|
உள்ளடக்கம் |
|
|
|
முன்னுரை |
|
|
|
நவகாளி யாத்திரை |
|
|
|
இந்துஸ்தானி விழா |
|
|
|
மதுரையில் மகாத்மா |
|
|
|
நவகாளி நினைவுகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
முன்னுரை |
|
|
|
|
|
|
|
|
|
இந்த நூலில் அடங்கியுள்ள கட்டுரைகளைச் 'சாவி' அவ்வளவு சுலபமாக எழுதிவிடவில்லை . எவ்வளவோ கஷ்டங்களுக்குள்ளாகி, தூர தேசப் பிரயாணங்கள் செய்து திரும்பிய பிறகு மீண்டும் எவ்வளவோ பிரயாசை எடுத்துத்தான் எழுதினார். |
|
|
|
|
|
|
|
ஆனாலும் இந்தச் சிறு முன்னுரை எழுதுவதில் எனக்குள்ள கஷ்டம் 'சாவி'க்கு இவ்வளவு கட்டுரைகளும் எழுதியதில் ஏற்பட்டிருக்க முடியாது. |
|
|
|
|
|
|
|
ஏனெனில், 'சாவி' கட்டுரைகள் எழுதியபோது காந்தி மகாத்மா இந்த நில உலகத்தில் நடமாடிக் கொண்டிருந் தார். |
|
|
|
|
|
|
|
இன்று அந்த மகானுடைய பூத உடல் மறைந்து விட்டது. |
|
|
|
|
|
|
|
சென்ற 1947- ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் காந்தி மகான் நவகாளி ஜில்லாவில் கிராமம் கிராமமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். இந்த வருஷம் பிப்ரவரியில் மகாத்மா வானுலகில் இருக்கிறார். |
|
|
|
|
|
|
|
1946-ஆம் வருஷம் பிப்ரவரியில் இந்திய நாட்டின் பிதா நமது தமிழகத்திற்கு விஜயம் செய்திருந்தார். |
|
|
|
|
|
|
|
இந்த பிப்ரவரியில் அவருடைய ஆத்மா மேலுலகத்துக்கு விஜயம் செய்துவிட்டது. அவருடைய எரிந்த உடலின் சிறு துகள்கள் பற்பல நதிகளிலேயும், கடல் துறைகளிலேயும் கரைந்துவிட்டன. |
|
|
|
|
|
|
|
'மகாத்மா சென்ற வருஷம் இந்த மாதத்தில் நாம் நடக்கும் பூமியிலே நடமாடினார்; இந்த வருஷம் இந்த மாதத்தில் அவருடைய திருமேனி இங்கில்லை' என்று எண்ணும் போதெல்லாம் நம் வயிற்றில் ஏதோ பகீர் என்கிறது. நெஞ்சை ஏதோ வந்து அடைத்துக் கொள்கிறது. |
|
|
|
|
|
|
|
காந்தி மகான் காலமாகி நாள் இருபது ஆகியும் கலக்கம் சிறிதும் நீங்கவில்லை . |
|
|
|
|
|
|
|
தலைவர்கள் ஏதோ தைரியம் சொல்லுகிறார்கள்; ஆறுதல் கூறுகிறார்கள். நமக்குத் தைரியமும் பிறக்கவில்லை; ஆறுதலும் உண்டாகவில்லை. |
|
|
|
|
|
|
|
உலகம் சுழன்று கொண்டிருக்கிறது; வாழ்க்கை நடந்து மெள்ள ஆறுதலும் கொண்டிருக்கிறது. |
|
|
|
|
|
|
|
எனினும், ஜனவரி 30-க்கு முன்பு இருந்தது போல் இப்போது ஒன்றுமில்லை. எல்லாம் மாறுதலாகவே தோன்றுகிறது. இந்த மனோநிலைமையில் 'நவகாளி யாத்திரை' என்னும் இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதும் கடமை எனக்கு ஏற்பட்டிருக்கிறது. |
|
|
|
|
|
|
|
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தர்ப்பம் - அருமையான சந்தர்ப்பம் - ஏற்படுகிறது. அந்தச் சந்தர்ப்பத்தின் அருமையைத் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ள ஆற்றல் வேண்டும்; அதோடு அதிர்ஷ்டமும் வேண்டும். |
|
|
|
|
|
|
|
சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'சாவி'யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்ட மும் அவருக்கு இருந்தன. |
|
|
|
|
|
|
|
''நவகாளிக்குப் போகிறீர்களா?' என்று கேட்டதும் ஒரு கணமும் யோசியாது, "போகிறேன்'' என்று உடனே ஒப்புக் கொண்டார். |
|
|
|
|
|
|
|
காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும் போதே குலை நடுக்கம் உண்டாயிற்று. |
|
|
|
|
|
|
|
அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார். |
|
|
|
|
|
|
|
கிராமம் கிராமமாகக் கால் நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!'' என்று சொன்னார். |
|
|
|
|
|
|
|
பலர் சந்தேகப்பட்டார்கள். 'வேண்டாம்' என்று தடுத்தார்கள். காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்' என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார். |
|
|
|
|
|
|
|
''என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான் ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்'' என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார். |
|
|
|
|
|
|
|
ஆனால், உண்மையில் அஹிம்சைக் கொள்கையும் தோல்வியடையவில்லை; மகாத்மா கடைப்பிடித்த முறையும் தோல்வி அடையவில்லை. நவகாளியில் மகாத்மா ஆரம்பித்த அஹிம்சா இயக்கம் புது டெல்லியில் ஜனவரி 30-ஆம் தேதி பூர்த்தியாயிற்று. |
|
|
|
|
|
|
|
பலாத்காரம் தோற்றது ; கொடுமை தோற்றது ; துவேஷம் தோற்றது; சமூகவெறி தோற்றது ; நாதுராம் கோட்ஸேயும் படுதோல்வி அடைந்தான். |
|
|
|
|
|
|
|
அன்பு வெற்றி பெற்றது ; அஹிம்சை வெற்றி பெற்றது; அஹிம்சா மூர்த்தியான காந்திஜி வெற்றி பெற்றார்; சந்தேகமேயில்லை. இந்திய தேசமெங்கும் வசிக்கும் பாமர முஸ்லிம் மக்களின் மனோநிலையை இன்று கேட்டறிந்தால் அஹிம்சையின் வெற்றி எவ்வளவு மகத்தானது என்று அறியலாம். |
|
|
|
|
|
|
|
'அன்பு அன்பை வளர்க்கிறது. துவேஷம் துவேஷத்தை வளர்க்கிறது' என்பது காந்தி மகானுடைய கொள்கை. 'துவேஷத்தைப் பதில் துவேஷத்தினால் வெல்ல முடியாது. துவேஷத்தை அன்பினாலேதான் வெல்ல முடியும்' என்பது அவருடைய சமய சித்தாந்தம். கல்கத்தா படுகொலை, நவகாளி பயங்கரம் இவற்றுக்குப் பிறகு ஏற்கனவே அன்பும், சகோதர பாவமும், குடிகொண்டிருந்த ஹிந்துக்கள் பலரின் உள்ளங்களிலும் துவேஷமென்னும் அக்கினி மூண்டது. |
|
|
|
|
|
|
|
பஞ்சாப் சம்பவங்களுக்குப் பிறகு அந்த அக்கினி கொழுந்து விட்டு எரியத் தொடங்கியிருந்தது. |
|
|
|
|
|
|
|
ஆனால், மகாத்மா காந்தியின் உறுதி மட்டும் எள்ளளவும் சலனமடையவில்லை. |
|
|
|
|
|
|
|
நவகாளியில் முஸ்லிம்கள் உள்ளத்திலிருந்து பகைமைப் பேயை விரட்ட முயன்றது போலவே, கல்கத்தாவிலும், டெல்லியிலும் ஹிந்துக்களின் உள்ளத்திலிருந்தும் பகைமைப் பேயை ஓட்ட முயன்றார். |
|
|
|
|
|
|
|
கல்கத்தாவில் மகாத்மா விரைவிலேயே அதிசயமான வெற்றி பெற்றார். ஆனால், டெல்லியில் அவ்வளவு எளிதாக வெற்றி காண முடியவில்லை. உண்ணாவிரதம் இருந்து ஓரளவு வெற்றி கண்டார். உயிரைத் தியாகம் செய்து பூரண வெற்றி அடைந்தார். |
|
|
|
|
|
|
|
எவ்வளவோ கசப்படைந்து போயிருந்த ஹிந்து சமூகத்தின் உள்ளம் இவ் வருஷம் ஜனவரி 30-க்குப் பிறகு அடியோடு மாறிவிட்டது. வெறுப்பும், துவேஷமும், பழிவாங்கும் எண்ணமும் குடிகொண்டிருந்த ஹிந்து உள்ளங்களில் இப்போது பழையபடி அன்பும், சகோதர பாவமும் குடிகொண்டிருக்கின்றன. |
|
|
|
|
|
|
|
மகாத்மா காந்தி தினந்தோறும் மாலையில் நடத்தும் பிரார்த்தனையைப் பற்றி அனைவரும் அறிவார்கள். பிரார்த்தனையில் 'ராம்துன்' அதாவது ராம நாம பஜனை நடப்பதும் எல்லோருக்கும் தெரியும். |
|
|
|
|
|
|
|
''ரகுபதி ராகவ ராஜா ராம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
பதித பாவன சீதா ராம்" |
|
|
|
|
|
|
|
|
|
|
|
என்பது நவகாளி யாத்திரைக்கு முன்னால் மகாத்மா காந்தி நடத்திய பிரார்த்தனைகளில் சாதாரணமாகப் பாடப்பட்ட ராம பஜனை. |
|
|
|
|
|
|
|
நவகாளி யாத்திரையின்போது மகாத்மா பின்வரும் இரண்டு வரிகளைப் புதிதாக மேற்படி ராம பஜனையில் சேர்த்துக் கொண்டார். |
|
|
|
|
|
|
|
''ஈசுவர அல்லா தேரே நாம் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஸப்கோ ஸன்மதி தே பகவான்!'' |
|
|
|
|
|
|
|
|
|
|
|
(ஈசுவரன் என்றாலும் அல்லா என்றாலும் உன்னுடைய திருநாமந்தான். பகவானே! எல்லாருக்கும் நல்ல புத்தியை அருள்க.) |
|
|
|
|
|
|
|
ராம பஜனையில் இந்த வரிகளை மகாத்மா சேர்த்த போது ஹிந்துக்களில் பெரும்பாலோருக்குப் பிடிக்கவில்லை. இவ்வளவு கொடூரமான காரியங்கள் நாட்டில் நடந்த பிறகு ராமர் பெயரோடு அல்லாவின் பெயரைச் சேர்ப்பதற்கு ஹிந்துக்களின் மனம் இடங் கொடுப்பது கஷ்டந்தான். ஏதோ சிலர் காந்திஜி சொல்கிறாரே என்று ஒப்புக் கொண்டனர். |
|
|
|
|
|
|
|
ஆனால், காந்தி மகான் ஜனவரி 30-ஆம் தேதி உயிர்த்தியாகம் செய்த பிறகு, எத்தனை லட்சக்கணக்கான ஹிந்துக்கள் மனத்தில் சிறிதும் தயக்கமோ, கல்மிஷமோ இல்லாமல், 'ஈசுவர அல்லா தேரே நாம்' என்னும் பஜனை வரியை விம்மிக் கொண்டும் விசித்துக் கொண்டும் பாடியிருக்கிறார்கள்! |
|
|
|
|
|
|
|
ஹிந்துக்களின் மனமாறுதலைக் காட்ட இதைக் காட்டிலும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? |
|
|
|
|
|
|
|
ஜனவரி 30-ஆம் தேதி சம்பவம் நம்மையெல்லாம் ஒரு குலுக்கு குலுக்கிவிட்டது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் மறைவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். ஆனினும் மகாத்மாவின் தியாக வாழ்க்கையின் சிகரம் அதுதான் என்பதில் ஐயமில்லை. |
|
|
|
|
|
|
|
காந்தி மகான் தமது இறுதியான ஆத்ம தியாகத்தினால் இந்திய நாட்டைக் காப்பாற்றினார். இந்தியா அடைந்த புதிய சுதந்திரத்தைக் காப்பாற்றினார். இந்தியாவில் இரத்த வெள்ளம் ஓடி, கோடிக்கணக்கான மக்கள் செத்து , தேசமே ஒரு பெரிய மயானம் ஆகிவிடாமல் காப்பாற்றினார். |
|
|
|
|
|
|
|
இனி எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள், ஒரு வேளை ஊழிக் காலம் வரையில், மகாத்மா இந்தியாவின் குலதெய்வமாகப் போற்றப்படுவார். உலகத்துக்குப் புது வழிகாட்டி, மனித குலம் சர்வ நாசம் அடையாமல் காப்பாற்றிய தீர்க்கதரிசியாக உலக மக்களால் நெடுங்காலம் பாராட்டப்படுவார். |
|
|
|
|
|
|
|
இதற்கெல்லாம் அங்குரார்ப்பணம் நவகாளியிலே தான் நடந்தது. காந்திஜியின் கால்நடை யாத்திரையின் போது நடந்தது. |
|
|
|
|
|
|
|
அந்த அரும் பெரும் சரித்திர சம்பவத்தை நேரில் பார்க்க 'சாவி'க்குக் கொடுத்து வைத்திருந்தது. |
|
|
|
|
|
|
|
தாம் அநுபவித்ததைத் தமிழர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று இக் கட்டுரைகளை அவர் எழுதினார். 'சாவி'க்கே உரிய இலேசான நகைச்சுவையுடன் கூடிய எளிய நடையில் எழுதினார். |
|
|
|
|
|
|
|
வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பலகணி வழியாகப் பார்த்தால், அந்தப் பலகணியின் அளவுதான் வெளியே தெரியும் என்பது கிடையாது; சின்னப் பலகணியின் வழியே வெகுதூரம் பார்க்கலாம். |
|
|
|
|
|
|
|
அது போலவே 'சாவி இரண்டு தினங்களே காந்தியுடன் இருந்த போதிலும் பலகணி வழியாகப் பார்ப்பது போலப் பார்த்து மகாத்மாவின் நவகாளி யாத்திரை முழுவதையுமே கண்ணோட்டமிட்டு எழுதியிருக்கிறார்: வெகு ரசமாகவும் எழுதியிருக்கிறார். |
|
|
|
|
|
|
|
இந்த நூலில் உள்ள கட்டுரைகள் வெறும் நகைச்சுவைக் கட்டுரைகள் அல்ல; வெறும் பிரயாணக் கட்டுரைகளும் அல்ல; சரித்திரத்தில் இடம் பெற வேண்டிய முக்கிய நிகழ்ச்சியைப் பற்றிய தார்மீகக் கட்டுரைகள் ; காந்திஜியையும் அவருடைய ஜீவிய தர்மத்தையும் எல்லோரும் அறியத் தெளிவாக்கித் தரும் கட்டுரைகள் ; இலக்கியம் என்று சொல்வதற்குரிய ரஸமான கட்டுரைகள். |
|
|
|
|
|
|
|
தமிழுக்கும், தமிழ் நாட்டுக்கும், தமிழ் நாட்டிலுள்ள காந்தி பக்தர்களுக்கும் 'சாவி' சிறந்த பேருதவி புரிந்திருக்கிறார். |
|
|
|
|
|
|
|
இந்த நூலை வாங்கிப் படிக்கும் நண்பர்கள் 'சாவி'க்குப் பிரதி உபகாரம் எதுவும் செய்து விட முடியாது. தமிழ் நாட்டினருக்கு இத்தகைய பேருதவியை 'சாவி'யும் இனி ஒரு முறை செய்துவிட முடியாது. |
|
|
|
|
|
|
|
சென்னை |
|
|
|
20 - 2 - 1948 |
|
|
|
ரா. கிருஷ்ணமூர்த்தி |
|
|
|
ஆசிரியர் 'கல்கி' |
|
|
|
|
|
|
|
|
|
|
|
நவகாளி யாத்திரை |
|
|
|
|
|
|
|
|
|
பூர்வாங்க ஏற்பாடுகள் |
|
|
|
|
|
|
|
ஒரு நாள் மாலை நான் தியாகராயநகர் பனகல் பார்க்கைச் சுற்றிச் சுற்றி வேகமாக நடை போட்டுக் கொண்டிருந்தேன். |
|
|
|
|
|
|
|
என்னைக் கவனித்த நண்பர்கள் சிலர் என் அருகில் வந்தார்கள்; நான் அவர்களைப் பார்க்காதவன் போல் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நண்பர்கள் என்னைப் பின்தொடர ஆரம்பித்தார்கள். நான் மேலும் வேகமாக நடந்து சென்றேன்; நண்பர்கள் விடுவதாக இல்லை. |
|
|
|
|
|
|
|
'ஸார்!'' என்றார்கள். திரும்பிப் பார்த்தேன். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''நேற்று வரை நன்றாயிருந்தீர்களே? இன்றைக்குத் தங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது?'' என்று அவர்கள் என்னைப் பார்த்துத் துக்கம் விசாரிக்கத் தொடங்கினார்கள். |
|
|
|
|
|
|
|
''என்னை ஏகாந்தமாகச் செல்ல விடுங்கள். என் பின்னோடு யாரும் வந்து தொந்தரவு கொடுக்க வேண்டாம். நான் நவகாளி ஜில்லாவுக்குப் போகப் போகிறேன். அதற்காகவே இப்படிச் சாதகம் செய்து கொள்கிறேன்!'' என்று பதில் கூறினேன். |
|
|
|
|
|
|
|
'என்ன, என்ன! நவகாளிக்கா போகிறீர்கள்? கால் நடையாகவா?'' என்று ஆச்சரியமும், ஆவலும் நிறைந்த குரலில் கேட்டார் ஒரு நண்பர். |
|
|
|
|
|
|
|
"இல்லை ஐயா, இல்லை; நவகாளிக்கு ரயிலில்தான் செல்கிறேன்; கூடுமானால் ஆகாய விமானத்திலேயே போவேன், ஆனால்...'' என்றேன். |
|
|
|
|
|
|
|
''நல்ல வேளை! தாங்கள் நடந்து பழகும் வேகத்தைப் பார்த்தால் ஒருவேளை நவகாளிக்கே நடந்து போய் விடுவீர்களோ என்று பயந்து போனேன். அது சரி; நவகாளியில் தங்களுக்கு என்ன வேலை?'' என்று கேட்டார் நண்பர். |
|
|
|
|
|
|
|
''அங்கே மகாத்மாஜி தமது அஹிம்சாப் பிரசாரத்தின் மூலம் ஹிந்து முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டும் பொருட்டுக் கிராமம் கிராமமாகக் கால்நடையாகவே யாத்திரை கிளம்பியிருக்கிறார் அல்லவா?'' ''ஆமாம்!'' 'காந்தியடிகள் அடிச் சுவடுகளைப் பின்பற்றி அடியேனும் சொல்லப்போகிறேன். மகாத்மாஜி ரொம்பவும் வேகமாக நடப்பவராகையால் அவருடன் பிரயாணம் செய்யும் பொருட்டே இம் மாதிரி வேகமாக நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன்!'' என்று கூறினேன். |
|
|
|
|
|
|
|
என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்கள் அத்துடன் திருப்தி அடைந்தவர்களாகி வேறு திசையில் தங்கள் நடையைக் கட்டினார்கள். |
|
|
|
|
|
|
|
பிரயாணத் திட்டம் |
|
|
|
|
|
|
|
காந்தி மகாத்மாவோடு நவகாளி ஜில்லாவில் பிரயாணம் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு மறுநாள் ரயில் ஏறிக் கல்கத்தா நகரத்தை அடைந்தேன். |
|
|
|
|
|
|
|
கல்கத்தாவில் தென்னிந்தியப் பிரமுகரான திரு. சாரியார் வீட்டில் தங்கி, அங்கிருந்து நவகாளி மார்க்கத்தைக் கண்டு பிடித்து, காந்திஜி தங்கியுள்ள கிராமத்துக்குச் செல்லும் வழி முதலிய விவரங்களை அறிவதற்குள் இரண்டு தினங்கள் கழித்துவிட்டன. இதற்குள் மகாத்மாவின் முதல் யாத்திரைத் திட்டம் தொடங்கப் போகிறதென்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. மேற்படி இரண்டாம் யாத்திரையின் திட்டப்படி காந்தி மகான் முதலாவதாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்துக்கு விஜயம் செய்வார் என்றும் கண்டிருந்தது. |
|
|
|
|
|
|
|
ஸ்ரீநகர் கிராமத்தை அடைவது எப்படி என்று திரு. சாரியார் அவர்களை விசாரித்தேன். நண்பர் சாரியார் தம்முடைய கைகளை அகல விரித்துவிட்டு, 'எனக்குத் தெரியாதே!'' என்றார். அப்போது என் முகத்தில் தோன்றிய பலவித பாவங்களை அவர் கவனித்திருக்க வேண்டும். சிறிது நேரத்துக் கெல்லாம் என் நிலை மையைக் கண்டு இரக்கப்பட்டவராய், ''கவலைப் படாதீர்; பக்கத்து வீட்டில் ஒரு வங்காளி நண்பர் இருக்கிறார். அவருக்குச் சொந்த ஊர் நவகாளி ஜில்லாதான். அவர் அடிக்கடி அங்கே போய் வந்து கொண்டுமிருக்கிறார். அவரை விசாரித்தால் எல்லா விவரங்களும் தெரிந்துவிடும்'' என்று தைரியமூட்டி, அந்த வங்காளி நண்பரிடம் என்னை அழைத்துப் போனார். - எங்களைக் கண்டதும் அந்த வங்காளி நண்பர், 'ஆஷன் - போஷன்' என்று வங்காளியில் பேசினார். வாருங்கள் - உட்காருங்கள்' என்பதற்குத்தான் வங்காள மொழியில் 'ஆஷன்- போஷன்' என்று சொல்லுவார்கள் என்று திரு. சாரியார் எனக்கு விளக்கம் கூறினார். |
|
|
|
|
|
|
|
பிறகு, 'இவர் மதராஸி; நவகாளியில் காந்திஜியைப் பார்க்கச் செல்கிறார். இந்தப் பக்கத்துக்குப் புதியவர். தங்களிடம் நவகாளிக்குப் போகும் வழியைக் கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்திருக்கிறார்'' என்று அந்த வங்காளி நண்பருக்கு திரு. சாரியார் என்னை அறிமுகப்படுத்தினார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி பேரைச் சொன்னதும் அந்த வங்காளிக் காரர் என்னைச் சற்று அதிசயத்துடன் பார்த்துவிட்டு வழி சொல்லலானார். |
|
|
|
|
|
|
|
''கல்கத்தாவிலிருந்து கோலந்தோவுக்கு ரயில் ஏறிப் போகவேண்டும். கோலந்தோவில் தயாராக நிற்கும் நீராவிப் படகில் ஏறி மக்னா, பத்மா என்ற இரு நதிகளையும் கடந்து சாந்த்பூருக்குச் செல்ல வேண்டும். |
|
|
|
|
|
|
|
சாந்த்பூரை அடைந்ததும் சிட்டகாங் எக்ஸ்பிரஸில் ஏறினால் லாக்ஸாம் என்ற ஜங்ஷன் வரும். அங்கிருந்து நவகாளி எக்ஸ்பிரஸ் கிளம்பும்; அதில் ஏறிக்கொண்டு ஸோணாய் முரி ஸ்டேஷனில் போய் இறங்கினீர் களானால் அப்புறம்...'' |
|
|
|
|
|
|
|
''அப்புறம் என்ன?... அப்புறமாவது மகாத்மா ஜியைப் பார்த்துவிடலாம் அல்லவா?'' என்று குறுக்கிட்டுக் கேட்டேன். |
|
|
|
|
|
|
|
''அதுதானே இல்லை; ஸோணாய்முரிக்குப் போய் அங்கே யாரையாவது விசாரித்தீர்களானால் மகாத்மாஜி இருக்கும் இடத்துக்கு வழி சொல்லுவார்கள்'' என்று கதையை முடித்தார் வங்காளிக்காரர். |
|
|
|
|
|
|
|
அட, ஈசுவரா!' என்று பெருமூச்சு விட்டேன் நான். கல்கத்தாவிலிருந்து நான் மகாத்மா இருக்குமிடத்தை அடைவதற்குள் ஒருவேளை அவருடைய இரண்டாவது பிரயாணத் திட்டமும் முடிந்துவிடுமோ என்று சந்தேகம் வந்துவிட்டது. |
|
|
|
|
|
|
|
திரு. சாரியார் என்னை , " என்ன? கிளம்புவதற்குத் தயாரா?'' என்று சிரித்துக்கொண்டே கேட்டார். |
|
|
|
|
|
|
|
''ஓ, தயார் மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் எப்போது புறப்படுகிறது?'' என்று கேட்டேன். |
|
|
|
|
|
|
|
ஆமாம்; வங்காளி நண்பர் வழி சொன்ன பிறகு என்னுடைய மனோநிலை ஊருக்குத் திரும்பிவிடும் நோக்கத்தில்தான் இருந்தது. ஆனாலும், முன்வைத்த காலைப் பின்வைப்பது அழகல்ல என்ற திட சங்கல்பத்துடன் நவகாளியை அடைந்தே தீருவது என்று தீர்மானம் செய்து கொண்டேன். |
|
|
|
|
|
|
|
எனவே, நவகாளி யாத்திரைக்காக நானும் என்னு டைய இரண்டாவது பிரயாணத் திட்டத்தைப் போட்டுக் கொண்டு மறுநாள் விடியற்காலம் புறப்படுவதற்குச் சித்தமானேன். |
|
|
|
|
|
|
|
திரு. சாரியார் கவலை |
|
|
|
|
|
|
|
முதல் நாள் இரவு எனக்குத் தூக்கமே வரவில்லை . போதாக்குறைக்கு நண்பர் சாரியார் வேறு மூச்சுக்கொரு தடவை வந்து என்னைக் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். |
|
|
|
|
|
|
|
''ஏன் ஸார், அங்கெல்லாம் ரொம்பக் குளிரும் என்று சொல்கிறார்களே, என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
"குளிருமா? அப்படியானால் இதோ இந்தக் கம்பளிக் கோட்டைப் போட்டுக் கொள்வேன் என்று பதில் கூறினேன் நான். |
|
|
|
|
|
|
|
சற்று நேரம் கழித்து, சாரியார் இன்னொரு தடவை வந்து எட்டிப் பார்த்தார். |
|
|
|
|
|
|
|
"ஸார், தங்களுக்கு வங்காளி பாஷை தெரியாதே, என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
''பரவாயில்லை; மகாத்மாஜிக்கும் வங்காளி பாஷை தெரியாதாம். ஆகையால் கவலையில்லை '' என்றேன். |
|
|
|
|
|
|
|
சிறிது நேரம் கழித்து, சாரியார் மீண்டும் என் அறைக்குள் பிரவேசித்தார். |
|
|
|
|
|
|
|
''ஏன் ஸார், அங்கெல்லாம் அடிக்கடி பசிக்குமாமே, அதற்கு என்ன செய்வீர்?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
''அங்கு மட்டுமென்ன? எனக்கு எங்குமே அடிக்கடி பசி எடுக்கும். ஆகையால் அடிக்கடி பசி எடுத்தால் அடிக்கடி சாப்பிட்டு விடுகிறேன்'' என்று சமாதானம் கூறி அனுப்பினேன். |
|
|
|
|
|
|
|
திரு. சாரியார், பாவம், நான் தனியாகப் போகிறேனே என்ற கவலையில் அடிக்கடி இம் மாதிரி ஏதாவது கேள்விகள் கேட்டுக் கேட்டுத் தாமாகவே அலுத்துப் போய்க் கடைசியாக, ''ஏதோ ஸார், தனியாகப் போகிறீர்கள்; போய் வாருங்கள் ; வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்று எச்சரித்துவிட்டுப் படுக்கப் போய்விட்டார். |
|
|
|
|
|
|
|
மறுநாள் நான் கிளம்பியபோது, அவர் மனைவியார் என் வழிப் பிரயாணத்துக்காகச் சாப்பாடு கட்டிக் கொடுத்ததுடன் சில தினங்கள் வைத்துச் சாப்பிடக் கூடிய ஆகாரமான பொரி உருண்டைகளும் செய்து தந்தார். |
|
|
|
|
|
|
|
நான் வாயுள்ள பிள்ளையாகையால் அந்த அம்மாள் கொடுத்தனுப்பிய சாப்பாடு, பொரி உருண்டை முதலியவற்றை மறுநாளே தீர்த்துக் கட்டிவிட்டேன். |
|
|
|
|
|
|
|
பின்னர், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தி பாஷையை வைத்துக்கொண்டு ரயில் ஏறி, கப்பல் ஏறி, மூங்கில் படகு ஏறி, மோட்டார் ஏறி, மாட்டு வண்டி ஏறிக் கடைசியில் ஒருவிதமாக வங்காளி நண்பர் சொன்ன ஸோணாய்முரி என்ற கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தேன். |
|
|
|
|
|
|
|
அந்தக் கிராமத்திலிருந்து மகாத்மாஜி இருக்கு மிடத்துக்குப் பத்து மைல் தூரம் என்றும், அந்த இடத்துக்கு வண்டிப்பாதை கிடையாதென்றும், நடைபாதைதான் உண்டு என்றும் தெரிந்து கொண்டேன். எனவே, தன்னந்தனியாக நவகாளி ஜில்லாவில் தோப்புகளும் துரவுகளும் நிறைந்த பயங்கரச் சூழ்நிலையில் களிமண் வரப்புக்களால் அமைந்த கொடி வழியைப் பின்பற்றி மகாத்மா இருக்கும் திக்கு நோக்கி ஏகாந்தமாகப் பிரயாணம் செய்யும்படி ஆயிற்று. |
|
|
|
|
|
|
|
தீக்குச்சிச் சம்பவம் |
|
|
|
|
|
|
|
போகும் வழியில் என்னை அறியாமல் என் உள்ளத்தில் பீதி குடி கொண்டது. சில மாதங்களுக்கு முன்னால் அந்தப் பிரதேசத்தில் நடந்த பயங்கரப் படுகொலைகளும், மிருகப் பிராயமான நாச வேலைகளும் ஞாபகத்திற்கு வந்தன. தூரத்தில் அங்கங்கே எரிந்து சாம்பலான கொள்ளிக் கட்டை களுடன் காட்சியளித்த சில குடிசைகள் வேறு மேற்படி சம்பவங்களுக் கெல்லாம் சாட்சியம் கூறின. மனித சஞ்சாரம் அவ்வளவாகக் காணப்படவில்லை. வெகு நேரம் கழித்து, வெகு தூரம் சென்றதும் எதிரே ஓர் ஆஜானுபாகுவான முரட்டு மனிதன் தென்பட்டான். அவன் கையிலே அரிவாள் ஒன்று இருந்தது. அவனைக் கண்டதும் என்னுடைய இருதயம் 'படக் படக் கென்று அடித்துக் கொண்டது. அவன் என்னை நெருங்கி வர வர வேகம் அதிகமாயிற்று. அவன் என் எதிரிலே வந்து யமனைப்போல் நின்று கொண்டான். |
|
|
|
|
|
|
|
''நீ ஹிந்துவா? முஸ்லிமா?'' என்று அவன் வங்காளி பாஷையில் கேட்டான். நடுங்கிய குரலில் நான் அந்த ஆசாமிக்குப் பதில் கூறினேன். |
|
|
|
|
|
|
|
"நான் ஒரு இந்தியன்; காந்திஜியைப் பார்க்கச் செல்லுகிறேன்' என்று சொல்லிக் கையில் பிடித்திருந்த 'கல்கி' பத்திரிகையின் அட்டையின் மேல் வரைந் திருந்த காந்திஜியின் படத்தை அவனுக்குக் காண்பித்து என்னுடைய பாஷைக்கு சமிக்ஞை தெரிவித்தேன். அந்தப் படத்தைக் கண்டதும் மேற்படி வங்காளி முஸ்லிமின் முகத்தில் பளிச்சென ஓர் ஒளி மின்னியது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''உன்னிடம் நெருப்புக் குச்சி இருக்கிறதா?'' என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய சட்டைப் பையிலிருந்த பீடித்துண்டு ஒன்றைக் கையிலே எடுத்துப் பிடித்துக் கொண்டான். |
|
|
|
|
|
|
|
நல்ல வேளையாக அப்போது என் கைவசம் ஒரு டஜன் தீப்பெட்டிகள் இருந்தன. சென்னையில் அப்போது ஏற்பட்டிருந்த தீப்பெட்டிப் பஞ்சம் காரணமாக அவற்றை வாங்கி 'ஸ்டாக் வைத்திருந்தேன். அவற்றிலிருந்து சட்டென்று முழுப் பெட்டியாக ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தேன். அதற்குப் பிறகுதான் அவன் என்னை மேலே போக வழி விட்டான். |
|
|
|
|
|
|
|
'அப்பாடா!' என்று பெருமூச்சுடன் ஆண்டவனுக்கு ஒரு சலாம் போட்டுவிட்டு அந்த இடத்தினின்றும் வேகமாக நடக்க ஆரம்பித்தேன். அவன் ஒரு சாதாரண முஸ்லிம் குடியானவன்தான் என்றும், அரிவாளுடன் வயலுக்குப் போகும் வழியில் என்னைச் சந்தித்த இடத்தில் எதேச்சையாக அவன்பாட்டுக்கு 'ஹிந்துவா, முஸ்லிமா?'' என்று கேள்வி போட்டிருக்கிறான் என்றும், வீணான பீதி காரணமாக நானே அவனைக் கண்டு மிரண்டு போயிருக்கிறேன் என்றும் அப்புறம்தான் ஊகித்துத் தெரிந்து கொண்டேன். |
|
|
|
|
|
|
|
கண்டேன் காந்தியை! |
|
|
|
|
|
|
|
அப்புறம் எப்படியோ தட்டுத் தடுமாறி ஸ்ரீநகர் கிராமத்தை அடைவதற்குள் மணி மூன்றாகிவிட்டது. காந்திஜியின் ஆசிரமம் ஒரு தென்னந் தோப்புக்குள் இருந்தது. குளுமையான அந்தத் தோப்புக்குள் பிரவேசித்தபோது என் பசி தாகமெல்லாம் பறந்து போய்விட்டன. என்னை அறியாமல் என்னிடம் ஒரு வித பக்தி உணர்ச்சி தோன்றியது. ஏதோ தெய்வீக சக்தி வாய்ந்த ஆலயம் ஒன்றின் கர்ப்பக்கிருகத்துக்குள் பிரவேசிப்பதைப் போன்ற புனித உணர்ச்சி உண்டா யிற்று. அங்கே காணப்பட்ட ஒரு சிறு செங்கல் வீட்டுக்குள்தான் மகாத்மா இருக்கிறார் என்று சொன்னார்கள். எனவே, மேற்படி வீட்டை வலமாக ஒரு முறை சுற்றி வந்து, வாசற்படி வழியாக சந்நிதானத்தின் மூல விக்கிரகத்தை எட்டிப் பார்த்தேன். அஹிம்சா மூர்த்தி எம்மான் காந்தி அயர்ந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தார். சாந்த ஸ்வரூபியின் முகத்திலே அறவொளியின் தேஜஸ் பிரதிபலித்தது. அவருக்குப் பக்கத்திலே கைக் கோலும், கைராட்டையும் காணப் பட்டன. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஆகா! காந்தி மகாத்மாவைக் கண்ட மாத்திரத்திலேயே என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் அடியோடு மறைந்தன. |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜியின் தரிசனம் கிட்டியதே என் பாக்கியம் என்று பூரிப்படைந்தவனாய் அந்த இடத்துக்கு அருகாமையிலேயே அமைந்திருந்த நிருபர்கள் முகாமுக்குச் சென்றேன். |
|
|
|
|
|
|
|
* * * |
|
|
|
|
|
|
|
பத்திரிகை நிருபர்களுக்காக மகாத்மாஜியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசையை ஒதுக்கி விட்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் வங்கப் போலீஸார் தங்கியிருந்தார்கள். மற்றொரு குடிசையில் வங்காள யூனிவர்ஸிடி புரொபஸர் திரு. நிர்மல் குமார் போஸ் சுறுசுறுப்பாகத் தமது அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். நிர்மல் குமார் போஸ்தான் அப்போது மகாத்மாஜியின் ஆபீஸ் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அத்துடன் மகாத்மாஜியின் பிரார்த்தனைப் பிரசங்கங்களை வங்காளியில் மொழி பெயர்த்துக் கூறுவதும் அவருடைய அன்றாட முக்கிய ஜோலிகளில் ஒன்றாகும். மற்றபடி மகாத்மாஜியின் சுற்று வேலைகளைக் கவனிப்பதற்கும், அவருக்கு வேண்டிய பணிவிடைகள் புரிவதற்கும் அவருடைய பேத்தி மநு காந்தி அவருடனேயே தங்கியிருக்கிறார். எனவே, மகாத்மாஜியோடுகூடத் தவிர்க்க முடியாத ஒரு சில குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே யாத்திரை செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். |
|
|
|
|
|
|
|
பத்திரிகை நிருபர்கள் முகாமில் சுமார் ஆறு ஏழு பேர் இருந்தார்கள். எல்லோரும் வங்காளியும், ஹிந்தியும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையே தமிழ் தெரிந்த நிருபர் ஒருவரும் இருந்தார். அந்த இடத்தில் தமிழ் பேசத் தெரிந்தவரைக் கண்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்தான் அமெரிக்கப் பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பும் யூ. பி. நிருபர் - என்று அருகிலிருந்தவர்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேற்படி யு.பி. நிருபரை அணுகிப் பெயர் என்னவென்று விசாரித்தேன். மாணிக்கவாசகம் என்று பதில் இறுத்தார். நண்பர் மாணிக்கவாசகத்தின் மூலம் மகாத்மாஜி யாத்திரை சம்பந்தமான பல விவரங்களையும், நவகாளி ஜில்லாவிலே நடந்த கோர சம்பவங்களைப்பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். இதற்குள் மணி நாலே முக்கால் ஆகிவிட்டது. 'இன்னும் கால் மணி நேரத்தில் மகாத்மா பிரார்த்தனைக்குக் கிளம்பிவிடுவார்; நாமும் அவருடன் செல்லத் தயாராக இருக்க வேண்டும்'' என்று எச்சரித்தார் மாணிக்கவாசகம். |
|
|
|
|
|
|
|
'அச்சா குத்தா!' |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி தங்கியிருந்த குடிலுக்கு அருகில் போய் அந்த மகானுடைய புறப்பாடுக்காகக் காத்திருந்தோம். |
|
|
|
|
|
|
|
வாசலில் சுவான மண்டலம் போட்டுப் படுத்திருந்த ஒரு கறுப்பு நாய் எழுந்து நின்று உடம்பைச் சிலுப்பிக் கொண்டது. ''இது ஏது, இந்த நாய்?' என்று கேட்டேன். இதற்குள் மகாத்மாஜி தடியை ஊன்றிக் கொண்டு வெளியே புறப்பட்டு விட்டார். வாசலில் நின்ற நாய் அவரை அணுகிச் சென்றது. 'அச்சா குத்தா!' என்று சொல்லி காந்திஜி சிரித்துக்கொண்டே குனிந்து அதை அன்புடன் தடவிக் கொடுத்தார். பிரார்த்தனைக்குப் போகும் வழியில் நண்பர் மாணிக்கவாசகம் அந்த நாயைப்பற்றிய மயிர்க்கூச்செறியும் பயங்கரச் சம்பவம் ஒன்றை எனக்கு விவரமாகக் கூறினார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''நவகாளி ஜில்லாவிலுள்ள நோவாகாலா என்ற ஒரு சிறு கிராமத்தில் பெரிய ஹிந்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அந்தக் குடும்பத்தில் ஆண் பெண் அடங்கலாக ஒன்பது பேர் இருந்தனர். அந்த ஒன்பது பேரும் வெறி கொண்ட காலிக் கூட்டத்தினரின் வாளுக்குப் பலியாகிக் கூண்டோடு கைலாசமாக யமலோகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாய்தான் இது'' என்றார். |
|
|
|
|
|
|
|
'இந்த நாய் இங்கே எப்படி வந்தது?' என்று அதிசயத்துடன் விசாரித்தேன். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாஜி மேற்படி கிராமத்துக்குப் போயிருந்த சமயம் இந்த நாய் அவரைப் பார்த்துவிட்டு ஓடி வந்து அவரைச் சுற்றிச் சுற்றி வந்தது. பிறகு, தன்னுடைய குடும்பத்தார் வெட்டிப் புதைக்கப்பட்டிருந்த இடத்துக்கு மகாத்மாஜியை அழைத்துச் சென்றது. அங்கே சென்றதும் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பம் பிடித்துப் பிடித்துக் காட்டியது. காந்திஜி மேற்படி நாயின் நன்றி விசுவாசத்தையும், எஜமான பக்தியையும், அபூர்வ அறிவையும் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார். அன்றுமுதல் இந்த நாய் மகாத்மாஜி செல்லும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது'' என்று கூறினார் மாணிக்க வாசகம். |
|
|
|
|
|
|
|
'லூலூ ' கோஷம்! |
|
|
|
|
|
|
|
மகாத்மாவைப் பின்பற்றிச் செல்லும் அந்த அதிசய நாயைப்பற்றின சுவாரஸ்யமான சரித்திரம் முடிவதற்கும் நாங்கள் பிரார்த்தனை மைதானத்தை நெருங்குவதற்கும் நேரம் சொல்லி வைத்தாற்போல் இருந்தது. பிரார்த்தனை ஸ்தலத்துக்குள் பிரவேசித்த போது எனக்கு ஒரே வியப்பும் திகைப்பும் ஏற்பட்டன. |
|
|
|
|
|
|
|
ஏனெனில், பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த அத்தனை பெண்மணிகளும் ஒன்று சேர்ந்து, அழுகிற குழந்தையைத் தொட்டிலிலே போட்டு விளையாட்டுக் காட்டுவதுபோல் "லூலூலூ " என்று விநோதமாகக் குரல் கொடுத்தார்கள்! மேற்படி விசித்திர 'லூலூ ' கோஷம் இரண்டு நிமிட நேரம் இடைவிடாமல் நடந்தது. |
|
|
|
|
|
|
|
இந்த அதிசயத்தைப்பற்றி அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்களில் ஒருவர், ''சாதாரண மாக முஸ்லிம் ஸ்திரீகள் தங்களுடைய மத குருக்களைக் காணும் போதும், மகான்களைத் தரிசிக்கும் போதும் மட்டுமே இத்தகைய மரியாதைக் குரலை உண்டாக்கு வார்கள். இதை இங்கே 'ஹ லுத்வனி' என்று கூறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் சாத்தப்படுத்துவது முஸ்லிம் மாதர்களுக்கு மகாத்மாஜியிடம் உள்ள அன்பையும், பக்தியையும், மரியாதையையும் காட்டுகிறது. இதிலிருந்து காந்தி மகாத்மா இங்குள்ள முஸ்லிம்களுடைய உள்ளத்தை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கிறார் என்பதைத் தாங்கள் யூகித்துக் கொள்ளலாம்' என்று கூறினார். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை வேளையில்… |
|
|
|
|
|
|
|
காந்திஜி பிரார்த்தனை மேடையில் ஏறியதும், கண்களை மூடி மூன்று நிமிஷ நேரம் தியானத்திலே ஈடுபட்டிருந்தார். தியானம் முடிந்ததும் வழக்கப்படி குரான், கீதை இவற்றிலிருந்து சில சுலோகங்கள் படிக்கப்பட்டன. அப்புறம் காந்திஜி தமது பிரார்த்தனைப் பிரசங்கத்தை அரை மணி நேரம் ஹிந்தி பாஷையிலே புரிந்தார். அவர் ஹிந்தி பாஷையிலே புரிந்த பிரசங்கம் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை . அடுத்தபடியாக, மகாத்மாஜியின் பிரசங்கத்தை திரு . நிர்மல்குமார் போஸ் வங்காளியிலே மொழி பெயர்த்தார். அது எனக்கு, மகாத்மாஜிக்கு, இருவருக்குமே விளங்கவில்லை. காரணம், மகாத்மாஜிக்கும் வங்காளி பாஷை தெரியாதல்லவா? இது விஷயத்தில் மகாத்மாஜிக்கும் எனக்கும் உள்ள ஒற்றுமையை நினைத்து நான் மிகவும் பெருமைப்பட்டேன்! |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மொழிபெயர்ப்பு நடைபெறும் முக்கால் மணி நேரத்தை வீணாக்காமல் மகாத்மாஜி தம் கையோடு கொண்டுவந்திருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். என்ன எழுதுகிறார் என்று எட்டிப் பார்த்தேன். ஏதோ ஆங்கிலத்தில் கிறுக்கிக் கொண்டிருந்தார். மகாத்மாஜியின் எழுத்து சாட்சாத் பிரம்ம தேவனுடைய எழுத்தையே ஒத்திருந்தது! காந்திஜிக்குத் தினமும் பல இடங்களிலிருந்து பல பேர் பல பிரச்சினைகளைப் பற்றிக் கேள்விகள் கேட்டு கடிதம் எழுதுகிறார்கள் அல்லவா? அவற்றுக்கெல்லாம் அவர் மறுதினம் பிரார்த்தனை வேளையின் போது பதில் எழுதி வைத்துவிடுகிறார். இந்தக் கேள்விகளையும் பதில் களையும் இரவு பத்திரிகை நிருபர்கள் தங்கியுள்ள முகாமுக்கு அனுப்பி வைக்கிறார். நிருபர்கள் இரவோடு இரவாக அவற்றைப் படித்து, 'டைப் செய்து, செய்தி ஸ்தாபனங்களுக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்தச் செய்தி பொழுது விடிவதற்குள் உலகத்தின் பல பாகங்களுக்கும் வாயு வேகத்தில் பரவி விடுகிறது. |
|
|
|
|
|
|
|
பாதரட்சை விஷயம் |
|
|
|
|
|
|
|
தினமும் பிரார்த்தனை முடிந்த பிறகு காந்திஜி சிறிது நேரம் வயல் வெளிகளில் உலாவிவிட்டுத் தமது குடிலுக்குத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
அன்று ஸ்ரீநகரில் பிரார்த்தனை முடிந்ததும் மகாத்மாஜியுடன் உலாவுவதற்கு இன்னும் சிலரும் சென்றார்கள். நானும் கும்பலோடு சேர்ந்து கொண் டேன். உலாவும் போது காந்திஜியின் பாதங்களைக் கவனித்தேன். அப்போதுதான் காந்திஜியின் பாதங்களில் புண் என்கிற விஷயம் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. இருந்தாலும் மகாத்மாஜி அதைச் சற்றும் பொருட் படுத்தாமல் காடு மேடுகளிலெல்லாம் காலில் செருப்பு அணியாமலே நடந்து கொண்டிருந்தார். காந்தி மகாத்மா வெறுங் காலுடன் நடந்து போகும் காட்சியைக் கண்ட என் மனம் சொல்லொணாத வேதனைக்குள்ளாயிற்று. |
|
|
|
|
|
|
|
"ஆகா! உலகம் போற்றும் உத்தமரான மகாத்மாஜி, கல்லிலும் முள்ளிலும் பனித்துளிகள் நிறைந்த சில்லென்ற களிமண் தரையிலும் கால் கடுக்க நடந்து செல்லும் போது நாம் மட்டும் செருப்புடன் நடந்து செல்வதா?'' என்று ஓர் எண்ணம் உண்டாயிற்று. தட்சணமே என்னுடைய காலிலிருந்த செருப்புக்களைக் கழற்றிக் கையிலிருந்த கித்தான் பைக்குள் போட்டுக் கொண்டேன். (என்னுடைய செருப்புக்களில் ஒன்று அந்தச் சமயம் அறுந்து போயிருந்ததென்பதையும், அது என்னுடன் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கி யிருந்தது என்பதையும் நேயர்களுக்குக் காதோடு சொல்லி வைக்கிறேன்.) |
|
|
|
|
|
|
|
வாபஸ் ஆனார்! |
|
|
|
|
|
|
|
போகும் வழியில் 'மகாத்மாஜி ஏன் செருப்பு அணிவதில்லை ?'' என்று நண்பர் மாணிக்கவாசகம் அவர்களிடம் விசாரித்தேன். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாவிடம் பரம பக்தி கொண்ட பஞ்சாபி ஸோல்ஜர் ஒருவர் ஒரு முறை மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காக நவகாளிக்கு வந்திருந்தார். காந்திஜி வெறுங்காலுடன் யாத்திரை செய்கிறார் என்ற செய்தியைப் பத்திரிகைகளிலே படித்த அந்த நண்பர் மகாத்மாவின் உபயோகத்துக்கென்று கையோடு ஒரு ஜதை மிதியடிகளையும் வாங்கி வந்திருந்தார். அந்தப் பாதரட்சைகளை மகாத்மாவிடம் தந்து, ''தாங்கள் இதை அணிந்து கொள்ள வேண்டும். இது தங்களுக்கு நான் இடும் அன்புக் கட்டளை'' என்று கூறினார். |
|
|
|
காந்திஜி சிரித்துக் கொண்டே , ''ஏன்?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
''தாங்கள் இந்தத் தேசத்தின் நாற்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து. தங்களுடைய வயோதிக தசையில் இப்படிச் செருப்பின்றி வெறுங்காலுடன் நடந்து செல்வதை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். இது விஷயத்தில் தங்களுடைய இஷ்டப்படி விட நாங்கள் தயாராக இல்லை. ஆகையால், தாங்கள் இதை அணிந்து கொண்டுதான் ஆகவேண்டும்'' என்று ஒரு போடு போட்டார். ஆனால், காந்திஜியோ, "இந்தியாவில் நாற்பது கோடி மக்களும், ஒரு ஏழை எளியவர்கூடப் பாக்கி இல்லாமல் செருப்பு அணிந்து கொள்ளும் காலம் ஏற்படும் போது நானும் அணிந்து கொள்வேன்; அதுவரை வெறுங் காலுடனேதான் நடப்பேன்' என்று கண்டிப்பாக மறுதளித்துவிட்டார். எனவே அந்தப் பஞ்சாபி ஸோல்ஜர் அதற்கு மேல் பேச வழியின்றி மகாத்மாஜியிடமிருந்து வெற்றிகரமாக வாபஸாகிவிட்டார்' என்று மாணிக்க வாசகம் கதையை முடித்தார். இதற்குள் பொழுது போய்விட்டதால் நாங்களும் எங்கள் குடிசையை நோக்கி வெற்றிகரமாக வாபஸ் ஆனோம். |
|
|
|
|
|
|
|
இருளும் குளிரும் |
|
|
|
|
|
|
|
சூரியன் மேற்குத் திசையில் மறைந்த போது மகாத்மாவும் தமது குடிசைக்குள் மறைந்துவிட்டார். |
|
|
|
|
|
|
|
அஸ்தமித்ததும் கொஞ்சம் கொஞ்சமாகக் குளிர ஆரம்பித்தது. நவகாளி ஜில்லாவில் இருளும் குளிரும் சேர்ந்து ஆட்சி புரிவதைப் போல் நான் எங்குமே கண்டதில்லை . குளிருக்குத் தெரியாமல், அந்தக் கன்னங் கரிய இருட்டில், மெதுவாக என்னுடைய நீண்ட கம்பளிக் கோட்டை எடுத்துப் போட்டுக் கொண்டேன். பொல்லாத குளிர் அதை எப்படியோ கண்டுபிடித்து விட்டதுடன், மெதுவாக என் கையை வந்து சில்லென்று கவ்வியது. சட்டென்று கையைச் சட்டைப் பைக்குள்ளே போட்டுக் கொண்டேன். அடுத்த கணம் சில்லென்று காலில் ஏதோ உறைத்தது. காலைப் போர்த்துக் கொண் டேன். முகத்திலே ஜிலுஜிலுப்புத் தட்டியது. 'மப்ளரை எடுத்துக் கட்டினேன். அந்தப் பொல்லாத குளிர் என்னை விடவில்லை. கோட்டுக்குள்ளே எப்படியோ புகுந்து உடம்பைக் குலுக்கிக் குலுக்கி எடுத்தது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
பாவம், காந்திஜி இந்தக் குளிரை எப்படித்தான் தாங்குகிறார் என்று பார்ப்பதற்காக அவர் தங்கியிருந்த குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன். மகாத்மாஜியை அங்குக் காணவில்லை. நாலா மூலைகளிலும் தேடிப் பார்த்தேன். ஊஹும்; காணவேயில்லை. அப்புறம் விசாரித்ததில் 'காந்திஜி ஒரு கம்பளிப் போர்வைக்குள் புகுந்து கொண்டு நன்றாக உறங்கிக் கொண்டிருப்பார்'' என்று சொன்னார்கள். விடியற்காலம் சென்று பார்த்ததில் நிஜமாகவே மகாத்மாஜி ஒரு கம்பளிக்குள்ளேதான் உறங்கிக் கொண்டிருந்தார்! |
|
|
|
|
|
|
|
பரிசு வகைகள் |
|
|
|
|
|
|
|
சில காலத்துக்கு முன்னால் வங்காளக் கவர்னராக இருந்த கேஸி துரை ஒரு சமயம் மகாத்மாவைப் பேட்டி காண வந்தபோது மேற் படி கம் பளத்தை மகாத்மா வுக்குப் பரிசாக வழங்கினாராம். மிகவும் விலை உயர்ந்த அந்தக் கம்பளத்தைத்தான் காந்திஜி அன்று முதல் போர்வையாக உபயோகித்து வருகிறாராம். |
|
|
|
|
|
|
|
மகாத்மாவுக்கு இப்படி அடிக்கடி அநேக பரிசுகள் வந்து கொண்டிருக்கின்றன. சென்ற கிறிஸ்துமஸ் தினத்தன்று கூட அவருக்கு இத்தகைய பரிசுகள் ஏராளமாக வந்தன. ஏசுநாதர் பிறந்த புனித தினத்தன்று மகாத்மாஜியைத் தரிசிப்பதற்காகச் சில வெள்ளைக்கார ஸோல்ஜர்கள் ஸ்ரீராம் பூருக்கு வந்திருந்தார்கள். பிரார்த்தனை மேடையில் அவரைக் கண்டு, அவரிடம் ஏதேதோ விசித்திரமான பொருட்கள் நிறைந்த பெரிய அட்டைப் பெட்டி ஒன்றை தங்கள் அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பித்தார்கள். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி அந்தப் பெட்டியைத் தம் முன்னே எடுத்து வைத்துக்கொண்டு திறந்து பார்த்தார். முதன் முதலாக மகாத்மாஜி பெட்டிக்குள்ளே கையை விட்டதும் சில அபூர்வ சாமான்கள் வெளியே வந்தன! அவற்றைக் கண்டதும் மகாத்மாவுக்கும், மற்றவர்களுக்கும் சிரிப்புத் தாங்கவில்லை ; காரணம், எல்லாம் சிகரெட் பாக்கெட்டுகள்! |
|
|
|
|
|
|
|
''உயர்ந்த சிகரெட்டுகளைக் கண்டால் நேருஜிக்கு ரொம்பப் பிடிக்கும். ஆகையால், இந்த சிகரெட்டுகளை ஜாக்கிரதையாக வைத்திருந்து நேருஜி இங்கே வரும்போது அவரிடம் கொடுக்கப் போகிறேன்'' என்று மகாத்மா அன்பும், மகிழ்ச்சியும் பொங்கக் கூறினார். |
|
|
|
|
|
|
|
பின்னர், மறுபடியும் பெட்டிக்குள்ளே கையை விட்டார். வாசனை சோப்புகளும், தந்தத்தில் தயார் செய்யப்பட்ட சீட்டுக்கட்டு ஒன்றும் வந்தன. |
|
|
|
|
|
|
|
'இதெல்லாம் எனக்கு உபயோகமில்லை; சீட்டாடவும் எனக்குத் தெரியாது!'' என்று வருத்தப் பட்டுக் கொண்டே மறுபடியும் பெட்டிக்குள் கையை விட்டார். இந்தத் தடவை 'ஷேவிங் ஸெட்' ஒன்று வந்தது! |
|
|
|
|
|
|
|
'இது எனக்கு ரொம்பவும் அவசியமானது. ஆகவே, இதை நானே வைத்துக் கொள்ளப் போகிறேன்'' என்று சொல்லி அதை எடுத்துப் பத்திரமாகத் தமது மடிக்குள்ளே வைத்துக்கொண்டார். மகாத்மாஜி அன்று முதல் தமது அந்திம காலம் வரை மேற்படி 'ஷேவிங் ஸெட்டைத்தான் உபயோகித்து வந்தார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாவைப் பற்றிய பல அபூர்வ சம்பவங்களைப் பற்றியும், அவர் தமது யாத்திரா மார்க்கத்தில் கண்டு வந்த பல முக்கிய காட்சிகளைப்பற்றியும் அங்குள்ள வர்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். காந்தி மகாத்மாவின் கதைகளைக் கேட்கக் கேட்க மேலும் மேலும் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றியது. |
|
|
|
|
|
|
|
கேள்வியும் பதிலும் |
|
|
|
|
|
|
|
அவதார புருஷரான காந்தி மகான் தமது அஹிம்சா யாத்திரையின் நோக்கம் என்னவென்பதைப் பற்றியும், தம்முடைய நோக்கம் வெற்றி பெறாவிட்டால் அதற்கு யார் பொறுப்பாளி என்பதைப் பற்றியும் நாலைந்து தினங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தில் மிகவும் தெளிவாக, விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். அது வருமாறு: |
|
|
|
|
|
|
|
''என்னுடைய லட்சியங்களுக்கு, கீழ் வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்குமுன் இத்தகைய ஒரு பெரிய சோதனையில் நான் ஈடுபட்டதில்லை . இந்தப் பரீட்சையில் நான் தேறாவிட்டால் அது நான் கடைப்பிடித்து வரும் அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப்பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். ஆகவே, நான் இப்போது தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப் போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் பெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்.'' |
|
|
|
|
|
|
|
மேலும் மகாத்மா சிலர் மனத்திலுள்ள விகல்பமான சந்தேகம் ஒன்றுக்கும் பதில் கூறியிருக்கிறார். |
|
|
|
|
|
|
|
அதாவது, மகாத்மாவின் மாசு மறுவற்ற தூய வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒரு துராத்மா கடிதத்தின் மூலம் ஒரு சந்தேகத்தைக் கிளப்பி இருந்தான். |
|
|
|
|
|
|
|
அந்தக் கடிதத்தை மகாத்மா பிரார்த்தனைக் கூட்டத்தில் எல்லோருடைய முன்னிலையிலும் வெளிப்படையாகப் படித்துவிட்டு அதற்குப் பதிலும் கூறினார். அது வருமாறு: |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''என்னுடைய அந்தரங்க வாழ்க்கையில் சந்தேகம் கொண்ட ஒருவர் என்னுடைய பிரம்மசரிய வாழ்க்கையில் அவநம்பிக்கை தெரிவித்திருக்கிறார். நான் எப்போதும் ஸ்திரீகளுடன் நெருங்கிப் பழகுகிறேன் என்றும், அதனால் அவருக்குச் சந்தேகமாயிருக்கிற தென்றும் குற்றம் சாட்டியிருக்கிறார். இவரைப்போலவே இன்னும் சிலரும் என் மீது சந்தேகம் கொண்டிருக் கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எனக்கு அந்தரங்கம் என்பது எதுவும் கிடையாதாகையால், இந்தச் சந்தேகத்தைப் போக்க வேண்டியது என்னுடைய கடமை. |
|
|
|
|
|
|
|
''கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக நான் பிரம்மசரியத்தைக் கடைபிடித்து வருகிறேன். ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டு வருகிறேன். நாவுக்கு ருசியான பண்டங்களைச் சாப்பிடுவது கிடையாது. உயிர். வாழ்வதற்கு எவ்வளவு ஆகாரம் அவசியமோ, அதைவிடக் குறைவாகவே சாப்பிட்டு வருகிறேன். என்னுடன் எந்த நேரமும் பெண்கள் இருந்து வருவது உண்மையே. பெண்களின் அருகிலேயே இருந்தும் பிரம்மசரியத்தைக் காப்பது தான் உண்மை யோகியின் லட்சணம். |
|
|
|
|
|
|
|
''காட்டிலேயே உள்ள ஒருவன் 'நான் ஜிலேபியே சாப்பிடுவது கிடையாது' என்றால் அதில் ஆச்சரியம் கிடையாது. ஏனெனில், காட்டிலே ஜிலேபி கிடைக்காது. ஆகையால், கிடைக்காத ஒரு பொருளைச் சாப்பிடுவதில்லை என்று சொல்லுவது ஆச்சரியமாகாது. அதைப் போலவே, பெண்களின் மத்தியில் இருந்து கொண்டு பிரம்மசரிய வாழ்க்கையில் வெற்றி பெறுவதுதான் உண்மையான வெற்றியாகும். இந்தப் பரீட்சையில் நான் பரிபூரண வெற்றி அடைந்திருக் கிறேன் என்று சத்தியமாகக் கூறுகிறேன்.'' |
|
|
|
|
|
|
|
தர்மாபூர் மார்க்கம் |
|
|
|
|
|
|
|
மறுநாள் கீழ்வானத்தில் சூரியன் உதயமாகித் தனது பிரயாணத்தைத் தொடங்கியதுதான் தாமதம், மகாத்மாஜியும் தமது குடிசையிலிருந்து உதயமாகித் தம்முடைய யாத்திரையைத் தொடங்கிவிட்டார். அன்று ஸ்ரீநகரிலிருந்து போகும் தர்மாபூர் யாத்திரையில் காந்திஜியுடன் சுமார் நூறு பேருக்கு மேல் நடந்து வந்தார்கள். மநுகாந்தியும் மற்றவர்களும் வழிநடைப் பிரயாணத்தின் அலுப்புத் தெரியாமலிருப்பதற்காக மகாகவி தாகூரின் கவிதைகளை நடைக்கு ஏற்ற மெட்டுப் போட்டுப் பாடிக் கொண்டே வந்தார்கள். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி, கவிதைகளை ரசித்துக்கொண்டே கைக் கோலை ஊன்றி வேகமாக நடந்து சென்றார். உடன் வந்தவர்கள் மகாத்மாவின் வேகத்துக்குச் சரியாகத் தங்களுடைய வேகத்தைச் சரிக்கட்டுவதற்காகக் கொஞ்ச தூரம் ஓடியும், கொஞ்ச தூரம் விரைவாக நடந்தும் சென்ற காட்சி மிகவும் வேடிக்கையாக இருந்தது! |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி நடந்து செல்லும் மார்க்கத்திலுள்ள வரப்புக்களையெல்லாம் நன்றாகச் செப்பனிட்டு அகலப்படுத்தி வைத்திருந்தனர். அங்கங்கே மூங்கில் பாலங்கள் உள்ள இடங்களில் தலைக்கு மேல் உயரமான வளைவுகள் கட்டி அவற்றை இளங் கொடிகளைக் கொண்டு ஜோடித்து வைத்திருந்தார்கள். சில வளைவுகளில், 'ஸ்வாகதம்', 'வெல்கம்', 'பாபுஜி! ஆயியே!' போன்ற வரவேற்பு வாசகங்களும் வேறு சில மணிமொழிகளும் எழுதி வைக்கப்பட்டிருந்தன. |
|
|
|
|
|
|
|
நவகாளி ஜில்லாவின் இயற்கை அமைப்பு மகாத்மாவின் கிராம யாத்திரைக்கு மிகவும் ஒத்ததாயிருக்கிறது. தென்னை , மா, கமுகு முதலிய ஓங்கி வளர்ந்த விருட்சங்களடர்ந்த தோப்புகள் வழி நெடுக மண்டிக் கிடக்கின்றன. இதனால் எப்போதும், எந்த இடத்திலும் குளுமையான நிழல் மகாத்மாவைக் குதூகலத்துடன் வரவேற்கிறது. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு நீர்த்தேக்கமும், அதைச் சுற்றிச் சில வீடுகளும் காட்சி அளிக்கின்றன. நீர்த் தேக்கத்திலே நீந்தி விளையாடும் அன்னப் பட்சிகளும், தோப்புக்களிலே இனம் தெரியாத பற்பல பட்சி ஜாலங்களின் இன்னிசை கானமும் அப்படியே யாவரையும் வசீகரித்து விடுகின்றன. |
|
|
|
|
|
|
|
உபமேயப் பொருத்தம் |
|
|
|
|
|
|
|
தர்மாபூருக்குச் சென்று கொண்டிருந்தபோது வழி நடுவில் மகாத்மாஜியின் பிரயாணம் சிறிது நேரம் தடைப்பட்டது. முஸ்லிம் குடியானவர் ஒருவர் காந்தி மகாத்மாவை எதிர்கொண்டு அழைத்துத் தம்முடைய குடிசைக்கு முன்னால் உட்கார வைத்தார். பாபுஜிக்குப் பழம், மாலை முதலியவற்றைக் கொண்டு உபசாரம் செய்தார். மகாத்மாஜி சுற்றி நின்ற சிறுவர்களுக்கு அந்தப் பழங்களை ஒவ்வொன்றாக விநியோகம் செய்தானதும் குடியானவர்களிடம் விடைபெற்றுக் கொண்டார். அப்போது அந்த முஸ்லிம் குடியானவர் தம் கையிலே வைத்திருந்த ஒரு சிறு செடியைச் சட்டென்று மகாத்மாவிடம் நீட்டினார். அச் செடியின் ஒரு கிளையில் அகன்று நீண்ட இலைகளும், மற்றொரு கிளையில் சின்னஞ்சிறு வேறு ஜாதி இலைகளும் காணப்பட்டன. ஒரே செடியில் இரண்டு விதமான இலைகள் இருக்கும் அதிசயத்தைக் கண்டதும் சுற்றியிருந்தவர்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியமாயிருந்தது. அதற்குள் அந்த முஸ்லிம் குடியானவரே மகாத்மாஜியிடம் மேற்படி அதிசயத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''ஒரே செடியில் இரண்டு ஜாதி இலைகள் வளர்வது எப்படி?'' என்று அவர் மகாத்மாவைக் கேள்வி கேட்டார். |
|
|
|
|
|
|
|
''இதில் வியப்பு ஒன்றும் இல்லை ; ஆயினும் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய நீதி ஒன்று இருக்கிறது. இவை வெவ்வேறு ஜாதி இலைகளா யிருந்தும் எப்படி ஒரே செடியில் ஒற்றுமையாக வளர்கின்றனவோ, அப்படியே இந்துக்களும், முஸ்லிம்களும் ஒரே இடத்தில் இருந்து ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்றார். ஆகா! காந்திஜியின் வாக்கே வாக்கு மகாத்மாவின் இந்தப் பதிலைக் கேட்டபோது அந்தக் குடியானவருடைய முகத்திலே தோன்றிய திருப்தியையும், மகிழ்ச்சியையும் இனி ஒருமுறை காண முடியுமா என்பது சந்தேகம்தான். |
|
|
|
|
|
|
|
மூங்கில் பாலம் |
|
|
|
|
|
|
|
குடியானவருடைய வீட்டிலிருந்து கிளம்பி, தர்மாபூருக்குச் செல்வதற்குள் வழியில் சுமார் ஏழெட்டு மூங்கில் பாலங்களைக் கடக்க வேண்டியிருந்தது. நவகாளி ஜில்லாவில் வயலுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்கள் குறுக்கும் நெடுக்கும் காணப்படுகின்றன. அந்த வாய்க்கால்களைக் கடந்து செல்வதற்காக மூங்கில்களினால் பாலம் அமைத்திருக்கிறார்கள். இந்தப் பாலங்களில் நடந்து செல்வதென்றால் அதற்குத் தனிப்பட்ட திறமையும், தனிப்பட்ட பயிற்சியும் வேண்டியிருக்கின்றன. |
|
|
|
|
|
|
|
இதைக் கேள்விப்பட்டிருந்த காந்திஜி, ஸ்ரீராம்பூரில் ஒரு மாத காலம் முகாம் போட்டிருந்த சமயம் தினந்தோறும் ஒரு மூங்கில் பாலத்தின் மீது நடந்து நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டார். கைக்கோலை ஊன்றிக் கொண்டும் கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்குப் பழக்கம் செய்து கொண்டார். அந்தச் சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாவிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க ஆலோசனைகளைக் கேட்பதற்காக ஸ்ரீராம் பூருக்கு வந்திருந்தார்கள். காந்திஜி அப்போது மூங்கில் பாலத்தில் நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி அதைப் பார்த்துவிட்டு, ''பூ இவ்வளவுதானா?'' என்பதைப் போல் சிரித்தார். |
|
|
|
|
|
|
|
காந்திஜி, ஜவஹரைப் பார்த்து, 'தாங்கள் நினைக்கிறபடி இந்தப் பாலத்தில் நடப்பது அத்தனை சுலபமல்ல; நடந்து பார்த்தால்தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும்'' என்றார். |
|
|
|
|
|
|
|
உடனே பண்டித நேரு, 'இதோ பாருங்கள்'' என்று கச்சத்தை வரிந்து கட்டினார். கைச்சட்டை விளிம்புகளை மடக்கி விட்டுக்கொண்டார். சற்றுப் பின்னால் சென்று வேகமாக ஓடிவந்து சட்டென்று ஒரு கந்து பாய்ந்து அந்த வாய்க்காலை ஒரே தாண்டாகத் தாண்டிக் காட்டினார்! |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இதைப் பார்த்த மகாத்மாஜி மூக்கின் மேல் விரலை வைத்து, 'ஹரேரே!' என்று ஆச்சரியப்பட்டுப் போனார் ! நேருஜியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, ''இது போல் ஒவ்வொரு வாய்க்காலையும் கடப்பதற்கு நான் பின்னுக்குப் போய் ஓடி வந்து தாண்டிக்கொண்டிருக்க முடியாதே!'' என்றார். நேருஜியும் மற்றவர்களும் அதைக் கேட்டுச் சிரித்துவிட்டனர். |
|
|
|
|
|
|
|
'நவகாளி என்னும் இலங்கைத் தீவிலே சமரஸம் என்னும் சீதையை அடைவதற்காக ராமன் அணை கட்டியது போல் காந்திஜியும் மூங்கில் பாலம் அமைத்துக் கடந்து செல்கிறார். ஜவஹரோ அந்தப் பாலத்தை ஹநுமானைப் போல் ஒரே தாவாகத் தாவிவிட்டார். ரொம்பவும் பொருத்தமாய்த்தான் இருக்கிறது!' என்று எண்ணிக் கொண்டேன். |
|
|
|
|
|
|
|
ரொட்டி பேரம்! |
|
|
|
|
|
|
|
தர்மாபூர் கிராமத்து ஜனங்கள் மகாத்மாவின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்த வண்ணம் தோப்புக்கு வெளியே வந்து காத்துக்கொண்டிருந்தார்கள். |
|
|
|
|
|
|
|
அப்போது காலை மணி எட்டுகூட அடிக்கவில்லை. காந்திஜி தாம் செல்ல வேண்டிய வழியை விட்டுவிட்டு அருகிலிருந்த ஒரு சிறு ரொட்டிக் கடையின் சமீபம் சென்றார். அந்தக் கடைக்காரர் காந்தி மகாத்மாவைக் கண்டு பயபக்தியுடன் எழுந்து நின்றார். அந்தக் கடையிலிருந்த ஒரு முழு ரொட்டியை மகாத்மாஜி கையிலெடுத்து அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''ஐயோ, மகாத்மாவுக்கு நல்ல பசி போலிருக்கிறது! அதனாலேதான் ரொட்டியை எடுத்துச் சாப்பிடப் போகிறார்'' என்று கூறினார்கள் சுற்றியிருந்தவர்கள். |
|
|
|
|
|
|
|
காந்தி மகான் அந்த ரொட்டிக் கடைக்காரரைப் பார்த்து, ''இந்த ரொட்டி என்ன விலை?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
அந்தக் கடைக்காரர் பசியோடு வந்திருக்கும் மகாத்மாவுக்கு அதைப் பரிசாக வழங்க விரும்பினார். அதனால் விலை கூற மறுத்துவிட்டார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி, 'விலையைச் சொல்லும் என்று அழுத்தமாகக் கேட்கவே, கடைக்காரர் தயங்கிக் கொண்டே , 'ஓர் அணா' என்று பதில் கூறினார். |
|
|
|
|
|
|
|
''எல்லோருக்கும் ஓர் அணாவுக்குத்தான் விற்கிறீரா அல்லது எனக்கு மட்டும் குறைத்துச் சொல்கிறீரா? என்று கேட்டார் மகாத்மா. |
|
|
|
|
|
|
|
''எல்லோருக்கும் விற்கும் விலைதான்'' என்று பதில் கூறினார் கடைக்காரர். |
|
|
|
|
|
|
|
மகாத்மா ரொட்டியைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். ''இது ரொம்பச் சின்ன ரொட்டி; ஆகையால், இதற்கு அரையணாதான் கொடுக்கலாம். தாங்கள் அதிக லாபம் வைத்து விற்கிறீர்கள். கிராமத்து ஜனங்கள் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதற்குச் சக்தியற்றவர்கள்'' என்று கூறி, ரொட்டியைக் கடைக்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டுப் பிரயாணத்தைத் தொடர்ந்தார். |
|
|
|
|
|
|
|
பாவம்! ரொட்டிக் கடைக்காரருக்கு இது ஒரு பெரிய ஏமாற்றமாய்ப் போயிருக்க வேண்டும். |
|
|
|
|
|
|
|
கிராமத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் வியாபாரம் நடக்கிறதா என்பதைச் சோதிப்பதற்காகவே மகாத்மா மேற்படி ரொட்டியை விலை கேட்டிருக்க வேண்டும் என்பது அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஊர்ஜிதமாயிற்று. அன்றைய மாலைப் பிரசங்கத்தில் பொதுவாக கிராமவாசிகளுக்கு உபயோகமான விஷயங்களைப் பற்றியே அதிகம் பேசினார். கிராமத்தைச் சுகாதார ரீதியாக வைத்துக் கொள்வதெப்படி, தெருக்களைக் கூட்டிச் சுத்தமாக வைத்துக் கொள்ளும் விதம், நீர்த் தேக்கங்களைப் பாழாக்காமல் குடிதண்ணீராக உபயோகிக்கும் முறை முதலியவற்றை விரிவாக எடுத்துச் சொன்னார். காலையில் தாம் ஒரு கடையில் ரொட்டி விலை விசாரித்ததைப்பற்றிப் பிரஸ்தாபித்து, வியாபாரிகள் அதிக லாபம் வைக்காமல் உணவுப் பொருளை ஏழை மக்களுக்கு நியாயமான விலைக்குக் கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். |
|
|
|
|
|
|
|
பிறகு தம்முடைய சாதன வாழ்க்கையைக் குறித்துச் சிறிது நேரம் பேசினார். ''இம்மாதிரி வாழ்க்கை நடத்த ஒரு சிலரால்தான் முடியும். ஆகையால், என்னை யாரும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும் நான் மகாத்மாஜியை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கண் மூடித்தனமாகப் பின்பற்றத்தான் செய்தேன். அதாவது, காந்திஜி பிரார்த்தனை வேளைகளில் கண்களை மூடித் தியானம் செய்தபோது நானும் அவரைப் பின்பற்றிக் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்தேன். இது கண்மூடித்தனமே அல்லவா? |
|
|
|
|
|
|
|
அன்றாட அலுவல்கள் |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜியின் அன்றாட அலுவல்கள் என்ன வென்பதைத் தெரிந்து கொள்வது தர்மாபூரில் சாத்திய மாயிற்று. |
|
|
|
|
|
|
|
காலையில் மகாத்மாஜி யாத்திரை முடிந்து மற்றொரு கிராமத்துக்குச் சென்றதும் ஸ்நானத்துக்குத் தயாராகி விடுகிறார். கிராமங்களில் ஸ்நான அறை என்று பிரத்தியேகமாக ஏதும் கிடையாதாகையால் போகுமிடங்களிலெல்லாம் திரைகள் கட்டி ஸ் நான அறை தயார் செய்துவிடுகிறார்கள். மகாத்மாஜி அந்த விடுதிக்குள் சாவதானமாக ஸ்நானம் செய்கிறார். பின்னர், சற்று நேரம் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்டுக்கொண்டே தூங்கிப் போய்விடு கிறார். ஓய்வு கிடைக்கும் நேரங்களில் நூல் நூற்கிறார். |
|
|
|
|
|
|
|
பகலில் சுமார் இரண்டு மணிக்குக் கிராம ஸ்திரீகள் கூட்டத்தில் ராமாயணம், பாரதம் முதலிய புராணங் களைச் சொல்லி அந்தப் புண்ணிய கதைகளிலுள்ள நீதிகளைப் போதிக்கிறார். |
|
|
|
|
|
|
|
பிறகு ஒவ்வொரு கிராமத்திலும் நடந்த அட்டூழியங்களையும், அக்கிரமங்களையும் பற்றி நேரில் கண்டும், கேட்டும் அறியும் பொருட்டு வெளியே கிளம்பிச் செல்கிறார். அங்கங்கே கிராமவாசிகள் தாங்கள் பட்ட துன்பங்களைக் காந்தி மகானிடம் கதை கதையாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள். எரிந்து போன குடிசைகளைக் காண்பித்துக் கதறுகிறார்கள். மற்றும் எழுத்தால் வர்ணிக்க இயலாத கொடுமைச் செயல்கள் பலவற்றைக் குறித்து மகாத்மாவிடம் மனம் விட்டுப் பதறுகிறார்கள். |
|
|
|
|
|
|
|
ஒவ்வொரு கிராமத்திலுள்ள கூன் குருடர்கள், ஏழை எளியவர்கள், சக்தியற்ற வயோதிகர்கள் அனைவரும் மகாத்மா வந்திருக்கும் செய்தியைக் கேட்டு அவரை நேரில் தரிசிக்கவும், ஸ்பரிசித்து மகிழவும் ஆவலுடன் விரைந்து வருகின்றனர். மகாத்மாஜி அவர்கள் அனை வரையும் அன்புடன் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்கிறார். |
|
|
|
|
|
|
|
இதைக் கண்டபோது, ''இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பாக ஏசுநாதர் ஊர் ஊராக விஜயம் செய்த சமயம் இப்படித்தான் குருடர்களும், செவிடர்களும் ஏசு பகவானுடைய ஸ்பரிசம் பெற்று ஜன்ம சாபல்யமடைந்தார்கள்'' என்று சரித்திரத்தில் படித்த விஷயம் என் நினைவுக்கு வந்தது. |
|
|
|
|
|
|
|
மயானக் காட்சி |
|
|
|
|
|
|
|
தர்மாபூருக்குச் சமீபத்தில் பல பயங்கரச் சம்பவங்கள் நடந்திருந்தன. அத்தகைய பயங்கரப் பிரதேசம் ஒன்றுக்கு மகாத்மாஜி நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று மகாத்மாவை அங்கே அழைத்துச் சென்றார்கள். கிராமவாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்கி காந்தி மகானும் அந்த இடத்துக்கு அவர்களோடு நடந்தே சென்றார். பத்திரிகைப் பிரதிநிதிகளும் மற்றும் சிலரும் மகாத்மா காந்தியுடன் சென்றிருந்தோம். |
|
|
|
|
|
|
|
அங் கே போனபோது மயானத்துக்குள் காலடி வைப்பது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது. சுற்று முற்றும் எரிந்து விழுந்த கொள்ளிக் கட்டைகளும், சாம்பல் குவியல்களும், பச்சை மரங்கள் தீப்பட்டு பொசுங்கிப் போயிருந்த கோரக் காட்சியும், அருவருப்பையும், அச்சத்தையும் உண்டாக்கின. |
|
|
|
|
|
|
|
அந்த மயானக் காட்சிகளுக்கு இடையே ஓர் இடத்தில் மண்டை ஓடுகளும், எலும்புக் கூடுகளும் கும்பலாய்க் குவிக்கப்பட்டிருந்தன. |
|
|
|
|
|
|
|
மேற்படி கோரக் காட்சியைக் கண்ட காந்தி மகானுடைய உள்ளத் துடிப்பை அவருடைய நிர்மலமான முகம் பிரதிபலித்துக் காட்டியது. |
|
|
|
|
|
|
|
சாந்த சொரூபியான காந்தி மகாத்மா சற்று நேரம் மோன நிலையில் ஆழ்ந்து போனார். பிறகு கண்களைக் கெட்டியாக மூடிக் கொண்டார். கைக்கோலை எடுத்து அந்த மண்டை ஓடுகளின் மேல் ஊன்றி நிறுத்தினார். நீண்ட பெருமூச்சுடனே ஆகாயத்தை நோக்கிப் பிரார்த்தனையில் ஈடுபட்டார். அகால மரணமடைந்த அந்த மண்டையோட்டுக்கு உடையவர்களின் ஆத்ம சாந்திக்காகவே காந்திஜி பிரார்த்தனை செய்திருக்க வேண்டும். இந்த மெய்சிலிர்க்கும் தெய்வ வடிவக் காட்சியைக் கண்டபோது எங்களுக்கெல்லாம் விவரிக்க இயலாத ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. |
|
|
|
|
|
|
|
காந்தி மகான் தம்முடைய அஹிம்சா யாத்திரையில் இதுவரை சுமார் நாற்பத்தேழு கிராமங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள ஹிந்து முஸ்லிம்களின் சமரசத்துக்காக மகத்தான பல முயற்சிகளில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
''காந்தி மகான் நவகாளியில் என்னத்தைச் சாதித்து விட்டார்?'' என்று சில அதிசயப் பிரகிருதிகள் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்கிறார்கள். |
|
|
|
|
|
|
|
உயர்ந்த லட்சியத்தை உள்ளத்திலே கொண்டு காந்தி மகான் உலகம் உய்ய உழைத்து வருகிறார். அவருடைய உன்னதத் தொண்டு காரணமாக துவேஷமும், பீதியும் சூழ்ந்திருந்த இருண்ட வனாந்தரப் பிரதேசமான நவகாளி ஜில்லாவில் சாந்தமும், சமரஸமும் ஏற்பட்டு வருகின்றன. |
|
|
|
|
|
|
|
நவகாளியில் அகதிகளுக்கு இழந்த வீடுகளைக் கட்டிக் கொடுப்பதிலும், பாழடைந்த வீடுகளைப் புதுப்பித்துக் கொடுப்பதிலும் மகாத்மா தம்முடைய கவனத்தைச் செலுத்தவில்லை. மகாத்மா அங்கே கட்டுவது வெறும் மண் வீடல்ல; அன்பின் ஆலயத்தையே நிர்மாணித்திருக்கிறார். அந்த மகத்தான ஆலயத்துக்கு அஹிம்சை , சத்தியம், சாந்தம், சகோதரத்துவம், சமத்துவம் முதலியவையே அஸ்திவாரமாக அமைந்திருக்கின்றன. வகுப்புக் குமுறல்களையும், கடும் புயல்களையும் என்றென்றும் எதிர்த்து நிற்கக் கூடிய சக்தி மகாத்மா கட்டும் அந்த மாபெரும் ஆலயத்துக்குத்தான் உண்டு. |
|
|
|
|
|
|
|
'போய் வருகிறேன்' |
|
|
|
|
|
|
|
நவகாளி ஜில்லாவிலே மகாத்மாவின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் பாக்கியம் பெற்ற நான் ஊருக்குத் திரும்பும் போது காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரைத் தரிசிக்கச் சென்றேன். |
|
|
|
|
|
|
|
புன்னகை பூத்த முகத்துடனே என்னை ஆசீர்வதித்த தெய்வ புருஷர் தம் கைகளை நீட்டி ஹரிஜன நிதிக்குப் பணம் கேட்டபோது என் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவர் பாதகமலங்களை நனைத்தது. பத்து ரூபாயை அவர் காலடியில் காணிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டுத் தமிழில் கையெழுத்து ஒன்று போட்டுக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டேன். அவர் போட்டுக் கொடுத்த தமிழ்க் கையெழுத்துக்குப் பத்து ரூபாய்தானா மதிப்பு! அட்சர லட்சம் பெறும் கையெழுத்தல்லவா அது? |
|
|
|
|
|
|
|
|
|
|
|
இந்துஸ்தானி விழா |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மாம்பலம் பிரக்தியாதி அடைந்திருப்பதற்கு ஏற்கெனவே மூன்றுவித காரணங்கள் உண்டு. |
|
|
|
முதலாவது, ராஜாஜியின் வாசஸ்தலம் அங்கே அமைந்திருப்பது. |
|
|
|
|
|
|
|
இரண்டாவது, ராமகிருஷ்ண வித்யாலயம் நடைபெறுவது. மூன்றாவது, அடியேனுடைய குடியிருப்பு! இப்போது நாலாவது காரணமாக மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம்பலத்தின் மகிமை பன்மடங்கு பெருகிப் பாரெங்கும் பரவிவிட்டது. காந்திஜி வந்தது முதல் தியாகராய நகரின் தோற்றமே அடியோடு மாறிப் போய் விட்டது. அந்த நகரின் வீதிகள், சாலைகள் எல்லாம் பாதாள உலகத்தில் அமுங்கிப் போனது போலவும், அதன் மீது புதிய நகரம் ஒன்று நிர்மாணமாகிவிட்டது போலவும் தோன்றுகிறது. |
|
|
|
|
|
|
|
தியாகராய நகரின் தென்கிழக்குப் பிரதேசத்துக்கு 'ஹிந்துஸ்தானி நகரம்' என்று நாமம் சூட்டியிருக்கிறார்கள். |
|
|
|
|
|
|
|
தட்சிண பாரத ஹிந்தி பிரசார சபையைச் சுற்றியுள்ள மைதானங்கள், வெட்டவெளிகள், காலிமனைகள் ஆகிய எல்லா இடங்களையும் பந்தல் போட்டு மறைத்து விட்டிருக்கிறார்கள். |
|
|
|
|
|
|
|
மேற்படி ஹிந்தி பிரசார சபைக்கும் அதைச் சேர்ந்த ஹிந்துஸ்தானி நகரத்துக்கும் போகும் முக்கிய வீதிகளின் பிரவேச வாசல்களில் 'பஜாஜ் கேட்', 'கஸ்தூரிபா கேட்' என்ற பெயர்களில் மண்டபங்கள் வேறு அமைத்திருக்கிறார்கள். |
|
|
|
|
|
|
|
இப்படியெல்லாம் மாம்பலத்தின் தோற்றத்தையும், பெயரையும் மாற்றி நம்மையெல்லாம் திகைத்துத் திக்குமுக்காடச் செய்து வருகிறவர்கள் வேறு யாருமில்லை; தட்சிண பாரத ஹிந்துஸ்தானி பிரசார சபையினர்தான்! தங்களுடைய வெள்ளிவிழாக் கொண்டாட்டத்துக்காகவும், மகாத்மாஜியின் சென்னை விஜயத்துக்காகவுமே இம்மாதிரியெல்லாம் செய்திருக் கின்றனர். |
|
|
|
|
|
|
|
சாதாரண நாட்களிலேயே மாம்பலத்தில் புகுந்து ஒரு குறிப்பிட்ட இடம் போய்ச் சேருவதென்றால் பிரம்மப்பிரயத்தனமாகிவிடும். இப்போதோ சொல்ல வேண்டியதே இல்லை. ஆனால், நல்ல வேளையாக பொதுமக்கள் இத்தனை சிக்கல்களையும் மீறி மகாத்மாஜியின் பிரார்த்தனையில் கலந்து கொள்வதற்கு இயற்கையாகவே ஆண்டவன் ஒரு வசதியை அளித்திருக்கிறார். |
|
|
|
|
|
|
|
வெளியூர் வாசிகளோ, யாராயிருந்தாலும் ரயிலை விட்டு இறங்கியதும் பிரார்த்தனை நடக்கும் இடத்துக்கு எப்படிப் போவது என்று திண்டாடித் தெருவில் நிற்க வேண்டிய அவசியமே கிடையாது. ரயிலை விட்டு இறங்கினதும் அவர்கள் பாட்டுக்குக் கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு நின்ற இடத்திலேயே நின்றால் போதும். பின்னால் அலைமோதிக் கொண்டு வரும் ஜன சமுத்திரமானது அவர்களை அப்படியே முன்னால் தள்ளிக் கொண்டு தன்னால் போய்ச் சேர்த்து விடும். அப்புறம் கண்களைத் திறந்து பார்த்தார்களானால் தாங்கள் மகாத்மாஜி பிரார்த்தனை நடத்தும் இடத்தில் இருப்பதைக் காண்பார்கள். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜியின் விஜயத்தினால் மாம் பலம் சில தினங்களாகத் தேர்த் திருவிழா பட்ட பாடாயிருந்து கொண்டிருந்தது. காப்பி ஓட்டல்களில் கொடுக்கப்படும் காப்பியிலிருந்தே மாம்பலத்தில் கூடும் அன்றாடக் கூட்டத்தின் கணக்கைச் சுலபமாக அறிந்து கொண்டு விடலாம். |
|
|
|
|
|
|
|
காப்பி கறுப்பு வர்ணமா? சரி, ஐம்பதினாயிரம் பேர் கொஞ்சம் தண்ணீர் கலந்த வெண்மை நிறமா? எழுபத்தைந்தாயிரம் பேர் நீர் நிறைந்த வெறும் திரவ பதார்த்தமா? சரி, லட்சம் பேர் இப்படியே கணக்கிட்டு விடலாம். |
|
|
|
|
|
|
|
தினசரி பகல் ஒரு மணிக்கெல்லாம், ஜனங்கள் வேங்கடநாராயண ரோடு, தணிகாசலம் செட்டி ரோடு, போக் ரோடு, தியாகராஜா ரோடு ஆகிய எல்லா ரோடுகளின் வழியாகவும் பிரார்த்தனை ஸ்தலத்தை நோக்கித் திரள் திரளாகவும், கும்பல் கும்பலாகவும் போகும் காட்சியானது ஏதோ ஜன வெள்ளம் பெருகும் நதியானது உடைப்பு எடுத்துச் சாலைகளின் இரு கரையும் புரண்டு ஓடுவதைப் போலத் தோன்றுகிறது. |
|
|
|
|
|
|
|
முதல் நாள் பிரார்த்தனைக்குச் சுமார் பதினைந் தாயிரம் பேர் வந்திருந்தார்கள். பிரார்த்தனைக்கு வரும் கூட்டம் நாளடைவில் பதினைந்தாயிரத்திலிருந்து லட்சம், இரண்டு லட்சம், மூன்று லட்சம் என்று கணக்கிலடங்காமல் போய்விடவே, பிரார்த்தனையைப் போக் ரோடு மைதானத்திலிருந்து விஜயராகவாச்சாரி ரோடுக்கருகிலுள்ள மாபெரும் வெட்ட வெளிக்கு மாற்றும்படி ஆகிவிட்டது. |
|
|
|
|
|
|
|
புதன்கிழமை மாலை பிரார்த்தனைக்குச் சுமார் ஒரு லட்சம் பேர் கூடியிருந்தார்கள். அவ்வளவு ஜனங்களும் மூன்று மணியிலிருந்தே மகாத்மாஜியின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து வருவார் வருவார்' என்று வழிமேல் விழி வைத்து உட்கார்ந்து கொண்டிருந் தார்கள். |
|
|
|
|
|
|
|
ஆயிற்று; மணி நாலு ஆகிவிட்டது. நேரம் ஆக ஆகக் கூட்டத்தின் ஆரவாரம் வர வர அதிகமாகிக் கொண்டே போயிற்று. இந்தச் சமயம் பார்த்து ராஜாஜி மேடை மீது ஏறி வந்தார். ஒலி பெருக்கியின் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு, ''எல்லோரும் நிச்சப்தமாயிருக்க வேண்டும். எழுந்து நிற்கக் கூடாது. மகாத்மாஜி வந்துவிட்டால் உங்களுக்கெல்லாம் உங்களை அறியாமலேயே பயித்தியம் பிடித்துவிடும். அப்போது அந்த வெறியை அடக்கிக் கட்டுப்பாடாகவும், அமைதியாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். எங்கே? இப்போது காந்திஜி வருவதற்கு முன்பாக ஒரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்து காட்டுங்கள் பார்க்கலாம்'' என்றார். அவ்வளவுதான்; தெற்குப் பக்கம் உள்பட எல்லாத் திசைகளிலும் ஒரே நிச்சப்தம் குடி கொண்டது. (தெற்குப் பக்கத்தில் தான் ஸ்திரீகள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்!) அங்கங்கே சில தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக ஜனங்களிடையே நின்று தகர உண்டியைக் குலுக்கிய சப்தம் தவிர வேறு பேச்சு மூச்சுக் கிடையாது. அப்போது ராஜாஜி மறுபடியும், மைக் முன்னால் வந்து, ''வாலண்டியர்கள் உண்டியைப் பலமாகக் குலுக்க வேண்டாம். அப்படிக் குலுக்கினால் உண்டியின் அடிப்பாகம் திறந்து கொள்ளும்'' என்றார். அவ்வளவுதான்! உடனே ஒரு லட்சம் பேரும் தங்கள் மெளனத்தைக் கலைத்துக் கொண்டு குபீரென்று சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்குள் மணி ஐந்து ஆகிவிடவே, பிரார்த்தனை யின்போது செய்ய வேண்டிய பஜனைக்குப் பயிற்சி நடத்தும் பொருட்டு மகாத்மாவின் பேரன் கனு காந்தியும், பஜாஜின் மகன் ராமகிருஷ்ண பஜாஜம் மேடைக்கு வந்து சேர்ந்தார்கள். |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனை என்றால், கனு காந்தி பாடுவதைப் பிரார்த்தனைக்கு வந்திருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து பின்னால் கோஷ்டியாகப் பாட வேண்டியது. இதற்காக திரு. கனுகாந்தி மேடைக்கு அரை மணி முன்னதாகவே வந்து எப்படிப் பாட வேண்டும், எவ்வாறு தாளம் போட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுக்கிறார். பஜனையின்போது மத்தளம் வாசிக்கிறார்கள். மத்தள் வாத்தியத்துடன் சேர்ந்து எல்லோரும் கை தட்டுகிறார்கள்; பின்னர், 'ராஜா ராம் ராம் ராம், சீதாராம் ராம் ராம்' என்று பஜனை ஆரம்பமாகிறது. கனு காந்தி தாளம் போட்டுக் கொண்டே பாட , பின்னோடு சபையிலுள்ள ஆண் பெண் அனைவரும் கோஷ்டியாகச் சேர்ந்து பாடுகிறார்கள். இந்த அதிசயத்தை ஒரு நிமிஷம் நேரம் கண்களை மூடியவாறே கவனித்துக் கொண்டிருந்தேன். |
|
|
|
|
|
|
|
திடுதிப்பென்று ஏதோ பெருத்த மழை வந்து விட்டதைப் போல் பிரமை ஏற்பட்டது. ஜனங்களின் கைத்தாளமே அவ்வாறு சரத்கால மாரியைப் போல் 'சடசட'வென்று கேட்டது. |
|
|
|
|
|
|
|
மணி ஐந்தரை; அதோ மகாத்மாஜி வந்துவிட்டார். அவ்வளவு பேரும் மகாத்மாஜியின் தெய்வீகத் தோற்றத்தைக் கண்டு மந்திரசக்தியால் கட்டுண்டவர்கள் போல் மெய்ம்மறந்து போய்விட்டார்கள். மகாத்மாஜி நின்றபடியே இரண்டு நிமிஷ நேரம் எல்லோருக்கும் தரிசனம் தந்தார். தியானம், பிரார்த்தனை எல்லாம் முடிந்ததும் காந்திஜி ராம நாமத்தின் மகிமையைப் பற்றி சவிஸ்தாரமாகவும் சாங்கோபாங்கமாகவும் எடுத்துக் கூறினார். |
|
|
|
|
|
|
|
வெள்ளிக்கிழமையன்று சரியாக மூன்று மணிக்கு த.பா.ஹி.பி. சபையின் வெள்ளி விழா ஆரம்பமாயிற்று. மேற்படி வைபவத்துக்காக மாகாணத்தின் பல இடங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி பிரசாரகர்கள் வந்திருந்தார்கள். ஹிந்தியை பரப்புவதற்கு இடைவிடாது சேவை செய்து வரும் முக்கிய பிரசாரகர்களுக்கு மகாத்மாஜி தம்முடைய கையாலேயே நீலக் கதர்ச் சால்வைகளை வழங்கினார். பின்னர், சுமார் நாற்பத்தைந்து நிமிட நேரம் ஹிந்துஸ்தானி பாஷையின் அவசியத்தைப் பற்றிப் பேசினார். |
|
|
|
|
|
|
|
'மனிதனுக்குப் பிராணவாயு எவ்வளவு அத்தியா வசியமோ, அதைப் போல இந்திய மக்களுக்கு ஹிந்துஸ்தானி பாஷையும் அவசியமாகும். ஹிந்துஸ் தானி கற்பதை ஒரு முக்கிய தர்மமாகக் கருத வேண்டும். ஹிந்துஸ்தானி மிகவும் சுலபமான பாஷை. புத்திசாலிகளான தென்னிந்தியர்களுக்கு ஹிந்தி கற்பது ஒரு பிரமாதமான காரியமல்ல'' என்றார். காந்திஜி இப்படிக் கூறியதும் சபையில் உட்கார்ந்து கொண்டிருந்த நான் என்னை நானே ஒரு தடவை பெருமிதத்துடன் உற்றுப் பார்த்துக் கொண்டேன். காரணம், ஒரு தென்னிந்தியன் ஆனபடியால் மகாத்மாஜி கூறியது எனக்கும் பொருந்துமல்லவா? |
|
|
|
|
|
|
|
வெள்ளி விழாவுக்கு அடுத்தபடியாக நடந்த வைபவங்களில் முக்கியமாகப் பட்டமளிப்பு விழாவைத்தான் குறிப்பிட வேண்டும். அன்றைய விழாவுக்குத் தமிழ், கேரளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நாலு பாஷைப் பிராந்தியங்களிலிருந்து 'விசாரத்' பரீட்சையில் தேறியவர்களெல்லாம் பட்டம் பெறுவதற்காகப் பந்தலில் பிரசன்னமாயிருந்தார்கள். இவர்களில் பாதி பேருக்கு மேல் பெண்மணிகளாகவே காணப்பட்டனர். |
|
|
|
|
|
|
|
விழா ஆரம்பமாவதற்கு ஐந்து நிமிஷம் முன்னதாக, காந்திஜி, ராஜாஜி இன்னும் பட்டமளிப்பு விழாவில் சம்பந்தப்பட்ட அனைவரும் நீலக் கதர்ச் சால்வையை மேலே போர்த்திக்கொண்டு பந்தலுக்குள் பிரவேசித் தார்கள். ராஜாஜி, தக்கர்பாபா, சுசீலா நய்யார், பியாரிலால், திரு. சத்தியநாராயணா, கோபால் ரெட்டி முதலியோர் மேடை மீது பிரசன்னமாயிருந்தார்கள். |
|
|
|
|
|
|
|
ராஜாஜி, பட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகாத்மாஜியின் கையில் கொடுக்க, சத்திய நாராயண்ஜி பரீட்சையில் தேறியவர்களின் பெயரை வரிசையாகச் சொல்லி அழைக்க, காந்திஜி அவர்களுக்கெல்லாம் பட்டத்தை வழங்கிக்கொண்டு வந்தார். |
|
|
|
|
|
|
|
இடையே ஒரு பெண்மணி இடுப்பில் கைக்குழந்தை யுடன் வந்து மகாத்மாஜியிடமிருந்து பட்டத்தைப் பெற்றுச் சென்றார். அந்தக் காட்சியைக் கண்டதும் எனக்கு ராஜாஜி எப்போதோ தம்முடைய பிரசங்கத்தில் குறிப்பிட்ட ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது: |
|
|
|
|
|
|
|
“ஸ்திரீகள் பி.ஏ. பட்டம் பெறுவதைக் காட்டிலும் ஒரு குழந்தைக்குத் தாயார் என்ற பட்டம் பெறுவதுதான் முக்கியம்'' என்று கூறியிருக்கிறார். ஹிந்தியில் விசாரத் பட்டம் என்பது ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டம் பெறுவதற்குச் சமானம் என்று கூறப்படுகிறது. |
|
|
|
|
|
|
|
எனவே, இந்தப் பெண்மணி ராஜாஜிக்கு முன்பாக இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்தபோது, 'நான் ஏற்கனவே தாயார் பட்டம் பெற்றிருக்கிறேன்; இதோ இப்போது பி.ஏ. பட்டமும் பெற்றுக் கொள்ள வந்திருக்கிறேன்' என்று ராஜாஜிக்குப் பதில் கூறுவதைப் போல் இருந்தது. |
|
|
|
|
|
|
|
காந்திஜி எல்லோருக்கும் பட்டம் வழங்கி முடிந்ததும் ராஜகுமாரி அமிர்தகெளரி தமது பட்டமளிப்பு விழாப் பிரசங்கத்தைப் படித்து முடித்தார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
பட்டமளிப்பு விழாவைத் தவிர, மகாத்மாஜி மாதர்கள் மாநாட்டில் பேசினார்; ஊழியர்கள் மகாநாட்டில் பேசினார்; எழுத்தாளர்கள் மகாநாட்டில் பேசினார்; மாணவர்கள் மகாநாட்டில் பேசினார்; தினசரி மாலை வேளைப் பிரார்த்தனைகளின்போது பேசினார். அவர் சென்னையில் தங்கியிருந்த போது தமக்கிருந்த இடைவிடாத அலுவல்களுக்கிடையே இன்னும் பல காரியங்களையும் கவனித்திருக்கிறார். பார்லிமெண்டு தூது கோஷ்டிக்குப் பேட்டியளித்திருக்கிறார். சென்னை கவர்னரைக் கண்டு எண்பது நிமிஷ நேரம் பேசியிருக்கிறார். மகாகனம் சீனிவாச சாஸ்திரி அவர்களை ஜெனரல் ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். பல அரசியல் பிரமுகர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் பேட்டியளித்திருக்கிறார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜியின் இத்தனை அலுவல்களுக்கும் ஒருவிதமான குந்தகமும் இல்லாமல் பார்த்துக் கொண்ட பெருமை தொண்டர் படையைச் சேர்ந்ததாகும். அதிலும் முக்கியமாகப் பெண் தொண்டர்கள் எடுத்துக் கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த அரிய சேவையில் பெரிய மனிதர்கள் வீட்டுப் பெண்மணிகள் பலர் ஈடுபட்டு மஞ்சள் உடை தரித்து விழாவை மங்களகரமாக நிறைவேற்றி வைத்ததற்காக அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மதுரையில் மகாத்மா |
|
|
|
|
|
|
|
|
|
பிப்ரவரி முதல் தேதி வெள்ளிக்கிழமை இரவு 'ஸ்பெஷல் ரயில் எழும்பூர் ஸ்டேஷனை விட்டுப் புறப்படுமுன் அது 'ஸ்பெஷல் ரயில்தானா என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு எஞ்சின் பக்கம் போனேன். |
|
|
|
|
|
|
|
என்னைப் பார்த்து, ''யார் நீ?'' என்று கேட்டார் ஒரு ரயில்வே அதிகாரி. |
|
|
|
|
|
|
|
"நான் யார் என்பது மிக்க ரகசியம்; நான் மகாத்மாஜி யுடன் அவருடைய ஸ்பெஷல் ரயிலில் போகப்போகி றேன் என்பதும் மிக மிக ரகசியம் ; ஆகையால், இந்த ரயில் எங்கே போகிறது என்பதை மட்டும் சொல்ல வேணும்'' என்று கேட்டுக் கொண்டேன். |
|
|
|
|
|
|
|
ரயில்வே அதிகாரியும் பதிலுக்கு, இந்த ரயில் மகாத்மா காந்திக்காகப் போகும் 'ஸ்பெஷல் என்பது ரொம்ப ரகசியம். இது பத்து மணிக்குப் புறப்படப் போகிறது என்பது அதைவிடப் பரம ரகசியம். ஆகையால், நான் இந்த ரகசியங்களையெல்லாம் உமக்குச் சொல்ல முடியாது'' என்றார் |
|
|
|
|
|
|
|
எனவே, அந்த ரகசிய வண்டியில் நான் யாருக்கும் தெரியாமல் ஏறி, கப் சிப் என்று ஒரு மூலையில் போய் ரகசியமாக உட்கார்ந்து கொண்டேன். ஆனால், என்ன அதிசயம்! எனக்கு முன்பாகவே இன்னும் பல பத்திரிகை நிருபர்களும் வேறு பலரும் ரொம்ப ரொம்ப ரகசியமாக வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். |
|
|
|
|
|
|
|
ரயிலும் ஊதாமல் கொள்ளாமல் மெளன ரகசியத்துடன் புறப்பட்டு, கிண்டி லெவல் கிராஸிங்' பக்கத்தில் போய் மிக மிக ரகசியமாக நின்றது. நாங்கள் இவ்வளவு ரகசியமாகப் போகும் விஷயத்தை மகாத்மாஜியும், ராஜாஜியும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டு, அங்கே வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். போனால் போகிறது என்று சொல்லி அவர்களையும் ரயிலில் ஏற்றிக் கொண்டோம். |
|
|
|
|
|
|
|
ரயில் சென்னைக்கு இருபத்தைந்து மைல் தூரத்திலுள்ள காட்டுப்பாக்கத்தில் போய் நின்றதும், நாங்கள் படுத்துத் தூங்குவதற்கு ஆயத்தமானோம். ஆனாலும் ஒருவராவது நிம்மதியாகத் தூங்க முடியவில்லை . காரணம்; இவ்வளவு ரகசியமாக நாங்கள் போயிருந்துங்கூட காட்டுப்பாக்கம் ஸ்டேஷன் கொசுக்கள் எங்களை எப்படியோ கண்டுபிடித்து விட்டன! |
|
|
|
|
|
|
|
|
|
|
|
விடியற்காலம் மணி நாலு அடித்தவுடன் காந்திஜி சரியாகத் தூங்குகிறாரா என்று கவனிப்பதற்காக அவர் ஏறியிருந்த வண்டியினருகில் போய்ப் பார்த்தேன். காந்திஜி உட்கார்ந்தவாறே நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த ராஜாஜி என்னைக் கண்டதும், ''இங்கே எங்கே வந்தாய்?'' என்று கேட்டார். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாஜி செளகரியமாகத் தூங்குகிறாரா என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். அவர் நிம்மதியாகத் தூங்குகிறார். தாங்கள்தான் கண் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்...'' என்று பதில் கூறினேன். |
|
|
|
|
|
|
|
ராஜாஜி சிரித்துக் கொண்டே, ''காந்திஜி தூங்க வில்லை. மணி நாலு ஆகிவிட்டதல்லவா? அதனால் கண்களை மூடிய வண்ணம் காலைப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார்!'' என்றார். |
|
|
|
|
|
|
|
''ஓகோ!'' என்று சொல்லிவிட்டுத் திரும்பும்போது அங்கே வந்த ஹரிஜன சேவா சங்கக் காரியதரிசி திரு. எல். என். கோபாலசாமி, இன்னும் அரை மணி நேரத்தில் வண்டி புறப்படப் போகிறது. ஸ் நானம் செய்கிறவர்கள் செய்யலாம். பிளாட்பாரத்தில் வெந்நீர் தயார்!'' என்றார். |
|
|
|
|
|
|
|
அவ்வளவுதான்; வண்டியிலிருந்த எல்லோரும் அங்கே தயாராயிருந்த வெந்நீரில் ஸ்நானம் செய்து முடித்தோம். பின்னர் வண்டி விழுப்புரம் போய்ச் சேருவதற்கும், கிழக்கே சூரியன் உதயமாவதற்கும், எஸ்.ஐ.ஆர். ஓட்டல் சிப்பந்திகள் எங்களுக்கு இட்லி காப்பி கொண்டு வந்து வைப்பதற்கும் சரியாக இருந்தது. விழுப்புரத்துக்கு அடுத்தபடியாக வண்டி உளுந்தூர்ப் பேட்டை , விருத்தாசலம், அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம், பொன்மலை, திருச்சி, கொடைக்கானல் முதலிய பல ஸ்டேஷன்களில் நின்றது. முக்கால்வாசி ஊர்களில் வண்டியை ஸ்டேஷனை அடுத்த 'லெவல் கிராஸிங்' அருகில் உள்ள மைதானங்களில் நிறுத்தினார்கள். அங்கங்கே கூடியிருந்த ஜனங்களுக்கு மகாத்மாஜி இரண்டு நிமிஷ நேரம் பிரசங்கம் செய்தார். |
|
|
|
|
|
|
|
இரண்டு நிமிஷ நேரம் ராம நாம பஜனை நடத்தினார். ஐந்து நிமிட நேரம் ஹரிஜன நிதிக்குப் பணம் வசூல் செய்தார். |
|
|
|
|
|
|
|
ஏற்கெனவே குறிப்பிட்ட இடங்களைத் தவிர, ரயிலை அதிகப்படியாகச் சில இடங்களிலும் நிறுத்தும் படி ஆயிற்று. சாத்துக்குடல் என்ற கிராமத்தில் ரயில் நிற்காது என்று தெரிந்தும்கூட அந்த ஊரைச் சேர்ந்த ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹரிஜனங்கள் மகாத்மாஜியின் படத்தை விமானத்தில் வைத்து உற்சவ விக்ரகம் போல் ஜோடித்துக் கோவில் குடையைப் பிடித்துக் கொண்டு வந்திருந் தார்கள். (அப்போது அவர்களுக்கிருந்த உற்சாகத்தில் மகாத்மாஜி தலைமீது சுரீரென்று அடித்த வெயிலைக்கூட யாரும் கவனிக்கவில்லை !) மகாத்மாஜி அந்தக் காட்சியைக் கண்டதும் வண்டியை நிறுத்தச் சொல்லி அங்கே ஒரு நிமிஷ நேரம் ரயில் வண்டியின் ஓரத்தில் இணைத்திருந்த பிளாட்பாரத்தில் வந்து நின்று தரிசனம் தந்தார். |
|
|
|
|
|
|
|
ரயில் ஓடும் போது, பாதைக்கு இருபுறங்களிலும் வழிநெடுக ஜனங்கள் வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கூட்டம் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். பனை மரங்கள், புளிய மரங்கள், கைகாட்டி மரங்கள் தந்திக் கட்டிங்கள் மீதெல்லாம் ஏறி நின்று மகாத்மாஜியின் தரிசனத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். மேலே வெயிலென்றும், கீழே வெள்ளமென்றும் பாராமல் கால் கடுக்கக் காத்துக் கொண்டிருந்தார்கள். |
|
|
|
|
|
|
|
காந்திஜி வண்டிக்கும், பத்திரிகை நிருபர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த எங்கள் வண்டிக்கும் வித்தியாசம் தெரியாத கூட்டத்தினரில் சிலர் மகாத்மா வுக்காகக் கொண்டு வந்த சாத்துக்குடி, ஆரஞ்சு முதலிய பழங்களை எல்லாம் எங்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள். வேறு சிலர் காந்திஜிக்கு அன்புக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கும் பொருட்டுக் கொண்டுவந்திருந்த கதர்நூல் சிட்டங்களை வண்டி நகரும் அவசரத்தில் என்னிடம் கொடுத்துவிட்டு, ''இதைக் காந்திஜியிடம் சேர்த்துவிட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர். |
|
|
|
|
|
|
|
நானும், 'ஆகட்டும்'' என்று அவர்களுக்குப் பதில் கூறிவிட்டுப் பின்னால் சரடு திரிப்பதற்கு உதவும் என்று வாங்கி வைத்துக் கொண்டேன். |
|
|
|
|
|
|
|
கொடைக்கானல் தாண்டியதும் வண்டி எந்த இடத்தில் நிற்கப் போகிறது, மகாத்மாஜி எங்கே இறங்கி எப்படிப் போகப் போகிறார் என்று நாங்களெல்லாம் யோசித்துக் கொண்டிருந்த சமயம் 'காந்தி ஸ்பெஷல் மதுரைக்கு எட்டு மைல் தூரத்திலுள்ள சமயநல்லூர் என்ற ஒரு சிறு கிராமத்தில் நின்றது. மகாத்மாஜி, ராஜாஜி, சுசீலா நய்யார், பியாரிலால் முதலியவர்கள் வண்டியிலிருந்து கீழே இறங்கினார்கள். |
|
|
|
|
|
|
|
அங்கே மகாத்மாஜியை எதிர்கொண்டழைக்க மதுரை திரு. ஏ. வைத்தியநாதய்யர், திரு. சுப்பராமன் ஆகிய வர்கள் வந்து காத்துக் கொண்டிருந்தார்கள். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
சமயநல்லூருக்கு அடுத்தபடியாக ரயில் வேளாங்குடி யில் போய் நின்றது. வேளாங்குடி ஸ்டேஷனில் எங்களையும், காந்திஜி கோஷ்டியையும் அழைத்துச் செல்லத் தயாராய் நின்ற மோட்டார் வண்டிகளில் ஏறிக் கொண்டோம். அவ்வளவுதான்! வேளாங்குடியில் ஆரம்பித்த கூட்டம் மதுரைக்குப் போய்ச் சேரும்வரை சாலையின் இருபுறங்களிலும் காந்தி மகான் தரிசனத் துக்காக 'ஜே ஜே' என்று மொய்த்துக் கொண்டிருந்தது. முன்னால் சென்ற நாங்கள் அவர்களுக் கெல்லாம், ''காந்திஜி பின்னால் வந்து கொண்டிருக்கிறார்'' என்று பதில் சொல்வதற்குள் எங்கள் நா வறண்டு தொண்டை கூடக் கம்மிப் போய்விட்டது. |
|
|
|
|
|
|
|
கடைசியில் அனைவரும் பிரார்த்தனை மைதானத் துக்குப் போய்ச் சேர்ந்தோம். அங்கே கண்ட காட்சியைப் பற்றி நான் என்னத்தைச் சொல்ல! |
|
|
|
|
|
|
|
மைதானத்தில் வெகு தூரத்துக்கு வெகு தூரம் வரை கட்டியிருந்த அழகிய மின்சார விளக்குத் தோரணங்கள் பட்டப் பகல்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தன. |
|
|
|
|
|
|
|
மேடை மீது ஏறி நின்று சுற்றிலும் கவனித்தேன். நாலாபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, இன்னும் அப்பால், அதற்கும் அப்பால் அடிவானம் பூமியைத் தொட்டுக் கொண்டிருக்கும் இடம் வரை ஒரே ஜன சமுத்திரமாயிருப்பதைக் கண்டு என் தலை சுழன்றது. மயக்கம் போட்டுக் கீழே விழுவதற்கு இட வசதி இல்லையாகையால் பேசாமல் இருந்துவிட்டேன். |
|
|
|
|
|
|
|
இத்தகைய பிரம்மாண்டமான ஜன சமுத்திரத்தில் கண்டிப்பாய் மதுரை நகரம் அமிழ்ந்துவிடத்தான் போகிறது என்று நினைத்த போது, எனக்கு அந்தப் பழைய பரமசிவனைக் காட்டிலும் பன்மடங்கு பயம் ஏற்பட்டுவிட்டது. |
|
|
|
|
|
|
|
இமாசலத்தின் மீது நடந்த பார்வதி பரமேசுவரன் திருமணத்துக்கு அகில உலகத்தினின்றும் வந்து குழுமிய ஜனக் கூட்டத்தைக் கண்டதும் பரமசிவன் எங்கே இமயமலை பாதாளத்துக்குள் அமுங்கிப் பூமி நிலைகவிழ்ந்து விடுமோ என்று அஞ்சி அகத்திய முனிவரை அழைத்துத் தென்னகத்தே பொதிகை மலைக்குப் போகச் சொன்னார் அல்லவா? |
|
|
|
|
|
|
|
பரமசிவன் கல்யாணத்தின் போது இமயமலைக்கு ஏற்படவிருந்த அதே மாதிரியான பேராபத்து மகாத்மாஜியின் விஜயத்தின் போது மதுரை மாநகரத் துக்கும் ஏற்படவிருந்தது. மகாத்மாஜியைத் தரிசிப்பதற் காகப் பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த லட்சக் கணக்கான மக்களைக் கண்டதும் நான் உடனே பொதிகை மலையிலிருக்கும் அகத்திய முனிவரை அழைத்து வடக்கே போகச் சொல்லலாமா என்று யோசித்தேன். அதற்கு நேரமில்லை ஆகையால் அகத்திய முனிவரை அனுப்புவதைவிட வர்தா முனிவரையே அந்த இடத்தைவிட்டுக் கிளப்பிவிட்டால் கஷ்டம் தீர்ந்து போகும் என்று கருதி, மகாத்மாஜி உட்கார்ந்து கொண்டிருந்த பக்கம் திரும்பிப் பார்த்தேன். |
|
|
|
|
|
|
|
இது என்ன கூத்து! மகாத்மாஜி தமது மேல் துண்டை மேடை மீது விரித்துப் படுத்துக் கொண்டிருந்தார். |
|
|
|
|
|
|
|
'பாபுஜி! கூட்டம் அசாத்தியமாக இருக்கிறது; எழுந்திருங்கள். இல்லாவிட்டால் ஆபத்தாய் முடியும் என்று நண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள். |
|
|
|
|
|
|
|
மகாத்மா கண் விழித்து, ''ஜனங்கள் எல்லோரும் அமைதியாகக் கலைந்த பிறகுதான் நான் எழுந்து வருவேன் என்று கூறி, மறுபடியும் படுத்துக் கொண்டார். |
|
|
|
|
|
|
|
அப்புறம் தொண்டர்கள் சிலர் மூங்கில் வாரைகளைக் கொண்டு வந்து நீளவாட்டில் பிடித்துக் கூட்டத்தினரை விலக்கிக்கொண்டே மேடை வரை சென்று, ''இதோ வழி போட்டுவிட்டோம். மகாத்மாஜி எழுந்து கீழே இறங்கி வரலாம்'' என்று சொன்னார்கள். |
|
|
|
|
|
|
|
காந்திஜி எழுந்து பார்த்துவிட்டு, இது பலாத் காரத்தினால் போடப்பட்ட வழி; ஆகையால் நான் வர முடியாது. ஜனங்கள் தாங்களாகவே சாந்தமாகக் கலைந்து மைதானம் காலியானால் ஒழிய நான் எழுந்திருக்க முடியாது' என்று கண்டிப்பாகச் சொல்லி சத்தியாக்கிரகம் செய்தார். |
|
|
|
|
|
|
|
ஜனங்களோ, மகாத்மாஜி எழுந்து போகும் வரை தாங்கள் மைதானத்தை விட்டு நகருவதில்லை என்று பிடிவாதம் பிடித்து அங்கேயே இருந்தார்கள். இப்படி மகாத்மாஜிக்கும், கூட்டத்துக்கும் நடந்த சத்தியாக்கிரகப் போராட்டமானது கடைசியாக ஒன்பது மணிக்குத்தான் முடிவுற்றது. |
|
|
|
|
|
|
|
பிரார்த்தனைக் கூட்டத்தையும் அதன் மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடை மண்டபத்தையும் கவனித்தபோது, அந்தக் காட்சி மாபெரும் சமுத்திரத் துக்கு மத்தியில் உள்ள சிறு தீவைப்போல் காணப் பட்டது. |
|
|
|
|
|
|
|
மேடையின் நாலா பக்கங்களிலும் உட்கார்ந்திருந்த ஜனங்களால் மகாத்மாஜியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. எனவே காந்திஜி , எல்லோரும் தம்மைக் காண வேண்டுமென்பதற்காக மேடை விளிம்புகளில் இருந்த கம்பங்களைப் பிடித்துக் கொண்டே எட்டுத் திசைகளுக்கும் சென்று அங்கங்கே சிறிது நேரம் நின்று தரிசனம் தந்தார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஒவ்வொரு திசையிலும் அவர் வந்து நிற்கும்போது அந்தப் பக்கத்தில் உள்ள ஜனங்கள் அமைதி யாயிருந்தார்கள். மற்றப் பக்கங்களிலிருந்து மட்டும் சப்தம் வந்து கொண்டேயிருந்தது. மகாத்மாஜி, "நான் எந்தப் பக்கத்தில் நின்று பேசுகிறேனோ அந்தப் பக்கத்திலுள்ளவர்கள் மட்டும் நிச்சப்தமாயிருக்கிறார்கள். வேறு பக்கம் போனதும் அதுவரை பேசாம லிருந்தவர்களும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இப்போது நான் அடுத்த பக்கம் போகிறேன். ஆகையால், இங்கே உள்ளவர்கள் பேசாமல் இருக்க வேண்டும்! என்றார். அப்போது அமைதியாக இருந்த கூட்டத்தில் எழுந்த சிரிப்பின் அலையோசை அடங்குவதற்கு ஐந்து நிமிட நேரம் ஆயிற்று; மேலும் மகாத்மாஜி, ''நீங்கள் யாவரும் அமைதியாக இருக்க வேண்டும். அன்பின் காரணமாகத்தான் நீங்கள் இப்படி லட்சக்கணக்கில் என்னைச் சூழ்ந்து கொண்டு ஆரவாரம் செய்கிறீர்கள். அன்புக்கு அறிகுறியாக வேறு எவ்வளவோ காரியங்கள் செய்யலாம். ஆகையால், நாளைய தினம் என்னை ஆலயத்துக்குள் போக முடியாதபடி கோயிலருகில் கூட்டம் போட்டு இடைஞ்சல் செய்ய வேண்டாம். நான் போகுமிடத்துக்கு என்னை யாரும் பின்பற்றி வரவேண்டாம்'' என்று கேட்டுக் கொண்டார். |
|
|
|
|
|
|
|
ஆனால், மகாத்மாஜியை மற்றெல்லா விஷயங் களிலும் பின்பற்றும் பொது ஜனங்கள் அவர் போகுமிடங்களையும் பின்பற்றத்தான் செய்தனர்! |
|
|
|
|
|
|
|
* * * |
|
|
|
|
|
|
|
மறுநாள் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ; காலை ஆறு மணியிலிருந்தே மதுரைவாசிகளும், வெளியூர் வாசிகளும் மகாத்மாஜி தங்கியிருந்த சிவகங்கை பங்களா வாசலை முற்றுகையிட்டு விட்டார்கள். தெருவெல்லாம் வண்டி போக முடியாதபடி கூடியிருந்தார்கள். கோயிலுக்கு வெளியே மாசி வீதிகளையும் ஆக்கிரமித்திருந்தார்கள்! கோயிலுக்குள்ளே போனால் அங்கேயும் ஜனநாயகம்தான்! |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி சரியாக எட்டு மணிக்கு ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அந்த சுபயோக சுப வேளையில் ஆலாட்ச மணிகள் கணகணவென்று ஒலித்தன. யானைகள் பிளிறின. மேள வாத்தியங்களும், 'ஜே' கோஷங்களும் முழங்கின. |
|
|
|
|
|
|
|
|
|
|
|
கண்கண்ட தெய்வமான காந்தி மகான் பொற்றாமரைக் குளத்தை வலமாக வந்து, முறையே விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், நடராஜர், சுப்பிரமணியர் முதலிய தெய்வங்களைத் தரிசனம் செய்து தமது பெயரால் அபிஷேக அர்ச்சனைகளும் செய்தார். பின்னர் அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் தரிசனம் அளித்துவிட்டு, கீழே கல் தரையில் செதுக்கப்பட்ட டிருக்கும் திருமலை நாயக்கரின் சிலையைத் தம்முடைய பாதங்களால் புனிதப்படுத்தினார். (யாத்திரிகர்களின் பாததூளி படவேண்டும் என்பதற்காகவே திருமலை நாயக்கரைக் கீழே தரையிலுள்ள கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்களாம். ஆனால் இன்றைய தினந்தான் அந்தச் சிலை உண்மையாகவே புனிதம் அடைந்திருக்க வேண்டும்.) |
|
|
|
|
|
|
|
இவையெல்லாம் முடிந்ததும் மகாத்மாஜியைக் கல்யாண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கேதான் மீனாட்சி அம்மனுக்குச் சொந்தமான ஏராளமான திருஆபரணங்கள் இருந்தன. |
|
|
|
|
|
|
|
''மகாத்மாஜியை அங்கே ஏன் அழைத்துப் போகிறீர்கள்? அவர் பாட்டுக்கு எல்லா நகைகளையும் ஹரிஜன நிதிக்குக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டாலும் கேட்பார்'' என்று கோவில் நிர்வாகிகளிடம் எச்சரித்துப் பார்த்தேன். அவர்கள் கேட்கவில்லை. நல்ல வேளையாக மகாத்மாவும் மீனாட்சி அம்மனின் நகைகளைக் கேட்கவில்லை. |
|
|
|
|
|
|
|
ஏராளமான தங்க நகைகளுக்கும், நவரத்தின ஆபரணங்களுக்கும் இடையே நடு நாயகமாய் விளங்கிய ஒரு பதக்கம் என் கண்ணைக் கவர்ந்தது. |
|
|
|
|
|
|
|
''அது என்ன?' என்று விசாரித்தேன். |
|
|
|
|
|
|
|
''நீலநாயகம்!'' என்று பதில் வந்தது. |
|
|
|
|
|
|
|
''நீல நாயகம்!'' என்ற மேற்படி அற்புத அழகு வாய்ந்த பதக்கத்தை நளச் சக்கரவர்த்தி அரசாண்ட காலத்தில் மீனாட்சி அம்மனுக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டாராம். |
|
|
|
|
|
|
|
நளச் சக்கரவர்த்தி அளித்த மேற்படி பதக்கத்தை ஒரு தடவை ஏழாம் எட்வர்டு சக்கரவர்த்தி மதுரைக்கு வந்திருந்த போது பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டுப் போனாராம். உடனே அந்தப் பதக்கத்தை அவர் தமது தாயார் விக்டோரியா மகாராணிக்குக் காட்ட வேண்டுமென்று சொல்லிக் கையோடு எடுத்துக் கொண்டு போனாராம். எடுத்துக் கொண்டு போனவர், என்ன ஆச்சரியம், பத்திரமாகத் திருப்பியும் அனுப்பி விட்டாராம். மீனாட்சி அம்மனுடைய சொத்து விஷயத்தில் எல்லோருமே ஜாக்கிரதையாக இருப்பார்கள் போலிருக்கிறது! |
|
|
|
|
|
|
|
* * * |
|
|
|
|
|
|
|
|
|
|
|
மதுரை யாத்திரை முடிந்து, பழநி போய்ச் சேரும்போது மணி ஐந்தரை ஆகிவிட்டது. பழநிக்குப் போகும் மார்க்கத்தில் திண்டுக்கல்லில் பிரமாதமான கூட்டம் கூடி மகாத்மாஜியை வரவேற்றது. திண்டுக்கல் தாண்டியதும் ரயில் ஒட்டன்சத்திரத்தில் நின்றபோது வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டிருந்த எனக்கு ஒரே ஆச்சரியமாய்ப் போய்விட்டது. |
|
|
|
|
|
|
|
சாதாரணமாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ரயில் நிற்கப் போகிறதென்றால் மேற்படி இடத்தை நெருங்கும்போது அங்கு ஒரே கூச்சலும் கோஷமுமாக இருப்பதுதான் வழக்கம். |
|
|
|
|
|
|
|
ஒட்டன்சத்திரத்தில் இந்த அனுபவத்துக்கு முற்றிலும் மாறாகப் பரிபூரண அமைதி நிலவியது. இவ்வளவுக்கும் கூட்டம் சாதாரணக் கூட்டமாயில்லை. பதினைந்தாயிரம் பேர் கொண்ட மிகப்பெரிய கூட்டம்தான். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி, ''இம் மாதிரி ஒழுங்கான கூட்டத்தை என்னுடைய மதுரைப் பயணத்தில் நான் இரண்டொரு இடங்களில்தான் கண்டேன். இதைப் போல் நாற்பது கோடி மக்களும், ஒற்றுமையாகவும், சாந்தமாகவும் இருந்தால் மறுநாளே நமக்குச் சுதந்திரம் கிட்டிவிடும்'' என்று கூறினார். |
|
|
|
|
|
|
|
பழநியில், பிரார்த்தனை மைதானத்தில் லட்சம் பேருக்கு மேல் கூடியிருந்தார்கள். அங்கே நிச்சப்தமாக இருந்து மகாத்மாவின் பிரசங்கத்தை அமைதியாகக் கேட்டுவிட்டுப் பிறகு மலையடிவாரத்துக்குப் போனார்கள். காரணம், அங்கே மகாத்மாஜி வரப் போகிறார் , மலை மீது ஏறிப் பழநியாண்டவனைத் தரிசிக்கப் போகிறார், அப்போது காந்தி மகானைத் தரிசிக்கலாம் என்ற ஆசைதான்! |
|
|
|
|
|
|
|
ஆனால், மகாத்மாஜியோ பழநிக் கோயிலுக்குப் போவதே சந்தேகமாயிருந்தது. எங்கே மதுரையைப் போல் பழநிக் கோயிலுக்குள்ளும் ஜனக்கூட்டம் கூடி ஆண்டவன் தரிசனத்துக்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற அச்சத்தினால் முதலில் கோயிலுக்குப் போவதற்கே மறுத்துவிட்டார். கடைசியாகத் தக்கர் பாபா முன்கூட்டியே கோயிலுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்து, ''தாங்கள் வரலாம்; கூட்டம் அதிகமில்லை ; இருக்கிறவர்களும் ஒழுங்காக உட்கார்ந்து கொண் டிருக்கிறார்கள்'' என்று மகாத்மாஜிக்கு உறுதி கூறியதின் பேரிலேயே மகாத்மாஜி ஒப்புக் கொண்டார். பிறகு சரியாக எட்டு மணிக்கு மகாத்மாஜியும், ராஜாஜியும் பல்லக்கில் ஏறி மலைமீதுள்ள ஆண்டவன் சந்நிதிக்கு வந்து சேர்ந்தார்கள். |
|
|
|
|
|
|
|
நானும் பத்திரிகை நிருபர்கள் சிலரும் படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியை அடைந்தோம். |
|
|
|
|
|
|
|
எஸ்.ஐ.ஆர். பிளாட்பாரம் படிக்கட்டுகளைத் தவிர அதுவரை எனக்குச் சேர்ந்தாற் போல் அத்தனை படிக்கட்டுகள் ஏறிப் பழக்கம் கிடையாது. எனவே, மலையுச்சியை அடைவதற்குள் என் கால்கள் கீரைத் தண்டு போல் துவள ஆரம்பித்துவிட்டன. |
|
|
|
|
|
|
|
''குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டில் நடந்து போனால் காலை வலிக்காது என்று மலை மீது ஏறிவந்த திரு. காமராஜ் யோசனை கூறினார். |
|
|
|
|
|
|
|
அவருடைய யோசனைக்கிணங்க குறுக்கிலும் நெடுக்கிலும் மூலை வாட்டாக நடந்து பார்த்தேன்; என்ன ஆச்சரியம்! காலைத் துளிக்கூட வலிக்கவில்லை . முழங்கால் முட்டியைத்தான் வலித்தது! |
|
|
|
|
|
|
|
மலையுச்சியை அடைந்ததும் அங்கே கிடைத்த குளிர்ந்த கோடைக்கானல் தண்ணீரைப் பருகிச் சிரம் பரிகாரம் செய்துகொண்டு கோயில் கர்ப்பக் கிருகத்துக்குள் பிரவேசித்தோம். |
|
|
|
|
|
|
|
சிறிது நேரத்துக் கெல்லாம் மகாத்மாஜி, ராஜாஜி, தக்கர் பாபா மூவரும் வந்து சேர்ந்தார்கள். ஆண்டவனுக்கு அபிஷேக அர்ச்சனை ஆராதனை எல்லாம் முடிந்த பிறகு, எல்லோருக்கும் விபூதிப் பிரசாதம் வழங்கினார்கள். கோயில் குருக்கள் மகாத்மாவுக்கும், ராஜாஜிக்கும் தலையில் பெரிய முண்டாசாகக் கட்டிக் கழுத்தில் பூமாலை போட்டுக் கோயில் மரியாதை செய்தார். அப்போது மகாத்மாவும், ராஜாஜியும் அளித்த காட்சியானது சாட்சாத் பழநியாண்டவரே பார்த்து மகிழும்படியாக இருந்தது. ராஜாஜி, காந்திஜி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு ஆனந்தம் தாங்கமாட்டாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார்கள். அங்கே இருந்த குருக்கள்மார் முதலிய எல்லோருக்கும் இந்தக் காட்சி பெரிய நகைச்சுவை விருந்தாயிருந்தது! |
|
|
|
|
|
|
|
ஒருவிதமாகப் பழநியாண்டவன் தரிசனம் முடிந்ததும் அனைவரும் கீழே இறங்கத் தொடங்கினோம். நான் மட்டும் மெதுவாகக் காந்திஜி ஏறி வந்த பல்லக்கின் பக்கமாகப் போய் நின்றேன். என்னைக் கண்ட ராஜாஜி, ''பல்லக்கருகில் உனக்கென்ன வேலை! இதில் மகாத்மாஜி ஏறிச் செல்லப் போகிறார்!'' என்றார். |
|
|
|
|
|
|
|
''பல்லக்கில் ஏறிக்கொள்வதற்காக நான் வரவில்லை . காந்திஜி ஏறிச் செல்லும் இந்தப் பல்லக்கைச் சுமக்கும் பாக்கியம் எனக்கு ஒரு வேளை கிட்டுமா என்று பார்ப்பதற்காகவே வந்தேன்!'' என்று மழுப்பிவிட்டு அப்பால் நகர்ந்துவிட்டேன். |
|
|
|
|
|
|
|
பழநி யாத்திரை 'ஸ்பெஷல் சென்னைக்குத் திரும்பும்போது தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம், சீர்காழி, சிதம்பரம் மார்க்கத்தில் பெரும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது. |
|
|
|
|
|
|
|
வரும் போது ஸ்பெஷலில் கடைசி வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்த திருச்செங்கோடு திரு. ராமதுரை ரயில் கார்டுக்குப் பதிலாக, அவருடைய வேலையைத் தாமே செய்து கொண்டிருந்தார். அதாவது, சிவப்புக் கொடி, பச்சைக்கொடி காட்டுவதற்குப் பதிலாக மூவர்ணக் கதர்க் கொடியையே காட்டி வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். ரயில் கார்டு திரு. வாசுதேவராவுக்கு இதனால் பாதி வேலை குறைந்து போயிற்று. ஆனாலும் திரு. வாசுதேவ ராவ், யாத்திரை முழுக்க எடுத்துக்கொண்ட சிரமம் கொஞ்ச நஞ்சமல்ல. அடிக்கொரு தடவை ஒவ்வொரு வண்டியாக வந்து பார்த்துக் கொண்டே, ''சாப்பிட்டீர்களா? தண்ணீர் வேண்டுமா? டிபன் வந்ததா?'' என்று கேட்டு உபசரித்துக் கொண்டிருந்தார். |
|
|
|
|
|
|
|
சென்னைக்குத் திரும்பும் போது மகாத்மாஜி அங்கங்கே என்ன பேசினார் என்பது பற்றி நான் மௌனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில், மகாத்மாஜி பழநியிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தினம் மெளன தினம் ஆகையால் அவர் ஒன்றுமே பேசவில்லை . |
|
|
|
|
|
|
|
|
|
|
|
வரும் வழியில் ஆங்காங்கு கூடியிருந்த மாபெரும் ஜனக் கூட்டங்களைப்பற்றியும், மகாத்மாவுக்கு அவர்கள் அளித்த குதூகல வரவேற்புக்களைப் பற்றியுங்கூட மௌனம் சாதிக்க விரும்புகிறேன். ஏனெனில் எவ்வளவுதான் சொன்னாலும் அந்தக் குதூகல வரவேற்புக்களின் பெருமையில் நூற்றில் ஒரு பங்கு கூடச் சொன்னதாகாது. அதைவிட மௌனம் சாதிப்பதே மேல் அல்லவா? |
|
|
|
|
|
|
|
காந்தி மகானின் மதுரை - பழநி யாத்திரையின் போது சுமார் 30 லட்சம் தமிழ் மக்கள் அவரைக் கண் குளிரக் கண்டு மகிழ்ந்தார்கள். ஹரிஜன நிதிக்காக ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்தனர். மதுரையில் நடந்த பிரார்த்தனையின் போதும், மற்ற இடங்களிலும் அவருக்கு அளித்த கதர்ச் சிட்டங்களின் எண்ணிக்கை முப்பதாயிரத்துக்குக் குறைவில்லை . |
|
|
|
|
|
|
|
மதுரைப் பிரார்த்தனை மைதானத்தில் கூடியிருந்த திரளான ஜனங்களைக் கண்டு மகாத்மா மலைத்துப் போனதோடு, அங்கே மலைபோல் குவிக்கப்பட்டிருந்த நூல் சிட்டங்களைக் கண்டு நிச்சயம் திகைத்துப் போயிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. |
|
|
|
|
|
|
|
மொத்தத்தில் தமிழக யாத்திரையானது மகாத்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளித்திருக்க வேண்டும். ''மதுரையில் கூடிய மாபெரும் கூட்டத்தைப் போல் மகாத்மாஜியே இதுவரை பார்த்தது இல்லை'' என்று உடன் வந்த திரு. கமலநயன் பஜாஜ் கூறினார். இப்படிக் காந்தி மகானே கண்டு வியக்கத்தக்க முறையில் அவரை வரவேற்று வழியனுப்பிய தமிழ் மக்கள் அந்த நிகழ்ச்சியை என்றென்றும் எண்ணிப் பெருமிதம் கொள்ளலாம். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
நவகாளி நினைவுகள் |
|
|
|
|
|
|
|
|
|
1946 - ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் . தேதியன்றுதான் மகாத் மாஜி நவகாளி பயங்கரச் சம்பவங்களைப் பற்றி முதன் முதலாகக் கேள்வியுற்றார். |
|
|
|
|
|
|
|
அகதிகளின் கண்ணீரைத் துடைக்க அந்த மகான் அக்கணமே தடியை ஊன்றி நவகாளிக்குப் பயணமானார். |
|
|
|
|
|
|
|
''நவகாளியில் பூரண அமைதி ஏற்படுகிறவரை நான் அந்த இடத்தைவிட்டுத் திரும்ப மாட்டேன். இந்தச் சோதனையில் என் உயிர் போயினும் சரியே என்ற பிரதிக்ஞையுடன் காந்தி மகான் மேற்படி யாத்திரையை மேற்கொண்டார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
காந்தி மகாத்மாவின் துணிச்சலைக் கண்டு பலர் மனம் கலங்கினார்கள். நவகாளியின் பயங்கரங்களை நினை வூட்டி அவரைத் தடுத்துப் பார்த்தார்கள். மகாத்மாஜி இதற்கெல்லாம் இணங்கவில்லை. |
|
|
|
|
|
|
|
இந்தச் சமயத்தில், புது டெல்லியில் பண்டிதர் ஜவஹர்லால் நேருவும், சர்தார் வல்லபாய் படேலும் கடினமான அரசாங்கப் பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருந்தார்கள். மகாத்மாவின் ஆலோசனையின்றி ஓர் அடி கூட எடுத்துவைக்க முடியாத நிலையில் அப்போது அவர்கள் இருந்தார்கள். எனவே, மகாத்மாவின் தீர்மானத்தை அறிந்த போது அவர்கள் எத்தகைய மனோ வேதனைக்குள்ளாயிருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா? |
|
|
|
|
|
|
|
அக்டோபர் 28-ஆம் தேதியன்று நவகாளி நோக்கிப் புறப்பட்ட காந்தி மகாத்மா வழியில் கல்கத்தாவில் சில தினங்கள் தங்கினார். அப்போது வங்காளத்தில் சுஹர்வர்த்தியின் தலைமையில் முஸ்லிம் லீக் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. |
|
|
|
|
|
|
|
காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தபோது அவரைப் பேட்டி காணவும், அவருடன் ஆலோசனை நடத்தவும் அவரைத் தேடிப் பல தலைவர்கள் விஜயம் செய்தார்கள். பண்டித ஜவஹரும், சர்தார் வல்லபாயும், மெளலானா ஆஸாதும் இன்னும் பலரும் மகாத்மாஜியின் இருப் பிடத்தை நாடி வந்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்கள். |
|
|
|
|
|
|
|
வங்காளப் பிரதமர் ஜனாப் சுஹர்வர்த்தி சாகிப் மகாத்மாவைப் பல தடவை சந்தித்துப் பேசினார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
நவகாளியில் முஸ்லிம் லீகர்களின் 'நேரடி நடவடிக்கையின் பெயரால் பல கிராமங்கள் தீப்பற்றி எரிந்து, பல உயிர்ச் சேதங்களும், பல கோடி ரூபாய்களுக்குப் பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்தன அல்லவா? இதைக் கேள்வியுற்ற பீகார் இந்துக்கள் வெகுண்டு அங்குள்ள முஸ்லிம்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொள்ளையிலும், கொலையிலும் ஈடுபட்டார்கள். பண்டித ஜவஹரும், சோஷலிஸ்டு கட்சித் தலைவர் ஜயப்பிரகாசரும் இந்தச் செய்தியைக் கேள்வியுற்றதும் பீகாருக்கு விரைந்து சென்று அங்கே எல்லாப் பிரதேசங்களையும் வாயு வேகத்தில் சுற்றிப் பார்வையிட்டார்கள். |
|
|
|
|
|
|
|
பீகார்க் காட்சிகளைக் கண்டு மனம் நொந்த நேரு, ''வெறியர்களையும், கொலைகாரர்களையும் அடிக்க ஆகாச மார்க்கத்திலிருந்து குண்டு போடவும் தயங்கக் கூடாது என்று பீகார் சர்க்காருக்கு உத்தரவு போட்டுவிட்டுத் திரும்பினார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி கல்கத்தாவில் தங்கியிருந்த சமயந்தான் பீகாரில் பழிவாங்கும் வகுப்பு வெறி ஆரம்பமாயிற்று. இதைப்பற்றி ஜனாப் சுஹர்வர்த்தி மகாத்மாஜியிடம் பிரஸ்தாபித்து, ''தாங்கள் நவகாளிக்குச் சென்று அமைதியை நிலைநாட்டுவதைக் காட்டிலும், பீகாருக்குச் சென்று முஸ்லிம் மக்களைக் காப்பாற்றுங்கள்'' என்று யோசனை கூறினார். ஆனாலும் மகாத்மாஜி முன்வைத்த காலைப் பின்வைக்கவில்லை. பீகாரில் கலவரம் அடங்கவில்லை என்றால் தாம் உண்ணாவிரதம் இருக்க நேரிடும் என்பதைச் சூசகமாக அறிவித்தார். அவ்வளவு தான்; பீகார் கலவரம் வெகு விரைவில் அடங்கிவிட்டது! |
|
|
|
|
|
|
|
எனவே, நவம்பர் 6 - ஆம் தேதி காந்திஜி கல்கத்தாவிலிருந்து நவகாளிக்குப் பயணமானார். |
|
|
|
|
|
|
|
காந்திஜிக்காக வங்காள சர்க்கார் ஒரு பிரத்தியேக ரயில் ஏற்பாடு செய்திருந்தனர். |
|
|
|
|
|
|
|
'கிவி' என்ற நீராவிப் படகை மகாத்மாவின் பிரயாணத்துக்காக, கோலந்தோ துறைமுகத்தில் தயாராக நிறுத்தி வைத்திருந்தனர். |
|
|
|
|
|
|
|
பல லட்சம் மக்கள் துறைமுகத்தில் கூடி நின்று மகாத்மாஜியை வழி அனுப்பிய போது அந்த மகான் தமக்கே உரித்தான இயற்கைப் புன்னகையுடன் கைகூப்பி வணங்கி, "நவகாளி சென்று வருகிறேன்' என்று அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டார். |
|
|
|
|
|
|
|
வங்காள சர்க்காரில் அப்போது தொழில் மந்திரியாக இருந்த ஜனாப் ஷம்ஷதீன் ஆமதும் மற்றும் இரு பார்லி மெண்டரி காரியதரிசிகளும் மகாத்மாஜியுடன் துணையாகச் சென்றார்கள். |
|
|
|
|
|
|
|
இவர்கள் மூவரைத் தவிர மகாத்மாஜியுடன் டாக்டர் சுசீலா நய்யார், திருமதி அவா காந்தி, திருமதி சுசீலாபாய், தக்கர்பாபா, ஹேமா ப்ரோவா தேவி, மதன்லால் சென் முதலியவர்களும் இன்னும் சில பத்திரிகை நிருபர்களும் பிரயாணம் செய்தார்கள். |
|
|
|
|
|
|
|
''என்னை யாரும் பின்பற்றி வரவேண்டாம்; நான் இந்த யாத்திரையைத் தனிமையாகவே செய்ய விரும்புகிறேன்'' என்று மகாத்மாஜி பல தடவை கூறியபோதிலும் அவரைச் சிலர் பின்தொடர்ந்தே செல்ல வேண்டியதாயிற்று. |
|
|
|
|
|
|
|
காந்திஜி முதன்முதலாக செளமுஹானி என்ற ஊரில் தங்கினார். அங்கே திரு. ஜோன் மஜும்தார் என்னும் ஒரு வியாபாரியின் வீடே மகாத்மாஜி தங்கும் இடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. |
|
|
|
|
|
|
|
பீகார் கலவரத்தைக் கேள்வியுற்றது முதல் மகாத்மாஜியின் மனம் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்க வேண்டும். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்குப் பிராயச்சித்தமாகத் தம்முடைய சொற்ப ஆகாரத்தையும் குறைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அதன் காரணமாக அவர் உடல் நலம் வெகுவாகக் குறைந்த துடன் தேக நிறையிலும் ஐந்து பவுண்டு குறைந்து விட்டது. |
|
|
|
|
|
|
|
நேருஜியிடமிருந்து, 'பீகார் நிலவரம் கவலைக்கிட மில்லை' என்று தந்தி வந்த பிறகே மகாத்மாவின் கவலை நீங்கிற்று. |
|
|
|
|
|
|
|
செளமுஹானியில் அன்று மாலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முப்பதாயிரம் முஸ்லிம்கள் விஜயம் செய்திருந்தார்கள். மகாத்மாவும் வங்காளத் தொழில் மந்திரி ஜனாப் ஷம்ஷதீனும் செய்த உருக்கமான பிரசங்கத்தைக் கேட்டு முப்பதாயிரம் முஸ்லிம்களும் கண்ணீர் வடித்தார்கள். |
|
|
|
|
|
|
|
இதற்குப் பிறகு காந்திஜி பல ஊர்களுக்கு விஜயம் செய்தார். ஆங்காங்கே பல கோரக் காட்சிகளையும், கொள்ளிக் கட்டைகளையும், மண்டை ஓடுகளையும் நேருக்கு நேர் கண்டார். பல குடும்பங்கள் வீடு வாசல்களை இழந்து திக்கற்ற நிலையில் தவிப்பதையும் பார்த்தார். தம்முடன் வந்தவர்கள் யாவரையும் தனித்தனியாகப் பிரிந்து சென்று ஆங்காங்கே அவதிப்படும் அகதிகளுக்கு விடுதி ஏற்படுத்தி, கஷ்ட நிவாரண வேலைகளில் ஈடுபடும்படி உத்தரவிட்டார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜியின் கட்டளைக்கிணங்கி அவருடைய காரியதரிசி பியாரிலாலும், சுசேதா கிருபளானியும், சுசீலா நாய் யாரும் நவகாளியில் புரிந்த சேவைகள் பொன்னெழுத்தில் பொறித்து வைக்க வேண்டியவையாகும். |
|
|
|
|
|
|
|
நவம்பர் 12-ஆம் தேதி மகாத்மாஜி ராம்கஞ்ச் போலீஸ் ஸ்டேஷன் ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தைப் பார்வை யிட்டார். அப்போது அவர் சௌதுரி என்பவரின் மாபெரும் வீட்டைப் பார்க்க நேர்ந்தது. இந்த வீடு 32 அறைகள் கொண்ட மிகப்பெரிய கட்டிடம். மகாத்மா அந்த வீட்டை முழு ரூபத்தில் பார்க்கவில்லை ; கரியும், சாம் பலும் நிறைந்த பாழான தோற்றத்திலேயே பார்த்தார். |
|
|
|
|
|
|
|
'காலா' என்ற திபேத் நாட்டு ஸ்பானியல் ஜாதி நாய் ஒன்று அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. இந்த நாயைப் பற்றின அபூர்வ சரிதை உள்ளே விவரிக்கப்பட்டிருப்பதை நேயர்கள் கவனித்திருக்கலாம். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
தட்ட பாரா கிராமத்திலிருந்த 'ஸாஹாபாரி என்னும் ஒரு வீட்டை மகாத்மாஜி சில நிமிட நேரம் பார்வை யிட்டார். அப்போது கொளுத்தும் வெயிலைத் தாளாத மகாத்மா ஒரு தென்னந்தோப்புக்குள் நுழைந்தார். நூற்றுக்கணக்கான கிராமத்துப் பெண்கள் அந்த இடத்தில் மகாத்மாவைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டார்கள். கண்ணீரும் கம்பலையுமாகத் தங்கள் சோக சரிதத்தை எடுத்துக் கூறினார்கள். இந்துப் பெண்களின் புனிதமான மாங்கல்யங்களை முரடர்கள் பலாத்காரமாக அபகரித்துக் கொண்ட பயங்கரத்தைப் பற்றிச் சொன்னார்கள். |
|
|
|
|
|
|
|
இதையெல்லாம் கேள்வியுற்ற மகாத்மாஜி மனமுருகி, ''நீங்கள் அனைவரும் ஆபத்தான இந்தச் சமயத்தில் சீதையையும், திரெளபதியையும் போல் தைரியமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்யவே இங்கு வந்துள்ளேன்'' என்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். |
|
|
|
|
|
|
|
நவகாளிக் காட்சிகளைக் கண்டு மனம் வெதும்பிய மகாத்மா, ''சத்தியமும், அஹிம்சையுமே என்னை இந்த அறுபது வருடங்களாகக் காப்பாற்றி வந்தன. இன்றோ அந்த இரு சக்திகளும் என்னைப் பெருஞ் சோதனைக்குள்ளாக்கி இருக்கின்றன. நவகாளியில் நான் எங்கும் இருளையே காண்கின்றேன். வெளிச்சத்தைக் காண்கிலேன். வெளிச்சத்தை நாடிக் கால் நடை யாத்திரையை மேற்கொள்வேன்'' என்று தமது கால்நடை யாத்திரையைத் தொடங்கினார். |
|
|
|
|
|
|
|
வங்காள பாஷை தெரியாத காரணத்தால் மகாத்மாஜி கல்கத்தா யூனிவர்ஸிடி புரொபஸர் நிர்மல் குமார் போஸைத் துணையாக அழைத்துக் கொண்டார். பாபுஜிக்குப் பணிவிடைகள் புரியும் பொருட்டுத் திருமதி மநு காந்தியும், திரு. பரசுராமனும் அவருடன் சென்றார்கள். ஸ்ரீ ராம்பூரில் மகாத்மாஜி ஏறக்குறைய ஒரு மாத காலம் தங்கியிருந்த பிறகு 1947 ஜனவரி 22-ஆம் தேதியன்று 7.30 மணிக்கு அடுத்த ஊருக்குப் பிரயாணமானார். |
|
|
|
|
|
|
|
மகாத்மாஜி கால்நடையாகவே இரண்டு மாத காலம் யாத்திரை செய்தார்; தினசரி காலை 7.30 மணிக்குக் கிளம்பி அடுத்த ஊருக்குப் பிரயாணம். அங்கே 9 மணி முதல் 2 மணி வரை ஸ்நானம், ஆகாரம், ஓய்வு . பிறகு 2 மணி முதல் 4 மணி வரை நூல் நூற்றல். வருகிறவர்களுடன் பேசுதல், படிப்பு - பிறகு 4.45 முதல் 5.15 வரை ஊரைச் சுற்றிப் பார்வையிடுவது - அப்புறம் 5.15 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். |
|
|
|
|
|
|
|
நவகாளியில் மகாத்மாவின் அன்றாட அலுவல்கள் இவ்வளவுதான். முதல் யாத்திரையில் முப்பது கிராமங் களும், இரண்டாவது யாத்திரையில் பதினெட்டுக் கிராமங்களும் ஆக நாற்பத்தெட்டுக் கிராமங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு டாக்டர் சையத் மகம்மது பீகாருக்கு வரும்படி அழைத்ததற்கிணங்க மகாத்மா பாட்னாவுக்குப் பயணமானார். |
|
|
|
|
|
|
|
பீகாருக்கு புறப்பட்ட சமயம் மகாத்மா நவகாளி மக்களிடம், ''நான் சீக்கிரமே நவகாளிக்குத் திரும்பி வந்து விடுவேன்; நான் இங்கே தொடங்கிய காரியம் இன்னும் பூர்த்தியாகவில்லை ” என்று கூறிப் புறப்பட்டார். ஆனால் காந்தி மகாத்மாவின் விருப்பமும், நவகாளி யாத்திரை யும் பூர்த்தி பெறாமலே முடிந்துவிட்டன. |
|
|
|
|
|
|
|
* * * |
|
|
|
|
|
|
|
மகாத்மாவின் நவகாளி யாத்திரையில் கலந்து கொள்ளும் பேறு பெற்ற நான் அவரை முதன் முதலாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்தில் சந்தித்தேன். ஏகாந்தப் பிரயாணம் செய்துகொண்டிருந்த மகாத்மாவுடன் ஒரு சில பத்திரிகை நிருபர்களே அனுமதிக்கப்பட்ட டிருந்தார்கள். எனவே, முன்கூட்டி எவ்வித அனுமதியும் பெறாமலே நவகாளியில் மகாத்மாவுடன் சுற்றுப் பிரயாணம் செய்யச் சென்றிருந்த நான் முதலில் சற்று திக்பிரமை கொண்டேன். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாஜியின் அனுமதியைப் பெறுவது சாத்தியமே இல்லை'' என்று அங்கிருந்த பத்திரிகை நிருபர்களும், வங்காள யூனிவர்ஸிடி புரொபஸர் நிர்மல் குமார் போஸும் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்கள். |
|
|
|
|
|
|
|
மகாத்மாவைக் கண்டு பேசி உத்தரவு பெறலாமென்ற ஆசையுடன் நிர்மல்குமார் போஸை அணுகி மகாத்மாவைக் காண அனுமதி கோரினேன். நிர்மல்குமார் போஸ் மிகவும் கண்டிப்பான பேர்வழியாக இருந்தார். |
|
|
|
|
|
|
|
நான் நயமாகக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அவர் 'பட் பட் ' என்று பதில் கூறினார். ''மதராஸிலிருந்து வருகிறேன். மகாத்மாவைப் பார்க்க வேண்டும்'' என்று நான் கூறியதும், ''மதராஸிலிருந்து உம்மை யார் வரச் சொன்னது?'' என்று பதில் கேள்வி கேட்டு என்னைத் திணற அடித்தார். |
|
|
|
|
|
|
|
''யாருமில்லை ; நானாகவேதான் வந்தேன்'' என்று பதில் சொன்னேன். |
|
|
|
|
|
|
|
''சரி ; நீராகவே திரும்பிப்போம்'' என்றார். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாவை...'' |
|
|
|
|
|
|
|
''அதுதான் முடியாது.'' |
|
|
|
|
|
|
|
என் மனோநிலை அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதை நேயர்களே ஊகித்துக் கொள்ளலாம். |
|
|
|
|
|
|
|
வேறு வழி இல்லாமற் போகவே, திரு. நிர்மல்குமார் போஸ் அப்படி இப்படிப் போகிறாரா என்று சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசாமி அந்த இடத்தைவிட்டு நகருவதாயில்லை. |
|
|
|
|
|
|
|
கடைசியாக நிர்மல்குமார் போஸ் மகாத்மாஜி தங்கியிருந்த வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தார். என்னை ஒரு கணம் புன்முறுவலுடன் ஏற இறங்கப் பார்த்தார். |
|
|
|
|
|
|
|
''மகாத்மாவிடம் தாங்கள் சென்னையிலிருந்து வந்திருப்பதாகக் கூறினேன்...'' என்றார். |
|
|
|
|
|
|
|
''அப்பாடா என்று சிறிது சந்தோஷத்துடன் பெருமூச்சு விட்டேன். |
|
|
|
|
|
|
|
தாங்கள் அவசியம் திரும்பிப் போய் விட வேண்டியதுதான் என்று காந்திஜி சொல்லிவிட்டார் என்று ஒரு பெரிய வெடிகுண்டைத் தூக்கி என் தலையிலே போட்டார். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
"ஐயா, ஒரே ஒரு நிமிடம், ஒரே ஒரு வார்த்தை . மகாத்மாவைப் பார்க்க அனுமதிக்க வேண்டும்'' என்று மிகவும் மன்றாடி வணக்கமாகக் கேட்டுக்கொண்டேன். திரு . நிர்மல்குமார் போஸ் மனமிரங்கினார். ''ஒரே நிமிஷத்தில் திரும்பிவிட வேண்டும்'' என்ற கண்டிப்பான உத்தரவுடன் என்னை உள்ளே செல்ல அனுமதித்தார். |
|
|
|
|
|
|
|
கால்கள் தள்ளாடியவண்ணம் மகாத்மா வீற்றிருந்த கட்டிலுக்கருகில் போய் நின்றேன். நாக்குழறியது. வார்த்தைகள் வெளிவரவில்லை. |
|
|
|
|
|
|
|
''சென்னையிலிருந்து 'கல்கி' பத்திரிகையின் பிரதிநிதியாக வந்திருக்கிறேன். தங்களுடன் சுற்றுப் பிரயாணம் செய்து தென்னிந்தியாவுக்குச் செய்தி அனுப்பப் போகிறேன். தங்கள் உத்தரவு வேண்டும்.'' |
|
|
|
|
|
|
|
''உனக்கு ஹிந்தி தெரியுமா?'' |
|
|
|
|
|
|
|
''தெரியாது.'' |
|
|
|
|
|
|
|
''வங்காளி தெரியுமா?" |
|
|
|
|
|
|
|
''தெரியாது.'' |
|
|
|
|
|
|
|
''சென்னையிலிருந்து வர எவ்வளவு பணம் செலவாயிற்று?'' |
|
|
|
|
|
|
|
''முந்நூறு ரூபாய்.'' |
|
|
|
|
|
|
|
''வீண் தண்டம்; அந்தப் பணத்தை ஹரிஜன நிதிக்குக் கொடுத்திருக்கலாமே. சரி, நாளை மறுதினம் திரும்பிப் போய்விட வேண்டும், என்ன?'' |
|
|
|
|
|
|
|
''அப்படியே!'' |
|
|
|
|
|
|
|
இரண்டே தினங்கள்தான் மகாத்மாவுடன் தங்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இந்த இரண்டு தினங்களுக்குள் நான் அடைந்த அனுபவங்கள் என் வாழ்நாட்களில் வேறு எப்போது கிட்டும்? |
|
|
|
|
|
|
|
Table of Contents |
|
|
|
முன்னுரை |
|
|
|
நவகாளி யாத்திரை |
|
|
|
இந்துஸ்தானி விழா |
|
|
|
மதுரையில் மகாத்மா |
|
|
|
நவகாளி நினைவுகள் |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|