செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழுமரம்போல் பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். குறிப்புரை: அழல் மண்டு போழ்தின்அடைந்தவர் கட்கெல்லாம் நிழல்மரம் போல் -வெயிலின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர்கட் கெல்லாம் ஒப்ப உதவும் நிழல்மரத்தைப்போல், நேர் ஒப்பத் தாங்கி -வறுமையின் அழல் மிகுந்த காலத்தில் தன்னைஅடைந்தவர் கட்கெல்லாம் சமம் பொருந்தக்காத்து, பழுமரம்போல் பல்லார் பயன் துயப்ப -பழுத்துள்ள மரம் பலரும் நுகரப் பழங்கள்உதவுதல்போல் பலரும் பயன் நுகரப் பொருள்உதவி, தான் வருந்தி வாழ்வதே நல் ஆண்மகற்குக்கடன் - தான் மேன்மேலும் பொருளீட்டும்முயற்சியால் உழைப்புடையனாய் வாழ்வதே உயர்ந்ததாளாண்மை மிக்க மகனுக்குக் கடமையாகும். கருத்து: மிக்க உழைபெடுத்துச்சுற்றந் தழுவி வாழ்தலே சிறந்த ஆண்மகனதுகடமையாகும். விளக்கம்: உவமைக்கும் பொருளுக்கும்ஏற்பன வருவித்துக் கொள்க. நேரொப்ப என்றார்,பயனும் வேறுபாடுங் கருதாது இடரொன்றே கருதித்தாங்கி யென்றற்கு. துய்ப்ப எனப் பிறர் வினையாற்கூறினார், அவர் அத்துணை உரிமையாய் நுகருமாறுபிறர்க்குரியனாய் வாழ்தல் வேண்டுமென்பது கருதி,"என்பும் உரியர் பிறர்க்கு" என்றார் பெருநாவலரும், வருந்தி வாழ்தலாவதுமுயற்சியின் உழைப்போடு வாழ்தல். .
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் அடுக்கன் மலைநாட! தற்சேர்ந் தவரை எடுக்கல மென்னார் பெரியோர்;- அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே, தன்காய் பொறுக்கலாக் கொம்பு. குறிப்புரை: அடுக்கல் மலை நாட -ஒன்றன் மேலொன்றடுக்கிய மலைகளையுடைய நாடனே,தன் சேர்ந்தவரை எடுக்கலம் என்னார் பெரியோர் -தம்மைச் சேர்ந்த சுற்றத்தவரை ஆதரியோம் என்றுகூறார் பெரியோர், அடுத்தடுத்து வன்காய் பல பலகாய்ப்பினும் இல்லையே தன் காய்பொறுக்கலாக்கொம்பு - மேலுமேலும் வலிமைமிக்ககாய்கள் பலப்பல காய்த்தாலும் தன்காய்களைத்தாங்கிக் கொள்ளாத கிளைகள் உலகத்தில்இல்லையே. கருத்து: தம்மைச் சேர்ந்தவரைஆதரித்து நிற்றலே பெருமையும் இயல்புமாகும். விளக்கம்: அடுக்கலாகிய மலையென்க.‘பெரியோர் தற்சேர்ந்தவரை' என்பது ஒருமை பன்மைமயக்கம். எடுக்கலம் என்பதற்கு நிலையுயர்த்தோம்என்பது பொருள். என்னாரென்பது என்று கைவிடார்என்னுங் கருத்துடையது. வலிய காய் என்றமையாற்பெரிய காய் என்பதும் பெறப்படும். உவமையிற்காய்க்கு வலிமை கூறியது, பொருளில்தற்சேர்ந்தவரின் இன்னல் மிகுதியுணர்த்தும். பலபல என்னும் அடுக்கு மிகுதிமேற்று, எடுத்துக்காட்டுவமை.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை;- நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு. குறிப்புரை: உலகு அறியத் தீரக்கலப்பினும் - யாவரும். அறியும்படி முழுதும் இணங்கிநேசங் கொண்டாலும், நில்லா சில பகல் ஆம்சிற்றினத்தார் கேண்மை - கீழோர் தொடர்புகள்நிலைபெறுதலில்லாதனவாய்ச் சில நாட்களேநிற்கும்ஒற்கம் இலாளர் தொடர்பு - பிறரைத்தாங்குதலில் தளர்ச்சியில்லாதவரது தொடர்பு,நிலைதிரியா நிற்கும் பெரியோர்நெறியடையநின்றனைத்து - இயல்பாகவே தமதுபெருந்தன்மையான நிலையில் திரியாமல் நிற்கும்பெரியோர் தமக்கொரு வீடுபேற்றுநெறி வந்துபொருந்த அதன்கண் அழுந்தநின்றொழுகினாற்போன்ற தன்மையுடையது. கருத்து: சுற்றத்தாரைத்தாங்குவோர் தொடர்பே உலகுக்கு இனிதாவது. விளக்கம்: நில்லாமுற்றெச்சம்.சிற்றினத்தா ரென்றது ஈண்டு, அண்டினாரைஆதரிக்கும் பெருந்தன்மையில்லாத கீழோரென்க.உலகில் அவரே பலராதலின் அவரது கேண்மையும்நில்லா வெனப் பன்மையாற் கூறப்பட்டது. பிறரைஆதரிக்கும் வாய்ப்பு நேர்தலைப் பெரியோர் ஒருநற்பேறாகக் கருதி மகிழ்வராதலின் நெறியடையநின்றனைத்து என உவமிக்கப்பட்டது; இது‘சிறப்பின் தீராக் குறிப்பின்' வந்தது,ஆல்அசை. தொல். உவம.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் இன்னர் இனையர் எமர்பிறர் என்னுஞ்சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பந்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்க ளாகற்பா லார். குறிப்புரை: இன்னர் - இவர்இத்தகையவர், இனையர் - இவர் இவ்வளவினர்; எமர் -இவர் எம்மைச் சேர்ந்தவர், பிறர் - இவர்பிறரைச் சேர்ந்தவர், என்னுஞ் சொல் என்னும்இலராம் இயல்பினால் - என்னுஞ் சொல் சிறிதும்இலராகிய தன்மையினால், துன்னித் தொலைமக்கள்துன்பம் தீர்ப்பாரே - நிலையிழந்த மக்களின்இன்னலைத் தாமே அவரையடைந்து தீர்த்து வைப்பவரே,யார்மாட்டும் தலை மக்களாகற்பாலார் -அனைவரிடத்தும் மேன்மக்களாகக் கருதப்படும்இயல்புடையவராவர். கருத்து: அனைவர்க்கும் ஒப்பஇடுக்கண் தீர்த்து ஆதரிப்பவரே அனைவர்க்குந்தலைவராதற்குரியர். விளக்கம்: அடைந்தாரது இடதுதீர்த்தலொன்றே கருதுவாரென்பது முதலிரண்டுஅடிகளின் கருத்து. ‘என்னும்' என்பது சிறிதும்என்னும் பொருட்டாதல், "என்னும் பனியாய்" என்பதனாலுங் காண்க தொலை மக்கள் - நிலைதொலைந்த மக்கள் ; என்றது ஆதரவில்லாதவரென்றற்கு. ‘தீர்ப்பாரே' யென்னும் ஏகாரம்பிரிநிலை தலைமக்கள் - தலைமையுடைய மக்கள்;அயலாரும் அவரைத் தமக்குத் தலைவராகக்கொள்வரென்றற்கு ‘யார்மாட்டு' மென்றார். பரிபா.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் பொற்காலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோ டமரார்கைத் துண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போற் கிளைஞர்மாட்டு எக்கலத் தானு மினிது. குறிப்புரை:பொற்காலத்துப் பெய்தபுலிஉகிர் வான் புழுக்கல் - பொன்னாலானஉண்கலத்தில் இட்டுவைத்த புலியின்நகத்தைப்போன்ற சிறந்த சோற்றை, அக்காரம்பாலொடு - சர்க்கரையோடும் பாலோடும், அமரார்கைத்து - மனம் பொருந்தாதவரிடத்திலிருந்து,உண்டலின் - உண்ணுதலைவிட, உப்பு இலிப்புற்கை -உப்பும் இல்லாததான புல்லரிசிக்கஞ்சியை,உயிர்போல் கிளைஞர்மாட்டு - உயிர்போன்றசுற்றத்தாரிடமிருந்து, எக் கலத்தானும் இனிது -எந்தக் கலத்தினாலும் உண்ணுதல் நன்று. கருத்து: உள்ளன்புடைய சுற்றத்தார்எளியவராயினும் அவரே இன்பந் தருபவராவர். விளக்கம்: புழுக்கல்,அவித்தெடுக்கப்பட்ட சோறு, அமராரென்பதுஉள்ளன்பில்லாதவரை, உப்பும் என இழிவுசிறப்பும்மை கொள்க. உயிர் போற்கிளைஞரென்றார். உள்ளன்புடையவரென்னும் பொருட்டு,உண்ணுதல் என்னுஞ் சொல் இசையெச்சத்தால் தொக்குநின்றது. உதவும் பொருளே நன்மை தருவதன்று,உதவுவோர் சால்பே நன்மை தருவதாமாகலின் இங்ஙனங்கூறினார். "உதவிவரைத்தன் றுதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து" என்றார்நாயனாரும், மேல்வருஞ் செய்யுளும் இக்கருத்துடையது.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் நாள்வாய்ப் பெறினுந்தந் நள்ளாதா ரில்லத்து வேளாண்மை வெங்கருனை வேம்பாகும்;- கேளாய், அபராணப் போழ்கின் அடகிடுவ ரேனுந் தமராயார் மாட்டே இனிது. குறிப்புரை: நாள்வாய்ப் பெறினும்தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெம் கருனைவேம்பாகும் - காலத்தில் பெற்றாலும் தம்உறவாகாதவர் வீட்டின் ஒப்புரவோடு கூடிய சூடானகறியுணவு வேப்பங்காயை ஒத்தது; கேளாய் - நீ கேள்;அபராணப் போழ்தின் அடகு இடுவரேனும் தமராயார்மாட்டே இனிது - பிற்பகற்போழ்தில் கீரையுணவுஇடுவராயினும் உறவினரானோரிடமேஇனிமையாயிருக்கும். கருத்து: சுற்றத்தா ருதவியே இன்பந்தரும். விளக்கம்: நாள் என்றது, நாளின்முதற்காலம்; முற்பகல். நள்ளாதார் -நண்ணாதவர்; அன்பினால் அணுக்க மில்லாதவரென்க.உதவும் எண்ணத்தோடு கூடியதாயினுமென்றற்கு‘வேளாண்மை' என்னுஞ் சொற்கொடுத்துக்கூறப்பட்டது. ‘நாள்வாய்' என வந்தமையின்வெங்கருனை யென்னுமிடத்து ‘வெம்' என்பது வெப்பமுணர்த்திற்று. கருனை - கறிகளோடு கூடிய உணவு. ‘கருனை'யென்பதும் ‘அடகு' என்பதும் முறையே உணவின் உயர்வுதாழ்வு குறித்தற்கு வந்தன. பெறினும் இடுவரேனும்என்னும் உம்மைகள் எதிர்மறைப் பொருளன. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் முட்டிகை போல முனியாது வைகலுங் கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்; சுட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டா ரெனப்படு வார். குறிப்புரை: முட்டிகை போல முனியாதுவைகலும் கொட்டியுண்பாரும் குறடுபோல் கைவிடுவர் -கம்மாளரின் சம்மட்டிபோல் நாடோறும்வெறுத்தலில்லாமல் தம்மை இடித்திடித்து வயிறுபிழைப்பாரும் நேரத்திற் குறடு போற் கைவிட்டுவிடுவர்; சுட்டுக்கோல்போல எரியும் புகுவர் நட்டாரெனப்படுவார் - ஆனால் உறவானவரெனப் படுவோர்அங்ஙனம் நேரத்திற் கைவிடாமல் உலையாணிக்கோல்போல் தம்முடன் எரியும் புகுந்து உடன்துன்புறுவர். கருத்து: உறவினர் உற்ற நேரத்திற்கைவிடாதவராதலின் அவரைத் தாமும் என்றுந் தழுவிநிற்றல் வேண்டும். விளக்கம்: முட்டிகைபோல வென்றார்,பிறரை இச்சகத்தால் வருத்தி இடித்துண்ணுதலின்.கொட்டி என முட்டிகையின் வினையினாலேயேகூறப்பட்டது. "கொட்டு வினைக்கொட்டிலும்" என்றது காண்க ஈண்டு உண்ணுதலென்பது, வயிறுபிழைக்கைக்கு வந்தது. உலைக்கூடத்தில் இரும்புமுதலிய பொருள்களைத் தீயில் இடும்போது குறடு அதனைவிட்டுவிடும்; உலையாணியென்னுஞ் சுட்டுக்கோல்உடன்புகும். ஆதலின், கைவிடுவோர்க்கும்கைவிடாதோர்க்கும் முறையே அவை இரண்டும் உவமமாகவந்தன. கம்மாளர் கருவிகளே செய்யுளில் ஒரு சேரஉவமமாக வந்தமை நயமுடைத்து. பெருங். மகத. ,
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் நறுமலர்த் தண்கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையுஞ் செய்வதொன் றுண்டோ! - இறுமளவும் இன்புறுவ இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால். குறிப்புரை: நறுமலர்த் தண் கோதாய்- சிறந்த மலர்களாற் றொடுக்கப்பட்ட குளிர்ந்தமாலையை யணிந்த மாதே, நட்டார்க்கு நட்டார்மறுமையும் செய்வதொன்று உண்டோ - உறவினர்க்குஉறவினர் மறுமையிலும் செய்வதொரு நன்மை உண்டோ?;இறுமளவும் இன்புறுவது இன்புற் றெழீஇ அவரோடு துன்புறுவதுன்புறாக்கால் - இறக்கும் வரையிலும் அவ்வுறவினர்இன்புறுவன தாமும் இன்புற்று எழுச்சியோடிருந்துஅவரோடு துன்புறுவன துன்புறாவிடின். கருத்து: சுற்றந் தழுவுதலால் துன்பம்வரினும் அதுவே செய்யத்தக்கது. விளக்கம்: அவரோடு துன்புறாக்கால்மறுமையுஞ் செய்வதொன்றுண்டோ வென்க. எழீஇயென்றார். கிளர்ச்சியோடு தொடர்ந் தென்னும்பொருட்டு, "ஒள்வாள் தானை உருத்தெழுந்தன்று," என்புழிப்போல. புறப். வெ.
செல்வம் நிலையாமை பொருட்பால் சுற்றந்தழால் விருப்பிலா ரில்லத்து வேறிருந் துண்ணும் வெருக்குக்கண் வெங்கருனை வேம்பாம்; - விருப்புடைத் தன்போல்வா ரில்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போ டியைந்த அமிழ்து. குறிப்புரை: விருப்பு இலார் இல்லத்துவேறு இருந்து உண்ணும் வெருகு கண் வெம் கருனை வேம்புஆகும் - அன்பில்லாதவர் வீட்டில் தனியே இருந்துஉண்ணுகின்ற, பூனைக் கண்போன்ற ஒளிமிக்க சூடானபொறிக்கறியுணவும் வேப்பங் காய்போல வெறுப்புத்தரும்; விருப்புடைத் தன் போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து -அன்புடைய தன்னொத்தார் வீட்டில் உண்ணுகின்ற விளங்கும் நீரையுடைய குளிர்ந்த புல்லரிசிக்கஞ்சியும் உடம்போடு பொருந்திய அமிழ்தமாகும். கருத்து: சுற்றத்தாரிற் சிலர் எளியநிலையினரேனும் அவர் அன்புடையவராகலின் அவர்தழுவுதற்குரியர். விளக்கம்: ‘வெருகு' உயிர்த்தொடர்மொழியாதலின் வல்லெழுத்து இரட்டிற்று. உடனிருத்தி உணவிடாமையின் "வேறிருந்து" எனப்பட்டது.தன் போல்வாரென்றார், தன்னை மதிப்பாரென்னும்பொருட்டு. நீர்க்குத் ‘தயங்கும் என்னும் அடை,புல்லரிசிதானும் போதிய தின்றி வெறும் நீருணவாய்விளங்குதலையும், புற்கைக்குத் ‘தண்' என்னும் அடை,அக் கஞ்சி தானுஞ் சூடின்றி ஆறியிருத்தலையுங்குறிப்பானுணர்த்தும். புற்கையும் என இழிவுசிறப்பும்மை கொள்க. என்புஆகுபெயராய்உடம்புக்காயிற்று. "என்பும் உரியர்பிறர்க்கு" என்புழிப் போல. எளியஉணவாயினும் அன்பென்னும் அமிழ்தோடு கூடியதாகலின்அதுவே உடம்புக்கு ஊட்டந் தருமென்றற்கு ‘என்போடியைந்த அமிழ்' தென்றார். இச்செய்யுட்கருத்துக்கள் முன்னும் வந்தன. தொல். குற்றிய. . நாலடி. ,
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் நட்புச் செய்தற்குரியாரை அவர் கல்வியறிவு ஒழுக்க முதலியவற்றால் ஆராய்ந்து கொள்ளுதல். கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மையெஞ் ஞான்றுங் குருத்திற் கரும்புதின் றற்றே;- குருத்திற் கெதிர்செலத்தின் றன்ன தகைத்தரோ, என்றும் மதுர மிலாளர் தொடர்பு. குறிப்புரை: கருத்துணர்ந்துகற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் குருத்தின்கரும்பு தின்றற்று - கல்வியின் பயன் தெரிந்துஉரிய நூல்களைக் கற்றுத் தெளிந்த மேலோருடையநட்பு எஞ்ஞான்றும் குருத்திலிருந்து கரும்புதின்றாற் போன்றது; குருத்திற்கு எதிர்செலத்தின்றன்ன தகைத்து என்றும் மதுரம் இலாளர்தொடர்பு - கல்வியின் இனிமையில்லாத கீழோருடையதொடர்பு என்றும் கரும்பை அதன் குருத்திற்கு நேரேசெல்லும்படி அடியிலிருந்து தின்று சென்றாற்போன்றதன்மையுடையது. கருத்து: கற்றார் நட்பு மேன்மேலும்இன்பம் தந்து செல்லும். விளக்கம்: குருத்தின் என்னும்ஐந்தனுருபு எல்லைப் பொருளது. குருத்திலிருந்து கரும்புதின்னுதல் மேன்மேலும் இன்பந் தந்துசெல்லுதற்கும், அடியிலிருந்து கரும்பு தின்னுதல்வரவர இன்பங் குறைந்து செல்லுதற்கும் உவமம்.‘எஞ்ஞான்றும்' ‘என்றும்' என்பன இடருற்றநிலையிலும் என்பதைக் குறிப்பா லுணர்த்திநின்றன. ஏகாரமும் அரோ வென்பதும் அசை.கரும்புவமைக் கேற்பக் கல்வியறிவை ஆசிரியர்இறுதியில் மதுரமெனக் கூறி மகிழ்ந்தார். நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் இற்பிறப் பெண்ணி இடைதிரியா ரென்பதோர் நற்புடை கொண்டமை யல்லது, - பொற்கேழ் புனலொழுகப் புள்ளிரியும் பூங்குன்ற நாட! மனமறியப் பட்டதொன் றன்று. குறிப்புரை: பொன்கேழ் புனல் ஒழுகப்புள் இரியும் பூ குன்ற நாட - பொன்னின் நிறம்அருவியிற் பொருந்தி வருதலால் பறவைகள் அஞ்சிநீங்குகின்ற பொலிவினையுடைய மலைநாடனே,இல்பிறப்பு எண்ணி இடைதிரியார் என்பதோர்நல்புடை கொண்டமையல்லது மனம் அறியப்பட்டதொன்றன்று - குடிப்பிறப்புக் கருதி இவர் இடையில்வேறு படார் என்பதொரு சிறந்த வகையை உட்கொண்டுநட்புச் செய்ததல்லது மனம் அறிந்த உண்மைவேறொன்றனால் அன்று. கருத்து: நட்பாராய்தற்குக்குடிப்ப்றிப்பொன்றும் சிறந்த காரணமாகும். விளக்கம்: உயர்குடியிற்பிறந்தார்க்கு இயல்பாகவே பெருந்தன்மைஉண்டாகலின், ‘இற்பிறப்பெண்ணி' யென்றார்;எண்ணியென்றது, ஈண்டு நம்பியென்னுங்குறிப்புடையது.நற்புடை - நற்காரணம் என்னும் பொருட்டு. "உறுகுறைமருங்கின்" என்புழிப்போல, நட்புச்செய்தமைக்கு இற்பிறப்பென்பதல்லது வேறுமனமறிந்த காரணம் ஒன்றின்று என்பது கருத்து;இவ்வாற்றால் இற்பிறப் பொன்றும் நட்புக்குஇலக்கணமாம் என்று அதன் மேன்மைஉணர்த்தியவாறாம். கேழ் ஒழுகவென்க. ஒழுகுதல்,ஈண்டுத் தொடர்புற்று வருதல், பொற்றுகளுஞ்செந்தேனும் ஏற்று வருதலால் அருவி பொன்னின்விளக்கம் பெற்றமையின், அவ்விளக்கங் கண்டுபறவைகள் அஞ்சி நீங்கினவென்பது. முருகாற்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும்;- யானை அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும், எறிந்தவேல் மெய்யதா வால்குழைக்கும் நாய். குறிப்புரை: யானையனைவர் நண்பு ஒரீஇ- யானையை ஒத்த இயல்புடையாரது நேயத்தை நீக்கி,நாய் அனையார் கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் -நாயை ஒத்த இயல்புடையாரது நேயத்தைத் தழுவிக்கொள்ளுதல் வேண்டும்; ஏனென்றால், யானைஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் - யானைபலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையேகுற்றங்கண்டு கொல்லும்; எறிந்த வேல் மெய்யதாவால் குழைக்கும் நாய் - ஆனால் நாயோ தன்னைவளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல்தன் உடம்பில் உருவி நிற்க அன்பினால் அவன்பால்வால் குழைத்து நிற்கும். கருத்து: பிழை பாராட்டாதஇயல்புடையாரை அறிந்து நட்புச் செய்தல் வேண்டும். விளக்கம்: அறிந்தறிந்தும் -நன்றாய் அறிந்திருந்தும்; பலகால் தனக்குஉதவிகள் செய்திருப்பதை நன்றாய்த்தெரிந்திருந்தும் என்க. மெய்யதா - உடம்பினதாக,வால் குழைத்தல் - வாலை வளைத்து ஆட்டுதல், ஈது அன்புபாராட்டுதற்கு அறிகுறி. நாய் உவமை அதன் உயர்ந்தபண்பினால் ஈண்டு உயர்வடையதாயிற்று."பெருமையும் சிறுமையும்" என்னும்நூற்பா உரையிற் கழியச் சிறியதாகஉவமித்ததற்குப் பேராசிரியர் இதனை எடுத்துக்காட்டினார். தொல். உவம.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் பலநாளும் பக்கத்தா ராயினும் நெஞ்சில் சிலநாளும் ஒட்டாரோ டொட்டார்; பலநாளும் நீத்தா ரெனக்கை விடலுண்டோ, தந்நெஞ்சத் தியாத்தாரோ டியாத்த தொடர்பு. குறிப்புரை: பலநாளும்பக்கத்தாராயினும் நெஞ்சில் சிலநாளும்ஒட்டாரோடு ஒட்டார் - பலநாளும் அருகிலிருந்துபழகினாராயினும் மனத்திற் சில நாளாயினும்நட்புப் பொருந்தாதவரோடு தெரிந்தோர்சேரமாட்டார்; பல நாளும் நீத்தார் எனக் கைவிடல்உண்டோ தம் நெஞ்சத்து யாத்தரோடு யாத்ததொடர்பு - தமது நெஞ்சத்தில் நட்புப்பொருந்தியவரோடு பிணிப்புண்ட தொடர்பு அவர்பலநாட்கள் அருகில்லாமல் நீங்கினாரென்றுகைவிடப் படுதலுண்டோ? கருத்து: நெஞ்சுப் பிணிப்புஉடையாரோடு நட்புச் செய்தல் வேண்டும். விளக்கம்: பலநாளும் சிலநாளும்என்னும் உம்மைகள் முறையே உயர்வு சிறப்பும் இழிவுசிறப்புமாம். பலநாளும் நீத்தாரென்னுமிடத்து அஃதுஅசை. சிறந்த நட்பு, அருகில் பழகுதலாலேயே ஆவதன்று;நெஞ்சம் பொருந்துதல் முதன்மை என்றபடி."புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங்கிழமை தரும்" என்பது நாயனார்அருளுரை. கோப்பெருஞ் சோழன் - பிசிராந்தையார்,அப்பூதியடிகள் - திருநாவுக்கரசர் இவர்களின்நட்பினை ஈண்டுணர்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி;- தோட்ட கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை நயப்பாரும் நட்பாரும் இல். குறிப்புரை: கோட்டுப்பூப் போலமலர்ந்து பின் கூம்பாது வேட்டதே வேட்டதாம்நட்பாட்சி - மரங்களிற் பூக்கும் பூக்கள் முதலில்மலர்ந்து பின் தாம் உதிரும் வரையிற்குவியாமைபோலத் தலைநாளில் உள்ளம்மலர்ந்துபின் தமது முடிவு வரையிற் சுருங்காமல் விரும்பியதுவிரும்பியதாயிருப்பதே நட்புடைமையாம்;தோட்டகயப் பூப்போல் முன் மலர்ந்து பின்கூம்புவாரை - அவ்வாறின்றி அகழ்ந்தெடுத்தநீர்நிலைகளிற் பூக்கும் இதழ்மிக்க பூக்கள்போல் தலைநாளில் மகிழ்பூத்து நாளடைவில்மனஞ்சுருங்கும் இயல்பினரை, நயப்பாரும் நட்பாரும்இல் - விரும்புவாரும் நேசிப்பாரும் உலகில் இல்லை. கருத்து: கூடிப் பின் பிரியாஇயல்பினரே நேசித்தற்குரியர். விளக்கம்: வேட்டது வேட்டதேநட்பாட்சியாம் என்று மாறுக. வேட்டதென்றது ஈண்டுவிரும்பி நேசித்ததென்னும் பொருட்டு. "உயர்ந்தவேட்டத்து உயர்ந்திசினோர்" என்பதுபுறம். இதழ்மிக்க நீர்ப்பூ என்னும் குறிப்பு.முதலில் தோற்றத்தால் நேயம் பெருகித்தோன்றுதல் உணர்த்தும். மலர்தலுங்குவிதலுமென்றற்கு, நேயத்தால் உள்ளம் மலர்தலுங்குவிதலும் என்று கொள்க. நயத்தல், விரும்பிமதித்தல்; நட்டல் - அணுகி நேசித்தல் என்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் கடையாயார் நட்பிற் கமுகனையர்; ஏனை இடையாயார் தெங்கி னனையர்;- தலையாயார் எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே, தொன்மை யுடையார் தொடர்பு. குறிப்புரை: நட்பில் -நேயமுறைமையில், கடையாயார் கமுகு அனையர் -கீழோர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்;இடையாயார் தெங்கு அனையர் - இடைத்தரமானவர்தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனைத்தலையாயார் தொன்மையுடையார் தொடர்பு - ஏனைஉயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, எண்அரு பெண்ணைபோன்று இட்டஞான்று இட்டதே - மதிப்புமிக்க பனை மரத்தின் இயல்புபோன்று நேயம்ஊன்றிய போது ஊன்றியதேயாம். கருத்து: மேன்மேல் உதவிகளில்லாதபோதும் நட்புக் குறையாதவரிடமே நேயங்கொள்ளுதல்வேண்டும். விளக்கம்: நெடுகக் கவனித்தலால்பாக்குமரமும், இடையிடையே கவனித்தலால் தென்னைமரமும் முதலில் விதையிட்ட அளவோடு பனைமரமும்வளர்ந்து பயன்றருவனவாதலால், அவ்வாறுகவனித்தலுடைமையால் நேயம் நிலைபெறுவார்க்குமுறையே அவை உவமமாயின. ‘நட்பில்' என்பதைஏனையோர்க்குங் கொள்க. ஏனைத் தலையாயார் எனத்தொடர்க. அருமை , ஈண்டு மிகுதிப் பொருளதே, பனைக்குவிதை ஊன்றியதன்றி இறுதிகாறும் பிறிதேதுஞ்செய்யாமையின், ‘இட்டஞான்றிட்டதே' எனப்பட்டது.நட்புக்குப் பழைமை கருதுதல் சிறந்தஇலக்கணமாதலின், தலையாயாரைத்தொன்மையுடையாரென்று மேலும் ஆசிரியர் விதந்துகூறினார். நட்பென்னும் உறுப்பினுள் பழைமைபாராட்டுதலை நாயனார் விதிமுகக் கூற்றுள்முதன்மைபெற வைத்து விளக்குதலும்,"நட்பிற்குறுப்புக் கெழுதகைமை; மற்றதற்,குப்பாதல் சான்றோர் கடன்" என்றதும்இக் கருத்தினான் என்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் கழுநீருட் காரட கேனும் ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் ; - விழுமிய குய்த்துவையார் வெண்சோறே யாயினும் மேவாதார் கைத்துண்டல் காஞ்சிரங் காய். குறிப்புரை: கழுநீருள் கார் அடகேனும்ஒருவன் விழுமிதாக் கொள்ளின் அமிழ்தாம் -கழுநீருட் பெய்து சமைத்த கறுத்த இலைக்கறியேனும்ஒருவன் அன்புடையதாகப் பெற்றால் அஃது அமிழ்தமாய்நன்மை தரும் ; விழுமிய குய்த் துவை ஆர்வெண்சோறேயாயினும் மேவாதார் கைத்து உண்டல்காஞ்சிரங்காய் - சிறந்த தாளிப்புப் பொருந்தியதுவைத்த கறிகளோடு கூடிய வெண்ணிறமான நெல்லரிசியுணவேயாயினும் அன்பு பொருந்தாதவர்கையிலுள்ளதாய் உண்ணுதல் எட்டிக் காய்போல்வெறுப்புத் தருவதாகும். கருத்து: உள்ளன்போடு உதவுவோரிடமே நட்புச் செய்தல்வேண்டும். விளக்கம்: ‘கழுநீர்' என்பது அரிசிகழுவிய நீர். இலைக்கறியில் தாழ்ந்ததொன்றைக்குறித்தற்குக் ‘காரடகு ' என்றார். குறிப்பால்,முன்னைக்கீரை முதலியன ஈண்டுக் கருதப்படும். துவை,துவையலுமாம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் நாய்க்காற் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும் ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்? சேய்த்தானுஞ் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும் வாய்க்கா லனையார் தொடர்பு. குறிப்புரை: நாய்க்கால்சிறுவிரல்போல் நன்கு அணியராயினும் ஈக்கால்துணையும் உதவாதார் நட்பு என்னாம் நாய்க்காலின்சிறிய விரல்கள் நெருக்கமாயிருப்பதுபோல் மிகநெருக்கமுடையாராயினும் ஓர் ஈக்காலினளவும் உதவிசெய்யாதவரது நட்பு என்ன பயனுடையதாகும்?;சேய்த்தானும் சென்று கொளல் வேண்டும்செய்விளைக்கும் வாய்க்கால் அனையார் தொடர்பு -கழனி, முழுமையும் விளைக்கும் நீர்க்காலை ஒத்தஇயல்பினரது தொடர்பு தொலைவிலுள்ளதாயினும்அதனைத் தேடிச் சென்று அடைதல் வேண்டும். கருத்து: உதவும் இயல்பினரேநட்புச்செய்தற்குரியர். விளக்கம்: நாய்க்காற் சிறுவிரல்இழிவுக்காக வந்த உவமம். ஈக்கால், ஈ என்னும்மிகச் சிறிய பறவையினது கால் ; இது சிறுமைக்குஎடுத்துக்காட்டுவதோர் அளவு. வேண்டும் என்பது ஏவல்கண்ணிய வியங்கோள் ; உம் ஈற்றான் வந்தது. வாய்க்காலின் இயல்பு. கழனியினிடமிருந்துஎஞ்ஞான்றுந் தான் ஓர் உதவி பெறுதலின்றாயினும்உற்ற நேரங்களில் தொலைவிலிருந்து தானேமுற்போந்து ஓடி வளம் உதவி அவ் வயல்முழுமையும்விளையச் செய்தல். நண்பரது இருப்பின்சேய்மை அவர் தொடர்பின்மேல் ஏற்றப்பட்டது. சிந். , நச்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் தெளிவிலார் நட்பின் பகைநன்று ; சாதல் விளியா அருநோயின் நன்றால் - அளிய இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல புகழ்லின் வைதலே நன்று. குறிப்புரை: தெளிவிலார் நட்பின்பகை நன்று - நம்பத் தகாதவரது நட்பினும் அவரது பகைநலந்தரும் ; சாதல் விளியா அருநோயின் நன்று -தீராத கொடிய நோயினும் இறத்தல் நலமாகும் ; அளியஇகழ்தலின்கோறல் இனிது - பிறரை நெஞ்சுபுண்ணாகும்படி இகழ்தலினும் அவரைக் கொல்லுதல்நல்லது ; இல்ல புகழ்தலின் வைதலே நன்று - ஒருவரிடம்இல்லாதன கூறிப் புகழ்தலினும் அவரைப் பழித்தலேநன்மையாம். கருத்து: நம்பிக்கையில்லாதவரிடம் நட்புச் செய்தல் ஆகாது. விளக்கம்: தெளிவென்பது ஈண்டுநம்பிக்கையென்னும் பொருட்டு :"தெளிந்தார்இல் தீமை புரிந்தொழுகுவார்" என்புழிப்போல தெளிவிலார் பகையினும் நட்பில்இன்னல் மிகுதியாதலின் பகை நன்றென்றார். அவர்நட்பினால் உண்டாகும் மிக்க இன்னலை விளக்கும்பொருட்டுப் பகை நன்றென்றதல்லால்வேறில்லையாகலின், மற்று அத்தகையாரிடம்பகையுமில்லாதிருத்தலே நன்றென்க.ஏனையவற்றிற்கும் இங்ஙனங் கொள்க. அதிகாரம்நட்பாராய்தலாகலின் ஏனை மூன்றையும்முன்னதற்குஉவமமாக உதை்தலுமொன்று. ஆல், ஏ, மற்றுஅசை. வைதலேஎன்பதன் தேற்றேகாரத்தைப் பகை, சாதல், கோறல்என்பவற்றிற்குங் கூட்டுதல் பொருந்தும்."பொருளே உவமம்" என்பதனால்இதனைக்கொள்க. . தொல். உவம.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பாராய்தல் மரீஇப் பலரோடு பன்னாள் முயங்கிப் பொரீஇப் பொருட்டக்கார்க் கோடலே வேண்டும் பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇஇப் பின்னைப் பிரிவு. குறிப்புரை: மரீஇப் பலரோடு பலநாள்முயங்கிப் பொரீஇப் பொருள் தக்கார்க் கோடலேவேண்டும் - பல நாள் பலரோடும் சேர்ந்து ஒத்துக்கலந்து பழகிப் பொருளாகத் தக்காரையே நட்புக்கொள்ளல் வேண்டும் ; ஏனென்றால், பரீஇ உயிர்செகுக்கும் பாம்பொடும் இன்னா மரீஇப் பின்னைப்பிரிவு - கடித்து உயிரை அழிக்கும் பாம்போடாயினும்கூடிப் பின்பு பிரிதல் இன்னாமையாகும். கருத்து: பலகால் நன்காராய்ந்தபின்னரே தக்காரோடு நட்புச் செய்தல் வேண்டும். விளக்கம்: "ஆயந்தாய்ந்துகொள்ளாதான் கேண்மை கடைமுறை, தான்சாந் துயரந்தரும்" என்றார் நாயனார். மருவி பொருவி,பரிந்து என்பன ஈண்டு விகாரப் பட்டு அளபெடுத்தன.பொருவுதல், ஒத்தல் ; பரிதல். அறுத்தல் :பிறவினைக்கண் வந்தது ; "எருமை கயிறுபரிந்தசைஇ" என்புழிப்போல, ஈண்டுக்கடித்தலென்னும் பொருட்டு. பொருட்டக்காரென்றது,உண்மைத் தகுதியுடையாரை யென்க. ஏகாரத்தைப்பிரித்துக் கூட்டுக. இன்னாமை யென்பது ஈறுதொகுத்தலாய் நின்றது. . ஐங்
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் நட்பினரிடத்துக் குற்றம்உண்டாயின், அஃது அறியாமையானதல் அல்லதுஊழினானதால் உண்டாதலன்றி வேறின்றாகலின்பழைமை கருதி அதனைப் பொறுத்து, அவர் நட்பினையேபாராட்டி யொழுகுதல். நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும் நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு புல்லிதழ் பூவிற்கும் உண்டு. குறிப்புரை: நல்லார் எனத் தாம்நனி விரும்பிக் கொண்டாரை அல்லார் எனினும்அடக்கிக் கொளல் வேண்டும் - நல்லவர் என்று தாம்பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக்கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர்நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப்பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக்கொள்ளல்வேண்டும் ; நெல்லுக்கு உமி உண்டு நீர்க்கு நுரை உண்டுபுல் இதழ் பூவிற்கும் உண்டு - ஏனென்றால்,பயன்படுதலுடைய, நென்மணிக்கு அதிலிருந்துநீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்குநுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு. கருத்து: உலகத்திற் குற்றமிருத்தல்இயற்கையாகலின், நண்பரிடத்து அதனைப்பாராட்டுதலாகாது. நல்லார், உயர்ந்தஇயல்பினர்; நனிவிரும்பிக் கொள்ளல் - அணுக்கமாகநேசித்துக் கொள்ளுதல்; அல்லாரென்றது, ஈண்டுப்பிழைபட்டாரென்னும் பொருட்டு. நெல் நீர் பூவெனவந்த உவமம், மக்கள் முதன்மையாகக் கருதி உண்ணுவனபருகுவன அணிவனவான பொருள்களிலும் குறைகள்உண்டெனப் புலப்படுத்தி நின்றது. புல்லிதழ்,புன்மையுடைய இதழ்புன்மையாவது, மணமும்நிறமுமில்லாச் சிறுமை, பூவிற்கும் என்னும் உம்மைஉயர்வொடு எச்சம்; "செஞ்சொல்லாயிற்பிற்படக் கிளவார் முற்படக் கிளத்தல்" என்றமையின், உம்மையேற்ற சொல் இறுதியில்நின்றது. தொல். இடை.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் செறுத்தோ றுடைப்பினுஞ் செம்புனலோ டூடார். மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு. குறிப்புரை: செறுத்தோறுஉடைப்பினும் செம்புனலோடு ஊடார் மறுத்தும் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர் - நீரின் நன்மையைவிரும்பி வாழ்வோர் வயலில் அதனைக்கட்டுந்தோறும் அஃது உடைத்துடைத்துச் செல்லும்இயல்பினதாயினும் அப் புதுப்புனலோடு சினத்தல்செய்யாராய் மீண்டுமீண்டும் அதனை மடைகட்டிப்பயன்படுவர்; வெறுப்ப வெறுப்பச் செயினும்பொறுப்பரே தாம் வேண்டிக் கொண்டார் தொடர்பு -உயர்ந்தவரென்று தாம் முன்னர் விரும்பிநட்புச்செய்து கொண்டவரது தொடர்பினைப் பின்புஅவர் வெறுத்தற்குரிய பிழைகளை வெறுப்புண்டாகும்படிசெய்தாலும் அவற்றைப் பொறுத்து மேற்கொள்வர். கருத்து: சிறந்த நண்பர்கள்தம்மிடம் பலகாற் குற்றஞ் செய்ய நேர்ந்தாலும்,அவர் தம் உயர்வு கருதி அவர்கள் தொடர்பினைமேற்கோடல் வேண்டும். விளக்கம்: செறுத்தோரென்னும்பயில்வுப் பொருளால் மறுத்து மென்பதற்கு அடுக்குப்பொருளுரைக்கப்பட்டது. செறுத்தல், ஈண்டு மடைகட்டுதல். ஊடாமைக்கு நீரினா லுண்டாங்கிளர்ச்சியும் ஓர் ஏதுவாகவின், புதுப்புனல்நுவலப்பட்டது. செம்மை, புதுமைமேற்று; "புதுநாற்றம்செய்கின்றே செம்பூம் புனல்" என்புழிப்போல. வெறுப்ப வெறுப்ப என்பவற்றில் முன்னதுபெயர். "தாம் வேண்டிக் கொண்டார்"என்றார், அவர் தம் உயர்வால் தமது உள்ளம்பிணிப் புண்டமை தோன்ற. தொடர்பு என்னும் முடிபாற்'பொறுப்ப' ரென்பதற்குப் பொறுத்துமேற்கொள்வரென்று பொருளுரைத்துக் கொள்க. . பரிபா. -
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் இறப்பவே தீய செயினுந்தந் நட்டார் பொறுத்தல் தகுவதொன் றன்றோ ; - நிறக்கோங்கு உருவவண் டார்க்கு முயர்வரை நாட ! ஒருவர் பொறையிருவர் நட்பு. குறிப்புரை: இறப்பவே தீய செயினும்தம் நட்டார் பொறுத்தல் தகுவ தொன்றன்றோ -தம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள்செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியானதொன்றன்றோ!, நிறக்கோங்கு உருவ வண்டு ஆர்க்கும்உயர்வரை நாட - நிறமான கோங்கமலரில் அழகியவண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்தமலைகளையுடைய நாடன!, ஒருவர் பொறை இருவர் நட்பு -ஒருவரது பொறை இருவர் நட்புக்கு இடம். கருத்து: பொறுத்தலால் நட்புவளர்தலாலும், அஃதொரு பெருந்தன்மையாதலாலும்நட்பிற் பிழை பொறுத்தல் வேண்டும். விளக்கம்: நிறம், பொன்னிறம்.உருவென்பது, உருவமென ஈறுதிரிந்து வந்தது. ஒருவர்பொறுத்தலால் இருவர்க்கு நலமுண்டாதலின்ஆக்கமானதை மேற்கொள்க வென்றற்கு, "ஒருவர்பொறை இருவர் நட்" பென்றார். பழமொழி.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் மடிதிரை தந்திட்ட வான்கதிர் முத்தங் கடுவிசை நாவாய் கரையலைக்குஞ் சேர்ப்ப ! விடுதற் கரியா ரியல்பிலரேல் நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீ. குறிப்புரை: மடி திரை தந்திட்டவான்கதிர் முத்தம் கடுவிசை நாவாய் கரைஅலைக்கும் சேர்ப்ப - மிக்க விசையோடு வருகின்றமரக்கலங்கள் மடிந்துவிழுகின்ற அலைகள் கொழித்தவெள்ளிய கதிர்களையுடைய முத்துக்களைக் கரையிற்சிதறச்செய்யுந் துறையை யுடையாய்!, விடுதற்குஅரியார் இயல்பு இலரேல் நெஞ்சம் சுடுதற்கு மூட்டியதீ - நட்புவிடுதற்குக் கூடாதவர் இடையேநல்லியல்பில்லாதவராயின் அத்தகையோர்தமதுள்ளம் புண்படுதற்கு மூட்டியதீயாவர். கருத்து: கூடிப் பின்பிரியலாகாமையின், ஒருவரால் ஒருவர் உள்ளம்புண்படுமாறு நடந்து கொள்ளலாகாது. விளக்கம்: தந்திட்ட - தந்த ; விடுதற்கரியாரென்றார், பின் பிரியலாகாமையின்."நட்டபின் வீடில்லை;" என்றார்திருவள்ளுவரும். ‘நெஞ்சஞ் சுடுதற்கு மூட்டிய தீ'என்றமையின், நட்புச் செய்யப்படுவாரும்பிழைபடாமற் கருத்தாய் ஒழுகவேண்டுமென்பதுபெறப்படும்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் இன்னா செயினும் விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக் கொளல்வேண்டும் ; பொன்னொடு நல்லிற் சிதைத்ததீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குத லால். குறிப்புரை: இன்னாசெயினும்விடற்பால ரல்லாரைப் பொன்னாகப் போற்றிக்கொளல் வேண்டும் - இடையே தீயன செய்தாலும்நட்புவிடுந் தன்மையரல்லாரைப் பொன்னைப்போல்மதித்துக் காத்துக்கொள்ளுதல் வேண்டும்;பொன்னொடு நல் இல் சிதைத்த தீ நாடொறும் நாடித்தம் இல்லத்தில் ஆக்குதலால் - ஏனென்றால்,பொன்முதலிய பொருள்களோடு சிறந்த வீட்டையும்எரித்தழிக்கும் இயல்பு வாய்ந்த தீயை நாடோறும்விரும்பித் தமது இல்லத்தில் வளர்த்தலால் என்க. கருத்து: நண்பர் குறைகளைத் தமதுபெருங்குணத்தால் தணிவாக வைத்துக் கொண்டு அவரைப்போற்றி யொழுகல் வேண்டும். விளக்கம்: பொன்னாக வென்றமையின்,மதிப்புப் பெறப்பட்டது. சிதைக்கும் இயல்புமுன்னரே உண்மையின், தெளிவு பற்றிச் ‘சிதைத்த'வென இறந்த காலத்தான் நின்றது.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் இன்னா செயினும் விடுதற் கரியாரைத் துன்னாத் துறத்தல் தகுவதோ - துன்னருஞ்சீர் விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ கண்குத்திற் றென்றுதங் கை. குறிப்புரை: துன் அரு சீர் விண் குத்துநீள் வரை வெற்ப - அணுகுதற்கரிய சிறப்பினையுடைய,வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடையமலைநாடனே!, கண் குத்திற்றென்று தம் கை களைபவோ -தவறுதலால் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையைமக்கள் தறித்து நீக்கி விடுவார்களோ?, இன்னாசெயினும் விடுதற்கு அரியாரைத் துன்னாத் துறத்தல்தகுவதோ - ஆதலால், அறியாமையால் தீமைகள்செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நட்பினரைநெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமோ!ஆகாதென்க. கருத்து: தம்மைச் சேர்ந்தோர்ஒருகால் தீமைகள் செய்யினும் அவரை உடனேகைவிட்டுவிடாமல் அணைத்துக் கொள்ளல்வேண்டும். விளக்கம்: ‘துன்னாமல்' என்பதுஈறுதொக்கு நின்றது. ‘துன்னருஞ்சீர்' என்பதைமலைநாடனுக்குக் கொள்க. விண் குத்தும் வெற்பென்க.கை நட்புக்கு உவமமாதல் "உடுக்கை யிழந்தவன்கைபோல்" என்னுஞ் சான்றோர்மொழிகளிற் காண்க. குறள். -
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் இலங்குநீர்த் தண்சேர்ப்ப! இன்னா செயினும் கலந்து பழிகாணார் சான்றோர் ; கலந்தபின் தீமை எடுத்துரைக்குந் திண்ணறி வில்லாதார் தாமும் அவரிற் கடை. குறிப்புரை: இலங்கு நீர்த்தண்சேர்ப்ப - விளங்குகின்ற நீரினையுடைய கடலின்குளிர்ந்த துறைவனே! . இன்னா செயினும் கலந்துபழிகாணர் சான்றோர் - நட்புச் செய்தபின்நண்பர் கொடுமைகள் செய்தாலும் சான்றோர்அவர்பாற் குற்றங் காணார் ; கலந்தபின் தீமைஎடுத்துரைக்கும் திண் அறிவு இல்லாதார் தாமும்அவரின் கடை - நட்புச் செய்தபின் நண்பருடையகுற்றங்களை எடுத்துப் பேசுகின்ற, உறுதிவாய்ந்தஅறிவில்லாதவர் தாமும் அந்நண்பரைப்போற்கடைப்பட்டவரேயாவர். கருத்து: நண்பர்பாற்குறைகாண்போர் தாமுங் குறையுடையவரேயாவர். விளக்கம்: ‘திண்ணறிவில்லாதார்'என்றார். பொறுமையிழத்தலின். குற்றஞ் செய்யும்நண்பரைவிடத் தாம் குற்றமில்லாதவ ரென்பதற்குஅடையாளங் காணாமையின் ‘தாமும் அவரிற் கடை'என்றார்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் ஏதிலார் செய்த திறப்பவே தீதெனினும் நோதக்க தென்னுண்டாம் நோக்குங்கால்! - காதல் கழுமியார் செய்த கறங்கவி நாட! விழுமிதாம் நெஞ்சத்துள் நின்று. குறிப்புரை: ஏதிலார் செய்ததுஇறப்பவே தீது எனினும் நோதக்கது என் உண்டாம்நோக்குங்கால் - நண்பரல்லாத அயலார் செய்ததுமிகவுந் தீங்குடைய தென்றாலும் அதன் காரணத்தைஆராயுமிடத்து ஒன்று அறியாமையான் அல்லதுஉரிமையான் அல்லது ஊழினான் என்று பெறப்படுதலின்அதன்கண் மனம் வருந்தத்தக்கது யாதுண்டு?, கறங்குஅருவி நாட - ஆதலால், ஒலிக்கின்றமலையருவிகளையுடைய நாடனே, காதல் கழுமியார் செய்தவிழுமிதாம் நெஞ்சத்துள் நின்று - அன்புமிகப்பொருந்திய நண்பர் செய்துவிட்ட தீங்குஎவ்வாற்றானும் மனம் வருந்தத்தக்கதாகாமல்நெஞ்சத்தில் ஆராய்ந்து நோக்க அன்பின்சிறப்புடையதேயாகும் என்க. கருத்து: அயலார் செய்தபெருந்தீங்கிற்கே மனம் வருந்துதற்கிடமில்லையென்றால், நண்பர்செய்தது இனியதாகுமன்றிஇன்னாததாகல் யாங்ஙனம் என்பது. விளக்கம்: ‘கழுமுதல்' மிகப்பொருந்துத லென்னும் பொருட்டு: "கழுமிற்றுக்காதல்" என்பதன் நச். உரை காண்க.செய்தது என்னும் ஈறு தொக்கு நின்றது. நெஞ்சத்துள்நின்று என்றார், நெஞ்சத்துள் நினைய என்னும்பொருட்டு. நிற்க வென்னும் எச்சம் நின்று எனத்திரிந்து வந்தது. நண்பர் செய்தது தீங்கேயாயினும்அவர் முன் செய்த நன்மைகளை நினைய நினையத்தீங்கும் இனியதாய் மாறித் தோன்றுமாகலின்,‘நெஞ்சத்துள் நின்று விழுமிதாம்' எனப்பட்டது.இதனால், நட்பிற் பிழை பொறுக்கும் முறைஇன்னதென்பது பெறப்படும். சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் தமரென்று தாங்கொள்ளப் பட்டவர் தம்மைத் தமரன்மை தாமறிந்தா ராயின், அவரைத் தமரினும் நன்கு மதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக் கொளல். குறிப்புரை: தமர் என்று தாம்கொள்ளப்பட்டவர் தம்மைத் தமரன்மை தாம்அறிந்தாராயின் - நண்பர் என்று தாம் நட்புக்கொண்டவரிடத்து இடையே நண்பராகாத் தன்மையைத்தாம் அறிந்தால், அவரைத் தமரினும் நன்குமதித்துத் தமரன்மை தம்முள் அடக்கிக்கொளல் -அவரை நண்பரினும் மிகுதியாகப் போற்றி அவரதுநண்பரல்லாத நிலையைப் புறத்தே தூற்றாமல்தமக்குள் காத்துக் கொள்ளுதல் வேண்டும். கருத்து: நட்பிற் பிழைபடுவாரைத்தமது போற்றுதலால் நல்லராமாறு காத்துக்கொள்ளுதல் வேண்டும். விளக்கம்: ‘கொள்ளப்பட்டவர்தம்மை' என்பதற்கு ஏழாவதன் பொருள் கொள்க.தமரினும் நன்கு மதித்தல், அவர் நன்னினைவு பெறும்பொருட்டு. தம்முள் அடக்கிக் கொளல், அவர்பிழைநினைவு மிகாமைப் பொருட்டு தமர், தம்மவர் ;ஈண்டுத் தம்மவ ரென்னும் உரிமைக்குரியநண்பரென்பது.
செல்வம் நிலையாமை பொருட்பால் நட்பிற் பிழைபொறுத்தல் குற்றமும் ஏனைக் குணமும் ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனேல் - நட்டான் மறைமகாவா விட்டவன் செல்வுழிச் செல்க, அறைகடல்சூழ் வையம் நக. குறிப்புரை: குற்றமும் ஏனைக் குணமும்ஒருவனை நட்டபின் நாடித் திரிவேனல் - குற்றமும்மற்றைக் குணமும் ஒருவனை நட்புச் செய்தபின்அவனிடம் தேடிக் கொண்டு திரிவேனாயின், நட்டான்மறை காவாவிட்டவன் செல்வுழிச் செல்க - நட்புக்கொண்டவனுடைய மறைகளைத் தன்னுட்பொதிந்துவையாமல் வெளியிட்டுவிட்ட தீயோன்செல்லும் தீக்கதிக்கு நான் செல்வேனாக ; அறைகடல்சூழ் வையம் நக - அன்றியும் ஒலிக்குங் கடல் சூழ்ந்தஉலகம் என்னை இகழ்வதாக. கருத்து: நண்பரிடங் குற்றங்காண்டல் பெரும் பிழையாகும். விளக்கம்: குணத்தோடு ஒப்பிட்டுக்குற்றங் காண்டலின், குணமுங் கூறப்பட்டது. நட்பின்அருமை யறிந்தோன் வஞ்சினங் கூறு முறையில் இச்செய்யுள் இயற்றப்பட்டிருக்கின்றது."அருமறைகாவாத நட்பைப்" பிறரும்இகழ்ந்தனர். காவாமல் என்பது ஈறுதொகுத்தலாய்நின்றது. நட்பிற் பிழைகாணுங் கொடுமையின் மிகுதி,ஏனைப் பெருங்குற்றங்களோடு ஒப்புமை கூறிவிளக்கப்பட்டது. திரிகடு.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு செறிப்பில் பழங்கூரை சேறணை யாக இறைத்துநீர் ஏற்றம் கிடப்பார், - கறைக்குன்றம் பொங்கருவி தாழும் புனல்வரை நன்னாட! தங்கரும முற்றுந் துணை. குறிப்புரை: கறைக் குன்றம் பொங்குஅருவி தாழும் புனல்வரை நல் நாட - கரிய மலைகள்பொங்கும் அருவிநீர் ஒழுகப்பெறுகின்றநீரெல்லையையுடைய சிறந்த நாடனே! செறிப்பு இல்பழங்கூரை சேறு அணையாக இறைத்து நீர் ஏற்றும்கிடப்பர் தம் கருமம் முற்றுந்துணை - கட்டுக்கோப்புப் பிரிந்த பழங்கூரையைடைய வீட்டிற்சேற்றையே அணையாகக் கொண்டு, ஒழுகும் நீரைஇறைத்தும் தம்மேல் ஏற்றும் தமது காரியம்முடியுமளவும் மக்கள் வருந்திக் கிடப்பர்,கருத்து: கூடாநட்பினரை அகங்கலந்தநேயத்துக்கு உரியராக்காது விலக்குதல் வேண்டும். விளக்கம்: கூரை, கூரை வீடு.கிடப்பரென்னும் குறிப்பு,இடர்ப்பாட்டோடிருத்தல் உணர்த்தும். ‘கறை'நிறம் உணர்த்துதல், "கறைமிட றணியிலும்" என்பதனுரையிற் காண்க. உவமம் பிறிது பொருள்புலப்படுத்தி நின்றமையின் இது, ‘பிறிது மொழித'லென்னும் அணி. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி வறந்தக்காற் போலுமே வாலருவி நாட! சிறந்தக்காற் சீரிலார் நட்பு. குறிப்புரை: வால் அருவி நாட -வெண்ணிறமான மலையருவிகளையுடைய நாடனே!, சீரியார்கேண்மை சிறந்த சிறப்பிற்றாய் மாரிபோல்மாண்ட பயத்ததாம் - தக்கோர் நட்பு மிக்கமேம்பாடுடையதாய் மழைபெய்தாற் போற் சிறந்தபயன் உடையதாயிருக்கும் ; மாரி வறந்தக்காற்போலும் சிறந்தக்கால் சீரிலார் நட்பு.தகுதியில்லாதார் நட்பு மிகுந்தால் மழைபொய்யாதொழிந்தாற்போல் வாழ்க்கைவெறித்திருக்கும். கருத்து: கூடா நட்பினாற் பயன்சிறிதுமிராது. விளக்கம்: மழைபெய்யாவிடின் வளம்இல்லாமையோடு வெயிலும் உறுத்து நிற்றல்போல்,கூடாநட்பினாற் பயனில்லாமையோடு இன்னலும்மிகுதியா யிருக்குமெனக்கொள்க. தக்கார் உதவிக்குமாரியை உவமை கூறினார். அது கைம்மாறறியாக்கடப்பாடுடையதாகலின். "மாரியன்ன வண்மையிற்சொரிந்து" என்றார் பிறரும். கூடாநட்பினரது நேயம் பலரது நேயமாய்ப்பெருகினாலென்றற்குச் ‘சிறந்தக்கால்'எனப்பட்டது. புறம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் - நுண்ணூல் உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப் புணர்தல் நிரயத்து ளொன்று. குறிப்புரை: நுண்ணுணர்வினாரொடு கூடிநுகர்வுடைமை விண்ணுலகே ஒக்கும் விழைவிற்று - நுட்பஉணர்வுடையாரோடு கலந்து பழகி யின்புறுதல்விண்ணுலகத்தின் இன்பமே போலும் விரும்பப்படும்மேன்மையினையுடையது ; நுண் நூல் உணர்விலராகியஊதியமில்லார்ப் புணர்தல் நிரயத்துள் ஒன்று -நுண்ணிய நூலுணர்வு மில்லாதவராகிய பயனிலாரொடுநேயங்கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும். கருத்து: கல்வியும் அறிவுமில்லாதகூடாநட்பினரோடு சேர்தலாகாது. விளக்கம்: நுண்ணுணர்வென்றுஒன்றிலும் நுண்ணூலுணர்வென்று மற்றொன்றிலும்விதந்தமையால், ஈரிடத்தும் இரண்டுங் கொள்க.என்னை? இரண்டும் இயைந்தன்றி மாட்சியுறாமையின்என்க. நூலுணர்வுமிலராகிய வென இழிவு சிறப்பும்மைதொக்கு நின்றது, கல்வியும் அறிவுமுடையாரை விண்ணுலகின்பம் உடையராகவே கருதுமியல்பு, இந்நூலுள்முன்னும்" வந்தது. "தேவ ரனையர்புலவர்" என்றார் பிறரும். ஆல்அசை. நாலடி. நான்மணி.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு பெருகுவது போலத் தோன்றிவைத் தீப்போல் ஒருபொழுதுஞ் செல்லாதே நந்தும் - அருகெல்லாம் சந்தன நீள்சோலைச் சாரன் மலைநாட ! பந்தமி லாளர் தொடர்பு . குறிப்புரை: அருகெல்லாம் சந்தனநீள்சோலைச சாரல் மலைநாட -பக்கங்களிலெல்லாம் நீண்ட சந்தனச்சோலைகளின் சாரலையுடைய மலைநாடனே!, பந்தம்இலாளர் தொடர்பு பெருகுவது போலத் தோன்றிவைத்தீப்போல ஒரு பொழுதும் செல்லாதே நந்தும் -பிணிப்பான நட்பில்லாதவரது தொடர்புவைக்கோலிற் பற்றிய தீப்போல் முதலிற்பெறுகுவதுபோலத் தோன்றிப் பின்பு சிறிது நேரமும்நிலைத்திராமற் கெடும். கருத்து: கூடா நட்பினரது நேயம்உள்ளப் பிணிப் பற்றதாகலின் விரைவில்நிலையாமற் கெடும். விளக்கம்: போலியாகலின்பெருகுவதுபோலத் தோன்றிற்று. ஒரு பொழுது மென்றது,ஈண்டுச் சிறிது நேரமும் என்னும் பொருட்டு. சாரல்தண்ணிய நீர்த்துளிகளோடு கூடிய இனிய தென்றல்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு செய்யாத செய்துநாம் என்றலும் செய்வதனைச் செய்யாது தாழ்த்துக் கொண் டோட்டலும் - மெய்யாக இன்புறூஉம் பெற்றி யிகழ்ந்தார்க்கும் அந்நிலையே துன்புறூஉம் பெற்றி தரும். குறிப்புரை: செய்யாத செய்தும் நாம்என்றலும் - பிறர் செய்யாத செயல்களை யாம் செய்துமுடிப்பேம் என்று வீறு கூறுதலும், செய்தவனைச்செய்யாது தாழ்த்துக்கொண் டோட்டலும் - தன்னாற்செய்தற்குரியதை உடனே செய்து முடிக்காமற் காலந்தாழ்த்துக்கொண்டு நாளை ஓட்டுதலும், மெய்யாகஇன்புறும் பெற்றி இகழ்ந்தார்க்கு - உண்மையில்இன்பம் உறுதற்குரிய இயல்புகளைப் பொருள்செய்யாதிருத்தலும் உடையார்க்கு, அந்நிலையேதுன்புறும் பெற்றி தரும் - அம் மனப்பாங்கே அவர்துன்புறுதற்குரிய நிலைமைகளை வருவிக்கும். கருத்து: வீம்பு பேசுதல், சோம்பல்கொள்ளுதல், பொருள் செய்யாதிருத்தல் என்பனதுன்பந்தருதலின், அப் பண்புகளைத் தமக்கியல்பாகஉடைய கூடா நட்பினரோடு கூடாதிருத்தல் வேண்டும். விளக்கம்: செய்யாத, பிறராற்செய்ய முடியாதனபெயர். செயல் தாழ்ந்து நாள்ஓடுதலின், ஓட்டலுமெனப் பட்டது. பொருளல் லவற்றைப்பொருளென் றுணரும் மருளை மறுத்தற்கு‘மெய்யாக' என்றார். அந்நிலையே என்றார், துனபம்உறுவித்தற்குப் பிற வேண்டா என்றற்கு.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார் கருமங்கள் வேறு படும். குறிப்புரை: ஒரு நீர்ப் பிறந்துஒருங்கு நீண்டக் கடைத்தும் விரிநீர்க் குவளையைஆம்பல் ஒக்கல்லா - ஒரு குளத்து நீரில் தோன்றிஒன்றாய் வளர்ந்தாலும் மணம்வீசும் இயல்புடையகுவளைமலர்களை ஆம்பல் மலர்கள் ஒவ்வா ;பெருநீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார்கருமங்கள் வேறுபடும் அதுபோலப் பெருந்தன்மையுடையாரது நட்பைப் பெறினும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் வேறாகவே நிகழும். கருத்து: கூடா நட்பினர் எவ்வளவுபழகினாலுந் தஞ் சிறுமைகளை விடாராகலின்அத்தகையவரோடு நேயங்கொள்ளலாகாது. விளக்கம்: குவளையென்றது, ஈண்டுநறுமணங்கமழுஞ் செங்கமழுநிர் மலர்."கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ்குவளை" யென்றார் பிறரும். வேறுபடும்என்றது, தாழ்வாகவே நிகழுமென்னும் பொருட்டு. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு முற்றற் சிறுமந்தி முற்பட்ட தந்தையை நெற்றுக்கண் டன்ன விரலான் ஞெமிர்த்திட்டுக் குற்றிப் பறிக்கும் மலைநாட! இன்னாதே ஒற்றுமை கொள்ளாதார் நட்பு. குறிப்புரை: சிறுமந்தி முற்பட்டதந்தையை நெற்றுக் கண்டன்ன விரலால் குற்றிஞெமிர்த்திட்டு முற்றல் பறிக்கும் மலைநாட -இளங்குரங்கு, பயற்றங்காயின் நெற்றைக்கண்டாற்போன்ற தன் விரல்களால் தன் எதிர்வந்ததந்தையின் கையைக் குத்தி விரியச்செய்து அதுவைத்திருந்த கனியைப் பறித்துக் கொள்கின்றமலைகளையுடைய நாடனே!, ஒற்றுமை கொள்ளாதார் நட்புஇன்னாது - அகங்கலந்த நேயங்கொள்ளாதாரது நட்புதுன்பமுடையதாகும். கருத்து: உள்ளம் ஒன்றுபடாதகூடாநட்பினரோடு நேயங்கொள்ளலாகாது. விளக்கம்: முற்றல் - செங்காய் -சிறுமந்தியென்றது ஈண்டுக் குரங்கின் குட்டியை ;மந்தி, பெட்டையை உணர்த்தாமற் பொதுவினின்றது.தந்தைபொதுப்பெயர். ஞெமிர்தல் புறத்தில்மட்டுங் கலந்து அகங்கலவாத வேறு பாட்டியல்பைப்புலப்படுத்தும் பொருட்டு ‘ஒற்றுமை கொள்ளாதா'ரென்றார். பரத்தலாதலின் ஈண்டு விரித்தலெனப்பட்டது. "வான் ஞெமிர்ந்து"என்பது மதுரைக் காஞ்சி. மதுரைக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு முட்டுற்ற போழ்தின் முடுகியென் னாருயிரை நட்டா னொருவன்கை நீட்டேனேல் - நட்டான் கடிமனை கட்டழித்தான் செல்வுழிச் செல்க நெடுமொழி வையம் நக. குறிப்புரை: முட்டுற்ற போழ்தில்முடுகி என் ஆர் உயிரை நட்டான் ஒருவன் கைநீட்டேனேல் - நண்பனுக்கு இடுக்கண் உண்டானகாலத்தில் விரைந்து எனது பெறற்கரிய உயிரைநட்புச் செய்த அவ்வொருவன் கையில் நான்ஒப்படைக்கேனானால், நட்டான் கடிமனை கட்டுஅழித்தான் செல்வுழிச் செல்க - தன் நண்பனின்காவலிலுள்ள மனைவியின் கற்புறுதியை நிலைகுலைத்ததீயோன் செல்லுந் தீக்கதிக்கு யான் செல்வேனாக ;நெடுமொழி வையம் நக - அன்றியும் நிலைத்தபுகழினையுடைய உலகம் என்னை இகழ்வதாக. கருத்து: பொருந்திய நண்பெனின்,உற்ற நேரத்தில் தன் நண்பர்க்கு உயிரையும்வழங்கல் வேண்டும். விளக்கம்: முடுகி யென்றது முற்போந்தென்னுங் கருத்தினின்றது. இழந்தால் மீண்டும்பெறற்கருமை நோக்கி ஆருயிரெனப்பட்டது.நீட்டேனேல் என்றது, அவற்குரியதாக இதுகாறுந்தன்பால் வைத்திருந்ததை அவரிடம் உடனேஒப்படைக்கேனாயின் என்னுங் குறிப்பில் நின்றது.கற்பு, ஈண்டு ‘கட்டு' எனப்பட்டது; நாயனாருங்"கற்பென்னுந் திண்மை" என்றதுகாண்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்படு நெய்பெய் தனைத்தரோ ;- தேம்படு நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப் புல்லறிவி னாரொடு நட்பு. குறிப்புரை: தேன் படு நல்வரை நாட -தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே!நயம் உணர்வார் நண்பு ஒரீஇப் புல் அறிவினாரோடுநட்பு - இனியதறியும் பேரறிஞரது நண்பினின்றும்நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பு, ஆன்படு நெய் பெய்கலனுள் அது களைந்து வேம்பு அடு நெய்பெய் தனைத்து - ஆனிடத்தில் உண்டாகும் நெய்யைப்பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவேம்பின் விதையைக் காய்ச்சியெடுத்தவேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்றதன்மையதாகும். கருத்து: இனிதறியாதபுல்லறிவினாரான கூடா நட்பினருடன் நேயஞ்செய்தலாகாது. விளக்கம்: ‘தேம்படு' என்னும்புணர்ச்சி முடிபு, "தேனென் கிளவி""மெல்லெழுத்து மிகினும்" என்பவற்றான்முடிந்தது. அரோஅசை. நயமுணர்வாரென்றார், இனியராயொழுகும் இயல்பறிவாரென்றற்குசிற்றறிவினார்க்கு அத்திறம் வாயாமையின்புல்லறிவினா ரென்று விதந்தார். ‘நட்பொரீஇ'யென்று வலித்தல் பெறாமையின், தன்வினைப்பொருள் உரைக்கப்பட்டது. தொல். புள்ளி. -
செல்வம் நிலையாமை பொருட்பால் கூடாநட்பு உருவிற் சுமைந்தான்கண் ஊராண்மை யின்மை பருகற் கமைந்தபால் நீரளா யற்றே தெரிவுடையார் தீயினத்தா ராகுதல் நாகம் விரிபெடையோ டாடிவிட் டற்று. குறிப்புரை: உருவிற்கு அமைந்தான் கண் ஊராண்மை இன்மை பருகற்கு அமைந்த பால் நீர் அளாய் அற்று - காட்சிக்கு இனியனாய் உருவமைந்த ஒருவனிடம் ஒப்புரவில்லாமை, பருகுதற்கு அமைந்த பாலில் நீர் கலந்திருந்தாற்போன்ற தன்மையதாகும். தெரிவு உடையார் தீ இனத்தா ராகுதல் நாகம் விரிபெடையோடு ஆடிவிட்டற்று - ஞானமுடையோர் தீய சார்புடையரோடு நட்புச் செய்தொழுகுதல் நாகப்பாம்பு பெட்டை விரியனோடு தவறாக இழைத்துவிட்டாற் போன்ற தன்மையுடையதாகும். கருத்து: ஒப்புரவும் மெய்யுணர்வுமில்லாத கூடா நட்பினருடன் கூடுதலாகாது. விளக்கம்: ஊரவற்கு உதவியா யொழுகுமியல்பு ஊராண்மை யெனப்பட்டது. தெரிவு, இடருற்ற நேரங்களில் ஆழ்ந்து மெய்ம்மை தெரிந்தொழுகும் அறிவு. விரியனோடு கூடிய நாகம் தன்னியல்பு மாறித் தீயதாய்க் கெடுதலின், அஃதுவமையாயிற்று. விரியனோடு நாகங் கூடினால் இறக்கும் என்ப.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமைபகைவர் பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும் நாணித் தலைச்செல்லார் காணாய் இளம்பிறை யாயக்கால் திங்களைச் சேராது அணங்கருந் துப்பின் அரா. குறிப்புரை: இளம் பிறை ஆயக்கால்திங்களைச் சேராது அணங்கு அரு துப்பின் அரா -பிறிதொன்றினால் வருத்துதலில்லாதவலிமையினையுடைய இராகுவென்னும் பாம்பு, மதியத்தைஅஃது இளைய பிறை நிலாவாய் மாறின் சேராது, பகைவர்பணிவிடம் நோக்கித் தகவுடையார் தாமேயும்நாணித் தலைச்செல்லார் காணாய் - அது போலப்,பகைவரின் தளர்வுநிலை கருதித் தகுதியானஅறிவுடையோர் தாமாகவே உள்ளமொடுங்கி அவர்மேற்செல்லுதலில்லாதவராவர். கருத்து: பகைவரேயாயினும் அவர் நிலைதளரின் அவர்க்கு இரக்கங்காட்டுதல் தகுதியானஅறிவுடைமையாகும். விளக்கம்: பணிவு இங்ஙனந்தாழ்ச்சிப் பொருட்டாதல் "பணிவில்ஆண்மை" என்பதனானுங் காண்க. தகவு, ஈண்டுமேதக்க அறிவுடைமை. உம்மைஅசை.மேற்செல்லலென்பது, போர்மேற் சேறல்.பிறையென்றதோடமையாது இளம்பிறை யென மேலும்விதந்தார், சிறுமையோடு மெலிவுந் தோன்ற வென்க.காணாய்முன்னிலை அசை, எடுத்துக்காட்டுவமை. மலைபடு.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை நளிகடற் றண்சேர்ப்ப நல்கூர்ந்த மக்கட் கணிகல மாவ தடக்கம் - பணிவில்சீர் மாத்திரை யின்றி நடக்குமேல் வாழுமூர் கோத்திரங் கூறப் படும். குறிப்புரை: நளிகடல் தண் சேர்ப்ப -பெரிய கடலின் குளிர்ந்த துறைவனே, நல்கூர்ந்தமக்கட்கு அணிகலமாவது அடக்கம் -வறுமையுற்றமாந்தர்க்கு அணிகலம் போற் சிறப்பதுஅடக்கமுடைமையாகும் ; பணிவில் சீர்மாத்திரையின்றி நடக்குமேல் வாழும் ஊர்கோத்திரம் கூறப்படும் - பணிதலில்லாதுஉயர்ந்தொழுகுதலில் ஒரு வரம்பில்லாமல்நடப்பாரானால் தாம் வாழும் ஊரவரால் தமது குடிப்பிறப்புப் பற்றி பழிக்கப்படுவர். கருத்து: பணிவோடிருத்தல்அறிவுடைமையாகும், விளக்கம்: பின்னும் இன்றியமையாமைபற்றி ‘நல்கூர்ந்த மக்கட்' கென்றார். அறிவாகியஅழகை மேலும் விளங்கச் செய்தலின், அடக்கம்அணிகலம் எனப்பட்டது. சீர், ஈண்டு, உயர்வு ;‘சுருக்கத்து வேண்டும் உயர்வு' என்பவாகலின்.அஃதும் அளவு கடத்தலாகாதென்றற்கு,‘மாத்திரையின்றி நடக்குமேல்' எனப்பட்டது.கூறப்படும் ஐயுற்றுப் பேசப்படும் ; நடக்கும்கூறப்படும் என்பன, "தெய்வத்துள்வைக்கப்படும்" என்புழிப்போல உயர்திணைக்கண் நின்றன. .
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை எந்நிலத்து வித்திடினுங் காஞ்சிரங்காழ் தெங்காகாது எந்நாட் டவருஞ் சுவர்க்கம் புகுதலால் ; தன்னாற்றா னாகும் மறுமை ; வடதிசையுங் கொன்னாளர் சாலப் பலர் குறிப்புரை: எந்நிலத்து வித்துஇடினும் காஞ்சிரங்காழ் தெங்கு ஆகாது - எந்தநிலத்தில் விதையை இட்டாலும் எட்டி விதை தென்னைமரமாக வளராது ; எந்நாட்டவரும் சுவர்க்கம்புகுதலால் தன் ஆற்றான் ஆகும் மறுமை - ஆதலால், எந்தநாட்டின்கண் வாழ்வோரும் தமது நல்வினையினால்தேவருலகம் செல்லுதலால், ஒருவற்குத் தன் முயற்சிவகையினாலேயே மறுமைப் பேறு உண்டாதல் கூடுமன்றிஇடத்தின் சார்பினாலன்று: வடதிசையும்கொன்னாளர் சாலப் பலர் - போக உலகிருக்கும்வடநாட்டின் கண்ணும் வறிது வாழ்நாட் கழித்து நரகுபுகுவோர் மிகப் பலராவர், கருத்து: இடம் முதலிய சார்பினையேபெரிதாகக் கருதாமல் தமது புண்ணியப் பேற்றில்முயற்சியுடையராய் ஒழுகுதலே அறிவுடைமையாகும். விளக்கம்: உம்மை, உயர்வு.கொன்னாளர், பயனிவாளர்; "நம்மருளாக்கொன்னாளர்" என்றார் பிறரும். அவரவர்அறிவின் முயற்சியே அவரவர்க்கு உய்திகூட்டுமென்பது பொருள். கலித்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன் தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை மனந்தீதாம் பக்கம் அரிது. குறிப்புரை: வேம்பின் இலையுட்கனியினும் வாழை தன் தீஞ்சுவை யாதும் திரியாது -வேம்பின் இலையுள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம்தனது இன்சுவையிற் சிறிதும் வேறுபடாது; ஆங்கே இனம்தீது எனினும் இயல்புடையார் கேண்மை மனம் தீது ஆம்பக்கம் அரிது அதுபோலவே, தமக்கு நேர்ந்த சார்புதீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்புமனந்தீயதாய்மாறும் வகை அரிதாயிருக்கும். கருத்து: தம் இயல்பில் அறிவுடைமைதீய சார்பினின்று காக்கும். விளக்கம்: சார்பினால் இயல்புதிரியாமை கூறினமையின், இயற்கை யறிவுடைமைபெறப்பட்டது. ஆம்அசை. பெரும்பான்மையுந்தீதாதல் இன்மையின், ‘அரிது' என்றார்; "இன்மையரிதே வெளிறு" என்பதிற் போல.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை கடல்சார்ந்தும் இன்னீர் பிறக்கும், மலைசார்ந்தும் உப்பீண் டுவரி பிறத்தலால்; தத்தம் இனத்தனைய ரல்லர் எறிகடற்றண் சேர்ப்ப மனத்தனையர் மக்களென் பார். குறிப்புரை: எறிகடல் தண் சேர்ப்ப -அலைகள் வீசுகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே!, கடல் சார்ந்தும் இன் நீர்பிறக்கும் மலைசார்ந்தும் உப்பு ஈண்டு உவரிபிறத்தலால் - கடலை யடுத்தும் இன்சுவை மிக்கஊற்றுநீர் தோன்றுதலுண்டு, மலையை யடுத்தும்உவர்ப்பு மிக்க உப்புநீர் உண்டாதலால்; மக்கள்என்பார் இனத்தனையர் அல்லர் மனத்தனையர் -பகுத்தறிவுடைய மக்களென்று சிறப்பிக்கப்படுவோர்தமது சார்போடொத்த இயல்பினரல்லர்; தத்தம்இயற்கையறிவோடொத்த நிலையினராவர். கருத்து: மக்கள் தத்தம்இயற்கையறிவிற்கேற்பவே ஒழுகுவராதலின்,அவ்வறிவினை அவர் தகுதியாகப் பெற்றிருத்தல்நன்று. விளக்கம்: உப்பு, உவர்ப்புச்சுவைஉணர்த்திற்று. உவரி, உவர்ப்புடைய நீர்."வல்லூற் றுவரி தோண்டி" என்றார்பிறரும். பிறக்கும். பிறக்கும் ஆதலால் என்றுபிரித திசைத்துக் கொள்க. மனமென்றது, ஈண்டுஇயற்கையறிவோடொத்த மனப்பான்மையென்க. பெரும்பாண்
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை பராஅரைப் புன்னை படுகடற் றண்சேர்ப்ப! ஒராஅலும் ஒட்டலுஞ் செய்பவோ? நல்ல மரூஉச்செய் தியார்மாட்டுந் தங்கு மனத்தார் விராஅஅய்ச் செய்யாமை நன்று. குறிப்புரை: பரு அரைப் புன்னை படுகடல்தண் சேர்ப்ப - பருமனான அடிமரத்தையுடைய புன்னைமரங்கள் உண்டாகின்ற கடலின் குளிர்ந்தகரையையுடையவனே! ஒராலும் ஒட்டலும் செய்பவோ -நண்பரை ஒருகாற் பிரிதலும் மற்றொருகாற் கூடுதலும்உலகத்திற் செய்யத் தக்கனவோ?, நல்ல மரூஉச்செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் விராய்ச்செய்யாமை நன்று - சிறந்த நட்புச் செய்துஎத்தகையோரிடத்தும் நிலைத்தொழுகும்மனப்பான்மை யுடையோர் முதலிலேயே யாவரோடும்மனங்கலந்து நட்புச் செய்துகொள்ளாமை அதனினும்நன்றாகும். கருத்து: கூடுதலும் பிரிதலுமின்றியொழுகுதல் அறிவுடைமையாகும். விளக்கம்: செய்பஈண்டு அஃறிணைப்பன்மை. மரூஉ, பெயர் இரண்டும் ஒரே பொருளன. யார்மாட்டுமென்றார், நேரல்லாரையும் அடக்கி.ஒருவரோடு கூடுதலும் பிரிதலும் செய்துகொண்டிருத்தலினுங் கூடாமையே நன்றென்றபடி, நல்லமரூஉச் செய்து யார்மாட்டுந் தங்கு மனத்தாரென்றது,தக்கோரெனற் பொருட்டு, அம் மனத்தார் பின்பிரிதலாற் பெருந் துன்பமுறுவாதலின், அவ்வாறுவிதந்தார்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை உணர உணரும் உணர்வுடை யாரைப் புணரிற் புணருமாம் இன்பம் - புணரின்; தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப் பிரியப் பிரியுமாம் நோய். குறிப்புரை: புணரின் - நட்புச்செய்தால், உணர உணரும் உணர்வுடையாரைப் புணரின்இன்பம் புணரும் - நாம் ஒன்றை உள்ளத்தால் உணரஅதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங்கூருணர்வுடையாரை நட்புச் செய்யின் இன்பம்பொருந்தும்; தெரியத் தெரியும் தெரிவு இலா தாரைப்பிரியப் பிரியும் நோய் - நம் கருத்துக்கள்வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றைஅறிந்தொழுகும் அறிவிலாதாரை நட்புச் செய்யாமற்பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற்பிரிந்திருக்கும். கருத்து: குறிப்பறிந்தொழுகும்கூரறிவாற்றலால் இன்பம் விளையும். விளக்கம்: ‘குறிப்பிற் குறிப்புணர்வாரை உறுப்பினுள், யாது கொடுத்துங் கொள்' லென்பவாகலின்,இங்ஙனங் கூறினார். ஆம் இரண்டும் அசைநிலை.‘ஒருகால் தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைத்தவறாகப் புணரின் அவரைப் பிரிய நோய் பிரியும்'என்றும் உரைக்கலாமேனும், எந்நிலைக்கண்ணும்பிரிதலென்பது கூடாமைமேல் நிறுத்தப்பட்டமையின்அது பொருந்தாது. ‘பிரியப் பிரியுமாம் நோய்'என்றது. முற்கருத்தை எதிர்மறையானும்விளக்கியபடியாம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத் தலையாகச் செய்வானும் தான். குறிப்புரை: நல் நிலைக்கண் தன்னைநிறுப்பானும் - சிறந்த நிலையில் தன்னைநிலைநிறுத்திக் கொள்வோனும், தன்னைநிலைகலக்கி கீழ் இடுவானும் -தனது முன் நிலையையுங்குலையச் செய்து தன்னைக் கீழ்நிலைக்கண்தாழ்த்திக்கொள்வோனும், மேன்மேல் உயர்த்துநிறுப்பானும் - தான் முன் நிறுத்திக்கொண்டசிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில்தன்னை மேம்படுத்தி நிலை செய்து கொள்வோனும்,தன்னைத் தலையாகச் செய்வானும் - தன்னைஅனைவரினுந் தலைமையுடையோனாகச் செய்துகொள்வோனும், தான் - தானேயாவன். கருத்து: ஒருவனுக்குத் தன் அறிவுமுயற்சியே எல்லாவற்றிற்குந் துணை. விளக்கம்: "தத்தம் கருமமேகட்டளைக் கல்" லாதலின் இங்ஙனங்கூறினார். நிலையினும் என்னும் உம்மை உயர்வு,உயர்த்து வானுமென்னாது உயர்த்துநிறுப்பானுமென்றார். உயர்நிலையை வருவித்துக்கொள்ளுதலோடு அவ்வுயர் நிலைக்கண் தன்னைவல்லமையாய் நிலைநிறுத்திக்கொள்வோனுமென்றற்கு; தன்னை என்பதை இதன்கண்ணும் ஒட்டிக்கொள்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை கரும வரிசையாற் கல்லாதார் பின்னும் பெருமை யுடையாருஞ் சேறல் - அருமரபின் ஓதம் அரற்றும் ஒலிகடற் றண்சேர்ப்ப! பேதைமை யன்ற தறிவு. குறிப்புரை: அரு மரபின் ஓதம்அரற்றும் ஒலிகடல் தண் சேர்ப்ப - அரியதன்மையையுடைய அலைகள் முழங்கும் முழக்கமிக்ககடலின் குளிர்ந்த துறைவனே!, கரும வரிசையால் -தொழில் முறைமையினால், கல்லாதார் பின்னும்பெருமையுடையாரும் சேறல் பேதைமையன்று அது அறிவு -கல்வியறிவில்லாத மூடரை யடுத்தும் கல்விப்பெருமையுடைய அறிஞரும் ஒழுகுதல், அறியாமை யன்று; அதுகாலம் இடம் முதலியவற்றிற்கேற்ப ஒழுகும்அறிவுடைமையாகும், கருத்து: கல்லர்தவரிடமும்காரியநிமித்தம் அளவாக ஒழுகிக் கொள்ளுதல்அறிவுடைமையாகும். விளக்கம்: கரும வரிசையால் என்றது,காரணங் கூறியபடி. உம்மைகள் இரண்டனுள் முன்னது,இழிபிலும் பின்னது உயர்விலும் வந்தன. ‘அருமரபின்கடல்' என்க, ஆழமும் அகலமும் வாய்ந்து உப்பு முத்துமுதலிய அரும்பொருள்களுடைமையானும் உலகவொழுக்கத்துக்கு மழை முதலிய கொடைகளால்ஏதுவாயிருத்தலானும் கடலின் அருமரபு பெறப்படும்:"மகர வாரிவளம்" என்றார் பிறரும். சிலப்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவுடைமை கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா - ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப பட்டினம் பெற்ற கலம். குறிப்புரை: கருமமும் உட்படாபோகமும் துவ்வா தருமமும் தக்கார்க்கே செய்யா -பொருள் வரவுக் கேதுவான தொழின் முயற்சியினும்ஈடுபட்டு அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந்துய்த்து மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கேஅறமுஞ் செய்து, ஒரு நிலையே முட்டின்றி மூன்றும்முடியுமேல் - இம்மூன்றும் ஒரு தன்மையாகவே பிறவியிற்கடைசிவரையிற் றடையின்றி நிறைவேறுமாயின், அஃதுபட்டினம் பெற்ற கலம் என்ப - அப் பேறு, தன்பட்டினத்தை மீண்டு வந்தடைந்த வாணிகக் கப்பலைஒக்கும் என்று அறிஞர் கூறுவர். கருத்து: முயற்சியும் போகமும்அறமுமுடையனாய் வாழ்தலே அறிவுடைமையாகும். விளக்கம்: உட்படாமுதலிய வினைகள்உடன்பாட்டின் கண் வந்தன. தக்கார் , கல்வியறிவுஒழுக்கங்களாகிய தகுதியுடையோர், மூன்றும்ஒன்றுபோல் நடைபெற வேண்டுமென்றற்கு ‘ஒருநிலையே'யென்றும், இடையில் ஊறுபடாமல் நடைபெறவேண்டுமென்றற்கு ‘முட்டின்றி' யென்றுங் கூறினார்.‘இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல்உடைகலப் பட்டாங் கொழிந்தோர்' பலராகலின், உவமை, அருமை புலப்படுத்தி நின்றது. மணிமே. -
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை நுண்ணுணர் வின்மை வறுமை, அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்; - எண்ணுங்கால் பெண்ணவாய் ஆணிழந்த பேடி யணியாளோ, கண்ணவாத் தக்க கலம். குறிப்புரை: எண்ணுங்கால் -ஆராயுமிடத்து; நுண் உணர்வு இன்மை வறுமை - ஒருவனுக்குநுட்ப அறிவில்லாமையே வறுமையாவது; அஃது உடைமைபண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -அந் நுட்பஅறிவினை உடையவனாயிருத்தலே அவனுக்குமிகப்பெருகிய பெருஞ் செல்வமாகும்; பெண் அவாய்ஆண் இழந்த பேடி அணியாளோ கண் அவாத் தக்க கலம் -மற்றுப் பெண்ணியல்பு மிக்கு ஆணியல்பு நீங்கியபேடியும் கண்கள் விரும்பத்தக்க அழகியஅணிகலன்களை அணிந்து கொள்ளுதலுண்டன்றோ!அதனையொத்ததே அறிவிலார் ஏனைச்செல்வமுடையராயிருந்து மகிழ்தலென்க. கருத்து: நுண்ணுணர்வில்லாமை ஏனையெவையிரப்பினும் இல்லாமையையே தரும். விளக்கம்: ‘சின்னஞ் சிறிய'‘பன்னம் பெரிய' என்றாற்போற், ‘பண்ணப்பணைத்த' வென்பதுங் கொள்க. ஆண் தன்னியல்புகுறைந்து பெண்தன்மை மிக்கபோது பேடி யெனப்படும்;பெண் அணிதற்குரிய அணிகலன்களைப் பேடியும் அணிந்துவீண் மகிழ்வு கொள்ளுதலை யொத்ததேநுண்ணுணர்வினர் அடைந்து பயன்பெறுதற்குரியசெல்வத்தை அஃதில்லாதார் பெற்றுவீணாக்குதலென்க. ‘பேடி அணியாளோ' என்னும் முடிவு,"உயர்திணை மருங்கிற்பால்பிரிந்திசைக்கும்" என்பதனாற்கொள்ளப்படும். தொல். கிளவி.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து அல்ல லுழப்ப தறிதிரேல் - தொல்சிறப்பின் நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே, பூவின் கிழத்தி புலந்து. குறிப்புரை: பல் ஆன்ற கேள்விப்பயன் உணர்வார் பாடு அழிந்து அல்லல் உழப்பதுஅறிதிரேல் - பல நிறைந்த கேள்விகாளல் உண்டாகும்பயனைத் தமது பழக்கத்தில் நுகர்ந்து இன்புற்றுவரும்அறிஞர்கள் ஒரோவொருகால் உலகில் தம் பெருமைஅழிந்து வருந்துவதற்குக் காரணம் நீவிர் தகுதியாகஅறிவீராயின்; தொல்சிறப்பின் நாவின் கிழத்திஉரைதலால் சேராளே பூவின் கிழத்தி புலந்து - அது,பழைமையாகத் தொடர்புற்றுவருஞ் சிறப்பினையுடையநாமகள் வாழ்ந்து வருவதால் பூமகள் ஊடல் கொண்டுஅவர்களிடம் சேரமாட்டாள் என்பதேயாம். கருத்து: கல்வி கேள்விகளிற்பழகிவரும் உள்ளம் பொருள் நினைவுகள் படிதற்குஇடம்பெறாமையின், ஒரோவொருகால்அவ்வுள்ளமுடையோர் வறியராயிருப்பது இயல்பு. விளக்கம்: ‘கேள்விப் பயன்'என்றார். செல்வத்தில் அத்தகையபயனில்லாமையின், அறிவு உயிரைப் பற்றித்தொடர்ந்து வருதலின், நாமகட்குத் தொன்மைகூறப்பட்டது. கல்வி கேள்விகளில் விரைந்தோடும்நினைவு செல்வத்திற் செல்லாமையின், ‘சேராளேபூவின் கிழத்தியென்றார். இமயமலையில் மரகதப்பாறையில் பதுமை என்னுங் கயத்திற்பொற்றாமரையில் திருமகள் சிறப்பின் உறைவள்என்பது, ‘அருமணி மரகதத் தங்கண் நாறிய எரிநிறப்பொன்னிதழ் ஏந்து தாமரைத் திருமகள்' என்னுஞ் சிந்தாமணியினாலும் அதனுரையினாலும்அறியப்படுதலின் திரு. பூவின் கிழத்தியாதல்பெறப்படும். சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை கல்லென்று தந்தை கழற அதனையோர் சொல்லென்று கொள்ளா திகழ்ந்தவன் - மெல்ல எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா வழுக்கோலைக் கொண்டு விடும். குறிப்புரை: கல் என்று தந்தை கழறஅதனை ஓர் சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் -இளமையில் தன் தந்தை ‘படி' என்று இடித்துக் கூற அதனைஒரு நற் சொல் என்று ஏற்காமற் பொருள்செய்யாதுவிட்டவன், மெல்ல எழுத்தோலைபல்லார்முன் நீட்ட விளியா வழுக்கு ஓலைக்கொண்டுவிடும் - பின்பொருகால், எழுத்தெழுதியகடிதமொன்றைப் பலர் முன்னிலையில் ஒருவர் இதனைப்படியுமென்று மெல்லத் தன் கையிற் கொடுக்கத்தனக்கு அது மாட்டாமையால் நாணத்தாற் சினந்து கூவிமானத்தால் ஓவென்று அழுதுவிடுவான். கருத்து: அறிவின்மை பலர்முன்னிலையில் மானக்குறைவைத் தரும். விளக்கம்: ‘மெல்ல நீட்ட'வென்றார். அஃதவன் சினத்தை யெழுப்புதலின். வளியா: உடன்பாட்டுவினை. வழுக்கு ஓல்- குறைவினால்உண்டாகும் அழுகை யொலி; அவ்வொலியைக்கொண்டுவிடும் என்க. ஓல் ஒலியென்னும்பொருட்டாதல் "அருவி மருங்கு ஓலுறத்த" என்பதிற் காண்க. இறைய. , உரை
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅது உரைப்பினும் நாய்குரைத் தற்று. குறிப்புரை: கல்லாது நீண்ட ஒருவன் -கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன்,உலகத்து நல்லறிவான ரிடைப் புக்கு மெல்லஇருப்பினும் நாய் இருந்தற்று - உலகத்தில் உயர்ந்தஅறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம்தெரியாமல் இருந்தாலும் அந்நிலை ஒரு நாய்இருந்தாற் போன்ற தன்மையையுடையதாகும்; இராதுஉரைப்பினும் நாய் குரைத்தற்று - அவ்வாறு அடக்கமாகஇராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அதுநாய் குரைத்தாற் போன்ற தன்மையுடையதாகும். கருத்து: கல்வியறிவு பெறாதோர்நாயின் நிலையில் வைத்துக் கருதப்பட்டார். விளக்கம்: நீண்ட என்றார்,ஓரறிவுயிர்போற் கருதி அதன் இழிவு தோன்ற.அறிவாளரின் அறிவொளிமுன் தன் வலியடங்கிஅடக்கமுடையான் போல் திகைத்திருத்தலின்,‘மெல்ல இருப்பினும்' என்றார். நாய் என்றது, இழிவுகருதி ; "நவையின் அகல" என்னுமிடத்துநச்சினார்க்கினியர்" நாயுடம்பி னீங்க"என உரைத்த உரையினால் இதனை யறிக. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை புல்லாப்புன் கோட்டிப் புலவ ரிடைப்புக்குக் கல்லாத சொல்லுங் கடையெல்லாம் - கற்ற கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருண்மேல் படாஅ விடுபாக் கறிந்து. குறிப்புரை: புல்லாப் புன்கோட்டிப்புலவரிடைப் புக்குக் கல்லாத சொல்லும்கடையெல்லாம் - அறிவு நிரம்பாதகீழ்மக்களெல்லாரும் அவ்வாறே மெய்யறிவோடுபொருந்தாத புல்லறிவுக் கூட்டத்தவரான தாழ்ந்தபுலவர் நடுவிற் புகுந்து தாம் தெளிவாகக் கல்லாதகருத்துக்களையெல்லாம் ஆரவாரமாகவிரித்துரைப்பர்; கற்ற கடாயினும் சான்றவர்சொல்லார் பொருள்மேல் படா விடுபாக்கு அறிந்து -ஆனால் அறிவு நிரம்பிய பெருமக்களோ, தாம் கற்றகருத்துக்களைப் பிறர் வினவினாலும் அந்நுண்பொருள்கள் மேல் அவரறிவு கூரிதாகச்செல்லமாட்டாமல் விட்டுப் போதல் தெரிந்துஅவற்றைக் கூறாமல் அடக்கமாயிருப்பர். கருத்து: அறிவின்மையுடையார்அறிவுடையாரைப் போல் அடக்கமாயிரார். விளக்கம்: புலவரில் தாழ்தரமானவர்,ஈண்டுப் ‘புல்லாப் புன்கோட்டிப் புலவ'ரெனப்பட்டார். கடையெல்லாம் - கீழ்மக்களெல்லாரும்; சொல்லும்முற்று. விடு பாக்கு :தொழிற் பெயர்ப் பொருளில் வந்தது. "அஞ்சுதும்வேபாக்கறிந்து" என்புழிப் போல. 'படாவிடுபா' கென்றமையான், பொருள் நுண்பொரு ளெனப்பெறப்பட்டுச் சான்றவர்தம் நுண்ணறிவைப்புலப்படுத்தா நின்றது. குறள்
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை கற்றறிந்த நாவினார் சொல்லார்தம் சோர்வஞ்சி மற்றைய ராவார் பகர்வர் பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும் , எஞ்ஞான்றும் பச்சோலைக் கில்லை யொலி. குறிப்புரை: கற்றறிந்த நாவினார்சொல்லார் தம் சோர்வு அஞ்சி - கற்றுத்தெளிந்தநாவன்மையினையுடைய மேலோர் தம் தவறுதலுக் கஞ்சிமிகுதியாகப் பேசார்; மற்றையராவார் பகர்வர் -ஆனால், கற்றறிவில்லா ஏனைய ராவோர்அவ்வச்சமின்றி யாதானும் பேசிக்கொண்டிருப்பர்;பனையின்மேல் வற்றிய ஓலை கலகலக்கும்எஞ்ஞான்றும் பச்சோலைக்கில்லை ஒலி -பனைமரத்தில் நீர்வற்றிய உலர்ந்த ஒலைகலகலவென்று ஓசையிட்டபடி யிருக்கும், ஆனால்நீர்ப்பசைபோடு கூடிய பச்சை ஓலைக்கு எப்போதும்ஒலி இல்லையாதல் காண்க. கருத்து: அறிவில்லாதார்எப்போதும் ஆரவாரித்துக் கொண்டிருப்பார். விளக்கம்: சொல்வன்மையுடையாரேசொல்வார் என்றற்கு நாவினாரென்று விதந்தார்.பனையின்மேல் என்றது. பனையில் என்றற்கு: இஃதுஎடுத்துக்காட்டுவமை. கலகலக்கும் என்றது இரட்டைக்கிளவி. தொல். கிளவி.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்; நன்றறியா மாந்தர்க் கறத்தா றுரைக்குங்கால்; குன்றின்மேற் கொட்டுந் தறிபோல் தலைதகர்ந்து சென்றிசையா வாகுஞ் செவிக்கு. குறிப்புரை: பன்றிக் கூழ்ப்பத்தரில் தேமா வடித்தற்று நன்றி அறியாமாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால் -நன்மையறியாத கீழ்மக்கட்கு அறமுறைமைஅறிவுறுக்குமிடத்து அது, பன்றிக்குக் கூழ்வார்க்குந்தொட்டியில் தேமாம்பழத்தைச் சாறுபிழிந்தாற்போல் தகுதியற்றதாகும்;குன்றின்மேல் கொட்டுந் தறிபோல் தலை தகர்ந்துசென்று இசையாவாகும் செவிக்கு - அன்றியும், ஒருமலைப்பாறையின்மேல் அறையப்படும் மரத்தாற்செய்யப்பட்ட முளைக்குச்சி நுனி சிதைந்து அதனுள்இறங்கிப் பொருந்தாமைபோல அவ்வறவுரையும் அவர்செவிக்கு நுழைந்து பொருந்தாதனவாகும். கருத்து: அறிவில்லாதார்அறிவுரைகள் ஏற்று ஒழுகும் வாய்ப்பில்லாதவராவர். விளக்கம்: தேமா, இன்சுவை மிக்கமாங்கனியின் வகை; முதலில் தகுதியில்லாமை கூறிப்பின் பயன்படாமையுங் கூறினார். குன்றின்மேலென்றது, கல்லிலென்னும் பொருட்டு, தறி, துண்டாகநறுக்கியெடுக்கப்பட்ட முளைக்குச்சி, அறச்சுவைஅறியாது, மறச்சுவை பயின்றிருக்கும்மனத்தியல்பும், அறிவுரைகள் ஏலாது பாறைப்பட்டுக்கிடக்கும் செவிகளின் வன்மையும் ஈண்டு நன்குவிளக்கப்பட்டன. குழிந்த இடம்பத்தரெனப்படுமாகலின்; ஈண்டுத்தொட்டிக்காயிற்று; "நீர்வாய்ப் பத்தல்" என்பதுங் கருதுக. பதிற்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று! கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா நோலா உடம்பிற் கறிவு. குறிப்புரை: பாலால் கழீஇப் பலநாள்உணக்கினும் வாலிதாம் பக்கம் இருந்தைக்குஇருந்தன்று - பலநாள் பாலினாற் கழுவிஉலர்த்தினாலும் வெண்ணிறம் உடையதாம் நிலைமைகரிக்கு இல்லை; கோலால் கடாய்க் குறினும் புகல்ஒல்லா நோலா உடம்பிற்கு அறிவு - அவ்வாறே,கோலால் அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ்செய்யாத உடம்பில் அறிவு ஏறாது. கருத்து: அறிவில்லார் -புண்ணியமில்லாதவராதலின் அவர் திருந்துதல்அருமையாயிருக்கும். விளக்கம்: உவமையால் நன்முறையாற்றிருத்துதலும் பொருளால் அச்சுறுத்தித் திருத்தலும்பெறப்பட்டன - இருந்தை என்பது கரிஇருமைகருமையாகலின் அப்பெயர் பெற்றது. இருந்தன்று :எதிர்மறைப்பொருட்டு. குறினும்; குற்றினும்;குத்தினும் என்க. புகலொல்லாஒரு சொல் .கீழ்மக்களின் இழிவு கருதி அவரை ‘நோலா உடம்'பென்று விதந்தார்.
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈப்போல், இழிந்தவை தாங்கலந்த நெஞ்சினார்க் கென்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச்சொல் தேர்வு. குறிப்புரை: பொழிந்து இனிதுநாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தமை காமுறும்ஈப்போல் -தேன் சொரிந்து இனிது மணந்தாலும் மலரைஉண்ணுதற்குச் செல்லாமல் இழிந்த பொருள்களையேவிருப்பும் ஈயைப்போல், இழிந்தவை தாம் கலந்தநெஞ்சினார்க்கு என்னாகும் தக்கார்வாய்த் தேன்கலந்த தேற்றச் சொல் தேர்வு - இழிந்த குணங்களேபொருந்திய மனமுடையார்க்குத் தகுதியுடையார்வாயினின்று வரும் இனிமை பொருந்திய தெளிந்தஅறிவுரைகளின் தெரிவுநிலை என்ன பயனைத் தரும்? கருத்து: அறிவில்லார் இழிந்தஇயல்புகளையே நாடுவர். விளக்கம்: பூமிசைதலென்பதுதேன்மிசைதல், "பூவுண் வண்டு" என்பழிப்போல. தாம்; சாரியை. நெஞ்சினார்க்கு,புல்லறிவினார்க்கு; தெரிந்தெடுக்கப்பட்ட தகுதிநிலை ஈண்டுத் தேர்வெனப்பட்டது. சொற்களுள் இவைஉயர்வென்று சிறந்தோரால் தெரிந்தெடுக்கப்பட்டஅவற்றின் தகுதிநிலை, இழிந்தவை கலந்தநெஞ்சினார்க்கு யாது பயன்றரும் என்பது பொருள். சிந். :
செல்வம் நிலையாமை பொருட்பால் அறிவின்மை கற்றா ருரைக்குங் கசடறு நுண்கேள்வி பற்றாது தன்னெஞ் சுதைத்தலால், - மற்றுமோர் தன்போ லொருவன் முகநோக்கித் தானுமோர் புன்கோட்டி கொள்ளுமாம் கீழ். குறிப்புரை: கற்றார் உரைக்கும் கசடுஅறு நுண் கேள்வி பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் -கல்வியறிவு பெற்றோர் தெரிந்து சொல்கின்றகுற்றமில்லாத நுண்ணிய கேள்விப்பொருளைக்கடைப்பிடியாமல் தனது மனம் இகழ்ந்துதள்ளிவிடுதலால், மற்று தன்போல் ஒருவன் முகம்நோக்கித் தானும் ஓர் புன்கோட்டி கொள்ளும்கீழ் - மற்றுக் கீழ்மகன், தன்போற்கீழ்மகனொருவன் முகத்தைப் பார்த்துத் தானும்உரையாடுதற்கு ஒரு புல்லிய அவையைஅமைத்துக்கொள்வன். கருத்து: அறிவில்லாதவர்அறிவில்லாதவரோடு கூடியே வாழ்நாளை வறிதாக்குவர். விளக்கம்: மற்றுவினைமாற்று. ஓர் :அசை - பேரறிஞர் தம் அறவுரைகளை அறிவுறுத்துதற்குஅவை கூட்டிக் கோடல் போல் இவனும் ஒரு புன்கோட்டிகொள்ளும் என்றார்; பலர் சேராமையின் அதன் இழிவுதோன்ற, ‘ஒருவன் முகநோக்கி' எனப்பட்டது."வெள்ளைக்கோட்டியும் விரகினில் ஒழிமின்" என்றார் பிறரும். சிலப்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் [யார்க்கும் நன்மை பயவாத செல்வம் என்பது பொருள்] அருகல தாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா; பெரிதணிய ராயினும் பீடிலார் செல்வம் கருதுங் கடப்பாட்ட தன்று. குறிப்புரை: அருகலதாகிப் பலபழுத்தக் கண்ணும் பொரிதாள் விளவினை வாவல்குறுகா - குறையாததாகிப் பல பழங்கள் பழுத்தாலும்பொரிந்த அடிமரத்தையுடைய விளாமரத்தைவௌவால்கள் அணுகமாட்டா; பெரிது அணியராயினும்பீடுஇலார் செல்வம் கருதும் கடப்பாட்ட தன்று -அதுபோல. மிக அருகிலுள்ளவராயினும் பெருந்தன்மையில்லாதவரது செல்வம், தக்கோரால், பயன்படுஞ்செல்வமாகக் கருதப்படும் முறைமையுடையதன்று. கருத்து: பெருந்தன்மை யில்லாதவரதுசெல்வம் நலம் பயவாது. விளக்கம்: அவ்வப்போதும்குறையாததாகி என்றற்கு ‘அருகலதாகி' என்றார்.அருகாமை குறையாமைப் பொருட்டாதல், "பருகு வன்னஅருகா நோக்கமொடு" என்பதனாற் காண்க. மேலே,ஓடும் முள்ளுமிருத்தலின், வௌவாற்குப்பயன்படாவாயின, பெரிதணிமை உவமைக்கும்.அருகாமையும் பன்மையும் பொருளுக்கும்உரைத்துக்கொள்க. ஒப்புரவினாலேயேபீடுண்டாதலின், ‘பீடிலார் செல்வம்'என்றார். பொருந.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் அள்ளிக்கொள் வன்ன குறுமுகிழ வாயினும் கள்ளிமேற் கைந்நீட்டார் சூடும்பூ அன்மையால் செல்வம் பெரிதுடைய ராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடை யார். குறிப்புரை: அள்ளிக்கொள்வு அன்னகுறுமுகிழவாயினும் கள்ளிமேல் கைநீட்டார் சூடும்பூஅன்மையால் - அள்ளிக் கொள்ளுதல் போல, நிறையச்சிறிய அரும்புகளுடையன வாயினும் அவை சூடும்மலர்களல்லாமையால் கள்ளிச் செடியின்மேல்யாரும் கை நீட்டமாட்டார்; செல்வம் பெரிதுடையராயினும் கீழ்களை நள்ளார் அறிவுடையார் - அதுபோலச் செல்வம் மிக உடையவர்களானாலும் அதுநன்மை பயவாமையின் கீழ்மக்களை அறிவுடையார்அணுகமாட்டார். கருத்து: கீழ்மக்களின் செல்வம்அறிஞர்களால் மதிக்கப்படாத, நலம் பயவாச்செல்வமாகின்றது. விளக்கம்: கவர்ச்சியாகவும்மிகுதியாகவும் அரும்பெடுத்திருத்தலின், ‘அள்ளிக்கொள்வன்ன' என்றார்; "அள்ளிக் கொள்வற்றேபசப்பு" என்றார் நாயனாரும்கீழ்கள்,அரிதிற் கிடைத்த செல்வத்தைத் தகுதியாகப்பயன்படுத்திக் கொள்ளும் பீடு இலாதார்.எடுத்துக்காட்டுவமை.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் மல்கு திரைய கடற்கோட் டிருப்பினும், வல்லூற் றுவரில் கிணற்றின்கட் சென்றுண்பர்; செல்வம் பெரிதுடைய ராயினும், சேட்சென்றும் நல்குவார் கட்டே நசை. குறிப்புரை: மல்கு திரையகடற்கோட்டு இருப்பினும் வல்ஊற்று உவர்இல்கிணற்றின்கட் சென்று உண்பர் - பலவாக நிறைந்தஅலைகளையுடைய கடற்கரையில் தாம்தங்கியிருந்தாலும் வலிதின் நீருறுதலுடையஉவர்ப்பில்லாத கிணற்றிற் சென்று மக்கள் நீர்பருகுவர்; செல்வம் பெரிதுடையராயினும் சேண்சென்றும் நல்குவார்கட்டே நசை - கீழ்மக்கள்அருகாமமையே செல்வம் மிக உடையவராயினும்தக்கோரின் பொருள் விருப்பம் மிகத் தொலைவுசென்றும் உதவுவார் கண்ணதேயாகும். கருத்து: செல்வமுடையோர்கீழோராயின், தக்கோர்க்கு அது பயன்படுதலில்லை. விளக்கம்: கடலில் இயல்பாக மிக்கநீரிருத்தல் போலின்றிக் கிணற்றிற் சிறுகச்சிறுக முயற்சியோடு நீர் வந்து கூடுதலின்.‘வல்லூற்றுக்கிணறு' எனப்பட்டது. இயல்பாகப் பெருஞ்செல்வம் பெற்றிருத்தலின்றித் தாமே தம்முயற்சியாற் சிறுகச் சிறுகப் பொருளீட்டும்நிலையினராயினும், அவர் நல்குவோராயின் அவரிடமேதக்கோர் உள்ளஞ் செல்லுமென்பது கருத்து.நல்குவாரென்றார், நல்கும் பேரினிமைக்குணமுடையாரென்றற்கு. உண்பரென்றது பொதுவினை,ஏகாரம்தேற்றம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே; உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வாரே, பட்டும் துகிலும் உடுத்து. குறிப்புரை: புணர் கடல் சூழ்வையத்துப் புண்ணியமோ வேறு - கடல் நாற்புறமுஞ்சூழ்ந்து பொருந்தியிருக்கும் உலகத்தில் நல்வினைஎன்பது தனி நிலைமையுடையது; உணர்வதுடையார் இருப்பஉணர்விலா வட்டும் வழுதுணையும் போல்வாரும் பட்டும்துகிலும் உடுத்து வாழ்வார் - ஏனென்றால், நல்லனஉணர்ந்தொழுகுதலுடையார் வளமின்றியிருக்க, அவ்வுணர்வொழுக்கமில்லாரான கறிமுள்ளியுங்கத்தரியும் போன்ற கீழோர் பட்டும் உயர்ந்தஆடைகளும் உடுத்துக்கொண்டுவாழ்வுடையராயிருக்கின்றனர். கருத்து: தக்க உணர்வில்லாதவர்நல்வினைவயத்தாற் செல்வமுடையவராயினும்,அச்செல்வம் தக்கோராற் கண்ணியமாகக்கருதப்படாத நிலையினை யுடையது. விளக்கம்: ‘கிழவர் இன்னோர்என்னாது பொருள் தான் பழவினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையு' மகாலின், அப்புண்ணியத்துக்கும் அறிவொழுக்கங்கட்குந்தொடர்பில்லையென்பார், இவ் ‘வையத்துப்புண்ணியமோ வேறு' என்றார். வளக்குறைவால்ஆரவாரமின்றி யிருக்க வென்னும் பொருட்டு, ‘இருப்ப'என்றார். வட்டும் வழுதுணையுஞ் சிறுமை தோன்றநின்றன. போல்வாருமென்னும் உம்மை, அசை, முன்நல்வினையினாற் செல்வமுடையவராயினும்இப்பிறவியில் மதிக்கத்தக்க நற்சால்புஏதுமின்மையின், அச் செல்வம் நன்மைபயவாச்செல்வமாயிற்றென்பது கருத்து. வருஞ்செய்யுளும்இப்பொருட்டு. கலித்.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க்கொன் றாகிய காரணம், - தொல்லை வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்! நினைப்ப வருவதொன் றில். குறிப்புரை: நல்லார் நயவர் இருப்பநயமிலாக் கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் -உயர்ந்த அறிவு செயல்களுடையாரும் இனியருமானமேலோர் உலகத்திதல் வளமின்றியிருக்க,அவ்வினிமையுங் கல்வியறிவுமில்லாக் கீழோர்க்குஒரு செல்வநிலை உண்டான காரணம், தொல்லைவினைப்பயன் அல்லது வேல்நெடு கண்ணாய் நினைப்பவருவதொன்று இல் - வேற்படை போன்ற நீண்டகண்களையுடைய மாதே! பழைய நல்வினையின் பயனேயல்லது வேறு ஆய்ந்து துணிதற்குரிய காரணம் இல்லை. கருத்து: நற்குணநற்செயல்களில்லார் செல்வராயிருப்பினும்,சான்றோர் அதனை முன்வினைப் பயனென்று கருதிமதியாது செல்வர். விளக்கம்: தம் இயல்பில்நல்லராதலோடு பழகுதற்கும் இனியரென்றற்கு,நயவரென்றுங் கூறினார். ஒன்றென்று சுட்டாதுசென்றார், அது மதிக்கப்படாமையின். ஆராய்ந்துகாணத்தக்க அத்தனை பெரிய காரணம்யாதுமில்லையென்றற்கு, ‘நினைப்ப வருவதொன்றில்'என்று மேலும் விதந்துரைக்கப்பட்டது. தொல்லைவினைப்பயனென்றது. காரணந் தெரிவித்தபடி,"தீதில் வினையினால் நந்துவர் மக்களும்" என்றார் பிறரும். நான்மணிக் :
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் நாறாத் தகடேபோல் நன்மலர்மேற் பொற்பாவாய்! நீராய் நிலத்து விளியரோ - வேறாய புன்மக்கள் பக்கம் புகுவாய்நீ பொன்போலும் நன்மக்கள் பக்கம் துறந்து. குறிப்புரை: நன் மலர்மேல் பொன்பாவாய் - சிறந்த தாமரை மலரின்மேல்வீற்றிருக்கும் பொன்னாலான பாவையை ஒத்ததிருமகளே!, நீறாய் நிலத்து விளியர் - நீசாம்பராய் வெந்து இவ்வுலகத்தில் அழிந்து போகக்கடவாய்; ஏனென்றால், நீ பொன்போலும் நன்மக்கள்பக்கம் துறந்து நாறாத் தகடேபோல் வேறாய்புன்மக்கள் பக்கம் புகுவாய் - போன் போல்மதிக்கப்படுதற்குரிய மேன்மக்களின் பக்கம்நீங்கி அவர்க்கு முற்றிலும் இயல்பில் வேறானகீழ்மக்களின் பக்கம் மணத்தலில்லாதபுறவிதழைப் போற் சேர்ந்து நீ சூழ்ந்துநிற்பாயாதலின். கருத்து: கீழ்மக்களிடம்திரண்டிருக்குஞ் செல்வம் - இருப்பதும் இல்லாததும்ஒன்றே. விளக்கம்: நாறாத் தகடேபோற்புகுவாய் என்க. நல்லோர் வருந்துதலின் மிகுதியைஇச் செய்யுள் பழித்துரை கூறுமுகமாக நன்குவிளக்கிற்று. விளியியர் என்னும் வியங்கோள்விளியர் என நின்றது. உணர்வில்லாரிடம் செல்வம்சேருங்கால் அது நன்றியில் செல்வமாய் மணமற்றுப்போதலால், புறவிதழ் மலரைச் சூழ்ந்து அதனைக்காத்து நிற்றல் போற் செல்வம்அவ்வுணர்விலாரைச் சூழ்ந்து திரண்டு காத்துநிற்றலானும் ‘நாறாத்தகடேபோற் புகுவாய்'என்றார். முன்னும் இச் செய்யுட் கருத்துவந்தது. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் நயவார்கண் நல்குரவு நாணின்று கொல்லோ; பயவார்கட் செல்வம் பரம்பப் பயின்கொல்; வியவாய்காண் வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே. நயவாது நிற்கு நிலை. குறிப்புரை: நயவார்கண் நல்குரவுநாணின்றுகொல் - தாழ்ந்தொழுகி இரவாதநன்மக்கள்பால் உள்ள வறுமைக்குவெட்கமில்லைபோலும்; பயவார்கண் செல்வம்பரம்பப் பயின்கொல் - பிறர்க்குப்பயன்படுதலில்லாத புன்மக்களிடம் செல்வம்பரவுவதற்கு அது பிசின்போலும்; வியவாய் காண்வேற்கண்ணாய் இவ்விரண்டும் ஆங்கே நயவாதுநிற்கும் நிலை - வேற்படையை ஒத்த கண்களையுடையபெண்ணே! வறுமையும் செல்வமுமென்னும் இவ்விரண்டும்அவ்விடங்களில் இனிமைப்படாது நிற்கும்இயல்புக்கு நீ வியப்படைவாய். கருத்து: கீழ்மக்களின் செல்வம்இனிமைப்படாது. விளக்கம்: நயவார்எதிர்மறை,பயின் பிசினாதல், ‘‘பல் கிழியும் பயினும்' என்பதனாலுங் காண்க. இனிமைப் படாமையோடுநிலையாகவும் உள்ள தன்மை வியப்பிற்குரியதாகலின்' ‘வியவாய்காண்' என்றார்.வியவாய், ஈண்டு உடன்பாடு. காண்முன்னிலையசை. சிந். .
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் வலவைக ளல்லாதார் காலாறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர்; - வலவைகள் காலாறுஞ் செல்லார் கருனையால் துய்ப்பவே மேலாறு பாய விருந்து. குறிப்புரை: வலவைகள் அல்லாதார்கால் ஆறு சென்று கலவைகள் உண்டு கழிப்பர் -நாணிலிகளல்லாத நல்லோர் தம் வறுமையால் ஊர்விட்டு ஊர் கால்வழி நடந்துபோய் அங்கங்குக்கிடைக்கும் இழிந்த கலவையுணவுகள் உண்டு காலங்கழிப்பர்; வலவைகள் கால் ஆறுஞ் செல்லார்கருனையால் துய்ப்ப மேல் ஆறு பாயவிருந்து - ஆனால்நாணிலிகளான புல்லியோர் கால் வழியும் நடந்துசெல்லாராய்த் தம்மேல் நெய் பால் தயிரென்னும்ஆறுகள் பாய்ந்தொழுகக் கறிகளோடு விருந்துண்டுஇன்புறுவார். என்னே இவ்வுலகியற்கை! கருத்து: கீழ்மக்களின் செல்வம்வீண் களியாட்டங்கட்கே செலவாகும். விளக்கம்: பலரிடமிருந்து சிறுகச்சிறுகக் கிடைக்கும் பல்வேறு உணவு கறிகளை ஒருங்குசேர்க்க அஃது ஒரு வேளை யுணவுக்குப் போதியதாதலின்,கலவையுண வெனப்பட்டது; காலாறுஞ் செல்லாரெனவேஊர்திகளில் இறுமாந்து செல்வரென்பது பெறப்படும்.கருனையாலென்னும் ஆலுருபு "பெண்டகையால்பேரமர்க்கட்டு" என்புழிப்போலஉடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது.
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்; வெண்மை யுடையார் விழுச்செல்வம் எய்தியக்கால் வண்மையும் அன்ன தகைத்து. குறிப்புரை: பொன் நிறச் செந்நெல்பொதியொடு பீள் வாட மின் ஒளிர் வானம்கடலுள்ளும் கான்று உகுக்கும் - பொன்னின்நிறத்தையுடைய உயர்ந்த செந்நெல் என்னும் பயிர்மேல் மூடிய தாளுடன் உள்ளிருக்குங் கருவும் வாட,மின்னல் மிளிரும் மேகம் கடலுள்ளும் நீர்சொரிந்து பெய்யும்; வெண்மையுடையார் விழுச்செல்வம் எய்தியக் கால் வண்மைவும் அன்ன தகைத்து- அறியாமையுடைய புன்மக்கள் சிறந்த செல்வத்தைஅடைந்தால் அவர் கொடைத்திறமும் அதுபோன்றஇயல்பினதேயாகும். கருத்து: புன்மக்கள் செல்வம்தேவையற்றோர்க் கெல்லாங் கொடுக்கும்படிநேர்ந்து வீணாகச் செலவழியும். விளக்கம்: கடலுள்ளு மென்றார்களருள்ளுமென்றற்கு. மேகம் பயிரின்மேற்செல்லும்போது நீரை வெளிப்படுத்தாமற் கடலுலிங்களரிலுஞ் செல்லுங்கால் வீணாய்வெளிப்படுத்துதலின், உகுக்கும் என்னாதுகான்றுகுக்கும் என்றார்; கான்றல்,வெளிப்படுத்துதல். "இன்மை யரிதே வெளிறு" என்புழிப் போல. வெண்மை அறியாமையுணர்த்திற்று.பெய்தற்குரிய தகுதியான இடத்தில் பெய்யாமற்காற்றால் ஈர்ந்து அலைப்புண்ட விடத்தே மேகம்நீரைக் கக்கிவிடுதலின், அவ்வாறே உதவுதற்குரியதகுதியாளர் இன்னா ரென்றறியாமல் தம்மைவன்கண்மை செய்யுந் தறுகணாளர்க்கும் வீணர்க்குமேகயவர் தமது செல்வத்தை உகுத்து விடுவாரென்றார்,‘வண்மையும் அன்ன தகைத்து' என்றார். "ஈர்ங்கைவிதிரார் கயவர் கொடிறுடைக்குங் கூன்கையரல்லாதவர்க்கு" என்றார் நாயனாரும். .
செல்வம் நிலையாமை பொருட்பால் நன்றியில் செல்வம் ஓதியும் ஓதார் உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார்;- தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார், செல்வரும் நல்கூர்ந்தார் ஈயா ரெனின். குறிப்புரை: ஓதியும் ஓதார்உணர்விலார் ஓதாதும் ஓதி யனையார் உணர்வுடையார் -இயற்கையறிவில்லாதவர் நூல்களை ஓதினாராயினும்ஓதாதவரேயாவர், இயற்கை யறிவுடையார் நூல்களைஓதாதிருந்தும் ஓதினாரோ டொப்ப விளங்குவர்.தூய்தாக நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்செல்வரும் நல்கூர்ந்தார் ஈயாரெனின் -வறுமையுற்றும், மனத்தூய்மையோடிருநது பிறரை ஒன்றுஇரவாதவர் செல்வரேயாவர், செல்வரும் பிறர்க்குஒன்று உதவாரென்றால் வறுமையாளரேயாவர். கருத்து: அறிவும் உதவுங் குணமும்இல்லாமற் செல்வம் மாண்புறாது. விளக்கம்: உணர்வென்றது, ஈண்டு உலகநடையறிந்தொழுகும் இயற்கை யுணர்வு. கல்வியுடைமைசெல்முடைமை யென்னும் இரண்டும் முறையேஉலகநடையறிந்தொழுகல், உதவுதல் என்னும்ஒப்புரவியல்புகளாலேயே மாட்சிமைப்படும் என்பதுபொருள்; கல்வியும் ஒரு செல்வமாகலின் உடன் உரைக்கப்பட்டது. இவ்விருவகைச்செல்வங்களும் நன்றியுள் செல்வமாம் வாயில்உணர்த்திற்று இச்செய்யுளென்க. . சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை நட்டார்க்கும் நள்ளா தவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துண்டல் அட்டுண்டல்;- அட்டது அடைத்திருந் துண்டொழுகும் ஆவதின் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு. குறிப்புரை: நட்டார்க்கும்நள்ளாதவர்க்கும் உளவரையால் அட்டது பாத்துஉண்டல் அட்டு உண்டல் - சமைத்துண்ணுதலென்பது,தமக்குள்ள பொருளளவினால் தம்மிடம் உறவுகொண்டோர்க்கும் கொள்ளாத விருந்தினர்க்கும்தாம் சமைத்ததைப் பகுத்துதவிப் பின் தாம்உண்ணுதலாகும்; அட்டது அடைத்திருந்து உண்டொழுகும்ஆவது இல் மாக்கட்கு அடைக்குமாம் ஆண்டைக் கதவு -அவ்வாறன்றித் தாம் சமைத்ததைத் தமது வீட்டின்கதவையடைத்துக் கொண்டு தனியாயிருந்து தாமே உண்டுஉயிர் வாழ்கின்ற மறுமைப் பயனற்ற கீழ்மக்கட்குமேலுலகக் கதவு மூடப்படும். கருத்து: இம்மையிற்பிறர்க்கொன்று ஈயாதவர்க்கு மறுமையில்துறக்கவுலகின்பம் இல்லை. விளக்கம்: "கொடையொடுபட்டகுணனுடை மாந்தர்க்கு அடையாவாம் ஆண்டைக் கதவு" என்றார் முன்னும் . ஈயப்படும் பொருள்களில்உணவு முதன்மை யானதாகலின், அதனை ஈண்டுக் கூறினார்.அட்டுண்டல் என்பது, இல்லறம் நடத்துதலென்னும்பொருட்டுஇல்லிருந்து அட்டுண்டு ஒருவன்இல்வாழ்க்கை நடத்துதலாவது, பாத்துண்டலேயாம்என்பது பொருள், "தொல்லோர் சிறப்பின்விருந்தெதிர் கோடலும்" என்றார்பிறரும். ஆவது, மேன்மேற் பிறவியாக்கம் ; மக்கட்பிறவியின் பயனெய்தாமையின் ‘மாக்கள்'என்றார்.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை எத்துணை யானும் இயைந்த அளவினால் சிற்றறஞ் செய்தார் தலைப்படுவர்;- மற்றைப் பெருஞ்செல்வம் எய்தியக்கால் பின்னறிதும் என்பார் அழிந்தார் பழிகடலத் துள். குறிப்புரை: எத்துணையானும் இயைந்தஅளவினால் சிற்றறம் செய்தார் தலைப்படுவர் -எவ்வளவு குறைந்த தாயினும் தமக்கிசைந்த அளவினால்சிறிய ஈதலறத்தைச் செய்தார் பிறவிப்பயனில்முற்படுவர்; மற்றைப் பெருஞ் செல்வம்எய்தியக்கால் பின் அறிதும் என்பார் அழிந்தார்பழிகடலத்துள் - மற்றுப். பெருஞ்செல்வம்எய்தினால் அறம் என்பதைப் பின்பு கருதுவோம்என்றிருப்போர் பிறர் பழிக்கின்ற துன்பக்கடலில் வீழ்ந்து அழிந்தவராவர். கருத்து: அறஞ் செய்யாதவர் இன்னற்கடலில் அழுந்தியவராவர். விளக்கம்: ‘எத்துணையானு' மெனவும்,‘இயைந்த அளவினா' லெனவும், ‘சிற்றறம்' எனவும்சிறுமைப் பொருள் தோன்றப் பலவுங் கூறியது, மிகச்சிறிதாயினும் என்றற்பொருட்டு. மற்று :வினைமாற்று. ‘கடலத்துள்' என்றார், நிறைந்த துன்பவாழ்க்கையில் என்றற்கு. லகர ஈற்றுப் பெயர்அத்துச்சாரியை ஏற்று முடிந்தமை புறனடையாற் கொள்ளப்படும், மீண்டும் தலையெடாமையின்‘அழிந்தா' ரெனப்பட்டது. தொல். உருபி.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை துய்த்துக் கழியான் துறவோர்க்கொன்றீ கலான் வைத்துக் கழியும் மடவோனை - வைத்த பொருளும் அவனை நகுமே உலகத்து அருளும் அவனை நகும். குறிப்புரை: துய்த்துக் கழியான்துறவோர்க்கு ஒன்று ஈகலான் வைத்துக் கழியும்மடவோனை - தான் துய்த்துச் செலவழிக்காமலும்துறவடைந்த உள்ளத்தார்க்கு ஒன்று கொடாமலும்செல்வத்தை வாளாதொகுத்து வைத்து உயிர் நீங்கியொழியும் அறிவிலாதானை, வைத்த பொருளும் அவனைநகும் உலகத்து அருளும் அவனை நகும் - அவன் அவ்வாறுதொகுத்து வைத்த பொருளும் அவன் அறியாமை கண்டுஉலகத்தில் அவனை நகையாடும், அவன் அப் பிறவியில்தொகுக்காத அருளும் அவனை நகையாடும். கருத்து: ஈயாத குணமுடையோர்க்குப்பொருட் பயனுமில்லை; அருட்பயனுமில்லை. விளக்கம்: கழியான் என்பதற்குக்காலங் கழியான் எனலும் ஆம். உறவோர்முதலியோர்க்கீதல் முன் வந்த மையின், ஈண்டுத்துறவோர்க்கீதல் நுவலப்பட்டது. "நன்றாய்ந்தடங்கினோர்க்கு ஈத்துண்டல்" என்றார்பிறரும். "துறவோர்க்கு எதிர்தலும்." எனஇளங்கோவடிகளும் அருளுதல் காண்க. ஒரு பயனுமின்றிஅவன் பொருண் முயற்சி வீணானமையின், ‘மடவோன்'என்றார். இம்மைப் பயனாகிய பொருட்பயனையும்மறுமைப்பயனாகிய அருட் பயனையும்ஒருங்கிழந்தமையின் இரண்டும் அவனை நகும்என்றார். அவனது ஏழைமை புலப்படுத்தும் பொருட்டுநகுமெனப் பட்டது. அவனை என வேண்டாது விதந்தார்,அப்பழிக்கு அவனே உரியனாதலி னென்க. அறநெறிச். சிலப்.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை கொடுத்துலுந் துய்த்தலுந் தேற்றா இடுக்குடை உள்ளத்தான் பெற்ற பெருஞ்செல்வம் இல்லத்து உருவுடைக் கன்னியரைப் போலப் பருவத்தால் ஏதிலான் துய்க்கப் படும். குறிப்புரை: கொடுத்தலும்துய்த்தலும் தேற்றா இடுக்கு உடை உள்ளத்தான்பெற்ற பெருஞ்செல்வம் - தக்கார்க்கு ஈதலையும்தான் துய்த்தலையுந் தெளியாத இடுக்குப் பிடித்தஉள்ளமுடையோன் அடைந்த பெருஞ்செல்வமானது,இல்லத்து உரு உடைக்கன்னியரைப்போலப்பருவத்தால் ஏதிலான் துய்க்கப்படும் - தன் குடியிற்பிறந்து வளர்ந்த அழகுடைய கன்னிப் பெண்களைப்பருவகாலத்திற் பிறர் அடைந்து நுகர்தல் போலஉரிய காலத்தில் அயலவரால் துய்க்கப்படும். கருத்து: ஈயாதார் செல்வம்கடைசியில் ஏதிலரால் நுகரப்படும். விளக்கம்: தேற்றாதன்வினைக்கண்வந்தது; "வாயினால் பேசல் தேற்றேன்" என்புழிப்போல. இடுக்குடையுள்ளம், சுருங்குதலுடையஉள்ளம்; என்றது, இவறன்மையுடைய உள்ளம்; உருவுடையென்றார். செல்வமும் நன்கு திரண்டு வருங்காலத்தில் என்பது தோன்ற. பருவத்தால் என்னும்ஆலுருபு, "காலத்தினாற் செய்த நன்றி" யென்புழிப்போல ஏழாவதன் பொருளில்மயங்கிவந்தது. இவனுக்குத் துய்க்கும்இயைபின்மையின் அவ்வியைபுடைய பிறர் துய்ப்பரென்றபடி. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர் மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. குறிப்புரை: எறிநீர்ப் பெருங்கடல்எய்தியிருந்தும் அறுநீர்ச் சிறுகிணற்று ஊறல்பார்த்து உண்பர் - அலை வீசுகின்றநீர்ப்பெருக்கினையுடைய பெரிய கடலைஅடுத்திருந்தும், அதன் நீர் பயன்படாமையால்அடிக்கடி நீர் வற்றுகின்ற சிறிய கிணற்றின்ஊற்றையே மக்கள் தேடிக்கண்டு உண்பர்; மறுமைஅறியாதார் ஆக்கத்தின் சான்றோர் கழி நல்குரவேதலை - ஆதலால் மறுமைப் பயனறியாதொழுகும்புல்லியோர் செல்வத்தினும் குணநிறைந்தபெரியோரது மிக்க வறுமையே மேலானதாகும். கருத்து: ஈயாதார் பெருஞ்செல்வராயிருப்பினும் அவரால் நன்மையில்லை. விளக்கம்: சான்றோரது சிறியஉதவியும் சற்றும் தீங்கற்றதாய் இருமை நலங்களும்பயப்பிக்குமாகலின், தலையென்றார். கீழ் ஆம்அதிகாரத்திலும் இச்செய்யுளின் உவமைவந்திருத்தலின், அதன் உரையையும் ஈண்டுநினைவுகூர்க. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை எனதென தென்றிருக்கும் ஏழை பொருளை எனதென தென்றிருப்பன் யானும்;- தனதாயின் தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான்; யானும் அதனை அது. குறிப்புரை: எனது எனது என்று இருக்கும்ஏழை பொருளை எனது எனது என்று இருப்பன் யானும் -என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருக்கும் அறிவிலானது செல்வத்தைநானும் என்னுடையது என்னுடையது என்றுஎண்ணிக்கொண்டிருப்பேன்! ஏனென்றால், தனதாயின்தானும் அதனை வழங்கான் பயன்துவ்வான் யானும் அதனைஅது - அச்செல்வம் அவனுடையதாயின் அதற்கறிகுறியாகஅவன் அதனைப் பிறர்க்குதவாமலும் அதன் பயனைத்துய்க்காமலும் இருக்கின்றனன்; யானும்அச்செல்வத்தை அது செய்யாமலிருக்கின்றேன்.[இருவர்க்கும் அதனிடத்தில் வேறுபாடு யாதும்இல்லையாகலின் என்க.] கருத்து: பிறர்க்கீயாத பொருள்,அதனை உடையானுக்கும் உரிமையுடையதன்று. விளக்கம்: இச்செய்யுள்பிறனொருவன் கூற்றாகக் கூறப்பட்டது.ஏழையென்றார், செல்வத்தைப் பயன்படுத்திஇன்புறலறியாமையின். ‘அது ' வென்றது வழங்குதலுந்துய்த்தலுஞ் செய்யாமையை ஈண்டுப்பெயர்ப்பயனிலையாய் நின்றது ; "பெயர் கொளவருதல்" என்பதனாற் கொள்க. இச்செய்யுள் நகைச்சுவையுடையதாய் நின்றது. தொல். வேற்றுமையி.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார் ; இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக் காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ யாப்புய்ந்தார் உய்ந்த பல. குறிப்புரை: வழங்காத செல்வரின்நல்கூர்ந்தார் உய்ந்தார் - பிறர்க்கொன்றுஉதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாதவறுமையாளர்களே பிழைத்துக்கொண்டவர்கள்;ஏனென்றால், இழந்தார் எனப்படுதல் உய்ந்தார் -பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கேஇழந்து போனார் என்று உலகவராற் பழிக்கப்படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்;உழந்ததனைக் காப்பு உய்ந்தார் - வருந்தித் தேடியபொருளைப் பின் காத்தலினின்றுந் தப்பினர்;கல்லுதலும் உய்ந்தார் - அதனைப் புதைத்து வைக்கும்பொருட்டுக் குழி தோண்டுதலுந் தப்பினர்; தம் கைநோவ யாப்பு உய்ந்தார் - தம்முடைய கைகள்நோவும்படி அதனைக் கட்டிச் சேமித்தலுந்தப்பினர்; உய்ந்த பல - இன்னும் இவ்வாறு அவர்கள்தப்பிக்கொண்ட வகைகள் பலவாகுமாதலின் என்க. கருத்து: ஈயாத செல்வர்க்கு இன்னல்பல உண்டு. விளக்கம்: ஈயாமையாற்பயனில்லாமையோடு இன்னலும் பல வுண்மையால்,செல்வத்தின் இன்னலை யெய்தாவறியவர் அவ்வீயாதவரினும் உய்ந்தவராவரென்றார்.உய்ந்தாரென்று பலமுறை வந்தது வற்புறுத்தல்நோக்கியென்க. உய்ந்தவினைப்பெயர்க் கிளவி. .தொல். பெயரி.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை தனதாகத் தான்கொடான் ; தாயத் தவருந் தமதாய போழ்தே கொடாஅர் ; - தனதாக முன்னே கொடுப்பின் அவர்கடியார், தான்கடியான் பின்னை அவர்கொடுக்கும் போழ்து. குறிப்புரை: தனதாகத் தான் கொடான்- பொருள் தன்னுடையதாக அந்நிலையிலும் தான்பிறர்க்கு வழங்கான்; தாயத்தவரும் தமதாய போழ்துகொடார் - அவனுக்குப்பின் அவன் தாயத்தவரும்அப்பொருள் தம்முடையதான காலத்திலும் வழங்கார்;தனதாக முன்னே கொடுப்பின் அவர் கடியார் -அப்பொருள் முன்னே தன்னுடையதாயிருக்கஅந்நிலையில் அவன் பிறர்க்கு ஒன்று வழங்கின்அத்தாயத்தவர் அதனை நீக்கார்; தான் கடியான்பின்னை அவர் கொடுக்கும் போழ்து -தன்னுரிமைக்குப் பின் அத்தாயத்தவர் பிறர்க்குயாதேனும் வழங்குங்காலத்தில் தானும் அதனைநீக்கான்; அவ்வாறிருக்கும் போது,உரிமையுள்ளபோதே பிறர்க்குதவியாய் வாழ்ந்துபயன் பெறாமைக்குத்தான் காரணம் யாதோ? கருத்து: தனக்குரிமையுள்ளபோதேஈந்து பயன் பெறுதல் நன்று. விளக்கம்: ஈயாது தன் தாயத்தவர்க்குவைத்தலால் அவரும் பயன் பெறுதலில்லாமையின்,பின்னுள்ளோர்க்கு வேண்டுமென்று இவறன்மை செய்துவைத்தலிலும் பயனில்லையென்றும்,தனக்குரிமையுமிருந்து பிறரால் தடையுமில்லாதகாலத்திற் பொருட்பயனை யடைதலே இனிதென்றும்விளக்கியபடியாகும். தலைமுறை தலைமுறையாகப் பொருட்பயனிழக்குங் கீழ்மக்களின் இயல்பு கூறி, இந்நிலைஎத்துணை இரங்கத்தக்கதென ஈயாமையின் இழிவுஇதனாற் புலப்படுத்தப்பட்டது.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை இரவலர் கன்றாக ஈவார்ஆ வாக விரகிற் சுரப்பதாம் வண்மை;- விரகின்றி வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய்வைத்துக் கொல்லச் சுரப்பதாங் கீழ். குறிப்புரை: இரவலர் கன்றாக ஈவார்ஆவாக விரகின் சுரப்பதாம் வண்மை - இரப்போர்கன்றுகளை ஒப்பக்கொடுப்போர் ஆன்களைஒப்பப்பூரிப்புடன் குறையாதளிப்பதேகொடையெனப்படும், விரகு இன்றி, வல்லவர் ஊன்ற வடிஆபோல் வாய் வைத்துக் கொல்லச் சுரப்பதாங்கீழ் - அவ்வுயிர்க் கிளர்ச்சியின்றி, கறக்கவல்லவர் தம் விரல்களை அழுத்தி நோவுண்டாக்க அதுபொறாது பாலை ஒழுகச்செய்யும் ஆன்களைப்போற்சூழ்ச்சியுடையார் பல வாயில் கள் வைத்து வருத்தக்கீழ்மக்கள் அதனால் தம்பொருளைச்சொட்டுவோராவர். கருத்து: மனமகிழ்ச்சியில்லாமற்கொடுப்பதும் ஈயாமையை ஒக்கும். விளக்கம்: விரகென்றது, கிளர்ச்சி;"வெண்குடை விரகுளிகவிப்ப" என்புழிப்போல. ‘சுரப்பதென்றார், ஈவோர்செல்வம் அறாது பெருகி வருதலின், பின் உவமையில்வடித்தல் கூறினமையானும் கீழ்மக்கள் இயல்பு கூறுதலானும், சுரப்பதாங் கீழ்' என்னுமிடத்துச் சுரப்பதென்பதற்குச் சொட்டுவரென்றுரைத்துக் கொள்க. கீழ் என்றதற்கேற்பச் சுரப்பதென்பதும் அஃறிணை முடிபில் நின்றது. வாய்வைத்தல், சூழ்ச்சிகள் செய்தலென்னும் பொருட்டு. பெருங். இலாவாண.
செல்வம் நிலையாமை பொருட்பால் ஈயாமை ஈட்டலுந் துன்பமற் றீட்டிய வொண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் - காத்தல் குறைபடில் துன்பம் கெடில்துன்பம் துன்பக்கு உறைபதி மற்றைப் பொருள். குறிப்புரை: ஈட்டலும் துன்பம் -பொருள் திரட்டு தலுந் துன்பம்; ஈட்டியஒண்பொருளைக் காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் -திரட்டிய சிறந்த பொருளைப் பாதுகாத்தலும்அவ்வாறே மிக்க துன்பமாகும்; காத்தல் குறைபடின்துன்பம் - அங்ஙனம் பாதுகாத்த முறையில் பொருள்தன் அளவிற் குறைந்துபோகுமாயின் துன்பமே, கெடின்துன்பம் - இயற்கை நிகழ்ச்சிகளால் முற்றும்அழிந்துபோகுமானால் பின்னும் துன்பம்; துன்பக்குஉறைபதி பொருள் - ஆதலால், பொருள்துன்பங்களெல்லாவற்றிற்குந் தங்குமிடமென்க. கருத்து: துன்பங்களுக்குஉறைவிடமாயுள்ள பொருளைப் பயன்படுத்துமுறை யறிந்துவழங்குதலே அறிவுடைமையாகும். விளக்கம்: முறையறிந்துபயன்படுத்தினால் அப்போது அஃது இன்பமும் அறமும்பயந்து தன்னையுடையானை விளக்கமுறச் செய்தலின்,‘ஒண்பொருள்' என்றார், மற்ற இரண்டனுள் முன்னதுவினைமாற்று; பின்னது அசை, காத்தல் குறைபடின்என்னுமிடத்துக் காத்தலிற் குறைபடின் என உருபுவிரித்துக் கொள்க. துன்பக்கு என்பதில் அத்துச்சாரியை தொக்கு நின்றது. துன்பம் என்பதைமனத்தளர்ச்சி என்றுரைத்தார்சிலப்பதிகார அரும்பத உரைகாரர். பிறர்க்குவழங்கி ஈதலறம் புரிதலால் இத்துன்பங்களெல்லாந்தோன்றாதொழிந்து இன்பமும் உண்டாகுமாயின், அதுவன்றோ செயற்பாலதென்பது கருத்து. சிலப். - உரை.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மைஅத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும் பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும் ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார் செத்த பிணத்திற் கடை. குறிப்புரை: அத்து இட்ட கூறைஅரைச்சுற்றி வாழினும் பத்து எட்டு உடைமைபலருள்ளும் பாடு எய்தும் - துவர் ஊட்டிய ஆடையைஇடுப்பில் உடுத்திக்கொண்டு ஞானவாழ்வில்வாழ்ந்தாலும் பத்தானும் எட்டானும் பொருளுடைமைபலரிடத்திலும் பெருமையடையும்; ஒத்தகுடிப்பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் செத்தபிணத்தின் கடை - ஏற்ற உயர்குடிக்கண் பிறந்தாலும்ஒரு பொருளில்லாதார் செத்த பிணத்தினுங்கடைப்பட்டவராவர். கருத்து: துறவு நிலையும் உயர்குடிப்பிறப்பும் உடையவராயினும் வறுமையில்லாமையேபெருமை தரும். விளக்கம்: "அத்துண் ஆடையர்"என்றார் பிறரும் அரைச் சுற்றிவாழினுமென்றார், பற்றற்றிருக்கும் எளிமைதோன்ற. பத்தெட்டென்றது, ஒரு சிற்றளவான குத்துமதிப்பு. பெரும்பான்மையோரானும்மதிக்கப்படுமென்றற்குப் பலருள்ளும் எனப்பட்டது.பலர்க்கும் உடன் பாடான வென்றற்கு ‘ஒத்த'வென்றார். உயர்குடி நலனுந்துறவு மாண்பு மிருந்தும்பொருளில்லாதார் இத்துணை இழிக்கப்படுவரெனின்,ஏனையோரது வறுமையின் இழிவு கூறவேண்டாதாயிற்று. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை நீரினும் நுண்ணிது நெய்யென்பார், நெய்பினும் யாரும் அறிவர் புகைநுட்பம்;- தேரின் நிரப்பிடும்பை யாளன் புகுமே, புகையும் புகற்கரிய பூழை நுழைந்து. குறிப்புரை: நீரினும் நுண்ணிது நெய்என்பர் - நெய் நீரைப் பார்க்கினும்நுட்பமானதென்று அறிந்தோர் கூறுவர்; நெய்யினும்புகை நுட்பம் யாரும் அறிவர் - இனி, நெய்யைப்பார்க்கினும் புகை நுட்பமென்பதை அனைவரும்அறிவர், தேரின் - ஆராய்ந்தால்நிரப்பிடும்பையாளன் புகையும் புகற்கு அரிய பூழைநுழைந்து புகும் - வறுமையாகிய துன்பமுடையோன் அப்புகையும் புகுதற்கு அரிய மிக நுண்ணிய புழையிலும்நுழைந்து புகுவான். கருத்து: வறுமைத் துன்பமுடையோன் மிகமெல்லியனாவான். விளக்கம்: நெய் நீரினும்நுண்ணிதாதலைப் பலரும் அறியாராதலின், புகைநுட்பமென்றதற்கு யாருமறிவரென்று கூறினாற்போற்கூறாது, பொதுவாக ‘என்பர்' என்றார். அதிகாரம்இன்மை குறித்ததாகலின், ‘தேரின் இரப்பிடும்பையாளன்' எனப் பிரித்துரைத்தல் சிறவாது. "நிச்சநிரப்பிடும்பை" என்றார் பிறரும்,‘நிரம்பிடும்பை யென்பது, பெரும்பாலும் பசிமிகுதியால் வயிற்றை நிரப்பும் இன்னலுணர்த்திமிக்க வறுமையை விளக்குமாதலின், அவன் மிகமெல்லியன் எனற்குப் புகையும் புகற்கரிய பூழைநுழைந்து புகுமென்றார். புகுதலென்றது, இரத்தல். இறைய. . உரை.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை கல்லோங் குயர்வரைமேற் காந்தள் மலராக்கால் செல்லாவாம் செம்பொறி வண்டினம்; -கொல்லைக் கலாஅற் கிளிகடியுங் கானக நாட! இலாஅஅர்க் கல்லை தமர். குறிப்புரை: கல் ஓங்கு உயர் வரைமேல்காந்தள் மலராக்கால் செல்லா செம்பொறிவண்டினம் - கற்கள் வளர்ந்துள்ள உயர்ந்தமலையின்மேல் காந்தள் முதலிய மலர்கள்மலராவிட்டால் சிவந்த புள்ளிகளையுடைய வண்டின்திரள் அங்கே செல்லமாட்டா: கொல்லைக்கலால்கிளி கடியும் கானக நாட! இலார்க்கு இல்லைதமர் -ஆதலால், தினை முதலிய புனங்களில் கிளி முதலியபறவைகளைச் சிறுசிறு கற்களால் ஒட்டுகின்றகாட்டையுடைய நாடனே, பொருளில்லாதவறியோரிடத்தில் உறவினர் வருவதில்லை. கருத்து: வறியோரை எவரும் அணுகார். விளக்கம்: கற்கள் ஓங்குதலென்றது,உயர்ந்து தெரிதல்; மலர்கள் மலர்தலில்லாதமலையென்றற்குக் கல்லோங்கு வரை எனப்பட்டது. ஆம்: அசை, கானகமென்றது, மலையையடுத்த கானகமென்க.நுகர்தற்குரிய பொருள்களில்லாமையின் தமர்வருதலில்லை என்றாராயிற்று.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை உண்டாய போழ்தின் உடைந்துழிக் காகம்போல் தொண்டா யிரவர் தொகுபவே; -வண்டாய்த் திரிதருங் காலத்துத் தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத் தில். குறிப்புரை: உடைந்துழிக்காகம்போல் உண்டாய போழ்தின் தொண்டு ஆயிரவர்தொகுப - ஒருவன் இறந்து விட்டபோது அவனுடம்பைக்காகங்கள் சூழ்ந்து மொய்த்துக்கொள்வதுபோல்ஒருவற்குச் செல்வமுண்டான காலத்தில் அவனுக்குஒன்பதனாயிரம் பேர் ஏவல் புரிவோராய் வந்துகூடுவர்; வண்டாய்த்திரிதருங் காலத்துத்தீதிலிரோ என்பார் ஒருவரும் இவ்வுலகத்து இல் -ஆனால் வறுமையினால் உணவுக்காக ஒருவர் வண்டுபோற்பலவிடங்களிலும் அலையுங்காலத்தில் அவரைத்தீங்கில்லாம லிருக்கிறீர்களா என்று நலம்உசாவுவார் இவ்வுலகத்தில் ஒருவரும் இல்லை. கருத்து: பொருளில்லாதவர்களைஉலகம் பொருள் செய்யாது. விளக்கம்: உடம்பு கட்டுத் தளர்ந்துஉயிர் நீங்குதலின் இறத்தல் உடைதலெனப்பட்டது.தொண்டு, ஈண்டு இரட்டுற மொழிதல்; தொண்டென்னுஞ்சொல் ஒன்பதென்னும் பொருட்டுமாதல்"தொண்டுபடு திவவின்" என்னும்மலைபடுகடாத்துட் காண்க. ஒன்பதினாயிரம் என ஓர்அளவு கூறினார், மிகுதி தேற்றுதற்கு. உணவுநாடிச்சேறற்கும், சிறிது சிறிதாகப் பெறுதற்கும்,அலைதற்கும் வண்டுவமம் வந்தது. மலைபடு.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை பிறந்த குலமாயும்; பேராண்மை மாயும் சிறந்ததங் கல்வியும் மாயும் - கறங்கருவி கன்மேற் கழூஉங் கணமலை நன்னாட! இன்மை தழுவப்பட் டார்க்கு. குறிப்புரை: கறங்கு அருவி கல்மேல்கழூஉம் கணமலை நல் நாட - பாய்ந்து ஒலிக்கின்றஅருவிநீர் கற்களின் மேற்புறத்தைக் கழுவுகின்றகூட்டமான மலைகளையுடைய சிறந்த நாடனே!. இன்மைதழுவப்பட்டார்க்குப் பிறந்த குலம் மாயும்பேராண்மை மாயும் சிறந்த தம் கல்வியும் மாயும் -உலகத்தில் வறுமை பொருந்தியவர்க்கு அவர் பிறந்தகுலத்தின் பெருமை கெடும்; அவருடைய பேராற்றல்கெடும்; எல்லாவற்றிற்கும் மேலான அவர்தம் கல்விநிலையுங் கெடும். கருத்து: வறுமை பொருந்தியவர்க்குஇருமை நலங்களுங் கெடும் விளக்கம்: குலமென்றது ஈண்டுக் குடி;ஆண்மையென்றது திறமை. கல்வி எழுமையும்ஏமாப்புடைத்தாகலின் ‘சிறந்த கல்வி'யெனப்பட்டது. இன்மையால் என உருபு விரித்துக்கொள்க.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை உள்கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூ ரிருந்துமொன் றாற்றாதான்; உள்ளூர் இருந்துயிர் கொன்னே கழியாது தான்போய் விருந்தின னாதலே நன்று. குறிப்புரை: உள் கூர் பசியால் உழைநசைஇச் சென்றார்கட்கு உள்ளூர் இருந்தும் ஒன்றுஆற்றாதான் - உடம்பில் மிகுகின்ற பசித்துன்பத்தால் தான் இருக்குமிடத்தை நாடிவந்தவர்கட்குத் தான் உள்ளூரிலிருந்தும் நன்று உதவஇயலாதவன், உள்ளூர் இருந்து உயிர்கொன்னே கழியாதுதான் போய் விருத்தினனாதலே ஒன்று-அவ்வாறுஉள்ளூரில் இருந்து தனது உயிர் வாழ்க்கையை வீணேகழிக்காமல் தான் வெளியூர்கட்குப் போய்ப்பிறர் இல்லத்தில் விருந்தினனாயிருந்து உண்ணுதலேநலமாகும். கருத்து: பிறர்க்கொன்று உதவ இயலாதவறியோனது உயிர்வாழ்க்கை வீண் என்க. விளக்கம்: நேரத்தில் உணவுகிட்டாமை தோன்ற ‘மிகுகின்ற பசி' யென்றார்:நாடி வருவோர்க்கு இல்லை யென்றால் பெருந்தீதாகலின், ‘நசைஇச் சென்றார் கட்கு' என்றுவிதந்தார்; "இரப்போர்க்கு ஈயா இன்மை" என்றார் பிறரும். வறுமை மிகுதி தேற்றுதற்கு‘உள்ளூர் இருந்தும்' எனப்பட்டது. உயிர் என்றது,ஈண்டுயிர் வாழ்க்கை. ‘இரத்தலே நன்' றென்றற்கு,‘விருந்தினனாதலே நன்' றென்றது, இகழ்ச்சி.உள்ளூரில் ஒருவர்க்கொருவர் விருந்தினராதல்செல்லாமையின், ‘போய் விருந்தினனாதல் நன்'றென்று கூறினார். பிறர்க்கு விருந்தினராகுமுகமாகவேனும் அவர்க்குப் புண்ணியம் விளைய ஏதுவாகித்தனதுயிர் வாழ்க்கையைப் பயனுடையதாக்குகவெனஇகழ்ந்து கூறுவார். ‘கொன்னே கழியாது'என்றாரென்க. கொன் ஈண்டுப் பயனின்மைப்பொருட்டு. புறம், தொல். இடை.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை நீர்மையே யன்றி நிரம்ப எழுந்ததங் கூர்மையும் எல்லாம் ஒருங்கிழப்பர்; -கூர்மையின் முல்லை அலைக்கும் எயிற்றாய்! நிரப்பென்னும் அல்லல் அடையப்பட் டார். குறிப்புரை: கூர்மையின் முல்லைஅலைக்கும் எயிற்றாய் - தமது கூர்மையால்முல்லையரும்புகளை வெல்லும் பற்களையுடைய பெண்ணே!,நிரப்பு என்னும் அல்லல் அடையப்பட்டார்நீர்மையே, யன்றி நிரம்ப எழுந்து தம் கூர்மையும்எல்லாம் ஒருங்கு இழப்பார் - வறுமை என்னும்இன்னலால் தாக்குண்டவர் தமது இயற்கையறிவையேயன்றி நிரம்ப வளர்த்த தமது கூரியசெயற்கையறிவையும் என எல்லாம் ஒருங்கேஇழந்துவிடுவர். கருத்து: பொருளில்லாதவர்க்குத்தம் இயற்கை செயற்கை யறிவுகளும் மழுங்கிவிடும். விளக்கம்: நீர்மையென்றதுஇயற்கையியல்பு ; "நெறியிற்றிரியா நீர்மை" என்புழிப்போல. நிரம்ப எழுந்த கூர்மையென்று மேல்வருதலின் ; இஃது இயற்கை யறிவினை உணர்த்திநின்றது; எனவே, கூர்மையென்பது செயற்கையறிவெனக்கொள்ளப்படும்; இனி, இயற்கைநல்லியல்புகளேயன்றி நன்கு மலர்ந்த தம் கூரியஅறிவினையும் என எல்லாம் ஒருங்கிழப்பர்என்றுரைத்தலும் ஒன்று. ஒருங்கிழப்பரென்றார்,எல்லாவற்றின் மலர்ச்சிக்கும் உலகத்திற்பொருளே ஏதுவாயிருத்தலின் என்க; "பொருள்துன்னுங்காலைத் துன்னாதன இல்லையே" என்றார் பிறரும். பெருங். இலாவா. சிந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை இட்டாற்றுப் பட்டொன் றிரந்தவர்க் காற்றாது முட்டாற்றுப் பட்டும் முயன்றுள்ளூர் வாழ்தலின் நெட்டாற்றுச் சென்று நிரைமனையிற் கைந்நீட்டுங் கெட்டாற்று வாழ்க்கையே நன்று. குறிப்புரை: இட்டு ஆற்றுப்பட்டு ஒன்றுஇரந்தவர்க்கு ஆற்றாதுமுட்டு ஆற்றுப்பட்டு முயன்றுஉள்ளூர் வாழ்தலின் - சிறுமையாகிய வறுமை வழியில்அகப்பட்டுத் தம்மிடம் ஒன்று இரந்தவர்கட்கு உதவமாட்டாமல் முட்டுப்பாடான முறைமையில்இருந்துகொண்டு முயற்சியோடு உள்ளூரில் உயிர்வாழ்தலைவிட, நெடு ஆற்றுச் சென்று நிரை மனையில்கை நீட்டும் கெடு ஆறு வாழ்க்கையே நன்று - தொலைவழிநடந்துபோய் அங்கங்கும் வரிசையாக உள்ளவீடுகளிற் கை நீட்டி இரந்துண்ணுங் கெடுவழிவாழ்க்கையே நன்றாகும். கருத்து: பிறர்க்கொன்றுஉதவமாட்டாத வறுமை வாழ்வினும் நாடு கடந்துபோய்இரந்துண்ணும் இழிவு வாழ்வே நன்று. விளக்கம்: இட்டாறு-சிறுமை வழி;"இட்டிய குயின்ற துறை" என்புழிப்போல; என்றது,ஈண்டு வறுமை. வாழ்க்கை எளிதாக நடவாமையின்,‘முயன்று' என்றார். இரந்துண்ணும் வாழ்வில்உயிர்ப்பண்பு கிளர்ந்தெழாமையாலும், தமக்கும்பிறர்க்கும் இன்னாமை தருவதானாலும் அது "கெட்டாற்றுவாழ்க்கை" யென்று விதந்து கூறப்பட்டமைபெரிதுங் கருத்திருத்தற்பாலது "இன்னாமைவேண்டின் இரவெழுக" என்றார் பிறரும்.நன்று என்றார் வினையொழியும் வரையில் உயிரேனும்உடம்பில் நிலைத்திருக்க உதவுதலின் என்க. ஐங். : நான்மணிக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை கடகஞ் செறிந்ததங் கைகளால் வாங்கி அடகு பறித்துக்கொண் டட்டுக்-குடைகலனா உப்பிலி வெந்தைதின் றுள்ளற்று வாழ்பவே, துப்புரவு சென்றுலந்தக் கால். குறிப்புரை: துப்புரவு சென்றுஉலந்தக்கால் - நுகரப்படும் பொருள்கள் நீங்கிவறுமையுற்றவிடத்து, கடகம் செறிந்த தம் கைகளால் -முன்பு செல்வராயிருந்தபோது கடகம் செறிந்திருந்ததம் கைகளினால், வாங்கி அடகு பறித்து - தூறுகளைவளைத்து அதிலுள்ள கீரைகளைப் பறித்து, கொண்டுஅட்டு - அதனையே முதன்மையாகக் கருதி உப்பில்லாமல்அவித்து, குடை கலனா உப்பு இலிவெந்தை தின்று உள்அற்று வாழ்ப - பனையோலையின் முடக்கே உண்கலானகஅவ் வுப்பில்லாததான அவியலைமென்று வாயாறிஅமைதியற்று உயிர் வாழ்வார்கள். கருத்து: வறுமை நிலையினும்அமைதியிழந்த இழிந்த நிலை வேறில்லை. விளக்கம்: குடைவாகக்கட்டப்படுதலின் ஓலைப்பட்டை ‘குடை' யெனப்பட்டது;"வேள்நீர் உண்ட குடை" என்றார்கலியினும்; இழிவு தோன்ற ‘வெந்தை' என்றும்,பசியாறாது வாளா மெல்லுதல் தோன்றத் ‘தின்று'என்றும் விதந்தார். வெந்தை, அவியலெனப்படும்;"பராரை வேலை" யென்றார் பிறரும்,உலத்தல் ஈண்டு நிலைகெடுதல். கலித். . பொருந.
செல்வம் நிலையாமை பொருட்பால் இன்மை ஆர்த்த பொறிய அணிகிளர் வண்டினம் பூத்தொழி கொம்பின்மேற் செல்லாவாம்; -நீர்த்தருவி தாழா உயர்சிறப்பின் நண்குன்ற நன்னாட! வாழாதார்க் கில்லை தமர். குறிப்புரை: ஆர்த்த பொறியஅணிகிளர் வண்டினம் பூத்து ஒழி கொம்பின்மேல்செல்லா - நிறைந்த புள்ளிகளையுடைய அழகுமிக்கவண்டுக்கூட்டங்கள், பூத்தல் மாறியபூக்கொம்புகளிடத்திற் செல்லமாட்ட, நீர்த்துஅருவி தாழாது உயர் சிறப்பின் தண் குன்ற நல் நாட -இனிய நீரருவி அறாது ஒழுகுகின்ற மிக்கசிறப்பினையுடைய குளிர்ச்சியான மலைகளையுடையஉயர்ந்த நாடனே!. வாழாதார்க்கு இல்லை தமர் -ஆதலாற் பொருள் மலர்ச்சியில்லாத வறியோர்க்குஉறவாவோர் இல்லை. கருத்து: நுகர்பொருள்கள் மாறியவறியோரை எவரும் நாடார். விளக்கம்: பூத்து: தொழிற்பெயர்ப்பொருளினின்றது. சிலகாலம் வரையிற் பூத்துப், பின்பூவெடுத்தலே மாறிப் போன பூங்கொம்புகள் இங்குக்குறிக்கப்பட்டன. ஆம்: அசை. உவமையின் கருத்தாற்,பொருள் மலர்ச்சியும் பிறர்க் குதவுதலுமுடையராய்உயிர் வாழ்தலே வாழ்தலாகும்மென்பது பெறப்படும்.இச்செய்யுட் பொருள், முன்னும் வந்தது. நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் [என்றது, தாழ்வு தாளாத உள்ளவியல்பு] திருமதுகை யாகத் திறனிலார் செய்யும் பெருமிதங் கண்டக் கடைத்தும் - எரிமண்டிக் கானத் தலைப்பட்ட தீப்போற் கனலுமே, மன முடையார் மனம். குறிப்புரை: திரு மதுகையாகத் திறன்இலார் செய்யும் பெருமிதம் கண்டக் கடைத்தும் -செல்வம் வலிமையாகக் கயவர் செய்யும்வரம்புகடந்த செயல்களைப்பார்த்தவிடத்தும், எரிமண்டிக் கானம் தலைப்பட்ட தீப்போல் கனலும்மானமுடையார் மனம் - மானமுடைய நன்மக்களின் மனம்எரிதல் மிகுந்து காட்டில் உண்டான காட்டுத்தீப்போல் அனல் கொள்ளும். கருத்து: தகாத செயல்களைக் கண்டால்மானமுடையார் மனம் அழல்கொள்ளும். விளக்கம்: மதுகை யென்றது, வலிமை;"அனைமதுகையர் கொல்" என்புழிப்போல. திறனிலார் என்றது கயவரை:பெருமிதம் என்றது, பெருமிதம் போன்ற பொருந்தாச்செயல்களை இங்குணர்த்திற்று. கண்டக் கடைத்தும்என்னும் உம்மை, பிற பொருந்தாச் செயல்களைஅறிந்தவிடத்துங் கனலல்போல் என்பது விளக்கிஇறந்தது தழீஇயது. குறுந்.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார்; -தம்பாடு உரையாமை முன்னுணரும் ஒண்மை யுடையார்க்கு உரையாரோ தாமுற்ற நோய். குறிப்புரை: என்பாய் உகினும்இயல்பிலார் பின் சென்று தம் பாடு உரைப்பரோ தம்உடையார் - தன்மானமுடையோர், தாம் எலும்பாகித்தசை சிதையினும், குணமில்லாதவர் பின் சென்றுதம்முடைய இடுக்கண்களைச்சொல்லிக்கொள்ளமாட்டார்; தம் பாடு உரையாமைமுன்னுணரும் ஒண்மையுடையார்க்குத் தாம் உற்ற நோய்உடையரோ - தம்முடைய துன்பங்களைத் தாம்எடுத்துரையாமைக்கு முன்பே அவற்றை உணர்ந்து உதவும்அறிவு விளக்கமுடைய குணசாலிகட்கும் தாம் அடைந்தஇன்னல்களை அவர் உரையார்போலும்! கருத்து: மானமுடையார் தம்துன்பங்களைப் பிறர்க்குப் புலப்படுத்தார். விளக்கம்: உகுதல், தசை வீழ்தல்;இயல்வு, இயற்கையான நற்குணம். "ஏதிலாரென்பார்இயல்பில்லார்" என்புழிப் போல.ஓகாரங்களுள் முன்னது எதிர்மறை: பின்னது ஐயங் கருதிவினா. தம் என்றது, தம் உயிரியல் பாகிய மானத்தைஉணர்த்தா நின்றது. உடையார்க்கு மென்று உயர்வுசிறப்பும்மை விரித்துக்கொள்க. நான்மணிக்.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின் காணவே கற்பழியும் என்பார்போல்-நாணிப் புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால் மறந்திடுசு செல்வர் தொடர்பு. குறிப்புரை: யாமாயின் எம் இல்லம்காட்டுதும் - வறியேமாகிய யாமாயின் செல்வர்கட்குஉண்ணவும் இளைப்பாறவும் எம் இல்லத்தை இடமாகஉதவுகின்றோம். தாமாயின் காணவே கற்பு அழியும்என்பார்போல் நாணிசோறும் புறங்கடைவைத்துஈவர்-ஆனால் அச்செல்வர்களாயின் யாம்காணுமளவிலும் தம் மனைவியரின் கற்புக்கெடும் என்றுகருதுவார்போல் மனங் கூசிச், சோறும் வாயிலின்வெளியில் வைத்துப் போடுவர்; அதனால் மறந்திடுகசெல்வர் தொடர்பு - ஆதலால் பிறரைப்பொருள்செய்யாத செல்வர்களின் தொடர்பை மக்கள்மறந்துவிடுவார்களாக! கருத்து: தாம் வறியராயினும் தம்மைமதியாத செல்வர்களின் தொடர்பை மானமுடையோர்மறந்து விடுதல் வேண்டும். விளக்கம்: நாணி என்றார்,அச்சோறிடுதலுந் தகாததொன்று செய்தலாக அவர்கருதுதலின். சோறும் என்னும் உம்மை, உள்ளே இருந்துஉண்ணுதற்குரிய உணவும் என்னும் பொருள் தந்து உயர்வுசிறப்பாய், இனிச் சற்று இளைப்பாறும் பொருட்டுப்படுத்தலும் புறக்கடைக் கண்ணதே என்னும் பொருள்பெறுவித்து எதிரது தழீஇயதாய் நின்றது.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் இம்மையும் நன்றாம் இயல்நெறியுங் கைவிடா தும்மையும் நல்ல பயத்தலால், -செம்மையின் நானம் கமழுங் கதுப்பினாய்! நன்றேகாண் மான முடையார் மதிப்பு. குறிப்புரை: செம்மையின் -நடுநிலையாக நோக்குமிடத்து, நானம் கமழும்கதுப்பினாய் - கத்தூரி மணக்குங் கூந்தலுடையபெண்ணே!: மானமுடையார், மதிப்பு - மானமுடையார்நடக்கை, இம்மையும் நன்றாம் -புகழும் இன்பமுந்தருதலால் இம்மையிலும் நன்றாகும்; இயல்நெறியும்கைவிடாது உம்மையும் நல்ல பயத்தலால் நன்றேஉண்மை நெறியும் வழுவுதலின்றி மேலுலகிலும்இன்பமாவன உண்டாக்குதலால் மறுமைக்கும்நல்லதேயாம். கருத்து: மானமுடையார் ஒழுக்கம்இருமைக்கும் இன்பந் தரும். விளக்கம்: இயல்நெறி வீடுபயப்பதாகலின், இயல்நெறியுமென்று உம்மைதந்தார்; நாயனாரும் "பேராவியற்கை" என வீட்டினை விதந்தமை காண்க. உம்மையென்றது,மேலுலகம். மதிதொழுகும் ஒழுக்கம்,மதிப்பெனப்பட்டது.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் பாவமும் ஏனைப் பழியும் படவருவ சாயினும் சான்றவர் செய்கலார்; -சாதல் ஒருநாள் ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல் இன்று. குறிப்புரை: பாவமும் ஏனைப் பழியும்பட வருவசாயினும் சான்றவர் செய்கலார் -மறுமைக்குத் தீவினையும் இம்மைக்கு மற்றைப்பழியும் உண்டாகும்படி நேர்வனதாம் இறப்பதாயினும்சான்றோர் செய்யமாட்டார்: சாதல் ஒருநாள்ஒருபொழுதைத் துன்பம் அவைபோல் அருநவை ஆற்றுதல்இன்று - ஏனென்றால், இறத்தல் என்பது ஒரு நாளில் ஒருநேரத்துத் துன்பம்; ஆனால் அப் பாவமும்பழியும்போல் என்றுந் துன்பத்துக் கேதுவானபெருங்குற்றம் பயப்பிப்பது வேறொன்றும் இல்லை. கருத்து: மானமுடையோர்,பழிபாவஞ்கட்கு அஞ்சியொழுகுவர். விளக்கம்: ஏனையென்றார்மற்றொன்றாகிய வென்றற்கு. வருவ:பெயர். சாதலின்இன்னாத தில்லை யாகலின் அவ்வின்னலின்உயர்வு தோன்றச் சாயினும் என்றார். அருநவை,தீர்தற்கரிய குற்றம். குறள். -
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் மல்லன்மா ஞாலத்து வாழ்பவ ருள்ளெல்லாம் செல்வ ரெனினும் கொடாதவர் நல்கூர்ந்தார்; நல்கூர்ந்தக் கண்ணும் பெருமுத் தரையரே, செல்வரைச் சென்றிரவா தார். குறிப்புரை: மல்லல் மா ஞாலத்துவாழ்பவருள் எல்லாம் - வளப்பமிக்க இப் பெரியஉலகில் உயிர்வாழ்பவரெல்லாருள்ளும், செவ்வர்எனினும் கொடாதவர் நல் கூர்ந்தார் -பொருளுடையராயினும் பிறர்க்கொன்று உதவாதஇயல்புடையார் வறியரேயாவர்; நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத்தரையரே செல்வரைச் சென்றுஇரவாதார் - வறுமையுற்ற விடத்தும்பொருளுடையாரிடம் சென்று ஒன்று இரவாதவர்பெருமுத்தரையரையொத்த பெருஞ் செல்வரேயாவர் கருத்து: உலகத்தில் ஒன்று உதவும்நிலையும் இரவா நிலையுமே செல்வ நிலையாகும். விளக்கம்: பெருமுத்தரைய ரென்பார், இவ் வாசிரியர் காலத்தில் விளங்கியபெருஞ் செல்வராவார்; பெருமுத்தரையரே என்னும்ஏகாரத்தை நல்கூர்ந்தா ரென்பதற்கும் ஒட்டுக.கொடாதவர் செல்வத்தாற் பயன் பெறாமையின்,‘நல்கூர்ந்தா' ரெனவும், நல்கூர்ந்தக் கண்ணும்மானத்தோடு மனவமைதியாய் வாழ்தலின் பிறரைஇரவாதவர் பெருமுத்தரையரே யெனவுங் கூறப்பட்டனர். நாலடி.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் கடையெலாம் காய்பசி அஞ்சுமற் றேனை இடையெல்லாம் இன்னாமை அஞ்சும் - புடைபரந்த விற்புருவ வேனெடுங் கண்ணாய்! தலையெல்லாம் சொற்பழி அஞ்சி விடும். குறிப்புரை: புடை பரந்த வில் புருவவேல் நெடு கண்ணாய் - பக்கங்களில் தசை பருத்தவில்போலும் புருவங்களையுடைய வேல்போலும் நீண்டகண்களமைந்த பெண்ணே!; கடை எலாம் காய் பசிஅஞ்சும், இடை எலாம் இன்னாமை அஞ்சும், மற்று ஏனைத்தலை எல்லாம் சொல்பழி அஞ்சிவிடும் - மக்களிற்கடையானவரெல்லாரும் தம்மை வருத்தும்வயிற்றுப்பசிக்கு அஞ்சி மானங் கைவிடுவர்;இடைப்பட்டவ ரெல்லாரும் தம் வாழ்க்கையில் வரும்உயிரிறுதி முதலிய துன்பங்களுக்கு அஞ்சி மானத்தைவிட்டொழுகுவார்; ஆனால் மற்றத்தலையானவரெல்லாம் பழிச் சொற்களுக்கு அஞ்சிமானம் விடாது நடந்து கொள்வர். கருத்து: பழிச்சொல்லுக்கு அஞ்சுகின்ற மானத்தோடுஉயிர் வாழ்தலே தலைமக்களின் செயலாகும். விளக்கம்: "காய்பசிக்கடும்பேய்" என்றார் பிறரும், கடைஇடை தலையென்பன மக்களைக் குறித்தன; மற்று: வினைமாற்று.பசி நீக்கமே நோக்கமாக உயிர்வாழ்வோர்கடையானவரெனவும், ஏனை வாழ்க்கையின்பமேநோக்கமாக உயிர் வாழ்வோர் இடையானவரெனவும்,மானங்காத்தலே நோக்கமாக உயிர்வாழ்வோர்தலையானவரெனவும் இச்செய்யுள் கூறிற்று; மானமாவதுபழிச்சொல் அஞ்சியொழுகுதலென்க. "சான்றோர்பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்" என்றார் அகத்தினும். விடும் என்னும் விகுதிஅந்நிலையில் அவர் உறுதியுடன் நடந்துகொள்வரென்னுந் துணிவுப் பொருள் உணர்த்திற்று.சாதலின் இன்னாத தில்லையாகலின், இன்னாமைஉயிரிறுதியாகிய துன்பத்தையும் உணர்த்துதல் கண்டுகொள்ளப்படும்; புருவங்களையுடைய கண் என்க. மணி. . அகநா.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் நல்லர் பெரிதளியர் நல்கூர்ந்தார் என்றெள்ளிச் செல்வர் சிறுநோக்கு நோக்குங்கால்-கொல்லன் உலையூதுந் தீயேபோல் உள்கனலுங் கொல்லோ, தலையாய சான்றோர் மனம். குறிப்புரை: நல்லர், பெரிது அளியர்,நல்கூர்ந்தார் என்று எள்ளிச் செல்வர்சிறுநோக்கு நோக்குங்கால இவர் நல்லவர், மிகவுங்கனிவுடையர், ஆயினும் வலியராயிருக்கின்றார் என்றுஇகழ்ச்சியால் நல்லியல்புகளை இகழ்ந்து கூறிச்செல்வர்கள் சிறுமைப் பார்வை பார்க்குங்கால்,தலையாய சான்றோர் மனம் கொல்லன் உலையூதும்தீயேபோல் உள் கனலும் - தலைமக்களானசான்றோர்களின் உள்ளம் கொல்லனதுஉலைக்களத்தில் ஊதியெழுந்தீச் சுடர்போல்உள்ளே அழல் கொள்ளும். கருத்து: மெய்யறிவின்றிநல்லியல்புகளைப் பழித்தொதுக்கும் செல்வர்உரைகட்குச் சான்றோர் உள்ளம் மிகவும் அழலும். விளக்கம்: சிறு நோக்கு, பொருள்செயா நோக்கு;"சிறு நகை" என்புழிப்போல. கொல்லும் ஓவும்அசை, நல்லியல்புகள்பால் மதிப்பின்மையேமானிகள் உள்ளம் அத்தனை அழல் கொள்ளுதற்குஏதுவாயிற்று. தலையாய என்றார் அச் செல்வர் முதல்அனைவரினும் மேலாயவரென்றற்கு. சினம் ஆறுதல்அவரியல்பாகலின், உள்கனலும் எனப்பட்டது. மணிமே. .
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் நச்சியார்க் கீயாமை நாணன்று, நாணாளும் அச்சத்தால் நாணுதல் நாணன்றாம்; எச்சத்தின் மெல்லிய ராகித்தம் மேலாயார் செய்தது சொல்லா திருப்பது நாண். குறிப்புரை: நச்சியார்க்கு ஈயாமைநாண் அன்று- தம்மை விரும்பி வந்தடைந்தவர்க்குஒன்று உதவமாட்டாமை நாண் அன்று; நாள் நாளும்அச்சத்தால் நாணுதல் நாண் அன்று - நாடோறும்தீயவை அஞ்சும் அச்சத்தால் அவை செய்ய நாணுதலும்ஒரு நாண் அன்று; எச்சத்தில் மெல்லியராகித் தம்மேலாயார் செய்தது சொல்லாதிருப்பது; நாண்-தமதுமரபில் தாம் வீரம் முதலியவற்றில் எளியராகித்தம் முன்னோர் ஆற்றிய அரியசெயல்களைத்தமக்கொரு பெருமையாகச் சொல்லிக்கொள்ளாதிருத்தலே மானிகட்கு மேலானநாணமாவதாகும். கருத்து: தம் செயல்களால் தாம்பெருமை கொள்ளுதலே மானிகட்கு அழகு. விளக்கம்: நாணம்; ஈண்டுநல்லியல்பாகக் கருதப்பட்டது. நச்சியார்க்குஈயமாட்டாமை காரணமாக நாணுதலும் அச்சத்தால்நாணுதலும் உயர்ந்த நாணங்களாயினும் அவற்றினும்உயர்ந்ததொரு நாணத்தின் மேன்மைதேற்றும்பொருட்டு. அதனை நோக்க அவை நாண் அல்லஎன்றார். ஆம்அசை. எச்சம் என்றது, ஈண்டு வழிவழிமரபு ; "வன்மையும் மாண்பும் வளனும் எச்சமும்தெய்வமும் யாவதும் தவமுடை யோர்க்கு" என்றதிற் காண்க. தாம் முயன்று தமது எளிமையைநீக்கிக்கொள்ளாமை மானமுடைய ஒருவற்கு மிகநாணத்தகுவதாகலின், இவ்வாறு கூறினார். பதிற்.
செல்வம் நிலையாமை பொருட்பால் மானம் கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும்; -இடமுடைய வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம் மழுங்க வரின். குறிப்புரை: கடம் மா தொலைச்சியகான் உறை வேங்கை இடம் வீழ்ந்தது உண்ணாதுஇறக்கும் - மதம் பொருந்திய யானையை அதன் வலிதொலைத்து வீழ்த்திய காட்டிலுறையும் புலி, தனக்குஇடப்பக்கம் வீழ்ந்த அவ்வியானையை, தான் பசிமிகுதியால் உயிர்துறக்குந் தறுவாயிலிருப்பினும்,உண்ணாமல் உயிர்விடும்; இடம் உடைய வானகம்கையுறினும் வேண்டார் விழுமியோர் மானம்மழுங்கவரின் - ஆதலால் செல்வப்பெருக்குடையதுறக்கவுலகம் தானே தம் கையகப்படினும் அது தமதுமானம் கெட வருவதாயின் அதனைப் பெரியோர்விரும்பார். கருத்து: மானத்தால் உண்டாகும்இன்பமே இன்பமாகும். விளக்கம்: "கிடந்துயிர்மறிகுவதாயினும், இடம்படின் வீழ்களிறு மிசையாப்புலி" என்றார் பிறரும். ‘இடமுடையவானகம்' என்றவிடத்து இடம் என்றது வளம்உணர்த்தும்; "இடமில்லாக் காலும்" என்புழிப்போல. ஈண்டுப் போகம் உணர்த்திற்று.‘கையுறின்' என்றது. கிடைப்பினும் என்னும்பொருட்டு. ‘மழுங்க' வென்னுங் குறிப்பாற்,பெரியார்களுக்குள்ள மேன்மையெல்லாம்அவர்கள்பால் இம் மானம் என்னும் உயர் குணம் ஒன்றுஎன்றும் பொன்றாது சுடர்விட்டுக்கொண்டிருப்பதுதான் என்பது பெறப்படும். அகம்.
செல்வம் நிலையாமை பொருட்பால் இரவச்சம் [மானக்குறைவுக்கேதுவான இரத்தலுக்கு அஞ்சியொழுகுதல்] நம்மாலே யாவரிந் நல்கூர்ந்தார் எஞ்ஞான்றுந் தம்மாலாம் ஆக்கம் இலரென்று - தம்மை மருண்ட மனத்தார்பின் செல்பவோ, தாமும் தெருண்ட அறிவி னவர். குறிப்புரை: நம்மாலே ஆவர் இநல்கூர்ந்தார் - இவ் வறுமையாளர் நம்உதவியினாலேயே வாழ்வு பெறுதற்குரியர்;எஞ்ஞான்றும் தம்மால் ஆம் ஆக்கம் இலர் - எந்தநாளிலும் தம் வல்லமையால் உண்டாகப்பெறும் வாழ்வுஇல்லாதவர், என்று தம்மை மருண்ட மனத்தார் பின்என்று செருக்கித் தம்மை உயர்ந்தோராக மயங்கிப்பெருமிதங்கொள்ளும் மனப்பான்மையுடையார்பின்னே, தெருண்ட அறிவினர்தாமும் செல்பவோ -தெளிந்த மெய்யறிவினையுடைய மேலோரும் இரந்துசெல்வரோ? செல்லார். கருத்து: பிறரை எளியராகவுந்தம்மைப் பெரியராகவுங் கருதும்உள்ளமுடையோர்பால் இரத்தற்கு அஞ்சுதல் வேண்டும். விளக்கம்: ஆதல், ஈண்டு வாழ்வுபெறுதல்; ஆக்கம் என்றதும் அது. தம்மால் என்றார்,தமது முயற்சி வல்லமையால் என்றற்கு. தக்கோர்க்குஉதவி செய்தே தாம் பெரியராதல்வேண்டுமென்றறியாமையின் ‘மருண்ட' என்றும்,வாழ்க்கையின் பயனாகிய தெளிவு பொருளினாலேயேவருவதன்று என்றறிந்தொழுகுதலின் ‘தெருண்ட' என்றுங்கூறினார். ‘மருண்ட மன' மென்றும் ‘தெருண்ட அறி'வென்றுங் கூறிய வேறுபாடும் அறிதற்குரியது. புறம்,