செல்வம் நிலையாமை [செல்வத்தின் நிலையாமையை உணர்த்துவது] பாடல்: அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் - வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. குறிப்புரை: அறுசுவை உண்டி - அறுசுவையுள்ள உணவை, இல்லாள் - மனையாள், அமர்ந்து ஊட்ட - விரும்பி உண்பிக்க, மறுசிகை நீக்கி உண்டாரும் - மறுபிடி தவிர்த்து உண்ட செல்வரும், வறிஞராய்ச் சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் - ஒரு காலத்தில் வறுமையாளராகி எங்கேனும் ஓர் இடத்திற்போய்க் கூழ் இரப்பர், எனின் - ஆதலின், செல்வம் ஒன்று - செல்வமென்பதொன்று, உண்டாக வைக்கற்பாற்று அன்று - நிலையுடையதாக மனத்திற் கருதக் கூடியதன்று. கருத்து: செல்வரும் வறிஞராக மாறுதலால், செல்வம் நிலையுள்ளதாகக் கருதற்குரியதன்று. விளக்கம்: ‘அமர்ந்து' ‘ ஊட்ட' என்னும் சொற்கள் ஆற்றல் வாய்ந்தவை; அமர்தல் - மனம் பொருந்துதல் ; அன்பு, மகிழ்வோடு உண்ணச் செய்தலின் ‘ஊட்ட' என வந்தது. ஒவ்வொருவகை உணவிலும் ஒவ்வொரு பிடியளவே போதுமானதாயிருந்தமையால் அச் செழுமை மிகுதியால் மறுசிகை நீக்கி உண்டார். உம்மை உயர்வின் மேல் வந்தது. வைக்கறபாற்றன்று - வைக்கற்பாலதன்று. செல்வத்தின் நிலையாமை தெரிந்தால், அதனைக் காலத்தில் தக்கவாறு பயன்படுத்திக்கொள்ளும் உணர்வு உண்டாகும். நிலையாமை கூறும் பிறவிடங்களிலும் இங்ஙனமே கருத்துக்கொள்க.
stringlengths
16
7.39k
எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனுந் துதிக்கும் நிருதி வருணன்நல் வாயு மதிக்குங் குபேரன் வடதிசை யீசன் நிதித்தெண் டிசையு நிறைந்துநின் றாரே. பொருளுரை: புறத்து அமைப்பதுபோல் அகத்து நெஞ்சத் தாமரையின் கண்ணும் எண்புலக் காவலர் அமைக்குமாறு ஓதியருளுகின்றனர். நெஞ்சத் தாமரை இதழை எட்டாக அமைத்தல்வேண்டும். அதன்கண் கீழ்புலத்துத் தோன்றிவரும் ஞாயிறும், தென்கீழ்புலத்துத் தீக்கடவுளும், தென்புலத்து ஞமனும், தென்மேல்புலத்து நிருதியும், மேல் புலத்து மழைக் கடவுளும், வடமேற்புலத்துக் காற்றுக் கடவுளும், வடபுலத்துச் செல்வக்கோனும், வடகீழ்புலத்து ஆண்டானும் ஆக நிறைந்துநின்று காவல் புரியுமாறு திருவருளால் ஆணையிடுதல் வேண்டும். செம்பொருளாம் சிவவழிபாட்டினர் சிவமேயாகும் சிறப்பினராதலின் 'என்துரை தனதுரையாக' என்னும் இயல்பினராதலின், அவர்தம் கரணமெல்லாம் சிவநினைவால் சுடரும் சிவகரணமாதலின் ஆணையிடும் உரிமையும் தகுதியும் உடையோர் என்க. அதனால் எண்புலக் காவலரை ஆணையிட்டு நிறுவுவதன்றி அவரை வணங்கி வழிபடுவாரல்லர்; என்னை? சிவனை வழிபடும் மெய்யடியார்களை அக்காவலர் நாளும் வழிபட்டு வருதலான் என்க. மேலும், "நாரணன் நான்முகன் இந்திரன், வாரணன் குமரன் வணங்குங்கழற் பூரணன்" சிவன் என்பது புனிதத் திருமறை. குறிப்புரை: இஃது எண்திசை இறைவர்களைப்பற்றிக் கூறியுள்ளது.
எட்டாம் தந்திரம். எட்டிதழ்க் கமல முக்குண அவத்தை ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே. பொருளுரை: நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த் தாமரையென்று இயம்பப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பகத்து முதுகந்தண்டாகிய சுழுமுனைநாடி மிகவும் நுண்ணிதாய் அமைந்துள்ளது. அத் தண்டினூடே அடங்கிய அறிவுப் பேரொளியினை அகத்தவத்தால், அருளால் ஆய்ந்தெழுங்கள். அதுவே உய்யும் வழியாகும். இனி அப் பேரொளிப் பிழம்பினை நினைந்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றலும் ஒன்று. குறிப்புரை: ஒருங்கிய - சேர்ந்துள்ள. மருங்கிய - பெருமையுடைய. மாயாபுரி - உடம்பு. தண்டு - வீணாத்தண்டு. முதுகுத்தண்டு எலும்பு.
மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் கனாவன்றே. பொருளுரை: நெஞ்சத் தாமரையின் விரிவினைப் பகுக்குங்கால் மூன்றாகப் பகுக்கப்படும். அவை முறையே இதழ், கொட்டை, கொட்டைநடு என்ப. கொட்டை - கர்ணிகை. இம்மூன்றினும் விட்டு நீங்காது தொன்மை உருவாக விளங்கும் மன்னும் ஆவி நிறைந்து நிற்கும் உலகமே உருவமாகக்கொண்டு திகழும் இறைவன் சோதிவிரிசுடர் எனப்படுவன். அவனை விராட்டெனவும் அழைப்பர். எட்டிதழ்த் தாமரையாகிய இதன்கண் கொட்டையும் நடுவும் அகமுள்ளனவாகும் அவ்விரண்டனுள்ளில் விளங்குவது ஆவியாகும். குறிப்புரை: விட்டலர்கின்றனன் - விட்டுவிட்டு ஒளி வீசுகின்றான். பட்டலர்கின்றது - தோன்றி விளங்குவது.
ஆறே யருவி யகங்குளம் ஒன்றுண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமுங் கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும் வேறே யிருக்கும் விழுப்பொருள் தானன்றே. பொருளுரை: அகத்தின்கண் அமுதப்பெருக்காகிய சிற்றாறு ஒன்றுண்டு. அவ்வாறு அருளால் போய்நிறையும் நெஞ்சக்குளமும் ஒன்றுண்டு. அங்குத் திகழ்வது அளவிடப்படாத சிவநிலை ஆகும். அதன் இயல்பும் நனிமிகு நுண்மையாகும் அங்குக் குவிந்த முலையினையுடைய அருளன்னையை ஒரு கூறாகக்கொண்டு சிறப்பாக வீற்றிருப்பவன் சிவபெருமான். அவனே தவலில் விழுப்பொருளாவன். தவலில் - கெடுதலில்லாத. குறிப்புரை: அருவி - அமுதப் பெருக்கு. அகம் குளம் - உள்ளமாகிய குளம். நூறே சிவகதி - அளவற்ற ஆனந்தம். கூறே - பாகத்திலுள்ள.
திகையெட்டுந் தேரெட்டுந் தேவதை யெட்டும் வகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை வகையெட்டு நான்குமற் றாங்கே நிறைந்து முகையெட்டும் உள்நின் றுதிக்கின்ற வாறே. பொருளுரை: திசைகள் எட்டினையும் ஆண்டு அருளாணையால் காவல் புரியும். காவலர் ஞாயிறு முதலிய எண்மராவர். அவர்களுக்கு உரிய தேராகிய ஊர்தியும் எட்டாகும். பூதங்கள் ஐந்து, ஞாயிறு திங்கள் உயிர் மூன்று ஆக எண்பெரு வடிவமாக விளங்குபவன் சிவன். இவை எல்லாமாய் நிற்கின்ற ஆதியையுடைய சிவனைக் காணுமாறு காண்க. அஃது அறிதற்பொறி ஐந்து, செய்தற்பொறி ஐந்து, மனம் ஒன்று, புத்தியாகிய இறுப்பு ஒன்று ஆகப் பன்னிரண்டும் புடைபெயராது அசைவற்று நின்றவிடத்து ஆங்கே சிவபெருமான் நிறைந்து தோன்றுவன். இதுவே எட்டிதழ் நெஞ்சத் தாமரையின்கண் உயிர்க்குயிராய்நிற்கும் சிவபெருமான் தோற்றமளித்தருளும் முறைமையாம் என்க. வகை எட்டும் என்பதற்கு எண்புலத்தார் வடிவம் எட்டென்றலும் ஒன்று. குறிப்புரை: திகை எட்டும் - எட்டுத் திசைகளும். தேர் எட்டும் - எண்திக்கிறைவர்களின் வாகனங்கள் எட்டும். தேவதை எட்டும் - திசைப்பாலகர் எட்டும். வகை எட்டும் - அப் பாலகர் வடிவங்கள் எட்டும். வகை எட்டும் நான்கும் அற்று - கன்மேந்திரியம் , ஞானேந்திரியம் , மனம் புத்தி , ஆகப் பன்னிரண்டும் ஒழிந்து. முகை எட்டும் - எட்டு இதழ்களையுடைய உள்ளக்கமலம்.
ஏழுஞ் சகளம் இயம்புங் கடந்தெட்டில் வாழும் பரமென் றதுகடந் தொன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வது வான தனித்தன்மை தானன்றே. பொருளுரை: மேலோதிய எட்டிதழ்த் தாமரையுள் கிழக்குமுதல் வடக்கு ஈறாகவுள்ள ஏழு இதழ் ஆருயிர்வகை ஏழின் நிலைக்களமாகும். வடகீழ்பால் பேருயிராகிய ஆண்டானின் நிலைக்களமாகும். கீழிதழ் சிவபெருமானின் நிலைக்களமாகும். மேலிதழ் ஆருயிரும் பேருயிரும் வேறறப் புணர்ந்து நிற்கும் நிலைக்களமாகும். ஆருயிர் - ஆன்மா. பேருயிர் - பரமான்மா. தாழ்வு - அன்பு. அது சிவஞான சித்தியாரில் வரும் "தாழ்வெனும் தன்மை" என்பது அன்பென்னும் பொருளில் வருதல் காண்க. மேலும் 'கீழோராயினும் தாழவுரை' என்பதில் வரும் தாழ்வு என்பதும் அன்பு என்னும் பொருளையே தருதல் காண்க. இரண்டற்ற நிலைமையினைத் தனித்தன்மை என்ப. குறிப்புரை: ஏழும் - கிழக்கு முதல் வடக்கு ஈறாக உள்ள ஏழு இதழ்களும். சகளம் - சீவனின் இடங்கள். எட்டில் - வடகிழக்கு இதழாகிய எட்டாவது இதழ் பரனது இடம். ஒன்பதில் - ஒன்பதாவது இதழில். ஊழி பராபரம் - சதாசிவன் இடம். பத்தினில் - பத்தாவது இதழில். தாழ்வது - ஐக்கியத்தானம்.
பல்லூழி பண்பன் பகலோன் இறையவன் நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற வூழிகள் செல்லூழி யண்டத்துச் சென்றவவ் வூழியுள் அவ்வூழி யுச்சியு ளொன்றிற் பகவனே.பொருளுரை: உலகினுக்குப் பல வூழிகளை யமைத்து வளர்ச்சியுறச் செய்பவன் சிவன். அவனே பகலோன் என்றும் இறையவனென்றும் அழைக்கப்படுவன். நல்ல ஊழிகள் ஐந்தென்ப. அவை நீக்கல் முதலிய ஐவகைக் கலைகளின் நிகழும் ஐவகை ஒடுக்கமும் என்ப இவைகள் அண்டத்துச் செல்லும் ஊழிகளாகும். அவ் வூழியுள் ஒன்றுபவனும் சிவனே. ஊழியுச்சியினுள் ஒன்றுபவனும் சிவனே. குறிப்புரை: பல்லூழி பண்பன் - பல ஊழிகளை உண்டாக்குகிறவன். இறையவன் நல்லூழி ஐந்தினுள் - இறைவனால் உலக வளர்ச்சி கருதி ஏற்பட்ட ஊழிகள் ஐந்தினுள்;பகவன் - சிவன். இயையா. அப்பர், . - .
புரியும் உலகினிற் பூண்டவெட் டானை திரியுங் களிற்றொடு தேவர் குழாமும் எரியு மழையும் இயங்கும் வெளியும் பரியுமா காசத்திற் பற்றது தானே. பொருளுரை: திருவருளால் உண்மை புரியும். உலகத்தினிடத்து எண் பேருருவாய்த் திகழ்பவன் சிவன். சுற்றித்திரியும் களிறுகளும், தேவர் கூட்டமும் தீயும் மழையும் இயங்குதற்கு வழியாகவுள்ள வெளியும், இவையனைத்திற்கும் இடம் தரும் அறிவுப் பெருவெளியும் அருளால் நோக்கு வார்க்கு அறிவுப் பெருவெளியைப் பற்றாகக் கொண்டு நிகழ்வது புலனாகும். குறிப்புரை: எட்டானை - எண்வகை வடிவு உடையவனை.
ஊறு மருவி யுயர்வரை யுச்சிமேல் ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப் பூவின்றிச் சூடான் புரிசடை யோனன்றே. பொருளுரை: உயர்வரையுச்சி என்பது ஆணையிடமாகும். அதுவே நெற்றிப் புருவமாகும். அங்கு ஆறு முதலிய தோற்றரவில்லாமல் இடையறாது நீர் நிரப்பும் குளம் ஒன்றுண்டு. உலகியல் தாமரை சேற்றிற் பூப்பது. ஈண்டுப் பேசப்படும் ஆயிரவிதழ்த் தாமரை அருள் வெளியிற் பூப்பது. அதனால் அது சேற்றிற் பூவாததாகும். மாலையில் தாங்குருவே போன்று காணப்படும் பின்னற் சடையினையுடைய சிவபெருமான் பேருவகையோடும் இப் பூவல்லாமல் வேறு பூச்சூடான் என்ப. குறிப்புரை: உயர்வரை உச்சி - ஆஞ்ஞை. பாயும் - நீர் நிரம்பும், தாமரை - சகசிர அறை.
ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும் வென்று மிருந்து விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்துந் திருவுடை யோரன்றே. பொருளுரை: ஒன்றும் இரண்டும் ஆகிய மூன்றும் முக்கரணங்களாகும். அவை முறையே உள்ளம் உரை உடலென்ப. இவற்றை மனமொழி மெய்களென்ப. இம் மூன்றும் தம்வயப்பட்டு ஒடுங்கிய காலத்து எந்நிலத்து நின்றாலும் இருந்தாலும் புலன் வென்றிருந்து புகழ் மெய்ப் பொருளை நாடுவர். அவர்கள் சென்றும் இருந்தும் சிவத்திருவுடையாரே யாவர். குறிப்புரை: ஒன்றுமிரண்டும் - முக்கரணங்களும். வென்று - புலனை அடக்கி ஒருங்கிய - ஒத்திருக்கின்ற.
ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி தொற்பத விசுவன் றைசதன் பிராஞ்ஞன் நற்பத விராட்டன்பொன் கர்ப்பனவ் யாகிர்தன் பிற்பதஞ் சொலிதையன் பிரசா பத்தியன் பொற்புவி சாந்தன் பொருதபி மானியே. பொருளுரை: தொன்மை நிலையாகிய சிவபெருமான் யாண்டும் கலந்து நிற்கும் நிலையினைப் பலவாகக் கூறுதல் உண்டு. அவற்றுள் இதுவும் ஒன்று. அம் முறை விசுவன் முதலாகச் சாந்தன் ஈறாகக் கூறப்படும் நிலை ஒன்பதும் என்ப. அவை வருமாறு: . விசுவன் - உலகவுருவினன். . தைசதன் - தழல் வண்ணன். . பிராஞ்ஞன் - பேரறிவினன். . விராட்டன் - உலகமுதல்வன். . பொன்கர்ப்பன் - பொன்மேனியன். . அவ்யாகிர்தன் - பிரிக்கப்படாதவன். . இதையன் - கலப்பையன். . பிரசாபத்தியன் -ஆருயிர் முதல்வன். . சாந்தன்- தண்ணளியோன். இந் நிலைகள் ஒன்பதும் பொருந்திய பொருவில் பற்று நிலைகளாகும்.
எட்டாம் தந்திரம். ஒன்பான் அவத்தை - ஒன்பான் அபிமானி நவமா மவத்தை நனவாதி பற்றிற் பவமா மலங்குணம் பற்றற்றுப் பற்றாத் தவமான சத்திய ஞானப் பொதுவில் துவமார் துரியஞ் சொரூபம தாமே. பொருளுரை: மூவகையாம் அவத்தைகள் மும்மூன்றாய் ஒன்பதென்ப. அவை, ஆருயிரின் நனவாதி மூன்றும், ஆரருளின் நனவாதி மூன்றும் பேருயிரின் நனவாதி மூன்றும் என ஒன்பதாகும். இவற்றைச் சீவசாக்கிரம், பரசாக்கிரம், சிவசாக்கிரம் முதலாகச் சொல்லுவர். ஆருயிர் நனவு, ஆருயிர்க் கனவு, ஆருயிர் உறக்கம் என மூன்று. ஆரருள் நனவு, ஆரருள் கனவு, ஆரருள் உறக்கம் என மூன்று. பேருயிர் நனவு, பேருயிர்க் கனவு, பேருயிர் உறக்கம் என மூன்று. பிறப்பிற்கு வாயிலாகிய மலம் குணம் முதலியவற்றின் பற்றையறுத்துப் பற்றுதற்கரிய நன்னெறி நான்மை நற்றவமான உண்மை அறிவு இன்ப வடிவாம் ஐம்பெருமன்றாம் பொருவிலாப் பொதுவில் மேன்மைமிக்க செயலறு நிலையாம் துரியம் உணர்விற்கு உணர்வாம் உண்மை நிலையாகும். சொரூபம் - இயற்கை உண்மை. குறிப்புரை: நவமாமவத்தை - நவ அவத்தை, ஒன்பது அவத்தைகள். நனவு, கனவு, சுழுத்தியை; சீவன், பரம், சிவன் மூன்றுக்கும் சேர்த்த ஒன்பது ஆதல் காண்க. பவமாம் - பிறப்பு உண்டாம். பற்றா - பற்றுதற்கரிய. துவமார் - மேன்மைபொருந்திய.
சிவமான சிந்தையிற் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறிப் பறிய நவமான அந்தத்தின் நற்சிவ போதந் தவமா மவையாகித் தானல்ல வாமே. பொருளுரை: திருவருளால் சிவனையே இடையறாது நாடுவார் சிந்தையின்கண் சிவனுறைவன்; என்னை, "சிந்திப்பார் மனத்தான் சிவன்" எனவும், "சிந்திப் பரியன சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன" எனவும் செந்தமிழ்த் திருமாமறை சிறந்தெடுத்து ஓதுதலான் என்க. ஆருயிரின் முனைப்புத்தன்மை யகன்று பேருயிர்க்கு அடிமையாம் நினைப்புத் தன்னை இடையறாது சிந்தித்தலால் கைவரும். வரவே ஆருயிர் முனைப்புத் தன்மை அகலும் பிறப்பிற்கு வாயிலாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலமும் முற்றும் அற்று ஒழியும். ஒழியவே மேல் ஒன்பது நிலைகளின் முடிவாகிய சிவபேருயிரின் அந்தத்தின்கண் நன்மை வடிவாம் சிவபோதம் தலைப்படும். தவநிலையாகிய அப் போத வண்ணமாய் ஆருயிர் தன்னை அருளால் ஆக்கிக் கொள்ளும். அப்பொழுது அவ்வுயிர் நன்மையாய்த் திகழும். இதனால் திருவடி யுணர்வுடைய சீரியோர் நல்லார் என நவிலப் பெறுவர். குறிப்புரை: சிதைய - ஒடுங்க. பாறிப்பறிய - போயொழிய. நவமான அந்தம் - சிவசுழுத்தி.
முன்சொன்ன வொன்பானின் முன்னுறு தத்துவந் தன்சொல்லில் எண்ணத் தகாவொன்பான் வேறுள பின்சொல்ல லாகுமிவ் வீரொன்பான் பேர்த்திட்டுத் தன்செய்த வாண்டவன் றான்சிறந் தானன்றே. பொருளுரை: முன் ஓதிய பொருவில் பற்றுச் சேர் ஒன்பதனுள் முன் பொருந்தும் மெய்கள் தன் சொல்லினால் கருதிச் சொல்லத்தகாதன ஒன்பதாகும். பின் சொல்லப்படும் ஒன்பது மெய்களும் வேறுள. இவ்வகையாகச் சொல்லப்படும் பதினெட்டையும் ஒழித்துவிட்டு ஆருயிர்களைத் தானாகச் செய்தருளிய சிவபெருமான் ஒருவனுமே சிறந்தோனாவன். உயிரினும் சிறந்த அச் சிவபெருமானை உள்ளன்புடன் ஓவாது தொழுது உய்வதே சிறப்பென்க. முன்னுறு என்பதற்குக் கருதப்படுகின்ற என்றலும் ஒன்று. குறிப்புரை: முன்னுறு - கருதப்படுகின்ற. ஒன்பான் - அபிமானி ஒன்பது. பேர்த்திட்டு - ஒழித்துவிட்டு. தன் செய்த - சிவமாகச் செய்த.
உதந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரானென்னும் பண்பினை நாடி அகந்தெம் பிரானென்பன் அல்லும் பகலும் இகந்தன வல்வினை யோடறுத் தானே. பொருளுரை: தனிமுதல் உயர்வு தமக்கென அமைந்த பதினான்கு நூல்களையும் உலகினர்க்குப் பகர்ந்தருளிய பெருமான் ஆலமர் செல்வனாவன். அப் பெருமானின் பண்பினை நாடி மனமொருங்கி எம்பெருமான் என்று இரவும் பகலும் இடையறாது ஏத்தவன். ஏத்தவே ஆருயிரின் வன்மையினைக் கடந்துள்ள வல்வினையோடு பிறப்பினையும் அறுத்தருளினன் சிவன். செந்தமிழ்த் தெய்வமாம் சிவபெருமான் திருவருளால் இப்பொழுது ஈடும் எடுப்புமில்லாப் பீடுசேர் மெய்கண்ட நூல்கள் நாடுய்ய விளங்குவன பதினான்கு. இப் பதினான்கும் மேலோதிய பதினான்கிற்கும் ஒருபுடை யொப்பாகக்கொள்ள அமைத்தருளிய அருளை யுன்னி யுன்னி அகமகிழ்க. குறிப்புரை: ஒன்பதும் ஐந்தும் - பதினான்கு அறிவு நூல்களும்.
நலம்பல காலந் தொகுத்தன நீளங் குலம்பல வண்ணங் குறிப்பொடுங் கூடும் பலம்பல பன்னிரு கால நினையும் நிலம்பல வாறின னீர்மையன் றானே பொருளுரை: தொன்றுதொட்டு நீண்ட நாட்களாக நாம் நலம் பல அடைந்து நல்வாழ்வு எய்துதற் பொருட்டுச் சிவபெருமானை வாழ்த்தி வழிபடப் பல காலங்களைப் பாங்கொடும் அமைத்தருளினர் செம்பொருட் செல்வர். அவை ஆறு எனவும் நான்கு எனவும் கூறுப. ஆறு: சிறுபொழுதாறாகும்; 'மாலையாமம்வைகுறுவிடியல், காலை நண்பகல் ஏற்பாடென்ப.' நான்கு, "காலை கடும்பகல் மாலை வீங்கிருள்" என்பன, இக் காலங்கள் பல வேறுவகையான குடும்பத்தார்களும் குறிக்கோளுடன் வணங்குவதற்கு வாய்ப்பினவாகும். அவற்றுள் நனிமிகு பலனை இனிமையுடனும் எளிமையுடனும் தரத்தக்க சிறந்த வண்மைக்காலம் இரண்டாகும். அவை உழைப்புறு பயனை உண்டு மேலும் உழைப்பதற்காம் உரன் பெறுதற்பொருட்டு இளைப்பாறுவதாகிய உறக்கத்துக்குச் செல்லுங்காலம் ஒன்று. மற்றொன்று உறங்கி விழித்து உன்னிய அனைத்தும் உடையான் நினைவுடன் உழைக்க எழுங்காலம் ஒன்று. ஆக இத்தகைய இரண்டு காலங்களிலும் இன்றியமையாது நினைந்து வழிபடவேண்டுவது நம் கடனாகும். அச் சிவபெருமான் வழிபாட்டிற்குரிய நிலமும் உருவும் கலமும் பலவாகக் கொண்டு வழிபடுவார்க்கும் அவ்வவ்வாறே தோன்ற அருள்புரியும் செவ்விய நீர்மையனாவன். இனி இருகாலம் என்பதற்கு எச் செயற்கும் முன்னும் பின்னும் ஆகிய இரு காலங்கள் எனலும் ஒன்று. ஒருபுடையாக உழைத்தலே உண்டல் இழைத்த லுணர்தல், தழைத்தலுறங் கல்லிருமுப் போது எனக் கொள்ளுதல் ஏற்புடைத்து. கலம் - கருவிகள். "நம்மூல ராற்போற்ற நால்வரால் நாட்டநிலை செம்பொருட்சித் தாந்தசைவம் தேறுங்கால் - அம்பொனருள் 'சிந்திப்பார்' 'காலை' 'படைக்கலமா' 'வாழ்க' 'என்றும்' " என்னும் வெண்பாவினை நினைவு கூர்க. நாற்போதை: நாற்போது + ஐ. ஐ மேற்குறித்த ஐந்து திருப்பாட்டுக்களைக் குறிக்கும்.
ஆதி பராபர மாகும் பராபரை சோதி பரமுயிர் சொல்லுநற் றத்துவம் ஓதுங் கலைமாயை யோரிரண் டோர்முத்தி நீதியாம் பேதமொன் பானுடன் ஆதியே. பொருளுரை: யாவர்க்கும் யாவைக்கும் வினைமுதற் காரணமாம் சிவபெருமான் ஆதி பராபரம் ஆவன். அவன் கலப்பால் பராபரையாய், சோதியாய், பரமாய், உயிராய், கலையாய், மாயையிரண்டாய், வீடாய், திருவடிப் பேறாய் விளங்குவன். இத்தகைய முறைமையுடன் கூடிய ஒன்பது வேறுபாட்டுடன் விளங்கியருள்பவன் முழுமுதல்வனாகிய சிவபெருமானே. ஆதி - முழுமுதல்வன்.
தேறாத சிந்தை தெளியத் தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறாப் பிறப்பும் உயிர்க்கரு ளால்வைத்தான் வேறாத் தெளியார் வினையுயிர் பெற்றதே. பொருளுரை: ஆருயிர்களின் தெளியாத சிந்தை தெளியும் பொருட்டு மாறுபட்டவற்றைப் படைத்துத் தாந்தாம் உய்த்துணர்ந்து தெளியுமாறு தெளிவித்தருளினன். அவை ஒன்றோடொன்றொவ்வா ஒரே துன்பமாயிருக்கும் இருளுலக நரகமும், ஒரே இன்பமாக இருக்கும் ஒளியுலகமாகிய துறக்கமும் நிலவுலகின்கண் செய்துகொண்ட இருவினைப்பயன் வழியாக எய்துவன. அவ் வுயிர்கள் எஞ்சிய வினைக்கு நிலத்தின்கண் மீண்டும் பிறக்கும். இவற்றைச் சிவபெருமான் அருளால் அமைத்தருளினன். இவற்றைச் சிறப்பாகத் தெளியார் உயிர்நிலைக்களமாம் உடல்பெற்றது மேலும் பிறக்கும் வினைசெய்தற்கேயாம். அவ் வுடல் கொடுத்தது இதன் பொருட்டன்று; சிறக்கும் பணி செய்தற் பொருட்டேயாம். வேறா - சிறப்பாக. குறிப்புரை: வேறா - மாறுபட்ட.
ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பாற் பயிலு நவதத் துவமாதி ஒன்பானில் நிற்பதோர் முத்துரி யத்துறச் செம்பாற் சிவமாதல் சித்தாந்த சித்தியே. பொருளுரை: ஒன்ப தென்னும் பாடாகிய அவத்தையுள் ஒன்பான் அபிமானி என்னும் பொருவில் பற்றினர் உளர். இவர்களே அதி தெய்வமாவர். நல்ல முறையாகப் பயிலப் பெறும் ஒன்பது மெய்களும் உள. இவற்றுடனெல்லாம் ஆருயிர்ச் செயலறல், ஆரருட் செயலறல், பேரருட் செயலறல் என்னும் முத்துரியமும் பொருந்தும். இங்ஙனம் பொருந்து மாறருளிப் பொருந்தி நிற்பவன் சிவன். அவனே செம்பாற் சிவன்: செம்பொருட் சிவன்; இவ் வுண்மையினை மேற்கொண்டு ஒழுகுவோன் செம்பொருட்டுணிவினனாவன் அவனே சித்தாந்தச் செல்வன். அவன் நீங்காச் சிவ நினைவால் ஓங்கும் சிவமாவன். அந் நிலையே சித்தாந்த சித்தியாகும். சித்தாந்த சித்தி எனினும் திருவடிப்பேறு எனினும் ஒன்றே. குறிப்புரை: அபிமானி - அதிதேவதை. முத்துரியம் - சீவ, பர. சிவதுரியங்கள். செம்பாற் சிவம் - செம்மையுடைய சிவம்.
சுத்தாசுத்தம் நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை யம்மறை கூசி யிருக்குங் குணமது வாகுமே. பொருளுரை: நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப் போதரும் உயிர்ப்புப் பன்னிரண்டு விரலளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ் வுயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கியருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையினை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும். எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம் மறையின் குணமாகும். குறிப்புரை: நாசி நுனியில் - மூக்கு நுனியினின்றும் வெளிப்படும் பிராணவாயுவில். நான்கு மூவிரல் - பன்னிரண்டு விரற்கடையில். கூசி இருக்கும் - கூறமுடியாமல் நாணிஇருக்கும்.
எட்டாம் தந்திரம். சுத்தா சுத்தம் கருமங்கள் ஒன்று கருதுங் கருமத்து உரிமையுங் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை யாவது கண்டகன் றன்பிற் புரிவன கன்மக் கயத்துட் புகுமே. பொருளுரை: ஆருயிர் செய்யும் இருவினையாகிய கன்மங்கள் பொருந்தும் கருத்தினால். அங்ஙனம் கருதுகின்ற கருமப் பயனின் உரிமையும், மீண்டும் பிறவிக்கு வித்தாம் கன்மமும் கருதப்படுகின்ற பிறவிக்கு அருவினையாகும். திருவருளால் இவ் வுண்மை கண்டு அகன்ற பின்பு யான் என தென்னும் செருக்காம் தன் முனைப்பற்று ஆண்டானுக்கு அடிமையாம் அருள் முனைப்புடன் செய்வன அனைத்தும் இறைபணியாகும். இப் பணியால் கன்மக் கயமாகிய வினை நீக்கத்துள் அவ் வுயிர் புகும் என்க. கயம் - தேய்வு; குறைவு. குறிப்புரை: பிறவிக் கருவினை - பிறப்புக்கு மூலத்தை. கன்மக் கயத்துட்புகாமே - கன்மமாகிய குளத்துள் மூழ்காமல்.
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லை கருத்தில்லை தானன்றே. பொருளுரை: மாயாகாரிய உலகங்களாலும் உலகியற் பொருள்களாலும் உடலாலும் மருள் கொண்டு தெருள் நாடாது உழலும் ஆருயிர் மாயையால் மறைக்கப்பட்ட நிலையினதாகும். அம் மறைப்புக்கு உட்பட்டமையால், செந்தமிழ்த் திருமறையால் சிறந்தெடுத்து ஓதப்பெறும் மறை பொருளாம் 'தென்னாடுடைய சிவனை' உன்னாதிருக்கின்றது. அதனால் அச் சிவன் மறைபொருள் எனப்படுகின்றனன். மாயையின்பாற் கொண்ட மருள் மறையத் திருவருள் நினைவாம் தெருள் தோன்றும். அது தோன்ற அம் மறைபொருளாகிய சிவன் வெளிப்படுவன். மாயையின் மருள் தோன்றாது மறைதலினால் அத்தகையோர் சிவபெருமான் திருவடிக்கீழ் ஒடுங்குதலாகிய மறையவல்லாராவர் அவர்கட்கு இனிப் பிறப்பதற்கு வருவதோர் உடம்புமில்லை. இப்பொழுது தங்கியிருக்கும் உடம்பும் 'தூயவெண்ணீறு துதைந்த பொன் மேனியும் தாழ்வடமும், நாயகன் சேவடி தைவரு சிந்தையும்' மேயதனால் தூயதாய்ச் சிவன் பணிக்குரிய சிவவுடம்பே யாகும். அதனால் அவ்வுடம்பு அவர்களுக்குரியதாயில்லை. சிவனினைவன்றிச் சேரும் எந் நினைவும் அவர்கள் பாலில்லை. மேலும் 'அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமுங், குன்றே அனையாய் என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ' என்னும் செந்தமிழ்த் திருமறை முடிபின்படியும் அவ் வுடம்பு அவர்களுடையதாகவில்லை. குறிப்புரை: மறைப்பொருள் - சிவம்.
மோழை யடைந்து முழைதிறந் துளபுக்குக் கோழை யடைக்கின்ற தண்ணற் குறிப்பினில் ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாகுமே. பொருளுரை: புருவ நடுவண் தோன்றும் அருளமுத ஆற்றினை அடைந்து உச்சித்தொளையினை அருள்நினைவால் திறந்து அகத்தே புகுதல் வேண்டும். புகுந்தபின் அண்ணலாகிய சிவபெருமான் திருவடியிணையினை நீங்கா நினைவுடன் இருத்தல் வேண்டும். அந் நினைவு கோழையாகிய அறியாமையினை அடைக்கின்றதாகும். அவ்வடைப்பினின்றும் வெளிப்படாவாறு ஆழ அடைத்தல் வேண்டும். அடைத்தபின் அகத்தழல் மண்டிலத்தால் வேறு செய்தல் வேண்டும். அஃதாவது திருவைந்தெழுத்தினை உணர்வின்கண் உணர்வதாகிய தழலோம்பு நற்றவத்தினால் வேறு செய்தல் என்பதாகும். இதுவே அருளமுத யாறு தங்குவதற்குச் செய்யும் வழிமுறையாகும். அதுவே ஆருயிர்க் குறுதியாம் வலியுமாகும். குறிப்புரை: மோழை - அமுதநதி. முழை - கபாலவாயில். கோழை அஞ்ஞானம். அண்ணற்குறிப்பு - சிவச்சிந்தையால். ஆழ அடைத்து - வெளிப்படாமல் செய்து. அனலிற் புறம்செய்து - தவத்தால் நீக்கி. தாழ - அமுதம் தங்க.
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாகுமே. பொருளுரை: ஆசூசமாகிய தீட்டுத்தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத் தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாகுவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரண முதலாகும் என்னும் உண்மை புலனாகும். குறிப்புரை: ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாம் இடம். மானிடம் - மனிதசரீரம்.
ஆசூச மில்லை அருநிய மத்தருக்கு ஆசூச மில்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு ஆசூச மில்லையாம் அங்கி வளர்ப்போருக்கு ஆசூச மில்லை அருமறை ஞானிக்கே. பொருளுரை: மேலோதிய மெய்ம்மையினை அருளானறிந்தவர் தீண்டாமை என்னும் தீட்டு யாண்டும் உண்டெனக் கூறவும் உளம் கூசுவர். இத் தீட்டுச் செந்நெறி நான்மையின் முதற்படியாம் அருநிமயத்தர் என்னும் சீலத்தார்க்கும் கிடையாது. அதுபோல் அரனை அருச்சிப்பாராகிய நோன்பினர்க்கும் இல்லை. அங்கி என்னும் திருவைந்தெழுத்தால் அகத்தழல் ஓம்பும் செறிவினர்க்கும் இல்லை. அருமறையாகிய 'சிவசிவ' என்னும் நான்மறை நவிலும் நல்லாராம் அறிவினர்க்கும் நண்ணும் தீட்டு நாளும் இல்லை. அறிவினர் - திருவடியுணர்வினர்.
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்குங் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணவொண் ணாதே. பொருளுரை: செந்நெறி முதல்வர் நம்மூலரும், நால்வரும், சித்தாந்த முதல்வர் நால்வரும் அருளிச்செய்த திருமறை திருமுறையாகிய முறையே புகழ்நூல் பொருள் நூல்களை ஓதி வழிபட்டுநின்று விழுமிய முழுமுதல்வனாம் எட்டுவான் குணத்து இறைவனை வணங்குவார்க்கு அம்முறைகள் மறிக்கப்பட்டுச் சுழியில் வீழ்த்துவதொத்த மனம் வழிப்பட்டுச் சிவபெருமான் திருவடியிணையினையே ஒருவாது அருளால் நினையும் தூய்மைக்குத் துணையாகும். அதனால் திருவடியுணர்வு தொடங்குவதாகும். இந் நன்னெறி வாராது பிறவிக்குழியிற் பட்டுழலும் புன்னெறியிற் செல்லும் தின்மையோர் சிறப்பருளும் சிவபெருமானின் திருவெண்ணீறு, சிவமணி, திருவைந்தெழுத்து மூன்றும் முறையே உடல் உள்ளம் உணர்வு எனக் கருதச் செய்யும் திருக்குறியினைக் கைக்கொள்ளார். மனவடக்கம் உடையார்க்கின்றி மற்றவர்கட்குச் சிவபெருமானைக் காணவொண்ணாதென்க. குறிப்புரை: சுழிபட்டு - மனம் அடங்கி. குழிபட்டு - கருக்குழியை நினைந்து. குறிகள் - சிவக்குறிகள். கழிபட்டவர் - மனம் அடங்கினவர்.
தூய்மணி தூயனல் தூய ஒளிவிடுந் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவு மாகுமே. பொருளுரை: தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான். தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய்நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன்மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ் விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூயமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. தூர்: மூலம்; முதல். அவ்விரண்டன் மூலமாகிய அருளையும் தூமாயையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். குறிப்புரை: தூய்மணி - சிவம். தூயனல் - தன்மாத்திரை வடிவம். தூர் - வேர், மூலம்.
தூயது வாளாக வைத்தது தூநெறி தூயது வாளாக நாதன் திருநாமந் தூயது வாளாக அட்டமா சித்தியுந் தூயது வாளாகத் தூயடிச் சொல்லன்றே. பொருளுரை: என்றும் பொன்றாத் தன்மைசேர் இயற்கைத் தூய்மை வாய்ந்தவன் செம்பொருளாம் சிவபெருமானாவன். அவன் ஆருயிர்கள் மாட்டுவைத்த நீங்காதோங்கும் பேரருளால் கைம்மாறு கருதாது நன்னெறி நான்மைத் தூநெறி யமைத்தருளினன். இயற்கைத் தூய்மையாய் யாவற்றையும் தூய்மையாக்கும் தூயது ஒளியுடைத் திருவருளாகும். அதுவே சிவபெருமானின் திருமேனியும் திருப்பெயரும் ஆகும். அது செந்தமிழ் திருவைந்தெழுத்தாம் 'சிவயநம' என்ப. திருவைந்தெழுத்தின் பெறுபேறாம் அகம்புறம் இகவாது விளங்கும் சிவ விளக்கமாகிய விழுத்தூய்மை தன்பாலதாக, வாய்க்கப் பெறுவர். அவர் விழையின் எண்பெரும்பேறும் அவர்க்கு எண்மையாக நண்ணும். யாவற்றையும் தூய்மையாக்கும் திருவைந்தெழுத்தே வாட்படையாகக் கைக்கொண்டு இடையறாது ஒழுகுவது நடைமிகு தூநெறியாகும். அதனால் அத் திருவைந்தெழுத்தினை நெஞ்சே இடையறாது நவில்வாயாக. வாளாக - ஒளியுடையதாக. வாளாக - மெய்யுணர்வு வாட்படையாக. குறிப்புரை: தூயது - சிவம். வாளாக - ஒளியுடையதாக. தூயது - சுத்தமுடைமை. வாளாம் - சித்து வடிவாம். தூயது ஆள - வாட்படையாக. தூயடி - நல்வழி. படைக்கல. அப்பர், . - .
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவ ரன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மாள்குகின் றாரே. பொருளுரை: மெய்ப்பொருளாய் நின்ற விழைதகு புண்ணியன் சிவபெருமானாவன். அவனே எந்தையுமாவன். அவனது திருவருளைத் திருவைந்தெழுத்தால் போற்றுபவர் சீரிய அடியாராவர். அவரைச் சாரும் நாட்டமில்லாத பிறர் மாறிமாறிப் பின்னும் புரிபோன்றதாய் நிலைபெற்று நின்ற துன்பச் சுழியாகிய பிறவியின்கண் வீழ்ந்து துன்புறுதற்கு வாயிலாகிய மருளுடையவராவர். அவர் அம் மருளுக்கு அடிமைப்பட்ட உள்ளத்தவராவர். அதனால் என்றும் நீங்கா மயக்கத்துத் தூங்குவர். தூங்குதல் - தங்குதல். பின்னும்புரி - முறுக்கும் கயிறு. குறிப்புரை: பொருளதுவாய் - மெய்ப்பொருளாய். சுருளதுவாய் - புரிபோன்றதாய். துன்பச் சுழி - பிறவிச் சுழல். மருள் - மயக்கம்.
வினையா மசத்து விளைவ துணரார் வினைஞானந் தன்னில் வீடலுந் தேரார் வினைவிட வீடென்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவறி யாரே. பொருளுரை: ஊழ்வினை காரணமாக ஒரோவழி மெய்யடியார்கட்கும் அசத்து விளையும். அதனையும் உய்த்துணரார். அசத்து வருமாறு: "உம்பின் கண்ணதாகிய பிராரத்தவாசனை உயிர்க்குத் தாக்குவதாயுள்ளளவும் அதனானே வரும் விருப்பு வெறுப்புக்களும், அவை பற்றிக் காட்சிப்படும் மண் முதன் மாயைகளும், அவை பற்றி நிகழும் விபரீதவுணர்வுமாகிய அசத்துக்கள்.அவ்வினை திருவடியுணர்வாகிய சிவஞானத்தால் நீங்குவதும் அருளால் தெரியார். வினை அருளால் அகலத் திருவடிப் பேறெனச் செந்தமிழ்த் திருவைந்தெழுத்தின் விரிவாகிய திருமறை ஓதும் அருமறையினையும் உணர்ந்து ஓதார். அவர் யாரென்னில் இருவினைக்கு அடிமைப்பட்ட கருமத்தராவர். அக்கருமத்தால் மீண்டும் மீண்டும் பல பிறப்புத் துன்பம் மிகும் என்னும் விளைவினையும் அறியார். வினை அகலத் திருவடிப்பேறாம் என்னும் மெய்ம்மை வரும் திருவைந்தெழுத்தின் வேறுபாட்டானுணர்க. 'சிவயநம'. இதன்கண் 'நம' என்பது வினையின் முதன்மையகன்று அவ்வினை கடையில் தடையாகநிற்பது குறிக்கும். 'சிவயசிவ' என்பது அவ் வினையகன்று அவ்வுயிர் சிவபெருமானுக்கு அடிமையாய் இறைபணியினொழுகும் இயல்பினைக் குறிக்கும் குறிப்பாகும். இவ்வுண்மையினை வரும் தொடர்பால் நினைவுகூர்க. முன்பின் உறுநமவால் முன்பின் மலம் ஆம் சிவத்தால், இன்பின் வழி விழுப்பே றெண். குறிப்புரை: வினையாமசத்து - வினையாகிய கன்மம். வீடல் - கெடுதல். வீடென்னும் வேதம் - அறம், பொருள், இன்பம், வீடு என்னும் தமிழ் வேத நான்கினுள் வீடு என்று சொல்லப்படும் வேதம். வினையாளர் - கன்மம் உடையவர்.
எட்டாம் தந்திரம். முத்திநிந்தை பரகதி யுண்டென இல்லையென் போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடு வார்கடை தோறுந் துரகதி யுண்ணத் தொடங்குவர் தாமே. பொருளுரை: திருவருளால் செம்பொருட்டுணிவினரால் செப்பியருளப்பட்ட முப்பொருள் உண்மை விளக்கும் திருமறை திருமுறை முதலிய நூல்களனைத்தும் திருவடிப்பேறாம் பரகதியுண்டென அறுதியிட்டு உறுதியுடன் மொழியும். அங்ஙனமிருப்பவும் சிலர் இல்லை என இயம்புகின்றனர். இன்னும் சிலர் ஒன்றுமட்டும் உண்டு ஏனைய இல்லை என்கின்றனர். பின்னும் சிலர் 'யாங்களே கடவுளென்றிடும் பாதகத்தவ'ராகின்றனர். மற்றும் சிலர் உண்டுபோல் உரைத்து ஈற்றில் இல்லையென்கின்றனர். இவர்கள் அனைவரும் இல்லையென்போர்களேயாவர். இத்தகையார் இம்மையிலும் மறுமையிலும் துன்பமாகிய இருளில் தங்குவர். இதுவே நரககதியாகும். நரககதி என்பது நரகதி எனக் கடைக்குறைந்து நின்றது. நரககதியில் தங்கும் இன்பிலாத் துன்பினராம் இவர்கள் தன்மையினை நானிலம் அறியும் மேலும் சோற்றாவியற்றுக் கடைதொறும் கைகூப்பி ஏற்றாலும் பிச்சை கிடையாது. ஏக்கற்றிருக்கும் இரவலருமாவர். இரக்கும் கதி இரகதி எனநிற்பது செய்யுட்டிரிபு. உண்ணத் தொடங்கி அங்கும் இங்குமாய்க் குதிரையோட்டம் ஓடுவர். துரககதி என்பது துரகதி என நின்றது. குறிப்புரை: நரகதி - நரககதி. இரகதி - இரக்கும் தொழில். கடை தோறும் - வாயில்கடோறும். துரகதி உண்ண - ஓட்டமாய்ச் சென்று அலைய.
புறப்பட்டுப் போகும் புகுதுமென் னெஞ்சில் திறப்பட்ட சிந்தையைத் தெய்வமென் றெண்ணி அறப்பட்ட மற்றப் பதியென் றழைத்தேன் இறப்பற்றி னேன்இங் கிதென்னென்கின் றானே. பொருளுரை: அகத்தே நின்று புறப்பட்டுப் போவதும் வருவதுமாகிய உயிர்ப்பினையும் நாட்டத்தினையும் திருவருளால் முறைப்படுத்தி ஒருமுகப்பட்ட எண்ணத்தால் முழுமுதற் சிவபெருமானை இறையாகிய பதி என்று எண்ணினேன். பற்றற்றவிடத்துப் பற்றுற்றுநிற்கும் சிவபெருமானைப் பதி என்று அழைத்தேன். சிற்றுணர்வும் சுட்டுணர்வுமாகிய யான் எனதென்னும் செருக்கு இற்றகலச் சிவபெருமான் திருவடியினைப் பற்றினேன். அவனும் இங்குற்றேன்; இஃதென்னென்று அருளுகின்றனன். குறிப்புரை: புறப்பட்டுப்போகும் - பன்னிரண்டங்குல அளவுள்ள பிராணவாயுவில் பிரிந்துபோகும் நாலங்குல அளவுள்ள பிராணவாயுவும். புகுதும் - கூடிக்கொள்ளும். அறப்பட்ட - அற்ற இடத்தில் உறுவதான. இற - சீவபோதம் நீங்க. அங்கத்தை. அப்பர், . - .
திடரிடை நில்லாத நீர்போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக் கடலிடை நில்லாக் கலஞ்சேரு மாபோல் அடலெரி வண்ணனும் அங்குநின் றானே. பொருளுரை: மேடான இடத்தில் தங்கிநில்லாது பள்ளத்தின் வழிப்பாய்ந்தோடும் வெள்ளநீர்போல் உடலிடை நில்லாது அன்புப் பள்ளம் நோக்கி இன்பப் பேறருள் முன்போடிப்பாயும் உறுபொருளாகிய சிவபெருமானை ஆருயிர்க்குக் காட்டி அணைப்பித்தருளுவது திருவருளேயாகும். மரக்கலம் கடலிடையே நின்றுவிடாது கரைசேர்ந்து மக்களுக்கு அரும்பொருள் அளித்துப் பெரும்போகந் தருவதாகும். அதுபோல் அடலெரி வண்ணனும் ஆருயிர் பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரைசேர்தற் பொருட்டு இணையில் புணையென அங்கு நின்றருளுகின்றனன். குறிப்புரை: திடரிடை - மேட்டில். உறுபொருள் - சிவன். கலம் - மரக்கலம். அங்கு - உடலில். துன்பக். அப்பர், . - .
தாமரை நூல்போல் தடுப்பார் பரத்தொடும் போம்வழி வேண்டிப் புறமே யுழிதர்வர் காண்வழி காட்டக்கண் காணாக் கலதிகள் தீநெறி செல்வான் திரிகின்ற வாறன்றே. பொருளுரை: தாமரை நூல்போன்ற மிகவும் மென்மைத் தன்மை வாய்ந்த அன்பு நாரால் அஞ்செழுத்தும் நெஞ்சு தொடுத்துச் சிவபெருமான் திருவடியில் மனம் படியுமாறு தடுத்துப் பிணைப்பர். பரமாகிய சிவபெருமான் திருவடியிற்றலைக் கூடும் நன்னெறி நான்மை வழிச்சென்று அனைத்துயிர்க்கும் அரும்பெரும் திருவருட் காவலராய்ப் புறம் புறம் திரிவர். அவர்கள் அருளால் கண்டு சிவபெருமான் திருவடியைக் காணும் வழியை அங்கை நெல்லிக் கனியெனக் காட்டவும் தீவினையாளர்கள் காண்கின்றிலர். கலதிகள் - தீவினையாளர்கள். அவர்கள் பிறப்புக்கு வாயிலாம் தீநெறிக்கண் செல்லுதற்பொருட்டுப் பலவாறு திரிந்து அலையும் பாவவினைஞராவர். குறிப்புரை: தடுப்பார் - மனத்தைத் தடுப்பார். புறமே உழிதர்வர் - துறவறத்திலே செல்வர். காண்வழி - அறியத்தக்க நெறி. கலதிகள் - மூடர். செத்துச். திருக்குறள், . - .
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி யாவனைக் குறித்துடன் காடும் மலையுங் கழனி கடந்தோறும் ஊடும் உருவினை யுன்னகி லாரன்றே. பொருளுரை: திருவருளால் அறியாமையும் புலக்கோளறிவும் தம்மை மூடுதலின்றி நன்னெறி நான்மைவழிச் சென்று தலைப்படும் பேரன்பு வாய்ந்த மக்கள் நந்தி திருவடியினைக் கூடுவர். அவனையே இடையறாது குறித்துக் காடாகிய முல்லையும், மலையாகிய குறிஞ்சியும், கழனியாகிய மருதமும், கடமாகிய பாலையும்ஆகிய எல்லாப் பக்கங்களிலும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களையும் மறைந்து நின்றருளும் திருவுருவினையும் காணுமாறு சென்று கண்டு வழிபட்டுக் கனிந்தொழுகுவர். இவையனைத்தையும் கண்டும் கேட்டும் ஒன்றும் நினையாதிருக்கின்றனர் தீவினையாளர். காடு முதலாகிய வைப்புமுறை 'மாயோன் மேய காடுறை யுலகமும்' என்னும் தொல்காப்பியப் பொருள் நூற்பாவை முழுதொத்துப் போதரும் விழுமிது காண்க. குறிப்புரை: மூடுதல் - அஞ்ஞானம் சேருதல். கடம் - பாலைநிலம். ஊடும் உருவினை - ஊடுருவி நிற்கும் உருவமாகிய சிவத்தை.
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்குங் குணக்குங் குறிவழி நாவினின் மந்திர மென்று நடுவங்கி வேவது செய்து விளங்கிடு வீரன்றே. பொருளுரை: சிறப்பினை நல்கும் சீருடைப் புலம் தெற்கும் வடக்கும் ஆகும். ஆவது: சிறப்பு; வீடுபேறு; திருவடியுணர்வு. செந்நெறிச் செல்வர் இப்புலம் சேர்வர். பிறப்பினை நல்கும் பீடுடைப்புலம் மேற்கும் கிழக்குமாகும். நீர்க்குமிழியனைய நிலையில்லா வாழ்வினை ஓர்த்துணராது அமரர்கள் விரும்புவர். அவர்கள் அப் புலஞ்சேர்வர் சிறப்பினர் என்றும் ஓதுங்குறிவழி நாவினிலைந்தெழுத்தை நாளும் நவில்வர். இந்நிலைக்குப் பெருந்துணையாயுள்ள நடுநாடியாகிய அங்கியின்வழி உயிர்ப்பினைச் செம்மைப்படுத்தி விளங்கிடுவீராக. தெற்கும் வடக்கும் செந்தமிழ்ச் செல்வராம் செம்பொருட்டுணிவினர் சென்று வருவது திருமூலர் வரலாற்றாலும் பிறவாற்றாலும் உணரலாம். குறிப்புரை: நடுவங்கி வேவது செய்து - சுழுமுனையில் மனதைச் செலுத்தி.
மயக்குற நோக்கினும் மாதவஞ் செய்வார் தமக்குறப் பேசின தாரணை கொள்ளார் சினக்குறப் பேசின தீவினை யாளர் தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே. பொருளுரை: நன்னெறி நான்மை நற்றவமாகிய அழிவில் மாதவஞ் செய்வார் நன்னெறிக்கண் வந்து கூடுமாறு அருளால் நோக்கினும், தமக்குப் பொருந்துமாறு செவியறிவுறுக்கும் திருவைந்தெழுத்தின் திறத்தினைக் கொள்ளார். அவர் யாரெனின் பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிக்கும் சினமுடன் பேசும் தீவினையாளர். அவர்க்கு நீங்கா உறவாவது வல்வினையாகும். அதனையே எங்கும் தாங்கி நின்றாராவர். குறிப்புரை: பேசின - உபதேசித்த. தாரணை - மந்திரம்.
இலக்கணாத் திரயமவிட்ட விலக்கணை தான்போம் வியோமத்துத் தொட்டு விடாத துபசாந்தத் தேதொகும் விட்டு விடாதது மேவுஞ்சத் தாதியிற் சுட்டு மிலக்கணா தீதஞ் சொரூபமே. பொருளுரை: 'இலக்கணை என்பது ஒரு பொருளினது இலக்கணத்தை மற்றொரு பொருட்குத் தந்துரைப்பது; அது விட்ட விலக்கணை, விடாத விலக்கணை, விட்டும்விடாத விலக்கணை என மூவகைப்படும், 'நெஞ்சினைச் சென்றது என்று கூறின் விட்ட விலக்கணையாகும். புளித்தின்றான் என்பது விடாத விலக்கணையாகும். 'பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி' விட்டும் விடாதவிலக்கணையாகும். மேலவற்றை வரும் வெண்பாவால் நினைவுகூர்க: ஒன்றன் இலக்கணமற் றொன்றற்கீந் தீங்குரைத்தல் நின்ற இலக்கணையாம் நேர்மூன்றாம் - ஒன்றதுதான் விட்ட விடாதவிட் டும்விடாத சென்றதுகொல் ஒட்டுபுளி பாயிருள்மூன் றோர். ஆருயிர் அறிவுப் பெருவெளியாம் நுண்ணிய வியோமத்துட் போதல் விட்ட விலக்கணையாம். ஆருயிர் என்றும் அறிவுப் பெருவெளியின் தாங்குதலிற்றான் நிற்கின்றது. அது 'போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியன்' சிவபெருமான் என்னும் செந்தமிழ்மறை முடிபினான் உணரலாம். அவ்வுயிரைப் போதல் போலக் கூறியதனால் விட்ட இலக்கணையாம். அவ்வுயிர் செயலற்றொடுங்குவதாகிய ஒழிவிலொடுக்கம் உபசாந்தம் எனப்படும். அதன்கண் அவ்வுயிர் தொகும் என்றல் விடாத இலக்கணையாகும். புளித்தின்றான் என்பது மரத்தை விட்டு அம்மரத்தின் தொடர்பாய பழத்தைக் குறிப்பதுபோல் செயலற்றொடுங்குவதென்பதும் நிலையிலாப் பொருளாகிய வுலகியற் செயலற்று நிலையுடைப் பொருளாகிய சிவச் செயலுற்று ஒடுங்குவது என்பதைக் குறிப்பதாகும். அதனால் இது விடாத விலக்கணையாகும். ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் புலன்களை அவ்வுயிர் செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் பொறிகள் வழியாகக் கொள்ளுவது விட்டும்விடாத இலக்கணையாம் ஞாயிறு இருளைப் போக்குவதும் ஒளியை ஆக்குவதும் செய்கின்றது. ஆனால் இருளைப் பருகுவதும் ஒளியைக் காலுவதும் இல்லை. பருகுவது - குடிப்பது. காலுவது - கக்குவது. அதுபோல் ஆருயிரும் ஓசை முதலிய புலன்களுக்குரிய பொருளையோ, புலனையோ பற்றுவதில்லை. பொருள்கள் வழியாக வரும் புலன்களை இறுப்பு மெய்யாகிய புத்திதத்துவம் ஏற்று ஆருயிரின் உணர்வின்கண் இன்பத்துன்ப நிழலாய்த் தோன்றுமாறு செய்யும். செய்யவே அவ்வுயிர் இன்ப துன்பத்துழலும். உழலும் எனினும் அழுந்தும் எனினும் அனுபவிக்கும் எனினும் ஒன்றே. இஃது 'ஈத்து உவக்கும் இன்பம்' போன்றதாகும். இது விட்டும் விடாத இலக்கணையாகும்.இம்மூன்றற்கும் வேறாய் ஆருயிர் பேருயிராம் சிவபெருமானுக்கு அடிமையாய் அவன் திருவடிக்கீழ் ஒடுங்கி இன்புறுவதே மாறா இயற்கை உண்மையாகும். இதனையே 'இலக்கணாதீதம் சுட்டும் சொரூபம்' என ஓதியருளினர் சொரூபம் - மாறாவியற்கை. குறிப்புரை: தொகும் - அடங்கும். சத்தாதி - ஓசை முதலிய. விட்ட இலக்கணை, விடாத இலக்கணை, விட்டுவிடாத இலக்கணை என மூன்றும்.
எட்டாம் தந்திரம். இலக்கணாத் திரயம் வில்லின் விசைநாணிற் கோத்திலக் கெய்தபின் கொல்லுங் களிறைந்துங் கோலொடு சாய்ந்தன இல்லு ளிருந்தெறி கூரும் ஒருவற்குக் கல்கலன் என்னக் கதிரெதி ராகுமே. பொருளுரை: ஓங்கார வில்லும் நீங்கா ஒப்பில் திருவைந்தெழுத்து நாணும், பாங்கார் ஆருயிர் அம்புமாகக் கனிந்த திருவருளால் கோத்துச் சிவனாகிய குறி எய்துமாறு எய்தபின் புலனாகிய கொல் யானை ஐந்தும் அக் கோலால் சாய்ந்தன. அஃதாவது ஆருயிரின் முனைப்புத் தன்மை அற்றது என்பதாம். அறவே செயலற்ற நிலையாகிய இல், சமாதி என்ப. அதனுள்ளிருந்து அறிவுப் பெருந்திருவாம். அருளொளி மிகும். அவ்வுயிர்க்குச் செம்மணி ஒளிபோன்று சிவக் கதிர் உணர்விற் குணர்வாய்த் தோன்றியருளி இன்பூட்டும் என்க. குறிப்புரை: வில் - பிரணவம். விசைநாண் - அஞ்செழுத்து, கோத்து - சீவன் ஆகிய அம்பு கோத்து. இலக்கு - சிவம் ஆகிய குறி. களிறு ஐந்து - இந்திரியங்கள் ஐந்து. கோலொடு - சீவனுடைய பசுத்தன்மையுடன். இல் - சமாதிநிலை எறி கூரும் - எய்யும், கல் கலன் - மணி ஒளி.
எட்டாம் தந்திரம். தத்துவமசி வாக்கியம் சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார் தாவு பரதுரி யத்தினில் தற்பதம் மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பதம் ஓவி விடுந்தத் துவமசி உண்மையே. பொருளுரை: ஆருயிர்ச் செயலறலாகிய சீவ துரியத்து நீ என்னும் தொம்பத நிலையே அவ் வுயிர்க்கு உள்ளது. அப்பாலாகும் அருட்செயலறல் என்னும் பரதுரியத்து அவ் வுயிர்க்கு அதுவாதல் என்னும் தத்பத நிலையே உளதாகும். பொருந்திய சிவச் செயலறலாகிய சிவதுரியத்து சிவத்தழுந்தலாகிய துய்ப்புநிலை. ஆகின்றாய் என்னும் அசிபத நிலையுளதாகும். இம் மூன்றும் செம் பொருளாம் சிவத்துய்ப்பில் அடங்கிவிடும். என்னை? இன்பத்துய்ப்பு மாற்றம் மனம் கழிய நின்ற தொன்றாகலின் என்க. ஆதல் அணைதல் அழுந்தல் சிவனடிக்கன்பு, ஓதுசெறிவோடறிவாம் ஓர் என்றவாறு ஆதல் பரதுரியத்தும், அணைதல் சிவதுரியத்தும் அழுந்தல் ஓவிடும் தத்துவமசி உண்மையினுங் காண்க. குறிப்புரை: ஓவி விடும் - விட்டு நீங்கும்
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப் பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து வீறான தொந்தத் தசிதத்வ மசியே. பொருளுரை: அருஞ்சைவர் தத்துவம் ஆறாறும் நாமல்ல நம்முரிமையுமல்ல என வுணர்ந்து பற்றறல் உண்மைகாண் சுத்தமாகும். இந்நிலை தொம்பதச் சுத்தம் என்ப. ஒழிவொடுக்கத்துத் தற்பத உண்மையாகும். திருவடிப் பேற்றினுக்குரிய ஆருயிர் இவற்றினின்றும் அகன்று சிவகுருவின் அருட் கொடையால் சிறப்பான நீ அது ஆகின்றாய் என்பதே தத்துவமசி என்னும் சொல்லுக்குரிய செம்பொருளாகும். குறிப்புரை: சீவன் நீங்கி - பசுத்துவம் ஒழிந்து. பிரசாதத்து - குருவின் கருணையால்.
துவந்தத் தசியே தொந்தத் தசியும் அவைமன்னா வந்து வயத்தேக மான தவமுறு தத்துவ மசிவே தாந்த சிவமா மதுஞ்சித் தாந்தவே தாந்தமே. பொருளுரை: துவந் தத் அசி என்னும் சொல்லே தொந்தத்தசியாம். அவற்றின் பொருள் உண்மைநிலை பெறுதற் பொருட்டு வந்த தன்மையுடையது இவ் வுடம்பாகும். பெருமைமிக்க தவக்குறிப்பாம் தத்துவமசி வேதாந்த விளக்கமாகும். 'சிவயநம' என்பது சித்தாந்த விளக்கமாகும். சித்தாந்த வேதாந்தம் இரண்டும் செம்பொருளே.
தொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம் நம்பிய முத்துரி யத்துமே னாடவே யும்பத மும்பத மாகும் உயிர்பரன் செம்பொரு ளான சிவமென லாகுமே. பொருளுரை: தொம்பதம் தற்பதம் சொல்லப்படும் அசிபதம் மேலோதிய வாறு சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என முத்துரியமாகும். பொருந்தும் முப்பதமும் உயிர் அருள் செம்பொருளான சிவம் எனச் சிறப்புறச் சொல்லலும் ஆகும்.
வைத்த துரிய மதிற்சொரு பானந்தத்து உய்த்த பிரணவ மாமுப தேசத்தை மெய்த்த விதயத்து விட்டிடு மெய்யுணர் வைத்த படியே யடைந்துநின் றானன்றே. பொருளுரை: மூவகையான் மேலோதி அமைத்த துரியத்தின்கண் உண்மை அறிவின்பமாகிய சொருபானந்தத்து உய்ப்பது ஓமொழி மறை என்க. அம் மறையினை ஏனைய நினைவுகளை விட்டிடப் பயின்ற வுள்ளத்து நிலைநாட்டத் திருவடியுணர்வு கைகூடும். அது கைகூடவே சிவபெருமான் திருவடியின்பம் எய்தும்.
நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப் பினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத் தனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி மனவா சகங்கெட்ட மன்னனை நாடே. பொருளுரை: நனவு கனவு உறக்கம் பேருறக்கம் உயிர்ப்படங்கல் ஐந்தையும் நாதமாகிய ஒலியின் முடியில் தங்கவைத்துவிடுக. அதன்பின் வேறுபாடுற்று நீங்கியமலத்தையும் வைத்திடுக. அதன்பின்பு உண்மையுணர்தலாகிய சுத்த நிலையதாம் சிவனிலை வாய்க்கும். ஒலியாகிய நாதமுடிவின்கண் செயலற்று ஒடுங்குநிலை சாந்த நிலையாகும். அந் நிலையின் நின்று மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன் சிவபெருமான் ஆதலின் அவனை நாதமுடிவில் வைத்து நாடுக. நாடுதல் - சிந்தித்தல். குறிப்புரை: பினமாம்-பின்னமாகிய. மனவாசகம் - மனமும் வாக்கும்.
பூரணி யாது புறம்பொன்றி லாமையின் பேரணி யாதது பேச்சொன்றி லாமையில் ஓரணை யாதது வொன்றுமி லாமையில் காரண மின்றியே காட்டுந் தகைமைத்தே. பொருளுரை: ஒப்பில் ஒரு பொருளாம் சிவம் தனக்கும் புறம்பாக வேறொன்றிலாமையால் எல்லாவற்றையும் உள்ளடக்கி நிற்கின்ற இயற்கை அகல் பரப்பினையுடையது. மேலும் பாலனாய் வளர்ந்திராத முழு வளர்ச்சிப்பான்மையினையுடையது. இவற்றால் அது புதுநிறைவோ புது வளர்ச்சியோ கொள்வதில்லை. யாதலால் பூரணியாதது என்றருளினர். அச் சிவம் பேச் சிறந்தது ஒன்றாகலின் ஒரு பேரும் அணியாததாகும். இயல்பாகவே பாசங்களினின்றும் நீங் கினமையால் எவ் வகைத் தொடக்கும் இல்லாததாகையால் அஃது எத்தகையார் நினைவாகிய ஓர்வுக்கும் அப்பாற்பட்டது. தன்னைக் காட்டுதற்குத் தனக்குமேலொரு காரணமின்றித் தானே காரணமாய் ஆருயிரின் செவ்வி நோக்கி வெளிப்பட்டருள்வன். அத்தகைய இயல்பு வாய்ந்தவன் சிவன். குறிப்புரை: பூரணி - வளர்ச்சி. பேர் - ஊர் பேர் முதலியன. ஓர் - ஒன்றை. காட்டும் - வெளிப்படும்.
நீயது வானா யெனநின்ற பேருரை ஆயது நானானேன் என்னச் சமைந்தறச் சேய சிவமாக்குஞ் சீர்நந்தி பேரருள் ஆயது வாயனந் தானந்தி யாகுமே. பொருளுரை: வடமொழியாளர் நீ அதுவானாய் என்னும் தொம் தத்அசி என்னும் உரையே பேருரை என்பர். பேருரை - மாவாக்கியம். மெய்ம்மை நோக்கின் தென்மொழியாளர் கூறும் அது நீ ஆனாய் என்னும் தத்துவம் அசி என்னும் பேருரையே சீர்மையும் முறைமையும் செறிந்து திகழ்வதொன்றாகும். அது - சிவம். நீ - ஆருயிர். அசி - இருக்கின்றாய். 'நும்பின் எம்மை நுழையப் பணியே' என்னும் சீர்மையினாலும், இறைவனை முற்கூற வேண்டும் முறைமையினாலும் தென்னெறியாளர் கூறும் தத்துவமசியே சிறப்புடைத்தென்க. இம் முறைப்படி யொழுகச் சிறந்த பெருநந்தியின் பேரருள் செம்மைச் சிவபெருமானாக ஆருயிர்களை ஆக்குவிக்கும். அந் நிலையில் அவ்வுயிர் அருள் வடிவேயன்றி எல்லையிலாப் பேரின்ப வடிவமாயும் சிறக்கும். பண்டை மறைகள் என்பன தொன்மைத் தண்டமிழ்த் தனிமுதல் மறைகளையே யாம். குறிப்புரை: நீ யதுவானாய் - துவம் தத் அசி என்பர் வடமொழியாளர். பேருரை - மகாவாக்கியம் என்பர் வடமொழியாளர். அது நானானேன் என்னச் சமைந்து - "நீ அதுவானாய்" என்ற நிலை. 'அது நான் ஆனேன்" என்று நிற்க. சேய சிவம் - அதுவரை எட்டாமலிருந்த சிவம். அனந்தானந்தி - முடிவிலா ஆனந்தம் எய்துமவன்.
உயிர்பர மாக உயர்பர சீவன் அரிய சிவமாக அச்சிவ வேதத் திரியிலுஞ் சீராம் பராபரன் என்ன உரிய உரையற்ற வோமய மாமே. பொருளுரை: ஆருயிர் திருவருள் நினைவால் பரமாகிய திருவருள் நிலையினை எய்தும். அதன்மேல் சிவபெருமான் நிலையினை எய்தும். எய்தும் - சாரும். திரிபோன்று அறிவுக்குப் பற்றுக்கோடாக விளங்கும் வேதத்தின் கண்ணும் சிவபெருமான் நிலையே சிறப்பு நிலையாகும். இந்நிலையினை உரையற்று உரைக்கும் நிலையில் ஓமொழிவண்ணம் என்ப. குறிப்புரை: வேதத்திரி - அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று வேதங்கள். ஓமயம் - பிரணவ வடிவம்.
வாய்நாசி யேபுரு மத்தகம் உச்சியில் ஆய்நாசி யுச்சி முதலவை யாய்நிற்குந் தாய்நாடி யாதிவாக் காதி சகலாதி சேய்நா டொளியாச் சிவகதி யைந்துமே. பொருளுரை: வாய், நாசி, புருவம், மத்தகம், உச்சி என்னும் ஐந்திடமும் சிவ விளக்கம் தோன்றும் நிலை என்ப. புருவ நடுவிற்கும் உச்சிக்கும் இடையேயுள்ள நெற்றி நடுவினை மத்தகம் என்ப. இவ் வைந்தும் ஒரு புடையொப்பாக முறையே படைப்பாதி ஐந்தொழிலுக்கும் பகரலாம் நெற்றி நடுவாகிய மத்தகத்துச் சமனை உன்மனை என்னும் திருவருள் நிலைகள் உளவென்க. இவையிரண்டனையும் நடப்பாற்றல் வனப்பாற்றல்களாகக் கூறுதலும் ஆம். தாய் நாடியாகிய நடு நாடி முதலாக ஒலி முதலாய அனைத்தும் எளிதின் விளங்குவதுமட்டுமல்லாமல் கழிபெருஞ்சேணொளியும் விழிமுன் தோன்றுவது போல் அகத்துத் தோன்றும். அதுவே சிவநிலை என்க. குறிப்புரை: சிவகதி - சிவத்துக்கு இருப்பிடம். ஐந்து - வாய், நாசி, புருவம் மத்தகம், உச்சி.அவ்விடத்துச் சமனை, உன்மனை ஆகிய ஆதாரங்களை உளவாதல் பற்றிக் கூறினார். தாய் நாடி - சுழுமுனைநாடி.
அறிவறி யாமை இரண்டு மகற்றிச் செறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப் பிறிவறி யாது பிரானென்று பேணுங் குறியறி யாதவர் கொள்ளறி யாரே. பொருளுரை: ஆருயிர்க்குச் சுட்டறிவும் சிற்றறிவும் ஏற்படுவது கட்டு நிலையாகும். இவை யகன்றாலன்றி முற்றறிவாகிய ஒட்டு நிலை வாய்க்காது. ஆணவ மறைப்போடு மட்டும் தங்கி ஏதும் அறியாதிருத்தல் அறியாமையாகும். ஆதலால் அறிவு அறியாமை இரண்டினையும் திருவருள் ஒருங்ககற்றும். இது தூய்மை செய்து தூயவாயிட்ட பொடிக் கோலத்தினை மாண்புமிகு மாக்கோலம் இடுங்கால் அகற்றுவதை யொக்கும். எங்கணும் செறி நிறைவாய் நின்ற பேரறிவாம். சிவனை நம்மை விட்டு என்றும் பிரிவின்றி நீங்காதுறையும் சிவபெருமானை அருளால் அவ்வாறே உணர்ந்து பேணுதல் வேண்டும். அங்ஙனம் பேணும் பீடு குறியாதவர் திருவடிப் பேறு எய்தும் கொள்கை யறியாதவராவர். கொள்கை: கொள், முதனிலைத் தொழிற்பெயர். குறிப்புரை: செறிவறிவாய் - எல்லாம் அறிபவராய். கொள்-கொள்கை.
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்புங் கலப்பும் அறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால் அறிவான் அறிந்த அறிவறி யோமே. பொருளுரை: மெய்ந்நூலுணர்ந்த மேலோர் அருளால் அறிவது அப்பும் அனலும். அப்பு - நீர். அனல் - தீ. அஃதாவது மெய்களாகிய தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தல். பொருள் நுட்பம் உணர்வார் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்துணர்வர். இங்ஙனம் அறிவதும் எல்லாம் ஒருங்குணரும் எண் குணமும் முற்றுணர்வும் இயல்பாகவே ஒருங்கமைந்த சிவபெருமானாலே யாம். அஃதாவது அவன் உடங்கியைந்து இடம்பட அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியா. அவனையின்றி அறிவானாகிய ஆருயிர் அறிந்ததென்பதை எவருமறியார். அப்பு என்பது திருவருளையும், அனல் என்பது சிவபெருமானையும் குறிக்கும் குறிப்பாகும். அவற்றின் கலப்பு என்பது அருளும் சிவமுங் கலந்து அருளோன் என நின்று ஆருயிரினையும் அனைத்துலகினையும் தொழிற்படுத்துங் கருத்தினைக் குறிக்கும் குறிப்பாகும். கூடிக் களிக்கும் குணங்குறியானன்றி மற்று, நாடித் தெளிதலெவ்வாறு. அறிவிக்க. சிவஞானபோதம், . - . " சத்தியும். சிவஞானசித்தியார், . - . குறிப்புரை: அப்பும் அனலும் - தத்துவக் கூட்டங்கள். அப்பும் கலப்பும் - தத்துவங்கள் உண்டாவதும் ஒடுங்குவதும்.
அடிதொழ முன்னின் றமரர்க ளத்தன் முடிதொழ ஈசனும் முன்னின் றருளிப் படிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங் கடிதொழக் காணென்னுங் கண்ணுத லானே. பொருளுரை: வாழ்த்துவதும் வானவர்கன் தாம் வாழ்வான் என்பதற்கிணங்க அமரர்கள் சிவபெருமான் திருவடியைத் தொழுதற் பொருட்டு முன்னின்றனர். அவர்கட்கும் அத்தனாய் விளங்கும் சிவபெருமான் அவ்வமரர்கள் மணிமுடி சாய்த்து நிலத்தே வீழ்ந்து தன் திருவடியை வணங்குவது கண்டு அருள் புரிந்தனன். நெஞ்சே நீ பண்டு அச் சிவபெருமான் திருவடியை எட்டுறுப்பும் நிலத்தே படும்படி வீழ்ந்து திருமுறை வழியாகத் தொழுது நினைந்தனவெல்லாம் சிறப்பெய்தி வாழ்தற் பொருட்டேயாம் எனக் கண்ணுதற் கடவுள் கனிந்து உண்ணின்று உணர்த்தியருளினன். இதனைக் காண்பாயாக. கடிதொழ - சிறப்பு எய்துதற் பொருட்டுத் தொழ. குறிப்புரை: கடி - சிறப்பாக. வாழ்த்துவதும். . அறிவுறுத்தல், .
நின்மல மேனி நிமலன் பிறப்பிலி என்னுளம் வந்திவன் என்னடி யானென்று பொன்வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மல மாகென்று நீக்கவல் லானன்றே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் இயல்பாகவே தூயமேனியன். இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன். என்றும் பிறப்பில்லாதவன். திருவருளால் என் உள்ளத்தே வெளிப்பட்டருளினன். வெளிப்பட்டு இவன் என் அடியானென்று அறிவித்தருளினன். யாவரும் புகழத்தக்க பொன்போலும் திருமேனியையுடைய ஈடும் எடுப்பும் இல்லாப் பீடுசேர் வானவனும் அவனே. வானவன் - உயர்ந்தோன் அவன் அடியானென்று என்று கொண்டது. மட்டுமன்றித் தன் திருவடி நலத்தைப் பெறுக வென்று மல நீக்கியுமருளினன். அத்தகைய வல்லான் முழுமுதற் சிவனே யன்றிப் பிறரொருவரும் இலர் என்க. குறிப்புரை: நீக்கவல்லான் - ஆணவத்தை ஒழிக்கவல்லான். என்னை. அப்பர், . - .
துறந்தபுக் கொள்ளொளி சோதியைக் கண்டு பறந்ததென் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்தறி யாவென்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்குவைத் தானே. பொருளுரை: உலகியற் பொருள்களின் உண்மையினைத் திருவருளால் உணர்ந்தேன். உணர்தலும் அவற்றின் மாட்டு முன்கொண்டிருந்த நிலைக்கும் என்னும் பற்றும், தனியுடைமை என்னும் துனிதரு உரிமையும், இவற்றால் வரும் தருக்குங்கொண்டு மருள் வயத்தனயாய் இருளில் வீழ்ந்து இடருற்ற நிலைமையினின்று நீங்கினேன். நீக்குதல் - துறத்தல்.நீங்கித் திருவடிப்பற்றிற் புகுந்தேன். புகுந்து அருள் நினைவால் இயற்கை அறிவருள் ஒண்மைப் பேரொளியைக் கண்டு கொண்டனன். கண்டதும் அடியேனுள்ளம் விரைந்து சென்று பற்றிப் பணிந்து கிடந்தது. பணிந்து கிடந்தே மறவா நினைவாய் உறவாயுற்றது. உறுதலும் வானவர் முழுமுதல்வனாய சிவபெருமான் எளியேனை இறந்து பிறவாமல் சிறந்து திருவடியைத் தலைக்கூடும் செந்நெறியில் வைத்தருளினன். வைத்து நன்னெறிக்குய்ப்பதும் 'நமச்சிவாயவே' என்று நவின்றருளினன்.
மெய்வாய்கண் மூக்குச் செவியென்னும் மெய்த்தோற்றத் தவ்வாய அந்தக் கரணம் அகிலமும் எவ்வா யுயிரும் இறையாட்ட ஆடலாற் கைவா யிலாநிறை எங்குமெய் கண்டதே. பொருளுரை: மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும் நிலையில்லாத தோற்றத்தினையுடைய அறிதற் கருவியாம் ஐம்பெறிகள் போன்று எண்ணம் மனம் எழுச்சி இறுப்பு என்னும் உட்கலன்களும் ஆகும். உட்கலன் - அந்தக்கரணம். இவற்றை அருளால் சார்ந்த ஆருயிரும், உலகமும் உலகியற் பொருள்களும் விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவுள்ளத்தான் ஆட்ட ஆடுகின்றன. மெய்கண்டானாகிய சிறப்பு ஆருயிர்களும் நாடரிய நன்மைக்கண் உள்ளன. சிறந்த ஒழுக்கத்தினையும் திருநெறியினையும் இடையறாது மேற்கொண்டு ஒழுகினவராய் வாழ்தல் வேண்டும் : வாழவே ஆருயிர் கேடின்றிச் சார்ந்த சிவபெருமான் தன்மையாய் எங்கும் நிறைந்த சிவனுருப் போன்று எங்கும் நீக்கமற அவனுடன் செறிந்து பெரும் சிறப்பாய்க் காணப்படும். விளம்பிய. சிவஞானபோதம், .
எட்டாம் தந்திரம். விசுவக் கிராசம் அழிகின்ற சாயா புருடனைப் போலக் கழிகின்ற நீரிற் குமிழியைக் காணில் எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப் பொழிகின்ற இவ்வுடற் போமப் பரத்தே பொருளுரை: பளிங்கின் நிழலும் உடல் நிழலும் பிற நிழலும் உச்சிக் காலத்துக் கதிர்ச் சாய்வு இன்மையால் புறத்துப் புலனாவதில்லை. ஆனால் கதிரும் உருவும் கலந்தொன்றாய் விடுகின்றது. அதுபோல் ஆருயிரும் பிறவாநிலை எய்தும் பெற்றிவாய்ந்தபொழுது திருவருளில் கலந்துவிடும். இம்முறையினைச் சாயாபுருடன் அழிகின்றது போல் என அருளினர். வானவெளியை உற்று உற்று ஒரு மனத்துடன் நோக்குவார்க்கு முதற்கண் நிழலுருவம் தோன்றிப் பின் பயிற்சி மிகுதியால் தன்னிற் கரைந்து கலந்துவிடுமெனக் கூறுவாருமுளர். நீரில் தோன்றி நீரில் கழியும் நீர்க்குமிழிபோன்று இவ்வுடலும் அண்டத்தமைந்துள்ள மெய்யாகிய தத்துவங்களின் இனமாய்த் தோன்றுவதால் அவ்வம்மெய்கள் அவ்வம் மெய்களில் அடைந்துவிடும். அடையவே அதனகத்துத் தங்கியிருந்த வுயிர் என்றும் புகலிடமாகவுள்ள திருவருளில் கலந்துவிடும். கருப்பூரம் கொளுத்தப்பட்டு எரியுங்கால் பற்றுக்கோடுள்ள பருப்பொருளாகத் தோன்றுகின்றது. எண்ணெயும் திரியும் கலந்த திருவிளக்கில் திரி பற்றுக்கோடாக எண்ணெய் அதன் சார்பாக எரிகின்றது. அதனால் திரியின் எச்சம் தென்படுகின்றது. ஆனால் அவ்வெண்ணெயே தனிச் சார்பாக எரியுமானால் எச்சம் காணப்படாமை போன்று கருப்பூர தீபமுமாகும். அதுபோல் உடம்பும் திருவருளால் நுண்தண்மை எய்தி நுண்மெய்க்கண் அடங்கும். அடங்கவே ஆருயிர் திருவருளில் அடங்கிவிடும். இம்மூவகை ஒப்புக்களாலும் திருவருளால் உடல் நுண்மயமாய்ப் பிரிந்து நுண்மெய்க்கண் அடங்குவதும் ஆருயிர் திருவருளில் கலப்பதும் இங்கு ஓதியருளப் பெற்றன. ஒருபுடையொபபாக முறையே ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அடிகளார் முதலாயினார் அருட் கலப்பினைக் கூறுதல் அமையும். குறிப்புரை: சாயா - நிழல். போமப்பரத்தே - சிவத்திற் கலக்கும். ஆளென்ப . . பட்டினத். கோயினான்மணி, . " தானான, ஒருவனவன். தாயுமானவர். ஆகார - , .
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றிற் படருஞ் சிவசத்தி தாமே பரமாம் உடலைவிட் டிந்த உயிரெங்கு மாகிக் கடையுந் தலையுங் கரக்குஞ் சிவத்தே. பொருளுரை: திருவருளால் உடலும் ஆருயிரும் நீக்கமற ஒன்றியிருந்தன. அதற்குக் காரணம் அவ்வுயிர் சிறப்பாகிய செம்பொருட் சிவபெருமான் திருவடியிணையினை அடையும் நன்மையேயாம். தேனும் இன்னமுதும் தேக்கிலைக் கல்லையில் ஒழிவறநிற்பது வானும் விழையும் மானுடர் பருகுவதற்கேயாம். அவை பருகப்பட்டபின் அக் கல்லைகள் மண்ணொடுமாய்ந்து மறைந்துபோம். அதுபோல் உடம்பகத்துள்ள ஆருயிரும் சிவத்தினையடைந்ததும் அவ்வுடம்பும் நுண்மெய்யுடன் கரைந்துகலக்கும். கலக்கவே அவ்வுயிர்க்குச் சிவமும் சிவசத்தியாகிய சிவையும் புகலிட மெய்யாகும். ஆருயிர் எங்குமாய்ப் பரம்பும் இயல்பிற்று. அஃது உடம்பகத்து வினைக்கீடாகப் புகுந்து ஒருவழிப்பட்டு அமைந்து நின்றது. ஆற்றுநீர் அருவிவீழ்மலைதொட்டுப் பெருகுநீர் அலைவரைப் பரம்பிநிற்கும் தன்மை வாய்ந்தது அணையுயர்த்திச் சிறை செய்யப்படுமானால் அந்நீர் கட்டுப்பட்டு ஒரு வழிப்படுவதைக் காண்கின்றோமன்றோ? அதுபோலவும், அடுப்புப்புகை எங்கும் பரந்துசெல்லும் பான்மையுடையது. ஆனால் புகைக் கூண்டு உள்ளவிடத்தில் அப்புகை அக்கூண்டிற் கட்டுப்பட்டு மேனோக்கிப்போகும்; அதுபோலவும் உடலிற் கட்டுப்பட்டு ஒரு வழிச்செல்லும் ஆருயிர், அருளால் கட்டகன்றதும் அத் திருவருள் எங்குமாய்ச் செறிந்துநிற்பது போன்று அவ்வருளில் கலந்த அவ்வுயிரும் எங்குமாய்ச் செறிந்து நிற்கும்; அந்தமும் ஆதியும் இல்லா அரும்பெரும் சோதியாம் சிவபெருமான் அடியிணைக்கீழ் ஒடுங்கும். கல்லை : இலைக்கலம்; தொன்னை. குறிப்புரை: பரமாம் உடலை - சுமையாகிய உடலை. கடையுந் தலையும் - ஆதியும் அந்தமும் இல்லாத. கரக்கும் - ஒடுங்கும். அன்போடியைந்த. திருக்குறள், . " சிறைசெய்ய. சிவஞானபோதம், . -
செவிமெய்வாய் கண்மூக்குச் சேரிந் திரியம் அவியின் றியமன மாதிகள் ஐந்தும் குவிவொன் றிலாமல் விரிந்து குவிந்து தவிர்வொன் றிலாத சராசரந் தானே. பொருளுரை: செவி, மெய், வாய், கண், மூக்கு என்று சொல்லப்படும் அறிதற்கருவியாகிய புறப்பொறிகள் ஐந்தனையும்கொண்டு விளங்கும் பருவுடல் வினைக்கீடாக அமைந்தது. அது காலக்கழிவில் அடுத்தடுத்து அழியுந் தன்மைத்து. மனம், எழுச்சி, இறுப்பு என்னும் அகப்புறக்கலன் மூன்றும், பதமுதற் புலனாகிய ஓசை, ஊறு, சுவை, ஒளி, நாற்றம் என்னும் தன்மாத்திரை ஐந்தும் ஆகிய எட்டுறுப்புக்களான் அமைந்தது நுண் உடல். இவ்வுடல் மலந்தேய்க்க அமைந்தது. அதனால் இவ்வுடல் மலத்தேய்வின்முடிவில் அழியும் தன்மைத்து. அதற்கிடையே ஊழி முடிவு நேருமாயின் அழியும். அதனால் அவ்வுடலை அழியாவுடல் என்று அறைகுவா ஆன்றோர். இவ்விருவுடலாலும் இறைவனைத் தொழுதல் வேண்டும். அதன்பொருட்டு மனம் குவிதல்வேண்டும். அங்ஙனம் குவியாமல் உலகியல் பொருள்களினிடமாக அவர்கள் மனங் கணக்கின்றித் தடுக்கமுடியாதபடி விரிகின்றது. கிடைத்தோ கிடையாமலோ வருந்துவதாற் குவிகின்றது. அதனால் அவ்வுயிர் உலகியலைக் கடக்கும் வழியறியாமல் விழிக்கின்றது. இவ்வுயிர் உயர்ந்த இயங்குதிணைப் பிறந்தும் வழியறியாமையினால் உயர்வல்லாத ஓரறிவுயிராகிற நிலைத்திணைப் பொருளோடு பேசப்படும். குறிப்புரை: அவி - அவிதல், அழிதல். தவிர்வு - உலகத்தைவிட்டு நீங்கும் நெறி.
பரனெங்கு மாரப் பரந்துற்று நிற்குந் திரனெங்கு மாகிச் செறிவெங்கு மெய்தும் உரனெங்கு மாயுல குண்டு உமிழ்க்கும் வரமிங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நின்றருள்கின்றனன். செறிவு - நிறைவு. அவன் எங்கணும் நிலைபேறாய் உயிர்க்குயிராகவும் உறைந்தருள்கின்றனன். மேலும் தான் அழிவின்றி நின்று எங்குமாய் நிலவி, காரிய அழிவு பாடாம் உலகினை ஒடுக்கிப் பின் தோற்றுவித்தும் அருள்கின்றனன். திருவருளால் இவ்வுண்மைகளை உணர்ந்து அவன் திருவடிச் சிறப்புற்று அவனருளால் வாழ்ந்தனன் என்க. குறிப்புரை: திரன் - உறுதி. செறிவு - நிறைவு. வரன் - மேன்மையான செயல்.
அளந்து துரியத் தறிவினை வாங்கி உளங்கொள் பரஞ்சகம் உண்ட தொழித்துக் கிளர்ந்த பரஞ்சிவஞ் சேரக் கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனு மாமே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் ஆருயிரின் செவ்வியினை அளந்தறிந்து செயலற்ற நிலையாம் துரியநிலைக்கண் அவ்வுயிரின் சிற்றறிவினைத் தன் முற்றறிவின்கண் அடங்குமாறு செய்வதாகிய வாங்குதலைச் செய்து, அவ்வுயிரின் தூய்மையும் செவ்வியும் சிவனினைவும் ஒருங்கமைந்த உள்ளத்தின்கண் சிவபெருமான் மேலோங்கித் திகழ்கின்றனன். அதனால் அவ்வுயிர் மன்னன் மனைவி மன்னி என்று அழைக்கப்படுவதுபோல் பரமன்தாள்சேர் அடிமை பரன் என அழைக்கப்படுகிறது. அந்நிலையில் அவ்வுயிர் உலக நுகர்வினை ஒழித்துவிடுகின்றது. பரமாகிய சிவபெருமானும் உரமாகிய ஆருயிரும் இருப்பதும் இருப்புமாய்ப் புணர்ந்து எழில்பெற நிற்றலால் ஆருயிர்க்கிழவன் அறிவு வெளியனாவன். உரம் - அடிமை இருப்பது - ஆண்டான். இருப்பு - அடிமை. அறிவுவெளி: வெட்டவெளி; சிதாகாசம். குறிப்புரை: அறிவினை - சீவ அறிவினை. உளங்கொள் பரம் - உள்ளத்தின்கண் ஒளித்திருக்கும் சிவத்துடன் இருக்கும் ஆன்மா. கிளர்ந்த பரம் - தெளிந்த ஆன்மா. வெட்டவெளியன் - சிதாகாய வடிவினன்.
இரும்பிடை நீரென என்னையுள் வாங்கிப் பரம்பர மான பரமது விட்டே உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்தஎன் நந்தி இதயத்து ளானே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் எரிசேர் இரும்பிடைக் கரந்த நீர்போன்று அடிமையாகிய என்னைத் தன் திருவடிக்கீழ் ஒடுக்கிக் கொண்டனன். தனிப்பெரும் சிறப்புவாய்ந்த விழுப்பொருளாம். பரம்பரமான சிவன் பரமாகிய மேனிலைப்பாடு அல்லது அப்பால் நிலையையும் கடத்தியருளினன். திருவடி அடிமை உரம்பெறுதற் பொருட்டு முப் பாழ்வெளியையும் ஒடுக்குவித்தருளினன். அஃதாவது முப்பாழ் வெளியையும் கடந்து நின்றருள்தல். அங்ஙனம் நின்றருள்பவன் நந்தி. அவன் என்னுள்ளத்துள் உறைந்து நிறைந்து நின்றருளினன். குறிப்புரை: பரமது விட்டு - பராவத்தையைக் கடந்து. முப்பாழ் ஒளி - முப்பாழ் ஒளிக்கும் அதீதப்பட்ட ஒளி.
கரியுண் விளவின் கனிபோல் உயிரும் உரிய பரமுமுன் னோதுஞ் சிவமும் அரிய துரியமேல் அண்டமும் எல்லாந் திரிய விழுங்குஞ் சிவபெரு மானே. பொருளுரை: யானை நோயால் பற்றப்பட்ட விளாம்பழம் ஓட்டில் ஒரு கேடுமில்லாதிருக்க, உள்ளே சதைப்பற்று ஏதுமில்லாமலிருக்கும் இயல்பினது. அதுபோல் உயிரும் உயிரைத் தாங்கிநிற்கும் திருவருளும், முன்னோதும் சிவனும், சொல்லுதற்கு அரிய துரியத்தின்மேல் அனைத்துலகங்களும் பின்னோதும் சிவனாம் செம்பொருளினால் மாறுதல் செய்து ஒடுக்கப்படும். ஓதுசிவன் - ஓதப்படும் சிவன். முன்னோதும் சிவன் முப்பத்தாறாமெய்யினைத் தொழிற்படுத்தும் சிவனாகிய அத்தன். பின்னோதும் சிவன் தத்துவங்கடந்த செம்பொருள். ஆருயிர்க்குத் திரிபு மாயையின் சார்பும் பற்றும் அகன்று தாயனைய திருவருளின் சார்பினை எய்துதல். பரமாகிய அருளுக்குத் திரிபு அவ்வுயிரிக்கு முன்பு நடப்பாற்றலாய் நின்று உலகினை உணர்த்திவந்தது மாறி இப்பொழுது வனப்பாற்றலாய்நின்று முன்னோதும். சிவனை உணர்த்துதல். முன்னோதும் சிவனுக்குத் திரிபு ஆருயிர் அருள்களாகிய இவற்றுடன் தானும் செம்பொருளாய் நிற்றல். உலகினுக்குத் திரிபாவது காரியப்பாட்டால் பருமையாகத் தோன்றுவது நுண்மையாய்க் காரணத்தின்கண் ஒடுங்குவது. அச் செம்பொருளாம் சிவன் எவ்வகைத் திரிபும் எய்தாது என்றும் ஒன்றுபோன்று நின்று நிலவுவன். திரிபனைத்தும் ஆருயிர்க்குச் செம்மை. நலம் எய்தும், அரிய வாய்ப்பாங்கருளவாம் என்பதனை நன்கு நினைவு கூர்க. குறிப்புரை: கரி - யானை- விளாமரத்து நோய்க்கு யானை என்று பெயர். திரிய - மாறுபட. மெய்ப்பால்வெண். அப்பர், . - .
அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னிற் பரமுடன் நந்தமை யுண்டுமெய்ஞ் ஞானநே யாந்தத்தே நந்தி யிருந்தனன் நாமறி யோமன்றே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் எல்லாவற்றிற்கும் அந்தமும் ஆதியுமாகவுள்ளான். அதுபற்றியே மெய்கண்ட நாயனார் தாம் அருளிய தனித்தமிழ் முழுமுதற் சிவஞானபோத முதனூல் முதனூற்பாவின்கண் "அந்தம் ஆதி என்மனார் புலவர்" என்றருளினர். தம்மினின்றும் வெளிப்படுத்தப்படும் வழிவழியாயுள்ள அருளாற்றல்களையும் அவ்வாற்றல்களுடன் விரவிய நம்மையும் தன் திருவடிக்கீழ் ஒடுக்கியருளினன். ஞானத்தால் அறியப்படும் ஞேயாந்தத்தில் நந்தியிருந்தருளினன். அவ்விருப்பினை நம்மால் நுகரமுடியும். ஆனால் நுவலமுடியாது. மெய்ஞ்ஞானம் - மெய்யுணர்வு. நேயம் - ஞேயம்: மெய்யுணர்வால் உணரப்படும் மெய்ப்பொருள். அதன் அந்தம்: சிவதுரியாதீதம் - அனைத்துங் கடந்த சிவபெருமானின் நினைப்புக்கும் எட்டாநெடுநிலை. உண்ணுதல்: விழுங்குதல்; ஒடுக்குதல் அறிதல் - வேறாய்நின்றறிவது. உணர்தல் - ஒன்றாய் நின்று செறிந்து ஓவாது நுகர்வது. குறிப்புரை: நந்தமை உண்டு - ஆன்மாவைச் சிவமயமாக்கி. நேய அந்தத்து - சிவதுரிய அதீதத்தில். நாம் - பெத்தர்களாகிய நாம்.
எட்டாம் தந்திரம். வாய்மை அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள் குற்ற மறுத்தபொன் போலுங் கனலிடை அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழுஞ்சுட ராகுமே. பொருளுரை: பற்றற்றான் பற்றினைப் பற்றி ஏனைப் பற்றற்றுநின்று ஒழுகும்பெருநெறி திருநெறியேயாகும். அந்நெறிக்கண் பெரும் 'நமசிவய' முதல் 'சிவசிவ' ஈறாகக் கூறப்படும் நான்மைத் திருவைந்தெழுத்தும் செவியறிவுறூஉவாகிய நல்லுபதேசங்களாகும். அம்மறையால் ஆருயிர் கனலிடைப் புடம்போட்டு எடுத்த 'சுடச்சுடரும் பொன்போல்' ஒளிவிடும். ஒளிவிடவே குற்றங்கள் அறுமாறு சிவபெருமானிடத்து நாட்டமாகிய சிந்தையை நாளும் நிறுத்தங்கள். அங்ஙனம் ஒழுகுவதால் மாறுபடு ஏதும் இன்றி உடனாய்ச் செயலற்றொடுங்கும். சமாதிநிலை கைகூடும். மாயைத் தொடக்கு பசைத்தொடக்கு முதலிய எல்லாத் தொடக்கும் அறுத்தருளிய முழுமுதற் செழுஞ்சுடர் சிவபெருமானேயாவன். நான்மைச் சிவமறையே நற்குறிகை பொன்னாக்க மேன்மைச் சிவ சிவவாம் வேண்டு என்பதனை ஈண்டு நினைவுகூர்க. மேலும், "நாடும் நமசிவய நல்ல சிவயநம கூடும் சிவயசிவ கூறிமேல் - நாடும் சிவசிவஎன் றெண்ணுவர்நற் சீலமுதல் நான்கின் " என்பதையும் நினைகூர்க. குறிப்புரை: அற்றது - பற்றற்ற நெறி. குற்றமறுத்த பொன் - புடமிட்டு மாசொழிந்த பொன். அற்றற - மாசு நீங்க. வைத்திறை - சிவத்தில் சிந்தையை நிறுத்தி. மாற்றற ஆற்றிடில் - மாறுபாடு ஓழியச் சமாதி எய்தினால். செற்றம் - மலம் நீங்கின. சுடர் - ஒளி பொருந்திய ஆன்மா.
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டு எல்லாம் அறிந்தும் இலாபமங் கில்லை எல்லாம் அறிந்த அறிவினை நானென்னில் எல்லாம் அறிந்த இறையென லாமே. பொருளுரை: சிவபெருமான் திருவடியுணர்வு ஒருவர்க்குத் திருவருளால் கைவருமானால் பகலவன் ஒளியில் தடையின்றி எல்லாவற்றையும் வெளியுறக் காணுமாறுபோன்று அகத்தும் புறத்தும் எல்லாவற்றையும் எளிதில் இருந்த இடத்திலிருந்தே அவர் காண்பர். அவ்வுணர்வினை அடைய முயலாது கைவிட்டுச் சிலர் உலகியற்பொருள்களை நூலுணர்வானும் நுண்ணுணர்வானும் உய்த்துணர்வானும் உணர்கின்றனர். அங்ஙனம் உணர்ந்தும் அடையும்பேறு ஒன்றும் இன்று எல்லாவற்றையும் ஒருங்கே யறிந்து அறிவித்துவரும் முழுமுதற் சிவபெருமான் எல்லாம் அறிந்த அறிவினன் ஆவன். அவனை அவனருளால் நீங்காநினைவால் உளத்தமைத்த உரிமை உறுதிப்பாட்டால் அவனே நானென்னில் திருவடிப்பேறு உண்டாகும். எல்லாம் அறிந்த இறை எனலும் எய்தும். இந்நிலை சாரப்பட்டார்க்குச் சார்பின் பெயரே அமைவது போன்றதோர் மரபாகும். அது சிவனடியாரைச் சிவனெனவே கண்டு வழிபட்டுத் தெளியும் செந்நெறிமுறைமையான் உணரலாம். மெய்கண்ட நாயனாரும் 'ஆலயந்தானும் அரனெனத் தொழுமே' என்றருளியதும் இக்கருத்துப் பற்றியேயாம். மேலும் உலக வழக்கிலும் பூ முதலிய விற்பவரை அப்பண்டப் பெயரால் 'ஏ! பூ!' என அழைப்பதூஉம் காண்க. குறிப்புரை: எல்லாம் - உலகப்பொருள்களை. எல்லாம் - அறிவு நூற் பொருள்களை எல்லாம். எல்லாம் அறிந்த அறிவனை - சிவனை. சேரர். . சேரமான்பெருமான். .
தானே யுலகில் தலைவ னெனத்தகுந் தானே யுலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும் வானே மழைபொழி மாமறை கூர்ந்திடும் ஊனே யுருகிய வுள்ளமொன் றாகுமே. பொருளுரை: திருவடியுணர்வு கைவரப்பட்ட ஒருவர் உலக முதல்வரெனப்படும் தகுதியினராவர். அவரே உலகினுக்கு மெய்ப்பொருளுணர்த்தும் மெய்ம்மையருமாவர். செந்தமிழ் மாமறைகள் வானே பொழிவிக்கும் வன்மை வாய்ந்தது. அம்மறையினால் மிகச் செய்யும் திருவைந்தெழுத்தைக் கணிப்பதால் ஊனே உருகிய உள்ளம் உள்ளத்துள்ளுறையும் ஒப்பிரலாச் சிவபெருமானுடன் ஒன்றாய் ஒடுங்கும். அனுச. அப்பர், . - .
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில் இருளற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப் பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே. பொருளுரை: சிவபெருமான் திருவருள் கைவரப்பெற்றதன் காரணம் என் கொல் என ஆராயின், திருவருள் விளக்கால் சிந்தை இருள்கின்ற பின் அவ்வுள்ளத்தின்கண் இறைவனை நாடி அதுவே விருப்பமாக விருப்பதாகும். அமரில் - விருப்பமாகவிருந்தால். அவ்விறைவன் திருவருளால் மருளுற்ற சிந்தையை மாற்றுவர். அருமைப் பொருள் உற்ற திருவடியைப் போற்றுவர். பொருள்: என்றும் பொன்றாதுநின்று நிலவும் மெய்ம்மை. தாமே: ஈற்றசை; எளிதாக இனிதாக என்றலும் ஒன்று. குறிப்புரை: அமரில் - இருந்தால்.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்தன்னைப் பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை உய்கலந் தூழித் தலைவனு மாய்நிற்கும் மெய்கலந் தின்பம் விளைந்திடும் மெய்யர்க்கே. பொருளுரை: சிவபெருமான்மாட்டுக் கரவின்றிப் பேரன்பினை மெய்யாகப் பூண்டவர் மெய் கலந்தாராவர். அச் சிவபெருமானும் அவர்களுடன் மெய்யாகக் கலந்து வெளிப்பட்டு வேண்டும். அருள்புரிந்தருள்வன். கரவாடும் வன்னெஞ்சினராய் நிலையாத உலகியற்பொருள்களை நிலைக்கும் எனப் பாழேகழிப்பவர் பொய்ப்பொருளுடன் கலந்த பொய்யராவர். அவர்முன் புகுதவும் கூசுவன் சிவன். அவன் 'பொக்க மிக்கவர் பூவும் நீருங்கண்டு நக்குநிற்கும்' நடுநிலையின் - அதனால் கூசுகின்றனன். அச் சிவன் ஆருயிர்கள் உய்தற்பொருட்டு அவற்றுடன் கலந்து பேரொடுக்கப் பெருமுதல்வனாய் நிற்கின்றனன். மெய்யடியார்களாய் விளங்குகின்றவர்கட்கு அவர்தம் மெய்யன்பில் மெய்யாகக் கலந்து மாளாவின்பம் விளைந்திடச் செய்வன். குறிப்புரை: மெய் - வாய்மை. உய் கலந்து - ஆன்மாக்கள் உய்யுமாறு கலந்து.
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப் பொய்கலந் தாருட் புகுதாப் புனிதனைக் கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக் கைகலந் தார்க்கே கருத்துற லாமன்றே. பொருளுரை: மெய்ம்மையன்பினருடன் மிகவும் மெய்கலந்து விளங்குபவன் சிவன். பொய்க்கலப்புடையர்பால் ஒருசிறிதும் புகுதல் செய்யாத ஒப்பில் ஒருவனாம் தூயோனை இடையறாது நினையுங்கள். அப் பயிற்சி மிகுதியால் ஆவி உடம்பினைவிட்டு நீங்கி வெளிமேவுங்காலை அண்ணலாகிய சிவபெருமானைப் பண்ணமை திருவைந்தெழுத்தால் பரவி அவன் திருவடியிற்கலத்தல் செய்யுங்கள். அங்ஙனம் கலப்பாரே அவன் திருவடிக்கருத்தினை எய்தினோராவர். வாய்மைச் சிறப்பினை இதன்கண் காண்க. நெஞ்சம். " . - .
எய்திய காலத் திருபொழு துஞ்சிவன் மெய்ச்செயின் மேலை விதியது வாய்நிற்கும் பொய்யும் புலனும் புகலொன்று நீத்திடில் ஐயனும் அவ்வழி யாகிநின் றானன்றே. பொருளுரை: திருவடிக்கண் பேரன்பு செய்தற்கு வாய்த்த இளம் பருவத்தே காலையும் மாலையும் ஆகிய இருபொழுதினும் வஞ்சகமின்றி அன்பு செய்தால் ஊழ்வினையால் விளையும் நிலையாப் பொருள் நுகர்வும் அப் பொருள்களைப் பற்றும் ஐம்புலன் நிகழ்வும் என்றும் நிலைத்த திருவருட்புகலைப் பொருந்தி நீக்கப்பெறும் அவை நீங்கவே ஐயனாகிய சிவபெருமானும் ஆண்டு வெளிப்பட்டு நின்றருள்வன். 'காலமுண்டாகவே காதல் செய்துய்மின்' எனவும், 'வேண்டின் உண்டாகத் துறக்க' எனவும் நிலவும் செந்தமிழ்த் திருமறைகளை ஈண்டு நினைவுகூர்க. காலம் அகவை இளமையும் பொழுதினமையும் குறிப்பதாகும். குறிப்புரை: எய்திய காலத்து - அன்புசெய்தற்கு ஏற்ற காலத்தில். மெய் செயின் - உண்மையிலேயே அன்புசெயின். காலமுண். . திருப்பாண்டிப்பதிகம், .
எய்துவ தெய்தா தொழிவ திதுவருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர்நந்தி பொய்செய் புலன்நெறி யொன்பதுந் தாட்கொளின் மெய்யென் புரவியை மேற்கொள்ள லாகுமே. பொருளுரை: திருவடிப் பேரன்பு காரணமாகத் திருவருள் வந்தெய்தும். எய்தவே பொய்யும் புலனும் எய்தாதகலும். இம் முறையாகத் தலையாய தண்ணளி வாய்ந்த சிறந்த நந்தி ஆருயிர் உள்ள அருள் செய்தான். அவன் திருவருள் நினைவால் பொய்ப் பொருளை உள்ளுணர்த்தும் புலன்வாயில்களாம் ஒன்பதினையும் அடைத்தல் வேண்டும். அங்ஙனம் அடைத்தால் மெய்யுயிர்ப்பு என்று சொல்லப்படும். புரவியாகிய குதிரையை மேற்கொண்டு செலுத்தும் மேன்மையுண்டாம்; அஃதாவது அகத்தவப் பயிற்சி யுண்டாகும். அகத்தவம் - யோகம். குறிப்புரை: புலனெறி ஒன்பது - ஒன்பது வாசல்கள். தாட்கொளின் - அடைத்தால். மெய்யென் புரவியை - தேகத்தில் ஒடும் வாசியை. மெய்ப்பால், அப்பர், . . - .
கைகலந் தானைக் கருத்தினுள் நந்தியை மெய்கலந் தான்தன்னை வேத முதல்வனைப் பொய்கலந் தார்முன் புகுதாப் புனிதனைப் பொய்யொழிந் தார்க்கே புகலிட மாமன்றே. பொருளுரை: ஆருயிரின் நல்லொழுக்க நெறியில் உடனாய்க் கலந்து நிற்கும். கடவுளை, அவ்வுயிரின் அன்பு நிறை யுள்ளத்து அவர் நினைந்த வடிவுடன் அப்பொழுதே வெளிபட்டருளும் நந்தியை வணங்குமின். மெய்யன்பின்கண் மேவிக் கலந்த மேலோனைத் தொழுமின். அவனே மறை முதல்வன். அவனே பொய்ப் பொருளாம் உலகியற் பொருள்களை நிலையெனப்பற்றி உலைவுறும் நெஞ்சினராய பொய்கலந்தார் முன்புகுந்தறியாய் புண்ணியன். அவனே இயற்கைத் தூயோனாவன். அவன் பொய்ப் பொருளின் பற்றற்றார்க்கே மெய்ம்மைப் புகலிடமாவன். பொய்ப் பொருள் - நிலையாப்பொருள்; உலகியற்பொருளும் உடலும்.
மெய்த்தான் அகம்படி மேவிய நந்தியைக் கைத்தாழ்கொண் டாருந் திறந்தறி வாரில்லை பொய்த்தாழ் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்கு அத்தாழ் திறக்கில் அரும்பேற தாமன்றே. பொருளுரை: என்றும் பொன்றா மெய்ம்மை சேர் சிவபெருமானின் திருவடித் தாளிணையைப் பேரன்பு வாய்ந்த உள்ளத்தின்கண் மேவியருளச் செய்தல் யாவர்க்கும் எளிது. அம் முறையில் அன்பருள்ளத்தில் தன் உண்மைத் தாளிணையை மேவியருளியவன் நந்தி. அத்தகைய திருவடியை நன்னெறி நான்மை நற்றவமாம் கைத்தாழ் கொண்டு ஆருந்திறந்தறிவாரில்லை. நிலையா அடிப்படைமேல் விளையும் பொருள்கள் சேர்ந்து நிறைந்துள்ளனவற்றை இடும்பை உடம்பு. அவ் வுடம்பின்கண் கொண்டுள்ள நிலையாப்பற்றை நீ விட்டகல்வாயாக. விட்டதும் திருவருள் பற்றுப் பெருகும். அதனால் அத்தாழ் திறக்கப்பெறும். பெறவே அதுவே கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். குறிப்புரை: அகம்படி - உள்ளத்திலே கைத்தாள் - கையிலே தாளிருந்தும். கொண்டு - அதைக்கொண்டு. பொய்ந்தாள் இடும்பையை - பொய்யினது மூலம் வைக்கப்பட்டுள்ள உடலை. அத்தாழ் - சுழுமுனை வாயிலில் உள்ள தாள். திறக்கில் - திறந்தால்.
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின் மெய்யன் அரனெறி மேலுண்டு திண்ணெனப் பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு ஐயனும் அங்கே அமர்ந்துநின் றானன்றே. பொருளுரை: பிறப்பற்றுச் சிறப்புற்று உய்யும் வழி நன்னெறி நான்மையாகும். அந் நான்மையினுள்ளும் அறிவாகிய உணர்வு நெறியே சிறந்தது. அந் நெறியினால் சிவபெருமானை ஏத்துமின்கள். அதன் மேல் மெய்ப்பொருளாகிய அரனார் திருவடியிற்றலைக் கூடிப் பேரின்பம் நுகரும் மேனெறி ஆங்குண்டு. அத்தகைய பேறு பெற்றார் சிவனருள் உறுதிப்பாட்டுடன் பொய்ப்பற்று ஏதுமின்றி அகப் பொலிவொத்துப் புறத்தும் சிவப்பொலிவாகத் திகழ்வர். அவர்தம் அன்புறு நெஞ்சத்து ஐயனாகிய சிவபெருமானும் அங்கு வெளிப்பட்டு விரும்பி நின்றருளினன்.
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு தம்பாற் பறவை புகுந்துணத் தானொட்டாது அம்புகொண் டெய்திட் டகலத் துரத்திடிற் செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே. பொருளுரை: நறுமண முதிர்தலொத்து எங்கும் செறிவாயுறும் திருவருள் மலரின்கண் கற்றவர்களுண்ணும் காழில் கனியாகிய சிவம் ஒன்றுண்டு. அச் சிவப்பழத்தினை ஆருயிர் உண்ணாவண்ணம் ஊறுசெய்யும் காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் முதலிய பறவைகளும் ஆங்குள்ளன. அதனை அப் பறவைகள் புகுந்துண்ண வொட்டாது. திருவடியுணர்வாம் நுண்கணையினால் திருவருள் துணைகொண்டு எய்தல் வேண்டும். அங்ஙனம் கணை எய்து துரத்தினால் செம்பொனின் மிக்க சிறந்த சிவனிலையினைச் சென்றெய்தி யின்புறலாம்.வம்பு பழுத்த - வாசனை மிகுந்த, அஃதாவது எல்லாவற்றையும் அறியும். மலர் - மலராகிய உச்சித்தாமரை. பழம் - ஞானமாகிய பழம். பறவை - காமாதிகள். அம்பு - அம்புபோலும் கூர்மையான மதி. மெய்ம்மையாம். அப்பர், . - . " தெள்ளத். " . - .
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத் துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால் தியக்கஞ்செய் யாதே சிவனெம் பெருமான் உயப்போ எனமனம் ஒன்றுவித் தானே. பொருளுரை: செந்நெறி யொழுகும் செம்பொருட்டுணிவினரை மயக்கம் செய்தற் பொருட்டு முனைந்தெழும் ஐம்புலப் பாசங்களை அருளால் அறுத்தருளுபவன் சிவன். அவனே ஆருயிரின் தடுமாற்றப் பிறப்பின் கலக்கத்தையும் தவிர்த்தருளினன். அவன் திருவடியினைத் தொடருங்கள். அங்ஙனம் அளவிறந்த காதலுடன் தொடர்ந்தால் ஒரு சிறிதும் மயக்குவதைச் செய்யாமல் எம்பெருமானாகிய சிவன் ஆருயிர் உய்ந்து போமாறு அவ் வுயிர்களின் மனத்தை ஒருமைப்படுத்தி யருள்வன். குறிப்புரை: துயக்கு - கலக்கம். தியக்கம் - மயக்கம். உயப்போ - உய்ந்துபோ.
மனமது தானே நினையவல் லாருக்கு இனமெனக் கூறு மிருங்காய மேவல் தனிவினி னாதன்பால் தக்கன செய்யில் புனிதன் செயலாகும் போதப் புவிக்கே. பொருளுரை: சிவபெருமான் திருவடியிணையினை மனமாறாது பயிற்சி மிகுதியால் தானே நினையும். அத் தன்மை வாய்ந்த திருநெறி வல்லார்க்கு அவர் தம் அரும்பெரும் அறிவுத் தொண்டினுக்குத் துணையாய் இனமாய் நிற்பது அவர் தம் தூய உடம்பே யாகும். அவ் வுடம்பு மேவும் ஒண்மையுடன் தனித்திருந்து சிவபெருமானைத் திருவருளால் உள்ளக் கிழயின் உருவெழுதி அத் தலைவன்பால் ஒப்புவித்தல் வேண்டும். அதுவே தக்கன செய்யும் தவமாகும். அத் தவத்தினைச் செய்யில் தூயோனாகிய சிவன் தன் திருவடியுணர்வாம் அறிவு நிலத்தில் உய்ந்து போமாறு அருளிச் செய்வன். குறிப்புரை: இருங்காயம் - பெருமையுள்ள சரீரம் - தனிவினில் தனித்திருந்து. போதப் புவி - ஞானபூமி. மனமது. சிவஞானசித்தியார், . - .
எட்டாம் தந்திரம். ஞானிசெயல் முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள் தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் நன்மையில் ஐம்புலன் நாடலி னாலன்றே. பொருளுரை: 'ஞான மெய்ந்நெறிதான் யார்க்கும் நமச்சிவாயச் சொல்' ஆதலால் அந்நெறி யொழுகலே ஆருயிர்களின் அருங்கடன். அங்ஙனம் ஒழுகுவார்க்கு வரும் ஊழ்வினை அவர் உடலொடும் ஒட்டியழியும். அதற்குக் காரணம் அப் பெருந்தகையார் உள்ளம் முன்னோன் திருப்பெயராம் திருவைந்தெழுத்தினை இடையறாது உண்டு கொண்டேயிருப்பது. அதனால் அவ் வூழ் அவர் உள்ளத்துச் செல்ல அஞ்சும். அஃதாவது ஊழ்வினையனைத்தும் உடையவனாகிய சிவபெருமானால் ஆருயிர்க்கு நல்குவதாகும். அவன் அவ் வினையினை நல்குவது தன்னை நினைவித்தற்பொருட்டேயாம். அவ் வினையும் அவ் வுயிரை அடைவது நினையுமாறு செய்தற்கேயாம். அவ் வுயிர் திருவடியை இடையறாது நினைப்பின் அவ் வூழுக்கு ஆண்டு வேலை ஏதும் இல்லை. ஆதலால் அவ்வூழ் செயலற்று அழியும். இவ் வுண்மையினைப் புலப்படுத்துவதே 'கூற்றங் குதித்த நோற்றலின் ஆற்றல் சேர்' மார்க்கண்டேயர் திருவரலாறாகும். ஆயின் அவ் வூழ் செயல் செய்ய முனையாமலல்லவா அகலுதல்வேண்டும். முனைந்த தென்னெனின்? ஊழை வெல்லுதல் எவர்க்கும் முடியாதென்னும் கொள்கை பீழைப் பிழைபாடுடைய தென்பதையுணர்த்துதற்கும், தாளாண்மையிற் றலை நிற்கும் வேளாளராம் சிவனடியார்கட்கு மட்டும் முடியு மென்பதை நாட்டற்கும், கூர்மிகு கணை உளம்புகாது உடலிற்பட்டு மீள்வது போன்று ஊழும் மீளும் என்பது காட்டற்கும் நிகழ்ந்த தென்க. ஊழை வெல்லும் படை முன்னோன் நாமத் தஞ்செழுத்து. சிவனடியார் வேளாளராவது அவர் தம் ஆவியும் உடலும் உடைமையும் சிவபெருமானுக்கு உவந்தளிக்கும் ஒண்மையான் என்க. ஒருபுடையொப்பாக முறையே மெய்ப் பொருள் நாயனார், கண்ணப்பநாயனார். இயற்பகை நாயனார் ஈந்தமை காண்க. மேலும் பாடம் படியாதாரை அச்சுறுத்தியும் அடித்தும் படிக்கச் செய்ய ஆசான் கைக்கொள்ளுங் கருவி பிரப்பங்கோல் அக்கோல் படியாதாரை யன்றிப் படிப்பாரை ஏதுஞ் செய்யாமையும் இதற்கொப்பாகும். எல்லாரையும் நல்லாராயாக்குவதற்கு அமைந்த பாடி காவலரை நல்லார்கண்டு அஞ்சாமையும் ஒப்பாகும். உண்டல் - இடையறாது நினைத்தல். முன்னுண்டே நீங்குவர் - முன்னோனை நினைந்தே நீங்குவர். பின்னை வினையாகிய ஏறுவினைக்கண்ணும் உள்ளம் பொருந்துதற்கு வாயிலின்மை யால் அதனைப் பேர்ந்தறப் பார்ப்பார்கள். இது கட்டுங் கயிறு இற்றொழிந்தால் வேறொன்றற்குப் பயன்படுவதன்றிக் கட்டுவதற்குப் பயன்படாதல்லவா? அதுபோல் ஏறுவினையும் செய்தாரைப் பணிக்கும் வன்மையின்றி செயப்பட்டார் வினை வீறு கொண்டெழ ஊறும் உரமாய் நிற்கும். ஞாயிற்றின் ஒளிகண்டே தன்னைக் காணும் ஞாலத்தார் போன்று திருவடியுணர்வுடையார் தலைவனாகிய சிவபெருமானைக் கண்டே தம்மையும் காண்பர். அவர்தம் ஐம்புலனும் பண்டு போலன்றி இன்று சிவபெருமானையே அருளால் நாடுகின்றது. அதனால் அவர் தம்மைக் காண்பதும் தலைவனைக் காண்பதுந் தகும் என்க. பாடிகாவலர் - ஊர்காவலர். குறிப்புரை: முன்னைவினை - ஊழ். உண்டே - அனுபவித்தே. பின்னை வினை - இந்தப் பிறப்பில் இயற்றும் வினை (ஆகாமியம்; கணார் - செய்யார். போந்தற - கன்மத்தை விட்டு இருக்க - நன்மையில் - நன்மையைச் செய்வதில்.
தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள் பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவனரு ளாலன்றே. பொருளுரை: ஆருயிர்க்கு இருவினை யொப்பும், மலச் செவ்வியும் வாய்த்த வழித் திருவருள் வீழ்ச்சி எய்தும் அருள் வீழ்ச்சியினைச் சத்திநிபாதம் என்பர். இன் வீழச்சியினையே சென்னியில் வைத்த சிவனருள் என்று ஓதினர். அச்சிவனருள் வலத்தால் தன்னை யறிந்திடுவர் திருவடியுணர்வினராகிய தத்துவ ஞானிகள். அவன் முன்னைவினையாகிய எஞ்சுவினையின் முடிச்சை அவிழ்த்து அகற்றுவர். முடிச்சவிழ்த்தலாவது வறுத்தவித்துப் போல் குருவருள் சார்ந்ததும் பயனில்லாமல் அவர் தம் திருக்கடைக்கண் நோக்கத்தாலாக்குதல். முடிச்சு முடிச்சாக முடிந்தமைத்த கண்ணிவலை முடிச்சு அவிழ்ந்தால் பயன்படாதல்லவா? அதுபோன்றதாகும் இதுவும். பின்னை வினையாகிய ஏறு வினையைப் பிடித்துப் பிசைவர். பிசைதல் - உருவுற்றெழா வண்ணம் உருக்குலைவித்தல். முடியணி பொடியாய் உருக்குலைந்து வடிவிழந்த காலத்து அணியப்படாமை இதற்கொப்பாகும். முடியணி: தலையில் அணியும் அணி; திருமுடி எனினும் ஒக்கும். குறிப்புரை: முன்னை வினையின் முடிச்சு - சஞ்சிதம். பின்னைவினை - ஆகாமியம்.
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும் மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால் தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. பொருளுரை: உள்ளம், உரை, உடல் என்னும் முன்றும் மனம், வாக்கு, காயம் எனப்படும், இம் மூன்றும் சிவனினைவின்றித் துய்ப்பினும் தொழிற்படினும் அவர் தமக்குப் பலவினையாகும். பவம் - பிறப்பு. பாவப் பயனாகிய பிறப்புப் பவம் என்றாயிற்று. அதனால் வல்வினை மூளும் என்றருளினர். அம் மூன்றும் சிவனினைவுடன் அவனோடியைந்து தற்செயலற்றுத் தலைவன் செயலாய் நேருற நிற்கில் அவ் வினைகள் வெற்பிற்றோன்றிய வெங்கதிர் கண்டவப், புற்பனிக்கெடு மாறது போல'க் கேடெய்தும் நேருற நிற்றல் - துணையாய் நிற்றல், உள்ளமும் உரையும் பிறப்புக்கு வழியாகாதபடி அவற்றின் முனைப்பைக் கெடுத்தவர் அகத்தவப் பயிற்சியினால் தன்முனைப்பை மாற்றி அருள் முனைப்பாக ஆற்றுவர். அவர் திருவடியுணர்வினர் என்று செப்பப்பெறும் தத்துவ ஞானியாவர். மாற்றியாற்றற்குத் 'தந்ததுன்றன்னைக் கொண்டதென் றன்னைச் சங்கரா' என்றலும் ஒன்று கெட்டவர் என்பது சினைவினை முதன் மேல் நின்றது. குறிப்புரை: நேர் நிற்கில் - நன்னேறியில் நின்றால். மன்னா - பொருந்தா. வாதனை தன்னால் - அட்டாங்க யோகத்தால். தனைமாற்றி ஆற்ற - தற்போதத்தை அழித்து ஒழிக்க. இதமகி - சிவஞானசித்தியார், - - .
நிற்ற லிருத்தல் கிடத்தல் நடையோடல் பெற்றவக் காலுந் திருவருள் பேராமற் சற்றியன் ஞானந்தந் தானந்தந் தங்கவே உற்ற பிறப்பற் றொளிர்ஞான நிட்டையே. பொருளுரை: நிற்றலும் இருத்தலும், கிடத்தலும் நடத்தலும், ஓடலும் செய்யும் பொழுது திருவருள் நினைவு நீங்காதிருத்தல் வேண்டும் 'சாற்றப்படும் இயற்கை மெய்யுணர்வு அங்ஙனம் நீங்காதார்க்குத் தந்தருளினன். அங்ஙனம் தந்தருளிய பேரொடுக்கப் பெருமான் அந்தம் என்று அழைக்கப்படுவன். அவ் வுயிர் அந்தமாகிய தன்பால் தங்கவே அங்ஙனம் அருளினன். அதனால் அவ் வுயிர் பிறப்பற்று விளக்கமிக்க ஞான நிட்டையினை எய்தும். சாற்றியல் என்பது சற்றியல் எனக் குறைந்து நின்றது.
எட்டாம் தந்திரம். அவா அறுத்தல் வாசியு மூசியும் பேசி வகையினால் பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம்எளி தாகுமே. பொருளுரை: புகழ்ந்து பேசப் பெறும் வாசியாகிய உயிர்ப்பும், ஊசியாகிய நடுநாடியும் அவற்றின் தன்மைகளும் பயனும் பயிற்சியும் பேசிப் பயன் இல்லை. பிதற்றியும் பயனில்லை. இவை, தாமே வாழவேண்டுமென்னும் ஆசையும், தாமுயரத் தம்மையெல்லாம் தொழ அவை தாழ வேண்டும் என்னும் தம்பாலன்பாகிய செருக்கும் நீங்கா ஒருவர்க்கு ஆகா. அதனால் அவற்றை அறுங்கள். அறுத்தபின் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தினை எய்துதல் எளிது. அப் விடம் அன்பினால் தூய்மை எய்தி அருளினால் ஒளிரும் தம் உள்ளமேயாகும். அன்பு ஈண்டுப் பற்றின் மேற்று - பற்று : பத்து; பத்தி. குறிப்புரை: வாசி - பிராணவாயு. ஊசி - சுழுமுனை.
மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் தானன்றே. பொருளுரை: முழுமுதற் சிவபெருமான் எவ்வகை வேட்கையும் விட்டவர் எழின் னெஞ்சகத்து உயிர்க்குயிராய் உள் நின்று நீங்கா நிலைமையனாய்ப் பாங்காய் உறைந்து திருவடிப்பேறு அருள்கின்றனன். அங்ஙனம் அருளுவதற்கு வாயில்கள் சிவப் பொலிவுமிக்க மாடங்கள், மண்டபங்கள், கூடங்கள், கோவில்கள். வேடங்களாகும். இவை யயைதும் அவனை நினைவூட்டும் கருவிகளே. இவை மாடிக்குச் செல்லும் படி போன்றனவாகும். கற்பதற்குக் கருவியாம் நூல் போன்றனவுமாகும். அதனால் இவ் விடங்களினெல்லாம் நிலைத்து நிற்பானலன் என்னும் கருத்தால் மாடம் முதலியவற்றுள் உளானலன் என ஓதினர். குறிப்புரை: மாடம் - சுவரில் உள்ள மாடத்தில். மூடம் - உள்ளம்.
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாகுமே. பொருளுரை: அடிமையாகிய ஆருயிர் 'வேண்டத்தக்க தறிவோய் நீ' என நினையாது தன்பால் முதன்மை ஏற்றி வீடும் வேண்டுதல் ஈடில் பெருங்குற்றமே யாம். இதனாலேயே ஆளுடைய அடிகளும் 'காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய், கண்ணுதலே என்னதோ இங்கதிகாரம்' என்று ஓதியருளினர். நோயாளி மருத்துவன்பால் ஆணையிடுவதும், கற்பார் கற்பிப்பார்பால் ஆணையிடுவதும் பிழை யாகுகுமன்றோ? அவையும் இதற்கு ஒப்பாகும். அதனால் ஆண்டவ னோடாயினும் ஆசையறுமின்கள்; ஆசையறுமின்கள். ஆசையுண்டாக உண்டாகப் பெருந்துன்பங்களாய் வந்து வருத்தும். அவ் வாசையினை விடவிட இன்பமே ஈடின்றிப் பெருகும். ஈசனோடாயினும் என்பது திருவடிப் பேற்றின் கண்ணும் என்பதாம். ஈசனோடாயினும்: உம்மை உயர்வு சிறப்பு. திருவடிப்பேறு காரியம்; திருவடியன்பு காரணம். கடமையையும் அடிமையையும் காதலிப்பார்க்குக் காரணத்தை விழைதலே குழைவில் கடனாம். குழைவில் - குற்றமில்லாத. நாயிற். . குழைத்தபத்து, . " கேடும். . திருக்கூட்டச் சிறப்பு, . " இன்பம் விழையான், திருக்குறள், .
அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படுவழி செய்கின்ற பற்றற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானந் தொடுவது தம்மைத் தொடர்தலு மாமே. பொருளுரை: அன்றும் புலனாயுள்ள பூதங்கள். என்ற விடத்து ஆருயிருடன் மாறுபட்ட புலன்களுக்கு வலியாகவுள்ள பூதம் எனப் பொருள்படும் ஈண்டு. அவை தம்முள் ஒன்றோடொன்று 'மாறுபட்டு ஒன்றனை யொன்று மிக்கு நின்று அழிக்கும் தன்மைய என ஓதினர். அப் பூதங்கள் வாயிலாக விளைவதும் வேறுபடுவதும் ஆகிய ஊண் உடை உறையுள் உறை முதலியவற்றுள் கொண்டுள்ள பற்றுக்களை அறவே மாற்றி எவ்வகை வேட்கையையும் விடுவதே மெய்ந்நெறியாகும். மெய்யாக நிலைபெற்று நின்று நீளின்பந்தரும் திருவடியுணர்வைத் தொடுவதே சிறப்பென்க. அவ் வுணர்வே நம்மை அகலாது தொடர்ந்து ஆண்டவன் அடிக்கீழ் அமர்த்தும். அன்றுதல் - மாறுபடுதல். உறை - மருந்து. குறிப்புரை: அடுவன - ஒன்றையொன்று பகைத்து அழிக்கும் பூதங்கள். தம்மைத் தொடர்தல் - தத்துவங் களைந்து ஆன்மாவை ஆராய்ந்து அறிதல்.
உவாக்கடல் ஒக்கின்ற வூழியும் போன துவாக்கட லுட்பட்டுத் துஞ்சினர் வானோர் அவாக்கட லுட்பட் டழுந்தினர் மண்ணோர் தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே. பொருளுரை: பருவ காலத்துப் பொங்கும் கடல் போன்று அளவின்றிப் பொங்கி உலகினை அழித்த நீரூழிகள் பல கழிந்தன. இவற்றினைக் கடலூழி என்ப. வானோர் முதலாயினார்களும் இன்பதுன்பக் கடலிடைப் பட்டு மாண்டு மடிந்து போயினர். மண்ணோர்கள் அவாக் கடலுட்பட்டுப் பிறப்பதற்கே ஆளாகி அழுந்தினர். என்றும் பொன்றாப் பேரின்ப அருளாழியைச் சிவபெருமான் தாங்கி நின்றனன். குறிப்புரை: உவாக்கடல் - பவுர்ணமியிற் பொங்குகின்ற கடல். துவாக் கடல் - சுகதுக்க வடிவக் கடல். தவாக்கடல் - நீங்குதல் இல்லாத அருட்கடல்.
நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல் உன்தொழி லற்றுச் சுத்தம தாகலும் பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத் துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே. பொருளுரை: நெடுநாள் நீங்காது நின்ற இருவினையும், மும்மலப் பிணியும், தொடர்வறாது நீண்டு நினைப்பதாகிய தியானமும் அகன்று அருளால் தூய்மை எய்தும் ஆருயிர். அதன்பின் ஐம்புல வரிவும் நீங்கும். நீங்குமாறு செய்தருளிய திருவருள் நேர்பெற வெளிப்படும். அவ் வருள் அவ்வுயிரைத் தன்னில் அழுத்தும். அழுத்தவே ஆருயிர் திருவடியுணர்வினதாகும். அந் நிலையே சிவஞான நிலை; அந் நிலை நிற்பாரே ஞானிகள். அவர்கள் எய்திய அருள் அழுத்தமே மெய்யுணர்வுத் தூய்மை. ஞானிகள் - நல்லார். குறிப்புரை: பிணி - பாசம். நெடுஞ்செயல் - தவம். உன் தொழில் - நினைத்தல். ஐங்கருமம் - ஐம்புல வியாபாரம்.
உண்மை யுணர்ந்துற ஒண்சித்தி முத்தியாம் பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாந் திண்மையின் ஞானி சிவகாயங் கைவிட்டால் வண்மை யருள்தான் அடைந்தன்பில் ஆறுமே. பொருளுரை: திருவடியுணர்வாகிய உண்மையினைத் திருவருளால் உணர்ந்து நன்னெறியிற் செல்ல என்றும் பொன்றா அறிவொளிச் செறிவாய் நிற்கும் சித்தி முத்தி கைகூடும். மாயாகாரிய விருப்பமாகிய பெண் மயக்கம் நீங்கினால் அட்ட சித்தியாகிய பேறு கிடைக்கும். உரன் என்னும் திண்மைசேர் நல்லார் தாம் ஒடுங்கி நிற்பதாகிய சிவ துரியத்தையும் கைவிட்டால் வளமிக்க திருவருள் கைவரும். கைவரவே திருவடியுணர்வில் அழுந்தும். அவ் வன்பிலே இன்புற்றமையும். திண்மை - வைராக்கியம். ஆறும் - அமர்ந்திருக்கும். குறிப்புரை: உற நிற்க - பேறு பெறுதற்குரிய. திண்மை - வைராக்கியம். சிவகாயம் - தான் ஒடுங்கி நிற்கும் சிவதுரியம். அன்பில் ஆறும் - அன்புடன் அமரும்.
அவனிவன் ஈசனென் றன்புற நாடிச் சிவனிவன் ஈசனென் றுண்மையை யோரார் பவனிவன் பல்வகை யாமிப் பிறவி புவனிவன் போவது பொய்கண்ட போதே. பொருளுரை: தாம் சிவனாகத் திருவடி யுணர்வால் திருநீறிடுவர். அவரைச் சிவனாகவே உண்மையன்பினர் எண்ணுவர். அம் முறையில் ஆருயிராகிய இவன் அவனாகிய முறையால் இவனை ஆண்டானாகிய ஈசனென்றே அன்புற நாடுவர். நாடுதல் - சிந்தித்தல். அவ் வகையாக நாடிச் சிவனே இவன். இவனே ஆண்டான். இவ் வுண்மையை அருளால் உணர்தல் வேண்டும். இவ் வுண்மையினை உணராதார்க்குப் பல்வகைப் பிறவி யுண்டாகும். உலகியற் பொய்ம்மையை அருளால் உணர்ந்த போது பல்வேறு புவனங்களில் போய்ப் பிறக்க நேரும் வினைகள் அத்தனையும் அகன்றொழியும் புவனம் என்பது புவன் என நின்றது. குறிப்புரை: பவனிவன் - பாவத்தையுடைய இச் சீவன். புவனிவன் போவது - இவன் போகும் பலவகைப்பட்ட புவனங்கள்.
கொதிக்கின்ற வாறுங் குளிர்கின்ற வாறும் பதிக்கின்ற வாறிந்தப் பாரக முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம் நொதிக்கின்ற காயத்து நூலொன்று மாமே. பொருளுரை: ஆருயிர்க்கு மாயாகாரிய உடம்பு உலகங்களைப் படைத் தளிப்பதைக் கொதிக்கின்றவாறு எனக் கூறுவாராயினர். அப் பொருள்களைக் காத்தருளும் முறையினை குளிர்கின்றவாறென்றனர். துடைத்தருள்வதைப் பதிக்கின்றவாறு என்றனர். பாரக முற்றுக்கும் இம் மூன்று தொழிலும் உள்ளன. ஆருயிர்களின் உணர்வின்மாட்டுச் செய்யப்படும் மறைத்தல் அருளல்களும் கொள்ளப்படும். இவ் வைந்தொழில்களையும் திருவாணை மருவி ஒருவாது செய்யும் கடவுள் நிலையினர் ஐவர். அவர் முறையே அயன், அரி, அரன், ஆண்டான், அருளோன் என அழைக்கப்பெறுவர். திருவடியுணர்வு கைவந்த அருளாளர் இவ்வைனவரயும் என்றும் விரும்பார். விரும்பும் ஏனையார்க்குப் படைக்கப் படவேண்டிய உடம்பிற் புகுவதற்குக் காரணமாகிய வினையை நூலென்று உருவகித்தார். அஃதாவது ஓருடம்பினின்று மற்றொருடம்பிற் புகுவதற்குரிய வினைத் தொடர்பு நேர்மை செய்யும் நூல் போன்றிருத்தலின் நூல் என்றருளினர். நொதிக்கின்ற: அருவருக்கின்ற.
எட்டாம் தந்திரம். பத்தி உடைமை முத்திசெய் ஞானமுங் கேள்வியு மாய்நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்தனைச் சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற சோதியைப் பத்தர் பரசும் பசுபதி தானென்றே. பொருளுரை: வீடுபேற்றினை அளித்தருளும் திருவடியுணர்வாகவும், அவ்வுணர்வினை நல்கும் திருவைந்தெழுத்து மறையாகவும், நிற்பவன் சிவபெருமான். அவனே அனைத்துயிர்க்கும் அத்தனுமாவன். அவனே என்றும் பொன்றா வானவர் தலைவனுமாவன். அவனே இயல்பாகப் பாசங்களினின்றும் நீங்கிய தூயோனுமாவன். அவனே என்றும் மங்கா அறிவுப் பேரொளியுமாவன். அவனே மெய்யன்பர்களால் வழிபட்டுப் போற்றிப் புகழப்படும் பசுபதியாகிய இறைவனுமாவன்.
அடியார் அடியார் அடியார்க் கடிமைக்கு அடியனாய் நல்கிட் டடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவனடி கூட அடியா னிவனென் றடிமைகொண் டானே. பொருளுரை: சீலம், நோன்பு, செறிவென்னும் முத்திறப் பாகுபாட்டின் கண்ணும் உள்ள மெய்யடியார்கட்குத் திருவருளால் அடிமை பூண்டார் அறிவு நெறியினராவர். அவர்க்கும் அடியேன் திருவருளால் அடிமை பூண்டேன். பூணவே அம் மெய்யடியார் பொய்யில் திருவருளால் சிவபெருமான் திருவடியிணையினைக்கூடும் திருப்பேறு பெற்றேன். பெறலும் அச்சிவபெருமான் இவன் நம்மடிமை என ஏன்று கொண்டருளினன். அருளித் தன் திருவடியையும் தந்தளித்தான்.
நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும் ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர் பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி யாகிநின் றானன்றே. பொருளுரை: தம் முனைப்பற்று அருள்வழிச் செல்வார்க்குச் சிவபெருமான் நீரினும் தண்ணியனாய்க் குளிர்ந்து இன்பம் செய்தருள்வன். தம்முனைப்புற்று மருள்வழிச் செல்வார்க்கு நெருப்பைவிட வெய்யனாய்த் தீயினும் மிக்க துன்பத்தை ஈந்தருள்வன். அத் துன்பம் அருளுவதும் திருவடியின்பம் எய்தும் பெருநெறியாம் நன்னெறியிற் செலுத்துவதற்கேயாம். இம் முறையாக நடுநிலை கோடாது கடமையை நிறைவேற்றுபவர் சிவபெருமானை யன்றி வேறு யாவர் உளர்? ஒருவரும் இலர் என்பதாம். அத்தகைய நந்திப் பெருமானை நாமா அறியும் ஆற்றலுடையோம். அனைத்துலகினும் எய்தும் நிறை பயனினும் சிறந்தவர் ஒருகால் அறிவர். உலகனைத்தையும் நன்னெறிச் செலுத்தும் தென்னாடு சிவனுறையும் பொன்னாடாகும். அந்நாடே திருவூர் என்று அழைக்கப்படும். அத்தகைய திருவூரில் அம்மையப்பராகச் செம்மையொடு விளங்குபவன் சிவன். அவன் உமாபதியாகி நின்றருளினன். குறிப்புரை: ஆர் இக்கடன் - பொருந்தும் இம் முறைமை. நேரியர் - முறைதவறாதவர். ஊரில் - சித்தத்தில்.
ஒத்துல கேழும் அறியா ஒருவனென்று அத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப் பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரன்றே. பொருளுரை: ஏழு உலகத்தாரும் ஒருங்கு திரளினும், ஏழுலகத்தின் எல்லா இடங்களின் ஆயினும் அறிதற்கரியவன் சிவன். அவன் ஒப்பில் ஒருவன். அவனே அத்தன். அவன் மறைந்து நின்றருளும் மாண்பினன். அத்தகையானை உள்ளவாறறிந்து தெள்ளிதின் உரைக்கும் வல்லார் யாவர்? ஒருவரும் இலர். அவன் மெய்ப்பத்தர்தம் மையில் பத்தியில் விளங்குபவனாவன். அவ் வுண்மை 'பத்திவலையிற் படுவோன் காண்க' என்னும் தமிழ்மறை முடிபான் உணரலாம். அவ்வாறன்றி முத்தனை யானை எத்திறத்தான் உணர்ந்து எவர் சொல்ல முந்துவர்? ஒருவருமிலர் என்க. மை குற்றம். மையில் - குற்றமில்லாத. குறிப்புரை: படின் - அகப்படின்.
ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல் நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனன வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் தானன்றே. (ப. இ. ஆன்கன்று தன் தாயை நாடி அம்மா என்று அழைப்பதுபோன்று அடியேனும் கன்றொத்துச் சார்பொருளாய் நாடிக் கனிந்தழைத்தேன். அங்னம் அழைத்தது யாரை எனின்? என்னைவிட்டு நீங்காது என்னுடன் மன்னி நிற்கும் பன்னரும் பண்பு சேர் என்னரும் நாதனை என்க. அவன் வான்கன்றாய் விளக்கும் மேனிலை யுலகத்து உயிர்களுக்கும் அப்பாற்பட்டவன். அத்தகைய மறைப் பொருளை ஊன் வாடியொழுகும் நிலையில் தவத்தின்கண் நான் புகாமல், தான் தனித்தருளும் நன்னெறி நான்மை நற்றவத்தில் அருளால் புகுந்துள்ளேன். அவனும் அந் நெறிமுறையான் என்னை நாடி வந்து அருள்புரிந்தருளினன். குறிப்புரை: வான்கன்று - வானுலகில் உள்ள பசுக்கள்.
பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான் முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால் அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற் பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் இல்லையே. பொருளுரை: ஆருயிர்கள் கட்டு நிலையில் இறவாத இன்ப அன்பினராய் அடிமை நினைவினராய் தம் முனைப்பற்று அருள்வழியொழுகி ஆர்வமொடு இறைபணி புரிகின்றன. அதனால் கட்டுற்ற காலத்தும் அவ் வுயிர் புரிவது எதுவவயினும் தன் பணியாகாது சிவப் பணியாகவே சிறக்கும். இவ் வுண்மை 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் செந்தமிழ்ச் சிறப்பு மறையின் சீர்மையான் உணரலாம் ஈண்டுக்கிய்பது இன்னும் பணி யாது என அன்பும் பணிவும் இன்பும் உடையராய் எதிர்நோக்கிப் பணி என நிற்பது. அவ் வுண்மை வரங்கிடப்பது, பாடுகிடப்பது என்பனவற்றானுணரலாம். மேலும் கிடப்பது என்பது தற்செயலற்றுத் தலைவன் கற்பிக்கும் பொற்செயல் நோக்கி நிற்பதென்பதுமாகும். பெற்றோர்கள் வழிப் பிள்ளைகளும், கற்பிப்பார்வழிக் கற்பாரும், முதியோர்வழி இளைஞரும், மருத்துவன்வழி நோயாளரும், தெய்வத்தின்வழித் தெய்வமுற்றோனும் இன்னும் இவர் போன்ற பிறரும் இன்புற்றுச் சென்று தொழுது ஒழுகும் செம்மையும் இதனை வலியுறுத்தும். பிறத்தலான் என்பது திருவாணை அகத்தினின்றும் அறிவிற்றொன்று தலான் என்பது ஆகும். ஒட்டு நிலையாகிய திருவடிப் பேற்றின்கண் ஆருயிர்களின் அறிவு அன்பு ஆற்றல் ஆகிய மூன்றும் விழுமிய முழுமுதற் சிவபெருமானை அவன் திருவருளால் ஆருயிர்கள் முறையே அயரா நினைவோடிருக்கு மாறு செல்லும் அதுவே ஆண்டு அவ் வுயிர்களின் அறிவு நிகழ்ச்சியாகும். அச் சிவத்தின்பால் நிகழும் அன்பு வாயிலா அழியா இன்பு நிகழும். அவ்வின்பின்கண் அவ் வுயிர்கள் அழுந்தும். அதுவே அவ்வுயிர்களின் அன்பு நிகழ்வாகும். ஆண்டு அவ் வுயிர்கள் அவனையே பற்றி அவன் வண்ணமாய் நிற்கும். அதுவே அவ் வுயிர்களின் ஆற்றல் நிகழ்வாகும். இம் முறையான் ஆண்டுச் செய்யும் பணியும் சிவப்பணியேயாம். மேலும் திருவடிப் பேற்றின்கண் ஆருயிர்களின் அறிவு முற்றறிவாகத் திகழும். அவ்வறிவான் நிகழும் அன்பு ஆற்றல்களும் முற்றுணர்வுடைய சிவச்செயலே யாகும். உயிர்கள் ஒட்டின்கண் ஆண்டான் அடிமை என்னும் முறைமை பூண்டு திகழும். அம் முறைமையால் அடிமையின் செயல் அனைத்தும் ஆண்டான் செயலே யாகும். அதனாலும் தன்பணியில்லை. இத்தகைய இரண்டிடத்தும் செய்யும் பணிகள் திருப்பணிகள் ஆவன மட்டுமன்றித் திருவடிக்கு ஒப்புவித்தலும் உண்டு. அம் முறையே அத்தனாகிய சிவபெருமானுக்கு ஆருயிர்கள் அருள் நிலையில் நிற்பதால் ஈரிடத்துப் பணியையும் ஒப்புவிக்கின்றன. அக் குறிப்பே இரண்டும் அருளாலளித்தலான் என்று ஓதப் பெற்றது. இம் முறையான பெரும்பற்றாகிய பத்திப் பட்டோர்க்கு யாண்டும் அவர் பெயரான் வழங்கும் பணியொன்றும் இல்லை. இதுவே மெய்ப்புணர்ப்பின் மெய்ப் பொருளாகும். கருவியும் கையும் மருவிச் செய்யும் செய்கை கருத்தாவின் பெயரால் வழங்குவதே முறைமையாகும். அங்ஙனமின்றிக் கருவி கை முதலியவற்றின் பெயரால் வழங்கப்படுமாயின் அதனை ஏற்றுரை என்றே கொள்ளப்படும். இவற்றான் இவ் வுண்மை விளங்கும் இதனைத் திருவள்ளுவ நாயனார், "என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை " என ஓதியருளினர். இதன்கண் தொல்படை மறவன் தன் பணியைத் தலைவன் பணியாகவே மொழிந்து நிலை நிறுத்தினமை பெறப்படுதல் காண்க ஆகவே அம் மறவன் தன்னைக் கருவியாகக் கொண்டனனேயன்றிக் கருத்தாவாகக் கொண்டனன் அல்லன் என்பது விளங்கும். இதனை, 'உன்னடியேன் செய்பணிகள் உன்தொண்டே உன்னருளே, உன்னடிக்கே ஒப்புவித் தேன்' என்பதனால் நினைவுகூர்க. குறிப்புரை: இரண்டும் - பெத்தம் முத்திகள் இரண்டும். பணி தாமாகச் செய்யும் பணி.. யாதே. அப்பர், . - . " காணுங.் சிவஞானபோதம், . " நஞ்செய. திருவுந்தியார், . " சிவன்முதலே. திருக்களிற்றுப்படியார், .
பறவையிற் கற்பமும் பாம்புமெய் யாகக் குறவஞ் சிலம்பக் குளிர்வரை யேறி நறவார் மலர்கொண்டு நந்தியை யல்லால் இறைவனென் றென்மனம் ஏத்தகி லாவே. பொருளுரை: ஆருயிரின் உடம்பு ஈண்டுப் பறவை என ஓதப்பட்டது. அஃதோர் ஆகுபெயர். அவ் வுடம்பினை நெடுநாள் அழியாது ஓம்ப வேண்டுமென்னும் பேரவாப்பூண்டு காயகற்பந் தெடிச் சில்லோர் அலைவர். இவ் வுண்மை, '....நெடுநா ளிருந்த பேரும், நிலையாக வேயினும் காயகற்பந்தேடி நெஞ்சுபுண் ணாவர்'எனத் தாயுமானச் செல்வர் ஓதியவற்றான் உணர்க. பாம்பு என உருவகிக்கப்படும் குண்டலினியும் மெய்யாக அகத்தே எழும் உயிர்ப்புப் பயிற்சியினால், 'மணி கடல் யானை வார்குழல் மேகம், அணிவண்டு, தும்பி வளைபேரிகை யாழ்' என்னும் பத்துவகை இன்னிசை முழக்கமும் அகத்தே முழங்கும் குறவம் - குரல்: செய்யுட்டிரிபு. அம் முழக்கத்தூடே குளிர்வரையாகிய அமிழ்த வூற்றுப் பெருகும் புருவ நடுவின்கண் ஏறுதல் வேண்டும். ஏறி ஆண்டுத் தோன்றுந் திருவடித் தீந்தேனை ஓவாது பருகிக்கொண்டு அவ்வின்பத்தினையே எண்பெரும் மலராகக்கொண்டு நாளும் முன்னைப் பழம் பொருட்கு முன்னைப் பழம் பொருளாம் சிவபெருமானை அவ் வுயிர்கள் அஞ்செழுத்தோதி வழிபடும். அத்தகைய நந்தியை அல்லாமல் ஏனைய வுருவங்களை என் மனம் மறந்தும் இறைவன் என முறைபிறழ நிறையழிய எண்ணி ஏத்தாது என்க. குறிப்புரை: பறவை - சரீரம்.கற்பமும் - காயகற்பமும். பாம்பும் - குண்டலியும். குறவம் சிலம்ப - மணி, கடல், யானை போன்ற பத்துவித நாதங்கள் ஒலிக்கக்கேட்டு, குளிர்வரை - அமிழ்தம் ஒழுகுவதால் குளிர்ந்திருக்கும் மேருவாகிய புருவமத்தி. நறவு - தேன் - அமிழ்தம்.
உறுதுணை நந்தியை உம்பர் பிரானைப் பெறுதுணை செய்து பிறப்பறுத் துய்ம்மின் செறிதுணை செய்து சிவனடி சிந்தித்து உறுதுணை யாயங்கி யாகிநின் றானே. பொருளுரை: கட்டு ஒட்டு ஆகிய இரண்டின்கண்ணும் மட்டில் பெருந்துணையாய் நின்று அருள் புரிபவன் நந்தி. அவனே தேவர்கள் முதலிய அனைவர்கட்கும் முழுமுதல்வனாவன். அவன் திருவடிப்பேறாகிய ஒட்டு நிலையினை எய்துதற்கு அவன் திருவருளே துணையாகக் கொள்ளுதல் வேண்டும். இது கதிரவனை அவன்றன் கதிரின் துணைகொண்டே காணுதல் வேண்டும் என்பதனையொக்கும் அத் திருவருளைத் துணைக்கொண்டு செம்பொருள் நூல் வழியாக ஒழுகிப் பிறப்பறுத்து உய்யுங்கள். ஆருயிர்க்கு யாண்டும் நெருங்கிய துணை திருவருளே. அத் திருவருளை மேற்கொண்டு சிவனடியைச் சிந்தியுங்கள். அத் திருவடியை நாடி வழிபடுதலான் அவன் சிறந்த பெருந்துணையாக நின்றருள்வன். அவன் தானே இயற்கை அறிவுப் பேரொளியாய் அம்மைச் செறிவுருவாய் விளங்கி நின்றருளினன். கட்டு - பிறப்பு. ஒட்டு - சிறப்பு.
வானவர் தம்மை வலிசெய் திருக்கின்ற தானவர் முப்புரஞ் செற்ற தலைவனைக் கானவன் என்றுங் கருவரை யானென்றும் ஊனத னுள்நிநைந் தொன்றுபட் டாரன்றே. அருளால் பெற்ற உயர்ந்த இன்பப் பண்புகளை யுடையவர் வானவர். பொருளால் முனைத்த மருளாம் பண்புகளையுடையவர் தானவர். வான் - உயர்வு. தான் - முனைப்பு வானவர்களைத் துன்புறுத்தும் தானவர்கள் முப்புரத்தாராவர். அவர்கள் வாழும் முப்புரங்களையும் செற்றுச் சிரித் தெரித்தவன் சிவன். அவனே முழுமுதல். அவனைக் கானவனாகிய வேடர் கோனென வழிபடுவோமாக. எஞ்ஞான்றும் பிறப்பாகிய கருவரை யில்லாதான் சிவன் என்று வழிபடுவோமாக அங்ஙனம் வழிபடுவார் உடம்பகத்தும் உயிரகத்தும் திடம்பட வீற்றிருந்தருள்பவன் சிவன். அவனை வழிபடுவார் அவனுடன் ஒன்றுபட்டு இறவா இன்புற்று வாழும் நன்மையராவர். குறிப்புரை: வலிசெய்து - துன்பம்செய்து. கானவன் - வேடன்; ஆனந்தமளிப்பவன். கருவரையான் - குறிஞ்சிக்கிழவன் அல்லது பிறப்பை வேர் அறுப்பவன். ஊன் அதனுள் - சரீரத்துள்.
நிலைபெறு கேடென்று முன்னே படைத்த தலைவனை நாடித் தயங்குமென் உள்ளம் மலையுளும் வானகத் துள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கிநின் றேனே. பொருளுரை: ஆருயிர்கள் உய்தற் பொருட்டுக் கருவித் துணையாக உலகக் காரியங்களை உள்ளதாகிய மாயையினின்று படைத்தருளியவன் சிவன். அவன் அவ் வுலகங்களைப் படைத்த ஞான்றே இத்துணைக் காலம் நிலைபெறுக என்றும், பின் நிலைமாறிக் காரணத்தின்கண் உறுக என்றும் திருவாணை ஈந்தருளினன். அவனே முழுமுதற் சிவன். அவனை என் உள்ளம் புறத்து நாடிக் கலக்கம் எய்துகின்றது. மலையுள்ளும் நாடினேன். வானகத்தும் நாடினேன். பிறவிடத்தும் நாடினேன். அவன் அவ்வவ் விடங்களை நம்முள்ளத்து உறையவரும் வழியாகவுள்ளான். ஒருவரை உறைவிடத்தன்றித் துறையாம் வழியிடத்து என்றும் காண்டல் செல்லாது. அதுபோல் ஆண்டவனையும் அன்பார் அகத்துத்தான் உண்மை வடிவிற் காணுதல் கூடும். அங்ஙனம் கண்டு அவன் திருவடியின்பில் முழுகினேன். சிவனைப் புறத்துக்காண்பது அவன்றன் சார்பு வடிவமாகும். அகமாகிய உணர்வில் காண்பதே அவன்றன் உண்மை வடிவமாகும். குறிப்புரை: நிலைபெற கேடு என்று - இருக்க அழிக என. புறத்தும் - நரக புவனங்களிடத்தும். வானத்தான். . காரைக்காலம்மையார்.