text
stringlengths 0
5.49k
|
---|
“சரி, கண்டனம் கவனிக்கப்பட்டது.” - முகத்தைச் சுளித்துக் கொண்டு முதுகைத் தடவினான் மாணிக்கம். |
முனியாண்டி காபி மங்குகளைக் கொண்டுவந்து வைத்தான். |
காபியைக் குடித்துக்கொண்டே வம்புக் கதைகளைப் பரிமாறலானார்கள். |
ஜித்ரா முகாமிலுள்ள சீக்கிய காப்டன் ஒருவனின் தாடியில் தீப்பிடித்துக்கொண்டது பற்றி சாமி சொன்னான். மற்றவர்கள் வயிறைப் பிடித்துக்கொண்டு சிரித்தார்கள். அவனோ சிரிக்காமல் அந்த அதிகாரி தவித்ததை நடிப்புடன் விவரித்துக் கொண்டிருந்தான். |
கோலாலம்பூர் அம்பாங் தெருவில் சட்டைபோடாமல் தோள் துண்டுடன் உலாவிக்கொண்டிருந்த ஒரு செட்டியாரின் கதையை நெல்சன் ஆங்கிலத்தில் கூறினான். ஜப்பானியக் கடற்படைக் காப்டன் ஒருவன், செட்டியாரைக் கூலியாள் என்று நினைத்து அவர் தலையில் பெட்டியை ஏற்றி ஒரு மணி நேரம் கடைவீதி எங்கும் இழுத்துக் கொண்டு போனான். நல்ல வேளையாக ஜப்பான் மொழி தெரிந்த ஐ.என்.ஏ. அதிகாரி ஒருவர் காப்டனிடம் விஷயத்தை விளக்கி, செட்டியாரை மீட்டு வந்தார். செட்டியார் அந்த ஊரிலுள்ள அரை டஜன் பணக்காரர்களில் ஒருவர். இந்தக் கதை முந்தையதைவிடக் கூடுதல் சிரிப்பைக் கிளப்பியது. |
“செல்லையா, இன்றைய சிறப்புச் செய்தி தெரியுமா?” மாணிக்கம் சராய் பையிலிருந்து சிகரெட் பெட்டியை வெளியேற்றி, மேசைமீது போட்டான். ஆளுக்கொன்றை உருவி எடுத்துப் பற்ற வைத்தார்கள். |
“ம்? தெரியாது.” |
“பிலிப்பைனில் மெக்கார்தர் கரையிறங்கிவிட்டான்.” |
“என்ன, பிலிப்பைனிலா! ஏன் தடுக்கவில்லை?... ஜப்பானிய விமானங்கள் குஞ்சு பொரிக்கின்றனவா?” |
“குஞ்சு பொரித்துக் கொண்டிருக்கும் பறவைகளும் மிகமிகக் குறைவு. அவை பறப்பதற்கும் எண்ணெய்ச் சனியன் வேண்டுமே!” |
“முடிவு காலமோ?” |
“முடிவின் தொடக்கம். தெராவுச்சி சிங்கப்பூருக்கு வந்து. ஆலாய்ப் பறக்கிறானாம். இங்கே திரிகிற ஆட்களை அங்கே கொண்டுபோகக் கப்பல் கிடைக்கவில்லை.” |
“கடலுக்கு அடியில் தேடினால் நிறையக் கப்பல்கள் அகப்படும் அஅஆ... அஆ...” சாமி மேசையைப் பார்த்தபடி சிரித்தான் |
“டேய் செல்லையா, என்ன, முகத்தைத் தொங்கப் போட்டு விட்டாய்?” மாணிக்கம் மேசையைத் தட்டினான். |
“கரிமுடீனிடம் ஒரு மாதம் மல்லுக்கட்டி ஒரு நாள் லீவ் கிடைத்தது. இங்கு வந்தால், நீ இழவோலையை நீட்டுகிறாய்.” |
“பிலிப்பைன் எப்படித் தொலைந்தால் என்ன? பர்மாதான் நமக்கு உயிர்” |
பழனியப்பன் குறுக்கிட்டான். |
“அங்கும் இழவுதான். நம் ஆட்கள் அநியாயமாய் - பயனில்லாமல் சாகிறார்கள்.” |
“அதனால்தான் எங்கள் ரெஜிமென்ட் புறப்படவில்லை என்று நினைக்கிறேன்” |
நெல்சன் குறிப்பிட்டான். |
“எங்கள் ரெஜிமென்டும்தான்” செல்லையா சொன்னான். |
“போவதற்குக் கப்பலும் இல்லை” -மாணிக்கம் கைகளை விரித்தான். |
“சரி வேறு எதையாவது பற்றிப் பேசுங்கள்” செல்லையா சலிப்புடன் கூறினான். |
“போன வாரம் இந்தியா-ஜப்பான் உறவு மிகமிக ஆபத்தான கட்டத்துக்குப் போய்விட்டது. இம்மி தப்பியிருந்தாலும் யுத்தம்தான். முழு விவரம் வேண்டுமென்றால் மாணிக்கத்தைக் கேள்” -பழனியப்பன் முகம் முறுவலித்தது. |
“சொல்லவா?”மாணிக்கம் நிமிர்ந்து உட்கார்ந்தான். |
“சொல்லித் தொலை” செல்லையாவின் முகத்தில் புன்னகை தோன்றி மறைந்தது. |
“சரி, வயிற்று மணி அடிக்கப் போகிறது. சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன். போனவாரம் வெள்ளிக்கிழமை நண்பகலில். சையாம் சாலைக் கனகவல்லியைக் கெம்பித்தாய் மேஜர் கெனியோச்சி இச்சியாமா தூக்கிச் சென்றுவிட்டான்.” |
“தொலையட்டும், மூதேவி, நீதான் ராமன் இருக்கிறாயே, கொரில்லாப் படையுடன் போய் மீட்பதுதானே?” |
“இது மலேயா ராமாயணம்; நினைவிருக்கட்டும். ராவணன் வாரித் தூக்க வந்தான். சீதை என்ன செய்தாள்? ‘இதோ வருகிறேன், காதலரே! என்னைக் கட்டி அணைத்துத் தூக்கிக்கொண்டு போங்கள்’ என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். அவளை நியூபீச் அசோகவனத்தில் கொண்டுபோய்ச் சிறை வைத்துவிட்டான். லங்கேசுவரன்...” |
“சையாம் ரோடு சீதை போனால், பட்டாணி ரோடு கோதை என்று ராமர் பேசாமல் இருந்துவிட்டாரோ?” |
“இருக்க முடியுமா! அயோத்தி நாட்டின் பெயர் என்ன ஆவது? தோளில் கோதண்டத்தை மாட்டிக்கொண்டு ராவணனிடம் போனார் தசரத குமாரர். லங்கேஸ்வரன் அப்போது சாய்மான நாற்காலியில் அமர்ந்து, சாக்கே என்ற சோமபானம் பருகிக்கொண்டிருந்தான். ‘ராமா, நமக்குள் சண்டை வேண்டாம். சீனக் குரங்குகள் எள்ளி நகைக்க இடம் தரலாகாது. அசோகவனத்துக்குப் போய் சீதையைக் கூப்பிட்டுப் பார். வந்தால் அழைத்துக்கொண்டு போ. நான் தலையிடவில்லை’ என்று சொல்லிவிட்டான். ராமச்சந்திரபூபதி அசோகவனத்துக்கு விரைந்தார். சீதை வரவேற்று உபசரித்துவிட்டு, ‘இது வெறும் பொருளாதார ஏற்பாடு; அரசியலைப் போட்டுக் குழப்ப வேண்டாம். ராவணன் மண்டையைப் போட்டதும் தாயகம் திரும்பிவிடுவேன்’ என்று தன் கட்சியை விளக்கினாள். அப்புறம் என்னசெய்வது, நீயே சொல். ராமர் வாய் திறக்காமல், ஜெலுத்தொங் சாலையில் உள்ள தனது பாசறைக்குத் திரும்பி விட்டார்.” மற்றவர்கள் கெக்கலித்தார்கள் சிரிப்பொலியில் வீடே அதிர்ந்தது. |
“சிங்கப்பூர் ஆபிசர்ஸ் ட்ரெய்னிங் ஸ்கூலில் காப்டன் ரத்தன் லால் என்று ஒரு ஆள் இருந்தானே. நினைவிருக்கிறதா? அவன் ஒரு நாள், தென்னை மரத்தில்...” சாமி தொடங்கினான். |
“போதும் போதும். சந்திக்கும்போதெல்லாம் உனக்குத் தென்னைமரக் கதைதான்” பழனியப்பன் எழுந்தான். “வயிறு கிள்ளுகிறது. அதைக் கவனித்தபின் கதை பேசலாம்.” |
“இது முற்றிலும் வேறு நிகழ்ச்சி... சரி, இப்பொழுது நேரமாகிவிட்டது. இன்னொரு முறை சொல்கிறேன்.” |
உள்ளூர்க்காரர்கள் நெல்சனும் சாமியும் விடைபெற்றுக் கொண்டு அவரவர் வீட்டுக்குக் கிளம்பினார்கள். |
மேசையைத் துப்புரவு செய்துவிட்டு, சோற்றுத் தட்டுகளைக் கொண்டுவந்து வைத்தான் முனியாண்டி. |
“இலை கிடையாதா? கோலா மூடாவில்தான் தகரத் தட்டு என்றால், இங்குமா?” செல்லையா முனங்கினான். |
“டேய், நீ அசல் பூர்ஷ்வாப்பயல். இன்னும் செட்டித்தெருப் புத்தி போகவில்லையே. தலை வாழையிலை, ஊர் அரிசி, காசி அவரை வற்றல்.” மாணிக்கத்தின் முகம் சுளிந்தது. |
“பாலசுப்பிரமணியர் குண்டஞ்சு வேட்டி, டைமன் துண்டு, முட்டை மார்க் பனியன்...” பழனியப்பன் தொடர்ந்தான். |
“இலை வேண்டுமென்றால், இந்தப் பக்கம் வானாயீனா வீட்டில்தான் கிடைக்கும். முனியாண்டியை அனுப்பலாமா? உனக்கென்று கேட்டால், தங்கச்சி ஒன்றுக்குப் பத்தாகக் கொடுக்கும்” மாணிக்கம் சிரித்தான். |
“நிறுத்துங்காணும், தெரியுது” செல்லையா சோற்றுத் தட்டில் கை வைத்தான். |
பழனியப்பனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிவிட்டு மாணிக்கம் உண்ணலானான். பழனியப்பன் ஏற்கனவே வேலையைத் தொடங்கிவிட்டான். |
உண்டு முடிந்ததும் உலாவக் கிளம்பிய நண்பர்கள் நள்ளிரவுக்குமேல் வந்து படுத்தார்கள். |
செல்லையா மறுநாள் வெகுகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோலாமூடா முகாமுக்குப் புறப்பட்டான். |
4. வானாயீனா |
ஆ.சி.வயி.மார்க்கா லேவாதேவிக் கடை முதலாளியான வானாயீனா என்ற வயிரமுத்துப் பிள்ளை 1தண்ணீர்மலையான் கோயிலிலிருந்து ரிக்ஷாவில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.பிள்ளையவர்களுக்கு ஏறத்தாழ 55 வயதிருக்கும். தார்மடி வைத்துக் கட்டிய குண்டஞ்சு வேட்டியின் தூய வெள்ளை, காலை வெயிலில் மின்னியது. மேலே முட்டை மார்க் பனியனும் டைமன் துண்டும்.பரக்கப் பூசிய திருநீறும் சந்தனப் பொட்டும் நெற்றியை அழகு செய்தன. வழுக்கை படையெடுத்திருந்த தலையில் கறுப்புக் கலந்த தலைமுடி ஒட்ட வெட்டப்பட்டிருந்தது. |
டில்லி மட்டக் குதிரைபோல் ஒரே சீராய் ஓடிக்கொண்டிருந்த வண்டி, பிள்ளையவர்களின் வீட்டுமுன்னே போய் நின்றது. “வேல்மயிலம்! முருகா!” வண்டிச் சட்டத்தை இறுகப் பிடித்தபடி இறங்கி, ரிக்ஷாக்காரன் பக்கமாய்த் திரும்பிப் பார்த்தார். பிறகு, இடுப்பில் செருகியிருந்த தோல் பணப்பையை வெளியேற்றித் திறந்து, கசங்கி நசுங்கியிருந்த டாலர் நோட்டுகள் இரண்டை எடுத்து நீட்டினார். |