செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
திரையானுஞ் செந்தா மரைமே லானுந்தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும் புரையா னெனப்படுவார் தாமே போலும்போரேறு தாமேறிச் செல்வார் போலும் கரையா வரைவில்லே நாகம் நாணாக்காலத் தீயன்ன கனலார் போலும் வரையார் மதிலெய்த வண்ணர் போலும்ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே. பொருளுரை: பாற்கடற்பரமனும், செந்தாமரைமேல் உறையும் பிரமனும் ஆராய்ந்து தேடியும்காண முடியாது நாணுமாறு செய்த மேம்பட்டவராய், போரிடும் காளையை இவர்ந்து செல்பவராய், நெகிழ்ச்சியில்லாத மலையையே வில்லாகவும் பாம்பையே நாணாகவும் கொண்டு ஊழித்தீயை ஒத்த கோலத்தை உடையவராய்ப் பகைவர்களின் மும்மதில்களையும் அழித்த செயலுடைய தான் தோன்றியப்பர் ஆக்கூரில் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: திரையான் - நீரிடைக் கிடப்பான்; திருமால். 'காணாராய் நாணும்' என்க. புரையான் - உயர்ந்தோன். 'நாணும்' என்னும் பெயரெச்சம். "புரையான்" என்னும் ஏதுப் பெயர் கொண்டது. 'புரையான்' என்பது வேறு முடிபாகலின், பால்வழுவின்மை அறிக. 'புரையார்' என்பதே பாடமாகக் கோடலும் ஆம்.கரையா-நெகிழாத; வளையாத மலையை வளைத்தார் என்றபடி. 'வரையே வில்' என ஏகாரத்தை மாறிக் கூட்டுக. அவ்வேகாரம், 'நாகம்' என்பதனோடும் இயையும்.'நாணாக'' என்பதில் உள்ள 'ஆக' என்பது வில்லோடும் இயையும். 'ஆக' என்னும் எச்சங்கள், 'கனலார்' என்னும் இறந்தகால வினைக் குறிப்போடு முடியும். கனல் -கனல் போல்வது; சினம். வரையார் - கொள்ளார்; பகைவர்.
திருநாகைக் காரோணம் பதிக வரலாறு: திருமறைக்காட்டினின்றும் பாண்டிநாட்டிற்குச் சென்ற திருஞானசம்பந்தரிடம் விடைபெற்ற நாவரசர் பணிசெய்து அங்கே வீற்றிருந்தருளி, திருவீழிமிழலை தொழ நினைந்து அங்கிருந்து செல்லுங்கால் திருநாகைக்காரோணத்தை அடைந்து பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம்குறிப்பு: இத் திருப்பதிகம், இறைவன் பல திருத்தலங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலையை நினைந்து, அந்நிலையையெல்லாம் இத்திருத்தலத்தில் என்றும் காணலாகும் என்று அருளிச்செய்தது. திருத்தாண்டகம் பாரார் பரவும் பழனத் தானைப்பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச் சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப் பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக் காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே.பொருளுரை: உலகத்தார் போற்றும் திருப்பழனம், சீசைலம் பைஞ்ஞீலி என்ற திருத்தலங்களை உடைய பெருமான் சிறப்புடைய செழிப்பான பவளக்குன்றம் போல்பவனாய்த் திருமுடிமேல் பிறையைச் சூடியவனாய், எண்ணிறந்த பெயர்களை உடையவனாய்ப் பிறர் தம் முயற்சியால் தன்னைக் காண முடியாதவனாய்க் கரியகடலால் ஒருபுறம் சூழப்பட்ட அழகிய குளிர்ந்த நாகைக் காரோணத்தில் என்றும் தரிசிக்கும் வகையில் உள்ளான். குறிப்புரை: பழனம், பைஞ்ஞீலி சோழநாட்டுத் தலங்கள். சீபருப்பதம், வடநாட்டுத் தலம். 'சூடி' என்னும் எச்சம், 'உடைய' என்னும் பெயரெச்சக் குறிப்போடும், 'தன்னை' என்னும் இரண்டாவது, 'காட்சி' என்னும் தொழிற்பெயரோடும் முடிந்தன. காட்சி, காணுதல் என்க. கார்ஆர்-கருமைநிறைந்த; கார், மேகமும் ஆம். 'நாகை' என்பது, 'நாகபட்டினம்' என்பதன் குறுக்கம் இது. கடற்கரையில் உள்ளதென்பது வெளிப்படை 'காரோணம்' என்பது, திருக்கோயிலின் பெயர்.
விண்ணோர் பெருமானை வீரட் டனைவெண்ணீறு மெய்க்கணிந்த மேனி யானைப் பெண்ணானை ஆணானைப் போடி யானைப்பெரும்பற்றத் தண்புலியூர் பேணி னானை அண்ணா மலையானை ஆனைந் தாடும்அணியாரூர் வீற்றிருந்த அம்மான் தன்னைக் கண்ணார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: விண்ணோர் பெருமானாய் வீரட்டனாய், வெண்ணீறு அணிந்த மேனியனாய்ப் பெண்ஆண் பேடிகளாய் உள்ளானாய்ப் பெரும்பற்றப் புலியூர் அண்ணாமலை அழகிய ஆரூர் என்ற திருத்தலங்களில் வீற்றிருக்கும் பெருமானாய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்பும் பெருமானை இடம் அகன்ற கடல் ஒரு பக்கம் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்தில் என்றும் காணலாம்.குறிப்புரை: வீரட்டன்-வீரட்டானத்தான். 'வீரட்டானை' எனவும் பாடம் ஓதுவர்.மெய்-உடம்பு. மேனி-நிறம். 'அணிந்த மேனி' என்பது 'அணிந்ததனால் ஆகிய மேனி' எனக் காரண காரியப் பொருளதாய் நின்றது. பெரும்பற்றப் புலியூர்-தில்லை.'ஆன் ஐந்து ஆடும் அம்மான்' என இயையும். கண் ஆர்-இடம் மிகுந்த; 'கண்ணுக்கு நிறைந்த' என்றும் ஆம்.
சிறையார் வரிவண்டு தேனே பாடுந்திருமறைக் காட்டெந்தை சிவலோகனை மறையான்ற வாய்மூருங் கீழ்வே ளூரும்வலிவலமும் தேவூரும் மன்னி யங்கே உறைவானை உத்தமனை ஒற்றி யூரிற்பற்றியாள் கின்ற பரமன் தன்னைக் கறையார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: சிறகுகளையும் புள்ளிகளையும் உடைய வண்டுகள் இனிமையாகப்பாடும் திருமறைக்காடு, வேதம் முழங்கும் திருவாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் இவற்றில் உகந்தருளி இருக்கும் உத்தமனாய், எந்தையாகிய சிவலோகனாய், ஒற்றியூரை உறைவிடமாகக் கொண்டு உலகை ஆள்கின்ற மேம்பட்ட பெருமானைக் கருமை நிறைந்த கடல்புடை சூழ் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: தேனே பாடும் - தான் உண்ட தேனையே இசையாகப் பாடுகின்ற; 'மிக இனிமையாகப் பாடுகின்ற' என்றதாம். 'எந்தையாகிய சிவலோகனை' என்க. மறை ஆன்ற - வேதம் நிறைந்த. வாய்மூர், கீழ்வேளூர், வலிவலம், தேவூர் சோழநாட்டுத் தலங்கள்.ஒற்றியூர், தொண்டைநாட்டுத் தலம். 'ஒற்றி ஊரை இல்லாகப் பற்றி' என்க. கறை ஆர் கடல் - கருமை நிறைந்த கடல்.
அன்னமாம் பொய்கைசூழ் அம்ப ரானைஆச்சிரா மந்நகரும் ஆனைக் காவும் முன்னமே கோயிலாக் கொண்டான் தன்னைமூவுலகுந் தானாய மூர்த்தி தன்னைச் சின்னமாம் பன்மலர்கள் அன்றே சூடிச்செஞ்சடைமேல் வெண்மதியஞ் சேர்த்தி னானைக் கன்னியம் புன்னைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: அன்னங்கள் மிகுகின்ற பொய்கைகள் சூழ்ந்த அம்பர், பாச்சிலாச்சிராமம்,ஆனைக்கா என்பனவற்றை முன்னரே கோயிலாகக் கொண்டவனாய், மூவுலகும் தான்பரந்திருக்கும் வடிவினனாய்ச் செஞ்சடைமேல் தனக்குரிய அடையாளப் பூச்சுக்களையும் பிறையையும் சூடிய பெருமானை இளையனவாதலின் நெடுநாள் நிலைத்திருக்கக்கூடிய புன்னை மரங்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: அன்னம் ஆம் - அன்னப்பறவை மிகுகின்ற. அம்பர் - திருவம்பர்; அம்பர்ப் பெருந்திருக்கோயில், அம்பர் மாகாளம் இரண்டுங் கொள்க. ஆச்சிராமம் -திருப்பாச்சிலாச்சிராமம்; இம் மூன்றும் சோழநாட்டுத் தலங்களே. சின்னம்- தனக்கென்று உள்ள அடையாளம்; அவை, 'கொன்றை, எருக்கு, ஊமத்தை' முதலியன. கன்னி - அழியாமை. அம். சாரியை.
நடையுடைய நல்லெருதொன் றூர்வான் தன்னைஞானப் பெருங்கடலை நல்லூர் மேய படையுடைய மழுவாளொன் றேந்தி னானைப்பன்மையே பேசும் படிறன் தன்னை மடையிடையே வாளை யுகளும் பொய்கைமருகல்வாய்ச் சோதி மணிகண் டனைக் கடையுடைய நெடுமாட மோங்கு நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: நல்ல நடையினை உடைய காளையை இவர்ந்து செல்பவனாய், ஞானப் பெருங்கடலாய், நல்லூரை விரும்பியவனாய், மழுப்படையை ஏந்தியவனாய்த் தன் நிலையைப் பலவாகப் பேசும் பொய்யனாய், மடைகளிடையே வாளை மீன்கள் தாவும் பொய்கைகளை உடைய மருகலின் ஒளிவீசும் நீல கண்டனாய் உள்ள பெருமானை நல்ல முகப்புக்களை உடைய பெரிய மாடங்கள் ஓங்கும் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: படையுடைய - படைஞராவார் பிடிக்கின்ற. மழுவாள் - மழுவாகிய ஆயுதம். பன்மையே பேசுதல்-தனது நிலையை ஒன்றாகக் சொல்லாது, பலவாறாகச் சொல்லுதல். அஃதாவது, தன்னை, 'உருவுடையன்' என்றும், உருவிலன்' என்றும், 'ஓர் ஊரும் இல்லாதவன்' என்றும், 'பல ஊர்களை உடையவன்' என்றும், பெயர் ஒன்றும் இல்லாதவன்' என்றும்,' அளவற்ற பெயர்களை உடையவன்' என்றும், 'இல்லத்தவன்' என்றும், 'துறவி' என்றும் மற்றும் இன்னோரன்ன பலவாகச் சொல்லுதல். இது பற்றி, 'படிறன்'' என்றருளிச்செய்தார். எல்லாவற்றுக்கும்' அப்பாற்பட்டவன்' என்பது திருக்குறிப்பு. எனவே, 'படிறன்' என்றது. உள்ளுறைச் சிறப்புஆயிற்று. மருகல் சோழநாட்டுத் தலம். வாய், ஏழனுருபு. 'மருகல்வாய் உள்ள சோதியாகிய மணிகண்டன்' என்க. கடை-வாயில்; இதனை எடுத்தோதியது அழகு பற்றி.
புலங்கள்பூந் தேறல்வாய் புகலிக் கோனைப்பூம்புகார்க் கற்பகத்தைப் புன்கூர் மேய அலங்கலங் கழனிசூ ழணிநீர்க் கங்கையவிர்சடைமேல் ஆதரித்த அம்மான் தன்னை இலங்கு தலைமாலை பாம்பு கொண்டேஏகாச மிட்டியங்கு மீசன் தன்னைக் கலங்கற் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: வயல்களிலே பூக்களில் தேன் பொருந்தியுள்ள புகலித் தலைவனாய், பூம்புகாரில் உள்ள கற்பகமாய், அசைகின்ற கதிர்களை உடைய வயல்கள் சூழ்ந்த புன்கூரில் அழகிய நீரை உடைய கங்கையைச் சடைமேல் கொண்ட தலைவனாய், தலைமாலையைச் சூடிப்பாம்பினை மேலாடையாகத் தரித்து விளங்குகின்ற ஈசனைக் கடலிலே மரக்கலங்கள் சூழ்ந்து காணப்படும் அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: புலம் - வயல். தேறல்-தேன். வாய் - வாய்ந்த; பொருந்திய. 'வயல்கள் பூக்களது தேனைப் பொருந்தியுள்ள புகலி' என்க. 'வாய்ப்புகலி என்பதும் பாடம். புகலி -சீகாழி. பூம்புகார் - காவிரிப்பூம்பட்டினம். புன்கூரும் சோழநாட்டுத்தலம். 'புன்கூர்மேய அம்மான்' என இயையும். அலங்கல் - அசைதல். அசைவன நெற்கதிர்கள் என்க. 'கழனிசூழ் புன்கூர்' எனமுன்னே கூட்டுக. இனி, 'கழனியைச் சூழ்தற்குரிய கங்கை' என, கிடந்தவாறே கங்கைக்கு அடையாக்கலும் ஆம். ஆதரித்தல் - விரும்புதல்; அது. விரும்பி அணிதலாகிய காரியத்தின்மேல் நின்றது. 'தலைமாலையையும்' பாம்பையும் பற்றி ஏகாசமாக இட்டு' என்க. ஏகாசம் - மேலாடை. அது மேலாடை போலத் தோளில் இடப்படுவதைக் குறித்தது. 'கொண்டு' என ஏகாரம் இன்றி ஓதுதல் பாடம் அன்று. கடலில் கலங்கல் கரையோரத்து உளதாகும் என்க. 'கலங்கள்' எனப் பாடம் ஓதுதலும் ஆம்.
பொன்மணியம் பூங்கொன்றை மாலை யானைப்புண்ணியனை வெண்ணீறு பூசி னானைச் சின்மணிய மூவிலைய சூலத் தானைத்தென்சிராப் பள்ளிச் சிவலோகனை மன்மணியை வான்சுடலை யூராப் பேணிவல்லெருதொன் றேறும் மறைவல் லானைக் கன்மணிகள் வெண்டிரைசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: பொன்போன்று அழகிய கொன்றை மாலை சூடும் புண்ணியனாய், வெண்ணீறு பூசியவனாய்ச் சிலமணிகள் கட்டப்பட்ட முத்தலைச் சூலத்தை ஏந்தியவனாய், அழகிய சிராப்பள்ளிமேய சிவலோகனாய்த் தலையாய மணிபோல்பவனாய்ப் பெரிய சுடுகாட்டைத் தங்கும் இடமாக விரும்பிக்கொண்டு வலிய காளையை இவரும் வேதங்களில் வல்ல பெருமானை இரத்தினக் கற்களைக் கரைசேர்க்கும் வெள்ளிய அலைகள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: பொன் மணி - பொன்போலும் அழகிய. அம், சாரியை. பூங்கொன்றை' என்பதனை, 'கொன்றைப் பூ' என மாற்றியுரைக்க. சில் மணிய - சில மணிகள் கட்டிய. மன்மணி - நிலைபெற்ற இரத்தினம்; 'தலையாய மணி, என்றலுமாம். வல்லெருது -தன்னைத் தாங்கவல்ல எருது. கல்மணி - கற்கள் என்னும் பெயரவாகிய மணிகள்.
வெண்டலையும் வெண்மழுவும் ஏந்தி னானைவிரிகோ வணமசைத்த வெண்ணீற் றானைப் புண்தலைய மால்யானை யுரிபோர்த் தானைப்புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை எண்டிசையும் எரியாட வல்லான் தன்னையேகம்பம் மேயானை யெம்மான் தன்னைக் கண்டலங் கழனிசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: கோவணம் உடுத்து வெண்ணீறு பூசிப் புண்ணைத் தலையிலுடைய பெரிய யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்து வெண்தலை ஓட்டையும் வெள்ளிய மழுவையும் ஏந்திய புண்ணியனாய், வெண்ணீறணிந்து எட்டுத் திசைகளிலும் தீயில் கூத்தாடுபவனாய், ஏகம்பத்தில் விரும்பித் தங்கும் எம்பெருமானைத் தாழைப்புதர்கள் சூழ்ந்த அந்தண் நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: வெண் மழு - கூரிய மழு. அசைத்த - கட்டிய யானைக்குத் தலைபுண் ஆதல், அங்குசத்தால் குத்தப்படுதலால் என்க. இது, இனப் பொதுமைபற்றிக் கூறப்பட்டது. எட்டுத் திசையிலும் எரியாடுதல், அவற்றை அழித்தென்க. கண்டல்- தாழை. கழனி போலுதல் பற்றி, தாழம்புதர் உள்ள இடங்களைக் 'கழனி' என்றருளிச் செய்தார்; நெய்தலொடு மருதம் மயங்கியது என்றலுமாம்.
சொல்லார்ந்த் சோற்றுத் துறையான் தன்னைத்தொல்நரகம் நன்னெறியால் தூர்ப்பான் தன்னை வில்லானை மீயச்சூர் மேவி னானைவேதியர்கள் நால்வர்க்கும் வேதஞ் சொல்லிப் பொல்லாதார் தம்அரணம் மூன்றும் பொன்றப்பொறியரவம் மார்பாரப் பூண்டான் தன்னைக் கல்லாலின் கீழானைக் கழிசூழ் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: வேதங்கள் முழங்கும் சோற்றுத்துறை, மீயச்சூர் என்ற இவற்றை மேவியவனாய்ப் பலரையும் நல்ல நெறியில் ஒழுகச் செய்து நரகலோகத்தைப் பாழ்படச் செய்பவனாய், ஒளியுடையவனாய், வேதியர் நால்வருக்கும் வேத நெறியை அறிவித்தவனாய்த் தீய அசுரரின் மும்மதில்களையும் அழித்தவனாய்ப் புள்ளியை உடைய பாம்பினை மார்பில் பொருந்த அணிந்த பெருமானாய்க் கல்லாலின் கீழ் அமர்ந்த பிரானை உப்பங்கழிகள் சூழ்ந்த நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: சொல் - புகழ். நரகத்தைத் தூர்த்தலாவது, பலரும் நன்னெறியில் ஒழுகச் செய்தலால் பாழ்படச் செய்தல்; இதுவே இறைவனது குறிக்கோள் என்க. 'வில்லானை' எனப் பொதுப்பட அருளிச் செய்தாரேனும், 'மேருமலையாகிய வில்லானை' என்பது இசையெச்சத்தாற் கொள்ளப்படும். மீயச்சூர்-சோழநாட்டுத் தலம். பொல்லாதார் - அசுரர். 'புல்லாதார்' என்பது பாடம் எனலுமாம். 'பூண்டான்' என்பது, 'பூண்டு சென்றான்' எனத் தன் காரியந் தோன்ற நின்றமையின், 'பொன்ற' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. பொன்ற - அழிய. பொறி - புள்ளி. ஆர - நிரம்ப.
மனைதுறந்த வல்லமணர் தங்கள் பொய்யும்மாண்புரைக்கும் மனக்குண்டர் தங்கள் பொய்யும் சினைபொதிந்த சீவரத்தர் தங்கள் பொய்யும்மெய்யென்று கருதாதே போத நெஞ்சே பனையுரியைத் தன்னுடலிற் போர்த்த எந்தைஅவன்பற்றே பற்றாகக் காணின் அல்லால் கனைகடலின் தெண்கழிசூழ் அந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: நெஞ்சே! துறவு நிலையில் உள்ள சமணர்களின் பொய்யுரைகளையும் தம் பெருமையை எடுத்துரைக்கும் சமண சமய இல்லறத்திலுள்ள அறிவிலிகள் பேசும் பொய்யுரைகளையும் உடம்பிலே துவராடையை அணிந்த புத்தர்களின் பொய்யுரைகளையும் மனத்துக் கொள்ளாமல், யானைத்தோல் போர்த்த எம்பெருமானைப் பற்றும் பற்றினையே உண்மையான விருப்பச் செயலாகக் கொண்டு காண்பதனை விடுத்துக் கடலின் கழி சூழ் நாகைக் காரோணத்து எம் பெருமானைக் காண இயலுமா? அப்பெருமான் தன்னையே பற்றும் பற்றினை அடியவர்களுக்கு அருள்செய்து அகக்கண்களுக்குக் காட்சி வழங்குவான் என்பது. குறிப்புரை: அமணர் - ஆருகத மதக் குருமார். 'அவர்களது மாண்பினை உரைக்கும்குண்டர்' என்க; இவர், இல்லறத்தவர். சினை-உடம்பு.சீவரத்தர்-துவர் தோய்த்த ஆடையர்; புத்தமதத் துறவிகள். 'போத' என்பதனை, போந்து, எனத் திரிக்க. பனை, உவம ஆகுபெயராய்த் துதிக்கையையும், சினையாகு பெயராய் யானையையும் உணர்த்திய இருமடியாகு பெயர். எந்தை அவன்-எம் தந்தையாகிய அவன். பற்று-துணை. 'அவன் பற்று' என்பது, 'அவனது துணை' எனத் துணைக்கிழமைப் பொருளதாகிய ஆறாம் வேற்றுமைத் தொகை. 'காணலாமே' என்னும் ஏகாரம், இங்கு வினாப்பொருள் தந்தது. 'நெஞ்சே பொய்யர் பொய்களை எல்லாம் மெய்யென்று கருதாதே போந்து அவன்பற்றே பற்றாகக் காணில் அல்லால் காணலாமே' என முடிக்க. இனி, 'அல் ஆல் கடல்' எனப் பிரித்து இயைத்து, 'இருள் நிறைந்த கடல்' எனப் பொருள்கொண்டு, 'காணின் காணலாமே' என முன்னைத் திருப்பாடல்களிற் போலவே உரைத்தலும் ஆம். 'தென்கழி' என்பதும் பாடம்.
நெடியானும் மலரவனும் நேடி யாங்கேநேருருவங் காணாமே சென்று நின்ற படியானைப் பாம்புரமே காத லானைப்பாம்பரையோ டார்த்த படிறன் தன்னைச் செடிநாறும் வெண்தலையிற் பிச்சைக் கென்றுசென்றானை நின்றியூர் மேயான் தன்னைக் கடிநாறு பூஞ்சோலை யந்தண் நாகைக்காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே. பொருளுரை: திருமாலும் பிரமனும் தேடியும் காணமுடியாதபடி நீண்டு வளர்ந்த உருவமுடையவனாய், பாம்புரத்தை விரும்பியவனாய், பாம்பினை இடையில் கட்டிய வஞ்சகனாய், முடைநாற்றம் வீசிய தலையோட்டில் பிச்சைக்கு என்று திரிந்தவனாய், நின்றியூரை விரும்பித் தங்கிய பெருமானை மணங்கமழும் பூக்களை உடைய சோலைகளால் அழகும் குளிர்ச்சியும் பொருந்திய நாகைக் காரோணத்து என்றும் காணலாம். குறிப்புரை: நெடியான் - திருமால். நேடி - தேடி. 'உருவம் நேர் காணாமே' என்க. காணாமே -காணாதபடி. சென்று - நீண்டு. படி - வடிவம். பாம்புரம், நின்றியூர், இவை சோழநாட்டுத் தலங்கள். 'அரையோடு', 'அரையின்கண்' என்க. 'அரையோடு சேர' என. ஒருசொல் வருவித்தலும் ஆம். செடி - முடைநாற்றம். சென்றது, தாருகாவன முனிவரது பத்தினியர்பால் என்க. கடி நாறு - மணம் வீசுகின்ற.
திருமறைக்காடு பதிக வரலாறு: திருஞானசம்பந்தர் பாண்டிநாடு நோக்கிச் சென்ற பின்பு திருநாவுக்கரசர் திருமறைக்காட்டில் வதிந்து பணிசெய்திருந்த நாள்களில் போற்றிசைத்த திருப்பதிகங்களுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.திருநாவு.புரா. குறிப்பு: இத் திருப்பதிகம், 'கண்டாய்' என்னும் முடிபுடைய தொடர்களால் இறைவனது அருட்டன்மைகளை வகுத்தருளிச் செய்தது. 'கண்டாய்' என்பனவெல்லாம் முன்னிலையசைச் சொற்களாகக் கொள்ளப்படும். திருத்தாண்டகம் தூண்டு சுடரனைய சோதி கண்டாய்தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மணாளன் ஆம் சிவபெருமான் தூண்டப்பட்ட விளக்கொளி போன்ற ஒளியின னாய்ப் பழைய தேவர்களுக்கு முடிமணியாய்த் தன்னை நினையாதார் காண்பதற்கு அரிய கடவுளாய்த் தன்னைத் தியானிப்பவருக்கு மிக எளியனாய் வேண்டுவார் வேண்டுவதை ஈவானாய்ப் பேறாகிய தன்னை அடைவதற்குத் தானே ஆறாய்விரதங்களால் மாட்சிமைப்பட்ட மனமுடைய சான்றோர்களின் மனத்தானாக உள்ளான். குறிப்புரை: தூண்டப்பட்ட விளக்கு மிக்க ஒளியுடையதாகு மாகையால். இறைவனை, 'தூண்டு சுடர் அனையசோதி' என்றருளினார். சூளாமணி - தலையில் அணியும் மணி; இது பெருவிலையுடைய தாய் ஒர் அரிய மணியாய் இருக்கும். "கருதுவார்க்கு ஆற்ற எளியான்" எனப் பின்னர் அருளிச் செய்தமையால், முன்னர், 'கருதாதார்க்கு' ஆற்ற அரியான் என்பது கொள்ளப்படும். "காண்டற்கு" என்பது பின்னரும் சென்று இயையும். எனவே, அன்பரல்லாதார்க்குச் சால அரியனாயும், அன்பர்க்குச் சால எளியனாயும் நிற்பன் என்பது உணர்த்தியருளியவாறாதல் அறிக. 'வேண்டுவது' என்னும் ஒருமை, இனப்பொதுமை உணர்த்தி நின்றது.ஆகவே, அது, வேண்டப்படுவன பலவற்றையும் குறிக்கும். உலகவர்க்கு அவரவர் வினைவழியால் எழும் விருப்பத்தினை, அவர்க்குத்தோன்றாது, அவரும் பிறருமாகிய உயிர்கட்குப் பின்னும், அவரின் மேம்பட்ட தெய்வங்கட்குப் பின்னும், சடமாகிய பௌதிகங்கட்குப் பின்னும் கரந்து நின்றும், அடியவர் தன்மாட்டு வைத்த அன்பின்வழித் தோன்றும் விருப்பத்தினை, அவர்க்குக் கன்றை நினைந்துருகும் தாய்ப்பசுவின் முலையிற் பால்தானே விம்மியொழுகுவதுபோல வெளிப்பட்டு நின்றும் முடித்தருளுதலை, "வேண்டுவார் வேண்டுவதே ஈவான்" என்று அருளிச்செய்தார். "ஈவான்" என்றதனால் அங்ஙனம் முடித்தல் கைம்மாறற்ற கருணை காரணமாகவன்றிப் பிறிதொன்றான் அன்று என்பது விளங்கும்.'மாண்ட மனத்தார்' என்றருளிச் செய்தார். மாண்ட - மாட்சிமைப்பட்ட. இவ்வெச்சம் இடப்பெயர் கொண்டதென்க. மணாளன் - அழகன். இத்திருத்தாண்டகங்கள் முன் இரண்டு சீர்களும் மூவசைச் சீராகவும், பின் இரண்டு சீர்களும் ஈரசைச் சீராகவும், அவற்றுள்ளும் நான்காஞ்சீர் தேமாவாகவும் வந்த நாற்சீர்த் தூக்கு இரண்டானாய அடிகளால் வருதலேயன்றி, ஒரு தூக்கின் முதற்சீர் ஈரசையாய் வெண்டளை தட்டு நிற்கவும், இரண்டாஞ் சீர் ஈரசையாய்ப் பெரும்பாலும் வெண்டளையும், சிறுபான்மை ஆசிரியத் தளையும் தட்டு நிற்கவும் வருதலும் உண்டாகலின் இத்திருப்பாடலின் மூன்றாம் அடியின் இரண்டாந் தூக்கின் முதலிரண்டு சீர்கள், "மெய்ந்நெறிகண்டாய்" என நின்றன.
கைகிளரும் வீணை வலவன் கண்டாய்காபாலி கண்டாய் திகழுஞ் சோதி மெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்மெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய் பைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்பராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய் வைகிளரும் கூர்வாட் படையான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: கைகளால் ஒலிக்கப்படும் வீணையை வாசிப்பதில் வல்லவனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய் ஒளி விளங்கும் ஞான விளக்குப்போன்ற வடிவினனாய் மெய் அடியார் உள்ளத்தில் வெளிப்பட்டுத் தோன்றும் வித்தாய்ப் படம் எடுக்கும் நாகத்தை அணிந்தவனாய் மேலாளரையும் கீழ்ப்படுத்த மேலானாய்ப் பாசூரை உகந்தருளியிருப்பவனாய்க் கூர்மை மிக்க வாட்படையை உடையவனாய் மறைக்காட்டுள் உறையும் மணாளன் உள்ளான். குறிப்புரை: கைகிளரும் வீணை-கைகள் மிக்குத் தோன்றுதற்கு ஏதுவாகிய வீணை. 'வல்லவன்' என்பது இடைக்குறைந்து நின்றது. 'மெய்சோதி கிளரும்' என மாற்றி, 'திருமேனிஒளி மிகுகின்ற' என உரைக்க. 'கிளரும்' என்றது. சினைவினையை முதலோடு சார்த்தியது. முளைப்பது போன்று வெளிப்பட்டுத் தோன்றுதல்பற்றி, "வித்து" என்றருளினார். பை - படம். பாசூர், தொண்டைநாட்டுத்தலம். வை - கூர்மை. "வாள்" என்றது மழுவை.
சிலந்திக் கருள் முன்னஞ் செய்தான் கண்டாய்திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய் நிலந்துக்க நீர்வளிதீ யானான் கண்டாய்நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய் சலந்துக்க சென்னிச் சடையான் கண்டாய்தாமரையான் செங்கண்மால் தானே கண்டாய் மலந்துக்க மால்விடையொன் றூர்ந்தான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறையும் மணாளன் முன்னொரு கால் சிலந்திக்கு அருள் செய்தவனாய், திரிபுரங்களைத் தீ மடுத்தவனாய், நிலம் அதனைச் சூழ்ந்தநீர், தீ, காற்று என்ற பூதங்களில் எங்கும் பரவி இருப்பவனாய், உருவமும் உருவம் அற்ற நிலையும் உடைய வனாய்க் கங்கை தங்கிய சடையினனாய்ப் பிரமனும் திருமாலும் தானேயாய்க் களங்கம் நீங்கிய பெரிய விடை ஒன்றினை இவர்பவனாய் அடியார்கள் மனக்கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான். குறிப்புரை: சிலந்திக்கு அருள்செய்தமையை மேலே (ப. பா. காண்க. "துக்க" என்பன மூன்றும், 'தொக்க' என்பதன் மரூஉ. 'மறைந்த' என்பதே அவற்றின் பொருள். 'தொக்க' என்றே பாடம் ஓதுதலும் ஆம். 'சலம் துக்க சடை' என இயையும். "தானே" என்பதை, "தாமரையான்" என்பதற்கு முன்னே கூட்டுக. 'மலம்தொக்க' என்றது, தூய விடை என்றவாறு.
கள்ளி முதுகாட்டி லாடி கண்டாய்காலனையுங் காலாற் கடந்தான் கண்டாய் புள்ளி யுழைமானின் தோலான் கண்டாய்புலியுரிசே ராடைப் புனிதன் கண்டாய் வெள்ளிமிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்வெண்ணீற்றான் கண்டாய்நஞ் செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறையும் மணாளன் கள்ளிகள் படர்ந்த சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவனாய்க் காலனைக் காலால் ஒறுத்தவனாய்ப் புள்ளியை உடைய மான்தோலை உடுத்தவனாய்ப் புலித்தோலையும் ஆடையாகக் கொண்ட புனிதனாய், வெள்ளி போல ஒளி வீசும் பிறையை முடிமேல் சூடியவனாய், வெண்ணீறு அணிந்தவனாய்த் திருச்செந்தூரை விரும்பும் முருகனுக்குத் தந்தையாய் உள்ளான்.குறிப்புரை: கள்ளி - கள்ளிச்செடி, முதுகாடு - சுடுகாடு. கடந்தான் - வென்றான். உழை -மான்களில் ஒருவகை. வெள்ளிமிளிர் - வெள்ளி போல ஒளிவிடுகின்ற. "வள்ளி மணாளன்" என்றது, 'முருகன்' என்னும் ஒரு சொற்றன்மைத்தாய், "நம்" என்றதனோடு தொகைநிலை வகையான் இயைந்து நின்றது. 'நம் முருகன்' என்றருளியது, சிவபெருமானுக்கு அடியராயினார்க்கெல்லாம் இளம்பெருமானடிகளாய் நிற்றல் கருதி, அவற்குத் தாதை யாயினமையை எடுத்தோதியதனால், கணபதியை அருளி, தனதடி வழிபடும் அவர் இடர்களைக் கடிதல் போல, இப்பெருமானை அருளி அவரது பகைகளைக் கடிகின்றமை பெற்றாம். பகையாவது வினையேயாகலின், அப்பெருமானது கைவேலினை, "வினை ஓட விடும் கதிர்வேல்"என்றருளிச் செய்தார், அவரைத் தலைப்பட்டு நின்ற அருணகிரிநாத அடிகள் என்க.
மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய் ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய் ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய் வாரி மதகளிறே போல்வான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறையும் மணாளன் மிகவும் முழங்குகின்ற ஒலியை உடைய நீரின் வடிவினனாய், தழல் போன்ற சிவந்த மேனியை உடைய முதல்வனாய், ஏரி நீர் நிறைந்ததனை ஒத்த செல்வனாய்ச் சிறந்த அடியவர்களுக்கு இன்பம் விளைவிப்பவனாய், ஆரியனாய்த் தமிழனாய், அண்ணாமலையில் உகந்தருளியிருக்கும் தலைவனாய், வெள்ளம் போல மதத்தைப் பெருக்குகின்ற மதயானை போல்வானாய் உள்ளான். குறிப்புரை: மூரி முழங்கு ஒலிநீர் - மிகமுழங்குகின்ற முழக்கத்தினையுடைய நீர்; என்றதுகடல் நீரையும் மழை நீரையும். முழுத்தழல் - நிரம்ப எரிகின்ற நெருப்பு. 'பொங்கழலுருவன்'என்றருளிச் செய்ததும் இவரையே என்க. ஆரியன் - ஆரியமொழியாய் இருப்பவன். தமிழன் - தமிழ் மொழியாய் இருப்பவன். சிறப்புடைய மொழிகள் இவை இரண்டல்லது பிறிதின்மையால், இவைகளையே ஒதியருளினார்; 'சத்தப் பிரபஞ்சம்' எனப்படும் மொழியாய் உள்ளவனும் இறைவனே என்றருளியவாறு. வாரிமதம் - வெள்ளம் போலும் மதம். 'மதம்' என்பது வடசொல்லாகலின் ககரம் மிகாது நிற்றலும் உடைத்தாயிற்று. இறைவனை மதயானையோடு உவமித்தது, வலிமையும் பெருமையும்பற்றி.
ஆடல்மால் யானை யுரித்தான் கண்டாய்அகத்தியான் பள்ளி யமர்ந்தான் கண்டாய் கோடியான் கண்டாய் குழகன் கண்டாய்குளிராரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய் நாடிய நன்பொருள்க ளானான் கண்டாய்நன்மையோ டிம்மைமற் றம்மை யெல்லாம் வாடிய வாட்டந் தவிர்ப்பான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் வெற்றி பொருந்திய பெரிய யானையைக் கொன்று அதன் தோலை விரித்துப் போர்த்தவனாய், கோடி என்ற தலத்தில் உறையும் இளையவனாய், அகத்தியான்பள்ளியையும், ஆரூரையும் கோயிலாகக் கொண்டவனாய், அடியவர்கள் விரும்பிய சிறந்த பொருள்கள் ஆவானாய், இப்பிறப்பிலும் மறுபிறப்பிலும் நன்மைகள் ஈந்து வாடிய துயரங்களைத் தவிர்ப்பானாய் உள்ளான். குறிப்புரை: ஆடல் - வெற்றி. அகத்தியான் பள்ளி, கோடிசோழநாட்டுத் தலங்கள். நாடிய - விரும்பிய. 'நன்மையோடு" என்பதனை 'நன்மையால்' எனக் கொள்க. நன்மையாவது, அருள். 'அருளால், வாட்டம் தவிர்ப்பான்' என இயையும். இம்மை - இப்பிறப்பு. அம்மை -வருபிறப்பு. "வாடிய" என்பது, எதிர்வில் இறப்பாய் "அம்மை" என்பதனோடு இயைந்தது. அவ்வெச்சம், தொழிற்பெயர் கொண்டது.
வேலைசேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய்விண்தடவு பூங்கயிலை வெற்பன் கண்டாய் ஆலைசேர் வேள்வி யழித்தான் கண்டாய்அமரர்கள் தாமேத்தும் அண்ணல் கண்டாய் பால்நெய்சேர் ஆனஞ்சும் ஆடி கண்டாய்பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி மாலையோர் கூறுடைய மைந்தன் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறையும் மணாளன் கடலில் தோன்றிய நஞ்சினைத் தன் கழுத்தளவில் அடக்கியவன். வானளாவிய பொலிவுடைய கயிலை மலைக்கு உரியவன். மிக்க அழகு பொருந்திய தக்கனுடைய வேள்வியை அழித்தவன். தேவர்கள் போற்றும் தலைவன். பால் நெய் முதலிய பஞ்ச கவ்விய அபிடேகம் உகந்தவன்.சீசைலத்தில் உறைபவன். அவனே கடல் நிற வண்ணனாகிய திருமாலை ஒருகூறாகத்தன் மேனியில் கொண்ட ஆற்றலுடையவன். குறிப்புரை: ஆல் ஐசேர் வேள்வி - மிக்க அழகு பொருந்திய வேள்வி. பருப்பதம், 'சீசைலம்' என்னும் தலம். பரவை மேனி மால்-கடல்நிறம்போன்ற நிறத்தினையுடைய திருமால்.
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்அந்தேன் தெளிகண்டாய் ஆக்கஞ் செய்திட் டிம்மை பயக்கும் இறைவன் கண்டாய்என்னெஞ்சே யுன்னில் இனியான் கண்டாய் மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்வெண்காடன் கண்டாய் வினைகள் போக மம்ம ரறுக்கும் மருந்து கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் அடியார்களுக்கு மறுமையைப் பயக்கும் அமுதமாய்ச் செல்வத்தைக் கொடுத்து இம்மையில் நலன்பயக்கும் தெளிந்த தேனாய், நம் மனத்தைவிட நமக்கு இனியவனாய், உண்மையான ஞானப்பிரகாசம் நல்கும் விளக்காய், திருவெண்காட்டில் உறைபவனாய், நம் தீவினைகள் நீங்குமாறு நம் மயக்கத்தைப் போக்கும் மருந்தாகவும் உள்ளான். குறிப்புரை: "அம்மை பயக்கும் அமிர்து" என்றது வேற்றுமை உருவகம். "அம்மை" என்றது, வீட்டுலகத்தை. ஆக்கம்செய்து - செல்வத்தைக்கொடுத்து.உன்னில் - நினைத்தால். வெண்காடு, சோழ நாட்டுத்தலம். போக - நீங்குமாறு. மம்மர் - மயக்கம்; அது, பொருளல்லவற்றைப் பொருளென்றுணர்வது. அதற்கு மாறாகின்றவன் இறைவனல்லது பிறிதின்மையின், "மம்மரறுக்கும் மருந்து" என்றருளினார்.
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய் ஆலின்கீழ் நால்வர்க் கறத்தான் கண்டாய்ஆதியு மந்தமு மானான் கண்டாய் பால விருத்தனு மானான் கண்டாய்பவளத் தடவரையே போல்வான் கண்டாய் மாலைசேர் கொன்றை மலிந்தான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: எல்லா நோய்களுக்கும் அடிப்படைக் காரணமான ஆணவ மலத்தைச் செயலறச் செய்யும் தலைவனாய், முத்தமிழும் நான்மறையும் ஆகியவனாய், கல்லால மரநிழலில் அமர்ந்து சனகர் முதலிய முனிவர் நால்வருக்கு அறத்தை மௌனநிலையில் உபதேசித்தவனாய், ஏனைய எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் அந்தமுமாக உள்ளவனாய்ப் பாலனும் விருத்தனுமாக வடிவு எடுத்தவனாய்ப் பெரியபவள மலைபோன்ற உருவினனாய், கொன்றைப் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவனாய், மறைக்காட்டு உறைகின்ற மணாளன் காட்சி வழங்குகின்றான். குறிப்புரை: 'நோய் மூலம்' என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகை, பின்முன்னாக, "மூலநோய்" என நின்றது. எல்லாத் துன்பங்கட்கும் மூலம், 'ஆணவம்' எனப்படும் அகஇருள். அதனை நீக்குவோன் இறைவனே என்றதாம். "அறத்தான்' என்பது, 'அறத்தைச் சொல்லியவன்' எனப் பொருள்தரும். 'பால விருத்தம்' என்பது உம்மைத் தொகையாய் நிற்ப, அதனோடு இறுதிநிலை புணர்ந்து, "பால விருத்தன்" என, வந்தது. 'எல்லாக் கோலங்களையும் உடையவன்' என்பது பொருள். மதுரைத் திருவிளையாடல்களில், விருத்த குமார பாலரான திருவிளையாடல் இங்கு நினைக்கத்தக்கது. மாலை சேர் - மாலையின்கண் சேர்ந்த. கொன்றை - கொன்றைப் பூ. "மலிந்தான்" என. உடைமையை, உடைய பொருளோடு சார்த்தியருளினார்.
அயனவனும் மாலவனும் அறியா வண்ணம்ஆரழலாய் நீண்டுகந்த அண்ணல் கண்டாய் துயரிலங்கை வேந்தன் துளங்க அன்றுசோதிவிர லாலுற வைத்தான் கண்டாய் பெயரவர்க்குப் பேரருள்கள் செய்தான் கண்டாய்பேரும் பெரும்படையோ டீந்தான் கண்டாய் மயருறு வல்வினைநோய் தீர்ப்பான் கண்டாய்மறைக்காட் டுறையும் மணாளன் தானே. பொருளுரை: மறைக்காட்டுள் உறைகின்ற மணாளன் பிரமனும் திருமாலும் அறியாத வகையில் தீத்தம்பமாய் நீண்டு உயர்ந்த தலைவன். இராவணன் துயரால் நடுங்குமாறு ஒளிவீசும் விரலால் அழுத்தியவன். தசக்கிரீவன் என்ற பழைய பெயரை உடைய அவனுக்கு இராவணன் என்ற பெயரையும் வழங்கிப் பல அருள்களையும் செய்தவன். அவனுக்கு மேம்பட்ட வாட்படையையும் ஈந்தவன். அடியார்களுக்கு மயக்கத்தைத் தரும் ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களைத் தீர்ப்பவன்.குறிப்புரை: "அயனவன், மாலவன்" என்புழி நின்ற "அவன்" என்பன பகுதிப்பொருள் விகுதிகள். 'துயரால் துளங்க" என உருபு விரித்துரைக்க.துளங்க - நடுங்குமாறு. "வைத்தான்" என்பது 'ஊன்றினான்' என்னும் பொருட்டாய் நின்றது. 'பெயர' என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. 'மீட்சி எய்த' என்பது பொருள். பேர், 'இராவணன்' என்பது. இதற்கு 'அழுதவன்' என்பது பொருள். இஃது அவன் திருக்கயிலையின் கீழ்க்கிடந்து அழுதமையை என்றும் மறவா திருத்தற்பொருட்டுக் கொடுக்கப்பட்டது என்க. "பேரும்" என்னும் உம்மை, எச்சம். மயர் உறு - மயக்கத்தால் வருகின்ற. வினைநோய் -வினையாகிய நோய்; உருவகம். திருநாவுக்கரசர் புராணம் வேணு புரக்கோன் எழுந்தருளவிடைகொண் டிருந்த வாகீசர் பூணும் அன்பால் மறைக்காட்டில்புனிதர் தம்மைப் போற்றிசைத்துப் பேணி இருந்தங் குறையுநாள்பெயர்வார் வீழி மிழலைஅமர் தாணு வின்தன் செய்யகழல்மீண்டுஞ் சார நினைக்கின்றார். -தி.சேக்கிழார். சங்கற்பநிராகரணம் வாக்கியலி னாலே மறைவனத்து வன்கதவைநீக்கினன்றாள் நீங்காதென் னெஞ்சு.- உமாபதிசிவம்.
திருவாரூர் பதிக வரவாறு: சுவாமிகள் திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளமர் முதலான பதிகளை வணங்கி, புற்றிடங்கொண்டான்றன் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் பெறலாவதென்றோ? என்ற சிந்தையராய்த் திருவாரூர் அடைந்து ஆங்கு எதிர் கொள்ளும் திருத்தொண்டர் தம்முடன் திருவீதி வலம் வந்து தேவாசிரியன்முன் வந்திறைஞ்சி, கண்கள் துளிமாரிபொழியத் திருமூலட்டானரை வணங்கிப் பாமாலை பாடிப் பணி செய்து வீற்றிருந்து, திருவாதிரை நாளில் வீதிவிடங்கப் பெருமான் பவனியைச் சேவித்துப் போற்றி, திருப்புகலூரிறைவரைக் கும்பிட்டேத்தும் விருப்புடையராய்த் திருவுள்ளம் திருவாரூரிலே பிரியாது நிற்கத் திருமேனி மட்டில் அங்கு நின்றும் பிரிந்து வரத் திருவாரூர் தொழுது சென்றார். அங்ஙனம் செல்லும்பொழுது, திருவுள்ளம் அங்கே நின்றமையை ஒருவாறு விளக்கி, "திருவாரூரான்காண் என் சிந்தையானே" என்றருளிச் செய்தது போலும் இத்திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இத் திருப்பதிகம், 'காண்' என்னும் முடிபுகளையுடைய தொடர்களால் இறைவனது தன்மைகளை உணர்த்துவது. 'காண்' என்பது அசைநிலையாகவே கொள்ளப்படும் என்க.திருத்தாண்டகம் கைம்மான மதகளிற்றி னுரிவை யான்காண்கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் அம்மான்காண் ஆடரவொன் றாட்டி னான்காண்அனலாடி காண்அயில்வாய்ச் சூலத் தான்காண் எம்மான்காண் ஏழுலகு மாயி னான்காண்எரிசுடரோன் காண்இலங்கு மழுவா ளன்காண் செம்மானத் தொளியன்ன மேனியான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: துதிக்கையையும், பெருமையையும் மதத்தையும் உடைய யானைத் தோலைப் போர்த்தியவனாய் நீலகண்டனாய், கண் பொருந்திய நெற்றியை உடையவனாய், எல்லாருக்கும் தலைவனாய்ப் படம் எடுத்து ஆடும் பாம்பு ஒன்றினை ஆட்டியவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய்க் கூரிய சூலத்தை ஏந்தியவனாய், எங்களுக்குத் தலைவனாய், ஏழுலகும் பரந்தவனாய், எரிகின்ற விளக்குப் போல்பவனாய், விளங்கும் மழுப்படையை ஏந்தியவனாய்ச் செந்திற வானம் போன்ற மேனியனாய்த் திருவாரூரில் உறைபவனாய், என் மனக் கண்ணிற்குச் சிவபெருமான் காட்சி வழங்குகின்றான். குறிப்புரை: 'கை, மானம், மதம்' என்ற மூன்றும் 'களிறு' என்ற ஒன்றனோடு தனித்தனி முடிந்தன. அம்மான் - அனைவர்க்கும் தலைவன்; இதில், அகரம், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச்செய்தார். செம்மானம், 'செவ்வானம்' என்பதன் மரூஉ. என் சிந்தையான் - என்உள்ளத்தில் புக்கவன்; இதனையே, எழுவாயாகக் கொண்டுரைக்க.
ஊனேறு படுதலையி லுண்டி யான்காண்ஓங்காரன் காண்ஊழி முதலா னான்காண் ஆனேறொன் ரூர்ந்துழலும் ஐயா றன்காண்அண்டன்காண் அண்டத்துக் கப்பா லான்காண் மானேறு கரதலத்தெம் மணிகண் டன்காண்மாதவன்காண் மாதவத்தின் விளைவா னான்காண் தேனேறும் மலர்க்கொன்றைக் கண்ணி யான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: புலால் மணம் தங்கிய மண்டையோட்டில் உணவைப் பெற்று உண்பவனாய், ஓங்கார வடிவினனாய், ஊழிகளுக்குத் தலைவனாய்க் காளையை இவர்பவனாய், திருவையாற்றில் உறைபவனாய், எல்லா உலகங்களும் பரவினவனாய், அண்டங்களுக்கு அப்பாலும் பரவியவனாய், கையில் மானை ஏந்திய நீலகண்டனாய்ப் பெருந்தவத்தினனாய்த் திருவாரூர்ப் பெருமான் என் மனக் கண்ணிற்குக் காட்சி வழங்குகின்றான். குறிப்புரை: இதனுள் வந்த ஏறுதல், பொருந்துதல். படுதலை - அற்ற தலை. ஓங்காரம், மொழியின் நுண்ணிலை பருநிலைகளைக் குறிக்கும் குறி. இந்நிலைகள், 'வாக்குக்கள்' எனப்படும். நுண்ணிலை, 'சூக்குமை, பைசந்தி' என இரண்டாகவும், பருநிலை, 'மத்திமை, வைகரி' என இரண்டாகவும் சொல்லப்படும். இந்நால்வகை வாக்குக்களே பொருள்களின் துணிபுணர்வுக்குக் காரணமாகும். ஊழி - படைப்புத்தொடங்கி, அழிப்புக்காறும் உள்ள கால அளவு. முதல் - முதல்வன்; முதற்கண் உள்ளவன், 'ஊழிக்கண் முதல் ஆனான்' என்க. இனி, 'ஊழிக்கு முதல்வன் ஆனான்' எனக் கொண்டு, 'எல்லாவற்றையும் நடத்தும் அக்காலத்தை நடத்தும் தலைவன் ஆயினான்' என்றுரைப்பினும் அமையும். 'ஐயாறன்' என்பது ஒரு பெயர்த்தன்மைத்தாய், 'உழலும்' என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. 'தவமும், தவப்பயனும் ஆகின்றவன்' என்க.
ஏவணத்த சிலையால்முப் புரமெய் தான்காண்இறையவன்காண் மறையவன்காண் ஈசன் தான்காண் தூவணத்த சுடர்ச்சூலப் படையி னான்காண்சுடர்மூன்றுங் கண்மூன்றாக் கொண்டான் தான்காண் ஆவணத்தால் என்றன்னை ஆட்கொண் டான்காண்அனலாடிகாண் அடியார்க் கமிர்தா னான்காண் தீவணத்த திருவுருவிற் கரியுரு வன்காண்திருவாரூ ரான்காண் என்சிந்தை யானே. பொருளுரை: திருவாரூரில் உள்ள பெருமான் அம்பைச் செலுத்தும் வில்லால் முப்புரத்தையும் அழித்தவன். அவன் இறைவனாய், மறை ஓதுபவனாய், நிர்விக்கினனாய்ப் பாவத்தை அழிக்கும் தூய ஒளியுடைய சூலப்படையினனாய், சூரியன் சந்திரன் அக்கினி என்பவரைத் தன் மூன்று கண்களாக உடையவனாய், ஏற்றமுறையால் என்னை அடிமை கொண்டவனாய்த் தீயில் கூத்து நிகழ்த்துபவனாய், அடியார்க்கு அமுதமாயினவன். தீப் போன்ற தன்னுடைய திருவுருவில் கழுத்தில் விடத்தாலாய கருமையை உடையவனாவான். அவன் என் சிந்தையான். குறிப்புரை: ஏ வண்ணத்த சிலை - அம்பை உடைத்தாகும் தன்மையை உடைய வில். மறையவன் - மறை ஓதுபவன். ஈசன் - ஆள்பவன். தூ வண்ணச் சுடர் -வெள்ளிய ஒளி; இது கூர்மை குறித்தவாறு. பாவத்தை அழித்தற்குத் தூயதாயிற்றென்பது உள்ளூறை, சுடர் மூன்றாவன; சூரியன், சந்திரன், நெருப்பு. இவை இறைவனிடத்து முறையே, 'வலக்கண்' இடக்கண், நெற்றிக்கண்' எனநிற்கும். ஆவணம்- அடிமையோலை; என்றது, அஃது உடையார், தம் அடிமையை எங்கிருப்பினும் விடாதுபற்றி ஈர்த்து ஆள்வதுபோல ஆண்டமையை. இனி, 'ஆ வண்ணத்தால் - ஏற்கும்வழியால்' என்றுரைப்பினும் அமையும். கரி உரு, மிடற்றில் உள்ளது; 'கரியுரியன்' என்பதே பாடம் எனக் கோடலுமாம்.
கொங்குவார் மலர்க்கண்ணிக் குற்றா லன்காண்கொடுமழுவன் காண்கொல்லை வெள்ளேற் றான்காண் எங்கள்பால் துயர்கெடுக்கு மெம்பி ரான்காண்ஏழ்கடலு மேழ்மலையு மாயி னான்காண் பொங்குமா கருங்கடல்நஞ் சுண்டான் தான்காண்பொற்றூண்காண் செம்பவளத் திரள்போல் வான்காண் செங்கண்வா ளராமதியோ டுடன்வைத் தான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: திருவாரூரில் உள்ள பெருமான் தேன் ஒழுகும் மலராலான முடி மாலையைச் சூடி குற்றாலத்தும் உறைபவன். கொடிய மழுப்படையும் வெண்ணிறக் காளை வாகனமும் உடையவன். எங்கள் துயரைப் போக்கும் தலைவன். ஏழ் கடல்களும் ஏழு மலைகளும் ஆகியவன். அலைகள் உயர்ந்த பெரும்பரப்புடைய கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். பொன்னால் ஆகிய தூணையும் பவளத் திரளையும் நிகர்ப்பவன். பிறையோடு சிவந்த கண்களை உடைய ஒளி வீசும் பாம்பினையும் உடன் வைத்தவன். அவன் என் சிந்தையான். குறிப்புரை: கொங்கு வார்-தேன் ஒழுகுகின்ற. 'கொல்லை. என்பதில் ஐ சாரியை. 'எங்கள்' என்றது அடியார்களை. 'போல்வான்' என்பதை. 'பொற்றூண்' என்பதனோடுங் கூட்டுக. 'அராவை' என இரண்டனுருபு விரிக்க.
காரேறு நெடுங்குடுமிக் கயிலா யன்காண்கறைக்கண்டன் காண்கண்ணார் நெற்றி யான்காண் போரேறு நெடுங்கொடிமேல் உயர்த்தி னான்காண்புண்ணியன்காண் எண்ணரும்பல் குணத்தி னான்காண் நீரேறு சுடர்ச்சூலப் படையி னான்காண்நின்மலன்காண் நிகரேது மில்லா தான்காண் சீரேறு திருமாலோர் பாகத் தான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் மேகங்கள் தவழும் பெரிய உச்சியை உடைய கயிலாய மலையிலும் இருப்பவன். நீல கண்டன். நெற்றிக்கண்ணன். காளை எழுதிய நீண்ட கொடியை மேல் உயர்த்தியவன். புண்ணியன், குணபூரணன். நீர் சுவறுதலுக்குக் காரணமான தீப்போன்ற அழிக்கும் சூலப்படையவன். மாசற்றவன். தன் நிகர் இல்லாதவன். சிறப்பு மிக்க திருமாலைத் தன் உடம்பின் ஒரு பாகமாக உடையவன். அவன் என் சிந்தையான்.குறிப்புரை: கார் - மேகம். நெடுங்குடுமி - உயர்ந்த சிகரம். 'போர் ஏற்றை நெடுங்கொடிமேல் உயர்த்தான்' என்க. 'பல்குணம்' என்றது, எண்குணங்களும் புலப்பாட்டு வகையாற் பலவாதல் பற்றி; 'அனந்த கல்யாண குணன்' என்னும் வழக்குண்மையும் உணர்க. நீர் ஏறு சுடர் - நீர் சுவறுதற்கு இடனாகும் தீ. சீர் -புகழ்.
பிறையரவக் குறுங்கண்ணிச் சடையி னான்காண்பிறப்பிலிகாண் பெண்ணோடா ணாயி னான்காண் கறையுருவ மணிமிடற்று வெண்ணீற் றான்காண்கழல்தொழுவார் பிறப்பறுக்குங் காபாலி காண் இறையுருவக் கனவளையாள் இடப்பா கன்காண்இருநிலன்காண் இருநிலத்துக் கியல்பா னான்காண் சிறையுருவக் களிவண்டார் செம்மை யான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் பிறையையும் பாம்பாகிய முடிமாலையையும் சடையில் உடையவன். பிறப்பற்றவன். ஆண், பெண் என்ற இருபகுப்பினை உடைய உருவத்தன். நீலகண்டன். வெண்ணீற்றன். தன் திருவடிகளை வழிபடுபவர்களுடைய பிறவிப்பிணியைப் போக்கும் காபாலக் கூத்தாடுபவன். கைகளில் பெரிய வளையல்களை அணிந்த பார்வதியை இடப்பாகமாகக் கொண்டவன். பெரிய நிலமாகவும் அதனைத் தாங்கிப் பாதுகாப்பவனுமாக உள்ளவன். சிறகுகளை உடைய அழகிய களிப்புடைய வண்டுகள் பொருந்திய செம்மைப் பகுதியை உடையவன். அவன் என் சிந்தையுளான். குறிப்புரை: 'பிறையும் அரவுமாகிய கண்ணி' என்க. 'பெண்ணோடு ஆண்' என்றது, பிறப்பெய்திய உயிர்களைக் குறித்தவாறு. 'மிடற்றான், வெண்ணீற்றான்' என்க. இறை - கை. 'இறையின்கண் வளையாள்' என்க. உருவம் - அழகு. நிலன் - நிலமாய் இருப்பவன். இயல் பென்றது, தாங்குதல், பயன்தரல் முதலியவற்றை. 'செம்மை' என்றது செம்பாதியை; அம்மை கூற்றைக் குறித்தருளியவாறு. வண்டு ஆர்த்தல், கூந்தலில் என்க. இயற்கை மணத்தை விரும்பி வண்டுகள் சென்று ஆர்த்தலின், 'வண்டார்குழலி' என்பது. அம்மைக்கு ஒரு பெயராதல் அறிக.
தலையுருவச் சிரமாலை சூடி னான்காண்தமருலகந் தலைகலனாப் பலிகொள் வான்காண் அலையுருவச் சுடராழி யாக்கி னான்காண்அவ்வாழி நெடுமாலுக் கருளி னான்காண் கொலையுருவக் கூற்றுதைத்த கொள்கை யான்காண்கூரெரிநீர் மண்ணொடுகாற் றாயி னான்காண் சிலையுருவச் சரந்துரந்த திறத்தி னான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் தலையில் பொருந்துமாறு தலைமாலையைச் சூடியவன்.மக்களும் தேவரும் உள்ள உலகின் மண்டையோட்டினைப் பிச்சைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை வாங்குபவன். பகைவர்களைத் துன்புறுத்தும் அஞ்சத்தக்க ஒளியை உடைய சக்கரத்தைப் படைத்தவன். சலந்தரனை அழித்தபிறகு அச்சக்கரத்தைத் திருமாலுக்கு வழங்கியவன். கொலைத் தொழிலைச் செய்யும் அஞ்சத்தக்க கூற்றுவனை உதைத்தவன். ஐம்பூதங்களும் ஆகியவன். வில்லிலிருந்து புறப்படும் அம்பினைச் செலுத்திய செயலை உடையவன். அவன் என் சிந்தையானே. குறிப்புரை: தலை உருவ - தலையில் கயிறு ஊடுருவுமாறு; 'தலை உருவாகிய வச்சிரமாலை' என்றுரைத்தலும் ஆம். தமர்கிளைஞர்; என்றது, தேவரையும் மக்களையும்; இவர் அனைவரும் அவனுக்கு அடியவராதல் பற்றி, 'தமர்' என்றருளினார். 'அலை ஆழி' என இயையும். அலைத்தல்- அழித்தல். ஆழி - சக்கரம். ஆக்கியது, சலந்தராசுரனை அழித்தற் பொருட்டு. கொள்கை - செய்கை. கூர் - மிக்க. 'சிலையால்' என உருபு விரிக்க. சரம் - அம்பு. துரந்த - செலுத்திய.
ஐயன்காண் குமரன்காண் ஆதி யான்காண்அடல்மழுவாள் தானொன்று பியன்மே லேந்து கையன்காண் கடற்பூதப் படையி னான்காண்கண்ணெரியால் ஐங்கணையோன் உடல்காய்ந் தான்காண் வெய்யன்காண் தண்புனல்சூழ் செஞ்சடை யான்காண்வெண்ணீற்றான் காண்விசயற் கருள்செய் தான்காண் செய்யன்காண் கரியன்காண் வெளியோன் தான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் தலைவனாய், என்றும் இளையவனாய், எல்லோருக்கும் ஆதியாய், மழுப்படையைத் தோளில் சுமந்த கையனாய்க் கடல் போன்ற பூதப்படையனாய்க் கண் எரியால் மன்மதன் உடலை எரித்தவனாய், வெப்பம் உடையவனாய்க் கங்கை சூழ்ந்த செஞ்சடையனாய், வெண்ணீறு அணிந்தவனாய், அருச்சுனனுக்கு அருள் செய்தவனாய், வெண்மை, செம்மை, கருமை என்ற எல்லா நிறங்களையும் உடையவனாய் என் சிந்தையில் உள்ளான்.குறிப்புரை: ஐயன் - தமையன்; கணபதி. ஆதி -உடையவன். 'செய்யன்' முதலாக அருளியது. 'எல்லா நிறங்களும் உடையவன்' என்றதாம். இத்திருத்தாண்டகத்தின் மூன்றாம் அடி மூன்றாஞ்சீர் விளச்சீராய் வந்தது.
மலைவளர்த்த மடமங்கை பாகத் தான்காண்மயானத்தான் காண்மதியஞ் சூடி னான்காண் இலைவளர்த்த மலர்க்கொன்றை மாலை யான்காண்இறையவன்காண் எறிதிரைநீர் நஞ்சுண் டான்காண் கொலைவளர்த்த மூவிலைய சூலத் தான்காண்கொடுங்குன்றன் காண்கொல்லை யேற்றி னான்காண் சிலைவளர்த்த சரந்துரந்த திறத்தி னான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே.பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் பார்வதி பாகனாய்ச் சுடுகாட்டில் இருப்பவனாய்ப் பிறை சூடியவனாய், இலைகளிடையே வளர்ந்த கொன்றை மலர் மாலையைச் சூடியவனாய், எல்லோருக்கும் தலைவனாய்க் கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவன். முல்லை நிலத் தலைவனான திருமாலை இடபமாக உடைய அப்பெருமான் கொடுங்குன்றத்தும் உறைபவன். கொல்லும் முத்தலைச் சூலத்தை உடைய அப்பெருமான் வில்லில் பூட்டிய அம்பினைச் செலுத்தும் ஆற்றலுடையவன். அவன் என் சிந்தையான்.குறிப்புரை: இலை வளர்த்த-இலையால் வளர்க்கப்பட்ட. கொலை வளர்த்த-கொல்லும் ஆற்றலை மிகக்கொண்ட. கொடுங்குன்றம்-பிரான்மலை;பாண்டிநாட்டுத் தலம்.
பொற்றாது மலர்க்கொன்றை சூடி னான்காண்புரிநூலன் காண்பொடியார் மேனி யான்காண் மற்றாருந் தன்னொப்பா ரில்லா தான்காண்மறையோதி காண்எறிநீர் நஞ்சுண் டான்காண் எற்றாலுங் குறைவொன்று மில்லா தான்காண்இறையவன்காண் மறையவன்காண் ஈசன் றான்காண் செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் தான்காண்திருவாரூ ரான்காண்என் சிந்தை யானே. பொருளுரை: திருவாரூர்ப் பெருமான் தன்னை ஒப்பார் இல்லாதவன். பூணூல் அணிந்து நீறு பூசி வேதம் ஓதி, பொன் போன்ற மகரந்தம் உடைய கொன்றைப் பூச்சூடி, ஒன்றாலும் குறைவில்லாத் தலைவனாகிய அப்பெருமான் கடல் நஞ்சு உண்டு வேதவடிவினனாய் எல்லாரையும் நிருவகிப்பவனாய்ப் பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். அவன் என் சிந்தையான்.குறிப்புரை: பொன் தாது கொன்றை மலர் - பொன்போலும் மகரந்தத்தினை உடைய கொன்றை மலர். ஓதி - ஓதுபவன். எறிநீர் - கடல்; அன்மொழித்தொகை. செற்றான்-அழித்தான்.
திருவாரூர் பதிக வரலாறு: சுவாமிகள், திருவாரூரில் புற்றிடங்கொள் நிருத்தரைக் காலங்களில் கும்பிட்டுத் திருவீதிப்பணி செய்திருந்து பரவிய திருப்பதிகங்கள் பலவற்றுள் ஒன்று இத் திருப்பதிகம்.திருத்தாண்டகம் உயிரா வணமிருந் துற்று நோக்கியுள்ளக் கிழியி னுருவெழுதி உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி அயிரா வணமேறா தானே றேறிஅமரர்நா டாளாதே ஆரூ ராண்ட அயிரா வணமேயென் னம்மா னேநின்அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே.பொருளுரை: அயிராவணம் என்ற யானையை இவராது காளைமீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி. என் தலைவனே! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர். குறிப்புரை: உயிரா வணம்' என்றுரைத்தலும் ஆம். நுண்மணலாலியன்ற சிவலிங்கத் திருமேனியனே என்று உரை செய்தல் இத்தலச் சிறப்பிற்கு ஏற்றதாகும். "அயிராவணம் ஏறாது" என்பது முதல் "அம்மானே" என்பது காறும் உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க. "வாழ்தி" என்பதன்பின், 'இங்ஙனம் என்பது வருவித்து இயைக்க. அல்லாதாரே - உனது இன்பத்தைப் பெறுதற்கு உரியர் அல்லாதவரே.
எழுது கொடியிடையார் ஏழை மென்றோள்இளையார்கள் நம்மை யிகழா முன்னம் பழுது படநினையேல் பாவி நெஞ்சேபண்டுதான் என்னோடு பகைதா னுண்டோ முழுதுலகில் வானவர்கள் முற்றுங் கூடிமுடியால் உறவணங்கி முற்றம் பற்றி அழுது திருவடிக்கே பூசை செய்யஇருக்கின்றான் ஊர்போலும் ஆரூர் தானே. பொருளுரை: தீ வினையை உடைய மனமே! உனக்கும் எனக்கும் முற்பட்ட பகை ஏதேனும் உண்டோ? கொடி போன்ற இடையையும் மெல்லிய தோள்களையும் மடப்பத்தையும் உடைய இளைய மகளிர் நம் மூப்பினை நோக்கி இகழ்வதன்முன் பயன்பட நினைவாயாக. உலகிலுள்ள தேவர்கள் எல்லோரும் எஞ்சாது கூடித் தலையால் முழுமையாக வணங்கி முன்னிடத்தை அடைந்து அழுது அவன் திருவடிக்கண் பூசனை புரியுமாறு அவன் உகந்தருளியிருக்கின்ற ஆரூரை நினையாது பிறிதொன்றனைப் பழுதுபட நினையாதே! குறிப்புரை: எழுதுவோர், மடலேறும் ஆடவர். 'கொடி இடையார்' என்பது, 'மகளிர்' என்னும் பொருட்டாய் நின்றது. 'கொடியிடையாராகிய இளையார்கள்' என இயையும். ஏழை -எளிமை. அவர் இகழ்தல், முதுமை நோக்கியென்க. "பழுதுபட நினையேல்" என்பது, 'பயன்பட நினை' எனப் பொருள்தந்து நின்றது. பாவிநெஞ்சு - பாவத்தை உடைய மனம். 'பகை தான் உண்டோ" என்றது பழுதுபட நினைத்தலை உட்கொண்டு. முழுதுலகில் - உலகம் முழுவதிலும். அழுதல் அன்பின் செயல். 'திருவடிக்குச் செய்ய' என இயையும். போலும், அசைநிலை. 'இருக்கின்றான் ஊராகிய ஆரூர் பழுதுபடநினையேல்' எனக் கூட்டுக.
தேரூரார் மாவூரார் திங்க ளூரார்திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக் காரூரா நின்ற கழனிச் சாயற்கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும் ஓரூரா வுலகெலா மொப்பக் கூடிஉமையாள் மணவாளா என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே. பொருளுரை: தேரூர், மாவூர், திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி,நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய்? குறிப்புரை: 'தேரூர், மாவூர், திங்களூர்' மூன்றும் வைப்புத் தலங்கள். கார் - நீர். சாயல் -அழகு. கண் ஆர்ந்த - கண்ணுக்கு நிறைந்த. 'கழனி ஓரூர்' என இயையும். "ஓரூர்" என்புழி நின்ற ஊர், ஆகுபெயர். 'ஓரோர் ஊர்' எனற்பாலதாய அடுக்குத் தொகுத்தலாயிற்று. தேரூரார், மாவூரார், திங்களூரார் முதலாக ஓரோர் ஊராராக உலகில் உள்ளவரெல்லாம் ஒருங்குகூடி 'திங்கள் சூடி உமையாட்கு மணவாளனாய் இருப்பவனே' என்று வாழ்த்தி, 'ஆரூரா ஆரூரா' என்கின்றார்கள்; நீ எங்கே உள்ளாய்;எனக் கொண்டு கூட்டியுரைக்க. இங்ஙனம் அரிது பொருள்கொள்ள அமைதலும் அருட்டிருப் பாடல்களுக்கு இயல்பென உணர்க.
கோவணமோ தோலோ உடை யாவதுகொல்லேறோ வேழமோ ஊர்வது தான் பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித் திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர் ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்அறியேன்மற் றூராமா றாரூர் தானே. பொருளுரை: தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ? ஊர்வது காளையோ, யானையோ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர்திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ? குறிப்புரை: கோவணம் - கீழ் வாங்கிக்கட்டும் உடை. பொருந்தாதார் வாழ்க்கை -நன்மக்களோடு கூடாதவர் வாழ்க்கை; இரந்து உயிர்வாழ்தல். திருந்தாமை -அழகன்மை. இது பண்பியை உணர்த்திற்று. மேலனவற்றோடு இயைய, 'திருந்தியதோ' என்பது வருவிக்க. வைத்து - படைத்து. 'செந்தீ வண்ணர் அம்மானார்தாம்அறியேன் எனக்கொண்டு கூட்டுக.
ஏந்து மழுவாளர் இன்னம் பராஅர்எரிபவள வண்ணர் குடமூக் கிலார் வாய்ந்த வளைக்கையாள் பாக மாகவார்சடையார் வந்து வலஞ்சு ழியார் போந்தா ரடிகள் புறம்ப யத்தேபுகலூர்க்கே போயினார் போரே ரேறி ஆய்ந்தே யிருப்பார்போ யாரூர் புக்கார்அண்ணலார் செய்கின்ற கண்மா யமே. பொருளுரை: மழுப்படையை ஏந்திய பெருமான் இன்னம்பரில் இருந்தார். ஒளி வீசும் பவள நிறத்தை உடைய அவர் குடமூக்கில் இருந்தார். நீண்ட சடையை உடைய அப்பெருமானார் வளையல் அணிந்த கைகளை உடைய பார்வதி பாகராக வலஞ்சுழிக்கு வந்தார். அங்கிருந்து புறம்பயத்துக்கும் அடுத்துப் புகலூருக்கும் போயினார். போரிடும் காளை மீது இவர்ந்து தம் இருப்பிடத்தை முடிவு செய்தவர் போலத் திருவாரூரிலே குடிபுகுந்துவிட்டார். அப்பெருமானார் செய்வன யாவும் கண்கட்டுவித்தை போல உள்ளன.குறிப்புரை: 'மழுவாளராய்' எனவும், 'பவள வண்ணராய்' எனவும், 'வார்சடையாராய்' எனவும் எச்சமாக்குக. இன்னம்பரார் முதலிய மூன்று வினைக் குறிப்புக்களிடத்தும், 'ஆயினார்' எனபது விரிக்க. ஆய்ந்தே - நிலையாக வாழ்தற்குரிய ஊரைத் தேடிக் கொண்டே. 'பல ஊர்களில் தங்கித் தங்கி, ஆரூரில் குடி புகுந்து விட்டார்' என்பதாம். இங்ஙனம் கூறியது பலவிடத்துப் பொதுநிலையில் இருக்கக் கண்ட அவரை, திருவாரூரில் சிறந்து வீற்றிருக்கக் கண்டமைபற்றி என்க. "திருவாரூர் கோயிலாக் கொண்டது" எனப் பின்னரும் அருளிச் செய்வார். இவ்வாறு புக்கதை, 'கண்மாயம்' என்றது, பிற தலங்களினின்றும் சென்றமை அறியப்படாமையால் என்க. கண் மாயம் - மறைந்தவாறு அறியாதபடி மறைதல்.
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால் வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால் மருவாகி நின்னடியே மறவே னம்மான்மறித்தொருகாற்பிறப்புண்டேல் மறவா வண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்செம்பொனே கம்பனேதிகைத்திட் டேனே. பொருளுரை: கருப்பையில் துளியாய்ப்புகுந்து நெகிழ்ந்த பிண்டமாய் இருந்து தழைத்து மூளையும் கருநரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து ஓர் உருவம் எய்தி இவ்வுலகில் பிறப்பெடுத்துத் தாய் ஒருத்தியால் வளர்க்கப்பட்ட உயிரும் அந்நிலையில் நிலைத்து நில்லாது எந்த நேரத்திலும் உடம்பை விடுத்து நீங்கலாம். ஆதலின் அடியேன் உன் திருவடிகளைப் பொருந்தி அவற்றை மறவாமல் இருக்கின்றேன். மீண்டும் அடியேனுக்கு ஒருபிறவி உண்டாகுமாயின் உன்னை மறவாதிருத்தல் கூடுங்கொல்லோ என்று ஐயுற்றுத் திருவாரூர் மணவாளா! திருத்தெங்கூராய்! செம்பொன் ஏகம்பனே! என்று உன் திருப்பெயர்களைக் கூறியவாறு கலங்குகின்றேன். குறிப்புரை: "கருவாகி" என்றது, கருப்பையில் துளியாய்ப் புக்க நிலையை. 'குழம்பியிருந்து' என்பது தொகுத்தலாயிற்று, குழம்பியிருத்தலாவது, 'கை, கால், தலை' முலியன பிரிந்து தோன்றாது நெகிழ்ந்த பிண்டமாய் இருத்தல். கலித்து-தழைத்து; அவை பிரிந்து தோன்றி, "மூளை" என்புழியும் உம்மை விரிக்க. கருமை, இங்குப் பசுமையைக் குறித்தது. "ஒன்றாகி" என்பதனை, 'ஒன்றாக' எனத் திரிக்க. "உருவாகி" என்றது, 'மகனாகி' என்றவாறு, "உயிரார்" என்புழி, ஆர்விகுதி, இழித்தற்கண் வந்தது. கடைபோகாமை இழிபென்க. "உயிராரும்" என்னும் சிறப்பும்மையை, "வளர்க்கப்பட்டு" என்பதனோடு கூட்டுக. "கருவாகி" என்பது முதல், "வளர்க்கப்பட்டு" என்பதுகாறும், உயிர், மகனாய்த் தோன்றுதற்கண் உள்ள அருமையை எடுத்தோதியவாறு. அங்ஙனம் தோன்றியும், அந்நிலையிலே நிலைத்து நில்லாது நீங்குதல்பற்றி, "கடைபோகார்" என்றருளிச் செய்தார். கடைபோதல் - தான் உள்ள துணையும் அவ்வொரு நிலையிலே நிற்றல். எந்த நேரத்திலும் இறப்பு உளதாதலைக் குறித்து இரங்கியவாறு. இரக்கத்திற்குக் காரணம், பின்னர் அருளினார். மருவு ஆகி-பொருந்துதல் ஆகி, 'நின் அடியே மருவாகி' எனக் கூட்டுக. "மறவாவண்ணம்" என்புழி, 'நினைந்து' என்பது எஞ்சி நின்றது. எனவே, 'இறவாது இப்பிறப்பிலே இருப்பேனாயின் மறத்தல் நிகழாமைபற்றிச் செம்மாந்திருப்பேன்; அது கூடாதாகலின், ஒருகால் மீளப் பிறப்பு உண்டாகுமாயின், மறவாமை கூடுங்கொலோ என நினைந்து மனங் கலங்குகின்றேன்' என்றருளியவாறாம். "துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு இறப்பன், இறந்தால் இருவிசும் பேறுவன்; ஏறிவந்து பிறப்பன்; பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோஎன் றென் உள்ளம் கிடந்து மறுகிடுமே.
எனத் திருவிருத்தத்துள்ளும் அருளிச்செய்தார். இதனுள்ளும், உடலைத் துறத்தல் முதலிய பலவற்றிற்கும் உடம்பட்டு, பிஞ்ஞகன்பேர் மறத்தல் ஒன்றிற்கும் உடம்படாது இரங்கியருளினமை காண்க. மணவாளன் - அழகன். திருத்தெங்கூர், சோழநாட்டுத்தலம். 'செம்பொன்போலும் சிறந்த ஏகம்பம்' என்க.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே. பொருளுரை: முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன் திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். உலகவர்கூறும் 'கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை' என்ற நெறிமுறையை விடுத்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான்செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள். குறிப்புரை: இத்திருப்பாடல் திருவாரூர்ப் பெருமானது திருப்பெயரைக் கேட்டவுடனே வசமழிந்த தலையன்புடையளாய தலைவி ஒருத்தியின் தன்மையை அவள்தோழி விளங்க உரைத்து, செவிலிக்கு அறத்தொடு நின்றதாக வைத்துச் சத்திநிபாதத்து உத்தமர்களது நிலையை விளக்கியருளியது. செய்யுளாகலின் சுட்டுப்பெயர்கள்'தலைவன்' என்பதற்கு முன்வந்தன. நாமம், 'சிவன்' என்பது, இச்சொற்றானே வசீகரித்தலையுணர்த்துவது என்றபடி, 'நிறைந்த மங்கலத்தினன்' என்பது பொருள். வண்ணம், பொன் வண்ணம்.ஆரூர்-எல்லாம் நிறைந்த ஊர். "பெயர்த்தும்" என்பதை, 'பெயர்ப்பவும்' எனத்திரித்து, 'கேட்டவற்றை மீள நினையாது மறக்குமாறெல்லாம் செய்து அவள் மனத்தை யாம் மாற்றவும்' என உரைக்க. இவ்வாறின்றி, 'பின்னை வண்ணங் கேட்டாள்; பெயர்த்தும் ஆரூர் கேட்டாள்' என முன்னே கூட்டியுரைப்பாரும் உளர்; அவர்க்கு, "பிச்சியானாள்" என்பதற்கு முன்னும் ஒருசொல் வேண்டப்படுவதாம். 'அவனுக்கு' என்னும் நான்காவது ஏழாவதன் பொருளில் வந்தது. பிச்சி-பித்தி, நீத்தது மனத்தால் என்க. அகலிடத்தார் ஆசாரமாவது, கன்னியர் இல்வரை இகந்து செல்லாது நிற்றல். அதனை அகன்றமையாவது தானே இல்லிறந்து சென்று ஆருரை அடையத் துணிந்தமை, தன்னை மறந்தமையாவது, தலைவனையே நினையும் நினைவிலே தான் இது செய்கின்றமை அறியாதொழிந்தமை. தன் நாமமாவது, கன்னிஎனப்படுவது. "தாள" என்புழி இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கது. "தாளே" என்னும் ஏகாரம், பிறவற்றினின்று பிரித்தலின் பிரிநிலை. தலைப்பட்டாள் - அணைந்தாள். தாளைத் தலைப்பட்டமையாவது, தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாயொழிந்தமை. இனி, சத்திநிபாதத்தவரது நிலையை உரைக்குமிடத்து, நாமங் கேட்டல் முதலிய நான்கினையும் முறையே கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டைகூடல் என்னும் நான்குமாகவும், பின்னர் உள்ளவற்றை அணைந்தோர் தன்மையாகவும் கொள்க. நாமம் பொதுவில் உணரப்படுவது, வண்ணம் சிறப்பாக ஆய்ந்துணரப்படுவதும், பித்து அதனில் அழுந்துதலும் ஆதல் உணர்க. அன்னை திரோதானசத்தியும், அத்தன் தடத்த சிவனும் என்க. அகலிடத்தார் ஆசாரம், தன் முனைப்பில் நின்று வினைகளையீட்டியும் நுகர்ந்தும் பிறப்பிறப்புக் களில் உழலுதல். தன்னை மறத்தல், தானொரு பொருள் உண்மையையும், உண்டாகி அறிந்து நிற்றலையும் மறந்து முதல்வன் ஒருவனையே அறிந்து நிற்றல். தாள்-முதல்வனது உண்மை இயல்பு; அஃது இன்ப வடிவினதாதல் அறிக. 'நாமம் கேட்டல்' முதலிய நான்கையும், 'சமயம், விசேடம், நிருவாணம்' என்னும் தீக்கைவழி, 'சரியை, கிரியை, யோகம், ஞானம்' என்னும் நான்கு பாதங்களில் நிற்கும் நிலைகளையுணர்த்தியவாறாக உரைப்பாரும் உளர்.
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றாஅவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப் பாடுவார் தும்புருவும் நார தாதிபரவுவார் அமரர்களும் அமரர் கோனும் தேடுவார் திருமாலும் நான்மு கனுந்தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும் கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே. பொருளுரை: திருவாரூர்ப் பெருமானே! நீ கூத்தாடுவாய், வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள். தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர். தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள். திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள். மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள். இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன். ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ? ஏலாவோ? அறியேன். குறிப்புரை: அளவில் குன்றா - விதிப்படி செய்யவேண்டும் அளவில் குறையாமல். 'குன்றாது' என்பது ஈறு குறைந்து நின்றது. அறிந்தேன் - கண்டேன். 'நாரதாதி' என்புழி, 'வல்லுநர்' என்பது வருவிக்க. கூடுமே - உனக்கு ஏற்குமோ, குற்றேவல் - சிறு பணிகள்.குடி கொண்டீர்க்கு என்பது ஒருமைப் பன்மை மயக்கம். 'நீ நட்டம் ஆடுவாய்; மறையோர் அவி அடுவார்; நாரதாதியர் உன்னைப் பாடுவார்; அமரர்களும், அமரர்கோனும் உன்னைப் பரவுவார்; திருமாலும் நான்முகனும் உன்னைத் தேடுவார்; மலைமகளும், கங்கையாளும் உன்னைத் தீண்டுவார்; இவைகளை எல்லாம் கண்டேன்; ஆதலின், நாய் போலும் அடியவனாகிய யான் செய்யும்சிறு பணிகள் உனக்கு ஏற்குமோ' என முடிக்க. இத்திருப்பாடலால், சுவாமிகள் இறைவனது பெருமையையும், உயிர்களது சிறுமையையும் உள்ளவாறுணர்ந்து நின்ற மெய்யுணர்வும், அவ்வுணர்வினால் இறைவனுக்குச் செய்த உண்மைத் திருத்தொண்டின் ஆர்வமும் இனிது புலனாகும்.
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான் தேரூரும் நெடுவீதி பற்றி நின்றுதிருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா தாரூரா ஆரூரா என்கின் றார்கள்அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே. பொருளுரை: ஆரூர்ப் பெருமானே! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே! நெற்றியில் கண்ணுடையவனே! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே, ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து. உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளியே காத்திருந்து, திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய், 'தேவர்கள் தலைவனே' ஆரூரா! ஆரூரா! என்று அழைக்கின்றார்கள்.குறிப்புரை: நிலா-சந்திரனது ஒளி. திருமாலும் நான்முகனும், நின்னை ஓர் ஊரும் ஒழியாமே தேடி, எங்கும் ஒற்றித்து, உலகமெலாந் திரிதந்து தேர்ந்துங் காணாது, தேரூரும் நெடுவீதி பற்றி நின்று, 'ஆரூரா ஆரூரா' என்று ஓலமிட்டு நிற்கின்றார்கள்; அவர்கள் அங்ஙனம் நிற்குமாறு நீ ஆரூரிடத்தினையாய் உள்ளாய் என முடிவு செய்க. "ஒற்று வித்து" என்பது "ஒற்றித்து" எனக் குறைந்து நின்றது. ஒற்றுவித்தல் - ஒற்றரை விடுத்து உண்மையறியச்செய்தல்.
நல்லூரே நன்றாக நட்ட மிட்டுநரையேற்றைப் பழையாறே பாய ஏறிப் பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதேபலர்காணத் தலையாலங் காட்டி னூடே இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணியிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காணஇறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே. பொருளுரை: நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற்காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார்.குறிப்புரை: பழையாறு, சேற்றூர், மணற்கால், தளிச்சாத்தங்குடி இவை வைப்புத்தலங்கள்; 'தனிச்சாத்தங்குடி' என்பதும் பாடம். தாம்விரும்பித் தங்கி, பட்டீச்சுரத்தில் இராப் பொழுதைக் கழித்து, மணற்காலில் நுழைந்து, தளிச்சாத்தங்குடி வழியாக யாவருங்காண நடந்து, ஒரு நொடிப்பொழுதில் திருவாரூரை அடைந்தார்' என முடிவு கூறுக. இடையில் வேண்டும் சொற்கள், சொல்லெச்சமாக வந்து இயையும். நல்லூர், தலையாலங்காடு, பெருவேளூர், பட்டீச்சரம். இவை சோழநாட்டுத் தலங்கள்.
கருத்துத்திக் கதநாகங் கையி லேந்திக்கருவரைபோற் களியானை கதறக் கையால் உரித்தெடுத்துச் சிவந்ததன்தோல் பொருந்த மூடிஉமையவளை யச்சுறுத்தும் ஒளிகொள் மேனித் திருத்துருத்தி திருப்பழனந் திருநெய்த் தானந்திருவையா றிடங்கொண்ட செல்வர் இந்நாள் அரிப்பெருத்த வெள்ளேற்றை அடரவேறியப்பனார் இப்பருவ மாரூ ராரே. பொருளுரை: கரிய படப்புள்ளிகளை உடைய, கோபிக்கும் பாம்பினைக் கையில் கொண்டு, பார்வதியை அச்சுறுத்திய பெரிய மலையைப் போன்ற மத யானை பிளிறும்படியாக அதன் தோலை உரித்துச் சிவந்ததம் மேனி மீது பொருந்தப் போர்த்து ஒளி பொருந்திய திருமேனியை உடைய செல்வராம் சிவபெருமானார் திருத்துருத்தி, திருப்பழனம், திருநெய்த்தானம், திருவையாறு என்ற திருத்தலங்களை உறைவிடமாகக் கொண்டு இந்நாளில் தசை மடிப்பால் கீற்றுக்கள் அமைந்த பிடரியை உடைய வெண்ணிறக் காளையை அது சுமக்குமாறு இவர்ந்து, இப்பொழுது திருவாரூரை உகந்தருளியிருக்கிறார்.குறிப்புரை: 'கருந்துத்தி' என்பது வலித்து நின்றது. 'கருநாகம்' என இயையும். துத்தி - படத்தில் உள்ள புள்ளிகள்; கதம் - சினம். அரிப்பு எருத்தம் கீற்றுக்கள் அமைந்த பிடர். அடர -சுமக்க. பருவம் - காலம்; ஊழி. இது முதலாகப் பல திருப்பதிகங்களிலும், திருவாரூர் சிவபெருமானது முதலிடமாக இனிதெடுத்து விளக்கியருளும் குறிப்புக் காணப்படுதல், மிகவும் உற்று நோக்கத்தக்கது, 'திருவாரூர்த் திருமூலட்டானம்' எனக் கூறப்படுதலும் கருதத்தக்கது. தில்லையே, 'கோயில்' என வழங்கப்படினும், திருவாரூர் அதனினும் பழைய கோயிலாதல் திருப்பதிகங்களாலும், நாயன்மார்களது வரலாறுகளாலும் இனிது கொள்ளக்கிடக்கின்றது. துருத்தி, பழனம், நெய்த்தானம், ஐயாறு இவை சோழநாட்டுத் தலங்கள். திருநாவுக்கரசர் புராணம் நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப்புற்றிடங்கொள் நிருத்தர் தம்மைக் கூடியஅன் பொடு காலங் களில்அணைந்துகும்பிட்டுக் கோதில் வாய்மைப் பாடிளம்பூ தத்தினான் எனும் பதிகம்முதலான பலவும் பாடி நாடியஆர் வம்பெருக நைந்துமனங்கரைந்துருகி நயந்து சொல்வார். -தி.சேக்கிழார்.
திருவாரூர் பதிக வரலாறு: இத்திருப்பதிக வரலாற்றினை ம் திருப்பதிகத்திற்காண்க. திருத்தாண்டகம் பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானைவன்கருப்புச் சிலைக்காம னுடல் அட்டானைச் சோதிச்சந் திரன்மேனி மறுச்செய் தானைச்சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை ஆதித்தன் பற்கொண்ட அம்மான் தன்னைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: பார்வதி பாகனாய்ப் பண்டு இராவணனை வருத்தியவனாய், வருத்திப் பிரமன் தலை ஒன்றை நீக்கியவனாய், வலிய கரும்பு வில்லை உடைய மன்மதன் உடலை எரித்தவனாய், ஒளி பொருந்திய சந்திரனுடைய உடலில் களங்கத்தை உண்டாக்கியவனாய், ஒளி வீசும் அக்கினி தேவனுடைய கை ஒன்றனைப் போக்கிச் சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய அப்பெருமானைத் திருவாரூரில் அடியேன் தரிசித்து அவனைத் தவிர ஏனையவற்றை எல்லாம் மறந்தேன்.குறிப்புரை: 'தன் பாதித் திருவுருவில்' எனக் கூட்டுக. தசமுகன் - இராவணன்; இப்பெயர்க்கு, அழுதவன் என்பதே பொருளாதலைக் கருதுக. வாதித்தமை, 'நீதலைவனாதல் எவ்வாறு?' என்று வாதித்தல்; வருத்துதலுமாம். மறுச்செய்தமையாவது; காலால் தரையில் இட்டுத் தேய்த்தமை. அங்கி - அக்கினி. 'கைக்கொண்டான்' என்பதில் ககரவொற்று, விரித்தல். சந்திரனைத் தேய்த்தமை முதலிய மூன்றும், தக்கன் வேள்வியிற் செய்தன. அயர்த்தல் - மறத்தல், மறந்தமை, அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் என்க. 'அயர்த்தவாறு நன்று' எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானைவிளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் தன்னைஓதாதே வேத முணர்ந்தான் தன்னை அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் தன்னைஅமுதுண்டார் உலந்தாலும் உலவா தானை அப்புறுத்த நீரகத்தே அழலா னானைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: இராவணன் பொருட்டு மலையை அழுத்திய திருவடியால் கூற்றுவனை உதைத்தவனாய், விளக்கு மின்னல் முத்து இவற்றை ஒத்த திருமேனி ஒளியினனாய், வேதங்களை ஓதாது உணர்ந்தவனாய், நீரை மிகுதியாக நிறைத்த கடலில் தோன்றிய விடத்தை உண்டு அமுதமுண்ட தேவர் இறந்த போதும் தான் இறவாதவனாய், கடல் நீரினுள் இருக்கும் பெண் குதிரை முக வடிவினதாகிய தீயாகவும் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன். குறிப்புரை: வெற்புறுத்த - இராவணன் பொருட்டு மலையை அழுத்திய; 'திருவடி இவ்வாறு மறக்கருணையையும் செய்யும்' என்பதனை நினைந்தருளியவாறு. விளக்கொளியும் மின்னொளியும் செந்நிறமுடையனவாக, வெண்மை நிறமுடைய முத்தின் சோதியையும் உடன்கூட்டி யருளிச்செய்தது. சிவபிரான் செந்நிற முடையனாதலேயன்றி, படிகம் போலும் வெண்ணிறமும் உடையனாதல் பற்றியென்க. 'வெண்பளிங்கி னுட்பதித்த சோதியானை என்ற ஒளவையார் பாட்டின் பகுதியையும். அதன் உரையையும் ஈண்டு நினைவு கூர்க. அப்பு உறுத்த - நீரை மிகுதியாக நிறைத்த. 'நீரகம்' என்பது, 'நீரை உடைய இடம்' என்னும் காரணம் குறித்துக் 'கடல்' என்னும் பொருளதாய் நின்றது. 'அழல்' என்றது; வடவைத் தீயை. இது, கடலின் நடுவில் நின்று, கடல் பொங்கி உலகை அழியாதவாறு காப்பது என்பது புராணவழக்கு.
ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானையூழிதோ றூழி யுயர்ந்தான் தன்னை வருகாலஞ் செல்கால மாயி னானைவன்கருப்புச் சிலைக்காம னுடலட் டானைப் பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை அருவேள்வி தகர்த்தெச்சன் தலைகொண் டானைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: தக்கன் வேள்வி செய்த காலத்தில் சூரியன் ஒருவனுடைய கண்களை நீக்கியவனாய், ஊழிகள் தோறும் மேம்பட்டுத் தோன்றுபவனாய், எதிர்காலமும் இறந்த காலமும் ஆயினவனாய், வலிய கரும்பு வில்லை ஏந்திய மன்மதனுடைய உடலை நலிவித்தவனாய், தன்னோடு பொரவந்த யானையை உரித்துப் போர்த்தவனாய், செருக்கொடு வந்த கருடன் உடலைப் பொடி செய்தவனாய், அரிய வேள்வியை அழித்து வேள்வித் தேவனின் தலையை நீக்கிய பெருமானை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன். குறிப்புரை: ஒருகாலம், தக்கன்வேள்விசெய்தகாலம். ஒரு தேவர் 'பகன்' என்பவர். 'உண்ணப்புகுந்த பகனொளித்தோடாமே - கண்ணைப் பறித்தவாறுந்தீபற'என்றருளியதுகாண்க.
மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானைவெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை ஒப்பானை யொப்பிலா வொருவன் தன்னைஉத்தமனை நித்திலத்தை யுலக மெல்லாம் வைப்பானைக் களைவானை வருவிப் பானைவல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: திருநீறணிந்த மேனியனாய்ப் பளிங்கினுள் பதித்தாற் போன்ற செஞ்சோதியனாய்த் தன்னொப்பார் பிறர் இல்லாதானாய், உத்தமனாய், முத்துப் போன்று இயற்கை ஒளி உடையவனாய், உலகங்களை எல்லாம் காத்து அழித்துப் படைப்பவனாய்த் தீவினையை உடைய அடியேன் மனத்தில் நிலைபெற்றவனாய், மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவனை அடியேன் ஆரூரில் கண்டு அயர்த்தேன். குறிப்புரை: பதித்த -வைத்த. ஓப்பான் - எல்லாப் பொருளிலும் ஒரு நிகராகப் பொருந்தியிருப்பவன். உத்தமன் - மேலானவன். வைப்பான்- படைப்பான். 'வருவிப்பான்' என்றருளியது, களைந்தபின் மீள வருவித்தலை. இனி, 'வைப்பான்' என்றது, நிறுத்துதலை எனக்கொண்டு, 'வருவிப்பானை' என்றதனை அதற்கு முன்னே கூட்டியுரைப்பினும் ஆம். அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலான் - மாயைக்கு அப்பாற்பட்ட உயிருக்கு அப்பாற்பட்டவன்.
பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப்பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத் துண்டத்திற் றுணிபொருளைச் சுடுதீ யாகிச்சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக் கண்டத்தில் தீதினஞ் சமுது செய்துகண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: மனித உடலில் பிறந்த உயிர் கொண்டு உணரும் உணர்விற்குத் தோன்றுபவனாய், அவ்வுடலையும் படைத்தவனாய்ப் பெரிய வேதங்களின் யாப்பினுள் துணியப்படும் பரம்பொருளாகக் கூறப்படுபவனாய்ச் சுடு தீயாகியும் சுழன்றடிக்கும் காற்றாகியும் நீராகியும் மண்ணாகியும் இருப்பவனாய்த் தீமைக்கு இருப்பிடமாகிய நஞ்சினை உண்டு அதனைக் கழுத்தளவில் இருத்தியவனாய், முக்கண்ணனாய்க் கரும்பும் பாலும் போல இனியனாய், முத்தர்களுக்குப் பயன் தரும் பொருளாய் உள்ள பெருமானை அடியேன் ஆரூரில்கண்டு அயர்த்தேன்.குறிப்புரை: பிண்டம் - உடல். 'அது கொண்டு உணரும் உணர்விற்கும் தோன்றுவான்' என்றதாம். 'மற்று' என்னும் அசை நிலை ஈறு திரிந்தது. ஏனையவற்றோடு இயைய, 'படைத்தது' என அஃறிணையாக அருளினார். 'துண்டம்' என்றது, யாப்பினை, 'இன்' ஏதுப் பொருளில் வந்த ஐந்தனுருபு. 'இற்றை' என்றதனை, 'சுடு தீ' முதலியவற்றோடு சேரமுன்னே கூட்டுக. 'இன்று காணப்படும்' என்பது பொருள்; ஆயிற்றை' என வினைப்பெயராக்கி உரைத்தலுமாம்.தீதின் நஞ்சு - தீமையை உடைய நஞ்சு. அமுது செய்தமையாவது, தீங்கு யாதும் செய்யாது, அழகு செய்துகொண்டு இருக்கவைத்தமை. 'கண்' என்றது 'கணு' என்ற நயத்தையும் தோற்றியது. அண்டத்துக்கு அப்புறத்தார் - முத்தர்கள். அவர்கட்குத் தான் ஒருவனே பயன்தருதல்பற்றி, 'வித்து' என்று அருளிச்செய்தார்.
நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப் பாதியா யொன்றாகி யிரண்டாய் மூன்றாய்ப்பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச் சோதியா யிருளாகிச் சுவைக ளாகிச்சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னைஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே. பொருளுரை: ஒழுங்குக்கு ஓர் உறைவிடமாய், நிலம் நெருப்பு நீர் எங்கும் நிறைந்த காற்று என்ற இவற்றின் ஒழுங்குகளையும் பண்புகளையும் நிருவகிப்பவனாய், எல்லாப் பொருள்களுக்கும் பற்றுக் கோடாய்ப் பரசிவமாகிய ஒன்றாய்ச் சிவமும் சத்தியும் என இரண்டாய், அயன்மால் அரன் என்ற மும்மூர்த்திகளாய், அணுவுக்கும் அணுவாய் நிறைந்திருப்பவனாய், செவ்வனம் நிரம்பிய ஏழிசை வடிவினனாய்ச் சோதியாகியும் இருளாகியும் பொருள்களின் சுவைகளாகியும் அடியார்களுக்கு எத்திறத்தினும் சுவைக்கும் திறம் கலந்த பகுதியனாய், வீட்டுலகம் அருளுபவனாய், வீட்டிற்கு வாயிலாகிய ஞானமும் அந்தஞானத்தால் அடையத்தக்க பயனுமாய், அடியார்க்குத் தன்னை அடையத்தானே ஆறும் பேறுமாகஇருக்கும் பெருமானைத் திருவாரூரில் அடியேன் கண்டு அவனைத் தவிர ஏனைய எல்லாவற்றையும் மறந்தேன்.குறிப்புரை: கால் - காற்று. நியமம் -கட்டளை, ஒழுங்கு; என்றது, வன்மை முதலிய பண்புகளையும், பொறுத்தல் முதலிய தொழில்களையும். பாதி - எல்லாப் பொருள்கட்கும் பற்றுக்கோடு. ஒன்று - பரசிவம். இரண்டு- சிவமும், சத்தியும். மூன்று - 'அரன், மால், அயன்' என்னும் நிலை. பரமாணு - அணுவுக்கு அணுவாய் நிறைந்திருத்தல். பழுத்த - ஏழிசையும் செவ்வனம் நிரம்பிய. சோதி -அறிவு. இருள் - அறியாமை. அறியாமையைச் செய்யும் மலத்தின் ஆற்றலையும் அச்செயலைச் செய்யுமாறு தூண்டி அதன்வழி நிற்றலின், 'இருளாய்' என்றும் அருளிச்செய்தார். இந்நிலையே 'திரோதானகரி' எனப்படுவது. 'சோதியனேதுன்னிருளே'என்றருளிச்செய்ததுங் காண்க. அப்பால் - அத்தன்மையுடைய பால். வீட்டின் ஆதி - வீட்டிற்கு வாயிலாகிய ஞானம். 'ஞானத்தின் அந்தம்' என்றது, பயனை; அஃதாவது, நிரம்புதல். குறிப்பு: இத் திருப்பதிகத்தின் ஏழாவது முதலிய திருப்பாடல்கள் கிடைத்தில.
திருவாரூர் பதிக வரலாறு: சுவாமிகள் பாண்டிநாட்டிலுள்ள தலங்களை வணங்கிப் பொன்னிநாடடைபவராய் எதிர்ப்படுந் தலங்களை வரும் வழியே மீண்டும் வணங்கிப் பூம்புகலூர் வந்தணைந்து புனிதர் தாள் வணங்கி உழவாரத் திருத்தொண்டு செய்திருந்த அந்நிலைமையில் அவர் நன்னிலைமை உலகவர்க்குக் காட்டக் கருதிய பெருமான் உழவாரம் நுழைந்தவிடமெல்லாம் பொன்னினொடு நவமணிகள் பொலிந்திலங்கச் செய்தருளினார். வாகீசரும் திருமுன்றிலிலுள்ள பருக்கைக் கற்களுடன் பென்னினொடு நவமணிகளையும் பூங்கமல வாவியினிற் புகவெறிந்தார். ஓடும் பொன்னும் கல்லும் மணியும் வேறுகாணாதிருந்த நல்லோர் முன் நாயகனார் திருவருளால் தேவவரம்பையர்கள் எதிர்தோன்றி ஆடுவாரும் பாடுவாருமாகி நிற்க, அத்தனார் திருவடிக்கீழ் நினைவகலாது அன்புருகும் மெய்த்தன்மை யுணர்வுடைய விழுத்தவத்து மேலோராகிய சுவாமிகள் தம் சித்த நிலை திரியாது செய்பணியின் தலைநின்று பிறிவியின் தொடக்கத்தில் விழுத்தும் இருவினைகளின் உருவமாய் வந்த அந்த அரமங்கையரைப் பார்த்து, 'உம்மாலிங்கென்ன குறையுடையேன்யான்? திரு ஆரூர் அம்மானுக்கு ஆளானேன், நீவிர்வீணே அலைத்தல் வேண்டா' என்று அருளியது இத் திருப்பதிகம். திருப்புகலூரில் அருளிச்செய்கின்றவர் திருவாரூரையே எடுத்தோதியருளியது, அத் தலத்தின் முதன்மை கருதி. (தி.ிருநாவு. புரா. திருத்தாண்டகம் ப. தொ. எண்: பதிக எண்: பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்றபுண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள் இம்மாயப் பெருங்கடலை யரித்துத் தின்பீர்க்கில்லையே கிடந்ததுதான் யானேல் வானோர் தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த்தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும் எம்மான்ற னடித்தொடர்வா னுழிதர் கின்றேன்இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. பொருளுரை: நிலையின்மையும் அழிதலுடைமையும் உடைய உலகப் பொருள்களாகிய பெரிய கடலிலே தடுமாறுகின்ற நல்வினை தீவினைகளாகிய இருவினைகளே! நீங்கள் எனக்கு நலம் செய்வீர் அல்லீர். இந்த நிலையின்மையை உடைய பெரிய உடலாகிய கடலைச்சிறிது, சிறிதாக அரித்துத் தின்னும் உங்களுக்குத் தின்றற்கு உரிய பொருள் எதுவும் என்னிடத்தில் இல்லை. ஏனெனில் யான் தேவர்கள் தலைவனாய், எனக்கும் தலைவனாய்க் குளிர்ந்த பெரிய ஆரூரில் உள்ள பெரியகடல் போல்வானாய்த் தன்னைத் தொடர்ந்த அடியார்களைத் தன் திருவடிப் பேரின்பத்தில் அடங்குமாறு செய்கின்ற எம்பெருமானுடைய திருவடிகளைத் தொடர்வதில் இடையீடு இல்லாமல் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றேன். அழிந்து போகக் கூடியவர்களே! இடையில் நின்று என்னைத் தடுக்காதீர்கள். குறிப்புரை: பொய் - நிலையின்மை. மாயம்- மாய்தலுடையது; என்றது, பல்வேறு வகையினவாய்க் காணப்படும் உலகப் பொருள்களை. 'நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் போல நிலையின்றிமாயும் பொருள்களாகிய பெருங்கடல்' என்றவாறு. புலம்புதல், ஈண்டு அலமருதல். நல்வினை தீவினை என்னும் இருவகை வினைகட்கும் பற்றுக்கோடு உலகமாகலின், அவற்றை உலகின்கட்கிடந்து அலமருவனவாக அருளிச் செய்தார். இனி, அவ்வுலகப் பொருள்களது இயக்கங்கள்யாவும் இருவினை வழிப்பட்டல்லது நிகழாமையின், தமக்குக் காட்சிப்பட்ட உலகப் பொருள்கள் அனைத்தையும் அவை காணப்பட்டவாறே கண்டு அவற்றின் வீழ்ந்தழியாது, அவற்றது முதனிலை ஒன்றையே நோக்கி நீங்குவார், அவைகளை அவ்வினைகளாகவே விளித்தருளினார். இதனானே, திருப்புகலூரில் தம்மை மயக்குவான் வந்து தம் செயலெல்லாம் செய்த அரம்பையரை சுவாமிகள் நோக்கிய நோக்குவகையும் பெறப்பட்டுக் கிடந்தது; பின்னர்ப் பலவாறாக விளிப்பதும் அவர்களையே என்க. இங்ஙனம் நோக்கினும், மயக்கின்கட்படாது நீங்குதல், 'எம்மான்றன் அடித்தொடர்வான்' என்பதனால் இனிதருளிச் செய்யப்பட்டது."இங்குளி வாங்குங் கலம்போலஞானிபால் முன்செய் வினைமாயை மூண்டிடினும் - பின்செய்வினை மாயையுட னில்லாது மற்றவன்றான் மெய்ப்பொருளே ஆயவத னாலுணரும் அச்சு" என்றருளிச்செய்தது இவ்வநுபவத்தையே யென்க. எனவே, சிவஞானிகட்கு, 'இங்குளி வாங்குங் கலம்போல' ஒரோவழி மலவாசனைவந்து தாக்குமிடத்து, மீளச்சிவஞானத்தின்கண் உறைத்து நிற்கும் நிலையைப் பெற்று அதனின் நீங்குதற் பொருட்டுத் தோன்றியருளியது இவ்வருமைத் திருப்பதிகம் என்பது விளங்கும். 'தண்நல் ஆரூர்' எனப் பிரிக்க. தடங்கடலோடுவமித்தது, தன்னைத் தொடர்ந்தோர பற்றி என்பது, 'தொடர்ந்தோரை அடங்கச் செய்யும்' என்பதனால் விளக்கியருளப்பட்டது. 'திருவே' என்னும் ஏகாரம் எதிர்மறுத்தலை உட்கொண்ட வினாப்பொருட்டு, 'நீங்கள் திருவே' எனமாற்றியுரைக்க. 'நீங்கள் நலஞ்செய்வீரல்லீர்கள்' என்றபடி, 'இம்மாயப் பெருங்கடல்' என்றது, உடம்பை. 'கிடந்தது இல்லையே' என மாறிக் கூட்டுக. கிடந்தது -தின்னக் கிடந்த பொருள். 'கிடந்து' என்பதும் பாடம். 'இல்லையே' என்னும் ஏகாரம், தேற்றம். "தான்",அசை. "தம்மான். தலைமகன்; தடங்கடல்" எனப்ன ஒருபொருள்மேற் பல பெயராய் வந்து, 'தான்' என்னும் பொருளவாய் நின்றன. எனவே, அப்பெயர்களிடத்து நின்ற இரண்டனுருபுகள், "தொடர்ந்தோர்" என்பதனோடு முடியும். "தொடர்வான்" என்பது ஒடு உருபின்பொருளில் வந்த ஆன் உருபு ஏற்ற பெயர். அதனை வினையெச்சமாகக் கொள்ளின், வல்லெழுத்து மிகுதல் கூடாமை யறிக. இடை- இடையீடு, "கெடுவீர்காள்" என்பது வைதுரை.இடறுதல் - இடைநின்று தடுத்தல். 'கெடுவீர்காள்" என விளித்தது, 'இடறின் கெடுவீர்கள்" என்றறிவுறுத்தி அருளியவாறு.
ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற்றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம் உம்பரமே உம்வசமே யாக்க வல்லீர்க்கில்லையே நுகர்போகம் யானேல் வானோர் உம்பருமா யூழியுமா யுலகே ழாகிஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர் தம்பெருமா னாய்நின்ற அரனைக் காண்பேன்தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே. பொருளுரை: ஐம்பெரும் பூதங்களே! உங்களிலே ஒருவர் விரும்பியதை மற்றவர் விரும்பாது இவ்வுலகம் முழுதையும் உம்மால் தாங்கப்படுவதாக்கி உம் வசப்படுத்துவதில் நீங்கள் ஆற்றலுடையீர். உங்களுக்கு என்பால் நுகரத்தக்க இன்பம் தரும் பொருள் ஒன்றுமில்லை. ஏனெனில் யான் தேவர்களும் தேவருலகமும் ஊழிகளும் ஏழு உலகங்களுமாகி, வள்ளலாய்த் தேவர் தலைவனாய், ஒளிபொருந்திய ஆரூரில் குளிர்ந்த அமுதமாக இருக்கும் அரனை இடையீடு இன்றித் தொடர்ந்து எப்பொழுதும் காண்பேன் ஆவேன். உங்களுடைய இடையூறுகளில் என்னை அகப்படுவேனாய்க் கருதிச் செருக்குக் கொள்ளாதீர்கள். குறிப்புரை: "நிலந்தீ நீர்வளி விசும்போடைந்துங் கலந்த மயக்கம் உலகம்"என்னுங் கட்டளையுள் ஒன்றென முடித்தலாற் கொள்ளப்படும். 'ஒருவர்' என்பது, இன்னார் எனச் சுட்டிக் கூறாது, பொதுப்படக் கூறுதற்கண் வருவதாகலின், இவ், 'ஒருவீர்' முதலியனவும் அன்ன என்க. வேண்டிற்று - அவாவியது; அது, பண்பானும், தொழிலானும் ஐயைந்தாகும். அவைகளை, 'உண்மை விளக்கம்' முதலியநூல்களிற் காண்க. பரம் - சுமை; தாங்கப்படுவது. 'நுகர்போகம் இல்லையே' என்க. உம்பர் - மேலிடம்; விண்ணுலகம். நள் அமிர்து - குளிர்ந்த அமுதம். காண்பேன் - எப்பொழுதும் காண்பேன்.
சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்செழுங்கண்ணால் நோக்குமிது வூக்க மன்று பல்லுருவில் தொழில்பூண்ட பஞ்ச பூதப்பளகீரும் வசமன்றே பாரே லெல்லாம் சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்தூநயனம் மூன்றாகி ஆண்ட ஆரூர் நல்லுருவிற் சிவனடியே யடைவேன் நும்மால்நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே. பொருளுரை: பல வடிவங்களில் திரிந்து வேறுபடுகின்ற ஐம்பூதங்களாகிய பொய்ம்மையுடையீர்! அழிகின்ற சில உருவங்களைக் குறிக்கோளாகக் கொண்டு நாடோறும் அவற்றை விரும்பிப் புறத்தில் அழகாக உள்ள கண்களால் பார்க்கும் இச்செயல் நல்லொழுக்கம் ஆகாது. இவ்வுலகம் முழுதும் உம் வசப்பட்டிருப்பது போதாதா?யானோ ஐம்புலங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய ஞாயிறு திங்கள் தீ என்ற முச்சுடர்களாய், அயன் அரி அரன் என்ற உருவம் மூன்றாய், அச்சுடர்களாகிய கண்கள் மூன்றாய்க் கொண்டு, இவ்வுலகத்தை ஆளும் ஆரூரில் உள்ள நல்ல செந்நிறத்தவனாகிய சிவனடிகளையே அடைவேனாக உள்ளேன். உம்மால் தேய்க்கப்படுவேன் அல்லேன். உமக்கு நான் இணங்காததைப் பொறுத்துக்கொண்டு நுமக்கு வயப்படும் வேற்றுப் பொருள்களை நோக்கிச் செல்லுங்கள்.குறிப்புரை: "சில்லுரு" என்றது, அழிகின்ற சில உருவங்கள்' என்ற இகழ்ச்சி தோன்ற. குறி - குறிக்கேள். பற்றி - பற்றுச் செய்து, விரும்பி. செழுங்கண் - புறத்தில் அழகாய் உள்ள கண்கள். இது - இச்செயல். "ஊக்கம்' என்பது, இங்கு, 'ஒழுக்கம்' என்னும் பொருளதாய் நின்றது. தொழில், திரிந்து வேறுபடுதல். பளகீர் - பொய்ம்மையுடையீர்; விளி; உயர்திணையாக அருளிச்செய்தது, இகழ்ச்சிபற்றி. 'பாரேல் எல்லாம் உம் வசம் அன்றே' என்க. பார் - உலகம். சொல் உருவின் - ஐம்புலன்களில் ஒன்றாகச் சொல்லப்படுகின்ற உருவத்தினை உடைய. சுடர் மூன்று, 'ஞாயிறு, திங்கள், தீ, என்பன. உருவம் மூன்று, அயன், அரி, அரன்' எனப் பெயர்பெற்று நிற்பன. நயனம் -கண். நமைப் புண்ணுதல் - தேய்க்கப்படுதல்; கெடுக்கப்படுதல். கமைத்து -பொறுத்து; என்றதும் இகழ்ச்சி பற்றியே என்க.
உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள் மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோவையகமே போதாதே யானேல் வானோர் பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே. பொருளுரை: விரும்பி நினைக்கப்படும் உடலிலே, வாய் கண் உடல் செவி மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாக நின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐவீர்களே! உங்களுடைய மயக்கம் பொருந்திய உருவங்களின் இயற்கைகளால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா? யானோ தேவர்களுக்கு அழகிய உருவினைத் தந்தவனாய், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வானாய், இவ்வுலகுக்கு எல்லாம் அழகாகும் சிவக்கொழுந்தாய், என் சிந்தையுள்ளே புகுந்து அதன்கண் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் படுத்தற்குச் செருக்கிக்கொண்டு என்பக்கல் வாராதீர்கள்.குறிப்புரை: உன் உருவில் -தன்உருவைத் தந்தவனை' என இயைக்க. தலைப்படுவேன் - எப்பொழுதும் அணைந்திருப்பேன்; இங்கு, 'அதனால்' என்பது வருவிக்க. துலைப்படுப்பான் - உம் அளவிற்படுத்தற்கு.
துப்பினைமுன் பற்றறா விறலே மிக்கசோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள் ஒப்பனையைப் பாவித்திவ் வுலக மெல்லாம்உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யென்றன் வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல்மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள் அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும்ஆட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே. பொருளுரை: நுகர்பொருள்களிடத்துப் பண்டுதொட்டுப் பற்றுக்கொள்ளுதல் நீங்காமைக்கு ஏதுவாகிய வெற்றி மிக்க பிறர் மயங்குதற்குக் காரணமான வஞ்சனைகளே! நீங்கள் செயற்கை அழகைப் பரப்பி நீங்கள் கருதிய செயலைச் சுகமாக முடிப்பதற்கு இவ்வுலகம் முழுதும் உழலும் செயல் உங்களுக்கு அரிதன்று. ஆனால் அடியேன் என்சேமநிதியாய் அழகிய மதில்களை உடைய ஆரூரில் மாணிக்கமாய், வைகல் என்ற தலத்தில் மணவாளனாய், எனக்கும் தேவர்களுக்கும் பெருமானாய் உள்ளவனை முறைப்படி அடைபவன். ஆதலின் உங்களால் நான் மற்றவர்போல ஆட்டுவிக்கப்பட மாட்டேன். ஓடிவந்து என்னை வருத்த முயலாதீர்கள். குறிப்புரை: துப்பு - துப்புரவு; நுகர்ச்சிப் பொருள். பற்று, 'பற்றுதல்' என முதனிலைத் தொழிற்பெயர். அறாவிறல் - அறாமைக்கு ஏதுவாய வெற்றி. சோர்வு படுசூட்சியம் - பிறர் அயர்த்தற்கு ஏதுவாகிய வஞ்சகம். சூழ்ச்சி என்பதன் மரூஉ வாகிய 'சூட்சி' என்பது, அம்முப்பெற்று நின்றது. ஒப்பனை - செயற்கை அழகு. 'ஒப்பினை' எனவும் பாடம் ஓதுவர். பாவித்து பரப்பி. பாவுவித்து என்பது குறைந்தது. உழறுதல் - உழலுதல். 'இது நுமக்கு அரிதோ' என்றவாறு. குறை - கருதிய செயல். "அரிதே", ஏகாரம் வினா. வைப்பு - சேம நிதி. கைவல் - 'வைகல்மாடக்கோயில்' என்னும் சோழநாட்டுத் தலம். "நானும்" என்ற உம்மை எச்சத்தோடு சிறப்பு. 'நானும் பிறர்போல ஆட்டுணேன்' என்க. ஓட்டந்து - ஓட்டம் தந்து; அலைந்து. 'ஈங்கு ஓட்டந்த அலையேன்மின்' என்க. அலைத்தல்- வருத்துதல்.
பொங்குமத மானே ஆர்வச் செற்றக்குரோதமே யுலோபமே பொறையே நீங்கள் உங்கள்பெரு மாநிலத்தி னெல்லை யெல்லாம்உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல் அங்கமலத் தயனொடுமா லாகி மற்றுமதற்கப்பா லொன்றாகி யறிய வொண்ணாச் செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை யாரூர்ச்செல்வனைச்சேர் வேன்நும்மாற் செலுத்து ணேனே. பொருளுரை: பெருமிதம் கொண்ட செருக்கே! மாண்பு இழந்த மானமே! காமமே! பகையே! கோபமே! கஞ்சத்தனமே! துன்பச் சுமைகளே! நீங்கள் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட இப்பேருலகத்தின் எல்லைகாறும் நீங்கள் கருதிய செயலை நிறைவேற்றுவதற்குச் சுற்றித்திரிவது உங்களுக்கு அரிது அன்று. ஆனால் யானோ செந்தாமரையில் தங்கிய பிரமனும் திருமாலும் ஆகி அவர்களையும் கடந்த ஒன்றே ஆகிய பரம்பொருளாகி, எவராலும் தம் முயற்சியால் அறிய முடியாத ஒப்பற்ற செம்பொற் குன்று போன்ற சிவபெருமானாகிய ஆரூர்ச் செல்வனைச் சேர்கின்றவன். உம்மால் செலுத்தப்படுவேன் அல்லேன்.குறிப்புரை: ஆர்வச் செற்றங்களை உம்மைத்தொகை படத்தொகுத்தருளிச் செய்தாராயினும், அவைகளையும் ஏகார உருபால் தனித்தனி நிற்க விளித்தலே திருவுள்ளம் என்க.மானம், மாண் பிறந்த மானம்; அது, உயர்ந்தோரை வணங்க மறுத்தல். ஆர்வம் - காமம், செற்றம்- பகை; மாற்சரியம். இவைகளைக் கூறவே மோகமும் தழுவிக் கொள்ளப்படும். பொறை - சுமை; துன்பம். "அயன், மால்" என்பவை அவரவர் நிலையைக் குறித்தன. ஒன்று- ஒன்றேயாய பரம்பொருள். "ஆகி" என்னும் எச்சங்கள், "ஒண்ணா" என்னும் எதிர்மறைப் பெயரெச்சத்தோடு முடிந்தன. குன்று - உவமையாகுபெயர்.
இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கைவெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக் குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள்குறிநின்ற தமையாதே யானேல் வானோர் அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானைஅமரர்கள்தம் பெருமானை யரனை ஆரூர் உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மாலாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே. பொருளுரை: துன்பங்களே! பாவங்களே! மிக்க துயரம் தரும் வேட்கையே! வெறுப்பே! எல்லீரும் உலகுகளைச் சுற்றிச் சுழன்று அவற்றை வசப்படுத்த அவை தடுமாறி உங்கள் இட்ட வழக்காக இருத்தல் போதாதா? யானோ தேவர்களின் பகைவரான அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துத் தேவர்கள் பெருமானாய்த் தீங்குகளைப் போக்குபவனாயுள்ள ஆரூர்ப் பெருமானை விரையச் சென்று அடையப் போகிறேன். உம்மால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். என்பக்கல் ஓடி வந்து என்னைத் துன்புறுத்திநும் வசப்படுத்த முயலாதீர்கள்.குறிப்புரை: "வெறுப்பே" என்னும் எண்ணேகாரம், இடர் முதலிய எல்லாவற்றோடும் இயையும். அமையாதே - போதாதோ. அடையார் - பகைவர்; வானோர்க்குப் பகைவர் அசுரர்.
விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லாவெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள் நிரைந்தோடி மாநிலத்தை யரித்துத் தின்பீர்க்கில்லையே நுகர்போகம் யானேல் வானோர் கரைந்தோட வருநஞ்சை யமுது செய்தகற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரில் பரஞ்சோதி தனைக்காண்பேன் படேன்நும் பண்பிற்பரிந்தோடி யோட்டந்து பகட்டன் மின்னே. பொருளுரை: விரைந்து வந்து ஏவல் கொள்ளும் வறுமையே! செல்வமே! கொடிய கோபமே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள் வரிசையாகச் சென்று இவ்வுலகத்தைச் சிறிது சிறிதாகக் குறைத்து உண்ணுவீர்கள். உங்களுக்கு நுகரத்தக்க இன்பம் கிட்டவில்லையா? யானோ தேவர்கள் ஓலமிட்டு ஓடுமாறு வெளிப்பட்ட விடத்தை உண்ட கற்பகமாய், உயிருக்கு மேற்பட்ட பொருளாய்த் திருவாரூரில் உள்ள மேம்பட்ட சோதி வடிவினனைக் காண்கின்றவன். உங்களுடைய பண்புகளில் அகப்படமாட்டேன். விரைந்து ஓடிவந்து என்னை அச்சுறுத்த முயலாதீர்கள்.குறிப்புரை: ஆளும் - ஏவல் கொள்ளும். செல்வத்தாற் பயன் கொள்ளுதலினும் வறுமையால் துயருழத்தல் விரைவுடைத்தாதல் பற்றி, "விரைந்தாளும் நல்குரவே" என்றருளினார். 'செல்வம்' என்பதில் அம்முத் தொகுத்தலாயிற்று. வெகுட்சி - சினம். நிரைந்து- கூடி. 'நிரந்து' என்பதும் பாடம். கரைந்து - ஓலமிட்டு. தற்பரம் - உயிருக்கு மேற்பட்ட பொருள். "கற்பகம்" முதலியன ஆகுபெயர்கள். பரிந்து - விரைந்து. பகட்டல்- வெருட்டல், 'பகட்டேன் மின்னே', என்பதும் பாடம்.
மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்சமுகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி நாள்வாயு நும்முடைய மம்ம ராணைநடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர் நீள்வான முகடதனைத் தாங்கி நின்றநெடுந்தூணைப் பாதாளக் கருவை யாரூர் ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மாலாட்டுணே னோட்டந்தீங் கலையேன் மின்னே. பொருளுரை: தத்தம் தொழில்களிலேயே ஈடுபட்ட ஐம்பொறிகளாகிய காக்கைகளே! இவ்வுலகம் முழுவதும் சுற்றித் திரிந்து ஒவ்வொரு நாளும் மயக்கமாகிய ஆட்சியை நடத்துகின்ற உமக்கு இன்னும் மனநிறைவு ஏற்படவில்லையா? யானோ தேவருலகின் உச்சியைத் தாங்கி நிற்கும் பெருந்தூணாய்ப் பாதாளத்துக்கும் அடிநிலையாய் ஆரூரை ஆளும் பெருமானை விரைந்து சென்று அடைவேன். உங்களால் செயற்படுத்தப்படுவேன் அல்லேன். ஓடி வந்து என்னை வருத்த முயலாதீர்கள். குறிப்புரை: முகரி - காக்கை, "ஈச்சிறகன்னதோர் தோலறினும் வேண்டுமே - காக்கை கடிவதோர் கோல்"என்றருளியதுங் காண்க. நாள் வாயும் - நாள் தோறும். மம்மர் ஆணை - மயக்கமாகிய ஆட்சி. 'அவ்வுலகம் அமையாதே' என்க. "தாங்கிநின்ற' என்றருளினார், வீழாது நிற்பித்தல் பற்றி. அதற்கேற்ப "நெடுந்தூண்" என்றருளினார். "கரு" என்றது அடிநிலை என்றவாறு.
சுருக்கமொடு பெருக்கநிலை நித்தல் பற்றித்துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச் செருக்கிமிகை செலுத்தியும செய்கை வைகல்செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க தருக்கிமிக வரையெடுத்த அரக்கன் ஆகந்தளரவடி யெடுத்தவன்றன் பாடல் கேட்டு இரக்கமெழுந் தருளியஎம் பெருமான் பாதத்திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே. பொருளுரை: சுருக்கமே! பெருக்கமே! காலநிலையே! செல்வமே! வறுமையே! இவ்வுலகைச் சுற்றிப் பெருமிதம் கொண்டு உங்கள் ஆட்சியைச் செலுத்தி நாடோறும் உங்கள் செயலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் செயல் போதாதோ? யானோ மிகவும் செருக்குற்றுக் கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய உடல் தளருமாறு அவனை அழுத்திப்பின் அவன் பாடலைக் கேட்டு இரங்கி அவனுக்கு அருளிய எம்பெருமானுடைய திருவடிகளிலே இடையீடு இன்றிச் சேர்ந்துள்ளேன். அழிந்து போகக் கூடிய நீங்கள் என்னைத் துன்புறுத்த முயலாதீர்கள். குறிப்புரை: "நிலை என்றது, காலநிலையை. துப்பு, துப்புரவு; அஃது அதற்கு ஏதுவாய செல்வத்தின்மேல் நின்றது. அறை - இன்மை; வறுமை. "என்று" எண்இடைச் சொல். 'அனைவீரும் நித்தல் நிலை பற்றிச் செருக்கி உலகை மிகைசெலுத்தி' என இயைக்க; முற்றும்மை தொகுத்தலாயிற்று. மிகை - வரம்பு கடந்த ஆட்சி. மிகைசெலுத்தி என்பது, 'ஆண்டு' என்னும் பொருளதாய், "உலகை', என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. வைகல்- நாள்தோறும். ஆகம் - உடம்பு. "எடுத்து" என்றது, ஊன்றுதலாகிய தன் காரியந் தோற்றி நின்றது. இடை -இடையீடு. திருநாவுக்கரசர் புராணம். நீடுபுகழ்த் திருவாரூர் நிலவுமணிப் புற்றிடங்கொள்நித்தர் தம்மைக் கூடியஅன் பொடுகாலங் களிலணைந்து கும்பிட்டுக்கோதில் வாய்மைப் பாடிளம்பூ தத்தினா னெனும்பதிகம் முதலானபலவும்பாடி நாடியஆர் வம்பெருக நைந்துமனம் கரைந்துருகிநயந்து செல்வார். -தி.சேக்கிழார்.
திருவாரூர் பதிக வரலாறு: சுவாமிகள் பெருவேளூர் முதலிய தலங்களைப் பணிந்து திருவாரூர் வந்தடைந்து திருவீதி வலம் வந்து, தேவாசிரியனை வணங்கிப் புற்றிடங்கொள்நிருத்தர்தமைக் காலங்களில் கும்பிட்டுத் திருவீதிப் பணி செய்திருந்தபோது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி.திருநாவு. புரா. குறிப்பு: இத்திருப்பதிகம், 'போலும்' என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் இறைவனது இயல்பை விளக்கியருளியது. திருத்தாண்டகம் ப. தொ. எண்: பதிக எண்: நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலும் காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலும் கூற்றினையுங் குரைகழலால் உதைத்தார் போலுங்கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும் ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அழகிய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள பெருமானார் நெற்றிக்கண் ஒன்று உடையாராய், நெற்றியில் திருநீறு அணிந்தவராய், வெள்ளிய எலும்புகளை விடாமல் அணிந்தவராய்க் காற்றைவிட விரைவாகச் செல்பவராய், ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்த திருவடியால் கூற்றுவனை உதைத்தவராய்த் தம்மால் கொல்லப்பட்ட புலித்தோல் ஆடையை உடுத்த இளையராய்க் கங்கையையும் சடை மேல் வைத்தவராய், அகக்கண்களுக்குக் காட்சி நல்குகிறார். குறிப்புரை: 'நடந்தார்' என்பதனை, 'நடத்தினார்' எனப் பிறவினைப் பொருட்டாக உரைக்க. 'காற்றினையும்' என்பதை, 'காற்றினிலும்' எனத் திரித்தலுமாம். குழகர் - அழகர். உம்மைகள், சிறப்பு. திருவாரூர்த் திருக் கோயிலில் 'அரநெறி' என்பதொரு தலமும் இருத்தலால், புற்றிடங் கொண்ட இடமாகிய முதலிடம், 'மூலட்டானம்' என வழங்கப்படும்.
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்பாசுபதம் பார்த்தற் களித்தார் போலும் கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலும்கபாலங்கட் டங்கக் கொடியார் போலும் பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்பேர்நந்தி யென்னும் பெயரார் போலும் அரியதோர் அரணங்கள் அட்டார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானனார் பருத்த பாம்பினை இடையில் இறுக்க அணிந்தவராய், அருச்சுனனுக்குப் பாசுபதாத்திரம் வழங்கியவராய்க் கரிய யானைத் தோலினைப் போர்த்தவராய், மண்டை ஓட்டினையும் கட்டங்கப் படை எழுதிய கொடியினையும் உடையவராய்ப் பெரிய மலையை வில்லாகக் கொண்டு அம்பு எய்தவராய், நந்தி என்ற பெயரினையும் உடையவராய்ப் பகைவருடைய அழித்தற்கரிய மும்மதில்களையும் அழித்தவராய், நம் மனக்கண் முன் காட்சி வழங்குகின்றார். குறிப்புரை: பசுபதியின்ஆற்றல்பெற்ற அம்பு, 'பாசு பதம்' எனப்படும். பார்த்தன் -அருச்சுனன். 'கபாலத்தார், கொடியார் என்க. 'காபாலம்' என்பதும் பாடம்; கட்டங்கம் என்னும் படைக்கலம் எழுதப்பட்ட கொடியும் சிவபிரானுக்கு உண்டென்க. எய்தார் என்பது, போர் செய்தார் என்னும் பொருளாய் நின்றது. 'பேரினை நந்தியென்னும் பெயராக உடையார்' எனஉரைக்க. அரணங்கள் - மதில்கள்.
துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்தூய திருமேனிச் செல்வர் போலும் பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும் மணியுடைய மாநாகம் ஆர்ப்பார் போலும்வாசுகிமா நாணாக வைத்தார் போலும் அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: கீளூம் கோவணமும் ஆகிய குறைந்த உடைகளையும் தோல் உடையையும் உடையவராய்த் தூய திருமேனியை உடைய செல்வராய்,அடியார்களுடைய பிணிகளை நீங்குமாறு போக்குபவராய், மொழியைக் கடந்த பெரும்புகழாளராய், இரத்தினங்களை உடைய மேம்பட்ட நாகங்களை அணிந்தவராய், வாசுகி என்ற பாம்பினைத் தம் வில்லின் நாணாகக் கொண்டவராய், அழகிய நீண்ட வீதிகளில் உலாவுபவராய், அழகிய ஆரூர்ப் பெருமானார் மனக்கண் முன் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: துணி உடை - குறைந்த உடை; அவை, கீளும் கோவணமும். என்பார் - எனப்படுவார்; 'என்பினை அணிந்தவர்' என்றுமாம். என்றது காண்க.
ஓட்டகத்தே ஊணாக வுகந்தார் போலும்ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும் நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும் காட்டகத்தே யாட லுடையார் போலும்காமரங்கள் பாடித் திரிவார் போலும் ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானனார் மண்டையோட்டில் பிச்சையெடுக்கும் உணவையே விரும்பியவராய், அனற் பிழம்பாய்த் தோன்றி அடிமுடி காண முடியாதவாறு உயர்ந்தவராய், நாட்டிலே மக்கள் பயின்று வரப் பல நெறிகளையும் கூறியவராய், ஞானப் பெருங்கடலுக்கு உரிமை பூண்ட தலைவராய்ச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்துபவராய் சீகாமரம் என்ற பண்ணில் அமைந்த பாடல்களைப் பாடித்திரிபவராய்ப் பஞ்சகவ்விய அபிடேகத்தை உகப்பவராய் நம்மனக்கண் முன் காட்சிவழங்குகிறார். குறிப்புரை: ஊண் ஆக - உணவு மிக, மிகுதல், பிச்சையால் என்க. ஓர் உரு, அழற்பிழம்பு. 'நாட்டகத்தே நிலவ' என, ஒரு சொல் வருவிக்க. நடை - நெறி. நாதர் -தலைவர். ஞானத்தின் பயனாய் நிற்றலின், ஞானமாகிய கடலுக்குக் கரையாயவர் என்றருளியவாறு. 'ஞானப்பெருங்கடற்கு ஓர் நாவாய் அன்ன பூரணன் காண்' எ அருளிச்செய்தமை காண்க. காமரம் - சீகாமரப்பண்; முதற் குறை. ஆட்டகம் - 'ஆடு என்பது திரிந்துநின்றது' திருமஞ்சன சாலை என்பதே பொருள்.
ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்இமையவர்க ளேத்த இருந்தார் போலும் கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் வானத் திளமதிசேர் சடையார் போலும்வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும் ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: பன்றியின் முற்றாத கொம்பினை அணிந்தவராய்த் தேவர்கள் வழிபடும்படியாகத் தங்கியிருப்பவராய்க் காட்டில் உள்ள கல்லால மரத்தின் கீழ் அமர்ந்தவராய்க் கடல் நஞ்சினை உண்டு கறுத்த கழுத்தினராய்ப் பிறை சேர்ந்த சடையினராய், உயர்ந்த கயிலை மலையை உகந்து உறைபவராய், அகரமாகிய எழுத்து ஏனைய எழுத்துக்களின் தோற்றத்துக்குக் காரணமாக இருப்பது போல ஏனைய பொருள்களுக் கெல்லாம் காரணராய், காளையை இவர்ந்தவராய் அடியவர்கள் மனக்கண்முன் அழகிய ஆரூர்ப் பெருமானார் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: திருமால் வராகமாய்த் தோன்றிய சில நாட்களுக்குள்ளே அழித்தமையின், 'இளமருப்பு' என்றார். 'ஏன முளைக்கொம் பவைபூண்டு'என்றது காண்க. கானம் காடு. கீழ் நிழல் -அடிக்கண் உள்ள நிழல். 'மகிழ்ந்தார்' என்றது, 'மகிழ்ந்து வீற்றிருந்தார்' எனப் பொருள் தந்தது. ஆனத்து -எருதின் மேல் விளங்குகின்ற. முன் எழுத்து, அகரம்; 'எழுத்தாய்' என்னும் ஆக்கச் சொல், உவமை குறித்து நின்றது. இறைவற்கு அகரம் உவமையாகப் பொதுமறையுட் சொல்லப்பட்ட மைவெளிப்படை. 'முன்னெழுத்தாய் நின்றார்' என்பது. ஒருபெயர்த் தன்மைத்தாய், 'ஆனத்து' என்னும் ஏழாவதன் தொகைக்கு முடிபாயிற்று.
காமனையும் கரியாகக் காய்ந்தார் போலுங்கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும் சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும் நாமனையும் வேதத்தார் தாமே போலும்நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும் ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் மன்மதனைச் சாம்பலாகுமாறு கோபித்துக்கடல் விடத்தை உண்டு நீலகண்டராய்ப் பிறையையும் சடையில் சூடிச் சொல், சொற்பொருள், நாவால் உச்சரிக்கப்படும் வேதம் இவற்றின் வடிவினராய்ப் பார்வதி பாகராய்க் கங்கையை முடியில் வைத்தவராய் அடியவர் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்குகிறார். குறிப்புரை: சோமன் - சந்திரன். 'நாமன்னும், ஆம் மன்னும்' என்பன. 'நாமனையும் ஆம்மனையும்' எனத் திரிபெய்தி நின்றன. ஆம் - நீர்.
முடியார் மதியரவம் வைத்தார் போலும்மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலும் செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்செல்கதிதான் கண்ட சிவனார் போலும் கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்கங்காள வேடக் கருத்தர் போலும் அடியா ரடிமை யுகப்பார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் முடியில் பிறையும் பாம்பும் சூடி, மூவுலகும் தாமேயாய்ப் பரந்து புலால் நாற்றம் கமழும் மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிந்து வீடுபேற்றிற்கு உரிய வழியைக் காட்டி மற்றவர் நீக்கும் நஞ்சுண்டு நீல கண்டராய், எலும்புக்கூட்டினை அணிந்த வேடத்தை உடைய தலைவராய், அடியார்களுடைய அடிமைப் பணியினை உகப்பவராய் மனக்கண்முன் அடியவர்க்குக் காட்சி வழங்குகின்றார். குறிப்புரை: ஆர் - ஆத்தி மாலை. செடி- முடைநாற்றம். கண்ட படைத்த. தான், அசைநிலை. கடிஆர் - நீக்குதலைப் பொருந்திய கங்காளம் -எலும்புக் கூடு. கருத்தர் - தலைவர். அடிமை - தொண்டு
இந்திரத்தை யினிதாக ஈந்தார் போலும்இமையவர்கள் வந்திறைஞ்சும் இறைவர் போலும் சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்தூத்தூய திருமேனித் தோன்றல் போலும் மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்மாநாகம் நாணாக வளைத்தார் போலும் அந்திரத்தே யணியாநஞ் சுண்டார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானத்துப் பெருமானார் இந்திர பதவியைத் தக்கவருக்கு மகிழ்வோடு ஈந்து, தேவர்கள் வந்து வழிபடும் தலைவராய் அழகியநீறு பூசி, மிகவும் தூய திருமேனியை உடைய தலைவராய், அடியவர்கள் உள்ளத்தே தம் திருவைந் தெழுத்தை நிலையாக அமைத்து வாசுகியைத் தம் மலைவில்லின் நாணாக வில்லினை வளைத்து இணைத்து, அழகிய நிலைபெற்ற அணியாகுமாறு விடம் உண்டு நீலகண்டராய் நம்மனக்கண்முன் காட்சி வழங்குகின்றார். குறிப்புரை: இந்திரம் - தலைமை. 'இமையவர்கள்' என்பது பின்னால் வருதலால், 'ஈந்தது அவர்கட்கே' என்பது பெறப்படும். துதைதல் - செறிந்து மிக்கிருத்தல்; துதைந்தார், 'தூய வெண்ணீறு துதைந்த பொன்மேனி' (தி.திருநாவு.புரா. என்றதும் காண்க. 'மனம்' என்றது, அடியார்களுடையதை. 'மலையை வளைத்தார்' என வருவித்து முடிக்க. அம் திரத்து அணியா நஞ்சு உண்டார் - அழகு நிலைபெற்ற பொருள்களில் அழகிய பொருளாக நஞ்சினை உண்டார்; உண்டு கண்டத்தில் வைத்தார்.
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்பிறவி யிறவி யிலாதார் போலும் முண்டத்து முக்கண் ணுடையார் போலும்முழுநீறு பூசும் முதல்வர் போலும் கண்டத் திறையே கறுத்தார் போலும்காளத்தி காரோணம் மேயார் போலும் அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: எல்லா உடம்புகளையும் பாதுகாக்கும் தலைவரான திருவாரூர்ப் பெருமானார் பிறப்பு இறப்பு அற்றவராய், நெற்றியில் மூன்றாவது கண்ணை உடையவராய், உடல் முழுதும் நீறு பூசும் தலைவராய்க் கழுத்து சிறிதே கறுத்தவராய்க் காளத்தி, குடந்தை, நாகை என்ற காரோணப்பதிகள் ஆகியவற்றை உகந்தருளியிருப்பவராய் அண்டத்துப் புறத்தும் உள்ளவராய் நம் மனக்கண்முன் காட்சி வழங்குகிறார்.குறிப்புரை: பிண்டம் -உடம்புகள். 'அவைகளைக் காப்பவன் இறைவனேயாகலின், நாம் அதுபற்றிக் கவலுதல் வேண்டா' என்பது குறிப்பு. முண்டம் - நெற்றி. 'முக்கண்' என்பது, 'மூன்றாவது கண்' என்னும் பொருளதாய் நின்றது. இறை -சிறிது.
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்ஊழி பலகண் டிருந்தார் போலும் பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும் உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்உகப்பார் மனத்தென்றும் நீங்கார் போலும் அருகாக வந்தென்னை யஞ்சே லென்பார்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலத்தானப் பெருமான் ஒரு காலத்தில் தாம் ஒருவரேயாகிப் பல ஊழிக் காலங்களையும் கண்டு, கங்கையைப் பெருகாதபடி சடையில் கொண்டு தவிர்த்து, பிறப்பு துயரம் சாக்காடு என்பன இல்லாதவராய், உருகாத மனத்தவர் உள்ளத்தில் உகந்து தங்காதவராய், தம்மை விரும்புவர் உள்ளத்தை என்றும் நீங்காதவராய் அருகில் வந்து எனக்கு அஞ்சேல் என்று அருள் செய்பவர் ஆவர். குறிப்புரை: 'ஒருகாலம்' என்றது காலத்திற்கு அப்பாற்பட்ட நிலையை; அஃது உலகம் தோன்றாதிருந்த நிலை. ஒன்று - தாம் ஒரு பொருளே. ஊழி, உலகம் தோன்றி ஒடுங்கும் கால அளவு. 'வெள்ளம்' என்றது, கங்கையை. 'தவிர்த்தார்' என்றது, அதனைச் சடையில் அடக்கினமையை. இனி, 'ஊழி வெள்ளத்தை நீக்கி, உலகம் மீளத் தோன்றுமாறு செய்தார்' எனலுமாம். 'இடும்பை' என்பது, 'சாக்காடு' என்பதனோடும் இயையும்; 'பிறப்பு இறப்புக்களாகிய துன்பம்' என்பது பொருள். உகப்பார் - விரும்புவார். 'அருகாக வந்தென்னை அஞ்சேல் என்பார்' என்ற அருந்தொடர், சுவாமிகளுக்கு இறைவன் அநுபவப் பொருளாய் இருந்தமையை இனிது விளக்கும்.
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலும் கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்கோளரக்கர் கோன்தலைகள் குறைத்தார் போலும் சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்திசையனைத்து மாயனைத்து மானார் போலும் அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்அணியாரூர்த் திருமூலட் டான னாரே. பொருளுரை: அணி ஆரூர்த் திருமூலட்டானப் பெருமானார் நல்ல ஒழுக்க நெறிகளை நூல்கள் வாயிலாக அறிவித்து ஞானப்பெருங்கடற்கு உரிமை உடைய தலைவராய், வேள்வியில் கொல்லப்பட்டதனை வேள்வி செய்யும் அடியவர் உகப்பிற்காக நுகர்பவராய், இராவணன் தலைகள் பத்தினையும் நசுக்கியவராய்ப் பகைவருடைய திரிபுரங்களை அம்பு எய்து அழித்தவராய்த் திசைகளிலும் திசைகளில் உள்ள பொருள்களிலும் பரவியவராய், ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும் அடியார் உகப்பிற்காக ஆயிரம் திருநாமங்களை உடையவராய், அடியவர்கள் மனக்கண்ணுக்குக் காட்சி வழங்குகின்றார். சென்றார் - மெலித்தல் விகாரம். குறிப்புரை: நடை - ஒழுக்கம். நவின்றது, நூலால் என்க. 'ஞானப் பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்'என்பது முன்பும்திரிந்து ஆர்க்கின்ற.'சென்று எய்தார்' என்றியைப்பினுமாம். திசை அனைத்தும் ஆனார் - திசைகளில் உள்ள அனைத்துப் பொருள்களும் ஆயினார். அன்று ஆகில் - ஒரு பெயரும் அவருடைய பெயர் அன்று ஆயினும்; சிறப்பும்மை தொக்கது. 'ஆயிரம்' என்றல், அளவின்மை காட்டுவதொரு வழக்கு. ஒருபெயரும் அவருடைய பெயரல்லாமை, அஃது அவரது உண்மை நிலையை வரையறுத்துணர்த்தாமையானும், அளவற்ற பெயர் அவருடைய பெயர்களாதல் அவை அவரது அருள் நிலையை ஒவ்வோராற்றான் விளக்கலானும் என்க. 'ஒருநாமம் ஓருருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம் - திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ' (தி.திருவாசகம்.திருத்தெள்ளேணம். என்றருளிச் செய்தமையுங் காண்க.திருநாவுக்கரசர் புராணம் நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்திஅடிகள்திருத் தொண்டின் நன்மைப் பான்மைநிலை யால்அவரைப் பரமர்திருவிருத்தத்துள் வைத்துப் பாடித் தேன்மருவுங் கொன்றையார் திருவாரூர்அரனெறியில் திகழுந் தன்மை ஆனதிற மும்போற்றி அணிவீதிப்பணிசெய்தங் கமரும் நாளில். -தி.சேக்கிழார்.
திருவாரூர் பதிக வரலாறு: இத் திருப்பதிக வரலாற்றினை ஆம் திருப்பதிகத்திற் காண்க. திருத்தாண்டகம் திருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்தீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறல் குருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணைகொக்கரையின் சச்சரியின் பாணி யானைப் பருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்பருப்பதத்தில் அருங்கலத்தைப் பாவந் தீர்க்கும் அருமணியை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: செல்வம் தரும் சிந்தாமணியாய், இனிக்கும் தேன், பால், கருப்பஞ்சாறு, தெளிவாகிய அமுதம் போன்றவனாய்ச் சிறந்த ஆசிரியனாய், குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரை சச்சரி இவற்றின் தாளத்திற்கு ஏற்பக் கூத்து நிகழ்த்துபவனாய், எங்கும் கிட்டுதற்கு அரிய பெரிய இரத்தினம் பவளம் முத்து கிளிச்சிறை என்ற பொன் போன்றவனாய்ச் சீசைலத்தின் விலைமிக்க அணிகலனாய், பாவத்தைப் போக்கும் அரிய மாணிக்கமாய் உள்ள ஆரூர்ப் பெருமானை இதுகாறும் அறியாதுநாய் போன்ற, அவன் அடியேன் மறந்திருந்தவாறு கொடியது. குறிப்புரை: திரு - அழகு. 'தேறலை பொன்னை' என்னும் ஐயுருபுகள் தொகுத்தலாயின. தேறல்- தேன். குரு - நிறம். குருமணி - சிறந்த ஆசிரியன் என்றுமாம்.குழல் முதலியன வாச்சிய வகைகள். பாணி - தாளம்; அவற்றை உடையவன் என்றவாறு. இனி, நடனமாடுதல் பற்றிக் கூறியதுமாம். பருமணி - பெரிய இரத்தினம். பருப்பதம் - சீபருப்பதம். அருங்கலம் - விலைமிக்க அணிகலம். அருமணி - கிடைத்தற்கரிய இரத்தினம். அயர்த்தல் - மறுத்தல். 'மறந்திருந்தவாறு கொடிது' என்க.
பொன்னேபோல் திருமேனி யுடையான் தன்னைப்பொங்குவெண் ணூலானைப் புனிதன் தன்னை மின்னானை மின்னிடையாள் பாகன் தன்னைவேழத்தி னுரிவிரும்பிப் போர்த்தான் தன்னைத் தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்தத்துவனை யுத்தமனைத் தழல்போல் மேனி அன்னானை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: பொன்னார் மேனியனை, வெண்ணூல் அணிந்த புனிதனாய் ஒளி வீசுவானை, பார்வதிபாகனை, யானைத்தோல் போர்வையனைத், தன்வயம் உடையவனைத் தன்னை ஒப்பார் பிறர் இல்லாதவனை, மெய்ப்பயனை, மேம்பட்டவனை, தழல்போன்ற செந்நிற மேனியனை -இவ்வாறெல்லாம் மனக் கண்ணுக்குக் காட்சி வழங்கும் ஆரூர்த் தலைவனை இதுகாறும் அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.குறிப்புரை: மின்னான் -மின்போலும் ஒளியுடையவன். தன்னான் - தன் வயமுடையவன். தத்துவன் - உண்மைப் பொருளாயுள்ளவன். அன்னான் -அவன். மேனியையுடைய அவன் என்க. 'அன்னை போல்பவன்' என்றும் ஆம்
ஏற்றானை ஏழுலகு மானான் தன்னையேழ்கடலு மேழ்மலையு மானான் தன்னைக் கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்கொடுமழுவாள் கொண்டதோர் கையான் தன்னைக் காற்றானைத் தீயானை நீரு மாகிக்கடிகமழும் புன்சடைமேற் கங்கை வெள்ள ஆற்றானை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: இடபவாகனனாய், ஏழ்கடலும் ஏழ்மலையும் ஏழுலகும் ஆகிப் பரந்திருப்பவனாய்க் கூற்றுவனாய்த் தருமராசருடைய ஏவலனான கூற்றை உதைத்தவனாய், மழுப்படை ஏந்திய கையனாய், காற்றும் தீயும் நீருமாகி நறுமணம் கமழும் செஞ்சடைமேல் கங்கையைத் தரித்தவனாய் உள்ள, ஆரூரிலுள்ள, அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: ஏறு - விடை. ஏழ்மலை, ஏழ்தீவைச் சூழ்ந்திருப்பன. கூற்றான் - கூற்றுவனாய் இருப்பவன். 'வெள்ளமாகிய கங்கை ஆற்றான்' என மாறிக் கூட்டுக.
முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னைமூவாத மேனிமுக் கண்ணி னானைச் சந்திரனும் வெங்கதிரு மாயி னானைச்சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை மந்திரமும் மறைப்பொருளு மானான் தன்னைமறுமையும் இம்மையு மானான் தன்னை அந்திரனை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: முற்பிறப்புக்களில் செய்யப்பட்ட கொடிய வினைகளைத் தீர்ப்பவனாய், மூப்படையாத் திருமேனியில் மூன்று கண்கள் உடையவனாய்ச் சந்திரனும் சூரியனும் ஆகியவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சங்கினாலாகிய காதணியை உடையவனாய், மந்திரமும் வேதத்தின் பொருளும் மறுமையும் இம்மையுமாய் அழகுநிலை பெற்றிருக்கும் ஆரூரிலுள்ள அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: முந்திய - முற்பிறப்புக்களிற் செய்யப்பட்டு வந்த. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். அம் திரன் - அழகு நிலை பெற்றவன்; என்றும் ஒருநிலையாய் இருப்பவன். 'அந்தரன்' என்பதும் பாடம்.
பிறநெறியாய்ப் பீடாகிப் பிஞ்ஞ கனுமாய்ப்பித்தனாய்ப் பத்தர் மனத்தி னுள்ளே உறநெறியாய் ஓமமாய் ஈமக் காட்டில்ஓரிபல விடநட்ட மாடி னானைத் துறநெறியாய்த் தூபமாய்த் தோற்ற மாகிநாற்றமாய் நன்மலர்மே லுறையா நின்ற அறநெறியை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: பிறக்கும் வழிகளாகவும், பெருமையாகவும், தலைக்கோலம் அணிந்தவனாகவும், பித்தனாகவும், அடியவர்கள் உள்ளத்தில் உறவுதரும் வழியாகவும், வேள்வியாகவும் அமைந்து, சுடுகாட்டிலுள்ள நரிகள் அஞ்சி ஓடக் கூத்தாடுபவனாய்த் துறவு நெறியாகவும் புகையாகவும் காட்சி வழங்கிப்பூவில் நறுமணம் போல உலகெங்கும் பரந்துள்ளவனாய் உள்ள அறநெறியை அறிவித்த ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: பிற நெறி - பிறக்கும் நெறி; பந்தம். பீடு - பெருமை. பிஞ்ஞகன் - தலைக்கோலத்தை உடையவன். உற - உறவு; முதனிலைத் தொழிற்பெயர். ஓமம்- வேள்வி. ஓரி - நரி. விட -நீங்க. துற -துறவு; இதனையும், 'உற' என்பது போலக் கொள்க. இது பிறவி நெறிக்கு மாறானது; வீட்டுநெறி. தூபம் - நறும்புகைப் பொருள்; என்றது வேள்விப் பொருளை. இது 'ஓமமாய்' என்பதன் பின் வைக்கற் பாலது. தோற்றம் - உலகத் தோற்றம்; இஃது ஆகுபெயராய், அதன் காரணத்தைக் குறித்தது. நாற்றமாய்- நாற்றம்போல. தாமரை மலராகிய இருக்கைமேல் வைத்து வழிபடப்படுதல்பற்றி 'நாற்றமாய் நன்மலர்மேல் உறையாநின்ற' என்றருளிச் செய்தார். அறநெறி -அறநெறிக்கு முதல்.
பழகியவல் வினைகள் பாற்று வானைப்பசுபதியைப் பாவகனைப் பாவந் தீர்க்கும் குழகனைக் கோளரவொன் றாட்டு வானைக்கொடுகொட்டி கொண்டதோர் கையான் தன்னை விழவனை வீரட்டம் மேவி னானைவிண்ணவர்க ளேத்தி விரும்பு வானை அழகனை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: பழக்கத்தினால் ஏற்படும் வருவினையை அழிப்பவனாய், ஆன்மாக்களுக்குத் தலைவனாய், அக்கினித் தேவனாய்ப் பாவங்கள் போக்கும் இளையவனாய், பாம்பினை ஆட்டுபவனாய்க் கொடுகொட்டிப்பறையைக் கையில் கொண்டவனாய், விழாக்களில் மேவி இருப்பவனாய், வீரட்டத்தில் உறைபவனாய்த் தேவர்கள் துதித்து விரும்பும் அழகனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: 'பழகிய வல்வினைகள்' என்றது பழக்கத்தினால் செய்யப்படும் ஆகாமிய வினைகளை. பாற்றுவான் - நீக்குவான். பாவகன் - அங்கியங் கடவுள். விழவன் - விழாக்களை உடையவன்; மங்கலத்தையே உடையவன். விரும்புவான் -விரும்பப்படுபவன்.
சூளா மணிசேர் முடியான் தன்னைச்சுண்ணவெண் ணீறணிந்த சோதி யானைக் கோள்வா யரவ மசைத்தான் தன்னைக்கொல்புலித்தோ லாடைக் குழகன் தன்னை நாள்வாயும் பத்தர் மனத்து ளானைநம்பனை நக்கனை முக்க ணானை ஆள்வானை ஆரூரில் அம்மான் தன்னைஅறியா தடிநாயே னயர்த்த வாறே. பொருளுரை: சூளாமணியை அணிந்த முடியை உடையவனாய். திருநீறு தரித்த ஒளியினனாய், கொடிய பாம்பினை, இடையில் இறுக்கிக் கட்டியவனாய்ப் புலித்தோல் ஆடையை அணிந்த இளையவனாய், எப்பொழுதும் அடியவர் உள்ளத்தில் இருந்து அவரால் விரும்பப்படுபவனாய், ஆடை அற்றவனாய், முக்கண்ணனாய், எல்லோரையும் ஆள்பவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: சூளாமணி - உச்சிமணி; இதுபாம்பின் தலையில் உள்ளதைக் குறித்தது.கோள்வாய் - கொல்லும்வாய். நாள் வாயும் - நாள்தோறும்வந்து வழிபடுகின்ற. ஆள்வான் - எல்லா உலகங்களையும் எல்லாப் பொருள்களையும் ஆளுகின்றவன்.
முத்தினை மணிதன்னை மாணிக் கத்தைத்மூவாத கற்பகத்தின் கொழுந்து தன்னைக் கொத்தினை வயிரத்தைக் கொல்லே றூர்ந்துகோளரவொன் றாட்டுங் குழகன் தன்னைப் பத்தனைப் பத்தர் மனத்து ளானைப்பரிதிபோல் திருமேனி யுடையான் தன்னை அத்தனை ஆரூரில் அம்மான் தன்னைஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே. பொருளுரை: முத்து, மணி, மாணிக்கம், என்றும் மூப்படையாத கற்பகத்தின் கொழுந்து, வயிரம் இவற்றை வைத்துக் கோத்த மாலை போல்வானாய்க் காளையை இவர்ந்து பாம்பாட்டும் இளையவனாய், எல்லோரிடத்தும் அன்புடையவனாய், பக்தர்கள் மனத்தில் நிலைத்து இருப்பவனாய், சூரியனைப் போல ஒளி வீசும் திருமேனியை உடையவனாய், எல்லோருக்கும் தலைவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே.குறிப்புரை: மூவாத - கெடாத, கொத்து -எல்லா மணியும் கோக்கப்பட்ட மாலை. இதனை, 'வயிரத்தை' என்பதன் பின்னர்க்கூட்டுக. 'ஊர்ந்து' என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. பத்தன் - அன்புடையன்; இரக்கம் உடையவன். பரிதி - சூரியன்.
பையா டரவங்கை யேந்தி னானைப்பரிதிபோல் திருமேனிப் பால்நீற் றானை நெய்யாடு திருமேனி நிமலன் தன்னைநெற்றிமேல் மற்றொருகண் நிறைவித் தானைச் செய்யானைச் செழும்பவளத் திரளொப் பானைச்செஞ்சடைமேல் வெண்டிங்கள் சேர்த்தி னானை ஐயாறு மேயானை ஆரூ ரானைஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே. பொருளுரை: படமெடுத்தாடும் பாம்பைக் கையில் ஏந்தியவனாய்ச் சூரியனைப் போலச் சிவந்த மேனியில் பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவனாய், நெய் அபிடேகம் செய்த திருமேனியை உடைய தூயவனாய், நெற்றியில் மூன்றாவது கண் உடையவனாய்ச் செழும்பவளத்திரள் போன்ற செந்நிறத்தினனாய்ச் செஞ்சடையில் வெண்பிறை சூடியவனாய்த் திருவையாற்றை உகந்தருளியிருப் பவனான ஆரூர் அம்மானை அறியாது அடிநாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: பை ஆடு அரவம் - படத்தையுடைய ஆடுகின்ற பாம்பு. பால் நீறு - பால்போன்ற நீறு. மற்றொருகண்- பிறர் ஒருவர்க்கும் இல்லாத வேறு ஒருகண். ஐயாறு - 'திருவையாறு' என்னும் சோழ நாட்டுத் தலம்.
சீரார் முடிபத் துடையான் தன்னைத்தேசழியத் திருவிரலாற் சிதைய நூக்கிப் பேரார் பெருமை கொடுத்தான் தன்னைப்பெண்ணிரண்டும் ஆணுமாய் நின்றான் தன்னைப் போரார் புரங்கள் புரள நூறும்புண்ணியனை வெண்ணீ றணிந்தான் தன்னை ஆரானை ஆரூரி லம்மான் தன்னைஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே. பொருளுரை: அழகிய பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் புகழ் அழியுமாறு கால்விரலால் உடல் சிதைய வருத்திப் பிறகு அவனுக்கு அந்தப் பெயருக்கு ஏற்ப எல்லாரையும் அழச்செய்பவன் என்ற பெருமையைக் கொடுத்தானாய்ப் பார்வதி கங்கை என்ற பெண்பாலர் இருவரைக் கொண்ட ஆண்வடிவு உடையவனாய்ப் போரிட்ட திரிபுரங்கள் அழியுமாறு சாம்பலாக்கிய புண்ணியனாய், வெண்ணீறு அணிந்தானாய், அடியவர்களுக்குத் தெவிட்டாதவனாய் உள்ள ஆரூர் அம்மானை அறியாது அடி நாயேன் அயர்த்தவாறே. குறிப்புரை: தேசு - ஒளி; அழகு; புகழுமாம். நூக்கி - வருத்தி. பேர் - புகழ். பெண் இரண்டு- உமையும், கங்கையும். 'ஆணம் பெண்ணும் அஃறிணை இயற்கை தெவிட்டாதவன்.
திருவாரூர் பதிக வரலாறு: ம் திருப்பதிக வரலாறு காண்க. குறிப்பு: இத்திருப்பதிகம், 'காண்' என்னும் முடிபுடைய தொடர்க் கோவையால் இறைவன் இயல்பினை விளக்குவது. திருத்தாண்டகம் எம்பந்த வல்வினைநோய் தீர்த்திட் டான்காண்ஏழ்கடலும் ஏழுலகும் ஆயி னான்காண் வம்புந்து கொன்றையந்தார் மாலை யான்காண்வளர்மதிசேர் கண்ணியன்காண் வானோர் வேண்ட அம்பொன்றால் மூவெயிலு மெரிசெய் தான்காண்அனலாடி யானஞ்சு மாடி னான்காண் செம்பொன்செய் மணிமாடத் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: செம்பொன்னால் செய்த மணிகள் இழைக்கப்பட்ட மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்திலுள்ள எம் செல்வன் எம்மைத் தளையிடும் ஊழ்வினையால் ஏற்படும் நோயைத் தீர்த்தவன். ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயவன். நறுமணம் கமழும் கொன்றை மாலையன். பிறையோடு சூடிய முடிமாலையை உடையவன். தேவர்கள் வேண்ட ஓரம்பினால் மூன்று மதில்களையும் எரித்தவன். தீயில் கூத்தாடுபவன். பஞ்சகவ்விய அபிடேகம் செய்பவன். குறிப்புரை: பந்தம் - தளை. வம்பு -வாசனை. உந்து - எழுவிக்கின்ற. 'அனலாடி' என்னும் எச்சம் எண்ணுப் பொருளது. 'காண்' என்பன அசைநிலைகள். 'எம்செல்வன்' என்பதனை எழுவாயாக எடுத்துக்கொண்டுரைக்க.தான், ஏ அசைநிலைகள்.
அக்குலாம் அரையினன்காண் அடியார்க் கென்றும்ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற் றான்காண் கொக்குலாம் பீலியொடு கொன்றை மாலைகுளிர்மதியுங் கூரரவும் நீருஞ் சென்னித் தொக்குலாஞ் சடையினன்காண் தொண்டர் செல்லுந்தூநெறிகாண் வானவர்கள் துதிசெய் தேத்தும் திக்கெலாம் நிறைந்தபுகழ்த் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: இடையில் எலும்புகளை அணிந்தவன். அடியார்களுக்கு எப்பொழுதும் கிட்டுதற்கு அரிய அமுதமாய் இனிக்கும் திருவையாற்றில் உறையும் இறைவன். கொக்கிறகு, கொன்றை மாலை, குளிர்ந்தபிறை, கொடுமை மிக்க பாம்பு என்பன ஒருசேரத் தங்கியிருக்கும் சடையினன். தொண்டர்கள் செல்லும் தூயவழியைக் காட்டுபவன் ஆகிய சிவபெருமான் தேவர்கள் துதித்துப் புகழுமாறு எல்லாத்திக்கிலும் நிறைந்த புகழை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்து உறையும் எம் செல்வனாகக் காட்சி வழங்குகிறான்.குறிப்புரை: அக்கு உலாம் - எலும்பு பொருந்திய. அண்ணிக்கும் - தித்திக்கின்ற. ஐயாறு, தலம். 'கொக்கு' என்றது, அதன் இறகை. பீலி - மயில் இறகு. கூர் -மிக்க. தொக்கு உலாம் - கூடித் தங்குகின்ற; 'தூநெறி' என்றது, அதன்கண் மேற்கொள்ளப்படும் ஒழுக்கங்களை. 'ஏத்தும் புகழ்' என இயையும். 'சென்னி' என்பதை, 'கொக்கு' என்பதற்கு முன்வைத்து, 'சென்னிச்சடையினன்' என இயைக்க.
நீரேறு சடைமுடியெம் நிமலன் தான்காண்நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தான்காண் வாரேறு வனமுலையாள் பாகத் தான்காண்வளர்மதிசேர் சடையான்காண் மாதே வன்காண் காரேறு முகிலனைய கண்டத் தான்காண்கல்லாலின் கீழறங்கள் சொல்லி னான்காண் சீரேறு மணிமாடத் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: சடைமுடியில் கங்கையைத் தரித்த தூயவன். நெற்றிக்கண்ணன். கச்சணிந்த முலைகளை உடைய பார்வதி பாகன். பிறைசேர் சடையன். பொருந்தேவன். கார்முகில் போன்ற நீலகண்டன். கல்லாலின் கீழ் இருந்து அறங்களைச் சனகர் முதலிய நால்வருக்கு மோன நிலையில் உபதேசித்தவன். சிறப்பு மிக்க அழகிய மாடங்களை உடைய திருவாரூரில் திருமூலத்தானத்தில் எம் செல்வனாக அப்பெருமான் உறைகின்றான். குறிப்புரை: வார் - கச்சு. வனம் - அழகு. மாதேவன்- பெருந்தேவன்; முழுமுதற் கடவுள். கார் - கருமை நிறம்.
கானேறு களிற்றுரிவைப் போர்வை யான்காண்கற்பகங்காண் காலனையன் றுதைசெய் தான்காண் ஊனேறு முடைதலையிற் பலிகொள் வான்காண்உத்தமன்காண் ஒற்றியூர் மேவி னான்காண் ஆனேறொன் றதுவேறும் அண்ணல் தான்காண்ஆதித்தன் பல்லிறுத்த ஆதி தான்காண் தேனேறு மலர்ச்சோலைத் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: தேன்மிக்க மலர்கள் நிறைந்த சோலைகளை உடைய திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் காட்டில் திரிகின்ற யானைத் தோலைப் போர்த்தியவன். கற்பகம் போன்ற கொடையாளி. கூற்றுவனை ஒருகாலத்து உதைத்தவன். புலால் நாற்றம் கமழும் தலையோட்டில் பிச்சை எடுப்பவன். உத்தமன். ஒற்றியூரில் விரும்பி உறைபவன். காளையை இவரும் தலைவன். சூரியன் ஒருவனுடைய பற்களை உதிர்த்த முதற்பொருள் ஆவான். குறிப்புரை: கான் ஏறு - காட்டில் திரிகின்ற; இஃது இன அடை. கற்பகம், வேண்டுவார் வேண்டுவதை ஈவது. உடைதலை, வினைத்தொகை; 'உடலின் நின்றும் நீங்கிய தலை' என்றதாம். ஆதித்தன் - சூரியன்.
பிறப்போ டிறப்பென்று மில்லா தான்காண்பெண்ணுருவோ டாணுருவ மாயி னான்காண் மறப்படுமென் சிந்தைமருள் நீக்கி னான்காண்வானவரு மறியாத நெறிதந் தான்காண் நறப்படுபூ மலர்தூபந் தீப நல்லநறுஞ்சாந்தங் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: தேன் பொருந்திய பூக்கும் நிலையிலுள்ள மலர்கள், தூபம், தீபம், நல்ல சந்தனம் இவற்றைக் கொண்டு துதித்து நாள்தோறும் தேவர்கள் சிறப்போடு பூசனை செய்யும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் செல்வன் பெண்ணும் ஆணுமாகிய உருவுடையவனாய்ப் பிறப்பு இறப்பு இல்லாதவனாய்ப் பாவத்தில் அகப்பட்ட என்மனத்தின் மயக்கத்தை நீக்கியவனாய்த் தேவர்களும் அறியாத வீடுபேற்றிற்கு உரிய வழியை எனக்கு அருள்பவன்.குறிப்புரை: பெண் உருவோடு ஆண் உருவம் ஆகினமையே, அவனது திருமேனியிலும், உலகத்திலுங் கொள்க. மறப்படும் - பாவத்தின்கண் அகப்பட்ட; இதுசமண் சமயக்கொள்கையில் மயங்கியதைக் குறித்தது. 'பின் எனக்கு, வானவரும் அறியாத நெறி தந்தான்' என்க. 'நறா' என்பது செய்யுளாகலின், இறுதி ஆகாரம் குறுகிற்று. தேன் என்பது பொருள். சிறப்பு - மேன்மை; விழாவுமாம்.
சங்கரன்காண் சக்கரம்மாற் கருள்செய் தான்காண்தருணேந்து சேகரன்காண் தலைவன் தான்காண் அங்கமலத் தயன்சிரங்கள் ஐந்தி லொன்றைஅறுத்தவன்காண் அணிபொழில்சூழ் ஐயாற் றான்காண் எங்கள்பெரு மான்காண்என் னிடர்கள் போகஅருள்செய்யும் இறைவன்காண் இமையோ ரேத்துஞ் செங்கமல வயல்புடைசூழ் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: தாமரை களையாக முளைக்கும் வயல்களால் சூழப்பட்டதாய்த் தேவர்களும் போற்றும் திருவாரூரில் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் எல்லோருக்கும் இன்பத்தைச் செய்பவன். திருமாலுக்குச் சக்கரப்படையை அருளியவன். பிறைசூடிய தலைவன். தாமரையிலுள்ள பிரமன் தலைகளுள் ஒன்றனை அறுத்தவன். அழகிய சோலைகளால் சூழப்பட்ட திருவையாற்றில் உறைபவன். எங்கள் தலைவன். எங்கள் துன்பங்கள்நீங்குமாறு அருள் செய்யும் இறைவன். குறிப்புரை: சங்கரன் - இன்பத்தைச் செய்பவன். தருண + இந்து = தருணேந்து; இளஞ் சந்திரன். வடமொழிக் குணசந்தி. சேகரம் - தலை. 'தலைவன்தான்' என்றதில்தான், அசைநிலை. ஐயாறு, தலம். 'எங்கள்' என்றது,அடியராய் இருப்பவரை உளப்படுத்து. இறைவன் - கடவுள்.
நன்றருளித் தீதகற்றும் நம்பி ரான்காண்நான்மறையோ டாறங்க மாயி னான்காண் மின்திகழுஞ் சோதியன்காண் ஆதி தான்காண்வெள்ளேறு நின்றுலவு கொடியி னான்காண் துன்றுபொழிற் கச்சியே கம்பன் தான்காண்சோற்றுத் துறையான்காண் சோலை சூழ்ந்த தென்றலார் மணங்கமழுந் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: தென்றல் ஊரைச் சேர்ந்த சோலைகளால் மணங்கமழும் திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் நன்மையை அருளித் தீமையைப் போக்கும் நம் தலைவன். நான்மறையோடு ஆறங்கம் ஆயினவன். மின்னல் போன்ற ஒளியை உடைய முற்பட்டவன். காளை எழுதிய கொடியை உடையவன். பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பன். சோற்றுத்துறையிலும் உறைபவன். குறிப்புரை: 'நம்' என்றது, அனைவரையும் உளப்படுத்து. மின் திகழும் - மின்னல்போல விளங்குகின்ற. ஆதி - முதல்வன். துன்று - நெருங்கிய. ஆர் மணம் - நிறைந்த வாசனை. 'சூழ்ந்த ஆருர்; கமழும் ஆரூர்' எனத் தனித்தனி முடிக்க.
பொன்நலத்த நறுங்கொன்றைச் சடையி னான்காண்புகலூரும் பூவணமும் பொருந்தி னான்காண் மின்நலத்த நுண்ணிடையாள் பாகத் தான்காண்வேதியன்காண் வெண்புரிநூல் மார்பி னான்காண் கொன்னலத்த மூவிலைவேல் ஏந்தி னான்காண்கோலமா நீறணிந்த மேனி யான்காண் செந்நலத்த வயல்புடைசூழ் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: சிறந்த வளத்தை உடைய வயல்களால் சூழப்பட்ட திருவாரூர்த் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் பொன் நிறக்கொன்றை சூடிய சடையினன். புகலூரிலும் பூவணத்திலும் உறைபவன். மின்னலை ஒத்த நுண்ணிய இடையை உடைய பார்வதிபாகன். வேதியன், பூணூல் அணிந்த மார்பினன். பகைவருக்கு அச்சமும் அடியாருக்கு நன்மையும் தருகின்ற, முத்தலைச் சூலத்தை ஏந்தியவன். திருநீற்றை அழகாக அணிந்த திருமேனியினன்.குறிப்புரை: பொன் நலத்த -பொன்னினது அழகை உடைய. வேதியன் - வேதம் ஓதுபவன். கொன் - அச்சத்தைத் தருகின்ற. நலத்த - நன்மையையுடைய. உயிர்களது பாவத்தை அழித்தலின், 'நன்மை உடையமூவிலைவேல்' என்றருளினார்; 'கொன்றது வினையைக் கொன்று நின்றஅக் குணம்என் றோரார்'என்றது காண்க. கோலம் - அழகு. மாநீறு. பெருமை உடைய நீறு. 'அழகாக அணிந்த' என்றலுமாம். 'செவ்வயல், நலத்தவயல்' என இயையும். செம்மண் விளைவை மிகத் தருவதாம். நலத்த - வளமுடைய.
விண்டவர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்வேலைவிட முண்டிருண்ட கண்டத் தான்காண் மண்டலத்தில் ஒளிவளர விளங்கி னான்காண்வாய்மூரும் மறைக்காடும் மருவி னான்காண் புண்டரிகக் கண்ணானும் பூவின் மேலைப்புத்தேளுங் காண்பரிய புராணன் தான்காண் தெண்டிரைநீர் வயல்புடைசூழ் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: தெளிந்த அலைகளை உடைய நீர்வளம் பொருந்திய வயல்களால் சூழப்பட்ட திருவாரூரில் திருமூலத்தானத்தில் உறையும் எம் செல்வன் பகைவர் முப்புரங்களையும் எரித்தவன். கடலில் தோன்றிய விடத்தை உண்டு கறுத்த கழுத்தினன். வான மண்டலத்தில் சூரியனும் சந்திரனும் ஒளிவீசுமாறு அருளியவன். வாய்மூரிலும் மறைக்காட்டிலும் உறைபவன். செந்தாமரைக் கண்ணானாகிய திருமாலும் தாமரையில் தங்கும் பிரமனும் காண முடியாத பழையவன். குறிப்புரை: விண்டவர் - நீங்கியவர்; பகைவர். வேலை - கடல். மண்டலம், சூரியனும் சந்திரனும்; அவைகளில் ஒளிவிளங்குதல். இறைவன் திருவுள்ளத்தினாலே என்றவாறு. இனி, 'மண் தலம்' எனப் பிரித்து, 'மண்ணுலகத்தில்' என்றுரைத்தலுமாம். 'மேலை' என்பதில், 'ஐ' சாரியை. புராணன் - பழையோன்.
செருவளருஞ் செங்கண்மா லேற்றி னான்காண்தென்னானைக் காவன்காண் தீயில் வீழ மருவலர்தம் புரமூன்று மெரிசெய் தான்காண்வஞ்சகர்பா லணுகாத மைந்தன் தான்காண் அருவரையை யெடுத்தவன்தன் சிரங்கள் பத்தும்ஐந்நான்கு தோளுநெரிந் தலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண் திருவா ரூரில்திருமூலட் டானத்தெஞ் செல்வன் தானே. பொருளுரை: திருவாரூர் திருமூலத்தானத்தில் உள்ள எம் செல்வன் போரில் மேம்பட்ட திருமாலாகிய காளையை உடையவன். அழகிய திருவானைக்காவில் உறைபவன். பகைவர் முப்புரத்தை எரித்தவன். வஞ்சகர் உள்ளத்தில் நெருங்காத வலிமை உடையவன். கயிலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரிக்கப்பட அவன் அலறுமாறு முன்னொருகால் திருவிரலால் வருத்தியவன்.குறிப்புரை: செரு - போர். 'செரு வளரும்' என்றது, இன அடை. மால் - பெரிய; 'மாயோன்' என உரைப்பினுமாம். மருவலர் - பகைவர். மைந்தன் -வலிமையுடையவன். வஞ்சகத்தில் அகப் படாமைக்கும் வன்மை வேண்டும் என்க. அருவரை - பெயர்த்தற்கரிய மலை, திருக்கயிலை.
திருவாரூர் பதிக வரலாறு: இத் திருப்பதிக வரலாற்றினை ம் திருப்பதிக வரலாற்றிற் காண்க. குறிப்பு: இத்திருப்பதிகம் நெஞ்சிற்கு அறிவுறுத்தலாக, உயிர்க்கு உறுதியாவனவற்றை, அருளிச்செய்கிறது. திருத்தாண்டகம் ப. தொ. எண்: பதிக எண்: இடர்கெடுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவாஈண்டொளிசேர் கங்கைச் சடையா யென்றும் சுடரொளியா யுள்விளங்கு சோதீ யென்றுந்தூநீறு சேர்ந்திலங்கு தோளா வென்றும் கடல்விடம துண்டிருண்ட கண்டா வென்றுங்கலைமான் மறியேந்து கையா வென்றும் அடல்விடையாய் ஆரமுதே ஆதீ யென்றும்ஆரூரா என்றென்றே அலறா நில்லே. பொருளுரை: நெஞ்சே! நீ துன்பங்கள் ஒழியும் பகையை ஆராய்வாயாயின் இங்கே வந்து நான் சொல்வதனைக் கேள். செந்நிறம் பொருந்திய சடையில் கங்கையை அணிந்தவனே! ஞானஒளியாய் உள்ளத்தில் விளங்குபவனே! திருநீறணிந்த தோளனே! கடல்விடம் உண்டு கறுத்த கழுத்தினனே! மான் குட்டியை ஏந்திய கையனே! ஆற்றலுடைய காளை வாகனனே! கிட்டுதற்கரிய அமுதே! எல்லோருக்கும் முற்பட்டவனே! ஆரூரனே! எனப்பலகாலும் அழைப்பாயாக. குறிப்புரை: இடர் கெடும் ஆறு - துன்பம் ஒழியும் வகையை. எண்ணுதியேல் - ஆராய்வையாயின்; 'நீ வா' என்பது, 'யான் சொல்வதைக் கேள்' என்னும் பொருள் பயப்பதொரு வழக்கு. 'ஈண்டு அலறா நில்' என இயையும். 'ஈண்டு ஒளி' என்று இயைத்து, 'மிக்க ஒளியினையுடைய' என்றுரைத்தலும் ஆம். 'சுடர் ஒளி'. வினைத் தொகை; 'ஒருகாலைக் கொருகால் மிக்கெழுகின்ற ஒளி' என்பது பொருள். உள் - உயிருக்குள். 'சோதி' என்பது அதனையுடைய பொருள்மேலாகி வாளா பெயராய் நின்றது. உயிரது அறியாமை நீங்குந்தோறும், இறைவன் அதனுள் அறிவு வடிவாய் நிறைந்து நிற்றல் வெளிப்பட்டு வருதலின், "சுடர் ஒளியாய் உள்விளங்கு சோதி" என்று அருளிச்செய்தார். கலை மான் - ஆண் மான். மறி - கன்று. "என்றென்று" என்பதன் பின், 'சொல்லி' என்னும் சொல்லெச்சம் வருவிக்க. அடுக்கு, பல்கால் அழைத்தலைக் குறித்தது. நில் - ஒழுகு. "அலறா நில்" என்னும் நிகழ்காலச் சொல் இடைவிடாமையை விதித்தற் பொருட்டாய் நின்றது. இறுதியில், 'இதுவே இடர்நீங்கும் வழியாகும்' என்னும்குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. இவை பின்வருகின்ற திருப்பாடல்கட்கும் ஒக்கும். எண்ணத்தின் பின்னதே சொல்லாகலின், 'இவ்வாறெல்லாம் எண்ணி' என்பது முன்னரே முடிந்தது. 'உலகியலை நினையாது, இறைவனது அருள் நிலைகளையே நினைந்தும், சொல்லியும், பணிந்தும் ஒழுகுவார்க்கே துன்பம் அடியோடு ஒழிவதாகும்' என்பது கருத்து. "தனக்குவமை யில்லாதான் தாள் சேர்ந்தார்க் கல்லால் - மனக்கவலை மாற்றலரிது"என எதிர்மறை முகத்தான் உணர்த்தியதுணர்க. இடர்தான், 'பேரிடரும், சிற்றிடரும்' என இருவகைத்து, பேரிடர், கட்டு நீங்காதார்க்கு வினைகளான் இடையறாது வருவன; சிற்றிடர், கட்டு நீங்கினவர்க்கு முன்னைப் பழக்கத்தால் நிகழும் மறதியான் ஒரோவழி வருவன; இவ்விருவகை இடர்களுக்கும் காரணமான கட்டும்,கட்டுள் நின்ற பழக்கமும் நீங்குதல் இறை பணியால் அல்லது இன்மையின், பொதுப்பட, "இடர்" என அருளிச் செய்தார். கட்டு நீங்காதார் செய்யும் பணி அறிவுப் பணியும், கட்டு நீங்கினார் செய்யும் பணி அன்புப் பணியும் ஆகும். என்னையெனின், அவர் முறையே, 'இடர் கெடுமாறு இதுவே' என்று அறிந்த அறிவு காரணமாகவும், "இடர்களையாரேனும் எமக்கு இரங்கா ரேனும் -படரும் நெறி பணியாரேனும்"இப்பணி தானே எமக்கு இன்பமாவது என்னும் அன்பு காரணமாகவும் செய்தலான் என்க. இப்பணியினைச் சிவாகமங்கள், 'சரியை, கிரியை, யோகம், ஞானம்' என நான்காக வகுத்து, 'கீழ்உள்ளவர்கள் மேலனவற்றிற்கு உரியரல்லர்; மேலுள்ளவர்கள் கீழ்உள்ளவற்றிற்கும் உரியர்; ஆகவே, ஞானிகள் மேற்சொல்லிய நான்கிற்கும் உரியர்' எனக் கூறும். இதனை, 'ஞானயோ கக்கிரியா சரியை நான்கும் நாதன்றன் பணி; ஞானி நாலினுக்கும் உரியன்; ஊனமிலா யோகமுதல் மூன்றினுக்கும் உரியன் யோகி; கிரி யாவான்றான் ஒண்கிரியை யாதி யானஇரண் டினுக்குரியன்; சரியையினில் நின்றோன் அச்சரியைக் கேயுரியன் ...' என்னும் (சிவஞானசித்தி சூ. திருவிருத்தத்தால் நன்குணர்க. இந் நால்வருள் ஞானிகள்தம் பணி அன்புப்பணி என்றும், மற்றையோர் பணி அறிவுப் பணி என்றும் கொள்க. இதனால், கட்டுற்று நின்றார்க்கேயன்றி, கட்டு நீங்கி வீடு பெற்றார்க்கும் இறைபணி இன்றியமையாததாதல் தெற்றென உணர்ந்து கொள்ளப்படும். செல்வமுற்றாரும், தமக்கு ஒரோவழி வரும் சிறு துன்பத்தையும் பெருந்துன்பமாக நினைத்து வருந்துதல்போல, வீடு பெற்றாரும் ஒரோவழித் தமக்கு மறப்பினால் தோன்றும் சிறிது இடரினையும் பேரிடராக நினைந்து வருந்துவர்; அதனை ஆங்காங்கு அறிந்துகொள்ளலாகும். இறைபணியின் பெருமை யுணர்த்துவனவே திருப்பதிகங்களுட் பெரும்பாலனவாயினும்,அவற்றுள் இத்திருப்பதிகம், அஃதொன்றனையே கிளந்தெடுத்துத் தெள்ளத் தெளிய இனி துணர்த்தும் சிறப்புடையது என்க. எனவே, இத் திருப்பதிகம், சிவநெறிக்கு இன்றியமையாச் சிறப்புடைத்தாதல் இனிதுவிளங்கும்.
செடியேறு தீவினைகள் தீரும் வண்ணஞ்சிந்தித்தே னெஞ்சமே திண்ண மாகப் பொடியேறு திருமேனி யுடையா யென்றும்புரந்தரன்றன் தோள்துணித்த புனிதா வென்றும் அடியேனை யாளாகக் கொண்டா யென்றும்அம்மானே ஆருரெம் மரசே யென்றும் கடிநாறு பொழிற்கச்சிக் கம்பா வென்றுங்கற்பகமே யென்றென்றே கதறா நில்லே. பொருளுரை: நெஞ்சமே! துன்பம்மிக்க தீவினைகள் நீங்கும் வழியை எண்ணுவாயானால் உறுதியாகத் திருநீறணிந்த திருமேனி உடையவனே! இந்திரனுடைய தோள்களை நீக்கிய தூயனே! அடியேனை அடிமையாகக் கொண்டவனே! தலைவனே! ஆரூரில் உள்ள எம் அரசனே! நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த காஞ்சியில் உள்ள ஏகம்பனே! கற்பகமே! என்று பலகாலும் அழைப்பாயாக. குறிப்புரை: செடி - துன்பம். 'சிந்தித்தியேல்' என்பது தொகுத்தலாயிற்று. 'நான் சிந்தித்தேன்; சிந்தித்து இது கண்டேன்' என்றுரைத்தலுமாம். 'சிந்தித்தே நெஞ்சமே' என்னும் பாடத்திற்கு,' சிந்தித்து என்றென்று கதறாநில்' என உரைக்க. திண்ணமாக - ஒருதலைப்பட்ட மனத்துடன். புரந்தரன் -இந்திரன். 'இந்திரனைத் தோள் நெரித்திட்டு'எனவும் அருளிச் செய்பவாகலான், தக்கன் வேள்வியில், 'இந்திரன் தோள் நெரிக்கப்பட்ட பின்னர்க் குயிலாகி ஓடி ஒளிந்து பிழைத்தான்' என்க. அடியேனை 'ஆளாகக் கொண்டாய்' என்றது, 'இயல்பாகவே அடிமையாய் உள்ள என்னை, அத்தன்மையேனாதலைத் தெளிவித்துப் பணி புரிவித்துக் கொண்டாய்' என்றவாறு. இதனால், இனிக் கூறுவன அன்புப் பணியாதல் அறிந்துகொள்ளப்படும்.கற்பகம், வேண்டுவார் வேண்டுவதை ஈயும்.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவாநித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப் புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்சங்கரா சயபோற்றி போற்றி யென்றும் அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்ஆரூரா என்றென்றே அலறா நில்லே. பொருளுரை: நெஞ்சே! நீ தடுமாற்றம் நீங்கி நிலையாக வாழ நினைப்பாயானால் நாள்தோறும் எம்பெருமானுடைய கோயிலுக்குச் சென்று பொழுது விடிவதன் முன் கோயிலைப் பெருக்கி மெழுகிப் பூ மாலையைக் கட்டி எம் பெருமானுக்குச் சாத்தி அவனைத் துதித்துப் புகழ்ந்து பாடித் தலையால் முழுமையாக வணங்கி மகிழ்ச்சியாய்க் கூத்தாடிச் 'சங்கரா நீ வெல்க வாழ்க!' என்றும் 'கங்கையைச் சிவந்த சடையில் வைத்த ஆதிப்பொருளே!' என்றும் 'ஆரூரா!' என்றும் பலகாலும் அலறி அழைப்பாயாக. குறிப்புரை: நிலைபெறுதல் - அலமரல் ஒழிதல். 'மெழுகு' என்னும் வினைமுதனிலை, 'மெழுக்கு'எனத் திரிந்து பெயராயிற்று, 'ஒழுகு' முதலியன 'ஒழுக்கு' முதலியனவாகத் திரிந்துநிற்றல்போல. தலை ஆர -தலைநிரம்ப. தலை, வணங்குதலாலேயன்றி அதன்மேல் கையைக்குவித்தலாலும் இன்புறும் என்க. 'தலையினாற் கும்பிட்டு' எனவும் பாடம்ஓதுவர். 'மெழுக்கும், கூத்தும்' என்னும் உம்மைகள், இறந்தது தழுவின. சய - வெல்க. அலை புனல். வினைத்தொகை.
புண்ணியமும் நன்னெறியும் ஆவ தெல்லாம்நெஞ்சமே யிதுகண்டாய் பொருந்தக் கேள்நீ நுண்ணியவெண் ணூல்கிடந்த மார்பா என்றும்நுந்தாத வொண்சுடரே யென்றும் நாளும் விண்ணியங்கு தேவர்களும் வேதம் நான்கும்விரைமலர்மேல் நான்முகனும் மாலுங் கூடி எண்ணரிய திருநாம முடையா யென்றும்எழிலாரூ ராவென்றே ஏத்தா நில்லே. பொருளுரை: நெஞ்சமே! புண்ணியமும் அதற்கு வாயிலாகிய நல்ல வழிகளும் ஆகியவற்றை எல்லாம் நான் கூறக்கூர்ந்து கேள். பூணூல் அணிந்த மார்பனே! தூண்ட வேண்டாத விளக்கே! தேவர்களும் நால்தேவங்களும் தாமரையிலுள்ள பிரமனும் திருமாலும் ஒன்று சேர்ந்தாலும் கணக்கிடமுடியாத திருநாமங்களை உடையவனே! அழகிய ஆரூரனே! என்று பலகாலும் துதிப்பாயாக. குறிப்புரை: 'புண்ணியத்திற்கு வாயில் நன்னெறி' என்க. நுந்தாத - தூண்ட வேண்டாத; எஞ்ஞான்றும் ஒரு தன்மையாய் ஒளிவிடும். 'நொந்தாத' என்பதே, 'அவியாத' எனப்பொருள் தரும். கூடி எண்ணரிய - ஒருங்குகூடி எண்ணி அளவிடுதற்கரிய.
இழைத்தநா ளெல்லை கடப்ப தென்றால்இரவினொடு நண்பகலு மேத்தி வாழ்த்திப் பிழைத்ததெலாம் பொறுத்தருள்செய் பெரியோய் என்றும்பிஞ்ஞகனே மைஞ்ஞவிலுங் கண்டா என்றும் அழைத்தலறி அடியேனுன் னரணங் கண்டாய்அணியாரூர் இடங்கொண்ட அழகா என்றும் குழற்சடையெங் கோனென்றுங் கூறு நெஞ்சேகுற்றமில்லை யென்மேல்நான் கூறி னேனே. பொருளுரை: நெஞ்சே! இவ்வுடம்போடு கூடி வாழ்வதற்கு வரையறுக்கப்பட்ட நாள்களின் அளவைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் தாண்ட வேண்டுமென்றால்இரவும் நடுப்பகலும் எம் பெருமானைத் துதித்துவாழ்த்தித் தவறு செய்தனவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு அருள் செய்யும் பெரியோனே! தலைக்கோலம் உடையவனே! நீலகண்டனே! எனப் பலகாலும் கூப்பிட வேண்டும் என்பதனைத் தெரிந்து கொள் நான் உனக்குப் பாதுகாவலாக இருக்கிறேன். ஆரூர் உறையும் அழகா! என்றும் சுருண்ட சடையை உடைய இளையோனே! என்றும் கூப்பிடு. உனக்கு இவ்வாறு உபதேசித்துவிட்டதனால் இனி என்மேல் உனக்கு உய்யும் வழியைக் காட்டவில்லை என்ற குற்றம் ஏற்படாது. செயற்படாமல் வாளா இருந்தால் குற்றம் உன்மேலதே. குறிப்புரை: இழைத்தநாள் எல்லை -இவ்வுடம்பொடு கூடி வாழ்வதற்கு வரையறுத்த நாள்களின் அளவு. 'அவைகளைப் பிறவிக்கு வித்தாகாத வகையில் கடப்பதென்றால்' என்க. 'பிழைத்தது' பன்மை யொருமை மயக்கம். 'பிழைத்தவெலாம்' என்பதே பாடம்போலும். 'ஞவிலும்' உவம உருபு; 'நவிலும்' என்பதன் போலி; 'என்ற' என்பதோர் உவம உருபுண்மையறிக. அரணம் - பாதுகாப்பு; அது காக்கப்படும் பொருளைக் குறித்தது. 'என்மேல் குற்றமில்லை' என மாறி. இறுதிக்கண் கூட்டுக. அறியாதார்க்கு, அறிந்தார் கூறாதொழியிற் குற்றமாமாகலான், 'நான் கூறினேன்;' என்றவாறு. இதனான், அஃது ஒருதலையாகச் செயற்பாலதாதல் அறிக.
நீப்பரிய பல்பிறவி நீக்கும் வண்ணம்நினைந்திருந்தேன் காண்நெஞ்சே நித்த மாகச் சேப்பிரியா வெல்கொடியி னானே யென்றும்சிவலோக நெறிதந்த சிவனே யென்றும் பூப்பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப்புண்டரிகக் கண்ணானும் போற்றி யென்னத் தீப்பிழம்பாய் நின்றவனே செல்வ மல்குந்திருவாரூ ராவென்றே சிந்தி நெஞ்சே. பொருளுரை: நெஞ்சே! அழிக்கமுடியாத பல பிறவிகளையும் போக்கும் வழியை ஆராய்ந்து பார்த்து இவ்வழியைக் கண்டுள்ளேன். நாடோறும் காளை எழுதிய கொடியை உடையவனே! சிவலோகம் அடையும் வழியைக் காட்டிய சிவனே! தாமரையை உறைவிடமாக விரும்பும் பிரமனும் கருடனை இவரும் தாமரைக் கண்ணனாகிய திருமாலும் வழிபட்டு வாழ்த்துமாறு தீப்பிழம்பாய்க் காட்சி வழங்குபவனே! செல்வம் நிறையும் திருவாரூரா என்று பலகாலும் 'நெஞ்சே நீ நினை'. குறிப்புரை: நீப்பு - நீத்தல் விடுதல். இருந்தேன் - நெடிது நேரம் இருந்தேன்; 'இருந்து இது கண்டேன்' என்க. காண், அசைநிலை. நித்தம் ஆக - நாள்தோறும் நிகழ; சிந்தி என்க. சே - எருது. தந்த - உலகிற்குச் சொல்லிய. 'சிவன்' என்பதற்கு, 'மங்கலம் உடையவன்' என்பது பெரும்பான்மையாகப் பலவிடத்தும் கூறப்படும் பொருள். 'பேரின்பத்துக்குக் காரணன், முற்றுணர்வினன், தூய தன்மையன், உலகெலாம் ஒடுங்கிக் கிடத்தற்கு இடமாய் இருப்பவன், நல்லோரது உள்ளங்கள் பதிந்து கிடக்க நிற்பவன், அறியாமையை மெலிவித்து அறிவை மிகுவிப்பவன். உயிர்களை வசீகரிப்பவன்' என்னும் பொருள்களும் கூறுவர். இனி 'சிவ' எனும் முதனிலை அடியாகப் பிறந்த தமிழ்ச் சொல்லாகவும் கொண்டுபொருளுரைப்பர். இப் பொருள்களை இவ்விடத்தும் பிறவிடத்தும் ஏற்ற பெற்றியாற் கொள்க. புள் - கருடன். 'மேலை' என்பதில் 'ஐ' சாரியை.
பற்றிநின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்பரகதிக்குச் செல்வதொரு பரிசு வேண்டில் சுற்றிநின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில்சொல்லுகேன் கேள்நெஞ்சே துஞ்சா வண்ணம் உற்றவரும் உறுதுணையும் நீயே யென்றும்உன்னையல்லால் ஒருதெய்வம் உள்கே னென்றும் புற்றரவக் கச்சார்த்த புனிதா வென்றும்பொழிலாரூ ராவென்றே போற்றா நில்லே. பொருளுரை: நெஞ்சே! நான் சொல்வதனைக் கேட்பாயாக. நம்மைப் பற்றி நிற்கும் பாவங்களை அழிக்க வேண்டினால், மேம்பட்ட வழிக்குச் செல்ல வேண்டும் தன்மையை விரும்பினால், உன்னைச் சுற்றி நிற்கும் வினைகளைப் போக்க நீ விரும்பினால், செயலற்று இராமல் நான்சொல்வதைக் கேள், எனக்கு உறவினரும் துணையும் நீயே, உன்னைத் தவிர வேறு எந்தத் தெய்வத்தையும் நான் பரம்பொருளாக நினையேன். புற்றில் வாழத்தக்கபாம்பினைக் கச்சாக அணிந்த தூயோனே! சோலைகள் சூழ்ந்த ஆரூரனே! என்று எம் பெருமானைப் பலகாலும் துதிப்பாயாக. குறிப்புரை: 'வேண்டில்' மூன்றும் வினைச் செவ்வெண். ஆகவே, அவற்றின்பின் உம்மை கொடுத்துப் பொருளுரைத்துக் கொள்க. பாற்றுதல் -அழித்தல். பரிசு - தன்மை; தகுதி - பாவம் நீங்கினால் உலகத்துன்பங்கள் மட்டுமே நீங்கும்; பிறவித் துன்பம் நீங்காது; அது நீங்கவேண்டில் இருவினையையும் வீழ்த்துதல் வேண்டும். அவ்வினைகள் உயிரைப் புறஞ்செல்ல ஒட்டாது வளைத்துக்கொண்டு நிற்றலின், 'சுற்றிநின்ற சூழ்வினைகள்'என்றருளிச்செய்தார். சுற்றி நிற்றல் வளைத்து நிற்றலாகவும், சூழ்தல் பலவாக மொய்த்து நிற்றலாகவும் கொள்க. 'வேண்டில்' என்பதனை 'துஞ்சாவண்ணம்' என்பதனோடுங் கூட்டி, மேலனவற்றோடு கூட்டுக. 'அவைகளுக்குரிய வழியைச் சொல்லுவேன்' என்க. துஞ்சுதல் - இறத்தல், இறந்தால்பிறத்தல் வேண்டும் என்க. இவ்வுலகிலே வீட்டின்பத்தைப் பெற்று நின்று உடம்பு நீங்கப்பெற்றார், கால வயப்பட்டு இறந்தாரல்லரென்க. 'கூற்றம் குதித்தார்' (குறள்- எனப்படுவோர் இவரே யாவர். உற்றவர் - உறவினர். உறுதுணை - சிறந்த நட்பினர். உள்கேன் - நினையேன்.'புற்றரவம்' என்றது. இனம்பற்றி.
மதிதருவன் நெஞ்சமே உஞ்சு போகவழியாவ திதுகண்டாய் வானோர்க் கெல்லாம் அதிபதியே ஆரமுதே ஆதீ யென்றும்அம்மானே ஆரூரெம் ஐயா வென்றும் துதிசெய்து துன்றுமலர் கொண்டு தூவிச்சூழும் வலஞ்செய்து தொண்டு பாடிக் கதிர்மதிசேர் சென்னியனே கால காலாகற்பகமே யென்றென்றே கதறா நில்லே. பொருளுரை: நெஞ்சமே! உனக்குநான் நல்ல புத்தியைக் கொடுக்கிறேன். பிழைத்துப் போவதற்கு உரிய வழி இதுவே. தேவர்கள் தலைவனே! அரிய அமுதமே! ஆதியே! என்றும், தலைவனே! ஆரூரில் உள்ள எம் குரிசிலே என்றும், அவனைப் போற்றிக் கிட்டிய மலர்களை அவன் திருமேனி மீது தூவி, அவன் கோயிலை வலம் செய்து, தொண்டர்களையும் துதித்து, ஒளிவீசும் பிறை சேர்ந்த தலைவனே! காலனுக்கும் காலனே! கற்பகமே! என்றும் பலகாலும் கதறுவாயாக. குறிப்புரை: மதி தருவன் -தொண்டு; அது காரியஆகுபெயராய் அதற்கு அவன் செய்த அருளைக் குறித்துநின்றது.கதிர், வெள்ளொளி.
பாசத்தைப் பற்றறுக்க லாகு நெஞ்சேபரஞ்சோதி பண்டரங்கா பாவ நாசா தேசத் தொளிவிளக்கே தேவ தேவேதிருவாரூர்த் திருமூலட் டானா வென்றும் நேசத்தை நீபெருக்கி நேர்நின் றுள்கிநித்தலுஞ் சென்றடிமேல் வீழ்ந்து நின்று ஏசற்று நின்றிமையோ ரேறே யென்றும்எம்பெருமா னென்றென்றே யேத்தா நில்லே. பொருளுரை: நெஞ்சே! மேம்பட்ட சோதியே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! பாவத்தைப் போக்குபவனே! உலகுக்கே ஒளிதரும் விளக்கே! தேவதேவனே! திருவாரூர்த் திருமூலட்டானத்து உறையும் பெருமானே! தேவர்கள் தலைவனே! எம்பெருமானே! என்று அன்பைப் பெருக்கி அவன் முன் நின்று தியானம் செய்து நாளும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கிக் கூசி நின்று அவன் பெருமையைப் பாடுவாயாக. இவ்வாறு செய்தால் உலகப் பற்றினை அடியோடு நீக்கிவிடலாம். குறிப்புரை: 'பாசத்தைப் பற்றறுக்கலாகும் 'என்பதை ஈற்றில் வைத்துரைக்க. பண்டரங்கன் -'பாண்டரங்கம்' என்னும் கூத்துடையவன். 'பாண்டரங் கமாடுங்கால்'என்றது காண்க. தேசம் - உலகம்; அஃது உயிர்களைக் குறித்தது. உயிர்கட்கெல்லாம் ஒரு விளக்குப் போன்றவன் இறைவன் என்க. நேர்நின்று - அவன் அருள்வழி நின்று. 'பெருக்கி, உள்கி வீழ்ந்து நின்று, ஏசற்று நின்று, என்பவற்றை, 'நெஞ்சே' என்பதன் பின்னர் வைத்துணர்க. ஏசற்று நின்று - கூசி நின்று. 'என்றென்று' என்புழியும் உம்மை விரிக்க. 'எம்பெருமான்' என்பது, அன்பு மீதூர்வாற் சொல்லப்படுவதாகலின், அஃது ஒன்றனையும் பல்காற் சொல்லுக என்றருளினார்.