Title
stringlengths
21
197
Author
stringlengths
4
27
City
stringlengths
3
20
Published
stringlengths
19
19
Text
stringlengths
149
24k
தமிழகத்தில் விபத்தில்லாமல் பணிபுரிந்த அரசுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தங்க, வெள்ளி நாணயங்கள் வழங்கல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 17:48:00
சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க, இன்று (பிப். 26) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த ஒரு ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் உடன் கூடிய நடத்துநர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாரட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின்போது இறந்த பணியாளர்களின் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான நடத்துநர் பணி நியமன ஆணையினை வழங்கினார். இவ்விழாவில், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.10 கோடி மான நஷ்டஈடு கோரி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக அதிமுக வழக்கு @ உயர் நீதிமன்றம்
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-26 17:02:00
சென்னை: அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுவுக்கு எதிராக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு கோரி, சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலம் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, கூவத்தூர் சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி பேசியுள்ளார். மேலும், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று நான் மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் என் மீது இந்த குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக, இத்தனை ஆண்டுகளாக பொது வாழ்வில் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்கு ராஜு களங்கம் ஏற்படுத்தியுள்ளார். பெண்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என எங்களது பொதுச்செயலாளர் ஜெயலலிதா கற்றுக் கொடுத்துள்ளார். ஆனால், அதிமுகவில் இத்தனை ஆண்டு காலமாக இருந்த ஏ.வி. ராஜு இதனை மறந்து பெண்ணுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், அதிமுகவுக்கு என்று பிரத்யேகமான பெண்கள் ஆதரவு இருந்தது. ராஜுவின் பேச்சால் தற்போது அந்த ஆதரவு பாதிக்கப்பட்டுள்ளது. ராஜுவின் இந்த பேச்சால் தனது நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, நஷ்ட ஈடாக ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், ராஜுவின் பேச்சை நீக்க வேண்டும் என கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் புதிய நிர்வாகிகள் நியமனம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 16:52:00
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு இரண்டு துணைத் தலைவர்கள் மற்றும் மூன்று பொதுச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் கே.செல்வப்பெருந்தகை உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர்களாக ஏ.கோபண்ணா, சொர்ண சேதுராமன் ஆகியோரும், கட்சியின் பொதுச் செயலாளர்களாக டி.செல்வம், கே.தணிகாசலம் மற்றும் என்.அருள் பெத்தய்யா ஆகியோரை நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, அகில இந்திய காங்கிரஸ் அழைப்பை ஏற்று தானும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமாரும் உடனடியாக தலைநகர் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. எனவே, கருணாநிதி நினைவகத் திறப்பு விழாவில் பங்கேற்க இயலாத நிலை உள்ளதால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன், சு.திருநாவுக்கரசர், எம். கிருஷ்ணசாமி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் பங்கெடுத்துக் கொள்வார்கள். நினைவக திறப்பு விழா மிக மிக சிறப்பாக அமைந்திட தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன் என்று கூறியிருந்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி விதிமீறல் கட்டிடங்கள்... 10 ஆண்டாக அதிகாரிகளுக்கு ஆழ்ந்த தூக்கமா? - ஐகோர்ட்
கி.மகாராஜன்
மதுரை
2024-02-26 16:45:00
மதுரை: “மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது 10 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் 2011-ல் தாக்கல் செய்த மனு: ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கட்டப்படும் கட்டிடங்களின் உயரத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 1997-ல் அரசாணை வெளியிட்டது. அதன்படி கோயில் சுவரில் இருந்து கோயிலை சுற்றியுள்ள கட்டிடங்களின் உயர வரம்பாக 9 மீட்டர் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை மீறி மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி 9 மீட்டர் உயரத்துக்கு மேல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு அளித்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயரமான கட்டிடங்களால் பக்தர்களால் கோயில் கோபுரங்களை தரிசிக்க முடியவில்லை. எனவே, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள விதிமீறல் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர்கள் ஆணையர்களை உயர் நீதிமன்றம் நியமனம் செய்தது. வழக்கறிஞர் ஆணையர்கள் மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில் மொத்தம் 547 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 525 கட்டிடங்கள் 9 மீட்டருக்கும் மேல் உயரமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், “அரசின் உயரக் கட்டுப்பாடு அரசாணையை மீறி மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார். மதுரை மாநகராட்சி வழக்கறிஞர் வாதிடுகையில், ''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி 1 கிலோமீட்டர் சுற்றளவில் 9 மீட்டருக்கு மேல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடந்து வருகிறது. விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டிருப்பது தெரியவந்தால் பாகுபாடு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். 9 மீட்டருக்கு மேல் உள்ள கட்டிடம், அனுமதியற்ற கட்டுமானம், விதிமீறல் கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி ஆவணங்களில் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது. தற்போது வரை 9 கட்டிடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. அனுமதியற்ற கட்டுமானங்களை அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு, ''மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதிபெறாமல் விதிமீறல் கட்டிடங்களை கட்ட அனுமதி கொடுத்துவிட்டு 10 ஆண்டுகளாக அதிகாரிகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தார்களா? விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் பணியாகும். ஆனால், நோட்டீஸை அனுப்பிவிட்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் உள்ளனர். இந்த வழக்கில் உள்ளூர் திட்டக்குழுமத்தையும் எதிர்மனுதாரராக சேர்க்கிறோம். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றி கட்டிடங்கள் கட்டுவதற்கு 1997-க்கு முன்பு மதுரை மாநகராட்சி நிர்வாகம் எத்தனை அனுமதி வழங்கியது? 1997-க்கு பிறகு உள்ளூர் திட்ட குழுமம் எத்தனை அனுமதி வழங்கியது? விதிமீறல் கட்டிடங்கள் மீது தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஏப்ரல் 4-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டது.
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: 150+ விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கையால் பரபரப்பு
இரா.ஜெயப்பிரகாஷ்
காஞ்சிபுரம்
2024-02-26 16:30:00
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகள் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து கைது செய்ய முயன்றபோது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான நில எடுப்புக்கான முதல்நிலை அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ள பொடவூர் கிராமத்தில் நிலம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆட்சேபனை ஏதும் இருப்பின் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இந்த ஆட்சேபனைகள் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நிலம் எடுப்புக்கான மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கிராம மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து காரை அருகே உள்ள நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு பேரணியாக வந்து முற்றுகையிட முடிவு செய்தனர். இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டிராக்டரில் ஊர்வலமாக செல்ல கிராம மக்கள் திங்கள்கிழமை ஏகனாபுரம் அருகே கூடினர். அப்போது போலீஸார் அவர்களை தடுத்து கைது செய்ய முயன்றனர். போராட்டத்தை தொடங்கும் முன்பே எதற்காக வந்து கைது செய்கிறீர்கள்? என்று பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வலுக்கட்டயமாக தரதரவென விசாயிகள், மற்றும் பெண்களை இழுத்துச் சென்று போலீஸார் கைது செய்னர். இதனால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலீஸார் சுங்குவார்சத்திரத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்திருந்தனர். அங்கு அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக ஏகனாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் பரபப்பாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் உள்பட அருகாமையில் உள்ள 4 மாவட்ட போலீஸாரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவில் மேலும் சில தலைவர்கள் இணைவதாக வானதி சீனிவாசன் தகவல்
செய்திப்பிரிவு
கோவை
2024-02-26 16:23:00
கோவை: “பாஜக கட்சியின் கொள்கைகளை பிடித்து, உன்னதமான உணர்வோடுதான் பிற கட்சியினர் இணைகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் பண பேரம் என கூறுகின்றனர்” என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதன் ஒரு பகுதியாக வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ‘இன்று மாலை 5 மணிக்கு பாஜகவில் முக்கியத் தலைவர்கள் இணைவதாக கூறப்படுகிறதே’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “பாஜகவின் இணையும் அத்தனை பேரும் பாஜகவின் கொள்கைகளைப் பிடித்து வருகின்றனர். அதோடு, எங்களுடைய கட்சி புதிதாக வருபவர்களுக்கு கூட அதிகமான வாய்ப்புகளை வழங்குகின்றது. பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, இந்தக் கட்சி நாட்டினுடைய வளர்ச்சிக்காக பாடுபடுகிறது என்கின்ற உன்னதமான உணர்வோடு வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் பண பேரம் என்று சொல்கின்றனர். மற்ற கட்சியினரை இழுக்குறோம் என்றால் அவர்கள் விருப்பம் இல்லை என்றால் வர முடியாது. பாஜகவில் இணைந்தால் அரசியல் லட்சியங்களை நிறைவேற முடியும் என்பதால் இணைகின்றனர். பாஜகவில் யார் இணைகின்றார், அவர் எத்தனை அடி உயரத்தில் இருப்பார், அவர் எந்த நேரத்தில் வேட்டி கட்டுவார், புடவை கட்டுவார் என்பதற்கெல்லாம் பதில் சொல்ல முடியுமா? இன்னும் கொஞ்ச நேரம்தான். பொறுங்க. இன்னும் 4 மணி நேரத்தில் தெரிந்து விடும். ஊடகங்கள் இல்லாமல் யாரையும் இணைக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த விஜயதரணிக்கு உழைப்பு, திறமை அடிப்படையில் அங்கீகாரம் கிடைக்கும். கட்சித் தலைமை அவருக்கு என்ன பதவி வழங்கலாம் என்பதை முடிவு செய்யும்” என்றார் வானதி சீனிவாசன்.
உதகை அருகே எருமை மீது மோதி தடம் புரண்ட மலை ரயில் - பயணிகளுக்கு பாதிப்பு இல்லை
ஆர்.டி.சிவசங்கர்
உதகை
2024-02-26 16:06:00
உதகை: உதகை அருகே எருமை மீது மோதியதால் மலை ரயில் தரம் புரண்டது. நல்வாய்ப்பாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டுகள் பாரம்பரியம் வாய்ந்த இந்த மலை ரயிலில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நாளொன்றுக்கு அதிகபட்சமாக 220 பயணிகள் மட்டுமே இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயணிக்க முடியும். தமிழ்நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை 7.10 மணிக்கு உதகைக்கு நீலகிரி மலை ரயில் புறப்பட்டது. காலை 10 மணிக்கு குன்னூரை வந்தடைந்தது. அங்கிருந்து 2 முதல் வகுப்பு பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் ஒரு பொது பெட்டி என 5 பெட்டிகளில் 220 பயணிகளுடன் உதகை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில், காலை 11.50 மணியளவில் உதகை நோக்கி மலை ரயில் வந்துகொண்டிருந்தது. அப்போது உதகை அருகே பெர்ன்ஹில்லை தாண்டி 45-வது கி.மீட்டரில் திடீரென ரயிலின் குறுக்கே வளர்ப்பு எருமைகள் தண்டவாளத்தை கடந்துள்ளன. இதைக் கண்ட பிரேக்ஸ்மேன் திடீரென பிரேக்கை பிடிக்க, அப்போது ஏற்பட்ட உராய்வில் மலை ரயில் எருமை மீது மோதி, தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக ரயிலில் பயணித்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். ரயில் மோதியதில் எருமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்தனர். அதிர்ச்சியில் இருந்த பயணிகளை ரயில்வே ஊழியர்கள் ரயிலிலிருந்து கீழே இறக்கி ரயில் நிலையம் அழைத்து சென்றனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீஸார் தடம் புரண்ட ரயிலை ஆய்வு செய்தனர். விபத்து காரணமாக உதகையிலிருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் கிரேனை கொண்டு தடம் புரண்ட ரயில் பெட்டியை தண்டவாளத்தில் தூக்கி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்புறம் இஞ்சின்: நீலகிரி மலை ரயில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு மலையேறி வரும் போது முன்னின்று பெட்டிகளை இழுத்து செல்வதில்லை. மாறாக பின்னிலிருந்து பெட்டிகளை முன்னோடி தள்ளிக்கொண்டு செல்லும். மிதமான 20 கி.மீ., வேகத்தில் இயங்கும் மலை ரயில் விபத்து ஏற்பட்ட போது பெட்டிகள் முன்னோக்கி வந்தன. பெட்டியில் இருந்த பிரேக்ஸ்மேன் முதலில் பிரேக் அழுத்தியுள்ளார். இஞ்சினில் உள்ள ஓட்டுநர் இதை உணர்வதற்குள் பெட்டி தண்டவாளத்திலிருந்து தடம் புரண்டது. நூற்றாண்டு பழமையான நீலகிரி மலை ரயில் தடம் புரண்டது இது இரண்டாம் முறையாகும். கடந்தாண்டு ஜூன் மாதம் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு ரயில் குன்னூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சில மீட்டர் தூரம் சென்றதும் ரயிலின் கடைசி பெட்டி தடம் புரண்டது.
அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி மனு: இபிஎஸ் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-26 15:35:00
சென்னை: தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் சனாதனத்தை ஒழிக்க வேண்டுமென அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். அவரது பேச்சு பெரும் விவாதப்பொருளாக மாறியது. இந்த விவகாரத்தில் உதயநிதி செப்டம்பர் 7-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ‘சனாதனம் என்றால் என்ன’ என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து நான் தேடிக்கொண்டிருப்பதாக கூறியிருந்தார். கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆட்டுதாடியின் பின்னால் நீண்ட நாள் ஒளிந்திருக்க முடியாது என்றும், ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் பேசியுள்ளார். அவரது அறிக்கை தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், அவதூறு பரப்பு வகையிலும் உள்ளன. எனவே, தன்னை பற்றி பேச அமைச்சர் உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தனக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “எதன் அடிப்படையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர் ஈ.வி.சந்துரு, “இந்த விவகாரத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு முகாந்திரமே இல்லை. பொது வாழ்வில் இருக்கும் நபர் ஒருவர் குறித்து பொதுவாழ்வில் இருக்கும் மற்றொரு நபர் பேசியதில் தவறில்லை. பொது வெளியில் நடந்ததை பற்றியே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தனிப்பட்ட விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை” என்று வாதிட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உதயநிதி ஸ்டாலினின் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டார். அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புப்படுத்தி பேச உதயநிதி ஸ்டாலினுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக்கொண்டு இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
பழனிசாமியை சந்தித்தது ஏன்? - தமாகா இளைஞரணித் தலைவர் யுவராஜா விளக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 15:31:00
சென்னை: காமராஜர், மூப்பனார் வழியில் அரசியல் பயின்றவன் என்பதால் தனிப்பட்ட முறையில் தனது குடும்பத்துடன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்ததாக தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2019-ம் ஆண்டு முதல் தமாகா அதிமுக கூட்டணியோடு இணைந்து பல தேர்தல்கள் மற்றும் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். அதற்கு மேலாக நல்ல நட்போடு அரசியல் பணியாற்றி வந்தோம். தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பாஜகவுடன் கூட்டணி என்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அறிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராசர், மக்கள் தலைவர் மூப்பனார் இவர்கள் வழியில் அரசியல் பயின்றவன் என்ற காரணத்தினால் நான் மற்றும் எனது குடும்பத்தினர் சார்பாக தனிப்பட்ட முறையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார். முன்னதாக, பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி: அடிக்கல் நாட்டிய ஆந்திர முதல்வர் ஜெகன் அறிவிப்பு
செய்திப்பிரிவு
குப்பம்
2024-02-26 15:28:00
குப்பம்: பாலாற்றில் தடுப்பணை கட்ட ரூ.215 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று குப்பம் சாந்திபுரம் பகுதியில் நடைபெற்றது. இதில்தான் புதிய தடுப்பணைக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டார். இதற்கிடையே, பாலாற்று பகுதியில் புதிய தடுப்பணை கட்டுவது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார். இதனிடையே, பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ் அதேபோல், “தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
காஞ்சி, திருவள்ளூர் பிரதிநிதிகளிடம் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 14:40:00
சென்னை: 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தமிழகம் முழுவதும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக எம்.பி.கனிமொழி தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய‌ அம்சங்கள் குறித்து பொதுமக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை "உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற தலைப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களிடம் கருத்துகளை கேட்டு வரும் நிலையில், இன்று (பிப்.26) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில்முனைவோர்கள், விவசாய சங்கத்தினர், வழக்கறிஞர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை திமுக எம்.பி.கனிமொழி கேட்டறிந்தார். திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின்‌ தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கருணாநிதி எம்பி உடன் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோவி செழியன், ஆவடி நாசர், சி.வி.எம்.பி.எழிலரசன் எழிலன் நாகநாதன், கோவிந்தராஜன்,சுந்தர், சந்திரன் சென்னை மாநகர மேயர் பிரியாராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
“தமிழிசை, நிர்மலா சீதாராமனை புதுச்சேரி வாக்காளர்கள் ஏற்க மாட்டார்கள்” - நாராயணசாமி கருத்து
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-26 14:36:00
புதுச்சேரி: “புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகத்தை சரி செய்ய வேண்டும். காரைக்காலில் சிறப்பு நிபுணர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காரைக்காலில் ஜிப்மர் திறந்தால் மட்டும் போதாது; தரமான சிகிச்சை அளிக்க வேண்டும். ஜிப்மருக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அடிக்கல் நாட்டப்பட்டது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் மேரி கட்டிடம், கடற்கரையில் பல் நோக்கு அரங்கம், காமராஜர் மணிமண்டபம் முழுமையாக பயன்படுத்தவில்லை. மேரி கட்டிடம் பிரதமரால் திறக்கப்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வரவில்லை. கடற்கரை பல்நோக்கு அரங்கம் 2 ஆண்டுகளாக மூடிக் கிடக்கிறது. புதுச்சேரி ஆளுநர் மாளிகையை மாற்ற வேண்டிய அவசியமில்லை. காமராஜர் மணி மண்டபம் அரசு விழாக்கள் நடத்த மட்டுமே பயன்படுத்துகிறது. நாங்கள் நிறைவேற்றிய திட்டங்களைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. புதிய சட்டப்பேரவை கட்டிடம் கட்டும் விவகாரத்தில் ஆளுநர் தமிழிசை - பேரவைத் தலைவர் செல்வம் இடையே பனிப் போர் நடக்கிறது. பேரவைத் தலைவர் எந்த உள்நோக்கத்தோடு ரூ.620 கோடியில் சட்டப்பேரவை கட்ட நினைக்கிறார் என கேள்வி எழுகிறது. இதற்கு முதல்வர், அமைச்சர்கள் உடந்தையாக உள்ளனர். ஆளுநரிடம் உள்ள கோப்பு பரிமாற்றம் பற்றி பேரவைத் தலைவர் வெளியே பேசுவதே தவறு. இந்த ஆட்சியில் ஆளுநர், முதல்வர், பேரவைத் தலைவர், அமைச்சர்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. இவர்களால் சட்டமன்றம் கட்ட முடியாது. இதற்கு மத்திய அரசு நிதி கொடுக்காது. இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. புதுச்சேரி காங்கிரஸுக்கு ஒதுக்க கோரிக்கை வைத்து வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ், பாஜகவுக்கு தொகுதியை தாரை வார்த்துள்ளது. 3 நியமன எம்எல்ஏ, மாநிலங்களவை பதவியை பாஜக பறித்துக்கொண்டது. ரங்கசாமி தன் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ள, ஆட்சியின் ஊழல்களை மத்திய பாஜக ஆட்சி கண்டுகொள்ளாமல் இருக்க பதவிகளை பாஜகவுக்கு கொடுத்து வருகிறார். பாஜகவோ வேட்பாளர்களை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்கள் மண்ணின் மைந்தர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். வேட்பாளரே இல்லாமல் பாஜக நாடாளுமன்ற தேர்தலில் நிற்க பிரச்சாரம் செய்து வருகிறது. மக்கள் இதை பார்த்து வருகின்றனர். என்.ஆர்.காங்கிரஸ், பாஜக சார்பில் எந்த வேட்பாளர் நின்றாலும் இந்தியா கூட்டணி வேட்பாளர் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவார். விஜயதரணி கட்சி மாறியது பற்றி கேட்கிறீர்கள். அரசியல் கட்சியிலிருந்து செல்வது சகஜம். எனினும், தமிழக அரசியலில் தலையிட மாட்டேன். தேர்தலுக்கு முன்பாக புதுச்சேரி அரசு ஊழல் பட்டியல் தொடர்பாக புகார் தருவேன். காங்கிரஸில் ஒரு முறை போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படும். நாங்கள் காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புதுச்சேரி மக்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை ஏற்க மாட்டார்கள். தமிழிசை, நிர்மலா சீதாராமனுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்” என்றார். அப்படியென்றால் ராகுல் காந்தி, புதுச்சேரி தொகுதியில் போட்டியிட முன்வந்தால் எதிர்ப்பீர்களா என கேட்டபோது, “அவர் அகில இந்திய தலைவர், எங்கள் கட்சியின் தலைவர். அவர் போட்டியிடுவதை நாங்கள் எதிர்க்க முடியுமா?” என்று நாராயணசாமி பதில் அளித்தார்.
பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸில் பொறுப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 14:27:00
சென்னை: பொருளாதார நிபுணராக அறியப்படும் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழக காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ஆனந்த் சீனிவாசன் நாட்டின் பொருளாதாரம், நிதி நிலைமை, நிதி மேலாண்மை வழிகாட்டுதல்கள் குறித்த சமூக வலைதள வீடியோக்கள் மூலம் பிரபலமானார். சமீப காலமாகவே மத்திய அரசின் பொருளாதாரம் குறித்து புள்ளி விவரங்களை கொண்டு மத்திய பாஜக அரசை விமர்சித்து வந்தார். இது தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்த நிலையில், அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத் துறை தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
“ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது” - செல்வப்பெருந்தகை சாடல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 13:36:00
சென்னை: "தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரஸில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர் எடுத்த முடிவின் காரணமாக ஜி.கே. மூப்பனாரின் ஆத்மா இவரை மன்னிக்காது” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜக கூட்டணியில் சேருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்திருக்கிறார். தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முன் வராத நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் முதல் கட்சியாக பாஜகவுடன் இணைந்திருக்கிறது. தமிழக மக்களால் தொடர்ந்து வெறுக்கப்பட்டு வருகிற பாஜகவுடன் தமாகா கூட்டு சேர்ந்திருக்கிறது. மறைந்த ஜி.கே. மூப்பனார் காங்கிரசை விட்டு வெளியேறி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கி முதல் தேர்தலில் 1996ல் திமுகவுடன் கூட்டணி அமைத்து 20 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றவுடன் தலைநகர் டெல்லிக்கு தமாகாவில் வெற்றி பெற்ற 20 மக்களவை உறுப்பினர்களை தம்முடன் அழைத்துச் சென்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து அவரது வாழ்த்துகளை பெற்றார். ஏப்ரல் 1999ல் அன்று பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அன்று தமிழ் மாநில காங்கிரஸில் ப. சிதம்பரம் உள்ளிட்ட மூன்று பேர் மக்களவை உறுப்பினர்களாக இருந்தார்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த மறைந்த ஜி.கே. மூப்பனாரை அழைத்து நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த கோரிக்கையை ஏற்று தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் வாஜ்பாய் தலைமையிலான அரசு ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று வகுப்புவாத பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் எண்ணத்திற்கு எதிராக இன்று அவரது மகன் ஜி.கே. வாசன் வகுப்புவாத பாஜகவில் அரசியல் சுயநலத்தோடு கொள்கையை துறந்து கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டிருக்கிறார். காங்கிரஸ் இயக்கத்தில் மூப்பனார் மகன் என்ற ஒரே காரணத்திற்காக 11 ஆண்டுகள் மாநிலங்களவை உறுப்பினர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கேபினட் அந்தஸ்துள்ள கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என பல பதவிகளை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி வழங்கியிருக்கிறார். இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் எடுத்துள்ள முடிவை தமிழ் மாநில காங்கிரசில் இருக்கிற உண்மையான தொண்டர்கள் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்த முடிவின் காரணமாக மூப்பனாரின் ஆத்மா ஜி.கே.வாசனை மன்னிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
பாலாற்றில் புதிய தடுப்பணை | உச்ச நீதிமன்றத்தில் தடை பெற வைகோ வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 12:47:00
சென்னை: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க ஆந்திர அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தடையானை பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தில் சிக்பெல்லாபூர் மாவட்டம், நந்திதுர்கம் மலையில் உற்பத்தியாகும் பாலாறு, கர்நாடகத்தில் 93 கிலோ மீட்டரும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டரும் பாய்ந்து தமிழகத்தில் வாணியம்பாடி அருகே புல்லூர் என்ற இடத்தில் நுழைகிறது. தமிழகத்தில்தான் அதிக அளவாக 222 கி.மீ. தூரம் பயணித்து, காஞ்சிபுரம் மாவட்டம், வயலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறி ஏற்கெனவே கர்நாடகத்தில் பாலாற்றின் குறுக்கே 3 தடுப்பணைகளும், ஆந்திர மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 21 தடுப்பணைகளும் கட்டப்பட்டதால் தமிழகத்தில் பாலாறு வறண்டு கிடக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு குப்பம் தொகுதிக்கு உட்பட்ட ரெட்டிகுப்பம் என்ற பகுதியில் பாலாற்றின் குறுக்கே கூடுதலாக புதிய தடுப்பணை ஒன்றைக் கட்ட ஏற்பாடுகள் செய்து வருகிறது. இது தொடர்பாக அம்மாநில வனத்துறை அமைச்சர், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், ரெட்டிகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்துகொண்டு தடுப்பணைக்கான பணிகளை தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை 1892 ஆம் ஆண்டு மைசூர் மாகாணத்திற்கும், சென்னை மாகாணத்திற்கும் நதிநீர் பங்கீடு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. அது மட்டுமின்றி, குப்பம் பாலாறு படுகை முழுவதும் யானை வழித்தடம் ஆகும். இந்த பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கும் என்பதால் எந்தப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது. யானைகள் வழித்தடத்தில் கணேசபுரம் எனும் இடத்தில் அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடையானை வழங்கியுள்ளது. எனவே கணேசபுரத்திலிருந்து புல்லூர் வரை யானைகள் வழித்தடம் என்பதால் அந்தப் பகுதிகளில் புதிய திட்டம் எதையும் செயல்படுத்தக் கூடாது. மீறினால் உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானதாக கருதப்படும். இதற்கான பணிகளை ஆய்வு செய்த ஆந்திர சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் பெத்தி ரெட்டி, பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பிரச்சனை தீர்ந்து விட்டதாகவும், தேர்தலுக்குப்பின் மேலும் 2 தடுப்பணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டுவது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், தமிழகத்தின் வட மாவட்டங்களின் நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இதனால் குடிநீரின்றி மக்கள் அவதிப்படுவதுடன், வேளாண் தொழிலும் முற்றாக சீரழிந்து விடும். எனவே தமிழக அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை துரிதப்படுத்தி, பாலாற்றின் குறுக்கே அணைக்கட்ட முனையும் ஆந்திர மாநில அரசின் திட்டத்தை கைவிட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட அதிமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்!
இ.ஜெகநாதன்
சிவகங்கை
2024-02-26 12:46:00
சிவகங்கை: மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்ட அதிமுகவில் கோஷ்டி பூசல் வெடித்ததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானவர் ஜி.பாஸ்கரன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் சிவகங்கை தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என ஜி.பாஸ்கரன் எதிர்பார்த்த நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில் நாதனுக்கு ஒதுக்கப்பட்டது. அத்தேர்தலில் செந்தில் நாதன் வெற்றி பெற்றார். அதன் பின்னர், ஜி.பாஸ்கரனை கட்சி நிகழ்ச்சிகளில் செந்தில்நாதன் தரப்பு புறக்கணித்து வந்தது. இதனால் அதிருப்தியில் இருந்த ஜி.பாஸ்கரன், சிவகங்கை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி தர வேண்டுமென பொதுச் செயலாளர் பழனிசாமியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். இதற்கு செந்தில் நாதன் தரப்பு முட்டுக்கட்டை போட்டது. சில மாதங்களுக்கு முன்பு, ஜி.பாஸ்கரனுக்கு மாநில அமைப் புச் செயலாளர் பதவி கிடைத்தது. அதன் பின்னர், அவருக்கு செந்தில் நாதன் தரப்பினர் முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் அவர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் தலை தூக்கத் தொடங்கி உள்ளது. பிப்.10-ம் தேதி சிவகங்கையில் நடந்த மாவட்ட ‘ஜெ’ பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் செந்தில்நாதன் ஆதர வாளர் வைத்திருந்த பேனரில் ஜி.பாஸ்கரனின் புகைப்படம் இடம் பெறவில்லை. மேலும் அவரை முறையாக அழைக்காததால் அவரும், அவரது மகனும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான கருணாகரனும் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கிடையே, ஜி.பாஸ்கரனின் ஆதரவாளரும், அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாள ருமான பாலமுருகன், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி வாழ்த்துத் தெரிவித்து சிவகங்கை நகரில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார். அதில் ஜி.பாஸ்கரன், கருணாகரன் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்ற நிலையில், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் புகைப்படம் இடம் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் நெருங்கும் சமயத்தில், கோஷ்டிப் பூசல்வெடித்ததால் தொண்டர்களி டையே அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில் ‘‘ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பல அணிகளாகப் பிரிந்து விட்டன. மக்களவைத் தேர்தல் சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இரு கோஷ்டிகளாகச் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரை கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லாமல் இருந்தது. அதிமுக தலைமை உடனடியாகத் தலையிட்டு கோஷ்டிப் பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று கூறினர்.
மேல்மா சிப்காட் எதிர்ப்பு போராட்டத்துக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு
செய்திப்பிரிவு
திருவண்ணாமலை
2024-02-26 11:35:00
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்குப் பல்வேறு விவசாயச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு 3,200 ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தத் தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துக் கடந்த 7 மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏழு விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அனைவரையும் தமிழக அரசு விடுவித்தது. மேலும் சட்டப்பேரவையில் நிலமற்றவர்கள் போராடுகிறார்கள் என்ற பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேல்மா கூட்டுச்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைக் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம், தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு கழகம், ஏர்முனை, இந்திய விவசாயிகள் சங்கம், காவிரி வைகை குண்டாறு நீர்ப்பாசன விவசாயச் சங்கம், ஐக்கிய விவசாயச் சங்கம், கரும்பு விவசாயிகள் அணி, தமிழ் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து களைத் தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்கள் பேசும் போது, “மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்துக்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும், விவசாயிகள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.
“திமுகவுக்கு நெருக்கமான ஜாபர் சாதிக் பின்னணியை விசாரிப்பீர்” - இபிஎஸ் @ போதைப்பொருள் விவகாரம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 11:33:00
சென்னை: நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல் துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக ஜாபர் சாதிக் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல் துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நான் எத்தனையோ முறை அறிக்கைகள் வாயிலாகவும், சட்டப்போவையிலும், பொது நிகழ்ச்சிகளிலும் இந்த திமுக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழகம் போதைப் பொருள் கேந்திரமாக மாறிவருதையும் ஆக்கபூர்வமான பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக சுட்டிக்காட்டி வருகிறேன். தமிழகம் முழுவதும் மூலை, முடுக்கெங்கும் கஞ்சா, பவுடர், மாத்திரை மற்றும் ஸ்டாம்ப் வடிவிலும், கேட்டமின், கொக்கேய்ன் என்று பல வகைகளிலும் போதைப் பொருட்கள்! தட்டுப்பாடின்றி கிடைப்பதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், இளம் வயதிலேயே போதைக்கு அடிமையாகி குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊடகங்களும், நாளிதழ்களும் தினமும் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. 2021-ம் ஆண்டு 20.45 டன் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், 6,853 வழக்குகள் பதியப்பட்டதாகவும், 9,571 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும் திமுக அரசின் உள்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எத்தனை பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது மற்றும் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்று 2021-2022ம் ஆண்டு உள்துறை மானியக் கோரிக்கையில் நான் சட்டமன்றத்தில் பேசினேன். இந்நிலையில் முன்னாள் காவல்துறை தலைவர் 'ஆபரேஷன் கஞ்சா 0.1, 0.2, 0.3, 0.4' என்று போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்கிறது என்று கூறிய நிலையில், திமுக அரசு பொறுப்பேற்று 32 மாத கால ஆட்சிக்குப் பிறகும். இதுபோன்ற போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் கைது, போதைப் பொருட்கள் பறிமுதல் என்ற செய்திகள் மட்டும் வருகின்றன. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ஆணி வேரை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறி வருவதையும், போதைப் பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் பொம்மை முதல்வரின் கீழ் செயல்படும் தமிழக காவல்துறை தோல்வி அடைந்ததையே இது காட்டுகிறது. இதற்கு காரணம், இதுபோன்ற போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் தலையீடு உள்ளதாக அவ்வப்போது வரும் நாளிதழ் மற்றும் ஊடகச் செய்திகளில் இருந்தே தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படாத நிலையை ஊகிக்க முடிகிறது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதாக டெல்லியில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் தேடப்பட்டு வருவதாகவும், இக்கடத்தலில் திமுக-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளதாக, ஊடகங்கள் முக்கியச் செய்திகளாக வெளியிட்டு வருகின்றன. திமுக-வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து இந்தக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகி உள்ளது என்றும், இந்த கடத்தல் சம்பந்தமாக அவர்களைத் தேடி வருவதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதால் அமலாக்கத் துறையினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தலைமறைவாகி உள்ள மூன்று பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் தேடி வரும் நிலையில், திமுக-வைச் சேர்ந்த பலரும் சிக்குவார்கள் என்று கூறப்படுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. உதயநிதி ஸ்டாலின் மனைவி கிருத்திகா உதயநிதி' இயக்கத்தில் இம்மாதம் வெளியான 'மங்கை Travel of Women' என்ற படத்தைத் தயாரித்தவர் இந்த ஜாபர் சாதிக் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. திமுக ஆட்சியில் தமிழகம் போதை மாநிலமாக தள்ளாடி வரும் நிலையில், திமுக-வால் பொறுப்பு கொடுத்து அழகு பார்க்கப்பட்ட முக்கிய நிர்வாகி, டெல்லியில் போதை சாம்ராஜ்யம் நடத்தியுள்ளதும், அதன்மூலம் கிடைத்த கோடிக்கணக்கான ரூபாயில் யாருக்கெல்லாம் பங்கு கொடுத்தார் என்று விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும், இந்தத் தலைமை நிர்வாகி, திமுக தலைமை குடும்பத்துடன் உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழக காவல் துறையின் உயர் அதிகாரிகளிடம், தான் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்துள்ளது தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நிர்வாகத் திறனற்ற பொம்மை முதல்வரின் கீழ் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை, இனியாவது எந்தவிதமான அரசியல் அழுத்தத்திற்கும் உள்ளாகாமல், சுதந்திரமாக செயல்பட்டு, உடனடியாக இந்த நபரின் பின்னணி மற்றும் முழு விவரங்களையும், மேலும் இதுபோல் யாரேனும் போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனரா என்பதையும் மத்திய போதைப் பொருள் தடுப்புக் காவல்துறையினருடன் இணைந்தோ அல்லது தனித்தோ புலன் விசாரணை செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பு ரத்து: வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு
ஆர்.பாலசரவணக்குமார்
சென்னை
2024-02-26 11:12:00
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு செய்த புகாரில் சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவை ரத்து செய்து இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், முறையாக ஒப்புதல் பெற்று வழக்கை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான வீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக இருந்த கணேசன் என்பவருக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக, அப்போது வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி, கடந்த 2012-ம் ஆண்டு , அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி - எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவு: இந்த வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள இந்த வழக்கின் விசாரணையை மார்ச் 26-ம் தேதிக்குள் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும். வழக்கு மாற்று நடவடிக்கை முடிந்த பிறகு மார்ச் 28-ம் தேதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் எம்.பி - எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஒரு லட்சம் ரூபாய்க்காண பிணையை செலுத்த வேண்டும். தினந்தோறும் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்குள் முடித்து உயர் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கின் பின்னணி: தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராகபதவி வகித்தபோது, வீட்டுவசதிவாரிய வீடு ஒன்றை மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்.13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கவுள்ளார். இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
பாலாற்றில் புதிய தடுப்பணை | ஆந்திராவிடம் தமிழக உரிமையை அரசு தாரைவார்த்ததா? - ராமதாஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 10:46:00
சென்னை: ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பது தான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைக் கட்டுவதற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதைவிட அதிர்ச்சியளிக்கும் உண்மை, தடுப்பணை தொடர்பான தமிழக அரசின் வழக்கில் சிக்கல் தீர்ந்துவிட்டது என்று ஆந்திர அமைச்சர் கூறியிருப்பதுதான். பாலாறு சிக்கலில் தமிழகத்தின் உரிமைகளை அரசு தாரை வார்த்திருப்பது கண்டிக்கத்தக்கது. ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் இரு தடுப்பணைகள் கட்டப்படும் என்றும் கூறியிருக்கிறார். பாலாற்றின் குறுக்கே கடந்த காலங்களில் 22 தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதால் தமிழ்நாட்டில் பாலாறு வறண்டு கிடக்கும் நிலையில், பாலாற்றில் புதிய அணை கட்டுவதென்பது பாலாற்றை பாசன ஆதாரமாக நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் செயலாகும். இதை அனுமதிக்க முடியாது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகளை ஆந்திரம் கட்ட முயல்வது தொடர்பான சர்ச்சை 18 ஆண்டுகள் வரலாறு கொண்டதாகும். குப்பம் பகுதியில் கணேசபுரம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டுவதற்கான முயற்சிகளில் குப்பம் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராகவும், முதலமைச்சராகவும் இருந்த சந்திரபாபு நாயுடு 2006 இல் முயன்ற போது, அதைக் கண்டித்து முதல் குரலை எழுப்பியதும், போராட்டங்களை நடத்தியதும் பாட்டாளி மக்கள் கட்சி தான். அப்போதைய பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பா.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆந்திர எல்லைக்கே சென்று தடுப்பணைகள் கட்டுவதற்கு எதிராக போராட்டம் நடத்தினர். அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்று பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக அரசும் வழக்கு தொடர்ந்ததால் கணேசபுரம் தடுப்பணை திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு பாலாற்றில் புதிய அணை கட்டமுடியாமல் இருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்கில் சிக்கல் தீர்ந்து விட்டதாகவும், அதனால் புதிய அணையை கட்டப்போவதாகவும் ஆந்திர அரசு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அப்படியானால், ஆந்திராவில் தடுப்பணை கட்டுவதற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாக இத்தகைய பின்னடைவு ஏற்பட்டிருந்தால் தான் ஆந்திர அரசால் புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல் நாட்ட முடியும். எனவே, ஆந்திராவில் புதிய தடுப்பணைகளை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பாலாற்று நீரைப் பயன்படுத்துவது குறித்து அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் ராஜதானிக்கும் இடையே 1892 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கடைமடை பாசன மாநிலத்தின் ஒப்புதல் இல்லாமல் புதிய அணைகளைக் கட்டக்கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது. அதற்கு மாறாக ஆந்திர அரசு புதிய தடுப்பணைகளைக் கட்டுவதும், ஏற்கெனவே கட்டப்பட்ட அணைகளின் உயரத்தை அதிகரிப்பதும் சட்டவிரோதமாகும். இதை அனுமதிக்கக் கூடாது. பாலாற்றின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்ட ஆந்திர அரசு, அம்மாநிலத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் 22 தடுப்பணைகளில் பெரும்பாலானவற்றின் உயரங்களை அதிகரித்து விட்டது. அதனால், ஆந்திரத்தில் பெருமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டால் தவிர தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வருவதில்லை. அதனால், ஒரு காலத்தில் பால் போல் தண்ணீர் ஓடிய பாலாறு, இப்போது வறண்டு போய் காட்சியளிக்கிறது. இதனால் பாலாற்று தண்ணீரை நம்பி பாசனம் செய்து வந்த விவசாயிகளில் பெரும்பான்மையானோர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிலையில் பாலாற்றின் குறுக்கே உடனடியாக ஒரு தடுப்பணையும், தேர்தலுக்குப் பிறகு மேலும் இரு தடுப்பணைகளும் கட்டப்பட்டால், ஆந்திரத்தில் வெள்ளம் ஏற்பட்டால் கூட தமிழ்நாட்டிற்கு பாலாற்றில் தண்ணீர் வராது. அப்போது பாலாறு பாலைவனமாகவே மாறி விடக்கூடும். பாலாற்றை நிரந்தர பாலைவனமாக்க ஆந்திரம் திட்டமிட்டு மேற்கொள்ளும் இந்த சதியை தமிழக அரசு முறியடிக்க வேண்டும். குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கான ஆந்திர அரசின் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். அதுமட்டுமின்றி, ஆந்திர தடுப்பணைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குக்கு உயிர் கொடுப்பதுடன், அந்த வழக்கைப் பயன்படுத்தி பாலாற்றின் குறுக்கே இனிவரும் காலங்களில் அணைகள் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் தமாகா கூட்டணி: ஜி.கே.வாசன் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 10:40:00
சென்னை: "பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கிறது தமிழ் மாநில காங்கிரஸ்" என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன், "நேற்று மாலை பாஜகவின் தமிழகத்தின் பொறுப்பாளர் அர்விந்த் மேனன், தமாகா அலுவலகத்தில் என்னைச் சந்தித்தார். சுமார் 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல், மக்களவை தேர்தல் குறித்து பேசினோம். அப்போது, நாளை பல்லடத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். நேற்று காலை பாஜக மேலிட தலைவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசினார்கள். நாளை நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து பாஜக தலைமையில் மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது. பிரதமர் மோடி அவர்களை, பிரதமராக வேட்பாளராக கொண்ட பாஜகவில் அங்கம் வகிப்பதாக தமாகா முடிவெடுத்துள்ளது. மூப்பனார் காலத்தில் தொடங்கப்பட்டதில் இருந்து பிராந்திய கட்சியான தமாகா தேசிய கண்ணோட்டத்தோடு செயல்படும் கட்சியாகவே தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமாகாவின் கருத்துக்களை முறையாக கேட்டு, தமிழகத்தின் நலனுக்காக எந்த இயக்கம் மத்தியில் பாடுபடும் என்ற நம்பிக்கையோடு இந்த முடிவை எடுத்துள்ளோம். இன்றைய சூழலில், தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு இதை விரும்பம் மத்திய அரசு உள்ளது. அதற்கு பிரதமரை கோடிட்டு காண்பித்து பல உதாரணங்கள் சொல்ல முடியும். மேலும், இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அனைத்து தரப்பு மக்களுடைய எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலித்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை இரண்டு முறை பல மாநில மக்களின் ஆதரவை பெற்று வென்ற கட்சி பாஜக. தமிழக வாக்காளர்கள் அதனை கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் மூன்றாவது முறை பாஜக ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார ரீதியாக நாடு உயரும். ஏழை எளிய மக்களின் கிடைக்கக்கூடிய பலன்கள் அதிகரிக்கும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. படித்தவர்கள், இளைஞர்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த முறை பாஜகவின் வெற்றி என்பது உலகளவிலேயே இந்தியாவை 3வது பொருளாதார நாடாக மாற்ற கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தும். தமிழக மக்கள் இதனை நன்கு உணரத் தொடங்கியிருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் தமாகா மக்களைச் சந்திக்கும். கரோனாவுக்கு பிறகு ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வோர் நிலையில் உள்ளன. ஆனால் மத்தியிலும் ஆளும் ஆட்சியாளர்களால் இந்த காலகட்டத்தில் இந்தியாவை பொறுத்தவரை வளர்ந்த நாடுகளுக்கு இணையாக மாறியது. இந்த நாடு விவசாய நாடு. விவசாயத்துக்கு முக்கியதத்துவம் கொடுக்கும் கட்சியாக மத்திய பாஜக செயல்படுகிறது. தமிழகத்தில் இருக்கும் திமுக அரசு தற்போது மக்கள் விரோத அரசாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலேயே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை ஏமாற்றுகிற அரசு என்றால் அது திமுகதான். மழை, வெள்ளத்தின் போது மெத்தனமாக செயல்பட்டது. தமிழக அரசின் செயல்பாடு மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற அடிப்படையில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கிறோம். வரும் நாட்களில் கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவோம். நாட்டின் மீது அக்கறை கொண்ட கட்சிகள் தமிழகத்தில் இருந்து இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். சில நாட்களில் பாஜக கூட்டணி முழுமை பெறும். மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. அதன்பிறகு தொகுதி பங்கீடு குறித்து முடிவெடுக்கப்படும்" என்று ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மார்ச் 2-வது வாரத்தில் அதிமுக கூட்டணி அறிவிப்பு
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-26 10:02:00
மார்ச் 2-வது வாரத்தில் அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி ராயபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். எனக்கு தெரிந்தவரை எப்போதும் மார்ச் 2-வது வாரத்தில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கூட்டணி குறித்து நான் எதுவும் கூறமுடியாது. அதிமுகவுக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இருந்ததில்லை. கூட்டணி என்பது கூடுதல் பலம் அவ்வளவுதான். இன்னும் 2 வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். நல்ல கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். ஓபிஎஸ், தினகரன், அண்ணாமலை, திமுகவினர் தேர்தலுக்காக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தேர்தலில் எடுபடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாஜகவில் இணைவதாக வதந்தி: பழைய பதிவை பகிர்ந்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 09:55:00
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் பரவிய நிலையில் அதனை மறுத்துள்ளார். மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில் "என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன்! உண்மையுடன்!" என்று பதிவிட்டு தனது பழைய பதிவை மீண்டும் பகிர்ந்துள்ளார். 3 வருடங்களுக்கு முன் பதிந்த அந்த பழைய பதிவில், "என் இறுதி மூச்சு உள்ளவரை அஇஅதிமுக மூலம் பொதுவாழ்வில் பங்களிப்பேன்" என்பதை தெளிவு படுத்துகிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் பிரதிநிதிகள் கட்சிகள் மாறிவருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து சில அரசியல் பிரமுகர்கள் கட்சி மாறப்போவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், தன் மீதான வதந்தி குறித்து மாஃபா பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். என்றும் புரட்சித்தலைவி அம்மா வழியில், கழகப் பொதுச் செயலாளர் @EPSTamilNadu தலைமையில் கழகப் பணியாற்றுவேன், உறுதியுடன் ! உண்மையுடன் ! https://t.co/JO12cZ80qN
“தமிழக மக்களின் நலனுக்காகவே லேகியம் விற்கிறேன்” - அண்ணாமலை விளக்கம்
செய்திப்பிரிவு
பேசியதாவது
2024-02-26 09:48:00
திண்டிவனம் அருகே கூட்டேரிபட்டு நான்குமுனை சந்திப்பில் நேற்று 'என் மண், என் மக்கள்' பாதயாத்திரை மேற்கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 226 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொள்ளப்பட்டது. தமிழக மக்களையும், இளைஞர்களின் வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் நாடு முழுமைக்கும் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவது உறுதி. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அளித்த 511 வாக்குறுதிகளில் ஒரு சில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவிகளில் 38 சதவீதத்தினருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 3.50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார். ஆனால் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 10,600 பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி அரசு, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். அப்போது, தமிழகத்தில் உள்ள 5,400 டாஸ்மாக் கடைகளும், சாராய ஆலைகளும் மூடப்பட்டு, கள்ளுக்கடைகள் திறக்கப்படும். தமிழகத்தில் ஒரு மாவட்டத்துக்கு தலா 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்பட்டு அனைவருக்கும் சர்வதேச தரத்திலான கல்வி இலவசமாக வழங்கப்படும். அரசு வேலை வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் என்னை லேகியம் விற்பவர் எனவும், பூச்சாண்டி எனவும் விமர்சிக்கின்றனர். தமிழக மக்களின் நலனுக்கான லேகியத்தை விற்று வருகின்றேன் என்றார். இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் கூட்டுச் சாலையில் நடைபயணம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு மத்திய அரசு கொடுக்கும் 6,000 ரூபாயோடு, மாநில அரசு சார்பில் ரூ.9,000 சேர்த்து ரூ.15 ஆயிரம் வழங்கப்படும் என்றார்.
மோடி பொதுக் கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு: வானதி சீனிவாசன் தகவல்
செய்திப்பிரிவு
கூறியதாவது
2024-02-26 09:28:00
பல்லடத்தில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். தென் சென்னை தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம் பகுதியில் மக்கள் மருந்தகத்தை பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.நேற்று திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கு அதிகமான இடங்கள் மக்கள் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த முறை முதல் முறையாக வாக்களிக்கக்கூடிய வாக்காளர்கள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக வாக்களிக்க வேண்டும் என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் கூறியிருக்கிறார். மாநகரத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே வாக்குகள் பதிவாகிறது. இந்த நிலையை வரும் மக்களவை தேர்தலில் மாற்ற வேண்டும். பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். அப்போது பல்லடத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார். அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும்போது கூட்டணியில் இன்னும் அதிகமானோர் இணைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
கிருஷ்ணகிரி
2024-02-26 09:23:00
கிருஷ்ணகிரி: திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியைக் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், மக்களவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சேகர், மாநிலச் செயலாளர் ஆறுமுகம், முன்னாள் அகில இந்திய உறுப்பினர் துரை சாமி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்த சாமி, நகரத் தலைவர்கள் முபாரக், லலித் ஆண்டனி, தொகுதிப் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், ‘திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் சிறப்பாகச் செய்த எம்பி செல்லகுமாருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பட்டியலின மற்றும் பட்டியல் பழங்குடியின பிரிவு ஒருங் கிணைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ஹரி, மூத்த வழக்கறிஞர் அசோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் பூந்தமல்லி அருகே திடீர் சாலை மறியல்
செய்திப்பிரிவு
பூந்தமல்லி
2024-02-26 06:15:00
பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் நேற்று பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்கள் சங்கம் சார்பில் நேற்று பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் 50-க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த பூந்தமல்லி போலீஸார் சம்பவ இடம் விரைந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனர்.
பல்லாவரத்தில் வன்னியர் குல சத்திரியர்கள் ஆன்மிக மாநாடு
செய்திப்பிரிவு
பல்லாவரம்
2024-02-26 06:07:00
பல்லாவரம்: பல்லாவரத்தில் வன்னிய குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாடு நேற்று நடைபெற்றது. வன்னியர் குல சத்திரியர்களின் முதல் ஆன்மிக மாநாட்டில் முதல் நிகழ்வாக உலக மக்கள் நலம் பெற வேண்டி ஸ்ரீ சம்பு மகரிஷி சிறப்பு வேள்வி நடைபெற்றது. பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி ஆன்மிக மாநாட்டை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஆன்மிக மாநாட்டில் இறையாளர்கள், அருளாளர்கள், சித்தர்கள், குருமார்கள், அடியார்கள், ஆன்மிக பெரியோர்கள், தலைவர்கள் ஆகியோர் ஆசியுரை வழங்கினர். ஸ்ரீ சம்பு மகரிஷி படத் திறப்பும், சுவாமி ஸ்ரீ ருத்ர வன்னியர் படத்திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ராஜரிஷி அர்த்தநாரீஸ் வர்மா நூல் வெளியீட்டு விழாவும், அருளாளர்கள் ஆசியுரையும், வன்னிய குல குருமார்கள், அடியார்கள், அனைவருக்கும் திருவடி பூஜையும் நடைபெற்றது. பசுமை தாயகம் மாநில துணைசெயலாளர் ஐ.நா.கண்ணன், பாமக மாவட்ட செயலாளர்கள் வெங்கடேசன், நிர்மல்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பரந்தூர் விமானநிலைய விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம்: ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்த மக்கள்
செய்திப்பிரிவு
காஞ்சிபுரம்
2024-02-26 06:05:00
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ளபொடவூர் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முதல்நிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்த தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம். தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்துப்பூர்வமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அவற்றின் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கிராம மக்கள் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகாம்பரம், தண்டலம், வளத்தூர், மேலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், நாளை நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார்
ந. சரவணன்
திருப்பத்தூர்
2024-02-26 06:04:00
திருப்பத்தூர்: ஆந்திர மாநிலம் பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே 22 தடுப்பணைகளை அந்த மாநில அரசு கட்டியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட இன்று (பிப்.26) முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்ட உள்ளார். இது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் எனத் தமிழக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் நேற்று குப்பத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, "ரெட்டி குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை ஒன்று கட்டப்பட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா பிப்.26-ம் தேதி (இன்று) நடைபெற உள்ளது. அதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தடுப்பணைக்கான பணிகளைத் தொடங்கி வைக்க உள்ளார்" என தெரிவித்துள்ளார். இத்தகவல் தமிழக விவசாயிகளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிஉள்ளது. ஏற்கெனவே கட்டப்பட்ட 22 தடுப்பணைகளால் தமிழகப் பாலாறு வறண்டு காணப்படும் நிலையில் கூடுதலாகப் புதிய தடுப்பணை ஒன்று கட்டினால் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட இனி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் புதிய தடுப்பணை பணிக்குதமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பாலாறு நீர்வள ஆர்வலர் அம்பலூர் அசோகன் இந்து தமிழ் திசை செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘1992 பன்மாநில நதிநீர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு மீண்டும் மீறியுள்ளது. பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டிய விவகாரம் குறித்து ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தமிழக அரசு சார்பில் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர பாமக சார்பிலும் ஒரு வழக்கு ஆந்திர அரசுக்கு எதிராகத் தொடரப்பட்டு அந்த வழக்குகள் தற்போது நடந்து வருகின்றன. இது தொடர்பான வழக்கு மார்ச் மாதம் 13-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர் இந்த வழக்குகள் முடிந்துவிட்டதாகப் பொய்யான ஒரு தகவலை செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார். இனியும் தமிழக அரசு தாமதிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்த வேண்டும். அதற்கான ஆதாரங்களைத் திரட்டி புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் பாலாறு என்று ஒன்றுஇருந்ததற்கான சுவடே இல்லாமல் போகும் நிலை எதிர்காலத்தில் வரும்’’ என்றார்.
கோவில்பட்டியில் கடலைமிட்டாய் குறுங்குழுமம்
செய்திப்பிரிவு
தூத்துக்குடி
2024-02-26 06:01:00
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் மற்றும் கோவில்பட்டியில் பனைப்பொருட்கள், கடலைமிட்டாய் குறுங்குழுமங்கள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும்விழாவில், தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதன் விவரம்: விளாத்திகுளம் வட்டம் வேம்பாரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் ‘வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்' அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ‘கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்' அமைக்கப்படும். இந்தக் குழுமங்களுக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்றவசதி, தானியங்கி பேக்கிங்கூடங்கள் மற்றும் உற்பத்திபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும். தூத்துக்குடியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் ‘வர்த்தக வசதிகள் மையம்' சுமார் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தீவுத்திடல் கண்காட்சி: 42 நாளில் 4.79 லட்சம் பேர் வருகை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:59:00
சென்னை: சென்னை தீவுத்திடல் கண்காட்சிக்கு 42 நாட்களில் 4.79 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். சென்னை தீவுத்திடலில் 48-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, கடந்த ஜனவரி 14-ம் தேதி தொடங்கியது. 70 நாட்கள் நடைபெறும் சுற்றுலா கண்காட்சியில் 51 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்குகளில் தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 32-க்கும் மேற்பட்ட விளையாட்டு சாதனங்கள், நவீன கேளிக்கை சாதனங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களின் இசை நிகழ்ச்சி, நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. பொருட்காட்சியை நேற்று முன்தினம் (24-ம் தேதி) 12,793 பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த42 நாட்களில் 3,99,892 பெரியவர்கள், 79,101 சிறியவர்கள் எனமொத்தம் 4,78,993 பேர் பொருட்காட்சியை பார்வையிட்டுள்ளனர் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் அதிக முறை பயணம் செய்த 40 பேருக்கு பரிசு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:56:00
சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணம் செய்த 40 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்களில் சிங்கார சென்னை அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டு டிச.15-ம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி வரை 3 மாதங்களுக்கு ஒவ்வோரு மாதமும் அதிகமாக பயணம் செய்யும் முதல் 40 பயணிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் நம்ம யாத்ரியுடன் இணைந்து பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி ஜனவரி 15-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை மெட்ரோ ரயில்களில் அதிக முறை பயணித்த 40 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி, பயணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து, பீட்ஸ் அண்ட் மெட்ரோஸ் மெகா இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், பிரபல சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ஸ்ரீநிஷா ஜெயசீலன், ஸ்ரீதர் சேனா மற்றும் பேட்சுலர்ஸ் பேன்ட் (Bachelor’s Band) ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொது மேலாளர் பெனுதர் பர்ஹி உட்பட பலர் பங்கேற்றனர்.
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை திறந்தார் பிரதமர் மோடி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:54:00
சென்னை: சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனை உட்பட தமிழகத்தில் மொத்தம் ரூ.313.60 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர்மோடி திறந்து வைத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மத்திய அரசின் நிதியில் ‘தேசியமுதியோர் நல மையம்’ (மருத்துவமனை) கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி தேசிய முதியோர் நல மருத்துவமனை, அரசு கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. கரோனா தொற்று கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் கரோனா மருத்துவமனைசெயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டது. பின்னர், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் மத்திய சுகாதாரத் துறை சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி, காணொலி காட்சி மூலமாக,சென்னை கிண்டியில் ரூ.151.17கோடியில் அமைக்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மையம்,ஆய்வகத்தையும் திறந்து வைத்தார். மருத்துவமனை வளாகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தின் கட்டிடம் மத்தியஅரசு நிதியில் கட்டப்பட்டிருந்தாலும், தமிழக அரசின் நிதி பங்களிப்போடுதான் மருத்துவமனை தொடங்கப்படுகிறது. 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 5 அறுவை சிகிச்சை அரங்கம், 20 கட்டண வார்டுகள் உள்ளன. கட்டண அறையில் உணவுடன் சேர்த்து ரூ.900கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதியவர்களும்இந்த மருத்துவமனையின் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மருத்துவமனை திறக்கப்படும்போதே மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 276 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோர் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படஉள்ளன. பல்வேறு சிகிச்சை பிரிவுகள்: புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத முதியவர்களுக்கு சிகிச்சை,நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகளுக்கான சிகிச்சை, இதயமருத்துவம், சிறுநீரக மருத்துவம்,மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம்,புனர்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவ சிகிச்சைகள் இந்த மருத்துவமனையில் உள்ளன. பொது அறுவை சிகிச்சை, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் ஆகியவையும் இங்குவழங்கப்படும். இதற்காக அதிநவீன உபகரணங்களும் வரவுள்ளன. இந்த மருத்துவமனை முதியோருக்கான பிரத்யேக மருத்துவமனையாக திகழ்ந்து, ஒரு மகத்தான சேவையை வழங்கஉள்ளது. ரூ.313.60 கோடியில் கட்டிடங்கள்: இந்த மருத்துவமனை உட்படதமிழகத்தில் மொத்தம் ரூ.313.60கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை பிரதமர் மோடி திறந்துவைத்துள்ளார். 60 சதவீதம்மத்திய அரசு நிதி, 40 சதவீதம்மாநில அரசு நிதியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளரூ.125 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் சுயசரிதை நூலை வெளியிட்டார் முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:51:00
சென்னை: ஓய்வுபெற்ற டிஜிபி வால்டர் ஐ.தேவாரம், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதை நூலை வெளியிட்டார். தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்வால்டர் ஐ.தேவாரம். பணிக் காலத்தில் சட்டம் - ஒழுங்கை கையாள்வதில் திறன் மிக்கவராக இருந்த இவர், சமூக விரோதிகள், குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். இதன் காரணமாகவே, காவல் துறையில் பணிக்கு சேரும் பலரும் இவரை ரோல் மாடலாக ஏற்று தங்களது வழித்தடத்தை அமைத்துக் கொண்டனர். பணியிலிருந்து ஓய்வுபெற்று சுமார் 26 ஆண்டுகள் ஆன நிலையில், ‘மூணாறிலிருந்து மெரினா வரை’ என்ற தலைப்பில் தனது சுயசரிதையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புத்தகமாக எழுதி அதை நேற்று வெளியிட்டார். அந்தபுத்தகத்தில் பல்வேறு அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. காவல்துறையில் தனது அனுபவங்களை விரிவாக எழுதியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர்கள் பக்தவச்சலம், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரிடம் தான் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா, சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் விருந்தினர் மாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. புத்தகத்தை தேவாரம் வெளியிட, அதை மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் பெற்றுக்கொன்டார். சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், ஓய்வுபெற்ற முன்னாள் டிஜிபிக்கள் லத்திகா சரண், சைலேந்திர பாபு,தற்போதைய கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் உள்ளிட்ட பலர் இந்த நூலை அடுத்தடுத்து பெற்றுக்கொண்டனர். தமிழாக்கம் செய்ய உதவிய முன்னாள் போலீஸ் அதிகாரி துக்கையாண்டி விழாவில் கவுரவிக்கப்பட்டார்.
அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் போராட்டம் வாபஸ்
செய்திப்பிரிவு
ராமேசுவரம்
2024-02-26 05:50:00
ராமேசுவரம்: தமிழக அரசு சார்பில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ராமேசுவரம் மீனவர்கள் நேற்று மாலை உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றனர். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ், இலங்கை நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிக்கும் நடைமுறையை இந்த மாதம் முதல் அமல்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறையும், படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து 4 மீனவர்களையும் அந்நாட்டுச் சிறையில் அடைத்தது இலங்கை அரசு. இந்தப் புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறைத் தண்டனை வழங்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை காலை தொடங்கினர். இரண்டாவது நாளாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் மீனவர் சங்கத் தலைவர் சேசுராஜா தலைமையில் மீனவர்கள், மீனவப் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர். நேற்று மாலை 5 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலில் தமிழக அரசு சார்பாக ராமநாதபுரம் எம்எல்ஏ. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு திமுக சார்பில் நிவாரண நிதியும் வழங்கப்பட்டது. பேச்சுவார்த்தையின்போது மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், ராமேசுவரம் மீனவர்கள் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் வாங்கித் தருவதாகவும் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மீனவர்கள் திரும்பப் பெற்றனர்.
சென்னை, புறநகரில் வெள்ளத்தடுப்பு, கால்வாய் பணிகள் ஆய்வு: மழைக்காலத்துக்குள் முடிக்க தலைமைச்செயலர் அறிவுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:48:00
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்று வரும் வெள்ளத்தடுப்பு பணிகள், கால்வாய் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா, மழைக்காலத்துக்கு முன்பாக பணிகளை முடிக்க உத்தரவிட்டார். பேரிடர்களைத் தொடர்ந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று ஆய்வு செய்தார். நீர்வளத்துறையின் சார்பில் ஆலந்தூர் மண்டலம், வார்டு157-க்கு உட்பட்ட ரிவர்வியூ காலனியில் ரூ.24.80 கோடியில் மியாட் பாலம் முதல் விமான நிலையம் வரை அடையாறு ஆற்றின் கரையைபலப்படுத்தும் பணி, அலுவலர் பயிற்சி அகாடமி, மணப்பாக்கம் கால்வாயில் ரூ.34 கோடியில் நடைபெறும் போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாயினை மேம்படுத்தும் பணி, தர்மராஜபுரம் பகுதியில் கொளப்பாக்கம் கால்வாயை ரூ.8.74 கோடியிலான தடுப்புசுவர் கட்டுதல் பணி, குன்றத்தூரில் கொளப்பாக்கம் கால்வாய் 1-லிருந்து ஓடை வரை ரூ.11.72 கோடியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை மழைக்குள் முடிக்க அறிவுறுத்தினார். தொடர்ந்து, கெருகம்பாக்கம் கால்வாயில் ரூ.19.16 கோடியில் 160 மீ. முதல் 1500 மீ. வரையிலான மேம்படுத்தும் பணி, குன்றத்தூர் சாலையில் உள்ள சிறுபாலப் பணிகளை விரைவாக முடிக்கவும், மணப்பாக்கம் கால்வாயில் வெள்ளநீரை கட்டுப்படுத்த கதவணைகள் அமைக்கவும் அறிவுறுத்தினார். பருவமழைக் காலங்களில் போரூர் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்வதை தடுக்க, தந்திக் கால்வாய் நீர் போரூர் ஏரிக்கு செல்வதற்கு முன்பாகவே ஷட்டர் அமைத்து திசை திருப்பப்படுகிறது. வெள்ள நீர் ஓடும் சாலைகளே வெள்ள நீர் வடிகால்களாக மாற்றப்பட்டு, தந்திக் கால்வாயிலிருந்து போரூர் ஏரியின் உபரிநீர் கால்வாய் வரைரூ.16.70 கோடி மதிப்பில் 700மீ நீளத்தில் புதிதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கப்படுகிறது. இதுதவிர, ரூ.39.6 கோடியில் போரூர் ஏரியில் புதிய மதகு அமைத்தல், போரூர் ஏரியிலிருந்து இராமாபுரம் ஓடை வரை 3.3 கி.மீ. நீளத்துக்கு மூடிய கால்வாய் பணி,தாம்பரம்- மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலை புறவழிச் சாலையில் ரூ.9.7 கோடி மதிப்பில் கூடுதல் பெட்டி வடிவ கால்வாய் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும், ரூ.70 கோடியில் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்படும் நேப்பியர் பாலம் முகத்துவாரப் பகுதி கட்டுமானப்பணி, வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.4 கோடி மதிப்பிலான சாலைப்பணிகள், வேளச்சேரி பிரதான சாலையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை இணைக்கும் கால்வாய் பணிகளுக்காக நிலம் எடுக்கும் பணிகளையும் ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலம், தொல்காப்பியப் பூங்காவில் ரூ.42.45 கோடியிலான மறுசீரமைப்புப் பணிகள், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் குப்பைகளை ரூ.350.65 கோடியில் நிலத்தை மீட்டெடுக்கும் பணிகள், தேனாம்பேட்டையில் ஒப்பனை அறை கட்டுமான பணி, யானைக்கவுனி பாலச் சாலையில் ரூ.30.78 கோடியில் ரயில்வே மேம்பாலம், திருவொற்றியூர் குப்பம் பகுதியில் ரூ.200 கோடியில் சூரை மீன்பிடி துறைமுகக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் சுமார் ரூ.180 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும். இந்தப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு இருக்காது. அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் இருக்க பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். வேளச்சேரி, தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு மழைநீர் வருவதற்கான குழாய் அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். மழை முடிந்த நிலையில், எங்கெங்கு பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனக் கண்டறிந்து, அங்கு பணிகளை விரைவில் தொடங்கி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார். ஆய்வின்போது நீர்வளத்துறை செயலர் சந்தீப் சக்சேனா, மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், நெடுஞ்சாலைத்துறை செயலர் பிரதீப் யாதவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சென்னை பல்கலை. சிண்டிகேட் குழு 4 உறுப்பினர்கள் நியமனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:45:00
சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் கல்வி மற்றும் நிர்வாகம் சார்ந்து மேற்கொள்ள வேண்டிய முடிவுகள், செலவினங்கள், புதிய திட்டங்களுக்கு, அந்தந்த பல்கலை. சிண்டிகேட் குழுவில் விவாதித்து ஒப்புதல் பெறப்படுவது வழக்கமாகும். இந்தக் குழுவில் துணைவேந்தர், பதிவாளர் பேராசிரியர்கள், கல்வியாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் இடம் பெறுவர். இந்நிலையில், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் குழுவுக்கு புதிதாக 4 உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழுவுக்கு உறுப்புக் கல்லூரிகளின் பேராசிரியர்கள் 4 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்தவகையில் சென்னை அரும்பாக்கம் டி.ஜி வைஷ்ணவா கல்லூரி இணை பேராசிரியர் (எம்சிஏ) டி.வேல்முருகன், மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் (தாவரவியல்) டி.ஆனந்த், மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி இணை பேராசிரியர் (கணிதம்) எம்.அனந்த நாராயணன், தாம்பரம் எம்சிசி முதல்வர் பி.வில்சன் ஆகியோர் சிண்டிகேட் குழுவில் இணைந்துள்ளனர். இவர்கள் 2027 பிப்ரவரி 23-ம் தேதி வரை 3 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் உள்ள நிலையில், சிண்டிகேட் குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விஜயதரணி ராஜினாமா ஏற்பு: பேரவை தலைவர் அப்பாவு தகவல்
செய்திப்பிரிவு
திருநெல்வேலி
2024-02-26 05:42:00
திருநெல்வேலி: பாஜகவில் இணைந்த விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் விஜயதரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிபாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததாக ஊடகம் மூலம் அறிந்தேன். இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப் பெருந்தகை இணையம் வாயிலாக கடிதம் ஒன்றை எனக்கும், சட்டப்பேரவை முதன்மைச்செயலாளருக்கும் அனுப்பி இருந்தார். அதில், ‘விஜயதரணி எம்.எல்.ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி காங்கிரஸ் கட்சிசார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நிலையில், பாஜகவில் இணைந்துள்ளார். அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் படிநடவடிக்கை எடுத்து பதவி நீக்கம்செய்ய வேண்டும்’ என தெரிவித்திருந்தார். இதுபோல், பாரதிய ஜனதா கட்சியில், தான் இணைந்து கொண்டதாகவும், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாகவும் சட்டமன்ற விதி 21 படிவம்-எப் மூலம், ராஜினாமா கடிதத்தை தமது கைப்பட எழுதி இணையம் வாயிலாக எனக்கும், முதன்மைச் செயலாளருக்கும் விஜயதரணி அனுப்பி இருந்தார். மேலும், விஜயதரணி என்னை தொலைபேசியில் அழைத்து, தான் முறைப்படி கடிதத்தை தனது கைப்பட எழுதி அனுப்பி இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த கடிதத்தை முறையாகபரிசீலனைசெய்து, அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விரைவில் இடைத்தேர்தல்? விஜயதரணியின் ராஜினாமா கடிதத்தை பேரவைத்தலைவர் ஏற்ற நிலையில், விரைவில் சட்டப்பேரவை செயலகத்தால் விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மூலம், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும். இதையடுத்து, விளவங்கோடு தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். ஒரு தொகுதி காலியானால், 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். விரைவில் மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில்,மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தொகுதியை பொறுத்தவரை, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் களமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது.
தென் தமிழக கடலோரம், டெல்டா பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:40:00
சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பிப்ரவரி 26, 27-ம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.28முதல் மார்ச் 2-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். தமிழகத்தில் ஒருசில இடங்களில் 26-ம் தேதி (இன்று) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 25 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
10 மின்சார ரயில்கள் இன்று முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:38:00
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக, தாம்பரம் செல்லும் 10 மின்சார ரயில்கள், இன்று முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, பயணிகளின் கூட்டம் பல மடங்குஅதிகரித்துள்ளது. இதனால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தாம்பரம் வரை இயக்கப்படும் ரயில்கள், வரும் வாரநாட்களில் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னைகடற்கரை - தாம்பரம் இடையே இரவு 7.19, 8.15, 8.45,8.55, 9.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், இன்றுமுதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் வாரநாட்களில் நீட்டித்து இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் நீட்டிப்பு: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி வரை நீட்டித்து இயக்கப்பட உள்ளன. அதேபோல, கூடுவாஞ்சேரியில் இருந்து தாம்பரத்துக்கு இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 ஆகிய நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பயன்படுத்திய திருக்குறள்களின் பின்னணியை விவரிக்கும் ‘7 சொல் மந்திரங்கள்’ ஆங்கில நூல் வெளியீடு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:35:00
சென்னை: மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய “7 சொல் மந்திரங்கள்” ஆங்கில நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் திருக்குறள்களை பயன்படுத்திய பின்னணியை இந்த நூல் விளக்குகிறது. சென்னை இலக்கிய விழாவில் லைஃப்லைன் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் எழுதிய “7 சொல் மந்திரங்கள்” (7 WORD MANTRAS) என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்தநூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், மேற்குவங்க முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிநாராயணன், தமிழக சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே உள்ளிட்ட பலர் பெற்றுக் கொண்டனர். இந்த நூல் தொடர்பாக மருத்துவர் ஜே.எஸ்.ராஜ்குமார் கூறும்போது, “நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் திருக்குறள் காட்டும் நெறியை உணர்ந்துள்ள பிரதமர்நரேந்திரமோடி, பாரீஸ், தாய்லாந்து, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட 10 இடங்களில் வெவ்வேறு திருக்குறள்களை தனது உரையில் எடுத்துரைத்துள்ளார். பிரதமர் எதற்காக திருக்குறள்களை தனது உரையில் பயன்படுத்தினார் என்ற பின்னணியுடன், கொஞ்சம் அரசியலுடன் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத் தமிழ் குறித்தும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூல் 100 பக்கங்களை கொண்டது” என்று தெரிவித்தார். இந்த நூல் குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது முன்னுரையில், “சிறந்த மருத்துவ அறுவை சிகிச்சை வல்லுநராக இருந்தாலும் திருக்குறளின் மீது மருத்துவர் ஜே.எஸ். ராஜ்குமாருக்கு இருக்கும் வேட்கை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தெளிவாக தெரிகிறது. தமிழ் மொழியின் மீதும், தமிழ்க் கலாச்சாரத்தின் மீதும் பிரதமருக்கு இருக்கும் பாசப் பிணைப்பை இந்த நூல் உணர்த்துகிறது. பன்னாட்டு அரங்கில் திருக்குறளையும், திருவள்ளுவரையும் உயர்த்தி பிடிக்கும் நமது பிரதமரின் நெஞ்சார்ந்த முயற்சிகளை இந்த நூல் சிறப்பிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
கடலோர காவல்படையில் சேர வேண்டும்: இளைஞர்களுக்கு கிழக்கு பிராந்திய ஐஜி வேண்டுகோள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:30:00
சென்னை: இந்திய கடலோர காவல்படை சார்பில் நடத்தப்பட்ட சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல், கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த இளைஞர்கள் சேர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய கடலோர காவல்படையின் 48-வது எழுச்சி தினத்தை முன்னிட்டு, கடலோர காவல்படையின் பணிகளை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலான செய்முறை விளக்க சாகச நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் இருந்து 15 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ள கடல் பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உட்பட 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடுக்கடலில் கப்பல் அல்லது படகு தீப்பிடித்தால் எப்படி அணைப்பது, தீப்பிடித்த கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை மீட்பது, படகு சேதமடைந்து செயலிலக்கும் நிலையில் நடுக்கடலில் தத்தளிக்கும் மீனவர்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை தொடர்பாக செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதவிர, கடலில் ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்தும் கடற்கொள்ளையர்களை சுற்றிவளைத்து மடக்கிப் பிடிப்பது, ரோந்துப் பணிகளை மேற்கொள்ளுதல், எதிரிகளால் திடீர் தாக்குதல் ஏற்பட்டால் அவற்றை சமாளித்தல், துப்பாக்கிச் சூட்டின் மூலம் எதிர்தாக்குதல் நடத்துதல் குறித்து பிரம்மாண்டமாக எடுத்துரைக்கும் வகையில் வியக்கவைக்கும் சாகசங்கள் செய்து காட்டப்பட்டன. இதற்காக கடலோர காவல்படையை சேர்ந்த ஐசிஜிஎஸ் சவுரியா, சுனக், சுஜய், சாகர்,சமுத்திர பெகர்தார், அன்னிபெசன்ட், ராணி அபெக்கா உள்ளிட்ட போர்க் கப்பல்கள், சி-440 ரக சிறிய கப்பல், சேத்தக், துருவ் வகை 4 ஹெலிகாப்டர்கள், 2 டார்னியர் விமானங்கள், 2 அதிவிரைவு ரோந்து படகுகள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய ஐஜி டோனி மைக்கேல் கூறியதாவது: காவல்படையின் எழுச்சி தினம்: இந்திய கடலோர காவல்படையின் எழுச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்.1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்புகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு கடல், கடலோர காவல்படையின் பணிகளை விளக்கும் வகையில் இந்த சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மீனவர்கள் கடலில் பயணித்தாலும் கடலோர காவல்படையின் கப்பல்களில் பயணம் செய்திருக்க மாட்டார்கள். அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்யும் விதமாகவும் இதை செய்திருக்கிறோம். கடலோர காவல்படையில் திறன் வாய்ந்த இளைஞர்கள் சேர வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம். முன்பு கடலோர காவல்படையில் பணிபுரிய பலர் விண்ணப்பித்து வந்தனர். சவால்கள் நிறைந்த சேவை: ஆனால், இன்றைக்கு இந்த பணியில் சேர பெரும்பாலானோர் விரும்புவதில்லை. தொழில்நுட்ப துறையையே இன்றைய இளைஞர்கள் அதிகம் நாடி செல்கின்றனர். கடலோர காவல் என்பது சவால்கள் நிறைந்த ஒருசேவையாகும். ஒவ்வொரு முறையும் ஓர் உயிரை மீட்பது என்பது மிகவும் திருப்திகரமான நிம்மதியை தரும். கடலோர காவல்படைக்கு தனியாக துறைமுகம் என்பது மிகப்பெரிய திட்டமாகும். தமிழகத்தில் கப்பல்களை பழுது பார்ப்பதற்கான துறைமுகங்கள் இல்லை. எனினும் இப்போதைக்கு சென்னை துறைமுகத்தில் காவல்படையின் கப்பல்கள், விமானங்களை நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் உள்ளன. செயற்கையான துறைமுகங்களை உருவாக்க ரூ.60 கோடி வரை செலவாகும். இந்த நிதியைகொண்டு கடலோர காவல்படைக்காக பல்வேறு வகை விமானங்கள், கப்பல்களை பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
திமுக மேல் மக்கள் கடும் கோபம்; 40 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும்: எல்.முருகன் கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:20:00
சென்னை: திமுக மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்றும், 40 தொகுதிகளிலும் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2-வது முறையாக எல்.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழக பிரதிநிதி ஒருவருக்கு மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கி இருக்கின்றனர். தமிழக நலன் கருதி, தமிழர்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி 2019-ல் மத்திய பிரதேசத்தில் இருந்து தமிழருக்கு மாநிலங்களவை உறுப்பினர் வழங்கினார். இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார். மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுப்பது நீண்டகாலமாகவே தொடர்ந்து வருகிறது. வெற்றிவேல் யாத்திரை மூலம் சட்டப்பேரவைக்கு 4 எம்எல்ஏக்கள் சென்றார்கள். அதேபோல், என் மண் என் மக்கள் யாத்திரை மூலமாக 40 எம்.பி.க்கள் மக்களவைக்கு செல்வார்கள். அந்த வகையில் இந்த யாத்திரையின் நிறைவு தமிழக அரசியலையே மாற்றியமைக்கும். பாஜக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. மோடி தலைமையை மக்கள் ஏற்கிறார்கள். தமிழகத்தில் வழக்கமாக ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் நமது விருப்பமும். திமுகவின் மேல் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அது இந்த தேர்தலில் வெளிப்படும். 40 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாதயாத்திரையின் நிறைவு நாளில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும்: அண்ணாமலை வேண்டுகோள்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:15:00
சென்னை: பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பாதயாத்திரையின் நிறைவு நாளில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என அண்ணாமலை வேண்டுக்கோள் விடுத்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: என் மண் என் மக்கள் யாத்திரை 232 தொகுதிகளை கடந்திருக்கிறது. 232-வது தொகுதியாக மதுராந்தகத்தில் முடித்திருக்கிறோம். வரும் 27-ம் தேதி திருப்பூரில் 233, 234-வது தொகுதியை கடக்கிறோம். இந்த கடுமையான பயணத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னுடன் இருந்த இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பெரும்திரளாக, ஊக்கத்தையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கின்றனர். மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கின்றனர். தமிழக அரசியலில் நாம் எதிர்பார்த்த மாற்றம் 2024 மக்களவை தேர்தலில் நடக்க போகிறது என்பது மிகத்தெளிவாக தெரிய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் பிரதமர் மோடியின் அற்புதமான ஆட்சி. மறுபக்கம் தமிழக பாஜகவின் கடுமையான உழைப்பு. இன்னொரு பக்கம் தமிழக மக்களின் நேர்மையான அரசியலுக்கான ஏக்கம். இந்த மூன்றும் 2024-ல் வெற்றி ஆண்டாக நமக்கு மாற இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை என்னுடன் பயணம் செய்தவர்கள், யாத்திரையை பார்த்தவர்கள், உதவியவர்கள், யாத்திரையை பார்க்கமுடியாமல் தவறவிட்டவர்கள் அனைவரும் யாத்திரை நிறைவு நிகழ்ச்சி நடைபெறும் பல்லடத்துக்கு வரவேண்டும் என உங்கள் தம்பியாக அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இது அண்ணாமலையின் யாத்திரையோ, பாஜகவின் யாத்திரையோ இல்லை. உங்கள் விழா. பிரதமருக்கு உங்கள் ஆசீர்வாதத்தை கொடுங்கள். கஷ்டத்தில் என்னுடன் வந்திருக்கிறீர்கள். மிகப்பெரிய எழுச்சியை என்னுடன் சேர்ந்து உருவாக்கியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
வரலாற்று சின்னங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் இன்று திறப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:07:00
சென்னை: அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் வரலாற்று சின்னமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு நடைபெறும் திறப்பு நிகழ்வுகளில் திமுக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இம்மண்ணைவிட்டு சென்றாலும், நம் நெஞ்சில் நிறைந்துவிட்ட தலைவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 95 ஆண்டுகாலம் வாழ்ந்தவர். 80 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்தார். இனம் காக்க போராடினார். மொழி காக்க சிறை சென்றார். மக்களின் மனங்களை வென்று 5 முறை முதல்வர் ஆனார். இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக உயர்ந்தார். நவீன தமிழகத்தை தன் சிந்தனை உளியால் செம்மையுற செதுக்கினார். எதிர்கால தலைமுறைக்கும் வாழ்வளிக்கும் திட்டங்களை வகுத்தளித்தார். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திமுக எனும் அரசியல் பேரியக்கம், தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. அண்ணா மறைந்த நிலையில், முதல்வரானார் கருணாநிதி. வங்கக் கடலோரம் தமிழ் அலைகள் தாலாட்ட, 1969-ல் அண்ணா நிரந்தர ஓய்வெடுக்கும்படி இடம் அமைத்து கொடுத்தார். ஓங்கி உயர்ந்த தூண், அணையா விளக்கு கொண்ட அண்ணா சதுக்கத்தை அமைத்தார். மாற்று இயக்க தலைவர்கள் மறைந்தபோதும் அவர்களுக்கு நினைவிடம் அமைத்த அரசியல் பண்பாளர். மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜரின் நினைவிடங்களை அமைத்தார். எமர்ஜென்சி எனும் நெருக்கடிநிலை காலத்தில், காமராஜர் மறைந்தபோது, முதல்வராக இருந்த கருணாநிதி, கிண்டியில் உள்ள இடத்துக்கு இரவில் சென்று, அரசு மரியாதையுடன் காமராஜர் உடலை எரியூட்டச் செய்து, ராட்டை சின்னத்துடன் நினைவிடம் அமைத்தார். ராஜாஜி நினைவிடத்தை ராமரின் பட்டாபிஷேக மகுடம்போலவும், எம்ஜிஆர் நினைவிடத்தில் குடை போன்ற வடிவமைப்பை அமைத்ததும் கருணாநிதிதான். ஆனால், கருணாநிதி விரும்பியபடி, கடற்கரையில் அண்ணாவின் அருகில் ஓய்வெடுக்க அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதி தரவில்லை. சட்டப் போராட்டத்துக்கு பிறகு, கடற்கரையில் இடம் ஒதுக்கி தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெற்ற வெற்றியை கருணாநிதியின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்கினேன். தமிழ், தமிழக வளர்ச்சி, தமிழர்களின் உயர்வுக்காக உழைத்த கருணாநிதி ஓய்வுகொள்ளும் இடத்தை ஒரு வரலாற்று சின்னமாக கட்டியமைக்க செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டன. கருணாநிதியின் 6-வது ஆண்டு நினைவேந்தல் வரும் முன்பு அப்பணி நிறைவடைந்துள்ளது. அண்ணா சதுக்கமும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரு பெரும் தலைவர்களால் தமிழகம் பெற்ற பயன்களை வாழும் தலைமுறையும், வருங்கால தலைமுறையும் அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் தொழில்நுட்பத்துடன் இணைந்த வரலாற்று சின்னமாக நினைவிடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி நினைவிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள நிலவறையில் பயணித்தால், அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். தலைவர்களின் ஓய்விடங்கள் பிப்ரவரி 26-ம் தேதி (இன்று) இரவு 7 மணிக்கு திறக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில், அவரது உயிரினும் மேலான உடன்பிறப்புகளாம் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அரங்கங்களுடன் ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம் அமைப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-26 05:05:00
சென்னை: கருணாநிதி நினைவிட வளாகத்தில் உள்ள ‘கலைஞர் உலகம்’ அருங்காட்சியகம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதி கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு 2.21 ஏக்கர் பரப்பில் ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அத்துடன், அண்ணா நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் மொத்தம் 8.57 ஏக்கரில் அமைந்துள்ளன. இதன் நுழைவுவாயிலை கடந்து சென்றதும், அண்ணா, இளங்கோவடிகள், கம்பர் சிலைகளும், அண்ணா அருங்காட்சியகமும் உள்ளது. அண்ணா சதுக்கத்தை கடந்ததும், கருணாநிதி சிலை அமைந்துள்ளது. ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகத்துடன் கருணாநிதி சதுக்கம் அமைந்துள்ளது. தமிழை செம்மொழி என மத்திய அரசு ஏற்றதை பாராட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா எழுதிய கடிதம் தமிழ், ஆங்கிலத்தில் புத்தக வடிவில் வைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் பின்புறம், வியட்நாம் மார்பிள் சுவரில் வண்ண கற்களால் கருணாநிதி முகம் பொறிக்கப்பட்டுள்ளது. இரவில் இந்த சுவரின் பின்னால் ஒளிரும் விளக்கு மூலம், கருணாநிதி உருவம் முழுமையாக ஒளி வெள்ளத்தில் தெரியும் வகையிலும், சுற்றிலும் பொன்னிறத்தில் நட்சத்திரங்கள் தெரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சதுக்கத்தின் கீழே நிலவறை பகுதியில் நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கி ‘கலைஞர் உலகம்’ என்ற பெயரில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சாதனை திட்டங்கள், முக்கிய நிகழ்வுகள் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ‘உரிமை போராளி கலைஞர்’ என்ற அறையில், சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றலாம் என்ற உரிமையை பெற்றுத் தந்து, முதல்முதலாக கொடியேற்றி அவர் பேசியது, அவரது அங்க அசைவுடன் தத்ரூபமாக, முப்பரிமாண தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது, கருணாநிதியின் 8 நூல்களின் பெயர் மீது கைவைத்தால், அந்த நூல் பற்றிய வீடியோ விளக்கம் கிடைப்பது ஆகிய வசதிகளும் உள்ளன. கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை படக்காட்சிகளாக காட்டும் ‘அரசியல் கலை அறிஞர் கலைஞர்’ எனும் சிறிய திரையரங்கம், 7டி தொழில்நுட்பத்தில் காண்பிக்கும் ‘சரித்திர நாயகனின் சாதனைப் பயணம்’ என்ற தலைப்பிலான ரயில் பெட்டி போன்ற அறை ஆகியவையும் இங்கு உள்ள சுவாரஸ்யமான அம்சங்கள். மற்றொரு அறையில், கருணாநிதியின் அருகில் அமர்ந்து அவரது பேச்சை கேட்கும் வகையிலும் நவீன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கருணாநிதி சதுக்கத்தின் பின்புறம், பொதுமக்கள் அமர்ந்து கடலை ரசிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் பதிவு அவசியம்: இந்த நினைவிடம் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசியபோது, “பிப்ரவரி 26-ம் தேதி திறந்து வைக்கப்படும் நினைவிடம், ஒரு வாரத்தில் மக்கள் பார்வைக்கு திறக்கப்படும். கலைஞர் உலகம் அருங்காட்சியகத்தில் ஒரு நேரத்தில் 200 பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால், இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து விரைவில் அறிவிக்கப்படும். இந்த நினைவிடங்களை பொதுப்பணித் துறையே தொடர்ந்து பராமரிக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்” என்றார்.
தூத்துக்குடியில் வியட்நாம் நிறுவனம் சார்பில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் ஆலை
செய்திப்பிரிவு
தூத்துக்குடி
2024-02-26 05:01:00
தூத்துக்குடி: வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது, வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம், தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்திஆலை அமைக்க தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இதையடுத்து, தூத்துக்குடி அருகேசில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் தொழிற்சாலை அமைப்பதற்காக இந்நிறுவனத்துக்கு 408 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தென் தமிழகத்தின் முதலாவது மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையான வின்ஃபாஸ்ட்தொழிற்சாலைக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார். விழாவுக்கு வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் தலைமை வகித்தார்.திட்டம் குறித்து தமிழக தொழில், வர்த்தக துறை அமைச்சர் டிஆர்பி ராஜா விளக்கினார். சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,மீன்வளத் துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி பாம் சான் சாவ் கூறியதாவது: தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த 50 நாட்களுக்குள் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளோம். மொத்தம் ரூ.16 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறோம். முதல்கட்ட பணிகள் ரூ.4 ஆயிரம்கோடியில் நடைபெறும். இதில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 1.50 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். தூத்துக்குடி ஆலையில் இருந்து முதலாவது மின்சார கார் 2025-ம் ஆண்டின் மத்தியில் உற்பத்தியாகி வெளியே வரும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி: இங்கு உற்பத்தியாகும் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளோம். இதற்காக தூத்துக்குடி துறைமுகத்தில் சில வசதிகள் தேவைப்படுகிறது. பெரிய கப்பல்கள் வந்துசெல்லும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும். மின்சார கார்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 200முதல் 400 கி.மீ. தூரம் வரைசெல்லும். கார்களுக்கான பேட்டரியை வீடுகளிலும், வெளியே உள்ள மையங்களிலும் சார்ஜ் செய்யலாம். இந்தியாவில் மின்சார கார் பேட்டரிகளை சார்ஜ் செய்யும் மையங்களை அதிக அளவில் அமைக்க, மற்ற நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். துறைமுகம், விமான நிலையம், மனிதவளம், தமிழக அரசின் ஆதரவு போன்றவைசிறப்பாக இருப்பதால், தொழிற்சாலையை தூத்துக்குடியில் அமைக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். விழாவில், சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் ஜீ.வி.மார்க்கண்டேயன், சி.சண்முகையா, ஊர்வசி செ.அமிர்தராஜ், தமிழக தொழில், வர்த்தக துறை செயலர் வி.அருண் ராய், வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குநர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி,வின்ஃபாஸ்ட் இந்தியா நிறுவன துணை தலைமை செயல் அதிகாரிகள் ஹோங் காங் தாங், நுகென் டாங்குவாங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“எங்களுக்குதான் அதிமுக ”பி” டீமாக செயல்பட்டு வருகிறது” - சீமான்
செய்திப்பிரிவு
திருவாரூர்
2024-02-26 04:04:00
திருவாரூர்: நாம் தமிழர் கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள இடும்பாவனத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - கார்த்திகா, மயிலாடுதுறை - காளியம்மாள், தஞ்சாவூர்- குமாயூன் கபீர், பெரம்பலூர்- தேன்மொழி, திருச்சி - ராஜேஷ் ஆகியோரை அறிமுகப்படுத்தி, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது: அதிமுக தற்போது தமிழர் உரிமை மீட்போம், தமிழகத்தை காப்போம் என்கின்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்த முழக்கத்தை தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக கூறிவந்தோம். எங்களை பாஜகவின் பி டீம் என சொல்கிறார்கள். ஆனால், தற்போது தமிழ் தேசிய கொள்கையை முழக்கமாக வைத்து எங்களுக்குதான் அதிமுக ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால், எங்கிருந்து பணம் வருகிறது என்று இதுவரை சொல்லவில்லை. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை கண்டு அச்சப்படுவதன் வெளிப்பாடாகத்தான், கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டது. வருமானத்துக்கு அதிகமாக முறைகேடாக பணம் சம்பாதித்திருப்பதாக புகார் வந்திருந்தால், அமலாக்கத் துறையும், வருமான வரித்துறையும் தான் சோதனை நடத்தியிருக்க வேண்டும். மாறாக நாம் தமிழர் கட்சிக்கு வந்து சேரும் இளைஞர் கூட்டத்தை அச்சப்படுத்தும் நோக்கில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால், சோதனையில் கண்டுபிடித்த உண்மை என்ன? என்பதை அவர்கள் வெளியிடவில்லை. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை, இனி ஒரு நாளும் தடுத்து நிறுத்த முடியாது. எனவே, தொண்டர்கள் கட்சிப் பணியில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.
திமுக கூட்டணி கட்சிகள் சில அதிமுகவிடம் பேச்சுவார்த்தை: செல்லூர் கே.ராஜூ தகவல்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-26 04:02:00
மதுரை: திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி மகளிருக்கான கால் பந்தாட்டப் போட்டிகள் மதுரையில் நடைபெற்றன. இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போருக்குத் தயாராவது போல், மக்களவைத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. தேர்தல் தேதி எப்போது அறிவித்தாலும் களப் பணியாற்ற அதிமுக தயாராக உள்ளது. அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. அவரது சர்ச்சை பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெறுப்படைந்துள்ளனர். திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் பொம்மைபோல் காட்சி அளிக்கின்றனர். அவர்கள் போல் அல்லாமல், இந்தத் தேர்தலில் வெற்றி பெறும் அதிமுக உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுப்பார்கள். ஓ.பன்னீர் செல்வம் தலைவர் போல இல்லாமல், மேடைப் பேச்சாளர் போல் பேசி வருகிறார். அதிமுகவில் எம்எல்ஏவாக பதவி வகித்து பக்கத்து வீட்டுக்காரருக்கே தெரியாமல் இருந்தவர்களை எல்லாம் பாஜகவில் சேர்த்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் உதிர்ந்த இலைகள். திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வருவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
“மக்கள் கோபத்தை திசைதிருப்ப மத்திய அரசு மீது அவதூறு” - முதல்வர் மீது வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
செய்திப்பிரிவு
கோவை
2024-02-26 04:00:00
கோவை: எதிர்ப்பலையை கட்டமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மத்திய அரசு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘மத்தியஅரசு ஒரு ரூபாய் கூட கொடுக்காத போதும், மக்களுக்கு கிடைத்தது அனைத்தும் ஸ்டாலின் கொடுத்தது’ என பேசியிருக்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்றது முதலே, மத்திய அரசுடன் தேவையற்ற மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசு என்று பேசாமல், ஆட்சியில் அமர்ந்ததும் ஒன்றிய அரசு என்று பிரிவினை சித்தாந்தத்தை விதைத்து வருகிறார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் பாஜக அரசின் தாரக மந்திரம். நிதி ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளின் படியே, அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுகிறது. ஊழல், குடும்ப ஆட்சியின் அவலங்களால் தமிழ்நாட்டு மக்கள் திமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர். அதை திசை திருப்பி மக்களை ஏமாற்றுவதற்காகவே மத்திய அரசு மீது முதலமைச்சர் ஸ்டாலின் திரும்ப திரும்ப அவதூறு பரப்பி வருகிறார். தமிழக மக்கள் என்றும் தேசியத்தின் பக்கம் தான் என்பது வரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
திமுகவினரே போதைப்பொருள் விற்பதால் போலீஸாரால் தடுக்க முடியவில்லை: இபிஎஸ்
எஸ்.விஜயகுமார்
சேலம்
2024-02-25 23:58:00
சேலம்: தமிழகத்தில் திமுக-வினரே போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதால் தான், அதனை தடுக்க முடியவில்லை. போலீஸாரால் எவரையும் கைது செய்யவும் முடியவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சேலம் தாதகாப்பட்டியில் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது: அதிமுக ஆட்சியில், தமிழக மக்களுக்கான பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஏழை மக்கள் சிகிச்சை பெறுவதற்காக, தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் கொண்டு வந்தோம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அத்திட்டத்தை ரத்து செய்துவிட்டனர். சேலத்தில் மட்டும் ரூ.1,000 கோடியில் சீர்மிகு நகரத் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், ஆசியாவில் பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா என பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், திமுக ஆட்சியில் சேலம் மாவட்டத்துக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை. சேலத்துக்கு பஸ் போர்ட் திட்டத்துக்காக, இடம் கொடுத்தோம். அதனையும் நிறைவேற்றவில்லை. திமுக-வினர் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைத்து வரும் அவர்கள், எந்த திட்டத்தை செய்ததாக, பொதுக்கூட்டத்தில் பேச முடியும். 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது திமுக விட்டுச் சென்ற ரூ.1.14 லட்சம் கோடியுடன் தான் ஜெயலலிதா ஆட்சியைத் தொடங்கினார். 10 ஆண்டுகாலம் அதிமுக சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது. இன்றைக்கு திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. இந்தியாவின் அதிக கடன் வாங்குவதில் தமிழகம் முதல் மாநிலமாகிவிட்டது. ஊழல் செய்வதிலும் தமிழகம் முதலிடத்துக்கு வந்துவிட்டது. நீதிபதிகள் தாமாக முன்வந்து, திமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கின்றனர். நாளைக்கும் (26-ம் தேதி) ஒரு அமைச்சர் மீதான வழக்கில் தீர்ப்பு வரவுள்ளது. அதிமுக ஆட்சியின்போது, நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4,800 கோடி ஊழல் செய்துவிட்டதாக, திமுக-வினர் என்மீது வழக்கு தொடர்ந்தனர். பின்னர் வழக்கை வாபஸ் வாங்குவதாக நீதிமன்றத்தில் கூறினர். ஆனால், வழக்கை நடத்த வேண்டும், என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டியுள்ளனர் என்று நீதிமன்றத்தில் கூறினேன். இப்போது, வழக்கில் என்னை நிரபராதி என்று நிரூபித்துள்ளேன். ஆனால், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதாக, ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை சந்திக்க வேண்டியது தானே, ஆனால், வழக்கில் இருந்து வாய்தா மேல் வாய்தா வாங்குகிறார்கள். துணிவு இருந்தால் அவர்கள் வழக்கை சந்திக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும், பிரச்சினைகளை தீர்க்க 52 குழுக்கள் அமைத்தனர். தமிழகத்தின் நிதி நிலையை சரி செய்வதற்கும் ஒரு குழு அமைத்தனர். ஆனால், தமிழகத்தின் கடன் ரூ.3.58 லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. கடன் வாங்குவதில் தான் குழு வேலை செய்துள்ளது. இதனால், திமுக அரசை குழு அரசு என்றே அழைக்கலாம். கடந்த 4 பட்ஜெட்டுகளிலும், புதியதாக 2,300 பேருந்துகள், 500 மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என்று தொடர்ந்து அறிவிக்கின்றனர் . ஆனால், 100 பேருந்துகள் மட்டுமே வாங்கியுள்ளனர். அதிமுக ஆட்சியில் 15,000 பேருந்துகள் வாங்கப்பட்டன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை. மாணவர்கள் போதை கலாச்சாரத்துக்கு அடிமையாகி வருகின்ற அவலம் ஏற்பட்டுள்ளது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்காக, திமுக நிர்வாகி ஒருவரை இப்போது கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். திமுக-வினர் போதைப்பொருள் விற்பதால் தான் அதனை தடுக்க முடியவில்லை. போலீஸாரால் கைது செய்யவும் முடியவில்லை. காவிரி பிரச்சினைக்காக, அதிமுக எம்பி.-க்கள் நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால், திமுக அக்கறையில்லாமல் செயல்பட்டதால், மேகேதாட்டு அணை கட்டுவதற்கான அறிக்கையை, நீர்வள ஆணையர் மத்திய கமிஷனுக்கு அனுப்பியுள்ளார். அதன்படி, அணை கட்டினால் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும். எனவே, காவிரி பிரச்சினையில் திமுக அரசு உச்ச நீதிமன்றம் சென்று, மேகேதாட்டு அணைக்கு தடை பெற வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் 523 அறிவிப்புகளை கொடுத்தது. அவற்றில் 98 சதவீதம் அறிவிப்புகளை நிறைவேற்றிவிட்டதாக, ஸ்டாலின் பொய் பேசுகிறார். நீட் ரத்து, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை உயர்வு, கட்டுமானப் பொருட்களை அத்தியாவசிய பட்டியலில் சேர்ப்பது, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என எந்த அறிவிப்பும் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், டீசல் விலை குறைக்கப்படாததால், லாரிகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் வாங்குவதால், தமிழகத்துக்கான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், நிர்வாகம் சரியாக இல்லாதது தான். அதிமுக ஆட்சியின்போது, 2011- 2019-ம் ஆண்டு காலத்தில் 37 எம்பிக்கள் தமிழக பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் 16,619 கேள்விகளை எழுப்பினர். திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 9,695 கேள்விகளை மட்டுமே எழுப்பினர். மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெற்றால், தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும். வளமான தமிழகம் உருவாக்கப்படும் என்றார். பொதுக்கூட்டத்தல் அதிமுக சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், எம்எல்ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏ., சக்திவேல் உள்பட அதிமுக-வினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் .
மதுரை எய்ம்ஸ் விரைவில் கட்டி முடிக்கப்படும்: ஆளுநர் தமிழிசை
வீ.தமிழன்பன்
காரைக்கால்
2024-02-25 23:07:00
காரைக்கால்: காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரிக்கான புதிய கட்டிடம், குடியிருப்பு வளாகம் ஆகியவற்றை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று மாலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என்.ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளை கடந்த 2016-17-ம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டது. காரைக்கால் கடற்கரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடத்திலும், கோவில்பத்து பகுதியில் திருநள்ளாறு புறவழிச்சாலையில் உள்ள புதுச்சேரி அரசின் அன்னை தெரசா அரசு சுகாதார பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டிடத்திலும் தற்காலிகமாக கல்லூரி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், காரைக்கால் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கட்டிடத்துக்காக காரைக்கால் கோவில்பத்து பகுதியில் திருநள்ளாறு செல்லும் சாலை மற்றும் காமராஜர் சாலை (விரிவாக்கம்) ஆகிய 2 இடங்களில் மொத்தம் 67.33 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை புதுச்சேரி அரசு ஜிப்மர் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டன. கோவில்பத்து பகுதியில் மருத்துவக் கல்லூரி கட்டிடம், உயர் அதிகாரிகள், மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் உள்ளிட்டவையும், காமராஜர் சாலையில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகமும் மொத்தம் ரூ.491 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இக்கட்டிடங்களை பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ராஜ்கோட்டிலிருந்து இன்று மாலை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். காரைக்கால் ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராரஜன் பங்கேற்றுப் பேசியது: நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சேர்க்கை ஒரே ஆண்டில் 8,500 இடங்கள் அதிகரிக்கப்பட்டன. முதுநிலை படிப்புக்கான சேர்க்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. வேறு எந்த மத்திய ஆட்சியிலும் இதுபோல நடைபெறவில்லை. இக்கல்லூரி மாணவர்கள் இங்குள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கிராமப்புற மருத்துவ சேவையை கருத்தில் கொள்ளவேண்டும். நம்மிடம் சிகிச்சைக்கு வரக்கூடிய நோயாளிகள் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பது முக்கியமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் 64 கோடி செலவிடப்பட்டுள்ளது. எவ்வளவு வசதிகள் இருந்தாலும் அது கடைகோடி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் ஒரு அரசின் கடமையாக இருக்க முடியும். இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் முதியோருக்கான மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் கட்டி முடிக்கப்படும். ஏற்கனவே மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உலகத் தரமான வகையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்பதால் சில கால தாமதம் ஏற்படலாம். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையால் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தோர் பயன்பெறுகின்றனர். காரைக்காலில் அமையும் மருத்துவமனைக்கும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருவார்கள். கரோனா பரவல் காலத்தில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் பங்கு அளப்பரியது. இவ்வாறு அவர் பேசினார். புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பங்கேற்றுப் பேசியது: மக்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான், நாடு வளமானதாக இருக்க முடியும். அதற்கேற்ப பிரதமர், நாட்டில் சுகாதார வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்துவதும், உலகின் தலைசிறந்த நாடாக ஆவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளும் பாராட்டுக்குரியது. நாட்டிலேயே புதுச்சேரி மாநிலம் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குகிறது. மத்திய சுகாதாதாரக் குழுவினர் புதுச்சேரிக்கு வரும்போது, இங்கு சுகாதார வசதி மேம்பட்டிருப்பதை கோடிட்டுக்காட்டுவார்கள். விரைவில் காரைக்கால் ஜிப்மரில் 500 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை அமையும். அப்போது காரைக்கால் மட்டுமல்லாது, தமிழகத்தின் டெல்டா மாவட்ட மக்களுக்கும் பயனுள்ளதாக அமையும். புதுச்சேரி உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. மாநிலத்தில் மருத்துவ வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். மத்திய அரசு உறுதுணையாக இருந்து வருகிறது என்றார். முன்னதாக ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் வரவேற்றார். காரைக்கால் ஜிப்மர் கல்லூரி டீன் குச குமார் சாஹா நன்றி கூறினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமார், மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.செல்வகணபதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.ஆர்.என்.திருமுருகன், பி.ஆர்.சிவா, ஏ.கே.டி.ஆறுமுகம், தலைமைச் செயலாளர் சரத் சவுகான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பிரிவு ரூ.450 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகளுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு, விரைவில் பணிகள் தொடங்கி, 3 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்வின்போது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஏனாம் பிராந்தியத்தில் ரூ.91 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, ஜிப்மர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை பிரிவை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். கல்லூரிக்கான கல்விக் கட்டிடம் 25 ஆயிரம் ச.மீ பரப்பளவில் 5 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. 24 துறைகளுக்கான அறைகள் உள்ளன. இரண்டு வளாகங்களிலும் அனைத்துக் கழிவுகளும் வளாகத்துக்குள்ளேயே சுத்திகரிக்கப்படுவதற்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட நீர், சுத்திகரிப்பு மற்றும் தோட்டக்கலை வேலைகளுக்காக பயன்படுத்தப்படும். அனைத்துக் கட்டிடங்களும் ஆற்றல் திறன் கொண்ட கிரிகா 3 ஸ்டார் மதிப்பீட்டின்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி காரில் செல்லும் பழங்காநத்தம் - பசுமலை சாலைக்கு ‘விடிவு’ பிறக்குமா?
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-25 22:31:00
மதுரை: பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி இரவு தங்க உள்ள பசுமலை தாஜ் ஹோட்டலுக்கு காரில் செல்ல உள்ள பழங்காநத்தம்-பசுமலை சாலை, கடந்த 2 ஆண்டாக குண்டும், குழியுமாகவும், தூசி மண்டலமாகவும் உள்ளது. பிரதமர் வருகையால் இந்த சாலை, புதுப்பொலிவு பெறுமா? என மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கிறார்கள். பிரதமர் மோடி, வரும் 27-ம் தேதி மதுரை வீரபாஞ்சான் டிவிஎஸ் பள்ளியில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கத்தில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு அவர், சாலை மார்க்கமாக வீரபாஞ்சானில் இருந்து காரில் பசுமலையில் உள்ள தாஜ் ஹோட்டல் செல்கிறார். இரவு அந்த ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் தூத்துக்குடியில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு மதுரையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் செல்கிறார். வீரபாஞ்சானில் டிவிஎஸ் பள்ளி நிகழ்ச்சி முடிந்ததும், அங்கிருந்து பிரதமர் மோடி இரு சாலை வழியாக பசுமலை ஹோட்டலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கோரிப்பாளையம், சிம்மக்கல், பழங்காநத்தம் வழியாக பசுமலைக்கு செல்லாம். மற்றொரு பாதையாக தெற்குவாசல், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், டிவிஎஸ் நகர், பழங்காநத்தம் வழியாக பசுமலைக்கு செல்லலாம். ஆனால், தற்போது பிரதமர் மோடி, வீரபாஞ்சானில் இருந்து பசுமலை செல்லும் சாலையை மாநகர காவல் துறையினர் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், பிரதமர் வருவதாக எதிர்பார்க்கப்படும் பழங்காநத்தம்- பசுமலை சாலை, கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ளது. இந்த சாலையில்தான் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் உள்ளது. ஏராளமான பள்ளி, கல்லூரிகள் உள்ளன. திருமங்கலம், திருநகர் போன்ற முக்கிய நகர் பகுதிகள் உள்ளன. அதனால், பழங்காநத்தம் வழியாக செல்லும் திருப்பரங்குன்றம் சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால், பழங்காநத்தத்தில் இருந்து பசுமலை வரை, வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாத அளவிற்கு இந்த சாலை சிதிலமடைந்து உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘பழங்காநத்தம் சாலையில் குடிநீர் திட்டப்பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், மழைநீர் கால்வாய் பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக சாலையோரம் குழிகள் தோண்டிப் போட்டுள்ளனர். தினமும் ஆபத்தான நிலையிலே பள்ளி, கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. பல்வேறு பணிகள் இந்த சாலையில் நடப்பதால் இப்பகுதியில் புதிய சாலை போடப்படவில்லை. சாலையில், சரளை கற்கள், மணல் அதிகளவு உள்ளன. அதனால், வாகனங்கள் சாலையில் செல்லும் புழுதி பறந்து புகை மண்டலம் போல் உள்ளது. வாகன ஓட்டிகள், மக்கள் புழுதிக் காற்றை சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறுகிறது. சாலையை அகலப்படுத்துவதற்காக இப்பகுதியில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து போட்டு அகற்றப்படாமல் உள்ளதால் அவை போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன. பழங்காநத்தத்திற்கு அருகே பசுமலை செல்லும் இந்த சாலையில் அழகப்பன் நகர் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட் மூடப்பட்டால் பழங்காநத்தம் முதல் பசுமலை வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். வாகனங்கள், ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது. இதுதவிர, 4 திருமண மண்டபங்கள், திருப்பரங்குன்றம் கோயில் இப்பகுதியில் உள்ளது. முக்கிய முகூர்த்த நாட்களில் பக்தர்கள், பொதுமக்கள் கூட்டம் திருவிழா போல் காணப்படும். மக்கள், பழங்காநத்தம் முதல் பசுமலை வரை சாலையை கடக்கவே பெரும் போராட்டம் நடத்த வேண்டிய உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் பிரதமர் மோடி, காரில் பசுமயைில் இரவு தங்கும் தாஜ் ஹோட்டலுக்கு செல்ல உள்ளார். பிரதமர் வருவதாக கூறப்படும் இந்த சாலை தற்போது சீரமைக்கப்படவில்லை. அவர் வருகையை ஓட்டியாவது இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார்.
‘தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை’ - திமுக தொகுதி பங்கீடு பேச்சு; மார்க்சிஸ்ட் கம்யூ. கருத்து
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 18:56:00
சென்னை: “பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இணக்கமானதாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. விரைவில் நல்ல உடன்பாடு வரும்” என்று திமுக உடனான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவினர் கூறியுள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. திமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சுவார்த்தைக் குழுவினர் கூறியதாவது: இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்தது. இணக்கமானதாக இருந்தது. இரண்டு தரப்பும் மனம் திறந்து பேசினோம். தொடர்ந்து விவாதிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. விரைவில் நல்ல உடன்பாடு வரும். எனவே விரைவில் நல்ல செய்தியை கூறுவோம். பேச்சுவார்த்தையில் எந்த நெருடலும் இல்லை. ரொம்ப இணக்கமாக மனந்திறந்து பேசினோம்" என்று கூறினா். முன்னதாக, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை கையெழுத்தானது. இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. யார் போட்டியிடுவார் என்பது குறித்து செயற்குழு முடிவெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், மதிமுக சார்பில் அவைத்தலைவர் அர்ஜூன ராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்றைய தினம் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் தற்போதைக்கு ஒரு மக்களவைத் தொகுதியும் மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து பிறகு ஆலோசிக்கலாம் என்றும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அருகே 32 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் கல்லூரி மாணவர்கள்
ஒய்.ஆண்டனி செல்வராஜ்
மதுரை
2024-02-25 18:44:00
மதுரை: மதுரை அருகே முன்னாள் கல்லூரி மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்ச்சி இன்று (பிப்.25) நடைபெற்றது. மதுரை அருகே எம்ஏவிஎம்எம் ஆயிர வைசியர் கல்லூரியில் 1992 - 1995 இல் பயின்ற பிகாம் மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பிறகு கல்லூரி நாட்களைப்போல் பஸ் நிறுத்தங்களில் காத்திருந்து கல்லூரி பஸ்சில் ஏறி, கல்லூரியில் நடந்த முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்தது சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. மதுரை அருகே எம்.சத்திரப்பட்டியில் எம்ஏவிஎம்எம் ஆயிர வைசியர் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1992 - 1995 இல் பயின்ற பிகாம் மாணவர்கள், 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்கள் கல்லூரியில் சந்தித்தனர். அவர்கள் கல்லூரி நாட்களில் வகுப்புக்கு வருவதுபோல் அவரவர் பஸ்நிறுத்தங்களில் காத்திருந்து கல்லூரி பஸ்சில் ஏறி இந்த நிகழ்ச்சிக்கு வந்தது சுவாரசியமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பறைக்குள் நுழைந்து 32 வருடங்களுக்கு முன்னர் தாங்கள் அமர்ந்திருந்து படித்த வகுப்பறைகள், அமர்ந்து படித்த மரத்தடி ஞாபகங்களை மீட்டி பரவசமடைந்தனர். அதன்பிறகு கல்லூரி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த தங்கள் நண்பர்களைப் பார்த்த பரவசத்தில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, நலம் விசாரித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, இக்கல்லூரியில் படித்து சார்ஜா போன்ற வெளிநாடுகளில் இருந்தும், சேலம், சென்னை, திருச்சி, போடி போன்ற பல்வேறு நகரங்களில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் வந்திருந்திருந்தனர். அதன்பிறகு நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள், தங்களுக்கு பாடம் எடுத்த வாழ்க்கையில் ஒழுக்க நெறிகளை கற்றுத்தந்த 1992- 95 ம் ஆண்டு கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தற்போதைய வணிக துறை பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் ஆகியோரை அழைத்து கவுரவித்து ஆசீர்வாதம் பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடனான அந்தக் கால கல்லூரி நினைவுகளைப் பகிர்ந்தனர். மாணவர்களும் தங்கள் கல்லூரி வாழ்க்கையும், தற்போதைய உலக அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் சிவாஜி கணேசன் கூறுகையில், “முன்னாள் மாணவர்கள் அமைப்பு, ஒவ்வொரு கல்லூரிக்கும் முதுகெலும்பு போன்றது. கல்லூரிக்கான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்வது முதல் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கும் அவர்கள் உந்துதலாக இருப்பார்கள். அந்த வகையில் இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் கல்விக்கு உதவ வேண்டும். இக்கல்லூரி கிராமப்புறத்தில் உள்ளதால் மாணவர்கள், அவர்களில் 90 சதவீதம் பெரும்பாலும் ஒரு பெற்றோர் உள்ளவர்களாகவும், பெற்றோர் இல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்கள் கல்விச் செலவை சமாளிக்க முடியாமல் கல்லூரியை விட்டு இடைநிற்கின்றனர். ஆனால், நாங்கள் அவர்களை தேடிக் கண்டுபிடித்து கல்வி கட்டணத்துக்கு ஏற்பாடு செய்து படிக்க வைக்கிறோம். இந்த சுமையை முன்னாள் மாணவர்களும் கொஞ்சும் ஏற்றுக் கொண்டால் இக்கல்லூரியும், கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலமும் சிறப்பாக இருக்கும்,'' என்றார். கல்லூரி நிகழ்ச்சிகளை முன்னாள் மாணவர்கள் ஜெரால்டு, வி.ஆர்.ராமமூர்த்தி, மீனாட்சி, ஜெயகாந்தன், குமார், தாமோதரன், பழனிக்குமார் ஆகியோர் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினர். கல்லூரி செயலர் ஜெயராமன் மற்றும் கல்லூரிகள் உள்ளனர். காலம் பலவற்றைக் கற்று தந்தாலும் சிலவற்றை மறக்க வைத்தாலும் பள்ளிப்பருவக் காலமும் கல்லூரிக் காலமும் பசுமரத்தாணிபோல் பசுமையான நினைவுகளாக என்றென்றும் நிலைத்து இருக்கும்.
அடையாறு ஆற்றில் மழைநீர் வெளியேறுவதைத் தடுக்க ஷட்டர்கள் அமைக்கும் பணி ஓரிரு நாட்களில் தொடங்கும்: அரசு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 18:20:00
சென்னை: “அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும்” என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தலைமையில் 03.02.2024 அன்று தலைமைச் செயலகத்தில் “டிசம்பர் 2023ல் நிகழ்ந்த இரட்டைப் பேரிடர்களின் படிப்பினைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் (Learning from Twin Disasters of December 2023 and Way Forward)” குறித்த ஒரு நாள் கருத்து பரிமாற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.இதனைத் தொடர்ந்து, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நடைபெற்றுவரும் வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (பிப்.25) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் பெரும்பாலான மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிருகம்பாக்கம், கொளப்பாக்கம், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் நீர்வளத்துறையின் சார்பில் சுமார் ரூ.180 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் முடிக்கப்படும். இந்தப் பணிகள் முடிக்கப்பட்டால் போரூர் ஏரி மற்றும் மேற்குப் பகுதியிலிருந்து வரும் வெள்ளநீர் இந்த வடிகால்கள் வழியாக நேரடியாக அடையாறு ஆற்றில் சென்றடையும். இந்தப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு இருக்காது.அடையாறு ஆற்றில் வெள்ளநீர் செல்வதற்காக எங்கெங்கு மழைநீர் வடிகால் பணிகள் அமைக்கப்பட்டுள்ளதோ, அங்கு ஷட்டர்கள் அமைக்கப்பட்டு, ஆற்றிலிருந்து மழைநீர் வெளியேறாமல் ஷட்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் ஓரிரு நாட்களில் தொடங்கப்படும். மேலும், சென்னை மாநகரத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சில பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, குறிப்பாக வேளச்சேரி, தாம்பரம் நெடுஞ்சாலையில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்துக்கு மழைநீர் வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்காலிகமாக அங்கு குழாய் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. விரைவில் இங்குப் பணிகள் தொடங்கப்பட்டு பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்படும். மழை முடிந்தவுடன் எங்கெங்கு பணிகள் முடிக்கப்பட வேண்டும் எனக் கண்டறிந்து, அங்கு பணிகளை விரைவில் தொடங்கி முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமரின் தமிழக வருகை | மதுரையில் ஹெலிகாப்டர் ஒத்திகை; பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்
என். சன்னாசி
மதுரை
2024-02-25 17:35:00
மதுரை: பிரதமர் வருகையையொட்டி மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வீரபாஞ்சான் பகுதியிலுள்ள ஹெலிபேடு தளத்தில் ஒத்திகை நிகழ்வும் நடந்தது. இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி பிப். 27-ம் தேதி பகல் 1.20 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து கோவையில் உள்ள சூலுார் விமான படைத்தளத்துக்கு பகல் 2.30 மணிக்கு வருகிறார். தொடர்ந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடத்துக்குச் செல்லும் அவர் , பிற்பகல் 2.40 மணிக்கு பல்லடம் மாதப்பூர் ஊராட்சி பகுதியில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதன்பின், பல்லடத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மாலை சுமார் 5 மணிக்கு மதுரை விமான நிலையத்தை அடையும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டர் வழியாக மதுரை கருப்பாயூரணி வீரபாஞ்சானிலுள்ள டிவிஎஸ் லட்சுமி பள்ளி வளாக ஹெலிபேடில் வந்திறங்குகிறார். இதன்பின், 5.15 மணிக்கு டிவிஎஸ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்க திட்ட கருத்தரங்கில் பங்கேற்று பேசுகிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு சாலை மார்க்கமாக 6.45 மணிக்கு மதுரை பசுமலையிலுள்ள தாஜ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். பிப். 28-ம்தேதி காலை 8.15 மணிக்கு தாஜ் ஓட்டலில் இருந்து மதுரை விமான நிலையம் செல்லும் பிரதமர், 8.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு சென்று அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரதமரின் வருகையொட்டி, மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இடங்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் வருவதால் தென்மண்டல ஐஜி என்.கண்ணன் ஆலோசனை பேரில் டிஐஜி ரம்யாபாரதி மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் நடக்கின்றன. இது குறி்து போலீஸார் கூறுகையில், “கடந்த 3 நாட்களுக்கும் மேலாக டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் அருகிலுள்ள ஹெலிபேடு தளத்தில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து சோதனை நடத்துகின்றனர். தென் மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் இன்று மதுரை வரவழைக்கப்பட்டு, தொடர்ந்து கண்கணிக்கின்றனர். ஹெலிபேடு தளத்தில் 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி இருக்கிறதா என, விமானப் படை அதிகாரிகள் ஒத்திகை பார்த்தனர். தேசிய பாதுகாப்பு பிரிவு உள்ளிட்ட தொழில் பாதுகாப்பு படையினர் 3 பிரிவாக பிரிந்து கடந்த 2 நாட்களாகவே மதுரை விமான நிலையம், டிவிஎஸ் பள்ளி வளாகம் மற்றும் பசுமலை தாஜ் ஓட்டல் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர். காவல் ஆணையர் லோகநாதன், தென்மண்டல ஐஜி என். கண்ணன், டிஐஜி ரம்யா பாரதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அவ்வப்போது, நேரில் சென்று பாதுகாப்பு முன்னேற்பாடுகளை கண்காணிக்கின்றனர். கருத்தரங்கு நிகழ்வு நடக்கும் இடம் மற்றும் ஹெலிபேடு உள்ளிட்ட பகுதிகள், மதுரை - வரிச்சியூர் ரோடு பகுதியை நாளை ( பிப்.26) தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ மற்றும் பிரதமருக்கான பிரத்யேக பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும். தமிழ்நாடு போலீஸார் சுற்றுவட்டார பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுவர். பிரதமரின் வருகையையொட்டி ஏற்பாடு செய்து பாதுகாப்பு பணியை ஆய்வு செய்வதற்கு தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் திங்கட்கிழமை மதுரை வருவார் என, எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்: ஓபிஎஸ்
செ. ஞானபிரகாஷ்
புதுச்சேரி
2024-02-25 16:44:00
புதுச்சேரி: எடப்பாடி பழனிசாமி தரப்பு போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்றும் அவர் கூறினார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க புதுச்சேரி வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக இருக்கிறோம்.இதுவரை தீர்ப்புகளும் முதலில் இருந்து தற்போது வரை எடப்பாடி பழனிசாமிக்கு வந்தவை தற்காலிக தீர்ப்புகள்தான்.சிவில் சூட்டில் கவனித்து கொள்ள உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், முன்னதாக பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புகள் பொருந்தாது. தற்போது எந்த நிலையிலும் எடப்பாடி பழனிசாமியை யாரும் நம்பத் தயாராக இல்லாத சூழல் அரசியலில் ஏற்பட்டுள்ளது. நல்லது செய்தவர்களுக்கு நன்றியில்லாமல் நடந்ததால் கட்சிகள் அவரை நாடுவதில்லை. அதனால் அவரை தவிர்க்கிறார்கள்.எத்தனை தொகுதியில் போட்டி என்பதை இறுதி செய்த பிறகு அறிவிப்போம்.நாங்கள் அமமுக பொதுச்செயலர் தினகரனும் இணைந்து பணியாற்றி வருகிறோம். சின்னம்மா சசிகலா விருப்பத்தை கேளுங்கள் சிறந்த மனிதாபிமானமிக்க நடிகர் ரஜினி. அனைவருக்கும் மரியாதை தரக்கூடியவர். சசிகலா அழைத்ததால் சென்று பார்த்துள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் உடன் சேரும் வாய்ப்பு இல்லை.முதலில் விமர்சனம் செய்தது எடப்பாடி அணி. அதற்கு பதில்தான் அண்ணாமலை தருகிறார். இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்தை பெற தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருக்கிறோம். எடப்பாடி போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் டெபாசிட் இழக்கும்” என்று அவர் கூறினார்.
விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 15:59:00
சென்னை: விருதுநகர் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சிந்தப்பள்ளி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் நேற்று (பிப். 24) பிற்பகல் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், அருணாச்சலபுரம் கிராமத்தைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.” என்று முதல்வர் கூறியுள்ளார்.
சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் நிரந்த நீக்கம்: திமுக
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 15:13:00
சென்னை: கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முன்னதாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். | விரிவாக வாசிக்க > போதைப்பொருள் கடத்தல் | திமுக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
போதைப்பொருள் கடத்தல் | திமுக பொறுப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க அண்ணாமலை வலியுறுத்தல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 14:58:00
சென்னை: திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம், தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ள புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், தமிழக பாஜக சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என்று அவர் பதிவிட்டுள்ளார். டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட… pic.twitter.com/n8mJNDnPqd
“மக்களவை தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை”: சீமான் அறிவிப்பு
செய்திப்பிரிவு
திருச்சி
2024-02-25 14:51:00
திருச்சி: மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். திருச்சியில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய சீமான், “மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை. தனித்து போட்டி என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம். எனினும், கூட்டணி அமைக்க சிலர் எங்களிடம் பேசியது உண்மைதான். ரகசியமாகப் பேசினார்கள். அவர்கள் ரகசியமாகப் பேசியதை பொதுவெளியில் சொல்வது மாண்பாக இருக்காது. கூட்டணி பேசியதை எல்லாம் எங்கள் மன்னார்குடியில் கூப்பிட்டார்கள், மாயவரத்தில் கூப்பிட்டார்கள் என பொதுவெளியில் சொல்லிக்கொண்டா இருக்க முடியும். வாக்கு இயந்திரத்தில் தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்தியா, நைஜீரியா, வங்கதேசம் தவிர உலகின் எந்த நாடுமே வாக்கு இயந்திரங்கள் முறையை பயன்படுத்தவில்லை. அதிலும் கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு இயந்திர முறையை வங்கதேசம் கைவிட்டுவிட்டது. ஆனால், ஊழலில் பெருத்து திளைத்த நாடுகள் இந்தியாவும் நைஜீரியாவும். வாக்குப் பதிவு இயந்திரத்தை தயாரித்து தரும், ஜப்பானே அந்த இயந்திரத்தை பயன்படுத்துவதில்லை. ஏன் அமெரிக்காவே இதை பயன்படுத்துவதில்லை. வாக்குப்பதிவு முடிந்தபின் குறைந்தது 40 நாட்களுக்கு வாக்கு இயந்திரங்கள் மையங்களில் பூட்டிக்கிடக்கும். இப்படியான நிலையில்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் எனக் கூறுகிறார்கள். நான் இங்கு பேசுவதை டெல்லியில் இருந்து உங்களால் ஒட்டுக் கேட்க முடியும் என்றால், வாக்குப் பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியாதா என்ன?. தேர்தல்களே நேர்மையான முறையில் நடக்கவில்லை என்றால் நேர்மையான ஆட்சி எங்கிருந்து நடைபெறும்?” என்று கேள்வி எழுப்பினார்.
விஜயதரணியின் ராஜினாமா ஏற்பு: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
செய்திப்பிரிவு
திருநெல்வேலி
2024-02-25 14:13:00
திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி பாஜகவில் சேர்ந்துவிட்டார். எனவே, அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயலருக்கும் அனுப்பி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும், தனது பதவி விலகல் கடிதத்தினை தன்னுடைய கைப்பட எழுதி, இணைய வழியில் என்னுடைய கவனத்துக்கும் சட்டப்பேரவையின் முதன்மைச் செயலரின் கவனத்துக்கும் அனுப்பினார். இந்த இரண்டு கடிதங்கள் குறித்த விவரங்களை முதன்மைச் செயலர் என்னுடைய கவனத்துக்கு அனுப்பிவைத்தார். அதை நான் பரிசீலனை செய்து பார்த்ததில், விஜயதரணி, முறைப்படி தன்னுடைய கைப்பட பதவி விலகல் கடிதம் கொடுத்திருப்பதைத் தெரிந்துகொண்டேன். மீண்டும், விஜயதரணி இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்து அந்த கடிதத்தை நான்தான் எனது கைப்பட எழுதி அனுப்பியிருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டேன். எனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் சட்டப்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். கடிதங்களை ஆய்வு செய்து பார்த்ததில், முறையாக விஜயதரணி பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். எனவே, அவரது பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதுதொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார். முன்னதாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். | விரிவாக வாசிக்க > எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி அறிவிப்பு
அதிமுகவுடன் கூட்டணி பேச்சு: சரத்குமார் தகவல்
செய்திப்பிரிவு
கூறியது
2024-02-25 13:04:00
திருச்சி விமான நிலையத்தில் நேற்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கும்பகோணத்தில் இன்று நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் எந்தக் கட்சியுடன் கூட்டணி, எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோமா, இல்லையா என்பது விரைவில் தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மார்ச் 1-ல் சென்னையில் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - அதிமுக அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 13:02:00
சென்னை: அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் மார்ச் 1ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை விடுத்துள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்திடும் வகையில், தேர்தல் பரப்புரையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ``தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆலோசனைக் கூட்டம்’’ வருகின்ற மார்ச் 1ம் தேதி - வெள்ளிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள “ஓட்டல் இம்பீரியல் சிராஜ் மஹாலில்” (எழும்பூர் ரயில் நிலையம் அருகில்) நடைபெற உள்ளது. தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், சிறந்த மேடைப் பேச்சாளர்கள் பங்கேற்று, அதிமுக ஆட்சிகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு முத்தான திட்டங்களையும்; திமுக ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் இன்னல்களையும்; திமுக அரசு மக்களுக்கு இழைத்து வரும் பல்வேறு துரோகங்களையும் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடம், தேர்தல் பரப்புரை மூலம் எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை வழங்க உள்ளார்கள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் வகையில், தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைமைக் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
“இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு” - செல்வப்பெருந்தகை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 12:37:00
சென்னை: இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், “பத்து ஆண்டுகால மக்கள் விரோத பாஜக ஆட்சி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தி, அரசியல் ஆதாயத்தோடு செயல்பட்டு வருகிறது. தவறான சமூகப் பொருளாதார கொள்கை காரணமாக மிகப்பெரிய பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்காமல் விவசாயிகளை வஞ்சித்தது, வெறுப்பு அரசியல் மூலம் மதநல்லிணக்க சீர்குலைவு போன்ற மக்களை பாதிக்கிற பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. இதை தீர்த்து வைப்பதற்கு பதிலாக 10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைப் பற்றி பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுகிற பணியில் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது. இத்தகைய ஆதாரமற்ற அவதூறு பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டியது நமது தலையாய கடமையாகும். கடந்த டிசம்பர் 2023 நிலவரப்படி ஒன்றிய பாஜக அரசின் மொத்த கடன் ரூபாய் 172 லட்சம் கோடி. இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 57 சதவிகிதம். ஆனால், 1947 முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பதவி விலகுகிற போது பெறப்பட்ட மொத்த கடன் ரூபாய் 55 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் பாஜக பெற்ற மொத்த கடன் 117 லட்சம் கோடி ரூபாய். ஒவ்வொரு இந்திய குடிமகன் மீதும் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. இதனால் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படாமல் தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளை செய்ததால் கடுமையான பொருளாதார பேரழிவை நாடு தற்போது சந்தித்து வருகிறது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான ஆக்ஸ்பார்ம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி மக்கள் தொகையில் 10 சதவிகித மேல்குடி வர்க்கத்தினர் இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 77 சதவிகிதத்தை தம் வசம் வைத்துள்ளனர். 50 சதவிகித மக்கள் தொகையினர் ஏறத்தாழ 67 கோடி பேர் 1 சதவிகித சொத்துகளை மட்டுமே வைத்துள்ளனர். ஆனால், கடந்த ஒன்பதரை ஆண்டு மோடி ஆட்சியில் மட்டும் அதானியின் சொத்து மதிப்பு 1839 சதவிகிதமும், அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. உலக கோட்டீஸ்வரர்கள் மத்தியில் முதல் இடத்தை பெறுவதற்கு அதானியும், அம்பானியும் மோடி ஆட்சியின் தயவால் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மோடி ஆட்சியில் ஏழை, எளிய சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கு பதிலாக அதானி, அம்பானி உள்ளிட்ட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை அதிகரித்து சொத்து குவிக்கப்பட்டு வருகிறது. நடைபெறும் மோடி ஆட்சி சாமானிய மக்களுக்கான ஆட்சி இல்லை என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. மோடி ஆட்சியில் பலனடைந்த கார்ப்பரேட் பெருமுதலாளிகள் கைமாறாக தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திர நன்கொடை மூலம் 2018 முதல் 2023 வரை பெறப்பட்ட மொத்த நன்கொடை ரூபாய் 12 ஆயிரத்து 8 கோடி. இதில் பாஜக பெற்ற மொத்த நன்கொடை 6564 கோடி ரூபாய். இது மொத்த நன்கொடையில் 55 சதவிகிதம். இந்த நன்கொடை திட்டத்தின் மூலமாக ரூபாய் 1 கோடி வழங்கியவர்கள் 6812 பேர். இந்த நன்கொடையில் பெரும் பங்கு பாஜகவுக்கு சென்றுள்ளது. தேர்தல் பத்திர நன்கொடை மூலம் கார்ப்பரேட் முதலாளிகள் பெரும் நிதி வழங்குவதற்கு என்ன காரணம்?. கார்ப்பரேட்டுகள் நிதி வழங்குவது ஊழல் இல்லை என்றால் எது ஊழல் என்பதை மோடி அரசும், பாஜகவும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். இதனால் தான் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நன்கொடை வழங்கியவர்களின் பட்டியல் மார்ச் 13-ம் தேதி தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. அப்படி வெளியிடப்படும் போது பாஜகவுக்கு நன்கொடை அளித்த கார்ப்பரேட்டுகள் யார் என்பது அம்பலமாகும். அப்போது மோடியின் புனிதர் என்கின்ற முகத்திரை கிழித்தெறியப்படும். நெடுஞ்சாலை திட்டத்தின் மூலம் 7.5 லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறது. அன்று 2ஜி குற்றச்சாட்டுக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி வழக்கு தொடுத்து சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று தீர்ப்பு அளித்தது. ஆனால், இன்று சி.ஏ.ஜி. அறிக்கை வெளிவந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்க மோடி அரசு தயாராக இல்லை. 1 கி.மீ. தூரத்திற்கு ரூபாய் 18 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால் செலவழிக்கப்பட்டதோ ரூபாய் 250 கோடி. இதைவிட மெகா ஊழல் வேறு என்ன இருக்க முடியும்?. இந்தியாவில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டதாக மோடி தம்பட்டம் அடித்து கொள்கிறார். 2023ல் வெளிவந்த சர்வதேச பசி குறியீட்டு பட்டியலின்படி 125 நாடுகள் வரிசையில் இந்தியா 111-வது இடத்தில் இருக்கிறது. 2022ல் 107-வது இடத்தில் இருந்து 111-வது இடத்துக்கு உயர்ந்தது தான் மோடியின் வறுமை ஒழிப்பு சாதனையா ? இந்தியாவிலேயே பாஜக காலூன்ற முடியாத ஒரே மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. இங்கே திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக வலிமையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 2019ல் பெற்ற வெற்றியை விட நாற்பதும் நமதே என்ற இலக்கை நோக்கி நமது பயணம் பீடுநடை போட்டு வருகிறது.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
‘மத்திய அரசு ஒரு ரூபாய்கூட வெள்ள நிவாரணம் கொடுக்கவில்லை’ - முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
செய்திப்பிரிவு
தூத்துக்குடி
2024-02-25 12:18:00
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசு ஒரு ரூபாய்கூட கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெரு வெள்ளம் மற்றும் அதி கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: "தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கின்ற அணைக்கட்டுகள், குளங்கள் மற்றும் வாய்கால்களில் 288 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 66 கோடியே 45 லட்ச ரூபாய் மதிப்பில் தற்காலிக சீரமைப்பு பணிகள் மூலம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரிசெய்யப்பட்டது. மேலும், இந்த உடைப்புகள் நிரந்தரமாக சரிசெய்ய 145 கோடியே 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதேபோல, திருநெல்வேலி மாவட்டத்திலும், 802 இடங்களில் ஏற்பட்ட உடைப்புகள் 27 கோடியே 68 லட்சம் ரூபாய் மதிப்பில் போர்க்கால அடிப்படையில் முதல் கட்டமாக உடனடியாக சரி செய்யப்பட்டது. நிரந்தரமாக சரிசெய்ய 15 கோடியே 93 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதையெல்லாம் எதற்காக நான் சொல்கிறேன் என்றால், நாங்கள் எப்போதும் உங்களோடு இருப்பவர்கள். நலத் திட்ட உதவிகளையும், நிவாரண உதவிகளை வழங்குவதை கடமையாக அதை ஏற்றுக்கொண்டு அத்தோடு நின்றுவிடாது, உங்களுடைய வாழ்க்கை மேம்படவேண்டும், உங்கள் குழந்தைகளுக்கு நல்ல சம்பளத்துடன் நல்ல கம்பெனிகளில் வேலை கிடைக்கவேண்டும். அந்த நோக்கத்தோடு, பல பெரிய நிறுவனங்களில் இந்த பகுதிகளில் கொண்டு வந்து கொண்டிருக்கிறோம். இப்போதுகூட இங்கே இருக்கக்கூடிய சில்லானத்தம் கிராமத்தில் 4000 கோடி ரூபாய் முதலீட்டில் வின்ஃபாஸ்ட் என்ற மிகப் பெரிய கார் உற்பத்தி செய்கின்ற நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டிவிட்டுத்தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம். இந்த கம்பெனி தூத்துக்குடியில் மொத்தம் 14,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. அதுமட்டுமல்ல, திருநெல்வேலியில் இருக்கின்ற கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் டாட்டா பவர் நிறுவனம் 2800 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைத்திருக்கிறது. இதனால் அந்த பகுதியைச் சார்ந்த 1800 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல, சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையொப்பமிட்ட சிங்கப்பூர் நாட்டின் செம்கார்ப் என்ற நிறுவனம் 36,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், மலேசியாவுடன் பெரிய தொழில் நிறுவனமான பெட்ரோநாஸ் என்ற நிறுவனம் 30,000 கோடி ரூபாய் முதலீட்டிலும், தூத்துக்குடியில் தொழிற்சாலை அமைக்க இருக்கிறார்கள். இந்தத் தொழிற்சாலைகளுக்கான பணிகள் விரைவில் துவங்கயிருக்கிறது. இந்தத் தொழிற்சாலைகள் அமையும்போது, இந்தப் பகுதியைச் சார்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கரோனாவாக இருந்தாலும், வரலாறு காணாத புயல், வெள்ளமாக இருந்தாலும் மக்களுடைய துயரங்கள் தீர்த்து, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மறுகட்டமைப்பு செய்ய ஒவ்வொரு தரப்பு மக்களுக்கும் தேவையான திட்டங்கள் நிறைவேற்றுவது தான் நம்முடைய திராவிட மாடல் அரசு. சும்மா பாதிக்கப்படும்போது மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்கள் இல்லை நாங்கள். இறுதி வரைக்கும் உங்களுடன் இருந்து துயரங்களை துடைப்பதின் அடையாளம்தான் இந்த நிகழ்ச்சி. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் உயிரிழந்த 58 நபர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் வீதம் வழங்கப்பட்டிருக்கிறது. வெள்ளத்தால் உயிரிழந்த ஆடு, மாடு, கோழிகளின் உரிமையாளர்களுக்கு, 34 கோடியே 74 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமாக பாதிப்படைந்தவர்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 382 கோடியே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மிதமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 35 கோடியே 92 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்படைந்த வீடுகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம் 9 கோடியே 35 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல், வீடுகள பழுது பார்ப்பது, பயிர் சேத நிவாரணம், சிறு வணிகர்களுக்கு சிறப்பு கடன் திட்டம், தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன், மீன் பிடி படகுகளுக்கான நிவாரணம், கால்நடைகள் வாங்குவதற்கு கடன் உதவி, உப்பளத் தொழிலாளர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் உதவித்தொகை, பழுதடைந்த வாகனங்களுக்கு காப்பீடு ஆகியவை வழங்கப்படும் என்று நான் அறிவித்தேன். இந்த அறிவிப்பின்படி, உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இப்போது நிவாரண உதவித்தொகை மற்றும் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 456 பணிகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக சேதமடைந்த வீடுகள் புதிதாக கட்டுவதற்கு 4 லட்சம் ரூபாயும், பகுதியாக சேதமடைந்த வீடுகளில் பழுது நீக்கம் செய்வதற்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில், 4 ஆயிரத்து 624 குடும்பங்கள் பயனடைவார்கள். கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, புதிய கால்நடைகள் வாங்குவதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரைக்கும், தனிநபர் கடன் உதவி வழங்கவும் ஆணையிட்டிருக்கிறோம். தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருவெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைப்பு செய்ய 343 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்துகொண்டு வருகிறது. இதுவரை உழவர்களுக்கு பயிர்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், சிறு வணிகர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு வணிகக் கடன், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வணிகக் கடன், முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிகர் கடன், பயிர்க்காப்பீட்டு திட்டத்தின்கீழ் இழப்பீடு, பயிர் சேதங்களுக்கு நிவாரணம், தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம், சேதமடைந்த மீன்பிடி விசைப் படகுகள், நாட்டு படகுகள், மீன்பிடி வலைகள், மீன்பிடி இயந்திரம் மற்றும் மீன் பண்ணைகளுக்கு நிவாரணத் தொகை என பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டெழுவதற்கு 666 கோடியே 36 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள் அனைவருக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவையும் வழங்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இருக்கின்ற சிறு தொழில் நிறுவனங்கள் தங்களுடைய வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கும் பொருட்டு, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலமாக கடன் வழங்கப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்தபடி, 6 விழுக்காடு சிறப்பு சலுகை வட்டி விகிதத்தில், இந்த இரண்டு மாவட்டத்திலும், 670 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 18 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால், இந்த மாவட்டங்களைச் சார்ந்த உப்பு உற்பத்தியாளர்கள், தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுதொழில் செய்வோர் பயனடைந்து இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. அதுதான் முக்கியம். மத்திய அரசு ஒரூ ரூபாய்கூட கொடுக்காதபோதும், இது யார் கொடுத்தது என்றால், இந்த ஸ்டாலின் உங்களுக்காக கொடுத்தது. இந்த அரசு உங்களுக்காக கொடுத்தது. இந்த அளவுக்கு அளப்பரிய நலத் திட்டங்களை நம்முடைய அரசு வழங்கியிருக்கின்ற இந்தச் சூழ்நிலையில், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்களுடைய நலன் கருதி, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சில அறிவிப்புகள் வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.முதலில் தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், விளாத்திகுளம் வட்டம், வேம்பாரில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "வேம்பார் பனைப்பொருட்கள் குறுங்குழுமம்" அமைக்கப்படும். கோவில்பட்டி பகுதியில 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "கோவில்பட்டி கடலைமிட்டாய் குறுங்குழுமம்" அமைக்கப்படும்.இந்தக் குழுமத்துக்கான பொது வசதி மையத்தில் மூலப்பொருட்களை தரம் பிரிக்கின்ற வசதி, தானியங்கி பேக்கிங் கூடங்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான கண்காட்சி கூடம் ஆகியவை அமைக்கப்படும்.தூத்துக்குடியில் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் 50 ஆயிரம் சதுர அடியில் வர்த்தக வசதிகள் மையம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். இவையெல்லாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கு என்றால், திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரைக்கும், அம்பாசமுத்திரத்துக்கு புதிய மருத்துவமனை கட்டடம், வள்ளியூரில் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவை அமைக்கப்படும். அம்பாசமுத்திரம் புறவழிச் சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்த கண்டியபேரி அரசு மருத்துவமனை பணிகள் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. அது விரைவில் திறக்கப்பட இருக்கிறது. மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதி கனமழையால் பெரிய பாதிப்பை அடைந்திருக்கின்ற மாஞ்சோலை சாலை 5 கோடியே 4 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படும். திருநெல்வேலி மாநகருக்கான மேற்கு புறவழிச் சாலை பணிகளுக்கான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் இருக்கிறது. விரைவில் இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுப் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் நான் உங்களுக்கு மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இது எல்லாமே தமிழ்நாடு அரசின் மாநில நிதியில் இருந்து செய்து தரப்படுகிறது. இரண்டு மாபெரும் இயற்கை பேரிடர்களை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்தோம். இதனால், ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்ய மத்திய அரசிடம் 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நாம் கேட்டோம். மத்திய அரசிடமிருந்து நிதி வரவில்லை என்பது மட்டும் இல்லை; தேர்தல் வரப்போகிறதே வாக்கு கேட்டு தமிழக மக்களை சந்திக்க வேண்டும் என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய அரசும், நிதிஅமைச்சரும் பாராமுகமாக இருக்கிறார்கள். நாம் இதை கேட்டால் என்ன சொல்கிறார்கள்? 'உங்களிடம் சாதுரியம் இருந்தால் நீங்கள் சாதித்துக் கொள்ளலாமே' என்று மிகவும் ஆணவமாக அவர் பேட்டி அளித்திருக்கிறார். இது அவர் வகிக்கின்ற பதவிக்கு அழகு அல்ல. எங்களிடம் சாதுரியம் இருப்பதால்தான் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிக் காட்டியிருக்கிறோம். உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் பலவும் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். என்ன காரணம்? எங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துத்தானே வருகிறார்கள். தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம்தானே?மத்திய பாஜக அரசின் இடைக்காலத் தடைகளையும் தாண்டித்தான் இந்த வெற்றியை பெற்று வருகிறோம். எத்தகைய இடர் வந்தாலும், யாரையும் எதிர்பார்த்து காத்திருக்காமல், மக்கள் பணியாற்றும் ஆட்சிதான் திமுகவின் ஆட்சி. உங்களுக்காக களத்தில் இருக்கின்ற ஆட்சிதான், திமுக ஆட்சி. உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும் இருப்பேன்", என்று முதல்வர் பேசினார்.
வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: ராமதாஸ்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 11:55:00
சென்னை: வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது என்றும் வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு இறுதியில் கொட்டித்தீர்த்த பெருமழையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ரூ.160 கோடி நிவாரணம் வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களுடன் ஒப்பிடும் போது, தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட இழப்பீடு போதுமானதல்ல. அதுமட்டுமின்றி, வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை மற்றும் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது ஆகும். தென் மாவட்டங்களில் டிசம்பர் 2023 இறுதியில் பெய்த மழையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிகக்கடுமையான அளவிலும், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலும் நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டன. ஒட்டுமொத்தமாக 12 லட்சம் ஹெக்டேருக்கும் கூடுதலான பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் பாதிக்கப்பட்டன. ஆனால், அவற்றில் ஒரு லட்சத்து 64,866 ஹெக்டேர், அதாவது 4 லட்சத்து 12,165 ஏக்கர் பரப்பளவிலான பயிர் சேதங்களுக்கு மட்டும் தான் தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகையும் போதுமானதல்ல. மொத்தம் 4 லட்சத்து 12,165 ஏக்கரில் நெற்பயிர்கள் சேதமடைந்த நிலையில், அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ.160.42 கோடி மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கருக்கு ரூ.3892 மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதில் ஆறில் ஒரு பங்குக்கும் குறைவானத் தொகையை தமிழக அரசு இழப்பீடாக வழங்குவது எந்த வகையில் நியாயம்? அதேபோல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையான குறுவை பயிர்களுக்கும், முழுமையான சம்பா பயிர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படாதது தமிழக உழவர்களிடம் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. குறுவை பருவத்தில் 2 லட்சம் ஏக்கரில் முழுமையாகவும், 1.5 லட்சம் ஏக்கரில் ஓரளவுக்கும் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40000 ஏக்கரில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மட்டும் தான் ஏக்கருக்கு ரூ.5400 என்ற அளவில் தான் அரசு இழப்பீடு வழங்கியது. இது எந்த வகையிலும் போதுமானதல்ல. சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த அனைத்து உழவர்களும் பெரும் இழப்பைச் சந்தித்திருக்கின்றனர். அக்டோபர் மாதம் தொடங்கிய சம்பா/தாளடி சாகுபடி பிப்ரவரி இறுதியில் தான் நிறைவடையும். இந்தக் காலத்தில் மழை பெய்யும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் காவிரியில் குறைந்தது வினாடிக்கு 15,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம் ஆகும். ஆனால், சம்பா நடவு தொடங்கியது முதல் ஒரு நாள் கூட சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. பிப்ரவரி 3ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மட்டுமே வினாடிக்கு 4000 கனஅடி முதல் 6000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. இது சம்பா பயிருக்கு எந்த வகையிலும் உதவவில்லை. காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படாதது தான் சம்பா மற்றும் தாளடி பயிர்களின் சாகுபடி பாதிக்கும் கீழாக குறைந்ததற்கு காரணம். குறுவை பருவத்தில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், வெறும் 40,000 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சம்பா/தாளடி பருவத்தில் வறட்சியால் 12 லட்சம் ஏக்கரில் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்குக் கூட அரசு இழப்பீடு வழங்கப்படவில்லை. குறுவை, சம்பா சாகுபடிக்காக ஏக்கருக்கு சராசரியாக ரூ.30,000 வரை உழவர்கள் செலவழித்துள்ளனர். ஆனால், செலவழித்த பணத்தில் பாதியைக் கூட திரும்ப எடுக்க முடியாததால், சம்பா சாகுபடிக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு உழவர்கள் ஆளாகியுள்ளனர். குறுவைப் பயிர்கள் கருகிய நிலையில், அதற்காக வாங்கிய கடனை இன்னும் செலுத்தாத உழவர்கள், இப்போது சம்பா சாகுபடி வீழ்ச்சி அடைந்ததால் கூடுதல் கடனை சுமக்க வேண்டியுள்ளது. இதிலிருந்து அவர்களால் மீளவே முடியாது. வார்த்தைக்கு வார்த்தை உழவர்களின் நலன்களை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, குறுவை மற்றும் சம்பா பருவத்தில் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு இழப்பீடு வழங்க மறுப்பது நியாயமல்ல. உழவர்களின் துயரத்தை உணர்ந்து கொண்டு தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பிற பகுதிகளில் சம்பா பருவத்தில் வறட்சியால் ஏற்பட்ட விளைச்சல் வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல், குறுவை பருவத்தில் முழுமையாக கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதமும், ஓரளவு கருகிய பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை, மதுரை காமராசர் பல்கலைக்கழகங்கள் நிதிப் பற்றாக்குறை: ஓபிஎஸ் கண்டனம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 11:36:00
சென்னை: சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (பிப்.25) வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளைய சமுதாயத்தினருக்கு அறிவு, ஒழுக்கம், உயர் கல்வி ஆகியவற்றை தரக் கூடியவையாகவும், ஆய்வினை மேற்கொள்ளக் கூடியவையாகவும், பொது நலப் பணிகளில் மாணவ, மாணவியரை ஈடுபடுத்தக் கூடியவையாகவும், வேலைவாய்ப்பினை உருவாக்கித் தரக் கூடியவையாகவும் விளங்குபவை பல்கலைக்கழகங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இளைய சமுதாயத்தினரின் விடிவெள்ளியாக விளங்குபவை பல்கலைக்கழகங்கள். இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களே பாதிக்கும் சூழ்நிலை கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குவது மதுரை காமராசர் பல்கலைக்கழகம். கடந்த இரண்டு மாதங்களாக அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் கூட வழங்கப்பட முடியாத அவல நிலை நிலவுவதாகவும், இதனைக் கண்டித்து கடந்த பத்து நாட்களாக அனைத்துத் துறை அலுவலகங்களையும் பூட்டி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராடி வருவதாகவும், ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது நடைபெறும் போராட்டம் காரணமாக மாணவ, மாணவியரின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவ, மாணவியருக்கான சான்றிதழ் வழங்கும் பணிகள் முடங்கிப் போயுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில், மாதச் சம்பளமும், ஓய்வூதியமும் வழங்க இயலாத நிலைக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சென்றுள்ளது. இதேபோன்று, சென்னை பல்கலைக்கழகத்திற்கு தரவேண்டிய 51 விழுக்காடு நிதியில், 20 விழுக்காட்டிற்கும் குறைவான நிதியை மட்டும் திமுக அரசு விடுவித்துள்ள நிலையில், பிப்ரவரி மாத சம்பளமே கொடுக்க முடியாத சூழ்நிலை சென்னை பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டுகள். ஊதியத்தைக் கூட கொடுக்க இயலாத அரசாக தி.மு.க. அரசு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தில் குளறுபடி, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் குளறுபடி, அரசு போக்குவரத்துக் கழகங்களில் குளறுபடி, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களில் குளறுபடி என்ற வரிசையில் தற்போது சென்னை மற்றும் மதுரை காமராஜ் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றின்மூலம், கல்வியில் அக்கறை இல்லாத அரசாக தி.மு.க. அரசு விளங்குகிறது என்பது தெளிவாகிறது. இதே நிலைமைதான் மற்ற பல்கலைக்கழகங்களிலும் நீடிப்பதாக தகவல்கள் வருகின்றன. பல்கலைக்கழகங்களுக்கான பல்வேறு கட்டணங்கள் கடந்த மூன்று ஆண்டு கால திமுக ஆட்சியில் உயர்த்தப்பட்டும், நிதி நிலைமை மோசமாக இருப்பது வேதனைக்குரிய செயல். பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக தனக்குத் தானே கூறிக்கொள்ளும் திமுக அரசு, எதிர்கால மாணவ, மாணவியரை உருவாக்கும் பல்கலைக்கழகங்களை மோசமான நிதிநிலைமைக்கு தள்ளியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஒரு வேளை அனைத்தையும் அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்வதுதான் ‘திராவிட மாடல்’ போலும். சென்னை மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதிப் பற்றாக்குறையினை போக்கிடும் வகையில், உரிய நிதியையும், மானியத்தையும் உடனடியாக வழங்கி, அங்குள்ள அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மாதந்தோறும் சம்பளம் பெறவும், ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்தை பெறவும், மாணவ, மாணவியர்கள் பாதிப்பிலிருந்து விடுபடவும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் 4-ல் சென்னையில் பிரதமர் மோடி பிரச்சாரம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 11:28:00
சென்னை: மக்களவை தேர்தல் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பல்வேறு தேர்தல் பணிகளுக்காக பாஜக தேசிய தலைவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வருகின்றனர். முன்னதாக மார்ச் 4-ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சு வார்த்தையில் கவனம் செலுத்தியுள்ளனர். பாஜகவுடன் அதிமுக உறவை துண்டித்த நிலையில் பாமக, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுப்பதற்கு பாஜகவும் அதிமுகவும் முனைப்பு காட்டி வருகின்றன. அதே சமயம், தமிழகத்தில் தனித்து களம் காணவும் பாஜக தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 3-வது முறையாகவும் பாஜகதான் மத்தியில் ஆட்சியில் அமைக்கப் போகிறது என அதீத நம்பிக்கையுடன் இருக்கும் பாஜகவினர் தற்போது, சிறு, சிறு கட்சிகளுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. எனவே பாமக, தேமுதிகவுடன் கூட்டணி அமையவில்லையென்றால், கூட்டணியில் இடம் பெறும் அனைத்து கட்சி வேட்பாளர்களையும் தாமரை சின்னத்தில் களமிறக்க இருப்பதாக பாஜக வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் நடை பயண நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் பங்கேற்கிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு இந்த ஆண்டு 2-வது முறையாக பிப்.27-ம் தேதி மோடி வருகிறார். 2 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 27-ம் தேதி பல்லடத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று மோடி பேசுகிறார். பொதுக் கூட்டத்துக்கு பிறகு மோடியை அண்ணாமலை சந்திக்கிறார். அந்த சந்திப்புக்கு பிறகே மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என்றும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது, எந்த தொகுதியை ஒதுக்குவது, பாஜக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறது என்பது குறித்து ஆலோசிக்கவும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து தொகுதி பங்கீடு செய்வதற்கும் பாஜக தேசிய தலைவர்கள் மார்ச் மாதம் சென்னைக்கு வர இருக்கின்றனர். அதன்படி தேசிய தலைவர்கள் ஜெ.பி.நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் மார்ச் முதல் அல்லது 2-வது வாரத்தில் சென்னைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னதாக பிரதமர் மோடி சென்னைக்கு மார்ச் 4-ம் தேதி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க மோடி வருவார் என்றும், சென்னையில் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்பார் என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது, கூட்டணி குறித்து மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. அந்தவகையில், இந்த ஆண்டில் 3-வது முறையாக பிரதமர் மோடி அடுத்த மாதம் சென்னைக்கு வருவது உறுதியாகியுள்ளது.
ரூ.10-க்கு 3 இட்லி... ஏழைகளுக்கு உதவும் ‘மோடி இட்லி’ உணவகம் - சென்னையில் பாஜகவினர் அசத்தல்
துரை விஜயராஜ்
சென்னை
2024-02-25 10:54:00
சென்னை: சென்னை கே.கே.நகர் (மேற்கு) முனுசாமி சாலையில் ‘மோடி இட்லி’ உணவகத்தை தென் சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கே.பி.நாகராஜன் ஒத்துழைப்புடன், மண்டலத் தலைவர் ஜி.கோபிநாதன் நடத்தி வருகிறார். இங்கு ரூ.10-க்கு 3 இட்லியும், ஐந்து ரூபாய்க்கு ஒரு வடையும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வேலைக்கு செல்வோர், தொழிலாளிகள், சாலையோரம் வசிப்பவர்கள் ‘மோடி இட்லி’ உணவகத்தில் சாப்பிட்டுச் செல்கின்றனர். வாரத்தில், சனி, ஞாயிறு தவிர்த்து 5 நாட்கள் செயல்படும் இந்த உணவகம் மூலம், 10-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் பாஜகவினர் வழங்கி வருகிறார்கள். காலை 6 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இங்கு இட்லி விற்பனை செய்யப்படுகிறது. இது தொடர்பாக ‘மோடி இட்லி’ உணவகத்தை நடத்தி வரும் தென் சென்னை மாவட்ட பாஜக மண்டலத் தலைவர் ஜி.கோபி நாதன் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மோடி இட்லி’ உணவகத்தைத் தொடங்கினோம். ஒரு நாளைக்கு பார்சல் உள்பட 80 பேர் சாப்பிடும் அளவுக்கு தயாரிக்கிறோம். சுமார் 280 இட்லி வரை விற்பனை செய்யப்படுகிறது. இதில் லாபம் எல்லாம் கிடையாது. மன நிறைவு மட்டும் தான். ஆரம்பத்தில் இங்கு யாரும் சாப்பிட வர மாட்டார்கள். நிறைய நாட்கள் இட்லி வீணாகி இருக்கிறது. பிறகு ஒவ்வொரு தவறையும் சரி செய்யத் தொடங்கினோம். இப்போது, இட்லி மளமளவென விற்பனையாகி விடுகிறது. விரைவில், விருகம்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் ‘மோடி இட்லி’ உணவகத்தை தொடங்க திட்டமிட்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். தென் சென்னை மாவட்ட பாஜக பொருளாளர் கே.பி.நாகராஜன் கூறும் போது, அம்மா உணவகம் சரிவர இயங்காததுதான் ‘மோடி இட்லி’ தொடங்க எங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. எங்களது நண்பர்கள், கட்சிக்காரர்கள், தன்னார்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் கிடைக்கின்றன. வரும் நாட்களில் மாலையில், சப்பாத்தி உள்ளிட்டவற்றை மலிவு விலையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றார். கே.கே.நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் அருள் கூறும்போது, இங்கு காலை உணவு அருமையாக உள்ளது. மலிவான விலையில் நல்ல உணவு வழங்குவது பாராட்டுக்குரியது. பிழைப்பு தேடி சொந்த ஊரை விட்டு இங்கு வந்து வேலை செய்யும் எங்களைப் போன்றோருக்கு இது போன்ற உணவகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார். தொழிலாளி ஏ.கஸ்தூரி கூறும்போது, வேலைக்கு சீக்கிரமாகவே செல்வதால், பல நேரங்களில் வீட்டில் சமைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் காலை உணவு சாப்பிடாமலேயே வேலைக்குச் சென்று விடுவேன். தற்போது இங்கு அடிக்கடி காலையில் சாப்பிடுகிறேன். விலையும் குறைவு. வீட்டில் இருப்பவர்களுக்கும் பார்சல் வாங்கிச் செல்கிறேன் என்றார்.
உறுதியானது அதிமுக - பாமக கூட்டணி: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சி.கண்ணன்
கூறியதாவது
2024-02-25 09:38:00
மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியுடன் அதிமுக - பாமக இடையே கூட்டணி உறுதியானது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாமகவை தங்கள் கூட்டணியில் சேர்க்க அதிமுகவும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கின. இரு கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணியை நேரிலும், தொலைபேசியிலும் பேச்சு வார்த்தையை நடத்தினர். மேலும் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாமக திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த மக்களவைத் தேர்தலில் தேசிய கட்சிகளை தவிர்த்து மாநில கட்சியுடன் கூட்டணி அமைப்பதுஎன முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரு கட்சிகளும் வெளியிடவுள்ளன. இது தொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகள் கூறியதாவது: 2026-ல் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு, இந்த மக்களவைத் தேர்தலில் மாநில கட்சியுடன் கூட்டணி அமைத்தால்தான் சரியாக இருக்கும். அதனால் தான் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறோம். கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டன. இந்த முறை தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி ), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய 7 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கேட்கப்பட்டுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு தெரிவித்தனர்.
மேல்மா விவசாயிகளுடன் பேசி சுமுக நிலையை அரசு உருவாக்கும்: கனிமொழி நம்பிக்கை
செய்திப்பிரிவு
திருவண்ணாமலை
2024-02-25 06:52:00
திருவண்ணாமலை: மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத் துக்கு நிலம் கொடுக்க மறுத்து போராடும் விவசாயிகளுடன், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமான நிலையை உருவாக்கும் என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் நடைபெற்றது. திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தலைமை யிலான குழுவினர் பொதுமக் களிடம் கருத்துக்களை கேட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம், கனிமொழி கூறும்போது, “தமிழ கத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்தை கேட்டறிந்து மக்களின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, விவசாயிகள், வணி கர்கள், தொழில் முனைவோர், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கருத்தை கேட்டு வருகிறோம். மாநில அரசுக்கு சில கோரிக்கைகளும், மத்திய அரசு செய்ய வேண்டிய பணிகளை வலியுறுத்தி பெரும்பாலான கோரிக்கைகள் வந்துள்ளன. ஜிஎஸ்டி வரியால் வணிகர்கள், சிறு-குறு தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டியில் உள்ள குழப்பங்களை சரி செய்ய வேண்டும் என வலி யுறுத்தி உள்ளனர். தொகுதி பங்கீடு...: ரயில்வே திட்டங்களுக்கு வட மாநிலங்களில் அதிக நிதியை ஒதுக்கும் மத்திய அரசு, தமிழ கத்துக்கு குறைந்த நிதியை ஒதுக் குகிறது. தமிழகத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரி வித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை என்பது நிறைவேற்றக்கூடிய தேர்தல் அறிக்கை. அனைத்து தேர்தல்களிலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். நாட்டை ஒருங்கிணைத்து ஒற்றுமையாக வைத்திருக்கக் கூடிய ஆட்சி அமையும். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விரைவில் முடியும். மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்துக்கு நிலம் தர மறுத்து விவசாயிகள் போராடுகின்றனர். தொழிற்சாலை தொடங்கி வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என விவசாயிகளும், கிராம மக்களும் கூறுகின்றனர். இரண்டு தரப்பு மக்களும் உள்ளனர். வேளாண்மை சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராடு கின்றனர். பலர் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தையும், மேல்மா சிப்காட் விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நடைபெறும் விவசாயி களின் போராட்டத்தை ஒப்பிட முடியாது. விவசாயிகளுடன் பேசி தமிழக அரசு சுமூகமான நிலையை உருவாக்கும்” என்றார்.
அண்ணா, கருணாநிதி புதிய நினைவிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 06:28:00
சென்னை: அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம், கருணாநிதியின் புதிய நினைவிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, 1969-ம் ஆண்டு பிப்.3-ம் நாள் மறைந்தபின் அவருக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் எதிரில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அதனை மிகச்சிறந்த கட்டிடக்கலை வடிவமைப்புடன் 1969-ம் ஆண்டில் அமைத்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தமிழக வரலாற்றில் 19 ஆண்டு காலம் முதல்வராக வீற்றிருந்து, தமிழகத்தை வளப்படுத்தி, தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, இந்திய அரசியலில் எழுச்சியை ஏற்படுத்திய, கருணாநிதி 95-ம் வயதில் 2018-ம் ஆண்டுஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் ஆணை பெற்று அண்ணா நினைவிடம் அருகிலேயே நினைவிடம் அமைக்கப்பட்டது. அண்ணா, கருணாநிதி ஆகியோரின் இரண்டு நினைவிடங்களும் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள இந்த நினைவிடங்களின் முகப்பு வாயிலில் அண்ணா நினைவிடம் - கலைஞர் நினைவிடம் எனும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலைக் கடந்து உள்ளேசென்றால் எதிரில் அமர்ந்து படிப்பதுபோன்ற தோற்றத்தில் அண்ணாசிலை, வலபுறம் இளங்கோவடிகள்,இடதுபுறம் கம்பர் சிலைகள்அமைந்துள்ளன. நினைவிடங்களின் முன்பகுதி இருபுறங்களிலும் புல் வெளிகள் அமைந்துள்ளன. இடப்புறத்தில் அண்ணா அருங்காட்சியம் அமைந்துள்ளது. கருணாநிதி சதுக்கம்: ‘எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது’ எனப் பொறிக்கப்பட்டுள்ள அண்ணா சதுக்கத்தைக் கடந்து சென்றால் அமர்ந்த நிலையில் கருணாநிதி எழுதும் வடிவிலான சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலையைக் கடந்துசென்றால் கருணாநிதி சதுக்கத்தைக் காணலாம். சதுக்கத்தில், ‘ஓய்வெடுத்துக் கொள்ளாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’எனும் தொடர் கருணாநிதியின் எண்ணப்படியே பொறிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சதுக்கத்தின் முன்னே இருபுறமும், தமிழ் செம்மொழி என மத்திய அரசு ஏற்ற முடிவைத் தெரிவித்துப் பாராட்டி, கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2005-ம் ஆண்டு நவ.8-ம் தேதி எழுதிய கடிதம் ஆங்கிலத்திலும், தமிழிலும் புத்தக வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. கருணாநிதி சதுக்கத்தின் கீழேநிலவறைப் பகுதியில், ‘கலைஞர்உலகம்’ எனும் பெயரில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதியின் புதிய நினைவிடம் ஆகியவற்றை 26-ம் தேதி (நாளை) மாலை 7 மணி அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக தாமாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 06:25:00
சென்னை: வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீட்டில்முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படவுள்ளது. தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, கடந்த 2008-ம் ஆண்டு அமைச்சராகபதவி வகித்தபோது, வீட்டுவசதிவாரிய வீடு ஒன்றை மறைந்தமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக பணியாற்றிய கணேசனுக்கு ஒதுக்கியதில் முறைகேடு செய்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், அந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த பிப்.13-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கில்இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்தது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் நாளை தீர்ப்பளிக்கவுள்ளார். இதேபோல அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி ஆகியோருக்கு எதிராகவும் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக விசாரித்து வருகிறார். இதில் பா.வளர்மதி மீதான வழக்கு விசாரணைக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நிதியமைச்சர் வீட்டை முற்றுகையிட முயற்சி: ஊரக வளச்சித் துறை ஊழியர்கள் 180 பேர் கைது
செய்திப்பிரிவு
விருதுநகர்
2024-02-25 05:35:00
விருதுநகர்: விருதுநகர் அருகே தமிழக நிதியமைச்சர் வீட்டை முற்றுகையிட பேரணியாகச் செல்ல முயன்ற ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் 180 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மறையூர் ஊராட்சியில், பயணிகள் நிழற்குடையின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாயில் உடைப்புஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. குடிநீர் திட்டப் பணிக்கு தவறானஇடத்தைத் தேர்வுசெய்து, பணிஉத்தரவு வழங்கிய வட்டாரவளர்ச்சி அலுவலர் ராஜசேகரன்,பணியை கண்காணிக்கத் தவறிய இளநிலைப் பொறியாளர் பிரபாஆகியோர் கடந்த 15-ம் தேதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் சொந்த ஊரான மல்லாங்கிணறு கிராமத்தில், தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தினர், பேரூராட்சி அலுவலகத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டு அமைச்சரின் வீட்டுக்குச் சென்று, அமைச்சரிடம் பெருந்திரள் முறையீட்டு மனுஅளிக்கத் திட்டமிட்டிருந்தனர். இதற்கு காவல் மற்றும் வருவாய்த் துறை அனுமதி மறுத்தது.மேலும், அமைச்சர் தங்கம் தென்னரசு வீட்டின் அருகே ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர்.அதையடுத்து, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தினர் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குதமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறைஅலுவலர் சங்க மாவட்டத் தலைவர்ராஜகோபால் தலைமை வகித்தார். பின்னர், அமைச்சரின் வீட்டுக்குப் பேரணியாகச் செல்ல முயன்ற அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் 180 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
இலங்கை சிறையிலிருக்கும் மீனவர்களை விடுவிக்க கோரி ராமேசுவரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம்
செய்திப்பிரிவு
ராமநாதபுரம்
2024-02-25 05:31:00
ராமநாதபுரம்: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு வெளிநாட்டுமீன்பிடி தடைச் சட்டத்தின் கீழ்,இலங்கை நீதிமன்றம் 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தி உள்ளது. இதில், ஒரு மீனவருக்கு ஓராண்டு சிறை, படகு ஓட்டுநர்கள் 3 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தைக் கண்டித்தும், சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், சிறைப் பிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, ராமேசுவரம் மீனவர்கள்கடந்த ஒரு வாரமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நேற்று காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில் மீனவர் சங்கத்தலைவர்கள் ஜேசு, எமரிட், சகாயம்மற்றும் மீனவர்கள், மீனவப் பெண்கள் திரளாகப் பங்கேற்றுள்ளனர். போராட்டத்துக்கு ஆதரவாக, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி, அகிலஇந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர் ராஜாராம் பாண்டியன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக நிரூபித்தால் அரசியலைவிட்டு விலகத் தயார்: அண்ணாமலை சவால் @ மதுரை
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-25 05:29:00
மதுரை: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியதாக திமுக நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார். மதுரையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நேற்று நடைபெற்றது. வில்லாபுரம் சந்திப்பில் தொடங்கி, ஜீவா நகர் வரை பாத யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, பொதுமக்களிடையே பேசியதாவது: திராவிட அரசியலை வேரோடு அழிக்கும் தேர்தல், வரும் மக்களவைத் தேர்தலாகும். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக வருவார் என்று குழந்தைக்குக்கூட தெரியும். 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெறும். தமிழக அரசியலைச் சுத்தம் செய்து, சாமானியர்களுக்கான அரசியலைக் கொண்டுவர, குடும்ப, ஊழல், அராஜக ஆட்சியை அகற்றவேண்டும். அடுத்த 80 நாட்களுக்கு மோடிபோல பாஜகவினர் சுறுசுறுப்பாக வேலை செய்தால், தமிழகத்தில் அவரது கனவு நிறைவேறும். இந்த 10 ஆண்டுகளில் தமிழ்மொழி, கலாச்சாரத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி. அவர் இந்தியாவைஒருங்கிணைத்து வருகிறார். ஆனால், திமுகவினர் வடக்கு, தெற்கு என பிரிவினை பேசி வருகின்றனர். 90 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக முதல்வர் கூறி வருகிறார். அவர்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியதை நிரூபித்தால், நான் அரசியலை விட்டு விலகத் தயார். இலவச வேட்டி, சேலையில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ள திமுகவினர், அதிலிருந்து தப்ப முடியாது. ஊழல் செய்யும் குடும்பங்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்கான வேள்வியை பாஜக நடத்துகிறது. பங்காளி (அதிமுக) கட்சியினர் என்னை பூச்சாண்டி, மாயாண்டி என்பதால் எனக்கு வருத்தமில்லை. பழனிசாமியைபோல, திருநீற்றை அழித்துவிட்டு, எஸ்டிபிஐ நடத்தியமாநாட்டில் நான் பங்கேற்கவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் நமக்கான தேர்தல். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும். இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கிவைத்தார்
செய்திப்பிரிவு
கும்பகோணம்
2024-02-25 05:25:00
கும்பகோணம்: கும்பகோணத்திலிருந்து நவக்கிரக தலங்களுக்கு செல்லும் சிறப்பு பேருந்து சேவையை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்றுகொடியசைத்து தொடங்கிவைத்தார். கும்பகோணத்திலிருந்து திங்களூர்(சந்திரன்), ஆலங்குடி(குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோயில் (சூரிய பகவான்),கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன்கோவில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழப்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி பகவான்) ஆகிய நவக்கிரக தலங்களுக்கு சிறப்பு பேருந்து சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த சிறப்பு பேருந்தில் நவக்கிரக கோயில்களுக்கு செல்ல இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் இந்தப் பேருந்தில் பயணம் செய்ய, இந்தமாதம் முழுவதும் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். ரூ.750 கட்டணத்தில் நவக்கிரக கோயில்களுக்கு சென்றுவரும் வகையில், அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வரவேற்பைப் பொறுத்து, பேருந்துசேவை படிப்படியாக அதிகரிக்கப்படும். இதேபோல, அறுபடை வீடுகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
ரூ.16,000 கோடியில் மின்சார கார் தொழிற்சாலை: தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
செய்திப்பிரிவு
தூத்துக்குடி
2024-02-25 05:18:00
தூத்துக்குடி: மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டு விழாமற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகிறார். தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பில் மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலை அமைக்க, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (பிப். 25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்துக்கு இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிறார். தொடர்ந்து, கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டிப் பேசுகிறார். பின்னர், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அருகேஉள்ள புதுக்கோட்டை பகுதியில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆயிரம் பேர், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இந்த விழாவில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி., எம்எல்ஏ-க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான பந்தல், மேடை உள்ளிட்டவை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தைஎட்டியுள்ளது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி நேற்று ஆய்வு செய்தார். வரும் 28-ம் தேதி காலை தூத்துக்குடி வஉசி துறைமுக வளாகத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடைபெறும் விழாக்கள் காரணமாக மாவட்டம் முழுவதும் போலீஸார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைசெய்துள்ளனர்.
பொங்கல் பரிசுத்தொகை யாருக்கு வழங்கப்படவில்லை? - அறிக்கை தர தமிழக அரசுக்கு உத்தரவு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 05:12:00
சென்னை: பொங்கல் பரிசுத்தொகை யார், யாருக்கு வழங்கப்படவில்லை என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, வெல்லம், கரும்பு அடங்கியபரிசுத் தொகுப்பு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பை பெற ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு டோக் கன்கள் விநியோகிக்கப்பட்டுன. இந்நிலையில், டோக்கன் பெறுவதற்காக குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்குச் சென்றபோது கடை மூடப்பட்டு இருந்ததால், தனக்கான ரொக்கப் பணத்தை வங்கியில் செலுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், பொங்கல் பண்டிகைக்காக அரசு ஒதுக்கிய பரிசுத்தொகையை ரேஷன்கடை ஊழியர்கள் முறையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்க வில்லை. இதனால் தமிழகம் முழுவதும் ரூ.140 கோடியை ரேஷன் கடை ஊழியர்கள் அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டனர். பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காமல் என்னைப்போல பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதிஎஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு மேல்பரிசுத்தொகை வழங்கப்பட வில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள்,அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் பரிசுத்தொகை யார், யாருக்கெல்லாம் வழங்கப்படவில்லை என்ற விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஏப்.12-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் அதிமுகவை தேர்ந்தெடுக்க மக்கள் தயார்: ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் இபிஎஸ் உறுதி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 05:08:00
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு அரசு சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு தமிழ் வளர்ச்சித் துறை செயலர் இல.சுப்பிரமணியன் மற்றும் துறை அலுவலர்கள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகத்திலிருந்து அதிமுக சார்பிலும், அதிமுக கூட்டணி சார்பிலும்தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள்தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்தகொள்கை கருத்துகளின் அடிப்படையில் செயல்படுவார்கள். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பெற்றுத்தர ஜெயலலிதா வழியில்தொடர்ந்து அயராது பாடுபடுவார்கள் என்ற உறுதியை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு அளிக் கிறேன். எங்களுக்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் பதவி பலமோ,திமுக அரசுக்கு இருப்பது போன்றஅதிகாரம் மற்றும் பண பலமோ இல்லை. எங்களிடம் இருப்பது எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் ஆசியும், 2 கோடியே 60 லட்சம்தொண்டர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக களத்தில் நின்று உழைக்கப் போகிறார்கள் என்ற நம்பிக்கை யும்தான். 2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவில் 37 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மக்களின் குரலை, மக்களின் பிரச்சினையை மக்களவையில் எதிரொலிக்கச் செய்தார்கள். இப்போது மக்களவையில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் மக்கள் பிரச்சினையை எழுப்பவில்லை. மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்தால் மக்களின் குரல் மக்களவையில் ஒலிக்கும். மக்களின் தேவைகளை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவோம். அதிமுகவுக்கு நாட்டு மக்கள்தான் எஜமானர்கள். மக்களவைத் தேர்தலில் அதிமுகவைத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விட்டனர். களத்தில் எதிரிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, விழாவில் பங்கேற்க வந்த பழனிசாமியை பேண்டுவாத்தியங்கள், செண்டை மேளம்முழங்க தொண்டர்கள், மகளிர் அணியினர் வரவேற்றனர். ஓபிஎஸ், டிடிவி தினகரன் மரியாதை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோர் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடுமாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சசிகலா தனது இல்லத்தில், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு: தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 05:03:00
சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பணிகள் ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான நேற்று,தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகியமாநிலங்களின் தலைமை தேர்தல்அதிகாரிகள் தங்களின் மாநிலங்களில் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு குறித்து விளக்கினர். தொடர்ந்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, தமிழக காவல் துறை டிஜிபிசங்கர் ஜிவால் மற்றும் வருமானவரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, சிஆர்பிஎப் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத் தப்பட்டது. பின்னர், செய்தியாளர்களிடம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கூறியதாவது: அரசியல் கட்சிகள் கோரிக்கை: தமிழகத்திலுள்ள 6.19 கோடிவாக்காளர்களில், 18-19 வயதுக்குட்பட்ட 9.18 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்களாக உள்ளனர். தமிழகத்தில் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும். ஓட்டுக்காக பணம், மது, பரிசுப் பொருட்கள் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களையும் சரிசமமாக நடத்த வேண்டும். குறிப்பாக, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக செயல்பட வேண்டும். அதிக அளவில் சிசிடிவி பொருத்த வேண்டும். பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை குவிக்க வேண்டும். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்நடத்த வேண்டும். ஓரிடத்தில் 3ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும்அலுவலர்கள் அனைவரையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் வைத்தன. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் ஆகும். 66 ஆயிரத்து 144 வாக்குச்சாவடி கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 66 சதவீதம் வாக்குச்சாவடி களில் ‘வெப் காஸ்டிங்' என்ற, வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சி-விஜில் என்ற செயலியை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்தல் முறைகேடுகளை படம் எடுத்தோ அல்லதுஎழுத்து குறிப்பையோ பதிவேற்றம்செய்தாலே போதும். இடத்தை தேர்தல் அதிகாரிகள் அறிந்து, முறைகேடுகள் மீது 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுப்பார்கள். இதன்மூலம் ஓட்டுக்கு பணம், பரிசுகள்கொடுப்பதை மக்களே கட்டுப் படுத்த முடியும். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் எல்லைகளை ஒட்டி வரும் 17 தமிழக மாவட்டங்களில் கடுமையான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். மது, போதைப்பொருள் கடத்தல், பணப்பட்டுவாடா உள்பட எந்தவித தேர்தல் விதி மீறல்களை கண்டறிந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில போலீஸார், விமான நிலையம், ரயில்வே, வங்கி அதிகாரிகள் என 19 அமலாக்க முகமைகளுக்கு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆன்லைன் பணப் பறிமாற்றமும் தீவிரமாக கண்காணிக்கப்படும். அரசியல் கட்சிகள், வேட்பாளர்களின் கோரிக்கைகள் ஒற்றைச்சாளர முறையில் நிறைவேற்றப் படும். வாக்குப்பதிவுக்கு 7 நாட்களுக்கு முன்பாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப்கள் தரப்படும். தமிழகத்துக்கு ஒரே கட்ட தேர்தல்என்ற கோரிக்கை பற்றி ஆலோசித்து முடிவு செய்யப்படும். எந்தவிதமான தேர்தல் பத்திரங்கள் என்றாலும் அவை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும்என்பதுதான் தேர்தல் ஆணையத்தின் விருப்பம். மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் தனிப்பிரிவை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பொய்த்தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கான பிரத்யேக குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் சென்னையில் அமைக்காதது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 04:59:00
சென்னை: எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான அவதூறு போன்ற சிறு குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் பிரத்யேக பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை அமைக்க ஏற்கெனவே உத்தரவிட்டும், இதுவரையிலும் அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் ஆகியோர் மார்ச் 5-க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரும், மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியின் தாளாளருமான எம்.ஜி. தாவூத் மியாகான்,தங்களது கல்லூரி மற்றும் அறக்கட்டளை நிர்வாகம் குறித்து அவதூறு பரப்பியதாகக்கூறி பாபநாசம் தொகுதி எம்எல்ஏவான எம்.எச்.ஜவாஹிருல்லா மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரான முன்னாள் எம்.பி. அப்துல் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக எழும்பூர் பெருநகர 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த எழும்பூர் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இதுதொடர்பாக எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சிறப்பு நீதிமன்றத்தை நாடியபோது எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க பரிந்துரைக்கப்படும் வழக்குகளை மட்டுமே தங்களால் விசாரிக்க முடியும் என்றும், நேரடியாக குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து அந்த வழக்கை கோப்புக்கு எடுக்க முடியாது எனக்கூறி மறுத்துள்ளது. அதையடுத்து அவர் மீண்டும் இதுதொடர்பாக எழும்பூர் 2-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை நாடியபோது, எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான அவதூறு போன்ற சிறு குற்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என தமிழக அரசு கடந்த11.10.19-ல் அரசாணை பிறப்பித்துள்ளதால் இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறிகடந்தாண்டு நவ.9-ல் உத்தரவிட் டது. அதிகார வரம்பை காரணம் காட்டி இந்த அவதூறு வழக்கைகீழமை நீதிமன்றங்கள் விசாரணைக்கு ஏற்க மறுப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த வழக்கைவிசாரணைக்கு ஏற்க எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக்கோரி காயிதே மில்லத்கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் தாவூத் மியாகான், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளைஆஜராகி, எம்.பி., எம்எல்ஏ-க்களுக்கு எதிரான அவதூறு போன்றசிறு குற்ற வழக்குகளை விசாரிக்கஎந்த குற்றவியல் நடுவர் நீதி மன்றமும் பிரத்யேக நீதிமன்றமாக அறிவிக்கப்படவில்லை என்பதால்யார் இந்த வழக்கை விசாரிப்பது என்ற குழப்பம் நீதித்துறையில் நீடித்து வருகிறது. எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றம் என இந்த வழக்கை மாறி, மாறி தாக்கல் செய்தும் எந்த பரிகாரமும் கிடைக்காமல் கடந்த 6 மாதங்களாக அலைக்கழிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘அஸ்வினி உபாத்யாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின் அடிப்படையில் எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களை பிரத்யேகமாக நியமிக்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு இந்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் எம்.பி., எம்எல்ஏ-க்கள்மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க சென்னையில் இதுவரையிலும் ஒரு பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் கூட நியமிக்கப்படவில்லை. இதனால் மனுதாரர் வேறு வழியின்றி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே இந்தவழக்கில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறேன். அவர்கள் இதுதொடர்பாக வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் தகுந்த விளக்கத்துடன் பதிலளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது உச்சவரம்பு மாற்றம்: பள்ளிக்கல்வித் துறை அரசாணை
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 04:35:00
சென்னை: அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதர பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த வயது உச்சவரம்பு அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மை் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும் என்று கடந்த ஜனவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். ஆசிரிய பட்டதாரிகள் வரவேற்பு அவரின் அறிவிப்பை செயல்படுத்துமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் தமிழக அரசுக்கு கருத்துரு வழங்கியிருந்தார். அதை ஆய்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் மற்றும் தொடர்பு விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான வயது உச்ச வரம்பு பொதுப் பிரிவுக்கு 53 ஆகவும், இதரப் பிரிவினருக்கு 58 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியப் பட்டதாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
“மத்திய அரசின் திட்டங்களுக்கு ”ஸ்டிக்கர்” ஒட்டுவதை திமுக அரசு கைவிட வேண்டும்” - ஹெச்.ராஜா
செய்திப்பிரிவு
சிங்கம்புணரி
2024-02-25 04:14:00
சிங்கம்புணரி: மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக அரசு கைவிட வேண்டும்’ என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிதிக்குழு முடிவுப்படிதான் மத்திய அரசு செயல்பட முடியும். மத்திய அரசோ, நிதி அமைச்சரோ பாரபட்சம் காட்ட முடியாது. ஏற்கெனவே திமுக, காங்கிரஸ் கூட்டணி மத்திய அரசில் இருந்த போது 30.5 சதவீதம் தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. பின்னர் 32 சதவீதமாக உயர்த்தியது. மோடி பிரதமர் ஆன பிறகு அது 42 சதவீதமாக உயர்த்தப் பட்டது. மாநில ஜிஎஸ்டி 100 சதவீதம் அந்தந்த மாநிலங்களுக்குத்தான் செல்கிறது. மக்களிடம் திமுக பொய்களை பரப்புகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி உள்ளது. தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்துக்கு நல்லது என்பதை மக்கள் நன்றாகப் புரிந்து வைத்திருக்கின்றனர். திமுகவில் முதல்வர் குடும்பம் மட்டுமின்றி, அமைச்சர்கள் குடும்பத்திலும் வாரிசு அரசியல் தொடர்கிறது. மத்திய அரசு திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை திமுக அரசு கைவிட வேண்டும். அண்ணாமலை யாத்திரைக்கு வரும் கூட்டம் நிச்சயமாக வாக்குகளாக மாறும். புது டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகளே கிடையாது. அவர்கள் வியாபாரிகள், மண்டி உரிமையாளர்கள். இவ்வாறு அவர் கூறினார்.
“கார்ப்பரேட் நிறுவனங்களே பாஜகவின் பயனாளிகள்” பிரகாஷ் காரத் விமர்சனம் @ திண்டுக்கல்
செய்திப்பிரிவு
திண்டுக்கல்
2024-02-25 04:10:00
திண்டுக்கல்: பாஜக கடைப்பிடிக்கும் கொள்கையால் மிகப்பெரிய பயனாளிகளாக கார்ப்பரேட் நிறுவனங்களே உள்ளன, என மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் விமர்சித்தார். மக்களவைத் தேர்தலை முன் னிட்டு திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ‘அரசியல் சித்தாந்த சவால்களும், கடமைகளும்’ என்ற தலைப்பில் மாநிலப் பயிற்சிப் பட்டறை நேற்று நடந்தது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பாலகி ருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமை யின் கீழ் பாஜக நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த10 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சினைகளை, கஷ்டங்களை நாட்டு மக்கள் அனுபவித்து வரு கிறார்கள். நாட்டின் பல்வேறு உரிமைகள் மீது கடுமையான தாக்குதலை மோடி அரசாங்கம் தொடுத்து வருகிறது. மாநில உரிமைகள் நசுக்கப் படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பயங்கரமாக ஒடுக்கப்படுகிறார்கள். தேசத்தின் அடையாளமாக ராமர் கோயிலை முன்வைக்கிறார்கள். ராமர் கோயிலை பாஜகவின் வாக்கு வங்கியாகக் கருதிக் கொண்டிருக் கிறார்கள். பாஜக கடைப்பிடிக்கும் கொள்கையால் மிகப் பெரிய பயனாளிகளாக கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் உள்ளன. இதன் காரணமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அதீதமாக வளர்ந்துகொண்டே போகின்றன. இந்தத் தாராளமயக் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுகிறதே தவிர, சாதாரண ஏழை மக்களுக்கு பெரும் நாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை தோற்கடிக்க தமிழக மக்கள் முன்வர வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து, மாலையில் திண்டுக்கல் மெங்கில்ஸ் சாலை யில் தேர்தல் பரப்புரை தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனைமலையில் அதிமுக பேனர் அகற்றம்: போலீஸாரை கண்டித்து மறியல்
செய்திப்பிரிவு
பொள்ளாச்சி
2024-02-25 04:06:00
பொள்ளாச்சி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்த நாளையொட்டி அதிமுகவினர் வைத்திருந்த பேனரை அகற்றிய போலீஸாரைக் கண்டித்து, அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் ஆனைமலை முக்கோணம் பகுதியில் நேற்று முன்தினம் பிறந்தநாள் வாழ்த்து பேனர் வைக்கப்பட்டது. அனுமதியின்றி பேனர் வைக்கப்பட்டதாகக் கூறி இரவு நேரத்தில் பேனரை போலீஸார் அகற்றினர். நேற்று காலை ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக வந்த வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு உள்ளிட்ட அதிமுகவினர், பேனர் அகற்றப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது, முக்கோணம் பகுதியில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஏன் அகற்றவில்லை என போலீஸாரிடம் அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். மேலும் போலீஸாரைக் கண்டித்து, வால்பாறை எம்எல்ஏ அமுல் கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ கஸ்தூரி வாசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், பொள்ளாச்சி- சேத்துமடை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த வால்பாறை டிஎஸ்பி நிதி தலைமையிலான போலீஸார், அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானமடைந்த அதிமுகவினர், மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
“இபிஎஸ் நிறுத்தும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வோம்” - ஓபிஎஸ் உறுதி @ தேனி
செய்திப்பிரிவு
தேனி
2024-02-25 04:04:00
தேனி: பழனிசாமி நிறுத்தும் அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்வோம் என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி தேனி பங்களாமேட்டில் அமமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வடக்கு, தெற்கு மாவட்டச் செயலாளர்கள் முத்துச்சாமி, காசிமாயன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: பழனிசாமி கட்சியில் எந்த தியாகமும் செய்யாமல் முதல்வராக வந்தவர். முதல்வரானதும் கட்சி விதிமுறைகளை மாற்றி அதிமுகவை கைப் பற்றி விட்டார். அதிமுகவை கபளீகரம் செய்த பழனிசாமியை அரசியலை விட்டே விரட்ட வேண்டும். அதற்காகத்தான் நான் தர்ம யுத்தத்தை தொடங்கி உள்ளேன். இந்தத் தேர்தலில் பழனிசாமி நிறுத்தும் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் மட்டும் அல்ல. பழனிசாமி அணியினர் இனி எந்தத் தேர்தலிலுமே வெற்றிபெறக் கூடாது. பழனிசாமி இல்லாத அதிமுக தமிழகத்தில் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிரிந்திருந்த கட்சியின் நண்பர்கள் தற்போது சந்தித்துள்ளோம். துரோகிகளிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுக்க வேண்டும். ஆகவே, சில வருத்தங்களை மறந்து ஒன்றிணைந்து இருக்கிறோம். பதவி, அதிகாரத்துக்காக நாங்கள் ஒன்று சேரவில்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே ஒன்று சேர்ந்திருக்கிறோம். தேர்தலுக்காக அல்ல. நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்தத் தேர்தலில் எப்போது போட்டியிட வேண்டும் என்று எனக்குத் தெரியும். பழனிசாமியின் ஊழல் ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் திமுகவை வெற்றி பெற வைத்தார்கள். ஆனால் இந்த ஆட்சியிலும் ஊழல் அதிகரித்து விட்டது.தினமும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. திமுகவும், அதிமுகவும் மறைமுகக் கூட்டணி அமைத்துள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
நியோ மேக்ஸ் முதலீட்டாளர்களுக்கு நிலம் ஒப்படைப்பு சிறப்பு முகாம்: மதுரையில் திரண்ட மக்கள்
செய்திப்பிரிவு
மதுரை
2024-02-25 04:02:00
மதுரை: பொருளாதாரக் குற்றவியல் சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி நியோ மேக்ஸ் நிறுவனங்களில் முதலீடு செய்தோருக்கு நிலங்களை ஒப்படைப்பு செய்யும் வகையில் சிறப்பு முகாம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான முதலீட்டாளர்கள் திரண்டனர். தமிழகம் முழுவதும் நியோமேக்ஸ் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் என 25 நிறுவனங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து பொருளாதார குற்றப் பிரிவு போலீஸாரால், நியோமேக்ஸ் நிறுவனங்களைச் சேர்ந்த 107 பேர் மீது வழக்குப் பதிந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், நியோ மேக்ஸில் முதலீடு செய்தோரின் பணத்துக்கு ஈடாக நிலங்களை ஒப்படைப்பு மூலம் பதிவு செய்து கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நியோ மேக்ஸ் வழக்கில் புகார் தெரிவித்த 1,404 புகார்தாரர்கள் நீதிமன்றத்தால் அழைக்கப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று முதல் 4 நாட்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, முதலீடு செய்த பணத்துக்கு ஈடாக நிலங்களைப் பதிவு செய்து கொடுக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. இதில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 10 வழக்கறிஞர் குழுவினர் புகார் தாரர்களிடமிருந்து ஆவணங் களைப் பெற்றனர். இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கானோர் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். அதேநேரம், நிலங்களைப் பெற விருப்பமில்லாத புகார் தாரர்கள் குறித்து நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்படும் என நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
நடிகைகளை தொடர்புபடுத்தி அவதூறு - 2 யூடியூபர்கள் மீது காவல் ஆணையரிடம் கருணாஸ் புகார்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-25 04:00:00
சென்னை: நடிகை திரிஷா மற்றும் நடிகைகளுடன் தொடர்பு படுத்தி அவதூறு பரப்புவதாக 2 யூடியூபர்கள் மீது நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதிமுகவின் முன்னாள் சேலம் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ அண்மையில் கூவத்தூர் விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில், திரிஷா உள்ளிட்ட நடிகைகளையும், நடிகர் கருணாஸையும் அவதூறாக பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து ஏ.வி.ராஜூ மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ‘ஆன்லைன்’ மூலம் புகார் மனு அளித்திருந்தார். இதற்கிடையில், நடிகர் கருணாஸ் குறித்து 2 யூடியூபர்கள் பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், அந்த 2 யூடியூபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ‘ஆன்லைன்’ மூலம் மற்றொரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், ‘கடந்த சில நாட்களுக்கு முன்பு என்னை பற்றி 2 பேர் யூடியூப் சேனல்களில் பொய்யான தகவல்களையும், அவதூறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை விளம்பரத்துக்காக பரப்பி வருகிறார்கள். அதில் உண்மை இல்லை. எனினும், இந்த அவதூறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினராலும் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது. எந்த வித ஆதாரமும் இன்றி என் மீது பரப்பிவரும் பொய்யான தகவலால் எனக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். எனவே இந்த 2 பேர் மீதும், யூடியூடிப் சேனல்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னை பற்றிய அவதூறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
தோள்பட்டை, முழங்கை மணிக்கட்டு பிரச்சினைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் திறப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 21:46:00
சென்னை: தோள்பட்டை, முழங்கை மணிக்கட்டு மற்றும் கையை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ள நோயாளிகளுக்கு பிரத்தியேகமாக வழங்கப்படும் சிறப்பு மையம் இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் அமைந்துள்ள சென்னை தோள் முழங்கை, கை மையத்தை (CHENNAI UPPER LIMB UNIT), சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கிவைத்தார். இந்தியாவிலும் இங்கிலாந்திலும் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர் ராம் சிதம்பரம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையமானது, தோள்பட்டை மாற்று-3D திட்டமிடல், ஹோலோலென்ஸ் மற்றும் மிக்ஸ்டு ரியாலிட்டி நேவிகேஷன் போன்ற அதிநவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி, தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு மற்றும் கைகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கவுள்ளது. இதுகுறித்து மருத்துவர் ராம் சிதம்பரம் கூறுகையில், “CHENNAI UPPER LIMB UNIT-யில் தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை ஆகியவற்றின் மூட்டுகளுக்கு பிரத்யேக சிகிச்சை அளிக்கப்படும். தோள்பட்டை, முழங்கை, மணிக்கட்டு, கை எலும்புகள் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உலகத் தரத்திலான சிகிச்சையை வழங்குவதே எங்களுடைய நோக்கம். தோள் பட்டை மூட்டுகளில் தேய்மானமோ, டிஸ்லோகேஷனோ ஏற்பட்டால் சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கமானது. ஆனால் எங்களுடைய மையத்தில் மோசமாக பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு தோள் பட்டை மாற்று அறுவை சிகிச்சை அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். அதேபோல் மக்களிடையே தோள்பட்டை மற்றும் முழங்கை சம்பந்தமான சிகிச்சை மற்றும் மாற்று அறுவை சிகிச்சை குறித்து பெரிய அளவில் புரிதல் இல்லை என்றும், இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.
2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி - அரசாணை வெளியீடு @ தென் மாவட்ட கனமழை பாதிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 21:09:00
சென்னை: தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது இது தொடர்பான தமிழக அரசின் செய்தி குறிப்பு: “தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய நாட்களில் வரலாறு காணாத அதிகனமழைப் பொழிவு ஏற்பட்டது. தென்மாவட்டங்களின் பல பகுதிகளில் சராசரி ஆண்டு மழையளவை விட கூடுதலாக ஒரே நாளில் அதிகளவு மழைப்பொழிவு ஏற்பட்டது. அதிகனமழையினை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ள பாதிப்பால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, வேளாண் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களுக்கும், பொது மற்றும் தனியார் கட்டமைப்புகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை 21.12.2023 அன்று பார்வையிட்டு மிகக் கடுமையான வெள்ள பாதிப்பிற்குள்ளான பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, மழை வெள்ளத்தால் பாதிப்பிற்குள்ளான பயிர்களுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் தொகுப்புகளை அறிவித்தார். அதன் அடிப்படையில், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான 1,64,866 ஹெக்டேர் வேளாண் பயிர்களுக்கு, 1,98,174 விவசாயிகள் பயனடையும் வகையில் 160 கோடியே 42 லட்சத்து 41 ஆயிரத்து 781 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், 38,840 ஹெக்டேர் தோட்டக்கலைப் பயிர்களுக்கு 62,735 விவசாயிகள் பயனடையும் வகையில் 41 கோடியே 24 லட்சத்து 74 ஆயிரத்து 680 ரூபாய் நிவாரணம் வழங்கிடவும், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு 201 கோடியே 67 லட்சத்து 16 ஆயிரத்து 460 ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி நிவாரணத் தொகையினை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் ஆட்டோ விபத்தில் இரு சிறுவர்கள் உயிரிழப்பு: அரசு நிதியுதவி அறிவிப்பு
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 20:42:00
சென்னை: விழுப்புரம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இரு சிறுவர்களின் பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கப்பை கிராமத்தில் இன்று (24.02.2024) அதிகாலை யுவராஜ் என்பவர் தன் குடும்பத்தாருடன் தனது சொந்த ஆட்டோவில் சென்னையிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி சாலையோர தடுப்புச் சுவற்றில் மோதி அருகிலிருந்த தரைக் கிணற்றில் விழுந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த யுவராஜ் என்பவரின் இரு மகன்கள் பிரதீஷ் (வயது 9) மற்றும் ஹரிபிரசாத் (வயது 8) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது பெற்றோருக்கு தலா ரூ.2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி!
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 20:01:00
சென்னை: திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கான தொகுதிப் பங்கீடு சனிக்கிழமை கையெழுத்தானது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “மக்களவைத்‌ தேர்தலில்‌, திராவிட முன்னேற்றக்‌ கழகமும்‌ - இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சியும்‌, மற்றத்‌ தோழமைக்‌ கட்சிகளும்‌ இணைந்து போட்டியிடுவது தொடர்பாக இன்று (24.2.2024) தொகுதி உடன்பாடுகள்‌ குறித்து திமுக‌, இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ கட்சியும்‌ கலந்து பேசியதில்‌ தி.மு.க. கூட்டணியில்‌ இந்தியன்‌ யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌ இந்த நாடாளுமன்றத்‌ தேர்தலில்‌ ராமநாதபுரம் தொகுதியில்‌ போட்டியிடுவது தீர்மானிக்கப்பட்டது. பிற கூட்டணிக்‌ கட்சிகளின்‌ இறுதி தொகுதிப்‌ பங்கீட்டுக்கு உட்பட்டு இப்பட்டியல்‌ உறுதி செய்யப்படும்‌. அதேபோல, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், “ராமநாதபுரத்தில் மீண்டும் நவாஸ்கனி போட்டியிடுவார். எங்கள் கட்சி மட்டுமல்லாமல், திமுக கட்சியினரும் அதையே பரிந்துரை செய்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில், “2019-ம் ஆண்டு போட்டியிட்டது போல நாமக்கல் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறோம். அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. யார் போட்டியிடுவார் என்பது குறித்து செயற்குழு முடிவெடுக்கும்” என்றார்.
“நான் நல்லவன் இல்லை... அரசியலில் நல்லவனுக்கு வேலை இல்லை!” - அண்ணாமலை
கி.மகாராஜன்
மதுரை
2024-02-24 19:33:00
மதுரை: “511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். இது பழைய பாஜக இல்லை. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி. நான் நல்லவன் இல்லை. அரசியலில் நல்லவனுக்கு வேலையில்லை” என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார். மதுரை மேற்கு தொகுதியில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை நடைபெற்றது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். வில்லாபுரம் சந்திப்பில் தொடங்கி சோலை அழகுபுரம், ஜெய்ஹிந்த்புரம் வழியாக ஜீவாநகர் வரை பாத யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையில் அண்ணாமலை பேசியது: “திராவிட அரசியலை வேரோடு அழிக்கும் தேர்தல் 2024 நாடாளுமன்றத் தேர்தல். தமிழக அரசியல் களத்தில் உள்ள தவறுகளை சரி செய்யும் தேர்தல். இதுவரை தேர்தல்களில் யார் வெற்றி பெறுவது என தெரியாமல் வாக்களித்தோம். இந்த தேர்தலில் சின்னக்குழந்தைக்கு கூட தெரியும் 3-வது முறையாக மோடி பிரதமராக வருவார் என்பது. இந்த தேர்தலை அரசியல் மாற்றத்துக்கு பயன்படுத்த வேண்டும். பாஜக 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றிப்பெறும். தமிழக அரசியலை சுத்தம் செய்து சாமான்ய அரசியலை கொண்டு வரவும், குடும்ப ஆட்சி, ஊழல் ஆட்சி, அடாவடித்தனத்தை அகற்ற வேண்டும். திமுக ஆட்சியில் லஞ்சம், விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, கொள்ளையடிப்பது, அடாவடித்தனம் ஆகியவற்றை தான் பார்க்க முடிகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தல் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்பது வேள்வியாகும். பாஜகவினர் ஒவ்வொரும் தங்களை மோடி என நினைத்துக் கொண்டு வாக்களிக்க வேண்டும். அடுத்த 80 நாட்களுக்கு பிரதமர் மோடி போல் சுறுசுறுப்பாக வேலை செய்தால் மோடியின் கனவு தமிழகத்தில் நிறைவேறும். மதுரையில் 4-வது தமிழ்ச் சங்கம் அமைத்து தமிழை வளர்த்தவர் பாண்டித்துரை தேவர். பிரதமர் மோடி 5-வது தமிழ்ச் சங்கம் வைத்து தமிழ் வளர்த்து வருகிறார். மோடி உலகம் முழுவதும் தமிழை எடுத்துச் சென்று வருகிறார். தமிழகத்தில் மட்டும் தான் தமிழ் இருந்தது. இந்த பத்தாண்டுகளில் உலகம் முழுவதும் தமிழ் மொழி, கலாச்சாரத்தை பிரதமர் மோடி கொண்டுச் சென்றுள்ளார். தமிழக அமைச்சர்கள் தமிழை கொலை செய்து வருகின்றனர். துண்டு சீட் இல்லாவிட்டால் முதல்வரால் தமிழில் பேச முடியாது. தமிழை வியாபாரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்றனர். பிரதமர் இந்தியாவை ஒருங்கிணைத்து வருகிறார். திமுக வடக்கு, தெற்கு என பிரிவினை பேசி வருகிறது. தமிழக முதல்வர் 90 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக கூறி வருகிறார். முதல்வர் கனவு உலகில் வாழ்கிறார். 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 சதவீத வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை. 511 வாக்குறுதிகளை நிறைவேற்றியதை திமுகவினர் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன். திமுக பொய் பேசுகிறது. திமுகவுக்கும், பாஜகவுக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது. மதுரை மண் அரசியல் மாற்றத்துக்கு ஏற்றது. பத்திரப்பதிவுத்துறை ஜிஸ்கொயர் நிறுவனத்துக்காக கைகட்டி வேலை செய்கிறது. விஞ்ஞான ஊழலுக்கு தந்தை யாரென்றால் கருணாநிதியை கூறுவார். ஆனால் அமைச்சர் மூர்த்தி ஊழல் செய்வதில் கருணாநிதிக்கு தந்தையாக மாறியுள்ளார். அமைச்சர் பிடிஆரை முதல்வர் பாராட்டியுள்ளார். பிடிஆரின் பேச்சை முழுமையாக கேட்டால் கோபாலபுரம் குடும்பம் மொத்தமாக கடலுக்குள் தான் போக வேண்டும். இலவச வேஷ்டி சேலையில் ரூ.100 கோடி ஊழல் செய்துள்ளனர். திமுகவினர் எங்கும் தப்பிக்க முடியாது. தமிழகத்தில் ஊழல் செய்பவர்களை வேட்டையாடுவோம். இதை செய்யாவிட்டால் நம் குழந்தைகள் நிம்மதியாக வாழ முடியாது. தலைமுறை தலைமுறையாக ஊழல் தொடர்கிறது. ஊழல் செய்யும் குடும்பங்கள் அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்கான வேள்வியை பாஜக நடத்துகிறது. பங்காளி (அதிமுக) கட்சியினர் என்னை பூச்சாண்டி என்றும், மாயாண்டி என்றும் விமர்சனம் செய்கின்றனர். அதனால் எனக்கு வருத்தம் இல்லை. நான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போல் திருநீற்றை அழித்துக்கொண்டு எஸ்டிபிஐ எனும் தீவிரவாத இயக்கம் நடத்திய மாநாட்டில் நான் பங்கேற்கவில்லை. நான் கருப்பாக இருப்பதால் எனக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி என பெயரிட்டால் சிறப்பாக இருக்கும். இன்னொரு முன்னாள் அமைச்சர் என்னை லேகியம் விற்பவர் எனக் கூறுகிறார். பிப். 27-ல் பல்லடத்தில் மிகப்பெரிய லேகியம் விற்கப்படும். இதை பங்காளி (அதிமுக) கட்சியினர் வாங்கி குடித்தால் நோய் முழுயையாக குணமாகும். இது பழைய பாஜக இல்லை. வட்டியும் முதலுமாக திரும்ப கொடுக்கும் கட்சி. நான் நல்லவன் இல்லை. அரசியலில் நல்லவனுக்கு வேலையில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கான தேர்தல். மோடியை மீண்டும் பிரதமராகக்க வேண்டும்” என்று அண்ணாமலை பேசினார்.
விஜயதரணியின் எம்எல்ஏ பதவி: உடனடி தகுதி நீக்கம் கோரி தமிழக காங். கடிதம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 19:13:00
சென்னை: பாஜகவின் இணைந்த விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கடிதம் அனுப்பியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தது தமிழக காங்கிரஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.விஜயதரணி இன்று (24.2.2024) புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பிற்பகல் 2 மணியளவில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, ஓர் அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு தாவினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டு விடும் என்ற விதியின் அடிப்படையில் எஸ்.விஜயதரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் சட்டப்பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
“விஜயதரணி செய்தது மாபெரும் துரோகம்” - ஜோதிமணி எம்.பி காட்டம்
செய்திப்பிரிவு
சென்னை
2024-02-24 18:38:00
சென்னை: “தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம்” என கரூர் எம்.பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்திருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் இன்று (பிப்.24) பாஜகவில் இணைந்தார். அப்போது அவர், “காங்கிரஸ் கட்சியில் பெண்கள் பெரிய பதவிகளுக்கு வர முடியாத சூழல் நிலவி வருகிறது. நான் மூன்று முறை தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறேன். தற்போது சட்டமன்ற கட்சித் தலைவர் பதவி ஒரு ஜூனியருக்குதான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களாக நான் எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் நிறையப் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. ஏற்கெனவே இருந்த எம்.பி-யும், தற்போது இருக்கின்ற எம்.பி-யும் எந்த வேலையையும் செய்யவில்லை” என்று விஜயதரணி விளக்கமும் அளித்திருந்தார். | விரிவாக வாசிக்க > “எம்.பி சீட் மறுப்பு, காங்கிரஸில் பெண்கள் புறக்கணிப்பு...” - பாஜகவில் இணைந்த விஜயதரணி அடுக்கிய காரணங்கள் இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் ராகுல் காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்துக்கு செய்யும் மாபெரும் துரோகம். அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம்தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால், அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரீமியம் விஜயதரணி அடுக்கிய காரணங்கள் முதல் ஆம் ஆத்மி - காங். உடன்பாடு வரை | செய்தித் தெறிப்புகள் 10 @ 24, 2024
செய்திப்பிரிவு
நன்மைகள்
2024-02-24 18:12:00
‘தமிழகத்தில் ஒரே கட்ட தேர்தலுக்கு பரிசீலனை’: “கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் தேசிய, மாநிலக் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது. இது குறித்து பரிசீலிக்கப்படும். அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநியோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது. தேர்தல் தொடர்பாக புகார்களை மக்கள் ஆணையத்திடம் தெரிவிக்கும் வண்ணம் சி-விஜில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் அளிக்கும் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார். இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்: தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள் தடையற்ற வாசிப்பனுபவம் உங்களின் உறுதுணைக்கு நன்றி !