text
stringlengths
0
25.6k
தோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி அக்கறையேற்படும் . அந்நிலைகளில், மாணவர்களுக்குப் பல்வேறு வேலைகளைக் கற்க வாய்ப்பளிக்கலாம். எல்லா நிலைகளிலும் முதல் செயல் திட்டமாக, கட்டாயமாகத் தோட்டப் பயிர் இருப்பது ஏற்றது.
காய்கறித் தோட்டம் போடுவதில் வகுப்புக்கு வகுப்பு போட்டியும், சில இடங்களில் பிரிவிற்குப் பிரிவு போட்டியும் வைத்து, கண்டுமுதலை அதிகப்படுத்த ஊக்குவிக்கின்றன. சோவியத் நாட்டுப் பள்ளிகள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெருங்கூட்டுப் பண்னைகளில் உணவுப் பொருள்களைப் பயிரிடுவே காடு நின்று விடாமல், பள்ளிக்கூடத் தோட்டங்களிலும் காய்கறிகளைப் பயிரிடும் சோவியத்மக்களின் தொலை நோக்கைப் பாராட்டாமலிருக்க முடியுமா ? இம்முறையால் உழைப்பின் உயர்வை எல்லோரும் உணர்வதோடு, செயலின் பயனைக் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்வதோடு. இலட்சாதி இலட்சம் கல்விக்கூடங்களில் கல்வியோடுகூட, கோடிகோடி கூடை காய்கறிகனைப் பெற்று மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது.
சில நாள்கள் சென்றன. தாங்கள் கீவ் என்னும் நகரைச் சேர்ந்தோம். அது உக்ரைன் குடியரசின் தலைநகரம். இயந்திரத் தொழிற் கூடங்களுக்குப் பெயர் போனது கீவ். அந்நகரிலும், இடம் பொன்னினும் மணியினும் விலை யுயர்ந்தது. அத்தகைய நகரின் நகரின் நடுவில் - ஒரத்தில் அல்ல-ஐம்பது ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.
அங்கு ஆராய்ச்சி செய்பவர்கள் யார்? விஞ்ஞான விற்பன்னர்களா? அல்லர். உழவுத்துறை மேதைகளா ? அல்லர். பின் யார், அந்த ஆராய்ச்சியாளர்கள் ?
உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்கு ஆராய்ச்சி நடத்தினர். இன்றும் நடத்துவர். அந்த 'இரண்டுங்கெட் டான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா?
தொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒதுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.
ஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.
ஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கண்டது என்ன ?
இரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.
"நாங்கள், எங்கள் இடைவிடாத ஆராய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள். பத்திலே சிறந்த இரண்டொரு வகை ஆப்பிள்களை மட்டும் நறுக்கிப் பரிமாறும்படி வேண்டினோம். அவர்கள் ஒப்பவில்லை. பத்தும் புதுவகை மட்டுமல்ல, சிறந்த வகையுமாகும் என்று அழுத்திக் கூறினார்கள். பத்துவகையிலும் ஒவ்வொன்று எடுத்து, துண்டு போட்டு, நால்வர்க்கும் மிகுந்த உற்சாகத்துடன் பரிமாறினார்கள்.
அத்தனையையும் உண்டோம். அத்தனையும் இனிப்பாக இருந்தன, மெதுவாக இருந்தன. அது வரையில் உணராத சுவையோடு இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் கூற்று முற்றிலும் உண்மை.
2. சமுதாய ஒருமைப்பாடு
கீவ் நகரத்து ஆராய்ச்சிப் பண்ணையில் எங்களுக்குப் பத்துப் புதுவகை ஆப்பிள்களைக் கொடுத்த அம்மாணவிகள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? அம்மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள், கட்டாயத்தால் ஆராய்ச்சியில் ஆழ்ந்தவர்கள் அல்லர் அவர்கள். கசப்போடு ஆராய்ச்சி செய்பவர்களும் அல்லர். பணத்திற்காகப் பண்ணைக்கு வந்தவர்களும் அல்லர். விருப்போடு புதுப் பயிர் இடுபவர்கள்.
அந்நகரத்திலுள்ள பல உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் அங்கு வருவார்கள். ஒவ்வொரு பள்ளியும், பயிர்த்தொழிலில் தனி அக்கறை உடையவர்களை மட்டும் பொறுக்கி, அங்கு அனுப்பி வைக்கும். அவர்கள் தனித்தனியாகவும், குழுக்களாகவும் இருந்து, பயிர்த்தொழில், தோட்டத் தொழில் ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறார்கள். அவற்றிகான வசதிகளெல்லாம் அப்பண்னையில் உள்ளன செலவு முழுவதும் அரசினருடையது. ஆர்வமுடையவர்கள் மட்டும், சாதனமுடையில்லாமல், துணிந்து ஆராய்வதால் புதுப் புதுச் சாதனைகளை எட்டிப் பிடிக்கிறார்கள்.
எங்களுக்குக் கொடுத்தது போன்ற, புதுப் பழவகைகளைப் பயிராக்கிக் காட்டுகிறார்கள், இத்தகைய சாதனைகளைக் காட்டி, வேளாண்மைக் கல்லூரிகளில் சேர்கிறார்கள் நம்மைப்போல, எதிலோ பெற்ற மார்க்குகளைக் காட்டியல்ல. 'வாய்ச்சாங் கொள்ளிதனத்திற்காக'வுமல்ல. ஆகவே, சோவியத் நாட்டில் சாதித்துக் காட்டும் செயல் விஞ்ஞானிகளைக் காண்கிறோம். மதிப்பெண்களையே கடவுளாக்கி விட்ட நாமோ, பட்டத்தின் மேல். பட்டத்தை அடுக்கிக் காட்டும் சொல் - விஞ்ஞானிகளையே பெறுகிறோம்.
சமதர்மத்தில் மேதைகளை வளர்ப்பதற்கு வழியேது என்ற ஐயம், 'மேதைகள்’ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள பலருக்கும் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததுண்டு. எல்லாரும்-எல்லாருமென்றால் எல்லாருமே, சமாளிக்கும் நிலைக்கும் இறங்கி வந்து கல்வித் திட்டம் அமைத்து, பொதுக்கல்வியை எல்லாருக்கும் அளித்துவிட்டு தனித்திறமை உடையவர்களை அந்தந்தத் துறையில், அதிகம் கற்க. மேலும் மேலும் கற்க அவரவர் வேகத்திற்கு ஊக்குவதும், அதற்கான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் தாராளமாகச் செய்து தருவதுமே, மேதைகளையும் அறிவு மலைகளையும் சாதனைப் பெரியவர்களையும் பெருக்குவதற்கு வழி என்பதை உணர்ந்தோம்; எங்கள் ஐயம் அகன்றது.
வாய்ப்புகள் என்றதும் அமெரிக்கக் கல்வி முறையில் கண்டது நினைவிற்கு வருகிறது. அந்நாட்டில், ஆதியில் அரசினால், உள்ளாட்சி மன்றங்களால். ஊராட்சிகளால் கல்விக்கூடங்கள் தொடங்கப்படவில்லை. இங்கும் அங்கும் தொடங்கப்பட்ட கல்விக்கூடங்கள்-லெளகீகக் கல்விக் கூடங்கள்-மதச்சபைகளின் சார்பில் தொடங்கப்பட்டன. பின்னர் தனியார் பலர், முடிந்தால் தனித்தனியாகவும், முடியாத போது பலர் சேர்ந்தும், கல்விக்கூடங்களை அமைத்தனர் : நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். நாளையும் நடத்துவர். தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசினரின் உதவி கிடையாது. அரசின் கல்வி உதவி, அரசினர் கல்விக்கூடங்களுக்கே விஞ்ஞான வளர்ச்சிக்கென்று மட்டும் சில ஆண்டு களாக, ஏதோ ஒரளவு தனியார் பள்ளிகளுக்கு உதவுகிறார்கள்.
தனியார் கல்விக்கூடங்களையே நம்பியிருப்பது, எதிர் வீட்டுக் கதவை, நம் வீட்டுக் காவலுக்கு நம்பியிருப்பது போன்றது. இந்நிலையும் உணர்ச்சியும் அந்நாட்டில் உருவாயின. எனவே பொதுத் துறையில் (உள்ளாட்சிக் கழகங்களின் சார்பில்) கல்விக்கூடங்கள் எழுந்தன. தொடக்க நிலை கல்விக்கூடங்களோடு நிற்கவில்லை. அவர்களது அந்தக்கால நினைப்புகூட தொடக்கப்பள்ளி நிலையில் நின்று விடவில்லை. ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளையும் நிறுவினர். தோன்றிய கல்விக்கூடங்கள் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்துவிடவில்லை, எண்ணிக்கையற்ற கல்விக் கூடங்கள் எழுந்தன. உள்ளாட்சி மன்றங்கள் பள்ளிக்கூடம் நடத்தினால், இராச்சிய அரசுகள் கல்லூரிகளையும் பல்கலைக் கழகங்களையும்-பெரிய பெரிய பல்கலைக் கழகங்களையும் - நடத்துகின்றன.
இன்று வளமிக்க அமெரிக்க நாட்டில் மொத்தத்தில், கல்வித் துறையில்-எல்லா நிலைக் கல்வியிலும் - தனியார் துறையைவிடப் பொதுத் துறையில்தான் அதிக இடம் உண்டு; அதிக வசதிகள் உண்டு ; அதிக வாய்ப்புகளும் உண்டு. எனவே, கல்வி ஒடையில் உயர்கல்வி ஒடையில்கூட ஏழை எளியவர்கள், பொதுமக்கள் (பெருமக்கள் மட்டுமல்ல) நேராகப் பருக முடிகிறது. பொதுத்துறைக் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் அவற்றின் முதல்வர்கள், வேண்டுமென்றே, தெரிந்தே, மார்க்குக் குறைந்த பலரை, வாட்டி வதைக்கும் வறுமைச் சூழ்நிலையிலிருந்து வரும் பலரை, எழுத்தறியாக் குடும்பங்களிலிருந்து கல்லூரியை எட்டிப் பார்க்கும் பலரைச் சேர்த்துக் கொள்வதாக அமெரிக்காவில் கேள்விப்பட்டபோது திடுக்கிட்டேன்.
தேவைக்கு மேல் இடம் இருப்பதால் காலியாக விடுவதற்குப் பதில், கண்டவர்களைச் சேர்த்துக் கொள்கிறார்களோ என்ற ஐயம் எழுந்தது. அங்கும் கல்விக்கூட இட நெருக்கடி இருப்பதைப் புள்ளி விவரங்களோடு விளக்கினார்கள். இட நெருக்கடியிலும் மார்க்கில் உயர்ந்தவர்களோடு நிற்காமல, மார்க்கில் குறைந்தவர்களையும் தேடிப் பிடித்துச் சேர்த்துக் கொண்டால், பிந்தியவர்களுக்குப் பலன் உண்டா ? அவர்கள் பாஸ் ஆவார்களா ? அவர்களாலே கல்லூரிக்குக் கெட்ட பெயர் வராதா ? நல்ல மணிகளாகச் சேர்த்தால் அத்தனையும் தேறின என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ! இப்படியெல்லாம் என் அறிவைக் கலக்கிக் கொண்டேன். அக்கலக்கத்தை அறிவித்தும் விட்டேன். விளக்கம் தந்தனர். விளகக்கத்தின் சுருக்கம் இதோ:
மனிதன் மாறும் இயல்பினன். அவன் வளர்வதும் உண்டு; தேய்வதும் உண்டு. வளர்வானோ தேய்வானோ என்பது அவன் அவன், முன்பின் சூழ்நிலையையும் அவன் அவன் பெறும் வசதிகளையும் ஊக்கத்தையும் பொறுத்தது. சமுதாயத்தின் கீழ்மட்டத்திலிருந்து, வேண்டுமென்றே மார்க்குக் குறைந்தவர்களைச் சேர்த்ததால், நல்ல பலனே விளைகிறது. அவர்கள் மார்க்குக் குறைந்தவர்கள் என்பது சேர்க்கிறபோதே தெரிகிறது. ஆபத்தான நிலையிலுள்ள நோயாளியை அடிக்கடி கவனிக்கும் மருத்துவர்போல், மார்க்குக் குறைந்தவர்களை அடிக்கடி கவனிக்கிறோம். அப்போதைக்கப்போது ஆலோசனை கூறி வழிக் காட்டுகிறோம். நம்பிக்கை ஊட்டுகிறோம். ஊக்குவிக்கிறோம். மற்றவர்களை விட அதிகம் படிக்க வைக்கிறோம். அறிவு வளர்ச்சி என்பது பெருமளவு முயற்சியின் விளைவே. எனவே, மார்க்குக் குறைந்தவர்களும் கல்லூரிகளில் கொடுக்கும் தனிக் கவனத்தால், வசதிகளால், தூண்டுதல்களால், தோழமையால் மற்றவர்களைப்போல் தேறிவிடுகிறார்கள்.
அவர்களில் தோற்பவர்களே இல்லையா ? கல்விக்கு முழுக்குப் போட்டுவிட்டுப் போய் விடுவோர் இல்லையா ? உண்டு. ஒரு சிலர் உண்டு. பள்ளிப் படிப்பின் இறுதியில் இலாயக்கற்றவர்களாக இருந்தவர்களின் எண்ணிக்கையில் சிறு விழுக்காடே கல்லூரியை விட்டுவிடுவோர் எண்ணிக்கை. அப்படி விலகுவோர், மனக்குறையோடு, கசப்போடு வெறுப்போடு. வஞ்சம் தீர்க்கும் போக்கோடு வெளியேறுகிறார்களா ? இல்லை. நம் சமுதாயத்திடம் வஞ்சம் இல்லை. எவ்வளவு வாய்ப்புகள் கொடுக்க முடியுமோ அவ்வளவும் கொடுத்தார்கள். வசதிகளையும் வழங்கினார்கள். கொடுத்த ஊக்கமும் கொஞ்ச நஞ்சமல்ல. மட்டந்தட்ட முயலவில்லை. மீண்டும் மீண்டும் தட்டிக் கொடுத்தும், நாமே தவறி விட்டோம். அவர்களைக் குறைசொல்ல என்ன இருக்கிறது ? சமுதாயத்தை வெறுப்பதற்கும் என்ன இருக்கிறது ? நம்மை நாமே நொந்து கொள்வானேன் ? முதல் முயற்சி முன்பின் தான் இருக்கும். மூன்று தலைமுறை கல்லூரிக்குச் சென்று வந்தபின், நாங்களும் நன்னிலைக்கு உயர்ந்துவிடுவோம். இப்படி எண்ணுகிறார்கள் பாதியிலே வெளியேறியவர்களும்.
சமுதாய ஒருமைப்பாட்டிற்குக் கொடுக்க வேண்டிய விலை, பின்னணியில் தயங்குகிறவர்களையும் தேடிப்பிடித்து, வாய்ப்பைக் கொடுத்து, வசதியைப் பெருக்கி, தட்டிக்கொடுத்து வளரவிடுவதே. அதற்காகும் செலவைக், கவனத்தை, உழைப்பைத் தாராளமாகக் கொடுப்பதால், ’பல நாட்டு நாடோடிகளின் சமுதாயமாக இருந்தும், அமெரிக்க சமுதாயத்தில் துரோகிகள் குறைவாக உள்ளனர். ’அமெரிக்கர்’ மிகமிக அதிகமாக உள்ளனர். நிறைய "மார்க்கு’ வாங்கியவர்கள் இடத்தை மற்றவர்கள் பறித்துக் கொள்ளலாமா ? இதையும் கேட்கத் தவறவில்லை நான். நோய் இல்லாத ஒருவருக்கு, உடம்பு நன்றாக இருக்கிறதா என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒருவருக்கு, எதற்கு ஆஸ்பத்திரி படுக்கை ? அவர் அப்போதைக்கப்போது வந்து போனாலே போதுமே. நோய்வாய்ப்பட்டிருப்பவரையல்லவா ஆஸ்பத்திரியிலே வைத்திருந்து வேளைக்கு வேளை பார்த்துக் குணப்படுத்த வேண்டும். 'மார்க்குப் பெரியவர்கள், எங்கிருந்தும் படித்துக் கொள்ளலாம் என்ற பதில், கிண்டலான அல்லது புரட்சிகரமானதொரு எதிர்காலக் கல்வித் திட்டத்தின் முளையா ? எதிர்காலமே காட்டட்டும்.
நம் கல்வி வாய்ப்பினையும் வசதிகளையும் மேலும் பெருக்க விரும்புகிறீர்களா ? பொதுத் துறைக் கல்விக் கூடங்களை ஏராளமாக்க ஆசையா? பரிந்துரை கூற ஆள் இல்லாத அவைகளிலும் முதல் தரமான வசதிகளைக் கொடுக்க வேண்டுமென்று விரும்புகிறிர்களா ?
கங்கை, யமுனை. கோதாவரி, கிருஷ்ணா ஆகிய ஆறுகளில் நீர்ப்பெருக்கை முழுக்க முழுக்கப் பாசனத்திற்கும் மின்சார உற்பத்திக்கும் பயன்படுத்தும் பெரும் பணியில் பெரும் கவனத்தைத் திருப்ப வேண்டுமென்று விரும்புகிறீர்களா ? நல்லது. பெரியவர்களிடம் சொல்லத் தவறாதீர்கள். ஆளை மாற்றுவதைப் பற்றிப் பரிந்துரை கூறுவதோடு, ஆற்று நீரை மாற்றுவதைப் பற்றியும் கூறுங்கள்.
கல்விக்கூடம்தோறும் பயிர்த்தொழிலுக்கு ஏற்பாடு செய்யக்கூடாதா ? இப்படி கேட்கிறதா உங்கள் அறிவு ? செய்யக்கூடும். செய்ய வேண்டும். மனம் உண்டானால் இடம் உண்டு.
பஞ்சாயத்து ஆட்சி வந்த பிறகு, ஊர்தோறும் உள்ள புறம்போக்கு ஊருக்குச் சொந்தம். அதிலே ஒரு பங்கை பள்ளிக்கூடத் தோட்டத்திற்கு ஒதுக்கி வைத்துப் பயன்படுத்தச் செய்தால் எவ்வளவு விளையும் ? உழைப்பிற்கு உயர்வளிக்கும் மனப்போக்கு மட்டுமல்ல விளையப் போவது; மலைமலையாக நெல்லும் கோதுமையும், வண்டி வண்டியாக வாழையும் கிழங்கும், காய்களும், கனிகளும் பயிரிட்டுக் குவிக்கலாம். ஆமாம், மலைக்காதீர்கள் !
இன்று கல்விக்கூடங்களின் எண்ணிக்கை சிலவல்ல, சில நூறுகள் மட்டுமல்ல, இலட்சோப இலட்சம். தமிழ்நாட்டில் மட்டும் முப்பத்து மூவாயிரம்-இவற்றில் உள்ளவர்களோ கோடான கோடி, கோடி கோடி கைகள் கூடிக்கூடி உழைத் தால், கோடி கோடி பொருள்கள், நாடி நாடி வருமே.
3. யார் காக்கிறார்கள்?
நாடு வளர, மக்கள் முன்னேற, உழைப்பு, பெரும் உழைப்புத் தேவை. பாரதப் பெரு நாடு வளர, கோடி கோடி கைளின் உழைப்புத் தேவை. கோடி கோடி கைகள், கூடிக் கூடி உழைத்தால் கோடி, கோடி நன்மை, தேடித்தேடி வரும் ; உண்மை.
ஆளை ஆள் தள்ளும் பணியிலும், கோடி, கோடி கைகள் ஈடுபடலாம். ஆளுக்கு ஆள் கைக்கொடுக்கும் தொண்டிலும் ஈடுபடலாம். இந்தியாவிற்கு எது தேவை ? தள்ளல் தொழில் புரியும் கைகளல்ல; தாங்கல் தொழில் புரியும் கைகள். கூடித் தொழில் புரியும் கைகள். அத்தகைய கைகளும் சிலபல போதா. கோடி, கோடி, கைகள் தேவை.
கோடி கோடி கைகளை உழைக்க வைப்பதெப்படி ? ஒன்றுபட்டு உழைக்க வைப்பதெப்படி ? ஒரு கையாயின் ஒருவர் உணர்ச்சி போதும். சில கைகளாயினும் வல்லான் ஒருவன் இயக்கிவிட முடியும். பல கைகளுக்கோ, வல்லார் சிலராவது வேண்டும். கோடி, கோடி கைகளை-இயந்திரக் கைகளையல்ல - மனிதக் கைகளை - இயக்க, ஒரு சேர இயக்கச் சிலரும் போதா : பலரும் போதா ; கோடி கோடி. மக்கள் விழிப்புப் பெற வேண்டும் ; எழுச்சியுற வேண்டும். ஆக்க உணர்ச்சி பெற வேண்டும் வளரத் துடிக்க வேண்டும். முன்னேற உழைக்க வேண்டும். அறிவிலும் வளரத் துடிக்க வேண்டும் ; உழைக்க வேண்டும்.
விழிப்பும் எழுச்சியும் தாமே விளைபவையல்ல. பயிரிடப்படுபவை. அவை சில நாள் பயிரல்ல ; பல நாள் பயிர்; அடுத்தடுத்துப் பயிரிடப்படுபவை ; பல நூறாயிரவரால் பயிரிடப்படுபவை.
நாட்டுப் பற்றும் உரிமை உணர்வும், காந்தியடிகளார் தலைமையில் பல்லாயிரவர் பாடுபட்டுப் பயிரிட்டவை , பல்லாண்டு பயிரிட்டவை அப்பயிரைத் தலைமுறைக்குத் தலைமுறை பயிரிட வேண்டும்.
காந்தியடிகளார் தீட்டிய திட்டங்களில் ஒன்று முதியோர் கல்வி. அதை மறக்கலாமா நாம் ? முதியோர் கல்வி, தானே வளருமா ? தலைமுறை தலைமுறையாக அறியாமை. நோயிலே உழலும் நம் மக்களிடையே, (அது நோயென்று உணராத நம் மக்களிடையே) முதியோர் கல்வி, தானே வளராது. அது வளர்க்கப்பட வேண்டும். இரண்டொருவரால் அல்ல, பல்லாயிரவரால்.
பன்னிர் தெளித்துச் சேடை கூட்ட முடியாது வெந்நீர் பெய்து காடு எரியாது. முதியோர் கல்விப் பயிருக்கும் சிறு சிறு தெளிப்புப் போதாது. பல்லாயிரவர் தொண்டு தேவை. அறியாமையைச் சுட்டெரிக்கவும் பல்லாயிரவர் பாடும், ஆதரவும், ஊக்கமும் தேவை.
பல்லாயிரவர்-நாட்டுப் பற்றுடைய பல்லாயிரவர் - தொண்டர் பல்லாயிரவர்-தொண்டை. பெரியவர்களிடம் ஒட்டிக் கொள்வதற்கு வழியாக அல்லாமல், தொண்டிற்காகவே மேற்கொள்ளும் பல்லாயிரவர்-கல்லாத முதியோரிடம் விழிப்பையும் எழுச்சியையும். 'கற்றுக் கொள்ளாமல் ஓய்வதில்லை, தலை சாய்வதில்லை', என்ற பேருணர்ச்சியையும் தூண்டவல்ல, பல்லாயிரவர் பாடுபட்டால், நம் நாட்டிலும், அறிவு, வெள்ளம்போல் பெருகும். அறிவு வெள்ளமே பள்ளத்தில் கிடக்கும் பலரையும் தூக்கிவிடும் : உயர்த்தி விடும். முதியோர் கல்வித் தொண்டருக்கு ஏனோ பஞ்சம் ? இவ்வளவு விரைவிலா காந்தியத் திட்டத்தை மறந்து விட்டோம் ; இவ்வெண்ணங்களை எழுப்பிய காட்சிக்கு வாருங்கள்.
தாஷ்கண்ட் நகரம். முன் இரவு நேரம். ஒன்பது மணி. இலையுதிர் காலத்தின் தொடக்கம் பூங்காக்களில், பசும் புல் தரை மாறவில்லை. இங்கும் அங்கும் போடப்பட்டிருந்த இருக்கைகள் சில்லிட்டு விடவில்லை. காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது, அதிலே குளுமையும் இனிமையும் இருந்தன. அஞ்சுமளவு கடுங்குளிரும் சீறலும் இல்லை. வானத்திலே விண்மீன்கள் மின்னின. திங்களும் தவழ்ந்தது. இவ்வினிய சூழ்நிலையில் அந்நகரப் பூங்காக்கள் திறந்து கிடந்தன. அவை எங்களை வா, வா’ என்று அழைத்தன. எங்களை மட்டுமா, யாரையுமே, வெளியே வந்து, இருந்து, மகிழ அழைக்கும் காலமும் சூழலும் அப்போது. பல்லைக் கடித்துக்கொண்டு அவற்றை விட்டு விலகிப்போனோம். நெடுஞ்சாலையொன்றில், வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தோம். கண்ட காட்சியும், கேட்டு அறிந்த தகவலும், எழுந்த எண்ணங்களும் இதோ உங்கள் முன்னே.
ஒரு மாடிக் கட்டிடத்தின் தெருவோர அறையொன்றில், முப்பது நாற்பது பேர் அமர்ந்திருந்தனர். அத்தனை பேரும் பெண்கள். இளங்கன்னியரல்லர். தள்ளாதவர்களா ? அல்லர். நாற்பது, ஐம்பது வயது மதிக்கத்தக்க மாதர்கள். அம்மாதர்களுக்கு எதிரே ஒரு மாது வீற்றிருந்தார். அவர் பக்கத்திலே கரும்பலகை ஒன்றிருத்தது. அது மெய்யாகவே பெயருக்கேற்ப கருப்பாயிருந்தது. அதிலே ஏதோ எழுதிப் போடப்பட்டிருந்தது. மாதர்களெல்லாரும் எதையோ பார்த்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். இக்காட்சியைக் கண்டோம். இக்கூட்டத்தைப் பற்றிக் கேட்டறிந்தோம். அப்போதே கேட்டறிந்தோம். இக்கூட்டம் அரசியல் கூட்டமல்ல கருத்தரங்கல்ல. இலக்கியச் சொற்பொழிவுமல்ல. இலக்கிய நோட்டம் என்ற திரை மறைவு அரசியல் ஊடுருவலுமல்ல. சமயச் சொற்பொழிவின் பேரால் நடக்கும் ஆட்சி எதிர்ப்பு முயற்சியும் அல்ல. பின் என்ன ? கல்வி வகுப்பு. பாலர் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிக் கல்வி வகுப்பல்ல. தாய்மொழிப் புலமை வகுப்பல்ல ; பிற மொழிக் கல்வி வகுப்பு. உஸ்பெக் மாதர்கள்-முதியோர்-படிக்கும் ஜெர்மன் வகுப்பே நாங்கள் கண்டது. அம்மாதர்கள், ஏற்கெனவே தாய்மொழியாகிய உஸ்பெக்கையும் சகோதர மொழியாகிய இரஷிய மொழியையும் கற்றுத் தேறியவர்கள். அலுவலகங்களிலும் தொழிற் கூடங்களிலும் பணிபுரிகிறவர்கள்.
’படியுங்கள், படியுங்கள். மேலும் படியுங்கள்’ என்ற நல்லுரையைப் பின்பற்றி மேலும் மேலும் புதிது புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், அம்மாதர்கள். தங்கள் அன்றாட அலுவல் தீர்ந்த பின், அக்கடா என்று வீட்டிலே விழ்ந்து கிடக்காமல் அல்லது இன்றே நன்று ; எனவே இன்றே களித்திரு என்று பூங்காக்களில் பூரித்துக் கிடக்காமல், ’அறிவின் அளவே வாழ்வும்’ என்பதை உணர்ந்து, இரவு நேரங்களில், வேளைக் கல்லூரியில் : சேர்ந்து, புது மொழி யொன்றைக் கற்கும் முதிய மாணவிகள் அவர்கள். அவர்களிலே பலருக்குக் குடும்பப் பொறுப்பும் உண்டு. இத்தனைக்குமிடையிலேதான், அவர்கள் தொடர்ந்து கற்கிறார்கள்; முதுமையிலும் கற்கிறார்கள். இரவுதோறும் கல்லூரியில் கற்கிறார்கள் பிற மொழிகளைக் கற்கிறார்கள்- மொழித் தீண்டாமையை நினைவிலும் கொள்ளாது கற்கிறார்கள்.
நாங்கள் கண்டது காட்சிக்காக நடக்கும் கல்லூரியா ? இங்கும் அங்கும் பெருநகர்களின் நெடுஞ்சாலைகளில் வெளி நாட்டவர்களுக்குக் காட்ட நடத்தப்படும் கல்லூரியா ? இல்லவே இல்லை. வேளைக் கல்லூரிகளும், வேளைப் பள்ளிகளும் எங்குமுண்டு, சோவியத் ஒன்றியத்தில்; ஏராளமாக உண்டு. அவற்றில் சேர்ந்து, தொடர் கல்விப் பயன்பெறும் தொழிலாளர்கள். அலுவலர்கள், பட்டதாரிகள் இலட்சக்கணக்கினர். இந்த ஈடுபாட்டில் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்லர் பெண்கள். முதியோர் கல்வி பெறும் -எழுத்தறிவல்ல-தொடர் கல்வி பெறும், எண்ணற்ற மாதர்களில் நாற்பது பேரையே நாங்கள் தாஷ்கண்ட் இரவுக் கல்லூரியில் கண்டோம்; ஜெர்மானிய மொழி கற்கும்போது கண்டோம்.
மூன்று வாரங்களுக்குப் பின் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். தமிழ்நாட்டில் பொறுப்புள்ள பணியொன்றில் இருந்த இரஷியர் ஒருவரைக் கண்டேன். அவருக்கு வயது அறுபதுக்கு அருகில். அவர் பொருளாதாரத் துறையில் டாக்டர் நிலைக்குப் பட்டம் பெற்றவர். அவர் கௌரவ டாக்டர் அல்லர். படித்துத் தேறிப் பட்டம் பெற்றவர். அவர் ஆதியில்-அதாவது இளமைப் பருவத்தில்-படித்து முடித்தது எவ்வளவு ? நான்காம் வகுப்பு வரையில், ஜார் ஆட்சிக் காலத்தில், ஏழ்மை காரணமாக, நான்காவதோடு நின்றுவிட்ட அவர் சோவியத் ஆட்சிக் காலத்தில், மீண்டும் வேளைப் பள்ளியில் சேர்ந்தார். பள்ளியிறுதி தேறியதும் வேளைக் கல்லூரியில் சேர்ந்து முதற் பட்டம் பெற்றார். ஊக்கம் அதிகமாயிற்று. 'டாக்டர்’ பட்டத்திற்கும் வேளைக் கல்லூரியிலேயே படித்தார். பொருளியல் மேதையாகத் தமிழ்நாட்டிற்கு வந்தார்.
'கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு!' இது நான் கற்ற தமிழ்ப் பாடம் ; நாட்டு மக்களிடமிருந்து ஒளிக்கும் பார்க்கும் பாடம்.
'யாதானும் நாடாமால் ஊராமால், என்னொருவன் சாந்துணையும் கல்லாத வாறு’- இது தமிழ் மறை; நம் மறை; இதை ஒத யாருக்கு உரிமையுண்டு? 'இளமையிலும் இதோ( தில் தேர்ச்சிச் சீட்டுப் பெற்ற பின்னும் கண்விழித்துப் படிப்பானேன்? படிக்காத மேதை பார்த்ததில்லையா ? என்கிற போக்கிலே, நடக்கிற நமக்கா? அப்போக்கினையே வளர்க்கிற நமக்கா ? அல்லது இரவு பகல் பாராதே, முடிந்த போதெல்தாம் படி, தாய் மொழியையும் படி, அறிவு எங்கிருந்தாலும் அதைத் தேடிக்கொண்டு வா என்று சொல்லுவதோடு நில்லாமல், அவ்வழி வளர்கிற, சாந்துணையும் கற்கிற, சோவியத் மக்களுக்கா ? யாருக்குச் சொந்தம குறள் ? யார் காக்கிறார் குறள் நெறியை ?