செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும் குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம் தான்செல் உலகத் தறம். பொருள்: நெல்லும் கரும்பும் - நெற்பயிருங் கரும்பின் பயிரும், நிலத்துக்கு அணி என்ப - வயலுக்கு அழகென்று சொல்லுவர்; தாமரை-செந்தாமரைக் காடுகள், குளத்துக்கு அணி என்ப - குளங்களுக்கு அழகு என்று சொல்லுவர்; நாணம் - நாணுமியல்பு, பெண்மை நலத்துக்கு - பெண்கற்பாகிய நன்மைக்கு, அணி என்ப - அழகென்று சொல்லுவர்; தான் செல் உலகத்து அறம் - தான் செல்லும் மறுமை யுலகத்துக்குத் துணையாகச் செய்யப்படும் அறங்கள், தனக்கு அணி ஆம் - ஒருவனுக்கு அழகாகும். கருத்து: நெல்லுங் கரும்புங் கழனிக்கு அழகு; தாமரை குளத்துக்கு அழகு; நாணம் பெண்மைக்கு அழகு; அறங்கள் ஆண்மைக்கு அழகாகும். விளக்கவுரை: நெல்லையுங் கரும்பையும் நோக்கி நிலம் மருத நிலமாகிய வயல் எனப்பட்டது. என்ப : பகரமென்னும் பல்லோர் படர்க்கை விகுதிபெற்ற எதிர்கால வினைமுற்று. பெண்மை நலம் : இருபெயரொட்டு; பெண்மை - பெண்டிரின் றன்மை; பெண்மை நலம் - கற்பு.
கந்திற் பிணிப்பர் களிற்றைக் கதந்தவிர மந்திரத் தாற்பிணிப்பர் மாநாகம் - கொந்தி இரும்பிற் பிணிப்பர் கயத்தைச்சான் றோரை நயத்திற் பிணித்து விடல். பொருள்: களிற்றை - யானையை, கந்தின் பிணிப்பர் - கட்டுத் தறியினால் வயப்படுத்துவர். கருத்து: யானையைத் தறியாலும், பாம்பை மந்திர மொழியாலும், கீழ்மக்களை விலங்காலும் மக்கள் வயப்படுத்துவர்; ஆனால், சான்றோரை இன்சொற்களால் வயப்படுத்தவேண்டும். விளக்கவுரை: மா வென்னும் அடைமொழி, சாதியை யுணர்த்திற்று. ‘கொந்தி' யென்றது, இங்குத் துன்புறுத்துதலை யுணர்த்தும்; "கொல்லச் சுரப்பதாங் கீழ்"என்னும் நாலடியாரை நினைவு கூர்க. இரும்பு: கருவியாகுபெயர். கயம்-கயவர்; கீழ்மக்கள். ‘நய' மென்றது, நினைவினிமை, சொல்லினிமை, செயலினிமையாகிய எல்லா இனிமைகளையு மென்க. பிணித்துவிடல் : வியங்கோள்; அல் : விகுதி.
கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்த நன்றியை நன்றாக்கொளல்வேண்டும் - என்றும் விடல்வேண்டுந் தங்கண் வெகுளி அடல்வேண்டும் ஆக்கஞ் சிதைக்கும் வினை. பொருள்: களிற்றை - யானையை, கந்தின் பிணிப்பர் - கட்டுத் தறியினால் வயப்படுத்துவர். கருத்து: யானையைத் தறியாலும், பாம்பை மந்திர மொழியாலும், கீழ்மக்களை விலங்காலும் மக்கள் வயப்படுத்துவர்; ஆனால், சான்றோரை இன்சொற்களால் வயப்படுத்தவேண்டும். விளக்கவுரை: மா வென்னும் அடைமொழி, சாதியை யுணர்த்திற்று. ‘கொந்தி' யென்றது, இங்குத் துன்புறுத்துதலை யுணர்த்தும்; "கொல்லச் சுரப்பதாங் கீழ்"என்னும் நாலடியாரை நினைவு கூர்க. இரும்பு: கருவியாகுபெயர். கயம்-கயவர்; கீழ்மக்கள். ‘நய' மென்றது, நினைவினிமை, சொல்லினிமை, செயலினிமையாகிய எல்லா இனிமைகளையு மென்க. பிணித்துவிடல் : வியங்கோள்; அல் : விகுதி.
பல்லினான் நோய்செய்யும் பாம்பெலாங் - கொல்லேறு கோட்டால் நோய்செய்யுங் குறித்தாரை ஊடி முகத்தான் நோய்செய்வர் மகளிர் முனிவர் தவத்தால் தருகுவர்நோய். பொருள்: பாம்பு எலாம் - எல்லாப் பாம்புகளும், பல்லினால் நோய் செய்யும் - பிறர்க்குப் பல்லினால் துன்பந்தரும் ; கொல் ஏறு - கொலை பயிலுங் காளை மாடு, குறித்தாரை - தன்னால் குறித்துக் கொள்ளப்பட்டவர்க்கு, கோட்டால் - கொம்புகளால், நோய் செய்யும் - துன்பந்தரும்; மகளிர் - பெண்மக்கள், ஊடி - பிணங்கி, முகத்தால் - தம் முகக்குறிப்பினால், நோய் செய்வர் - துன்பந் தருவர்; முனிவர் - தவமுடையார், தவத்தால் - தமது தவ வலிமையால், நோய் தருகுவர் - துன்பந் தருவர். கருத்து: பாம்பு பல்லாலும், ஏறு கொம்பாலும், மகளிர் முகத்தாலும் பிறர்க்குத் துன்பஞ் செய்வர்; முனிவர் தவத்தாற்றுன்பந் தருவர். விளக்கவுரை: நோய் செயல் - ஒரு சொற்றன்மைத்து: நோய் - துன்பம்; இதற்கு நொ : பகுதி. இனி, ‘கொள்களிறு கோட்டால் நோய் செய்யு' மென்னும் பாடம், களிற்றுக்குக் கோட்டா னோய் செய்தலேயன்றிப் பிறவாறு முண்மையின், சிறவாமை காண்க. ‘தருக்குவர்' பாடமாயின் ‘மிகுவிப்பர்' என்பது பொருள். முனிவர் எல்லா உயிர்களையும் தம்மோடொக்க நோக்குபவராதலால் ‘தருகுவர்' என்றார். ‘பையவே சென்று பாண்டியற்காகவே' எனும் ஞானசம்பந்தப் பெருமான் திருமொழியை நோக்குக. தருகுவர் - கு சாரியை. தவத்தில் தருக்குவர்.
பறைநன்று பண்ணமையா யாழின் - நிறைநின்ற பெண்நன்று பீடிலா மாந்தரின் - பண்அழிந்து ஆர்தலின் நன்று பசித்தல் - பசைந்தாரின் தீர்தலின் தீப்புகுதல் நன்று. பொருள்: பண் அமையா - பண்ணிசை யமையாத, யாழின் - ‘யாழ்' என்னும் இன்னிசைக் கருவியினும், பறை நன்று - ‘பறை' யென்னும் பேரோசைக் கருவி நன்றாம்; பீடு இலா - பெருந்தன்மை அமையாத, மாந்தரின் - ஆண் மக்களினும், நிறை நின்ற - கற்பில் நின்று அடக்கமுடைய, பெண் நன்று - பெண் மக்கள் நல்லர்; பண் அழிந்து-பதங்கெட்டு, ஆர்தலின் - உண்டலினும், பசித்தல் நன்று - பசியுடன் வருந்துதல் நன்று; பசைந்தாரின் - தம்மை விரும்பினாரினின்றும், தீர்தலின் - நீங்கி உயிர் வாழ்தலை விட; தீப்புகுதல் நன்று - எரியில் வீழ்ந்து உயிர் விடுதல் நல்லது. கருத்து: பறை, இசையமையா யாழினும் மேல்; கற்பமைந்த பெண்டிர், வினைத்திறன் அறியா ஆடவரினும் மேல்; பசித்தல், பண்டங்களைப் பதங்கெட உண்ணலினும் மேல்; தீப்புகுதல், விரும்பினாரை நீங்கி வாழ்தலினும் மேல் என்க. விளக்கவுரை: எனவே, ‘யாழ் இசையமைதல் வேண்டும்' என்பது முதலாக இந்நான்கிற்கும் உடம்பாட்டிற் பொருளுரைத்துக் கொள்க. பண் இசைவான ஒலியமைப்பு. நிறை : தொழிற்பெயர். நினைவையுஞ் சொல்லையுஞ் செயலையும் ஒருவழி நிறுத்தல் என்பது பொருள். நிறை நின்ற : ஏழன் தொகை. பெண் நன்று என்புழி, நன்றென்பதை உயர்திணையாகக் கொள்க. நன்று நான்குங் குறிப்பு வினைமுற்று. பீடு - ஆள் வினைத்திறத்தின் மேலும், மாந்தர் - ஆடவர்மேலுங் குறிப்பால் நின்றன. ஆள்வினைத்திறத்திற் பெண்மக்கள் ஆடவரினும் ஆற்றல் குறைந்தவராகலின், அத்திறமமையா ஆடவரினும் பெண்டிர் நல்லரென்றார். பண் அழிவு - இங்குப் பண்டங்களின் பதனழிவை யுணர்த்திற்று. ‘அழிந்த ஆர்தலின்' என்றுரைப்பினுமாம். பசைதல் - நெஞ்சு நெகிழ்ந்து அன்பு கொள்ளல்; ‘பசைதல் பரியாதா மேல்' என்னும் நாலடியாரிலும் இஃது இப் பொருட்டாயது காண்க. ‘இன்' என்னும் ஐந்தனுருபுகள் எல்லைப் பொருளன.
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக்குழாம் இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல் கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம் இன்மைக் குழியுள் விரைந்து. பொருள்: வண்மை - ‘ஈகை' யென்னும் பயிர், வளப்பாத்தியுள் வளரும் - செல்வமென்னும் பாத்தியுள் விளையும்; கிளைக்குழாம் - உறவினர் கூட்டம், இன்சொல் குழியுள் - இன்சொலென்னும் பாத்தியுள், எழூஉம் - செழுமையாய் வளரும்; வன்சொல் கரவு - வன்சொல்லோடு கூடிய வஞ்சனை யென்னும் பயிர், கண் இல் குழியுள் - கண்ணோட்டமின்மை யென்னும் பாத்தியுள், எழூஉம் - வளரா நிற்கும்; இரவு ‘இரத்த' லென்னும் பயிர், இன்மைக் குழியுள் - ‘வறுமை' யாகிய பாத்தியுள், விரைந்து எழூஉம் - உடனே வளரும். கருத்து: ஈகை செல்வத்தா லுண்டாகும்; உறவினர்க்கு மகிழ்ச்சி இன்சொல்லா லுண்டாகும்; வன்சொல்லும் வஞ்சனையுள் கண்ணோடாமையா லுண்டாகும்; இரத்தல் வறுமையாலுண்டாகும். விளக்கவுரை: பாத்தியென்றுங் குழியென்றுங் கூறினமையெல்லாம் உருவகம். வளம் - செல்வத்தை யுணர்த்துதல், ‘வையை சூழ்ந்த வளம்கெழு வைப்பு' என்னும் புறநானூற்றுரையிற் காண்க. கிளை : உவமையாகுபெயர், கண் : காரணவாகுபெயர். அளபெடைகள் மூன்றும் இன்னிசை நிறைப்பன. இரவை விரைந்தெழூஉமென்றார், உணவு இன்றிச் சின்னேரந்தானும் வறியார் தம்மைக் காத்துக்கோடல் ஏலாமையின்.
இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது வேண்டின் வெகுளி விடல். பொருள்: இன்னாமை வேண்டின் - இழிவை ஒருவன் விரும்பினால், இரவு எழுக - இரத்தலை மேற்கொள்க; இந்நிலத்து - இவ்வுலகத்தில், மன்னுதல் வேண்டின் - எஞ்ஞான்றும் நிலைபெறுதலை விரும்பினால், இசை நடுக - புகழ் நிறுத்துக, தன்னொடு செல்வது வேண்டின் - தன்னுடன் துணையாகச் செல்வதொன்றை விரும்பினால், அறம் செய்க -அறங்களைச் செய்க, வெல்வது வேண்டின் - பிறரை வெல்லல் வேண்டினால், வெகுளி விடல் - சினத்தை விடுக. கருத்து: இழிவை விரும்பினால் இரக்க; அழியாமை வேண்டினால் புகழ் புரிக; உறுதுணையை வேண்டினால் அறஞ்செய்க; வெல்லல் விரும்பினால் வெகுளியை விடுக. விளக்கவுரை: இன்னாமை - துன்பம். இங்கு இழிவு என்னுந் துன்பத்தை யுணர்த்திற்று. புகழ் செய்தாரே உலகில் இறவாது நிற்பர் என்பதனை, ‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்தனர்' என்னும் புறநானூற்றா லறிக. ‘நடுக' வென்றது, நிறுத்துக வென்றற்கு. செல்வது : தொழிலாகு பெயர், வெல்வது : தொழிற்பெயர். விடல்: வியங்கோள் வினை, ‘அல்' விகுதி.
கடற்குட்டம் போழ்வர் கலவர் படைக்குட்டம் பாய்மா உடையான் உடைக்கிற்குந் - தோமில் தவக்குட்டந் தன்னுடையான் நீந்தும் அவைக்குட்டம் கற்றான் கடந்து விடும். பொருள்: கலவர் - மரக்கல முடையார், கடல்குட்டம் - கடலின் ஆழமான நீரை, போழ்வர் - பிளந்து செல்வர்; பாய்மா உடையான் - விரைந்த செலவைப் பொருந்திய படைக் குதிரையை யுடையான், படைக்குட்டம் - பகைவரது படையென்னும் ஆழ் கடலின் கரையை, உடைக்கிற்கும் - பொருது உடைத்து விடுவான்; தன் உடையான் - தன் மனத்தைத் தன்வயப்படுத்தினவன், தோம் இல் - குற்றமில்லாத, தவக்குட்டம் - தவமென்னுங் கடலை, நீந்தும் - நீந்திக் கரையேறுவான்; கற்றான் - தெளியக் கற்றவன், அவைக்குட்டம் - கற்றறிவுடையோர் நிரம்பிய அவைக்கடலை, கடந்து விடும் - தாண்டிவிடுவான். கருத்து: மாலுமிகள் நீர்க்கடலையும், மறவர் படைக்கடலையும், தற்காப்புடையான் தவக்கடலையும், கற்றான் அவைக்கடலையும், கடத்தல் எளிது. விளக்கவுரை: குட்டமென்னும் பண்பு கடலுக்கு வந்தமையின் ஆகுபெயர். தன்னுடையான் - தன்னைத் தன் வயத்திலுடையானென்பது. நினைவுஞ் சொல்லுஞ் செயலும் நல்லவை விழையுந் தன்வழி நிற்குமாறு அடக்கும் ஆள்வினையுடையானென்று கொள்க. ‘போழ்வர்' முதலாயின உருவக வினைகள். உடைக்கிற்கும், கடந்துவிடுமென்பவற்றில் கில், ஆற்றற் பொருண்மை இடைநிலையெனவும், விடு, துணிவுப் பொருண்மை விகுதியெனவுங் கொள்க. அவைக்குட்டங் கடத்தலாவது, ஐயந்திரிபுகளில்லாக் கல்வியறிவுடன் நின்று செவிக்கினிமையும் பயனும் உண்டாகுமாறு சுருங்கச்சொல்லி விளங்கவைத்துத் தெளிவுதேற்றி அவையினரை மகிழ்வித்த லென்க.
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக மூத்தல் இறுவாய்த் திளைநலந் தூக்கில் மிகுதி இறுவாய செல்வங்கள் தத்தம் தகுதி இறுவாய்த் துயிர். பொருள்: தூக்கில் - ஆராய்ந்து பார்த்தால், நட்புகள் - நேசங்கள், பொய்த்தல் இறுவாய - பொய்யொழுக்கமாகிய இறுதியை யுடையன; இளைநலம் - இளமையின் அழகு, மெய்த்தாக - கண்ணுக்கு நேராக, மூத்தல் இறுவாய்த்து - மூப்பாகிய இறுதியையுடையது; செல்வங்கள், செல்வாக்குகள், மிகுதி இறுவாய - மிகையான செயல்களை இறுதியாக உடையன; உயிர் - மக்கள் உயிர், தத்தம் தகுதி இறுவாய்த்து - தத்தமது வாழ்நாளெல்லையை யிறுதியாக உடையது. கருத்து: நண்பர் தமக்குள் பொய்யொழுக்கம் நேர்ந்ததாயின், அவர் நட்புக் கெடும்; மூப்புத் தோன்றியதும் இளமை நலங் கெடும்; மீறிய செயல்களைத் தொடங்கியதுஞ் செல்வங் கெடும்; வாழ்நாள் எல்லை கண்டதும் உயிர் சாம். விளக்கவுரை: நட்புக்கொள்ளும் இடம் பலவாதல்பற்றிப் பன்மையாகக் கூறப்பட்டது. இளமை : ஈறுகெட்டுப் பகுதிப் பொருள் விகுதி ஐகாரஞ்சேர்ந்து இளையென நின்றது. மிகுதி - மிகையான செயல்களையும், தகுதி - அளவாய வாழ்நாளையுங் குறிப்பாலுணர்த்தின. ‘மிகுதிக்கண், மேற்சென் றிடித்தற் பொருட்டு'என்பதனுரையில் பரிமேலழகர் "பழியும் பாவமுந் தருஞ் செய்கை வேண்டப்படுவதன்மையின் அதனை மிகுதியென்றும்.........கூறினார்" என்று கூறும் உரை நினைவு கூர்தற்குரியது.
மனைக்காக்கம் மாண்ட மகளிர் ஒருவன் வினைக்காக்கஞ் செவ்விய னாதல் - சினச்செவ்வேல் நாட்டாக்கம் நல்லனிவ் வேந்தென்றல் கேட்டாக்கம் கேளிர் ஒரீஇ விடல். பொருள்: மாண்ட மகளிர் - நல்லியல்பு நற்செயல்களில் மாட்சிமைப்பட்ட பெண்மக்களிருந்தால், மனைக்கு ஆக்கம் - மனை வாழ்க்கைக்கு உயர்வைத் தரும்; ஒருவன் - வீரனொருவன், சினச் செவ்வேல் - சினக்குறிப்புடைய சிவந்த படையினது பயிற்சிக் கண், செவ்வியனாதல் - தேர்ச்சியுடையனாயிருத்தல், வினைக்கு ஆக்கம் - போர்வினை முதலான ஆள் வினைகட்கு உயர்வாம்; இவ்வேந்து - இவ்வரசன், நல்லன் என்றல் - நல்லவனென்று குடிமக்களாற் பாராட்டப்படுதல், நாடு ஆக்கம் - நாட்டுக்கு உயர்வாம்; கேளிர் - சுற்றத்தாரை, ஒரீஇ விடல் - நீக்கி விடுதல், கேடு ஆக்கம் - கேட்டுக்குப் பெருக்கந் தரும். கருத்து: நன்மகளிர் மனைவாழ்க்கையையும், படைப்பயிற்சியுடையான் போர்வினை வெற்றியையும், செங்கோலரசன் நாட்டினையும் உயர்வாக்குவார், உறவினரை யொதுக்குதல் கேட்டினைப் பெருக்கும். விளக்கவுரை: ‘சினவேல்' உடையான் பண்பு உடைமைமேலேற்றப்பட்டது. வேலுக்குச் செம்மையானது, பகைவ ருடம்பிற் புகுந்து குருதிக்கறை படிதலா லாகுஞ் செந்நிறம். என்றல்: செயப்பாட்டு வினைப்பெயர். கேடு : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். நாட்டாக்கம். கேட்டாக்கம் : நான்கன்றொகை. நாட்டாக்காமாவது, குடிகள், செல்வம் கல்வி முதலியவற்றில் மேலோங்கி இன்பவாழ்வில் வைகுதல். ஒரீஇ யென்னும் அளபெடை செய்யுளோசை நிறைத்துப் பிறவினைக்கண் வந்தது. ‘சினச்செவ்வேல்' என்பதனை வேந்தனுக்கு அடையாக்குவாருமுளர்.
பெற்றான் அதிர்ப்பிற் பிணையன்னாள் தானதிர்க்கும் கற்றான் அதிர்ப்பின் பொருளதிர்க்கும் - பற்றிய மண்அதிர்ப்பின்மன்னவன்கோலதிர்க்கும் பண்அதிர்ப்பின் பாடல் அதிர்ந்து விடும். பொருள்: பெற்றான் - கணவன், அதிர்ப்பின் - ஒழுக்கத்திற் கலங்குவானாயின், பிணை அன்னாள் - பெண்மான் போலும் மருண்ட பார்வையையுடைய அவன் மனைவியும், அதிர்க்கும் - தன் கடமையிற் கலங்குவாள்; கற்றான் அதிர்ப்பின் - புலவன் அறிவு கலங்கினால், பொருள் அதிர்க்கும் - அவன் கற்ற கருத்துக்களும் நிலை கலங்கும் : பற்றிய - தான் கைப்பற்றிய, மண் - உலகத்திலுள்ள குடிமக்கள், அதிர்ப்பின் - நிலைகலங்குவாரானால், மன்னவன் - அரசனது, கோல் அதிர்க்கும் - ஆட்சியுங் கலங்கும்; பண் அதிர்ப்பின் - யாழின் நரம்புக்கட்டுகள் அதிர்ந்துவிட்டால், பாடல் அதிர்ந்துவிடும் - அதிற் பிறக்கும் பாட்டுகளும் அதிர்ந்து போம். கருத்து: கணவன் கலங்கினால் மனைவி கலங்குவள்; கற்றான் கலங்கிற் கருத்துக்கள் கலங்கும்; குடி நடுங்கினாற் கோன் நடுங்குவன்; பண்ணதிர்ந்தாற் பாடலதிர்ந்துவிடும். விளக்கவுரை: பெற்றான் - கொண்டவன்,, ‘பெற்றாற் பிழையாத பெண்டிரு' மென்பது பரிபாடல். பிணை : தொழிலுவமம், தான் : அசை. ‘பொருளதிர்க்கு' மென்றது, நற்கருத்துக்கள் அவன்மாட்டுப் பிறவாமையும் தெளிவுபெறாமையு மென்க. பண் - இசையுமாம்; அற்றாயின், இசை கெட்டாற் செய்யுளுங் கெடுமென்றுரைக்க. மண் : இடவாகுபெயர்.
மனைக்குப்பாழ் வாள்நுத லின்மைதான் செல்லுந் திசைக்குப்பாழ் நட்டோரை இன்மை இருந்த அவைக்குப்பாழ் மூத்தோரை இன்மை தனக்குப்பாழ் கற்றறி வில்லா உடம்பு. பொருள்: மனைக்குப் பாழ் - மனைக்குப் பாழாவது, வாள் நுதல் இன்மை - மனையாளை யில்லாமை; தான் செல்லும் - தான் போகும், திசைக்குப் பாழ் - ஊர்ப்புறங்கட்குப் பாழாவது, நட்டோரை இன்மை - அவ்விடங்களில் நண்பர்களில்லாமை; இருந்த அவைக்குப் பாழ் - பலரும் கூடியிருந்த அவைக்குப் பாழாவது, மூத்தோரை இன்மை - கல்வி கேள்வி முதலியவற்றாற் சிறந்த சான்றோரை இல்லாமை; தனக்குப் பாழ் - பிறவியெடுத்த தனக்குப் பாழாவது, கற்றறிவு இல்லா உடம்பு - கல்வியறிவு பெறாத வெறும் புலாலுடம்பு உள்ளமையாம். கருத்து: மனைவியில்லா மனை பாழ்; நண்பரில்லாப் பக்கம் பாழ்; ஆன்றோரில்லா அவை பாழ்; கற்றறிவில்லா வுடம்பு பாழ். விளக்கவுரை: வாள்நுதல் : இரண்டாம் வேற்றுமைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகைக் காரணப்பெயர்; ஒளியைப் பொருந்திய நெற்றியையுடைய மனையாளென்பது பொருள். இன்மை : குறிப்புத் தொழிற்பெயர். மூத்தோர் - மூ : பகுதி. உடம்பென்றது இங்குப் பிறவியை, கற்றறிவில்லாப் பிறப்புப் பாழென்பது கருத்து. ‘பேசாத நாளெல்லாம் பிறவா நாளே' என்பது, தேவாரம். திசை : ஆகுபெயர்.
மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனைப் பொய்சிதைக்கும் பொன்போலும் மேனியைப் - பெய்த கலஞ்சிதைக்கும் பாலின் சுவையைக் குலஞ்சிதைக்குங் கூடார்கண் கூடி விடின். பொருள்: ஒற்றுமை இன்மை - தக்காரோடு ஒற்றுமையில்லாமை, ஒருவனை மொய் சிதைக்கும் - ஒருவனது வலிமையை ஒழிக்கும்; பொய் - பொய்ம்மையான ஒழுக்கம், பொன்போலும் மேனியை - பொன்னிறத்தைப் போன்ற அழகிய உடம்பை, சிதைக்கும் - வாடச்செய்யும்; பெய்தகலம் - நிரப்பி வைக்கப்பட்ட பாண்டம், பாலின் சுவையை - பாலின் இனிய சுவையை, சிதைக்கும் - கெடுக்கும்; கூடார்கண் - கூடத் தகாதாரிடத்தில், கூடிவிடின் - நட்புக்கொண்டு கூடிவிட்டால், குலம் சிதைக்கும் - அச்செய்கை தன் குலத்தை யழிக்கும். கருத்து: ஒற்றுமையின்மை வலியையும், பொய்ம்மை உடம்பையும், பால் பெய்த பொருந்தாப் பாண்டம் பாலின் இன்சுவையையும், தீ நட்பு குலத்தையுங் கெடுத்துவிடும். விளக்கவுரை: ஒற்றுமை - ஒன்றாந்தன்மை; அஃதாவது வேற்றுமை காணாமல் அளவளாவுந் தன்மை. மொய் - வலிமை; செல்வாக்கு முதலிய வலிமைகளும் இதன்கண் அடங்கும். பொன் போலு மேனி - மிகுதியும் வெண்மை கலவாத தளிர் நிறமான மேனி. ‘பொய்த்தபின் தன் னெஞ்சே தன்னைச் சுடும்' என்பவாதலால், பொய்ம்மையினார் பின்பு துன்பந் தோன்றி உடம்பு நிறங்கெட்டு மெலிதலின். சிதைக்குமெனப்பட்டது. பெய்த : செயப்பாட்டு வினைப்பொருளது. கலம் - குறிப்பினாற் பொருந்தாக் கலமென்றுரைத்துக் கொள்க.
புகழ் செய்யும் பொய்யா விளக்கம்- இகந்தொருவர்ப் பேணாது செய்வது பேதைமை - காணாக் குருடனாச் செய்வது மம்மர் - இருள்தீர்ந்த கண்ணராச் செய்வது கற்பு. பொருள்: பொய்யா விளக்கம் - பொய்யாமையாகிய ஒளி, புகழ் செய்யும் - எங்கும் புகழை உண்டாக்கும், பேதைமை - அறியாமை, இகந்து - முறை கடந்து, ஒருவர்ப் பேணாது - ஒருவரையும் மதியாமல், செய்வது - தீயவை செய்வதாம்; மம்மர் - கற்றறிவில்லா மயக்கம், காணா - வழிகாணாத, குருடனாச் செய்வது - குருடனாகச் செய்வதாம்; கற்பு - கல்வியறிவு, இருள் தீர்ந்த - குருடு நீங்கிய, கண்ணராச் செய்வது - கண்ணொளி யுடையராகச் செய்வதாம். கருத்து: பொய்யாமை புகழையும், அறியாமை தீயவை செய்தலையும், கல்லாமை அறியாமையையும், கல்வியானது அறிவையும் உண்டாக்கும். விளக்கவுரை: ‘பொய்யா விளக்கம்' பொய் கூறாமையாகிய விளக்கம்; இனி நினையாமையும் செய்யாமையும் அடக்கிக் கொள்க. பொய்யா விளக்க மென்பது பெயரெச்சவீறு தொக்கது ‘விளக்கம்' என்றார், அறியாமை யிருளை விலக்கி அறிவு விளக்கந்தரலின், ‘பொய்யாத விளக்கே விளக்' கென்றார் திருவள்ளுவனாரும்;, ‘பொய்யாமை யன்ன புகழில்லை, என்றார் பிறரும். ஒருவரென்பதற்கு முற்றும்மை விரித்துக் கொள்க. இகத்தல் - கடத்தல். கற்பு, காரணவாகு பெயர். பேணாமை, ஈண்டு மதியாமை மேனின்றது; பேணுதல் - போற்றுதல். செய்வது : தொழிலாகு பெயர். இருளென்றது இங்குக் குருட்டுத் தன்மையை. மம்மர், கல்லாமையால் வரும் மயக்கத்தை யுணர்த்தலின், அறியாமையென்று கொள்க.
மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும் அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும் நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார் உடனுறையுங் காலமும் இல். பொருள்: மலைப்பினும் - பாகன் தன்னை ஒறுத்தாலும், வாரணம் தாங்கும் - யானை அவனைச் சுமந்து நிற்கும்; அலைப்பினும் - தன்னை அடித்து வருத்தினாலும், குழவி - குழந்தை, அன்னே என்று ஓடும் - அம்மா என்று அழுது கொண்டே அவளருகில் ஓடும்; சிலைப்பினும் - தவறு கண்டு சினந்துரைத்தாலும், நாட்டார் - நண்பர், நடுங்கும் வினை செய்யார் - நடுங்கும்படி தீயவை செய்யமாட்டார்; ஒட்டார் - பகைவர்கள், உடன் உறையும் காலமும் - தம்முள் ஒன்று கூடி நீங்காமல் வாழுங் காலமும், இல் - ஒருபோதும் இல்லை. கருத்து: யானையையுங் குழந்தையையும் நண்பரையும் முறையே பாகனுந் தாயும் நண்பரும் வருத்தினாலும் ஒருவரையொருவர் தழுவியே நிற்பர்; ஆனால் பகைவரோ எக்காலத்தினும் ஒன்றாகப் பொருந்துதலில்லை. விளக்கவுரை: அலைத்தலை அடித்தலென் றுரைப்பினு மமையும். அன்னே : விளி. குழவி : பண்படியாய்ப் பிறந்த பெயர். குழவு - இளமை; இளமையானதென்பது பொருள். குழவி தாய் நாடு மியல்பு என்பது ‘தாயுடன் றலைக்குங் காலையும் வாய்விட்டன்னா யென்னுங் குழவி' என்னுங் குறுந்தொகையினும் வெளிப்படும். சிலைத்தல் - ஒலித்தல்; சினக் குறிப்புடன் உரத்துப் பேசுதலை யுணர்த்திற்று, ‘நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண், மேற்சென்றிடித்தற் பொருட்'டாதலின்இச்சீற்றம் நண்பராற் பாராட்டப் படற்குரியதேயாம்; ஆதலாற்றான் ‘நடுங்கும் வினைசெய்யா' ரென்றார்; என்றது, ஒறாரென்றபடி. ஒட்டார் : எதிர்மறை வினையாலணையும் பெயர்; நெஞ்சொட்டாரென்பது. முதன் மூன்று உம்மைகளும் ‘உயர்வு சிறப்'பென்றும் பின்னது எச்சமென்றுங் கொள்க. உடனுறைதல் - பிரியாமல் வாழ்தல்.
நகைநலம் நட்டார்கண் நந்துஞ் சிறந்த அவைநலம் அன்பின் விளங்கும் விசைமாண்ட தேர்நலம் பாகனாற் பாடெய்தும் ஊர்நலம் உள்ளானால் உள்ளப்படும். பொருள்: நகை நலம் - முகமலர்ச்சியின் நன்மை, நாட்டார்கண் - நட்புச்செய்தார்பால், நந்தும் - சிறக்கும்; சிறந்த - மேலான, அவை நலம் - அவையின் நன்மை, அன்பின் விளங்கும் - அன்பினாற் சிறக்கும்; விசை மாண்ட - வேகம் மிகுந்த, தேர் நலம் - தேரின் நன்மை, பாகனால் - ஓட்டுபவனால்; பாடு எய்தும் - பெருமையடையும், ஊர் நலம் - குடிமக்களின் நன்மை, உள்ளானால் - அவ்வூரிலுள்ள அரசனால், உள்ளப்படும் - மதிக்கப்படும். கருத்து: முகமலர்ச்சியின் நன்மை நண்பர்கள்பாற் சிறந்து தோன்றும்; அவைகளின் நன்மை அன்பினால் விளங்கும்; விரைந்த செலவையுடைய தேரின் நன்மை பாகனால் பெருமைபெறும் : ஊரின் நன்மை அரசனுடைய நற்செயல்களால் மதிக்கப்படும். விளக்கவுரை: நகைநலமாவது, நேசரைக் கண்டவிடத்தே தம் முகத்திற் றோன்றும் புன்னகையுங் குளிர்ந்த பார்வையுங் கூடிய முகமலர்ச்சி. இஃது, உள்ளங் கலந்த உண்மை நண்பர் மாட்டன்றி மற்றவர்பால் வேறுபட்டுப் பொலிவு குன்றும். சிறந்த வென்பதை நலத்துக்குங் கூட்டுக. ‘அவைநல' மென்பது கற்றவர்கள் மற்றவர்கள்மேல் வைத்த அன்பினால் அரிய கருத்துக்களை எளியவாம்படி உளங்கொளக் கூறி யறிவித்தல். மாண்ட : மிகுதி மேனின்றது. ‘ஊர்நலம்' என்பதை, ‘நாட்டாக்க' மென்புழிக்கூறினமை கொண்டறிக. உள்ளான், குறிப்பால் அரசனுக்காயிற்று, உள்ளால் - நன்கு மதித்தல்; அறிவுடையோரால் என்க. நசைநலம் என்னும் பாடத்துக்கு விருப்பத்தின் நன்மை நண்பர்பாற் சிறக்குமென்க. அவர்களே அதனை நிறைவேற்றுபவராதலால்.
அஞ்சாமை யஞ்சுதி ஒன்றின் தனக்கொத்த எஞ்சாமை யெஞ்சல் அளவெல்லாம் - நெஞ்சறியக் கோடாமை கோடி பொருள்பெறினும்நாடாதி நட்டார்கண் விட்ட வினை. பொருள்: அஞ்சாமை அஞ்சுதற்குரிய செயல்களில் அஞ்சாமலிருக்கும் ஒழுக்கத்தை, அஞ்சுதி - நீ அஞ்சுவாய்; ஒன்றில் - ஒரு செயலில், தனக்கு ஒத்த - தனக்குக் கூடுமான, அளவு எல்லாம் - செயலளவுகளி லெல்லாம், எஞ்சாமை - பிறர்க்கு உதவி செய்தலிற் குறையாமையாகிய ஒழுக்கத்தை, எஞ்சல் - குறைய விடாதே; நெஞ்சு அறிய - உள்ளமறிய, கோடாமை - ஒருபக்கங் கோணாமையாகிய ஒழுக்கத்தை, கோடி - கொள்ளுவாய்; பொருள் பெறினும்; பெரும் பொருள் பெறுவதானாலும், நட்டார்கண் - நண்பரது பொறுப்பில், விட்டவினை - செய்யவிட்ட தொழிலை, நாடாதி - ஆராயாதே. கருத்து: அஞ்சுவது அஞ்சுக; இயன்றளவு உதவிசெய்வதிற் குறையாதே; ஒருபக்கங் கோணாதே; நண்பர்கள்பால் விட்ட தொழிலை ஆராயாதே. விளக்கவுரை: அஞ்சாமை பழிபாவங்கட்கு அஞ்சாமை; இவ்வியல்பு ஓராண்மையாகாமையின், இன்னோரன்னவற்றில் அஞ்சுதலே வேண்டற்பாலது. ‘தனக்கொத்த அளவெல்லா' மென்று கூட்டுக. எஞ்சல் : ஏவலொருமை எதிர்மறைவினைமுற்று. நாடாதியென்பதுமது. ‘கோடி' உடம்பாட்டேவல். கோடாமை யென்றது ஈண்டு நடுவு பிறழாமை. நட்டார்கண் விட்ட வினையை நாடின், அவர் வினையை நெகிழவிடுவர்; விடவே, இடருண்டாம், ‘தேர்ந்தபிற்றேறுக தேறும் பொருள்' ‘தெளிந்தான்க ணையுறவுந் தீரா விடும்பை தரும்', கோடி - கொள் + த் + இ, எழுத்துப்பேறாக வந்த தகரம் டகரமாயது. நாடாமை.
அலைப்பான் பிறவுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலுங் குற்றம் சொலற்பால அல்லாத சொல்லுதலுங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம். பொருள்: அலைப்பான் - கொன்று உண்பதற்காக, பிற உயிரை - பிற உயிர்களை, ஆக்கலும் குற்றம் - வளர்த்தலும் பிழையாகும்; விலைப்பாலின் - விலைகொள்ளும் வகையால், ஊன்கொண்டு - ஊனைப்பெற்று, மிசைதலும் குற்றம் - உண்ணலும் பிழையாகும்; சொலற்பால அல்லாத - சொல்லும் வகையினவல்லாதனவாகிய சொற்களை, சொல்லுதலும் குற்றம் - சொல்லிவிடுதலும் பிழையாகும்; கொலைப்பாலும் - கொலைவகைகளும், குற்றமே ஆம் - பிழையேயாகும். கருத்து: பிறவுயிர்களைக் கொன்று உண்பதற்காக வளர்த்தலுங் குற்றம்; அங்ஙனங் கொல்லாமல் அவற்றின் ஊனை விலைக்கு வாங்கி உண்ணலுங் குற்றம்; சொல்லத்தகாதவற்றைச் சொல்லலுங் குற்றம்; கொல்லலுங் குற்றமேயாம். விளக்கவுரை: அலைத்தல் - ஈண்டுக் கொலைமேனின்றது - பான் : வினையெச்சவிகுதி. பால் - வகை; சொலற்பாலவல்லாத - தீயனவுந் தகுதியற்றனவுமான சொற்கூறுகள். பால, அல்லாத : குறிப்பு வினையாலணையும் பெயர்கள். கொலைக்கு நிகரான இச்செயல்களும் அடங்குதலின், முதன்மூன்றும்மைகளும் எண்ணுப் பொருளன. இறுதியிலுள்ளது அவ்வெண்ணுப் பொருளோடு இறந்ததுதழீஇய எச்சப்பொருளுமாம். இதனால் புலாலுண்ணல், தகாதன கூறல், கொலைபுரிதல் முதலியன விலக்கப்பட்டன.
கோல்நோக்கி வாழுங் குடியெல்லாந் தாய்முலைப் பால்நோக்கி வாழுங் குழவிகள் - வானத் துளிநோக்கி வாழும் உலகம் உலகின் விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. பொருள்: குடி எல்லாம் - குடிமக்க ளெல்லோரும் கோல் நோக்கி - அரசனது ஆட்சியை நோக்கி, வாழும் - உயிர் வாழ்வார்; குழவிகள் - குழந்தைகளெல்லாரும், தாய் முலைப்பால் நோக்கி - தாயின் முலைப்பாலை நோக்கி, வாழும் உயிர் பிழைக்கும்; உலகம் - உலகத்துயிர்கள், வானத் துளி நோக்கி - வானத்தினின்றும் விழும் மழைத்துளியை நோக்கி, வாழும் - உயிர் வாழும்; கூற்று - நமன், உலகின் விளி நோக்கி - உயிர்களின் சாவை நோக்கி, இன்புறூஉம் - மகிழ்வான். கருத்து: குடிகள் அரசனது ஆட்சியால் உயிர் வாழ்வர்; குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும்; உயிர்கள் மழைத்துளியால் வாழும்; கூற்றுவன் உயிரிகளின் சாக்காட்டை எதிர்நோக்கியிருப்பன். விளக்கவுரை: கோல் - ஆட்சிக்கு வந்தது; அடைமொழி புணராமையின், அது செங்கோலரசையே குறிப்பதாயிற்று : இயல்பென்ற வளவில் அது நல்லியல்பையே குறித்தல்போல வென்க. வாழுங்குடி என்பதனாலும் அப் பொருள் காணலாம். வானத்துளி - அ : சாரியை. ‘குடி' ‘உலகம்' முதலியன அஃறிணைச் சொல்லால் வந்தமையின், அவை தமக்கேற்ற அஃறிணை வினைமுடிபைக் கொண்டன. ‘நோக்கி' வாழ்த லென்றது. இன்றியமையாமை கருதி. துளி, விளி : முதனிலைத் தொழிற்பெயர். அளபெடை இன்னிசை நிறைக்க வந்தது.
கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப் புற்கந்தீர்ந்து இவ்வுலகின் கோளுணருங் கோளுணர்ந்தால் தத்துவ மான நெறிபடரும் அந்நெறி இப்பா லுலகின் இசைநிறீஇ - உப்பால் உயர்ந்த உலகம் புகும். பொருள்: கற்ப - ஒருவன் அறிவு நூல்களைக் கற்பதனால், கழிமடம் - மிக்க அறியாமை, அஃகும் - குறையப்பெறுவான்; மடம் அஃக - அறியாமை குறைய, புற்கம் தீர்ந்து - புல்லறிவு நீங்கி, இவ்வுலகின் - இவ்வுலகத்தின், கோள் உணரும் - இயற்கையை யறிவான்; கோள் உணர்ந்தால் - அவ் வியற்கையை யறிந்துகொண்டால், தத்துவமான - உண்மையான, நெறி படரும் - அருணெறியிற் செல்வான்; அந் நெறி - அந் நெறியினால், இப்பால் உலகின் - இவ்வுலகின்கண் இசைநிறீஇ - புகழ் நிறுத்தி, உப்பால் மறுமையில், உயர்ந்த உலகம் புகும் - உயர்ந்த வீட்டுலகத்திற் புகுவான். கருத்து: ஒருவன் அறிவு நூல்களைக் கற்றால் அறியாமை குறையப்பெறுவான்! அறியாமை குறையப் புல்லறிவு நீங்கி உலக வியற்கையை யறிவான்; அறிய மெய்ந்நெறியாகிய நன்னெறியில் செல்வான்; செல்ல, இவ்வுலகத்திற் புகழை நிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான். விளக்கவுரை: ‘கழிமட' மென்றது, அறியாமையின் பெரும் பகுதி யென்றற்கு. கோள் - இங்குக் கொள்ளப்படுவதான உலக நிகழ்ச்சிகளின் கருத்து. ‘இப்பாலுலகின்' என்பதை இம்மையில் இவ்வுலகத்திலென உரைப்பினுமாம். உப்பால் : அகரச் சுட்டின் சேய்மைப்பொருளது; ‘உப்பக்கங் காண்பர்' என்புழிப்போல, உயர்ந்த உலகம் - வீடு. இச்செய்யுள் ஐந்தடியான் வந்த பற்றொடை வெண்பா; காரணமாலையணி.
குழித்துழி நிற்பது நீர்தன்னைப் பல்லோர் பழித்துழி நிற்பது பாவம் - அழித்துச் செறிவழி நிற்பது காமந் தனக்கொன்று உறுவுழி நிற்பது அறிவு. பொருள்: நீர் குழித்துழி நிற்பது - தண்ணீர் குழிக்கப்பட்ட இடத்தில் நிற்குமியல்புடையது; பல்லோர் - சான்றோர் பலரும், தன்னைப் பழித்துழி - தன்னைப் பழித்தவிடத்தில், பாவம் - தீவினையென்பது, நிற்பது - நிற்குமியல்புடையது; அழித்து - தவநெறியைக் கெடுத்து, செறிவுழி - தீய நெறியில் வயப்பட்ட விடத்து, காமம் - காமவியல்பு; நிற்பது நிற்பதாகும்; தனக்கு - அறிஞனொருவனுக்கு, ஒன்று உறுவுழி - ஓரிடர் உண்டான காலத்தில், அறிவு அவனது கல்வியறிவு, நிற்பது - துணையாய் நிற்குமியல்பினது. கருத்து: பள்ளமுள்ளவிடத்தில் நீர் நிற்கும்; பலரும் பழிக்குந் தீயோரிடத்திற் பாவம் நிற்கும்; தவவொழுக்க மில்லான் பாற் காமம் நிற்கும்; இடர்வந்தபோழ்து கற்ற அறிவு துணை நிற்கும். விளக்கவுரை: குழித்துழி - பள்ளம்; குழித்த உழியென்க. பழித்துழி - தீயோர். ‘அழித்து' ‘செறிவுழி' என்பன குறிப்பாற் றவக்கேட்டையும் மலச்செறிவையும் உணர்த்தின. முதன்மூன்றடிகளில் வந்த ‘உழி' யென்னுமிடைச்சொல் இடப்பொருளையும், ஈற்றடியில் வந்தது காலத்தையுங் குறித்தன. ‘செறிவுழி' யென்பதில் வகரமெய் உடம்படுமெய்யன்று; ஏனையவற்றைப் போன்றதொரு சந்தியெழுத்து. இறைவன் றிருவருளியல்புகளிற் பழகாதார்க்கு மலத்தினியல்புகளே அடிக்கடி துன்புறுத்தாநிற்கு மாதலின், ‘அழித்துச் செறிவுழி நிற்பது காம' மெனப்பட்டது.
திருவின் திறலுடைய தில்லை - ஒருவற்குக் கற்றலின் வாய்த்த பிறவில்லை - எற்றுள்ளும் இன்மையின் இன்னாத தில்லையில் லென்னாத வன்மையின் வன்பாட்ட தில். பொருள்: ஒருவற்கு - ஒருவனுக்கு, திருவினை - செல்வத்தைப்போல், திறல் உடையது - வலிமையுடையது, இல்லை - பிறிதில்லை; கற்றலின் யறிவைப்போல், வாய்த்த - உற்ற நேரத்திற் பயனாவன, பிற இல்லை - வேறு இல்லை; எற்றுள்ளும் - எதனுள்ளும், இன்மையின் - வறுமையைப்போல், இன்னாதது - துன்பமுடையது, இல்லை - வேறு யாதுமில்லை; இல் என்னாத - இரப்பார்க்கும் இல்லையென்னாத, வன்மையின் - மனவுறுதியைப் போல், வன்பாட்டது - திட்பமானது, இல் - வேறு இல்லை. கருத்து: செல்வத்தைப்போல் ஒருவனுக்கு வலிமையுடையது வேறில்லை: கல்வியைப்போல் துணையாவது பிறிதில்லை; வறுமையைப்போற் றுன்பமானது வேறில்லை; இல்லையென்னாமல் ஈதலைப்போல் திட்பமானது வேறில்லை. விளக்கவுரை: ‘இன்'உருபுகளை எல்லைப்பொருளில் உரைத்தலுமாம். வாய்த்த - பெயரெச்சப்பொருள் சிறவாமையின், பலவின் பாற் படர்க்கை வினையாலணையும் பெயரென்க. எற்று: குறிப்பு வினைப்பெயர். வறுமையுடையான் இம்மை மறுமை நலங்களிற் சிறிதும் நன்மை யுடையனாகாமையின், ‘இன்மையி னின்னாத தில்லை' யெனப்பட்டது. "இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி, னின்மையே யின்னா தது"என்று திருவள்ளுவனாருங் கருதுகின்றமை காண்க. வன்மை ஈண்டுமனத் திட்பம். வன்பாட்டது - வன்மையானது; கோட்பாடு இலம்பாடு என்பவற்றைப்போல வன்பாட்டென்பதும் பாடென்னுந் தொழிற் பெயர் விகுதிபெற்ற முதனிலை திரிந்த தொழிற்பெயர், ஈண்டுக் குறிப்பு வினைப்பெயரா யுரைத்தற்குப் பொருளியை யாமையின். அது : பகுதிப்பொருள் விகுதி. எக்காலத்திலும் இல்லையென்னாமை அரியவற்றுள் அரிதானமையின், அதனை யொப்பதொரு வன்மை பிறிதில்லை யென்றார். ஒப்பாவன வின்மை கூறப்பட்டமையின், மிக்கவின்மை கூறவேண்டாவாயிற்று.
புகைவித்தாப் பொங்கழல் தோன்றுஞ் சிறந்த நகைவித்தாத் தோன்றும் உவகை-பகையொருவன் முன்னம்வித் தாக முளைக்கும் முளைத்தபின் இன்னாவித் தாகி விடும். பொருள்: புகைவித்து ஆ - புகைச்சல் ஏதுவாக பொங்கு அழல் - எரிகின்ற நெருப்பினது இருப்பு, தோன்றும் - காண்பவர்கட்கு விளங்கும்; சிறந்த நகைவித்தா-மேலான முகமலர்ச்சி ஏதுவாக, உவகை தோன்றும் - மனமகிழ்ச்சி விளங்கும்; பகை - உள்ளத்தின் பகைமை, ஒருவன் - ஒருவனது, முன்னம் வித்தாக - குறிப்புச் செயல்கள் ஏதுவாக, முளைக்கும் - வெளியே தெரியும்; முளைத்தபின் - தெரிந்தபின், இன்னா - துன்பங்கட்கு, வித்து ஆகிவிடும் - அப் பகைமை ஏதுவாய்விடும். கருத்து: புகையின் ஏதுவாக நெருப்பு உணரப்படும்; முகமலர்ச்சியின் ஏதுவாக மனமகிழ்ச்சி யுணரப்படும்; குறிப்பு, சொல், செயல்களின் வாயிலாகப் பகை தெரியும், தெரிந்தபின் அப் பகைமை ஏதுவாகத் துன்பங்களுண்டாகும். விளக்கவுரை: ‘வித்து,' ஏதுவுக்கு வந்தது. ஒருவன் என்பதை பிறவற்றிற்குக் கூட்டலுமாம். முன்னம் - குறிப்பு; ‘முன்னம் முகத்தி னுணர்ந்தவர், என்னும் புறநானூற்றிலும் இப் பொருண்மை காண்க. முன்னம் முகம்போல முன்னுரைப்பதில்' என்று இஃது இப் பொருளில் மேலும் வரும். ‘முளைக்கு' மென்னுஞ் சொற்கொடுத்துக் கூறினார், மறைவு வெளிப்படலின் இன்னா: பெயர். இன்னா வித்து - நான்காவது விரிக்க. உவகை - அகமகிழ்ச்சி; நகை - முகமலர்ச்சி.
பிணியன்னர் பின்நோக்காப் பெண்டி ருலகிற்கு அணியன்னர் அன்புடை மாக்கள் - பிணிபயிரின் புல்லன்னர் புல்லறிவின் ஆடவர் - கல்லன்னர் வல்லென்ற நெஞ்சத்தவர். பொருள்: பின் - மேல் வருவதை, நோக்காப் பெண்டிர் - கருதிப் பாராத மகளிர், பிணி அன்னர் - கொண்டானுக்கு ஒரு நோயை யொப்பர்; அன்பு உடைமாக்கள் - எல்லா உயிர்களிடத்திலும் அன்புடைய நன்மக்கள், உலகிற்கு - உலகத்திற்கு, அணி அன்னர் - ஓர் அணிகலத்தையொப்பர்; புல் அறிவின் - சிற்றறிவுடைய, ஆடவர் - ஆண் மக்கள், பயிரின் - வளரும் பயிரினைச் சூழ்ந்த, பிணி புல் அன்னர் - வளர்ச்சியைத் தடுக்கும் களைப்புல்லோடு ஒப்பாவார்; வல் என்ற - வன்மையான, நெஞ்சத்தவர் - நெஞ்சத்தையுடையவர், கல் அன்னர் - கல்லுக்கு ஒப்பாவார். கருத்து: வருவதறியாத பெண்டிர் நோய்க்கு ஒப்பாவர்; அன்புடைய மக்கள் அணிகலனுக்கு நிகராவர்; புல்லறிவையுடைய ஆடவர்கள் புல்லுக்கு நேராவர்; வன்னெஞ்சமுடையவர் கல்லுக்கு இணையாவர். விளக்கவுரை: ‘பின்னோக்கா' வென்றது, கணவனது வரவுக்குமேல் முதலிற் செலவு செய்து பின்வரும் வறுமை கருதாமையே. ‘பயி' ரென்றதைப் புல்லாற் பிணிக்கப்படும் பயிரென்று கொள்க. புல் - களை. பிணித்தல் - வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல் ஆடவர் தமது புல்லறிவினால் தம்மைச் சூழ்ந்த சுற்றங்களையுங் கெடுத்தலின், இங்ஙனம் கூறினார். அன்னர் : குறிப்பு வினைமுற்று.
அந்தணரின் நல்ல பிறப்பில்லை என்செயினும் தாயின் சிறந்த தமரில்லை யாதும் வளமையோ டொக்கும் வனப்பில்லை எண்ணின் இளமையோ டொப்பதூஉம் இல். பொருள்: அந்தணரின் - அந்தண்மையுடையார் பிறவியைப் போல, நல்ல பிறப்பு இல்லை - உயர்ந்த பிறவி வேறில்லை; என்செயினும் - தனக்கு என்ன தீமையைச் செய்தாலும், தாயின் - தாயைப்போல, சிறந்த தமர் இல்லை - மேலான உறவினர் எவருமிலர்; வளமையோடு - செல்வ வாழ்க்கையோடு, ஒக்கும் வனப்பு - ஒப்பான அழகு, யாதும் இல்லை - மற்றெதுவுமில்லை; எண்ணின் - ஆராய்ந்து பார்த்தால், இளமையோடு ஒப்பதும் - இளமைப் பருவத்தோடு ஒப்பாவதும், இல் - பிறிதொன்றில்லை. கருத்து: அந்தணர் பிறப்பே உயர்பிறப்பு ; தாயே சிறந்த தமர்; செல்வமே அழகு ; இளமையே இன்பம். விளக்கவுரை: ‘அந்தணர்' இனிய அருளெண்ணமுடையார்; அவ் வியல்புடையராய்ப் பிறக்கும் பிறவியே உயர் பிறவி யென்க. எனவே இது காரணப்பெயர்; மற்றிதனைக் காரண விடுகுறியெனக் கூறிப் பிறப்பை வகுப்புமே லேற்றி யுரைப்பாரு முளர். தாயே மக்கள் பால் அணுக்கமும் எஞ்ஞான்றும் இனிய உள்ளெண்ணமு முடையவளாதலின், ‘தாயிற் சிறந்த தமரில்லை' யென்றார். என் செயினும் : உம்மை உயர்வு சிறப்பினோடு எதிர்மறைக்கண் வந்தது. உயர்வு சிறப்பொன்றே கொண்டு, தமர்மே லேற்றி ‘என்ன நன்மை செய்தாலும்' எனவும் உரைக்கலாம். ஏனையழகுகள் குறைபட்டாலும் வளமை அவற்றை நிறைவு செய்துயர்த்துமாகலின், ‘வளமையோடொக்கும் வனப்பில்லை' யெனவும், இளமை எல்லா வின்பங்களையும் நுகர்தற்கும், கல்வி முதலியவற்றைப் பெறுதற்கும், உடல் வலியுடைமைக்கும், நன்மைகளைச் செல்தற்கும் உரியதாகலின், ‘இளமையோ டொப்பதூஉ மில்' லெனவுங் கூறப்பட்டன. ‘வளமை' செல்வமென்னும் பொருடரல் வளப்பாத்தியுள்' என முன் வந்ததனுள்ளுங் காண்க. அளபெடை இன்னிசை நிறைப்பது. ஓடு, இரண்டும் ஒப்புப் பொருளன.
இரும்பின் இரும்பிடை போழ்ப - பெருஞ்சிறப்பின் நீருண்டார் நீரான்வாய் பூசுப - தேரின் அரிய அரியவற்றாற் கொள்ப - பெரிய பெரியரான் எய்தப் படும். பொருள்: இரும்பின் - இரும்பினாற் செய்யப்பட்ட கருவிகளாலேயே, இரும்பு - இரும்பை, இடைபோழ்ப - குறுக்கே வெட்டுவர்; பெரும் சிறப்பின் - மிக்க சிறப்புடைய, நீர் உண்டார் - பாயசம் முதலிய நீருணவுகளை யுண்டவர்களும், நீரால் - நீர்கொண்டே, வாய் பூசுப - வாய் கழுவுவர்; தேரின் - ஆராய்ந்தால், அரிய - அரிய செயல்கள், அரியவற்றான் - அருமையான முயற்சிகளால், கொள்ப - முடித்துக் கொள்வர்; பெரிய - பெரிய பேறுகள், பெரியரான் - கல்வி கேள்விகளையுடைய தவப்பெரியோரால், எய்தப்படும் - அடையப்படும். கருத்து: இரும்புக் கருவிகளால் இரும்பை வெட்டுவர்; சிறந்த நீருணவுகளை யுண்டார் நீரினால் வாய் கழுவுவார்; அரிய செயல்களை அரிய முயற்சிகளாற் கொள்வர்; பெரிய பேறுகளைப் பெரியோர் எய்துவர். விளக்கவுரை: முதல் வந்தஇரும்பு, கருவியாகுபெயர். நீரென்றது, நீருடன் கூடிய சிறந்த உணவை யுணர்த்துகின்றமையின், ‘பெருஞ்சிறப்பி' னென்று அடைமொழி புணர்த்தார். அவ்வுணவு மிகுதிபற்றி நீரெனவே கூறப்பட்டது. பெருஞ்சிறப்பின் நீர் என்பது பாற்சோறுமாம். ‘வாய் பூசுப'; இன்னோரன்னவற்றை ‘இடக்கரடக்க' ரென்ப. அரிய அரியவற்றான் எய்தப்படு முண்மையை நிகழ்ச்சியிற் கண்டு தெளிக. அரிய, பெரிய, பண்படியாகப் பிறந்த பலவின்பாற் படர்க்கைப் பெயர்கள். பெரிய பேறுகள் பெரியோருதவியினால் அடையப்படும் என்றும் உரைத்துக் கொள்க.
மறக்களி மன்னர்முன் தோன்றுஞ் சிறந்த அறக்களி இல்லாதார்க் கீயுமுன் தோன்றும் வியக்களி நல்கூர்ந்தார் மேற்றாங் கயக்களி ஊரில் பிளிற்றி விடும். பொருள்: மறக்களி - வீரக் களிப்பு, மன்னர்முன் - அரசர்கட்கு முன்னால், தோன்றும் - வீரர்கட்கு உண்டாகும்; சிறந்த அறக்களி - மிக்க ஈகைக் களிப்பு, இல்லாதார்க்கு - வறியவர்கட்கு, ஈயும் முன் - ஒன்று கொடுக்கு மிடத்து, தோன்றும் - கொடுப்பார்க்கு உண்டாகும்; வியக்களி - யாதானும் ஒன்றைப் பெற்று வியத்தல் செய்யுங் களிப்பு, நல்கூர்ந்தார் மேற்றாம் - வறிஞர்கள் பாலுண்டாகும், கயக்களி - கீழ்மையியல் பாலுண்டாகும் களிப்பு, ஊரில் - இருக்கும் ஊரில், பிளிற்றி விடும் - பலரும் அறிய ஆரவாரித்தலாலுண்டாகும். கருத்து: அரசனுக்கு முன்னாற் பொரும்போழ்து வீரர்கட்கு வீரக்களிப் புண்டாகும்; வறியார்க்கு ஒன்றீவதே செல்வர்கட்கு உண்மையான ஈகைக் களிப்பாம்; ஒன்றைப் பெற்று வியக்கும் களிப்பு ஏழைகட்குண்டு; கீழ்மகனது கீழ்மையாலான களிப்பு ஊரெல்லாந் தெரிவித்து ஆரவாரஞ் செய்தலே யாகும். விளக்கவுரை: களி : முதனிலைத் தொழிற்பெயர்; அறம். உயர்வினால் ஈகைமேனின்றது. ஈயுமுன், முன் : ஏழாவதன் இடப்பொருளது. விய : முதனிலைத் தொழிற்பெயராக வந்தது. நல்கூர்ந்தார் மேற்று; மேல் ; ஏழனுருபு. கயவு - இங்குக் கீழ்மை. பிளிற்றிவிடும் - இரைச்சலிட்டுவிடும்; கீழ்மகன் தனது புன்செயலைப் பெரியதாய்க் கருதி ஊரெங்கும் சொல்லிச்சொல்லி மகிழ்தலே, ‘கீழ்மைப் களிக்' பெனப்பட்டது.
மையால் தளிர்க்கும் மலர்க்கண்கள் மாலிருள் நெய்யால் தளிர்க்கும் நிமிர்சுடர் - பெய்யல் முழங்கத் தளிர்க்குங் குருகிலை நட்டார் வழங்கத் தளிர்க்குமாம் மேல். பொருள்: மலர்க் கண்கள் - குவளை மலரைப் போன்ற கண்கள், மையால் - மையினால், தளிர்க்கும் - எடுத்துக் காட்டும் : மால் இருள் - மிக்க இருட்டில், நிமிர்சுடர் - நிமிர்ந் தெரியும் நெருப்பு, நெய்யால் - விளக்கெண்ணெயால், தளிர்க்கும் - விளங்கி யெரியும்; பெய்யல் - மேகம், முழங்க - பெய்தற்குக் குமுற, குருகு - குருக்கத்திமரம், இலை தளிர்க்கும் - இலைகள் துளிர்விடும்; மேல் மேலோர்கள், நட்டார் வழங்க - உறவாயினார்க்குக் கொடுத்தலால், தளிர்க்கும் - மேலும் பொருளிற் பெருகுவர். கருத்து: கண்கள் மையிடுதலால் விளங்கும்; விளக்கு நெய்யாலெரியும்; குருக்கத்தி மழை முழக்கத்தால் இலை தளிர்க்கும்; அடுத்தார்க்கு வழங்குதலால் ஆன்றோர் தளிர்ப்பர். விளக்கவுரை: நிமிர்சுடர்-கொழுந்தோடி யெரியுந் தீச்சுடர். பெய்யல் : மேகத்துக்கானமையின் தொழிலாகுபெயர். ஈற்றடிக்கு, நண்பராயினார் பொருளுதவி செய்தலாற் கல்வி கேள்விகளிற் சிறந்த சான்றோர் தமது தொண்டில் மேலும் மேம்படுவரென உரைப்பினுமாம். மேல் : பண்பாகு பெயர். ஆம் : ஆசை நிலை.
நகைஇனிது நட்டார் நடுவண் பொருளின் தொகைஇனிது தொட்டு வழங்கின் - வகையுடைப் பெண்இனிது பேணி வழிபடின் - பண்இனிது பாடல் உணர்வார் அகத்து. பொருள்: நகை - மகிழ்ச்சி, நட்டார் நடுவண், நண்பரிடையில், இனிது - இன்பமானது; பொருளின் தொகை - செல்வக் குவியல், தொட்டு வழங்கின் எடுத்து ஏழைகட்கு வழங்கப்பட்டால், இனிது - இன்பம் தருவதாம்; வகை உடைப் பெண் - வகையான பெண், பேணி வழிபடின் - கணவனைப் போற்றி அவன்வழி நின்றால், இனிது - இன்பந் தருபவளாவள், பண் - இசை, பாடல் உணர்வார் அகத்து - பாட்டை யுணரவல்லாரிடத்து, இனிது - இனிதாம். கருத்து: நண்பரிடத்தில் முகமலர்ச்சி துளும்பும்; வறிஞர்களுக்கு வழங்குமிடத்துப் பொருட்டிரள் இன்பந்தரும்; கணவனைப் போற்றி அவன்வழியி னிற்றலாற் பெண்டிர் இனியவராவர்; பாடலுணர்வாரிடத்துப் பண் இனிமை தரும். விளக்கவுரை: ‘நகை'யுந் ‘தொகை'யுந்தொழிற்பெயர்; பொருளின் தொகை பொருட்கூட்டு. ‘வகை' யென்பது, நினைவு சொற்செயல்களின் நல்வகையை; அஃதாவது சிறப்பை யுணர்த்திற்று; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என நால்வகைக் குணமுடைமையுமாம். பேணுதல், உண்டி முதலிய வேண்டுவ கொடுத்துக் காத்தல்; வழிபடல் - கணவன் கருத்துவழி நிற்றல். பாடல் - தொழிற்பெயராதலின், ஈண்டுப் பாடுதற்றொழிலென்று கொள்க. இனிது : குறிப்பு வினைமுற்று. ‘பொருளின் தொகை யினிது தொட்டு வழங்கின்' என்பதனை, ‘உப்புக் குவட்டின் மிசையிருந்து உண்ணினும், இட்டுண்ணாக் காலது கூராதாம்' என்னும் உவமானத்தாற் கண்டு தெளிக. தகையுடைய.
கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சாரொன் றீவார் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை ஊனுண்டல் செய்யாமை செல்சா ருயிர்க்கு. பொருள்: கரப்பவர்க்கு - ஏதும் இல்லையென்று ஒளிப்பவர்களுக்கு, சொல்சார் - அவர் மேற்கொள்ளுஞ் சார்பு, கவிழ்தல் - இரந்து வருவாரைக் கண்டவிடத்து முகங்கவிழ்ந்து நிற்றலாம்; எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், இரப்பவர்க்கு - இல்லையென்று இரக்கின்றவர்களுக்கு, செல்சார் - செல்லுதற்குரிய பற்றுக்கோடு, ஒன்று ஈவார் - தாம் வேண்டுவதொன்றை ஈத்துவக்குஞ் செல்வராவர், பரப்பு அமைந்த - போரிற் சுறுசுறுப்புடைய, தானைக்கு - சேனைகளுக்கு, செல்சார் - பற்றுக்கோடு, தறுகண்மை - வீரமாம்; உயிர்க்கு - ஒருவனது உயிர்க்கு, செல்சார் - செல்லுதற்குரிய பற்றுக்கோடு, ஊன் உண்டல் செய்யாமை - பிறவுயிர்களின் ஊனுண்ணலைச் செய்யாதிருத்தலாம். கருத்து: இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பாரைக் கண்டக்கால் முகங்கவிழ்தலே அவர் செயலா யிருக்கின்றது; இரப்பவர்கட்கு ஈகையறமுடைய செல்வரே பற்றுக்கோடாவர்; பரபரப்புள்ள சேனைகட்கு வீரமே ஒரு பற்றுக்கோடு; ஊனுணவு கொள்ளாமல் அருளொழுக்கத் தோடிருத்தலே உயிர்கட்கு ஒரு பற்றுக்கோடான நிலையாம். விளக்கவுரை: சார் : முதனிலைத் தொழிற்பெயர்; ‘சார்பு' என்பது பொருள்; அஃதாவது சார்ந்து நிற்றற்குரிய நிலை, அல்லது பற்றுக்கோடென்க. ‘செல்' என்பதைக் கருத்து நோக்கிப் பொருளுரைத்துக் கொள்க. கரப்பவர் செல்லுதலாவது மேற்கொள்ளுதல்; இரப்பவர் செல்லல் - அடுத்தல்; தானைக்குச் செல்லல் - இடந்தரல்; உயிர்க்குச் செல்லலென்பதும் மேற்கோடலாம். தறுகண்மை - இரங்காமைக்கு ஏதுவான மறம். செல்சார் : வினைத்தொகை. செல்சார் வுயிர்க்கு.
கண்டதே செய்பவாங் கம்மியர் உண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப அமைந்தார் - முனியாதார் முன்னிய செய்யுந் திரு. பொருள்: கம்மியர் - கம்மாளர், கண்டதே செய்ப - தாங்கண்ட பொருள்போன்றவற்றையே செய்வர்; புலன் ஆள்வார் - அறிவை ஆளும் பேரறிஞர், உண்டுஎனக் கேட்டதே - பயனுண்டு எனக் கேள்வியாற் றெளிந்தவற்றையே, செய்ப - செய்வர்; அமைந்தார் - நல்லியல்புகளமைந்த சான்றோர், வேட்ட - பிறர் விரும்பிய, இனியவே செய்ப - இனிமையாயின வற்றையே செய்வர்; திரு - திருமகள், முனியாதார் யாரையுஞ் சினவாத பெரியோர்கள், முன்னிய செய்யும் - எண்ணியவற்றையே முடித்து வைக்கும். கருத்து: கம்மாளர் தாங் கண்ணாற்கண்ட பொருள்போன்றவற்றையே செய்வர்; அறிஞர் பயனுள்ளவையெனக் கல்வி கேள்விகளாற் றெளிந்தவற்றையே செய்வர்; சான்றோர் பிறர் விரும் பியவற்றுள் இனிமையாயினவற்றையே செய்வர்; திருமகள் எவரையுஞ் சினவாத பெரியவர்கள் கருதியவற்றையே செய்யா நிற்பள். விளக்கவுரை: கண்டது கேட்டது முதலியவை செயப்பாட்டு வினைப்பொருளன. ஆம் : ஆசை, கம்மியர் - தொழில் செய்வோர், அவர் கன்னார், கொல்லர், சிற்பர், தச்சர், தட்டார் எனப்பலவகைப்படுவர். புலன் - ஈண்டு அறிவு. ‘முன்னிய வென்' பதற்குத் தேற்றேகாரங் கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க.
திருவுந் திணைவகையான் நில்லாப் - பெருவலிக் கூற்றமுங் கூறுவ செய்துண்ணா - தாற்ற மறைக்க மறையாதாங் காமம் - முறையும் இறைவகையான் நின்று விடும். பொருள்: திருவும் - செல்வமும், திணை வகையால் - குடிப்பிறப்பு வகையால், நில்லா - பொருந்தி நில்லாவாம்; பெருவலி - மிக்க வலிமையுடைய, கூற்றமும் - நமனும், கூறுவ - தன்னாலுண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றை, செய்து உண்ணாது - செய்து உண்ணான்; ஆற்ற - மிகவும், மறைக்க - மறைவாக்க, காமம் - காமவியல்பு, மறையாது - மறைபடாது; முறையும் - ஆட்சி முறைமையும், இறைவகையான் - அரசனது போக்குக் கேற்றபடி, நின்றுவிடும் - அமைந்துவிடும். கருத்து: குடிவகைக் கேற்பச்செல்வம் நில்லா; கூற்றுவன் தன்னா லுண்ணப்படுகின்றவன் சொல்வனவற்றைக் கேளான்; மறைத்தாலும் காமம் மறையாது; அரசனது போக்குக்கேற்றபடி ஆட்சிமுறை அமைந்துவிடும். விளக்கவுரை: திணை - ஈண்டுக் குடி; ‘வசையில் விழுத்திணைப் பிறந்த'என்புழிப்போல; குடியின் உயர்வுதாழ்வுக் கேற்பச் செல்வமும் மிகுந்துங் குறைந்தும் நில்லா வென்றற்குத் ‘திணைவகையா னில்லா' வெனப்பட்டது. செல்வம், செல்வாக்கு, செல்வநுகர்ச்சி யெனத் திரு பலவாகலின் நில்லாவெனப் பன்மையிற் கூறினார். எவர் வலிமையுங் கூற்றுவன் முன் செல்லாமையின், அவனுக்குப் பெருவலிமை யுரைக்கப்பட்டது. கூற்றம், பொருளாலுயர்திணைப் பெயர். ‘கூறுவ' வென்றது, துன்பஞ் செய்யாது கொடுபோ; இன்று திரும்பிப் போய்ப் பின்னொருகால் வா' என்பதற்கு ‘காம' மென்பதற்கும் எண்ணும்மை கூட்டுக. ஆம் : அசை நிலை. செல்வம், கூற்றம், காமம், அரசு என்பன தத்தம் இயற்கைப்படியே நடைபெறுமென்பது கருத்து.
பிறக்குங்கால் பேரெனவும் பேரா இறக்குங்கால் நில்லெனவும் நில்லா உயிரெனைத்தும் - நல்லாள் உடம்படின் தானே பெருகுங் - கெடும்பொழுதில் கண்டனவுங் காணாக் கெடும். பொருள்: உயிர் எனைத்தும் - உயிரெல்லாம், பிறக்குங்கால் - பிறக்கும்போது, பேர் எனவும் பேரா - உடலை விட்டு நீங்கென்றாலும் நீங்கா; இறக்குங்கால் - அவை இறக்கும்போது, நில் எனவும் நில்லா - இவ்வுடலிலேயே நில்லென்றாலும் நில்லா; நல்லாள் - திருமகள், உடன்படின் - கூடின், தானே பெருகும் - செல்வம் தானே பெருகும்; கெடும் பொழுதில் - அவள் நீங்கிப் போங்காலத்தில், கண்டனவும் - முன்பு காணப்பட்ட பொருள்கள் கூட, காணா - காணப்படாதன வாய் கெடும் - அழிந்துபோம். கருத்து: உயிர்கள் பிறக்கும்போது நீங்கென நீங்கா; இறக்கும்போது நில்லென நில்லா; திருமகள்கூடினாற் செல்வமும் கூடும்; அவள் நீங்கினால் அச் செல்வமும் நீங்கும். விளக்கவுரை: ‘எனவு' மெனவந்த இரண்டும்மைகளும் எச்சம் ‘கண்எனவு' மென்றதும் அது; என்னை? மேன்மேற் பெருகுதல் கெடுதலேயன்றி முன்னாற் பெருகிக் கண்டனவுங் கெடுமென்றலின். ‘எனைத்து' மென்பது முற்றும்மை; முழுமையுமென்னும் பொருளுணர்த்திற்று. உடம்படின் - உடம்பட்டுச் சேரினென்க. காணா: முற்றெச்சம். எனை - எத்தனை என்பதன் மரூஉ.
போரின்றி வாடும் பொருநர்சீர் கீழ்வீழ்ந்த வேரின்றி வாடும் மரமெல்லாம் - நீர்பாய் மடையின்றி நீள்நெய்தல் வாடும் படையின்றி மன்னர்சீர் வாடி விடும். பொருள்: பொருநர் சீர் - போர்வீரரின் சிறப்பு : போர் இன்றி - போரில்லாவிடின், வாடும் - குன்றும்; மரம் எல்லாம் - எல்லா மரங்களும், கீழ் வீழ்ந்த - நிலத்துள் இறங்கிய, வேர் இன்றி - வேர் அறுந்துவிடின், வாடும் - பட்டுப்போம்; நீள் நெய்தல் - நீண்ட நெய்தல் மலர்கள், நீர் பாய்மடை - நீர்பாயும் மடையில், இன்றி - நீர் அற்று விட்டால், வாடும் - உலரும்; மன்னர் சீர் - அரசரது செல்வம், படையின்றி - படையில்லாவிடின் வாடிவிடும் - அழிந்துபோம். கருத்து: போரில்லாவிடின் வீரரின் சிறப்புக் கெடும்; வேரற்று விடின் மரங்கள் படும்; நீரற்றுவிடின் நெய்தல் உலரும்; படையில்லாவிடின் வேந்தனது சீர்மை அழியும். விளக்கவுரை: மடை : தொழிலடியாகப் பிறந்த பெயர். மடு : பகுதி, ஐ : வினைமுதற் பொருண்மை விகுதி. நீரை நிறைத்து நிற்பது என்பது பொருள். மடையின்றி - மடைக்கண் நீரின்றியென விரிக்க. மன்னர்க்குச் சீரென்றது அவரது அரசாட்சிச் செல்வத்தையென்க. பொருநர் சீர் என்பதையும் அவர்க்குரிய வீரச் சிறப்பென்றே யுரைத்துக்கொள்க. மடை - வாய்க்கால்; குளமுமாம். ‘இன்றி' என வரும் பாடங்கள் ‘அறின்' எனவும் வரும்.
ஏதிலா ரென்பார் இயல்பில்லார் யார்யார்க்கும் காதலா ரென்பார் தகவுடையார் - மேதக்க தந்தை யெனப்படுவான் தன்னுவாத்தி தாயென்பாள் முந்துதான் செய்த வினை. பொருள்: ஏதிலார் என்பார் - அயலாரென்று கருதப்படுபவர்கள், இயல்பு இல்லார் - நல்லியல்பில்லாதவர்கள்; யார் யார்க்கும் - யாவர்க்கும், காதலார் என்பார் - அன்பரெனப்படுவார், தகவு உடையார் - நல்லியல்புடையவர்கள், மேதக்க - மேன்மையான, தந்தை யெனப்படுவான் - தந்தையென்று சொல்லப்படுபவன், தன் உவாத்தி - தன் ஆசிரியனாவான்; தாய் என்பாள் - மேன்மையான தாயென்று சொல்லப்படுபவள், முந்து - முற்பிறப்பில், தான் செய்த வினை - தான் செய்த நல்வினையாகும். கருத்து: ஒருவனுக்கு நல்லியல்பில்லாதவர் அயலார்; யார்க்கும் நல்லியல்புடையவரே அன்பர்; மேலான தந்தை யெனப்படுபவன் ஆசிரியன்; தாயெனப்படுபவள் முன் செய்த நல்வினையாகும். விளக்கவுரை: ஏதிலார் - ஒற்றுமைப்படுதற்குரிய ஏதுஇல்லாதவர்; அவர் பகைவருமல்லர், நண்பருமல்லர், அயலாரென்க. ‘யார் யார்க்கும் ஏதிலார்' எனக்கூட்டியுரைத்தலுமாம். உடம்பை வளர்க்குந் தந்தையைப்போலவே அறிவென்னு முடம்பை ஆசிரியன் வளர்த்தலின் அவனுந் தந்தையெனப்பட்டான்; அழிந்துபோம் ஊனுடம்பை வளர்ப்பானைவிட அழியாத அறிவுடம்பை வளர்க்கும் ஆசிரியன் மேலானவனாதலின், அவன் மேதக்க தந்தையெனப்பட்டான்; தாய்க்கும் இதனைக் கூட்டிக் கூறுக. முன் செய்த நல்வினை இப் பிறப்பில் இன்பங்களைச் சிறிதளவுந் தவறாமல் உடனிருந்து ஊட்டலின், அது தாயெனப்பட்டது. தாயென்னுங் குறிப்பால் ‘வினை' நல்வினைக் காயிற்றென்க. ‘தாயென்பாள்.......வினை' என்பது திணைவழுவமைதி. மேதக்க - மேன்மைதரு என்பதன் மரூஉவாகிய ‘மேதகு' பகுதி; ஒற்றிரட்டிக் காலங் காட்டி விகுதிபெற்றது; உகரக்கேடு சந்தி.
பொறிகெடும் நாணற்ற போழ்தே - நெறிபட்ட ஐவரால் தானே வினைகெடும் - பொய்யா நலம்கெடும் நீரற்ற பைங்கூழ் - நலமாறின் நண்பினார் நண்பு கெடும். பொருள்: நாண் அற்ற போழ்தே - ஒருவனுக்கு நாணமென்பது நீங்கினபோதே, பொறி கெடும் - செல்வம் அழியும்; நெறி பட்ட - தன்வழிப்பட்ட, ஐவரால் - ஐம்பொறிகளால், வினைதானே கெடும் - தீவினைகள் தாமாகவே ஒழியும்; நீர் அற்ற - நீரைப் பெறாத, பைங்கூழ் - பசும்பயிர்கள், பொய்யா - பொய்க்காத, நலம் கெடும் - விளைவின் நன்மை கெட்டொழியும்; நலம் மாறின் - நண்பின் நலம் மாறினால், நண்பினார் நண்பு - நண்பரின் நட்பியல்பு, கெடும் - கெட்டுப்போம். கருத்து: நாணம் நீங்கினாற் செல்வங் கெடும்; ஐம்பொறிகள் தன் வழிப்பட்டால் வினை கெடும்; நீரற்றாற் பசும் பயிர்களின் விளைவின் நலம் கெடும்; நன்மை மாறினால் நட்புக் கெடும். விளக்கவுரை: ‘பொறி கெடும் நாணற்ற போழ்தே' என்பதைக் கயிறற்றபோதே பாவை கெடுமென் றுரைப்பாரு முளர். நெறிபட்ட ஐவராலென்பதை ஐவர் நெறிபட்டாலென மாறுக. நெறிபடல் - தன்வழிப்படல்; எதுகை நோக்கிப் பகரவொற்றுத் தொக்கது. வினை, ஈண்டுப் பிறவிக்கு ஏதுவான தீவினை. தானே என்பதனால் முயற்சியின்றியே கெடுமென்பார், பயிர்க்குப் பெய்யா நலமென்பது, நீர் பாய்ச்சி முறையாய்ப் பயிரிட்டால் அது சிறிதுந் தவறாமற் றருங் கதிர் முதலிய விளைபொருட் பயன்களென்க. நண்பர்க்கு நலமாவது. உற்றுழியுதவலாம்; "உடுக்கை இழந்தவன் கைபோல வாங்கே, யிடுக்கண் களைவதாம் நட்பு"என்னும் திருக்குறள் திருமொழியை நினைவுகூர்க. போழ்து-பொழுது என்பதன் மரூஉ; போது எனவும் வரும்.
நன்றிசாம் நன்றறியா தார்முன்னர்ச் - சென்ற விருந்தும் விருப்பிலார் முன்சாம் - அரும்புணர்ப்பின் பாடல்சாம் பண்ணறியா தார்முன்னர்; ஊடல்சாம் ஊடல் உணரா ரகத்து. பொருள்: நன்று அறியாதார் முன்னர் - பிறர் செய்யும் நன்மைகளை நன்மையெனத் தெரிந்துகொள்ளாதவர்பால், நன்றிசாம் - செய்ந்நன்றி கெடும்; விருப்பு இலார் முன் - அன்பில்லாதவரிடத்தில், சென்ற விருந்தும் - போன விருந்தினரும், சாம் - வாடுவர்; பண் அறியாதார் முன்னர் - பண்ணிசையை யறியாதாரிடத்தில் : அரும் புணர்ப்பின் - அரிய இசை நிரவல்களையுடைய, பாடல் சாம் - பாட்டுக்கள் கெடும்; ஊடல் உணராரகத்து - ஊடுதலி னினிமையைத் தெரிதலில்லாத கணவரிடத்தில், ஊடல் சாம் - ஊடுதல் கெடும். கருத்து: நன்மையறியார்மாட்டுச் செய்ந்நன்றி கெடும்; அன்பில்லார்மட்டும், செல்லும் விருந்தினர் வாடுவர்; இசையறியார் மாட்டு அரிய இசைப் பொருத்தங்களுடன் பாடும் பாட்டுப் பயனின்றாம்; புலவியுணரார் மாட்டுப் புலத்தல் கெடும். விளக்கவுரை: ‘முன்' ‘அகம்' எனபன ஏழாவதன் இடப்பொருளன. சாம் என்பதில் ஈற்றுமிசை யுகரம் மெய்யொடுங் கெட்டது; ‘சாகும்' என விரிக்க. அரும்புணர்ப்பென்றது மிடற்றொலியும், யாழ் முதலிய இசைக் கருவிகளி னொலியும், பாடற் பண்ணும் ஒத்திசைக்கும் பொருத்தமும், நுண்ணிய இசை நிரவல்களும் பிறவுமாம்; இவ்வியல்பு முதலியவற்றைக், ‘கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங், குழல்வழி நின்றது யாழே யாழ்வழித், தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப், பின்வழி நின்றது முழவே, முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை' யென வருஞ் சிலப்பதிகாரத்து அரங்கேற்று காதையடிகள்முதலிய வற்றானும், அவற்றி னுரைகளானுங் கண்டு கொள்க. ‘பாடல் சாம் பண்ணறியாதார் முன்னர்' என்று ஈண்டுக் கூறியது போலவே, ‘பண்ணினது பாடலுணர்வா ரகத்து' என உடம்பாட்டாலும் முன்னுங் கூறினார். நன்றிக்குச் சாமென்றது மறப்பை, ஊடலுணர்தல் - ஊடுதலின் அளவையும் மாட்சிமையையும் அறிந்து ஒழுகுதல். ஊடல் - கலவியிற் பிணங்கல்.
நாற்ற முரைக்கும் மலருண்மை கூறிய மாற்ற முரைக்கும் வினைகலந் தூக்கின் அகம்பொதிந்த தீமை மனமுரைக்கும் முன்னம் முகம்போல முன்னுரைப்ப தில். பொருள்: மலர் உண்மை - மலரின் இருப்பை, நாற்றம் உரைக்கும் - அதன் மணமே அறிவிக்கும்; வினை நலம் -ஒருவனது செய்கைத் திறத்தை, கூறிய மாற்றம் உரைக்கும் - அவன் சொன்ன சொல்லே அறிவிக்கும்; தூக்கின் -ஆராய்ந்தால், அகம் பொதிந்த தீமை - நெஞ்சிற் செறிந்த தீமைகளை, மனம் உரைக்கும் - அவனது நெஞ்சமே அவனுக்கு அறிவிக்கும்; முன்னம் - ஒருவன் உள்ளக் குறிப்பை, முகம்போல - அவன் முகத்தைப் போல, முன் உரைப்பது இல் - முற்படத் தெரிவிப்பது வேறில்லை. கருத்து: மலரின் உண்மையை அதன் மணமும், ஒருவன் செயற்றிறனை அவன் சொல்லும். நெஞ்சிற் செறிந்த தீமையை அவன் நெஞ்சமும், உள்ளக் குறிப்பை முகமும் அறிவித்துவிடும். விளக்கவுரை: பிரிநிலையேகாரம் விரித்துக்கொள்க. உண்மை : குறிப்புத் தொழிற்பெயர். அகம் பொதிந்த வென்பது பொருட் பெருக்குடையது. மனமுரைக்கு மென்றார். ‘தன்னெஞ்சே தன்னைச் சுடலின்'; ‘நெஞ்சத்திற் குறுகிய கரியில்லை யாகலி' னென்பது கலித்தொகை. ‘இல்லை ‘யென்பதன் ஐ தொக்கு ‘இல்' என்று நின்றது.
மழையின்றி மாநிலத்தார்க் கில்லை மழையும் தவமில்லார் இல்வழி இல்லை தவமும் அரச னிலாவழிஇல்லை அரசனும் இல்வாழ்வார் இல்வழி யில். பொருள்: மழையின்றி - மழையில்லாமல், மாநிலத்தார்க்கு - இப் பேருலகத்தின் மக்கட்கு, இல்லை - நலமில்லை;மழையும் - அம்மழை தானும், தவம் இலார் - தவஞ் செய்தலில்லாதவர்கள், இல்வழி - இருப்பிடங்களில், இல்லை - பெய்தலில்லை; தவமும் - அவ் வியல்பினதான தவஞ்செய்தலும், அரசன் இலாவழி - செங்கோலரசன் இல்லாதவிடத்து, இல்லை - நிகழ்தலில்லை; அரசனும் - அச்செங்கோலரசனும், இல்வாழ்வார் - குடிமக்கள்; இல்வழி - இல்லாதவிடத்து, இல் - இலனாவான். கருத்து: மழையில்லாவிட்டால் உலகத்து மக்களுக்கு நலமில்லை; அம் மழையுந் தவமுடையா ரில்லாதவிடத்துப் பெய்தலில்லை; அத் தவஞ் செய்தலும் முறையான அரசனில்லாத நாட்டில் நிகழ்தலில்லை; அவ்வரசனுங் குடிகளில்லாத விடத்தில் இருப்பதில்லை. விளக்கவுரை: ‘தவமிலா' ரென்பதைத் தவமுடையாரென்றுரைப்பாருமுளர். ‘தவமிலா ரில்வழி' யென்பதில், இல், இருப்பிடத்தை யுணர்த்திற்று, ‘இல்வழிப் படூஉம் காக்கை'என்புழிப்போல. உலகத்திலுள்ள எல்லா நலங்களுங் குடி மக்களான இல்வாழ்வாரால் விளைதலின், ஏனைய மூன்று கருத்துகட்கும் அவரை ஏதுவாக உரைத்தார். ‘வாழ்க்கை' என்பதே உலகத்தில் இல்வாழ்வார்க்கே உரியதாதல் நினைவு கூர்தற்குரியது.
போதினான்நந்தும் புனைதண்தார் மற்றதன் தாதினான் நந்துஞ் சுரும்பெல்லாந் - தீதில் வினையினான் நந்துவர் மக்களுந் தத்தம் நனையினான் நந்தும் நறா. பொருள்: புனை தண் தார் - தொடுக்கப்படுங் குளிர்ந்த மாலை, போதினால் - பூக்களால், நந்தும் - மிக்கு விளங்கும்; சுரும்பு எல்லாம் - வண்டுகளெல்லாம், அதன் தாதினால் - அப் பூக்களின் தேனால், நந்தும் - மிக்குப் பொலியும்; மக்களும் - உலகத்து மக்களும், தீது இல் வினையினால் - குற்றமில்லாத நற்செய்கைகளால், நந்துவர் - உயர்வடைவர்; நறா - தேன் வகைகள், தத்தம் - தாந்தா மிருக்கும், நனையினால் - பூவரும்பின் வகையினால், நந்தும் - பெருகி நல்லனவாம். கருத்து: மாலை பூவினால் விளங்கும்; வண்டுகள் அப்பூவிலுள்ள தேனாற் பொலியும்; மக்கள் நற்செய்கைகளால் உயர்வர்; தேன் தாந்தா மிருக்கும் மலர்வகைக் கேற்பப் பெருகி இனியவாம். விளக்கவுரை: நந்துதல் உயர்தலையும் விளங்குதலையும் உணர்த்தின. இதற்கு இவ் விருபொருளினுண்மையை முறையே ‘கான நந்திய செந்நிலப் பெருவழி' என்னும் முல்லைப் பாட்டினாலும் - ‘பொன்செய் பாண்டிற் பொலங்கல நந்த' என்னும் ஐங்குறு நூற்றினாலு மறிந்துகொள்க. தாது, தேன் என்னும் பொருட்டாதலை ‘ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்குங் காந்தள்' என்னும் பட்டினப்பாலையிற் காண்க. தாது - மகரந்தமுமாகும். வினை - ஈண்டுச் செயல்; தத்தம் ‘நனையி'னா லென்றது, தேன் தானிருக்கும் பூவின் செழுமைக்கும் வகைக்கும் ஏற்பப் பெருகி இனிதாதலின். மற்று : அசை.
சிறந்தார்க் கரிய செறுதலெஞ் ஞான்றும் பிறந்தார்க் கரிய துணைதுறந்து வாழ்தல் வரைந்தார்க் கரிய வகுத்தூண் இரந்தார்க்கொன் றில்லென்றல் யார்க்கும் அரிது. பொருள்: சிறந்தார்க்கு - நட்பிற் சிறந்தவர்களுக்கு, செறுதல் - தம் நண்பரைப் பிழை செய்தவழியுஞ் சினந்து நீக்குஞ் செயல்கள், அரிய - இலவாம்; பிறந்தார்க்கு - உயர் குடியிற் பிறந்த மேலோர்க்கு, எஞ்ஞான்றும் - எக்காலத்திலும், துணை துறந்து வாழ்தல் - தமக்குத் துணையான சுற்றங்களை நீங்கி இன்ப வாழ்வில் வைகும் வகைகள், அரிய - இல; வரைந்தார்க்கு - உணவின் பொருட் செலவைத் தமக்கென்றே அளவு செய்து வாழ்கின்றவர்களுக்கு, வகுத்து ஊண் - பிறர்க்குப் பகுத்தளித்து உண்ணு நிகழ்ச்சிகள், அரிய - இல; யார்க்கும் - ஈரநெஞ்சமுடையாரெவர்க்கும், இரந்தார்க்கு - தம்பால் வந்து இரந்து கேட்பவர்கட்கு, ஒன்று - ஒரு பொருள், இல்என்றல் - இல்லையென்று மறுத்துக் கூறுதல், அரிது - இல்லை. கருத்து: சிறந்த நண்பர்கள் தம்மு ளொருவரையொருவர் சினந்து கொள்ளார்; உயர்குடிப்பிறப்பினர் தம் இனத்தாரை நீங்கி வாழார்; தமக்காகவே செலவு செய்கின்றவர்கள் பிறர்க்குப் பகுத்துண்டல் செய்வாரல்லர்; அருளுடையவரெல்லாரும் இரந்தார்க்கு இல்லையென்று சொல்லார். விளக்கவுரை: ‘அரிய' வென்பது பலவின் முற்றானமையின், ‘செறுதல்' ‘வாழ்தல்' ‘உண்டல்' என்பவற்றிற்குப் பன்மைப் பொருள் உரைத்துக் கொள்க. ‘எஞ்ஞான்று' மென்பதை ஏனையவற்றிற்குங் கூட்டிப் பிழை செய்த காலத்தும், இடுக்கான காலத்தும், செல்வம் மிக்க காலத்தும், வறுமையுற்ற காலத்துமெனக் கருத்துரைத்துக் கொள்ளல் சிறப்பாகும். ஊண் : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். அருமை, ஈண்டு இன்மைமேற்று. ஞான்று : காலப்பொருளதாகிய இடைச்சொல்.
இரைசுடும் இன்புறா யாக்கையுட் பட்டால் உரைசுடும் ஒண்மை யிலாரை - வரைகொள்ளா முன்னை ஒருவன் வினைசுடும் வேந்தனையுந் தன்னடைந்த சேனை சுடும். பொருள்: இரை - உணவு, இன்பு உறா - பிணியினாற்றுன்பமுறும், யாக்கையுள் பட்டால் - வயிற்றிற் சேர்ந்தால், சுடும் - வருத்தும்; ஒண்மை இலாரை - அறிவு விளக்கம் இல்லாதவர்களை, உரைசுடும் - அவர் வாய்மொழியே அவரைத் துன்புறுத்தும்; ஒருவன் - ஒருவனது, வரை கொள்ளா - அறத்தின் எல்லையிற்படாத, முன்னை வினை - முன் செய்த தீவினை, சுடும் - இப்பிறப்பில் வந்து வருத்தும்; வரை கொள்ளா - அறத்தின் எல்லையிற் படாத, வேந்தனையும் - அரசனையும், தன் அடைந்த - தன்னைச் சேர்ந்த, சேனை - படைகளே, சுடும் - கொல்லும். கருத்து: பிணியுள்ள உடம்பிற் சேரும் உணவு செரியாமையாற் றுன்புறுத்தும்; அறிவிலாரை அவர் வாய்ச்சொல்லே வருத்தும்; முன்செய்த தீவினைகள் இம்மையில் வந்து துன்புறுத்தும்; அறத்தின் வரையறையில் நில்லாத அரசனைக் சேனைகளே கொல்லும். விளக்கவுரை: அறிவென்பது விளக்கமுடைமையின் ‘ஒண்மை' யெனப்பட்டது. ‘ஒண்மை யுடையம்யா மென்னுஞ் செருக்கு'என்பது திருக்குறள். வரைகொள்ளாவென்னுங் குறிப்பால் வினை தீவினைக்காயிற்று. வரைகொள்ளாவென்பதை அரசனுக்குங் கூட்டுக. நீதிவழியில் நடத்தப்படாத சேனை அரசர்க்குத் தீங்கிழைக்குமென்பது. உம்மை இறந்தது தழீஇய எச்சம். ‘சேனையே' எனத் தேற்றேகாரம் விரித்துக்கொள்க. யாக்கை - ‘யா' பகுதி, ‘க' சந்தி, ‘கு' சாரியை, ‘ஐ' செயப்படு பொருண்மை விகுதி ; கட்டப்பட்டது என்பது பொருள்.
எள்ளற் பொருள திகழ்தல் ஒருவனை உள்ளற் பொருள துறுதிச்சொல் - உள்ளறிந்து சேர்தற் பொருள தறநெறி பன்னூலுந் தேர்தற் பொருள பொருள். பொருள்: ஒருவனை - பிறனொருவனை; இகழ்தல் - இகழுஞ் செயல், எள்ளற் பொருளது - யாவராலும் நீக்குதற்குரியது; உறுதிச் சொல் - ஒருவன் கூறும் உறுதிச் சொல், உள்ளற் பொருளது - ஏற்றுக்கொள்ளுதற்குரியது; அறநெறி - அறவழி, உள் அறிந்து - ஒருவன் உள்ளத்தில் தெளிந்து, சேர்தற் பொருளது - அடைதற்குரியது; பொருள் - மெய்ப்பொருள்கள், பல்நூலும் - அமைவுடைய பல நூல்களையும், தேர்தற் பொருள - ஆராய்ந்து தெளிதற்குரியன. கருத்து: ஒருவனால் நீக்குதற்குரியது அவன் பிறரை இகழுஞ் செயல்; ஒருவன் ஏற்றுக்கொள்ளுதற்குரியது பெரியோர் கூறும் உறுதிச் சொல்; உண்மையறிந்து தெளிந்து கடைப்பிடித்தற்குரியது அறவழி; பல நூற்களையும் ஆராய்ந்து தேர்தற்குரிய பொருள்கள் மெய்ப்பொருள்களாம். விளக்கவுரை: உள் - உள்ளம். நூலும் : இரண்டாவது விரிக்க; உம்மை : முற்று. உறுதிச்சொல். அடையப்படும் நன்மையைத் தருஞ்சொல். உறு : பகுதி, த் : எழுத்துப்பேறு, இ : செயப்படு பொருண்மை விகுதி.
யாறுள் அடங்குங் குளமுள வீறுசால் மன்னர் விழையுங் குடியுள - தொன்மரபின் வேதம் உறுவன பாட்டுள வேளாண்மை வேள்வியோ டொப்ப உள. பொருள்: யாறு - ஆற்று வெள்ளம், உள் அடங்கும் - தம்முட் புகுந்து அடங்கத்தக்க, குளம் உள - குளங்களும் நாட்டில் உள்ளன; வீறு சால் - சிறப்பு அமைந்த, மன்னர் விழையும் - அரசர்களால் விரும்பப்படும், குடிஉள - குடி மக்களும் உள்ளனர் ; தொல் மரபின் - பழைய முறைமையினையுடைய, வேதம் உறுவன - வேதக் கருத்துக்களைப் பொருந்துவவாகிய, பாட்டு உள - சில தனிப் பாட்டுகளும் உள்ளன; வேள்வியோடு ஒப்ப - வேள்விகளுக்கு நிகராவனவாகிய, வேளாண்மை உள - ஈகைகளும் உள்ளன. கருத்து: ஆறுகள் தம்முள் அடங்கத்தக்க குளங்களும் உள்ளன; அரசர்களால் விரும்பப்படும் குடிகளும் உள்ளன : வேதக்கருத்துக்களையுடைய பழைய தனிப்பாட்டுகளும் உள்ளன : வேள்விக்கு நிகரான ஈகைகளும் உள்ளன. விளக்கவுரை: ‘யாறுளடங்குங் குள' மென்றது, ஆற்று வெள்ளங்களும் புகுந்தடங்கத்தக்க அவ்வளவு அகலமும் ஆழமுங்கரைவலிமையுமுடைய குளங்களாகு மென்றற்கு. மன்னர் விழையுங் குடியாதல் - திருவினும் உருவிலும் பெருந்தகைமையிலுமென்க. தொன் மரபினென்றது மேன்மையாகக் கருதப்பட்ட பழந் தமிழ் நான்மறைகளின் கருத்தமைந்த பழந்ததமிழ்த் தனிப் பாட்டுகளும் இஞ்ஞான்றுள்ளன வென்பது. வேள் ஆண்மை - இரப்போரது விருப்பத்தை ஆளுதலென்க : வேள் - விருப்பம். உறுவன : முற்றெச்சம். வேள்வியோடொத்த வேளாண்மையாவது - கைம்மாறு செய்ய வலியில்லாத நல்லோர்க்கு ஒருவன் தேடிச்சென்று கொடுக்கும் ஈகை.
எருதுடையான் வேளாளன் ஏலாதான் பார்ப்பான் ஒருதொடையான் வெல்வது கோழி - உருவோடு அறிவுடையாள் இல்வாழ்க்கைப் பெண்ணென்பசேனைச் செறிவுடையான் சேனா பதி. பொருள்: எருது உடையான் - உழவு மாடுகளையுடையவன், வேளாளன் - வேளாளனாவான்; ஒரு தொடையான் - ஒரு காலால், வெல்வது - பெடையை வயப்படுத்துவதான; கோழி - சேவற் கோழியைப்போல, ஏலாதான் - எவர் பகையையும் ஏற்றுக் கொள்ளலின்றி யாவரையும் வயப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ்பவன், பார்ப்பான் - பார்ப்பானாவான்; உருவோடு - உருவழகோடு, அறிவுடையாள் - வாழ்க்கையை நடத்தும் நல்லறிவு உடையவள், இல்வாழ்க்கைப் பெண் - இல்வாழ்க்கைக்கு உரிய துணைவி ; சேனை - தனது சேனையோடு, செறிவுடையான் - எஞ்ஞான்றும் ஒன்றுபட்டு உடனுறைதலுடையவன், சேனாபதி - சேனைத் தலைவனாவான்; என்ப - என்று பெரியோர் கூறுவர். கருத்து: உழவு மாடுடையவன் வேளாளன்; ஒருகாலால் பெடையை வயப்படுத்துவதான கோழியைப்போல எவரோடும் மாறுபடாது ஒற்றுமையுடன் வாழ்பவன் பார்ப்பனன்; அழகும் அறிவுமுடையவள் வாழ்க்கைத்துணை : சேனையோடு ஒன்று பட்டு உடனுறைபவன் சேனாபதி. விளக்கவுரை: வேளாளனுக்கு உழவுக்கு இன்றியமையாதனவாதலால் எருதுடையான் என்றார். கோழி ஒரு காலாற்பெடையை நணுகி வயப்படுத்துவதென்பது நயங் காட்டுமாறாம்: அதையொப்பவே பார்ப்பானும் எவரோடும் பகையாமல் நயமாகவே தன் செய்கையை முடித்து வெற்றி பெறுவா னென்க. சேனை செறிவுடையானென்றது, சேனையை விட்டு விலகா னென்றபடி; உடையான் முதலியன வினையாலணையும் பெயர்கள். உருவோடு - ஓடு: உடனிகழ்ச்சிப் பொருளது. சேனைச் செறிவுடையான் என்ற பாடத்துக்கு ஒற்றுமையுடைய மிக்க பெரிய சேனை என்க ஏலாதான் என்பதற்கு மிக்க பொருளாசையால் மானங்கெட ஏற்காதவன் என வுரைப்பினுமாம்.
யானை யுடையார் கதனுவப்பர் மன்னர் கடும்பரிமாக் காதலித் தூர்வர் - கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாணுவப்பர் அல்லாரை அல்லார் உவப்பத கேடு. பொருள்: யானை உடையார் - யானையையுடைய போர்த் தலைவர், கதன் உவப்பர் - அதன் சினத்தை விரும்புவர்; மன்னர் - அரசர், கடும் பரிமா - விரைந்த ஓட்டத்தினையுடைய குதிரையை, காதலித்து - விரும்பி, ஊர்வர் - அதன் மேலேறிச் செல்வர் ; கொடுங்குழை - வளைவான காதணியை யணிந்த, நல்லாரை - மங்கையர்பால், நாண் - நாணத்தை, நல்லவர் - நல்லியல் புடையவர்கள், உவப்பர் - விரும்புவார்கள்; அல்லாரை - நாணுடையரல்லாத மகளிர்பால், அல்லார் - தீயோர், உவப்பது - விரும்புவது, கேடு - தீய ஒழுக்கமேயாம். கருத்து: யானையை யுடையவர்கள் அதன் சினத்தை விரும்புவார்கள்; அரசர்கள் விரைந்த செலவையுடைய குதிரையை விரும்புவார்கள்; நல்லியல் புடைய ஆடவர்கள் நன் மங்கையரின் நாணத்தை விரும்புவார்கள்; தீய ஆடவர்கள் தீய பெண்டிர்பால் தீதையே விரும்புவர். விளக்கவுரை: கதன் : ஈற்றுப் போலி. கடுமை, இங்கு விரைவின்மேலது. பரிமா : இருபெயரொட்டு, பெண்மக்களிடத்தில் உள்ள தீயவை புரியாத நாணத்தை நல்லவர்கள் விரும்புவார்கள் : ஆனால் தீயவர்கள் அந்நாணத்தை விரும்பாது தீயவை புரியும் நாணங்கெட்ட தன்மையையே விரும்புவ ரென்க. செய்யத் தகாதனவற்றின் கண் உள்ள மொடுங்குதலை நாண மென்பார் நச்சினார்க்கினியர். நல்லாரை, அல்லாரை; உருபு மயக்கம்.
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோ டெண்ணக் கடவுளு மில். பொருள்: கண்ணின் - கண்ணைப்போல், சிறந்த உறுப்பு - மேலான உறுப்பு, இல்லை - ஒருவனுக்கு வேறில்லை; கொண்டானின் - தன்னைத் திருமணஞ் செய்து கொண்ட கணவனைப் போல, துன்னிய கேளிர் - நெருங்கிய உறவினர், பிறர் இல்லை -வேறொருவருமில்லை; மக்களின் - தம் மக்களைப்போல், ஒண்மையவாய் - ஒளியுடையவாய், சான்ற - அமைந்த, பொருள் - வேறு பொருள், இல்லை - பெற்றோர்க்கில்லை; ஈன்றாளோடு - தாய்க்கு நிகராக, எண்ண - மதிப்பதற்குரிய, கடவுளும் இல் - கடவுளும் வேறில்லை, கருத்து: ஒருவனுக்குக் கண்ணைப்போல மேலான உறுப்பு வேறில்லை; குலமகளுக்குக் கணவனைப்போல நெருங்கிய உறவினர் வேறில்லை; பெற்றோர்க்கு மக்களைப்போல ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை; குழந்தைகட்குத் தாயைப்போல மேலான கடவுள் வேறெதுவுமில்லை. விளக்கவுரை: இன்னும் ஓடும் ஒப்புமைக்கு வந்தன. கொண்டான் : வினையாலணையும் பெயர். ‘ஒண்மையவாய்ச் சான்ற பொரு' ளென்றது, ஏனை எல்லாப் பொருள்களினும் அறிவொளியுடைய பொருளாய்ப், பெற்றோர்க்கு இம்மை மறுமைப் பயன்களை விளைவிப்பதாய்ப், பிறவி முழுவதும் உரியதாய் அமைந்து நிற்றலினென்பது; ‘தம்பொருளென்ப தம் மக்கள'என்னும் வள்ளுவர் திருமொழியை இங்கு உற்று நோக்குக. கேளிர் : கேண்மை யென்னும் பண்படியாய்ப் பிறந்த பலர்பாற் படர்க்கைப் பெயர். உம்மை : உயர்வு சிறப்பு. ‘கண்ணிற் சிறந்த வுறுப்பில்லை கல்வியின், நுண்ணிய வாய பொருளில்லை - கொண்டானின் துன்னிய கேளிர் பிறரில்லை யீன்றாளோ, டென்ன கடவுளு மில்' - என்பது பாட வேறுபாடு.
கற்றன்னர் கற்றாரைக் காதலர் கண்ணோடார் செற்றன்னர் செற்றாரைச் சேர்ந்தவர் - தெற்றென உற்ற துரையாதார் உள்கரந்து பாம்புறையும் புற்றன்னர் புல்லறிவி னார். பொருள்: கற்றாரை - கல்வியறிவுடையவர்களை, காதலர் - அன்பால் விரும்புகின்றவர்கள், கற்றன்னர் - அக்கல்வியறிவு உடையவர்களை ஒப்பர்; கண் ஓடார் - பிறர்பாற் கண்ணோட்டமில்லாதவர்கள், செற்றன்னர் - துன்பஞ்செய்யாதாரை ஒப்பர்; தெற்றென - தெளிவாக, உற்றது - உண்மையை, உரையாதார் - சொல்லாதவர்கள், செற்றாரைச் சேர்ந்தவர் - பகைவரை ஒப்பர்; புல்லறிவினார் - கீழ்மை யறிவுடையவர்கள், பாம்பு உள் கரந்து உறையும் - பாம்பு உள்ளே மறைந்து வாழும், புற்று அன்னர் - புற்றை ஒப்பர். கருத்து: கல்வியறிவுடையவர்களை விரும்பி உடனிருப்பவர்கள், அக்கல்வி யறிவுடையவர்களுக்கு ஒப்பாவர்; கண்ணோட்ட மில்லாதவர்கள் இடர் செய்வாரை ஒப்பர்; உண்மையைத் தெளிவாகச் சொல்லாதவர்கள் பகைவருக்கு நிகராவார்கள்; சிற்றறிவுடையார் பாம்புப் புற்றுக்கு ஒப்பாவர். விளக்கவுரை: கற்றன்னர் - கற்றால் அன்னர்; கற்றால் என்பது ஈறு தொகுத்தலாய் நின்றது; செற்றன்ன ரென்பதும் அது. காதலர் : வினைக்குறிப்புப் பெயர். உற்றது - நெஞ்சத்துட்பட்டது, அல்லது நிகழ்ந்தது என்க. புல்லறிவினார்பால் உட்கிடக்குந் தீமைகள் பல விருக்குமாகலின், உள் கரந்து பாம்புறையும் புற்றன்னராயினார். ‘கற்றன்னர் கற்றாரைக் காதல' ரென்பதைக் ‘கற்றன்னர் கற்றாரைக் காதவல' ரென்று மேலுங் கூறுவர்.
மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே - யாண்டும் பிறப்பார் பிறப்பார் அறனின் புறுவர் துறப்பார் துறக்கத் தவர். பொருள்: மாண்டவர் - அறிவால் மாட்சிமைப்பட்டவர்கள்; மாண்ட வினை - மாட்சிமைப்பட்ட செயல்களை, பெறுப - செய்யப் பெறுவர்; வேண்டாதார் - அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள், வேண்டா வினையும் - தம்மால் வேண்டப்படாத தீவினைப் பயன்களையும், பெறுப - இம்மை மறுமைகளிற் பெறுவார்கள்; யாண்டும் - எப்பொழுதும், பிறப்பார் - மேற்பிறப்பிற் பிறப்பவர்கள், பிறப்பு ஆர் - அப்பிறப்பிற் பொருந்தும், அறன் - அறத்தையே, இன்புறுவர் - இருமையிலும் விரும்பி யின்புறுவர்; துறப்பார் - யான் எனதென்னும் பற்றைத் துறப்பவர்கள், துறக்கத்தவர் - வீட்டுலகத்திற்குரியவ ராவார்கள். கருத்து: அறிவான் மாட்சிமைப்பட்டவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வாக்ள்; அவ்வறிவு மாட்சிமையை வேண்டாதவர்கள் தீவினைப் பயன்களையும் பெறுவார்கள்; உயர்ந்த பிறப்பிற் பிறப்பவர்கள் அப்பிறப்பின் அறத்தை விரும்பிச் செய்து இருமையும் இன்புறுவர்; பற்றைத் துறப்பவர்கள் வீட்டின்பத்துக் குரியராவார்கள். விளக்கவுரை: மாண்டவர்: ஈறு திரிந்த வினையாலணையும் பெயர் : பெறுப : பல்லோர் படர்க்கை எதிர்கால வினைமுற்று. யாண்டும் - இடைநிலை விளக்காதலின் மற்றவற்றோடும் ஒட்டிப் பொருளுரைத்துக் கொள்க. துறக்கத்தவ ரென்றே உரிமைப் படக் கூறினார், அது திண்ணமாதலின்.
என்று முளவாகு நாளும் இருசுடரும் என்றும் பிணியுந் தொழிலொக்கும் - என்றும் கொடுப்பாருங் கொள்வாரும் அன்னர் பிறப்பாருஞ் சாவாரும் என்றும் உளர். பொருள்: என்றும் - எக்காலத்தும், நாளும் - விண் மீன்களும், இரு சுடரும் - திங்களுஞ் சூரியனும், உளவாகும் - உள்ளனவாகும்; என்றும் - எக்காலத்திலும், பிணியும் - செயலுக்கு இடையூறான நோயும், தொழில் - உழவு முதலிய தொழில்களும், ஒக்கும் - உள்ளன ஆகும்; என்றும் - எக்காலத்திலும், கொடுப்பாரும் - இல்லையென்னாமல் ஈவாரும், கொள்வாரும் - ஏற்பாரும், அன்னர் - உளராவர்; என்றும் - எக்காலத்திலும்; பிறப்பாரும் - பிறப்பவர்களும், சாவாரும் - இறக்கின்றவர்களும், உளர் - உளராவர். கருத்து: விண்மீன்களும் திங்களுஞ் சூரியனும் என்றும் உள்ளன; நோயும் முயற்சியும் என்றும் உள்ளன; ஈவாரும் ஏற்பாரும் என்றும் உளர்; பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உளர். விளக்கவுரை: எனவே, இச்செய்யுள் உலகத்தின் இடையறாமை குறித்தவாறாம். ‘ஒக்கு' மென்பதை என்றும் உளவாதலொக்கு மென்றும், அன்னரென்பதை என்றும் உளவாகும் நாண்மீன் முதலாயின போல்வரென்றுங் கொள்க. தொழில் தலைமையால் உழுதொழில் முதலாயினவற்றைக் குறிக்கும். சுடர் : பண்பாகுபெயர். தொழில் என்பதன் ஈற்றில் எண்ணும்மை தொக்கது. பிணி - பிணித்தல் என்னுந் தொழிலடியாகப் பிறந்த பெயர்; முயற்சி செய்யவொட்டாமற் கட்டுப்படுத்துவது என்பது பொருள்.
இனிதுண்பா னென்பான் உயிர்கொல்லா துண்பான் முனிதக்கா னென்பான் முகன் ஒழிந்து வாழ்வான் தனிய னெனப்படுவான் செய்தநன் றில்லான் இனிய னெனப்படுவான் யார்யார்க்கே யானும் முனியா ஒழுக்கத் தவன். பொருள்: இனிது உண்பான் என்பான் - இனிய உணவை உண்பவன் என்று சொல்லப்படுபவன், உயிர் கொல்லாது, உண்பான் - காய்கறியுணவுகளையே உண்பவனாவான்; முனிதக்கான் என்பான் - எல்லாரானும் வெறுக்கத் தக்கவனென்று சொல்லப்படுபவன், முகன் ஒழிந்து - முகமலர்ச்சி யில்லாமல், வாழ்வான் - கடுகடுப்பாய் வாழ்பவனாவான்; தனியன் எனப்படுவான் - துணையில்லாதவ னென்று சொல்லப்படுபவன், செய்த நன்று இல்லான் - தன்னாற் செய்யப்பட்ட நன்மையொன்று மில்லாதவனாவான்; இனியன் எனப்படுவான் - இனிமையானவனென்று சொல்லப்படுபவன், யார் யார்க்கேயானும் - எல்லோராலும், முனியா ஒழுக்கத்தவன் - வெறுக்கப்படாத ஒழுக்கத்தை யுடையவனே ஆவன். கருத்து: ஓருயிரையுங் கொல்லாமற் காய்கறி யுணவுகளை யுண்பவனே இனிய உணவை உண்பவனாவான்; முகமலர்ச்சி யில்லாமற் கடுகடுப்பாய் உயிர்வாழ்வோன் எல்லோரானும் வெறுக்கப்படுவான்; யார்க்கும் உதவி செய்யாதவன் துணையில்லாதவனாவான்; எவராலும் வெறுக்கத் தகாத ஒழுக்கத்தை யுடையவன் இனியவனென்று சொல்லப்படுவான். விளக்கவுரை: இனிது : குறிப்பு வினையாலணையும் பெயர். முனியத்தக்கான் என்பது முனிதக்கான் என நின்றது. செய்த நன்றில்லானென்பது நன்மை செய்தலில்லானென்னும் கருத்துடையதாகலின் அதற்கேற்பப் பொருளுரைத்துக் கொள்க. அடுக்குப் பன்மைப் பொருளது. கு. ஏ : சாரியைகள். ஆன் : மூன்றன் உருபு. இது பஃறொடை வெண்பா.
ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன் கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்ற நகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும் பாடறியா தானை இரவு. பொருள்: ஈத்து உண்பான் என்பான் - பிறர்க்கு கொடுத்துண்பவ னெனப்படுவான், இசை நடுவான் - உலகத்திற் புகழை நிறுத்துவான்; அவன் கைத்து உண்பான் - அங்ஙனம் கொடுத்துன்பவனது கைப்பொருளையும் பறித்துண்பவன், காங்கி எனப்படுவான் - அவாவுடைய னெப்படுவான்; நண்ணார் முன் - விரும்பாதவர் முன், சேறல் - ஒன்றை விரும்பியடைவது, தெற்ற நகையாகும் -தெளிவாகவே இகழ்ச்சியுண்டாகும்; பாடு அறியாதானை - தனது தகுதியறியாதவனை, இரவு - இரந்து செல்லல், பகையாகும் - பகைமைக்கே இடமாகும். கருத்து: பிறர்க்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான்; அங்ஙனம் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்துண்பவன் அவாமிக்கவனாவான்' தன்னை விரும்பாதார்முன் தான் விரும்பிச் செல்லல் தெளிவான இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கிடமாகும். விளக்கவுரை: ஈந்தென்பது ஈத்தென வலித்தது. மற்று பிறிதென்னும் பொருளது. ‘மற்றவன்' என்பதற்குப் ‘பிறனது' எனப் பொருளுரைப்பினும் ஆம். கைத்து - கையிலுள்ள பொருளென்க. காங்கியென்பது வெப்பத்தை உணர்த்துவதொரு சொல்லாதலின், இங்கு அவ்வியல்பினையுடைய அவாவினையுடையானென்னும் பொருட்டாயிற்று. யாதொரு முயற்சியுமின்றிப் பிறர் பொருளை அவாவி உயிர் வாழ்பவனென்பது பொருள். நகை - இங்கு இகழ்ச்சிப்பொருட்டு, பகை : தொழிற்பெயர் : பகு : பகுதி, ஐ : விகுதி, உகரக்கேடு : சந்தி. பாடு : முதனிலை திரிந்த தொழிலாகு பெயர்.
நெய்விதிர்ப்ப நந்தும் நெருப்பழல் சேர்ந்து வழுத்த வரங்கொடுப்பவர் நாகர் - தொழுத்திறந்து கன்றூட்ட நந்துங் கறவை கலம்பரப்பி நன்றூட்ட நந்தும் விருந்து. பொருள்: நெருப்பு அழல் - வேள்வித்தீயின் சுடர், நெய் விதிர்ப்ப - நெய்யைச் சிந்த, நந்தும் - ஓங்கும்; நாகர் - தேவர்கள், சேர்ந்து வழுத்த - தம்மைப் பிறர் அணுகி ஏத்த, வரம் கொடுப்பர் - வேண்டும் நன்மைகளை அளிப்பர்; கறவை - ஆக்கள், தொழுத்திறந்து - கொட்டிலைத் திறந்து, கன்று ஊட்ட - கன்றுகளை உண்பிக்க, நந்தும் - பால் பெருக்கெடுக்கும்; கலம் பரப்பி - இலையை விரித்து, நன்று ஊட்ட - இனிமையாக உண்பிக்க, விருந்து நந்தும் - விருந்தினர் மனங்களிப்பர். கருத்து: நெய்யைச் சொரிய அழல் வளர்ந்தெரியும்: தம்மை வழுத்தினால் தேவர் நன்மை தருவர்; கன்றை உண்பிக்க ஆன்பால் பெருகும்; இனிமையாய் விருந்தளிக்க விருந்தினர் மகிழ்வர். விளக்கவுரை: விதிர்ப்ப - சிந்த; இஃதிப் பொருட்டாதல் ‘நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்து' என்னும் புறநானூற்றடியில் காண்க. நெய்யென்னுங் குறிப்பினால் நெருப்பு வேள்வித் தீயை யுணர்த்திற்று. நாகர், ஈண்டுத் தேவர்மேற்று. நந்தல் - மிகுதல்; இப்பொருள் கொண்டு தொடர்க்கேற்பக் கருத்துரைத்துக்கொள்க. அழல் - எழுவாயதலால் லகரம் திரியாது நின்றது. விதிர்ப்ப முதலிய செயவெனெச்சங்கள் காரணப்பொருளனவாதலால் இறந்தகாலத்துக் குரியன. கறவை; கற : பகுதி, வ்: சந்தி, ஐ: வினைமுதற் பொருண்மை. விகுதி. விருந்து : பண்பாகுபெயர். விருந்து - புதுமை. நன்றூட்டலாவது - அளவளாவுதல் செய்து உண்பித்தல்.
பழியின்மை மக்களாற் காண்க வொருவன் கெழியின்மை கேட்டா லறிக பொருளின் நிகழ்ச்சியா னாக்க மறிக புகழ்ச்சியாற் போற்றாதார் போற்றப் படும். பொருள்: பழி இன்மை - ஒருவன் தான் பழிக்கப்படுதலில்லாமையை, மக்களால் காண்க - தன் மக்கட்பேற்றாற் கண்டு கொள்க; ஒருவன் கெழி இன்மை - ஒருவன் தனக்கு நட்புரிமை யில்லாமையை, கேட்டால் அறிக - தனக்குச் செல்வங் கெடுதலாற் கண்டுகொள்க; பொருளின் நிகழ்ச்சியால் - பொருள் வரவினால், ஆக்கம் அறிக - ஒருவன் தனது வளர்ச்சியைக் கண்டுகொள்க; புகழ்ச்சியால் - தான் பலரானும் புகழப்படும் புகழ்ச்சியினால், போற்றாதார் - பகைவராலும், போற்றப்படும் - ஒருவன் வணங்கப்படுவான். கருத்து: ஒருவன் தன் நன்மக்கட் பேற்றினாற் பழிக்கப்படுத லில்லாதவனாவான்; நட்பியல்புடையவனானால் அவனுக்குப் பொருட்கேடு உண்டாகாது. ஒருவனுக்குச் செல்வம் மேலு மேலும் பெருகிக்கொண் டிருக்குமானால் அதனால் அவனது முற்போக்குண்மை அறியப்படும்; பலரும் புகழும்படி ஒருவன் ஒழுகுவானாயின் அப்பெரும் புகழினாற் பகைவரும் அவனை வணங்குவர். விளக்கவுரை: கெழி : பண்புப் பெயர்; கெழு : பகுதி, இ : பகுதிப் பொருள் விகுதி யென்க. இன்மை இரண்டுங் குறிப்புத் தொழிற்பெயர். ‘பொருளின் நிகழ்ச்சி' யென்றது, பொருளின் வரவையும், வந்து நல்வினைகளிற் செலவாகும் அறச்செலவையுங் குறிக்கும். ஆக்கம் - எல்லா வகையிலும் மேலும் மேலும் உயர்வதனால் நல்லூழ் எனினுமாம். போற்றாதாருமென எச்சவும்மை விரித்துக் கொள்க. பழி - நடுவுநிலை யின்மை ; முதனிலைத் தொழிலாகுபெயர்.
கண்ணுள்ளுங் காண்புழிக் காதற்றாம் - பெண்ணின் உருவின்றி மாண்ட வுளவா - மொருவழி நாட்டுள்ளு நல்ல பதியுள - பாட்டுள்ளும் பாடெய்தும் பாட லுள. பொருள்: கண்ணுள்ளும் - மக்களின் கண்களுள்ளும், காண்புழி - ஆராயுமிடத்து, காதற்று ஆம் -விரும்பப்படுதலான கண்ணும் உண்டு; பெண்ணின் -பெண்மக்களுள், உருஇன்றி - அழகில்லையாயினும், மாண்ட - மாட்சிமைப்பட்ட இயல்புகள், உளஆம் -உள்ளனவாகும்; நாட்டுள்ளும் - ஒரு நாட்டினுள்ளும்; ஒரு வழி - எங்கேனும் ஒரு பகுதியில், நல்ல பதி உள -வளமான ஊர்களுள்ளன; பாட்டுள்ளும் - பாட்டுகளுள்ளும், பாடு எய்தும் - பெருமை மிக்க, பாடல் உள -பாட்டுகளிருக்கின்றன. கருத்து: கண்களுள்ளும் விரும்பப்படும் கண்களுள்ளன : அழகில்லாத பெண்டிருள்ளும் மாட்சிமைப்பட்ட நல்லியல் புடையோருண்டு. நாட்டினுள்ளும் ஒரு பாங்கர் வளமான ஊர்களுள்ளன. பாட்டுகளுள்ளுஞ் சிறப்பான பாட்டுகளுள்ளன. விளக்கவுரை: விரும்பப்படும் கண்களாவன கண்ணோட்டமுடைய கண்கள். உம்மைகள் எச்சம். காண்புழி காண் : பகுதி. ப் : எழுத்துப்பேறு, உ : நிகழ்கால வினையெச்ச விகுதி. பெண்ணென்னு மிடத்தும் உம்மை வருவித்துக் கொள்க. ஒருவழி யென்பதைச் சிறுபான்மையெனக் கொண்டு ஏனையவற்றோடு கூட்டி யுரைப்பினுமாம், நல்ல வென்றது ஈண்டு வளத்தின் மேற்று. பாட்டுக்குப் பாடென்றது, சொல்பொரு ளிசைகளிலென்க. இன்றி யென்பதனீற்றில் இழிவு சிறப்பும்மை தொக்கது. பாடல் : தொழிலாகுபெயர்.
திரியழல் காணில் தொழுப விறகின் எரியழல் காணின் இகழ்ப - ஒருகுடியில் கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான் இளமைபா ராட்டும் உலகு. பொருள்: திரி அழல் காணின் -திரியி னெரியுஞ் சுடரைக் கண்டால், தொழுப - அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் கைகூப்பி வணங்குவர்; விறகின் - விறகிலே, எரி அழல்காணின் -எரியுஞ் சுடரைக் கண்டால், இகழ்ப - அது பெரிதாயிருப்பினும் உலகத்தார் மதியாதிகழ்வர், ஒரு குடியில் - ஒரே குடும்பத்தில், கல்லாது -படியாமல், முத்தானை - ஆண்டு முதிர்ந்துவிட்டவனை, கைவிட்டு மதியாமல் விடுத்து, கற்றான் - படித்தவனது, இளமை - இளமைப் பருவத்தையே, உலகு பாராட்டும் -உலகத்தார் பாராட்டுவர். கருத்து: திரியி லெரியுஞ் சுடரைக் கண்டால் அது சிறிதாயிருப்பினும் உலகத்தார் தொழுவர் ; விறகி லெரியுஞ் சுடரை அது பெரிதாயிருப்பினும் தொழாது இகழ்வர் ; ஒரு குடும்பத்திலேயே படியாதவன் மூத்தவனாயினும் மதியார் ; படித்தவன் இளைஞனாயினும் மதித்துப் பாராட்டுவர். விளக்கவுரை: திரி : தொழிலடியாகப் பிறந்த பெயர்; செயப்படு பொருண்மை விகுதி புணர்ந்து கெட்டது ; திரிக்கப்பட்ட தென்பது பொருள். கைவிட்டுப் பாராட்டு மென்பதைக் கைவிடும் பாராட்டுமென இரண்டாகப் பிரித்துக்கொள்க, நான்மணிக்கடிகையானமையின். ஒரு பொருளின் உருவத்தைப் பாராமல் அதன் இயல்பைக் கண்டே மதித்தல் வேண்டுமென்பது இப்பாட்டின் கருத்து. உலகு : ஆகு பெயர்.
கைத்துடையான் காமுற்ற துண்டாகும் வித்தின் முளைக்குழாம் நீருண்டேல் உண்டாந் திருக்குழாம் ஒண்செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்றவள் துன்புறுவாள் ஆகிற் கெடும். பொருள்: கைத்து உடையான் - கைப்பொருள் உள்ளவன், காமுற்றது - விரும்பிய பொருள், உண்டாகும் - கிடைக்கும்; நீர் உண்டேல். நீர்ப்பாய்சச லுண்டானால்;வித்தின் முளைக்குழாம் - விதைகளின் முளைக்கூட்டம், உண்டாம் - தோன்றும்; ஒண் செய்யாள் - விளக்கமுடைய திருமகள்; பார்த்துறின் - அருள் செய்யின், திருக்குழாம் உண்டாகும் - பொருட்டிரள் பெருகும்; அவள் - அத்திருமகள், துன்புறுவாளாகின் - அருவருப்பாளானால், கெடும் - உள்ள செல்வமும் அழியும். கருத்து: செல்வமுடையானுக்கு விரும்பிய பொருள் கிடைக்கும்; நீருண்டானால் விதைகள் முளை கிளம்பும்; திருமகள் கூடினாற் செல்வம் பெருகும்; அவள் நீங்கினாற் செல்வம் அழியும். விளக்கவுரை: கைத்து - முதன்மை பற்றிச் செல்வத்தின் மேற்று. காமுற்றது. காமுறு : பகுதி; அ : சாரியை, து : ஒன்றன் படர்க்கை விகுதி. பகுதி ஒற்றிரட்டி இறந்தகாலம் காட்டிய வினைப்பெயர். செய்யாள் - செம்மை என்னும் பண்படியாகப் பிறந்த பெயர். செம்மை : பகுதி. ஆள் என்னும் விகுதிப் புணர்ச்சியில் ‘மை' விகுதி கெட்டு, மகரம் யகரமாகி அது தனிக்குறின் முன்னொற்றாதலின் இரட்டி முடிந்தது. பொருள் நடுவுநிலைமையுடையாள் என்பது. வித்தின் முளை - ஆறன் தற்கிழமை பார்த்துறி னென்றது உடையானது நல்லியல்பின் பொருட்டெனவும், துன்புறுவாளென்றது அவன்றன் தீமைக்கெனவுங் கொள்க. மற்று : வினைமாற்று.
ஊனுண் டுழுவை நிறம்பெறூஉம் நீர்நிலத்துப் புல்லினான் இன்புறூஉங் காலேயம் - நெல்லின் அரசியான் இன்புறூஉங் கீழெல்லாந் தத்தம் வரிசையான் இன்புறூஉம் மேல். பொருள்: ஊன் உண்டு - ஊனுணவை யுட்கொண்டு, உழுவை -புலி, நிறம் பெறூஉம் - மேனியமையும்; நீர் நிலத்து -ஈரம் பொருந்திய நிலத்திலுள்ள, புல்லினான் -புல்லினை மேய்ந்து, காலேயம் - ஆனிரைகள்,இன்புறூஉம் - இன்புறும்; நெல்லின் அரிசியான் -நெல்லரிசிச் சோற்றினால், கீழ் எல்லாம் -கீழ்மக்களெல்லாரும், இன்புறூஉம் - இன்புறுவர்; மேல்-மேன்மக்கள், தத்தம் - தங்கள் தங்கள் தகுதிக் கேற்ற, வரிசையான் - மதிப்புச் செயல்களால், இன்புறூஉம், இன்புறுவர். கருத்து: புலி ஊன் உண்டு இன்புறும்; ஆன் புல்லுண்டு இன்புறும்; கீழோர் சோறுண்டு இன்புறுவர்; மேலோர் மதிப்புணர்ந்து இன்புறுவர். விளக்கவுரை: ‘நிறம்பெறூஉ' மென்னுங் குறிப்புக் கீழோர் விலங்கோடொத்து உடம்பையே வளர்ப்ப ரென்ப துணர்த்தும்; ‘வாயுணர்வின் மாக்கள்'என்றார் வள்ளுவரும். அரிசி, கீழ், மேல் : ஆகுபெயர். அளபெடைகள் : இன்னிசை நிறைப்ன.
பின்னவாம் பின்னதிர்க்குஞ் செய்வினை -என்பெறினும் முன்னவாம் முன்னம் அறிந்தார்கட் - கென்னும் அவாவாம் அடைந்தார்கட்கு உள்ளம் - தவாவாம் அவாவிலார் செய்யும் வினை. பொருள்: பின் - தொடங்கிய பின்பு, அதிர்க்கும் - நடுங்கச் செய்யும்; செய்வினை -செய்தொழில்கள்; பின்ன ஆம் - முன் ஆராயாதார்க்குப் பின் தோன்றுவனவாம்; என் பெறினும் - எப்பயனைப் பெறுவதானாலும், முன்னம் - தாடங்குவதற்கு முன்னமேயே, அறிந்தார்கட்கு - பின் வருவனவற்றை ஆராய்வார்க்கு, முன்ன ஆம் - அவை முன்தோன்றுவனவாம்; அடைந்தார்க்கு - ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு, உள்ளம் - அவர்கள் உள்ளம், என்னும் - எப்படியாயினும், அவா ஆம் - மேலு மேலும் அவாவுடையதாகும், அவா இலார் -எப்பொருளினும் பற்றில்லாத பெரியோர்கள்,செய்யும் வினை - செய்யும் அறச் செயல்கள், தவா ஆம் - கெடாவாம். கருத்து: ஒரு செயலைச் செய்யத் தொடங்குமுன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பங்கள் தாடங்கியபின் தெரியும்; ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கு முன்னமேயே தெரியும்; ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்கட்கு அதன்கண் எப்படியாயினும் பற்றுண்டாகும்; எப்பொருளினும் பற்றில்லாதவர்கள் செய்யுஞ் செயல்கள் ஒருபோதுங் கெடமாட்டா. விளக்கவுரை: எனவே, பற்றுள்ளவர்கள் செய்யும் அறச்செயல்கள் பயன்படா வென்பதாயிற்று. பின்ன, முன்ன வென்பன குறிப்புவினை முற்றுக்கள்.அவாவா மென்பதில் ஆம் செய்யுமென்னு முற்று; ஏனைய அசைகள். ‘என்னும் என்பது எப்படியாயினு மென்றற்கு; ‘போமினென வென்னு முரையீயான்'என்றார் சிந்தாமணியினும், தவா: பலவின் படர்க்கை எதிர்மறை வினைமுற்று; தவு ஆ : உகரங் கெட்டது சந்தி. அவா : முதனிலைத் தொழிற் பெயர்.
கைத்தில்லார் நல்லவர் கைத்துண்டாய்க் காப்பாரின் வைத்தாரின் நல்லர் வறியவர் - பைத்தெழுந்து வைதாரின் நல்லர் பொறுப்பவர் - செய்தாரின் நல்லர் சிதையா தவர். பொருள்: கைத்து உண்டாய் - செல்வம் உள்ளவராய், காப்பாரின் - அச் செல்வத்தை நுகராமற் சேர்த்துப் பாதுகாப்பவரைவிட, கைத்து இல்லார் - அச் செல்வமில்லாத மாந்தர், நல்லவர் - நல்லவரேயாவார்; வைத்தாரின் - அப்பொருளை வைத்திழப்பாரைவிட, வறியவர் நல்லர் - வறுமையுடையோர் நல்லராவர்; பைத்து எழுந்து - சினந்தெழுந்து, வைதாரின் - பிறரை வைதவர்களைவிட, பொறுப்பவர் - அவ் வைதலுரையைப் பொறுப்பவர்கள், நல்லர் - மிகவும் நல்லராவர்; செய்தாரின் -நன்மை செய்தவர்களைவிட, சிதையாதவர் - அந்நன்மையை மறவாதவர்கள், நல்லர் - மிகவும்நல்லராவார்கள். கருத்து: செல்வமிருந்தும் பயனடையாதவர்களைவிட அச் செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள்; செல்வத்தைச் சேர்த்து வைத்து இழப்பாரினும் வறியவர் மிக நல்லவர்;சினந்தெழுந்து வைதாரினும் அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர்; ஒரு நன்றி செய்தாரினும் அச் செய்நன்றியை மறவாதவர் மிக நல்லர். விளக்கவுரை: இன்னென்னும் ஐந்தனுருபுகள் எல்லைப்பொருளன. பைத்தல் - சினத்தல். செல்வத்தைத் தேடுவதனாலும் பாதுகாப்பதனாலுமான உழைப்புங் கவலையுமில்லாமையின், கைத்திலாரும் வறியவரும் நல்லராயினார். சினத்தலாலும் வைதலாலுமான தீமைகள் நிகழாமையானும் பொறுமைப் பழக்கம் விஞ்சுதலானும் பொறுப்பவரும், நன்று செய்தாரினும் அந்நன்றியை மறவாதவர்க்கு அவ்வுணர்ச்சி என்றும் உளத்திடை நிகழ்ந்து எண்ணத்தைத் தூய்மைப் படுத்துதலின் மறவாதவரும் நல்லராயினாரென்க. பை -பாம்பின் படம் ; பைத்தல் - படம் விரித்தல்;சினத்தல். பாம்பு சினத்தாற் படத்தை விரிக்குமென்க.
மகனுரைக்குந் தந்தை நலத்தை ஒருவன் முகனுரைக்கும் உள்நின்ற வேட்கை - அகல்நீர்ப் புலத்தியல்பு புக்கான் உரைக்கும்நிலத்தியல்பு வானம் உரைத்து விடும். பொருள்: மகன் - புதல்வன், தந்தை நலத்தை - தன் தந்தையின் நன்மையை, உரைக்கும் -தனது நல்லியல்பினாற் பிறர்க்கறி விப்பான்; ஒருவன் முகம் - ஒருவனது முகம், உள்நின்ற வேட்கை -நெஞ்சினுள் உள்ள விருப்பத்தை, உரைக்கும் -பிறர்க்குத் தனது குறிப்பினா லறிவிக்கும்; அகல் -அகன்ற, நீர்ப்புலத்து இயல்பு - நீரால் விளையும் வயலின் இயல்பை, புக்கான் உரைக்கும் - அந் நிலத்துக்குரியான் அறிவிப்பான்; நிலத்து இயல்பு -உலகத்தாரியல்பை, வானம் உரைத்துவிடும் - மழையின் நிலை அறிவித்து விடும். கருத்து: தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பினால் அறிவிப்பான்; ஒருவனது நெஞ்சிலுள்ள விருப்பத்தை அவன் முகக் குறிப்பே அறிவித்துவிடும்; வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்துவிடுவான்; நிலத்து மக்கள் இயல்பை அந்நிலத்துப் பெய்யு மழையின் நிலை அறிவித்துவிடும். விளக்கவுரை: முகன் : போலி. நிலக்கிழவன் அதன்கண் நாடோறுஞ் சென்று பார்ப்பவனாதலால், ‘புக்கான்' எனப்பட்டான். நிலத்தியல்பு - நிலத்து மக்களி னியல்பு. முகனுரைக்கும், வான முரைத்துவிடு மென்பன ‘கேட்குந போலவு' மென்பதனான் முடிக்க. ‘பிலத்தியல்பு' என்ற பாடத்துக்குப் பெரிய ஆழமுள்ள மடுவென்க. நிலம், வானம் : ஆகுபெயர்கள். நிலத்தியல்பு - மக்கள் நல்லோர் தீயோர் என்பது. மகனுரைக்குந் தந்தை நலத்தை - பழியின்மை மக்களாற் காண்க என்றனர் கீழும். நல்லோர் - பொருட்டே மழை பெய்யுமாதலின் வான முரைத்துவிடும் எனப்பட்டது.
பதிநன்று பல்லார் உறையின் ஒருவன் மதிநன்று மாசறக் கற்பின் - நுதிமருப்பின் ஏற்றான்வீ றெய்தும் இனநிரை தான்கொடுக்குஞ் சோற்றான்வீ றெய்துங் குடி. பொருள்: பல்லார் உறையின் - பலரும் நிறைந்து ஒத்து வாழ்வார்களானால், பதி நன்று - ஊர் நன்றாகும் ; மாசு அறக் கற்பின் - குற்றமறும்படி கற்பனாயின், ஒருவன் மதி நன்று - ஒருவனது அறிவு தெளிவுபெறும்; இனநிரை - ஆனிரைகள், நுதி மருப்பின் - கூரிய கொம்புகளையுடைய, ஏற்றான் - எருதுகளால், வீறு எய்தும் - சிறப்படையும்; தான் கொடுக்கும் - தான் ஏழைகட்குக் கொடுக்கும், சோற்றான் - உணவினால், குடி - தான் பிறந்த குடி, வீறு எய்தும் - பெருமையடையும். கருத்து: பலரும் நிறைந்து ஒத்து உறைவாரானால் ஊர் நன்றாம்; ஒருவன் ஐயந்திரிபறக் கற்பானானால் அவன் மதி நன்றாகும்; ஆனிரைகள் கூர்ங்கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருந்தலால் சிறப்படையும்; ஏழைகட்கு உணவளிப்பதனால் ஒருவனது குடி மேலோங்கும். விளக்கவுரை: பல்லாரென்றதை ஈண்டு முயற்சியு மெர்ற்றுமையுமுடைய நன்மக்கள் பல்லாரென்று கொள்க; அவர் அல்லாராயின் ஊர் நன்றாகாது சோம்பும். கல்வி கற்றற்குக் குற்றமாவன ஐயந் திரிபுகள்; ஏற்றுக்கு நுதிமருப்பென்று அடைவந்தமையின் ஏற்றான் வீறெய்து மென்றவிடத்து வீறு வெற்றியெனக் கொள்க. பின்வந்த வீறு சிறப்பெனப் பொருள்படும். சோற்றோடு உடையெனவுங் கொள்க.
ஊர்ந்தான் வகைய கலினமா - நேர்ந்தொருவன் ஆற்றல் வகைய வறஞ்செய்கை தொட்ட குளத்தனைய தூம்பின் அகலங்கள் தத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு. பொருள்: கலின மா - கடிவாளம் பூண்ட குதிரைகள்; ஊர்ந்தான் வகைய - அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக் கொத்தன; அறம் செய்கை - அறச்செயல்கள், நேர்ந்த ஒருவன் - இசைந்த ஒருவனது, ஆற்றல் வகைய - ஆற்றலைப் பொறுத்தன; தூம்பின் அகலங்கள் - நீர்க் காலின் பரப்புக்கள், தொட்ட - தோண்டப்பட்ட, குளத்து அனைய - குளங்களின் அளவின; வாழ்வார் வழக்கு - இல் வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள், தத்தம் வளத்து அனைய - அவரவரது வருவாய்ச் செழுமையை யொத்தன. கருத்து: குதிரைகள், சவாரிசெய்வானது திறத்துக் கொத்தன; ஒருவனுடைய அறச்செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன; நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச் செழிப்பை ஒத்தன. விளக்கவுரை: வகைய: தொழிற் பெயரடியாகப் பிறந்த குறிப்புவினைமுற்று. நேர்ந்த வென்னும் பெயரெச்சம் ஈறுதொக்கு நேர்ந்தென நின்றது. அனை - அத்தனை யென்பதன் மரூஉ வென்ப. குளங்களின் அளவுக்கேற்கவே நீர்செல்லும் நீர்க்கால்கள் அவற்றிற் கமைக்கப்பட்டிருக்கு மென்க. தூம்பு - நீர் வெளியே இழியும் நீர்க்கால்; மதகு, கலங்கல் முதலியனவுமாம். கலினம் - கடிவாளம். தொடுதல் - தோண்டுதல். தூம்பு - உட்டுளை.
ஊழியும் யாண்டெண்ணி யாத்தன யாமமும் நாழிகை யானே நடந்தன - தாழியாத் தெற்றென்றார் கண்ணே தெளிந்தனர்வெட்கென்றார் வெஞ்சொலா லின்புறு வார். பொருள்: ஊழியும் - ஊழிக்காலமும், யாண்டு எண்ணி - ஆண்டுகளா லெண்ணி யாத்தன - அளவு செய்யப்பட்டன; யாமமும் - யாமக்காலமும், நாழிகையானே - நாழிகைகளானே, நடந்தன - அளவு செய்யப்பட்டுக் கழிந்தன; தாழியா - காலந் தாழாமல், தெற்றென்றார் கண்ணே - தெளிந்தவரிடத்தில், தெளிந்தனர் - அறிவுடையா ரெல்லாம் ஐயந் தெளிந்தனர்; வெட்கென்றார் - அறிவிலாதார், வெம் சொலால் - பிறரைக் கொடுமை கூறும் செவ்விய சொற்களாலேயே, இன்புறுவார் - சொல்லிச் சொல்லி இன்புறுவார்கள். கருத்து: ஊழிகள் யாண்டுகளாற் கணக்கெண்ணி அளவு செய்யப்பட்டுக் கழிந்தன; யாமமும் நாழிகையால் வரையறுக்க பட்டுக் கழிந்தன; அறிஞர் தெளிந்தார்மாட்டுக் காலந்தாழாமல் ஐயந்தெளிந்தனர்; அறியாதார் பிறரை வெஞ்சொற் கூறி மகிழ்ந்தனர். விளக்கவுரை: ஊழிகளும் யாமங்களுமாகக் கணக்குச்செய்து காலம் விரைந்து கழிதலால் அறிஞர்கள் காலந்தாழாமல் தெளிந்தாரை நண்ணி ஐயந் தீர்ந்தனர்; காலத்தினருமை யறியாதார் பிறரை நிந்தைகூறி வீண்காலங் கழிப்பரென்பது அறிதற்குரியபொருள்; ‘வடுச்சொல் நயமிலார் வாய்த்தோன்றும்' - என்பர் முன்னும். தாழீயா தென்பது தாழாதென்க. ஈண்டது ஈறு தொகுத்தலாய் எச்சப்பொருள் பயந்து நின்றது; ‘நெடுநகரரசு துயிலீயாது' என்னும் பதிற்றுப்பத்திலும் உரையாசிரியர், துயிலீயா தென்பது துயிலா தென்னும் வினைத் திரிச்சொல் : துயிலாமலெனத் திரிக்க' வென்றுரைத்தமையுங் காண்க. ஆண்டு : யாண்டு என்பதன் மரூஉ. வெளிறு - அறிவின்மை. வெட்கு - வெளிறு. வெற்றென்றார்.
கற்றான் தளரின் எழுந்திருக்குங் கல்லாத பேதையான் வீழ்வானேல் கால்முரியும் எல்லாம் ஒருமைத்தான் செய்த கருவி தெரிவெண்ணின் பொய்யாவித் தாகி விடும். பொருள்: கற்றான் தளிரின் -கல்வியறிவுடையவன் ஒன்றில் இழுக்கலுறுவானாயின், எழுந்திருக்கும் - அவன் எப்படியாயினும் உய்தி பெறுவான்; கல்லாத பேதையான் - படியாத அறிவிலான், வீழ்வானேல் - இடையிற் றளருவானானால், கால் முரியும் - முயற்சி கெட்டு அழிவான்; ஒருமை - ஒரு பிறப்பில்; தான் செய்த எல்லாம் - தான் செய்தனவெல்லாம்; கருவி - மறுபிறப்பினுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; எண்ணின் -ஆராயுமிடத்து, தெரிவு - மெய்யுணர்வு, பொய்யா வித்து ஆகிவிடும் - வீடு பேற்றுக்குத் தவறாத ஏதுவாகும். கருத்து: கல்வியறிவுடையவன் தளர்வானேல் எப்படியானும் உய்வான்; கல்லாத பேதை தளர்வானேல் மீள உய்வறியாது வீழ்வான்; எவர்க்கும் ஒருபிறப்பின் செய்கைகள் மறுபிறப்பின் நுகர்ச்சிக்கு ஏதுக்களாம்; மெய்யுணர்வு வீடுபேற்றுக்குத் தவறாத ஏதுவாகும். விளக்கவுரை: கல்வியறிவினாற் கற்றான் மீள எழுவான்; அஃதில்லாமையாற் பேதை வீழ்வானென்பது கொள்க. காலென்றது ஈண்டு வீழாமைக்குரிய முயற்சி; வீழ்வா னென்னும் உருவக வினைக்கேற்பக் காலென்றும் முரியுமென்றும் முயற்சி கெடுதல் கூறப்பட்டதென்க. செய்தவெல்லா மென்று கூட்டிப் பொருளுரைத்துக் கொள்க. செய்த : பலவின் படர்க்கை இறந்தகால வினையாலணையும் பெயர். ஆகிவிடும் என்பன துணிவுப்பொருட்டு : பொய்யாவித்து : எச்சத் தொடராகவும், பண்புத்தொகையாகவும் பொருள் கொள்ளலாம்.
தேவ ரனையர் புலவருந் தேவர் தமரனையர் ஓரூர் உறைவார் - தமருள்ளும் பெற்றன்னர் பேணி வழிபடுவார் கற்றன்னர் கற்றாரைக் காத லவர். பொருள்: புலவரும் - கல்வியறிவுடைய புலவர்களும், தேவர் அனையர் - தேவருக்கு ஒப்பாவார்கள், ஓர் ஊர் உறைவார் - அப்புலவர்கள் உள்ள ஊரில் வாழ்பவர்கள்; தேவர் தமர் அனையர் -அத்தேவர்களின் உறவினருக்கு ஒப்பாவார்கள்; தமருள்ளும் - அவ்வாறுறைந்து உறவானாருள்ளும், பேணி வழிபடுவார் - அப் புலவரை விரும்பி வழிப்பட்டவர்கள், பெற்றன்னர் - அவர் தம் அருள் பெற்றாரை யொப்பர்; கற்றாரைக் காதலவர் -புலவரைக் காதலித் தொழுகுவார், கற்றன்னர் -அப்புலவரை யொப்பக் கற்றவரேயாவர். கருத்து: புலவர்கள் தேவரை யொப்பர்; அவரூரிலுறைவார் அவருறவினரையொப்பர்; அவருள்ளும் பேணி வழிபடுவார் அவருள் பெற்றாரை யொப்பர் ; காதலித் தொழுகுவார் அக் கற்றாரையே யொப்பர். விளக்கவுரை: புலவர் பண்படியாகப் பிறந்த பெயர்; தமர், பொருளடியாகப் பிறந்த பெயர். பேணி வழிபடுவார் பொதுவான மாந்தரெனவும், காதலவர் சிறப்பான மாணாக்க ரெனவுங் கொள்க. பெற்றன்னர் கற்றன்னர் என்பன பெற்றாலன்னர் கற்றாலன்னரென விரியும். கற்றன்னர் கற்றாரைக் காதலவர் என முன்னும் வந்தது. காதலவர்: ஈறு திரிந்த குறிப்பு வினைப்பெயர். தமருள்ளும் -உம்மை : உயர்வு சிறப்பு.
தூர்ந்தொழியும் பொய்பிறந்த போழ்தே மருத்துவன் சொல்கென்ற போழ்தே பிணியுரைக்கும் - நல்லார் விடுகென்ற போழ்தே விடுக உரியான் தருகெனின் தாயம் வகுத்து. பொருள்: பொய் பிறந்தபோழ்தே - நட்பினர்க்கும் பொய் யுண்டான போதே, தூர்ந்து ஒழியும் - நட்புக்கெடும்; மருத்துவன் - மருந்து கொடுப்போன், சொல்க என்ற போழ்தே - சொல் என்று சொன்னபோதே, பிணி உரைக்கும் - நோயாளன் பிணியை யுரைப்பான்; நல்லார் - பெரியார், விடுக என்ற போழ்தே - ஒரு செயலை விடுக வென்ற பொழுதே, விடுக - அச் செயலை விட்டிடுக; உரியான் - ஒரு பொருட்குரியான், தருக எனின் - கொடுவென்றால், தாயம் - அவன் பாகத்தை, வகுத்து-பங்கிட்டுக் கொடுத்து விடுக. கருத்து: பொய் பிறந்த போதே நட்புக் கெடும்; மருத்துவன் சொல்லென்றபோதே பிணியாளன் நோய் சொல்வான் ; பெரியார் ஒரு செயலை விடுகென்ற பொழுதே அற விட்டொழிக; உரியான் தருகென்ற பொழுதே அவன் பங்கை வகுத்துத் தந்து விடுக. விளக்கவுரை: ‘தூர்ந்தொழியு' மென்றது. உருவகவினை, ஏகாரம் : தேற்றம்; மருத்துவன் சொல்லென்றால் மட்டும் பிணியாளன் உண்மையைச் சொல்வானென்று கருத்துக்கொள்க. பிணியை அஃதுடையானென் றுரைப்பினுமாம், வகுத்தென்பதற்கும் விடுக வென்பது கூட்டுக. ‘அதற்குரியான் தாவெனில் தாயம் வகுத்' தென்பதும் பாடம். சொல்க முதலியவற்றில் அகரம் தொகுத்தல். தாயம் பங்கிட்டுத் தாரானாயின் வழக்குண்டாகும்; அதனாற் பொருள் குறைந்துபோம்; ஆதலால் ‘விடுக' என்றார். மருத்துவன் : பொருளடியாகப்பிறந்த பெயர் ; மருத்து + வ் + அன்; வ் : பெயரிடைநிலை. மருந்து - பொருள்: மருந்திழைத்துக் கூட்டிக் கொடுப்போன்; போழ்தே -ஏ : தேற்றம்.
நாக்கினறிப இனியதை - மூக்கினான் மோந்தறிப வெல்லா மலர்களும் நோக்குள்ளும் கண்ணினால் காண்ப அணியவற்றைத் தொக்கிருந்து எண்ணினான் எண்ணப் படும். பொருள்: இனியதை - சுவைக்கினியதை, நாக்கின் அறிப - நாவாற் சுவைத்தறிவார்கள்; எல்லா மலர்களும் - எல்லா மலர்களையும், மூக்கினான் - மூக்கினால், மோந்து அறிப - யாவரும் மோந்தறிவார்கள்; அணியவற்றை - காட்சிக்கு அழகான பொருள்களை, நோக்கு உள்ளும் - பார்வை யுண்டென்று கருதப்படும், கண்ணினால் காண்ப - கண்ணாற் பார்ப்பார்கள்; தொக்கு இருந்து -அறிஞர்கள் கூடியிருந்து, எண்ணினான் - அறிவினால், எண்ணப்படும் - உணர்ச்சிகள் ஆராயப்படும். கருத்து: சுவைக்கினியதை யாவரும் நாவினாற் சுவைத்தறிப; மலர்மணங்களை மூக்கினால் மோந்தறிப; அழகிய பொருள்களைக் கண்ணினாற் காண்ப; உணர்வருங் கருத்துக்களை அறிஞர் ஒன்று கூடியிருந்து அறிவானாராய்ப. விளக்கவுரை: காட்சிப் பொருள்களைக் கண் முதலிய ஐம்பொறிகளாலும், கருத்துப் பொருள்களை அறிவின் ஆராய்ச்சியாலும் மக்கள் தெரிந்து கொள்வர் என்பது கருத்து. இன்னென்னும் ஐந்தனுருபும், ஆனென்னும் மூன்ற னுருபுகளும் ஏதுவுங் கருவியுமாகும். நாப்பயன் முதலிய மூன்றுங் கூறினமையின் ஏனை மெய்ப்பயன் செவிப்பயன்களையுந் தழுவிக்கொள்க. தொக்கிருந்து தென்பதன் உண்மை அறியற்பாற்று. எண்ணப்படுமென்பதற்கு உணர்வுகள் அவாய்நிலையான் வருவிக்கப்படும். தொக்கிருந்து, இரு; பகுதிப்பொருள் விகுதி.
சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் தாவாத இல்லை வலிகளும் - மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். பொருள்: பிறந்த உயிரெல்லாம் -பிறந்த உயிர்களெல்லா வற்றுள்ளும், சாவாத இல்லை - இறவாதன இல்லை; வலிகளும் - வலிமைகளும், தாவாத இல்லை -கெடாதன இல்லை; மூவாது - எஞ்ஞான்றும் மூத்திடாமல், இளமை - இளமையை, இசைந்தாரும் இல்லை -நிலையாய்ப் பொருந்தினாரும் இல்லை; வளமையில் - செல்வத்தில், கேடின்றி - குறைதலில்லாமல், சென்றாரும் - எஞ்ஞான்றுஞ் செல்வராய் ஓங்கினவரும், இல் - இல்லை. கருத்து: உலகத்தில் இறவாத உயிர்களும் இல்லை; கெடாத வலிமைகளுமில்லை; மூவாத இளமைகளுமில்லை; குறையாத செல்வங்களுமில்லை. விளக்கவுரை: எனவே, உள்ளபோதே அறஞ்செய்க வென்பதாம். சாவாத, தாவாத என்பன பலவின் படர்க்கை வினையாலணையும் பெயர்கள். தா -கெடு. உயிரெல்லாம், வலிகளுமென்றவற்றிற்கு ஏழாவது விரித்துக்கொள்க. வலிகளென்பதை அறிவுவழி முதலான எல்லாவற்றுக்கும் உரைக்க. கேடென்றது, இங்கே குன்றுதல்: மூவாது - இது குச்சாரியை பெற்று ‘மூக்காது'எனவும் வரும். கேடு : முதனிலை திரிந்த தொழிற்பெயர்.
சொல்லான் அறிப வொருவனை - மெல்லென்ற நீரான் அறிப மடுவினை - யார்கண்ணும ஒப்புரவினான் அறிப சான்றாண்மை - மெய்க்கண் மகிழான் அறிப நறா. பொருள்: ஒருவனை - ஒருவனுடைய நன்மை தீமைகளை, சொல்லான் - அவன் கூறுஞ் சொற்களாலேயே,அறிப - அறிஞர்கள் அறிந்து கொள்வார்கள்; மடுவினை - மடுவின் மட்பொரு ளின்மையை, மெல்லென்ற- மென்மையான, நீரான் அறிப - நீரினா லறிவார்கள்; சான்றாண்மை - ஒருவனது பெருந்தகைமையை, யார்கண்ணும் - யாரிடத்தினுங் காட்டும், ஒப்புரவின் - ஒருபடியான நன்மைத் தன்மையினால்; அறிப - அறிவார்கள்; நறா -கட்குடியை, மெய்க்கண் -உடம்பின்கண், மகிழான் அறிப - களிப்புக் குறிகளானறிவார்கள். கருத்து: ஒருவன் நிலையை அறிஞர்கள் அவன் சொல்லினாலேயே அறிப; மடுவின் மண்ணினிமையை அதன் தெளி நீரினானறிப; பெருந்தன்மையை யார்மாட்டும் ஒப்பநடக்கும் நடுவுநிலைமையா னறிப; கட் குடியை மெய்க்களிப்பானறிப. விளக்கவுரை: மெல்லென்ற : ஒரு சொல்; அஃதீண்டுப் பண்புப் பொருண்மை குறித்தது; தெளிநீ ரென்பது கருத்து; தெளிநீரால்லாதது தடித்துக் குழம்பா யிருக்குமாதலி னென்க. மகிழ் -காரணவாகுபெயர். நறா - நறாக்குடியை யுணர்த்திற்று. உம்மை - முற்று.
நாவன்றோ நட்பறுக்குந் தேற்றமில் பேதை விடுமன்றோ வீங்கிப் பிணிப்பின் அவாஅப் படுமன்றோ பன்னூல்1வலையிற் கெடுமன்றோ மாறுள் நிறுக்குந் துணிபு. பொருள்: நா -பதறிப்பேசும் நாக்கு, நட்பு அறுக்கு மன்றோ -நேசத்தைக் கெடுக்குமன்றோ; வீங்கிப் பிணிப்பின் - வற்புறுத்துக் கட்டாயப்படுத்தினால், தேற்றம் இல் பேதை -தெளிவில்லாத அறிவிலி, விடுமன்றோ -நற்செய்கையையுங் கை விடுமன்றோ; பல நூல் வலையின்- பல அறிவு நூல்களென்னும் வலையினால், அவா - அதன்கண் அகப்பட்ட நன்மாணாக்கரது தீய அவா,படுமன்றோ - கெட்டொழியுமன்றோ; மாறுள் -பகைமைக்கண், நிறுக்கும் துணிபு - ஒருவன் வைக்குந்துணிவெண்ணத்தால், கெடுமன்றோ - அவன் விரைவிற் கெட்டுவிடுவானல்லனோ? கருத்து: பதறிய நாக்கினால் நட்புக் கெடும்; கட்டாயப் படுத்தினால் தெளிவில்லாத பேதை மக்கள் நற்செய்கைகளைக் கைவிடுப; நூல்களைப் பயிறலால்மாணாக்கர்க்கு அவாக்கெடும்; பகைமைக்கட் டுணிவு நிறுத்துதல் அங்ஙனம் நிறுத்துவானுக்கே கேடாம். விளக்கவுரை: வீங்கிப் பிணிப்பின், மிக்குக் கட்டாயப்படுத்தினால், மாணாக்கன் அறிவுநூல் வலையி னகப்படுத்தலால், அவன் அவாக் கெடுமென்க.அளபெடை செய்யுளிசை நிறைக்க வந்தது. அவா, மாறு :முதனிலைத் தொழிற்பெயர்கள். இனித் ‘தேற்றமில்......... பிணிப்பின்' என்பதற்குப் பேதை துனபுறுத்தி இறுகப் பிணிப்பின் கைப்பொருளைக் கைவிடுவான் எனவும் மிக்க நட்பினாற் கட்டின்பேதை நட்பை விடுவான் எனவும் பொருள் கொள்ளலாம். அவா......... வலையில் என்பதற்கு நன் மாணாக்கனது விருப்பம் பலநூல் வலையில் உட்படும் என்றுரைப்பாரும் உளர்.
கொடுப்பின் அசனங் கொடுக்க - விடுப்பின் உயிரிடை யீட்டை விடுக்க வெடுப்பிற் கிளையுட் கழிந்தார் எடுக்க கெடுப்பின் வெகுளி கெடுத்து விடல். பொருள்: கொடுப்பின் - ஒருவர்க்கு ஒன்று கொடுப்பதானால், அசனம் கொடுக்க -சோறுகொடுத் துண்பிக்க; விடுப்பின் - ஒன்றை விட்டுவிடுவதானால், உயிர் இடையீட்டை - உயிரைப்பற்றிய பற்றை, விடுக்க - விட்டுவிடுக; எடுப்பின் - ஒருவரைத் தாங்கி மேலுயர்த்துவதனால், கிளையுள் - தன் சுற்றத்தாருள், கழிந்தார் - வாழ்நலங்களற்று ஏழைகளாயுள்ளவர்களை, எடுக்க - தாங்கி மேலுயர்த்துக; கெடுப்பின் - ஒன்றைக் கெடுப்பதானால், வெகுளி - சினத்தை, கெடுத்துவிடல் -கெடுத்து விடுக. கருத்து: கொடுப்பதானால் ஏழைகட்கு உணவு கொடுக்க; விடுப்பதானாற் பற்றை விடுக்க; எடுப்பதானால் சுற்றத்தாருள் ஏழைகளை எடுக்க;கெடுப்பதானால் வெகுளியைக் கெடுக்க. விளக்கவுரை: அசனம் - வடசொல்; உணவு கொடுத்தல், உடம்பில் உயிரை நிலைப்பித்தலன்றி வேறு தீயவற்றிற்கு நேராய்ப் பயன்படுதலின்மையின், ‘அசனங் கொடுக்க' என்றார்; உயிரிடையீடு - உயிர்க்கண் பொருந்திய குற்றம்; அஃது பற்று. இடையீடு இங்கே குற்றங்குறித்தது. கெடுத்துவிடல்: அல்லீற்று வியங்கோள்.
நலனும் இளமையு நல்குரவின் கீழ்ச்சாம் குலனுங் குடிமையுங் கல்லாமைக் கீழ்ச்சாம் வளமில் குளத்தின்கீழ் நெற்சாம் பரமல்லாப் பண்டத்தின் கீழ்ச்சாம் பகடு. பொருள்: நலனும் - அழகும், இளமையும் - இளமையியல்பும், நல்குரவின்கீழ் - வறுமைக்கண், சாம் - மங்கும்; குலனும் - குலத்துயர்வும், குடிமையும் - குலத்தொழுக்கமும், கல்லாமைக் கீழ் -கல்லாமைக்கண், சாம் - கெடும்; வளம் இல் - நீர் வருவாயில்லாத, குளத்தின்கீழ் - ஏரியின்கீழ் விளையும், நெல் சாம் - நெற்பயிர் சாவியாம்; பரமல்லா -சுமத்தலாற்றாத, பண்டத்தின் கீழ் - சுமைப் பொருளின் கீழ்த் தாங்கும், பகடு சாம் - எருதுகள்சாகும். கருத்து: அழகும் இளமையும் வறுமையிற் கெடும்; குலத்துயர்வுங் குலத்தொழுக்கமுங் கல்லாமையிற் கெடும்; வருவாயற்ற ஏரியின்கீழ் விளையும் நெற்பயிர் சாவியாம்; சுமத்தலாற்றாத சுமையைத் தாங்கும் எருதுகள் சாகும். விளக்கவுரை: ‘குடிமை' உயர் குடிப்பிறந்தாரது ஒழுக்கத்தை யுணர்த்துதல், ‘குடிமை -குடிசெய்தற் றன்மையென்றும் ஆசிரியர் பரிமேலழகர் திருக்குறளுரையி லுரைக்குமாற்றானறிக. வளம் - ஈண்டு வருவாய். பரமல்லா - சுமக்கலாற்றாத வென்க; பரமல்லாப் பண்டம் - சுமக்குமளவிற்கு விஞ்சிய பண்டம். கீழ் முதலிரண்டும் ஏழாம் வேற்றுமை இடப்பொருளன. சாகுமென்னுஞ் செய்யுமென் முற்று, ஈற்றயல் மெய்யொடுங் கெட்டுச் சாமென நின்றது. பகடு -வண்டியிழுக்கும் எருது.
நல்லார்க்குந் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்குந் தம்மூரென் றூரில்லை - யல்லாக் கடைகட்குந் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கும் எவ்வூரு மூர். பொருள்: நல்லார்க்கும் -கல்வியறிவில் நல்லார்க்கும், தம் ஊர் என்று -தமக்குரிய ஊர் என்று, ஊரில்லை-ஓரூருமில்லை, எல்லாம் அவரூரேயாம்; நல் நெறி - தவநெறியில், செல்வார்க்கும் ஒழுகும் அருந்தவத் தோர்க்கும்,தம் ஊரென்று - தமக்குரிய ஊரென்று, ஊர் இல்லை - ஓர் ஊர் இல்லை; அல்லா - மேலோரல்லாத, கடைகட்கும் - கீழ்மக்களுக்கும், தம் ஊரென்று - தமக்குரிய ஊரென்று, ஊர் இல்லை - ஓரூருமில்லை; தம் கைத்து - தமது கையில், உடையார்க்கும் - பொருளைடையவர்க்கும், எவ்வூரும் ஊர் - எவ்வூரும் தம்மூரே யாம். கருத்து: கற்றார்க்கும் எவ்வூருந் தம்மூர்; தவத்தோர்க்கும் எவ்வூருந் தம்மூர்; கீழ்மக்கட்கும் எவ்வூருந் தம்மூர்; தங்கையிற் பொருளுடையார்க்கும் எவ்வூருந் தம்மூர். விளக்கவுரை: நல்லார், மிக்கவர்; ஆவது கல்வி மிக்காரென்பது. ஊரில்லை யென்றது, எவ்வூரும் அவர்க்குத் தம்மூராகப் பயன்படுமென்றது. கடை :பண்பாகு பெயர் கையகத்து என்பது கைத்தென நின்றது. கற்றோரையும் தவத்தோரையும் எவரும் வழிபட்டு ஓம்புவாராதலினாலும், பொருளுடையான் தனது பொருளால் யாண்டும் எதையும் பெறவல்லானாதலினாலும், கீழ்மக்கட்குத் தம்மூரின் கண்ணும் மதிப்பின்மையானும் இவர்கட்கு எவ்வூருந் தம்மூராயிற்று.
கல்லா ஒருவர்க்குத் தம்வாயிற் சொற்கூற்றம் மெல்லிலை வாழைக்குத் தானீன்ற காய்கூற்றம் அல்லவை செய்வார்க்கு அறங்கூற்றம் கூற்றமே இல்லத்துத் தீங்கொழுகு வாள். பொருள்: கல்லா ஒருவர்க்கு - கல்வியறிவில்லாத ஒருவருக்கு, தம் வாயின் சொல் - தமது வாயிலிருந்து வரும் சொல்லே, கூற்றம் -கூற்றுவனாகும்; மெல் இலை - மெல்லிய இலைகளையுடைய, வாழைக்கு - வாழை மரத்துக்கு, தான் ஈன்ற காய் - தான் வெளிவிட்ட குலையே, கூற்றம் - கூற்றுவனாகும்; அல்லவை செய்வார்க்கு - தீயவை செய்யும் மக்கட்கு, அறம் கூற்றம் - அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்து - வீட்டிலிருந்து கொண்டு, தீங்கு ஒழுகுவாள் - கற்புக் கேடாக மறைவாகயொழுகும் மனைவி, கூற்றமே - தன்னைக் கொண்ட கணவனுக்குக் கூற்றுவனே யாவாள். கருத்து: கல்வியறிவில்லாதவர்களுக்கு அவர் வாயிற் பிறங்கும் சொல்லே அவர்களுக்குக் கூற்றுவனாம்; வாழை மரத்துக்கு அஃதீனும் குலையே கூற்றுவனாம்; தீயவை செய்வார்க்கு அறக்கடவுளே கூற்றுவனாம்; இல்லத்திலிருந்து கொண்டு மறைவாய்க் கற்புக் கெடுபவள் கொண்டானுக்குக் கூற்றுவனேயாவாள், விளக்கவுரை: கல்லாப் பேதையர் பொய் குறளை முதலிய பொருத்தமில்லனவே பேசுவ ராதலால் அவையே அவர்க்குக் குற்றந் தரும். அல்லவை செய்தார்க்கு அறங் கூற்றமாதல், ‘அல் லவை செய்தார்க் கறங் கூற்றமா மென்னும் பல்லவையோர் சொல்லும் பழுதன்றே'இல்லிருந்து.
நீரான்வீ றெய்தும் விளைநிலம் நீர்வழங்கும் பண்டத்தாற் பாடெய்தும் பட்டினம் - கொண்டாளும் நாட்டான்வீ றெய்துவர் மன்னவர் கூத்தொருவன் ஆடலாற் பாடு பெறும். பொருள்: நீரான் - தண்ணீரின் பாய்ச்சலால், விளை நிலம் - பயிர் விளையும் நிலம், வீறு எய்தும் - செழிப்படையும்; நீர் வழங்கும் - கடல் கொடுக்கும், பண்டத்தால் - முத்து முதலிய பொருள்களால், பட்டினம் - நகரம், பாடு எய்தும் - பெருமை பெறும்; கொண்டு - தங்கீழ்க் கைப்பற்றி, ஆளும் - அரசாளும், நாட்டான் - நாட்டினால், மன்னவர் - அரசர், வீறு எய்துவர் - சிறப்படைவர்; ஒருவன் - வல்லானொருவன், ஆடலால் -ஆடுதலால், கூத்து - நாடகம், பாடு பெறும் - மேன்மையடையும். கருத்து: விளைநிலம் நீர்ப்பாய்ச்சலாற் செழிப்படையும்: பட்டினங்கள் கடல்வளத்தாற் பெருமையுறும்; மன்னர் தம் ஆளும் நாட்டினாற் சிறப்படைவர்; கூத்து வல்லானொருவன் ஆடலால் மேம்படும். விளக்கவுரை: பட்டினமென்னுங் குறிப்பானும் பண்டமென்னுங் குறிப்பானும் இரண்டாவது நீர், கடலையுணர்த்தும்; தலைமையா லுணர்த்திற் றெனினுமாம்; இடத்து நிகழ்பொருளை இடத்தின்மேலேற்றி ‘நீர் வழங்கு' மெனப்பட்டது. நாட்டானென்பது நாட்டிலுள்ள குடிமக்களின் நன்மையானென்க. ஆடலென்றது ஈண்டு நடிப்பு.
ஒன்றூக்கல் பெண்டிர் தொழில்நலம் - என்றும் நன்றூக்கல் அந்தணர் உள்ளம் பிறனாளும் நாடூக்கல் மன்னர் தொழில்நலம் கேடூக்கல் கேளிர் ஒரீஇ விடல். பொருள்: பெண்டிர் - பெண்மக்களின், தொழில் நலம் - தொழிற்சிறப்பு, என்றும் ஒன்று ஊக்கல் - எந்நாளும் தங்கணவரோடு ஒருமைப்பட்டு முயன்றொழுகலாம்; அந்தணர் உள்ளம் - அந்தணரின் கருத்து, என்றும் நன்று ஊக்கல் - இனிய எண்ணங்களையே முயன்று எழுவித்துக் கொண்டிருத்தலாம்; மன்னர் -அரசரின், தொழில் நலம் - தொழிற்சிறப்பு, பிறன் ஆளும் - வேற்றரசன் அரசாள்கின்ற, நாடு ஊக்கல் -நாட்டினைக் கொள்ள முயன்றொழுகலாம்; கேளிர் -சுற்றத்தாரை, ஒரீஇவிடல் - நீக்கி விடுதல், கேடு ஊக்கல் - கேட்டுக்கு முயறலாகும். கருத்து: கணவரோடு ஒருமைப்பட்டு நிற்க முயலுதலே பெண்டிர்க்கு நற்செய்கையாகும்; அற நினைவுகளை எழுப்பிக் கொண்டிருக்க முயலுதலே அந்தணருள்ளத்துக்குச் சிறப்பு;பிறன் ஆளும் நாட்டைப் பெற முயலுதலே மன்னர்க்கு உரிய செய்கையாம்; சுற்றத்தாரை நீக்கி வாழ்தல கேட்டுக்கு முயலுதலேயாகும். விளக்கவுரை: ஊக்கம் - முயறல். தொழில் நலம் - தொழிலின் நன்மை; ஒன்றென்றது ஈண்டு ஒன்றாங் கருத்துடையது. தன்னோடொப்பது இல்லாமையால் ‘ஒன்று' என்பது எண்ணலளவை யாகுபெயராய் ஒப்பற்ற ‘கற்பு' எனினும் பொருந்தும். ஒரீஇவிடல் : சொல்லிசையளபெடை. பெண்டு - பெண்மை. நன்று : அறத்தின்மேற்று. நாடூக்கல் -பெறவென்றொன்று அவாய் நிலையான் வருவித்துக்கொள்க. விடல் : தொழிற்பெயர்.என்றும் என்பதை நடுநிலைத் தீவகமாக்கி, என்றும் நன்றூக்கல் என்றுமியைக்க.
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால் தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன நள்ளாமை வேண்டுஞ் சிறியரோடு யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை. பொருள்: கடிய - அஞ்சற்பாலவான துன்பங்கள், வருதலால் - பின்பு வருதலால், கள்ளாமை வேண்டும் - பிறர்பொருளைத் திருடாமை வேண்டும்; தகுதியுடையன -தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களை,தள்ளாமை வேண்டும் - தவிராமை வேண்டும்; சிறியாரோடு - சிற்றினத்தாரோடு; நள்ளாமை வேண்டும் - நட்புக் கொள்ளாமை வேண்டும்; யார்மாட்டும் - யாரிடத்திலும், பகை - பகையை, கொள்ளாமை வேண்டும் - பாராட்டாமை வேண்டும். கருத்து: கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாதலால் என்றுந் திருடாமை வேண்டும்; தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்; சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும்; பகை கொள்ளாமை வேண்டும். விளக்கவுரை: கள்ளாமை முதலியன எதிர்மறைத் தொழிற் பெயர்கள். கடிய : பலவின் படர்க்கைக் குறிப்பு வினைப்பெயர். நள்ளாமை - நெருங்காமை; யார்மாட்டுமென்பது இளைத்தார் மாட்டு மென்றற்கு.
பெருக்குக நாட்டாரை நன்றின்பா லுய்த்துத் தருக்குக வொட்டாரைக் கால மறிந்தாங்கு அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக செல்லா இடத்துச் சினம். பொருள்: நட்டாரை - ஒருவன் தனக்கு நண்பரானாரை, நன்றின்பால் உய்த்து - நன்மையிற் செலுத்தி, பெருக்குக - நல் வாழ்வில் உயர்த்துக; ஒட்டாரை - பகைவர்களை, காலம் அறிந்து - உரிய காலந் தெரிந்து, தருக்குக - மறங்கொண்டு வெல்க; யார் மாட்டும் - யாவரகத்தும், உண்டி -அடுத்துண்ணுதலை, அருக்குக - சுருக்கிக்கொள்க; செல்லாவிடத்து-செல்லுந் தகுதியில்லா விடத்து, சினம் சுருக்குக - சினத்தைத் தணித்துக்கொள்க. கருத்து: நண்பரை நல்வாழ்விலுயர்த்துக; பகைவரைக் காலமறிந்து வலிசெய்க;யாவரகத்தும் அடுத்துண்ணுதலைக் குறைத்துக் கொள்க;செல்லத்தகாத இடத்திற் சினத்தைத் தணித்துக்கொள்க. விளக்கவுரை: நட்டார்க்கு நன்மை செய்யுநேரம் எப்போது வாய்க்குமென்று எவரும் எண்ணிக்கொண்டிருத்தலே நட்பின் சிறப்பென்றபடி. தருக்குதல்-வீரங்கொள்ளல்; வெற்றிக்கென்று கொள்க. யார்மாட்டுமென்றார், நெருங்கிய நண்பர் உறவினர் வீட்டிலும் என்றற்கு. உண்டி, ஈண்டுத் தொழிற்பெயர். செல்லாவிட மென்றதை, வலியார் மாட்டெனக் கொள்க. "செல்லாவிடத்துச் சினந்தீது"என்று நாயனார் அருளிச் செய்தலின் வலியார்மாட்டெனக் கூறும் உரையே உரையாதலறிக. ஆங்கு : அசை. அருக்குக : அருகு என்னும் பகுதி இரட்டித்துப் பிறவினையாயிற்று.
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய நாணின் வரைநிற்பர் நற்பெண்டிர் நட்டமைந்த தூணின்கண் நிற்குங் களிறு. பொருள்: மடிமை - முயற்சியின்மை, கெடுவார்கண் - கெடு வாரிடத்திலேயே, நிற்கும் -ஏற்படும்; கொடுமை - தீமை; பேணாமை செய்வார்கண் -மேலோர் விரும்பாமையைச் செய்வாரிடத்தில், நிற்கும் - உண்டாகும்; நற்பெண்டிர் - நன்மகளிர், பேணிய - விரும்பப்பட்ட, நாணின் வரை - நாணத்தின் எல்லையில், நிற்பர் - நிற்பார்கள்; களிறு -யானை, நட்டு அமைந்த - கீழே நட்டு வலிவமைந்த; தூணின் கண் - தூண் வலுவில்; நிற்கும் - நிலைபெறும். கருத்து: கெடுவாரிடத்திற் சோம்பலிருக்கும், சான்றோர் விரும்பாதவற்றைச் செய்வாரிடத்தில் தீமை யேற்படும்; நல்லியல்புடைய மகளிர் நாண் எல்லையில் நிற்பர்; யானை தூணெல்லையில் நிற்கும். விளக்கவுரை: கெடுவார் - பின்பு கெடுவார்; பேணாமையென்னும் பண்பு அஃதுடைய செயல்களின் மேனின்றது. பேணாமை - காக்கத்தக்க குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்க முதலியவற்றைக் காவாமையுமாம்; அற்றாயின், எதிர்மறைத் தொழிற்பெயர். நாணின் வரை நிற்பரென்பது நாண்கெடும் தொழில்களைச் செய்யாரென்றபடி. தூண் -கட்டுத்தறி. தான், ஆம் : அசைகள்.
மறையறிப வந்தண் புலவர் முறையொடு வென்றி யறிப அரசர்கள் - என்றும் வணங்கல அணிகலஞ் சான்றோர்க்கு அஃதன்றி அணங்கல் வணங்கின்று பெண். பொருள்: அந்தண் புலவர் -அந்தண்மையுடைய அறிஞர்கள், மறை அறிப -நான்மறைப் பொருளை அறிவார்கள்; அரசர்கள் மன்னர்கள், முறையோடு - நடுவு நிலைமையோடு, வென்றி -வெற்றியும்; அறிப - அறிவார்கள்; சான்றோர்க்கு -பெருந்தகைமை நிறைந்தவர்களுக்கு, என்றும் -எப்பொழுதும், வணங்கல் - வணங்குதலே, அணிகலம் -அணிகலம் போல்வதாம்; அஃது அன்றி -அதுவேயுமல்லாமல், அணங்கல் - கணவனையல்லாத வேறு தெய்வங்களை, பெண் வணங்கின்று - பெண்மக்கள் வணங்குதலில்லை. கருத்து: அந்தணர் மறை யறிப; அரசர் முறையும் வெற்றியும் அறிப; சான்றோர்க்கு அணிகலம், என்றும் வணக்கமுடையரா யிருத்தல்; பெண்டிர் கணவனையன்றி வேறு தெய்வந்தொழார். விளக்கவுரை: புலவருள் அந்தண்மையுடையோர் அந்தணரெனப் படுவராகலின்,‘அந்தண் புலவ' ரென்று விதந்துரைக்கப்பட்டது. முறை -குடிகளையாளும் அறமுறை; வென்றி - பகைப் புறங்காணும் வெற்றி, அஃதன்றி யென்றது, வாளா என்னுங்கருத்தில் வந்தது. அணங்கல் தொழிலாகு பெயராய்த் தெய்வத்தை யுணர்த்தாநின்றது; அணங்குதல் -விரும்புதல், அஞ்சுதல் ; அணங்கை எனவும் பாடம்.
பட்டாங்கே பட்டொழுகும் பண்புடையாள்காப்பினும் பெட்டாங் கொழுகும் பிணையிலி-முட்டினுஞ் சென்றாங்கே சென்றொழுகும் காமம் கரப்பினுங் கொன்றான்மேல் நிற்குங் கொலை. பொருள்: பண்பு உடையாள் - நல்லியல்புடைய பெண்,பட்டாங்கே - கற்புண்மைப்படியே, பட்டு - ஒத்து, ஒழுகும் - ஒழுகுவாள்; பிணை இலி - மனம் பொருந்துத லில்லாதவள், காப்பினும் - கணவன் காவல் செய்யினும், பெட்டாங்கு - தான் விரும்பியபடியே, ஒழுகும் - பிறரோடு மருவி யொழுகுவாள்; காமம் -காமவியல்பு, முட்டினும் - இடையூறு உண்டாயினும், சென்றாங்கே - முன்பு சென்றபடியே, சென்று ஒழுகும்-பின்புஞ் சென்று நிகழும்; கொலை-கொலைப்பழி, கரப்பினும் - எவ்வளவு மறைத்தாலும், கொன்றான்மேல் - கொலை செய்தவன் மேலேயே, நிற்கும் - நிலைபெறும். கருத்து: நல்ல பெண் காவலில்லாவிடினும் கற்பொழுக்கத்தையே மேற்கொண்டொழுகுவள்; நற்பண்பில்லாதவள் எத்தனை காவல் செய்யினுந் தான் விரும்பியவாறே பிறரைக் காதலித் தொழுகுவாள்; காமவியல்பு எவ்வளவு இடையூறுகள் நேர்ந்தாலும் முன் நிகழ்ந்தபடியே நிகழும்; கொலைப்பழி எவ்வளவு மறைப்பினும் கொன்றான் மேலேயே வெளிப்படும். விளக்கவுரை: பட்டாங்கு - இயல்பு; ஈண்டுக் கற்பியல்பு, பண்பு, காதலெனல் பொருந்தும் : பிணையிலிக்குக் காப்பினுமென வந்தமையின். பண்புடை யாளுக்குக் காவாவிடினுமென்றொன்று வருவித்துக் கொள்க. ஆங்கு: வினையெச்சப் பொருட்டு, உடையான்றொழிலை உடைமைமே லேற்றிக் காமமெனக் கூறப்பட்டது. கொலை : ஆகுபெயர்.
வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட் கயம்பெருகிற் பாவம் பெரிது. பொருள்:வன்கண் பெருகின் - அஞ்சாமை மிகுந்தால்; வலி பெருகும் - வலிமையும் ஒருவனுக்கு மிகும்; பால் மொழியார் - பால்போலும் இனிய சொல்லையுடைய மனைவியர்பால், இன்கண் -இனிய கண்ணோட்டம், பெருகின் - பெருகுமானால், இனம் பெருகும் - சுற்றத்தார் பெருகுவர்; சீர் சான்ற -சிறப்பு மிக்க, மென்கண் - அருட்டன்மை, பெருகின் -மிகுமானால், அறம் பெருகும் - அறவினைகள் மிகும்; வன்கண் - கொடுமையையுடைய காயம் பெருகின் - கீழ் மைத்தனம் மிகுமானால், பாவம் பெரிது - தீ வினைச்செயல் மிகுதியாம். கருத்து: அஞ்சாமை மிகுந்தால்,வலிமை மிகும்; மனையாள் மாட்டுக் கண்ணோட்டம் மிகுந்தால் இனம் பெருகும்; அருளிரக்கம மிகுந்தால் அறம் மிகும்; கீழ்மைக்குணம் மிகுந்தால் தீவினைமிகும். விளக்கவுரை: வன்கண் அஞ்சாமைப்பொருட்டாதல் : ‘வன்கட்கானவன் என்னும் ஐங்குறுநூற்றினாற் கொள்க. அஞ்சாமையென்னும் உள்ள வலிமை உடம்புக்கு வலிமையைத் தருதலின், இங்ஙனம் கூறப்பட்டது. கண் -கண்ணோட்டம்; கண்ணோட்டத்தினும் அருட்டன்மை யென்பது இரக்கவியல்பு மிக்கதாகலின், அதனை‘மென்கண்' என வியந்தார். பெரிதென்றதை ஆக்கவினை கொடுத்து வினைப்படுத்திக் கொள்க. இன்கண், மென்கண் என்பவற்றில் ‘கண்' கருவியாகுபெயர்.
இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம் கிளைஞரில் போழ்திற் சினங்குற்றம் குற்றந் தமரல்லார்கையகத் தூண். பொருள்: இளமைப் பருவத்து - இளம் பருவத்தில்,கல்லாமை குற்றம் - கல்லாதொழிதல் பிழையாம்;வளம் இலா - பொருள் வருவாய் இல்லாத, பாழ்தத்து -காலத்தில், வள்ளன்மை - ஈகையியல்பு, குற்றம் -பிழையாம்; கிளைஞர் இல்போழ்தில் - உறவினர்கள் துணையில்லாத காலத்தில், சினம் குற்றம் -பிறரோடு, சினத்தல் குற்றமாம்; தமர் அல்லார் -தமக்கு உள்ளன்பில்லாதாரது, கையகத்து - இடத்தில்,ஊண் - உண்ணுதல், குற்றம் - பிழையாம். கருத்து: இளம் பருவத்திற் கல்லாமை குற்றம்; பொருளில்லாத காலத்தில் ஈதல் குற்றம்; உறவினர் துணையில்லாத காலத்தில் பிறரைச் சினத்தல் குற்றம்; உள்ளன்பிலார்மாட்டு உண்ணுதல், குற்றம். விளக்கவுரை: ‘வளமில் குள' மென்றாற்போல ஈண்டு வளமென்பது வருவாயைக் குறித்தமை கண்டுகொள்க. தமர் உள்ளங் கலத்தாற் றம்மவரென்க. ‘தமர் தற்றப்பி னதுநோன்றல்லும்' என்னும் புறநானூற் றுரையில், தாமரைத் தனக்குச் சிறந்தோரென் றுரைக்கப்பட்டது மிது. கையகத்து : வேற்றுமை மேற் சாரியை நின்றது. ஊண் : முதனீண்ட முதனிலைத் தொழிற்பெயர். போழ்தத்து : அத்துச்சாரியை ஏழாம் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வந்தது.
எல்லா விடத்துங் கொலைதீது மக்களைக் கல்லா வளர விடல்தீது - நல்லார் நலந்தீது நாணற்று நிற்பிற் குலந்தீது கொள்கை யழிந்தக் கடை. பொருள்: எல்லா இடத்தும் - எவ்வகையினும், கொலைதீது - ஓருயிரைக் கொலை செய்தல் தீதாகும்;மக்களை - புதல்வரையும் புதல்வியரையும் கல்லா வளரவிடல் - கல்வி கல்லாமல் வளரும்படி விடுதல், தீது - தீதாம்; நாண் அற்று நிற்பின் - நாணம் இன்றி ஒழுகினால், நல்லார் நலம் தீது - பெண்களின் அழகு தீதாகும், கொள்கை - தக்க கொள்கைகள்,அழிந்தக் கடை - அழிந்தவிடத்து; குலம் தீது - குலம் தீதாகும். கருத்து: எவ்வகையாலுங் கொலை தீதாம்; மக்களைக் கல்லாமல் வரவிடுதல் தீதாம்; நாணில்லையாயின் மகளிரின் அழகு தீதாம்; கொள்கை அழிந்துவிட்டால் குலம் தீதாம். விளக்கவுரை: எல்லாவிடத்து மென்றது, வேள்வி முதலான இடங்களினுமென்க. கல்லா - வினையெச்சவீறு தொகுத்தலாய் நின்றது. நிற்பின் : உறைதலின் மேற்று. கடை : வினையெச்சப் பொருளது. அழிந்தக்கடை- அழிந்தால்.
ஆசாரம் என்பது கல்வி அறஞ்சேர்ந்து போகம் உடைமை பொருளாட்சி யார்கண்ணுங் கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்தாள்வான் உண்ணாட்டம் இன்மையும் இல். பொருள்: ஆசாரம் என்பது - நல்லொழுக்கம் என்பது,கல்வி - கல்வியறிவின் பயனாகும்; அறம் சேர்ந்த -அறவினைகளோடு சேர்ந்த, போகம் உடைமை - இன்பநுகர்ச்சி, பொருள் ஆட்சி - செல்வத்தைக் கையாளுதலின் பயனாகும்; யார் கண்ணும் -யாரிடத்திலும், கண்ணோட்டம் இன்மை -கண்ணோட்டம் இல்லாமை, முறைமை - நடுநிலையாக ஆளுமுறைமையாம்; தெரிந்து ஆள்வான் - பிறரோடு ஆராய்ந்து அரசாளுபவன், உள் நாட்டம் இன்மையும் -தன்னுள்ளத்தில் ஆராயாமையும், இல் - இல்லை. கருத்து: நல்லொழுக்கமென்பது கல்வியின் பயன்; அறஞ்செய்தலோடு இன்பத்தை நுகர்தலென்பது செல்வத்தை முறை யாக ஆளுதலின் பயன்; யாரிடத்தினுங் கண்ணோட்டமில்லாமை நடுவு நிலையோடு அரசாளுமுறையாம்; தன்னுளத்தேயுந் தனியாக ஆராய்வோன் தெரிந்து அரசாளு மியல்பினன். விளக்கவுரை: தெரிந்தாள்வானென்றது, அமைச்சர் முதலாயினாரோடுந் தெரிந்தாளுதல். உள்நாட்டம் - தனக்குள் ஆராய்ச்சி; என்றது, அரசன் வெறுங் கேள்வியறிவினானேயே செய்வானல்லன், அதனைத் தன்னுள்ளும் வைத்துத் தனியே ஆராய்ந்துஞ் செய்வனென்பது. நாட்டம் : தொழிற்பெயர்.
கள்ளின் இடும்பை களியறியும் நீர்இடும்பை புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பிடும்பை பல்பெண்டிர் ஆள னறியும் கரப்பிடும்பை கள்வன் அறிந்து விடும். பொருள்: கள்ளின் இடும்பை - கள்ளைப் பெறாமையால் வருந் துன்பத்தை, களி அறியும் - கள்ளுண்டு களிப்பவன் அறிவான்; நீர் இடும்பை - நீரைப் பெறாமையால் வருந்துன்பத்தை, புள்ளினுள் -பறவைகளுள், ஓங்கல் அறியும் - வானம்பாடிப் பறவை யறியும்; நிரப்பு இடும்பை - பொருளில்லாமையால்வரும் வறுமைத் துன்பத்தை, பல் பெண்டிராளன் -மனைவியர் பலரையுடைய கணவன், அறியும் - அறிவான்; கரப்பு இடும்பை - ஒன்றை ஓரிடத்து ஒளித்து வைப்பதன் துன்பத்தை, கள்வன் - திருடன், அறிந்துவிடும் - அறிந்து கொள்வான். கருத்து: கள் பெறாமையா லுண்டாகுந் துன்பத்தைக் கட்குடியன் அறிவான்; நீர் பெறாமையா லுண்டாகுந் துன்பத்தை வானம்பாடிப்பறவை அறியும், பொருளில்லாமையா லுண்டாகும் வறுமைத் துன்பத்தை மனைவியர் பலரை யுடையவன் அறிவான்; ஒன்றை ஒளித்து வைப்பதிலுள்ள துன்பத்தைத் திருடனறிவான். விளக்கவுரை: களி : வினைமுதற் பொருண்மையாகிய இகரம்புணர்ந்து கெட்டதென்க. புள்ளினுள் ஓங்கல்,வானம்பாடிப் புள். அது வானினோங்கிப் பறத்தலால்வந்த பெயராதலின் ஈண்டு ஓங்கல் தொழிலாகு பெயர். வானம்பாடிப்புள் மழைத்துளியைப் பருகி உயிர்வாழுமியல்பினதாகலின், அத் துளி கிடைக்கப் பெறாவிடத்து அது மிகவும் வருந்தும். இவ்வுண்மை "தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி" என்னும் பட்டினப்பாலை யடிகளாலும, "வானம்பாடி வறங்களைந் தானா தழிதுளி தலைஇய புறவிற் காண்வர" என்னும் ஐங்குறுநூற் றடிகளானும் பெறப்படும். நிரப்பும் கரப்பும் தொழிற்பெயர். நிரப்பு - குறைபாடு.
வடுச்சொல் நயமில்லார் வாய்த்தோன்றும் கற்றார்வாய்ச் சாயினுந் தோன்றா கரப்புச்சொல் - தீய பரப்புச்சொல் சான்றோர்வாய்த் தோன்றா கரப்புச்சொல் கீழ்கள்வாய்த் தோன்றி விடும். பொருள்: வடுச்சொல் - பழிச் சொற்கள், நயம் இல்லார் வாய் - அன்பில்லாதாரது வாயில், தோன்றும் - பிறக்கும்; கற்றார் வாய் -அறிவு நூல்களைக் கற்றவரது வாயில், கரப்புச் சொல் - வஞ்சனைப் பேச்சுக்கள், சாயினும் தோன்றா -அவர் கெடுவதாயினும் பிறவா; தீய பரப்புச் சொல் -தீயவற்றைப் பரப்புதலா லாகும் பேச்சுக்கள், சான்றோர்வாய் - மேன்மக்கள் வாயில், தோன்றா -தோன்றமாட்டா; கரப்புச்சொல் - ஒன்றனை மறைத்தற் சொற்கள், கீழ்கள் வாய் -கீழ்மக்களது வாயில், தோன்றி விடும் - பிறந்துவிடும். கருத்து: அன்பில்லாதார் வாயிற் பழிச்சொற்கள் தோன்றும்; காற்றார் வாயில்வஞ்சனைச் சொற்கள் தோன்றா; சான்றோர் வாயில் தீயவற்றைப் பரப்புஞ் சொற்கள் தோன்றா; கீழ்மக்கள் வாயில் ஒளிப்புச் சொல் தோன்றிவிடும். விளக்கவுரை: வடு - பழி. சாயினும் - இறப்பினுமாம். தீய பரப்புஞ் சொல். கோட்சொல்;சான்றோர் - நல்லியல்புகள் நிறைந்தோர். கீழ்கள் - இழிவான வியல்புடையவர்கள்; இது பண்பாகுபெயர். நயம் - நட்புக் குணம், அன்பு; நண்பாற்றா ராகி நயமில செய்வார்என்புழிக் காண்க. பரப்புச் சொல் - இல்லாத பழிச்சொற்களை ஏற்றிப் பலரறியக் கூறுதல்.
வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன் கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார் பேதையார் முன்னர்ப் படின். பொருள்: வால் இழையார் முன்னர் - ஒள்ளிய நகைகளை யணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன், வனப்பு இல்லார் - அழகில்லாத ஆடவர், பாடு இலர் - பெருமை இலர்; சாலும் - கல்வி கேள்விகளான் நிறைந்த, அவைப்படின் - அவையிற் புகுந்தால், கல்லாதான் -கல்வியறிவில்லாதவன், பாடு இலன் -பெருமையில்லாதவனாவன்; கற்றான் ஒருவனும் - கற்றறிவுடையானொருவனும், கல்லாதார்- படியாதவரிடஞ் சேர்ந்தால், பாடு இலனே -பெருமை இலனாவன்; பேதையார் முன்னர்ப் படின் -அறிவிலார்பாற் சேரினும்; பாடு இலனே - அறிஞன் பெருமையிலனேயாவன்.கருத்து: அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமையடைதலில்லை; கற்றா ரவையிற் கல்லாதான் பெருமை யடைதலில்லை; கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதலில்லை; அறிவிலார் முன்பும்அறிஞர் பெருமை யடைதலில்லை.விளக்கவுரை: வாலிழையா ரென்னுங் குறிப்பினால்வனப்பிலார் ஆடவராயினார். உம்மை இறந்ததுதழீஇய எச்சம். ஏகாரம் இரக்கப்பொருளது, பேதையார் முன்னர்ப் படின் - உம்மை வருவித்துப் பொருளுரைக்கப்பட்டது. முன்னர்ப்படி னென்றதை முன்னுங் கூட்டி நான்காகக் கொள்க; செய்யு ளொவ்வொன்றும் நாற்பொருளுடையதாகலின்.
மாசு படினும் மணிதன்சீர் குன்றாதாம் பூசிக் கொளினும் இரும்பின்கண் மாசொட்டும் பாசத்துள் இட்டு விளக்கினுங் கீழ்தன்னை மாசுடைமை காட்டி விடும். பொருள்: மாசு படினும் - அழுக்குப் பட்டாலும் மணி தன் சீர் குன்றாது - நன்மணி தன் பெருமை குறையாது; பூசிக்கொளினும் - கழுவி எடுத்துக்கொண்டாலும், இரும்பின்கண் -இரும்பினிடத்தில், மாசு ஒட்டும் - அழுக்குச் சேரும்; கீழ்தன்னை - கீழ்மகனை; பாசத்துள் இடினும் -தளையிலிட்டு ஒறுத்தாலும்- கீழ்மை யியல்பையே காட்டி விடுவான்;விளக்கினும் - அல்லது அறிவு கூறி விளக்கினாலும், மாசு உடைமை காட்டிவிடும் - கீழ்மை யியல்பையே காட்டுவிடுவான். கருத்து: அழுக்குச் சேர்ந்தாலும் நன் மணியின் பெருமை குறையாது; கழுவி எடுத்துக்கொண்டாலும் இரும்பின்கண் மாசுண்டாகும்; கீழ் மக்களை ஒறுத்தாலும் அவர்கள் தங் கீழ்மைத் தன்மையையே காட்டுவார்கள்; அன்றி அறிவுகூறி விளக்கினாலும் அக் கீழ்மையையே காட்டுவார்கள். விளக்கவுரை: மணிக்குச் சீரென்றது ஒளி; இரும்புக்கு மாசென்றது துரு. ஆம் : அசை; பூசுதல், கழுவுதல்; வாய் பூசுதலென்பதிற் போல வென்க. பாசத்து ளிடினும் விளக்கினுமென இரண்டாய்ப் பிரித்துரைத்துக்கொள்க. அன்றி நான்மணிக்கடிகையில் ஒவ்வொரு செய்யுளினும் நந்நான்கு பொருள்களே சொல்ல வேண்டுமாயினும், ஒரோவொரு செய்யுளில் மூன்று பொருள்கள் காணப்படுதலை நலிந்து பொருள் கொள்ளாது, நூற்பெயர், மிகுதிபற்றி யமைந்ததெனவுங் கொள்ளலாம். கீழ்க்கு மாசென்றது அறியாமை. உம்மை : இழிவு சிறப்பு. உடைமை செயப்படு பொருள் குன்றாத குறிப்புத் தொழிற்பெயர்.
எண்ணொக்குஞ் சான்றோர் மரீஇயாரின்தீராமை புண்ணொக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணிய யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல் பாழொக்கும் பண்புடையாள் இல்லா மனை. பொருள்: மரீஇயாரின் - நெடுநாள் பழகினவரைப் போல, சான்றோர் - ஆன்றோர்களை;தீராமை - நீங்காமலிருத்தல், எண் ஒக்கும் -அறிவுடைமையை யொக்கும்; போற்றார் - தம்மைப் போற்றி இணங்காதவரோடு, உடன் உறைவு - உடனிருந்து வாழ்தல், புண் ஒக்கும் - புண்ணினை ஒக்கும்;நட்டார் - நட்பாயினார், கழறும் சொல் -இடித்துரைக்கும் வன்சொல், பண்ணிய நரம்புகளால்இசை கூட்டப்பட்ட; யாழ் ஒக்கும் - யாழிசையை ஒக்கும். பண்புடையாள் - மனை மாட்சிமையுடைய மனைவி, இல்லா மனை - இல்லாத வீடு, பாழ் ஒக்கும் -பாழ்மனையை ஒக்கும். கருத்து: சான்றோரை நீங்காதுறைதல் அறிவுடைமையாகும்; இணக்கமில்லாரோடு உடனுறைதல் புண்ணுக்கு நிகராகும் நட்புடையார் இடித்துரைக்குஞ் சொல் வலிதாயினும் அது யாழோசையைப் போலும் இனிமையுடையதாகும்; மனைமாட்சியுடைய மனையாளில்லாத மனை பாழ்மனையை யொக்கும். விளக்கவுரை: எண் - அறிவு;‘தொக்கிருந் தெண்ணினா னெண்ணப்படும்' என்று முன்வந்ததையும் கருதுக. ‘சான்றோர் மரீஇயா ரிற்றீராமை. யென்பதை. மருவி யமைந்தாரை நீங்காமையென்று பொருளுரைப்பினு மமையும்.‘அறியராத் தீராமை' எனவும் பாடம். கழறல். தவறு கண்டவிடத்து இடித்துரைத்தல். யாழ் -யாழினிசையையும். பாழ் - பாழ்மனையையும் உணர்த்தலால் அவை முறையே கருவியாகுபெயரும் பண்பாகுபெயருமாம். எண் : முதனிலைத் தொழில்பெயர்.
ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்து வாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத் தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும் உரன்சிறி தாயின் பகை. பொருள்: ஏரி சிறிதாயின் - குளம் சிறிதானால். நீர் ஊரும் - நீர் வழிந்து விடும். இல்லத்து - வீட்டில், வாரி சிறிதாயின் - வருமானங் குறைவானால், பெண் ஊரும் - மனையாள் நிலை கடந்து போவாள்; மேலைத் தவம் சிறிதாயின் -முற்பிறப்பின் நல்வினை குறைவானால், வினை ஊரும் -தீவினை பெருகும்; உரன் சிறிதாயின் - ஒருவன் வலிமை சிறிதானால், பகை ஊரும் - பகைவர் மேற்கொள்வர். கருத்து: ஏரி சிறிதானால் நீர் வழிந்து போய்விடும். வீட்டில் வருவாய் குறைவானால் மனையாள் வரம்பு கடந்து பேசுவள்; முன்னைத் தவம் சிறிதானால் தீவினை மிகுந்து வருத்தும்; வலிமை சிறிதானால் பகைவர் மேற்போந்து வென்றிடுவர். விளக்கவுரை: வாரி : தொழிலடியாகப் பிறந்த பெயர். இடையறா தொழுகுதலென்னும் பொருளால் வருவாய்க்காயிற்று. இ : வினைமுதற் பொருண்மை விகுதி. பகை : பண்பாகு பெயர். தவமென்னுங் குறிப்பால் வினையைத் தீவினையென் றுரைத்துக் கொள்க. மேலை : பண்படியாகப் பிறந்த பெயர்.
வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகுஞ் செழுங்கிளை செய்த பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த அருளினால் ஆகும் அறம். பொருள்: வசை - நிந்தனை, வைததனால் ஆகும் - தான் பிறரைவைததனால் ஒருவனுக்கு உண்டாகும், செழும்கிளை - மிக்க உறவு, வணக்கமது செய்ததனால் ஆகும் - எல்லார்க்கும் வணங்கி யொழுகினமையால் உண்டாகும்; போகம் - இன்பவாழ்க்கை, செய்த பொருளினால் ஆகும். தேடிப் பெருக்கிய பொருளினால் உண்டாகும்; அறம் - அறவினை, நெகிழ்ந்த அருளினால் ஆகும் - குழைந்த இரக்கத்தினால் உண்டாகும். கருத்து: பிறரை வைததனால் தமக்கு வசையுண்டாகும்; வணங்கி யொழுகுதலால் உறவினர் மிகுவர்; பொருளைத் தொகுத்ததனால் இன்ப வாழ்க்கை யுண்டாகும்; குழைந்த இரக்கத்தினால் அறவினை யுண்டாகும். விளக்கவுரை: ஏ : அசை; வணக்கமது, அது :பகுதிப்பொருள் விகுதி. செய்த வென்றது உண்டாக்குதலின் மேற்று; "செய்க பொருளை" என்னும் திருக்குறளுக்குப் பரிமேலழகருரைக்கும் உரை ஈண்டு நினைவு கூர்தற்குரியது : நெகிழ்ந்த அருள், இயற்கை நவிற்சி, கிளை : உவமையாகு பெயர்.
ஒருவ னறிவானும் எல்லாம் யாதொன்றும் ஒருவ னறியா தவனும் ஒருவன் குணன் அடங்கக் குற்றமு ளானும் ஒருவன் கணன் அடங்கக் கற்றானும் இல். பொருள்: எல்லாம் - எல்லாக் கலைகளையும்; அறிவான் ஒருவனும் இல் -தெரிந்தவனொருவனும் இல்லை; யாதொன்றும் - ஒரு சிறிதும், அறியாதவன் ஒருவனும் இல் -தெரியாதவனொருவனும், இல்லை; குணன் அடங்க - ஒரு நல்லியல்பும் இலதாக, குற்றம் உள்ளான் ஒருவனும் இல் - பிழையேயுள்ளவனொருவனும் இல்லை; கணன் அடங்க - அறியாமை சிறிதும் இலதாக, கற்றானும் இல் -கற்றறிந்தவனும் இல்லை. கருத்து: எல்லாம் அறிந்தவனும் இல்லை; ஒன்றும் அறியாதவனும் இல்லை; குற்றமே உள்ளவனும் இல்லை; அறியாமை இல்லாதவனும் இல்லை. விளக்கவுரை: பொருளுக்கேற்பச் செய்யுட்டொடரைப், பிரித்துரைத்துக்கொள்க.கணன் - சிறுமை; ஈண்டு அறியாமையென்னுஞ் சிறுமையென்க. குணனும் கணனும், போலி - யாதொன்றும் : இழிவுசிறப்பும்மை; ஏனைய உம்மைகள் எண்ணுப் பொருளன.
மனைக்கு விளக்கம் மடவார் மடவார் தமக்குத் தகைசால் புதல்வர் மனக்கினிய காதற் புதல்வர்க்குக் கல்வியே கல்விக்கும் ஓதிற் புகழ்சால் உணர்வு. பொருள்: மனைக்கு விளக்கம் -வீட்டுக்கு ஒளி, மடவார் - பெண்கள்; மடவார் தமக்கு - பெண்களுக்கு, தகை சால் புதல்வர் - நல்லியல்புகள் நிறைந்த மக்கள் ஒளி; மனக்கு இனிய - பெற்றோர் மனத்திற்கு இனிமை தரும், காதல் புதல்வர்க்கு -அன்பிற்குரிய மக்கட்கு, கல்வியே - கல்வியறிவே ஒளியாகும்; கல்விக்கும் - அக் கல்வியறிவிற்கும், ஓதின் - சொல்லுமிடத்து, புகழ் சால் - புகழ் நிறைந்த, உணர்வு - மெய்யுணர்வே ஒளியாகும். கருத்து: மனைக்கு விளக்கம் நன் மனைவி; நன் மனைவிக்கு விளக்கம் அறிவறிந்த மக்கள்; அம் மக்கட்கு விளக்கம் கல்வி; கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு. விளக்கவுரை: மனக்கு அத்துச் சாரியை தொக்கது. புகழ்சாலுணர்வு. மெய்யுணர் வென்க.முதலில் நின்ற விளக்கம் என்னுஞ் சொல் ஏனை மூன்றிடத்துங் கூட்டப்படுதலால் முதலிலைத் தீவகமாகும். இச்செய்யுள் மாலாதீவகம்.
இன்சொலான் ஆகுங் கிழமை இனிப்பிலா வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின் நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான் வீவிலா வீடாய் விடும். பொருள்: இன் சொலான் - இன்சொல்லால், கிழமை ஆகும் - ஒருவற்கு நட்புரிமை யுண்டாகும்; இனிப்பு இலா -இன்பமில்லாத, வன் சொலான் - வன்சொல்லினால்,வசை மனம் ஆகும் - கெட்ட கருத்து உண்டாகும்; மென்சொலின் - நயமான சொல்லை யுடைய, நாவினால் -நாக்கினால், அருள்மனம் ஆகும் - இரக்க எண்ணம் உண்டாகும்; அம் மனத்தான் - அவ்வருள் நெஞ்சத்தால், வீவு இலா - அழிவில்லாத, வீடு ஆய்விடும் - வீடு பேறுண்டாகும். கருத்து: இன்சொல்லால் நட்புரிமை யுண்டாகும்; வன்சொல்லாற் கெடுநினைவு உண்டாகும்; நயமான சொற்களால் அருள்நெஞ்சம் உண்டாகும்; அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறுண்டாகும். விளக்கவுரை: இன்சொல்லால் நல்லோர் நட்பும், அந்நட்புரிமையால் நல்லெண்ணமும், அவ்வெண்ணத்தால் அருள் நெஞ்சமும், அதனால் வீடுபேறு முண்டாகு மென்பது. வீவு : தொழிற்பெயர். ஆய்விடும் : ஒரு சொல். நா என்றதனால் அதற்கினமாகிய மெய்ம்மனங்களின் அடக்கத்தையும் கொள்க. நான்மணிக்கடிகை மூலமும் உரையும். முற்றிற்று.
பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல் திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து. பதவுரை: பொருகடல் வண்ணன் - கரையை மோதுங் கடலினது நிறத்தினையுடைய திருமால், மார்பில் புனை தார்போல் மார்பில் அணிந்த பூமாலைபோல, திருவில் - இந்திரவில்லை, விலங்கு ஊன்றி - குறுக்காக நிறுத்தி, தீம் பெயல் தாழ - இனிய பெயல் விழாநிற்க, வருதும் என மொழிந்தார் - வருவேம் என்று சொல்லிப் போன தலைவர், வானம் - மேகமானது, கரு இருந்து கருக்கொண்டிருந்து, ஆலிக்கும் போழ்து - துளிகளைச் சொரியாநிற்கையில், வாரார் கொல் - வாராரோ?என்றவாறு. பொருகடல் : வினைத்தொகை, புனைதார் என்க. திரு. - அழகு, விரும்பப்படுந்தன்மை. திருவில் என்பது இந்திரவில் என்னும் பொருட்டு; ‘திருவிற் கோலி' என ஐங்குறு நூற்றுள் வருவதுங் காண்க. விலங்கு - குறுக்கு : ‘விலங்ககன்ற வியன்மார்ப' என்பது புறம். ஆக என்னுஞ் சொல் வருவிக்கப்பட்டது நீலநிறமுடைய வானின்கண் பன்னிறமுடையத்தாய் வளைந்து தோன்றும் இந்திரவில் நீலநிறமுடைய மாயோனது மார்பிலணிந்த பன்னிறமலர்த் தாரினைப் போலும் என்க. தாழ : நிகழ்காலவினையெச்சம். வருதும் : தனித் தன்மைப் பன்மை வருவர் என்பது குறிப்பாற் போந்தது. .தீம்பெயல் வீழ என்றும் பாடம். .பொழுது என்றும் பாடம்.
கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் இன்னே வருவர் நமரென் றெழில்வானம் மின்னு மவர்தூ துரைத்து. பதவுரை: கொடுங்குழாய் - வளைந்த குழையையுடையாய், கடுங்கதிர் நல்கூர - ஞாயிற்றின் வெங்கதிர் மெலிவெய்த, கார் செல்வம் எய்த - கார்ப்பருவம் வளப்பத்தைப் பொருந்த, நெடுங்காடு - நெடிய காடெல்லாம், நேர்சினை ஈன - மிக்க அரும்புகளை யீன, எழில் வானம் - எழுச்சியையுடைய முகில், நமர் இன்னே வருவர் என்று நமது தலைவர் இப்பொழுதே வருவரென்று, அவர் தூது உரைத்து அவரது தூதாய் அறிவித்து, மின்னும் - மின்னாநின்றது, எ-று. கடுங்கதிர் : அன்மொழித் தொகையாய் ஞாயிற்றை உணர்த்துவதெனக் கோடலும் ஆம். ஞாயிற்றுக்கு வெங்கதிர் செல்வமெனப்படுதலின் அது குறைதலை நல்கூர்தல் என்றார். கார் : ஆகுபெயர் முதலடியிற் பொருள்முரண் காண்க. நேர் - ஈண்டு மிகுதி என்னும் பொருட்டு. கொடுமை - வளைவு. கொடுங்குழை காதணி. எழில் - அழகுமாம். செயவெனெச்சம் மூன்றும் மின்னும் என்னும் வினைகொண்டன. கொடுங்குழை என்றும் பாடம்
வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந் தயிர்மணற் றண்புறவி னாலி - புரள உருமிடி வான மிழிய வெழுமே நெருந லொருத்தி திறத்து. பதவுரை: வரிநிறப் பாதிரி வாட -வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாட, வளி போழ்ந்து - காற்றினால் ஊடறுக்கப் பட்டு, அயிர்மணல் - இளமணலையுடைய, தண் புறவின் -குளிர்ந்த காட்டிண்கண், ஆலி புரள - ஆலங்கட்டிகள் புரள, உரும் இடி வானம் - இடி இடிக்கும் முகில், நெருநல் - நேற்று முதலாக, ஒருத்தி திறத்து - தனித்திருக்கும் ஒருத்திமாட்டு, இழிய - மழைபெய்ய எழும் - எழா நின்றது, எ-று. பாதிரி : ஆகுபெயர்; அது வேனிற்பூ ஆகலின் வாட என்றார். வாட என்றமையின் அது முல்லைக்கண் மயங்காமை யோர்க, ‘புன்காற் பாதிரி வரிநிறத்திரள்வீ' என அகத்தினும் வரிநிறம் கூறப்பட்டமை காண்க. போழ்தல் - ஊடறுத்தல் ; ‘வளியிடை', ‘போழப்படா அமுயக்கு' என முப்பாலினும் இப்பொருட்டாயது இது. அயிர்மணல் - இளமணல், ஆவது நுண்மணல். ஆலி - நீர் திரண்ட கட்டி, உழிய எனப் பாடங்கொள்ளுதல் சிறப்பு; உழிதர என்க. நெருநல் எழும் எனமுடிக்க. நேற்றுமுதல் தனிமையால் வருந்துவாள் எனினும் அமையும் பாதிரி வாட ஆலி புரள வானம் வளி போழ்ந்து ஒருத்தி திறத்து எழும் என வினைமுடிவு செய்க. .இழிந்தெழுந் தோங்கும் என்றும் பாடம்.
ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக் காடுங் கடுக்கை கவின்பெறப்பூத்தன பாடுவண் டூதும் பருவம் பணைத்தோளி வாடும் பசலை மருந்து. பதவுரை: ஆடும் மகளிரின் - கூத்தாடும் மகளிர்போல மஞ்ஞை - மயில்கள், அணிகொள - அழகுபெற, காடும் - காடுகளும், கடுக்கை - கொன்றைகள், கவின்பெற - அழகுபெற, பூத்தன- மலர்ந்தன ; பாடு வண்டு - பாடுகின்ற வண்டுகளும், ஊதும் - அப் பூக்களை ஊதாநிற்கும்;பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடையாய், பருவம் - இப் பருவமானது, வாடும் பசலை - வாடுகின்ற நின் பசலைக்கு, மருந்து - மருந்தாகும், எ-று. மகளிரின் என்பதில் இன் உவமவுருபு. மஞ்ஞை கார்காலத்திற் களிப்புமிக்கு ஆடுதலின் ஆடுமகளிரை உவமை கூறினார். காடும் : உம்மை எச்சப்பொருளது. பூத்தன என்னும் சினைவினை முதலொடும் பொருந்திற்று ; காடுமுதலும் கடுக்கை சினையுமாகலின், வாடும் : காரண காரியப்பொருட்டு. .கவின்கொள என்றும் பாடம்.