cuppiramaNiya pArtiyAr pATalkaL - part II- njAnap pATalkaL (in tamil script, unicode format) C. cuppiramaNiya pAratiyAr pATalkaL - part II gnanap pATalkaL, palvakaip pATalkaL & cuya caritai (in tamil script, unicode/UTF-8 format) சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள் & சுயசரிதை Acknowledgment: Our Sincere thanks go to Mr. Govardanan of Canada for his assistance in the preparation of this work. This webpage presents the Etext in Tamil script, in Unicode encoding. © Project Madurai, 1998-2021. Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website https://www.projectmadurai.org/ You are welcome to freely distribute this file, provided this header page is kept intact. சி. சுப்ரமணிய பாரதியார் எழுதிய பாடல்கள் 1. ஞானப் பாடல்கள் 1. அச்சமில்லை (பண்டாரப் பாட்டு) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே       1 கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.       2 ---------- 2. ஐய பேரிகை பல்லவி ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா! சரணங்கள் 1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப்       பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்       வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்(ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி       இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும்       காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐய பேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்       கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;       நோக்க நோக்கக் களியாட்டம். [ஐய பேரிகை) ------------- 3. விடுதலை-சிட்டுக்குருவி பல்லவி விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே சரணங்கள் 1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு. (விட்டு) 2. பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப் பீடையிலாத தொர் கூடு கட்டிக்கொண்டு முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு. (விட்டு) 3. முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு) ----------- 4. விடுதலை வேண்டும் ராகம் - நாட்டை பல்லவி வேண்டுமடி எப்போதும் விடுதலை, அம்மா; சரணங்கள் 1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் சூழ நின்ற தீவிலங்கு சோதி வானவர் ஈண்டு நமது தோழ ராகி எம்மோ டமுதமுண்டு குலவ நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ (வேண்டுமடி) 2. விருத்தி ராதி தானவர்க்கு மெலிவ தின்றியே, விண்ணு மண்ணும் வந்து பணிய மேன்மை துன்றியே பொருத்த முறநல் வேத மோர்ந்து பொய்ம்மை தீர,மெய்ம்மை நேர வருத்த மழிய வறுமை யொழிய வையம் முழுதும் வண்மை பொழிய (வேண்டுமடி) 3. பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம் பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே, நண்ணி யமரர் வெற்றி கூற நமது பெண்கள் அமரர் கொள்ள வண்ண மினிய தேவ மகளிர் மருவ நாமும் உவகைதுள்ள. (வேண்டுமடி) ------------ 5. உறுதி வேண்டும் மனதி லுறுதி வேண்டும்,       வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்,       நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,       கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்,       தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்,       காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்,       பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும்,       வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.       ஓம் ஓம் ஓம் ஓம். ---------------- 6. ஆத்ம ஜெயம் கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்       கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம்       வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்       கிறுதியிற் சோர்வோமோ?-அட, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்       மேவு ப்ராசக்தியே! 1 என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,       எத்தனை மேன்மைகளோ! தன்னை வென்றாலவை யாவும் பெறுவது       சத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்       முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு       தாழ்வுற்று நிற்போமோ? 2 ---------------- 7. காலனுக்கு உரைத்தல் ராகம் - சக்கரவாகம் தாளம்-ஆதி பல்லவி காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன் காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா) சரணங்கள் 1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்       வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித் [துதிக்கிறேன்-ஆதி மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்       முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட, [மூடனே?அட (காலா) 2. ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன       தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை [யறிகுவேன்-இங்கு நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி       நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட (காலா) -------------- 8. மாயையைப் பழித்தல் ராகம்-காம்போதி தாளம்-ஆதி உண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே-மனத் திண்மையுள்ளாரை நீ செய்வது மொன்றுண்டோ !-மாயையே!       1 எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும் மாயையே-நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன் நிற்பாயோ?-மாயையே!       2 என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய் கெட்ட மாயையே!-நான் உன்னைக் கெடுப்ப துறுதியென் றேயுணர்-மாயையே!       3 சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டு மாயையே!-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென் செய்வாய்!-மாயையே!       4 இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்ப மாயையே!-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாது நிற்பையோ?-மாயையே!       5 நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ மாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லர சாட்சியை-மாயையே!       6 என்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே!       7 யார்க்கும் குடியல்லேன் யானென்ப தோர்ந்தனன் மாயையே!-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன் உன்னை-மாயையே!       8 -------------- 9. சங்கு செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்       சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்       பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!       1 இத்தரை மீதினி லேயிந்த நாளினில்       இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்       தூய ராமென்றிங் கூதேடா சங்கம்!       2 பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,       புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்       ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!       3 மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்       மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்       சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்!       4 ----------- 10. அறிவே தெய்வம் கண்ணிகள் ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி       அலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்       டாமெனல் கேளீரோ?       1 மாடனைக் காடனை வேடனைப் போற்றி       மயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்       றோதி யறியிரோ?       2 சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்       சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப்       பெருமை யழிவீரோ?       3 வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       வேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்       வேத மறியாதே.       4 நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்று       நான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்       நான்மறை கண்டிலதே.       5 போந்த நிலைகள் பலவும் பராசக்தி       பூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்று       சான்றவர் கண்டனரே.       6 கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று       காட்டும் மறைகளெலாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு       அவங்கள் புரிவீரோ?       7 உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி       ஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறை       கூவுதல் கேளீரோ?       8 மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்து       வெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை       காட்டவும் வல்லீரோ?       9 ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்       உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்       உணர்வெனக் கொள்வாயே.       10 ------------- 11. பரசிவ வெள்ளம் உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும் வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார் வேதியரே.       1 காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்       பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே.       2 எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய் இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய்       3 வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக் கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய்.       4 தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற் சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி,       5 தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த் தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே.       6 எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே.       7 வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே.       8 காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு ளாய் மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே.       9 எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே.       10 மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே.       11 இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே.       12 வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே.       13 ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே.       14 வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா!       15 யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா!       16 எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத் தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா!       17 எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற் போதுமடா!       18 யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா!       19 காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே       20 சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா!       21 தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற் போதுமடா!       22 சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம் வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா!       23 நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! 24 ----------------- 12. உலகத்தை நோக்கி வினவுதல் நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?       1 வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?       2 கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?       3 காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மென்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம்.       4 ---------------- 13. நான் இரட்டைக் குறள் வெண் செந்துறை வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;       மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானிழல் வளரும் மரமெலாம் நான்,       காற்றும் புனலும் கடலுமே நான்.       1 விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்       வெட்ட வெளியின் விரிவெலாம் நான், மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,       வாரியிலுள்ள உயிரெலாம் நான்.       2 கம்பனிசைத்த கவியெலாம் நான்,       காருகர் தீட்டும் உருவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம்       எழில் நகர் கோபுரம் யாவுமே நான்.       3 இன்னிசை மாத ரிசையுளேன் நான்;       இன்பத் திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;       பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.       4 மந்திரங் கோடி இயக்குவோன் நான்,       இயங்கு பொருளின் இயல்பெலாம் நான், தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,       சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.       5 அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,       அவை பிழையாமே சுழற்றுவோன் நான்; கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,       காரண மாகிக் கதித்துளோன் நான்.       6 நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;       ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான் ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்       அறிவாய் விளங்குமுதற சோதிநான்!       7 ----------- 14. சித்தாந்தச் சாமி கோயில் சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்       தீபவொளி யுண்டாம்;-பெண்ணே! முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட       மூண்டதிருச் சுடராம்;-பெண்ணே!       1 உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்       ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே! கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்       காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே1       2 தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பது       தோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே! மூன்று வகைப்படும் காலநன் றென்பதை       முன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே!       3 பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்       பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே! கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்       காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே!       4 ---------------- 15. பக்தி ராகம்-பிலஹரி பல்லவி பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே சரணங்கள் 1. பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ!       சித்தந் தெளியும்,-இங்கு       செய்கை யனைத்திலும் செம்மை பிறந்திடும், வித்தைகள் சேரும்,-நல்ல       வீர ருறவு கிடைக்கும்,மனத்திடைத் தத்துவ முண்டாம்,நெஞ்சிற்       சஞ்சலம் நீங்கி உறுதி விளங்கிடும். (பக்தி) 2. காமப் பிசாசைக்-குதி       கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத் தாமசப் பேயைக்-கண்டு       தாக்கி மடித்திட லாகும்;எந்நேரமும் தீமையை எண்ணி-அஞ்சுந்       தேம்பற் பிசாசைத் திருகியெ றிந்துபொய்ந் நாம மில்லாதே-உண்மை       நாமத்தி னாலிங்கு நன்மை விளைந்திடும். (பக்தி) 3. ஆசையைக் கொல்வோம்,-புலை       அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட பாச மறுப்போம்,-இங்குப்       பார்வதி சக்தி விளங்குதல் கண்டதை மோசஞ் செய்யாமல்-உண்மை       முற்றிலுங் கண்டு வணங்கி வணங்கியொர் ஈசனைப் போற்றி-இன்பம்       யாவையு முண்டு புகழ்கொண்டு வாழ்குவம். (பக்தி) 4. சோர்வுகள் போகும்,-பொய்ச்       சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் பார்வைகள் தோன்றும்-மிடிப்       பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல சேர்வைகள் சேரும்,-பல       செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும், தீர்வைகள் தீரும்-பிணி       தீரும்,பலபல இன்பங்கள் சேர்ந்திடும். (பக்தி) 5. கல்வி வளரும்,-பல       காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும், அல்ல லொழியும்,-நல்ல       ஆண்மை யுண்டாகும்,அறிஉ தெளிந்திடும், சொல்லுவ தெல்லாம்-மறைச்       சொல்லினைப் போலப் பயனுள தாகும்,மெய் வல்லமை தோன்றும்,-தெய்வ       வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திடலாம்-உண்மை. 6. சோம்ப லழியும்-உடல்       சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் கூம்புத லின்றி நல்ல       கோபுரம் போல நிமிர்ந்த நிலைபெறும், வீம்புகள் போகும்-நல்ல       மேன்மை யுண்டாகிப் புயங்கள் பருக்கும்,பொய்ப் பாம்பு மடியும்-மெய்ப்       பரம் வென்று நல்ல நெறிகளுண் டாய்விடும் (பக்தி) 7. சந்ததி வாழும்,-வெறுஞ்       சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், 'இந்தப் புவிக்கே-இங்கொர்       ஈசனுண்டா யின் அறிக்கையிட் டேனுன்றன் கந்தமலர்த்தாள்-துணை;       காதல் மகவு வளர்ந்திட வேண்டும்,என் சிந்தையறிந்தே-அருள்       செய்திட வேண்டும்'என்றால் அருளெய்திடும்.(பக்தி) -------------- 16. அம்மாக்கண்ணு பாட்டு 1. ''பூட்டைத் திறப்பது கையாலே-நல்ல       மனந் திறப்பது மதியாலே'' பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்ப       வீட்டைத் திறப்பது பெண்ணாலே. 2. ஏட்டைத் துடைப்பது கையாலே-மன       வீட்டைத் துடைப்பது மெய்யாலே; வேட்டை யடிப்பது வில்லாலே-அன்புக்       கோட்டை பிடிப்பது சொல்லாலே. 3. காற்றை யடைப்பது மனதாலே-இந்தக்       காயத்தைக் காப்பது செய்கையாலே, சோற்றைப் புசிப்பது வாயாலே-உயிர்       துணி வுறுவது தாயாலே. ----------------- 17. வண்டிக்காரன் பாட்டு (அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்) ''காட்டு வழிதனிலே-அண்ணே!       கள்ளர் பயமிருந்தால்?''எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பி       வீரம்மை காக்குமடா!'' 1 ''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்       நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால்       காலனும் அஞ்சுமடா!'' 2 ---------------- 18. கடமை கடமை புரிவா ரின்புறுவார்       என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்;       கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய்,       வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்கு       களியுற் றென்றும் வாழ்குவமே. ------------------ 19. அன்பு செய்தல் இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? 1 வேறு மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்       வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்       வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே? யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்       என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா; ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;       உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!2 --------------- 20. சென்றது மீளாது சென்றதினி மீளாது மூடரே!நீர்       எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து       குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்       எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;       தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. -------------- 21. மனத்திற்குக் கட்டளை பேயா யுழலுஞ் சிறுமனமே!       பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதே       நினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும்       தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய்       உரைத்தேன் அடங்கி உய்யுதியால். ---------- 22. மனப் பெண் மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் 5 தொட்டதை மீள மீளவுந் தொடுவாய் புதியது காணிற் புலனழிந் திடுவாய் புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய் அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் 10 பழமையே யன்றிப் பார்மிசை யேதும் புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ! பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். 15 அங்ஙனே, என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய், கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை 20 உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய், இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய் இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், 25 தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய், தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய், சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய், பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் 30 மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்; இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; 35 உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன். ----------------- 23. பகைவனுக்கு அருள்வாய் பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்! 1. புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோ மே. பகை நடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான் -நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான். (பகைவ) 2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்       செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்       கொடி வளராதோ?-நன்னெஞ்சே! (பகைவ) 3. உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்       உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே! தெள்ளிய தேனிலொர் சிறிது நஞ்சையும்       சேர்த்தபின் தேனோமோ?நன்னெஞ்சே! (பகைவ) 4. வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது       வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற       சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே! (பகைவ) 5. போருக்கு வந்தங் கெதிர்த்த கவுரவர்       போலவந் தானுமவன்-நன்னெஞ்சே! நேருக் கருச்சுனன் தேரிற் கசைகொண்டு       நின்றதுங் கண்ணனன்றோ?-நன்னெஞ்சே! (பகைவ) 6. தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு       சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே! அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்       அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே! (பகைவ) ------------ 24. தெளிவு எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்       ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின்       புத்தி மயக்க முண்டோ ? 1 உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்       உள்ளங் குலைவதுண்டோ -மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்       வேதனை யுண் டோ டா? 2 சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்       செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே, எத்தனை கோடி இடர்வந்து சூழினும்       எண்ணஞ் சிறிது முண்டோ ? 3 செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்       தேவனுரைத் தனனே;-மனமே! பொய்கருதாம லதன்வழி நிற்பவர்       பூதல மஞ்ச வரோ? 4 ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்       கச்சமு முண்டோ டா?-மனமே! தேன்மடை யிங்கு திறந்தது கண்டு       தேக்கித் திரிவ மடா! 5 ------------ 25. கற்பனையூர் கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்       கந்தர்வர் விளையாடு வராம். சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச்       சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை 1 திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இது       ஸ்பானியக் கடலில் யாத்திரை போம் வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம்       மீளவும் நம்மூர் திரும்பு முன்னே 2 அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மை       அன்பொடு கண்டுரை செய்திடுவான்; மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்       மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். 3 எக்கால மும்பெரு நேராகும்-நம்மை       எவ்வகைக் கவலையும் போருமில்லை; பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப்       பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. 4 இன்னமு திற்கது நேராகும்-நம்மை       யோவான் விடுவிக்க வருமளவும், நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மை       நலித்திடும் பேயங்கு வாராதே. 5 குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்       கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம் அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றி       அரசிளங் குமரிகள் பொம்மையெலாம். 6 செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்       சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள் சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத்       தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். 7 கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழி       காண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ! பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்       பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? 8 குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்       கோலநன் னாட்டிடைக் காண்பீரே; இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்       ஏகுதிர் கற்பனை நகரினுக்கே 9 [ஜான் ஸ்கர் என்ற ஆங்கிலப் புலவன்'நக்ஷத்ர தூதன்' என்ற பத்திரிகையில் பிரசுரித்த ''தி டவுன் ஓப் லெட்'ஸ் பிரெடெண்டு'' என்ற பாட்டின் மொழி பெயர்ப்பு.] குறிப்பு:- இப்பாடலின் பொருள் : கற்பனை நகரமென்பது சித்தத்தில் குழந்தை நிலை பெறுவதை இங்குக் குறிப்பிடுகிறது.'யோவான்'என்பது குமார தேவனுடைய பெயர்.'அக்கடவுள் மனிதனுக்குள்ளே நிலைபெற்று, மனிதன் அடைய வேண்டும்'என்று யேசு கிறிஸ்து நாதர் சொல்லியிருக்கும் பொருளை இப்பாடல் குறிப்பிடுகிறது. கவலைகளை முற்றுந் துறந்துவிட்டு உலகத்தை வெறுமே லீலையாகக் கருதி னாலன்றி மோக்ஷம் எய்தப் படாது. ------------ 2. பல்வகைப் பாடல்கள் (காப்பு-பரம்பொருள் வாழ்த்து) ஆத்தி சூடி, இளம்பிறை யணிந்து, மோனத் திருக்கு முழுவெண் மேனியான்; கருநிறங் கொண்டு பாற் கடல் மிசைக் கிடப்போன்; மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்; ஏசுவின் தந்தை; எனப்பல மதத்தினர் உருவகத் தாலே உணர்ந்துண ராது பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள் ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்; அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்; அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம். நூல் அச்சம் தவிர். ஆண்மை தவறேல். இளைத்தல் இகழ்ச்சி. ஈகை திறன். உடலினை உறுதிசெய்.       5 ஊண்மிக விரும்பு. எண்ணுவ துயர்வு. ஏறுபோல் நட. ஐம்பொறி ஆட்சிகொள். ஒற்றுமை வலிமையாம்.       10 ஓய்த லொழி. ஔடதங் குறை. கற்ற தொழுகு. காலம் அழியேல். கிளைபல தாங்கேல்.       15 கீழோர்க்கு அஞ்சேல். குன்றென நிமிர்ந்துநில். கூடித் தொழில் செய். கெடுப்பது சோர்வு. கேட்டிலும் துணிந்துநில்.       20 கைத்தொழில் போற்று. கொடுமையை எதிர்த்து நில். கோல்கைக் கொண்டு வாழ். கவ்வியதை விடேல். சரித்திரத் தேர்ச்சிகொள்.       25 சாவதற்கு அஞ்சேல். சிதையா நெஞ்சு கொள். சீறுவோர்ச் சீறு. சுமையினுக்கு இளைத்திடேல். சூரரைப் போற்று.       30 செய்வது துணிந்து செய். சேர்க்கை அழியேல். சைகையிற் பொருளுணர். சொல்வது தெளிந்து சொல். சோதிடந் தனையிகழ்.       35 சௌரியந் தவறேல். ஞமலிபோல் வாழேல். ஞாயிறு போற்று. ஞிமிரென இன்புறு. ஞெகிழ்வத தருளின்.       40 ஞேயங் காத்தல் செய். தன்மை இழவேல். தாழ்ந்து நடவேல். திருவினை வென்றுவாழ். தீயோர்க்கு அஞ்சேல்.       45 துன்பம் மறந்திடு. தூற்றுதல் ஒழி. தெய்வம் நீ என்றுணர். தேசத்தைக் காத்தல்செய். தையலை உயர்வு செய்.       50 தொன்மைக்கு அஞ்சேல். தோல்வியிற் கலங்கேல். தவத்தினை நிதம் புரி. நன்று கருது. நாளெலாம் வினைசெய்.       55 நினைப்பது முடியும். நீதிநூல் பயில் நுனியளவு செல். நூலினைப் பகுத்துணர் நெற்றி சுருக்கிடேல்.       60 நேர்படப் பேசு. நையப் புடை. நொந்தது சாகும். நோற்பது கைவிடேல். பணத்தினைப் பெருக்கு.       65 பாட்டினில் அன்புசெய். பிணத்தினைப் போற்றேல். பீழைக்கு இடங்கொடேல். புதியன விரும்பு. பூமி யிழந்திடேல்.       70 பெரிதினும் பெரிதுகேள். பேய்களுக்கு அஞ்சேல். பொய்ம்மை இகழ். போர்த்தொழில் பழகு. மந்திரம் வலிமை.       75 மானம் போற்று. மிடிமையில் அழிந்திடேல். மீளுமாறு உணர்ந்துகொள். முனையிலே முகத்து நில். மூப்பினுக்கு இடங்கொடேல்.       80 மெல்லத் தெரிந்து சொல். மேழி போற்று. மொய்ம்புறத் தவஞ் செய். மோனம் போற்று. மௌட்டியந் தனைக் கொல்.      85 யவனர்போல் முயற்சிகொள். யாவரையும் மதித்து வாழ். யௌவனம் காத்தல் செய். ரஸத்திலே தேர்ச்சிகொள். ராஜஸம் பயில்.       90 ரீதி தவறேல். ருசிபல வென்றுணர். ரூபம் செம்மை செய். ரேகையில் கனி கொள். ரோதனம் தவிர்.       95 ரௌத்திரம் பழகு. லவம் பல வெள்ளமாம். லாகவம் பயிற்சிசெய். லீலை இவ் வுலகு. (உ)லுத்தரை இகழ்.       100 (உ)லோகநூல் கற்றுணர். லௌகிகம் ஆற்று. வருவதை மகிழ்ந்துண். வானநூற் பயிற்சிகொள். விதையினைத் தெரிந்திடு.       105 வீரியம் பெருக்கு. வெடிப்புறப் பேசு. வேதம் புதுமைசெய். வையத் தலைமைகொள் வௌவுதல் நீக்கு.       110 -------------- 2. பாப்பாப் பாட்டு. ஓடி விளையாடு பாப்பா! - நீ       ஓய்ந்திருக்க லாகாது பாப்பா! கூடிவிளையாடு பாப்பா! - ஒரு       குழைந்தையை வையாதே பாப்பா!.       1 சின்னஞ் சிறுகுருவி போலே - நீ       திரிந்து பறந்துவா பாப்பா! வன்னப் பறவைகளைக் கண்டு - நீ       மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!       2 கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்       கூட்டி விளையாடு பாப்பா! எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு       இரக்கப் படவேணும் பாப்பா!       3 பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்       பசுமிக நல்லதடி பாப்பா! வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது       மனிதர்க்குத் தோழனடி பாப்பா!       4 வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு       வயலில் உழுதுவரும் மாடு, அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை       ஆதரிக்க வேணுமடி பாப்பா!       5 காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு       கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு - என்று       வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!       6 பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்       புறஞ்சொல்ல லாகாது பாப்பா! தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு       தீங்குவர மாட்டாது பாப்பா!       7 பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்       பயங்கொள்ள லாகாது பாப்பா! மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்       முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!       8 துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்       சோர்ந்துவிட லாகாது பாப்பா! அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்       அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!       9 சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்       சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா! தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ       திடங்கொண்டு போராடு பாப்பா!       10 தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்       தாயென்று கும்பிடடி பாப்பா! அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்       ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!       11 சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்       தொழுது படித்திடடி பாப்பா! செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்       தினமும் புகழ்ந்திடடி பாப்பா!       12 வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்       வாழும் குமரிமுனை பாப்பா! கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்       கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!       13 வேத முடையதிந்த நாடு - நல்ல       வீரர் பிறந்த திந்த நாடு சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்       தெய்வமென்று கும்பிடடி பாப்பா!       14 சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்       தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு       நிறைய உடையவர்கள் மேலோர்.       15 உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்       உண்மையென்று தானறிதல் வேணும் வயிர முடைய நெஞ்சு வேணும் - இது       வாழும் முறைமையடி பாப்பா!       16 ------------- 3. முரசு வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே! வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே! நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே! 1. ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன்; சீருக் கெல்லாம் முதலாகும் - ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும். 2. வேத மறிந்தவன் பார்ப்பான், பல வித்தை தெரிந்தவன் பார்ப்பான். நீதி நிலைதவ றாமல் - தண்ட நேமங்கள் செய்பவன் நாய்க்கன். 3. பண்டங்கள் விற்பவன் செட்டி - பிறர் பட்டினி தீர்ப்பவன் செட்டி தொண்டரென் றோர்வகுப் பில்லை, - தொழில் சோம்பலைப் போல்இழி வில்லை. 4. நாலு வகுப்பும்இங் கொன்றே; - இந்த நான்கினில் ஒன்று குறைந்தால் வேலை தவறிச் சிதைந்தே - செத்து வீழ்ந்திடும் மானிடச் சாதி. 5. ஒற்றைக் குடும்பந் தனிலே - பொருள் ஓங்க வளர்ப்பவன் தந்தை; மற்றைக் கருமங்கள் செய்தே - மனை வாழ்ந்திடச் செய்பவள் அன்னை; 6. ஏவல்கள் செய்பவர் மக்கள்! - இவர் யாவரும் ஓர்குலம் அன்றோ? மேவி அனைவரும் ஒன்றாய் - நல்ல வீடு நடத்துதல் கண்டோ ம். 7. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார். நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார். 8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம். 9. பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி பேணி வளர்த்திடும் ஈசன்; மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல மாத ரறிவைக் கெடுத்தார். 10. கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக் காட்சி கெடுத்திட லாமோ? பெண்க ளறிவை வளர்த்தால் - வையம் பேதைமை யற்றிடுங் காணீர். 11. தெய்வம் பலபல சொல்லிப் - பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்; உய்வ தனைத்திலும் ஒன்றாய் - எங்கும் ஓர்பொருளானது தெய்வம். 12. தீயினைக் கும்பிடும் பார்ப்பார், - நித்தம் திக்கை வணங்கும் துருக்கர், கோவிற் சிலுவையின் முன்னே - நின்று கும்பிடும் யேசு மதத்தார். 13. யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம், பாருக்குள்ளே தெய்வம் ஒன்று; - இதில் பற்பல சண்டைகள் வேண்டாம். 14. வெள்ளை நிறத்தொரு பூனை - எங்கள் வீட்டில் வளருது கண்டீர்; பிள்ளைகள் பெற்றதப் பூனை, - அவை பேருக் கொருநிற மாகும். 15. சாம்பல் நிறமொரு குட்டி - கருஞ் சாந்து நிறமொரு குட்டி, பாம்பு நிறமொரு குட்டி - வெள்ளைப் பாலின் நிறமொரு குட்டி. 16. எந்த நிறமிருந்தாலும் - அவை யாவும் ஒரேதர மன்றோ? இந்த நிறம்சிறி தென்றும் - இஃது ஏற்ற மென்றும் சொல்லலாமோ? 17. வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை யில்லை; எண்ணங்கள் செய்கைக ளெல்லாம் - இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணீர். 18. நிகரென்று கொட்டு முரசே! - இந்த நீணிலம் வாழ்பவ ரெல்லாம்; தகரென்று கொட்டு முரசே - பொய்ம்மைச் சாதி வகுப்பினை யெல்லாம். 19. அன்பென்று கொட்டு முரசே! - அதில் ஆக்கமுண் டாமென்று கொட்டு; துன்பங்கள் யாவுமே போகும் - வெறுஞ் சூதுப் பிரிவுகள் போனால். 20. அன்பென்று கொட்டு முரசே! - மக்கள் அத்தனைப் பேரும் நிகராம். இன்பங்கள் யாவும் பெருகும் - இங்கு யாவரும் ஒன்றென்று கொண்டால். 21. உடன்பிறந் தார்களைப் போலே - இவ் வுலகில் மனிதரெல் லாரும்; இடம்பெரி துண்டுவை யத்தில் - இதில் ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்? 22. மரத்தினை நட்டவன் தண்ணீர் - நன்கு வார்த்ததை ஓங்கிடச் செய்வான்; சிரத்தை யுடையது தெய்வம், - இங்கு சேர்த்த உணவெல்லை யில்லை. 23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு வாழும் மனிதரெல் லோருக்கும்; பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம். 24. உடன்பிறந் தவர்களைப் போலே - இவ் வுலகினில் மனிதரெல் லாரும்; திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத் தின்று பிழைத்திட லாமோ? 25. வலிமை யுடையது தெய்வம், - நம்மை வாழ்ந்திடச் செய்வது தெய்வம்; மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை வீழ்த்தி மிதத்திட லாமோ? 26. தம்பி சற்றே மெலிவானால் - அண்ணன் தானடிமை கொள்ள லாமோ? செம்புக்கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள் சிற்றடி மைப்பட லாமோ? 27. அன்பென்று கொட்டு முரசே! - அதில் யார்க்கும் விடுதலை உண்டு; பின்பு மனிதர்க ளெல்லாம் - கல்வி பெற்றுப் பதம்பெற்று வாழ்வார். 28. அறிவை வளர்த்திட வேண்டும் - மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய். சிறியரை மேம்படச் செய்தால் - பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும். 29. பாருக்குள்ளே சமத்தன்மை - தொடர் பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமைசெய் யாது - புவி யெங்கும் விடுதலை செய்யும். 30. வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்; பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும். 31. ஒன்றென்று கொட்டு முரசே!-அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே! நன்றென்று கொட்டு முரசே!இந்த நானில மாந்தருக் கெல்லாம். -------------- 4. புதுமைப் பெண். போற்றி போற்றி!ஓர் ஆயிரம் போற்றி! நின்       பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றிகாண் சேற்றி லேபுதி தாக முளைத்த தோர்       செய்ய தாமரைத் தேமலர் போலோளி தோற்றி நின்றனை பாரத நாடைலே;       துன்பம் நீக்கும் சுதந்திர பேரிகை சாற்றி வந்தனை,மாதரசே! எங்கள்       சாதி செய்த தவப்பயன் வாழி நீ!       1 மாதர்க் குண்டு சுதந்திரம் என்றுநின்       வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் நாதந் தானது நாரதர் வீணையோ?       நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ? வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே       மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ? சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ?       தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே!       2 அறிவு கொண்ட மனித வுயிர்களை       அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்       நேர்மை கொண்டுயர் தேவர்க ளாதற்கே, சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்       தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்; நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்       நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!       3 ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்       அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்       போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;       ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;       பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!       4 நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;       நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்       சாலவே யரி தாவதொர் செய்தியாம்; குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;       கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;       நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!       5 புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்       பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்       தன்னி லேபொது வான் வழக்கமாம்; மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்       மாத வப்பெரி யோருட னொப்புற்றே முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய       முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்.       6 நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,       நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்       செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்; அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில்       அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்       உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!       7 உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,       ஓது பற்பல நூல்வகை கற்கவும், இலகு சீருடை நாற்றிசை நாடுகள்       யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே திலக வாணுத லார்நங்கள் பாரத       தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்; விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை       வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.       8 சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்;       சவுரி யங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;       மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; காத்து மானிடர் செய்கை யனைத்தையும்       கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்;       இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ!       9 போற்றி,போற்றி!ஜயஜய போற்றி!இப்       புதுமைப் பெண்ணொளி வாழிபல் லாண்டிங்கே! மாற்றி வையம் புதுமை யுறச்செய்து       மனிதர் தம்மை அமர்க ளாக்கவே ஆற்றல் கொண்ட பராசக்தி யன்னைநல்       அருளி நாலொரு கன்னிகை யாகியே தேற்றி உண்மைகள் கூறிட வந்திட்டாள்       செல்வம் யாவினும் மேற்செல்வம் எய்தினோம்.       10 ---------------- 5. பெண்மை பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!       பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா! தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன       தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.       1 அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.       ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்; துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!       சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.      2 வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!       மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்; கலிய ழிப்பது பெண்க ளறமடா!       கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.       3 பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்       பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை! கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே       காத லின்பத்தைக் காத்திடு வோமடா.       4 சக்தி யென்ற மதுவையுண் போமடா!       தாளங் கொட்டித் திசைகள் அதிரவே, ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்       ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.       5 உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;       உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்; உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!       ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.       6 'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்       புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே; நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்       நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.       7 'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!       'போற்றி தாய்'என்று பொற்குழ லூதடா! காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்       காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.       8 அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்       ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்; கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்       கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம். 9 --------------- 6. பெண்கள் விடுதலைக் கும்பி காப்பு பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள் பேசிக் களிப்பொடு நாம்பாடக் கண்களி லேயொளி போல வுயிரில் கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே. 1. கும்மியடி!தமிழ் நாடு முழுதும்       குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி! நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின       நன்மை கண்டோ மென்று கும்மியடி! (கும்மி) 2. ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்       றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற       விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார். (கும்மி) 3. மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்       மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே, வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை       வெட்டி விட்டோ மென்று கும்மியடி! (கும்மி) 4. நல்ல விலை கொண்டு நாயை விற்பார்,அந்த       நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ? கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை       கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார். (கும்மி) 5. கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு       கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்; வற்புறுத் திப்பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்       வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம். (கும்மி) 6. பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்       பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்       இளைப்பில்லை கணென்று கும்மியடி! (கும்மி) 7. வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும்       வேண்டி வந்தோ மென்று கும்மியடி! சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்       சாதி படைக்கவும் செய்திடு வோம். (கும்மி) 8. காத லொருவனைக் கைப்பிடித்தே,அவன்       காரியம் யாவினும் கைகொடுத்து, மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்       மாட்சி பெறச் செய்து வாழ்வமடி! (கும்மி) ------------------- 7. பெண் விடுதலை விடுதலைக்கு மகளிரெல் லோரும்       வேட்கை கொண்டனம்;வெல்லுவம் என்றெ திடம னத்தின் மதுக்கிண்ண மீது       சேர்ந்து நாம்பிர திக்கினை செய்வோம். உடைய வள்சக்தி ஆண்பெண் ணிரண்டும்       ஒருநி கர்செய் துரிமை சமைத்தாள்; இடையிலேபட்ட கீழ்நிலை கண்டீர்.       இதற்கு நாமொருப் பட்டிருப் போமோ?       1 திறமை யால்இங்கு மேனிலைசேர்வோம்;       தீய பண்டை இகழ்ச்சிகள் தேய்ப்போம்; குறைவி லாது முழுநிகர் நம்மைக்       கொள்வ ராண்க ளெனிலவ ரோடும் சிறுமை தீரநந் தாய்த்திரு நாட்டைத்       திரும்ப வெல்வதில் சேர்ந்திங் குழைப்போம்; அறவி ழுந்தது பண்டை வழக்கம்;       ஆணுக் குப்பெண் விலங்கெனும் அஃதே.       2 விடியு நல்லொளி காணுதி நின்றே,       மேவு நாக ரிகம்புதி தொன்றே; கொடியர் நம்மை அடிமைகள் என்றே       கொண்டு,தாம்முதல் என்றன ரன்றே. அடியொ டந்த வழக்கத்தைக் கொன்றே,       அறிவு யாவும் பயிற்சியில் வென்றே கடமை செய்வீர்,நந்தேசத்து வீரக்       காரிகைக் கணத்தீர்,துணி வுற்றே.       3 ------------------- 8. தொழில் இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே!       யந்திரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே!       கடலில் மூழ்கிநன் முத்தெடுப்பீரே! அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்       ஆயி ரந்தொழில் செய்திடு வீரே! பெரும்பு கழ்நுமக் கேயிசைக் கின்றேன்.       பிரம தேவன் கலையிங்கு நீரே!       1 மண்ணெடுத்துக் குடங்கள்செய் வீரே!       மரத்தை வெட்டி மனைசெய்கு வீரே! உண்ணக் காய்கனி தந்திடு வீரே!       உழுது நன்செய்ப் பயிரிடு வீரே! எண்ணெய்,பால்நெய் கொணர்ந்திடு வீரே!       இழையை நாற்றுநல் லாடைசெய் வீரே! விண்ணி னின்றெமை வானவர் காப்பார்!       மேவிப் பார்மிசைக் காப்பவர் நீரே!       2 பாட்டும் செய்யுளும் கோத்திடு வீரே!       பரத நாட்டியக் கூத்திடு வீரே! காட்டும் வையப் பொருள்களின் உண்மை       கண்டு சாத்திரம் சேர்த்திடு வீரே! நாட்டி லேயறம் கூட்டிவைப் பீரே!       நாடும் இன்பங்கள் ஊட்டிவைப் பீரே! தேட்ட மின்றி விழியெதிர் காணும்       தெய்வ மாக விளங்குவிர் நீரே!       3 -------------- 9. மறவன் பாட்டு மண்வெட்டிக் கூலிதின லாச்சே;-எங்கள்       வாள்வலியும் வேல்வலியும் போச்சே! விண்முட்டிச் சென்றபுகழ் போச்சே-இந்த       மேதினியில் கெட்டபெய ராச்சே!       1 நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல       நாதமிகு சங்கொலியும் பேணி, பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்       போர்செய்த கால்மெல்லாம் ப்ண்டு.       2 கன்னங் கரியவிருள் நேரம்-அதில்       காற்றும் பெருமழையும் சேரும்; சின்னக் கரியதுணி யாலே-எங்கள்       தேகமெல்லாம் மூடிநரி போலே.       3 ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த       ஈன வயிறுபடும் பாட்டில் கோழை யெலிக ளென்னவே-பொருள்       கொண்டு வந்து......       4 முன்னாளில் ஐவரெல்லாம் வேதம்-ஓதுவார்;       மூன்று மழை பெய்யுமடா மாதம்; இந்நாளி லேபொய்ம்மைப் பார்ப்பார்-இவர்       ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்,       5 பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்       பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்; யாரானா லும்கொடுமை ... ... ...       ... ... ... ... ... ...       6 பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்       பிச்சுப் பணங்கொடெனத் தின்பான் கொள்ளைக் கேசென் ... ...       ... ... ... ... ... ...       7 சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்       சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்? ... ... ... ... ... ...       ... ... ... ... ... ...       8 நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு;       நாளெல்லாம் மற்றிதிலே உழைப்பு; பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்       பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.       9 சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்       சூரர் பெயரை அழிப் போமோ? வீர மறவர் நாமன்றோ?-இந்த       வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?       10 ------------------- 10. நாட்டுக் கல்வி (ஆங்கிலத்தில் ரவீந்திரநாதர் எழுதிய பாடலின் மொழிபெயர்ப்பு) விளக்கி லேதிரி நன்கு சமைந்தது       மேவு வீர்இங்கு தீக்கொண்டு தோழரே! களக்க முற்ற இருள்கடந் தேகுவார்       காலைச் சோதிக் கதிரவன் கோவிற்கே; துளக்க முற்றவிண் மீனிடம் செல்லுவார்       தொகையில் சேர்ந்திட உம்மையும் கூவினார்; களிப்பு மிஞ்சி ஓளியினைப் பண்டொரு       காலன் நீர்சென்று தேடிய தில்லையோ?       1 அன்று நுங்கள் கொடியினை முத்திட்டே       ஆசை யென்ற விண் மீன்ஒளிர் செய்ததே; துன்று நள்ளிருள் மலை மயக்கத்தால்       சோம்பி நீரும் வழிநடை பிந்தினீர்; நின் றவிந்தன நுங்கள் விளக்கெலாம்;       நீங்கள் கண்ட கனாக்களெல் லாம் இசை குன்றித் தீக்குறி தோன்றும்;இராப்புட்கள்       கூவ மாறொத் திருந்தன காண்டிரோ?       2 இன்னு மிங்கிருள் கூடி யிருப்பினும்       ஏங்கு கின்ற நரகத் துயிர்கள்போல் இன்னு மிங்கு வனத்திடை காற்றுத்தான்       ஓங்கும் ஓதை இருதிடும் ஆயினும் முன்னைக் காலத்தின் நின்றெழும் பேரொலி       முறை முறைபல ஊழியின் ஊடுற்றே பின்னை இங்குவந் தெய்திய பேரொலி.       போல மந்திர வேதத்தின் பேரொலி.       3 "இருளை நீக்கி ஒளியினைக் காட்டுவாய்,       இறப்பை நீக்கி,அமிர்தத்தை ஊட்டுவாய்" அருளும் இந்த மறையொலி வந்திங்கே       ஆழ்ந்த தூக்கத்தில் வீழ்ந்திருப் பீர்தமைத் தெருளு றுத்தவும் நீர்எழு கில்லிரோ?       தீய நாச உறக்கத்தில் வீழ்ந்தனீர் மருளை நீக்கி அறிதிர் அறிதிரோ?       வான்ஒ ளிக்கு மகாஅர்இ யாம்என்றே.       4 ---------- 11. புதிய கோணங்கி குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; நல்ல காலம் வருகுது;நல்ல காலம் வருகுது; சாதிகள் சேருது;சண்டைகள் தொலையுது; சொல்லடி,சொல்லடி,சக்தி,மாகாளீ! வேதபுரத் தாருக்கு நல்ல குறி சொல்லு.       1 தரித்திரம் போகுது;செல்வம் வருகுது; படிப்பு வளருது;பாவம் தொலையுது; படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான்,போவான்,ஐயோவென்று போவான்!       2 வேத புரத்திலே வியாபாரம் பெருகுது; தொழில் பெருகுது;தொழிலாளி வாழ்வான். சாத்திரம் வளருது;சூத்திரம் தெரியுது; யந்திரம் பெருகுது;தந்திரம் வளருது; மந்திர மெல்லாம் வளருது,வளருது;       3 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சொல்லடி,சொல்லடி,மலையாள பகவதீ! அந்தரி,வீரி,சண்டிகை,சூலி குடுகுடு குடுகுடு       4 குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு; சாமிமார்க் கெல்லாம் தைரியம் வளருது; தொப்பை சுருங்குது,சுறுசுறுப்பு விளையுது: எட்டு லச்சுமியும் ஏறி வளருது; சாத்திரம் வளருது,சாதி குறையுது; நேத்திரம் திறக்குது,நியாயம் தெரியுது; பழைய பயித்தியம் படீலென்று தெளியுது; வீரம் வருகுது,மேன்மை கிடைக்குது; சொல்லடி சக்தி,மலையாள் பகவதி; தர்மம் பெருகுது,தர்மம் பெருகுது. 5 ----------- 3. சுயசரிதை 1. கனவு "பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய் மெல்லப் போனதுவே." ___ பட்டினத்துப்பிள்ளை முன்னுரை வாழ்வு முற்றும் கனவெனக் கூறிய       மறைவ லோர்தம் உரைபிழை யன்றுகாண்; தாழ்வு பெற்ற புவித்தலக் கோலங்கள்       ச்ரத மன்றெனல் யானும் அறிகுவேன்; பாழ்க டந்த பரனிலை யென்றவர்       பகரும் அந்நிலை பார்த்திலன் பார்மிசை; ஊள் கடந்து வருவதும் ஒண்றுண்டோ ?       உண்மை தன்னிலொர் பாதி யுணர்ந்திட்டேன்       1 மாயை பொய்யெனல் முற்றிலும் கண்டனன்;       மற்றும் இந்தப் பிரமத் தியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன்;தன்னுடை       அறிவி னுக்குப் புலப்பட லின்றியே தேய மீதெவ ரோசொலுஞ் சொல்லினைச்       செம்மை யென்று மனத்திடைக் கொள்வதாம் தீய பக்தி யியற்கையும் வாய்ந்திலேன்;       சிறிது காலம் பொறுத்தினுங் காண்பமே.       2 உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே       உண்டு றங்கி யிடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்       கனவி லுங்கன வாகும்;இதனிடை சிலதி னங்கள் உயிர்க்கமு தாகியே       செப்பு தற்கரி தாகம யக்குமால்; திலத வாணுத லார்தரு மையலாந்       தெய்வி கக்கன வன்னது வாழ்கவே.       3 ஆண்டோ ர் பத்தினில் ஆடியும் ஓடியும்       ஆறு குட்டையின் நீச்சினும் பேச்சினும் ஈண்டு பன்மரத் தேறியி றங்கியும்       என்னோ டொத்த சிறியர் இருப்பரால்; வேண்டு தந்தை விதிப்பினுக் கஞ்சியான்       வீதி யாட்டங்க ளேதினுங் கூடிலேன், தூண்டு நூற்கணத் தோடு தனியனாய்த்       தோழ் மைபிறி தின்றி வருந்தினேன்.       4 பிள்ளைக் காதல் அன்ன போழ்தினி லுற்ற கனவினை       அந்த மிழ்ச் சொலில் எவ்வண்ணம் சொல்லுகேன்? சொன்ன தீங்கன வங்குத் துயிலிடைத்       தோய்ந்த தன்று,நனவிடைத் தோய்ந்ததால்; மென்ன டைக் கனி யின்சொற் கருவிழி:       மேனி யெங்கும் நறுமலர் வீசிய கன்னி யென்றுறு தெய்வத மொன்றனைக்       கண்டு காதல் வெறியிற் கலந்தனன்.       5 'ஒன்ப தாயபி ராயத்த ளென்விழிக்       கோது காதைச் சகுந்தலை யொத்தனள்' என்ப தார்க்கும் வியப்பினை நல்குமால்       என்செய் கேன்? பழியென் மிசை யுண்டுகொல்? அன்பெ நும்பெரு வெள்ளம் இழுக்குமேல்       அதனை யாவர் பிழைத்திட வல்லரே? முன்பு மாமுனி வோர்தமை வென்றவில்       முன்ன ரேழைக் குழந்தையென் செய்வனே?       6 வயது முற்றிய பின்னுறு காதலே       மாசு டைத்தது தெய்விக மன்றுகாண்; இயலு புன்மை யுடலினுக் கின்பெனும்       எண்ண முஞ்சிறி தேன்றதக் காதலாம்; நயமி குந்தனி மாதை மாமணம்       நண்ணு பாலர் தமக்குரித் தாமன்றோ? கயல்வி ழிச்சிறு மானினைக் காணநான்       காம னம்புகள் என்னுயிர் கண்டவே.       7 கனகன் மைந்தன் குமர குருபரன்       கனியும் ஞானசம் பந்தன் துருவன்மற் றெனையர் பாலர் கடவுளர் மீதுதாம்       எண்ணில் பக்திகொண் டின்னுயிர் வாட்டினோர் மனதி லேபிறந் தோன்மன முண்ணுவோன்       மதன தேவனுக் கென்னுயிர் நல்கினன், முனமு ரைத்தவர் வான்புகழ் பெற்றனர்;       மூட னேன்பெற்ற தோதுவன் பின்னரே.       8 நீரெ டுத்து வருவதற் கவள், மணி       நித்தி லப்புன் நகைசுடர் வீசிடப் போரெ டுத்து வருமதன் முன்செலப்       போகும் வேளை யதற்குத் தினந்தொறும் வேரெ டுத்துச் சுதந்திர நற்பயிர்       வீந்திடச் செய்தல் வேண்டிய மன்னர்தம் சீரெ டுத்த புலையியற் சாரர்கள்       தேச பக்தர் வரவினைக் காத்தல்போல்.       9 காத்தி ருந்தவள் போம்வழி முற்றிலும்       கண்கள் பின்னழ கார்ந்து களித்திட யாத்த தேருரு ளைப்படு மேளைதான்       யாண்டு தேர்செலு மாங்கிழுப் புற்றெனக் கோத்த சிந்தனையோ டேகி யதில்மகிழ்       கொண்டு நாட்கள் பலகழித் திட்டனன்; பூத்த ஜோதி வதனம் திரும்புமேல்       புலன ழிந்தொரு புத்துயி ரெய்துவேன்.       10 புலங்க ளோடு கரணமும் ஆவியும்       போந்து நின்ற விருப்புடன் மானிடன் நலங்க ளேது விரும்புவன் அங்கவை       நண்ணு றப்பெறல் திண்ணம தாமென, இலங்கு நூலுணர் ஞானியர் கூறுவர்;       யானும் மற்றது மெய்யெனத் தேர்ந்துளேன்; விலங்கி யற்கை யிலையெனில் யாமெலாம்       விருன்பு மட்டினில் விண்ணுற லாகுமே.       11 சூழு மாய வுலகினிற் காணுறுந்       தோற்றம் யாவையும் மானத மாகூமால்; ஆழு நெஞ்சகத் தாசையின் றுள்ளதேல்,       அதனு டைப்பொருள் நாளை விளைந்திடும், தாழு முள்ளத்தர்,சோர்வினர்,ஆடுபோல்       தாவித் தாவிப் பலபொருள் நாடுவோர், வீழு மோரிடை யூற்றினுக் கஞ்சுவோர்,       விரும்பும் யாவும் பெறாரிவர் தாமன்றே.       12 விதியை நோவர்,தம் நண்பரைத் தூற்றுவர்.       வெகுளி பொங்கிப் பகைவரை நிந்திப்பர், சதிகள் செய்வர்,பொய்ச் சாத்திரம் பேசுவர்,       சாத கங்கள் புரட்டுவர் பொய்மைசேர் மதியி னிற்புலை நாத்திகங் கூறுவர்,       மாய்ந்தி டாத நிறைந்த விருப்பமே கதிகள் யாவும் தருமென லோர்ந்திடார்.       கண்ணி லாதவர் போலத் திகைப்பர்காண். 13 கன்னி மீதுறு காதலின் ஏழையேன்       கவலை யுற்றனன் கோடியென் சொல்லுகேன்? பன்னி யாயிரங் கூறினும்,பக்தியின்       பான்மை நன்கு பகர்ந்திட லாகுமோ? முன்னி வான்கொம்பிற் றேனுக் குழன்றதோர்       முடவன் கால்கள் முழுமைகொண் டாலென என்னி யன்றுமற் ஦ற்ங்ஙனம் வாய்ந்ததோ?       என்னி டத்தவள் இங்கிதம் பூண்டதே!       14 காதலென்பதும் ஓர்வயின் நிற்குமேல்,       கடலின் வந்த கடுவினை யொக்குமால்; ஏத மின்றி யிருபுடைத் தாமெனில்,       இன்னமிர்தும் இணைசொல லாகுமோ? ஓதொ ணாத பெருந்தவம் கூடினோர்       உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர், மாத ரார்மிசை தாமுறுங் காதலை       மற்ற வர்தரப் பெற்றிடும் மாந்தரே!       15 மொய்க்கும் மேகத்தின் வாடிய மாமதி,       மூடு வெம்பனிக் கீழுறு மென்மலர், கைக்கும் வேம்பு கலந்திடு செய்யபால்,       காட்சி யற்ற கவினுறு நீள்விழி, பொய்க் கிளைத்து வருந்திய மெய்யரோ       பொன்ன னாரருள் பூண்டில ராமெனில், கைக்கி ளைப்பெயர் கொண்ட பெருந்துயர்க்       காத லஃது கருதவுந் தீயதால்.       16 தேவர் மன்னன் மிடிமையைப் பாடல்போல்       தீய கைக்கிளை யானெவன் பாடுதல்? ஆவல் கொண்ட அரும்பெறற் கன்னிதான்       அன்பெ னக்கங் களித்திட லாயினள்; பாவம் தீமை,பழியெதுந் தேர்ந்திடோ ம்!       பண்டைத் தேவ யுகத்து மனிதர்போல், காவல் கட்டு விதிவழக் கென்றிடுங்       கயவர் செய்திக ளேதும்,அறிந்திலோம்.       17 கான கத்தில் இரண்டு பறவைகள்       காத லுற்றது போலவும் ஆங்ஙனே வான கத்தில் இயக்க ரியக்கியர்       மையல் கொண்டு மயங்குதல் போலவும்; ஊன கத்த துவட்டுறும் அன்புதான்       ஒன்று மின்றி உயிர்களில் ஒன்றியே தேன் கத்த மணிமொழி யாளொடு       தெய்வ நாட்கள் சிலகழித் தேனரோ!       18 ஆதி ரைத்திரு நாளொன்றிற் சங்கரன்       ஆலயத்தொரு மண்டபந் தன்னில்யாள் சோதி மானொடு தன்னந் தனியனாய்ச்       சொற்க ளாடி யிருப்ப, ம்ற்றாங்கவள் பாதி பேசி மறைந்துபின் தோன்றித்தன்       பங்க யக்கையில் மைகொணர்ந்தே,'ஒரு சேதி! நெற்றியில் பொட்டுவைப் பேன்' என்றாள்       திலத மிட்டனள்;செய்கை யழிந்தனன்.       19 என்னை யீன்றெனக் கைந்து பிராயத்தில்       ஏங்க விட்டுவிண் ணெய்திய தாய்தனை முன்னை யீன்றவன் செந்தமிழ்ச் செய்யுளால்       மூன்று போழ்துஞ் சிவனடி யேத்துவோன், அன்ன வந்தவப் பூசனை தீர்ந்தபின்       அருச்ச னைப்படு தேமலர் கொண்டுயான் பொன்னை யென்னுயிர் தன்னை யணுகலும்,       பூவை புன்னகை நன்மலர் பூப்பள் காண்.       20 ஆங்கிலப் பயிற்சி நெல்லையூர் சென்றவ் வூணர் கலைத்திறன்       நேரு மாறெனை எந்தை பணித்தனன்; புல்லை யுண்கென வாளரிச் சேயினைப்       போக்கல் போலவும்,ஊன்விலை வாணிகம் நல்ல தென்றொரு பார்ப்பனப் பிள்ளையை       நாடு விப்பது போலவும்,எந்தைதான் அல்லல் மிக்கதோர் மண்படு கல்வியை       ஆரி யர்க்கிங் கருவருப் பாவதை,       21 நரியு யிர்ச்சிறு சேவகர்,தாதர்கள்,       நாயெ னத்திரி யொற்றர்,உணவினைப் பெரிதெ னக்கொடு தம்முயிர் விற்றிடும்       பேடியர்,பிறர்க் கிச்சகம் பேசுவோர், கருது மிவ்வகை மாக்கள் பயின்றிடுங்       கலைப யில்கென என்னை விடுத்தனன், அருமை மிக்க மயிலைப் பிரிந்துமிவ்       அற்பர் கல்வியின் நெஞ்சுபொ ருந்துமோ?      22 கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்       கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்       ஆழ்ந்தி ருக்கும் கவியுளம் காண்கிலார்; வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;       வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்; துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்       சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார்.       23 கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,       காளி தாசன் கவிதை புனைந்ததும், உம்பர் வானத்துக் கோளையும் மீனையும்       ஓர்ந்த ளந்ததொர் பாஸ்கரன் மாட்சியும், நம்ப ருந்திற லோடொரு பாணினி       ஞால மீதில் இலக்கணங் கண்டதும் இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்       இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும்,       24 சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,       தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும், பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்       பார ளித்துத் தர்மம் வளர்த்ததும், பேர ருட்சுடர் வாள்கொண் டசோகனார்       பிழை படாது புவித்தலங் காத்ததும், வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்       வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும்,       25 அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்       தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்; முன்ன நாடு திகழ்ந்த பெருமையும்       மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும் பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்       பேடிக் கல்வி பயின்ருழல் பித்தர்கள், என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்       இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே!       26 சூதி லாத யுளத்தினன் எந்தைதான்       சூழ்ந்தெ னக்கு நலஞ்செயல் நாடியே ஏதி லாதருங் கல்விப் படுகுழி       ஏறி யுய்தற் கரிய கொடும்பிலம் தீதி யன்ற மயக்கமும் ஐயமும்       செய்கை யாவினு மேயசி ரத்தையும் வாதும் பொய்மையும் என்றவி லங்கினம்       வாழும் வெங்குகைக் கென்னை வழங்கினன்.       27 ஐய ரென்றும் துரைனென்றும் மற்றெனக்       காங்கி லக்கலை யென்றொன் றுணர்த்திய பொய்ய ருக்கிது கூறுவன்,கேட்பீரேல்;       பொழுதெ லாமுங்கள் பாடத்தில் போக்கிநான் மெய்ய யர்ந்து விழிகுழி வெய்திட       வீறி ழந்தென துள்ளநொய் தாகிட ஐயம் விஞ்சிச் சுதந்திர நீங்கியென்       அறிவு வாரித் துரும்பென் றலைந்ததால்.       28 செலவு தந்தைக்கோ ராயிரஞ் சென்றது;       தீதெ னக்குப்பல் லாயிரஞ் சேர்ந்தன; நலமொ ரெட்டுணை யுங்கண்டி லேனிதை       நாற்ப தாயிரங் கோயிலிற் சொல்லுவேன்! சிலமுன் செய்நல் வினைப்பய னாலும்நந்       தேவி பாரதத் தன்னை யருளினும் அலைவு றுத்துநும் பேரிருள் வீழ்ந்துநான்       அழிந்தி டாதொரு வாறுபி ழைத்ததே!       29 மணம் நினைக்க நெஞ்ச முருகும்;பிறர்க்கிதை       நிகழ்த்த நாநனி கூசு மதன்றியே எனைத்திங் கெண்ணி வருந்தியும் இவ்விடர்       யாங்ஙன் மாற்றுவ தென்பதும் ஓர்ந்திலம்; அனைத்தொர் செய்திமற் றேதெனிற் கூறுவேன்;       அம்ம!மாக்கள் மணமெனுஞ் செய்தியே. வினைத்தொ டர்களில் மானுட வாழ்க்கையுள்       மேவு மிம்மணம் போற்பிறி தின்றரோ!       30 வீடு றாவணம் யாப்பதை வீடென்பார்!       மிகவி ழிந்த பொருளைப் பொருளென்பார்; நாடுங் காலொர் மணமற்ற செய்கையை       நல்ல தோர்மண மாமென நாட்டுவார். கூடு மாயிற் பிரம சரியங் கொள்;       கூடு கின்றில தென்னிற் பிழைகள் செய்து ஈட ழிந்து நரகவழிச் செல்வாய்;       யாது செய்யினும் இம்மணம் செய்யல்காண்.       31 வசிட்ட ருக்கும் இராமருக்கும் பின்னொரு       வள்ளு வர்க்கும்முன் வாய்த்திட்ட மாதர்போல் பசித்தொ ராயிரம் ஆண்டு தவஞ்செய்து       பார்க்கி நும்பெறல் சால வரிதுகாண். புசிப்ப தும்பரின் நல்லமு தென்றெணிப்       புலையர் விற்றிடும் கள்ளுண லாகுமோ? அசுத்தர் சொல்வது கேட்களிர்,காளையீர்;       ஆண்மை வேண்டின் மணஞ்செய்தல் ஓம்புமின்.       32 வேறு தேயத் தெவரெது செய்யினும்       வீழ்ச்சி பெற்றவிப் பாரத நாட்டினில் ஊற ழிந்து பிணமென வாழுமிவ்       வூனம் நீக்க விரும்பும் இளையர்தாம் கூறு மெந்தத் துயர்கள் விளையினும்       கோடி மக்கள் பழிவந்து சூழினும் நீறு பட்டவிப் பாழ்ச்செயல் மட்டினும்       நெஞ்சத் தாலும் நினைப்ப தொழிகவே.       33 பால ருந்து மதலையர் தம்மையே       பாத கக்கொடும் பாதகப் பாதகர் மூலத் தோடு குலங்கெடல் நாடிய       மூட மூடநிர் மூடப் புலையர்தாம், கோல மாக மணத்திடைக் கூட்டுமிக்       கொலையெ நுஞ்செய லொன்ரினை யுள்ளவும் சால வின்னுமோ ராயிரம் ஆண்டிவர்       தாத ராகி அழிகெனத் தோன்றுமே!       34 ஆங்கொர் கன்னியைப் பத்துப் பிராயத்தில்       ஆள் நெஞ்சிடை யூன்றி வணங்கினன்; ஈங்கொர் கன்னியைப் பன்னிரண் டாண்டனுள்       எந்தை வந்து மணம்புரி வித்தனன். தீங்கு ம்ற்றிதி லுண்டென் றறிந்தவன்       செயலெ திர்க்குந் திறனில நாயினேன். ஓங்கு காதற் றழலெவ் வளவென்றன்       உளமெ ரித்துள தென்பதுங் கண்டிலேன்.       35 மற்றொர் பெண்ணை மணஞ்செய்த போழ்துமுன்       மாத ராளிடைக் கொண்டதொர் காதல்தான் நிற்றல் வேண்டு மெனவுளத் தெண்ணிலேன்;       நினைவை யேயிம் மணத்திற் செலுத்திலேன்; முற்றொ டர்பினில் உண்மை யிருந்ததால்       மூண்ட பின்னதொர் கேளியென் றெண்ணினேன். கற்றுங் கேட்டும் அறிவு முதிருமுன்       காத லொன்று கடமையொன் றாயின!       36 மதனன் செய்யும் மயக்க மொருவயின்;       மாக்கள் செய்யும் பிணிப்புமற் றோர்வயின்; இதனிற் பன்னிரண் டாட்டை யிளைஞனுக்       கென்னை வேண்டும் இடர்க்குறு சூழ்ச்சிதான்? எதனி லேனுங் கடமை விளையுமேல்       எத்து யர்கள் உழன்றுமற் றென்செய்தும் அதனி லுண்மையோ டார்ந்திடல் சாலுமென்று       அறம்வி திப்பதும் அப்பொழு தோர்ந்திலேன்.      37 சாத்தி ரங்கள் கிரியைகள் பூசைகள்       சகுன மந்திரந் தாலி மணியெலாம் யாத்தெ னைக்கொலை செய்தன ரல்லது       யாது தர்ம முறையெனல் காட்டிலர். தீத்தி றன்கொள் அறிவற்ற பொய்ச்செயல்       செய்து மற்றவை ஞான நெறியென்பர்; மூத்த வர்வெறும் வேடத்தின் நிற்குங்கால்       மூடப் பிள்ளை அறமெவண் ஓர்வதே?       38 தந்தை வறுமை எய்திடல் ஈங்கி தற்கிடை யெந்தை பெருந்துயர்       எய்தி நின்றனன்,தீய வறுமையான்; ஓங்கி நின்ற பெருஞ்செல்வம் யாவையும்       ஊணர் செய்த சதியில் இழந்தனன்; பாங்கி நின்று புகழ்ச்சிகள் பேசிய       பண்டை நண்பர்கள் கைநெகிழ்த் தேகினர்; வாங்கி யுய்ந்த கிளைஞரும் தாதரும்       வாழ்வு தேய்ந்தபின் யாது மதிப்பரோ?       39 பர்ப்ப நக்குலங் கெட்டழி வெய்திய       பாழ டைந்த கலியுக மாதலால், வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே       மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்; ஆர்ப்பு மிஞ்சப் பலபல வாணிகம்       ஆற்றி மிக்க பொருள்செய்து வாழ்ந்தனன்; நீர்ப்ப டுஞ்சிறு புற்புத மாமது       நீங்க வேயுளங் குன்றித் தளர்ந்தனன்;       40 தீய மாய வுலகிடை யொன்றினில்       சிந்தை செய்து விடாயுறுங் காலதை வாய டங்க மென்மேலும் பருகினும்       மாயத் தாகம் தவிர்வது கண்டிலம்; நேய முற்றது வந்து மிகமிக       நித்த லும்மதற் காசை வளருமால். காய முள்ள வரையுங் கிடைப்பினும்       கயவர் மாய்வது காய்ந்த உளங்கொண்டே.       41 'ஆசைக் கோரள வில்லை விடயத்துள்       ஆழ்ந்த பின்னங் கமைதியுண் டாமென மோசம் போகலிர்'என்றிடித் தோதிய       மோனி தாளிணை முப்பொழு தேத்துவாம்; தேசத் தார்புகழ் நுண்ணறி வோடுதான்       திண்மை விஞ்சிய நெஞ்சின னாயினும் நாசக் காசினில் ஆசையை நாட்டினன்       நல்லன் எந்தை துயர்க்கடல் வீழ்ந்தனன். 42 பொருட் பெருமை ''பொருளி லார்க்கிலை யிவ்வுல''கென்றநம்       புலவர் தம்மொழி பொய்ம்மொழி யன்றுகாண், பொருளி லார்க்கின மில்லை துணையிலை,       பொழுதெ லாமிடர் வெள்ளம்வந் தெற்றுமால். பொருளி லார்பொருள் செய்தல் முதற்கடன்;       போற்றிக் காசினுக் கேங்கி யுவிர்விடும் மருளர் தம்மிசை யேபழி கூறுவன்;       மாம்கட் கிங்கொர் ஊன முரைத்திலன்.       43 அறமொன் றேதரும் மெய்யின்பம் என்றநல்       லறிஞர் தம்மை அனுதினம் போற்றுவேன். பிறவி ரும்பி உலகினில் யான்பட்ட       பீழை எத்தனை கோடி!நினைக்கவும் திறன ழிந்தென் மனமுடை வெய்துமால்.       தேசத் துள்ள இளைஞர் அறிமினோ! அறமொன் றேதரும் மெய்யின்பம்;ஆதலால்       அறனை யேதுணை யென்றுகொண் டுய்திரால்.       44 வெய்ய கர்மப் பயஙளின் நொந்துதான்       மெய்யு ணர்ந்திட லாகு மென்றாக்கிய தெய்வ மேயிது நீதி யெனினும்நின்       திருவ ருட்குப் பொருந்திய தாகுமோ? ஐய கோ!சிறி துண்மை விளங்குமுன்,       ஆவி நையத் துயருறல் வேண்டுமே! பையப் பையவோர் ஆமைகுன் றேறல்போல்       பாருளோர் உண்மை கண்டிவண் உய்வரால்.       45 தந்தை போயினன் பாழ்மிடி சூழ்ந்தது;       தரணிமீதினில் அஞ்சலென் பாரிலர்; சிந்தை யில்தெளி வில்லை;உடலினில்       திறனு மில்லை;உரனுளத் தில்லையால்; மந்தர் பாற்பொருள் போக்கிப் பயின்றதாம்       மடமைக் கல்வியால் மண்ணும் பயனிலை, எந்த மார்க்கமும் தோற்றில தென்செய்கேன்?       ஏன்பி றந்தனன் இத்துயர் நாட்டிலே?       46 முடிவுரை உலகெ லாமொர் பெருங்கன வஃதுளே       உண்டு றங்கி இடர்செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்       கனவி னுங்கன வாகும்;இதற்குநான் பலநி நைந்து வருந்தியிங் கென்பயன்?       பண்டு போனதை எண்ணி யென்னாவது? சிலதி னங்கள் இருந்து மறைவதில்       சிந்தை செய்தெவன் செத்திடு வானடா!       47 ஞான் முந்துற வும்பெற் றிலாதவர்       நானி லத்துத் துயரன்றிக் காண்கிலர்; போன தற்கு வருந்திலன் மெய்த்தவப்       புலமை யோனது வானத் தொளிருமோர் மீனை நாடி வளைத்திடத் தூண்டிலை       வீச லொக்கு மெனலை மறக்கிலேன்; ஆன தாவ தனைத்தையுஞ் செய்ததோர்       அன்னை யே!இனி யேனும் அருள்வையால்,       48 வேறு அறிவிலே தெளிவு,நெஞ்சிலே உறுதி,       அகத்திலே அன்பினோர் வெள்ளம், பொறிகளின்மீது தனியர சாணை,       பொழுதெலாம் நினதுபே ரருளின் நெறியிலே நாட்டம்,கரும யோகத்தில்       நிலைத்திடல் என்றிவை யருளாய் குறிகுண மேதும் இல்லதாய் அனைத்தாய்க்       குலவிடு தனிப்பரம் பொருளே!       49 ----------- 2. பாரதி - அறுபத்தாறு கடவுள் வாழ்த்து-பராசக்தி துதி எனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தா ரப்பா!       யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்; மனத்தினிலே நின்றிதனை எழுது கின்றாள்       மனோன் மணியென் மாசக்தி வையத்தேவி; தினத்தினிலே புதிதாகப் பூத்து நிற்கும்       செய்யமணித் தாமரை நேர் முகத்தாள் காதல் வனத்தினிலே தன்னையொரு மலரைப் போலும்       வண்டினைப்போல் எனையுமுரு மாற்றி விட்டாள்.      1 தீராத காலமெலாம் தானும் நிற்பாள்       தெவிட்டாத இன்னமுதின் செவ்வி தழ்ச்சி, நீராகக் கனலாக வானாக் காற்றா       நிலமாக வடிவெடுத்தாள்;நிலத்தின் மீது போராக நோயாக மரண மாகப்       போந்திதனை யழித்திடுவாள்;புணர்ச்சி கொண்டால் நேராக மோனமகா னந்த வாழ்வை       நிலத்தின்மிசை அளித் தமரத் தன்மை ஈவாள்.      2 மாகாளி பராசக்தி உமையாள் அன்னை       வைரவிகங் காளிமனோன் மணிமா மாயி. பாகார்ந்த தேமொழியாள்,படருஞ் செந்தீ       பாய்ந்திடுமோர் விழியுடையாள்,பரம சக்தி ஆகார மளித்திடுவாள்,அறிவு தந்தாள்       ஆதிபரா சக்தியென தமிர்தப் பொய்கை. சோகா டவிக்குளெனைப் புகவொட்டாமல்       துய்யசெழுந் தேன்போலே கவிதை சொல்வாள்.       3 மரணத்தை வெல்லும் வழி பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு       புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்: முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,       முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்; அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை       அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ ? முன்னோர்கள் உரைத்தபல சித்த ரெல்லாம்       முடிந்திட்டார்,மடிந்திட்டார்,மண்ணாய் விட்டார்.       4 பொந்திலே யுள்ளாராம்,வனத்தில் எங்கோ       புதர்களிலே யிருப்பாராம்,பொதிகை மீதே சந்திலே சவுத்தியிலே நிழலைப் போலே       சற்றெ யங்கங்கேதென் படுகின் றாராம், நொந்தபுண்ணைக் குத்துவதில் பயனென் றில்லை;       நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்! அந்தண்னாம் சங்கரா சார்யுன் மாண்டான்;       அதற்கடுத்த இராமா நுஜனும் போனான்!       5 சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்,       தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான், பலர் புகழும் இராமனுமே யாற்றில் வீழ்ந்தான்;       பார்மீது நான்சாகா திருப்பேன்,காண்பீர்! மலிவுகண்டீர் இவ்வுண்மை பொய்கூ றேன்யான்,       மடிந்தாலும் பொய்கூறேன் மானுடர்க்கே, நலிவுமில்லை,சாவுமில்லை!கேளீர்,கேளீர்!       நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை .       6 அசுரர்களின் பெயர் அச்சத்தை வேட்கைதனை அழித்து விட்டால்       அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்; மிச்சத்தைப் பின் சொல்வேன்,சினத்தை முன்னே       வென்றிடுவீர்,மேதினியில் மரணமில்லை; துக்சமெனப் பிறர்பொருளைக் கருத லாலே,       சூழ்ந்ததெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும் நிச்சயமாம் ஞானத்தை மறத்த லாலே.       நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில்.       7 சினத்தின் கேடு சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம் மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம். தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார், சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச் செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்.       8 மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.       வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா; சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;       சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்; பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.       பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்; வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்       மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே.       9 தேம்பாமை ''வடகோடிங் குயர்ந்தென்னே,சாய்ந்தா லென்னே,       வான் பிறைக்குத் தென்கோடு''பார்மீ திங்கே விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,       வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே? திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;       தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி       எதற்கு மினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்!       10 பொறுமையின் பெருமை திருத்தணிகை மலைமேலே குமார தேவன்       திருக்கொலுவீற் றிருக்குமதன் பொருளைக் கேளீர்! திருத்தணிகை யென் பதிங்கு பொறுமை யின்பேர்.       செந்தமிழ்கண் டீர்,பகுதி'தணி'யெ னுஞ்சொல், பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,       'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும் அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.       அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்!       11 பொறுமையினை,அறக்கடவுள் புதல்வ னென்னும்       யுதிட்டிரனும் நெடுநாளிப் புவிமேல் காத்தான். இறுதியிலே பொறுமைநெறி தவறி விட்டான்       ஆதலாற் போர்புரிந்தான் இளையாரோடே; பொறுமை யின்றிப் போர்செய்து பரத நாட்டைப்       போர்க்களத்தே அழித்துவிட்டுப் புவியின் மீது வறுமையையுங் கலியினையும் நிறுத்தி விட்டு       மலைமீது சென்றான்பின் வானஞ் சென்றான்       12 ஆனாலும் புவியின்மிசை உயிர்க ளெல்லாம்       அநியாய் மரணமெய்தல் கொடுமை யன்றொ? தேனான உயிரைவிட்டுச் சாக லாமோ?       செத்திடற்குக் காரணந்தான் யாதென் பீரேல்; கோனாகிச் சாத்திரத்தை யாளு மாண்பார்       ஜகதீச சந்த்ரவஸு கூறு கின்றான்; (ஞானானு பவத்திலிது முடிவாங் கண்டீர்!)       ''நாடியிலே அதிர்ச்சியினால் மரணம்''என்றான்.       13 கோபத்தால் நாடியிலே அதிர்ச்சி யுண்டாம்!       கொடுங்கோபம் பேரதிர்ச்சி சிறிய கோபம் ஆபத்தாம்,அதிர்ச்சியிலே சிறிய தாகும்;       அச்சத்தால் நாடியெலாம் அவிந்து போகும்; தாபத்தால் நாடியெலாம் சிதைந்து போகும்;       கவலையினால் நாடியெலாம் தழலாய் வேகும்; கோபத்தை வென்றிடலே பிறவற் றைத்தான்       கொல்வதர்கு வழியெனநான் குறித்திட்டேனே.       14 கடவுள் எங்கே இருக்கிறார்? ''சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?       சொல்'' லென்று ஹைரணியந்தான் உறுமிக் கேட்க, நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்       நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான். வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.       மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை; அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;       அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ?       15 சுயசரிதை கேளப்பா,சீடனே!கழுதை யொன்றைக்       ''கீழான்''பன்றியினைத் தேளைக் கண்டு தாளைப்பார்த் திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்       சங்கரசங் கரவென்று பணிதல் வேண்டும்; கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;       கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம். மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;       விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.       16 சுத்த அறி வேசிவமென் றுரைத்தார் மேலோர்;       சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்; வித்தகனாம் குருசிவமென் றுரைத்தார் மேலோர்,       வித்தை யிலாப் புலையனு மஃதென்னும் வேதம்; பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று       பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும் நித்தநும தருகினிலே குழந்தை யென்றும்       நிற்பனவுந் தெய்வமன்றொ நிகழ்த்து வீரே?       17 உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன் ரில்லை;       ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்; பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்       பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்; வெயிலளிக்கும் இரவி,மதி,விண்மீன்,மேகம்       மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;       எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்!       18 குருக்கள் துதி(குள்ளச்சாமி புகழ்) ஞான்குரு தேசிகனைப் போற்று கின்றேன்;       நாடனைத்துந் தானாவான் நலிவி லாதான்; மோனகுரு திருவருளால் பிறப்பு மாறி       முற்றிலும்நாம் அமரநிலை சூழ்ந்து விட்டோ ம்; தேன்னைய பராசக்தி திறத்தைக் காட்டிச்       சித்தினியல் காட்டிமனத் தெளிவு தந்தான். வானகத்தை இவ்வுலகிலிருந்து தீண்டும்       வகையுணர்த்திக் காத்த பிரான் பதங்கள் போற்றி!       19 எப்போதும் குருசரணம் நினைவாய்,நெஞ்சே!       எம்பெருமான் சிதம்பரதே சிகந்தாள் எண்ணாய்! முப்பொழுங் கடந்தபெரு வெளியைக் கண்டான்,       முத்தியெனும் வானகத்தே பரிதி யாவான், தப்பாத சாந்தநிலை அளித்த கோமான்,       தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன், குப்பாய ஞானத்தால் மரண மென்ற       குளிர்நீக்கி யெனைக்காத்தான்,குமார தேவன்!       20 தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி       தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;       பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்; நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;       ஞானகங்கை தனைமுடிமீ தேந்தி நின்றான்; ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,       ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே.       21 வாயினால் சொல்லிடவும் அடங்கா தப்பா;       வரிசையுடன் எழுதிவைக்க வகையும் எல்லை; ஞாயிற்றைச் சங்கிலியால் அளக்க லாமோ?       ஞானகுரு புகழினைநாம் வகுக்க லாமோ? ஆயிரனூல் எழுதிடினும் முடிவ்ய் றாதாம்;       ஐயனவன் பெருமையைநான் சுருக்கிச் சொல்வேன்; காயகற்பஞ் செய்துவிட்டான்;அவன்வாழ் நாளைக்       மணக்கிட்டு வயதுரைப்பார் யாரும் இல்லை.       22 குரு தரிசனம் அன்றொருநாட் புதுவைநகர் தனிலே கீர்த்தி       அடைக் கலஞ்சேர் ஈசுவரன் தர்மராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்,       இராஜாரா மையனென்ற நாகைப் பார்ப்பான், முன்றனது பிதா தமிழில் உபநிடதத்தை       மொழிபெயர்த்து வைத்ததனைத் திருத்தச் சொல்லி என்றனைவேண் டிக்கொள்ள யான்சென் றாங்கண்       இருக்கையிலே அங்குவந்தான் குள்ளச் சாமி.       23 அப்போது நான்குள்ளச் சாமி கையை       அன்புடனே பற்றியது பேச லுர்றேன்: ''அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்       அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்; செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி       சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,       உத்தமனே!எனக்குநினை உணர்த்து வாயே.       24 யாவன் நீ? நினைக்குள்ள திறமை என்னே?       யாதுணர்வாய் கந்தைசுற்றித் திரிவ தென்னே? தேவனைப்போல் விழிப்ப தென்னே? சிறியாரோடும்       தெருவிலே நாய்களொடும் விளையாட் டென்னே? பாவனையிற் பித்தரைப்போல் அலைவ தென்னே?       பரமசிவன் போலுருவம் படைத்த தென்னே? ஆவலற்று நின்றதென்னே? அறிந்த தெல்லாம்,       ஆரியனே,அனக்குணர்த்த வேண்டும்''என்றேன்.       25 பற்றியகை திருகியந்தக் குள்ளச் சாமி       பரிந்தோடப் பார்த் தான்;யான் விடவே யில்லை, சுற்றுமுற்றும் பார்த்துப்பின் முறுவல் பூத்தான்;       தூயதிருக் கமலபதத் துணையைப் பார்த்தேன்; குற்றமற்ற தேசிகனும் திமிறிக் கொண்டு       குதித்தோடி அவ்வீட்டுக் கொல்லை சேர்ந்தான்; மற்றவன்பின் யானோடி விரைந்து சென்று       வாவனைக் கொல்லையிலே மறித்துக் கொண்டேன்.       26 உபதேசம் பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த       பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரம யோகி ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி       ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி, [என்றேன்       ''அறிதிகொலோ!''எனக்கேட்டான்''அறிந்தேன்'' மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்;யானும்       வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.       27 தேசிகன்கை காட்டியெனக் குரைத்த செய்தி       செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்; ''வாசியைநீ கும்பகத்தால் வலியக் கட்டி,       மண்போலே சுவர்போலே,வாழ்தல் வேண்டும்; தேசுடைய பரிதியுருக் கிணற்றி நுள்஧ள்       தெரிவதுபோல் உனக்குள்஧ள் சிவனைக் காண்பாய்; பேசுவதில் பயனில்லை.அனுப வத்தால்       பேரின்பம் எய்துவதே ஞானம்''என்றான்.       28 கையிலொரு நூலிருந்தால் விரிக்கச் சொல்வேன்,       கருத்தையதில் காட்டுவேன்;வானைக் காட்டி மையிலகு விழியாளின் காத லொன்றே       வையகத்தில் வாழுநெறி யென்றுகாட்டி, ஐயனெனக் குணார்த்தியன பலவாம் ஞானம்,       அகற்கவன்காட் டியகுறிப்போ அநந்த மாகும். பொய்யறியா ஞானகுரு சிதம்ப ரேசன்       பூமிவிநா யகன்குள்ளச் சாமி யங்கே.       29 மற்றொருநாள் பழங்கந்தை யழுக்கு மூட்டை       வளமுறவே கட்டியவன் முதுகின் மீது கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்       கருணைமுனி சுமந்துகொண்டென் னெதிரே வந்தான்; சற்றுநகை புரிந்தவன்பால் கேட்க லானேன்;       ''தம்பிரா னே; இந்தத் தகைமை என்னே? முற்றுமிது பித்தருடைச் செய்கை யன்றொ?       மூட்டைசுமந் திடுவதென்னே?மொழிவாய்''அன்றென்.       30 புன்னகைபூத் தாரினும் புகலுகின்றான்;       ''புறததேநான் சுமக்கின்றேன்;அகத்தி னுள்ளே; இன்னதொரு பழங்குப்பை சுமக்கி றாய்நீ"       என்றுரைத்து விரைந்தவனும் ஏகி விட்டான். மன்னவன்சொற் பொருளினையான் கண்டு கொண்டேன்;       மனத்தினுள்ளே பழம்பொய்கள் வளர்ப்ப தாலே இன்னலுற்று மாந்தரெல்லாம் மடிவார் வீணே,       இருதயத்தில் விடுதலையை இசைத்தால் வேண்டும்.       31 சென்றதினி மீளாது;மூடரே,நீர்       எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து       குமையாதீர்;சென்றதனைக் குறித்தல் வேண்டா; இன்று புடிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்       எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளாஇ யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;       அஃதின்றிச் சென்றதையே மீட்டும் மீட்டும்.       32 மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா,அந்தோ!       மேதையில்லா மானுடரே!மேலும் மேலும் மேன்மேலும் புதியகாற் றெம்முள்வந்து       மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர். ஆன்மாவென் றெகருமத் தொடர்பை யெண்ணி       அறிவுமயக் கங்கொண்டு கெடுகின்றீரே!       மான்மானும் விழியுடையாள் சக்தி தேவி வசப்பட்டுத் தனைமறந்து வாழ்தல் வேண்டும்.       33 சென்றவினைப் பயன்களெனைத் தீண்ட மாட்டா;       'ஸ்ரீதரன்யான் சிவகுமா ரன்யா னன்றோ? நன்றிந்தக் கணம்புதிதாய்ப் பிறழ்து விட்டேன்;       நான் புதியவன்,நான் கடவுள்,நலிவி லாதோன்' என்றிந்த வுலகின்மிசை வானோர் போலே       இயன்றிடுவார் சித்தரென்பார்;பரம தர்மக் குன்றின்மிசை யொருபாய்ச்ச லாகப் பாய்ந்து       குறிப்பற்றார் கேடற்றார் குலைத லற்றார்.       34 குறியனந்த முடையோராய்க் கோடி செய்தும்       குவலயத்தில் வினைக்கடிமைப் படாதா ராகி வெறியுடையோன் உமயாளை இடத்தி லேற்றான்       வேதகுரு பரமசிவன் வித்தை பெற்றுச் செறியுடைய பழவினையாம் இருளைச் செற்றுத்       தீயினைப்போல் மண்மீது திரிவார் மேலோர், அறிவுடைய சீடா,நீ குறிப்பை நீக்கி       அநந்தமாம் தொழில் செய்தால் அமர னாவாய்.       35 கேளப்பா!மேற்சொன்ன உண்மை யெல்லாம்       கேடற்ற மதியுடையான் குள்ளச் சாமி நாளும்பல் காட்டாலும் குறிப்பி னாலும்       நலமுடைய மொழியாலும் விளக்கித் தந்தான்; தோளைப் பார்த் துக்களித்தல் போலே யன்னான்       துணையடிகள் பார்த்துமனம் களிப்பேன் யானே; வாளைப்பார்த் தின்பமுறு மன்னர் போற்றும்       மலர்த்தாளான் மாங்கொட்டைச் சாமி வாழ்க!       36 கோவிந்த சுவாமி புகழ் மாங்கொட்டைச் சாமி புகழ் சிறிது சொன்னோம்;       வண்மை திகழ் கோவிந்த ஞானி,பார்மேல் யாங்கற்ற கல்வியெலாம் பலிக்கச் செய்தான்;       எம்பெருமான் பெருமையையிங் கிசைக்கக் கேளீர்! தீங்கற்ற குணமுடையான் புதுவை யூரார்       செய்தபெருந் தவத்தாலே உதித்த தேவன் பாங்குற்ற மாங்கொட்டைச் சாமி போலே       பயிலுமதி வர்ணாசிர மத்தே நிற்போன்.       37 அன்பினால் முத்தியென்றான் புத்தன் அந்நாள்,       அதனையிந்நாட் கோவிந்த சாமி செய்தான்; துன்பமுறும் உயிர்க்கெல்லாம் தாயைப் போலே       சுரக்குமரு ளுடையபிரான் துணிந்த யோகி; அன்பினுக்குக் கடலையுந்தான் விழுங்க வல்லான்;       அன்பினையே தெய்வமென்பான் அன்பே யாவான்; மன்பதைகள் யாவுமிங்கே தெய்வம் என்ற       மதியுடையான்,கவலையெனும் மயக்கம் தீர்ந்தான்;       38 பொன்னடியால் என்மனையைப் புனித மாக்கப்       போந்தானிம் முனியொருநாள்;இறந்த எந்தை தன்னுருவங் காட்டினான்;பின்னர் என்னைத்       தரணிமிசைப் பெற்றவளின் வடிவ முற்றான்; அன்னவன்மா யோகியென்றும் பரம ஞானத்       தனுபூதி யுடையனென்றும் அறிந்து கொண்டேன்; மன்னவனைக் குருவெனநான் சரண டைந்தேன்;       மரணபயம் நீங்கினேன்;வலிமை பெற்றேன்.       39 யாழ்ப்பாணத்து சுவாமியின் புகழ் கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;       குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான், தேவிபதம் மறவாத தீர ஞானி,       சிதம்பரத்து நடராஜ மூர்த்தி யாவான், பாவியரைக் கரையேற்றும் ஞானத் தோணி,       பரமபத வாயிலெனும் பார்வை யாளன்; காவிவளர் தடங்களிலே மீஙள் பாயும்       கழனிகள் சூழ் புதுவையிலே அவனைக் கண்டேன்.       40 தங்கத்தாற் பதுமைசெய்தும் இரத லிங்கம்       சமைத்துமவற் றினிலீசன் தாளைப் போற்றும் துங்கமுறு பக்தர்பலர் புவிமீ துள்ளார்;       தோழரே!எந்நாளும் எனக்குப் பார்மேல் மக்களஞ்சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்       வானவர்கோன்,யாழ்ப்பாணத் தீசன் தன்னைச் சங்கரெனன் றெப்போதும் முன்னே கொண்டு       சரணடைந்தால் அது கண்டீர் சர்வ சித்தி.       41 குவளைக் கண்ணன் புகழ் யாழ்ப்பாணத் தையனையென் நிடங்கொ ணர்ந்தான் இணையடியை நந்திபிரான் முதுகில் வைத்துக் காழ்ப்பான கயிலைமிசை வாழ்வான்,பார்மேல் கனத்தபுகழ்க் குவளையூர்க் கண்ணன் என்பான் பார்ப்பாரக் குலத்தினிலே பிறந்தான் கண்ணன், பறையரையும் மறவரையும் நிகராக் கொண்டான். தீர்ப்பான சுருதிவநி தன்னிற் சேர்ந்தான், சிவனடியார் இவன்மீது கருணை கொண்டார்.       42 மகத்தான் முனிவரெலாம் கண்ணன் தோழர்;       வானவரெல் லாங்கண்ணன் அடியா ராவார்; மிகத்தானு முயர்ந்ததுணி வுடைய நெஞ்சின்       வீரப்பிரான் குவளையூர்க் கண்ணன் என்பான். ஜகத்தினிலோர் உவமையிலா யாழ்ப்பா ணத்துச்       சமிதனை யிவனென்றன் மனைக்கொ ணர்ந்தான் அகத்தினிலே அவன்பாத மலரைப் பூண்டேன்;       ''அன்றேயப் போதேவீ டதுவே வீடு''       43 பாங்கான குருக்களை நாம் போற்றிக் கொண்டோ ம்,       பாரினிலே பயந்தெளிந்தோம்;பாச மற்றோம். நீங்காத சிவசக்தி யருளைப் பெற்றோம்;       நிலத்தின்மிசை அமரநிலை யுற்றோம்,அப்பா! தாங்காமல் வையகத்தை அழிக்கும் வேந்தர்,       தாரணியில் பலருள்ளார்,தருக்கி வீழ்வார்; ஏங்காமல் அஞ்சாமல் இடர்செய் யாமல்       என்றுமருள் ஞானியரே எமக்கு வேந்தர். 44 பெண் விடுதலை பெண்ணுக்கு விடுதலையென் றிங்கோர் நீதி       பிறப்பித்தேன்;அதற்குரிய பெற்றி கேளீர்; மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வ மென்றால்,       மனையாளும் தெய்வமன்றோ?மதிகெட்டீரே! விண்ணுக்குப் பறப்பதுபோல் கதைகள் சொல்வீர்,       விடுதலையென் பீர் கருணை வெள்ள மென்பீர், பெண்ணுக்கு விடுதலைநீ ரில்லை யென்றால்       பின்னிந்த உலகினிலே வாழ்க்கை யில்லை.       45 தாய் மாண்பு பெண்டாட்டி தனையடிமைப் படுத்த வேண்டிப்       பெண்குலத்தை முழுதடிமைப் படுத்த லாமோ? ''கண்டார்க்கு நகைப்'பென்னும் உலக வாழ்க்கை       காதலெனும் கதையினுடைக் குழப்பமன்றோ? உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை       உமையவளென் றறியீரோ?உணர்ச்சி கெட்டீர்! பண்டாய்ச்சி ஔவை ''அன்னையும் பிதாவும்,''       பாரிடை ''முன் னறிதெய்வம்''என்றா: அன்றோ?       46 தாய்க்குமேல் இங்கேயோர் தெய்வ முண்டோ ?       தாய்பெண்ணே யல்லளோ?தமக்கை,தங்கை வாய்க்கும்பெண் மகவெல்லாம் பெண்ணே யன்றோ?       மனைவியொருத் தியையடிமைப் படுத்த வேண்டித் தாய்க்குலத்தை முழுதடிமைத் படுத்த லாமோ?       ''தாயைப்போ லேபிள்ளை''என்று முன்னோர் வாக்குளதன் றோ?பெண்மை அடிமை யுற்றால்       மக்களெலாம் அடிமையுறல் வியப்பொன் றாமோ?       47 வீட்டிலுள்ள பழக்கமே நாட்டி லுண்டாம்       வீட்டினிலே தனக்கடிமை பிறராம் என்பான்; நாட்டினிலே       நாடோ றும் முயன்றிடுவான் நலிந்து சாவான்; காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோம்,அப்பா!       காதலிங்கே உண்டாயிற் கவலை யில்லை; பாட்டினிலே காதலை நான் பாட வேண்டிப்       பரமசிவன் பாதமலர் பணிகின் றேனே.       48 காதலின் புகழ் காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்;       கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;       கானமுண்டாம்;சிற்பமுதற் கலைக ளுண்டாம்; ஆதலினால் காதல்செய்வீர்;உலகத் தீரே!       அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்; காதலினால் சாகாம லிருத்தல் கூடும்;       கவலைபோம்,அதனாலே மரணம் பொய்யாம்.       49 ஆதி சக்தி தனையுடம்பில் அரனும் கோத்தான்;       அயன்வாணி தனைநாவில் அமர்த்திக் கொண்டான்; சோதிமணி முகத்தினளைச் செல்வ மெல்லாம்       சுரந்தருளும் விழியாளைத் திருவை மார்பில் மாதவனும் ஏந்தினான்;வானோர்க் கேனும்       மாதரின்பம் போற்பிறிதோர் இன்பம் உண்டோ ? காதல்செயும் மனைவியே சக்தி கண்டீர்       கடவுள்நிலை அவளாலே எய்த வேண்டும்.       50 கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்       கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்; மங்கைதனைக் காட்டினிலும் உடண்கொண் டேகி       மற்றவட்கா மதிமயங்கிப் பொன்மான் பின்னே சிங்கநிகர் வீரர்பிரான் தெளிவின் மிக்க       ஸ்ரீதரனுஞ் சென்றுபல துன்ப முற்றான்; இங்குபுவி மிசைக்காவி யங்க ளெல்லாம்       இலக்கியமெல் லாங்காதற் புகழ்ச்சி யன்றோ?       51 நாடகத்தில் காவியத்தில் காதலென்றால்       நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்; ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோ ரத்தே       ஊரினிலே காதலென்றால் உறுமு கின்றார்; பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;       பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க மூடரெலாம் பொறாமையினால் விதிகள் செய்து       முறைதவறி இடரெய்திக் கெடுகின் றாரே.       52 காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்       கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ? மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்       மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ? பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்       பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்       படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ?       53 விடுதலைக் காதல் காதலிலே விடுதலையென் றாங்கோர் கொள்கை       கடுகிவளர்ந் திடுமென்பார் யூரோப் பாவில்; மாதரெலாம் தம்முடைய விருப்பின் வண்ணம்       மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னோர்; பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே,       பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால், வேதனையொன் றில்லாதே பிரிந்து சென்று       வேறொருவன் றனைக்கூட வேண்டும் என்பார்.       54 வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர்       விடுதலையாங் காதலெனிற் பொய்மைக் காதல்! சோரரைப்போல் ஆண்மக்கள் புவியின் மீது       சுவைமிக்க பெண்மைநல முண்ணு கின்றார். காரணந்தான் யாதெனிலோ;ஆண்க ளெல்லாம்       களவின்பம் விரும்புகின்றார்;கற்பே மேலென்று ஈரமின்றி யெப்போதும் உபதே சங்கள்       எடுத்தெடுத்துப் பெண்களிடம் இயம்பு வாரே!       55 ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்,       அப்போது பெண்மையுங்கற் பழிந்தி டாதோ? நாணற்ற வார்த்தையன்றோ?வீட்டைச் சுட்டால்,       நலமான் கூரையுந்தான் எரிந்தி டாதோ? பேணுமொரு காதலினை வேண்டி யன்றோ       பெண்மக்கள் கற்புநிலை பிறழு கின்றார்? காணுகின்ற காட்சியெலாம் மறைத்து வைத்துக்       கற்புக்கற் பென்றுலகோர் கதைக்கின் றாரே!       56 சர்வ மத சமரசம் (கோவிந்த சுவாமியுடன் உரையாடல்) ''மீளவுமங் கொருபகலில் வந்தான் என்றன்       மனையிடத்தே கோவிந்த வீர ஞானி, ஆளவந்தான் பூமியினை,அவனி வேந்தர்       அனைவருக்கும் மேலானோன்,அன்பு வேந்தன் நாளைப்பார்த் தொளிர்தருநன் மலரைப்போலே       நம்பிரான் வரவுகண்டு மனம் மலர்ந்தேன்; வேளையிலே நமதுதொழில் முடித்துக் கொள்வோம்,       வெயிலுள்ள போதினிலே உலர்த்திக் கொள்வோம்.       57 காற்றுள்ள போதேநாம் தூற்றிக் கொள்வோம்;       கனமான குருவையெதிர் கண்டபோதே மாற்றான அகந்தையினைத் துடைத்துக் கொள்வோம்;       மலமான மறதியினை மடித்துக் கொள்வோம்; கூற்றான அரக்கருயிர் முடித்துக் கொள்வோம்;       குலைவான மாயைதனை அடித்துக் கொள்வோம்; பேற்றாலே குருவந்தான்;இவன்பால் ஞானப்       பேற்றையெல்லாம் பெறுவோம்யாம்''அன்றெனுள்ளே.       58 சிந்தித்து ''மெய்ப்பொருளை உணர்த்தாய் ஐயே!       தேய்வென்ற மரணத்தைத் தேய்க்கும் வண்ணம் வந்தித்து நினைக்கே டேன் கூறாய்''என்றேன்.       வானவனாம் கோவிந்த சாமி சொல்வான்; ''அந்தமிலா மாதேவன் கயிலை வேந்தன்       அரவிந்த சரணங்கள் முடிமேற் கொள்வோம்; பந்தமில்லை;பந்தமில்லை;பந்தம் இல்லை;       பயமில்லை;பயமில்லை;பயமே இல்லை;       59 ''அதுவேநீ யென்பதுமுன் வேத வோத்தாம்;       அதுவென்றால் எதுவெனநான் அறையக் கேளாய்! அதுவென்றால் முன்னிற்கும் பொருளின் நாமம்;       அவனியிலே பொருளெல்லாம் அதுவாம்;நீயும் அதுவன்றிப் பிறிதில்லை;ஆத லாலே,       அவனியின்மீ தெதுவரினும் அசைவு றாமல் மதுவுண்ட மலர்மாலை இராமன் தாளை       மனத்தினிலே நிறுத்தியிங்கு வாழ்வாய் சீடா!       60 'பாரான உடம்பினிலே மயிர்களைப்போல்       பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கை யாலே; நேராக மானுடர்தாம் பிறரைக் கொல்ல       நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா; காரான நிலத்தைப்போய்த் திருத்தவேண்டா;       கால்வாய்கள் பாய்ச்சுவதில் கலகம் வேண்டா; சீரான மழைபெய்யும் தெய்வ முண்டு;       சிவன் செத்தா லன்றிமண்மேல் செழுமை உண்டு       .61 ''ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்       அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண் டாகும்! பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்       பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு நீதமில்லாக் கள்வர்நெறி யாயிற் றப்பா!       நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சி யன்றோ? பாதமலர் காட்டினினை அன்னை காத்தாள்;       பாரினிலித் தருமம்நீ பகரு வாயே.       62 ''ஒருமொழியே பலமொழிக்கும் இடங்கொ டுக்கும்       ஒருமொழியே மலமொழிக்கும் ஒழிக்கும் என்ற ஒருமொழியைக் கருத்தினிலே நிறுத்தும் வண்ணம்       ஒருமொழி 'ஓம் நமச் சிவாய' வென்பர்; 'ஹரிஹரி'யென் றிடினும் அஃதே;'ராம ராம'       'சிவசிவ'வென்றிட்டாலும் அஃதேயாகும். தெரிவுறவே 'ஓம்சக்தி'யென்று மேலோர்       ஜெபம்புரிவ தப்பொருளின் பெயரே யாகும்.       63 ''சாரமுள்ள பொருளினைநான் சொல்லிவிட்டேன்;       சஞ்சலங்கள் இனிவேண்டா;சரதந் தெய்வம்; ஈரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்       எப்போதும் அருளைமனத் திசைத்துக் கொள்வாய்; வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்;       எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்; பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்       பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்.       64 ''பூமியிலே,கண்டம் ஐந்து,மதங்கள் கோடி!       புத்த மதம்,சமண மதம்,பார்ஸி மார்க்கம், சாமியென யேசுபதம் போற்றும் மார்க்கம்,       சநாதனமாம் ஹிந்து மதம்,இஸ்லாம்,யூதம், நாமமுயர் சீனத்துத் 'தாவு''மர்க்கம்,       நல்ல ''கண் பூசி''மதம் முதலாப் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே;       யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே.       65 ''பூமியிலே வழங்கிவரும் மதத்துக் கெல்லாம்       பொருளினைநாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்: சாமி நீ;சாமி நீ;கடவுள் நீயே;       தத்வமஸி;தத்வமஸி;நீயே அஃதாம்; பூமியிலே நீகடவு ளில்லை யென்று       புகல்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை; சாமிநீ அம் மாயை தன்னை நீக்கிச்       சதாகாலம் 'சிவோஹ'மென்று சாதிப் பாயே!''       66 This webpage was last revised on 16 September 2021. Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).