு மலர்களையும் அணியும் கூந்தலை உடைய உமாதேவியினுடைய காதலுக்கு இருப்பிடமான கணவன். வலக்கையில் மழுப்படையை உடையவன். நம்மால் விரும்பப்படுபவன். நான்கு வேதங்களும் வழிபடுமாறு இருப்பவன். அச்சமில்லாத அசுரர்களின் மும்மதில்களும் நடுங்குமாறு அவற்றை அழித்த அம்பினன். எல்லா உலகங்களிலும் நீக்கமற நிறைந்த நிற்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே. குறிப்புரை: 'அழகு பெய்தாற் போலும்' என்றது, 'ஊட்டி யன்ன ஓண்டளிர்ச் செயலை' (அகம் - என்றாற்போல இயற்கையைச் செயற்கையோடுவமித்து வியந்தருளியவாறு. "எம்" என்றது, பிற அடியாரையும் உளப்படுத்து. தெய்வம் - தெய்வ மணம்; இயற்கை மணம். 'தெய்வம் நாறும் கூந்தல், நாண்மலர்க் கூந்தல்' எனத் தனித்தனி முடிக்க. 'வலக்கை' என்பது மெலிந்து நின்றது. மழுவாள், இருபெயரொட்டு. கோசரம் - தேயம்; என்றது உலகங்களை. 'அண்டகோசத்துளானே' என்பதும் பாடம்.
எழுந்ததிரை நதித்திவலை நனைந்த திங்கள்இளநிலாத் திகழ்கின்ற வளர்சடையனே கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டிகொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டேசாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: கங்கையிலிருந்து வெளிப்பட்ட அலைகளின் துளிகளால் நனைக்கப்பட்ட பிறைச் சந்திரன் மெல்லிய ஒளியோடு விளங்குகின்ற நீண்ட சடையினன். கச்சியில் காமக்கோட்டத்திலுள்ள பவளம் போலச் சிவந்த, கனிபோன்று மென்மையை உடைய வாயினள் ஆகிய உமாதேவியின் இரு தனங்களும் எம்பெருமான் மார்பில் போரிட்டதனால் ஏற்பட்ட அழகிய தழும்புகள் தங்கிய மலைபோன்ற அவன் மார்பில் பூணூல் உள்ளது. சந்தனமும், நறுமணக்கூட்டுக்களும் சேறுபோலப் பொருந்திய தன் செம்மேனியில் வெண்ணீறு அணிந்துள்ளான். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே. குறிப்புரை: எழுந்த-ஓங்கிய. 'நதியது எழுந்த திரைத் திவலை களால் நனைந்த திங்களினது இள நிலவு விளங்குகின்ற சடை' என்க. இனி, 'நனைந்த' என்பதனையும் சடைக்கு அடை ஆக்கலுமாம். கோட்டி - கோட்டத்தை யுடையவள். காமக்கோட்டம், கச்சியில் உள்ளது. பொருது - பொருததனால். கோலம் - அழகு. 'கோலமாக' என ஆக்கச் சொல் வருவிக்க. வரை - ஆடவர் மார்பில் இருத்தற் குரியவாகக் கூறப்படும் கீற்று. 'சாந்து' பூசப்படுவ தெனவும். 'அளறு' அப்பப்படுவதெனவும் உணர்க. அழுந்திய-நீங்காது நின்ற. 'உமையம்மையார் கச்சியில் கம்பையாற்றங்கரையில் இறைவனை இலிங்கத்தில் வழிபட்டுக்கொண்டிருக்கும்பொழுது, அவனது திருவிளையாடலால் கம்பையாறு பெருக்கெடுத்துவர, அதனைக் கண்டு, அம்மையார் செய்வதறியாது இறைவனைத் தழுவிக்கொள்ள, வெள்ளம் நெருங்கி வாராது சூழ்ந்து சென்றது' என்பதனையும், 'பின்னர் அம்மையார் தழுவிய கைகளை வாங்க, அவரது தனத் தழும்பும், வளைத்தழும்பும் இறைவரது திருமேனியில் நீங்காது நின்றன' என்பதையும் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத் துள்ளும், காஞ்சிப் புராணத்துள்ளும் காண்க. இவ்வரலாறு இறைவனது வழிபாட்டினை வலியுறுப்பதாகலின், இதனைச் சிறந்தெடுத் தோதியருளினார். இக்கருத்துப் பற்றியே பிற பல இடங்களினும் திருவேகம்பத்தினை நினைந்தருளிச் செய்தலை ஆண்டாண்டுக் கண்டுணர்க. கச்சியம்பதி இச்சிறப்பினை யுடைத்தாதல் பற்றியே, திருக்கயிலையில் உபமன்னிய முனிவர், தம் மாணாக்கர்க்கு, 'மாதவம் செய்த தென்றிசை' (தி.பெரிய புராணம்-திருமலைச் சிறப்பு- எனத் தென்றிசையின் உயர்வைக் கூறியருளியபொழுது. அவர்கள், 'மானுடர் வாழும் அத்தென்றிசை, கடவுளர் வாழும் இவ்வடதிசையினும் சிறந்ததாதல் எவ்வாறு?' என ஐயுற்று வினவியதற்கு, 'அங்குள்ள சிவத்தலங்களே அச்சிறப்பிற்குக் காரணம்' என்பதுணர்த்துவார், சிறந்தெடுத்தோதிய மிகச் சிலவாகிய தலங்களுள், இதனை எடுத்தோதி யருளினார் என்க.
நெடியானும் நான்முகனும் நேடிக் காணாநீண்டானே நேரொருவ ரில்லா தானே கொடியேறு கோலமா மணிகண் டன்னேகொல்வேங்கை யதளனே கோவ ணவனே பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்புவலோகந் திரியுமே புரிநூ லானே அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மேஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. பொருளுரை: தனக்கு ஒப்பார் பிறர் இல்லாத சிவபெருமான் திருமாலும் பிரமனும்தம்முயற்சியால் தேடியும் காண இயலாதவாறு நீண்ட வடிவு கொண்டவன். தன்சிறப்புத் தோன்றக் கொடியை உயர்த்துமாறு அமைந்த நீலகண்டன். கொலைத்தொழிலை உடைய வேங்கையின் தோலைக் கோவணத்தின் மீது ஆடையாக உடுத்தவன்.திருநீறு பூசிய திருமேனியினன். பூணூலை அணிந்த அப்பெருமான் பிச்சை ஏற்றலைக்கருதி மேலுலகங்களிலும் திரிபவன். தன் அடியவர்களைத் தேவர் உலகத்தை ஆளுமாறுசெய்பவன். அத்தகைய பெருமான் அதிகை வீரட்டனே. குறிப்புரை: நெடியான் - திருமால், நேடி - தேடி 'காணாமை' என்பது, ஈறு குறைந்துநின்றது. 'கொடி' என்பது பாம்பிற்கு உவமையாகு பெயராயிற்று.'மணிகண்டன்' என்னும் உவமத்தொகை, வடநூன் முடிபு. 'புவலோகம்' பூவுலகத்திற்குமேல் உள்ளது. இதனானே, இனம் பற்றிப் பிற மேல் உலகங்களும் கொள்ளப்படும்என்க. 'அமரர் உலகம்' என்பது குறைந்து நின்றது.
திருஅதிகை வீரட்டானம் பதிக வரலாறு: திருவதிகை வீரட்டானத்தில் தங்கிப் பணிசெயும் நாள்களில் பரிவுறு மனத்தால் பாடிய செந்தமிழ்ப் பதிகங்கள் பலவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. . இதன் பாடல்கள் எல்லாவற்றிலும் 'போற்றி, போற்றி' என்று பன்முறையாக அருளப்பெற்றிருத்தலால், இது, 'போற்றித் திருத்தாண்டகம்' எனப் பெயர்பெற்றது. குறிப்பு: போற்றித் திருத்தாண்டகம் - போற்றியை யுடைய திருத்தாண்டகம். இதில், 'போற்றி' என்பது அச் சொல்லைக் குறித்தது. "போற்றினார்" என்பதனை, "போற்றி செய்தார்" என்றல் வழக்காதலின், 'போற்றி' என்பது இகர ஈற்றுத் தொழிற் பெயராகக் கொள்ளப்படும். அது 'வணக்கம்' எனப் பொருள்தரும். அதனால் அச்சொல், ஆரியத்துள் 'நம' என்பது போலத் திருமுறைகளுட் பயின்று வரும் என்க. இனி, 'போற்றிய' என்னும் வியங்கோள் ஈறு கெட்டுப் 'போற்றி' என நின்றதெனவும், இகரம் செயப்படுப் பொருண்மை யுணர்த்து மெனவும் கொண்டு, 'பாதுகாக்கப்படுக' எனப் பொருள் கூறுவாரும் உளர். அவ்வாறுரைப்பனவெல்லாம் பொருந்தாமை யறிந்து கொள்க. போற்றித் திருத்தாண்டகம் 5 எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றிஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி கொல்லார் மழுவாட் படையாய் போற்றிகொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றிகற்றா ரிடும்பை களைவாய் போற்றி வில்லால் வியனரணம் எய்தாய் போற்றிவீரட்டங் காதல் விமலா போற்றி. பொருளுரை: எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனே! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே! அனுபவப் பெருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனே! வில்லினைக் கொண்டு பெரிய மதில்களை அழித்தவனே! அதிகை வீரட்டத்தினை உகந்தருளி யிருக்கும் களங்கமற்றவனே! உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: 'சிவன்' என்பது விடாதவாகுபெயராய், 'சிவன் வடிவம்' எனப் பொருள்தரும். என்ன நின்றாய் என்று சொல்லுமாறு கலந்து நின்றவனே. 'போற்றி' என்பதன் முன்னும் பின்னும், 'நினக்கு' என்பதும், 'ஆகின்றது' என்பதும் எஞ்சி நின்றன. யாண்டும் இவ்வாறே கொள்க. எரி சுடர் - எரிகின்ற சுடர்; ஒளிப் பிழம்பு. ஆக்கம், உயிர்களின் பொருட்டு அவ்வுருவத்தினை மேற்கொள்ளுதலை யுணர்த்திற்று. இவ்விரு தொடர்களும், 'ஆசனம் - மூர்த்தி - மூலம்' என்னும் முறையிற் செய்யும் வழிபாட்டில் முறையே ஆசனத்திற்கும், மூர்த்திக்கும் உரிய மறைமொழிகளாதற் குரியனவாதலறிக. 'கொல்' கொல்லுதல் என முதனிலைத் தொழிற் பெயர். 'கூற்று' என்பது அஃறிணை வாய்பாடாகலின், 'ஒன்றை' என அருளிச்செய்தார்; அத்தொழில் பெற்று வாழ்ந்து நீங்குவார் பலராகலின், அவருள் ஒருவனே உதைக்கப்பட்டான் என்க. இனி, 'கூற்றாகிய ஒன்றை' என்றுரைப்பினும் ஆம். கல்லாதார் - நல்லாசிரியர் மொழியை உணராதார். அவர் ஒரு மொழியாகச் செவியறிவுறுப்பது திருவைந்தெழுத்தும், நூல்களாலும் பொருந்துமாற்றாலும் விளக்குவது அதன் பொருளுமாகலின், வாளாதே, "கல்லாதார்" எனவும், "கற்றார்" எனவும் அருளிப் போயினார். 'காதல்' என்பதன் பின் 'செய்யும்' என்பது தொகுத்தல் ஆயிற்று.
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றிபல்லூழி யாய படைத்தாய் போற்றி ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றிஉள்குவா ருள்ளத் துறைவாய் போற்றி காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றிகார்மேக மன்ன மிடற்றாய் போற்றி ஆட்டுவதோர் நாக மசைத்தாய் போற்றிஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. பொருளுரை: பாடுதலையும், கூத்து நிகழ்த்துதலையும் பண்புகளாக உடையவனே! பல ஊழிக்காலங்களையும் படைத்தவனே! மண்டையோட்டில் இரந்து பெறுவனவற்றையே உணவாக விரும்பி ஏற்றவனே! உன்னைத் தியானிப்பார் உள்ளத்தைத் தங்குமிடமாக உடையவனே! சுடுகாட்டில் கூத்தாடுதலை உகப்பவனே! கார்மேகம் போன்ற கறுத்த கழுத்தை உடையவனே! ஒதுங்கியிருந்து படமெடுத்து ஆடச்செய்ய வேண்டிய பாம்பினை இடையில் இறுக்கிக் கட்டிக் கொள்பவனே! அலைகள் வீசும் கெடில நதியை அடுத்த அதிகை வீரட்டானத்திலிருந்து உயிர்களை ஆள்பவனே--உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: பாட்டு - பாடுதல். ஆட்டு - ஆடுதல். பண்பன் - செம்மையன்; வல்லவன். "பாடுமே யொழியாது நால்வே தம்மும்" என மேலேஅருளிச் செய்தமையின், இறைவன் பாடுதலுடையனாதலை யறிக. ஊண் - உண்ணுதல். 'ஊண் ஓட்டகத்தே ஆக உகந்தாய்' என மாற்றியுரைக்க, காடு - சுடலை. அசைத்தல் - கட்டுதல்; 'ஆட்டுதற்குரிய பாம்பைக் கட்டிக்கொண்டுள்ளாய்' என வியந்தருளிச் செய்தவாறு. 'ஓர் நாகம்' என்றதில் 'ஒன்று' ஒரு தன்மையைக் குறித்து நின்றது. 'அலை கெடிலம்' என இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. வீரட்டத்து ஆள்வாய் - வீரட்டத்தின்கண் எழுந்தருளியுள்ள தலைவனே.
முல்லையங் கண்ணி முடியாய் போற்றிமுழுநீறு பூசிய மூர்த்தீ போற்றி எல்லை நிறைந்த குணத்தாய் போற்றிஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றிசென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி தில்லைச்சிற் றம்பலம் மேயாய் போற்றிதிருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி. பொருளுரை: முடியில் முல்லை மாலை சூடியவனே! உடல் முழுவதும் திருநீறு பூசியவனே! எல்லையற்ற நற்பண்புகளை உடையவனே! யாழின் ஏழு நரம்புகளிலும் ஏழுவகை ஓசையைப் படைத்தவனே! உருண்டை வடிவினதாகிய மயிர் நீங்கிய, மண்டை ஓட்டில் உணவு பெறுபவனே! உன்னை வந்து வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்குபவனே! தில்லைச் சிற்றம்பலத்தை உகந்தருளியிருக்கிறவனே! அதிகை வீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனே! உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: முல்லை நிலத்தார் செய்யும் வழிபாட்டினையும் ஏற்றருளுதல் பற்றி, முல்லைக்கண்ணியும் இறைவற்கு உரித்தாயிற்று. பிறநிலப் பூக்களும் இவ்வாற்றான் உரியவாம் என்க. இதனானே சிவபிரான் யாவராலும் வணங்கப்படும் முழுதற் கடவுளாதல் உணரப்படும். முழுநீறு-மேனி முழுவதுமாகிய நீறு. 'எல்லையாய்' என ஆக்கம் வருவித்து, 'எல்லாக் குணங்கட்கும் எல்லையாய் நிரம்பிநிற்கும் அருட்குணங்களையுடையவனே' என உரைக்க. படைத்தல்-உடையனாதல். சில்லை-வட்டம். சிரை-மழிப்பு. செல்வன்-இன்பத்திற்கு ஏதுவாய் உள்ள பொருளாய் உள்ளவன்.
சாம்ப ரகலத் தணிந்தாய் போற்றிதவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக்குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி பாம்பும் மதியும் புனலுந் தம்மிற்பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி ஆம்பல் மலர்கொண்ட டணிந்தாய் போற்றிஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. பொருளுரை: மார்பில் திருநீறு பூசியவனே! அடியார்கள் மேற் கொள்ளும் தவநெறிகள் அவற்றிற்கு உரிய பயன்களைத் தரும்படி செய்து நிற்பவனே! ஐம் பொறிகளையும் மனத்தால் அடக்கி உன்னை வழிபடுபவர்கள் செய்யும் சிறிய தொண்டுகளை உள்ளத்துக்கொண்டு அவர்களுக்கு அருள் செய்ய இருக்கும் இளையோனே! பாம்பும், பிறையும், கங்கையும் தம்மிடையே பகை இன்றி ஒருசேர இருக்குமாறு அவற்றைச் சடையில் அணிந்த பண்பனே! ஆம்பற் பூக்களையும் அணிந்தவனே! அலைகளை உடைய கெடில நதிக் கரையிலமைந்த அதிகை வீரட்டானத்திருந்து எல்லோரையும் ஆள்பவனே! உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: தவநெறிகள், அடியவர் மேற்கொண்டவை. சாதித்தல் முல்லைக்கு உரைத்தவாறே உரைக்க.
நீறேறு நீல மிடற்றாய் போற்றிநிழல் திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றிகோளரவம் ஆட்டுங் குழகா போற்றி ஆறேறு சென்னி யுடையாய் போற்றிஅடியார்கட் காரமுத மானாய் போற்றி ஏறேற என்றும் உகப்பாய் போற்றியிருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி. பொருளுரை: திருநீறு பூசிய நீலகண்டனே! ஒளி விளங்கும் வெள்ளிய மழுப்படையை ஏந்தியவனே! தன் உடலில் ஒரு கூறாகப் பொருந்துமாறு உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே! கொடிய பாம்புகளை ஆடச்செய்யும் இளையவனே! கங்கை தங்கிய தலையினனே! அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் ஆயினவனே! காளையை வாகனமாக ஏறிச்செலுத்துதலை என்றும் விரும்புபவனே! கெடில நதிக் கரையிலுள்ள பெரிய அதிகை வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும் எந்தையே! உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: கூறு ஏறு உமை-கூறாய்ப் பொருந்திய உமையை உமையது கூற்றினை என்றவாறு. கோள்-கொடுமை. 'ஏறவே; என்னும் ஏகாரம் தொகுத்தலாயிற்று. உகப்பாய்-விரும்புவாய்.
பாடுவார் பாட லுகப்பாய் போற்றிபழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி வீடுவார் வீடருள வல்லாய் போற்றிவேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி நாடுவார் நாடற் கரியாய் போற்றிநாக மரைக்கசைத்த நம்பா போற்றி ஆடும்ஆன் ஐந்தும் உகப்பாய் போற்றிஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. பொருளுரை: உன்னையே விரும்பிப் பாடும் அடியார்களுடைய பாடல்களை விரும்பிச் செவிமடுக்கின்றவனே! பழையாற்றைச் சார்ந்த பட்டீச்சுரத்தை உகந்தருளியிருப்பவனே! உலகப் பற்றறுத்த அடியார்களுக்கு வீடுபேற்றினை அருள வல்லவனே! உமாதேவி அஞ்சுமாறு யானைத் தோலைப் போர்த்திக் கொண்டவனே! தம் முயற்சியாலே உன்னை அடைய விரும்புபவர்கள் ஆராய்ந்து அறிதற்கு அரியவனே! இடையிலே பாம்பினை இறுகக் கட்டியிருப்பவனே! பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புபவனே! அலைகெடில வீரட்டானத்தை உகந்து உலகை ஆள்பவனே! உன்னை வணங்குகின்றேன். குறிப்புரை: பழையாறு, பட்டீச்சுரம் சோழநாட்டுத் தலங்கள், பழையாற்றின்கண் உள்ள, என்க. "பட்டீச்சுரத்தாய்" என்பது 'இறைவனே' என்னும் அளவாய் நின்றது. வீடுவார் - பாசம் நீங்கப் பெறுவார். 'வீடுவார்க்கு' என்னும் உருபு தொகுத்தலாயிற்று. வன்மை, பிறர் அது மாட்டாமை விளக்கிற்று. 'வெருவ' என்றது, இறைவியுங் கண்டு அஞ்சுதல் பற்றி. ஆடுதல் - மூழ்குதல். ஆன் ஐந்து-ஆவினின்றும் உளவாகின்ற ஐந்து; அவை, 'பால், தயிர், நெய், நீர், சாணம்' என்பன. இவை ஐந்தும் ஒருங்கு சேர்ந்ததே 'ஆனைந்து'சிலதுளிகளாகவும், சாணம் அதனினும்மிகக்குறைந்த அளவுமாகச் சேர்க்கப்படும் என்க. "இன்று பசுவின் மலமன்றே இவ்வுலகில் - நின்ற மலம் அனைத்தும் நீக்குவது" (திருக்களிற்றுப்படியார்- என்பதனான் ஆப்பியது பெருந் தூய்மையையும், அந் நயத்தானே ஆனீரினது தூய்மையையும் தெற்றெனவுணர்க. இக்காலத்து இஃதறியாத சிலர், ஆனீரினையும் சாணத்தினையும் பிறவுயிர்களுடையவற்றோடொப்ப வாலாமை யுடையனவென மயங்கி அவற்றை மறுத்து, மோரும் வெண்ணெயும் கொண்டு, தம் மனஞ்சென்றவாறே கூறுப. மோரும் வெண்ணெயும் தயிர் நெய்களின் வேறாகாமைதானும் அவர் நோக்கிற்றிலர் என்க.
மண்துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றிமால்கடலும் மால்விசும்பு மானாய் போற்றி விண்துளங்க மும்மதிலு மெய்தாய் போற்றிவேழத் துரிமூடும் விகிர்தா போற்றி பண்துளங்கப் பாடல் பயின்றாய் போற்றிபார்முழுதும் ஆய பரமா போற்றி கண்துளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றிகார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி. பொருளுரை: நில உலகம் அசையுமாறு கூத்தாடுதலை மகிழ்ந்தவனே! பெரிய கடலும் வானமும் ஆனவனே! வானுலகம் நடுங்கும் படி மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்தவனே! யானைத் தோலினால் உடம்பை மூடிக்கொள்ளும், உலகியலுக்கு வேறுபட்டவனே! பண்கள் பொருந்தப் பாடுதலில் பழகியவனே! உலகம் முழுதுமாய் பரவியிருக்கும் மேம்பட்டவனே! கண் அசைத்துத் திறந்த அளவில் முற்காலத்தில் மன்மதனை அழித்தவனே! நீரின் ஆழத்தால் கருநிறம் கொண்ட கெடிலக்கரை வீரட்டானத்தை உகந்து கொண்ட, மண்டைஓட்டை ஏந்தியவனே! உன்னை வணங்குகின்றேன். குறிப்புரை: விண்துளங்க-விண்ணுலகம் அதிருமாறு. விகிர்தன் வேறுபட்டவன். 'கார்' என்னும் மேகத்தின் பெயர், நீருக்கு ஆயிற்று.
வெஞ்சினவெள் ஏறூர்தி யுடையாய் போற்றிவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றிதொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றிநான்மறையோ டாறங்க மானாய் போற்றி அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றிஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. பொருளுரை: மிக்க சினத்தையுடைய வெண்ணிறக் காளையை வாகனமாக உடையவனே! விரிந்த சடையின் மேல் கங்கை வெள்ளத்தைத் தங்கச் செய்தவனே! உறங்காது பிச்சை எடுக்கும் மேம்பட்டவனே! உன்னை வழிபடும் ஒழுக்கத்தை உடைய அடியார்களின் துயரைத் துடைப்பவனே! விடம் தங்கிய கழுத்தை உடைய தலைவனே! நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவனே! இனிய சொல்லை உடைய பார்வதி பாகனே! அலைகெடில வீரட்டத்து ஆள்வாய்! உன்னை வணங்குகின்றேன். குறிப்புரை: சினம், இன அடை. 'துஞ்சாது' என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று. 'கை' என்பது இடப்பகுதியை யுணர்த்தல் போலக் காலப் பகுதியையும் உணர்த்துமாகலின். "தொழுத கை" என்பதற்கு, 'தொழுத பொழுதே' என உரைக்க. "தொழுதகை துன்பம் துடைப்பாய் போற்றி" என்பது (தி. திருவாசகத்துப் போற்றித் திருவகவலுள்ளும் வந்தமை காண்க. அம்சொல் - அழகிய சொல். சொற்கு அழகாவது, கேள்வியிலும் பயனிலும் இன்பந்தருதல். அமர்தல்-விரும்புதல். "அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி" என்னும் இதுபோல்வன. சார்த்துவகையால் அம்மைக்குரிய மறைமொழிகளாத லுணர்க.
சிந்தையாய் நின்ற சிவனே போற்றிசீபர்ப் பதஞ்சிந்தை செய்தாய் போற்றி புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றிபுண்ணியனே போற்றி புனிதா போற்றி சந்தியாய் நின்ற சதுரா போற்றிதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி அந்தியாய் நின்ற அரனே போற்றிஅலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி. பொருளுரை: அடியார் உள்ளத்தை இருப்பிடமாய்க் கொண்டு நிலைபெற்ற சிவபெருமானே! இதயத்தாமரையில் ஞானவடிவாகத் தங்கியிருப்பவனே! புண்ணியமே வடிவானவனே! தூயனே! காலை, நண்பகல், மாலை என்ற மூன்று சந்திகளாகவும் இருக்கும் மேம்பட்டவனே! உண்மைப்பொருளே! என் தந்தையே! நேரங்களில் சிறந்த அந்திப்பொழுதாக இருக்கும் அரனே! வீரட்டத்திலிருந்து உலகை ஆள்பவனே! உன்னை வணங்குகின்றேன். குறிப்புரை: 'சிந்தை' என்றது சிந்திக்கப்படும்பொருளை. எனவே, அசிந்திதனாயினும் சிந்திதனாய் நின்று அருளுதலைக் குறித்தருளியவாறாம். "சிந்தையாய் நின்ற சிவனே போற்றி" என்பது வழிபாட்டில் மூலமறையாய் நிற்றற்குரியதாதலறிக. சீபர்ப்பதம்' 'சீசைலம்' என்னும் தலம். இது தெலுங்கநாட்டில் உள்ளது' 'புந்தியாய்ப் புண்டரிகத்துள்ளாய்' என்றருளினாரேனும், 'புந்திப் புண்டரிகமாய் அதனுள் இருப்பவனே' என்றல் திருக்குறிப்பென்க. இஃது ஆசனம், மூர்த்தி இரண்டற்கும் ஒருங்கே யுரித்தாதல் அறிக. இதனால், அடியவர் உள்ளத்திருந்து அவரது அகவழிபாட்டினை ஏற்றருளுதலைக் குறித்தருளினமை காண்க. புண்ணியன் - அறவடிவினன். சந்தி; 'காலை, நண்பகல், மாலை, என்னும் முப்போதுகள், சந்திக்குரிய இறைவனை, 'சந்தி' என்றருளினார். இம்முப்போதுகளினும் இறைவி முறையே படைப்பாள்என நிற்க, இறைவன் அவளோடு அவ்வாறே உடனாய் நின்று. அவைகளில் செய்யப்படும் தொழுகைகளை ஏற்று அருள் புரிவன் என்க. இதனாற் பல தெய்வ உணர்வின்றி, ஒருமுதல் உணர்வோடு செய்யும் சிவநெறி வழிபாட்டு முறை பெறப்படுதல் காண்க. சதுரன் - திறலுடையவன். தத்துவன் - உண்மைப் பொருளாய் உள்ளவன். தாதை - தந்தை; இது விளியேற்று, "தாதாய்" என நின்றது. அந்தி - மாலை; 'முனிவர் வந்தார்; அகத்தியனும் வந்தான்' என்பது போல, அருளுதலாகிய சிறப்புப்பற்றி மாலைப்போதினைச் சிறந்தெடுத்தோதினமையின், மேல் "சந்தி" என்றது, ஏனை இரண்டனையுமே எனக்கொள்க. அரன் - அழிப்பவன். உயிர் அழிக்கப்படாமையின், அழித்தல், உயிரைப்பற்றியுள்ளமாசுகளையே என்க. அந்திக்கண் அரனாய் நிற்றல் குறிக்கப்பட்டவாறறிக.
முக்கணா போற்றி முதல்வா போற்றிமுருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி தக்கணா போற்றி தருமா போற்றிதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத்துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றிஎறிகெடில வீரட்டத் தீசா போற்றி. பொருளுரை: முக்கண்ணனே! முதல்வனே! முருகனுடைய தந்தையே! தென்திசைக் கடவுளே! அறவடிவினனே! மெய்ப் பொருளே! என் தந்தையே! திருமாலும், பிரமனும் ஒன்று சேர்ந்து அண்ணலே என்று அழைத்துக் கை கூப்புமாறு அசையாது ஒளிப்பிழம்பாய் நின்றவனே! வீரட்டானத்து இறைவனே! வேறு எங்கும் பற்றுக் கோடில்லாத அடியேன் தந்தையாகிய உன்னை வணங்குகிறேன். குறிப்புரை: 'முதல்வன் தலைவன், பதி' என்பன ஒரு பொருட் சொற்கள். ஒரு சில முதன்மையன்றி, எல்லா முதன்மையுமுடைமையின், 'முதல்வன்' என்றருளிச்செய்தார்; கிளந்தோது மிடத்து, 'முழுமுதற் கடவுள்' எனக் கூறுப. 'பயந்தாய்' என்றது. உலக நலத்தின் பொருட்டு மகன்மை முறையாற் படைத்தருளினமை பற்றி; இதனை, "கைவேழ முகத்தவனைப் படைத்தார் போலும்-கயாசுரனை அவனாற்கொல் வித்தார் போலும்" எனப் பின்னர்மூத்த பிள்ளையார்க்கு அருளிச்செய்யுமாற்றான் அறிக. "முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி" என்னும் இதுபோல்வன, சார்த்து வகையால் முருகக்கடவுளுக்குரிய மறைமொழிகளாதலுணர்க. 'தக்கிணன்' என்பது, எதுகை நோக்கித் 'தக்கணன்' என நின்றது; இது, தென்முகக் கடவுளாய் இருந்து அருள்செய்தலைக் குறித்தருளியவாறு. தருமன் - அறவடிவினன். "தத்துவனே போற்றி என்தாதாய் போற்றி" என்பன மேலும் அருளிச்செய்யப்பட்டன. இவ்வாறு வருதல், அன்புமேலீட்டால் பாடப்படும் வாழ்த்துச் செய்யுள்களுக்கு இயல்பென்க. தொக்கு - கூடி. 'அண்ணால்' என்பது மருவி, 'அண்ணா' என வழங்கும்; அஃது இங்கு இடைக்குறைந்து நின்றது. "தோளும் கையும் கூப்ப" என்றருளியது, கைகளைத் தலைக்கு மேலாக எடுத்துக் குவித்தலை உணர்த்துதற் பொருட்டென்க. துளங்காது-அசையாது; இங்கு 'எரிசுடராய்' என்று அருளியதுமாலும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற உருவத்தினை. எக்கண்ணும் - எவ்விடத்தும். "கண்ணிலேன்" என்பதில் 'களைகண்' என்பது. முதற்குறையாய், 'கண்' என நின்றது; புகலிடமுமாம். 'எறிகெடிலம்' என்பதற்கு, 'அலைகெடிலம்' என்பதற்கு உரைத்தவாறேயுரைக்க. "எக்கண்ணும் கண்ணிலேன்" என்பதனை ஈற்றில் வைத்து 'நீயே எனக்குக் களைகண்' என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.
திருஅதிகை வீரட்டானம் பதிக வரலாறு: திருவதிகை வீரட்டானத்திறைவரை வணங்கி சுவாமிகள் திருத்தொண்டியற்றியிருக்கும் நாள்களில், உள்ளத்து மீதூர்ந்த பேரன்பினால் அருளிச் செய்த செந்தமிழ்த் திருப்பதிகங்களுள் ஒன்றாகும் இது.குறிப்பு: இத் திருத்தாண்டகப் பாடல்கள் எல்லாவற்றிலும் இறைவன் திருவடியையே சிறப்பித்துக் கூறியிருத்தலால்; இது, 'திருவடித் திருத்தாண்டகம்' ஆயிற்று. அகத்தியர் தேவாரத் திரட்டில், திருவடிப் பெருமைக்கு, இத் திருப்பதிகமே சிறந்தெடுத்து வைக்கப்பட்டது. கடவுட் பொருள், பொருளால் ஒன்றாயினும், தீயும் வெம்மையும்போல 'சிவமும் சத்தியும்' எனக் குணிகுணத்தன்மையால் இருதிறப் பட்டு இயைந்து நிற்கும். தீ சுடுதல், அதனது கூறாகிய வெம்மையானேயாதல் போல, சிவம் உலகத்தைத் தொழிற்படுத்தல் அதனது கூறாகிய சத்தியானேயாம். இனி, உலகத்தைத் தொழிற்படுத்துதற்கு அச்சத்தி முழுவதும் வேண்டப்படாது ஒரு சிறு கூறுதானே அமையுமாகலின், அது இறைவனது திருவடியேயாய் நிற்கும். சத்தி, 'ஞானம், கிரியை' என இரு திறனாய் நிகழுமாதலின், அவை இரண்டுமே இறைவனது இரண்டு திருவடிகளாகும். இதனானே இறைவனுக்குரிய பெருமைகள் பலவும் அவனது திருவடிக்கே உரியனவாகக் கூறப்படும். "வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்", "மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்". "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்", "தனக்குவமை யில்லாதான்றாள் சேர்ந்தார்". "அறவாழி யந்தணன்றாள் சேர்ந்தார்", "எண்குணத்தான் தாளை வணங்காத் தலை", "இறைவனடி சேராதார்" என, 'நினைதல். வணங்கல் முதலிய அனைத்தும் திருவடிக்கேயாக யாண்டும் கூறப்படுதல் காண்க. (குறள். . திருவடியே வீடுபேறாய் நிற்கும் என்பதும் இது பற்றியே என்க. இங்ஙனமாகலின், திருவடியின் பெருமைகளை இத் திருப்பதிகத்தால் வகுத்தருளிச் செய்கின்றார்; மேல் நான்காந் திருமுறையுள்ளும் திருவையாற்றுத் திருவிருத்தம், திருவின்னம்பர்த் திருவிருத்தம் இவற்றுள் திருவடியின் பெருமை அருளிச் செய்தமை காண்க. "போற்றி யருளுக" (தி.திருவாசகம். என்னும் திருவெம்பாவைப் பாடல் சிறப்பாக அறியத் தக்கது. இத் திருப்பதிகத்தின் திருத்தாண்டகங்கள் அனைத்தும், மூன்று, ஆறாம் சீர்கள் மாங்கனிச் சீர்களாய் வந்த அறுசீரடியானே அருளப்பட்டுள்ளன. அதனால், அச்சீர்களின் இடையசையீற்றில் ஒற்றாய் நின்றன பலவும். 'விரித்தல்' என்னும் விகார வகையால் வந்தனவே யாதல் காண்க. இவ்வாறாகவே, சில விடங்களில் அங்கு வகர யகர ஒற்றுக்கள் இன்றி ஓதுதல் பாடமாகாமை அறிக. திருவடித் திருத்தாண்டகம் ப. தொ. எண்: திக எண்: 6 அரவணையான் சிந்தித் தரற்றும்மடிஅருமறையான் சென்னிக் கணியாமடி சரவணத்தான் கைதொழுது சாரும்மடிசார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி பரவுவார் பாவம் பறைக்கும்மடிபதினெண் கணங்களும் பாடும்மடி திரைவிரவு தென்கெடில நாடன்னடிதிருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. பொருளுரை: அலைகள் ஒன்றொடொன்று மோதுகின்ற கெடில நதி பாயும் நாடனாய்த் திருவதிகை வீரட்டானத்தை உகந்தருளியுள்ள எம் செல்வனுடைய திருவடிகள் திருமாலால் தியானித்துப் போற்றப்படும். பிரமனுடைய தலைகளுக்கு அணிகளாகும், முருகனால் தொழப்பட்டு அணுகப்பெறும். பற்றுக் கோடாகக் கொண்ட அடியவர்களுக்கெல்லாம் அடைக்கலம் நல்கும், தம்மை வழிபடுபவர்களுடைய பாவத்தைப் போக்கும், பதினெண் தேவ கணத்தவராலும் பாடப் பெறும். குறிப்புரை: அரவணையான்-திருமால். அருமறையான்-பிரமன். சரவணத்தான் - முருகப்பெருமான். அரற்றுதல்-கூப்பிடுதல், "ஐயனே அரனேயென்றரற்றினால்-உய்யலாம்" (தி. ப. பா. என்றருளிச் செய்தமை காண்க.முதல் இரண்டு தொடர்களாலும், காரணக் கடவுளர்களுக்குச் சார்பாய் நிற்றல் அருளிச் செய்தவாறு. மூன்றாவதனால் அபர முத்தர்க்குச் சார்பாதல் அருளிச்செய்தவாறு. நான்காவதனால் பரமுத்தியாதல் அருளிச்செய்தவாறு. ஐந்தாவதனால், வினை நீக்கத்திற்கு வாயிலாதல் அருளிச்செய்தவாறு, ஆறாவதனால், யாவராலும் வணங்கப்படுதல் அருளிச்செய்தவாறு, 'தென்கெடிலம்' என்றதில், "தென்னங்குமரி" (பதிற்றுப்பத்து- என்றாற்போல, இனமில்லாத அடை அடுத்தது; 'தென்' அழகுமாம், செல்வன்-எல்லாம் உடையவன், ஏழு எட்டாம் தொடர்கள் எழுவாய்கள்; ஏனையவை பயனிலைகள்; எழுவாயாய் நிற்கும் 'அடி' என்பன அடைவேறுபாட்டால் ஒரு பொருள் மேற்பல பெயராயின. பின் வருவனவற்றுள்ளும் இவ்வாறுணர்க.
கொடுவினையா ரென்றுங் குறுகாவடிகுறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி படுமுழவம் பாணி பயிற்றும்மடிபதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடிகடல்வையங் காப்பான் கருதும்மடி நெடுமதியங் கண்ணி யணிந்தானடிநிறைகெடில வீரட்டம் நீங்காவடி. பொருளுரை: விரைந்து செல்வதாய் ஏனைய காளைகளினின்றும் மாறுபட்ட காளையை ஊர்பவனும், நீண்ட பிறையை முடிமாலையாக அணிந்தவனும், கெடில நதிக்கரையிலுள்ள அதிகை வீரட்டானத்தை நீங்காது உகந்தருளியிருப்பவனும் ஆகிய எம்பெருமானுடைய திருவடிகள் தீவினை உடையவரால் ஒரு காலும் அணுகப்பெறாதன. நலிவுற்றுச் சரணாக அடைந்தவரை அழியாமல் காப்பன. முழவு ஒலித்தலையும் தாளம் இடுதலையும் பயிற்றுவிப்பன. வெகுண்டெழுந்த கொடிய கூற்றுவன் மீது பாய்ந்தன. கடலால் சூழப்பட்ட இவ்வுலகைக் காக்கும் திருமாலால் விரும்பிப் போற்றப்படுவன. குறிப்புரை: முதல் தொடரில் சிலர் அடையாமைக்குக் காரணம் அருளிச் செய்தவாறு, குறைந்து-நலிவுற்று. ஆழாமை-அழியாமல். இதனால் அருள் மிகுதி அருளியவாறு. பயிற்றுதல் - நன்கு உணரச் செய்தல்; இது அவை கற்றாரை என்க. இதனால் முதன்மை அருளியவாறு. நான்காவதனால் ஆற்றல் மிகுதி அருளியவாறு. ஐந்தாவது முதலிய நான்கு தொடர்களும் எழுவாய்கள்.
வைதெழுவார் காமம்பொய் போகாவடிவஞ்ச வலைப்பாடொன் றில்லாவடி கைதொழுது நாமேத்திக் காணும்மடிகணக்கு வழக்கைக் கடந்தவடி நெய்தொழுது நாமேத்தி ஆட்டும்மடிநீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி தெய்வப் புனற்கெடில நாடன்னடிதிருவீரட் டானத் தெஞ் செல்வன்னடி. பொருளுரை: கெடில நாடனாய் அதிகை வீரட்டத்தை உகந் தருளிய செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் எம் பெருமானைத் தூற்றிக் கொண்டே துயிலெழுபவருடைய தீய விருப்பங்களே நிறைவேறச் செய்வன; வஞ்சனையாகிய வலையிலே அகப்படாதன. கையால் தொழுது நாவினால் துதித்து நாம் அகக் கண்ணால் காண வாய்ப்பு அளிப்பன. உலகத்தார் கணக்கிடும் எல்லையைக் கடந்து நிற்பன. அடியவராகிய நாம் உடலால் தொழுது நாவால் துதித்துக் கையால் நெய் அபிடேகம் செய்யப் பொருந்துவன. நீண்ட வானுலகையும் கடந்து எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பன. குறிப்புரை: வைதல்-கேடு கூறுதல், எழுதல்-துயிலுணர்தல். போகா அடி-போகாமைக்குஏதுவாய அடி; இதனால், மறைப்பாய் நிற்றல் அருளியவாறு. இவ்வாறருளிச் செய்தமையின், இறைவனை உறவாக நினையாது பகையாய் நினையினும், உள்பொருளாக நினையாது இல் பொருளாக நினையினும் வீடு கூடும் என்பாரது கூற்றுப்பொருந்தாமையறிக. வஞ்சவலை - வஞ்சனையாகியவலை. பாடு-படுதல் - ஒன்று-சிறிது. 'ஒன்றும்' என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. இதனால். கரவுடையார்க்கு அருளாமை அருளியவாறு. 'நாம்' என்றது, கரவிலாதார் அனைவரையும் உளப்படுத்து, இதனால், கரவிலார்க்கு அருள் செய்தலும், அவர் அவ்வருளைப்பெறுமாறும், அருளப்பட்டன. கணக்கு - எண். வழக்கு-சொற்றொடர். இதனால், மனமொழிகளைக் கடந்து நிற்றல் அருளப்பட்டது. நெய், என்றது, எண்ணெய், ஆனெய் தேனெய் என்பன பலவும் அடங்க. இனம்பற்றிப் பால், தயிர் முதலிய பலவுங்கொள்க. 'நெய் ஆட்டும் அடி' என இயையும். இதனால், 'மன மொழி மெய்கட்கு அகப்படுதல்' அருளியவாறு. ஆறாவது தொடரில் அண்டங்களின் உள்ளும் புறம்புமாய் நிற்றல் அருளிச் செய்யப்பட்டது.
அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடிஅழகெழுத லாகா அருட்சேவடி சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடிசோமனையுங் காலனையுங் காய்ந்தவடி பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடிபிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடிதிருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. பொருளுரை: தெளிவான நீரை உடைய கெடில நதி பாயும் நாட்டினனாய், திருவீரட்டானத்தில் உகந்தருளியிருக்கும் எம் செல்வனாகிய எம்பெருமானுடைய திருவடிகள் தாமரையை அரும்பச் செய்யும் காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை நிறத்தாலும் ஒளியாலும் ஒப்பன. தம் அழகை ஓவியத்து எழுதலாகாத வனப்பினவாய் அடியார்களுக்கு அருளை வழங்குவன. சுரும்புகளும் வண்டுகளும் சுற்றித் திரியும் வாய்ப்பினை அளிப்பன. சந்திரனையும் கூற்றுவனையும் வெகுண்டன. பெருவிருப்புடைய அடியவரால் குழாமாகப் போற்றப்படுவன. தவறு செய்தவர்களுடைய தவறுகளை அறியும் ஆற்றல் உடையன. குறிப்புரை: 'அரும்புவித்த' என்பது, 'அரும்பித்த' எனத்தொகுத்தலாயிற்று, அரும்புவித்தல், தாமரையை என்க. தாமரையை மலர்விப்பதேயன்றி அரும்புவிப்பதும், உலர்விப்பதும் ஞாயிறேயாகலின், இங்கு அரும்புவித்தல் கூறப்பட்டது. இவ்வுவமையால் திருவடி உலகை முத்தொழிற்படுத்தல் விளங்கும். இதனையே, 'வானின் முந்திரவி யெதிர்முளரியலாவுறும் ஒன்றலர்வான் முகையாம் ஒன்றொன்றுலரு முறையினாமே" எனச் சிவப்பிரகாசத்துள் ( எடுத்தோதினார் என்க. இரண்டாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்துக் கோடல் அருளியவாறு. 'சுரும்பும் வண்டினங்களும்' என்க. 'மதம்' 'மத்தம்' என நிற்றல்போல, 'இதம்', 'இத்தம்' என நின்றது. இதம் - இனிமை, பிணிப்புண்டார்க்குப் பயனுந்தருதல் அருளியவாறு. சோமன் - சந்திரன். நான்காவது தொடரில் குற்றம்செய்தலும், செய்தற்கு உடம்படுதலும் உடையாரை ஒறுத்தல் அருளியவாறு. பித்தர், அன்பர். "பெரும்பித்தர்" என்றதும், 'பிதற்றும்' என்றதும் பழித்தது போலப் புகழ்ந்தவா றென்க. இதனால், பயன் எய்தினார் அம்மகிழ்ச்சி மேலீட்டால் பலபட வாழ்த்துதல் அருளியவாறு. பிழைத்தல் - பிழை செய்தல், பிழைப்பு - பிழை. அதை அறிய வல்லுதலாவது, அவர், 'யாம் இதனை மறைத்துவிட்டேம்' என்று உள் மகிழாதவாறு அப் பிழைக்கேற்ப ஒறுத்தலும், மறைக்க வொண்ணாதவாறு வெளிப்படுத்தலும். இதனால், நடுவுநிலைமை நடாத்தும் திறன் அருளிச் செய்யப்பட்டது. திருந்துதல்-தெளிதல்.
ஒருகாலத் தொன்றாகி நின்றவடிஊழிதோ றூழி உயர்ந்தவடி பொருகழலும் பல்சிலம்பும் மார்க்கும்மடிபுகழ்வார் புகழ்தகைய வல்லவடி இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடிஇன்புற்றார் இட்டபூ ஏறும்மடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடிதிருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. பொருளுரை: கெடில நாட்டுத் திருவதிகை வீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் படைப்புக் காலத்து ஒன்றாகி நின்று முற்றழிப்புக் காலத்தில் மாயையைத் தொழிற்படுத்தாது தம் நிலையிலேயே நிற்பன. ஒன்றில் கழலும் மற்றொன்றில் சிலம்பும் ஒலிக்குமாறு அமைந்தன. புகழ்வாருடைய புகழ் உரைகளுக்கு முடிவு காண இயலாதபடி தடுக்கும் ஆற்றல் உடையன. இப்பெரிய நில உலகிலுள்ளார் மகிழ்ந்து துதிக்கும் வாய்ப்பினை அளிப்பன. அவ்வாறு இன்புற்று அடியவர்கள் அருச்சித்த பூக்களைத் தம்பால் தாங்கி நிற்பன. குறிப்புரை: 'ஒருகாலம்' என்றது, படைப்புக்காலத்தை. 'ஆண்டு, இறைவர் ஒரு திருவடியினராய்காலத்தை. ஆண்டு உயர்தலாவது, மாயையைத் தொழிற் படுத்தாதொழிதல், இதனால், தன்னிலையில் நிற்றல் அருளியவாறு. கழல் ஆடவர்க்கும், சிலம்பு பெண்டிர்க்கும் உரியன. இதனால், அப்பனும் அம்மையுமாய்ச் செம்பாதியாய் இயைந்து நிற்றல் அருளிச் செய்யப்பட்டது. "உருவிரண்டும் ஒன்றோடொன் றொவ்வாவடி" (ப.பா. என்றருளிச் செய்தலும் இது பற்றி, இஃது அவற்றின் அணிகலன்களையும், அஃது அவற்றின் உருவத்தையும் வியந்தவாறென்க. இந்நிலை உலகின் கண் வைத்தறியப்படாத அதிசய நிலையாகலான் வியப்புத்தருவதாயிற்று. புகழ்-புகழ்தல்; முதனிலைத் தொழிற் பெயர், தகைத்தல்-தடுத்தல். தகைத்தல். முற்றுப் பெறாமையால் இடைக்கண் ஒழியச் செய்தல், இதனால், அளவில் புகழுடைமை அருளியவாறு. நிலத்தவர் இன்புறுதல் உலகின்பம் பெற்றமை பற்றி. இதனால் உலகவின் பத்தினைப் பயத்தல் அருளிச் செய்யப்பட்டது. 'இன்புற்றார்' என்றது, அவர்தம்மையே. 'ஏறும்' என்றது, பயன் பெற்றமை காரணமாக இட்டமையின், ஏறாதவாறு ஓதுக்கத் தக்கதென்பதும், அன்னதாயினும், அப்பயன் வழித்தோன்றிய அன்பு காரணமாக இட்டமையானும், அவ்வன்பு தானே பின்னர்ப் பயன்கருதாது செய்யும் அன்பாய் முறுகி வளர்தல் வேண்டுமாகலானும் ஏறக் கொள்ளப்பட்ட தென்பதும் தோன்ற நின்றன. இதனான், உலகவரை ஆட்கொள்ளுமாறு அருளிச் செய்யப்பட்டது.
திருமகட்குச் செந்தா மரையாமடிசிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடிபுகழ்வார் புகழ்தகைய வல்லவடி உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடிஉருவென் றுணரப் படாதவடி திருவதிகைத் தென்கெடில நாடன்னடிதிருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. பொருளுரை: அழகிய கெடிலநாடனாய திருவதிகை வீரட்டானத்து எம்செல்வன் சேவடிகள் திருமகளுக்குச் செந்தாமரை போல்வன. சிறந்து அடியார்களுக்குத் தேன் போல இனிப்பன. செல்வர்களுக்கு அவர்கள் செல்வத்தைச் செலவிடும் திறத்தை ஓர்ந்து அறிய உரைகல்லாய் இருப்பன. புகழ்பவர் புகழ் எல்லையைத் தடுக்க வல்லன. வலம் இடம் இருபுறத்து அடிகளும் ஆண் அடியும் பெண் அடியுமாய் ஒன்றொடொன்று ஒவ்வாது அமைந்திருப்பன. தமக்கு உருவம் உடைமையே இயல்பு என்று உணரப்படமுடியாமல் உருவம் அருவம் என்ற நிலைகளைக் கடந்திருப்பன. குறிப்புரை: முதல்தொடர், செல்வத்திற்கு நிலைக்களமாதல் அருளியவாறு. வீடுபெறுதலை, 'சிறத்தல்' என்பவாகலின், சிறந்தவர், வீடுபெற்றார். 'தேனாய்' என்புழி 'இன்பம்' என்றது எஞ்சி நின்றது. உலகர்க்குச் செல்வம் வாயிலாக இன்பத்தை யருளி, வீடுபெற்றார்க்குத் தானே நேராய் இன்பம் அருளும் என்றவாறு. இவை இரண்டனாலும் சிற்றின்பம் பேரின்பங்களை யருளுதல் அருளப்பட்டது. பொருளவர்-செல்வர். 'உரை' என்றது கட்டளைக் கல்லினை. இதனால், செல்வம் படைத்தாரது செல்வத்தின் நன்மை தீமைகளை நுண்ணிதாக அளந்து அவற்றிற் கேற்பப் பயன்கொடுத்தல் அருளப்பட்டது. நான்காவது தொடர் மேலைத் திருத்தாண்டகத்துள்ளும் வந்தமை காண்க. உருவென்று உணரப்படாத-உருவுடைமையே இயல்பென உணரப்படாத; உருவம் அருவம் இவை அனைத்தையும் கடந்துநிற்றலே இயல்பென உணரப்படுகின்ற; இதனால், ஏனையோரது அடிகள் போலாமை அருளப்பட்டது
உரைமாலை யெல்லா முடையவடிஉரையா லுணரப் படாதவடி வரைமாதை வாடாமை வைக்கும்மடிவானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி அரைமாத் திரையி லடங்கும்மடிஅகலம் அளக்கிற்பா ரில்லாவடி கரைமாங் கலிக்கெடில நாடன்னடிகமழ்வீரட்டானக் கபாலியடி. பொருளுரை: கரைகளிலே மக்களின் ஆரவாரத்தை மிகுதியாக உடைய கெடில நதி பாயும் நாட்டில் நறுமணம் கமழும் வீரட்டானத்தை உகந்தருளியிருக்கும், மண்டையோட்டை ஏந்திய சிவபெருமானுடைய திருவடிகள் பாட்டும் உரையுமாகிய சொற்கோவைகளை உடையன. சொற்களால் முழுமையாக உணரப்படாதன, உமா தேவியை மனம் வாடாமல் மகிழ்வாக வைப்பன. வானவர்களால் வணங்கி வாழ்த்தப்படுவன. அரைமாத்திரை ஒலியற்றாகிய பிரணவக் கலையில் அடங்குவன. தம் பரப்பினை யாரும் அளக்கவியலாதபடி எங்கும் பரவி இருப்பன. குறிப்புரை: உரைமாலை-சொற்கோவை; இது பாட்டும் உரையுமாய் அமையும்; அவை எல்லாவற்றையும் உடைய என்றதனால், புகழ்தக்க பொருள் தாமேயாதல் அருளியவாறு. உரையால்-உரையளவையால்; பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. இதனால், தலைப்பட்டே உணரற்பாலவாதல் அருளிச் செய்யப்பட்டது. வாடாமை - பிரிவால் வருந்தாதவாறு. வைக்கும்-ஒருகூறாகக் கொள்கின்ற. இதனால், வரைமாது பொருளால் வேறாகாமை அருளியவாறு. வானவர்கள் வாழ்த்துதல், துறக்கத்து அழியாது வாழ்தற்பொருட்டு. இதனால், துறக்க இன்பம் அருளுதல் அருளப்பட்டது. மாத்திரை - அளவு. அவை எண்ணல் முதலாக உலகத்தார் கொள்வன. 'அரை' என்றது, அவற்றின் நுணுக்கம் குறித்தவாறு. 'அரை மாத்திரை, பிரணவகலை' என்பாரும் உளர். அளக்கிற்பார் - அளக்க வல்லார். ஐந்து ஆறாம் தொடர்களால் முறையே நுண்மையும் பெருமையும் அருளியபடி. கலி - நீராடுவாரது ஆரவாரம். 'மாங்கலி' மாமரங்களின் எழுச்சி என்க. கமழ் - பூவும் புகையும் கமழ்கின்ற.
நறுமலராய் நாறும் மலர்ச்சேவடிநடுவா யுலகநா டாயவடி செறிகதிருந் திங்களுமாய் நின்றவடிதீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி மறுமதியை மாசு கழுவும்மடிமந்திரமுந் தந்திரமும் ஆயவடி செறிகெடில நாடர் பெருமானடிதிருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி. பொருளுரை: கெடிலநாடர் பெருமானாம் திருவீரட்டானத்து எம் செல்வனுடைய திருவடிகள் இயற்கையிலேயே மலர் மணம் உடையனவாய் மலர்களாலும் அருச்சிக்கப் படுவன. அறமும் நீதியும் தம் வடிவமாக உலகியலையும் நாட்டியலையும் நிகழச்செய்வன. உலகிலே கதிரவனும் மதியமுமாய்ப் புறத்து ஒளிகளைத் தருவன. யோகியர் உள்ளத்தே ஒளிப்பிழம்பாய் உள்ளொளி பெருக்குவன. சந்திரனுக்கு ஏற்பட்ட மாசினைக் கழுவியன. மந்திரங்களும் அவற்றைச் செயற்படுத்தும் செயல்களுமாய் உள்ளன. குறிப்புரை: 'நறுமலராய்' என்பதில் ஆக்கம் உவமை குறித்தது, 'பஞ்சாய்ப் பறந்தான்' என்றாற்போல. 'ஏனையோர் அடிகள் மலரோடு உவமிக்கப்படுதல் பொலிவு பற்றியே; இறைவர் அடிகள் அவ்வாறன்றி நறுமணம் பற்றியுமாகும்' என்பார், இதனை அருளிச்செய்தார். இதனால், அருள்வடிவாதல் அருளப்பட்டது. 'நடு' என்றது அறத்தையும் நீதியையும். 'உலகம்', 'நாடு' என்பன ஆகுபெயராய், அவற்றது நடையினை உணர்த்தின. இம்மையோடு மறுமையையும் வேண்டி ஒழுகும் ஒழுக்கம் உலகியல்; இம்மை ஒன்றனையே வேண்டி ஒழுகும் ஒழுக்கம் நாட்டியல். அவ்விரண்டனையும் முறையே அறக் கடவுளிடத்தும், அரசனிடத்தும் நின்று நடத்துதலின் இவ்வாறு அருளிச் செய்தார்; இதனால், உலகத்தை நடத்துதல் அருளியவாறு. மூன்றாவது தொடரால், வெம்மையும் தண்மையுமாய் நின்று உதவுதல் அருளிச் செய்யப்பட்டது. தீத்திரள்-ஒளிப்பிழம்பு. உள்ளே -நிறைந்த; இவ்வாறன்றி நாடருக்கு அடையாக்கலுமாம்.
அணியனவுஞ் சேயனவு மல்லாவடியடியார்கட் காரமுத மாயவடி பணிபவர்க்குப் பாங்காக வல்லவடிபற்றற்றார் பற்றும் பவளவடி மணியடி பொன்னடி மாண்பாமடிமருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி தணிபாடு தண்கெடில நாடன்னடிதகைசார்வீ ரட்டத் தலைவன்னடி. பொருளுரை: இனிய இசை பாடப்படும் குளிர்ந்த கெடிலநதி பாயும் நாட்டில் பெருமைபொருந்திய அதிகைவீரட்டானத் தலைவனுடைய திருவடிகள் அடியார்களுக்குப் பக்கத்தில் உள்ளனவாயும், அடியார் அல்லார்க்கு தூரத்தில் உள்ளவாயும் அமைந்திருப்பன. அடியவர்களுக்குக் கிட்டுதற்கு அரிய அமுதம் போன்று உள்ளன. வழிபடுபவர்களுக்குத் துணையாகும் ஆற்றல் உடையன. உலகப் பற்றற்ற சான்றோர்கள் பற்றும் தகையவாய்ப் பவள நிறத்தை உடையன. மணிகள் போலவும் பொன் போலவும் மதிப்பிடற்கரிய பெருமை உடையன. மருந்தாய்ப் பிறவிப் பிணியை அடியோடு நீக்கும் ஆற்றல் உடையன. குறிப்புரை: அணியன அன்மை அடியவரல்லார்க்கும், சேயன அன்மை அடியவர்க்கும் என்க; இவ்வாறு எதிர்மறை முகத்தால் அருளிச்செய்தது வலியுறுத்தற்பொருட்டு. இரண்டாவது தொடர் அடியவர் அல்லார்க்கு அணியன வன்மை மாத்திரையேயன்றிச் செய்யும் தீங்கொன்றுமில்லை, அடியவர்க்கு அணியனவாய்ப் பேரின்பம் பயக்கும் என்றருளியவாறு. பாங்கு-பக்கம். பக்கமாதல் ஆவது, துணையாய் நிற்றல். வல்லுதல், எவ்வகையான இடர்களையும் களையவும், எல்லா இன்பங்களையும் அளிக்கவும் வல்லுதல். 'பற்றற்றார்' என்றது, உலகப்பற்றின் உவர்ப்புத் தோன்றப் பெற்றாரையும், அவ்வாறு தோன்றப் பெற்று அதனின் நீங்கினாரையும். 'பற்றுதல்' என்றது, துணையாகப் பற்றுதலையும், பேறாகப்பெற்று நிற்றலையும். இந்நான்கனாலும், பெறும்பேறாதல் அருளியபடி. 'மணியடி'. 'பொன்னடி' உவமத்தொகைகள்; இவற்றால் அருமை கூறியவாறு. மாண்பு - ஒப்பற்ற பெருமை; இதனால், ஒருசொல்லாகப் பெருமை அருளியவாறு. 'பிணி' என்றது பிறவி நோயை. இதனாற் பிறவிப் பிணிக்கு மருந்து தானன்றி வேறின்மை அருளப்பட்டது. தணி-இனிய இசை. தகைசார்-பெருமை பொருந்திய.
அந்தா மரைப்போ தலர்ந்தவடிஅரக்கனையும் ஆற்ற லழித்தவடி முந்தாகி முன்னே முளைத்தவடிமுழங்கழலாய் நீண்டஎம் மூர்த்தியடி பந்தாடு மெல்விரலாள் பாகன்னடிபவளத் தடவரையே போல்வானடி வெந்தார் சுடலைநீ றாடும்மடிவீரட்டங் காதல் விமலன்னடி. பொருளுரை: ஒலிக்கும் தழற்பிழம்பாய் வளர்ந்த வடிவினனும் பந்தினை விளையாடும் மெல்லிய விரல்களை உடைய பார்வதி பாகனும், பெரிய பவள மலை போல்வானும், அதிகை வீரட்டத்தை உகந்தருளியிருக்கும் தூயோனும் ஆகிய எம் பெருமானுடைய திருவடிகள் தாமரைப் பூக்கள் போல மலர்ந்துள்ளன. இராவணனுடைய ஆற்றலையும் போக்கியன, ஏனைய பொருள்களின் தோற்றங்களுக்கு முன்னே தோன்றியன. சுடுகாட்டில் எரிக்கப்பட்டவருடைய சாம்பலில் தோய்வனவாம். குறிப்புரை: போது அலர்ந்த - போது அலர்ந்தது போன்ற. அரக்கனையும், உம்மை உயர்வு சிறப்பு. இவையிரண்டனாலும், முறையே மென்மையும் வன்மையும் அருளியவாறு. முந்தாகி - முதற்காலமாய் நின்று. முன்னே முளைத்தல் - ஏனைப் பொருள்களின் தோற்றங்கட்கெல்லாம் முன்னே தோன்றுதல்; இதுவே. சிவதத்துவ நிலையாகச் சொல்லப்படுவது. நான்காவது தொடர் அரியும் அயனும் அடியும் முடியும் தேட நின்ற நிலை; இதுவே, சதாசிவ தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது, ஐந்தாவது தொடர் உருவத் திருமேனி கொண்டு உலகத்தைத் தொழிற்படுத்தி நிற்கும் நிலை; இதுவே ஈசுவரத் தத்துவ நிலையாகச் சொல்லப்படுவது; சுத்தவித்தை ஈசுரத் தத்துவத்துள்ளும், சத்தி தத்துவம் சிவதத்துவத்துள்ளும், அடங்க, சுத்த தத்துவம் மூன்றாகக் கூறப்பட்டவாறு உணர்க. ஆறாவது தொடரால் உயிருணர்வைப் பிணித்தற்றன்மை அருளியவாறு. வெந்தார். எரிக்கப்பட்டார். வெந்தாரது நீறு என்க. இதனால் எஞ்ஞான்றும் அழிவின்றி நிற்றலையும், யாவும் அழிந்தபின் மீளத் தோற்றுதற்கு முதலாதலையும் அருளியபடி. 'முந்தாகி' முதலிய ஐந்தனாலும் உலகிற்குக் காரணமாய்த் தனக்கு ஒரு காரணமின்றி நிற்றல் அருளிச் செய்யப்பட்டது. திருநாவுக்கரசர் புராணம் அரிஅயனுக் கரியானை அடியவருக் கெளியானைவிரிபுனல்சூழ் திருவதிகை வீரட்டா னதஅமுதைத்தெரிவரிய பெருந்தன்மைத் திருநாவுக் கரசுமனம்பரிவுறுசெந் தமிழ்ப்பாட்டுப் பலபாடிப் பணிசெயுநாள். புல்லறிவிற் சமணர்க்காப் பொல்லாங்குபுரிந்தொழுகும்பல்லவனும் தன்னுடைய பழவினைப்பா சம்பறியஅல்லல்ஒழிந் தங்கெய்தி ஆண்டஅர சினைப்பணிந்துவல்லமணர் தமைநீத்து மழவிடையோன் தாளடைந்தான்.-தி.சேக்கிழார்.
திருஅதிகை வீரட்டானம் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டானேசுவரரை வணங்கித் திருப்பணி செய்துவரும் நாள்களில் அன்பு மிக்க மனத்தினால் அருளிய திருப்பதிகங்களுள் இஃது ஒன்றாகும். இவை இவை இறைவனுடைய காப்புக்கள்குறிப்பு: காப்பென்னும் தொழிற் பெயர், காக்கப்படுவதாகிய இடத்தினைக் குறித்தது. எனவே, இறைவர் நீங்காதுறையும் இடங்களை யுணர்த்திய திருத்தாண்டகத்தை, 'காப்புத் திருத்தாண்டகம்' என்றதாயிற்று. இத்திருப்பதிகத்துள் எல்லாத் திருத்தாண்டகங்களிலும் முதற்கண் வீரட்டானத்தை அருளிச்செய்தது, ஆங்கு இறைவரை வணங்கி இன்புறுங்காலத்து, அது வாயிலாகப் பிற திருப்பதிகளையும் திருவுள்ளத்து நினைந்தருளினமையான் என்க. இதன் திருப்பாடல்களிலும், மேலைத் திருப்பதிகப் பாடல்களிற் போலவே, இரண்டு மாச்சீர்கட்கு ஈடாக ஒரு கனிச்சீர் பயிலுதல் அறிக. காப்புத்திருத்தாண்டகம் 7 செல்வப் புனற்கெடில வீரட்டமும்சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும் தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்தென்னானைக் காவும் சிராப்பள்ளியும் நல்லூரும் தேவன் குடிமருகலும்நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும் கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்கட்டங்கத் தோடுறைவார் காப்புக்களே. பொருளுரை: நீர் மிக்க கெடிலநதியால் செல்வவளம் பெற்ற அதிகை வீரட்டம், சிற்றேமம், மிக்க பரப்பினை உடைய குளிர்ந்த குற்றாலம், தில்லைச் சிற்றம்பலம், தெற்கில் உள்ள மதுரை, அழகிய ஆனைக்கா, சிராப்பள்ளி, நல்லூர், தேவன்குடி, மருகல், சான்றோர்கள் வழிபட்டுத் துதிக்கும் நாரையூர் ஆகியன - கல்லலகு என்ற வாச்சியத்தையும், நீண்ட புருவச் சுவடுடைய மண்டையோட்டினை யும் கட்டங்கம் என்ற படைக்கலத்தையும் ஏந்திய சிவபெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம். குறிப்புரை: தேவன்குடி-திருந்துதேவன்குடி. கல் அலகு-தாளம். ஓர் ஆயுதம் என்பாரும் உளர். 'ஒருவாச்சியம்' என்றது தமிழ்ப் பேரகராதி, 'கல்லலகும்' கபாலமும் ஏந்தி' என்க. வேண்டும் இடங்களில் எல்லாம் உம்மை விரிக்க.
தீர்த்தப் புனற்கெடில வீரட்டமும்திருக்கோவல் வீரட்டம் வெண்ணெய் நல்லூர் ஆர்த்தருவி வீழ்சுனைநீ ரண்ணா மலைஅறையணிநல் லூரும் அரநெ றியும் ஏத்துமின்கள் நீரேத்த நின்ற ஈசன்இடைமரு தின்னம்பர் ஏகம்பமும் கார்த்தயங்கு சோலைக் கயிலாயமும்கண்ணுதலான் தன்னுடைய காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், கோவலூர் வீரட்டம், வெண்ணெய்நல்லூர், அருவிகள் ஆரவாரித்து விழும் சுனைநீரை உடைய அண்ணாமலை, அறையணி நல்லூர், அரநெறி, இடைமருது, இன்னம்பர், ஏகம்பம், மேகத்தொடு விளங்கும் சோலைகளை உடைய கயிலாயம் என்பன - நாம் துதிக்குமாறு நெற்றிக்கண்ணனாகிய எம் பெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். அத் தலங்களில் எம்பெருமானைப் போற்றுங்கள். குறிப்புரை: தீர்த்தம் - தூய்மை; தெய்வத் தன்மை. அரநெறி - சிவநெறி; அஃது ஒரு தலத்திற்குப் பெயராயிற்று; அது, திருவாரூரில் உளது. கார்த்தயங்கு-காரொடு. 'வீரட்டம் முதலியன, நீர் ஏத்துதற்பொருட்டாகத் திருக் கோயில் கொண்டு நின்ற ஈசனாகிய கண்ணுதலானது காப்புக்களாம்; ஆதலின், அவற்றைச் சென்று ஏத்துமின்கள்' என முடிவு செய்க.
சிறையார் புனற்கெடில வீரட்டமும்திருப்பா திரிப்புலியூர் திருவா மாத்தூர் துறையார் வனமுனிக ளேத்த நின்றசோற்றுத் துறைதுருத்தி நெய்த் தானமும் அறையார் புனலொழுகு காவி ரிசூழ்ஐயாற் றமுதர் பழனம் நல்ல கறையார் பொழில்புடைசூழ் கானப் பேரும்கழுக்குன்றும் தம்முடைய காப்புக் களே. பொருளுரை: பாறைகளில் மோதிப் பெருகிவருகின்ற நீரை உடைய காவிரியால் தென்புறம் சூழப்பட்ட திருவையாற்றில் அமுதமாக உகந்தருளியிருக்கும் பெருமான் தடுக்கப்படுகின்ற நீரை உடைய கெடில நதிக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், பாதிரிப்புலியூர், ஆமாத்தூர், நீர்த்துறைகளை அடுத்த சோலைகளில் வாழும் முனிவர்கள் துதிக்க இருக்கும் சோற்றுத்துறை, துருத்தி, நெய்த்தானம், இருண்ட சோலைகளால் சூழப்பட்ட கானப்பேரூர், கழுக்குன்றம் ஆகிய திருத்தலங்களில் கோயில் கொண்டுள்ளான்.குறிப்புரை: சிறை-அணை. துறை - ஆசிரியர் நிற்பித்த நெறி. 'முனிகள்' என்பதில் கள் ஈறு உயர்திணைப் பன்மை யுணர்த்துதல், 'கடிசொல் லில்லைக் காலத்துப் படினே' (தொல்-சொல்- என்பதனாற் கொள்ளப்பட்டது. ஐயாற்றமுதராகிய 'தம்முடைய காப்புக்கள்' என்க. இதனானே ஐயாறும் கொள்ளப்பட்டது. 'அமுதன்' என்பது பாடம் அன்று. கறை-கறுப்பு; மேகம்; இருள் என்றலுமாம். "காவிரிசூழ்" என்பது இருமாச்சீர்க்கு ஈடாக ஒரு விளங்காய்ச்சீர் வந்தது; வருகின்ற திருப்பாடலிலும் இவ்வாறு வருதல் காண்க.
திரையார் புனற்கெடில வீரட்டமும்திருவாரூர் தேவூர் திருநெல் லிக்கா உரையார் தொழநின்ற ஒற்றி யூரும்ஓத்தூரும் மாற்பேறும் மாந்து றையும் வரையா ரருவிசூழ் மாந தியும்மாகாளம் கேதாரம் மாமேருவும் கரையார் புனலொழுகு காவி ரிசூழ்கடம்பந் துறையுறைவார் காப்புக் களே. பொருளுரை: கெடிலக் கரை வீரட்டம், திருவாரூர், தேவூர், நெல்லிக்கா, புகழை உடைய சான்றோர் வழிபடும் ஒற்றியூர், ஓத்தூர், மாற்பேறு, மாந்துறை, மலை அருவிகள் சூழ்ந்த மாநதி, மாகாளம், கேதாரம், மாமேரு என்பன காவிரி சூழ்கடப்பந்துறையில் உகந்தருளியிருக்கும் பெருமானுடைய திருத்தலங்களாம். குறிப்புரை: உரையார்-உரைத்தல், புகழ்தல் உடையவர். மாநதி, மாகாளம், மாமேரு இவை வைப்புத் தலங்கள். 'கடம்பு' என்னும் மரப்பெயர் அம்முச்சாரியை பெற்றது.
செழுநீர்ப் புனற்கெடில வீரட்ட மும்திரிபுராந் தகம்தென்னார் தேவீச்சரம் கொழுநீர் புடைசுழிக்குங் கோட்டுக் காவும்குடமூக்கும் கோகரணம் கோலக் காவும் பழிநீர்மை யில்லாப் பனங்காட் டூரும்பனையூர் பயற்றூர் பராய்த்து றையும் கழுநீர் மதுவிரியுங் காளிங்க மும்கணபதீச் சரத்தார்தங் காப்புக் களே. பொருளுரை: கெடிலக்கரை அதிகை வீரட்டம், திரிபுராந்தகம், அழகிய தேவீச்சரம், வெள்ளம் சூழும் கோட்டுக்கா, குடமூக்கு, கோகரணம், கோலக்கா, இழித்துரைக்கும் தன்மை இல்லாத பனங் காட்டூர், பனையூர், பயற்றூர், பராய்த்துறை, கழுநீர்ப் பூக்களிலிருந்து தேன் வெளிப்படும் காளிங்கம் என்பன கணபதீச்சரத்தை உகந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய திருத்தலங்களாம். குறிப்புரை: திரிபுராந்தகம், தேவீச்சரம், கோட்டுக்கா, காளிங்கம் - இவை வைப்புத் தலங்கள். கணபதீச்சரம் - திருச்செங்காட்டங்குடி. குடமூக்கு-குடந்தை.
தெய்வப் புனற்கெடில வீரட்டமும்செழுந்தண் பிடவூரும் சென்று நின்று பவ்வந் திரியும் பருப்ப தமும்பறியலூர் வீரட்டம் பாவ நாசம் மவ்வந் திரையு மணிமுத்த மும்மறைக்காடும் வாய்மூர் வலஞ்சு ழியும் கவ்வை வரிவண்டு பண்ணே பாடுங்கழிப்பாலை தம்முடைய காப்புக் களே. பொருளுரை: கெடிலக் கரையிலுள்ள அதிகை வீரட்டம், செழிப்பை உடைய குளிர்ந்த பிடவூர், கடல் வெள்ளம் அணுகும் சீசைலம், பறியலூர் வீரட்டம், பாவநாசம், இன்னிசை முழங்கும் மணிமுத்தம், மறைக்காடு, வாய்மூர், வலஞ்சுழி, ஆரவாரத்தை உடைய வண்டுகள் பண்பாடும் கழிப்பாலை என்பன சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். குறிப்புரை: பிடவூரும், பாவநாசமும் வைப்புத்தலங்கள். அவற்றுள் பிடவூர் சோழநாட்டின் கணுள்ளது; சேரமான் பெருமாள் நாயனார் அருளிச்செய்த ஞான உலாவினைத் திருக்கயிலையிற் கேட்டு மாசாத்தனார் நிலவுலகில்வந்து வெளிப்படுத்திய இடம். பவ்வம் சென்று நின்று திரியும் - கடல் சென்று நிறைந்து திரும்பும்; என்றது, 'ஊழியினும் அழியாத' என்றவாறு. 'ம' என்பது ஏழிசைகளூட் சிறப்புடையதொன்று, 'இழும்' என்பது எனலுமாம். 'வந்து மவ்வினை இரையும்' என்க. இரைதல்-ஒலித்தல். மணிமுத்தம், வைப்புத்தலம். கவ்வை - ஆரவாரம்.
தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்சீர்காழி வல்லந் திருவேட்டியும் உண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்உறையூர் நறையூர் அரண நல்லூர் விண்ணார் விடையார் விளமர் வெண்ணிமீயச்சூர் வீழி மிழலை மிக்க கண்ணார் நுதலார் கரபு ரமுங்காபாலி யாரவர்தங் காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர், அரண நல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவ பெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம். குறிப்புரை: 'தீக்காலி' என்பதும் பாடம். இப்பெயருடையதொரு வைப்புத்தலம் உண்டு.திருவேட்டி, அரணநல்லூர், கரபுரம்-இவை வைப்புத் தலங்கள், உறையூர்-திருமுக்கீச்சரம். 'விடையான்' என்பது பாடம் அன்று.
தெள்ளும் புனற்கெடில வீரட்டமுந்திண்டீச் சரமுந் திருப்பு கலூர் எள்ளும் படையான் இடைத்தா னமும்ஏயீச் சுரமுநல் லேமங் கூடல் கொள்ளு மிலயத்தார் கோடி காவும்குரங்கணின் முட்டமுங் குறும்ப லாவும் கள்ளருந்தத் தெள்ளியா ருள்கி யேத்துங்காரோணந் தம்முடைய காப்புக் களே. பொருளுரை: பூதப்படையை உடையவரும், கூத்தினை நிகழ்த்துபவரும், ஆகிய பெருமானார் உகந்தருளியிருக்கும் திருத்தலங்கள், அதிகை வீரட்டம், திண்டீச்சரம், புகலூர், இடைத்தானம், ஏயீச்சுரம், ஏமம், கூடல், கோடிகா, குரங்கணில் முட்டம், குறும்பலா, திருவடி ஞானம் பெறச் சத்திநிபாதம் பெற்றவர் தியானித்துத் துதிக்கும் நாகை குடந்தைக் காரோணங்கள், என்பனவாகும். குறிப்புரை: கூடல் - மதுரை. திண்டீச்சரம், இடைத்தானம், நல்லேமம் இவை வைப்புத் தலங்கள், எள்ளும் படை - பூதப்படை. இலயம் - கூத்து. குறும்பலா - திருக்குற்றாலம். களிப்பைத் தருதலின் திருவடி ஞானமும் 'கள்' எனப்படும் என்பது, "காயத்துள் மெய்ஞ் ஞானக் கள்ளுண்ண மாட்டாதே - மாயக்கள் ளுண்டாரென் றுந்தீ பற - வறட்டுப் பசுக்களென்றுந்தீ பற" (திருவுந்தியார். என்பதும் காண்க. தெள்ளியார் - சத்திநிபாதம் பெற்றவர். 'இலயத்தார் தம்முடைய காப்புக்கள்' என்க. 'திருப்புகலூர்' என விரித்தல் இன்றி ஓதுதல் பாடம் ஒன்று.
சீரார் புனற்கெடில வீரட்டமும்திருக்காட்டுப் பள்ளி திருவெண் காடும் பாரார் பரவுஞ்சீர்ப் பைஞ்ஞீலியும்பந்தணை நல்லூரும் பாசூர் நல்லம் நீரார் நிறைவயல்சூழ் நின்றி யூரும்நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும் காரார் கமழ் கொன்றைத் தாரார்க் கென்றும்கடவூரில் வீரட்டங் காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், காட்டுப்பள்ளி, வெண்காடு, உலகு புகழும் சிறப்பினை உடைய பைஞ்ஞீலி, பந்தணைநல்லூர், பாசூர், நல்லம், வயல்சூழ்ந்த நின்றியூர், நெடுங்களம், நெல் வெண்ணெய், நெல்வாயில், கடவூர் வீரட்டம் என்பன கார் காலத்தில் மலரும் கொன்றை மலர் மாலையை அணிந்த சிவபெருமானுடைய திருத்தலங்களாம்.குறிப்புரை: 'கடவூரில் உள்ள வீரட்டமும்' என விரித்து மேலே கூட்டி, 'என்றும் காப்புக்கள்' என முடிக்க.
சிந்தும் புனற்கெடில வீரட்டமும்திருவாஞ் சியமும் திருநள் ளாறும் அந்தண் பொழில்புடைசூழ் அயோகந்தியும்ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும் எந்தம் பெருமாற் கிடமாவதாம்இடைச்சுரமும் எந்தை தலைச்சங் காடும் கந்தங் கமழுங் கரவீரமும்கடம்பூர்க் கரக்கோயில் காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், வாஞ்சியம், நள்ளாறு, தண்பொழில் சூழ் அயோகந்தி, ஆக்கூர், ஆவூர், ஆன்பட்டி, இடைச்சுரம், தலைச்சங்காடு, நறுமணம் கமழும்கரவீரம், சக்கரக் கோயிலை உடைய கடம்பூர் ஆகியன எங்கள் பெருமானுக்குத் திருத்தலங்களாம். குறிப்புரை: அயோகந்தி, ஆன்பட்டி இவை வைப்புத் தலங்கள். அயோகந்தி, 'அசோகந்தி' என்றும் சொல்லப்படும். 'இடமாவது' என்பது பாடம் அன்று.
தேனார் புனற்கெடில வீரட்டமும்திருச்செம்பொன் பள்ளி திருப்பூவணம் வானோர் வணங்கும் மணஞ்சேரியும்மதிலுஞ்சை மாகாளம் வார ணாசி ஏனோர்க ளேத்தும் வெகுளீச்சரம்இலங்கார் பருப்பதத்தோ டேணார் சோலைக் கானார் மயிலார் கருமாரியும்கறைமிடற்றார் தம்முடைய காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், செம்பொன்பள்ளி, பூவணம், தேவரும் வணங்கும் மணஞ்சேரி, மதில்களை உடைய உஞ்சை மாகாளம், வாரணாசி மற்றவர்களும் வழிபடும் வெகுளீச்சரம், விளங்கும் சீசைலம், பெருமையையுடைய சோலைகளிலே காட்டில் தங்கக் கூடிய மயில்கள் பொருந்தியிருக்கும் கருமாரி என்பன நீலகண்டப் பெருமானுடைய திருத்தலங்களாம். குறிப்புரை: உஞ்சை - உஞ்சேனை மாகாளம். உஞ்சேனை. மாகாளம், வாரணாசி, வெகுளீச்சரம், கருமாரி வைப்புத் தலங்கள். ஏண்-பெருமை. எகுளீச்சரம் என்பதும் பாடம்.
திருநீர்ப் புனற்கெடில வீரட்டமும்திருவளப்பூர் தெற்கேறு சித்தவடம் வருநீர் வளம்பெருகு மாநிருபமும்மயிலாப்பில் மன்னினார் மன்னியேத்தும் பெருநீர் வளர்சடையான் பேணிநின்றபிரம புரம்சுழியல் பெண்ணாகடம் கருநீல வண்டரற்றுங் காளத்தியும்கயிலாயந் தம்முடைய காப்புக் களே. பொருளுரை: அதிகை வீரட்டம், அளப்பூர், அதிகைக்குத் தெற்கில் உள்ள சித்தவடம், நீர் வளம் மிக்க மாநிருபம், மயிலாப்பூர், பிரமபுரம், சுழியல், பெண்ணாகடம், நல்ல நீலநிறமான வண்டுகள் ஒலிக்கும் காளத்தி, கயிலாயம் என்பன அடியவர்களால் நிலையாகப் போற்றப்படும் கங்கை தங்கும் சடையை உடைய சிவபெருமான் உகந்தருளியிருக்கும் திருத்தலங்களாம். குறிப்புரை: அளப்பூர், சித்தவடம், மாநிருபம் இவை வைப்புத் தலங்கள். சில தலங்களைப் பின்னும் வேறு பெயராற் கூறியது' அப்பெயரால் அறியப்படும் சிறப்புப்பற்றி. சீகாழி - பிரமபுரம். தெற்கு ஏறு - தென்றிசையில் பொருந்திய. திருமுறை கண்ட புராணம் திருமுறை - பகுப்புமுறை மந்திரங்கள் எழுகோடி ஆதலினால் மன்னுமவர் இந்தவகை திருமுறைகள் ஏழாக எடுத்தமைத்துப் பந்தமுறு மந்திரங்கள் பதினொன்றும் ஆதலினால் அந்தமுறை நான்கினொடும் முறைபதினொன் றாக்கினார். -உமாபதிசிவம். அப்பர் செய்தருளிய அற்புதங்கள் தலைகொள் நஞ்சமு தாக விளையுமே தழலின் நீறுத டாகமது ஆகுமே கொலைசெய் யானை குனிந்து பணியுமே கூர்அரா விடம் தீர்எனத் தீருமே கலைகொள் தேவ வனப்பதி தன்னுளே கதவு மீண்டு கடுகத் திறக்குமே அலைகொள் வாரியில் கல்லு மிதக்குமே அப்பர் போற்றும் அருந்தமிழ்ப் பாடலே. - தனிப்பாடல்.
திருக்காளத்தி பதிக வரலாறு: திருநாவுக்கரசர் பழையனூர்த் திருவாலங்காடும் பிற பதியும் பணிந்து, வடதிசைமேல் வழிக்கொண்டு, திருக்காரிகரை யீசரைத் தொழுது, பொன்முகலியாற்றில் முழுகி வலங்கொண்டு திருக்காளத்தி மலைமிசையேறிக் காளத்திநாதரை யிறைஞ்சிப் பாடியருளியது இத் திருப்பதிகம். இது பாடல் தோறும் காளத்தியப்பரை, "என் கண்ணுளான்" என்று பாடியருளிய சிறப்புடையது. (தி.திருநாவு. புரா.திருத்தாண்டகம் 8 விற்றூணொன் றில்லாத நல்கூர்ந் தான்காண்வியன்கச்சிக் கம்பன்காண் பிச்சை யல்லால் மற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்மயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லாப் பொற்றூண்காண் மாமணிநற் குன்றொப் பான்காண்பொய்யாது பொழிலேழுந் தாங்கி நின்ற கற்றூண்காண் காளத்தி காணப் பட்டகணநாதன் காண் அவனென் கண்ணு ளானே. பொருளுரை: விற்று அப்பணத்தால் உணவு வாங்குவதற்குரிய பொருள் ஒன்றும் தன்பால் கொள்ளாத வறியவனைப் போலக் காட்சி வழங்கி, கச்சி ஏகம்பத்தில் உகந்தருளியிருந்து, பிச்சை எடுத்தலைத் தவிர உணவுக்கு வேறு வழியில்லாத பெருந்திறமையனாய், மயானத்துக் காணப்படுபவனாய், தவறான ஏழு உலகங்களையும் தாங்கி நிற்கும் கற்றூண் போல்வானாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணங்களின் தலைவனாகிய எம்பெருமான் எப்பொழுதும் என் மனக்கண்களுக்குக் காட்சி வழங்கியவாறே உள்ளான். குறிப்புரை: 'விற்று' என்னும் எச்சம், 'ஊண்' என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயரைக் கொண்டது. "ஊண்" என்பது ஆகுபெயராய், அதற்கு ஏதுவாய பொருள்மேல் நின்றது. 'மற்றூண்' என்றதும், அவ்வாறே நின்றது. 'பிச்சை' என்பதும், அதனாற்பெறும் உணவையே குறித்தது. மா சதுரன் - பெருந் திறமையன். "பிச்சையல்லால் மற்றூண் ஒன்றில்லாத மா சதுரன்" என்றது, எள்ளி நகைத்தல்போலக் கூறி, இறைவரது இயல்பாய பற்றற்ற நிலையை வியந்தருளியவாறு. மயானத்து மைந்தன் - சுடலைக்கண் வாழும் ஆற்றலுடையவன்; என்றது, 'யாவரும் ஒடுங்குங் காலத்துத் தான் ஒருவனே ஒடுங்காது நிற்கும் முதல்வன்' என்றபடி. மாசின்மை பொன்னுக்கு அடை. "பொன் தூண்", அருமையும் ஒளியும் பற்றிய உருவகம். பொய்யாது - இடையறாது. பொழில் - உலகம். தாங்குதல் - நிலைபெறுவித்தல். "கல் தூண்" என்றதும் உருவகம். கணநாதன் - சிவகணங்கட்குத் தலைவன். 'சிவகணம்' என்பது மெய்யுணர்ந்தார் திரட்சி. "கண் உளான்" என்றது, "கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார் - நுண்ணியர் எம் காதலவர்" (குறள் என்றாற்போல காதல் மிகுதியால் நிகழ்ந்ததோர் அனுபவம்.
இடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்எலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே முடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம் படித்தான் தலையறுத்த பாசு பதன்காண்பராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண் கடித்தார் கமழ்கொன்றைக் கண்ணி யான்காண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: என் வினைகளை அழிப்பவனாய், ஏகம்பத்தில் உறைபவனாய், அணிகலன்களாக எலும்புகளையே அணிபவனாய், எல்லா உலக நிகழ்ச்சிகளையும் வகுத்து அமைப்பவனாய், மூவுலகங்களிலும் வியாபித்திருப்பவனாய், பஞ்சாதியாக முறையாக வழு ஏதுமின்றி வேதங்களை ஓதும் பிரமனின் ஐந்தாம் தலையை நீக்கிய பசுபதி என்ற அடையாளங்களை உடையவனாய், பராய்த்துறை. பழனம், பைஞ்ஞீலி இவற்றில் உகந்தருளியிருப்பவனாய்க் கொன்றைப் பூவினாலாய மார்பு - மாலை, முடிமாலை இவற்றை அணிபவனாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: இடித்தல் - அழித்தல், முடித்தல் - வகுத்தமைத்தல். எனவே, உலக நிகழ்ச்சிகள் யாவும் அவன் வகுத்தவகையே நிகழ்வன என்பதாம். ஐம்புரி என்பது 'பஞ்சாதி' என்னும் வேத உறுப்பினை. இஃது ஐம்பது சொல்லாற் புரிக்கப்பட்ட தாயினும், இப்பெயராற் கூறப்படுதல் வழக்கு. வேதத்தைப் படித்தான், பிரமன். பாசுபதன் - பசுபதியாதலை விளக்கும் அடையாளங்களை யுடையவன். கடி - புதுமை. 'கடிக்கொன்றைக் கமழ்தார் கண்ணியான்' என மாற்றிப் பொருள் கொள்க. தார், மார்பில் அணியும் மாலை. கண்ணி, முடியில் அணியும் மாலை. "கண்ணி கார்நறுங்கொன்றை; காமர்-வண்ண மார்பிற் றாருங்கொன்றை" எனவருதலுங் காண்க.
நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்ஞானப் பெருங்கடற்கோர் நாவாய் அன்ன பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்புரிசடைமேற் புனலேற்ற புனிதன் தான்காண் சாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் தான்காண்தன்மைக்கண் தானேகாண் தக்கோர்க் கெல்லாம் காரணன்காண் காளத்தி காணப் பட்டகணநாதன்காண் அவனென் கண்ணு ளானே. பொருளுரை: நாராயணாய், பிரமனாய், நான்கு வேதங்களையும் ஓதுபவனாய், ஞானப் பெருங்கடலின் அக்கரையை அடையச் செய்யும் படகு போன்ற நிறைவானவனாய்ப் புண்ணியனாய்ப் பழையோனாய், முறுக்குண்ட சடை மீது கங்கையை ஏற்ற தூயோனாய், எங்கும் இயங்குபவனாய்ச் சந்திர சூரியர்களை உடனாய் இருந்து செயற்படுப்போனாய், நற்பண்புகளில் தனக்கு உவமை இல்லாதானாய், மெய்யுணர்வுடையோருக்குத் தானே முதற்பொருளாகத் தோன்றுபவனாய்க் காளத்தியில் காட்சி வழங்கும் சிவகணத் தலைவனாகிய எம்பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: 'காப்பவன், படைப்பவன்' என்னும் பொருளுடையனவாய, "நாரணன், நான்முகன்" என்பன, முத்தொழில்களும், சிவபிரானுடைய தொழில்களே என்பதை அறிவுறுத்து நின்றன. எனவே, அவற்றுள் ஒரோவொரு தொழிலை நல்வினை மிகுதியாற் பெற்று நின்ற கடவுளரையும் சிவபிரானையும் ஒருவரேயாக மயங்கிக்கொள்ளுதல் வேண்டா என்பதாம். நாவாய்-மரக்கலம். ஞானத்தின் கரையை அடையச்செய்தலின் அக் கடற்கு நாவாய் அன்னவன் என்றருளினார். புண்ணியன்-அறவடிவினன். புராணன்-பழையோன்; யாவர்க்கும் முன்னோன். சாரணன்-எங்கும் இயங்குபவன். எல்லாவற்றையும் அறிபவன்; எங்கும் தோற்றுபவன். சந்திர சூரியர்களது தட்ப வெப்பங்களும், ஒளிகளும் இறைவனுடைய திருவருளின் பயனே யாதல்பற்றி, "சந்திரன்காண் கதிரோன் தான் காண்" என்றருளினார்; 'நின்வெம்மையும் விளக்கமும் ஞாயிற்றுள; நின்தண்மையும் சாயலுந் திங்களுள'. எனவே, 'மயக்க உணர்வுடையார்க்குத் தான் முதல்வனாய்த் தோன்றான்' என்பதாம்.
செற்றான்காண் என்வினையைத் தீயாடி காண்திருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார்க் குற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்உமையாள்நற் கொழுநன்காண் இமையோரேத்தும் சொற்றான்காண் சோற்றுத் துறையு ளான்காண்சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான்காண் காளத்தி காணப் பட்டகணநாதன்காண் அவனென் கண்ணு ளானே. பொருளுரை: என் தீவினைகளை அழித்துத் தீயின்கண் கூத்து நிகழ்த்தித் தன்னைத் தியானிப்பவர்களுக்கு நெருக்கமானவனாய், உமா தேவியின் கணவனாய், தேவர்கள் துதிக்கும் வேத வடிவினனாய், மன்மதனுடைய அம்பு செலுத்தும் ஆற்றலைச் சாம்பலாக்கக் கற்றவனாய், ஒற்றியூர், ஏகம்பம், சோற்றுத்துறை என்ற திருத்தலங்களில் உறை பவனாய்க் காளத்தியில் காணப்படும் கணநாதன் என்கண் உள்ளான். குறிப்புரை: தீ அடி - நெருப்பின்கண் நின்று ஆடுபவன்; சுடலைக் கண் சாம்பர்போல நெருப்பும் பரந்திருத்தல் அறிக. 'காடுடைய சுடலைப் பொடி பூசி'என்புழி இரண்டும் ஒருங்கு அருளிச் செய்யப்பட்டமை காண்க. 'தழலில் நின் றாடி' (பெரிய நாயகியம்மை பெருங்கழிநெடில் விருத்தம்- எனப் பிற்காலத்தாருங் கூறுதல் நோக்கத்தக்கது. உற்றான்-உறவினன். 'இமையோர் ஏத்தும் சொல்' என்புழிச் சொல் என்றது உருவகமாய், சொல்லே உருவாய் நிற்பவன் எனப் பொருள் தந்தது, 'அறிந்தோர் சொன்மலை' (தி.திருமுருகாற்றுப்படை- என்றாற்போல. சுறா வேந்தன்-மீனக் கொடியுடைய தலைவன்; மன்மதன். ஏ வலம்-அம்பின் வலிமை. 'கற்றான்' என்றது. 'நீங்கிற் றெறூஉங் குறுகுங்காற் றண்ணென்னுந்-தீயாண்டுப் பெற்றா ளிவள்' (குறள்- என்றாற்போலக் காதல்பற்றி இயற்கையைச் செயற்கையாக்கி அருளிய பான்மை வழக்கு.
மனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதி னுள்ளான்பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சி யுள்ளான்.காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: மனத்திலும் தலைமேலும் சொற்களிலும் உள்ளானாய், மனம் மெய்மொழிகளைச் செயற்படுத்தித் தன் திருவடிகளை வாயாரப்பாடும் தொண்டர் இனத்தானாய். தேவர்கள் தலை மேலானாய், ஏழுலகங்களையும் கடந்தவனாய், இவ்வுலகில் செவ்விதாகிய பொன் போன்ற நல்ல விளைவை நல்கும் குறிஞ்சி முதலிய நிலத்தில் உள்ளானாய், நறிய கொன்றைப் பூவில் உறைபவனாய், மலை நெருப்பு காற்று மேக மண்டலம் இவற்றில் உடனாய் இருந்து இவற்றைச் செயற்படுப்பவனாய்க் கயிலாயத்து உச்சி உள்ளானாகிய காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: 'மனத்தகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான்' என்றது, 'மனம், மொழி, மெய்' என்னும் முப்பொறிகளினும் நின்று அவற்றைத் தொழிற்படுத்துவோன் என்றருளியவாறு. இப்பால்-இவ்வுலகத்துள். செம்பொன் புனத்தகத்தான் - செவ்விதாகிய பொன்னையுடைய குறிஞ்சி நிலத்து உள்ளவன்; இங்ஙனம் கூறவே, இனம் பற்றி ஏனைய மூன்று நிலங்களும் கொள்ளப்படும். இனி இவ்வாறன்றி, 'செவ்விய பொன்போல்வதும், புனங்களில் உள்ளதும் ஆகிய' என்று உரைத்தலும் ஆம். இப் பொருட்கு, 'புனம்' என்றது முல்லை நிலத்தைக் குறித்ததாகவும், புனத்தகத்தான் என்புழி 'ஆன்' என்பதனை மூன்றன் உருபாகவும் கொள்க. 'புனத்தகத்தார்' எனவும் பாடல் ஓதுப. 'கொன்றைப் போதின் உள்ளான்' என்றது, கொன்றைப்பூ சிவபிரானுக்கு அடையாளப் பூவாதற் சிறப்புப் பற்றி, அதன்கண் விளங்கி நிற்பான் என்றவாறு. கனம் - மேகம்.
எல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்ஏகம்பம் மேயான்காண் இமையோ ரேத்தப் பொல்லாப் புலனைந்தும் போக்கி னான்காண்புரிசடைமேற் பாய்கங்கை பூரித் தான்காண் நல்லவிடை மேல்கொண்டு நாகம் பூண்டுநளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற கல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: ஏனைய பொருள் தோன்றுதற்கு முன்னும் இருப்பவனாய், ஏகம்பத்து விரும்பி உறைபவனாய், தேவர்கள் துதிக்கப் பொறிவாயில் ஐந்து அவித்தவனாய், முறுக்கேறிய சடையின் மேல் பாய்ந்த கங்கையை அதன்கண் நிரப்பியவனாய், பெரிய காளைமீது ஏறிப் பாம்புகளைப் பூண்டு குளிர்ந்த மண்டை யோட்டை ஏந்தி, நாணத்தைக் காப்பதொரு பொருளாகத்துறந்தார் அணியும் காவியாடை உடுத்துக் காபாலம் என்னும் கூத்தாடும் காளத்திநாதன் என் கண் உள்ளான். குறிப்புரை: 'தோன்றாமே' என்புழி, நிற்க' என ஒரு சொல் வருவிக்க. 'எல்லாம் தோன்றாமே முன் தோன்றினான்' எனக் கூட்டுக. 'தோன்றினான்' என்றது, 'உள்ளான்' என்பதையும், 'புலன் ஐந்தும் போக்கினான்' என்றது, இயல்பாகவே பாசங்களின் நீங்கினமையையுமே குறித்தன. 'பாசத்துட் பட்டவராகிய இமையோர் ஏத்துமாறு, பாசம் இலனாய் நிற்பவன்' என்றருளியவாறு. பூரித்தல் - நிரப்புதல். நளிர் - குளிர்ச்சி; இரத்தம் முதலிய தாதுக்கள் இல்லாமை. 'ஓர் நாணாய்' என்பது, 'நாணத்தைக் காப்பதொரு பொருள்' என்னும் அளவாய் நின்றது. அற்ற கல்லாடை - துறந்தமையைக் காட்டும் காவியுடை. காபாலி - 'காபாலம்' என்னும் கூத்தையுடையவன். 'கபாலி' என்பது நீட்டலாயிற்று என்றலுமாம்.
கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண் எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண் திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண் கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: நீலகண்டனாய், எமக்குக் காட்சி வழங்குபவனாய், அருளால் ஏற்ற பெற்றியின் பல்வேறு வடிவு உடையவனாய், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூவினை அணிந்தவனாய், ஒளிவீசும் பவள வண்ணனாய், ஏகம்பனாய், எட்டுத் திசைகளும் தானேயாய பண்பினனாய், முப்புரங்களையும் தீக்கொளுவியவனாய். நெருப்பிடையே கூத்து நிகழ்த்துபவனாய், என் உள்ளத்திலிருந்து தீவினைகளை அழிப்பவனாய், யானைத் தோலைப் போர்த்து மகிழ்ந்து காபாலக் கூத்து ஆடுபவனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: கரி உருவு-கரிபோன்ற நிறம்; கரிந்த உருவம் எனலுமாம். 'எம் கண் உளான்' என்றது 'அடியவர் கண்ணில் உள்ளான்' என்றதாகக் கொள்க. கண்டன்-வரையறைப்பட்டவன்; 'அருளால்' ஏற்ற பெற்றியிற் பல்வேறு வடிவுடையவனாய் நிற்பவன்' என்றவாறு. எரி பவளவண்ணன்-நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன். 'குணம்' என்றது முற்றும் உணர்தலை; உணர்தல் கூறவே, இயக்குதலும் தானே பெறப்படும். 'தீர்த்திடும்' என்னும் எச்சம், 'சிந்தையான்' என்பதன் இறுதிநிலையோடு முடியும். எனவே, தீர்த்திடுவான்' எனவும், 'சிந்தையான்' எனவும் அருளியவாறாம்.
இல்லாடிச் சில்பலிசென் றேற்கின் றான்காண்இமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின்றான்காண் வில்லாடி வேடனா யோடி னான்காண்வெண்ணூலுஞ் சேர்ந்த அகலத் தான்காண் மல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்மலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள் கல்லாலின் கீழிருந்த காபா லிகாண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: இல்லங்கள் தோறும் சென்று அவர்கள் வழங்கும் சிறு அளவினவாகிய உணவுகளை ஏற்கின்றவனாய், தேவர்கள் தொழுது வழிபடப்படுகின்றவனாய், வில்லை ஏந்தி வேடன் உருக்கொண்டு பன்றிப்பின் ஓடியவனாய். பூணூலும் பூண்ட மார்பினனாய், வலிய திரண்ட தோளில் மழுப்படை ஏந்தியவனாய், பார்வதி கணவனாய், மகிழ்வோடு ஒரு காலத்தில் கல்லால மரத்தின் கீழ்த் தென் முகக் கடவுளாய் இருந்தவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய்க் காளத்தியில் உகந்தருளியிருக்கும் சிவபெருமான் என்கண் உள்ளான்.குறிப்புரை: 'இல் ஆடிச் சென்று சில்பலி ஏற்கின்றான்' என இயைக்க. இல் ஆடி-இல்லங்கள் தோறும் நடந்து. சில் பலி - அட்டனவும் அடுதற்கு உரியனவும் ஆகிய பொருள்கள். வில்லாடி - வில் விளையாடல் செய்து. அகலம் - மார்பு. மல் ஆடு - வலிமை பொருந்திய. மழு வாள் - மழுவாகிய படைக்கலம்; கையில் ஏந்துவனவற்றைத் தோளின்கட் சார்த்துதலும் உண்டாகலின், மழுவைத் தோளின்கண் உளதாக அருளினார்.
தேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்திருவேகம் பத்தான்காண் தேனார்ந் துக்க ஞானப்பூங் கோதையாள் பாகத் தான்காண்நம்பன்காண் ஞானத் தொளியா னான்கண் வானப்பே ரூரு மறிய வோடிமட்டித்து நின்றான்காண் வண்டார் சோலைக் கானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: வண்டுகள் நுகரும் தேனை உடைய கொன்றை சூடியாய்த் திரு ஏகம்பத்தனாய், தேன் ஒழுகும் பூக்களை அணிந்த ஞானப்பூங்கோதை அம்மையை இடப்பாகமாகக் கொண்டவனாய், நமக்கு இனியவனாய், ஞானப் பிரகாசனாய், ஊழியிறுதியில் வானமும் உலகும் அழியுமாறு விரைந்து ஒடுக்க வல்லவனாய், வண்டுகள் பொருந்திய சோலைகளை உடைய திருக்கானப்பேரூரில் உறைபவனாய் நீலகண்டனாய்க் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: 'தேனப் பூ' என்பதில் அகரம் சாரியை. 'உண்ட' என்னும் பெயரெச்சம், அதன் காரணந் தோன்ற நின்று, உண்ணுதற்குச் சென்ற எனப் பொருள் தந்து நின்றது, 'அறிவறிந்த மக்கட் பேறு' (குறள். என்புழிப் போல, இவ்வாறருளினாரேனும், 'கொன்றையினது வண்டு உண்டதேனப் பூவினன்' என்றல் திருவுள்ளமாகக் கொள்க. தேன் ஆர்ந்து உக்க-தேன் நிரம்பித் ததும்பிய. 'உக்க பூ' என இயைக்க. "பூங்கோதையாள்" என்பது ஒருசொற் றன்மையாய், 'மகடு' என்னும் பொருள் உடைதாய் நின்று, "ஞானம்" என்னும் அடையடுத்து நின்றது. 'ஞானமே வடிவாகிய அம்மை' என்றருளியவாறு. 'ஞானப் பூங்கோதை' என்பதே இத்தலத்து அம்மைக்குப் பெயராக வழங்குதல் இங்கு அறியற்பாலது. 'ஞானத்து ஒளியானான்' என்புழி நின்ற ஞானம், உயிரறிவு. அதன்கண் ஒளியானான் என்றருளியது. அவ் அறிவுக்கு அறிவாய் நின்று அறிவித்தலை. 'வானப் பேரூர்' என்புழி, ஊர் என்றருளியது, உலகத்தை. உம்மை சிறப்பும்மை. மறிய-அழிய. ஓடி - விரைந்து, 'மடித்து நின்றான்' எனற்பாலது, 'மட்டித்து நின்றான்' என விரித்தலாயிற்று; எல்லா உலகத்தையும் எஞ்சாது ஒடுக்க வல்லவன் என்பது பொருள். எல்லாம் ஒடுங்கியபின் ஆடல் புரிந்து நின்றான்' என்றலுமாம். கானப்பேர், பாண்டிநாட்டுத் தலம்.
இறைவயன்காண் ஏழுலகு மாயி னான்காண்ஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண் குறையுடையார் குற்றேவல் கொள்வான் தான்காண்குடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண் மறைவுடைய வானோர் பெருமான் தான்காண்மறைக்காட் டுறையு மணிகண் டன்காண் கறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: யாவருக்கும் முதல்வனாய், ஏழுலகும், ஏழ் கடலும் இவற்றைச் சுற்றிய மலைகளும் ஆகிப் பலகுறைபாடுகளையும் உடைய உயிர்கள் தனக்குச் செய்யும் குற்றறேவல்களை ஏற்றுக் குடமூக்குத் தலத்திலுள்ள கீழ்க்கோட்டத்தை விரும்பி, வேதம் ஓதும் வானோருக்கும் தலைவனாய்த் திருமறைக் காட்டுத் தலத்தில் தங்கும் நீலகண்டனாய்க்கறைக் கண்டனாய்க் காபாலக்கூத்து ஆடும் காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: இறையவன் - யாவர்க்கும் முதல்வன். குறைஉடையார் - பல்வகையான குறைபாடுகளை உடைய மக்கள். குற்றேவல் - சிறிய தொண்டு. கொள்வான் - குறைநோக்கி ஒழியாது, மாட்டாமை நினைந்து ஏற்றுக்கொள்பவன், மறை உடைய-வேதங்கள் தமக்குப் பொருளாக உடைய,என்க; 'வேதங்களிற் சொல்லப்பட்ட பலதேவர்' என்றபடி. 'வானோர்' எனவே, உயிர்வகையினர் என்பதும், பெருமான் எனவே, பரம்பொருள் என்பதும் பெறப்படும். படவே, வேதங்களுள் ஒரோவிடத்தில் அவர்களைப் பரம்பொருள் போலக் கூறுதல், ஒரோ ஒரு கருத்துப் பற்றி எனவும், சிவபிரானே பரம்பொருள் என்பதே வேதத்தின் துணிபு எனவும் தெளிவித்தவாறாம்.
உண்ணா வருநஞ்ச முண்டான் தான்காண்ஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காணப் பண்ணாரப் பல்லியம் பாடி னான்காண்பயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண் அண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்அடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண் கண்ணாரக் காண்பார்க்கோர் காட்சி யான்காண்காளத்தி யானவனென் கண்ணு ளானே. பொருளுரை: பிறர் உண்ண இயலாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழித் தீயை ஒப்ப அழிப்பதனைச் செய்பவனாய்ப் பண்களுக்குப் பொருந்தப் பல வாச்சியங்களை இயக்கிப் பாடியவனாய், தான் ஓதிய நான்கு வேதங்களில் கூறப்பட்ட இறைமைப் பண்புகளை உடையவனாய், அண்ணாமலையானாய், அடியார் கூட்டம் தன் திருவடிகளைத் தொழுது போற்றுமாறு அருளுபவனாய், தன்னை மனக்கண்களால் காண்பவர்களுக்கு அரிய காட்சிப் பொருளாய் இருப்பவனாய் உள்ள காளத்திப் பெருமான் என்கண் உள்ளான். குறிப்புரை: உண்ணா-உண்ணலாகாத, அரு நஞ்சம் - மீட்டல் இயலாத பெருவிடம், அதனை உண்டான் என்றருளினமையால், அவனது பேராற்றலுடைமையையும், பேரருளுடைமயையும் விதந்தருளிச் செய்தவாறு. "ஊழித்தீ அன்னான்" என்றது, நிறமாகிய பண்பும், முழுவதூஉம் அழித்தலாகிய தொழிலும் பற்றி வந்த உவமை உகப்பார் - விரும்புவார்; என்றது தாருகாவனத்து முனிவர் மனைவியரை. ஆர-பொருந்த 'பண்பாடினான்' என இயையும். பல் இயம்-வீணை, துடி முதலிய வாச்சியங்கள், 'பல்லியத்தோடு' என உருபுவிரிக்க. 'எஞ்சிய பொருள்களை ஏமுறநாடி' (தி.திருமுருகாற்றுப்படை. என்றாங்கு, வெளிப்படாது நிற்கும் மறைகளும் உளவாதலின் வெளிப்பட்டு வழங்கும் நான்மறைகளை "பயின்ற நால்வேதம்" என்றருளிச் செய்தார். வேதத்தின் பண்பு என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகையை "காட்டதுயானை" என்பதுபோல, வாழ்ச்சிக்கிழமையாகக்கொண்டு, 'வேதத்தின்கண் விளங்கும் பண்பு' என உரைக்க. 'பண்பு' என்றது, இறைமைக் குணங்களை. அவை சத்தாதல், ஏகனாதல், பலவுந் தானாதல் முதலியன. கண் ஆரக் காணுதலாவது, அன்பாகிய காரணத்தால், கண்ணுக்கு நிறைந்த, இன்பப் பொருளாகக் காணுதல். அங்ஙனங் காண்பாரது கண்ணையும், கருத்தையும் தன்னை யன்றிப் பிறிதொன்றையுங் காணாதவாறு ஈர்த்து நிற்றலை, 'ஓர் காட்சியான்' என்றருளிச் செய்தார். "கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியுள் அண்டா""மேவினார் பிரியமாட்டா விமலனார்" (தி.கண்ணப்ப நாயனார் புராணம் - என்ற இத்திருமொழிகட்டு எல்லாம் இலக்கியமாய் நின்றது, கண்ணப்ப நாயனார் அநுபவமேயாம். அவர் காளத்தியப்பரைக் கண்ட பின்னர் தம் உடம்பைத் தானுங் காணா தொழிந்தமை அறிக.
திருஆமாத்தூர் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் திருவதிகை வீரட்டத்திலிருந்து பல்லவ மன்னனைச் சைவனாக்கிய பின்னர்ப் பல தலங்களையும் வணங்க நினைந்து திருவெண்ணெய் நல்லூர் மேவியிறைஞ்சி. திருவாமாத்தூர் சென்று, பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம் (தி.திருநாவு. புரா..குறிப்பு: இத் திருப்பதிகம், கடவுள் வாழ்த்துப் பாடாண் பகுதியுள், கடவுள்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்துப் பெருந்திணை வகையாக அருளிச் செய்யப்பட்டது. துறை, தேறுதலொழிந்த காமத்து மிகுதிறம். அஃதாவது. ஆமாத்தூர் இறைவர் பிச்சைக்கு வர, பிச்சை இடச் சென்று அவரை எதிர்ப்பட்டு, வேட்கை தோன்றி, அவரது நோக்கினைத் தெளிந்து, தனது நோக்கினால் உடம்பட்டு அவர்க்கு உரியவள் ஆயினாள் ஒருத்தி. பின்பு அவர் தன்னை வரையாது நீங்குதல் கண்டு தெளிவொழிந்து, பலரொடும் முறையிட்டு அவரைக் கூட்டுவிக்குமாறு வேண்டியது. பேதைமை காரணமாகப் பொருளல்லவற்றையேபொருளென்றுணரும் மருள்நிலை தவங்காரணமாக நீங்கி அருள்நிலை எய்திய ஞான்று, இறைவன் வெளிநின்று அருள் வழங்கப் பெற்று, அவ்வருளே கண்ணாக அவனை யறிந்து அன்பு செய்து, உடல் பொருள் ஆவியனைத்தும் அவனுடையனவாக்கித் தம்மை இழந்து நின்ற அடியவர், பண்டைப் பயிற்சி வயத்தால் அந்நிலையின் நிற்கப் பெறாது முன்னை மருள் நிலை தோன்றியவழி அதனைப் பொறாது வருந்தி, அது நீங்குமாறு இறைவனை அருளுவிக்க அடியவரை வேண்டுதல் இதன் உண்மைப் பொருள். அவர், அன்பரை வேண்டுமாற்றினை, "எந்தை யிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்றருளிச் செய்தாற் போலும்திருமொழிகளிற் காண்க. திருத்தாண்டகம் ப.தொ.எண்: திக எண்: 9 வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்றுவலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக் கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்கடியதோர் விடையேறிக் காபா லியார் சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற அண்ணலார் போகின்றார் வந்து காணீர்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: காபாலக் கூத்தாடும் தலைமையை உடைய பெருமான் தாளத்தொடு பொருந்தப்பாடும் இசைகள் பாடிக் கொண்டு வந்து நின்று வற்புறுத்தி நம்வளைகளைக் கவர்ந்தவராய், நாம் மனம் நெகிழும் வகையாலே நம்மைத் தம் கண்களாகிய அம்புகளாலே துன்புறுத்திக் காமத்தீ மூண்டெழுமாறு பேசி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, பலவகை நறுமணப் பொடிகளையும் செறிவாகப் பூசிக்கொண்டு, விலங்குகளின் தோலை உடுத்துப் பூணூல் அணிந்து, தம் பேரழகு தோன்றச் செல்கின்றார். ஆமாத்தூர்த் தலைவராகிய அவர் அழகினை வந்து காணுங்கள். குறிப்புரை: வண்ணங்கள் - தாளத்தொடு பொருந்தப் பாடும் இசைகள். இவற்றை இசை நூலார், 'திறம்' என்ப. வலி செய்தல்-வலாற்காரம் செய்தல். அஃது இவ்வாறென்பது அடுத்துக் கூறப்படுகின்றது. "வகையால்", 'நாம் மனம் நெகிழும் வகையால்' என்க. கனல-காமத்தீ மூண்டெழுமாறு. கண்ணம்பால் எய்தமையும், கனலப் பேசினமையுமே வலாற்காரஞ் செய்தனவென்க. சுண்ணங்கள்-வெண்பொடிகள். பொடியாயின பொருள்கள் பலவாகலின், பொடிகளும் பலவாயின. துதைய-நெருங்க; 'திருமேனி மூழ்க' என்றவாறு. தோன்றுவது திருவுருவமாகக் கொள்க. அடுக்கு மிகுதி பற்றி வந்தது; 'நன்கு தோன்ற' என்றபடி. அண்ணலார்-தலைவர்; தந்நிகரில்லாதவர். "அண்ணலார்" என்புழி 'ஒருவர்' என்பது வருவிக்க. அழகியர்-நல்லியல்புடையவர். ஏகாரம் தேற்றம். "கண் அம்பால் நின்றெய்து கனலப்பேசி..... போகின்றார் வந்து காணீர்" என்றது, வஞ்சித்து வரையாது நீங்குகின்றார்; இதனை நீவிர் காண்மின்கள்' என்னுங் கருத்தினாலாகலின், 'அண்ணலார்' என்றதும், 'அழகியரே' என்றதும் குறிப்பினாற் கூறிய நகைமொழியாதலறிக. பன்மையாற் கூறியதும் அது பற்றி. 'வந்து காணீர்" என்பதனை இறுதிக்கண் வைத்துரைக்க. காண்போர் தடுத்து நிறுத்துவாராதல் பயன், 'மற்றுப் பற்றறுத்துத் தம்மையே பற்றாகப் பற்றுமாறு ஆண்டுகொண்ட அடியவர்களது பற்றினை முற்றுங் களையாது தளரவிடுகின்றார்; 'இஃது இவர்க்குத் தக்கது போலும்!' என்பது உண்மைப் பொருள். இதனை, "சிந்தையைத் திகைப்பியாதே செறிவுடை யடிமைசெய்ய எந்தைநீ யருளிச்செய்யாய் யாதுநான் செய்வதென்னே." (தி. ப. பா. எனவும். "நின்னையெப் போதும் நினையவொட் டாய்நீ நினையப்புகின் பின்னைஅப் போதே மறப்பித்துப் பேர்த்தொன்று நாடுவித்தி." (தி. பா. பா. எனவும் தம் நிலைக்கு இரங்கியும், "உன்னைஎப் போதும் மறந்திட் டுனக்கினி தாவிருக்கும் என்னைஒப் பாருள ரோசொல்லு வாழி இறைவனே"என, தம்மைத் தாமே நகைத்தும் அருளிச்செய்தன போன்ற திருமொழிகள் நோக்கியுணர்க. இவையெல்லாம் வருகின்ற திருப்பாடல் கட்கும் ஒக்கும். ஐயனார்-முதல்வனார்.
வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலைவிரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக் கந்தாரந் தாம்முரலாப் போகா நிற்கக்கறைசேர் மணிமிடற்றீ ரூரே தென்றேன் நொந்தார்போல் வந்தென தில்லே புக்குநுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில் அந்தா மரைமலர்மேல் அளிவண்டி யாழ்செய்ஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. பொருளுரை: தீயிலிடப்பட்டு வெந்து போனவர் தம் வெள்ளிய சாம்பலைப் பூசி, வெண்ணிற மாலையைப் பரந்த சடையில் சூடி, வீணை ஏந்திக் காந்தாரப் பண்ணைப் பாடிக்கொண்டு எம்பெருமான் சென்று கொண்டிருக்க, அவரை நோக்கி 'விடக்கறை வெளிப்பட்ட நீலகண்டரே! நும்ஊர் யாது?' எனறு வினவினேன். பசியினால் வருந்தியவரைப் போல வந்து என் வீட்டினுள் புகுந்து 'அசைகின்ற அழகிய இடையினை உடைய இளையவளே! அழகிய தாமரை மலர்மேல் வண்டுகள் யாழ் போல் ஒலிக்கும் ஆமாத்தூரே நம்மூர்' என்று சொல்லிப் பெருமான் போய்விட்டார்.குறிப்புரை: வெந்தார் - வெந்தவரது. வெள்ளை மாலை, கொக்கிறகு ஊமத்தை முதலியவற்றாலாகிய மாலை. காந்தாரம், ஒருபண்; கந்தாரம் எனக் குறுக்கலாயிற்று. முரலுதல் - பாடுதல், 'பிச்சையிடச் சென்ற யான் மனநெகிழ்வுற்று, அவர் பிச்சை ஏலாதே பாடிச் செல்லுதல் பற்றி நகைத்துரைப்பேன் போல ஊர் ஏதென்றேன்' என்க. நோதல் - பசியினாலாயது. வாயிலில் நிற்றல் முதலிய வற்றினின்று பிரித்தமையின், 'இல்லே' என்னும் ஏகாரம் பிரிநிலை. 'இல்லே புக்கு' என்றமையான், பிறவாற்றானும் தெளிவித்து அவளைத் தமக்கு உரியவளாக உடம்படுவித்தமை பெறப்படும். 'நுடங்கு ஏர் இடை மடவாய்' என்றது நலம் பாராட்டியது. அளி வண்டு - 'அளி' என்னும் பெயர்த்தாகிய வண்டு; 'அளிக்கத்தக்கவண்டு' என்பது உடனிலைப் பொருள். 'அளிவண்டியாழ்செய் ஆமாத்தூர்' என்றதினின்றும், 'அருள்பண்ணத் தக்கார்க்கு அருள் பண்ணுவேம் யாம்' என்னும் இறைச்சிப்பொருள் தோன்றியது. 'ஆமாத்தூர் என்று போயினார்' என்றது. 'ஊரேது' என்று வினாவிய எனது கருத்தினை யறிந்து அதற்கு உடம்படுவார்போல விடைகூறி, அக்கருத்தை முற்றுவியாதே போயினார் என்றபடி. கருத்து வரைந்து கோடல். 'அவரைக் கூட்டுவியுங்கள்' என்பது குறிப்பெச்சம்.
கட்டங்கந் தாமொன்று கையி லேந்திக்கடிய விடையேறிக் காபா லியார் இட்டங்கள் தாம்பேசி யில்லே புக்குஇடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர் பட்டிமையும் படிறுமே பேசா நின்றார்பார்ப்பாரைப் பரிசழிப்பார் போல்கின் றார்தாம் அட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: கையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி, விரைந்து செல்லும் விடையை இவர்ந்து, காபாலக்கூத்தாடும் பெருமான் வேட்கையொடு பொருந்திய சொற்களைப் பேசியவாறே வீட்டிற்குள் புகுந்து வழங்கிய உணவையும் ஏற்றுக்கொள்ளாது, வீட்டை விடுத்துப் போதலையும் செய்யாது நெறிப்படாதனவும் வஞ்சனையை உடையனவுமாகிய செய்திகளையே பேசிக்கொண்டு தம்மை நோக்கும் மகளிரின் நிறை என்ற பண்பினை அழிப்பவர் போலக் காணப்படுகின்றார். வழங்கிய சிலவாகிய உணவுகளையும் ஏலாதவராய்த் தம் மனக்கருத்து இன்னது என்று வெளிப்படையாகக் கூறாதவராய் விளங்கும் ஆமாத்தூர்த் தலைவர் அழகியர். குறிப்புரை: இட்டங்கள் - வேட்கையொடு பொருந்திய சொற்கள். 'போவாரல்லர்' என்னும் எதிர்காலச் சொல், நிகழ்காலத்தின் கண் வந்த காலமயக்கம். பட்டிமை-நெறிப்படாமை. படிறு-வஞ்சனை. இவை இரண்டும் இத்தன்மையவான சொற்களைக் குறித்தன. 'போல்கின்றார்' என்பதனை ஒப்பில் போலியாக்கி, 'பரிசழிக்கின்றார்' என்றவாறாகக் கொள்க. 'இடக் கொள்ளார்; பேசாநின்றார்; போல்கின்றார்' என்பன, 'வந்து போகின்றானைக் கண்டேன்' என்புழி நிற்கும் நிகழ்காலச் சொற்போன்ற இறப்பில் நிகழ்வாய், 'புக்கு' என்னும் செய்தெனெச்சத்தோடு இயைந்தன. பார்ப்பார்-தம்மை நோக்குவார். பரிசு - நிறை. 'போல்கின்றார்' என்பதன்பின், 'அதனால் யான் என் பரிசழிந்தேன்; பின்னர் வாளாபோகின்றார்' என நின்ற இசையெச்சம் வருவிக்க. அட்டிய - இட்ட. 'கொள்ளார் விள்ளார்' என்றது பெயர்த்துரை. ஆண்டும், 'நீங்குகின்றார்' என்பது எஞ்சி நின்றது, இவை அனைத்தையும் வினைப் பெயராக்கி, ஆமாத்தூர் ஐயனார் என்பதனோடு இயைத்து, 'இவ்வாறு செய்யும் இவர் அழகியரே' என இரங்கியவாறாக உரைக்க. கொள்ளார், விள்ளார் என்பன சொல்லுவாளது குறிப்பினால் இறந்தகால மாயின வென்க.
பசைந்தபல பூதத்தர் பாட லாடல்படநாகக் கச்சையர் பிச்சைக் கென்றங் கிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனிஇமையாமுக் கண்ணினர் நால்வே தத்தர் பிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்பிரிவறியாப் பிஞ்ஞகனார் தெண்ணீர்க் கங்கை அசைந்த திருமுடியர் அங்கைத் தீயர்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: பாடுதலையும் கூத்தாடுதலையும் விரும்பிய பல பூதங்களை உடைய ஆமாத்தூர்த் தலைவர் படம் எடுக்கும் பாம்பைக்கச்சையாக உடுத்தித் தீப் போன்ற சிவந்த மேனியராய், இமைக்காத முக்கண்களை உடையவராய் நான்கு வேதங்களையும் ஓதுபவராய்த் திருநீற்றை நீரில் குழைத்து அணிந்தவராய்த் தம் உடம்பின் ஒரு பாகத்தை உமாதேவி நீங்காத தலைக்கோலத்தை உடையவராய், தெளிந்த நீரை உடைய கங்கை தங்கும் திருமுடியினராய்த் தீ ஏந்திய கையினராய், அழகியராய்க் காட்சி வழங்குகின்றார். குறிப்புரை: பசைந்த - விரும்பிய. கச்சையர் என்புழி நின்ற அர் என்னும் இறுதிநிலை, பாடல் ஆடல் என்பதனோடும் இயையும். இசைந்தது-இசையச் செய்துகொண்டது. எரியினது மேனிபோலும் மேனியை, எரியின்மேனி என்றது உபசாரம். பிசைந்த - வடித்த. அசைந்த - தங்கிய. இவ்வாற்றான் அழகியரே என்க. அழகியரே என்றது, ஈண்டு, 'பார்ப்பாரைப் பரிசழித்தற்கு உரியரேயாகின்றார்; அதனால், என்பரிசினையும் அழித்துச் செல்கின்றார்' என இரங்குதற் பொருட்டாய் நின்றது. இது, வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும்.
உருளுடைய தேர்புரவி யோடும் யானையொன்றாலுங் குறைவில்லை யூர்தி வெள்ளே றிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்இமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம் பொருளுடைய ரல்லர் இலரு மல்லர்புலித்தோ லுடையாகப் பூதஞ் சூழ அருளுடைய அங்கோதை மாலை மார்பர்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: சக்கரங்களை உடைய தேர், குதிரை, யானை, என்பவற்றைக் குறைவறப் பெற்றிருப்பினும் வெள்ளிய காளையையே ஊர்தியாகக் கொண்டு, இருண்ட கழுத்தினராய், சிவந்த தீயின் நிறத்தினராய், பொருள் உடையவர் அல்லர் என்றோ பொருள் இல்லாதவர் அல்லர் என்றோ கூற முடியாத நிலையினராய்ப் புலித்தோலை உடையாக அணிந்து, பூதங்கள் தம்மைச் சுற்றி இருக்குமாறு, மாலை சூடிய மார்பினராய், அருளுடையவராய் உள்ள இமையவர்கள் வழிபட்டுத் துதிக்கும் இறைவராகிய ஆமாத்தூர்த் தலைவர் அழகியவர். குறிப்புரை: ஒன்றாலும் குறைவில்லை என்புழி, ஆயினும் என்பது எஞ்சிநின்றது. பிச்சைக் கோலம் பூண்டமையின் பொருளுடையரல்லர் எனவும், இமையவர்கள் தொழுதேத்த நின்றமையின், இலரும் அல்லர் எனவுங்கூறினார்; 'தானாளும் பிச்சை புகும்போலும் தன்னடியார் வானாள மண்ணாள வைத்து' என்றதுங் காண்க.அருளுடைய என்பது, மார்பர் என்பதன் இறுதிநிலையோடு முடியும். கோதை, மாலையின் வகை.
வீறுடைய ஏறேறி நீறு பூசிவெண்டோடு பெய்திடங்கை வீணை யேந்திக் கூறுடைய மடவாளோர் பாகங் கொண்டுகுழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து பாறுடைய படுதலையோர் கையி லேந்திப்பலிகொள்வா ரல்லர் படிறே பேசி ஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: கங்கையைச் சடைமுடியில் கொண்ட எம் தலைவராகிய ஆமாத்தூர் ஐயர் நீற்றினைப் பூசிக் காதில் வெள்ளிய தோட்டினை அணிந்து இடக்கையில் வீணையை ஏந்தி இடப் பாகமாக உமாதேவியைக் கொண்டு காதுகளில் அணிந்த குழை அசையக் கொடுகொட்டிப் பறையை ஒலித்துக் கொண்டு பருந்துகள் புலால் நாற்றம் உணர்ந்து அணுகும் மண்டை ஓட்டினை ஒரு கையில் ஏந்தி, ஆற்றல் மிக்க காளையை இவர்ந்து வந்து, பிச்சைபெறாமல் வஞ்சனையாகிய சொற்களையே பேசும் அழகர் போலும். குறிப்புரை: சங்கினால் ஆயினமையின், வெண்தோடாயிற்று. 'இடக்கை' என்பது மெலிந்து நின்றது. இடப்பக்கத்திற்கையில் 'வீணை ஏந்தி' என்றுரைத்தலுமாம். 'கொடுகொட்டி' என்பது, சிவபிரான் ஆடிய ஒரு கூத்து. அஃது ஈண்டு ஆகுபெயராய் அதற்கேற்ப அடிக்கப்படும் வாச்சியத்தைக் குறித்தது. படுதலை - பட்டபோவாரல்லர் என்பதற்கு உரைத்தவாறே உரைக்க.
கையோர் கபாலத்தர் மானின் தோலர்கருத்துடையார் நிருத்தராய்க் காண்பார் முன்னே செய்ய திருமேனி வெண்ணீ றாடித்திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி மெய்யொரு பாகத் துமையை வைத்துமேவார் திரிபுரங்கள் வேவச் செய்து ஐயனார் போகின்றார் வந்து காணீர்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: கையில் மண்டை யோட்டை ஏந்தி, மான் தோல் உடுத்து, பகைவருடைய மும்மதில்களையும் தீயில் வேவச் செய்து, காண்பார் முன் கூத்தாடும் கருத்துடையவராய், தலைவராகிய பெருமான் செய்ய திருமேனியிலே வெள்ளிய நீற்றினைப் பூசித் திகழும் சிவந்த சடைமேல் திங்களைச் சூடி, உடம்பின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டு, அழகிய தோற்றத்தோடு போகின்றார். அந்த ஆமாத்தூர்த் தலைவரை வந்து காணுங்கள்.குறிப்புரை: கருத்து - பிச்சையேற்றலன்றி மற்றோர் எண்ணம்; அது, மகளிரை நிறையழியச் செய்தல். 'நிருத்தராய்' என்புழி நின்ற 'ஆய்' என்பது, 'கபாலத்தர்' முதலியவற்றோடும் இயையும். 'ஆடி' என்பதனை, 'ஆட' எனத் திரிக்க. அன்றிச் சினைவினை முதன்மேல் நின்றதுமாம். ஆடுதல் - மூழ்குதல். சடைக்குப் புன்மை, உலகினரால் விரும்பிக் கொள்ளப்படாமை.
ஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளேறொற்றியூர் உம்மூரே யுணரக் கூறீர் நின்றுதான் என்செய்வீர் போவீ ராகில்நெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர் என்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்இருக்குமூ ரினியறிந்தோம் ஏகம்பமோ அன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோடழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: உமக்குக் குறை ஒன்றும் இல்லாதாகவும் காளையை வாகனமாகக் கொண்டு ஒற்றியூரை உம் ஊராகக் கொண்ட காரணத்தைக் கூறுகின்றீர் அல்லீர். ஒரு செயலும் செய்யாமல் நின்று கொண்டிருக்கின்றீர். நீர் எம்மை விடுத்துப் போகும் போது நும் நெற்றிக் கண்ணைக் காட்டி எங்கள் அடக்க குணத்தைக் கைப்பற்றிச் செல்கின்றீர். எல்லா நாள்களும் இப்படியே எங்களுக்குத் துன்பம் செய்கின்றீர். நீர் இருக்கும் ஊரை இப்போது அறிந்து விட்டோம். தலைவராகிய தாங்கள் எம்மை அழைத்துச் செல்லாமல் போகின்ற இடம் ஏகம்பமோ? ஆமாத்தூர்த் தலைவராகிய தாங்கள் எல்லா நிலையிலும் அழகியரே. குறிப்புரை: "ஒன்றாலுங் குறைவில்லை" என்பதன்பின், 'என்பது ஆக' என்னும் முற்றுத்தொடர் வருவிக்க. 'உம் ஊரே' என்புழி நின்ற ஏகாரம், வினாப்பொருட்டு. அஃது 'ஒற்றியூர்' என்பதனோடு பிரித்துக் கூட்டப்பட்டு, வெள்ளேறு என்பதனோடும் இயையும். 'உம்' என்பதும் 'ஊர்தி' என்பதனோடும் இயையும். என்செய்வீர் என்றது, 'எம்மை வரையமாட்டீர்' என்றவாறு. 'அறிந்தோம்' என்றது யாமே அவண் வந்து சேர்வோம் என்னும் குறிப்பினது. ஏகம்பமோ என்னும் சிறப்போகாரம், அஃது எம்மால் நன்கறியப்பட்டதே என்பதுணர்த்தி நின்றது. 'எம்மோடு அன்றித்தான் போகின்றீர்; போவீராகில்' என இயைத்து, கொண்டீர் என்பதன்பின் வைத்துரைக்க. அடிகள் என்றதும், 'ஐயனாரே' என்றதும் விளி. இத் திருப்பாடல், நீங்கிச் செல்கின்றாரை எதிர்பெய்து கொண்டு கூறியது.
கல்லலகு தாங்கொண்டு காளத் தியார்கடிய விடையேறிக் காணக் காண இல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சையென்றாருக் கெதிரெழுந்தே னெங்குங் காணேன் சொல்லாதே போகின்றீர் உம்மூ ரேதுதுருத்தி பழனமோ நெய்த்தா னமோ அல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: காளத்திப் பெருமான் கல்லலகு என்ற வாச்சியத்தைக் கையில் கொண்டு, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, எல்லோரும் காணும் வண்ணம் எம் வீட்டிற்குள் தாமே புகுந்து, 'பிச்சை இடுமின்' என்று கூறினாராகப் பிச்சை கொண்டு வந்து பார்க்கும் போது, அவரை வீட்டினுள் எங்கும் காணேனாக, 'ஒன்றும் சொல்லாதே வீட்டை விடுத்துப் போகின்றவரே! உம் ஊர் துருத்தியோ, பழனமோ, நெய்த்தானமோ யாது? என்று யான் வினவவும் கூறாது, என்னை வருத்தி, அவ்வடிகள் போகின்றார், அத்தகைய ஆமாத்தூர்த் தலைவர் எந்நிலையிலும் அழகியவர். குறிப்புரை: கல்லலகு -கடிய - விரைந்து செல்வதாகிய. 'காணக்காண' என்றது, 'பலருங்காண' என்றவாறு. புகுதா - புகுந்து. அயலாரோடு இரங்கிக் கூறுகின்றவள், ஆற்றாமை மிகுதியால் இடையே இறைவனை எதிர்பெய்து கொண்டு, 'சொல்லாதே போகின்றீர்....நெய்த்தானமோ' என்றாள் என்க. ஓகாரங்கள் ஐயப்பொருள; 'துருத்தி' என்புழியும் அவ்வோகாரம் விரிக்க.
மழுங்கலா நீறாடும் மார்பர் போலும்மணிமிழலை மேய மணாளர் போலும் கொழுங்குவளைக் கோதைக் கிறைவர் போலும்கொடுகொட்டி தாள முடையார் போலும் செழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலும்தென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும் அழுங்கினா ரையுறவு தீர்ப்பார் போலும்அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. பொருளுரை: ஒளி குறையாத திருநீற்றைப் பூசிய மார்பினர், அழகிய திருவீழி மிழலையிலே உகந்தருளியிருக்கும் திருமணக் கோலத்தினர். குவளை மலர் மாலையை அணிந்த உமையம்மைக்குத் தலைவர். கொடு கொட்டி ஆடலுக்கு ஏற்ற தாளம் உடையவர். கயிலாயத்தில் உள்ள எம் செல்வர். தெற்கில் உள்ள அதிகை வீரட்டத்தை உகந்து சேர்ந்தவர். வருந்துபவர்களைக் காப்பாற்ற மாட்டாரோ என்ற ஐயம் தீர்த்து ஆட்கொள்ளும் ஆமாத்தூர்த் தலைவர் எல்லா வகையிலும் அழகியரே. குறிப்புரை: மழுங்கலா-ஒளிகுறையாதஅழுங்கினார் - வருந்தினவர். ஐயுறவு - 'துன்பங் களைவரோ களையாரோ' என்னும் ஐயம். இத்திருப் பாடலை, முன்னெல்லாம் ஆற்றாளாய் இரங்கிக் கூறியவள், இறுதிக்கண், 'பெரியோர் பிழையுட் படார்; அதனால், பின்பு வந்து வரைவார்' எனத்தேறி, ஆற்றியுரைத்ததாகக் கொள்க. அதனால், 'அழகியரே' என்றதும் புகழுரையே. திருநாவுக்கரசர் புராணம் இந்நாளில் திருப்பணிகள்செய்கின்ற இன்றமிழ்க்கு மன்னான வாகீசத்திருமுனியும் மதிச்சடைமேல் பன்னாகம் அணிந்தவர்தம்பதிபலவுஞ் சென்றிறைஞ்சிச் சொன்னாமத் தமிழ்புனைந்துதொண்டுசெய்வான் தொடர்ந்தெழுவார். திருவதிகைப் பதிமருங்குதிருவெண்ணெய் நல்லூரும் அருளுதிரு ஆமாத்தூர்திருக்கோவ லூர்முதலா மருவுதிருப் பதிபிறவும்வணங்கிவளத் தமிழ்பாடிப் பெருகுவிருப் புடன்விடையார்மகிழ்பெண்ணாக கடம்அணைந்தார். -தி.சேக்கிழார்
திருப்பந்தணைநல்லூர் பதிக வரலாறு: திருநாவுக்கரசு சுவாமிகள் திருமயிலாடுதுறை வணங்கிக் காவிரிக்கரைத் துருத்தி, வேள்விகுடி, எதிர்கொள்பாடி ஆகிய திருத்தலங்களைப் பாடிப் போற்றி, பரமர் திருப்பதி பிறவும் பணிந்து பாடியருளியவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. திருத்தாண்டகம் ப. தொ. எண்: பதிக எண்: நோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்நூல்பூண்டார் நூன்மேலோ ராமை பூண்டார் பேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடிப்பிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி ஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்அனல்கொண்டார் அந்திவாய் வண்ணங்கொண்டார் பாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: பந்தணைநல்லூர்ப் பெருமான் வருந்துவதாகிய மாயை உடம்பு உடையர் அல்லாதாராய்ப் பாம்புகளையும், மார்பில் பூணூலையும் அதன்மேல் ஆமை ஓட்டினையும் அணிந்தவர். அவர் வளர்கின்ற கருங்குழலியாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு, பிறையைச் சூடிய சடையில் கங்கையையும் கொண்டு அந்தி வானத்தின் செந்நிறமேனியில் அடிமுதல் முடி வரை திருநீறணிந்து, கையில் தீயினைக் கொண்டு, பேய்கள் தங்கும் பரந்த சுடுகாட்டில் கூத்தாடிப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து வந்து பிச்சை ஏற்றவர். குறிப்புரை: 'நோவதங்கம்' என்பது இடைக்குறைந்து, 'நோதங்கம்' என நின்றது; 'வருந்துவதாகிய மாயை உடம்பு' என்பது பொருள். ஆமை-ஆமை ஓடு; ஆகுபெயர். 'ஆதங்கு' என்பதில், 'ஆ' முதனிலைத் தொழிற்பெயர், 'ஆதல்பொருந்திய' என்பது பொருள். அந்திவாய் வண்ணம் - அந்தி பொருந்திய நிறம்; என்றது செவ்வானத்தினை. பாதம்கம்-பாதம் முதல் தலைவரையிலும். பைங்கண் ஏற்றார் - பசிய கண்ணையுடைய இடபத்தையுடையவர். பலி ஏற்றார்-பிச்சை கொண்டார். இத்தலத்தில் இறைவரைப் பிச்சைக் கோலம் உடையவராகவே அருளிச்செய்தார், நாவுக்கரசர். "பைங்கண் ஏற்றார்" என்பதனையும் உடன் கூறுதலின், விடையேறிய பிச்சைக் கோலமாக அருளினமை பெறப்படும்.
காடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்களிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக ஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்உறுபிணியுஞ் செறுபகையு மொற்றைக் கண்ணால் பீடுலாந் தனைசெய்வார் பிடவ மொந்தைகுடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்கப் பாடலா ராடலார் பைங்க ணேற்றார்.பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை நுகர்ந்து, களிற்றுத் தோலால் மெய்யினைப் போர்த்து, மண்டையோட்டினையே உண்கலனாகக் கொண்டு, ஒற்றியூரை உகந்து, அடியார்களுடைய உடற்பிணிகளையும் உட்பகைகளையும் தம் ஒரே பார்வையாலே வலிமைகெடச் செய்து, பிடவம், மொந்தை, குடமுழா, கொடுகொட்டி, குழல் என்ற வாச்சியங்கள் ஒலிக்கச் சுடுகாட்டினைத் தவிர வேற்று இடங்களை விரும்பாது, அங்குப் பாடியும் ஆடியும் செயற்பட்டுப் பசிய கண்களை உடைய காளை மீது இவர்ந்து பிச்சை ஏற்றவர். குறிப்புரை: கலன் - உண்கலன். ஒற்றைக்கண், நெற்றிக்கண்; ஒருகண்ணாலே என்றுமாம். பீடு உலாம்தனை செய்வார் - வலிமை கெடும் அளவு செய்வார். ஈண்டு, 'உலக்குந்தனை' என்பது, "உலாந்தனை" என நின்றது. 'பிடவம்' முதல் குழல் ஈறாக உள்ளன. வாச்சியவகைகள்.
பூதப் படையுடையார் பொங்கு நூலார்புலித்தோ லுடையினார் போரேற் றினார் வேதத் தொழிலார் விரும்ப நின்றார்விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்உம்பரோ டம்பொன் னுலக மாண்டு பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: தேவர்களை அடிமையாகக் கொண்டு அவர்களுடைய பொன்னுலகை உடைமையாகக் கொண்டு சுற்றிக் கட்டப்பட்ட கழலைத் திருவடிகளில் அணிந்த பந்தணைநல்லூர்ப் பெருமான் வெள்ளம் ஒலிக்கும் கடலில் தோன்றிய விடத்தை உண்டவர். விரிந்த சடைமேல் வெள்ளிய பிறையினை முடிமாலையாகச் சூடியவர். வேதங்கள் ஓதி வேள்விகள் செய்யும் அந்தணர்கள் தம்மைப் பரம்பொருளாக விரும்ப இருப்பவர். திருமாலாகிய போரிடும் காளையை உடைய அப்பெருமான் பூதப்படை உடையவர். அவர் பூணூல் அணிந்து புலித்தோலை இடையில் அணிந்து பசிய கண்களை உடைய காளை மீது அமர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார். குறிப்புரை: திரிபுரம் எரித்த காலத்தில் திருமால் உருத்திரிந்து தாங்கிய இடபம் 'போர்விடை' என்றும், அறக்கடவுள் உருத்திரிந்து தாங்கும் இடபம் 'அறவிடை' என்றும் உணர்க. இனி, 'போர்விடை" என்புழி, 'போர்' என்றதனை, 'இன அடை' என்றலுமாம். இவை 'செங்கண் விடை' என வருகின்றுழியும் ஒக்கும். வேதத்தொழில் வேதத்தின் வழிப்பட்ட தொழில்; வேள்வி. அதனை உடையவர், அந்தணர்; அவர் விரும்ப நிற்றலாவது, வேள்விக்கு முதல்வனாகக் கொண்டு முதற்கண் அவியளித்து அவர் வழிபட, அதனை யேற்று அவர் எண்ணியவற்றை முற்றுவித்தல். சிவபிரானையே வேள்வியின் முதல்வனாக வேதம் கொண்டுள்ளது என்பது, "மேத பதிம் காத பதிம் ருத்ரம்"என்பதனான் அறிக. இதற்கு மாறாகச் செய்யத் தொடங்கிய தக்கன் வேள்வி அழிந்தது; அவனும் தன்தலை இழந்து யாட்டுத் தலை பெற்றான் என்க. ஓதம் - அலை. உம்பர் - தேவர். தேவரை அடியவராகவும், அவரது உலகத்தை உடைமையாகவும் உடையவர் என்றவாறு. 'ஆண்டு' என்னும் எச்சம் எண்ணுப் பொருளாய் நின்று, 'கழலார்' என்னும் வினைக்குறிப்பொடு முடிந்தது. 'பாதக்கழலார்' என இயையும். தொடு - சுற்றிக் கட்டப்பட்ட. "போரேற்றினார்' என்பதும், இருமாச்சீர்கட்கு ஈடாக மாங்கனிச்சீர் வந்தது.
நீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்நெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார் ஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்ஒலிகடல்வாய் நஞ்சம் மிடற்றி லேற்றார் வாருலா முலைமடவாள் பாக மேற்றார்மழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார் பாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: கச்சணிந்த முலைகளையுடைய உமாதேவியாரை இடப்பாகமாக ஏற்ற பந்தணைநல்லூர்ப் பெருமான் கடலில் தோன்றிய நஞ்சினை மிடற்றில் ஏற்றுக் கங்கை உலாவும் சடைமுடி மேல் திங்கள் சூடியவர். மான்குட்டியை ஒருகையில் ஏற்ற அப் பெருமான் அழகிய கை ஒன்றில் நெருப்பை ஏற்று, ஊர்களெல்லாம் பிச்சை ஏற்று, பிச்சையிட வந்த மகளிரின் நிறை எனற பண்பினைக் கவர்ந்தவர். அவர் மழு ஏந்தி, உலகில் பரவிய புகழுக்கு உரியவராய்ப் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர். குறிப்புரை: 'அங்கையில் நெருப்பேற்றார்' என்க. நிறையும் ஏற்றார் - தாருகாவன முனிவர் பத்தினிமாரது கற்பினை வாங்கிக் கொண்டார்; நெஞ்சைப் புலன்வழி ஓடாது நிறுத்துதலைப் பொருந்தினார் என்றுமாம். 'ஊரெலாம் பலியேற்றார்' என்றது செயலையும், 'பலியேற்றார்' என்றது கோலத்தையும் குறிக்கும். இறுதிக் திருப்பாடலிலும் இவ்வாறே கொள்க. ஒர்கையில்' என்பது, 'மழுவேற்றார்' என்பதனோடும் இயையும். மறி - கன்று. பார் உலாம் - பூமி முழுவதும் உலாவுகின்ற; என்றது, யாவராலும் புகழப்படுகின்ற என்றபடி. 'ஏற்றார்' என வந்தன பலவற்றுள், 'பைங்கண் ஏற்றார்' என்புழி உள்ளது ஒன்றும், 'விடையை உடையார்' எனவும், ஏனைய எல்லாம், 'ஏற்றலைச் செய்தார்' எனவும் பொருள் தரும். வருகின்ற திருப்பாட்டினுள்ளும் இவ்வாறே நிற்றல் காண்க.
தொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்துளங்கா மணிமுடியார் தூய நீற்றார் இண்டைச் சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்தஇடுபிணக்காட் டாடலா ரேமந் தோறும் அண்டத்துக் கப்புறத்தார் ஆதி யானார்அருக்கனா யாரழலா யடியார் மேலைப் பண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: அண்டங்களையும் கடந்த எங்கும் பரவியிருப்பவராய், எல்லோருக்கும் முற்பட்டவராய்ச் சூரியனாகவும் அக்கினியாகவும் இருந்து, அடியவர்களுடைய பழைய வினைகளைச் சுட்டு எரிப்பவராய் உள்ள பந்தணை நல்லூர்ப் பெருமான் அடியார்கள் தம்மைத் தொழுது துதிப்பதற்குக் காரணமான ஞானஒளியை உடையவர். நடுங்காத அழகிய தலையை உடையவர். தூய நீறணிந்தவர். சடையில் முடிமாலை சூடியவர். இடுகாட்டைச் சூழ்ந்திருக்கும் சுடுகாட்டில் இரவு தோறும் கூத்து நிகழ்த்துபவர். அவர் பசிய கண்களை உடைய காளையை இவர்ந்து பிச்சை ஏற்றவர் ஆவார். குறிப்புரை: ஏத்தும் - ஏத்துதற்கு ஏதுவாகிய. சோதி - ஒளி; ஞானம்; அது. தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறிந்தாங்கறிதல். இதுவே ஏனைய அருட்குணங்கட்கும் முதலாமாறுணர்க. துளங்கா மணி முடியார் - நடுங்காத அழகிய தலையையுடையவர்; அஞ்சுவ தொன்றில்லாத முதல்வர் என்றபடி. 'அச்சம் வரின் தலை நடுங்கும்' என்பதை 'அரசுதலை பனிக்கும் ஆற்றலை'அருளினார்.
கடமன்னு களியானை யுரிவை போர்த்தார்கானப்பேர் காதலார் காதல் செய்து மடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்மானுரிதோல் மிசைத்தோளார் மங்கை காண நடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் படமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: கானப்பேர் என்ற திருத்தலத்தை விரும்புபவரும், உமாதேவி காண இடையறாது நடம் ஆடுபவரும் ஆகிய பந்தணை நல்லூர்ப் பெருமான், மத யானைத் தோலைப் போர்த்தவர். எம் பெருமான் அருளியவாறன்றித் தாமாக ஒன்றும் அறியாராகிய அடியவர் உள்ளத்தில் உகந்து நிலையாக இருப்பவர். மான் தோலைத் தோளில் அணிந்து, நாகத்தைத் திருமேனியிற் பூண்டு, முடியிலும் பாம்பினைச் சூடி, நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதுகின்ற நாவினை உடையவர். அவர் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றவராவர். குறிப்புரை: கடம் மன்னு - மதம்மிக்க. களி - மயக்கம். காணப்பேர், பாண்டிநாட்டுத் தலம். மடம் - அறியாமை; அவனருளியவாறன்றித் தாமாக ஒன்றையும் அறியாமை, மான் உரி தோல் - மானை உரித்த 'தோல். மிசைத் தோளார்' என்பதனை, 'தோள்மிசையார்' என மாற்றிப் பொருள்கொள்க. 'மன்னி மங்கை காண நடம் ஆடுவார்' என இயைக்க. மன்னி - நிலைபெற்று. 'என்றும் இடையறாது' என்றவாறு. 'ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக்கூத்தாடும் நாதனார்'கூறினாம், இதனை; 'அனவரததாண்டவம்' என்பர். 'படம்' என்றது பாம்பினை, சினையாகு பெயர்.
முற்றா மதிச்சடையார் மூவ ரானார்மூவுலகு மேத்தும் முதல்வ ரானார் கற்றார் பரவுங் கழலார் திங்கள்கங்கையாள் காதலார் காம்பேய் தோளி பற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்பான்மையா லூழி யுலக மானார் பற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: பந்தணைநல்லூர்ப் பெருமான் மும்மூர்த்திகளையும் உடனாய் இருந்து செயற்படுத்தலின் மூவர் ஆனவர். அவர் பிறை சூடிய சடையினர். மூவுலகும் துதிக்கும் முதல்வர். சான்றோர் துதிக்கும் திருவடிகளை உடையவர். பிறையையும் கங்கையையும் விரும்பித் தலையில் கொண்டவர். மூங்கில் போன்ற தோள்களை உடைய பார்வதி பாகர். வெள்ளியநீறு அணிபவர். தம் பண்பினால் உலகங்கள் ஆகவும் அவற்றை அழிக்கும் ஊழிக்காலங்களாகவும் உள்ளவர். பகைவர் மதில்களை எரித்த அப்பெருமானார் பைங்கண் ஏறு ஊர்ந்து பலி ஏற்றார்.குறிப்புரை: மூவர், 'அயன், மால், உருத்திரன்' என்னும் காரணக் கடவுளர், ஒரோவோர் அதிகாரத்தை இவரிடத்து வைத்து அவர் வாயிலாக, 'படைத்தல். காத்தல், அழித்தல்' என்னும் தொழில்களை நடத்துதலால், 'மூவரானார்' என்றும், முத்தொழிற்கும் தாமே உரியராதல் பற்றி, 'முதல்வ ரானார்' என்றும் அருளிச்செய்தார். திங்கள் கங்கையாள் காதலார் - திங்களையும் கங்கையாளையும் காதலித்தலைச் செய்வார்; திருமுடியில் அணிவார். 'காதலார்' என்பதை இருபெயரோடும் தனித் தனி இயைக்க. காம்பு-மூங்கில். ஏய், உவம உருபு. 'ஊழி ஆனார், உலகமானார்' என்க. ஊழி, உலகம் ஒடுங்குங்காலம். பற்றார் - பகைவர்.
கண்ணமரு நெற்றியார் காட்டார் நாட்டார்கனமழுவாட் கொண்டதோர் கையார் சென்னிப் பெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார் பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார் மண்ணவரும் வானவரும் மற்றை யோரும்மறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்தப் பண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: தமக்கெனப் பெயர் ஒன்றும் இல்லாதவரும், பிறப்பு இறப்பு பிணி என்பன அற்றவரும், நில உலகத்தவரும் வானுலகத்தவரும், பிரமன் உபபிரமர்களும், உரகர் முதலிய மற்றவர்களும் எதிரே வந்து வணங்கித் துதித்துப் பண்ணோடு கூடிப் பாடுதலை உடையவரும் ஆகிய பந்தணைநல்லூர்ப் பெருமான் கங்கை தங்கும் சடையினர். கண் பொருந்திய நெற்றியை உடையவர். கையில் மழு ஏந்தியவர். காட்டிலும், நாட்டிலும் உகந்தருளியிருக்கும் அப் பெருமான் பைங்கண் விடை ஊர்ந்து பலி ஏற்றார்.குறிப்புரை: காட்டார் - காட்டில் வாழ்பவர். நாட்டார் - நாட்டில் வாழ்பவர். ஈண்டு, மலை காட்டினுள்ளும். கடல் நாட்டினுள்ளும் அடக்கப்பட்டன. எனவே, நிலமுழுதும் உள்ளவர் என்றபடி. இதனை, நாடனென்கோ ஊரனென்கோ'என்க. 'பெண்' என்றது, கங்கையை. சடைமுடி - சடையாகிய மகுடம். 'பேரொன்றில்லார்' என்றது, 'சொல்லுட்படாதவர்.' என்பதையும் 'பிறப்பிலார் இறப்பிலார் பிணியொன்றில்லார்' என்றது, கருவிகளுள்ளும் விளையுள்ளும் படாதவர் என்பதையும் குறிக்கும். மற்றையோர், உரகர் முதலிய கணத்தவர். ஏத்த - ஏத்துதலினால், பாடலார் - பாட்டுக்களை உடையவர்.
ஏறேறி யேழுலகு மேத்த நின்றார்இமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார் நீறேறு மேனியார் நீல முண்டார்நெருப்புண்டார் அங்கை யனலு முண்டார் ஆறேறு சென்னியார் ஆனஞ் சாடியனலுமிழும் ஐவா யரவு மார்த்தார் பாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: பந்தணை நல்லூர்ப் பெருமான் இடபத்தை இவர்ந்து ஏழுலகும் துதிக்குமாறு நிலையாக இருப்பவர். தேவர்களால் எப்பொழுதும் வழிபடப்படுபவர். நீறணிந்த மேனியர். விடத்தை உண்டவர். வேள்வித்தீயில் இடப்படும் அவியை நுகர்பவர். உள்ளங்கையில் தீயைக் கொண்டு அதனால் அடியார் வினைகளை நீக்குபவர். கங்கை தங்கு சடையினர். ஆன்ஐந்தால் அபிடேகம் செய்யப்படுபவர். தீப்போன்ற விடத்தைக் கக்கும் ஐந்தலை நாகத்தை இடையில் இறுகச்சுற்றியவர். புலால் நாற்றம் கண்டு பருந்துகள் சுற்றி வட்டமிடும் மண்டையோட்டை ஏந்திப் பைங்கண் ஏறு இவர்ந்து பலியேற்றவர் ஆவர். குறிப்புரை: நீலம் - நீலநிறத்தை உண்டாக்கும் விடம். நெருப்பு உண்டார் - 'நெருப்பு' என்றது, வேள்வித் தீயில் இடப்படும் அவியைக் குறிக்கும். 'வட்டக்குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார் - அட்டக்கொண்டுண்ப தறிந்தோமேல் நாமிவர்க் காட்படோமே'என்றருளிச் செய்தமை காண்க. 'அங்கை அனலும் உண்டார்' என்றதில் 'உண்டார்' என்பது, 'ஏற்றார்' என்னும் பொருள் பட நின்றது.
கல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்காரோணங் காதலார் காதல் செய்து நல்லூரார் ஞானத்தார் ஞான மானார்நான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார் மல்லூர் மணிமலை யின்மே லிருந்துவாளரக்கர் கோன்தலையை மாளச் செற்றுப் பல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே. பொருளுரை: ஞானத்தை அடியார்க்கு வழங்கு பவராய்த் தாமே ஞானவடிவாகி, நான்மறையும் ஆறு அங்கமும் எப்பொழுதும் ஓதும் நாவினை உடையவராய், நாகை, குடந்தைக் காரோணங்களையும் நல்லூரையும் உகந்தருளியிருப்பவர் பந்தணைநல்லூர்ப் பெருமான்.அவர் கற்கள் நிறைந்த மதில்கள் மூன்றையும் அம்பு எய்து அழித்தவர். வலிமை மிகுந்த அழகிய கயிலாயமலைமேலிருந்து கொடிய அரக்கர் மன்னனாகிய இராவணன்தலைகள் சிதறுமாறு கோபித்த அப்பெருமான் பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்தவர். அவர் பைங்கண் ஏறுஇவர்ந்து பணி ஏற்றவர். குறிப்புரை: கல் ஊர் - கல் மிகுந்த நல்லூர், சுவாமிகளுக்கு இறைவன் திருவடி சூட்டிய திருத்தலம்; சோழநாட்டில் உள்ளது. ஞானத்தார் ஞானம் - தம்மைஉணரும் ஞானியரது ஞானம். எனவே, இத்தகைய ஞானம் இல்லாதார் ஞானியராகார் என்பது பெறப்பட்டது. மல் ஊர் - வலிமை மிகுந்த. மணிமலை - அழகியமலை; கயிலாயம். திருநாவுக்கரசர் புராணம் மேவுபுனற் பொன்னியிரு கரையுஞ் சார்ந்துவிடையுயர்த்தார் திருச்செம்பொன் பள்ளி பாடிக் காவுயரு மயிலாடு துறைநீள் பொன்னிக்கரைதுருத்தி வேள்விகுடி எதிர்கொள் பாடி பாவுறுசெந் தமிழ்மாலை பாடிப் போற்றிப்பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்அணைந்துபணிந் தாவடுதண் டுறையைச் சார்ந்தார். -தி.சேக்கிழார்.
திருப்புன்கூரும் திருநீடூரும் பதிக வரலாறு: ஆண்டவரசு ஆளுடையபிள்ளையாருடன் திருக்கோலக்காவைவணங்கி அவரிடம் விடைகொண்டு, திருக்கருப்பறியகூலூர் ,திருப்புன்கூர், திருநீடூர் தொழுது செல்லுங்கால் திருநீடூரில் திருப்புன்கூர்த் தலத்தையும் இணைத்துப் பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இஃது இருதலங்களை இணைத்து அருளிச் செய்ததிருப்பதிகம். தேவாரத் திருப்பதிகங்களில் சிலதிருப்பதிகங்கள் இவ்வாறு சில தலங்களை இணைத்து அருளிச்செய்யப்பட்டுள்ளன. திருத்தாண்டகம் பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னைப்பேணாதார் அவர்தம்மைப் பேணா தானைத் துறவாதே கட்டறுத்த சோதி யானைத்தூநெறிக்குந் தூநெறியாய் நின்றான் தன்னைத் திறமாய எத்திசையுந் தானே யாகித்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிறமா மொளியானை நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: பிற பொருள்களின் கூட்டத்தால் பிறவாது எம் பெருமான் தானே தன் விருப்பத்தால் வடிவங்கொள்பவன். தன்னை விரும்பாதவர்களைத் தானும்விரும்பி உதவாதவன். இயல்பாகவே பந்தங்களின் தொடர்பு இல்லாத ஞான வடிவினன். தூய நன்னெறியில் ஒழுகுவதற்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகுக்கப்பட்ட எத்திசைக்கண்ணும் தானே பரவி யிருப்பவன். திருப்புன்கூரை உகந்தருளியிருக்கும் அச்சிவலோக நாதனே நீடூரிலும் உகந்திருப்பவன். அத்தகைய செந்நிறச் சோதி உருவினைக் கீழ் மகனாகிய அடியேன் விருப்புற்று நினையாமல் இந்நாள் காறும் வாளா இருந்த செயல் இரங்கத்தக்கது. குறிப்புரை: பிறவாதே தோன்றுதலாவது, பிற பொருள்கள் முதனிலையாய்க் கூடிநிற்க அக்கூட்டத்தின்வழித் தோன்றாது, தானே தனது இச்சையால், 'அருவம், அருவுருவம், உருவம'் என்னும் மூவகைப்பட்ட வடிவங்களைக் கொண்டு நிற்றல்.' 'பிறவாயாக்கைப் பெரியோன்'கழிந்தமையை நினைந்து கழிவிரக்கங்கொண்டு அருளிச்செய்தது. அஞ்ஞான்றை நிலைபற்றியே தம்மை, 'நீதனேன்' என்றார். இவ் வாறே, 'ஏழையேன்' முதலாக வருவன காண்க. இத்திருப்பதிகத் துள்ளும், 'சிவலோகனை' என்னும் கனிச்சீர் நின்ற அறுசீரடிகள் வந்தன.
பின்றானும் முன்றானு மானான் தன்னைப்பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை நன்றாங் கறிந்தவர்க்குந் தானே யாகிநல்வினையுந் தீவினையு மானான் தன்னைச் சென்றோங்கி விண்ணளவுந் தீயா னானைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நின்றாய நீடூர் நிலாவி னானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: எதிர்காலமும் இறந்தகாலமும் ஆகியவன். தன்னிடம் பெருவிருப்புடைய அடியார்பக்கல், தானும் பெருவிருப் புடையவன். நல்வினையும் தீவினையும் செய்தவர்களுக்கு அவரவர் வினைகளுக்கு ஏற்பப்பயன்களை வழங்குபவன். வானளாவிய தீப்பிழம்பு வடிவானவன். திருப்புன்கூரை உகந்தருளிய அப்பெருமான் நீடூரிலும் நிலையாக உறைந்திருக்கின்றான். அப்பெருமானை நீசனேன் நினையாவாறு என்னே! குறிப்புரை: 'பின்' முன்' என்றவை காலங்குறித்து நின்றன. அவையாகிநிற்றல், உடல் உயிர்போல அவற்றோடு ஒன்றாய் நின்று அவற்றை இயக்குதல், பித்தர் - பிறிதொன்றையும் விரும்பாது தன்னையே விரும்பும் பேரன்பர். இத்தகைய அன்பு பித்தோடு ஒத்தலின், 'பித்து' எனப்படும். பித்தனாய் நிற்றல் - அவரிடத்துப் பேரருளுடையனாதல். இது, நம்பியாரூரர்க்குத் தூதனாய் இருகால் நடந்தமை முதலியவற்றாற் புலனாகும். நன்று - நன்மை; உறுதி. அவர்க்கு அவ் வுறுதிப்பொருள் தானேயாய் நின்றான்; என்றது, 'உறுதியுணர வல்லார்க்கு அவனையன்றி உறுதிப் பொருள் வேறில்லை' என்றவாறு. ஆங்கு, அசைநிலை நல்வினையும் தீவினையும் செய்தார்க்கு அவை பயனாய்வருதல் அவனை இன்றி ஆகாமையின்,'அவை ஆனான்' என்றருளினார். தீயாயது, மாலும் அயனும்தேட நின்ற நிகழ்ச்சியைக் குறிக்கும். ஆய - பொருந்திய. 'நீடூர் நின்று நிலாவினானை' எனக் கூட்டுக.
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னைஇனிய நினையாதார்க் கின்னா தானை வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச் செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெல்லால் விளைகழனி நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன். நல்லனவே நினையாதவர்களுக்குத் தான் இனியன் அல்லன். தன்னை விரைந்து சரண்புக்கவர்களுக்குத் தான் அருளுவதில் வல்லவன். ஓரிடம் விட்டு மற்றோரிடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான், தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்தருளியிருப்பவன். அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!. குறிப்புரை: 'எவ்விடத்தும்' என்பது முன்னும் சென்று இயையும் இல்லாமை, ஊனக் கண்ணிற்குப் புலனாகாமை. எவ்விடத்தும் - எந்தப்பொருளிலும். இனிய - நல்லன. வல்லடைதல் - விரைந்து அடைதல். 'அருளும் வண்ணம் வல்லான்' என இயைக்க. வண்ணம் - முறைமை. மாட்டாதார், அதுஎன்பதும் காண்க. 'விளை கழனி' என்பதற்கு, பயனை விளைக்கின்ற கழனி என உரைக்க. 'நெல்லால்' என்பதில், ஆல், அசைநிலை.
கலைஞானங் கல்லாமே கற்பித் தானைக்கடுநரகஞ் சாராமே காப்பான் தன்னைப் பலவாய வேடங்கள் தானே யாகிப்பணிவார்கட் கங்கங்கே பற்றா னானைச் சிலையாற் புரமெரித்த தீயாடியைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிலையார் மணிமாட நீடு ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: கலைஞானத்தை முயன்று கற்றல் வேண்டாதபடி உள்நின்றே உணர்த்துபவன். கொடிய நரகத்தை அடையாதபடி காப்பவன். பல்வேறு இடங்களிலிருந்து தன்னை வழிபடுபவர் விரும்பும் பல வேடங்களிலும் தானே காட்சி வழங்கி ஆங்காங்கே உறைபவன். வில்லால் திரிபுரங்களை எரித்தவன். தீயின்கண் கூத்து நிகழ்த்துபவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் பலகாலம் நிலைத்திருக்கும் அழகிய மாடி வீடுகளை உடைய நீடூரையும் உகந் தருளியவன். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!. குறிப்புரை: 'பணிவார்கட்கு, தானே பலவாய வேடங்கள் ஆகி அங்கங்கே பற்றானானை' என்றியைத்து, அதனை முதற்கண் வைத்து, அதன் பின்னர், அவர்கட்கு என்பது வருவித்துரைக்க. தானே - தான் ஒருவனே. பற்று - உறைவிடம். 'ஆனான்' என்றது, 'ஆக இருந்தான்' என்னும் பொருளது. இது, 'பணிய விரும்புவார்க்கு அவ்விருப்பத்தை எளிதில் நிறைவித்தற்பொருட்டுத் திருக்கயிலை ஒன்றையே இடமாகக் கொண்டிராது எண்ணிறந்த தலங்களில் எழுந்தருளியிருக்கும் பேரருளாளன் என்றருளியவாறு. கல்லாமே - கற்றல் வேண்டாதபடி. கற்பித்தான் - உள்நின்றே உணர்த்தினான். இதனைத் திருஞானசம்பந்தரிடத்து இனிது காண்கிறோம். ஏனையோர்க்கும் மெய்ந் நூல்களின் முடிந்த பொருளை எளிதில் தெளிய அருளினமை அறிக. 'சிலையால்புரம் எரித்த' என்றது, 'தானும் பிறரோ டொப்பக் கரணங்களாற் செய்வான்போலச் சென்றான்' என்றவாறு. நிலை ஆர் - பல நிலைகள்.
நோக்காதே எவ்வளவும் நோக்கி னானைநுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை ஆக்காதே யாதொன்று மாக்கி னானைஅணுகாதா ரவர்தம்மை அணுகா தானைத் தேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீக்காத பேரொளிசேர் நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: கருவிகளால் அன்றித் தன் நினைவினாலேயே எல்லாப் பொருள்களையும் படைத்துக் காத்து அழிப்பவன். நுண்ணிய பொருள்களிலும் நுண்ணியனாக இயல்பாகவே கலந்திருப்பவன். கருவிகள் கொண்டு படைக்காமல் எல்லாப் பொருள்களையும் தன் நினைவினாலேயே தோற்றுவிப்பவன். தன்னை நெருங்காதவர்களுக்கு அருள் செய்தற்கண் ஈடுபடாதவன். தடுக்காமல் கடல் விடத்தை உண்டவன். அத்தகைய திருப்புன்கூர் மேவிய சிவலோகன் நீக்குதற்கரிய மிக்க பொலிவை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே!. குறிப்புரை: நோக்குதல் - காத்தல். நோக்காதே நோக்குதல் - கரணத்தால். நுணுகாது - நுணுகாதபடி. யாதொன்றும் - பிறிதொன்றும். 'யாதொன்றும் நுணுகாதே என்க. 'நுணுகாதே நுணுகினான்' என்றது, இயல்பாகவே நுணுகினான் என்றவாறு. எத்துணை நுணணிய பொருளாய் இருப்பினும் அதனினும் நுண்ணியனாய் அதன்கண் நிறைந்து அதனால் தாக்குண்ணாது நிற்றலின், இறைவனினும் நுண்ணிய பொருள் பிறிதொன்றில்லையாதல் அறிக. ஆக்குதல் - படைத்தல். 'யாதொன்றும் ஆக்காதே' என்க. யாதொன்றும் - ஒன்றனையும் ஆக்கி எல்லாவற்றையும் ஆக்கி. நோக்கு தலை முன்னர் அருளிச் செய்தார். அஃது உலகம் ஒடுங்கியபின் மீளத் தோன்றுதற்கு உரித்தாமாறு செய்தலையும் குறித்தற்கு. 'நோக்காதே நோக்கி' என்னும் வெண்பாவினைநோக்குக. தேக்குதல் - நிறைதல்; அஃது இங்குக் 'குமட்டுதல்' எனப் பொருள் தந்தது. நீக்காத - நீக்குதற்கரிய. பேரொளி - மிக்க பொலிவு.
பூணலாப் பூணானைப் பூசாச் சாந்தமுடையானை முடைநாறும் புன்க லத்தில் ஊணலா வூணானை யொருவர் காணாஉத்தமனை ஒளிதிகழும் மேனி யானைச் சேணுலாஞ் செழும்பவளக் குன்றொப் பானைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீணுலா மலர்க்கழனி நீடு ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: மற்றவர் அணியக் கருதாத பாம்புகளை அணிகளாகப் பூணுபவன். மற்றவர்கள் பூசிக்கொள்ள விரும்பாத சாம்பலைச் சந்தனம் போலப் பூசிக்கொள்பவன். புலால் நாறும் மண்டையோடாகிய இழிந்த உண்கலத்தில் உண்ணலாகாத பிச்சை எடுத்த ஊணினை உண்பவன். இவையாவும் தன்பொருட்டன்றிப் பிறர் பொருட்டேயாக, இவற்றின் காரணத்தை மற்றவர் காணமாட்டாத வகையில் செயற்படும் மேம்பட்டவன். இச்செயல்களால் ஒளிமிக்குத் தோன்றும் திருமேனியை உடையவன். மிக உயர்ந்த மேம்பட்ட பவளமலையை ஒப்பவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் மிகுதியாகக் காணப்படுகின்ற மலர்களை உடைய வயல்கள் பொருந்திய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் நினையாதவாறு என்னே! குறிப்புரை: பூணலாப் பூண் - அணியலாகாத அணி; பாம்பு. பூசாச் சாந்தம் - பூசலாகாத சாந்து; சாம்பல். ஊணலா ஊண் - உண்ணலாகாத உணவு; பிச்சை. "இரந்து முயிர் வாழ்தல் வேண்டிற் பரந்து - கெடுக உலகியற்றி யான்"என்றமையால், பிச்சை ஊண் உண்ணலாகாததாதல் உணர்க. 'பூணலாப் பூண் முதலியவற்றைக் கொண்டது. தன்பொருட்டன்றிப் பிறர்பொருட்டேயாதலின், அவை அவனுக்குப் புகழாவனவன்றி இகழாமாறு இல்லை' என அவற்றது பெருமை உணர்த்தியவாறு. அதனானே, அவன் உலகியற்கு வேறுபட்டவன் என்பதும் இனிது விளங்கும். 'ஒருவர்' என்புழி, முற்றும்மை தொகுத்தலாயிற்று. காணா - உணராத. உத்தமன் - மேலானவன். ஒருவரும் காணாமை - யாவராலும் முற்ற உணர இயலாமை. சேண்உலாம் - உயர்ச்சி பொருந்திய. 'நீளுலாம்' என்பது, 'நீணுலாம்' எனத் திரிந்தது; 'மிகுதி பொருந்திய' என்பது பொருள். மலர் - தாமரை முதலியன.
உரையார் பொருளுக் குலப்பி லானையொழியாமே எவ்வுருவு மானான் தன்னைப் புரையாய்க் கனமாயாழ்ந் தாழா தானைப்புதியனவு மாய்மிகவும் பழையான் தன்னைத் திரையார் புனல்சேர் மகுடத் தானைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நிரையார் மணிமாட நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை: சொற்பொருளுக்கு அப்பாற்பட்டவன். எல்லா உருவங்களிலும் நீங்காது உடன் உறைபவன். நீரில் ஆழாத உட்டுளை உடைய நொய்ய பொருள்களாகவும் நீரில் ஆழும் கனமான பொருள்களாகவும் உள்ளவன். மிகவும் பழைமையாகிய தான் புதியவனாகவும் இருப்பவன். அலைகள் நிறைந்த கங்கையைத் தலையில் சூடியவன். திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகன் வரிசையான அழகிய மாடிவீடுகளை உடைய நீடூரானும் ஆவான். நீசனேன் அவனை நினையாதவாறு என்னே! குறிப்புரை: உரை ஆர் பொருள் - சொல்லின்கண் பொருந்திய பொருள்; சொற்பொருள். அதற்கு உலப்பிலாமை. முடிவு பெறாமை; 'சொல்லி முடிக்கலாகாத தன்மைகளை உடையவன்' என்றபடி, உரு - பொருள். 'எவ்வுயிரும்' என்பதும் பாடம். புரை - உயர்ச்சி. கனம் - பருமை. 'ஆழாதானை' என்பதில் உள்ள எதிர்மறை, 'புரை, கனம்' என்பவற்றையும் நோக்கி நின்றது. நிற்கவே, 'புரைத்துப் புரையாதானை, கனத்துக் கனவாதானை' என்றலும் அருளியவாறாயிற்று. 'புரைத்து, கனத்து, ஆழ்ந்து' என்பன, காலத்தொடுபட்டு நிகழும் செயற்கையை உணர்த்திநின்றன. அதனால் 'இயல்பாகவே, உயர்ந்தும், கனத்தும், ஆழ்ந்தும் இருப்பவன்' என அவனது பெருநிலையை உணர்த்தியருளியதாயிற்று. 'புதியனவுமாய் மிகவும் பழையான்' என்றது, 'காரண காரியத் தொடர்ச்சியாய் மேலும் மேலும் தோன்றுவனவாய பொருள்கள் எல்லாமாய்த்தான் நிற்பினும், யாதொரு பொருளுந் தோன்றாது ஒடுங்கிப் பாழ்போலக் கிடந்த நிலையிலும் தான் ஒடுங்காது அவற்றைத் தோற்றுவிக்கும் தலைவனாய் நின்றவன்' என்றருளியவாறு. 'முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப்பழம் பொருள்'என்பது சாந்தோக்கிய உபநிடதம். 'புதியனவுமாய்' என்பதில், புதியனவாயும்' என உம்மையை மாறிக் கூட்டி உரைக்க.
கூரரவத் தணையானுங் குளிர்தண் பொய்கைமலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார் ஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்அறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகாச் சீரரவக் கழலானை நிழலார் சோலைத்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நீரரவத் தண்கழனி நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை : மேம்பட்ட ஆதிசேடனைப் படுக்கையாக உடைய திருமாலும், குளிர்ந்த பொய்கையில் தோன்றும் தாமரையை இருப்பிடமாக உடைய பிரமனும் ஆகிய இருவரும் காண முயன்றும் அறியமாட்டாத அப்பெருமான் இயல்பினை யாவர் உள்ளவாறு அறிய இயலும்? அவனை அறிவோம் என்று நினைக்கும் தேவர்களுக்கும் உண்மையில் அறிய முடியாதவனாய் ஒலிக்கும் அழகிய வீரக்கழலை அணிந்த அப்பெருமான் நிழல் தரும் சோலைகள் உடைய திருப்புன்கூரை மேவியவன். அவனே நீர் பாயும் ஓசையை உடைய குளிர்ந்த வயல்களை உடைய நீடூரானும் ஆவான். அவனை நீசனேன் பண்டு நினையாதவாறு என்னே! குறிப்புரை : கூர் அரவம் -அறிவோ மெனப் புகுவராயின், அவர்க்கெல்லாம் அறியலாகாத திருவடியையுடையவன்' என்க. 'இதனை இனிது விளக்குவது, மாலும் அயனும் அறியலாகாது நின்ற நிலை' என்பார், அதனை முன்னர் அருளிச்செய்தார். 'கழலானை' என்புழியும். 'கழலுடையனாயினானை' என ஆக்கம் விரித்துரைக்க. சீர் - புகழ். 'சீரரவம்' 'நீரரவம்' என்புழி அரவம். ஓசை.
கையெலாம் நெய்பாயக் கழுத்தே கிட்டக்கால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன பொய்யெலாம் மெய்யென்று கருதிப் புக்குப்புள்ளுவரா லகப்படா துய்யப் போந்தேன் செய்யெலாஞ் செழுங்கமலப் பழன வேலித்திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை நெய்தல்வாய்ப் புனற்படப்பை நீடூ ரானை.நீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை :கைகளிலிருந்து நெய் கீழே சொட்டுதலால் அதைத் தவிர்க்கக் கைகளை உயர்த்தாதே கழுத்தைக் கீழே வளைத்துக் கைகளருகே கொணர்வித்து, நிலைகுலையாமலிருப்பதற்குக் கால்களை விரித்துக்கொண்டு நின்றவாறே உண்ணும் கீழ்மக்கள் கூறிய பொய்யுரைகளை மெய் உரைகளாகக் கருதி அவர்கள் குழுவினிடைக் கலந்து, பின் அவ்வேடர்கள் விரித்த வலையில் அகப்படாது அத்தீங்கில் நின்றும் தப்பிப் புறமே வந்து சேர்ந்த அடியேன், வயல்களில் செழிப்பான தாமரைகள் களைகளாகத் தோன்றும் நன்செய் நிலங்களை எல்லையாக உடைய திருப்புன்கூர் சிவலோகநாதன் என்ற பெயரில் உகந்தருளியிருப்பவனாய், கடற்கரைப் பகுதியில் நீர்வளம் உடைய மனைக்கொல்லைகளை உடைய நீடூரிலும் உகந்து தங்கியிருக்கும் அப்பெருமானை, நினையாத கீழ்மகனாய் அடியேன் இருந்தவாறு இரங்கத்தக்கது. குறிப்புரை : 'கழுத்தே' என்னும் ஏகாரம், பிரிநிலை. 'கழுத்தினைக் கைசென்று அடையச் செய்து உண்ணாது, கையினைக் கழுத்துச் சென்று அடையுமாறு செய்து உண்ணுங் கையர்' என்க. அவ்வாறுண்ணுதல், நெய் மிகுதியாக வழிந்தோடாமைப் பொருட்டும், உணவு வீழாமைப் பொருட்டுமாம். கலம் இன்றிக் கையில் உண்ணுதலால், மார்பிற்கு நேராகநீட்டி விரித்தகைகள் அதற்குமேல் உயர்த்தலாகாவாயின. கால் நிமிர்த்தல், நிற்றலால் உண்டாகும் நோயை நீக்கிக்கொள்ளுதற் பொருட்டு நேராக்குதல், கையில் உண்ணுதல், பொருட்பற்று உண்டாகாமைப் பொருட்டும், நின்றுண்ணுதல் இடப்பற்று உண்டாகாமைப் பொருட்டுமாம். இவ்வாறொழுகுவோர் ஒருசிலரே என்க. 'இவர் இவ்வாறு பற்றுக்களையெல்லாம் விடினும். பற்றக்கடவ பொருளைப் பற்றாமையின், பெறநின்றது என்னை' என்பார். இவ்வாறு இகழ்ச்சி தோன்ற எடுத்தோதியருளினார். நின்று உண்ணும் கையர் - நின்று உண்ணுதலாகிய ஒழுக்கத்தையுடையவர். இனி "கையர்" என்பதற்கு 'வஞ்சகர்' என்றுரைத்து, 'இங்ஙனம் புறத்தாரைமருட்டிநின்றவர்' எனலுமாம். சமணருட் பலர் வஞ்சகராய் இருந்தமையை, அவர் வைதிக சமயத்தார்க்கு அரசன் வாயிலாக இழைத்துவந்த கொடுமைகள் பற்றி யறியலாம். பொய் - பிழை. மெய் - ஒத்தது. 'கருதிப்புக்கு' என்றதனால், சுவாமிகள் சமண சமயத்துப் புகுந்த காரணம் நன்கு அறியப்படுகின்றது. 'அப்புள்ளுவர்' எனச் சுட்டு வருவித்துரைக்க. புள்ளுவர் - வேடர்; இஃது உவமையாகு பெயராயிற்று. 'வேடர்கள் பறவைகளையும், விலங்குகளையும் வலையில் வீழச் செய்தல்போல, மக்களைச் சொல்லில் வசப்படுத்துபவர்' என்றதாம். 'அகப்படுத்தப்படாது' என்பது, 'அகப்படாது' என விகாரமாயிற்று. 'வேடரது வலையிற் சிக்கிய ஒரு பறவையேனும் விலங்கேனும் அவராற் கொல்லப்பட்டு அவர்க்கு இரையாகாது தப்பியோடினாற்போல, இறுதிவரையில் சமண சமயத்திலிருந்து கெட்டொழியாது, மீண்டு வந்தேன்' என்றருளிச்செய்தார். 'இத்துணைத் தாழ்த்து வந்தேன்; முன்பே நினையாதொழிந்த வினைதான் என்னே' என்றிரங்கியவாறு காண்க. படப்பை - தோட்டம்.
இகழுமா றெங்ஙனே யேழை நெஞ்சேயிகழாது பரந்தொன்றாய் நின்றான் தன்னை நகழமால் வரைக்கீழிட் டரக்கர் கோனைநலனழித்து நன்கருளிச் செய்தான் தன்னைத் திகழுமா மதகரியி னுரிபோர்த் தானைத்திருப்புன்கூர் மேவிய சிவ லோ கனை நிகழுமா வல்லானை நீடூ ரானைநீதனேன் என்னேநான் நினையா வாறே. பொருளுரை : யாதொரு பொருளையும் புறக்கணிக்காது அவற்றிலெல்லாம் உடனாய் இருப்பவன் எம்பெருமான். அவன் இராவணனைக் கயிலை மலையின் அடியில் இட்டு வருந்தச் செய்து அவன் வலிமையைக் குலைத்துப் பின் அவனுக்கு நல்லனவாகிய வாளும் நாளும் வழங்கியவன். மதத்தால் விளங்கிய யானையின் தோலைப் போர்த்தியவன். அவனே திருப்புன்கூர் மேவிய சிவலோக நாதன். தன் விருப்பப்படியே செயற்படவல்ல அப்பெருமான் நீடூரிலும் உகந்தருளியுள்ளான். 'அறிவில்லாத மனமே! அப்பெருமானைக் கீழ்மகனாகிய யான் நினையாத செயலே இரங்கத்தக்கது. அவ்வாறாக நீயும் இகழும் செயல் எவ்வாறு ஏற்பட்டது?' குறிப்புரை : 'ஏழை நெஞ்சே இகழுமாறு எங்ஙனே' என்பதை ஈற்றில் வைத்து, 'நான் நினையாவாறு என்னே! நீதானும் இகழுமாறு எங்ஙன் ஆயிற்று' என உரைக்க. இது தம் நெஞ்சினை வேறாக்கி அருளிச்செய்தது. இகழாது - யாதொரு பொருளையும் இகழ்ந் தொழியாது;நிகழுமாவல்லான் - தன் இச்சைவழியே செல்ல வல்லவன்; தன்வய முடையவன். திருநாவுக்கரசர் புராணம் ஆண்டஅர செழுந்தருளக் கோலக் காவைஅவரோடுஞ் சென்றிறைஞ்சி அன்பு கொண்டு மீண்டருளினார் அவரும் விடைகொண் டிருப்பால்வேதநா யகர்விரும்பும் பதிக ளான நீண்டகருப் பறியலூர் புன்கூர் நீடுர்நீடுதிருக் குறுக்கைதிரு நின்றி யூருங் காண்டகைய நனிபள்ளி முதலா நண்ணிக்கண்ணுதலார் கழல்தொழுது கலந்து செல்வார். -தி.சேக்கிழார்.
திருக்கழிப்பாலை பதிக வரலாறு: ஆளுடையரசு தில்லையிலிருந்து சென்று திருவேட்களம் பணிந்து பாடிய பின்பு, திருக்கழிப்பாலையை அடைந்து அங்கு மணவாள நம்பியாகிய இறைவனை வணங்கி, 'வனபவளவாய் திறந்து' என்னும் திருப்பதிகம் பாடி வைகியிருந்தபோது அருளிச் செய்தது இத் திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு : இத்திருப்பதிகம், 'உயிர்கள் பிறவி நீங்கி வீடடைதற் பொருட்டு எண்ணிறந்த தலங்களை இடமாகக்கொண்டு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருக்குறிப்பினை உணர்ந்து, அக்குறிப்பின் வழியே அத்தலங்களை அடைந்து வணங்கி உய்தி பெறுதல் வேண்டும்' என அறிவுறுத்தருளிச்செய்தது. திருத்தாண்டகம் ஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்துவொள்ளெலும்பு தூணா வுரோமம் மேய்ந்து தாமெடுத்த கூரை தவிரப் போவார்தயக்கம் பலபடைத்தார் தாமரையினார் கானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலைக்கழிப்பாலை மேய கபாலப்பனார் வானிடத்தை ஊடறுத்து வல்லைச் செல்லும்வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : சதைப்பகுதியை வளைத்துச் சுவராகச் செய்து ஒன்பது வாயில்களை அமைத்து வெள்ளிய ஒளியை உடைய எலும்புகளைத் தூணாக அமைத்து மயிரினை மேற்பரப்பித் தாமே படைப்பித்த குடில் நீங்கும்படி தக்காரிடத்து வலியச் சென்று, தாவும் மானைக் கையில் ஏந்திய பெருமான் பல வடிவங்களை உடையவராய் அருள் செய்கின்றார். தோகைகளைப் பரப்பி மயில்கள் ஆடும் சோலைகளை உடைய திருக்கழிப்பாலைத் தலத்தை உகந்தருளியுள்ள மண்டை யோட்டினை ஏந்திய தலைவராகிய அப்பெருமான் வான் உலகங்களை எல்லாம் கடந்து விரைவாகச் செல்லும் வீடுபேற்றுலகிற்குச் செல்லும் வழியை அமைத்துக் கொடுத்துள்ளார். இவ்வுடம்பு பெற்றதனாலாய பயன்கொண்டு அவர் வகுத்த வழியிலே செல்வது ஒன்றே நாம் செயற்பாலது. அவர்க்குக் கைம்மாறாக நாம் செயற்பாலது ஒன்றும் இல்லை. குறிப்புரை : ஊன் - தசை, உடுத்தி - வளைத்து; சுவராகச் செய்து மேய்ந்து - மேற்பரப்பி. எடுத்த - கட்டிய. கூரை - குடில். தவிர - நீங்கும் படி. போவார் -முதலாயினவற்றை. 'வழி' என்பதன் பின், 'வைத்தார்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. வைத்தார்க்கு என்பது, 'வைத்த அவர்க்கு' எனப் பொருள்தரும். இவை வருகின்ற திருப்பாடல்கட்கும் ஆம். அவர்க்கு - அவர் பொருட்டு; என்றது 'அவரது கருணைக்குக் கைம்மாறாக' என்றபடி. அவ்வழியே போதுதல், அவற்றாற் பயன்கொள்ளும் முறையை யறிந்து, அவ்வாற்றானே ஒழுகுதல். 'அங்ஙனம் ஒழுகிப் பயன்பெறுதலையன்றி, அவர்க்கு நாம் செய்யும் கைம்மாறு வேறில்லை' என்றதாம். இஃது அடித்தடித்து அக்காரம் தீற்றுதல் போலாம் (திருவாசகம் அற்புதப்பத்து - என்க.
முறையார்ந்த மும்மதிலும் பொடியாச் செற்றுமுன்னுமாய்ப் பின்னுமாய் முக்க ணெந்தை பிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கைபிணக்கந்தீர்த் துடன்வைத்தார் பெரிய நஞ்சுக் கறையார்ந்த மிடற்றடங்கக் கண்ட எந்தை கழிப்பாலை மேய கபாலப் பனார் மறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : மதில்களுக்குரிய இலக்கணங்கள் நிரம்பிய மூன்று மதில்களையும் சாம்பலாகுமாறு அழித்த பெருமான் ஏனைய பொருள்கள் தோன்றுவதன் முன்னும் அவை அழிந்தபின்னும் உள்ள முக்கண் தலைவர்.கங்கை தங்கிய சடைமுடியிலே பிறைச்சந்திரனும் பாம்பும் பகைமை நீங்கச் சேர்த்து வைத்தவர். கொடிய விடக் கறையைக் கழுத்தளவில் தங்கச் செய்தவர், எம்பெருமானார். கழிப்பாலை மேவிய அக்கபாலப்பனார் வேதங்களாகவும் ஆகமங்களாகவும் அமைந்த தம் சொற்களால், இவ்வுடல் அழிய உயிர் செல்லுதற்குரிய வழியை வகுத்தருளியுள்ளார். அவ்வழியிலே நாம் செல்லுவோம். குறிப்புரை : முறை - ஆக்கும் முறை. முன்னுமாய்ப் பின்னுமாய் தோன்றிக் கெடும் பொருள்கள் எல்லாவற்றின் தோற்றத்திற்கு முன்னும், ஒடுக்கத்திற்குப் பின்னும் உள்ளவனாகி; என்றது, 'அவை எல்லாவற்றையும் தோற்றி ஒடுக்கித் தனக்குத் தோற்றக் கேடுகள் இன்றி என்றும் ஒருபடித்தாய் இருப்பவனாய்' என்றவாறு. 'முக்கண் எந்தை கண்ட எந்தை' என்பன, ஒரு பொருள்மேற் பல பெயர்கள். அவை பன்மையொருமை மயக்கமாய், 'கபாலப்பனார்' என்பதனோடு இயைந்தன. பிறைக்குப் பாம்பு பகையாயிருப்ப, அவ்விரண்டனையும் அலைத்து ஈர்த்து ஓடுவது கங்கையாகலின், அவைகளை, 'பிணக்கந் தீர்த்து உடன்வைத்தார்' என்று அருளிச்செய்தார். கறை - கறுப்பு 'நஞ்சுக் கறையைஎந்தை' என்க. மறை ஆர்ந்த - மந்தணம் நிறைந்த, 'வாய்மொழியான்' என்றது, தனது வாய்மொழியால் என்றவாறு. அவை வேத சிவாகமங்கள். யாக்கை மாய என மாறுக.
நெளிவுண்டாக் கருதாதே நிமலன் தன்னைநினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய ஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னையொருபாகத் தமர்ந்தடியா ருள்கி யேத்தக் களிவண்டார் கரும்பொழில் சூழ் கண்டல் வேலிக் கழிப்பாலை மேய கபாலப் பனார் வளியுண்டார் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க் கவ்வழியே போதும் நாமே. பொருளுரை : தூயனாகிய அப்பெருமானாரை நெகிழ்ச்சியால் இடையறவு படாமல் நாடோறும் தொடர்ந்து விருப்போடு நினையுங்கள். சிறந்த அணிகலன்களை உடைய, வண்டுகள் ஒளிந்து தங்கும் கருங்கூந்தலை உடைய உமாதேவியைத் தம் உடம்பில் ஒருபாகமாக விரும்பிக்கொண்டு, அடியார்கள் நினைந்து துதிக்குமாறு, களிப்பை உடைய வண்டுகள் நிறைந்த இருண்ட சோலைகளுக்குத் தாழைவேலியாகச் சூழ்ந்த கழிப்பாலை மேவிய கபாலப்பனார் காற்றை நுகர்தலாலே நிலைத்து நிற்கும், மாயையின் காரியமாகிய இவ்வுடம்பை இனிக்கொள்ளாது நிலையாக விடுத்தற்குரிய நெறியைக் குறிப்பிட்டுள்ளார். அந்நெறியிலே நாம் செல்வோம். குறிப்புரை : நெளிவு - நெகிழ்வு. 'அஃது உண்டாமாறு கருதாது நினைமின்கள்' என்றது, உறுதியாக நினைமின்கள் என்றதாம். நிமலன்றன்னை என்பது முதற்கண் நிற்கும். கரும்பொழில் - இருண்ட சோலை. கண்டல் - தாழை. வளி - பிராணவாயு. 'அதனை வாங்கியும் விட்டும் நுகர்தலாலே நிலைத்துநிற்கும் குரம்பை' என்க. உண்டு - உண்ணுதலால். ஆர் - பொருந்துகின்ற.